FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Anu on April 17, 2012, 01:38:16 PM
-
கீதை அறிமுகம்!
ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல்கள் மூன்று: அவை
கடவுளான கிருஷ்ணர் மனிதனான அர்ஜுனனுக்கு கூறிய பகவத்கீதை.
மனிதனான மாணிக்கவாசகர் கடவுளான சிவனுக்கு கூறிய திருவாசகம்.
மனிதனான திருவள்ளுவர் மனிதனுக்கு கூறிய திருக்குறள்.
இதில் பகவான் கிருஷ்ணர் அருளிய கீதை இந்துக்களின் வேதநூல் ஆகும்.
பகவத்கீதையை பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். பகவத் என்றால் இறைவன். கீதா என்றால் நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது தாகீ என்று மாறும். தாகீ என்றால் தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் கீதா விற்குரிய ஆழமான பொருளாகும்.
கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
காமம்:பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்:யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்:அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு:கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
பதினெட்டு அத்தியாயங்களின் தாத்பரியம் என்ன?
1. விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11.விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.
சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
பாண்டவர்களுக்குத் துணை போன கிருஷ்ணர்
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குரு÷க்ஷத்திரப் போர் ஆரம்பமானது. பகவான் கிருஷ்ணர் அனைவருக்கும் பொதுவானவர். அப்படியிருக்கும் போது பாண்டவர்களுக்குத் துணையாக கிருஷ்ணர் ஏன் இருந்தார்?
ஒரு முறை துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். ஆனால் அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான். யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான்.
அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு வேதநூல் இருக்கிறது. ஆனால் இந்து மதத்துக்கு மட்டும் பல வேதங்கள், உபநிஷத்கள், சாஸ்திரங்கள் உள்ளன. இருந்தாலும் பகவத்கீதையே அனைத்திலும் உயரிய வேதநூலாக கருதப்படுகிறது. எனவே தான் கீதையை ஐந்தாவது வேதம் என்கின்றனர்.
பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; மத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.
கீதையின் பெருமை
ஸ்ரீமத்பகவத்கீதை சாட்க்ஷõத் ஸ்ரீபகவானுடைய திருவாய்மொழி. அதன் பெருமை எல்லையற்றது; அளவற்றது. அதை உள்ளபடி வர்ணிக்க யாராலும் முடியாது. ஆதிசேஷன், சிவபெருமான், மஹாகணபதி ஆகியவரும்கூட இதன் பெருமையை முழுமையாகக் கூற முடியாது என்றால் மனிதர்களான நம்மால் மட்டும் எப்படி முடியும். இதிகாசங்களிலும், புராணங்களிலும் ஆங்காங்கு இதன் பெருமையைப் பாடியிருக்கிறார்கள். இப்படி இதுவரை கூறியுள்ள பெருமை அவ்வளவையும் ஒன்று திரட்டினால் கூட அதன் பெருமை இவ்வளவு தான் என்று கூற முடியாமலிருக்க, அதன் பெருமையை முழுமையாகக் கூறிவிட முடியும் என்பது எங்ஙனம் பொருந்தும்.
கீதை <உயர்ந்த ரஹஸ்யங்கள் பொதிந்த நூல். இதில் எல்லா வேதங்களின் ஸாரமும் திரட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அமைப்பு எளிமையும், அழகும் பொருந்தியது. சிறிது காலப் பயிற்சியினாலேயே யாரும் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதன் கருத்துக்கள் ஆழம் மிக்கவை; உட்பொருள் பொதிந்தவை. ஒருவர் வாழ்க்கை முழுவதும் இடைவிடாது இதைப் படித்துக் கொண்டே இருந்தாலும் இதை முழுமையாகக் கற்றுத் தேர்ந்துவிட்டதாக நினைக்க முடியாது. நாள்தோறும் புதிய புதிய கருத்துக்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். அதனால் கீதை என்றும் புதிதாகவே திகழ்கிறது. இவ்விதம் ஒரே முனைப்புடன் நம்பிக்கையும், பக்தியும் கொண்டு ஆராய்ந்து கொண்டே இருந்தால், இதனுடைய ஒவ்வொரு சொல்லிலும் நுண்ணிய ரஹஸ்யங்கள் பொங்கி வருவதை நேரிடையாக அனுபவிக்கலாம். பகவானுடைய கல்யாண குணங்கள், ப்ரபாவங்கள், ஸ்வரூபம், தத்வம், ரஹஸ்யம், உபாஸனை, கர்மம், ஞானம் இவற்றைப் பற்றியெல்லாம் கீதாசாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ளவாறு வேறு எந்த ஒரு நூலிலும் ஒருங்கே காண்பது அரிது. பகவத்கீதைக்கு இணையான நூலே கிடையாது. நன்னெறி புகட்டாத ஒரு சொல் கூட கீதையில் கிடையாது. கீதையில் எந்த ஒரு சொல்லும் வெறும் சுவையூட்டுவதற்காக மட்டுமே அமைந்ததில்லை. இதில் வருகின்ற அத்தனை விஷயங்களும் உண்மையானவை. ஸத்ய ஸ்வரூபனான பகவானுடைய பேச்சிலே சுவையைக் கற்பனை செய்து பார்ப்பது அவரது சொல்லை அவமதிப்பது போலாகும்.
கீதையில் எல்லா சாஸ்த்ரங்களும் அடங்கும். எல்லா சாஸ்த்ரங்களுமே கண்ட முடிவுகளின் ஸாரம் இதில் நிறைந்திருக்கின்றது. எல்லா சாஸ்த்ரங்களுக்கும் இது கருவூலம் என்று சொன்னால் அது மிகையன்று. கீதா சாஸ்த்ரத்தை ஒருவன் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டால் பிற சாஸ்த்ரங்களில் உள்ள தத்துவங்களின் அறிவு, தானே வந்து அமையும். அதற்காகத் தனியாக உழைக்க வேண்டியதில்லை.
மஹாபாரதத்தில், ஸர்வஸாஸ்த்ரமயீ கீதா (பிஷ்ம. 43/2) என்று கூறப்படுகிறது. இவ்வளவு சொன்னாலும் போதாது. எல்லா சாஸ்த்ரங்களும் வேதங்களினின்றும் தோன்றியவை. வேதங்கள் ப்ரம்மதேவனின் திருமுகத்திலிருந்து வெளிவந்தவை. அந்த ப்ரம்மதேவன் பகவானுடைய உந்தித்தாமரையில் உதித்தவன். இவ்வாறு சாஸ்த்ரங்களுக்கும், பகவானுக்கும் இடையே மிக அதிகமான இடைவெளி உள்ளது. ஆனால் கீதையோ ஸாக்ஷõத் பகவானுடைய முகத்தாமரையிலிருந்து நேராக வெளி வந்தது. ஆகவே மற்ற சாஸ்த்ரங்களைவிடச் சிறந்தது என்று கூறுவதில் மிகை ஒன்றுமில்லை. பகவான் வேதவ்யாஸரே கூறுகிறார் :
கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா - (மஹா. பீஷ்ம. 43/1)
கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும், மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும். கீதை பகவான் பத்மநாபனின் முகத்தாமரையிலிருந்து வெளிவந்தது. எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?
இந்த ச்லோகத்தில் பத்மநாப: என்ற சொல் வருகிறது. எல்லா சாஸ்த்ரங்களுக்கும் ஆணிவேரான வேதங்களைத் தம் முகத்திலிருந்து வெளியிட்ட அந்த ப்ரம்மதேவரே பகவானின் உந்தித்தாமரையிலிருந்து உதித்தவர். அந்த பகவானுடைய திருவாயிலிருந்து வெளி வந்தது கீதை என்பது கருத்து.
கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது. ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை. பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது. ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது. கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது. கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது. ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.
கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான். காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும். கீதாபாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே! முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால் அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.
கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது. கிருஷ்ணர்சொல்கிறார்.
கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதாஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் - (வராஹபுராணம்)
(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதைதான் என்னுடைய சிறந்த வீடு. கீதையின் ஞானத்தைக் கைக்கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)
1. பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று
ஒவ்வொரு மதத்துக்கும் சாஸ்திரம் இன்றியமையாதது. மதம் மாறிப் போகாதிருப்பதற்கும், மறைந்து போகாதிருப்பதற்கும் சாஸ்திரம் துணைபுரிகிறது. எந்த சமயத்துக்கு சாஸ்திரம் இல்லையோ அது விரைவில் உரு மாறியமைகிறது. பின்பு நிலையற்றதாய் அது அழிந்துபட்டுப் போகிறது. ஆனால் ஒரு நூலை உறுதியான பற்றுக்கோடாகக் கொண்டுள்ள மதம் என்றைக்கும் அசைவற்றிருக்கிறது. எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் அது தாங்கி நின்று மீளுகிறது. உலகத்தில் நீடுழி நிலைத்துள்ள மதங்களுக்கெல்லாம் அதனதன் சாஸ்திரங்கள் உள. இந்து மதத்தில் கணக்கற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றன. பொதுவாக அவையனைத்துக்கும் வேதங்களே முதற் காரணமானவைகளென்று பகர்வார்கள். வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன. ஆனால் வேதங்களினின்று தெள்ளி யெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம். இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. உபநிஷதங்களைப் பசுக்கள் என்று வைத்துக் கொண்டால் பகவத்கீதையைப் பால் என்று பகரலாம். நேரே பாலைப் பெற்றுக்கொள்ளும் வசதி வாய்க்கப்பெற்றவர்களுக்குப் பசுவை வளர்க்கும் சிரமம் வேண்டியதில்லை.
உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர்பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை கிடையாது. தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்துக்கு சாஸ்திரம் எது என்னும் கேள்வி எழுமிடத்துப் பிரஸ்தானத்திரயம் என்றே பதில் அளிக்கவேண்டும். இவைகளில் அடங்காத தத்துவ விளக்கம் வேறு எந்த நூலிலும் இல்லையென்று உறுதி கூறலாம். மற்ற சாஸ்திரங்களில் சொல்லியுள்ள கோட்பாடுகள் பிரஸ்தானத்திரயத்தில் அடங்கியுள்ள கோட்பாடுகளுக்கு விளக்கமாக வந்து அமையலாம். அப்படியல்லாது முரண்படுபவைகளாக வந்தமையுமானால் முரண்படுகிற மற்ற சாஸ்திரங்களைப் புறக்கணிப்பது இந்தியாவில் தொன்றுதொட்டு நடைமுறையில் வந்துள்ள ஐதிகமாகும்.
2. மஹாபாரதத்தில் அடங்கியது
பகவத்கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது. பீஷ்மபர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம். ஆக, இதன்கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. இவைகளில் அமைந்துள்ள சுலோகங்களின் தொகை எழுநூறு. மஹாபாரதம் என்ற காவியம் முன்பு இயற்றப்பெற்றது என்றும், பகவத்கீதை என்ற சாஸ்திரம் பின்பு அதன்கண் புகுத்தப் பெற்றதென்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் அகச் சான்று அதற்கு இடம் தருகிறதில்லை. இலக்கிய அமைப்பு பகவத்கீதை உட்பட ஆதியோடந்தம் ஒரே பாங்கில் இருக்கிறது. மொழியமைப்பில் ஒற்றுமையிருப்பது போன்று கருத்து அமைப்பிலும் ஒற்றுமையிருக்கிறது. மஹாபாரதத்தில் அடங்கியுள்ள விஷயங்களைப் பால் என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையில் அடங்கியுள்ள விஷயங்களை வெண்ணெயென்று பாராட்டலாம். மஹாபாரதம் என்னும் உடலுக்கு பகவத்கீதை ஹிருதயமாக அமைந்துள்ளது என்று பகர்வதும் பொருந்தும். உடல் ஒரு காலத்திலும் ஹிருதயம் இன்னொரு காலத்திலும் உண்டானவைகளல்ல.
3. ஸ்ரீ கிருஷ்ணன் சகாயத்தையே பாண்டவர் நாடினர்
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எவ்விதத்திலும் சமாதானம் உண்டாகவில்லை. முன்னையவர்க்கு உரிய நாட்டில் ஒரு சிறு பகுதியையும் திருப்பித்தரப் பின்னையவர் அறவே மறுத்துவிட்டனர். போர்புரிவதால் விளையும் கேடுகளை எண்ணிப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, சமாதானப்படுத்த வந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் துவாரகைக்குத் திரும்பிப் போவாராயினர். எனினும், போர் புரிவதைத் தவிர வேறு வழியில்லை. ஸ்ரீ கிருஷ்ணனுடைய சகாயத்தை நாடி இருதரத்தாரும் துவாரகைக்குச் சென்றார்கள். அவர்கள் வரும்பொழுது கண்ணன் கண்வளர்ந்திருந்தார். பாண்டவர்களின் சார்பில் இளையவன் அர்ஜுனன் முதலில் பள்ளியறைக்குள் சென்று கேசவரின் கால்மாட்டில் நின்றுகொண்டிருந்தான். கௌரவர்களுள் மூத்தவன் துர்யோதனன் பின்பு வந்து, தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டான். கண் விழித்ததும் கால்மாட்டில் நின்ற குந்தி மைந்தனைக் கேசவர் பார்த்தார்; பேச்சும் நடந்தது. பாண்டவர்களுக்குத் துணை புரிவதாகப் பகவான் ஒத்துக்கொண்டார். பின்பு துர்யோதனனிடத்திருந்தும் அதே விண்ணப்பம் வந்தது. தாம் ஒரு பக்கம், தமது சேனை யொருபக்கம் சேர்வதாக ஸ்ரீ கிருஷ்ணன் முடிவு கட்டினார். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய சகாயத்தையும், துர்யோதனன் சேனையின் உதவியையும் பொறுக்கி யெடுத்தார்கள். கடவுள் நமக்குத் துணையாயிருக்கும்போது பிரதிகூலமான மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்யவல்லது? கடவுள் துணை நமக்கில்லாது போய்விட்டால் அனுகூலமான மற்றவைகள் நமக்கு என்னதான் நன்மை செய்துவிடும்? வாழ்க்கை சம்பந்தமான இரண்டு பெரிய கேள்விகள் இவை. மஹாபாரதப் போராட்டத்தின் முடிவே இவ்விரண்டு கேள்விகளுக்கும் விடை தருகிறது.
மேலும், தாம் படையெதையும் எடுத்துப் போர் புரிவதில்லையென்றும், பார்த்தனுக்கு வெறும் தேர் ஓட்டும் தொண்டு புரிதலை மட்டும் வைத்துக்கொள்வதென்றும் கண்ணபிரான் இசைந்திருந்தார். துர்யோதனனுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பவராய் அவர் அங்ஙனம் வாக்குக்கொடுத்தார். அத்தகைய உடன்படிக்கை தங்களுக்கு எல்லா விதத்திலும் அனுகூலமானதென்று துர்யோதனன் எண்ணித் திருப்பினான். கண்ணனுடைய கண்காணிப்பு ஒன்று போதாதா, இனி அச்யுதன் ஆயுதம் வேறு எடுத்து அமர் தொடுத்தல் வேண்டுமா? என்று கௌரவர் கூட்டத்தை நண்ணி நின்ற விவேகியர் சிலர் எண்ணுவாராயினர்.
4. இடையறாச் சோதனையே வாழ்க்கை
போர்க்களத்துக்குப்போம் பரியந்தம் பதைபதைப்பும் துணிச்சலுமே வடிவெடுத்தவனாயிருந்தான் பார்த்தன். வெஞ்சமரில் விளையும் பயனை அவன் கிளறிப் பார்த்தானில்லை. தன்னை எதிர்க்கத் துணிந்ததன் மூலம் நீதியை எதிர்க்கத் துணிந்த போர் வீரர் யார் என்று பார்க்க அவன் விரும்பினான். போற்றுதற்குரிய பீஷ்மர், துரோணர், பெரும் பகைவனாகிய கர்ணன் ஆகியவர்கள் முன்னிலையிலே ஸாரதி ரதத்தைச் செலுத்தி நிறுத்தினார். வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத சோதனை. முன்பு எத்தனையோ சோதனைகளை அர்ஜுனன் மீண்டிருக்கிறான். இப்பொழுதோ மீள முடியாத நெருக்கடி ஒன்று வந்துள்ளது. போர் புரிவதா, அல்லது புறங்காட்டி ஓடுவதா? எது உசிதமென்று அவனுக்கே விளங்கவில்லை. ஒவ்வொரு மனிதனும் இப்படிச் சோதனைக்கு ஆளாகிறான். கடலில் திரைகள் போன்று வாழ்க்கையில் சோதனைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மீள முடியாச் சோதனைகள் வருவதும் உண்டு. வாழ்க்கையின் மர்மம் தெரிந்தாலொழிய அவற்றினின்று மீள முடியாது.
5. ரூபகம்
கீதையின் முதல் அத்தியாயம் முழுதும் வாழ்க்கைத் தத்துவத்தை ரூபகப்படுத்துகிறது. அவதார புருஷர் ஒவ்வொருவரும் மானுட வாழ்க்கையின் மேலாம் பாங்கை விளக்குதற்கென்றே மண்ணுலகில் வந்தவராவார். ஸ்ரீ கிருஷ்ணனுடைய பூலோக விஜயம் அலாதி மகிமை வாய்க்கப்பெற்றது. நரலோக வாழ்வு என்னும் நாடகத்தின் மூலம் மேலாம் தத்துவத்தையே விளக்க வந்தவர் அவர். குரு÷க்ஷத்திரப் பெரும் போரும், அதில் கலந்து கொண்ட பாத்திரங்களும் மானுட வாழ்வில் அமைந்துள்ள உண்மைகளைத் தெளிவுபடுத்துவனவாகின்றன. மானுட சரீரமே குரு÷க்ஷத்திரம். ஏனென்றால் அது ஒவ்வொரு ஜீவனுக்கும் தர்ம ÷க்ஷத்திரமாகிறது. அவரவர் வினையை நல்வினையாக்குதற்கு உற்ற இடம் உடல். பாண்டவர்கள் நல்ல இயல்பின் பிரதிநிதிகள் ஆவர். கௌரவர்கள் கெட்ட இயல்பின் பிரதிநிதிகள். பாண்டவர் கௌரவர் ஆகிய இருதரத்தாரும் ஒரே ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஜீவனிடத்து நல்லியல்பு, கெட்ட இயல்பு ஆகிய இரண்டும் உண்டு. பாண்டவகௌரவர்கள் தாயாதிகளாயிருப்பது போன்று, ஒரே ஜீவனிடத்திருந்து வந்துள்ள மேலான இயல்பும் கீழான இயல்பும் தாயாதிகளேயாம். பாண்டவர்களைப் போன்று நல்லியல்பு எண்ணிக்கையில் குறைவுபட்டவை. கௌரவர்களைப் போன்று கேடுடைய இயல்பு எண்ணிக்கையில் மிகுந்தவை. அக்ஞானக் குருடனுக்குப் பிள்ளையாகப் பிறந்தவைகள் புல்லிய இயல்புகள். விவேகம் என்னும் வெண்மையினின்று வந்தவைகள் நல்லியல்புகள். உடல் வாழ்வு என்னும் ராஜ்யத்தை இவ்விரண்டு இயல்புகளும் தத்தமக்குச்சொந்தமாக்கிக்கொள்ள முயலுகின்றன. பிரபஞ்சத்திலுள்ள வசதிகளையெல்லாம் கெட்ட இயல்புகள் தமக்கு உரிய சேனைகளாகச் செய்து கொள்கின்றன.
நலம், கேடு ஆகிய கிரியைகளையெல்லாம் கடந்தவர் பரமாத்மா. எச்செயலையும் அவர் செய்வது கிடையாது; சாக்ஷி மாத்திரமாயிருப்பவர். அவர் சன்னிதான விசேஷத்தால் இயற்கையின்கண் உள்ள எல்லாச் செயல்களும் நிகழ்கின்றன. தாம் கர்மம் ஒன்றும் செய்யாவிட்டாலும் அவரது அனுக்கிரகம் நல்லார்பால் உளது. ஸ்ரீ கிருஷ்ணனன் பார்த்தனுக்குச் சாரதியாயமைந்ததின் கோட்பாடு இதுவே. எல்லா ஜீவர்களுக்கும் சாரதியாக சர்வேசுவரன் மனத்தகத்து வீற்றிருக்கிறார். அவர் மனச் சாக்ஷியாயிருந்து வாழ்வை ஒழுங்குப்படுத்துவது நல்லார்க்கு விளங்குகிறது. மற்றவர்களுக்கு அது விளங்குவதில்லை.
மஹாபாரதம் என்னும் போராட்டத்தில் பெரிய கர்மவீரராயிருந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன். மற்ற மனிதர்களெல்லாரும் கூடிச் செய்த செயல்கள் அவருடைய கிருத்தியத்தின் காற்பங்கு ஆகா. அத்தனை செயல்களுக்கிடையில் ஒரு செயலிலும் பந்தப்படாதிருத்தவரும் அவரே இதுதான் அவருடைய நரலோக லீலை. இதை மனிதன் தெரிந்துகொண்டால் இவ்வுலகில் மனிதன் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டவன் ஆவான்.
6. கிருஷ்ணனது வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டு
மனிதன் உலகில் எப்படி வாழவேண்டுமென்று முன்மாதிரியாயிருந்து தங்கள் வாழ்க்கையின் மூலம் புகட்டுதலே அவதார புருஷர்களின் முதற் கடமை. இக்கோட்பாட்டுக்கு மாறுதலாக ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றிப் பகர்வார் உளர். ஸ்ரீ ராமன் வாழ்ந்தது போன்று நாம் வாழவேண்டுமென்பதும் ஸ்ரீ கிருஷ்ணன் புகட்டியது போன்று நாம் நடந்துகொள்ள வேண்டுமென்பதும் அவர்களது கொள்கை. ஆனால் இதற்கு ஆதாரமொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான அரக்கர்களைக் கொன்றது சில அவதார புருஷர்களின் அசாதாரணச் செயல். மக்களுள் சிலர் தீ மீது நடக்கின்றனர். தன் உடல்மீது யானை ஏறி நிற்பதைத் தாங்கும் மனிதன் ஒருவன் இருக்கலாம். இவை மக்களுள் நாம் காணும் அசாதாரணச் செயல்களாம். எல்லாரும் இப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிறகு கிருஷ்ணன் போன்று நாம் ஒழுகலாகாது என்று எதைக் குறித்து இவர்கள் இயம்புகிறார்கள்? கோபியர்கள் பலருக்கு அவன் வல்லபனாயிருந்தது நமக்கு ஒவ்வாது என்பது இவர்கள் கருத்து. தனக்கு வயது பத்து ஆவதற்குள் அவனது பிருந்தாவன விளையாட்டுகள் முடிந்துவிடுகின்றன. பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவன் ஒருவன் எண்ணிக்கையில் அடங்காத பேர்களுடன் தூர்த்தனாய் நடந்துகொள்வது சாத்தியமா? இயற்கை இதற்கு இடந்தருமா? ஆராய்ச்சிக்குரிய இக்கேள்விகளை நன்றாய் அலசிப் பார்க்கவேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஹ்ருஷீகேசன் என்பது ஒரு பெயர். இந்திரியங்களுக்கெல்லாம் ஈசன் என்று அது பொருள்படுகிறது. நாம் இந்திரியங்களுக்கு அடிமை. அவன் இந்திரியங்களுக்கு அதிபதி. உடல் பற்று இருக்கும் வரையில், உடலைத் தான் என்று எண்ணும் வரையில், உடல் ஞாபகம் இருக்கும் வரையில் பராபக்தி வருவதில்லை என்பதே ஸ்ரீ கிருஷ்ணன் கோபியர்களுக்குப் புகட்டிய பாடமாகும். உடல் ஞாபகத்தைக் கடந்து மேலே செல்லுதலே மானுட வாழ்க்கையின் மேலாம் லட்சியமாகும். ஆதரிப்பாரற்ற ஆயிரக்கணக்கான பெண்களுக்குக் கிருஷ்ணன் நாயகனாகிறான். அவர்களை ஆதரிப்பவன் என்றே அது பொருள்படுகிறது. அவர்களுக்கு அவன் மணாளன் என்று உடல் தொடர்வு வைத்துக் கருதுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். இன்றைக்கு அகதிகளை அரசாங்கம் காப்பது போன்று அன்றைக்கு அவன் அவர்களைக் காத்து வந்தான். அதற்கேற்ற நெருக்கடி அக்காலத்திலும் சமூகத்தில் உண்டாயிற்று.
கோபிநாதன் என்பதும் ஜகந்நாதன் என்பதும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உண்டான மற்ற பெயர்கள். ஜீவர்கள் எல்லாரும் கோபிகளாவர். ஏனென்றால் அவர்கள் பிரகிருதியின் வசப்பட்டுப் பிரகிருதி சொரூபமாயிருக்கிறார்கள். அத்தனை உயிர்களுக்கும் அவன் உயிராயிருக்கிறான். பரம புருஷனை நாயகனாக அறிந்து கொண்டவர்களே உண்மையை அறிந்துகொண்டவர்களாவர். உயிர்களுக்கெல்லாம் சாரதியாக மனத்தகத்து எழுந்தருளியிருக்கும் அதே பரமாத்மா அவர்களுக்கெல்லாம் மணாளனாகவும் மனத்தகத்து வீற்றிருக்கிறான். இக்கோட்பாட்டின் பிரகாரம் ஸ்ரீகிருஷ்ணனுடைய மனைவியர்கள் (ஜீவர்கள்) எண்ணிக்கையில் அடங்கமாட்டார்கள்.
7. நர - நாராயணன்: கிருஷ்ணார்ஜுனன்
முன்பு ஒரு காலத்தில் நாராயணன் என்றும், நரன் என்றும் பெயர் தாங்கி வந்த இரண்டு ரிஷிகள் துவாபரயுகத்தின் இறுதியில் கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்தார்கள் என்னும் கோட்பாடு ஒன்று உண்டு. பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையிலுள்ள தொடர்பை இக்கோட்பாடு விளக்குகிறது. இன்னும் வேறு பாங்குகளிலும் உபநிஷதங்களில் இக்கருத்து விளக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தன. ஒன்று தன் மஹிமையில் நிலைபெற்றதாயிருந்தது. மற்றொன்று இனியவையும் இன்னாதவையும் ஆகிய கனிகளை உண்டு இன்ப துன்பத்துக்கு ஆளானது. அது துன்பப்படும்பொழுதெல்லாம் மேலான நிலையிலிருந்த பறவையை நினைந்து அதனருகில் வர முயன்றது. அருகில் வரவர அதன் இன்னல் குறைந்தது. தான் மற்ற பறவையின் தோற்றம் என்று உணர்ந்தது. பிறகு செயலற்ற பறவையில் அது லயமாயிற்று. ஜீவாத்மா நிறைநிலையடைந்து பரமாத்மாவில் லயமாகும் பாங்கு இங்ஙனம் விளக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பட்ட இணக்கம் இக்கோட்பாட்டை நன்கு தெளிவுபடுத்துகிறது. இருவரும் இணைபிரியாத தோழர்கள். அப்போதைக்கப்போது அர்ஜுனனுக்கு வந்த குறைகளைக் கிருஷ்ணன் அகற்றி வைத்தான். பள்ளியில் பயிற்சி பெற்றபொழுது துணை; விளையாடியபொழுது துணை; போட்டிகள் பல போட்டபொழுது துணை; வனவாசத்தில் வருந்திக்கொண்டிருந்தபொழுது துணை; மணம் புரிந்துகொள்ள விரும்பியபொழுது தன் தங்கையையே மணம் செய்வித்துத் துணை; போர்க்களத்தில் துணை; பிறகு கீதோபதேசம் என்ற ஞானோபதேசம்; இதுவே முடிவான துணை. பல பிறவிகளில் பகவான் மனத்தகத்து வீற்றிருந்து ஜீவர்களுக்கு அப்போதைக்கப்போது தேவையானவைகளைத் தந்தருள்கின்றார். இவையாவையும் வைத்தனுபவித்தான பிறகு வாழ்க்கையில் பெரியதொரு நெருக்கடி வருகிறது. பெற்ற செல்வமும், சுற்றமும், பதவியும், போகமும் அப்பொழுது ஒன்றுக்கும் உதவாதவைகளாகத் தென்படுகின்றன. மனத்தினுள்ளே இருள் சூழ்ந்து விடுகிறது. வாழ்வு வெறும் சூன்யமாய்த் தோன்றுகிறது. ஒவ்வோர் உயிரும் ஒரு காலமல்லாவிட்டால் ஒரு காலத்தில் அத்தகைய சோதனைக்கு ஆளாகவேண்டும். பரஞானம் ஒன்றே அவ்வேளைக்கு உற்ற துணையாகிறது. பரஞானத்தைப் பெற்ற பின்பே வாழ்வின் உட்பொருள் ஜீவனுக்கு உள்ளபடி விளங்குகிறது. கருமத்தின் கதி, ஜீவிதத்தின் பாங்கு, மரணத்தின் அவசியம் ஆகியவைகள் பரஞானம் வருவதற்கு முன்பு விளங்கமாட்டா. பிறவிப் பிணியையும் பிற பிணியையும் வேரறப் போக்கவல்லது பரஞானம். அதைப் பெறுதற்கேற்ற தருணம் வாய்த்தபொழுது பகவான் பரிவுடன் பார்த்தனுக்கு அதைப் பகர்ந்தருளினார்.
8. அர்ஜுனன் மக்களின் பிரதிநிதி
பாண்டவர் ஐவருள் பகவான் கீதையைப் பார்த்தனுக்கு உபதேசித்தருளியதின் கருத்து யாது? போர் புரிதல் அப்போதைக்கேற்பட்ட அவசரச் செயல் என்றால் அர்ஜுனனைவிட பீமன் அதற்கென்றே துடித்துக்கொண்டிருந்தான், கொஞ்சம் தூண்டியிருந்தால் அவனைக்கொண்டு அக்காரியம் எளிதில் நிறைவேறியிருக்கும். மற்று அமர் புரிதல் அல்ல, அறன் வலியுறுத்தலே அண்ணலின் நோக்கமென்றால் அதற்கேற்றவன் அறக்கடவுளின் வடிவாகிய அண்ணன் யுதிஷ்டிரன். போர் புரிதற்குப் பொருந்தியவன் பீமன், தர்மத்தை உணரத் தகுந்தவன் தர்மராஜா. இவ்விருவரையும் விட்டுவிட்டு, வில்லாளி அர்ஜீனனைப் பொறுக்கி யெடுத்ததில் பொருளொன்றுண்டு. பீமனிடத்திருந்தது முரட்டுத்தனம்; கிட்டத்தட்ட அது விலங்கின் பாங்கு. கீழ்மையே வடிவெடுத்திருப்பவனுக்கு யோக சாஸ்திரம் உதவாது. கீழ்மகன் அதைக் கேட்கவும் மாட்டான், அனுஷ்டிக்கவும் மாட்டான். மூத்தவன் தர்மராஜன் போன்று தெய்வத் தன்மையில் நிலை பெற்றிருப்பவனுக்கு யோக சாஸ்திரம் முற்றிலும் தேவையானதன்று. நூலின் துணையின்றியே அவன் நன்மை கடைப்பிடிக்க வல்லவன். இனி, அர்ஜுனனுடைய பாங்கு இவ்விருவருடைய பாங்குகளுக்கு நடுவில் இருக்கிறது. அவன் விலங்குத் தன்மையைக் கடந்து மேலே வந்துள்ளான். ஆனால் தெய்வத் தன்மையில் இன்னும் அவன் நிலைபெறவில்லை. விலங்குத் தன்மைக்கும் தெய்வத் தன்மைக்கும் இடைநிலையாகிய மனுஷத் தன்மை அர்ஜுனனுக்குச் சொந்தம். நலம், கேடு ஆகிய இரண்டும் மனிதன்பால் கலக்கப் பெற்றிருக்கின்றன. கேட்டைக் களைந்து நலத்தில் நிலை பெற்றிருப்பது மானுட வாழ்க்கையின் குறிக்கோள். கீதா சாஸ்திரம் அதற்கு உற்ற துணையாகிறது. அர்ஜுனன் சாதாரண மனிதரின் பிரதிநிதியாகிறான். அவன் போன்ற மக்கள் எல்லார்க்கும் அது சிறந்த வழிகாட்டியாகிறது. மக்கள் நிலையில் இருப்பார் எல்லாரும் கீதையைக் கற்கவும் அதன்படி நடக்கவும் அதிகாரிகளாகின்றார்கள்.
9. ஏன் போர்க்களத்தில் புகட்டப்பட்டது?
உயர்ந்த வேதாந்த தத்துவங்களைப் புகட்டுபவை பிரஸ்தானத்திரயம். வேதாந்த ஆராய்ச்சி எப்பொழுதும் விச்ராந்தி அல்லது மன நிம்மதியினின்று வருவதாகும். ஆரண்யங்களில் அமைதியாக இருந்துகொண்டு ஆன்றோர் அத்தகைய பரதத்துவங்களை ஆராய்ந்தனர். உபநிஷதங்கள் எல்லாம் தபோவனங்களினின்று தோன்றியவைகளாம். பின்பு, பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாகிய பகவத்கீதை பிறந்தது ஆரண்யத்திலன்று. அல்லல் நிறைந்த அமர்க்களத்தில் அது உபதேசிக்கப் பெற்றது. அதற்கும் தக்கதொரு காரணமுண்டு. வேதாந்தத்துக்கு சாந்தி பாடம் என்ற ஒரு பெயர் உளது. சாந்தியைப் பெறுதற்கு உற்ற இடம் எது? ஜன சஞ்சாரமில்லாத ஏகாந்தமான இடத்திலும் அதைப் பெறலாம்; பயங்கரமான போர்க்களத்திலும் அதைப் பெறலாம். எல்லாப் படித்தரங்களிலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாவது வேதாந்தக் கோட்பாடுகளாம். விதவிதமான வினைகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள் அனைவர்க்கும் அது பயன்படும்.
வாழ்க்கையை எங்ஙனம் பொருள்படுத்த வேண்டுமென்று கிருஷ்ணன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான். அவன் பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவனாயிருந்தபோது பிருந்தாவனத்தில் லீலைகள் பல விளையாடினான். உலகம் ஒரு விளையாட்டு மேடை; வாழ்வு ஒரு பெரியவிளையாட்டு. அதை நன்கு விளையாடத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவனுடைய வரலாற்றின் முற்பகுதி விளக்குகிறது. விளையாடுவது போன்று வாழ்வை எளிதாக்குபவர்க்கு அது கொண்டாட்டம்; மற்றவர்க்கு அது திண்டாட்டம். இது பிருந்தாவனக் கிருஷ்ணனது செய்தி.
வயது வந்த பிறகு அவன் குரு÷க்ஷத்திர கிருஷ்ணன் ஆகிறான். அப்பொழுது வாழ்வை மற்றொரு பாங்கில் அவன் படம் பிடித்துக் காட்டுகிறான். பிரபஞ்ச வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம். எதைப் பெற விரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டுப் போராடியாக வேண்டும். போர் புரியத் தெரியாதவர்களுக்கு இவ்வுலகிலும், வேறு எவ்வுலகிலும் ஒன்றும் அகப்படாது. பொருள் ஒன்று வேண்டுமென்று பிள்ளை தாயிடம் அழுகிறது. அது ஒருவிதப் போராட்டம். ஒரு வேலையில் அமரதற் பொருட்டுத் தொழிலாளி தன் வல்லமையைக் காட்டுகிறான். அதுவும் போராட்டமே. சாம்ராஜ்யங்கள் நிறுவுவதும் நடைபெறுவதும் போராட்டத்தின் பயனேயாம். எத்துறையிலாவது மனிதன் சிறிது முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்றால், அவன் வெற்றிகரமாகப் போராடிடயருக்கிறான் என்னும் பொருள் அதில் அடங்கியிருக்கிறது. சண்டைகள் பலவற்றைக் கிருஷ்ணன் தானே திறம்படச் செய்து முடித்திருக்கிறான். அவனுடைய ஜீவிதமே போராட்டத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிறது. யுத்தமயமாயுள்ள வாழ்க்கையில் மனிதன் எத்தகைய பாங்குடன் பிரவேசிக்க வேண்டுமென்று பகவத்கீதை புகட்டுகிறது. வாழ்வு என்னும் போராட்டத்துக்கு மனிதன் தகுதியுடையவன் ஆகவேண்டும்.
10. குறித்து வைத்தது யார்?
ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் அமர்க்களத்தில் நடந்த பேச்சு இது. ஒரு சபைநடுவில் கற்றவர்களுக்கிடையில் இது நிகழ்ந்ததன்று. இந்த சம்வாதம் நிகழ்ந்தபடியே மற்றவர்களுக்கு எப்படிக் கிட்டியது என்ற கேள்வி எழலாம். அவதார புருஷர் ஒருவர் மண்ணுலகில் வரும்பொழுதெல்லாம் அவரது அற்புதச் சரிதத்தை உள்ளபடி எழுதிவைக்க வல்ல தீர்க்கதரிசி ஒருவர் அவருடன் வருவதுண்டு. ஸ்ரீராம சரிதத்தைக் குறிக்க வால்மீகி வந்தார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் செயல்களை விளக்க வியாசர் வந்தார். அவர் ஞானக்கண் படைத்தவர். ஸ்ரீ கிருஷ்ணன் அருகில் இருந்தாலும் எட்ட இருந்தாலும் அவன் கருத்துக்களை உள்ளபடி தெரிந்துகொள்ளும் ஞானம் வியாசருக்கிருந்தது. வியாசர் அருளால் ஸஞ்ஜயரும் தற்காலிகமாக ஞானக்கண்ணைப் பெற்றிருந்தார். ஆதலால் நிகழ்ந்தவைகளை உள்ளபடி திருதராஷ்டிரருக்கு எடுத்துச் சொல்ல ஸஞ்ஜயருக்கு இயன்றது. ஆக, பகவத்கீதை என்னும் அமிர்தத்தை அர்ஜுனன் நேரில் அருந்திக்கொண்டிருந்த அதே வேளையில் வியாசரும் ஸஞ்ஜயரும் எட்ட இருந்து அருந்தினார்கள். வியாசர் அதை எழுதிவைத்தார்; ஸஞ்சயர் அதை இயம்பிக்கொண்டே போனார். போர் முடிந்த பிறகு ஸஞ்ஜயருக்கு ஓசையை மட்டும் பரப்ப வல்லது; உணர்வு அதனிடத்து இல்லை. ஞானக் கண்ணோ உணர்வை அப்படியே வாங்கவல்லது. மொழியின் துணையிருந்தாலும் இல்லாவிட்டாலும் கருத்தையேற்க ஞானிக்கு முடியும்.
11. கொலை நூல்
பகவத்கீதையைப் படிக்கலாகாது என்று அதைத் தள்ளி வைப்பர் ஒரு சிலர் உண்டு. எப்படியாவது அர்ஜுனனைப் போரில் புகுத்திவிடவேண்டும். அந்த நெருக்கடிக்கு ஏற்றவாறு ஏதாவது பேசவேண்டிய நிர்ப்பந்தம் வந்திருந்தது. அதையெல்லாம் பகர்ந்து கிருஷ்ணன் காரியத்தை நிறைவேற்றிவிட்டான். முடிவாக நிகழ்ந்தது படுகொலை. பாட்டனாரையும் ஆசாரியரையும் அர்ஜுனன் ஒழித்து விட்டான். கொலைபுரிவது பாதகர்களது பொல்லாத செயல். கொலை மறுத்தல் சமயக்கோட்பாடு. எங்ஙனம் இருளும் வெளிச்சமும் ஒன்று சேரவோ, அங்ஙனம் கொலை செய்தலும் கொலை மறுத்தலும் ஒவ்வா. சமயநெறியைப் பின் பற்றுபவர் கொலை நூலைக் கையால் தொடலாகாது என்பது அவர்களது கோட்பாடு.
இனி, கீதா சாஸ்திரம் இக்கோட்பாட்டின் மூலத்தையே துருவி ஆராய்கிறது. இயற்கை முழுதும் ஒரு முடிவில்லாத கொலைக்களம் என்கிறது கீதா சாஸ்திரம். அணுமுதல் அண்டம் வரையில் எங்கும் உயிர் நிறைந்திருக்கிறது. ஒரு துளி ஜலத்தில் எண்ணிறந்த சிற்றுயிர்கள் இருக்கின்றன. நம் அறிவுக்கு அவைகள் சிற்றுயிர். தம் அளவையில் அவைகளும் பேருயிர்களேயாம். நமது மூடிய கைக்குள் அடங்கியிருக்கும் காற்றில் அதே பாங்கில் கணக்கற்ற உயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மண்ணினுள் நிறைந்திருப்பதும் உயிர்த் தத்துவம். இவையாவும் ஒன்றையொன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன. வளரும் செடி யொன்றுக்குக் கோடானுகோடி பேக்டீரியா என்னும் உயிர்த் தத்துவங்கள் மண்ணிலிருந்து ஓயாது பலியாகின்றன. உயிர்த் தத்துவம் அடங்கப்பெற்றிருப்பதே உணவு. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது வாழமுடியாது. இதுவே இயற்கையின் அமைப்பு. இயற்கையில் எங்குக் கொலைச் செயல் நிகழா திருக்கிறது? பார்க்குமிடமெங்கும் கொலைக்களமே. கண் மூடித்தனத்தை அகற்றிவிட்டுக் கொலைக்களமாக இவ்வுலகைக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்.
சிருஷ்டியில் முத்தொழிலும் அடங்கியிருக்கின்றன. ஓர் இடத்தில் சூரியோதயம் என்றால் மற்றோர் இடத்தில் சூரிய அஸ்தமனம். ஓர் இடத்தில் உயிர் பிறக்கிறதென்றால் மற்றோர் இடத்தில் உயிர் இருக்கிறது. உடலை உண்ணுபண்ணுதல் என்றால் உணவை அழித்தல் என்று பொருள்படுகிறது. ஓயாது புதிய உயிர்களாகப் பிறந்துகொண்டிருக்கிற உலகில் அவையாவும் பழைய உயிர்களாக மாறி மடிந்து கொண்டும் இருக்கின்றன. சிருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் இடைநிலை ஸ்திதி என்று இயம்பப்படுகிறது. ஆக படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற முச் செயலும் முக்கோணம் போன்று ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. மரணத்தை அறிந்துகொண்டால் மற்ற இரண்டும் எளிதில் விளங்கும்.
இயற்கையைக் கொலைக்களம் என்று ஒப்புக்கொள்பவர் பிறகு கீதா சாஸ்திரத்தைக் கற்றே ஆகவேண்டும். கொலை மறுக்க விரும்பும் நீ கொலைக்களத்துக்குள் வரலாகாது. அதற்குள் வந்தான பிறகு நீ கொலை செய்யா திருக்கமுடியாது. கோழை போன்று போர்க்களத்தில் தயங்கி நில்லாதே. கோழைக்கு மண்ணுலகும் இல்லை; விண்ணுலகும் இல்லை; எவ்வுலகும் இல்லை. ஆண்மையுடன் எழுந்திரு. வாழ்வு என்னும் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்து. ஆயினும் அதனிடத்துப் பற்றுவைக்காதே. போர் நிலத்தில் நீ பாங்குடன் போர் புரிந்தால், போர் கடந்த பெரு நிலத்தைப் பண்புடன் பெற்றிடுவாய் என்பது கீதையின் கோட்பாடு. ஆக, பகவத்கீதை கொலை நூலே. இயற்கை என்னும் கொலைக்களத்தில் வாழ்வு என்னும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுதற்கு பகவத்கீதை என்னும் கொலை நூலை ஒவ்வொருவனும் கற்றாகவேண்டும்.
12. புரட்சி நூல்
பகவத் கீதையில் இரண்டு பெரிய குறைபாடுகளை எடுத்துக் காட்டி, அதை சாஸ்திரம் என்று பகர்வது பொருந்தாது என்று அதைத் தாக்குபவர் ஒரு சிலர் இருக்கின்றனர். இவ்வுலகத்தோடு சம்பந்தப்படாத பல கோட்பாடுகள் அதில் இருக்கின்றன. பாஷியக்காரர்களுக்கிடையில் ஓயாத போராட்டத்தை அது உண்டுபண்ணியிருக்கிறது. ஒவ்வொரு மதவாதியும் தன் கொள்கையே பெரியதென்றும், மற்றவர் கொள்கைகள் குறைபட்டவைகளென்றும் சொற்போர் நிகழ்த்துதற்கு பகவத்கீதை காலமெல்லாம் இடம்கொடுத்து வருகிறது. அந்த அளவில்கருத்து உலகில் அது ஓயாது புரட்சியை வளர்த்துக்கொண்டு வருகிறது.
கெட்டவர்கள் தோன்றி சமூகத்தில் பெரிய குழப்பத்தைக் கிளப்புதற்குக் கீதை ஆதரவு தருகிறது. வெடிகுண்டு போட முயலுபவர்க்கு அது வெடிமருந்து போன்றது. போற்றுதற்கு உரிய பெரியோர்களைக் கொல்லும்படி அது தூண்டுகிறது. கொல்லுபவன் கொலை பாதகன் அல்லன் என்று அது புகட்டுகிறது. கருமம் மனிதனைப் பந்தப்படுத்தாது என்றும் அது போதிக்கிறது. சூது ஆடுபவரிடத்துக் கிருஷ்ணன் தானே சூதாட்டமாக இருப்பதாகவும் சொல்லுகிறான். இதையெல்லாம் படித்துவிட்டுப் பாமரர் தாறுமாறாக ஒழுக ஆரம்பித்து விட்டால் சமூகத்தின்கதி என்னாவது என்பது கேள்வி. இங்ஙனம் கீதையின்மீது ஆ÷க்ஷபம் கொண்டு வருவார் உளர்.
பகவத்கீதையில் இத்தகைய குற்றங்கள் இருக்கின்றனவாவென்று வாசகர்கள் கொஞ்சம் அறிந்து கொள்ளுதல் அவசியம். மத ஆசாரியர் ஒவ்வொருவரும் சமூகத்துக்குப் பெருநன்மை செய்தவர் ஆவார். ஒரு மரத்தின் பெருமையை அது தரும் கனியினின்று தெரிந்து கொள்ளலாம். சமய ஆசாரியர்களின் பெருமையை அவர்கள் சமூகத்துக்கு வழங்கியிருக்கும் நல்வாழ்வினின்று ஓரளவு தெரிந்துகொள்ளலாம். மக்களிடத்து அவர்கள் எல்லாரும் பேரன்பு பூண்டவர்கள். சுயநலத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம்; கல்விக்கு அவர்கள் களஞ்சியம்; ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு. அத்தகையவர்கள் கீதா சாஸ்திரத்தைப் பின்பற்றினார்கள் என்றால் அது கீழ்த்தரமான போதனையுடையதாய் இருக்கமுடியாது. மேலான சம்பிரதாயம் அனைத்துக்கும் அது பிரமாணமாகிறது.
இனி, அறிவிலிகள் ஒரு நூலை முறையாக அறிந்து கொள்ள வில்லையானால், அது அந்த நூலின் குற்றமாகாது. அமிர்தத்தை விஷமாக்குவார் உளர். அப்படி அவர்கள் செய்வது அமிர்தத்தின் குற்றமாகாது. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி யோக சாஸ்திரத்தைக் கீழ்மக்கள் பொருள்படுத்துவார்களானால் அது அந்த சாஸ்திரத்தின் குற்றமாகாது. பல்லாயிரம் மேன்மக்களுக்குப் பாரமார்த்திகவாழ்க்கைக்கு அது வழிகாட்டியிருக்கிறது. காலமெல்லாம் அச்செயலையே கீதா சாஸ்திரம் செய்ய வல்லது. புலனடக்கமும், பக்தியும், தன்னலத் தியாகமும், தபசும், தொண்டு புரிதலும் இல்லாத கீழ்மக்களுக்கு கீதாசாஸ்திரம் உதவாது என்பது கோட்பாடு.
13. கீதா சாஸ்திரம் புகட்டுவது யாது?
அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்றென்றும் தோழன்; அதற்கு மேல் உறவினனும் ஆகிறான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தின் புறத்தோற்றம் அது. அர்ஜுனனுடைய மனபரிபாகத்துக்கு ஏற்ற உதவியை அப்போதைக்கப்போது கிருஷ்ணன் செய்து வந்தான். நல்ல கல்வி பெறுதல் பயிற்சி பெறுதல், ராஜ்யம் நிறுவுதல், ஆபத்தினின்று தப்பித்துக் கொள்ளுதல், எதிரியினின்று மீளுதல், திரவியம் தேடுதல் இவை போன்ற உலகக் காரியங்கள் அனைத்துக்கும் அவன் சகாயம் செய்துவந்தான். தன் தங்கையையே அர்ஜுனனுக்கு மணம் முடித்துக்கொடுத்தான். இம்மையில் இன்பமூட்டும் இவையாவையும் பிரேயஸ் என்பர் பெரியோர். பல பிறவிகள் எடுத்துப் பிரியமானவைகளைப் பெற்று மகிழ்வுற்றிருக்கின்றனர் ஜீவர்கள். இவையாவையும் உயிர்களுக்கு நல்குபவர் கடவுள். வாழ்க்கையில் பிறகு நெருக்கடி ஒன்று வருகிறது. அர்ஜுனனுக்கு யுத்தம் என்னும் நெருக்கடி வந்தது. யுத்தத்துக்கு அவன் அஞ்சியவன் அல்லன். மகாதேவனையே முன்பு எதிர்த்துப் போர் புரிந்தவன். ஆனால் இந்த நெருக்கடியில் அவனுக்கு மனக்குழப்பம் உண்டாயிற்று. போர்புரிவது சிறந்ததா? எதிர்ப்பவர்க்கு எல்லாம் விட்டுக்கொடுத்து விடுவது சிறந்ததா? செய்வது இன்னதென்று தெரியாது திகைத்தான். அவன் பெற்ற பேறும், புகழும், போகமும் இந்த நெருக்கடியில் பயன்படவில்லை. சுருங்கச் சொன்னால் அவன் பெற்றிருந்த பிரேயஸ் பயன்படாது போய்விட்டது. ஆகவே அச்யுதனிடம் அவன் அடைக்கலம் புகுந்தான். சிஷ்யன் ஆனான்; சிரேயஸைப் புகட்ட வேண்டுமென்று விண்ணப்பித்தான்.
அர்ஜுனனுக்கு அத்தகைய மனநிலை வரும்வரை கிருஷ்ணன் காத்திருந்தான். ஏனென்றால் தோழமையில் பிரேயசை வழங்கலாம்; சிரேயஸை நல்கலாகாது. சிஷ்யபாவனை வரும் முன்பு சிரேயஸைப் புகட்டினால் அது பயன்தராது. பூமி விதைப்புக்குப் பண்படுவது போன்று அர்ஜுனனுடைய மனது சிரேயஸைப் பெறுதற்கு நன்கு பண்பட்டுள்ளது. அதைக் குறித்து கிருஷ்ணன் பெருமகிழ்வடைகிறான். உள்ளன்போடு சிரேயஸை எடுத்துப் புகட்டுகிறான். யோகமும், பக்தியும், ஞானமும் அடங்கப்பெற்றது சிரேயஸ். அது முக்தி மார்க்கம்.
பண்பட்ட பூமிக்குள் நல்ல விதையை விதைப்பது போன்று சிறந்த சாஸ்திரம் ஒன்று எப்பொழுதும் எடுத்த எடுப்பிலேயே சிரேயஸின் உட்கருத்தைத் தெளிவுபட உள்ளத்தினுள் புகட்டி வைக்கிறது. பிறகு அதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் பின் தொடருகின்றன. சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். தோற்றத்துக்கு அப்பால் இருப்பது பூரணம். தோற்றத்துக்கு வந்திருப்பது பூரணம். பூரணமே யாண்டும் உள்ளது இந்த வாக்கு மூலத்தில் உபநிஷத்தின் உட்கருத்து அனைத்தும் வந்தமைகிறது. பிறகு இதற்கு விளக்கமாக மற்ற பகுதிகள் தொடர்ந்து வருகின்றன. பகவத்கீதையினுடைய போக்கும் இத்தகையதே. முதல் அத்தியாயத்தில், பகவானுடைய பேச்சு ஒன்றும் இல்லை. இரண்டாவது அத்தியாயத்தில், இரண்டாவது, மூன்றாவது சுலோகங்களில் அவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்.
அதாவது: அர்ஜுனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வுள்ளச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது?
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய்.
வாழ்க்கைக்குத் திறவுகோலைக் கிருஷ்ணன் இக்கோட்பாட்டில் கொடுத்து அருளுகிறான். கீதையின் மூலக் கருத்து இதுவேயாம். தொடர்ந்து வருகிற ஒவ்வொரு அத்தியாயமும் இதற்கு ஒவ்வொரு விளக்கமாகிறது.
வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவன் என்பதை கீதையின் கோட்பாடு. இம்மைக்கும் மறுமைக்கும் உறுதுணையாவது வலிவு. வலிவு உயிரை வளர்க்கிறது; மெலிவு உயிரைத் தேய்க்கிறது. வலிவு நோயை நீக்குகிறது; மெலிவு நோயை வளர்க்கிறது. வலிவு நல்லறத்தையும் நேர்மையையும் நல்குகிறது. மெலிவு மனக்கோணலையும் ஒழுக்கமின்மையையும் யாண்டும் உண்டுபண்ணுகிறது. ஆத்ம போதத்தைப் பெருக்குவது வலிவு; பிரபஞ்ச உணர்ச்சியை ஊட்டுவது மெலிவு. பந்தத்தை மிகைப்படுத்துவது மெலிவு; மோக்ஷத்தை வழங்குவது வலிவு.
14. பகவத்கீதா உபநிஷதம்
உபநிஷதங்கள் எல்லாம் நான்கு வேதங்களினின்று வந்தவை. பகவத்கீதையோ மஹாபாரதத்தினின்று வந்தது. ஆயினும் இது உபநிஷதம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் எல்லா உபநிஷதங்களின் சாரம் இதில் இருக்கிறது. உபநிஷதங்களையெல்லாம் பசு என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையை அவை தரும் பால் என்று பகரலாம். பசுக்கள் விதவிதமான நிறமுடையவைகளாக இருக்கின்றன. ஆனால் அவைகளினின்று வரும் பால் வெண்மையானது. பசுவை எல்லோராலும் வளர்க்க முடியாது. அதனின்று பால் கறப்பதும் கஷ்டமானது. பாலை அருந்துவது எல்லார்க்கும் இயலும். பாலினின்று தயிர், வெண்ணெய், நெய் முதலியன செய்துகொள்ளலாம். அங்ஙனம் கீதா சாஸ்திரத்தை இகபரமிரண்டுக்கும் ஏற்ற நல்ல வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம். போகுமிடத்துக்கெல்லாம் பசுவைக் கொண்டுபோக முடியாது. பாலை எங்கு வேண்டுமானாலும் பாதுகாத்து எடுத்துச் செல்லலாம். அதாவது கீதையை நன்றாக அறிந்துகொண்டவர்கள் பிறகு உபநிஷதங்களில் அடங்கியிருக்கும் கோட்பாடு யாதோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. எல்லார்க்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை விளங்கும்படி செய்து வைத்தவன் கிருஷ்ணன். அதற்கு முகாமையாக அமைந்தவன் அர்ஜுனன். கன்றுக்காகப் பசு பால் சுரக்கிறது. பின்பு அது உலகுக்கும் உணவாகப் பயன்படுகிறது. கீதையும் அங்ஙனம் உலகுக்குப் பயன்பட்டு வருகிறது. ஜீரணசக்திக்கு ஏற்ற அளவு பாலை அருந்தலாம். நோயாளிக்கும் ஆரோக்கியவானுக்கும் அது நல்லுணவு ஆகிறது. கீதையை அவரவர் பரிபக்குவத்துக்கு ஏற்ற அளவு பயன்படுத்தலாம். நல்வாழ்வை இன்று புதியதாகத் துவக்குகிற மனிதனுக்கும் அது பயன்படும்; சாதனத்தில் மேலான நிலைக்கு வந்திருப்பவனுக்கும் பயன்படும். கீதையில் அடங்கியில்லாத இகபர தத்துவம் ஒன்றுமில்லை.
15. பிரம்ம வித்தை
வித்தைகள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். புதிய புதிய பௌதிக ஞானங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. மனிதனுடைய அறிவு எல்லாத்துறைகளிலும் அதிவேகம் விரி வடைந்து கொண்டே வருகிறது. அதற்கிடையில் மற்றொரு பேருண்மையை மனிதன் உணர்கிறான். புதியதாகப் பெறுகிற இயற்கையின் ஞானம் ஒன்றோ மனிதன் இன்னும் பெறவேண்டிய பகுதி பன்மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறத. கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பது எல்லார்க்கும் உண்மை. பரந்த அறிவு வரவர, மேலும் அறிய வேண்டியது அகண்டாகாரத்தில் விரிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை உணர்ந்த சான்றோர் கேள்வியொன்று கேட்டனர். எதை அறிந்தால் அறிவு பூர்த்தியாகிறது? எதை அறிந்து கொண்டால் இயற்கையின் மர்மம் முழுதும் விளங்கி விடுகிறது? இந்த ஆழ்ந்த ஆராய்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அனைத்துக்கும் முதற்காரணம் எது என்பதை அன்னவர் அனுபூதியில் உணர்ந்தனர். மூல தத்துவத்தை அறிந்தபின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை கிடைக்கிறது. மூலப் பொருளைப் பற்றிய வித்தை பிரம்மவித்தை என்ற பெயர் பெற்றிருக்கிறது. வேறு பல பெயர்களைக் கொண்டும் அதை அழைப்பதுண்டு அவைகளுள் பரவித்தை அல்லது பரஞானம் என்பது சர்வ சாதாரணமானது. சமயங்கள் தெய்வத்துக்குக் கொடுத்திருக்கிற பெயரை இந்த ஞானத்துக்கும் கொடுத்துக் கூறுவது இயல்பு. உதாரணம் ஒன்று எடுத்துக் கொள்வோம். சிவஞானம் என்பதும் பரஞானம் என்பதும் வெவ்வேறு ஆகமாட்டா. மெய்ப்பொருளுக்கு விளக்கம் சொல்லுமிடத்து இவையிரண்டும் ஒன்றையே குறிக்கின்றன என்பது வெளியாகும். இந்த பிரம்ம வித்தையைப் புகட்டுவது கீதையின் நோக்கமாகும். அர்ஜுனன் கேட்டது போர் புரிவதா, பின் வாங்குவதா என்பதாகும். அதற்கு இரண்டில் ஒன்றை இயம்புதற்குப் பதிலாக, பிரம்ம வித்தையை ஏன் பகவான் எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி பிறக்கக்கூடும். அப்போதைக்கப்போது உண்டாகும் சந்தேகங்களை அகற்றி வைப்பது ஒருவித உதவியாகும். புதிய சந்தேகம் பிறப்பதற்கு இடமில்லாது ஐயங்கள் அனைத்தையும் அறவே அகற்றிவைப்பது உயர்ந்த உபகாரமாகிறது. ஒரு ஜீவனுக்குக் கொடுக்கும் கொடைகளுள் முடிவானது பிரம்ம ஞானம். ஜீவாத்மா அதை ஏற்க வல்லவனாகும்போது பரமாத்மா அதை எடுத்து உவந்து அளிக்கிறார்.
16. யோக சாஸ்திரம்
ஒவ்வொரு சாஸ்திரத்திலும் உபபத்தி என்றும் அனுஷ்டானம் என்றும் இரண்டு பகுதிகள் உண்டு. ஆங்கிலத்தில் இவைகளை (தியரி அண்டு பிராக்டீஸ்) என்பார்கள். யுக்தியால் முடிவு கட்டுவது உபபத்தி; நடைமுறையில் செய்துகாட்டுவது அனுஷ்டானம். சாதாரண மனிதன் ஒருவனுக்கு பிரம்மஞானம் வெறும் உபபத்தியாகப் போய்விடலாம். அப்பொழுது அவன் அதில் நன்மையொன்றும் அடையமாட்டான். வாய் வேதாந்தம் என்பது அதுவே. ஆனால் பிரம்மஞானம் வேறு, வாய்ப்பேச்சு வேறு. பிரம்மஞானம் முற்றிலும் வாழ்க்கைக்கு உரியது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் அதை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவரலாம். ஆகையால் அது யோக சாஸ்திரம் என்னும் பெயர் பெறுகிறது. கூலி வேலை செய்பவனுக்குப் கீதா தத்துவம் தெரிந்திருந்தால் அவன் தன்வேலையைத் திறம்படச் செய்வான். பயிர்த்தொழில் செய்பவனுக்குக் கீதா தத்துவம் தெரிந்திருந்தால் அவன் நல்ல கிருஷிகன் ஆவான். வர்த்தகம் செய்பவனுக்கு இக்கோட்பாடுகள் தெரிந்திருந்தால் அவள் சிறந்த வியாபாரியாவான். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கீதையை நன்கு கற்றறிருந்தால் அவர்களுடைய உத்தியோகம் சீராக நிகழும். பாடம் புகட்டும் ஆசிரியர்கள் கீதையின் கோட்பாடுகளை அறிந்து கொண்டால் அவர்கள் சீரிய ஆசிரியர்கள் ஆவார்கள். சுருக்கிச் சொல்லுமிடத்து கீதையைக் கற்று அனுஷ்டிக்கும் ஒவ்வொரு மனிதனும் மேலான மனிதன் ஆவான். திறமை வாய்க்கப்பெற்ற மனிதனுக்கே யோகி என்று பெயர்.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களுள் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொரு யோகம் என்ற பெயர் வந்து அமைகிறது. மனத்தின் பண்பாடு யோகமாகிறது. மனம் தளர் வுறுவார்க்கும் துயருறுவார்க்கும் யோமில்லை என்பது கோட்பாடு. அதாவது வியாகூலமுடையவன் யோகியாகான். பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சாஸ்திரத்தில் அஷ்டாங்கங்களில் ஓர் அங்கமாகிய நியமம் என்னும் பகுதியில் சந்தோஷம் என்பது யோகத்துக்கு இன்றியமையாத கோட்பாடாகும். மனத்தகத்து அமையும் ஆனந்தமும் கொள்ளுதல் வேண்டும். அப்படியானால் கீதையின் முதல் அத்தியாயத்துக்கு யோகம் என்னும் தலைப்புப் பொருந்தாது. அர்ஜுன விஷாதயோகம் என்னும் பெயர் அதற்கு அமைந்துள்ளது. இருளை வெளிச்சம் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தாதோ அப்படித் துயரத்தை யோகம் என்று அழைப்பது சரியன்று. பின்பு அந்த அத்தியாயத்துக்கு ஏன் யோகம் என்ற பெயர் வந்தது?
துயரத்தில் இரண்டு விதம் உண்டு. ஒன்று உலக ஆசையைக் குறித்தது. தனக்கு வந்து அமைந்த போகமும் பொருளும் போதவில்லையென்று துயருறுபவன் உண்டு. அத்தகைய துயரத்தால் ஆண்மை அகன்று அழிகிறது; வீரம் விரயமாய்ப்போகிறது; அக்ஞான இருள் அதிகரிக்கிறது. ஆனால் அர்ஜுனனுக்கு அமர்க்களத்தில் வந்த துயரம் அத்தகையதன்று. அவனுக்கு உலக ஆசை அகன்று ஒழிகிறது. மூவுலகின் ராஜ்யமும் வேண்டாம் என்கிறான். போர் புரிவதா, பின்வாங்குவதா, எது தன் கடமையென்று தனக்குப் புலப்படவில்லையென்று பரிதவிக்கிறான். வாழ்க்கையின் மர்மம் அவனுக்கு விளங்கவில்லை. உயிர்வாழ்க்கை அவனுக்குத் தாங்கமுடியாத தலைச்சுமைபோன்று தென்பட்டது. அதைக் குறித்து அவன் வருந்தினான். அது வாழ்க்கையில் விரக்தி அல்லது பற்றின்மைக்குச் சமானம். அருள்தாகம் என்றும் அதை இயம்பலாம். அர்ஜுனன் அடைந்த துயரம் அவனை யோகத்துக்கு ஆயத்தப்படுத்துகிறது. நல்லறிவும் அறநெறியும் வேண்டுமென்று பரிதாபப்படுபவர் பாக்கியவான்கள்; ஏனென்றால் அன்னவர் அருள்நிலையில் ஆறுதல் அடைவர் என்பது கோட்பாடு. வல்வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே, என்றார் ஆத்ம சாதகர் ஒருவர். இப்பொழுது விஜயனுக்கு வந்துள்ள விசனம் இனி யோகத்தை வருவிப்பதற்கு ஏதுவாகிறது. ஆகவே அந்த விசனமும் ஒருவித யோகம் என்று சொல்லப்படுகிறது.
பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம். அந்த நான்கும் முறையே கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பெயர் பெறுகின்றன. இந்த நான்கினுள் ஆரம்பதசையில் இருப்பது கர்மயோகமென்றும், பிறகு அது ராஜயோகமாகப் பரிணமிக்கிறதென்றும், அதினின்று பக்தியோகம் ஓங்கிறதென்றும், இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது. கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது. நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணபகவான் இந்த நான்கினுள் வேற்றுமையோ தார தம்மியமோ பாராட்டுகிற அறிகுறிகளைக் காணமுடியாது. கர்மத்தோடு உயர்ந்த ஞானத்தை அவர் இணைக்கிறார். பிறகு பக்தியையும் ஞானத்தையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துகிறார். யோகத்தையும் பக்தியையும் மற்றோர் இடத்தில் ஒன்றுபடுத்துகிறார். இங்ஙனம் ஒரு யோகம் மற்றோன்றுக்கு முந்தியதுமல்ல பிந்தியதுமல்ல, மேலானதுமல்ல கீழானதுமல்ல என்று எடுத்துக்காட்டுவது அவரது சிறப்பியல்பு ஆகும். வாழ்க்கை என்னும் ரதத்துக்கு அவர் நான்கு யோகங்கள் என்னும் நான்கு குதிரைகளைப் பூட்டுகிறார். அவைகள் வெண்குதிரைகளாயிருப்பது அவைகளின் சாத்துவிக இயல்பையும் தூய்மையையும் விளக்குகிறது. ரதத்தை விரைந்து ஓட்டுதற்கு நான்கு குதிரைகளும் சேர்ந்து உழைக்க வேண்டும். அங்ஙனம் நான்கு யோகங்களும் ஏக காலத்தில் சேர்ந்து அனுஷ்டிக்கப்படும்பொழுது வாழ்க்கையின் லட்சியம் இனிது நிறைவேறுகிறது. நான்கு யோகங்களையும் சமரசமாக வழங்குகின்ற அப்பரம புருஷனுக்கு யோகேசுவரன் என்னும் பெயர் வந்துள்ளது.
17. போதனா முறை
அவதார புருஷர்கள் எல்லாரும் மக்களுக்குத் தாங்கள் புகட்டியவைகளை மிக எளிய முறையில் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கும், பாமரருக்கும் விளங்கும்வண்ணம் மேலாம் தத்துவங்களைச் சுலபமாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய உபதேசங்களுக்கு வியாக்கியானம் செய்யவேண்டிய அவசியமில்லை. வியாக்கியானம் செய்ய முயன்றவர்கள் தங்களுடைய கொள்கை அவதார புருஷருடைய கூற்றில் அடங்கியிருக்கிறது என்பதைக் காட்டுதற்கே முன்வந்தனர். தர்க்கம் முதலிய உபகரணங்களைக் கையாண்டவர்களும், பாஷ்யக்காரர்களேயாம். ஆனால் அவதார புருஷர்கள் புகட்டியதிலோ தாய் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போன்று அவ்வளவு இனியதும், எளியதுமான முறையைக் கையாண்டிருக்கின்றனர். ஸ்ரீராமன், புத்தர், ஏசுநாதர் போன்றவர்களுடைய போதனைகளை நாம் உள்ளபடி அறிந்து கொள்ளுதற்கு யாருடைய வியாக்கியானமும் நமக்குத் தேவையில்லை.
ஸ்ரீமத் பகவத்கீதையும் போதனா முறையில் மிக எளியதே. மூலத்தை அவரவர்க்குத் தெரிந்த மொழியிலே பெயர்த்தெடுத்துப் படித்துப் பார்த்தால் படிக்கின்றவர்களுக்கு விளங்காத பகுதி மிகக் குறைவு; விளங்குகிற பகுதியே பெரும்பான்மை எனலாம். அது அவ்வளவு எளியதாக இருப்பது மட்டுமல்ல மிக ஆழ்ந்ததாகவும் இருக்கின்றது. பகவத்கீதைக்கு மூலமொழியாகிய சம்ஸ்கிருதத்தில் அமைந்ததே அது ஆழத்தில் செல்லுதற்கு இடங்கொடுத்தது. மொழி அழகானது, விதவிதமான பொருள் அழகாக வடிவெடுக்க வல்லதாக கீதையில் அமைந்திருக்கிறது. விதவிதமான பொருள்களையும் சம்பிரதாயங்களையும் அதில் காணலாம் என்றாலும், அத்தனைவித விளக்கங்கள் ஒன்றோடொன்று முரண்படுபவைகளல்ல. ஆகையால்தான் அது பிரஸ்தானத்திரயத்தில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது.
ஒரு கோட்பாட்டை பகவான் ஓரிடத்தில் பகர்ந்தால் அதன் பொருள் நன்கு விளங்குதற்பொருட்டு வேறு பல இடங்களிலும் வேறு விதங்களில் அதை விளக்குகிறார். சான்றுகள் சில எடுத்துக்கொள்வோம். உயிரோடிருப்பவனைக் குறித்தோ, உயிர் துறந்தவனைக் குறித்தோ பண்டிதன் விசனப்படுவதில்லை என்கிறார் ஓரிடத்தில், ஒரு விதத்தில் பண்டிதன் என்னும் சொல்லுக்கு அது விளக்கமாகிறது. மற்றோர் இடத்தில் சிற்றுயிர் பேருயிர் ஆகிய அனைத்திடத்தும் சமதிருஷ்டி உடையவன் பண்டிதன் என்கிறார். இங்ஙனம் பண்டிதன் என்னும் சொல்லை எங்கெங்கு கையாண்டிருக்கிறார் என்று பார்த்தால் அதற்கு முழு விளக்கம் கிடைக்கின்றது. யோகம் என்னும் சொல்லை அடிக்கடி உபயோகப்படுத்துகின்றார். செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது யோகம் என்ற விளக்கம் ஓரிடத்தில் அமைகிறது. மனம் நடுநிலை வகிப்பது யோகம் என்ற விளக்கம் இன்னோரிடத்தில் வருகிறது. வலிய எடுத்துக்கொண்ட வருத்தங்களினின்று விடுபடுவது யோகம் என்ற விளக்கம் இன்னும் ஓர் இடத்தில் வருகிறது. இவைகளையெல்லாம் திரட்டினால் யோகத்தைப்பற்றிய எல்லாக் கோட்பாடுகளும் நமக்கு விளங்குவனவாகின்றன.
புகட்டிய ஒரு கருத்தையே திரும்பவும் அவர் புகட்டுவது போன்று சில இடங்களில் தென்படும். ஆயினும் சொன்னதையே சொல்லுதல் என்னும் குற்றம் அவரைச் சாராது. யோகம் என்னும் சொல் முதல் ஆறு அத்தியாயங்களில் பெரும்பாலும் கரும யோகத்தையே குறிக்கும். இரண்டாவது ஆறு அத்தியாயங்களில் அது சிறப்பாக பக்தியோகத்தைக் குறிக்கும். கடைசி ஆறு அத்தியாயங்களில் அது ஞானயோகத்தைக் குறிக்கும். அஹங்காரம் என்னும் சொல்லும் அங்ஙனமே இடத்துக்கு ஏற்றாற் போன்று விதவிதமாகப் பொருள்படும். ஒரே கோட்பாட்டை கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களில் மூன்றுவிதமாகப் பொருள்படுத்தலாம். அப்படிப் பொருள்படுத்துவதும் முற்றிலும் அவசியமாகிறது. ஆத்மா என்னும் சொல் முதல் ஷட்கத்தில் சத் சொரூபமாக வடிவெடுக்கும். இரண்டாவது ஷட்கத்தில் அது ஆனந்த சொரூபமாக அல்லது பிரேமை சொரூபமாக வடிவெடுக்கும். கடைசி ஷட்கத்தில் ஆத்மா சித்சொரூபமாக வடிவெடுக்கும். இவை யாவற்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் பகர்ந்த கோட்பாட்டையே திரும்பவும் பகர்ந்திருக்கின்றார் என்ற குற்றத்தை கீதாசாரியின் மீது நாம் சாட்டமாட்டோம். எதையும் அவர் மிகைபடவோ, குறைவுபடவோ பகரவில்லை. அனைத்தையும் அளந்தெடுத்தே அவர் விளக்கியுள்ளார்.
18. சுருதியும் ஸ்மிருதியும்
பகவத்கீதைக்கு அமைந்துள்ள தனிச் சிறப்புக்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் வழங்குகிறது. சுருதி எது, ஸ்மிருதி எது என்று முதலில் ஆராய்வோம். உபநிஷதங்களுக்குச் சுருதி என்று பெயர். கர்ண பரம்பரையாகக் காதால் கேட்டுப் காப்பாற்றி வைக்கப்பட்டது எதுவோ அது சுருதி. நெடுங்காலமாக ஒருவர் பின் ஒருவராகக்கேட்டு வந்தது எனினும் அதன் சொல் அமைப்பை யாரும் மாற்றிவிடவில்லை. ஆகையால் மூலப்பொருளமைப்பும் திரிவுபடாது இருந்து வந்திருக்கிறது. கணிதத்தில் எண்சுவடியையும் பெருக்கல் வாய்ப்பாட்டையும் எப்படி யாரும் மாற்றமுடியாதோ அப்படி சுருதிப்பொருளை யாரும் மாற்ற முடியாது. மெய்ப்பொருளை விளக்குகின்ற சுருதி மொழியும் என்றும் மாறாதிருக்கிறது. ஆக, சுருதி யாண்டும் சாசுவதமானது.
ஸ்மிருதி என்பது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டது என்று பொருள்படுகிறது. சமூகவாழ்க்கை சம்பந்தமான கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் சேர்ந்து ஸ்மிருதி என்னும் பெயர் பெறுகிறது. நன்கு அமைக்கப்பெற்ற ஸ்மிருதிகள் எப்பொழுதும் பரதத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவைகள். பராசர ஸ்மிருதி, மனுஸ்மிருதி முதலியவைகள் பிரசித்திபெற்றவைகள். ஸ்மிருதிகள் சாசுவதமானவைகளன்று. காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப அவைகள் மாறியமையும். சமூக நடைமுறைகளை நன்கு அறிந்துள்ள மேலோன் ஒருவன், அல்லது மேலோர் கூட்டம் ஒன்று ஸ்மிருதிகளைக் காலத்துக்கு ஏற்றவாறு திருத்தியமைத்துக் கொள்வதுண்டு. சுதந்தர இந்தியாவுக்கு இப்பொழுது இந்திய அரசாங்கம் அமைத்துள்ள சட்டதிட்டங்களையும் ஸ்மிருதியெனலாம். ஆக, ஸ்மிருதி யென்பது அப்போதைக்கப்போது மாறியமையும் தன்மையுள்ள சமூகக்கோட்பாடுகளாம்.
ஸ்ரீமந் பகவத்கீதையானது ஏககாலத்தில் சுருதியாகவும் ஸ்மிருதியாகவும் அமைந்துள்ளது. பரதத்துவத்தை அது நன்கு விளக்குவதால் அது சுருதியாகிறது. பரதத்துவத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது சநாதன தர்மம். இந்நூலினின்று சநாதனதர்மத்தை உள்ளபடி கற்றுக்கொள்ளலாம். சமுதாய அமைப்பு எத்தகையது என்பதையும், அது எங்ஙனம் நடைபெற வேண்டும் என்பதையும் கீதை எடுத்து விளக்குகிறது. சநாதன தர்மம் யுகதர்மமாக வடிவெடுக்கும் விதத்தையும் அது காட்டிக் கொடுக்கிறது. இதை ஒரு உபமானத்தைக் கொண்டு அறிவது நன்று. பொன் என்றைக்கும் விலையுயர்ந்த பொருள் ஆகிறது. பொற்காசு பெறுகிற முத்திரை ஒவ்வொரு அரசாங்கத்திலும் மாறியமைகிறது. பொன் போன்றது சநாதன தர்மம். பொற்காசு போன்றது யுகதர்மம். இனி, ஸ்மிருதியும் பொற்காசுக்குச் சமானமானது. சாஸ்திரப் பிரமாணங்களைச் சொல்ல வருகிற மத ஸ்தாபகர்கள் ஸ்மிருதியும் அங்ஙனம் பகர்கிறது என்று சொல்லுவார்களானால் அவர்கள் குறிப்பிடுவது பகவத்கீதையாகும். ஆசாரியர்களுக்கிடையில் அது ஸ்மிருதி என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. மற்ற ஸ்மிருதிகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறியமையும். ஆனால் பகவத்கீதையை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் சமூக நடைமுறையிலும் எக்காலத்துக்கும் பொதுவாயுள்ள கோட்பாடுகள் உண்டு. மாறுபாடு அடையும் உலகில் மாறுபாடு அடையாத கோட்பாடுகளையே கீதா சாஸ்திரம் விளக்குகிறது. ஆகவே இது எக்காலத்துக்கும் எல்லா சமூகங்களுக்கும் உதவுகிற ஸ்மிருதியாகும். கீதையைக் கற்றறிந்தவன் பாரமார்த்திகத் தத்துவங்களையும் வியாவகாரிக தத்துவங்களையும் கற்றறிந்தவன் ஆவான்.
19. மஹாவாக்கிய விளக்கம்
உலகில் உள்ள சமயங்கள் போற்றும் உயர்ந்த நூல்களெல்லாம் பொது இயல்பு ஒன்றைப் படைத்திருக்கின்றன. நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை யாவும் மஹாவாக்கியத்துக்கு விளக்கமாக வந்து அமைந்திருக்கின்றன. மஹாவாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்லுகிறது. வேதங்களில் நான்கு மஹாவாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அவைகளுள் மிகச் சிறப்புடையது தத் த்வம் அஸி என்னும் மூன்று சொற்களைக் கொண்டது. த்வம்-நீ, தத்-அதுவாக, அஸி-இருக்கிறாய் என்பது அதன்பொருள். ஜீவாத்மாவாகிய நீ பரமாத்மாவாகிய மெய்ப்பொருளுக்கு அன்னியமானவன் அல்லன் என அதற்கு விளக்கம் வருகிறது. இக் கோட்பாட்டை எல்லா சாஸ்திரங்களும் ஏதேனும் ஒரு விதத்தில் இயம்புகின்றன. இதை எடுத்து ஓதாத நூல் உயர்ந்த நூல் ஆகாது. தத் த்வம் அஸி என்னும் மகாவாக்கியத்துக்கு உற்ற உயர்ந்த விளக்கம் என்று பகவத்கீதையைச் சொல்லலாம்.
அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன. அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. ஜீவனிடத்துள்ள குறைபாடு, அவன் அடையவேண்டியநிறை நிலை, அதற்காக அவன் எடுத்துக்கொள்ள வேண்டிய முயற்சி ஆகிய இத்தனையும் முதல் ஆறு அத்தியாயங்களில் அடங்கியிருக்கின்றன. இது முதல் ஷ்டகம். ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம். மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம் அல்லது, பரமாத்மாவை அந்த ஆறு அத்தியாயங்களும் விளக்குகின்றன. உலகனைத்தும் அவர் எப்படியாயிருக்கின்றார், உலகங்களில் அவர் எப்படி அந்தராத்மாவாக இருக்கிறார், பிறகு உலகத்தைக் கடந்தவராகவும் அவர் எப்படி யிருக்கிறார் ஆகிய இவையாவும் இந்த இரண்டாவது பகுதியில் வந்தமைகின்றன. பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது. தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை. அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும் வேறு ஒரு நூல் செய்யக்கிடையாது. ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.
20. பாஷ்யங்கள்
ஒரு நூலின் உட்கருத்து எல்லாருக்கும் விளங்கும்படி அதை விரித்து எடுத்து விளக்குங்கால் அந்த விளக்கத்துக்கு பாஷ்யம் என்று பெயர். ஆழ்ந்த கருத்துடைய நூல்களுக்குப் பாஷ்யங்கள் பல அமைவது இயல்பு. பிரஸ்தானத்திரயமாகிய உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றுக்கும் பாஷ்யக்காரர் பலர் உளர். ஒரு மதம் அல்லது சம்பிரதாயத்தை நிலைநாட்ட முயலுபவர் தமது கருத்தையே பிரஸ்தானத்திரயம் விளக்குகின்றன வென்று சாஸ்திரப் பிரமாணம் மூலமாகவும் யுக்தி பூர்வமாகவும் எடுத்துக்காட்டுவர். இதுவரையில் தோன்றியுள்ள விரிவுரைகளில் பல அந்தந்த மதக்கோட்பாட்டையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பிரஸ்தானத்திரத்திலுள்ளும் பகவத் கீதைக்குத்தான் விரிவுரைகள் ஏராளமாயிருக்கின்றன. அதாவது உபநிஷதங்களுக்கும் பிரம்மசூத்திரங்களுக்கும் வியாக்யானங்கள் அமைந்திருப்பதைவிட அதிகமாக பகவத்கீதைக்கு உண்டு.
பல மொழிகளில் மொழிபெயர்ப்பு ஏற்பட்டிருப்பது ஒரு நூலின் சிறப்பைக் காட்டுகிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. கிறிஸ்து மத சாஸ்திரமாகிய பைபிள் ஆகும். அப்படி மொழி பெயர்ப்பை உண்டுபண்ணுவதற்குப் பணமும் ஆதிக்கமும் இருந்தால் போதுமானது. கிறிஸ்தவ ஆட்சியில் அவ்விரண்டும் சேர்ந்து அமைந்திருந்தன. ஆனால் கீதைக்கு அமைந்துள்ள மொழிபெயர்ப்புகள் ஆதிக்கத்தையோ பெருஞ் செல்வத்தையோ அடிப்படையாகக் கொண்டவைகளல்ல. இந்த உயர்ந்த கோட்பாடுகளை மக்கள் அறிந்துகொண்டால் அவர்களுக்கு நலன் ஏற்படும் என்ற எண்ணமே மொழிபெயர்ப்பில் மேலோரைத் தூண்டியது. சமயப்பற்றும் சமயப் பிரசாரமும் வேறு; தத்துவ ஞானமும் தத்துவப் பிரசாரமும் வேறு. கீதையின் மொழிபெயர்ப்புகளில் பல, தத்துவ ஞானத்தை ஆதாரமாகக் கொண்டவை என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். ஆங்கில பாஷையில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற ஆங்கில ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது. அந்த மொழிபெயர்ப்புக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் என்ற ஆட்சித் தலைவர் முன்னுரையொன்று கொடுத்திருந்தார். அதில் அவர் பகர்ந்ததின் கருத்து :- இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியா தேசத்தை இழக்க நேரிடலாம். ஆனால் இந்தியாவில் உதித்த இந்த பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து என்றைக்கும் மேன்மையுற்று விளங்கும். வாழ்க்கைத் தத்துவத்தின் பெருமையை உணர்ந்த ஒரு பேரறிஞரே இங்ஙனம் பகரமுடியும்.
இனி, பகவத்கீதைக்கு வியாக்கியானம் எழுதியவர்கள் எல்லாரும் பணத்தையும் ஆதிக்கத்தையும் ஆதரவாகக் கொண்டவர்கள் அல்லர். குரு÷க்ஷத்திர பூமியில் இப்பொழுது கீதா மந்திரம் என்ற ஒரு ஆலயம் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதே இடத்தில்தான் கீதா உபதேசம் அன்று நிகழ்ந்திருக்க வேண்டும் என்று அறிஞர் யூகிக்கின்றனர். அந்த ஆலயத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட வியாக்கியானங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அந்த விரிவுரைகளெல்லாம் வெவ்வேறு காலங்களில் எழுதப் பெற்றவை. அப்படி எழுதியவர்களெல்லாம் பேரறிவும் நல்லொழுக்கமும் வாய்க்கப் பெற்றவர்கள். சான்றோருலகில் கீதை எத்தகைய ஸ்தானம் வகித்து வருகிறது என்பதற்கு அதுவே சான்றாகும். அன்றைக்கு இருந்தது போன்று இன்றைக்கும் புதிய புதிய வியாக்கியானங்கள் கீதைக்கு வந்துகொண்டே இருக்கின்றன.
21. சிறந்த பாஷ்யம் எது?
நூற்றுக்கணக்கான விரிவுரைகள் கீதைக்கு வந்திருக்கின்றன வென்றால் அவைகளில் எதை ஏற்பது, எதை விலக்குவது, எதைக் கற்பது, எதைத் தள்ளுவது என்ற கேள்விகள் எழலாம். சூரியோதயத்தின் அழகை ஒவ்வொரு கலைஞானியும் தன் தன் துறையில் வைத்து சிலாகித்துப் பேசலாம். வானநூல் துறை, மருத்துவ நூல் துறை, இயற்கையழகுத் துறை, கணித நூல் துறை, ஜோதிட நூல் துறை, பருவ விளக்கத்துறை, உயிர் தத்துவத் துறை இன்னும் என்னென்னவோ துறைகளினின்று உதய சூரியனை வர்ணிக்கலாம். அத்தனைவித வர்ணனைகளுக்கும் ஞாயிறு இடங்கொடுக்கும். கீதாசாஸ்திரமும் எண்ணிறந்த சம்பிரதாயங்களை விளக்குதற்கு ஆதரவாகும். அத்தனை விதமான விளக்கங்களையும் அது தன்னகத்து அடக்கிக்கொண்டிருக்கிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக கீதைக்கென்றே அமைந்துள்ள வியாக்கியானம் ஒன்று உளது. ஒருவிதத்தில் கீதையைவிட அது சிறந்தது. ஸ்ரீ கிருஷ்ணபகவான் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு ஒப்பற்ற விளக்கமாகிறது. அவதார புருஷர் ஒருவர் தமது ஜீவிதத்தின் மூலம் புகட்டுவது தான் முதன்மை பெறுகிறது. அவர் பகர்ந்தருள்வது அதற்கு அடுத்தபடியாக வருகிறது. அவதார புருஷருடைய பேச்சுக்கே அருளையும் பொருளையும் தருவது அந்த அவதார புருஷருடைய ஜீவிதம். இக்கோட்பாடு வாசுதேவரது வாழ்க்கையில் உச்ச நிலையைப் பெற்று விளங்குகிறது. மனத்தகத்திருந்து கச்மலத்தைக் களைந்து விடு என்று அவர் புகட்டினார். சூரியனிடத்து எப்படி இருள் இருக்க இடமில்லையோ அப்படி அச்யுதனிடத்துக் கீழ்மை குடிகொள்ள இடமில்லை. ஆற்றல் படைத்தவனாய் எழுந்திராய் என்று இயம்பினார் அவர். பின்பு, ஆற்றல்கள் அனைத்துக்கும் அவரே இருப்பிடமாய் இலங்கினார். உயிர்களிடத்து அன்பு பூண்டு ஒழுகுக என்று அவர் உபதேசித்தார். தாமே அன்பின் வடிவினராய் நன்கு மிளிர்ந்திருந்தார். நலத்தை நிலைநாட்டும் வீரன் ஒருவனுக்கு உற்றார் என்றும் வேற்றார் என்றும் வேற்றுமையில்லையென்று அவர் எடுத்தோதினார். கோவிந்தனது பாங்கும் அங்ஙனமே இருந்தது. இயற்கை கர்மமே வடிவெடுத்தது. அதற்கு ஆதாரமாயிருக்கும் ஆத்மாவின்கண் கர்மமில்லை என்பது கண்ணன் போதனை. கண்ணனாக வடிவெடுத்திருந்த சரீரம் கர்மவீரனாக வினையாற்றியது. மஹாபாரதத்தில் கூடியிருந்த பாத்திரங்கள் எல்லாரும் ஒன்றுகூடிக் கண்ணன் செய்த கர்மத்தில் கால்பங்கு செய்யவில்லை. சரீரம் அவ்வளவு வேலை செய்துகொண்டிருந்ததற்கு இடையில் கிருஷ்ண பரமாத்மா என்றைக்கும் பரமாத்ம சொரூபமாகவே இருந்தார். மற்ற உயிர்கள் போன்று அவர் அழக்கிடையாது; ஏமாற்றம் அடையக்கிடையாது; வியப்படையக்கிடையாது; கவலைப்படக் கிடையாது; துயருறக் கிடையாது. யாண்டும் நிறைநிலையிலேயே இருந்தார். கண்ணனை அறிபவர் கீதையை அறிவார்கள். கண்ணனே கீதைக்குச் சிறந்த பாஷ்யம்.
22. பாஷ்யங்களின் பாகுபாடுகள்
பாஷ்யங்கள் பல இருப்பதால் அவைகளுள் முரண்பாடு உண்டாவது இயல்பு. மாறுபடுகின்ற கருத்துக்களையெல்லாம் மேலானவைகளாக அங்கீகரிப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழலாம். மாறுபாடுகளுக்கிடையில் ஒற்றுமை பல அமைந்தாகவேண்டும். பகவத்கீதையை ஒரு நிலைக்கண்ணாடி என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பாஷியமும் அதில் தோன்றும் பிம்பம் போன்றதாகும். அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும் தென்படுகிறது. கண்ணாடியில் தோன்றுவது என்பது அனைத்துக்கும் பொதுவானது. அங்ஙனம் ஒவ்வொரு கொள்கைக்கும் மூலக்கருத்து கீதையில் இருக்கவேண்டும். மூலக்கருத்து கீதையில் இல்லாவிட்டால் வியாக்யானம் வைதிகத்துக்கு ஒவ்வாததாய்விடும். வைதிகத்துக்கு ஒத்ததாய் இருந்துகொண்டே விரிவுரைகள் பலவாக வடிவெடுப்பதுதான் முறை. ஒருவர் கீதையை முற்றும் பக்திநூல் என்று பகரலாம். இன்னொருவர் அதை ஞானமார்க்கம் என்று நவிலலாம். மற்றொருவர் அதை யோசாஸ்திரம் என்றே எடுத்துக்காட்டலாம். இகலோகத்தைப் பற்றிய பேச்செல்லாம் வெறும் பெயரளவில் என்று ஒருவர் நிரூபிக்கலாம். பரத்தைப்பற்றிப் பேசவேண்டியது அவசியமில்லை; சொற்பதங் கடந்த பொருளைப் பற்றிப் பேச்சு எதற்காக? கீதை பகர்வதெல்லாம் பாரமார்த்திகத்தை அடிப்படையாகக்கொண்ட சீரிய சமுதாய வாழ்க்கையே என்று ஒருவர் எடுத்தோதலாம். அரசியல் தத்துவம் அதில் ஏராளமாய் இருக்கிறது என்று ஒருவர் பொருள்படுத்தலாம். அங்ஙனமே ராணுவ தத்துவம் அதில் பொதிந்து கிடக்கிறது என்று இன்னொருவர் இயம்பலாம். இப்படியெல்லாம் வியாக்யானம் செய்தவர்கள் சிறுபான்மையோர்.
பாஷ்யக்காரர்களில் பெரும்பான்மையோர் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று மதங்களில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவர்களாயிருந்து வருகின்றனர். அவர்களுடைய மனப்பான்மையும் அதற்கேற்றவாறு மாறியமைகிறது. கீதா தத்துவத்துக்கு அவர்கள் பொருள் தருவதும் அவரவர் மனப்பான்மைக்கு ஏற்றபடி மாறியமைந்து வருகிறது. இனி, அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லார்க்கும் அதில் ஒரே விதமான நம்பிக்கையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவர்களது கொள்கையில் உட்பிரிவுகள் ஏராளமாயிருக்கின்றன. எது அத்வைதம் என்பதை அத்வைதிகளே விதவிதமாக விளக்குவார்கள். அதேபாங்கில்தான் விசிஷ்டாத்வைதமும் அமைந்துள்ளது. விசிஷ்டாத்வைதம் என்னும் எல்லைக்குள் இருப்பவர்களுள் கருத்துவேற்றுகளைக் காணலாம். மற்று துவைத மதத்திலும் உட்பிரிவுகளை ஏராளமாகக் காணலாம். அவரவர் கோட்பாட்டைப் பரப்புதற்கென்றே ஒவ்வொருவரும் பாஷ்யம் எழுத முன்வந்தார். அத்வைத சம்பிரதாயத்துக்குச் சிறந்த முன்மாதிரியாயிருப்பவர் ஸ்ரீசங்கராச்சாரியர் ஆவார். விசிஷ்டாத்வைதிகள் அனைவர்க்கும் பிரதிநிதியாயிருப்பவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியர். துவைத மதவாதிகள் எல்லார்க்கும் முன்னணியில் இருப்பவர் ஸ்ரீ மத்வாச் சாரியர். பகவத்கீதைக்கு இம்மூவரும் பாஷ்யங்கள் இயற்றியிருக்கின்றனர். இம்மூவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்கள் என்பதும் கருத்தில் வைக்கவேண்டிய விஷயமாகும். ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதத்தை அல்லது மதங்களைத்தாக்குவதையும் பாஷ்யங்களில் காணலாம். தத்துவ ஆராய்ச்சி என்ற முறையில் ஒரு கோட்பாட்டைத் தகர்த்தல் நியாயமே. ஆனால் அதில் வரம்பு கடந்து போவது யாருக்குமே பொருந்தாது. அச் செயலில் சில பாஷ்யக்காரர் வரம்பு கடந்தும் போயிருக்கின்றனர்.
-
23. வேதாந்தம்
பிரஸ்தானத்திரயம் புகட்டுகின்ற கோட்பாடுகளையெல்லாம் தொகுத்து வேதாந்தம் என்று சொல்லுவது முறை. வேதத்தினுடைய அந்தம் அல்லது முடிவு வேதாந்தம் என்பதாகிறது. இம்மை என்று சொல்லப்படும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும், மறுமை என்று சொல்லப்படும் சுவர்க்கம் முதலிய மறு உலக வாழ்க்கையைப் பற்றியும் பகர்வது வேதம். வேறு ஒரு விதத்தில் அதே கோட்பாட்டைப் பகர்வோமானால் இந்திரியங்கள் மூலம் நுகரப்பரடுகின்ற பிரபஞ்ச வாழ்க்கையைப்பற்றி பேசுவது வேதம். இந்திரியங்களுக்கும் மனதுக்கும் அப்பால் உள்ள பரத்தைப் பற்றிப் புகட்டுவது வேதாந்தம். இந்திரிய வாழ்க்கையைத் தியாகம் செய்தாலொழிய பரம் என்னும் பெருநிலை சித்திக்காது.
இந்தியாவிலும் புற நாடுகளிலும் தோன்றியுள்ள எல்லா மதங்களின் அடிப்படைத் தத்துவங்களை வேதாந்தத்தில் காணலாம். வேதாந்தத்தில் இல்லாத கோட்பாடு உலகில் எந்த மதத்திலுமே இல்லையென்று உறுதி கூறலாம். ஆக, மதங்களுக்கெல்லாம் தாய். மதமாயிருப்பது வேதாந்தம். மெய்ப்பொருளுக்குப் பல பெயர் இட்டு அழைப்பதை வேதாந்தம் ஆமோதிக்கிறது. பெயரையும் விளக்கத்தையும் முன்னிட்டுச் சமயங்கள் பெரிதும் சண்டையிட்டுக்கொள்கின்றன. அடிப்படையாயுள்ள கோட்பாட்டைக் காணுமாறு தூண்டுவது வேதாந்தம். தாகத்தைத் தணிப்பது ஜலமா, தண்ணீரா, பானியா, வெள்ளமா என்று வாதாடாதே. ஜலம், தண்ணீர், பானி, வெள்ளம் என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது என்று ஆராய்ந்து பார். பின்பு வேற்றுமையும் வீண் விவாதமும் ஒடுங்கும். மனிதன் அடையும் மேலாம் நிலையை ஐயம் திரிபு இன்றி விளக்குவது வேதாந்தம்.
இனி துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களின் உட்கருத்தைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். நமக்குப் புலப்படுவது இவ்வுலகம் அல்லது ஜகத் என்பதாம். இதில வாழ்ந்திருக்கும் உயிர்களுக்கு ஜீவர்கள் என்று பெயர். ஜகத்தையும், ஜீவர்களையும் தாங்கியிருக்கும் பெரிய பொருளுக்குப் பரம் என்று பெயர். அது பேரறிவும் பேராற்றலும் படைத்துள்ளது. உலகனைத்தையும், உயிர்கள் யாவையும் அது யாண்டும் ஆண்டுவருகிறது. ஜகத்தில் கட்டுண்டு கிடக்கும் ஜீவர்கள் எண்ணிறந்த பிறவிகளை எடுக்கின்றனர். பிறவிகள் வாயிலாக அவைகள் மேலான நிலைக்குப் போவதும் உண்டு; கீழான நிலைக்கு இறங்குவதும் உண்டு. புண்ணியம் மேல்நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது; பாபம் கீழ்மையில் ஆழ்த்துகிறது. பரம் அல்லது ஈசுவரனைச் சார்ந்திருந்து ஜகத்தினின்று ஜீவன் விடுதலையடைவது முக்தி. எல்லா உயிர்களும் முக்தி யடையவேண்டும். இக்கோட்பாடு துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் சம்மதம். இனி, மூன்று மதங்களின் தனியியல்புகளை ஆராய்வோம்.
துவைத மதத்தின்படி ஜகத், ஜீவன், பரம் ஆகிய மூன்றும் அனுதியானவைகள். அவைகளுக்கு முடிவும் இல்லை, துவக்கமும் இல்லை, பரம்பொருள் ஜகத்தையும் ஜீவர்களையும் ஆளுகின்றார். ஆனால் ஜகத்தும் ஜீவனும் யாண்டும் பரத்துக்கு வேறு ஆனவைகள். ஜீவனானது அவருடைய கருணையால் ஜகத்திலிருந்து விடுதலையடைந்து அவருக்குத் தொண்டனாய் ஆட்படுவது முக்தி. முக்தியிலும் பரம் வேறு, ஜீவன் வேறு.
விசிஷ்டாத்வைதம் என்பது ஒரு விசேஷத்தோடு கூடிய அத்வைதம். கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு உடலாயிருப்பது ஜகத். அந்த உடலில் கணக்கற்ற உயிர்த் தத்துவங்களாயிருப்பது ஜீவன். சூரியனிடத்திருந்து கிரணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை தோன்றி வருவதுபோன்று ஜீவர்கள் பரமாத்மாவின் கிரணங்கள் ஆகின்றனர். பரமாத்மாவைப் பூரணனென்றும் அதில் தன்னை ஓர் அம்சம் என்றும் ஜீவன் சுவானு பவத்தில் அறிந்துகொள்ளுதல் முக்தி. அதற்கு ஜீவன் தன்னைப் பரமாத்மாவிடத்துப் பிரபத்தி பண்ணவேண்டும். பிரபத்தி என்பதும், சரணாகதி என்பதும், அடைக்கலம் என்பதும் ஒரே கருத்தைக் குறிக்கும் பல சொற்களாம். அவர் அருளால் ஜீவன் தன்னை அவருடைய ஓர் அவயவம் என்று அறிந்திருப்பது முக்தி.
அத்வைதம் என்பது இரண்டற்றது எனப் பொருள்படுகிறது. ஜகத் ஜீவன் என்று சொல்லப்படுபவை வேறு, பரம் வேறு அல்ல; உள்ளது ஒரே பொருள். அது அகண்ட சத் சித் ஆனந்தம். தன்னை ஜகத் ஆகவும் ஜீவனாகவும் காட்டிக்கொள்ளுகிற வல்லமை அதனிடத்து உண்டு. அந்த வல்லமைக்கு அதனுடைய மாயா சக்தி என்று பெயர். பிரம்மமும் பிரமத்தினுடைய சக்தியும் இரண்டல்ல. அத்வைதம் என்பதற்கு இரண்டல்ல என்பது பொருள். ஜீவனிடத்துள்ள அக்ஞானத்தால் ஜகத் என்றும் ஜீவன் என்றும் பேதம் அவனுக்குத் தோன்றுகிறது. பிரம்ம ஞானத்தில் பிரம்மம் ஒன்றே யாண்டும் உளது. நதி கடலில் லயமாவது போன்று ஞானமடைந்த ஜீவன் பரத்தில் கலக்கிறான். இது அத்வைதம் புகட்டும் முக்தி. அதை இன்னும் நன்றாகத் தெளிவுபடுத்துமிடத்து, கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருக்கும் அலையானது, தனது நாம ரூபத்தை அழித்துவிடும்பொழுது பழையபடி கடலாகிவிடுகிறது. அப்படி முக்தி நிலையில் ஜீவன் பரத்தில் ஒன்றுபடுகிறான்.
சாஸ்திரங்களில் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளுக்கும் இடம் உண்டு. மனிதனுடைய வாழ்க்கையிலேயே இம் மூன்று நிலைகளும் பொருந்திய ஸ்நானங்களைப் பெறுகின்றன. மனிதன் விழித்திருந்து வியவகாரம் பண்ணுகிறான். அது துவைத நிலை. ஆங்குத் தான் வேறு; மற்ற உயிர்கள் வேறு; உலகம் வேறு. பிறகு சொப்பனம் காண்கிறான். சொப்பனத்தில் தென்படும் மனிதர்களும் உலகமும் அவனுடைய மனத்துக்கு அன்னியமானவைகளல்ல. பேதம் போன்று தென்பட்டுக்கொண்டிருக்கும் அபேதநிலை அது. விசிஷ்டாத்வைத நிலையை இது நன்கு விளக்குகிறது. பிறகு சொப்பனமில்லாத அயர்ந்த உறக்கம் வருகிறது. அதில் பிரக்ஞை ஒன்றைத் தவிர பாக்கியெல்லாம் போய்விடுகின்றன. எல்லா அவஸ்தைகளுக்கும் பொதுவாகிய பிரக்ஞை யொன்றே அங்கு மிச்சம். அது அத்வைத நிலையாகும். இந்த மூன்று நிலைகளும் அக்ஞானத்தில் இருப்பது போன்று ஞானத்திலும் வந்து அமைக்கூடியவைகள். இவைகளில் எது பெரியது, எது சிறியது, எது சாதனம், எது சாத்தியம் என்று மதவாதிகள் விரிவாகவும் விதவிதமாகவும் பேசி வருகிறார்கள்.
24. கிருஷ்ணனது பான்மை
சுருதி என்று சொல்லப்படும் வேதாந்த சாஸ்திரம் கிருஷ்ணனை விளக்க முயலுகிறது. கிருஷ்ணன் என்பதும் பரமாத்மா என்பதும் ஒன்றே. ஒரு தேகத்துக்குள் கட்டுப்பட்டவன்போன்று அவன் தென்படுகிறான். உடைக்குள் கட்டுப்பட்டதுபோன்று நமது உடல் தென்படலாம். ஆனால் உடையிருப்பதாலும் போவதாலும் உடலுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. கண்ணன் காயத்தோடு அங்ஙனம் சம்பந்தப்பட்டவன் போன்று இருந்தான். லோக ஹிதத்தின் பொருட்டு உடல் என்னும் அங்கியை அவன் விளையாட்டுக்காக அணிந்தவன் ஆகிறான். அவன் துவைதியுமல்லன், விசிஷ்டாத்வைதியுமல்லன், அத்வைதியுமல்லன். இம் மூன்று சம்பிரதாயங்களும் அவனுக்குச் சேவை புரிகின்றன. அவனைக் காணவும், உணரவும், இணக்கம் கொள்ளவும் அம் மூன்று மதங்களும் தம்தம் போக்கில் முயலுகின்றன. மூன்று மதங்களையும் அவன் தன்னகத்து அடக்கியிருக்கின்றான்; பிறகு அவைகளுக்கு அப்பாலுமிருக்கிறான்.
நீ அத்வைதியாயிரு, விசிஷ்டாத்வைதியாயிரு, துவைதியாயிரு என்றெல்லாம் கீதை புகட்டுவதில்லை. ஆத்மபோதம் அடையப்பெற்றவன் ஆவாயாக. உனது பேரியல்பில் நிலைபெற்றிரு. பேராற்றல் படைத்துள்ள நீ கரவாது உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இந்தப் பூலோகத்துக்கு வந்துள்ளவனல்லன். உலகுக்கும் உனக்கும் தொடர்வுண்டு. அதை நிலைநாட்டுவது யோகம். தூக்கி வினைசெய்து அத்தொடர்வை நிரூபிப்பாயாக. ஆத்ம சொரூபத்தில் அனைத்தையும் அடக்கிக்கொள்வாயாக. மலரானது மணம் வீசுவது போன்று உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும். ஒளிவீடும் ஞாயிறு போன்று உன் அறிவு ஓங்கியிருப்பதாகுக. பிறகு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மதங்கள் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம சொரூபத்தில் பெறுகின்றன. இங்ஙனம் யோகேசுவரன் உயிர்களை யோகிகள் ஆகும்படி தூண்டுகிறான்.
ஓரளவில் கண்ணன் காட்டிய வழியையே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பின்பற்றுகிறார். அவர் சமயங்களின் உயர்வு தாழ்வைப் பற்றிக் கவலைப்படவில்லை. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய சம்பிர தாயங்களைப் பற்றியும் அவர் நினைக்கவில்லை. வாழ்வு எவ்வளவு சீரிய வாழ்வாகவேண்டும் என்பதிலேயே அவர் கருத்தைச் செலுத்தினார். அருள் தாகம் பிடித்து அவர் அலைந்து திரிந்தார். உடலைக்கொண்டு அவர் உழைத்ததெல்லாம் தெய்வ வழிபாட்டிற்கென்றே; உள்ளத்தில் அவருக்கு எழுந்த உணர்ச்சி யெல்லாம் இறைவனைப்பற்றியதே. அவருடைய தூய தெய்வீக அன்புக்கு இலக்காகாதது ஒன்றுமில்லை. தெய்வத்தைத் தவிர வேறு எந்த உறவையோ, இணக்கத்தையோ அவர் அறிந்திலார். தெய்வ அருள் ஒன்றே அவர் பெற்ற பேறு. இங்ஙனம் கீதையின் கோட்பாடே வடிவெடுத்தவராய் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் வாழ்ந்துவந்தார். ஆனால் அவர் கீதையையோ வேறு எந்த சாஸ்திரத்தையோ கற்றது கிடையாது. புத்தகப் படிப்புக்கும் அவருக்கும் வெகுதூரம். பெருவாழ்வினின்று அவர் பெற்ற அனுபவங்களையே அவர் மற்றவர்களுக்குப் பகர்ந்தருளினார். அவருடைய உபதேசங்கள் எங்கெல்லாம் கீதைக்கு ஒத்திருக்கின்றனவோ ஆங்கெல்லாம் அவைகளை நமக்கு எட்டியவளவு கீதையுடன் இணைத்து அமைத்துள்ளோம். அத் துறையில் நாம் செய்துள்ள முயற்சி மிகக் குறைந்தது. அதை இன்னும் விரித்தும் திருத்தியும் அமைக்கலாம் என்பதை வினய பூர்வமான மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆக, எந்த சமயத்தையோ சம்பிரதாயத்தையோ நிலைநாட்டுதற்கு என்று அல்லாது, யோக சாஸ்திரம் என்கிற முறையில் ஸ்ரீமத் பகவத் கீதையை விளக்க ஈண்டு முயன்றுள்ளோம்.
25. சொரூப லக்ஷணம்
பரம்பொருள் மனம் மொழிக்கு எட்டாதது. அது பிரபஞ்ச மயமாக வடிவெடுக்குமிடத்து அதை ஸத் சித் ஆனந்தம் என்று சொல்லலாம். சொல்லற்கரிய பொருளை ஒரு சொல்லால் விளக்குமிடத்து ஸச்சிதானந்தம் என்பதற்கு நிகரான சொல் வேறு ஒன்றுமில்லை. ஸத் என்னும் சொல் உள்ளது எனப் பொருள்படுகிறது. ஸத்தியம் அல்லது உண்மை அதனிடத்திருந்து வருகிறது. காலத்தால், இடத்தால், செயலால் மாறுபடாதிருப்பது ஸத். காலதேச வர்த்தமானதைக் கடந்திருப்பது பரம்பொருள். அதே ஸத் பொருள் காலத்திலும், இடத்திலும், செயலிலும் தன்னை விளக்கிக் கொண்டிருக்கும்போது எண்ணிறந்த ஜீவகோடிகளாகக் காட்சி கொடுக்கிறது. ஜீவாத்மா தோற்றத்துக்கு வந்துள்ள நிலைமையில் கர்மமும் நிகழ்ந்துகொண்டே இருக்கும். சூரியனிடத்து வெப்பமும் வெளிச்சமும் இருப்பது போன்று ஜீவாத்மாவிடம் கர்மமுண்டு. ஆகவே, பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஜீவதத்துவத்தையும் கர்மயோக தத்துவத்தையும் சேர்த்தே புகட்டிக்கொண்டு போகின்றன. ஆறாவது அத்தியாயத்தில் உள்ள தியானம் அல்லது எண்ணம் சூக்ஷ்மமான கர்மமாகிறது.
இனி, கர்மத்துக்கு அடிப்படையாயிருப்பது சங்கற்பம் அல்லது தீர்மானம். ஆங்கிலத்தில் அதை (வில்) என்று அழைக்கிறோம். கிரியா சக்தி என்பது பரிபாஷையில் அதற்கு அமைந்துள்ள பெயராகும். எல்லாக் கர்மங்களும் வில் அல்லது சங்கற்பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நடமாட, உண்ண, உறங்க, எழுந்திருக்க மனிதன் முதலில் சங்கற்பிக்கிறான். பிறகு அங்ஙனம் கர்மம் செய்கிறான். சிருஷ்டி முழுதும் சங்கற்பத்திலிருந்து வந்தது. நேராகவோ மறைமுகமாகவோ எல்லா சங்கற்பங்களும் முடிவில் ஒரு சங்கற்பமாய் வடிவெடுக்கின்றது. (வில் டு லைவ்) வாழ விரும்புதல்தான் முடிந்த சங்கற்பம். ஜீவர்கள் எக்கர்மத்தைச் செய்தாலும் அதன் மூலம் வாழ்ந்து நிலைத்திருத்தல் என்பதை நிலைநாட்ட முயலுகின்றனர். அதாவது தங்களது யதார்த்த சொரூபமாகிய ஸத் சொரூபத்தை நிலைநாட்டவே ஜீவகோடிகள் கர்மம் புரிகின்றனர். (காட் இஸ் லைஃப்) என்பது கோட்பாடு ஆத்மாவானது உயிருக்கு உயிர் என்பது அதன் கருத்து. உயிர்களின் நடைமுறை அனைத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். ஆக, கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஸத்சொரூபத்தை விளக்குதற்கான சாஸ்திரமாகும்.
யந்திரங்கள் கர்மம் செய்கின்றன; உயிர்கள் கர்மம் செய்கின்றன-இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் யாது? யந்திரங்களிடத்து உணர்ச்சியில்லை; உயிர்களிடத்து உணர்ச்சியுண்டு. உணர்ச்சியும் உயிர்வாழ்க்கையும் இணைபிரியாதவைகள். உணர்ச்சி விதவிதமான வடிவெடுக்கிறது. விருப்பு வெறுப்பு, நட்பு பகை, ஆசை சினம், பொறை பொறாமை, பாராட்டுதல் புறக்கணித்தல் ஆகிய இவையாவும் உணர்ச்சியின் வெவ்வேறு தோற்றங்களாம். விருப்பு, நட்பு, ஆசை, பொறை போன்றவை உடன்பாடான உணர்ச்சிகள். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறையான உணர்ச்சிகள். உடன்பாட்டு உணர்ச்சிகள் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. எதிர்மறை உணர்ச்சிகள் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. இவ்வுணர்ச்சிகள் ஆங்கிலத்தில் (எமோசன்) என்னும் பெயர் பெறுகின்றன. உணர்ச்சியைப் பயன்படுத்துமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
பகவத்கீதையில் ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரையில் கடவுள் சொரூபத்தை விளக்குவதோடு பக்தியையும் அப்பகுதி வளர்க்கிறது. தூய உணர்ச்சியின் திரள் பக்தி என்னும் பெயர் பெறுகிறது. கேடுடைய உணர்ச்சிகளெல்லாம் பக்தியில் நலம் வாய்ந்த உணர்ச்சிகளாக மாறுகின்றன. கடவுளுடைய மகிமை விளங்குமளவு அவனிடத்து அன்பு அல்லது பக்தி ஊற்றெடுக்கிறது. ஊசியானது காந்தத்தினிடம் கவரப்படுவது போன்று அன்புடைய உயிர் தெய்வத்தினிடம் கவரப்படுகிறது. (காட் இஸ் லவ்) என்பது கோட்பாடு. அன்பே கடவுள் என்பது அதன் கருத்து. அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குதற்கு ஏற்ப இனிமை மிளிர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது உலப்பில்லா ஆனந்தமாகிறது. ஆனந்தமே பிரம்மம். பரமாத்மாவின் சொரூபம் ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்றுவைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்கமாட்டா. ஆக, ஆனந்தம் என்னும் ஆத்மசொரூபத்தை வளர்ப்பது கீதையின் இரண்டாவது ஷட்கத்தின் நோக்கமாகும்.
ஜடப்பொருள் ஒன்று இருக்கிறது. சேதனப்பொருள் ஒன்று இருக்கிறது. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்று அறியவேண்டும். இருக்கிறேன் என்ற அறிவு சேதனப்பொருளுக்கு உண்டு; அந்த அறிவு ஜடத்துக்கு இல்லை. உயிர்களிடத்து உணர்வு இருப்பது போன்று அறிவு இருக்கிறது. சூரியன் இருப்பதை சூரியப்பிரகாசம் காட்டுகிறது. வேறு வெளிச்சத்தின்துணை கொண்டு சூரியனை நாம் அறிவதில்லை. ஜீவன் உயிரோடிருக்கிறான் என்பதற்கு அவனுடைய அறிவே பிரமாணம். ஒவ்வொரு உயிரும் தன்னைத்தான் அறிந்து கொண்டிருக்கிறது. இங்ஙனம் அறியும் தன்மையை ஆங்கிலத்தில் (காக்னிஷன்) என்கிறோம். அறியும் தன்மையில் ஏற்றத் தாழ்வு உண்டு. பேருயிர்கள் நன்கு அறிகின்றன. சிற்றுயிர்கள் மங்கிய அறிவு படைத்திருக்கின்றன. ஆயினும் அறிவு இல்லாத உயிர் இல்லை. அறிவை வளர்ப்பது வாழ்வின் நோக்கம்.
உணர்வுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. இரும்பை உருக்கினால் அது இளகுகிறது; அத்துடன் ஒளிர்கிறது. இளகும் தன்மை உணர்வுக்கு ஒப்பானது; ஒளிவிடும் தன்மை அறிவுக்கு ஒப்பானது. இந்தச் சான்று ஜடப்பொருளிடத்திருந்து வருகிறது. சேதனப் பொருளாகிய ஜீவாத்மனிடத்து அன்பும் அறிவும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. இருநண்பர் ஒருவரையொருவர் நேசிக்குமளவு ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கின்றனர்; ஒருவரையொருவர் அறிந்து கொள்ளுமளவு நேசிக்கின்றனர். கடவுள்பால் அன்பு கொள்ளுமளவு பக்தன் கடவுளை அறிகிறான். அவரை அறியுமளவு அவனுக்குப் பக்தி அதிகரிக்கிறது. இக்கோட்பாட்டை வாழ்க்கையில் எல்லாப் படித்தரங்களிலும் காணலாம்.
அறிவு, ஞானம், சேதனம், பிரக்ஞை இவையாவும் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். ஞானத்தை வளர்ப்பதற்கான வழிகளை பகவத்கீதையில் பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாவது அத்தியாயம் வரையில் காணலாம். எரியும் விளக்கு ஒன்று அதிகம் சுடர்விடுமானால் அது தன்னையும் தன்னைச் சுற்றிலுமுள்ள பொருள்களையும் நன்றாக விளக்கிக்காட்டும். அந்த விளக்கைக் காத்துவரும் கண்ணாடிக் கூண்டு ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அழுக்குப்படிந்த கண்ணாடியில் வெளிச்சம் அதிகமாக வெளியே வராது. கண்ணாடியைத் துடைத்துத் தூயதாக்குமளவு வெளிச்சம் தடைபடாது ஒளிரும். அந்தக்கரண சுத்தி பண்ணுவதற்கான வழிகள் ஞான வாழ்க்கையில் காட்டப்பட்டிருக்கின்றன. ஜடம்போன்று தென்படும் ஜீவனை ஞானநெறி சித்சொரூபமாகத் திருத்தியமைக்கிறது. (காட் ஈஸ் லைட்) என்பது கோட்பாடு. ஆத்மா ஜோதிர் மயம் என்பது அதன் பொருள். இங்ஙனம் ஸத் சித் ஆனந்தமாகிய பர சொரூபத்தின்கண் ஜீவனை எடுத்துச் செல்லுதல் பகவத்கீதையின் திட்டமாகும்.
26. பொது நூல்
சாஸ்திரம் ஒன்று எல்லார்க்கும் பொதுவாவதற்கு விதிகள் சில உள. அத்தகைய நூல் எந்த மொழியில் அமைந்திருக்கிறது அல்லது எத்தனை மொழிகளில் இயற்றப்பெற்றிருக்கிறது என்பது முக்கியமானதன்று. எத்தனை பிரதிகள் அச்சிடப்பெற்று எத்தனைபேர் கைவசம் அது சேர்ந்துள்ளது என்பதும் முக்கியமல்ல. எத்தனை ஆயிரம் பேர் அல்லது லக்ஷம் பேர் அதை நாள் தோறும் ஓதுகிறார்கள் என்பதும் அந்நூலுக்கு மகத்துவம் கொடுத்துவிடாது. மொழியை முன்னிட்டு மனிதன் மேலோன் ஆகான். பின்பு ஒழுக்கமே மேன்மைக்கு முதற்காரணம். பெரும்பான்மையோர் கையாளுதலைப் பொறுத்தும் ஒரு நூலுக்குச் சிறப்பு வந்துவிடாது. சமாசாரப் பத்திரிகையைப் பெரும்பாலோர் நாள்தோறும் பார்க்கிறார்கள். ஆனால் அதன் மதிப்பு அன்றன்று அகன்று போகிறது. முக்தி நெறியை ஆராய்பவர் சிலரே. அதன்படி ஒழுகுபவர் அதிலும் சிலர். இனி, முக்தியை அடைவது அரிதிலும் அரிது. ஆயினும் முக்தி மார்க்கத்துக்கு என்றைக்கும் எல்லார்க்கிடையிலும் மதிப்பு உண்டு. ஏனென்றால் ஒரு காலம் அல்லாவிட்டால் வேறு ஒரு காலத்தில் எல்லாரும் அவ்வழிக்கு வந்தாகவேண்டும்.
கீதாசாஸ்திரத்தை ஸர்வகத சாஸ்திரம் (யுனிவர்செல் ஸ்கிரிப்சர்) என்றும், பொதுநூல் என்றும் பகருதற்குத் தக்க காரணங்கள் உண்டு. முக்தி மார்க்கத்தைப் புகட்டும் சாஸ்திரங்களே யாவற்றிலும் மேலானவைகள். முக்தி அடைதற்கு நிகரான பேறு மனிதனுக்கு இல்லை. இக்கோட்பாடு யாவர்க்கும் ஒப்ப முடிந்தது. கீதா சாஸ்திரம் முக்தியைப் புகட்டுகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி என்பதை அது நன்கு தெளிவுறுத்துகிறது.
வாழ்க்கையின் குறி முக்தி. அதற்கு உற்ற நெறி யோகம். கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று யோகங்களும் முறையே கீதையில் இடம் பெறுகின்றன. இரண்டு சிறகுகளும் ஒரு வாலும் இருந்தால் பறவை பறக்கும். ஜீவன் பரத்தை அடைதற்கு ஞானமும் பக்தியும் சிறகுகளாக அமைகின்றன. கர்மயோகம் சமப்படுத்தும் வால் ஆகிறது. எல்லாச் சாதனங்களும் இம்மூன்றினுள் அடங்கியிருக்கின்றன. பரத்தை எண்ணியெண்ணி இகத்தை மறந்துவிடும்படி புகட்டும் நூல்கள் உண்டு. இகத்தில் கருத்து அனைத்தையும் வைத்து மேலாம் நிலையாகிய பரத்தைப் புறக்கணிக்கும்படி போதிக்கும் புல்லிய நூல்களும் உண்டு. ஆனால் பகவத்கீதையோ இகம் பரம் இரண்டுக்கும் உரிய இடத்தை முறையாக வகுத்து வழங்குகிறது. அவைகளுள் ஒன்று மற்றொருன்றுக்கு முரண்பட்டதன்று என்பது கீதையின் கோட்பாடாகும். இக வாழ்க்கையை நன்கு நடாத்துபவன் பரத்துக்கு உரியவன் ஆகிறான். பரத்தைச் சார்ந்திருக்க வல்லவன் இகத்துக்கு நன்கு பயன்படுகிறான் என்பது கீதையின் போதனையாகிறது.
கர்மத்தை இரண்டு பாங்குடையவைகளாகப் பிரித்து வைப்பவர் உளர். ஒன்றைப் பாரமார்த்திகத்துக்கு உரியது என்றும் மற்றதை இகலோகத்துக்குரியதென்றும் அன்னவர் கருதுகின்றனர். அவ்விரண்டு பிரிவுகளுக்கும் உரிய பதங்களை முறையே வைதிக கர்மம், லௌகிக கர்மம்; (சேக்ரட் அண்டு செக்குலர் ஆக்டிவிடீஸ்) ஆத்ம சாதனம், உலக வியவகாரம்; அருள் நாட்டம், பொருள் இன்பநாட்டம் இப்படியெல்லாம் பகர்கின்றனர். ஆனால் பகவத் கீதையானது வாழ்க்கையை இரண்டாகப் பகுத்து வைக்கிறதில்லை. ஆகையால் மனிதன் புரியும் கர்மத்தை மேலானது என்றும் கீழானது என்றும் அது பாகுபடுத்துவதில்லை. நல்வாழ்க்கை வாழத் தெரிந்துகொண்டவன் ஒருவன் எல்லாக் கர்மங்களையும் ஆத்ம சாதனத்துக்குரியவைகளாக்கலாம். நல்வாழ்க்கை வாழத் தெரியாதவன் ஒருவன் கடவுள் வழிபாடு போன்ற மேலாம் கர்மத்தைக் கெடுத்து பந்தபாசத்துக்குரிய தாக்கிவிடலாம். வினைகளை யெல்லாம் மேலாம் வினைகளாக மாற்றக் கற்றுக்கொடுப்பது பகவத்கீதை. இக்கோட்பாடு இந்த நூலின் தனிச்சிறப்பு ஆகும்.
மன அமைப்பில் செயல், உணர்வு, அறிவு என்று மூன்று பகுதிகள் உண்டு. நவீன மனோதத்துவ ஆராய்ச்சியாளர் அவைகளை முறையே (வில், எமோசன், காக்னிஷன்) என்று பகர்வர். அன்னை பராசக்தியே மாந்தர் உள்ளத்தில் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஸ்வரூபிணியாக எழுந்தருளியுள்ளாள் என்பது கோட்பாடு. மனதில் இந்த மூன்றுவித மாண்புகளும் ஒருங்கே மிளிருதல் வேண்டும். அப்பொழுதுதான் பண்பாடு பூர்த்தியாகிறது. மனிதன் திண்ணியன் ஆவதற்கும் அதுவே உற்ற உபாயம். நல்ல உள்ளத்துக்குரிய மூன்று மாண்புகளையும் கீதா சாஸ்திரம் முறையே இயம்புவதால் அது எல்லார்க்கும் பொது நூலாகும்.
மனிதனை நிறைமனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடாகும். உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறைநிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும். பேராற்றல் படைத்திருப்பது முதல் கோட்பாடு. ஒழுக்கம் ஆற்றலில் அடங்கி விடுகிறது. நலத்தைச் செய்யும் செய்விக்கவும் ஆற்றல் உடையவனுக்கே சாலும். அடுத்த கோட்பாடாவது அன்பு. உயிர்கள் அனைத்துக்கும் அது பொதுவானது. அன்பைத் தூய அன்பாக மாற்றியமைப்பது பக்தியோகத்தின் நோக்கமாகும். தூய அன்பினின்று இனிமை யாவும் தோன்றும். எல்லாவற்றையும் ஒன்றுபடுத்துவது தூய அன்பு. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தூய அன்பு படைத்திருப்பவனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. இனி, அறிவு மூன்றாவது கோட்பாடு ஆகும். பட்டப்பகலை உண்டு பண்ணும் ஞாயிறு போன்றது அறிவு; அனைத்தையும் அது விளக்குகிறது. மாண்புகளையெல்லாம் அது எடுத்துக்காட்டவல்லது. உயிர்களைச் செயலில் ஏவுவதும் அறிவு. தொடுத்த கர்மத்தைக் குற்றம் குறையின்றிச் செய்து முடிப்பதற்கு வழிகாட்டுவதும் அறிவு. அதைப் பாங்குடன் வளர்க்க மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். ஆக, ஆற்றலையும் அன்பையும் அறிவையும் ஒருங்கே அடையப்பெற்றிருப்பவனுக்கு மேலும் பெறவேண்டிய பேறு ஒன்றுமில்லை. அவன் நிறைமனிதன் ஆகிறான். அவனுக்கே நிறை நிலை சொந்தம். நிறைநிலையெய்தி நிறைமனிதன் ஆக விரும்புபவர் அனைவர்க்கும் ஸ்ரீமத் பகவத்கீதை பொது நூலாகும். சமயங்கள் அனைத்துக்கும் அதைப் பொது நூலாக வைத்துக்கொள்வதும் சாத்தியமாகிறது.
கீதையின் போதனை
போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
* பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
* பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
* ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
* அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
* யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை:
அவதூத கீதை, உத்தர கீதை, பிக்ஷú கீதை, அஷ்டாவக்ர கீதை, ராம கீதை, சுருதி கீதை, குரு கீதை, சிவகீதை.
-
முதல் அத்தியாயம்
1. அர்ஜுன விஷாத யோகம்
குரு÷க்ஷத்திரப் போரில் தனக்கு எதிராளியாக தனது உறவினர்களே இருக்கின்றனர் என அர்ஜுனன் வருந்தினான். அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று.
கண்ணில்லாத திருதராஷ்டிர ராஜன் போருக்குச் செல்ல இயலாததால் அஸ்தினாபுரத்தில் உள்ள தன் அரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடக்கும் செய்திகளைத் தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான். வேதவியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். இதுவே முதல் அத்தியாயம் ஆகும்.
த்ருதராஷ்ட்ரரது வினா - சுலோகம் - போருக்கு இருதரத்தாரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார் 2-20 -தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான் 21-23 -அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களையே காண்கிறான் 24-27 -அர்ஜுனனது தடுமாற்றம் 28-30 அர்ஜுனனது போலி வேதாந்தம் 31-46.
த்ருதராஷ்ட்ர உவாச
1. தர்ம÷க்ஷத்ரே குரு÷க்ஷத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:
மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய
த்ருதராஷ்ட்ர உவாச-திருதராஷ்டிரன் சொல்லுகிறான், தர்ம÷க்ஷத்ரே குரு÷க்ஷத்ரே-அற நிலமாகிய குரு நிலத்தில், ஸமவேதா-ஒன்று கூடி, யுயுத்ஸவ-போர்செய்ய விரும்பித் திரண்ட, மாமகா-நம்மவர்களும், பாண்டவா-பாண்டவரும், கிம் அகுர்வத-என்ன செய்தனர்?
பொருள் : திருதராஷ்டிரன் சொல்லுகிறான்: சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்?
ஸஞ்ஜய என்னும் சொல் விருப்பு வெறுப்பு முதலியவைகளை அறவே வென்றவன் என்று பொருள்படுகிறது. ஓரம் சாராது நடு நிலையில் இருப்பவனுக்கே ஞானக்கண் உண்டாகிறது. ஆதலால் தான் வியாச பகவான் ஸஞ்ஜயனுக்கு யுத்தத்தில் நிகழ்பவைகளை உள்ளபடி காணவல்ல ஞானக்கண்ணைக் கொடுத்தருளுகிறார்.
தம் பிள்ளைகளைத் தம்பியின் பிள்ளைகளிடமிருந்து பிரித்துக் கூறுவதால் திருதராஷ்டிரருடைய மனநிலை வெளியாகிறது. போர்புரியாது நாடு தம் பிள்ளைகளுக்குச் சேர்ந்துவிடவேண்டுமென்பது அவரது விருப்பம். தொன்று தொட்டு அறத்துக்கு நிலைக்களமாயிருக்கும் குரு÷க்ஷத்திரத்தின் மகிமையால் பாண்டவர்களிடமிருந்து மண்ணாசை ஒழியவில்லையா என்பது அவருக்கு ஏற்பட்ட ஐயம். போருக்கு இரு கட்சியினரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார்.
2. ஸஞ்ஜய உவாச
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா
ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்
ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான், ததா துர்யோதந-அப்போது துர்யோதனன்; வ்டம் பாண்டவாநீகம்-அணிவகுத்து நின்ற பாண்டவர் படையை, த்ருஷ்ட்வா-பார்த்துவிட்டு, ஆசார்யம் உபஸங்கம்ய-துரோணனிடம் போய், வசனம் அப்ரவீத்-வார்த்தைகளை சொல்லலாயினன்.
பொருள் : சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:
3. பஸ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்
வயூடாம் த்ருபதபுத்ரேண தவ ஸிஷ்யேண தீமதா
ஆசார்ய தவ ஸிஷ்யேண-ஆசார்யரே! உன்னுடைய சீடனான, தீமதா- நிபுணனான, த்ருபத புத்ரேண-துருபதன் மகனால், வ்டாம் பாண்டுபுத்ராணாம்-வகுப்புற்ற பாண்டுவின் பிள்ளைகளின், ஏதாம் மஹதீம் சமூம்-இந்த பெரிய படையை, பஸ்ய-பார்.
பொருள் : குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்.
4. அத்ர ஸூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி
யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மஹாரத:
அத்ர-இங்கு, மஹேஷ்வாஸா-பெரிய வில்லாளிகளும், யுதி-போரில், பீமார்ஜுநஸமா-வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய, ஸூரா-சூரர், யுயுதாந-யுயுதானன், த்ருபத-மகாரதனாகிய துருபதன்.
பொருள் : இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;
5. த்ருஷ்டகேதுஸ்சேகிதாந: காஸிராஜஸ்ச வீர்யவாந்
புருஜித்குந்திபோஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்கவ:
த்ருஷ்டகேது-திருஷ்ட கேது, சேகிதாந-சேகிதானன், வீர்யவாந் காஸிராஜ-வீரியமுடைய காசி ராஜன், புரூஜித் -புரூஜித், குந்திபோஜ-குந்தி போஜன், நரபுங்கவ ஸைப்ய-மனிதரேறாகிய சைவியன்.
பொருள் : திருஷ்ட கேது சேகிதானன்; வீரியமுடைய காசி ராஜன்; புருஜித்; குந்தி போஜன்; மனிதரேறாகிய சைவியன்;
6. யுதாமந்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச வீர்யவாந்
ஸெளபத்ரோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வ ஏவ மஹாரதா:
விக்ராந்த-வலிமை மிக்க, யுதாமந்யு-யுதாமந்யு, வீர்யவாந் உத்தமௌஜா-வீரன் உத்தமௌஜா, ஸௌபத்ர-சுபத்திரை மகன், த்ரௌபதேயா-திரௌபதி மக்கள்,
ஸர்வ ஏவ மஹாரதா-எல்லோருமே மகாரதர்.
பொருள் : வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.
7. அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே
த்விஜோத்தம்-இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, அஸ்மாகம்-நம்முள்ளே, யே விஸிஷ்டா-எவர் விசேஷமாக இருக்கின்றனரோ, தாந்-அவர்களை, நிபோத-தெரிந்து கொள், மம ஸைந்யஸ்ய-எனது படையின், யே நாயகா-எவர் நாயகர்களோ, தாந்-அவர்களை, ஸம்ஜ்ஞார்தம்-கவனத்திற்காக, ப்ரவீமி-சொல்லுகிறேன்.
பொருள் : இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.
துர்யோதனன் மறைமுகமாகத் தனது குருவை நிந்திக்கிறான். போர் முறையைப் புகட்டுதலில் நீர் எவ்வளவு வல்லவராயிருந்தாலும், முடிவாகப் பார்க்குமிடத்து நீர் ஒரு பிராம்மணர் தானே! பயங்கொள்ளியாகிய உமக்குச் சண்டையில் எங்கிருந்து உற்சாகம் வரப்போகிறது? பாண்டவப் படையைப் பார்த்து நீர் பயப்படுவது இயல்பு. எனினும் எதற்கும் அஞ்சாதீர். நம் பக்கத்திலும் பேராற்றல் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர்-இதுதான் அவன் பேச்சின் கருத்து.
8. பவாந் பீஷ்மஸ்யுச கர்ணஸ்ச க்ருபஸ்ச ஸமிதிஞ்ஜய:
அஸ்வத்தாமா விகர்ணஸ்ச ஸெளமதத்திர்ஜயத்ரத:
பவாந்-நீ, பீஷ்ம: கர்ண: க்ருப-பீஷ்மன், கர்ணன், கிருபன், ஸமிதிஞ்ஜய-பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய, ததா ஏவ-அதே போல, அஸ்வத்தாமா விகர்ண, ஸௌமதத்தி-அசுவத்தாமன் விகர்ணன் சோமதத்தன் மகன்.
பொருள் : நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;
துரோணாசாரியரை அளவுக்குமிஞ்சி அவமரியாதை செய்து விட்டதாக அஞ்சுகிற துர்யோதனன் அதற்கு ஈடாக சேனாதிபதியாகிய பீஷ்மருக்கு முன்பாக அவரை வைத்து முகஸ்துதி செய்கிறான். மேலும் துரோணருடைய மைத்துனராகிய கிருபரை போர் முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ளவர் என்று புகழ்ந்து பேசுகிறான். இதுபோன்ற முகஸ்துதிக்கு யார்தான் வசப்படமாட்டார் !
9. அந்யே ச பஹவ: ஸூரா மதர்த்தே த்யக்தஜீவிதா:
நாநாஸஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஸாரதா:
அந்யே ச-இன்னும் வேறு, பஹவ: ஸூரா-பல சூரர், மதர்தே -என் பொருட்டு, த்யக்தஜீவிதா-வாழ்க்கையைத் துறந்தோர், ஸர்வே-எல்லோருமே, நாநாஸஸ்த்ரப்ரஹரணா-பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர், யுத்வவிஸாரதா-போரில் நிபுணர்.
பொருள் : இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.
10. அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்
பீஷ்மாபிரக்ஷிதம்-பீஷ்மனால் காக்கப்படும், அஸ்மாகம் பலம்-நமது படை, அபார்யாப்தம்-(கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை, பீமாபிரக்ஷிதம்-வீமனால் காக்கப்படும், ஏதேஷாம் பலம்-இவர்களுடையை படையோ, பர்யாப்தம்-நிறைந்திருக்கிறது
பொருள் : (எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.
அசுர இயல்பு உடையானுக்கு அழிவுகாலம் அணுகும் பொழுது வீண்பெருமை கொள்ளுதல் அதிகரிக்கிறது. அத்தகைய தற்புகழ்ச்சியில் தனக்கே கேடுதரும் கருத்துகள் தற்செயலாய் வந்து அமைவதும் உண்டு. இங்கு துர்யோதனனுடைய கூற்று இக்கோட்பாட்டுக்கு இலக்காகிறது. தனக்கு ஜன்ம சத்துருவாயிருக்கின்ற பீமனைவிட பீஷ்மர் சிறந்த சேனாதிபதி என்பது அவன் கருத்து. பீமன் தன் வெற்றிக்காகப் பாடுபடுபவன். பாட்டனாராகிய பீஷ்மரோ பட்சபாதமில்லாதவர். உடன்படிக்கையின் படி துர்யோதனனுக்காப் போர் புரிந்தாலும் அவர் தர்மம் ஒன்றே வெற்றியடைய வேண்டும் என்னும் கோரிக்கையுடையவர். அவருடைய சீரிய மனநிலையை துர்யோதனன் அறிந்திலன்.
ஆட்களின் எண்ணிக்கையிலிருந்து ஒரு சேனையின் வலிவை அறிந்துகொள்ள முடியாது. கட்டுக்கு அடங்கியிருக்கிற பாங்கிலிருந்து ஒரு படையின் திறமை தோன்றும். தங்களுடைய சேனை கட்டுக்கு அடங்காதது; பாண்டவர்களுடையதோ கட்டுக்கு அடங்கியது என்று எண்ணிக்கையின் விரிவைத் துர்யோதனன் தற்பெருமையாகச் சொல்லுகிறான். வண்ணத்தில் பெரியது எனினும் வலிவில் சிறியது என்ற அமங்கலக் கருத்து அதில் அடங்கியிருக்கிறது.
ஒரு சமூகத்தினுடைய வாழ்க்கை முறைக்கும் இக்கோட்பாடு பொருந்தும். கட்டுப்பாடும் திட்டமும் உடைய சிறு சமூகங்கள் நன்கு முன்னேற்றமடைகின்றன. கட்டில் அடங்காத பெரிய சமூகங்கள் பிற ஆட்சிக்கு அடிமையாகின்றன; அல்லது சீரும் சிறப்புமின்றித் தம்மைத் தாமே ஆண்டுவருகின்றன. அடக்கமுடைமைக்கும் அடக்கமின்மைக்கும் உள்ள சிறந்த வேறுபாட்டை உலகில் எப்பொழுதும் காணலாம்.
11. அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி
ஸர்வேஷு அயநேஷு-எல்லா இடங்களிலும், யதாபாகம் அவிஸ்ததா-வகுப்புகளின்படி நின்றுகொண்டு, பவந்த: ஸர்வ-நீங்களனைவரும், பீஷ்மம் ஏவ-பீஷ்மனையே, அபிரக்ஷந்து-காக்கக் கடவீர்.
பொருள் : நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.
முயற்சியற்றவர்களாகிய நீங்கள் என் சொற்படியாவது கேட்டு நடந்துகொள்ளுங்கள் என்று சேனாதிபதிகளை அவமதிப்பது போன்றிருக்கிறது துர்யோதனனது கூற்று.
12. தஸ்ய ஸஞ்ஜநயந் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்
குருவ்ருத்த-கௌரவரில் மூத்தவராகிய, ப்ரதாபவாந் பிதாமஹ-கீர்த்திமிக்க பாட்டன், தஸ்ய-அவனுடைய(துரியோதனனுடைய இதயத்தில்), ஹர்ஷம் ஸஞ்ஜநயந்-மகிழ்ச்சி விளைவிக்குமாறு, உச்சை: ஸிம்ஹநாதம்-உயர்ந்த குரலில் சிங்கநாதம், விநத்ய-புரிந்து, ஸங்கம் தத்மௌ-சங்கை தினான்.
பொருள் : (அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை தினான்.
துரோணாசாரியரை இகழ்கின்ற போக்கில் துர்யோதனன் மிகைபடப் பேசிவிட்டான். அதனால் அவருடைய ஊக்கமும் குறைந்தது. மற்ற சேனாதிபதிகள் ஓரளவில் அவமதிக்கப்பட்டனர். துர்யோதனனுடைய உள்ளத்திலோ அச்சம் குடி புகுவதாயிற்று. நிலைமை கெட்டு வருவதை பீஷ்மர் பார்த்தார். மேலும் மனத்தளர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் இடந்தரலாகாது. தம் பேரன் மீது இரக்கம் வைத்துப் பாட்டனார் சங்குநாதித்துத் திடீரென்று காட்சியை மாற்றுகிறார். அதன் மூலம் கௌரவர்களே யுத்தத்தைத் துவக்கியவர் ஆகின்றனர். ஆக்கிரமிப்பு என்னும் குற்றம் அவர்களைச் சார்ந்ததாகிறது.
13. தத: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோமுகா:
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஸப்தஸ்துமுலோ பவத்
தத-அப்பால், ஸங்கா ச பேர்ய: ச-சங்குகளும், பேரிகைகளும், பணவ ஆநக கோமுகா-தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், ஸஹஸா-திடீரென, அப்யஹந்யந்த-ஒலித்தன, ஸ: ஸயுப்த-அந்த ஓசை, துமுல-பயங்கரமாக, அபவத்-இருந்தது.
பொருள் : அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.
இது கௌரவர்கள் பக்கம் உண்டாகிய இரைச்சல்.
14. தத: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
மாதவ: பாண்டவஸ்சைவ திவ்யௌ ஸங்கௌ ப்ரதத்மது:
தத-பின்பு, ஸ்வேதை: ஹயை: யுக்தே-வெள்ளை குதிரைகள் பூட்டிய, மஹதி ஸ்யந்தநே-பெருந் தேரில், ஸ்திதௌ மாதவ: பாண்டவ-நின்ற மாதவனும் பார்த்தனும், திவ்யௌ ஸங்கௌ-தெய்வீகமான சங்குகளை, ப்ரதத்மது-ஊதினர்.
பொருள் : பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை தினர்.
மாதவன் என்பது கிருஷ்ணனுடைய பெயர்களில் ஒன்று. மா-இலக்ஷ்மியின், தவ: -தலைவன். இலக்ஷ்மீபதியே பாண்டவர் பக்கமிருப்பதால் இனி ராஜ்யலக்ஷ்மிக்கு அல்லது விஜயலக்ஷ்மிக்கு இருப்பிடம் பாண்டவர் பக்கமாகப் போகிறது.
பாண்டவன் என்று ஐவரில் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். நாராயணன், நரன் என்ற இரண்டு ரிஷிகள் இப்பொழுது கிருஷ்ணனாகவும் அர்ஜுனனாகவும் அவதரித்திருக்கிறார்கள். அவர்கள் இணைபிரியாதிருப்பதால் ஈண்டுப் பாண்டவன் என்னும் சொல் சிறப்பாக அர்ஜுனனைக் குறிக்கிறது.
15. பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ தேவதத்தம் தநஞ்ஜய:
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர:
ஹ்ருஷீகேஸ: பாஜ்ஜந்யம்-கண்ணன் பாஞ்சஜன்யம் என்கிற பெயருடைய சங்கை, நஞ்ஜய: தேவதத்தம்-அர்ஜுனன் தேவ தத்தம் என்ற சங்கை, பௌணட்ரம் மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர-பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன், தத்மௌ-ஊதினான்.
பொருள் : கண்ணன் பாஞ்சஜன்யத்தை தினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.
ஹிருஷீகேசன் என்பது இந்திரியங்களுக்குத் தலைவன் என்று பொருள்படுகிறது. இது கிருஷ்ணனுக்கு ஓர் அடைமொழி. இந்திரியங்களைக் கட்டி ஆளுபவன் எச்செயலைச் செய்தாலும் அதை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்வான்.
தனஞ்ஜயன் என்ற சொல் செல்வத்தை வென்றவன் என்ற கருத்துடையது, அர்ஜுனன் ஆங்காங்குச் சென்று அரசர்களிடம் ஒன்றுக்கும் பயன்படாது அடைபட்டுக்கிடந்த செல்வங்களை யெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டுவந்து சேர்ந்தான். ஆகையால் அவனுக்கு அப்பெயர் வந்தது. பீமசேனனுக்கு வ்ருகோதரன் என்று பெயர். ஓநாயின் வயிறுபோன்று ஒடுங்கிய வயிறு உடையவன் என்றும், எதையும் எளிதில் ஜீரணம் செய்யக்கூடியவன் என்றும் இது பொருள்படுகிறது. நல்ல ஜீரணசக்தி யுடையவர்கள் எச்செயலையும் ஆற்றவல்லவர் ஆகின்றனர்.
16. அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:
நகுல: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ
அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர-அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன், நகுல: ஸஹதேவஸ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ-சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்
பொருள் : குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.
நாடு ஆண்டாலும் ஆளாவிட்டாலும் அரசனது இயல்புகள் அனைத்தையும் அடையப் பெற்றிருக்கிறபடியால் யுதிஷ்டிரனுக்கு ராஜா என்னும் சிறப்புச்சொல் பொருத்தமாக அமைகிறது. இப்பொழுது அவன் மூடிசூடாத மன்னனாயிருக்கிறான்.
17. காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ: ஸிகண்டீ ச மஹாரத:
த்ருஷ்டத்யும்நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித:
பரமேஷ்வாஸ: காஸ்ய: ச-வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மஹாரத: ஸிகண்டீ ச-மகாரதனாகிய சிகண்டியும், த்ருஷ்டத்யும்ந விராட: ச-திருஷ்டத்யும்னனும் விராடனும், அபராஜித: ஸாத்யகிஸ்ச-வெல்லப்படாத ஸாத்தியகியும்.
பொருள் : வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,
சிகண்டி என்ற சொல் முகத்தில் மீசையில்லாதவன் எனப் பொருள்படுகிறது. இவன் பேடுவாக இருந்தான். பீஷ்மருக்கு எதிரில் இவனை நிறுத்தியபொழுது அவர் போர்புரியாது சும்மா இருந்துவிட்டார். ஆதலால் அவருக்குத் தோல்வியுண்டாயிற்று. திருஷ்டத்யும்னன் என்ற பதத்திற்குப் பொருள் எவராலும் எதிர்க்க முடியாதவன் என்பதாம்.
18. த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ: ப்ருதிவீபதே
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹு: ஸங்காந் தத்மு: ப்ருதக் ப்ருதக்
த்ருபதோ த்ரௌபதேயா: ச-துருபதனும் திரௌபதியின் புதல்வர்களும், மஹாபாஹு: ஸௌபத்ர-பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும், ஸர்வஸ-எல்லோரும்,
ப்ருதிவீபதே-பூமிக்குத் தலைவனே! (சஞ்சயன் திருதராட்டிரனிடம்), ப்ருதக் ப்ருதக்-தனித்தனியாக, ஸங்காந் தத்மு-சங்குகளை ஒலித்தனர்.
பொருள் : துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். பூமிக்குத் தலைவனே!
பிருதிவீபதே - மண்ணாள்பவனே என்று திருதராஷ்டிரன் இங்கு ஸஞ்ஜயனால் அழைக்கப்படுவது அரசனது பொறுப்பை அவனுக்கு ஞாபகமூட்டுதற் பொருட்டேயாம். நாட்டைக் கடும் போரில் ஆழ்த்திவிடுவதும் சண்டை சச்சரவின்றி சமாதானமாயிருக்கச் செய்வதும் ஆகிய இரு செயல்களும் நாடாள்பவனுக்கு இயலும். உனது விருப்பம் யாதோ என்னும் எச்சரிக்கை இங்கே தொக்கி நிற்கிறது.
19. ஸ கோ÷ஷா தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்
ஸ: துமுல: கோஷ-அந்த பயங்கர ஓசை, நப: ப்ருதிவீம் ச-ஆகாயத்தையும் பூமியையும், வ்யநுநாதயந்-ஒலிக்கச் செய்து, தார்தராஷ்ட்ரணாம்-திருதராஷ்டிரக் கூட்டத்தாரின், ஹ்ருதயாநி-நெஞ்சுகளை, வ்யதாரயத்-பிளந்தது.
பொருள் : அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.
பாண்டவப்படை தொகையில் சிறியது எனினும் அப்பக்கம் இருப்பவர்களுக்குப் பெருமுழக்கம் செய்ய இயன்றது. தெய்வத்தின் துணையும் தர்மத்தின் வலிவுமே அதற்குக் காரணமாயிற்று. குற்றமுடையவர்கள் நெஞ்சில் சிறுபிள்ளையின் பழிப்பும் சுடுசரம் போன்று பாயும். கௌரவர்களுடைய நெஞ்சத்தில் வஞ்சகமிருந்தபடியால் அது வீறப் பிளக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.
20. அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ:
அத-அப்பால், கபித்வஜ: பாண்டவ-குரங்குக் கொடியர்த்த பார்த்தன், வ்யவஸ்திதாந் தார்தராஷ்ட்ராந்-எதிர் நிற்கும் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை, த்ருஷ்ட்வா-நோக்கி, ததா ஸஸ்த்ரஸம்பாதே ப்ரவ்ருத்தே-அப்போது ஆயுதங்களை விடுக்க முனைகின்ற போது, தநு: உத்யம்ய-வில்லையேந்திக் கொண்டு.
பொருள் : அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.
தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான்.
அர்ஜுன உவாச
21. ஹ்ருஷீகேசம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத
ஹ்ருஷீகேஸம் இதம் வாக்யம்-கண்ணனிடம் இந்த வார்த்தைகளை, ஹ-சொல்கிறான், மஹீபதே-ராஜனே!, அச்யுத-ஹே அச்சுதா, மே ரதம்-என்னுடைய ரதத்தை, உபயௌ:ஸேநயோ-இரண்டு படைகளின், மத்யே-நடுவே, ஸ்தாபய-நிறுத்துக
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)
22. யாவதேதாந்நிரீ÷க்ஷஹம் யோத்துகாமாநவஸ்திதாந்
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே
அஸ்மிந் ரணஸமுத்யமே-இந்தப் போர்த் தொடக்கத்தில், மயா கை: ஸஹ யோத்வவ்யம்-என்னால் எவருடன் போர் செய்ய நேருமோ யோத்துகாமாந் அவஸ்திதாந் ஏதாந்-சமரை விரும்பி நிற்கும் இவர்களை, யாவத்-எவ்வளவு நேரம், அஹம் நிரீக்ஷ÷க்ஷ-நான் பார்க்கிறேன்
பொருள் : சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”
அச்யுதன் என்பது விஷ்ணுவுக்கு அமைந்துள்ள பெயர்களில் ஒன்று. தன் பெருநிலையினின்று இறங்காதவன் என அது பொருள்படுகிறது. (21-22)
23. யோத்ஸ்யமாநாநவே÷க்ஷஹம் ய ஏதேத்ர ஸமாகதா:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ:
துர்புத்தே: தார்தராஷ்ட்ரஸ்ய-கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்கு, யுத்தே ப்ரியசிகீர்ஷவ-போரில் நன்மை செய்யும் வண்ணம், யே-எவர், ஏதே-இந்த அரசர்கள், அத்ர ஸமாகதா: இங்கே வந்துள்ளனர், யோத்ஸ்யமாநாந்-போர் செய்ய திரண்டு நிற்பவர்களை, அஹம் அவே÷க்ஷ-நான் காண வேண்டும்
பொருள் : “கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.
அளவுக்கு மிஞ்சிய ஊக்கம் விரைவில் சோர்வை உண்டு பண்ணக்கூடியது. இனி வரப்போகும் மனத்தளர்ச்சிக்கு முன்னறிகுறியாக அர்ஜுனனுக்கு அளவில்லாப் போர்த்திறம் பிறக்கிறது. ஆகவே தன்னை எதிர்ப்பார் யார் என்று காண அவன் காமுறுகிறான்.
அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களைக் காண்கிறான்.
24. ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ குடாகேஸேந பாரத
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோயுத்தமம்
பாரத-(கேளாய்) பரத நாட்டரசே, குடாகேஸேயுந-அர்ஜுனனால், ஏவம் உக்த-இவ்வாறு சொன்னவற்றை கேட்டு, ஹ்ருஷீகேஸயு-கண்ணன், உபயோ: ஸேநயோ-இரண்டு படைகளுக்கும், மத்யே-நடுவில், ரதோயுத்தமம்-மேன்மை கொண்ட அத்தேரை, ஸ்தாயுபயித்வா-நிறுத்தி.
பொருள் : சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.
25. பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் மஹீ÷க்ஷதாம்
உவாச பார்த்த பஸ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி
பீஷ்மத்ரோணப்ரமுகத-பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்ற வேந்தருக்கும் முன்பாக,
ஸர்வேஷாம் மஹீ÷க்ஷதாம்-எல்லா அரசர்களுக்கு முன், இதி உவாச-இவ்வாறு சொன்னான், ஸமவேதாந்-கூடி இருக்கும், ஏதாந் குருந்-கௌரவரை, பஸ்ய-பார்
பொருள் : பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.
அர்ஜுனனுக்குக் குடாகேசன் அல்லது தூக்கத்தை வென்றவன் என்பது ஒரு பெயர். நினைத்தபடி நினைத்தபொழுது தூங்கவோ அல்லது தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும். மனதை நன்கு வென்றவனுக்கே இது இயலும். மனதை வென்றவன் எதற்கும் கலங்கான். அத்தகைய மனவுறுதியுடையவனையும் கலக்கும்படியான பெரியதோர் போராட்டம் வரப்போகிறது என்பது அவனுக்குப் காண்பிக்கப்படுகிறது. (24-25)
26. தத்ராபஸ்யத் ஸ்திதாந் பார்த: பித்ரூநத பிதாமஹாந்
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ரூந் புத்ராந்பௌத்ராந் ஸகீம்ஸ்ததா
27. ஸ்வஸுராந்ஸுஹ்ருதஸ்சைவ ஸேநயோருபயோரபி
தாந்ஸமீ÷க்ஷய ஸ கௌந்தேய: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்
28. க்ருபயா பரயா விஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்
29. ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஸுஷ்யதி
வேபதுஸ்ச ஸரீரே மே ரோமஹர்ஷஸ்ச ஜாயதே
30. காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே
ந ச ஸக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந:
31. நிமித்தாநி ச பஸ்யாமி விபரீதாநி கேஸவ
ந ச ஸ்ரேயோ நுபஸ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே
32. ந காங்÷க்ஷ விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா
33. யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி ச
த இமே வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச
34. ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா:
மாதுலா: ஸ்வஸுரா: பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திநஸ்ததா
அத பார்த-இதற்கு பின் அர்ஜுனன், தத்ர ஸ்திதாந்-அங்கே நிற்கும்,
பித்ரூந் பிதாமஹாந் ஆசார்யாந் மாதுலாந்-தந்தை உடன் பிறந்தவர்களையும் பாட்டனா ரும் குருக்களும் மாமன்மார்களும், ப்ராத்ருந் புத்ராந் பௌத்ராந்-சகோதரர்களும், பிள்ளைகளும், பேரரும், ததா-அதே போல, ஸகீந்-நண்பர்களும், அபஸ்யத்-பார்த்தான்
ஸேநயோ: உபயோ: அபி-இரண்டு படைகளிலும், ஸ்வஸுராந்-மாமன்மாரும், ஸுஹ்ருத ச-நண்பர்களும், ஸர்வாந் பந்தூந்-உறவினரெல்லாரும், அவஸ்திதாந்-நிற்பவர்களை, ஸமீக்ஷ்ய-நன்றாக பார்த்து, கௌந்தேய-அர்ஜுனன்
ஸ: கௌந்தேய-அந்த அர்ஜுனன், பரயா க்ருபயா அவிஷ்ட-மிகுந்த இரக்கத்துடன் நிரம்பியவனாக, விஷீதந்-துயரடைந்து, இதம் அப்ரவீத்-இவ்வாறு சொல்லுகிறான்
க்ருஷ்ண-ஹே கிருஷ்ணா, யுயுத்ஸும்-போர் செய்ய விருப்பத்துடன், ஸமுபஸ்திதம்-நிற்கிற, இமம் ஸ்வஜநம் த்ருஷ்ட்வா-இந்த சுற்றத்தார்களை கண்டு.
மம காத்ராணி ஸீதந்தி-என்னுடைய உறுப்புகள் சோர்கின்றன, முகம் பரிஸுஷ்யதி-வாய் உலர்கிறது, மே ஸரீரே வேபது-என்னுடைய உடலில் நடுக்கம் ரோமஹர்ஷ: ஜாயதே-மயிர் சிலிர்ப்பு அடைகிறது.
ஹஸ்தாத் காண்டீவம் ஸ்ரம்ஸதே-கையிலிருந்து காண்டீபம் என்கிற வில் நழுவுகிறது, த்வக் ச ஏவ பரிதஹ்தே-உடலிலும் எரிச்சல் உண்டாகிறது, மந: ப்ரமதி இவ-மனம் குழம்புவது போல, அவஸ்தாதும் ந ஸக்நோமி-நிற்கவும் முடியவில்லை.
விபரீதாநி நிமித்தாநி ச பஸ்யாமி-விபரீதமான சகுனங்களும் காண்கிறேன், ஆஹவே-போரிலே, ஸ்வஜநம் ஹத்வா-சுற்றத்தார்களை கொன்று, ஸ்ரேய: ச-நன்மையும், ந அநுபஸ்யாமி-தோன்றவில்லை.
விஜயம் ராஜ்யம் ச ஸுகாநி-வெற்றியையும் ராஜ்யத்தையும் இன்பங்களையும், கோவிந்த -ஹே கோவிந்தா, ந காங்÷க்ஷ-விரும்புகிலேன், ஜீவிதேந ராஜ்யேந: போகை வா-உயிர் வாழ்க்கையாலோ அல்லது ராஜ்யத்தாலோ அல்லது இன்பங்களாலோ கிம்-என்ன
யேஷாம் அர்தே-எவருக்காக, ராஜ்யம் போகா: ஸுகாநி தநாநி-அரசு, போகங்கள் இன்பங்கள், செல்வம், ந: காங்க்ஷிதம்-நமக்கு விருப்பமோ, தே இமே-அந்த இவர்களே, யுவே-யுத்தத்தில், ப்ராணாந்-உயிர்களை, த்யக்த்வா-இழந்தவராய், இமேஅவஸ்திதா-நிற்கிறார்கள்.
ஆசார்யா: பிதர: புத்ரா-குருமார்கள், தந்தையர், மக்கள், ததா பிதாமஹா: மாதுலா: ஸ்வஸுரா-அதே போல, பாட்டன்மார், மாமன்மார், மாமனார்கள், பௌத்ரா: ஸ்யாலா: ஸம்பந்திந-பேரரும், மைத்துனரும், உறவினர்களும்.
பொருள் : அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.
பொருள் : அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:
பொருள் :அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,
பொருள் : என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.
பொருள் :காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.
பொருள் : கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை.
பொருள் :கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவதென்னே?
பொருள் : யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.
பொருள் :குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும்
குந்தியின் மகன் என்று இயம்புவதன் மூலம், தாயின் இயல்பை-பேதைமையை அர்ஜுனன் விரைவில் பெற்றுவிட்டான் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகாறும் சத்துரு பாவனையோடிருந்த அவனுக்கு இப்பொழுது ஒரு நெருக்கடியில் திடீரென்று மித்திரபாவனை வருகிறது. இதை விவேகத்தின் விளைவு எனலாகாது. விவேகமின்மைக்கே இது எடுத்துக்காட்டாகும். நிலை தடுமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அஞ்ஞானமோ இருள் போன்றது. மனிதனுடைய வீழ்ச்சிக்கு அதுவே காரணமாகிறது. வீழ்ச்சியின் முதற்படி இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது.
அர்ஜுனனது தடுமாற்றம்
இங்ஙனம் இப்பதத்துக்கு மூன்று அர்த்தங்கள் இருக்கின்றன. நிமித்தம், சகுனம், குறி முதலியவைகள் ஒரு பொருட்சொற்கள். சகுனத்தில் ஓரளவு உண்மையுண்டு. கால தேச நிமித்தம் ஆகிய மூன்றுக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. நாடிய கருமம் ஒன்று குறித்த வேளையில் அல்லது இடத்தில் நிறைவேறும் அல்லது நிறைவேறாது என்பதற்கு இயற்கையில் இதர உயிர்களின் செயல்கள் சில முன்னறிகுறிகளாக வந்தமைகின்றன. ஓரிடத்தில் ஒரு வேளையில் ஒரு மனிதனைக் காண மற்றொருவன் புறப்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அது இயலும் அல்லது இயலாது என்பதற்குத் தற்செயலாய்ச் சகுனம் வந்தமைவதுண்டு. முக்கியமல்லாத செயல்களை இன்று செய்யலாமா அல்லது நாளைக்குச் செய்யலாமா என்று சகுனம் பார்த்துவிட்டு ஒத்தி வைக்கலாம். ஆனால் மாணாக்கன் ஒருவன் பரீøக்ஷக்குப் போம்பொழுது, நாடு ஒன்று தர்மயுத்தத்தில் பிரவேசிக்கும் பொழுது சகுனம் பார்ப்பது பொருள்படாச் செயலாகும். அப்போதைக்கப்போது செய்து முடிக்கவேண்டிய வினையில் தீவிரமாகக் கருத்தைச் செலுத்தவேண்டும். தம் கடமையை முறையாகச் செய்பவர் குறி பார்ப்பதில் கருத்து வைக்கலாகாது.
அர்ஜுனனுக்கு அபசகுனங்கள் தென்பட்டதற்கு அவனுடைய மனக்கலக்கமே காரணமாகும். வீரன் ஒருவனுக்கு மனக் கலக்கம் பொருந்தாது.
அர்ஜுனனது போலி வேதாந்தம்.
இந்த விரக்தி விவேகத்தினின்று வந்ததன்று. மயக்கத்தின் விளைவானது பற்றற்றவனது பாங்கு போன்று வடிவெடுக்கிறது.
கோவிந்தன் (கோ-உயிர்; விந்தன்-அறிபவன்) உயிர்களின் உள்ளத்தில் இருப்பதை நன்கு அவன் அறிகிறபடியால் இதற்கு ஒரு முடிவு அவன்தான் சொல்லியாக வேண்டும். (26-34)
35. ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ பி மதுஸூதந
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே
மதுஸூதந-மதுசூதனா, க்நத: அபி-நான் கொல்லப்பட்டாலும் த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ-மூவுலகின் ஆட்சிக்காகவும், ஏதாந் ஹந்தும் ந இச்சாமி-இவர்களை கொல்ல விரும்பவில்லை, மஹீக்ருதே கிம் நு-பூமிக்காக (சொல்லவும் வேண்டுமா).
பொருள் :மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
மது என்ற அசுரனைக் கொன்றதனால் கிருஷ்ணனுக்கு மது சூதனன் என்ற பெயர் வந்தது.
36. நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்தந
பாபமேவாஸ்யுரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந:
ஜநார்தந-ஜனார்தனா, தார்தராஷ்ட்ராந் நிஹத்ய-திருதராஷ்டிரக் கூட்டத்தாரை கொன்று, ந: கா ப்ரீதி: ஸ்யாத்-நமக்கு என்ன இன்பம் ஏற்படப் போகிறது, ஏதாந் ஆததாயி, த்வா-இந்த பாவிகளை கொல்வதால், அஸ்மாந் பாபம் ஏவ ஆஸ்ரயேத்-நம்மை பாவமே சாரும்.
பொருள் : ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.
ஜநார்தனன்-பொருள், வீடு இரண்டின் பொருட்டு ஜனங்களால் வழுத்தப்படுபவன். இது கிருஷ்ணனுடைய மற்றொரு பெயர்.
ஆததாயினர் என்னும் சொல் பெரும் பாபிகள் எனப்பொருள்படும். ஒருவன் குடியிருக்கும் வீட்டில் தீ வைத்தல், உணவில் விஷத்தை வைத்து வழங்கல், உருவிய வாளோடு ஒருவனைக் கொல்லப் பாய்தல், ஒருவனுடைய செல்வத்தை , நிலத்தை அல்லது மனைவியைத் திருடவும் அபகரிக்கவும் முயலுதல் ஆகிய இவை யாவும் மகா பாபங்களாகின்றன. திருதராஷ்டிரனுடைய மக்கள் இத்தனைவிதக் குற்றங்களையும் செய்தவர்கள் ஆவர். ஆததாயி ஒருவன் பண்டிதனாயிருப்பினும் அவனைக் கொல்லுதல் முறை. ஆனால் இளகிய நெஞ்சத்தால் அர்ஜுனன் அங்ஙனம் செய்ய இசையவில்லை.
37. தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந: ஸ்யாம மாதவ
மாதவ-ஹே மாதவா, தஸ்மாத்-இதிலிருந்து, ஸ்வபாந்தவாந் தார்தராஷ்ட்ராந் -சுற்றத்தார்களான திருதராஷ்டிர வர்க்கத்தாரை, ஹந்தும் வயம் ந அர்ஹா-கொல்வதற்கு நாம் உரியவர் அல்லர், ஹி-ஏனெனில், ஸ்வஜநம் ஹத்வா-பந்துக்களை கொன்றபின், கதம் ஸுகிந: ஸ்யாம-எப்படி இன்புற்று இருப்போம்?
ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?
38. யத்யப்யேதே ந பஸ்யுயந்தி லோபோபஹதசேதஸ:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்
லோப உபஹதசேதஸ-அவாவின் மிகுதியால் அறிவிழந்து, ஏதே-இவர்கள் குலக்ஷயக்ருதம் தோஷம்-குலத்தை அழிப்பதால் வரும் குற்றம், மித்ரத்ரோஹே பாதகம்-நண்பருக்கு துரோகம் இழைக்கும் பாவத்தையும், ந பஸ்யந்தி-காண்கிலர், யத்யபி-இருந்தும்,
அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,
39. கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும்
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர்ஜநார்தந
ஜநார்தந-ஜனார்தனா, குலக்ஷயக்ருதம் தோஷம்-குல நாசத்தினால் வரும் குற்றம் ப்ரபஸ்யத்பி-நன்கு அறிந்த அஸ்மாபி-நம்மால் பாபாத் நிவர்திதும்-பாவத்தில் இருந்து விலக, கதம் ந ஜ்ஞேயம்-அறியாமல் இருப்பது ஏன்?
ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?
நாளைக்கு அர்ஜுனனே இக்குலநாசத்தைச் செய்யப்போகிறான் என்பது இப்போது அவனுக்குத் தெரியாது. ஆசை மிகுதியால் கௌரவர்கள் உற்றாரை ஒழிக்க முன்வந்திருக்கிறார்கள். மற்று உறவினர் வாஞ்சையால் அர்ஜுனன் மனந்தளர்ந்து பின் வாங்கப் பார்க்கிறான். பொருளாசை ஒருபக்கம், மக்கள் வாஞ்சை மற்றொரு பக்கம். வாழ்வின் கோட்பாடு வேறு ஏதும் இல்லையா? (38-39)
40. குலக்ஷயே ப்ரணஸ்யந்தி குலதர்மா: ஸநாதநா:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ பிபவத்யுத
குலக்ஷயே-குலநாசத்தினால், ஸநாதநா-தொன்று தொட்டு வருகின்ற, குலதர்மா-குல தர்மங்கள், ப்ரணஸ்யந்தி-அழிகின்றன, தர்மே நஷ்டே-தர்மம் அழிவதில், க்ருத்ஸ்நம் குலம்-குலம் முழுவதிலும், அதர்ம: உத அபிபவதி-அதர்மமும் பரவுகிறது.
பொருள் : குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?
41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:
அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால், க்ருஷ்ண-கண்ணா, குலஸ்த்ரிய-குலப் பெண்கள், ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள், துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால், வர்ணஸங்கர: ஜாயதே-வர்ணக் கலப்பு உண்டாகிறது, வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே!
பொருள் : கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.
42. ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:
ஸங்கர-குழப்பத்தால், குலஸ்ய ச-குலத்தையும், குலக்நாநாம்-குல நாசம் செய்தவர்களையும், நரகாய ஏவ-நரகத்துக்கே (கொண்டு செல்கிறது), பிண்ட, தகக்ரியா: லுப்த-பிண்டமும் சடங்குகளும் இன்றி, ஏஷாம் பிதர: ஹி-இவர்களுடைய முன்னோர்களும், பதந்தி-வீழ்வர்.
பொருள் : அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.
மரணமடைந்தவர் கொஞ்சகாலம் பித்ருலோகத்தில் வசிக்கின்றனர். அவர்களையும், பித்ருலோகத்தில் அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களையும் குறித்து எண்ணும் நல்லெண்ணம் அவர்களுக்குச் சகாயம் செய்கிறது. இச்செயல் சிராத்தம் என்று சொல்லப்படுகிறது. முன்னோர்களைக் குறித்து எழும் நல்லெண்ணம் உறுதிப்படுதற் பொருட்டுப் பிண்டம், ஜலம் முதலிய பண்டங்கள் கையாளப்படுகின்றன. மற்றும் பல மனிதர்களுடைய நல்லெண்ணங்களை அவ்வேளையில் துணைகொள்ளுதற்பொருட்டு வறியோர்க்கும் மற்றவர்க்கும் சிராத்த காலங்களில் உணவளிக்கப்படுகிறது.
43. தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஸ்ச ஸாஸ்வதா:
குலக்நாநாம்-குலநாசம் செய்பவர்களின், ஏதை: வர்ணஸங்கரகாரகை: தோஷை-இந்த வர்ணக் கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களால், ஸாஸ்வதா-என்றும் உள்ள, ஜாதிதர்மா: குலதர்மா ச-குல ஜாதி தருமங்கள், உத்ஸாத்யந்தே-அழிகின்றன.
பொருள் : வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.
44. உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந
நரகே நியதம் வாஸோ பவதித்யநுஸுஸ்ரும
உத்ஸந்ந குலதர்மாணாம்-எடுபட்டுப் போன குல தருமங்கள், மநுஷ்யணாம் -மனிதர்களுக்கு, அநியதம் நரகே வாஸ-அளவற்ற காலம் நரக வாசம், வதி-ஏற்படுகிறது,
இதி அநுஸுஸ்ரும-கேள்விப்படுகிறோம்.
பொருள் : ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.
45. அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா:
அஹோ-அந்தோ, பத-பாவம், வயம் மஹத் பாபம் கர்தும்-பெரும் பாவம் செய்வதற்கு நாம், வ்யவஸிதா-முனைந்து இருக்கிறோம், யத் ராஜ்ய ஸுக லோபேந-ஏனெனில் ராஜ்ய சுகத்திற்கு ஆசைப் பட்டு, ஸ்வஜநம் ஹந்தும்-சுற்றத்தாரைக் கொல்ல, உத்யதா-முனைந்து விட்டோம்,
பொருள் : அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!
46. யதி மாமப்ரதீகாரமஸஸ்த்ரம் ஸஸ்த்ரபாணய:
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே ÷க்ஷமதரம் பவேத்
அஸஸ்த்ரம்-ஆயுதம் இன்றி, அப்ரதீகாரம்-எதிர்த்து போரிடாமல், மாம்-என்னை,
ஸஸ்த்ரபாணய-ஆயுதம் தாங்கிய, தார்தராஷ்ட்ரா-திருதராஷ்டிரக் கூட்டத்தார், யதி ரணே ஹந்யு-ஒருவேளை போரில் கொன்று விடினும், தத் மே-அதில் எனக்கு, ÷க்ஷமதரம் பவேத்-நன்மையே ஆகிறது.
பொருள் : கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.
இக் கூற்றானது அளவுக்கு மிஞ்சிய மனக்குழப்பத்தின் அறிகுறியாகும்.
ஸஞ்ஜய உவாச
47. ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத்
விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ:
ஸங்க்யே-போர்க்களத்தில், ஸோக ஸம்விக்ந மாநஸ-சோகத்தினால் கலங்கிய மனத்துடன், அர்ஜுந: ஏவம் உக்த்வா-அர்ஜுனன் இவ்வாறு கூறி, ஸஸரம் சாபம்- அம்பையும் வில்லையும், விஸ்ருஜ்ய-எறிந்து விட்டு, ரதோபஸ்த-தேர்த்தட்டில், உபாவிஸத்-உட்கார்ந்தான்.
சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.
-
இரண்டாம் அத்தியாயம்:
ஸாங்கிய யோகம்
போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்:
பலவான் ஆவது குறிக்கோள் 2-3 -பெரியோரோடு போர் புரியேன் என்கிறான் அர்ஜுனன் 4-6 -அருள் பெறுவதற்கு ஏற்ற மன நிலை 7-8 -அருள் சுரப்பதன் அறிகுறி 10-யோகத்துக்கு அஸ்திவாரம் 11-ஆத்மாவுக்கு அழிவில்லை 12- மரணத்தின் கூறு 13-குளிரும் வெப்பமும் உடலுக்கு உண்டு 14-15 -ஸத் எது? அஸத் எது? 16-20 -வினையில் பற்று அற்று இரு 21 -மறு பிறப்பு 22- ஆத்மா நிஷ்பிரபஞ்சப் பொருள் 23-25- ஆத்மா அழிகிறது என்றாலும் வருந்துவது பொருந்தாது 26-28- ஆத்மா மனம் மொழிக்கு எட்டாதது 29-30 -கடமையினின்று வழுவலாகாது 31-37 -கர்மத்தைக் கர்மயோகமாக்கு 38-41 -உலகத்தவர் போக்கு 42-44- யோகத்துக்குத் திறவுகோல் 45-53 -நிறைஞானியின் லக்ஷணம் 54-72.
ஸஞ்ஜய உவாச
1. தம் ததா க்ரிபயாவிஷ்டமஸ்ருபூர்ணாகுலேக்ஷணம்
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான் ததா க்ரிபயா ஆவிஷ்டம்-அவ்வண்ணம் இரக்கம் மிஞ்சியவனாய் அஸ்ருபூர்ண ஆகுல ஈக்ஷணம்- நீர் நிரம்பிய விழிகளுடன்
விஷீதந்தம்-சோகத்தோடு கூடிய தம்-அவனை (அர்ஜுனனை) மதுஸூதந: இதம் வாக்யம் உவாச- மதுசூதனன் இந்த வாக்கியத்தை சொல்லுகிறான்
பொருள் : அவ்வண்ணம் இரக்க மிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:
தன் மனதை முற்றிலும் தன் வசத்தில் வைத்திருக்கும் ஒருவன் பிறர்படும் துக்கத்தைப் போக்க முயலுவது கிருபையாகும். இங்கு அர்ஜுனனிடத்துக் கிருபைபோன்று தென்படுவது உண்மையில் கிருபையன்று. உணர்ச்சியானது அவனது உடைமையாயிருப்பதுபோய், அவன் உணர்ச்சிக்கும் மனத்தளர்ச்சிக்கும் அடிமையாகிவிட்டான்.
ஸ்ரீ பகவாநுவாச
2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந
ஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந!-அர்ஜுனா விஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு தகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!
இதுவரையில் பேசாதிருந்த பகவான் இப்பொழுதுதான் திருவாய் மலர்ந்தருளுகிறார். ஆக, ஸ்ரீமத் பகவத்கீதையின் துவக்கம் இதுவே. எடுத்த எடுப்பில் இரண்டு சுலோகங்களில் இந்த சாஸ்திரத்தின் மூல தத்துவம் வெளியாகிறது. பகவானது போதனையின் சாரம் இவ்விரண்டு சுலோகங்களில் அடங்கப் பெற்றுள்ளது. இதுபோன்ற சிறப்பை மேலாம் நூல்கள் அனைத்திடத்தும் காணலாம். அதாவது ஆய்ந்த அடிப்படைக் கருத்தானது துவக்கத்திலேயே தெளிவுபட வந்தமைகிறது.
3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
க்ஷúத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப
க்லைப்யம் மா ஸ்ம கம:-அலியின் தன்மையை அடையாதே ஏதத் ந உபபத்யதே-இது பொருத்தமன்று க்ஷúத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வா-இழிந்த மனத்தளர்ச்சியை விடுத்து உத்திஷ்ட பரந்தப-எழுந்து நில், பகைவரைச் சுடுவோனே.
பொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது. இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!
ஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான். அர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன் உண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர் புரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக வந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி பகவான் தூண்டுகிறார்.
அர்ஜுந உவாச
4. கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான் அஹம் ஸங்க்யே-நான் போரில் கதம் இஷுபி:-எவ்வாறு அம்புகளால் பூஜார்ஹௌ பீஷ்மம் த்ரோணம் ச-தொழுதற்குரிய பீஷ்மர், துரோணர் ஆகியோரை ப்ரதியோத்ஸ்யாமி-எதிர்ப்பேன் அரிஸூதந-பகைவர்களை அழிப்பவனே
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!
கிருஷ்ணா, உமக்கு அரிசூதனன் என்றும் மதுசூதனன் என்றும் பெயர் வந்துள்ளது பொருந்தும்; ஏனென்றால் பகைவனைக் கொல்லுவதும் அரக்கனை அழிப்பதும் முறை. மற்று, பீஷ்மரையும் துரோணரையும் நான் எதிர்த்து விவாதம் செய்வதே தகாது. அத்தகையவர்களைப் போரில் எதிர்த்து வில்லெடுத்து அடிக்க எனக்குத் துணிவு எப்படி உண்டாகும்? பாட்டனாரோடு போர் புரிந்தவன் என்றும், ஆசாரியரை எதிர்த்தவன் என்றும் எனக்கு அவதூறு வந்துவிடுமல்லவா?
5. குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ்
ச்யுரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ
புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்
மஹாநுபாவாந் குரூந் அஹத்வா- பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல் இஹ லோகே-இவ்வுலகத்தில் பைக்ஷ்யம் அபி-பிச்சையெடுத்து போக்தும் ஸ்ரேய:-உண்பதும் நன்றுஹி-ஏனெனில் அர்தகாமாந் குரூந் ஹத்வா-பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று இஹ-உலகில் புஞ்ஜீய-துய்க்கும் போகாந் ருதிரப்ரதிக்தாந் ஏவ-இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்
பொருள் : பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்.
பீஷ்மர் நைஷ்டிக பிரம்மசாரியாவார். இச்சாமிருத்யு அல்லது விரும்பியபொழுது மரணத்தை அடையும் வல்லமையுடையவர். அவர் தன்னலம் கருதாத தபோ நிஷ்டையுடையவர். இனி துரோணரோ சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர்; ஆசார சீலமுடையவர். கிருபரும் அத்தகையவரே. ஆகையால் இவர்கள் எல்லாரும் மஹானுபாவர்களாகிறார்கள். இவர்களைக் கொல்லுவதால் இவ்வுலக வாழ்க்கையே நரக வாழ்க்கையாக மாறிவிடும். குருக்கள் என்னும் சொல் வயதிலும் அறிவிலும் மூத்தவர்கள் எனப் பொருள்படுகிறது.
6. ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்
தேவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:
ந:-நமக்கு கதரத் கரீயோ-இவற்றுள் எது மேன்மை யத்வா ஜயேம-இவர்களை வெல்லுதல் யதி வா நோ ஜயேயு:-இவர்கள் நம்மை வெல்லுதல் ந வித்ம:-விளங்கவில்லையாந் ஹத்வா ந ஜிஜீவிஷாம -எவரைக் கொன்றபின் நாம் வாழ விரும்ப மாட்டோமோ தே தார்தராஷ்ட்ரா: ஏவ-அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் ப்ரமுகே அவஸ்திதா:-முன்னே நிற்கிறார்கள்
பொருள் : மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.
7. கார்பண்யதோ÷ஷாபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:
யச்ச்ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்ரூஹி தந்மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதி மாம் த்வாம் ப்ரபந்நம்
கார்பண்யதோஷ உபஹத ஸ்வபாவ:-கோழைத் தனத்தால் சீரழிந்த சுபாவம் தர்மஸம்மூடசேதா:-அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன் த்வாம் ப்ருச்சாமி-உன்னைக் கேட்கிறேன் யத் ஸ்ரேய: ஸ்யாத்-எது நல்லது தத் மே நிஸ்சிதம் ப்ரூஹி-அதை நிச்சயப் படுத்தி சொல்லுகஅஹம் தே ஸிஷ்ய-நான் உங்கள் சீடன்
த்வாம் ப்ரபந்நம் மாம் ஸாதி-உன்னை சரணடைந்த எனக்கு கட்டளை இடுக
பொருள் : சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.
மனதின்கண் அமைந்துள்ள ஏழ்மையானது கார்ப்பண்யம் எனப்படுகிறது. பிறர் பார்த்து இரங்கி வருந்துதற்கேற்ற நிலையும் கார்ப்பண்யமாம். ஒரு நெருக்கடியில் மனதினுள் வருவித்துக்கொண்ட தளர்வும் துயரமும் அதன்கண் உண்டு. யார் ஒருவனிடத்துக் கார்ப்பண்யம் இருக்கிறதோ அவன் கிருபணன். தன்னிடத்துள்ள செல்வத்தைச் சிறிதும் செலவு செய்ய மனம் துணியாதவனுக்கும் அப்பெயர் வந்தமைகிறது. உலகில் பிறந்துள்ள மானுடன் ஒருவன் பரம்பொருளைப்பற்றிய ஞானத்தை அடையாது போவானாகில் அவன் கிருபணன் ஆகின்றான் என்று உபநிஷதம் கூறுகிறது. தன்னைக் கிருபணன் என்று ஈண்டு அர்ஜுனன் பகவானிடம் பகர்வது முற்றிலும் பொருத்தமானதே.
மனிதனால் தேடப் படுபவைகளில் பிரேயஸ், சிரேயஸ் என்று இரண்டு இயல்புகள் இருக்கின்றன.
8. ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்யூரியாணாம்
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்
ஹி-ஏனெனில் பூமௌ-பூமியில் அஸபத்நம்-எதிரிகளற்றருத்தம்-செழிப்பான ஸுராணாம் ச அதிபத்யம் ராஜ்யம்-வானோர்மிசை ஆட்சி அவாப்ய அபி-அடைந்தாலும்
யத் மம இந்த்ரியாணாம்-என்னுடைய புலன்களை உச்சோஷணம் சோகம்-வாட வைக்கின்ற சோகம் அபநுத்யாத்-போக்கடிக்கும் ந ப்ரபஸ்யாமி-காணவில்லை
பொருள் : பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.
தனக்கு ஏற்பட்ட துயரத்தைப் பார்த்தன் முதலில் கொஞ்சம் மறைத்துவைத்துப் பேசுகிறான். இம்மையிலும் மறுமையிலும் உயிர்களுக்குத் தீங்குவரும் என்று முதல் அத்தியாயத்தில் சொன்னதெல்லாம் மேற்பூச்சு. உனக்கு இத்தகைய சோர்வு ஏற்படுவதற்குக் காரணம் யாது? என்று பகவான் பரிந்து கேட்டவுடன், உண்மை உள்ளபடி வெளியாகிறது. மற்றவர்களிடத்துத் தனது மனத்துயரத்தை மறைத்துவைக்கும் இளம் மாது ஒருத்தி பெற்ற தாயினிடம் தயங்காது யாவையும் வெளியிடுவாள். அன்பும் அனுதாபமும் உள்ள இடத்தில் மனதை உள்ளபடி சமர்ப்பிப்பது மிக எளிதாகிறது. தாயினும் சாலப் பரிந்து கேட்பவர் ஒருவரிடம் அங்ஙனம் வாய்விட்டுப் பகர்வதால் துயரம் என்னும் மனச்சுமை குறைகிறது. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள இணக்கம் மிக நெருங்கியது. தாயின் இனிமையும், தந்தையின் பராமரிப்பும், குருவின் கட்டுப்பாடும், அரசனது நேர்மையும், கடவுளது கிருபையும் ஒன்று கூடியது கிருஷ்ணனுடைய இவ்விணக்கம். ஆகையால் தங்கு தடையின்றி அர்ஜுனன் தன் மனக்கிலேசத்தை விரித்து விளக்குகிறான்.
ஸஞ்ஜய உவாச
9. ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ: பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ
ஸஞ்ஜய உவாச-ஸஞ்ஜயன் சொல்லுகிறான் பரந்தப:-எதிரிகளை எரிப்பவனே! குடாகேஸ: ஹ்ருஷீகேஸம் ஏவம் உக்த்வா-உறக்கத்தை வென்றவன் அர்ஜுனன்), ஸ்ரீ கிருஷ்ணனிடம் இவ்விதம் சொல்லி ந யோத்ஸ்யே இதி ஹ கோவிந்தம் உக்த்வா-இனி போர் புரியேன் என்று கோவிந்தனிடம் சொல்லி தூஷ்ணீம் பபூவ-மௌனம் ஆனான்.
பொருள் : சஞ்ஜயன் சொல்லுகிறான்: பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப் போரினிப் புரியேன் என்று வாய்புதைத்திருந்தான்.
இங்கு ஸஞ்ஜயர் கையாளுகிற பதங்களில் பரந்த கருத்துக்கள் அடங்கப் பெற்றிருக்கின்றன. யுத்தமும் நடைபெறலாகாது, ராஜ்யமும் தன் பிள்ளைகளுக்கே இருக்கவேண்டும் என்பது திருதராஷ்டிர மன்னனது மனோரதம். அது நிறைவேறாது என்று குறிப்பிடப்படுகிறது. தன்னளவில் அர்ஜுனன் குடாகேசன் என்ற பட்டம் பெற்றவன். அதாவது அவன் தூக்கத்தை அறவே வென்றவன். விரும்பிய வேளையில் விரும்பிய அளவுக்குத்தான் அவனுக்கு உறக்கம் வரும். தன் உடலையும் உள்ளத்தையும் நன்கு கட்டி ஆளுபவனுக்கே இது இயலும். (நெப்போலியன், சிவாஜி முதலியவர்களும் அர்ஜுனனைப் போன்று குடாகேசர்களாக இருந்தார்கள்) அர்ஜுனன் தன்னையே கட்டி ஆண்டதுபோன்று எதிரிகளை விரட்டியோட்டவும், வென்று வசப்படுத்தவும் வல்லவனாயிருந்தான்.
அத்தகையவனுக்கு ஸாரதியாக வந்தமைந்தவர் ஹிருஷீ கேசர். அதாவது இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனாயிருப்பவர். ஸ்ரீகிருஷ்ணனிடம் அத்தகைய மகிமை யிருந்தமையால் அவர் அங்ஙனம் அழைக்கப்பட்டார். மேலும் அவர் கோவிந்தன். (கோ=உயிர்கள்; விந்தன் -அறிபவன்) ஆக, அர்ஜுனனுக்கு ஏற்பட்ட தளர்வு தற்காலிகமானது. தானே அதைத் துடைக்க வல்லவன். துணைபுரிபவனோ உலகில் ஒப்பிலான் ஆகிய கிருஷ்ண பரமாத்மா. ஆக, திருதராஷ்டிரனது எண்ணம் நிறைவேறாது என்று ஸஞ்ஜயர் குறிப்பிடுகிறார்.
10. தமுவாச ஹ்ருஷீகேஸ: ப்ரஹஸந்நிவ பாரத
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:
பாரத-பாரதா உபயோ: ஸேநயோ: மத்யே-இரண்டு படைகளுக்கும் நடுவே விஷீதந்தம்- துயருற்று இருக்கும் தம்-அவனிடம் (அர்ஜுனன்) ப்ரஹஸன் இவ- புன்னகை பூத்து
இதம் வச: உவாச-இவ்வசனம் கூறினான்.
பொருள் : பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்:
பரத வம்சத்துதித்தவரே என்று திருதராஷ்டிரன் அழைக்கப்படுகிறார். பரதனுடைய ஆட்சியில் இருந்தமையால் இந்தியாவுக்கு பாரதவர்ஷம் என்ற பெயர் வந்தது.
பகவான் புன்னகை பூத்ததில் பரந்த கருத்து அடங்கப்பெற்றிருக்கிறது. உலகெங்கும் இரவில் இருள் சூழ்ந்து செயலற்றுக் கிடக்கிறது. பின்பு, புன்முறுவல் பூத்தாற்போன்று கீழ்வானம் வெள்ளென வெளுக்கிறது. இனி சூரியோதயமாகி உயிர்களை எழுப்பிச் செயலில் ஈடுபடுத்தப் போகிறது என்பதற்கு அது முன் அறிகுறி. அங்ஙனம் பகவானது இளநகை இனிவருகின்ற யோகத்துக்கும் ஞானத்துக்கும் முன் அறிகுறி. அர்ஜுனன் அவரிடமிருந்து இதுபரியந்தம் பெற்றது பிரேயஸ் - பிரியத்தைத் தருவதாகிய இகலோகப் பிராப்தி. இனிப் பெறப்போவது சிரேயஸ். அது இருமையிலும் ஸர்வதுக்க நிவர்த்தி செய்வது. பாரமார்த்திகப் பெருநிலம் அளிப்பதும் அதுவே. அதைப் பெற்ற பின் அதற்குமேல் பெறவேண்டியது ஒன்றுமில்லை. அதற்கேற்ற தருணம் அர்ஜுனனுக்கு இப்பொழுது வந்துவிட, இளநகையின் மூலம் இறைவன் அதைப் பாராட்டி, அருள்புரிய ஆரம்பிக்கிறார்.
11. அஸோச்யாநந் வஸோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே
கதாஸூநகதாஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா:
ஸ்ரீ பகவான் சொல்கிறான்
த்வம்-நீ அஸோச்யாந்-துயர் படத் தகாதார் அந்வஸோச:-வருந்துகிறாய் ப்ரஜ்ஞாவாதாந்-பண்டிதர்களைப் போன்று பாஷஸே-பேசுகிறாய் கதாஸூந்-இறந்தார்க் கேனும் அகதாஸூந்-இருந்தார்க் கேனும் பண்டிதா: ந அநுஸோசந்தி-பண்டிதர்கள் வருந்துவது இல்லை
பொருள் : துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.
முதல் அத்தியாயம் முப்பத்தைந்தாவது சுலோகத்திலிருந்து நாற்பத்து நான்காவது சுலோகம் வரையில் அர்ஜுனன் பகர்ந்ததை பிரக்ஞாவாதம் (ஞானியரது நல்லுரை) என்று பகவான் பரிகசிக்கிறார்.
புஸ்தங்கள் பல படித்திருப்பவனைப் பண்டிதன் என்று சொல்லுவது வழக்கம். ஆனால் பண்டிதனுக்கு பகவான் தரும் லக்ஷணம் வேறு. இயற்கையின் நடைமுறையை உள்ளபடி அறிந்திருப்பவன் பண்டிதன் ஆவான். சூரியன் தோன்றுவதையும் மறைவதையும் குறித்து யாரும் வருந்தாதிருப்பது போன்று ஜனன மரண தத்துவத்தை அறியும் ஆத்மஞானி சாவுக்கு வருந்துவதில்லை. வருத்தப்படுதலில் அவனுக்கு அர்த்தமில்லை. எதைக் குறித்தும் மனம் தளராமை பண்டிதனுடைய போக்கு. அர்ஜுனனோ தனது ஞானமொழியோடு பொருந்தாத மனத்தளர்ச்சி கொள்கிறான்.
12. நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்
ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன், ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே, அத: பரம்-இனி மேலும், வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்
பொருள் : இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.
தேகங்களத்தனையும் தோன்றியவாறு அழியும். எது ஓயாது தகனமாய்க்கொண்டிருக்கிறதோ அது தேகம். தேகங்களுள் குடியிருக்கும் ஆத்மா அழிவற்றது; முக்காலத்திலும் அது பொதுவாயுள்ளது. ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்தில் இல்லாமற் போய்விடுவது அதற்கில்லை. எப்படி அது காலத்தில் அடிபடுவதில்லை என்று வினவின், அதற்கு விடை வருகிறது:
13. தேஹிநோऽஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி
யதா தேஹிந:-எப்படி ஆத்மாவுக்கு, அஸ்மிந் தேஹே-இந்த உடலில்
கௌமாரம் யௌவநம் ஜரா-பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் ததா தேஹாந்தரப்ராப்தி-அப்படியே வேறு உடலும் வந்து சேருகிறது தீர தத்ர ந முஹ்யதி-தீரன் அதில் கலங்கமாட்டான்.
பொருள் : ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.
ஒருவன் குழந்தையாய்க் காளையாகிப் பிறகு கிழவனாகிறான் இந்த மாறுதல்களெல்லாம் ஒரே மனிதனிடத்து உண்டாகின்றன. குழந்தையாக இருந்தவன் ஒருவன், காளையானவன் மற்றொருவன் என்று சொல்லுதல் பொருந்தாது. அங்ஙனமே ஓர் உடலைவிட்டு இன்னோர் உடலுக்குப் போகிறவனும் அதே ஆள். ஞானிக்கு இவ்வுண்மை சுவானுபவமாக விளங்குவதால் அவன் மனக்கலக்க மடைவதில்லை. பின்பு மனங்கலங்காதிருந்து பழகுபவன் தீரன் அல்லது ஞானி ஆவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்துகிறான். மாறுபாடு யாவும் உடலினுடையது என்றும், மாறாத்தன்மை ஆத்மாவினுடையதென்றும் அறிபவன் தீரன். ஆத்மா நித்தியப்பொருள் எனினும் அதற்குக் குளிர் வெப்பம், இன்ப துன்பம் முதலியன இருப்பது இயல்புதானே என்ற எண்ணம் வரலாம். அதைப் பற்றிய உண்மை வருமாறு:
14. மாத்ராஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஸீ÷க்ஷதாஷ்ணஸுகது:கதா:
ஆகமாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத
கௌந்தேய-குந்தியின் மகனே, ஸீதோஷ்ண ஸுகது:கதா:-குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும், மாத்ராஸ்பர்ஸா: து-இயற்கையின் தீண்டுதல்கள், ஆகமாபாயிந:-உண்டாகி அழிபவை அநித்யா:-அநித்யமானவை பாரத - தாந் ஸ்திதிக்ஷஸ்வ-பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
பொருள் : குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
கண், செவி முதலிய ஐம்பொறிகள் அதனதன் புலனாகிய வடிவம், ஒலி முதலியவைகளில் உலவுகின்றன. அதனால் உலகம் வேண்டப்படுபவை, வேண்டப்படாதவைகளாகப் புலனாகி இன்ப துன்பங்களை விளைவிக்கின்றன. இந்திரியங்களுக்கு விஷயமாகும் பொழுது தோன்றவும், விஷயமாகாதபொழுது அவைகள் மறையவும் செய்கின்றன. ஒருவேளையில் இன்பம் தருகிற அதே பொருள் மற்றொரு வேளையில் துன்பம் தருகிறது. குளிர் அல்லது வெப்பம் இதற்குச் சான்று. இன்பம் தரும் உணவு நோய்வாய்ப் பட்டிருக்கும்போது துன்பம் தருகிறது. ஆகையால் அவையாவும் அநித்தியமானவைகள். அவைகளைப் பொறுத்துப் பழகுபவன் உறுதியைப் பெறுகிறான். திதிøக்ஷ அல்லது பொறையைப் பழகுதல் நல்வாழ்க்கைக்கு ஓர் இன்றியமையாத சாதனமாகிறது. அத்தகையவன் இன்ப துன்பங்களுக்கு ஆளாவதில்லை; ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான். தகுதி அவனுக்கு எப்படி வந்து அமைகிறது என்று கேட்கின், அதற்கு விடை வருகிறது:
15. யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப
ஸமது:கஸுகம் தீரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே
ஹி-ஏனெனில், புருஷர்ஷப-புருஷர்களில் சிறந்தவனே, ஸமது:கஸுகம்-இன்பமுந்துன்பமும் நிகரென, யம் தீரம் புருஷம்-எந்த தீர புருஷன், ந வ்யதயந்தி-கலங்க வைப்பதில்லையோ,
ஸ: அம்ருதத்வாய கல்பதே-அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.
பொருள் : யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.
உடல் என்னும் புரியிலே வாசம் பண்ணுபவன் புருஷன் எனப்படுகிறான். பொருள்களைப் புலன்கள் வாயிலாகச் சேர்வதால் உடலின்கண் இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்தமையும். அவ்வுடலைத் தான் என்று எண்ணுபவன் துன்புறுவது திண்ணம். ஆத்ம சொரூபத்திலேயே நிலைத்திருப்பவனது மனம் அசைவதில்லை. அமைதியே வடிவெடுத்தவனாக அவன் இருக்கிறான். நிலையற்ற நிகழ்ச்சிகளால் சஞ்சலப்படாதிருப்பது அவனது உள்ளத் தெளிவைக் காட்டுகிறது. ஆதலால் அவன் தீரன் அல்லது பேரறிவுடையவன் ஆகிறான். சாகாநிலையாகிய மோக்ஷத்துக்கு அவனே தகுதியுடையவன்.
இவ்வுலக நிகழ்ச்சிகளை முறையாகப் பயன்படுத்தி நம்மைத் தீரர்களாக்குதற்கு நாம் இவ்வுலகில் வந்துள்ளோம். அக்ஞானம் அகலுகின்றவளவு துக்க நிவர்த்தியும் வந்தமைகிறது. உள்ளது எது என்ற ஆராய்ச்சி அடுத்த படியாக வருகிறது:
16. நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோரபி த்ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஸிபி:
அஸத: பாவ ந வித்யதே-இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை, ஸத: அபாவ ந வித்யதே-உள்ளதற்கு இல்லாதது என்பது இல்லை, அநயோ உபயோ அபி அந்த:-இந்த இரண்டுக்குமுள்ள தத்துவம் தத்த்வதர்ஸிபி: த்ருஷ்டா-தத்துவ தரிசிகள் உணர்வார்.
பொருள் : இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.
தத்துவ தர்சனம் என்பது உண்மையைக் காணுதல். உண்மையைக் காண்பதற்கே உயிர்கள் முயன்று வருகின்றன. தேடிய பொருளைக் கண்டெடுத்தவர்க்கு மேலும் தேடித்திரிய வேண்டிய அவசியமில்லை. உள்ளது எது என்று தேடுவது உயிர்களின் இயல்பு. இருப்பதை உரியதாக்கிக்கொள்ளச் செய்யும் முயற்சியே வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் நதியின் நீர் ஒடுங்கியிருக்கும்போது நெடுந்தூரத்துக்கு நனைந்த பூமி அதில் கண்ணுக்குத் தென்படுகிறது. ஆயினும் அதைச் சாகுபடிக்கு உரியதாக்கிக்கொள்ள யாரும் முயலுவதில்லை. ஏனென்றால் மாரிக்காலத்தில் மீண்டும் பெருக்கெடுத்து ஓடும் பிரவாகத்துக்கு அது உட்படும். நாளைக்குப் பயன்படாது போகுமாதலால் இன்றே அது பயனற்றதென்று கருதப்படுகிறது. தத்துவதர்சிகள் தேகத்தையும் அதினின்று தோன்றும் சுக துக்கங்களையும் அங்ஙனம் கருதுகின்றனர். முன்பு ஒரு காலத்தில் நம் தேகம் இல்லை. இடையில் அது வந்துள்ளது. பின்பு அது இல்லாமற்போம். ஆகையால் இடையில் இருக்கும்பொழுதும் உண்மையில் அது இல்லாததே-அபாவமே. கனவில் வந்துள்ள செல்வம் வந்திருக்கும்பொழுதும் உண்மையில் இல்லை.
தேகம் அஸத்து, அதாவது இல்லாதது. ஏனென்றால் அதனிடத்து பாவமில்லை; இருக்கின்றேன் என்ற உணர்ச்சியில்லை. முன்பு இல்லாதது இடையில் வந்து, இறுதியில் மறைவது விகாரப்படும் தன்மையது. ஆதலால் அது இருக்கும்பொழுதும் இல்லாததெனத் தள்ளத் தகுந்தது. அதனிடத்திருந்து வரும் சுகதுக்கங்களையும் அப்படியே புறக்கணிக்க வேண்டியது பெரியோர் கடமை. ஆத்மாவோ ஸத்து, அதாவது உள்ளது. ஏனென்றால் அதனிடத்து உணர்வு உண்டு. இருக்கிறேன் என்ற உணர்ச்சி அல்லது பிரக்ஞை வடிவமானது அது. பிரக்ஞையானது காலத்தால், தேசத்தால் அல்லது அவஸ்தையால் அடிபடாதது. ஒரு விகாரத்தையும் அது எடுப்பதில்லை. மாறுபாடு என்பது ஆத்மாவுக்கு இல்லை. அது நித்தியமாய் உள்ளது. மேலும் அதன் சொரூபம் வருமாறு:
17. அவிநாஸி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்
விநாஸமவ்யயஸ்யாஸ்ய ந கஸ்சித்கர்துமர்ஹதி
அவிநாஸி து-அழிவற்றது தான் என்று, தத் வித்தி:-அதை அறிந்து கொள். யேந இதம் ஸர்வம்-எதனால் இவை அனைத்தும், ததம்-வியாபிக்கப் பட்டிருக்கிறதோ அஸ்ய அவ்யயஸ்ய-அந்த அழிவற்றதற்கு, விநாஸம் கர்தும் கஸ்சித் ந அர்ஹதி-அழிவை ஏற்படுத்த யாருக்கும் இயலாது.
பொருள் : இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.
ஆகாசத்தில் அதாவது வெட்டவெளியில் திடீரென்று மேகங்கள் தோன்றுகின்றன. நீக்கமற எங்கும் பரவியுள்ள வெட்ட வெளியைப் பிளவுபடுத்த அம்மேகங்களுக்கு இயலாது. பெரியதாகப் பரிணமிப்பதும் சிறியதாக ஒடுங்குவதும் மேகத்துக்கு உண்டு. ஆனால் ஆகாசத்துக்குக் கூடுதல் குறைதல் இல்லை. அங்ஙனம் சிதாகாசத்தில் அதாவது அறிவு வெளியில் ஜகத் தோன்றவும், நிலைபெற்றிருக்கவும், மறையவும் செய்கிறது. அதனால் சிதாகாசத்தில் ஒருவித மாறுதலும் உண்டாவதில்லை. அதைக் கூட்டவோ, தேய்க்கவோ, மறைக்கவோ யாருக்கும் இயலாது. சாக்ஷியாக உள்ளது அது.
18. அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஸரீரிண:
அநாஸிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத
அநாஸிந:-அழிவற்றான், அப்ரமேயஸ்ய-அளவிடத்தகாதான், நித்யஸ்ய-நித்தியன், ஸரீரிண: இமே தேஹா-ஆத்மாவினுடைய இந்த வடிவங்கள், அந்தவந்த உக்தா:-அழியக் கூடியவையாக என்பர், தஸ்மாத் யுத்யஸ்வ பாரத-ஆதலால் பாரதா, போர் செய்.
பொருள் : ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.
கடல் இருந்தபடி இருக்க அதனுள் நீர் இடம் மாறி அமைகிறது; ஆறாக ஓடுகிறது; பனிக்கட்டியாக உறைகிறது. ஆத்மாவில் அதுபோன்ற மாறுதல் இல்லை. ஆதலால் ஆத்மா நித்தியம். குட்டையில் உள்ள நீர் ஆவியாகக் கிளம்பிக் குட்டைக்கு நாசம் ஏற்படுகிறது. ஆத்மாவினிடத்து அத்தகைய நாசம் ஒன்றுமில்லை. மேலும் மனம் மொழிக்கு எட்டாமையினால் அது அளப்பறியதாகிறது. கடலில் ஏற்படுகிற மாறுதல் உடலிலும் உண்டாகிறது. குட்டைக்கு வருகிற நாசம் போன்று ஆக்கைக்கு மரணம், தகனம் ஆகியவைகள் வாயிலாக நாசம் வருகிறது. தேகத்தின் தன்மையை மனதைக் கொண்டும், மற்றொரு தேகத்தைக்கொண்டும், அறிவைக் கொண்டும் அளந்தெடுக்கமுடியும். ஆத்மாவை அப்படி மதிப்பிடமுடியாது.
பொருளைப்பற்றி வந்த மயக்கத்தால் அர்ஜுனன் போர்புரிய மாட்டேன் என்கிறான். மயக்கம் கொள்ளுதலும், போர் முனையினின்று பின்வாங்குதலும், அதாவது தன் கடமையைச் செய்யாது ஒழிதலும் ஒருவிதத்திலும் பார்த்தனுக்குப் பொருந்தாது. ஆதலால் பார்த்தா, போர்புரிக என்கிறார் பகவான். ஆதலால் போர்புரிக என்ற பல்லவியை இன்னும் பல தடவை கேட்கிறார்கள்.
19. ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே
ய: ஏநம்-எவன் இந்த (ஆத்மாவை), ஹந்தாரம் வேத்தி-கொல்பவனாக நினைக்கிறானோ, ய: ஏநம் ஹதம் மந்யதே-எவன் இந்த ஆத்மாவை கொல்லப் பட்டவனாக நினைக்கிறானோ,
தௌ உபௌ-அந்த இருவருமே, ந விஜாநீத:-அறியாதவர்கள், அயம் ந ஹந்தி-இவன் கொல்லுவதுமில்லை, ந ஹந்யதே-கொலையுண்டதுமில்லை.
பொருள் : இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;
செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்துபோனால், நான் தொலைந்தேன் என்கிறான் அவன். செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடைய ஒன்று அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது மமகாரம். தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆய்விடுகிறது. தேகத்தைத் தான் என்று எண்ணுவது அகங்காரம். மாறுபடும் தன்மையது தேகம். மாறாப்பெருநிலையில் வீற்றிருப்பது ஆத்ம சைதன்யம். தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி அழிவதில்லையோ, அப்படி ஆக்கை அழியும்போது ஆத்மா அழிவதில்லை.
20. ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்வதோऽயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
அயம் கதாசித்-இந்த ஆத்மா எப்போதும், ந ஜாயதே வா ம்ரியதே-பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை, பூத்வா பூய: ந பவிதா-முன் உண்டாகி பிறகு ஏற்படக் கூடியதும் இல்லை, அயம் அஜ: நித்ய: ஸாஸ்வத: புராண:-இவன் பிறப்பற்றான்; அனவரதன்; சாசுவதன்; பழையோன், ஸரீரே ஹந்யமாநே ந ஹந்யதே-உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
பொருள் : எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
பிறத்தல், இருத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், மாய்தல் ஆகிய ஆறுவித பாவ விகாரங்கள் பூதங்களாலாகிய உடலத்துக்கு உண்டு; ஆத்மாவுக்கு விகாரம் இல்லை.
21. வேதாऽவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்
பார்த-பார்த்தா! ஏநம்-இந்த பொருள் (ஆத்மா), அவ்யயம்-மாறாதது, நாஸிநம்-அழிவற்றது, நித்யம்-என்றும் உளது, அஜம்-பிறப்பற்றது, ய: புருஷ: வேத-எந்த மனிதன் உணர்கிறானோ, ஸ: கதம் கம் காதயதி ஹந்தி-அவன் யாரை கொல்வது? யாரை கொல்விப்பது?
பொருள் : இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?
ஆத்மா செயலற்றது. ஆத்மஞானம் அடையப்பெற்றவன் அகங்காரமற்றவனாதலால் எவ்வினைக்கும் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனுக்கு வருவதில்லை. ஒரு வினையும் ஆத்ம ஞானியைச் சாராது என்பதற்குச் சான்றாகக் கொல்லுதல் கொல்வித்தல் ஆகிய இரண்டு கொடிய வினைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. எச்செயலைச் செய்தாலும், செயல்புரிந்தேன் என்ற எண்ணம் ஆத்மஞானியிடம் இல்லை. ஞானசாதனம் பழகுபவன் தனக்குற்ற கர்மத்தைச் செய்து கொண்டிருப்பதற்கிடையில் தன்னைக் கர்த்தாவாக உணரலாகாது.
22. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோऽபராணி
ததா ஸரீராணி விஹாய ஜீர்ணாந்
யந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ
யதா நர:-எப்படி மனிதன், ஜீர்ணாநி வாஸாம்ஸி விஹாய-பழைய துணிகளை நீக்கி விட்டு
நவாநி க்ருஹ்ணாதி-புதியதை எடுத்துக் கொள்கிறானோ, ததா தேஹி ஜீர்ணாநி ஸரீராணி விஹாய-அவ்வாறே ஆத்மா நைந்த உடல்களை களைந்து, அந்யாநி நவாநி ஸம்யாதி-வேறு புதியதை அடைகிறான்.
பொருள் : நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.
பழைய துணியை எறிந்துவிட்டு மனிதன் புதியது தேடுவதில்லை. புதியது கைக்குக் கிடைத்தபின்பே பழையது புறக் கணிக்கப்படுகிறது. பாம்பு புதிய சட்டையைப் பண்ணிக் கொண்டு பழையதை நீக்குகிறது. அங்ஙனம் ஆத்மா ஒரு சரீரத்தை விடுதற்கு முன்பே, தன் வினைக்கு ஏற்றாற் போன்று சூக்ஷ்மமாகப் புதியது ஒன்றைப் பண்ணிக்கொள்கிறது. அது காரண சரீரம் என்றும் சூக்ஷ்ம சரீரம் என்றும் சொல்லப்படுகிறது. மரத்தின் நுண்ணிய விதை போன்று அது நெடுநாள் தோன்றா நிலையிலிருந்து பிறகு பிறக்கிறது. ஸ்தூல உடல் எடுப்பதை நாம் பிறப்பு என்கிறோம்.
23. நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஸோஷயதி மாருத:
ஏநம் ஸஸ்த்ராணி ந சிந்தந்தி-இவனை ஆயுதங்கள் வெட்டுவதில்லை, ஏநம் பாவக: ந, தஹதி-இவனை நெருப்பு எரிப்பதில்லை, ஏநம் ஆப: ந க்லேதயந்தி-இவனை தண்ணீர் நினைப்பதில்லை, மாருத: ச ந ஸோஷயதி-காற்றும் உலர்த்துவதில்லை.
பொருள் : இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.
ஐம்பெரும் பூதங்களில் ஆகாசம் செயலற்றது. ஆகையால் அதைப்பற்றிய பேச்சு ஈண்டு எழவில்லை. பாக்கி நான்கு பூதங்களின் செயல் ஆத்மாவினிடத்துச் செல்லா. மண்ணிலிருந்து ஆயுதம் வருகிறது. பிளவுபடாப் பொருள் ஒன்றை வெட்டுவ தெங்ஙனம்? பூதாகாசத்தையே, ஏனைய நான்கு பூதங்களும் விகாரப்படுத்த முடிவதில்லை. பின்பு அதற்கு அப்பாலுள்ள சிதாகாசத்தை அவை பாழ்படுத்தா என்பது சொல்லாமலே விளங்குகிறது.
24. அச்சேத்யோऽயமதாஹ்யோऽயமக்லேத்யோऽஸோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோயம் ஸநாதந:
அயம் அச்சேத்ய:-இவன் பிளத்தற்கரியவன், அயம் அதாஹ்ய:-எரிக்கப் பட முடியாதவன், அக்லேத்ய:-நனைக்கப் படமுடியாதவன், அஸோஷ்ய:-உலர்த்தப் படமுடியாதவன், நித்ய: ஸர்வகத:-நித்தியன்; எங்கும் நிறைந்தவன், ஸ்தாணு அசல:-உறுதி உடையவன்; ஆசையாதான் ஸநாதந:-என்றும் இருப்பான்.
பொருள் : பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.
இவ்வாத்மா வெட்டப்படுகிறதில்லையாதலால் அது நித்தியமாயுள்ளது. ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் இல்லாதது நித்தியப்பொருள் ஆகாது. ஏனென்றால் இல்லாத இடத்துக்கு அது அநித்தியமாய்விடும். நித்தியமாதலால் அது எங்கும் நிறை பொருள் ஆகிறது. இடம் மாறுவது அசைவது எனப்படுகிறது. எங்கும் நிறைபொருளோ போவதற்குப் புதிய இடமில்லையாதலால் அது ஸ்தாணு, ஸ்திரமாய் இருப்பது. அப்படி நிலைத்திருப்பதால் அது அசலம், அசைவற்றதெனப்படுகிறது. எதற்குப் போக்கும் வரவும் இல்லையோ அது ஸநாதனம்; உண்டுபண்ணப்படாதது. அது எப்பொழுதுமிருப்பதாகிறது.
ஆத்மாவானது சொல்லில் அடங்காத தொன்மையது ஆயினும் வெவ்வேறு சொற்களால் அதை விளக்குவதால் ஏதேனும் ஒருவித விளக்கம் ஒருவர் உள்ளத்தில் படியலாம். அதன் உண்மை மனதில் படிகின்றவளவு துக்க நிவிருத்தியாகும். யாண்டும் வேண்டப்படாத துக்கத்தை அக்ஞானத்தால் மனிதன் வருவித்துக்கொண்டு தனது மேன்மைகளையெல்லாம் இழக்கிறான். அக்கீழ்மை வேண்டப்படுவதன்று என்று அறிவுறுத்துதற்கே வாசுதேவர் இத்தனைவித விளக்கங்களைக் கையாளுகிறார்.
25. அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதுமர்ஹஸி
அயம் அவ்யக்த:-இந்த ஆத்மா புலன்களுக்கு புலப் படாதவன், அயம் அசிந்த்ய:-மனத்தால் சிந்தனைக்கு அரியவன், அயம் அவிகார்ய:-மாறுதல் இல்லாதவன், உச்யதே-என்று கூறப் படுகிறது, தஸ்மாத் ஏநம் ஏவம் விதித்வா-இவனை இவ்வாறு அறிந்து கொண்டு அநுஸோசிதும் அர்ஹஸி-வருத்தப் படாமல் இரு.
பொருள் : தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”
ஆத்மா ஓர் இந்திரியத்துக்கும் விஷயமாகாதிருப்பதால் அது அவ்யக்தம் எனப்படுகிறது. இந்திரியங்களுக்கு எட்டாப் பொருள் ஒன்று மனதிலும் படியாது. ஆதலால் அது அசிந்த்யம். மாறுபடுகின்ற காற்று, தீ, நீர், நிலம் ஆகிய நான்கு பூதங்களும் நன்கு கட்புலனாவது போன்று மாறுபடாத ஆகாசம் கட்புலனாவதில்லை. ஆகாசத்தின்கண் அவயவங்கள் இன்மையால் அது மாறாதது. சிதாகாசமாகிய ஆத்மாவுக்கும் அவயவம் இல்லையாதலால் விகாரத்தை, மாறுபடும் தன்மையை அதனிடம் காணமுடியாது. இனி, அதைக் குறித்து வருந்துவது எங்ஙனம் பொருந்தும்?
26. அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் ஸோசிதுமர்ஹஸி
அத ச த்வம்-ஆயினும், ஏநம் நித்யஜாதம் நித்யம் ம்ருதம் வா மந்யஸே-இந்த ஆத்மா எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது, அல்லது எப்போதும் இறந்து கொண்டே இருப்பான் என்று நினைப்பாயானால், மஹாபாஹோ-நீண்ட கைகளை உடையவனே, ததாபி த்வம் ஏவம் ஸோசிதும் ந அர்ஹஸி-அப்போதும் வருத்தப்படுவது தகாது.
பொருள் : அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.
நித்தியவஸ்து ஒன்றும் இல்லை என்பது லோகாயதர்களுடைய கோட்பாடு. பேச்சுக்காக பகவான் இங்கு அதை எடுத்துக்கொள்கிறார். அவர்களுடைய கொள்கை உண்மையெனின் அப்பொழுதும் வருந்துதற்கு இடமில்லை. ஒருவன் ஆஸ்திகனாக இருப்பதும் நாஸ்திகனாயிருப்பதும் அவனுடைய வாழ்க்கைக்கு முக்கியமானதன்று. கொள்கை எதுவாயினும் அவன் வருத்தப்படாதிருக்க வேண்டும். துயரம் ஒரு மனிதனை அழித்து விடுவதுபோன்று வேறு எதும் அவனுக்குக் கேடு செய்யாது.
27. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாதபரிஹார்யேऽர்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி
ஜாதஸ்ய ம்ருத்யு: த்ருவ: ஹி-பிறந்தவன் சாவது உறுதி எனில், ம்ருதஸ்ய ச ஜந்ம த்ருவம்-செத்தவன் பிறப்பது உறுதி எனில், தஸ்மாத் அபரிஹார்யே அர்தே-ஆகவே பரிகாரம் இல்லாத விஷயத்துக்காக, த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ துயரப் படுவது தகாது.
பொருள் : பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.
இது இன்னும் முக்தியடையாதவர்களைக் குறித்துப் பேசும் பேச்சாகும். ஆசையிருக்கும் பரியந்தம் பிறப்பதும் இறப்பதும் இயல்பு. வினையின்படி வருகிற சாவைத் தடுக்க யாருக்கும் இயலாது.
நாஸ்திகரின் கோட்பாட்டின்படி வினையிருக்கும் பரியந்தம் பிறப்பு இறப்பு இருக்கிறது. வினைமுடிவது தீபத்தில் எண்ணெய் முடிவது போன்றது. எரிகின்ற தீபம் பிறகு ஒன்றுமில்லாது போய்விடுகிறது. அதே விதத்தில் வினை முடிந்ததும் மனிதன் என்னும் தோற்றம் கலைந்து போய்விடுகிறது. நவீன நாஸ்திகர்களுக்கிடையில் இன்னொரு கோட்பாடு உண்டு. களிமண்ணில் வடிவம் செய்து உருமாற்றுவது போன்று பிரகிருதியில் உயிர்கள் என்ற வடிவங்கள் மாறி மாறி அமைகின்றன. அச் செயல் பிறப்பு இறப்பு என்னும் பெயர் பெறுகிறது. அதற்கு ஏன் வருந்தவேண்டும் என்பது அவர்களின் கேள்வி.
28. அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா
பாரத-பாரதா! பூதாநி அவ்யக்தாதீநி-உயிர்கள் ஆரம்பம் தெளிவில்லை, அவ்யக்தநிதநாநி ஏவ-இறுதியும் தெளிவில்லை, வ்யக்தமத்யாநி-நடுநிலைமை தெளிவுடையது, தத்ர கா பரிதேவநா-இதில் துயற்படுவது என்ன ?
பொருள் : பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?
உற்றார் உறவினரெனத் தோன்றும் உயிர்களெல்லாம் இடையில் வந்தவர்கள். கனவில் காணப்படுபவர் முன்பிருந்ததில்லை பின்பு இருக்கப்போவதில்லை; இடையில் இருந்தும் உண்மையில் இல்லாதவரேயாம்; பந்துக்கள் எனப்படுவர்கள் லோகா யதர்களின் கோபாட்டின்படி பூதங்களின் சேர்க்கையால் காரண காரியமாக இடையில் வந்தவர்கள். கடைசியில் அவர்கள் இருக்கப்போவதில்லை. ஆகையால் இடையில் தோன்றியுள்ளவர்களுக்காக இன்னல்படுவது தகாது.
லோகாயதத்தின் கோட்பாடு இது ஈறாக மூன்று சுலோகங்களில் முடிவடைகிறது. பழையபடி ஆத்ம தத்துவ விசாரத்துக்கு பகவான் திரும்புகிறார்.
29. ஆஸ்சர்யவத்பஸ்யதி கஸ்சிதேந
மாஸ்சர்யவத்வததி ததைவ சாந்ய:
ஆஸ்சர்யவச்சைநமந்ய: ஸ்ருணோதி
ஸ்ருத்வாऽப்யேநம் வேத ந சைவ கஸ்சித்
கஸ்சித் ஏநம்-யாரோ ஒருவன், ஆஸ்சர்யவத் பஸ்யதி-வியப்பெனக் காண்கிறான், ஆஸ்சர்யவத் வததி-வியப்பென ஒருவன் சொல்கிறான், ஆஸ்சர்யவத் அந்ய ஸ்ருணோதி-வியப்பென ஒருவன் கேட்கிறான், கஸ்சித் ஸ்ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத-கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்.
பொருள் : இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”
கட்புலனாகின்ற உலகப் பொருள்களைப் போன்றதல்ல ஆத்மா. பொறி புலன்களுக்கு அதீதத்திலுள்ளதை ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பே ஆயிரத்தில் ஒருவனுக்குக் கிடைப்பதரிது. ஆகையால் ஆத்ம விசாரம் செய்கின்றவர்களே ஆச்சரியத்துக்குரியவர்களாம். மன பரிபாகம் ஏற்படாமையால் அவர்களில் பெரும்பான்மையோருக்கு ஆத்ம தத்துவம் விளங்குவதில்லை. அழுக்குப் படிந்த கரடு முரடான கண்ணாடியின் வாயிலாக விளக்கு வெளிச்சம் சிதைந்து வெளிவருவது போன்று ஆத்ம சொரூபம் அவர்களுக்கு விளங்கியும் விளங்காமலும் இருக்கிறது.
30. தேஹீ நித்யமவத்யோऽயம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி
பாரத-பாரதா, அயம் தேஹீ-இந்த ஆத்மா, ஸர்வஸ்ய தேஹே-எல்லா உடலிலும், நித்யம் அவத்ய-எப்பொழுதும் கொல்லப் படமுடியாதவன், தஸ்மாத் ஸர்வாணி பூதாநி-ஆகவே எந்த உயிரின் பொருட்டும், த்வம் ஸோசிதும் ந அர்ஹஸி-நீ வருந்துதல் தகாது.
பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!
லோகாயதர்களுடைய கோட்பாடு இங்கு நிராகரிக்கப்படுகிறது. அதன்மேல் ஆத்ம தத்துவத்தைப் பற்றிய முடிவான சித்தாந்தமும் இயம்பப்படுகிறது. ஆத்ம ஞானமும் துக்க நிவிருத்தியும் மனிதன் மேன்மையுறுதற்கு இன்றியமையாதவைகள் என்பது நன்கு வற்புறுத்தப்படுகின்றன.
31. ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே
ஸ்வதர்மம் சாவேக்ஷ்ய அபி-ஸ்வதர்மத்தைப் கருதினாலும், விகம்பிதும் ந அர்ஹஸி-நீ நடுங்குதல் தகாது, க்ஷத்ரியஸ்ய தர்ம்யாத் யுத்தாத் அந்யத்-மன்னருக்கு அறப்போரைக் காட்டிலும் ஸ்ரேய: ந வித்யதே-உயர்ந்ததொரு நன்மை இல்லை.
பொருள் : ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.
அரசனுக்கு உயிரிலும் பெரிதாக உள்ளது அறம். இது போன்ற போர் புரிவதால் அறம் வளர்க்கப்படுகிறது. போரினின்று விலகுவதால் மறம் மேலோங்குகிறது. மறம் மேலோங்க விடுபவன் அரசன் ஆகான். அறம் செய்யாது மறம் செய்யும் மனிதனோ சிரேயஸைப் பெறாது இழிவை அடைவான். ஒரு மனிதனுக்கு சிரேயஸைத் தருபவைகளில் முதலானது ஸ்வதர்மம். எம்மனிதன் எச்செயலுக்கு நன்கு தகுதியுடையவனாகிறானோ அச்செயல் அவனுடைய ஸ்வதர்மமாம். கிடைப்பதற்கு அரிய ஆங்காலம் அல்லது அனுகூலமான காலத்தை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்ற கேள்விக்கு இனி விடை வருகிறது.
32. யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஸம்
பார்த-பார்த்தா, யத்ருச்சயா உபபந்நம்-தானே வந்திருப்பதும், அபாவ்ருதம் ஸ்வர்கத்வாரம்-திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில், ஈத்ருஸம் யுத்தம்-இத்தகைய போர்
ஸுகிந: க்ஷத்ரியா: லபந்தே-பாக்கியமுடைய மன்னரே அடைகிறார்கள்.
பொருள் : தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது. இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!
வாழ்க்கையில் தற்செயலாய் வந்தமையும் ஆங்காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. முறை பிறழாது ஒருவன் தன் கடமையைச் செய்துகொண்டு போக வல்லவனாகவேண்டும். நதியில் நீரோட்டத்தை எதிர்த்து ஓடத்தைச் செலுத்துவதுபோன்று அது இடர் சூழ்ந்த செயலாகும். பிறகு கடல் பொங்கும் வேளை யொன்று வருகிறது. அப்பொழுது நதியில் நீர் எதிர்த்து ஓடுகிறது. ஓடத்தைக் கடத்துதற்கு அது அனுகூலமாகிறது. துடுப்புப் போடாவிட்டாலும் அது குறியை நோக்கி நகர்கிறது. காற்றும் வசதியாகவே தொடர்ந்து வீசுகிறது. அப்பொழுது பாயை விரிப்பதுதான் பாக்கி. சிறு முயற்சியில் பெரிய காரியம் நிறைவேறுகிறது. இதுதான் தற்செயலாய் வந்தமையும் நற்காலம். அர்ஜுனனுக்கு அந்த வாய்ப்பு இப்பொழுது கிடைத்திருக்கிறது. வனவாச துக்கமும் சோதனையும் முடிவடைந்துவிட்டன. இனி, தன் கடமையைச் சிறிது முயற்சியோடு செய்தால் போதுமானது. வலிய வந்து விண்ணுலகும் மண்ணுலகும், வெற்றியும் கீர்த்தியும் அமையப் போகின்றன. க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றிய சந்தேகமும் மனக் கிலேசமும் இவ்வேளையில் பொருந்தா.
இதுபோன்று ஆங்காலம் எல்லா மனிதருக்கும் எப்பொழுதாவது வந்து வாய்ப்பதுண்டு. அதைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்பவனே இவ்வுலகில் சீரும் சிறப்பும் அடையப்பெறுகிறான். ஆங்காலத்தைப் பயன்படுத்தாது விட்டுவிட்டால் வரும் கேடு யாது என்பதற்கு விடை வருகிறது:
33. அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி
அத-அன்றி, இமம் தர்ம்யம் ஸங்க்ராமம்-இந்தத் தர்மயுத்தத்தை, த்வம் ந கரிஷ்யஸி சேத்-நீ நடத்தாமல் விடுவாயானால், தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா-அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று, பாபம் அவாப்ஸ்யஸி-பாவத்தையடைவாய்
பொருள் : அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.
அதர்மத்தைச் செய்பவன் யாண்டும் கேடு அடைகிறான். தன் கடமையாக வந்து அமைந்த தர்மத்தைத் தக்க தருணத்தில் செய்யாதவன் அதனினும் பெருங் கேட்டையடைகிறான். தகுந்ததைச் செய்யாமையால் வரும் கேடானது, தகாததைச் செய்வதால் வரும் கேட்டைவிடப் பெரியதாம்.
முறையான இகலோக வாழ்க்கையைக் கீர்த்தி பின் தொடர்வது போன்று முறை தவறிய வாழ்க்கையை அபகீர்த்தி பின் தொடர்கிறது. அது எப்படியெனில்:
34. அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேऽவ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே
பூதாநி ச-உலகத்தாரும், தே அவ்யயாம்-உனக்கு நீண்டகாலம் இருக்கக் கூடிய, அகீர்திம் அபி கதயிஷ்யந்தி-வசை உரைப்பார்கள், ஸம்பாவிதஸ்ய-புகழ் கொண்டோன் அகீர்தி: மரணாத் அதிரிச்யதே-அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?
பொருள் : உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?
எப்படியாவது உயிர் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற உணர்ச்சி விலங்கினத்தைச் சேர்ந்தது. வீரன் ஒருவனுக்கோ நன்கு உயிர்வாழவும் தெரியும். வேண்டுமிடத்து உயிர் வழங்கவும் தெரியும். அப்படி முறையாக மகிழ்ச்சியுடன் உயிரைக் கொடுப்பதால் அவன் புகழ் பரவுகிறது. எதிரி காலால் உதைக்கையில் அவன் காலைத் தொட்டு வணங்கி உயிர்ப்பிச்சை கேட்பது எவ்வளவு இழிவோ அதிலும் பன்மடங்கு புன்மையது பழிக்கு ஆளாகி உயிர்வாழ்ந்திருத்தல். உலகில் பழிப்பவர் தமது மனத்துக்குத் தோன்றியதையெல்லாம் முகாமையாக வைத்துப் பழிப்பர். எப்படியெனில்:
35. பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்
ச யேஷாம் த்வம் பஹுமதோ பூத்வா-மேலும் எவர்களுடைய (கருத்தில்) நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து, லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய் அடைவாயோ, மஹாரதா: த்வாம்-அந்த மகாரதர்கள் உன்னை, பயாத் ரணாத் உபரதம்-பயத்தினால் யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக, மம்ஸ்யந்தே-கருதுவார்கள்.
பொருள் : நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.
ஜன்ம சத்துருக்களாகிய துர்யோதனன் முதலாயினோர் அர்ஜுனனுடைய பராக்கிரமத்தைப் பாராட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. மகாதேவனை எதிர்த்துப் போர்புரிந்தவன் என்றும், பாசுபதாஸ்திரத்தைப் பெற்றவன் என்றும் பார்த்தனைப் பாராட்டி வந்துள்ளார்கள். ஆனால் அவனை எப்படியாவது ஒழித்துவிடவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அவர்கள். இந்த நெருக்கடியில் அர்ஜுனன் அன்பின் வழியில் பின்வாங்கினான் என்று அவன் செயலைப் பொருள்படுத்த மாட்டார்கள்; அஞ்சிப் புறங்காட்டி ஓடினான் என்று இகழ்வார்கள். போற்றுதல் மிக எளிதில் தூற்றுதலாக மாறிவிடும். அந்த இகழ்ச்சிக்குப் பிறகு எவ்விதத்திலும் ஈடு தேடிக்கொள்ள முடியாது. பயம் வீரனுக்கு அழகன்று. பயமுடையார் இவ்வுலகில் எதற்கும் உதவார் என்பது வெளிப்படை. அச்சத்துக்கு இடங் கொடுத்து நாளைக்கு வருந்துதற்கேற்ற ஒரு செயலை இன்று செய்வது தகாது. எள்ளி நகையாடுதல் இன்னும் எப்படியெல்லாம் வடிவெடுக்கும் எனில்:
36. அவாச்யவாதாம்ஸ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்
தவ அஹிதா:-உனக்கு வேண்டாதார், தவ ஸாமர்த்யம் நிந்தந்த-உன் திறமையைப் பழிப்பார்கள், பஹூந் அவாச்யவாதாம் ச-சொல்லத் தகாத வார்த்தைகள் பல, வதிஷ்யந் -சொல்லுவார்கள், தத: து:கதரம் நு கிம்-இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது
பொருள் : உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?
ஒருவன் கெட்டுப் போய்விட்டால் அவனுடைய வாழ்க்கையின் காட்சி திடீரென்று மாறிவிடுகிறது. காலமெல்லாம் அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள் இனி இகழ்ந்து பேசுதற்குக் கூசார்கள். அவன் பெற்றிருந்து பொருள் சேர்ந்த புகழ்ச்சி. அவனைப்பற்றி நினைக்கும்பொழுதே எதிரியின் உள்ளத்தில் அச்சம் வடிவெடுக்கும். பரபரப்போடு பார்த்தன் போர்க்களத்துக்கு வந்தது பகைவர் உற்சாகத்துக்கே அணைகட்டிற்று. இனி, அவன் பின்வாங்குவானாகில் அங்ஙனம் கட்டப்பட்ட அணை உடைக்கப்படும். முன்பு தாங்கள் புகழ்ந்து பேசியதற்கே புதிய வியாக்யானம் வந்தமையும். மனிதனால் கேட்டுச் சகிக்க முடியாத சுடு சொற்களை வேண்டியவாறெல்லாம் வழங்குவார்கள். இவ்வேளையில் யுத்தத்தினின்று விலகுவது பெருந்தவறாகும். அதனால் அர்ஜுனனுடைய ஆண்மையே அடிபட்டுப்போம். அதற்கு மேல் பெருவாரியாக வரும் வசைச்சொற்கள் அவனை இடையறாது துன்புறுத்திக்கொண்டிருக்கும். சிறுமையையும் துன்பத்தையும் வலிய வருவித்துக்கொள்வானேன்? போர்புரிவது பெருங்கேடு என்று சொன்ன அர்ஜுனனுக்கு பகவான் என்ன சொல்கிறார் என்றார்.
37. ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஸ்சய:
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம்-கொல்லப்படினோ வானுல கெய்துவாய், ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்-வென்றால் பூமியாள்வாய், தஸ்மாத் கௌந்தேய-ஆகவே குந்தி மைந்தனே, க்ருதநிஸ்சய: யுத்தாய உத்திஷ்ட-நிச்சயித்துக் கொண்டு போருக்கு எழுந்திரு
பொருள் : கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.
போர் புரியாமையினால் வரும் சீர்கேட்டை யெல்லாம் மேலே சொல்லியான பிறகு, போர்புரிவதால் வரும் சீர்மை ஈண்டு இயம்பப்படுகிறது. அறப்போர் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தருமேயொழிய ஒரு நாளும் துன்பம் தராது. அப்படி வலியக்கிடைத்த பெரு வாய்ப்பை எந்தப் போர்வீரன் தான் விட்டுவிடுவான்.
லௌகிகமாகப் பார்க்கிறவிடத்தும் அர்ஜுனன் துன்புறுவதும், போரினின்று பின்போவதும் பொருந்தாது என்பது பகரப்பட்டது. இனி, எத்தகைய மனப்பான்மையுடன் கடமையைச் செய்தால் அது யோகசாதனமாகும் என்ற கோட்பாடு வருகிறது.
38. ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி
ஸுக – து:கே-இன்பம், துன்பம், லாப – அலாப= பேறு, இழவு, ஜய அஜயௌ-வெற்றி, தோல்வி, ஸமே க்ருத்வா-நிகரெனக் கொண்டு, ததோ யுத்தாய யுஜ்யஸ்வ-அதற்கு பின் யுத்தத்துக்கு தயாராவாயாக, ஏவம் ந பாபம் அவாப்ஸ்யஸி-இவ்விதம் (செய்தால்) பாவத்தை அடைய மாட்டாய்.
பொருள் : இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.
சுகத்துக்கு ஏதுவான லாபம், ஜயம் ஆகியவைகளில் விருப்பமும், துக்கத்துக்கு ஏதுவான நஷ்டம், அபஜயம் ஆகியவைகளில் வெறுப்பும் கொள்ளுதல் பாமரர் இயல்பு. தங்களைப் பண்படுத்துவோர் அங்ஙனம் விருப்பும் வெறுப்பும் கொள்ளாது நிகழ்வன யாவையும் நடுநிலையிலிருந்து சமனாகக் கருதவேண்டும். விருப்பும் வெறுப்பும்தான் மனிதனைக் கருமத்தில் கட்டுப்படுத்துகின்றன. கருமத்தில் அல்லது கருமபலனில் பற்றில்லாது அதைச்செய்யும் பொழுது பழைய கருமம் குறைகிறது; புதியது ஒன்றும் சேர்க்கப்படுவதில்லை. இந்த மனநிலை முக்திக்கு மார்க்கமாகிறது.
உலகப்பற்றுடைய ஒருவன் செய்கிற அதே கர்மத்தைக் கர்மயோகியும் செய்கிறான். ஆனால் மனநிலையில் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மனநிலையைக் கொண்டுதான் எது பந்தபாசம், எது பற்றற்ற பாங்கு என்று தெரிந்து கொள்ள முடியும்.
39. ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி
பார்த-பார்த்தா, ஏஷா புத்தி தே-இந்த புத்தி (அறிவுரை) உனக்கு, ஸாங்க்யே அபி ஹிதா-ஸாங்கிய வழிப்படி சொன்னேன், து இமாம் யோகே ஸ்ருணு-இனி யோக வழியால் (சொல்லுகிறேன்) கேள், யயா புத்த்யா யுக்த: இந்தப் புத்தி கொண்டவன் கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி-கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
பொருள் : இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
ஆறு தர்சனங்களில் ஒன்று ஸாங்கியம் என்ற பெயர் பெறுகிறது. அது கபில முனிவர் இயற்றியது. எண்ணிக்கை என்பது ஸாங்கியம் என்ற சொல்லுக்கு அர்த்தம். பிரகிருதியும் புருஷனும் சேர்ந்து 25 தத்துவங்களாகின்றன என்பது அதன் கோட்பாடு. இங்கு பகவான் ஸாங்கியம் என்று சொல்லுவது ஆத்ம ஞானத்தைப்பற்றிய விசாரம் ஒன்றேயாம். பின்பு யோகம் என்று சொல்லப்படுவது பெரிதும் கருமயோகமாகும். ஒவ்வொரு கலைஞானத்திலும் சாஸ்திரத்திலும் தத்துவ விசாரம் அல்லது உபபத்தி (தியரி) என்றும் அனுஷ்டானம் (பிராட்டிஸ்) என்றும் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. முந்தியது புத்தியில் தத்துவத்தை நன்றாகப் படியும்படி செய்கிறது. பிந்தியது பழக்கத்தில் வந்து பயன்படுகிறது. சிற்பி ஒருவன் வீடுகட்டும் விஷயத்தை மனதில் தெளிபட ஓர்கிறான். அது தத்துவவிசாரம். பின்பு அதன்படி அதைக் கட்டி முடிக்கிறான்; அது அனுஷ்டானம். விசாரம், அனுஷ்டானம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. நன்கு விசாரிக்கின்றவன் முறையாக அனுஷ்டிக்கக் கூடும். திரும்பத் திரும்ப அனுஷ்டிக்கின்றவனுக்கு அதன் தத்துவம் உள்ளத்தில் தெளிவுபடப் பதியும்.
இங்கு பகவான் தத்துவ விசாரத்தை ஸாங்கியம் என்றும் அதன் அனுஷ்டானத்தை யோகம் என்றும் சொல்லுகிறார். ஆக, வாழ்க்கை சம்பந்தமான உண்மைகளை விசாரிப்பதும் அனுஷ்டிப்பதும் சேர்ந்து பெரு நன்மை விளைவிக்கும். பலபேர் விசாரித்துப் பார்க்காது வினையாற்றுகின்றனர். சிலர் கருத்தில் வாங்குவார்கள்; செயலில் கொண்டுவரமாட்டார்கள். அறிவைப்பெறுவதும், அது செயலாகப் பரிணமிப்பதும் சேர்ந்தே இருக்க வேண்டும். கர்மயோகம் பூர்த்தியாகாவிட்டால் அது வீண் நஷ்டந்தானே என்ற சந்தேகத்துக்கு விடை வருகிறது:
40. நேஹாபிக்ரமநாஸோऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்
இஹ-இதில் (கர்ம யோகத்தில்), அபிக்ரமநாஸ: ந அஸ்தி-விதைக்கு (முயற்சிக்கு) நஷ்டம் இல்லை, ப்ரத்யவாய: ந வித்யதே-நேரெதிரான விளைவும் இல்லை, அஸ்ய தர்மஸ்ய ஸ்வல்பம் அபி-இந்த தர்மத்தில் (கர்ம யோகம்) சிறிதிருப்பினும், மஹதோ பயாத் த்ராயதே-பேரச்சத்தினின்று காப்பாற்றும்.
பொருள் : இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.
வீடு கட்டுபவர் அதற்குக் கூரை போடாவிட்டால் அதுவரையில் செய்த முயற்சி வீணாய்ப் போம். பயிர்த் தொழில் செய்பவர்கள் அறுவடை செய்யாவிட்டால் பட்டபாடெல்லாம் பயன்படாமற்போம். கருமயோக அனுஷ்டானம் அத்தகையதன்று. ஒரு நாள் உண்ட உணவில் அதற்கேற்ற பயன் இருப்பது போன்று அனுஷ்டானத்துக்கு ஏற்றவளவு யோகத்தில் பயன் உண்டு. மருந்து வகைகளை முறைதவறிக் கையாண்டால் நோயைப் போக்குதற்குப் பதிலாக உயிரைப் போக்கும் விஷமாக அவை மாறியமைக்கூடும். அத்தகைய குற்றம் யோகத்தில் ஏதாவது வந்துவிடுமோ என்ற சந்தேகம் வேண்டியதில்லை. அதைக் கொஞ்சம் அப்பியசித்தாலும் ஆத்ம சொரூபத்தை அது விளக்க வல்லது. ஆத்ம சொரூபத்தை அறிகிறவன் ஜனன, மரண சம்பந்தமான பெரும் பயத்தினின்று விடுபடுகிறான்.
ஸாங்கியம், யோகம் ஆகிய இரண்டையும் முறையாகக் கையாளுபவர்களுக்கு வந்தமையும் நன்மை யொன்று உண்டு. அதாவது:
41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்
குருநந்தந-குருகுலத் தோன்றலே! இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது, அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின் புத்தய:-புத்திகள், பஹுஸாகா-பல கிளைப்பட்டது, அநந்தா: ச-முடிவற்றது,
பொருள் : குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
பல மாணாக்கர்கள் ஒரு கணக்கைப் போடும்போது தப்பான விடைகள் கணக்கற்றவை வரக்கூடும். ஆனால் சரியான விடை ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அங்ஙனம் காமிய கருமங்கள் செய்கின்றவர்களுக்குக் கணக்கற்ற புத்திகள் உருவெடுக்கின்றன. எத்தனையோ விதங்களாக எண்ணியும் செயல் புரிந்தும் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். ஆனால் செயல்களெல்லாம் ஈசுவரனுக்குரியவைகள் என்றறிந்து அவனுக்கே தொண்டு புரிகின்றவனுக்கு புத்தி ஒன்றேயாம்.
மனதை ஒருமுகப்படுத்துதல் உலகக் காரியத்துக்கும் பயன்படும், பாரமார்த்திகப் பெரும்பேறு பெறுதற்கும் பயன்படும். முதலில் மனம் ஒருமுகப்படுகின்றவளவு அதற்கு வல்லமை வருகிறது. விரிந்தோடும் சூரிய கிரணங்களைப் பூதக்கண்ணாடியின் வாயிலாகக் குவியச்செய்தால் ஒளியும் வெப்பமும் குவிந்து அதிகரிக்கின்றன. ஒரு செத்தையில் தீ மூட்டுதலும் அப்பொழுது சாத்தியமாகிறது. அங்ஙனம் மனது குவியும்பொழுது எதை எண்ணுகிறதோ அதன் பாவனையை அது விரைவில் எடுக்கிறது; செயலும் திறம்பட்டதாகிறது. அர்ஜுனன் துரோணாசாரியரிடத்தில் மாணாக்கனாயிருந்த போது ஒரு மரத்தின்மீது வைத்த குறியை மற்றவர்கள் அம்பால் அடிக்க இயலாதிருந்த சமயத்தில் அவன் எதை எளிதில் அடித்துப் பொத்தலாக்கினான். குவிந்த மனமே அவ்வெற்றிக்குக் காரணமாயிற்று.
அமெரிக்காவில், நூலில் கட்டுண்டு ஓர் ஓடையில் தத்தளித்துக்கொண்டிருந்த முட்டையோடுகளை மாணாக்கர்கள் துப்பாக்கியால் சுடமுடியவில்லை. முன்பு துப்பாக்கியைக் கையால் கூடத் தொட்டறியாத விவேகானந்த சுவாமிகள் அவ்வோடுகளை ஒரே தடவையில் சுட்டுச் சுக்கலாக்கினார். அதற்குக் காரணம் கேட்ட போது மனம் குவிதல் என்று அவர் விடையிறுத்தார்.
நவீன பௌதிக சாஸ்திரிகளில் ஒருவராகிய ஜகதீச சந்திரவசு என்பவர் மனிதர்களுக்குள்ள உணர்ச்சிகள் யாவும் மரம் செடி கொடிகளுக்கும் உண்டு என்று காட்சி பூர்வமாக நிரூபித்துக் காட்டினார். அதையெல்லாம் தெரிந்துகொள்ளும் வல்லமை அவருக்கு எப்படி உண்டாயிற்று என்று கேட்டபொழுது செடியின் இயல்புகளைத் தெரிந்துகொள்ளுதற்கு மனதை ஒருமுகப்படுத்தி பாவனையில் நானே செடியானேன் என்று பதிலுரைத்தார். குவிந்து ஒருமுகப்பட்ட மனதுக்கு எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகிறது.
ஒரே புத்தி படைத்திருப்பது எத்தகைய மகிமையையுண்டு பண்ணும் என்பதற்கு ஸ்ரீமதி ராதையின் பிரேமை பக்தி சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். அவளுடைய மனதும் இந்திரியங்களும் ஒரே ஒரு லட்சியத்துக்காகத்தான் வேலை செய்யும். உள்ளத்தில் எழும் எண்ணங்களெல்லாம் கிருஷ்ணனைப் பற்றியவைகள். கண்கொண்டு பார்ப்பதெல்லாம் அவனோடு சம்பந்தப்பட்டவைகள். காதால் கேட்பதெல்லாம் அவன் பெருமைக்கு விளக்கமாகின்றன. உண்ணும் உணவு அவன் ஊட்டுவதாகும். அவனது அருளே உயிர்க்கு உயிராகிறது. மற்றொரு மகிமை ஸ்ரீமதி ராதையின் ஒருமை புத்தியிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. குவிந்த மனமுடையார்க்கு ஓர் இந்திரியம் செய்யும் தொழிலை மற்ற இந்திரியங்களும் செய்யக் கூடும். கிருஷ்ணனது வேணுகானம் சுரக்கிறது. அது காற்றில் மிதந்து எங்கும் பரவுகிறது. ஸ்ரீமதி ராதையின் காதில் அந்த இன்னிசை விழுகிறது. அவள் உள்ளம் அந்த ஓசைக்கு உறைவிடமாகிறது. உள்ளம், புறம் என்ற வேற்றுமை அகலுகிறது. ஓசை வடிவினனாக, நாத பிரம்மமாகக் கிருஷ்ணன்தான் யாண்டும் நிறைந்துள்ளான். ஆங்குக் காது ஓசையைக் கேட்பதில் வியப்பொன்றுமில்லை. ஓசைக்கு ஒரு வடிவம் உண்டு என்பதைக் கண் காண்கிறது; ஓசைக்கு ஒரு மணம் உண்டு என்பதை மூக்கு முகர்கிறது; ஓசைக்கு ஓர் ஊறு உண்டு என்பதை மேனி உணர்கிறது. ஓசைக்குச் சுவையொன்று உண்டு என்பதை நா நுகர்கிறது. ஓசையின் உட்பொருள் அனைத்தும் எப்பொறிக்கும் புலனாகிறது. என்னே ஒருமை புத்தியின் மகிமை! இயற்கையில் நோக்கரிய நுண்பொருளையும் நுகர்ந்தறிதற்கு ஒருமை புத்தியே உற்ற துணையாகிறது. இறைவனையே கண்டுணரவும், அவனில் கலந்திருக்கவும் ஒருமை புத்தி முற்றும் உதவுகிறது. ஒரு புத்தியுடையவன் மக்களுள் மேலோன். சாங்கியமும் யோகமும் சேர்ந்தவிடத்துக் குவிந்த கூர்மையான புத்தி உண்டாகிறது.
பல புத்தியுடையவரின் போக்குப் பின்வருமாறு:
42. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித:
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:
43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்
க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி
44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே
பார்த-பார்த்தா!வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார், புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள், ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது பிழையென்கிறார்கள்.
காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள், ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர், போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர், க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள்.
தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு, போக ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர், வ்யவஸாயாத்மிகா புத்தி:-நிச்சய புத்தி, ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது.
பொருள் : வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.
பொருள் : இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.
பொருள் : இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.
ஆசை என்னும் பாசத்தில் கட்டுண்டு கிடப்பவர்கள் மக்களுள் கடைத்தரமானவர்கள். இம்மையிலும் மறுமையிலும் இந்திரிய சுகங்களை நாடுதல் ஒன்றிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். அவர்களது கல்வியும், கேள்வியும், சொல்வன்மையும் சிற்றின்பத்துக்கென்றே கையாளப்படுவனவாகின்றன. வேதத்தில் கருமகாண்டம் இத்தகைய புன்மையரது புல்லியல்பை நிறைவேற்றுவதற்காக அமைந்தது. பல் வகைப்பட்ட இன்பங்களை நாடிப் பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடப்பவர்க்கு மட்டும் அது பயன்படும். வேதங்கள் மிகப் பழையவை எனினும் அவை புகட்டுவனவெல்லாம் சிறப்பு வாய்ந்தவைகளென்று எண்ணி ஏமாற்றமடையலாகாது. இன்பங்களைப் பெறுவது வாழ்க்கையின் லட்சியமன்று. பரிபூரணமடைவதே முடிவான லட்சியமாகும். அதற்கு ஞானத்திலும் யோகத்திலும் உறுதிபெற்ற உள்ளம் வேண்டும். வேதங்கள் புகட்டுகின்ற கரும காண்ட அனுஷ்டானத்தினின்று ஒருக்காலும் உறுதியான உள்ளம் (சமாதி) உண்டாகாது. பரிபூரண நிலையை அடைவதற்கு விலக்கப்படுவது எது, வேண்டப்படுவது எது என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது. (42-44)
45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்
வேதா-வேதங்கள், த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன, நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக, நிர்த்வந்த்வ-இருமைகளற்று, நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று, நிர்யோக÷க்ஷம-யோக ÷க்ஷமங்களைக் கருதாமல் ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
பொருள் : மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரபஞ்சம். சுவர்க்கங்கள் அனைத்தும் இப்பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கின்றன. இதிலிருந்து பெறுகின்ற இன்பங்களுக்கு வழி காட்டியாயிருக்கும் நூல்களுக்கு வேதங்கள் என்று பெயர். அவைகள் எம்மொழியில், எக்காலத்தில், யாரால் இயற்றப் பெற்றிருப்பினும் நிலையற்ற பிரபஞ்சத்தைப் பற்றியவைகளேயாம். முக்குணங்கள் முப்பாழ் என்று இயம்பப்படுகின்றன. முப்பாழுக்கு அப்பால் இருக்கின்ற பரம்பொருளை அடைந்தாகவேண்டும். யோகத்தில் நிலைபெற்றிருப்பதே அதற்கு உற்ற உபாயம். யோக சாதனமும் ஈண்டு இயம்பப்படுகிறது. லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி, சுகம் துக்கம் ஆகியவைகளுக்கு துவந்த்வம் அல்லது இருமைகள் என்று பெயர். இவைகளில் கட்டுண்டு மனது ஊசலாடாது நடுவு நிலையிலேயே அமைதியுற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்வதே யோக சாதனமாகிறது. இனி யோகம் என்பதற்குச் சாமான்யமான பொருள் ஒன்று உண்டு. அதாவது பிரபஞ்சப் பொருள்களைத் தேடித்திரிதலுக்கு உலக வழக்கத்தில் யோகம் என்றும், அவைகளைக் காப்பாற்றி வைப்பதற்கு ÷க்ஷமம் என்றும் பெயர். அப்படி யோக÷க்ஷமத்திலும் மிகைபட்ட கருத்து வைக்கலாகாது. சுவாசிப்பதற்குக் காற்றுத்தானாக வந்தமைவதுபோன்று சரீரம் இருக்குமளவும் அதற்குத் தேவையானவைகள் ஈசுவரானுக்கிரகத்தால் ஆத்ம சாதகன் ஒருவனுக்குத் தாமாக வந்தமையும். முறை வழுவாத இக்கோட்பாட்டில் விசுவாசம் வைக்காதவர்களே யோக ÷க்ஷமத்தைப் பற்றி யெண்ணி மனங்கலங்குகின்றனர். அப்படி மனங்கலங்காது யாண்டும் ஆத்ம சொரூபத்திலேயே சாதகன் திளைத்திருக்க வேண்டும். எந்த யோகிக்கு இது சாத்தியமாகிறதோ அவன் முப்பாழைக் கடக்க வல்லவனாகிறான். திரிபுர தகனம் என்பது இதுவே.
இவ் வையகத்தில் வேண்டியதை வேண்டியாங்கு வருவித்துக்கொள்ளலாம். அப்படி அவைகளைப் பெற்று இன்புற்றிராது முக்குணங்களைக் கடந்து செல்வதால் வரும் நன்மை யாது? விடை வருகிறது :
46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:
ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில், யாவாந் அர்த உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது, ஸர்வேஷு வேதேஷு-எல்லா வேதன்களினாலும், விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு, தாவாந்-அவ்வளவு தான் (பயன்).
பொருள் :எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.
நீர் இல்லாத இடங்களில் கிணறு நிச்சயமாகப் பயன்படுகிறது. எங்கும் தெளிநீர் மயமாயிருக்குமிடத்தில் கிணற்றைத் தேடுவார் யாருமிலர். அதுபோன்று அக்ஞானத்தில் இருக்குமளவு வேதங்களால் பயனுண்டு. அவைகள் காட்டுகின்ற நெறிகளைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் பலவிதமான இன்பங்களைப் பெற்று இனிது வாழ்ந்திருக்கலாம். ஆனால் பிரம்ம ஞானமோ பேரின்ப சொரூபமானது. அதன் கிரணங்களாக வந்தவைகளே ஏனைய இன்பங்கள் யாவும். கனவில் உண்ட உணவு உடலை வளர்ப்பதில்லை. நனவில் உண்ட உணவு நனவு, கனவு ஆகிய இரண்டிலும் உடலை வளர்க்கிறது. அப்படிப் பிரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் எல்லா ஆனந்தங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன.
கிணறு மட்டும் அமையப்பெற்றுள்ள ஊரில் இருக்கும் ஒருவன் கிணற்று நீரை உண்டு திருப்தியடைந்தாகவேண்டும். அங்ஙனம் அக்ஞானத்தில் இருக்கும் பரியந்தம் ஒருவன் உலக இன்பங்களைத் துய்த்திருப்பதுதானே அவன் கடமை? அப்படியல்ல. ஞானத்துக்குத் தன்னைப் பக்குவப்படுத்துதற்கு வழியொன்று உண்டு. அதாவது :
47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி
தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு, கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை, கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே, தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல், ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.
பொருள் : தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.
வாழ்க்கையில் இது ஒரு பெரிய முரண்பாடாகத் தென்படுகிறது. வினைப்பயனை விரும்பாது யாரும் வினையாற்ற முடியாது. வினைப்பயனை விரும்பாதார் வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவானோ இதற்கு நேர் மாறாக உபதேசிக்கிறார். கருமம் புரியாது வெறுமனே இருக்கவேண்டாம். ஓயாது பெரு வினையாற்றிக்கொண்டிரு. வினையினின்று விளையும் பயன் யாது என்ற ஏக்கம் உனக்கு வேண்டாம். அத்தகைய பற்றற்ற பாங்கினின்றுதான் நன்மை விளையும். ஏனென்றால் கருமம் தன்னளவில் கொடியதன்று. ஆசையோடு கூடிய கருமமே கொடியது. பிறவிப் பெருங்கடலில் அது மனிதனை ஆழ்த்துகிறது. சுவர்க்காதி போகங்களை விரும்பி வினையாற்றியவர்களெல்லாம் ஆசைக்கு அடிமைப்பட்டவர்களே. வினைப்பயனை விரும்பாதவர்களெல்லாம் ஆசையை வென்றவர்கள். ஆசையை வெல்லுமளவு மனிதன் சுதந்திரத்தில் நிலைபெறுகிறான். பயன் கருதாது பணிசெய்பவனுக்குச் சித்தம் தெளிவடைகிறது. ஞானத்தைப் பெற அவன் தகுதியுடையவன் ஆகிறான். ஆற்றலும் அவனுக்கு அதிகரிக்கிறது. ஆக, கருமம் நடைபெறவேண்டும். கரும பலனில் ஆசை வைக்கலாகாது. ஆசையை வென்றவன் நிஷ்காமிய கருமம் செய்யும் விதம் வருமாறு:
48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே
தநஞ்ஜய-அர்ஜுனா! யோகஸ்த:-யோகத்தில் நின்று, ஸங்கம் த்யக்த்வா-பற்றை நீக்கி, ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு, கர்மாணி குரு-தொழில்களைச் செய்க, ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே யோகமெனப்படும்.
பொருள் : தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.
தான் செய்யும் வினையெல்லாம் ஈசுவரனுடையது என்கிற எண்ணத்தில் நிலைத்திருப்பது யோகத்தில் நிலைத்திருப்பதாகிறது. செயலெல்லாம் அவனுடையது என்று எண்ணுவதால் பற்றுதல் போய்விடுகிறது. ஈசுவரனுடைய வேலைக்காரனாகத் தன்னை வைத்துக்கொண்டு யோகி வினையாற்றுகிறான். பக்கத்து ஊரிலிருக்கும் ஒருவனை அழைத்து வரும்படி வேலைக்காரனை எஜமானன் ஏவுகிறான். வேலைக்காரன் அங்குச் சென்று அம்மனிதன் அவ்வூரில் அப்பொழுது இல்லையென்று அறிகிறான். அங்ஙனம் தன் யத்தனத்தில் நேர்ந்த தோல்வியை முன்னிட்டு அவன் வருந்துவதில்லை. மற்றொரு நாள் சென்று அம்மனிதனைக் காண்கிறான். அவ்வெற்றியால் அவன் தனி மகிழ்ச்சி யடைவதில்லை. தலைவன் தூண்டுதல்படி தன் கடனாற்றுவதே அவ்வேலைக்காரனுக்குப் போதுமானது. கருமயோகியும் அவ்வாறு வெற்றி தோல்விகளை ஒப்பாய் உணர்கிறான்.
தராசுமுள் போன்று மனது நடுவுநிலையில் இருப்பதற்கு யோகம் என்று பெயர். மனது நடுவுநிலையில் உறுதி பெறுமளவு அது மேன்மையுறுகிறது. ஓரம் சாரேல் என்பது கோட்பாடு. மனது இப்பக்கம் அப்பக்கம் சாராது இருத்தல் வேண்டும். இனியதைப் பெறுகிற வேளையில் இன்புறவும், இன்னாததைப் பெறுகிற வேளையில் துன்புறவும் செய்கிறது மனது. இவ்விரண்டும் ஓரம் சார்ந்த நிலைகளாகும். இன்ப துன்பமிரண்டையும் ஒரே பாங்கில் பொருள்படுத்துவது நடுவுநிலை. அதனால் மனத்தகத்துத் தெளிவும், உறுதியும் உண்டாகின்றன. தெளிந்து அசையாதிருக்கும் நீரில் பிம்பம் நன்கு புலப்படுகிறது. தெளிந்து உறுதி பெற்றுள்ள உள்ளத்தில் மெய்ப்பொருள் காட்சி நன்கு புலனாகும். அது நடுவு நிலையினின்று மனது பெறும் மேன்மையாம். எத்தகைய வாழ்க்கை அல்லது மனநிலை ஒவ்வாது என்பது இனி இயம்பப்படுகிறது :
49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:
தநஞ்ஜய-தனஞ்ஜயா! புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம், தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது, புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச் சரணடை
பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள்.
பொருள் : தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.
இருப்புப்பாதை வண்டியில் பிரயாணம் செய்த ஒருவனுக்கு ஏவலாளன் ஒருவன் கூலிக்காக மூட்டை சுமந்தான். வழிப் போக்கனாக வந்த வேறு ஒரு பிரயாணி அன்பினால் தூண்டப் பெற்று சமபுத்தியுடன் மூட்டை சுமந்து அவனுக்கு உதவி புரிந்தான். இருவர் செயலும் ஒன்றே யெனினும் கூலிக்காகச் சுமந்தவன் கீழ்மகன். போதியவளவு கூலி கிடைக்கவில்லை யென்ற மனக்குறை அவனுக்கு வந்து அமைகிறது. தன்னைக் குறித்து அவன் தானே பரிதாபப் படுவதுமுண்டு. ஆகவே அவன் கிருபணன். அர்ஜுனன் தன்னைக் கிருபணன் என்று இயம்பிக்கொண்டதை ஈண்டு ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வுலகில் கரும பலனை நாடும் பெரும்பான்மையோர் கூலிக்காரன் போன்று அலைந்து திரிந்து அழிகின்றனர். வேற்றானாயிருந்தும் அன்புக்காக மூட்டை சுமந்தவனே மேன்மகன். கொடையாளி போன்று செயல்புரிபவன் மேன்மையுறுகிறான். நீரை இறைக்க இறைக்க அது மேலும் கிணற்றில் ஊறுவது போன்று சுயநலம் கருதாத சேவையானது ஆற்றலை வளர்க்கிறது. மனதின் சம நிலைக்கு அந்த ஆற்றல் யாண்டும் உற்ற துணையாகிறது. சமநிலையினின்று ஞானசமாதி இனிது வடிவெடுக்கிறது.
மனதின் சமநிலை இவ்வுலக வாழ்க்கைக்கு எப்படித் துணை புரிகிறது என்னும் கேள்வி எழுகிறது. அதற்குப் பகவான் விடையளிக்கிறார்.
50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம்
புத்தியுக்த:-புத்தியுடையவன், ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை, உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான், தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு, யோக: கர்மஸு கௌஸலம்-யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்).
பொருள் : புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.
மனிதனை அக்ஞான இருளில் சேர்க்கும் இயல்புடையவைகள் இருவினையும். ஆனால் கருமயோகியை வினைகள் தளைக்கமாட்டா. அவனுக்கு சுயநல எண்ணம் சிறிதுமில்லாமையே அதற்குக் காரணம். இரண வைத்தியன் ஒருவன் நோயாளியின் உடலை அறுக்கிறான். நோயாளி உயிர் பிழைப்பதால் வைத்தியனுக்குப் புண்ணியம் இல்லை. அவன் சாவதால் வைத்தியனுக்குப் பாபம் இல்லை. நடுவு நின்று முறையாகத் தன் கடமையை அவ்வைத்தியன் புரிகிறான். நோயாளியைக் கொல்லவேண்டும் என்ற கெட்ட எண்ணம் அவனுக்கு இல்லை. ஈசுவர சங்கற்பத்தை மீறி நோயாளியைக் காப்பாற்ற முடியும் என்ற அகங்காரமும் அவனிடத்தில்லை. ஆதலால் இருவினையும் அவனைச் சேர்வதில்லை.
இரண வைத்தியன் பல உடல்களை அங்ஙனம் அறுத்துச் சிகிச்சை செய்கிறான். பின்பு ஒரு நோயாளியைப் பார்த்து இவன் என் புதல்வன் என்று அவன் பற்று வைத்தால் அவனது நடுவு நிலை கலைந்து போகிறது. முறையாக இரண வைத்தியம் செய்ய அவனுக்கு இயலுவதில்லை. எல்லாக் கருமங்களுக்கும் இதுவே விதி. எல்லாத் தொழில்களிலும் மனது நடுவு நிற்பது யோகம். மனமானது நடுவுநிற்கின்றவளவு கருமம் திறம்படச் செய்யப்படுகிறது. விருப்பு அல்லது வெறுப்புக்கொள்ளுமிடத்துத் திறமை குறைந்துபோகிறது. யுத்தம் புரிதல் போன்ற ஒரு கோர கர்மத்தையும் நடுவு நின்று திறமையாகச் செய்துகாட்டினார் பீஷ்மர். கணவனுக்குப் பணிவிடை செய்த மாது ஒருத்தி திறம்படத் தன் கடமையைச் செய்ததினால் காட்டில் தவம்புரிந்து கொக்கை எரித்த தவசியைவிட மேலானவள் ஆயினாள். பற்றற்றுத் திறம்படக் கசாப்புக்கடை வைத்திருந்த வியாதன் அதே தவசிக்கு ஞானம் புகட்டவல்ல பரிபாகம் அடைந்தான். நடுவு நிற்பதால் புதிய வினைத்தளைகள் உண்டாவதில்லை; பழைய கட்டுகள் தாமே அவிழ்கின்றன. அதனால் மனபரிபாகம் உண்டாகிறது.
திறம்படச் செய்யும் வினைகளுள் தலைசிறந்த வினை யாது என்ற கேள்வி எழுவதால் விடை வருகிறது.
51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்
ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள், பலம் த்யக்த்வா-பயனைத் துறந்து, ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி, அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.
பொருள் : புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.
துன்பத்துக்கு ஏதுவான இவ்வுலக வாழ்க்கையைத் துன்பமற்றதாக யோகி செய்துகொள்கிறான். பிறவிக்கு வித்தாயிருப்பதைப் பின்பற்ற பெருநிலையாகவும் அவன் செய்துகொள்கிறான். கேட்டைக் கேடின்மையாகச் செய்வதே வல்லமையில் பெரு வல்லமையாம். தம்மை விழுங்கவந்த விஷத்தை யெடுத்து அமிர்தமாகப் பானம் பண்ணுகிறார் சிவபெருமான். விஷ வைத்தியர்களுள் அவர் தலைசிறந்த வைத்தீசுவரன். மனிதனைக் கட்ட வந்த கருமத்தை யெடுத்துக் கருமயோகி முக்தி மார்க்கமாக மாற்றிக்கொள்கிறான். அப்படிச் செய்யும் செயலே செயற்கரிய செயலாகிறது. பெருநிலையடைந்ததன் அறிகுறி பின் வருகிறது.
52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச
யதா தே புத்தி-எப்போது உனது புத்தி, மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை, வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ, ததா-அப்போது, ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும், நிர்வேதம் கந்தாஸி-வேதனையேற்படாது.
பொருள் : உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.
ஆத்மா, அனாத்மா இவ்விரண்டுக்கும் வேற்றுமை விளங்காத நிலை அவிவேகமாகும். விவேகம் உதயமானதும் உண்மை விளங்குகிறது. கனவைக் கனவு என்று தெரிந்துகொண்டவனுக்குக் கேள்விப்பட்ட கனவும், இனிக் கேட்கப்போம் கனவும் ஆகிய இரண்டும் பொருள்படாதவைகளாம். அங்ஙனம் உலக நடைமுறையின் உண்மையை அறிந்துகொண்டவனது உள்ளத்தில் அதைப்பற்றிய செய்திகள் எந்தவிதமான தடுமாற்றத்தையும் உண்டுபண்ணுவதில்லை.
தனக்கு அத்தகைய பெருநிலை எப்பொழுது வரும் என்று ஒரு சாதகன் கேட்கிறான். அதற்கு விடை வருகிறது.
53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி
ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய், தே புத்தி-உனது புத்தி, மாதௌ-சமாதி நிலையில், நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது, யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின், ததா யோகம
-
53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி
ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய், தே புத்தி-உனது புத்தி, மாதௌ-சமாதி நிலையில், நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது, யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின், ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய்.
பொருள் : உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.
தான் அனுபவியாத ஒரு பொருளைப்பற்றி பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக் குழப்பமடைவது மனதின் இயல்பு. நான் உயிரோடு இருக்கிறேனா, அல்லது இறந்து ஒழிந்துபோய் விட்டேனா? என்று தன்னைப்பற்றி யாரும் பிறரிடம் கேட்பதில்லை. தான் உயிர் வாழ்வது தனக்குப் பிரத்தியக்ஷம். அதற்கு வேறு பிரமாணம் ஒன்றும் வேண்டியதில்லை. மனது ஒடுங்கி ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருக்குங்கால் அது சமாதி என்று சொல்லப்படுகிறது. அப்பொழுது ஆத்ம சொரூபத்தின் பெருமையை அதுவே சொல்லும். அந்நிலையில் ஆத்ம ஞானமும் யோகமும் பூர்த்தியாகின்றன. மனிதன் அடைய வேண்டிய பெருநிலையைப் பெற்றவனாகிறான்.
ஈண்டு வினா ஒன்று கேட்பதற்கு அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. ஆக, அவன் அதைப் பகவான் முன்னிலையில் சமர்ப்பிக்கிறான்.
அர்ஜுந உவாச
54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், கேஸவ-கேசவா! ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்?
கிம் ஆஸீத-எப்படியிருப்பான்? கிம் வ்ரஜேத-எதனையடைவான்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?
ஸமாதி கூடியவன், பிரம்மஞானி, ஸ்திதப்பிரக்ஞன் ஆகிய இச்சொற்களெல்லாம் ஒரே கருத்தை விளக்குகின்றன. பரிபூரணமுணர்ந்த ஞானி தானே பரிபூரணமாகிறான். அத்தகையவன் சமாதியில் இருக்கும்போது அவனுடைய அந்தக்கரணம் எத்தன்மையதாகிறது? பகிர்முகமாக அவன் மனதைத் திருப்பும் போது அவனுடைய செயல்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கும்?
இந்த அத்தியாயத்தின் இறுதிவரையில் இனி வரும் பதினெட்டு சுலோகங்களில் நிறைஞானியின் இயல் இயம்பப்படுகிறது. நல்ல எழுத்து எழுத விரும்புபவர் மாதிரி எழுத்தைத் தங்கள் முன்னிலையில் வைத்துக்கொள்கின்றனர். சிறந்த சித்திரம் வரைய விரும்பும் ஓவியக்காரன் அழகிய படம் ஒன்றைத் தன்முன்பு மாதிரியாக வைத்துக்கொள்கிறான். பரிபூரணத் தன்மையை முன்மாதிரியாக வைத்துக்கொள்ளுதல் ஒவ்வொரு துறையிலும் இடம்பெறுகிறது. ஆத்மீகத் துறையிலும் இம்முறை பொருந்தும். சான்றோர்க்கு சாத்தியமாகக்கூடிய சம்பூரண நிலை ஈண்டுச் சாற்றப்படுகிறது. அந்நிலையை அடைய முயல்வார் தம் சாதனத்தில் செய்யவேண்டியது யாது என்பதும் இதில் அடங்கப்பெறுகிறது. ஆக, இப்பெருநிலையைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு இதன் பொருட்டுப் பாடுபடுவதெல்லாம் யோக சாதனங்களாகின்றன. குறியும் நெறியும் அடங்கப்பெற்ற சிறந்த பதினெட்டு சுலோகங்களும் வருகிறது.
ஸ்ரீ பகவாநுவாச
55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே
ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த-அர்ஜுனா! மநோகதாந் ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும், ப்ரஜஹாதி-துறக்கிறான், யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், ததா ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
அர்ஜுனனுடைய கேள்வியில் முதல் பகுதிக்கு இது விடை:
அக்கினி தானே உஷ்ண சொரூபம். வெப்பத்தை நாடி அது வேறு பொருளிடத்துப் போகவேண்டியதில்லை. அங்ஙனம் ஆத்மா ஆனந்த சொரூபம். தன்னிடத்துள்ள ஆனந்தத்தை அது பிறபொருள்மீது ஏற்றுவித்து, மனதைக் கொண்டு அவைகளை நாடிச் செல்லுகிறது. அத்தகைய நாட்டத்துக்குக் காமம் என்று பெயர். நீரில் அலை உண்டாவதுபோன்று காமம் மனதில் வடிவெடுக்கிறது. அலைகள் வீசும்பொழுது நீரின் அடிப்பாகம் தென்படுவதில்லை. மனதில் காம அலைகள் வீசும்பொழுது அதற்கு அடிப்படையாயுள்ள ஆத்மாவின் ஆனந்தசொரூபம் சிதறடைந்தது போன்று ஆகிறது. காம அலைகளற்று மனது தேங்கியிருக்கும் போது ஆத்மாவின் ஆனந்த சொரூபம் தனக்குத் தானே விளங்குகிறது. தான் உலகெல்லாம் தேடிய இன்பம் தன்னிடத்தே யாண்டும் இருக்கிறது என்று மனம் தெளிபவனே நிறைஞானி. ஆத்ம திருப்தன் நிறைஞானி.
மனம் தெளிந்திருத்தல் என்பதன் விளக்கம் வருகிறது :
56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே
து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய், ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய், வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.
பொருள் : துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”
துன்பத்துக்கு ஏதுவான நிகழ்ச்சிகள் இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. தெளிந்த மனமுடையவனை அவைகள் அசைத்துத் துன்படுத்தமாட்டா. விறகுக்கட்டை சேரச் சேரத் தீ வளர்கிறது. திடஞானியினிடத்து ஆசை அப்படி வளர்வதில்லை. சுகத்தைத் தரும் பொருள்கள் பெருகினாலும் அவன் அவைகளிடத்து நாட்டம் கொள்வான். பற்று, அச்சம், சினம் என்னும் மூன்று விதக் குற்றங்களினின்று நீங்கி அவனது மனம் நிறை நிலையடைகிறது. உலகப் பொருள்களிடத்துப் பற்றற்றிருக்கவேண்டும். பாம்பினிடத்தும் மரணத்தினிடத்தும் நமக்குப் பற்று இல்லை. ஆனால் அவைகளைக் குறித்துப் பயம் உண்டு. அது ஒண்ணாது. பற்றற்றிருப்பது போன்று பயமற்றும் இருக்கவேண்டும். பீமன் போன்றவனுக்குப் பகைவனிடத்துப் பற்றுமில்லை, பயமும் இல்லை. எனினும் பெருமிதமாகக் கோபம் இருந்தது. அதும் தகாது. பற்றற்று, பயமற்று, சினமற்றிருக்கும் மனதே சீரிய மனதாகிறது. தெளிவடைதலும் அத்தகைய மனதுக்குச் சாத்தியமாகிறது. இன்ப துன்பங்களை நிகராக நினைப்பவன் நிறைஞானி. விருப்பும், வெறுப்பும், அச்சமும் அற்றிருப்பவன் நிறைஞானி. மனன சீலத்தையுடையவன் முனி. அதாவது ஸதலதாரை போன்று யாருடைய மனது இடையறாது ஆத்ம சொரூபத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறதோ அம்மனிதன் முனியாகிறான்.
புறவுலகோடு முனிவன் எவ்வித இணக்கம் வைக்கிறான் என்னும் வினாவுக்கு விடை வருகிறது.
57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம்
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
ய:-எவன், ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும், ப்ராப்ய-அடைந்து, ந அபிநந், ததி -மகிழ்வதில்லை, ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை, ஸர்வத்ர அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
பொருள் : எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
நலமும் கேடும் கலந்துள்ளது உலகம். பற்றுடையார்க்கு அது இன்ப துன்பங்களை விளைவிக்கிறது. பற்றற்ற ஞானிக்கு அதனால் இன்ப துன்பங்கள் உண்டாவதில்லை. ஆகையால் அவன் புகழ்வதுமில்லை, இகழ்வதுமில்லை.
எப்படிப் பேசுகிறான் என்று கேட்ட கேள்விக்கு இது விடையாகிறது:
58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும், ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது போல், அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை, யதா அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்) தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
பொருள் : ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.
ஆபத்துக்களினின்று தன்னைக் காத்துக்கொள்ள ஆமை மிக எளிதில் உறுப்புக்களை உள்ளே இழுத்துக்கொள்கிறது. அவ்வளவு எளிதில் இந்திரியங்களை ஆளும் அறிஞன் இந்திரியங்களை உன்முகமாகத் திருப்புகிறான். இப்படிச் செய்வது பிரத்தியாகாரம் எனப்படுகிறது. வீட்டின் கதவுகளைத் தாழ் இட்டு அடைத்து வெளியுலகின் வியவகாரத்தில் தொடர்வு அற்றவனாக மனிதன் உள்ளே வீற்றிருப்பது போன்று ஞானி பொறி வாயிலை அடைத்துவைத்துச் சமாதியில் சுகித்திருக்க வல்லவனாகிறான். அப்படிச் சமாதியில் திளைத்திருப்பதுதான் நிறைஞானியின் உண்மை நிலை. நிலத்தில் திண்டாடுகிற மீனை நீரில் விட்டால் அது எப்படி உணர்கிறதோ அப்படியிருக்கிறது ஞானிக்கு ஆத்ம சொரூபத்தில் இருப்பது. பூரணப் புலனடக்கம் நிறைஞானிக்கு முற்றிலும் இயல்பானது.
ஸ்திதப்பிரக்ஞன் எங்ஙனம் அமர்கிறான் என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு விடையாக அடுத்த மூன்று ஸ்லோகங்கள் வருகிறது.
59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே
நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து, விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன, ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை, அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும், ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
பொருள் : தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
நோய்வாய்ப்பட்டிருப்பவனுடைய இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில் செல்லத் தகுதியற்றவைகளாகின்றன. ஆயினும் சுகமடைந்ததும் விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளத்தில் குடிகொண்டிருக்கிறது. சிறைச்சாலையில் அடைபட்டிருப்பவனுக்கும் இந்திரியார்த்தங்களை நுகர இயலாது. விஷயங்களையெல்லாம் விட்டு அவன் பலவந்தமாக விலக்கப்பட்டவனாகிறான். ஆனால் அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் உதித்துக்கொண்டிருக்கிறது. யாராலும் அதை அடக்கிவைக்க முடியாது. புலனடக்கம் முதலிய தபசுகளைச் செய்பவனது நிலைமையும் அத்தகையது. வாசனைகள் மிக சூக்ஷ்மமாக இருந்துகொண்டு கூத்தாடும். தீயிலிட்டு வறுத்த விதை முளைக்காது. அவ்வாறு வாசனை அறவே ஒழியவேண்டும். இந்த ஆசையை பகவான் ரஸம் என்கிறார். வாசனை, ரஸம், ஆசை ஆகிய சொற்களுக்குப் பொருள் ஒன்றேயாம். ஆசையானது திரும்பவும் முளைக்காதபடி அவிந்துபட்டுப் போகவேண்டும்.
ஆசையை வேர் அறுப்பதற்கு வழியொன்று உண்டு. சிற்றின்பத்துக்கு ஏதுவான பொருள்களாகத் தென்படுபவைகளெல்லாம் உண்மையில் பரமாத்மாவே என்று அறிபவர்கள் அதன் கண் அசையோ அல்லது பயமோ கொள்ளமாட்டார்கள். அதைப் போற்றிப் பாராட்டுவார்கள்.
அடங்காத இந்திரியங்கள் செய்யும் இன்னல்கள்:
60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:
கௌந்தேய-குந்தியின் மகனே, ஹி-ஆனால், யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான
புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட, ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள், ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன.
பொருள் : குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.
இந்திரியங்கள் பொல்லாதவைகள். தவ விரதமுடையவர்களையும் அவைகள் தத்தளிக்கச் செய்கின்றன. அவைகளைப் பின்பற்றுவது காட்டுக் குதிரையின் மீது சவாரி செய்வதற்கு ஒப்பாகும். அறிஞர்களையே அவைகள் படுகுழியில் வீழ்த்துபவைகள். பின்பு, பாமரர்களை அவைகள் என் செய்யமாட்டா? இந்திரியங்களை வெல்லுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயம் அடைந்துள்ள பண்பாட்டை ஆங்குத் தென்படும் புலனடக்கத்தைக்கொண்டு அளந்துவிடலாம். சீரிய புலனடக்கமே மேலான நாகரிகம் என்று கருதப்படுகிறது. இம்மை மறுமையாகிய இரண்டிலும் மேன்மைக்கு இந்திரிய நிக்கிரகமே உற்ற உபாயம்.
அவ்விந்திரியங்களை அடக்கும் வழி:
61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, மத்பர:-என்னைப் பரமாகக் கொண்டு, யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய், யஸ்ய இந்த்ரியாணி வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
பொருள் : அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
மனது ஏககாலத்தில் இரண்டு பொருள்களை நினைக்க முடியாது. நான் விஷயங்களை விட்டுவிடவேண்டும் என்று நினைக்கும்போதும் விஷய எண்ணங்கள் தான் மனதில் குடிகொள்கின்றன. வேர் ஊன்றி மனதுக்குள் பாய்ந்து மறைமுகமாக அவைகள் வலிவு பெறுகின்றன. விஷய எண்ணங்களுக்கு மனமுவந்து அனுமதி கொடுக்கிறபொழுது அவைகள் மேலே கிளைகளாகத் தளிர்க்கின்றன. வேண்டாமென்று அக்கிளைகளைக் கொய்ய முயலும்போது அவைகளின் ஆணிவேர் மனதினுள் ஆழமாகச் செல்லுகிறது. அதற்குப் பதிலாக எண்ணத்தையே மாற்றியமைக்க வேண்டும். இந்திரியங்களைப் பற்றிய எண்ணம் ஈசனைப் பற்றிய எண்ணமாக மாறவேண்டும். இவ்விரண்டு எண்ணங்களுள் எது வலுக்கிறதோ அது மற்றதைத் தகர்க்கிறது. தீயதைத் தகர்க்கும் தன்மை தெய்விக எண்ணத்துக்கு உண்டு. பக்தி ஓங்குமளவு இந்திரியங்களின் வேகம் தணிகிறது.
கேடு அனைத்துக்கும் முதற்காரணம் யாது? விடை வருகிறது:
62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே
பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது, தேஷூ ஸங்க: உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது, ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால் விருப்பமுண்டாகிறது, காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
பொருள் : மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி
க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது, ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல், ஸ்ம்ருதிப்ரம்ஸாத் புத்தி நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம், புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி நாசத்தால் அழிகிறான்.
பொருள் : சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.
இந்திரியங்களை விஷயங்களில் உலவவிட்டுக் கொண்டு மனிதன் ஒருவன் வீதியில் நடக்கிறான். பல வடிவங்களை அவன் பார்க்கிறான். கண்ணாடியில் பிம்பம் போன்று அவைகள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மனதில் ஒரு பதிவையும் அவைகள் செய்வதில்லை. அவைகளுக்கிடையில் கட்டழகுள்ள வடிவம் ஒன்று தோன்றுகிறது. அதைக் கூர்ந்து பார்க்க மனது விரும்புகிறது. திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. பன்முறை பார்க்கும் வாய்ப்பும் அமைகிறது. அதைப் பார்ப்பதில், பிறகு நினைப்பதில் மகிழ்ச்சி உண்டாகிறது. நினைந்து நினைந்து அவ்வழகு வடிவத்தின்கண் விருப்பம் வருகிறது. வலுத்த விருப்பம் பற்றுதல் எனப் பெயர் பெறுகிறது. பார்த்தல் என்கிற ஓர் இந்திரிய நுகர்ச்சி மற்ற இந்திரிய நுகர்ச்சிகளுக்கும் இடந்தேடப் பார்க்கிறது. அதாவது அச் சுந்தர சொரூபத்தைத் தனக்குரியதாக்கிக் கொள்ளத் தீர்மானம் செய்யப்படுகிறது. இத்தீர்மானத்துக்கு ஆசை அல்லது காமம் என்று பெயர். எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பதுபோன்று என்ணம் காமத்தை வளர்க்கிறது. இனி, ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கான முயற்சி எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் உலகம் அதற்கு இடந்தருவதில்லை. இந்த ஆசையை அவர்கள் தடைப்படுத்துகின்றனர். தடைப்பட்ட ஆசை சினமாக வடிவெடுக்கிறது. சினத்தைக் காணுமிடத்தெல்லாம் அதைத் துருவி ஆராய்ந்தால் அது தடைப்பட்ட ஆசை என்பது தெளிவாகும். சினம் பைத்தியத்துக்கு ஒப்பானது. பைத்தியம் நிலைத்துள்ளது; சினம் தற்காலிகமானது. அவ்வளவுதான் வித்தியாசம். சினம் கொண்டவனுக்கும் பித்தம் பிடித்தவனுக்கும் நடைமுறை ஒன்றே. குழம்பிய மனநிலை அதன் விளைவு.
அமைதி குடிகொள்ளுங்கால் வனத்தில் உள்ள மரம் செடி கொடிகள் உள்ளபடி தென்படுகின்றன. அவைகளுள் இது இப்பெயருடையது என்கிற நினைவு இருக்கிறது. ஆனால் புயல் காற்று அடிக்குங்கால் எல்லாம் ஒரே அமளி. சினம் கொண்ட மனதிலும் ஒரே புயல்காற்று. அது சம்மோகம் என்றும், குழப்பம் என்றும் பெயர் பெறுகிறது. நன்று இது, தீது இது என்ற நினைவு அப்பொழுது இருப்பதில்லை. பண்டு, பலகால் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள நலம் கேடுகளைப் பற்றிய ஞாபகம் போய்விடுகிறது. பழைய நினைவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனிதன் புதிய செயல்களை நன்றென்றும் தீதென்றும் பாகுபடுத்துகிறான். எப்பொருள் எத்தன்மையது என்கிற ஞாபகம் இருந்தால்தான் அப்பொருளின் மெய்ம்மையை புத்தியானது பாகுபடுத்த வல்லதாகும். ஆக, நினைவு போய்விட்டால் விவேகம் அல்லது நல்லறிவு அழிகிறது. அறிவை இழந்தவன் தானே அழிவுபட்டவன் ஆகிறான். ஏனென்றால் நெறி வழுவுதல் மாய்தலுக்கு ஒப்பாகிறது.
விஷயாதிகளில் உலவும் எண்ணத்தை மீட்டெடுத்து எதன் கண் நிலை நிறுத்தினால் நன்மையுண்டாகும்? விடை வருகிறது :
64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந்
ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி
விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்), ராக த்வேஷ வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி, ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு, ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான்.
பொருள் : விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.
இந்திரியங்கள் இயல்பாகப் புறவுலகில் செல்லும் பாங்குடையவைகள். புறப்பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்ற அவாவுடன் பொறிகள் அவைகளைத் தாவிப் பற்றுகின்றன. ஆனால் பொருள்கள் துன்பம் தருவனவாயிருப்பின் பொறிகள் அவைகளை வெறுத்துப் பின்வாங்குகின்றன. இங்ஙனம் விருப்பும் வெறுப்பும் இந்திரியங்கள்பால் இயல்பாய் அமைந்துள்ளன. அந்த இயல்பை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து ஆராயுமிடத்து மனது ஆட்டிவைக்கின்ற பிரகாரம் இந்திரியங்கள் ராகதுவேஷ வடிவெடுத்துத் தொழில்புரிகின்றன.
மனதை அடியோடு அடக்கி வென்றவன் மனவேந்தன். அத்தகையவனது மனம் பெரிதும் ஆத்ம சொரூபத்திலேயே திளைத்திருக்கிறது. அது வெளி விஷயங்களில் செல்லுமாயின் ஆசைப்படாது புனித இயல்போடு சஞ்சரிக்கிறது. அதனால் அதனுடைய அமைதியும் தெளிவும் அதிகரிக்கின்றன. சுத்த மனதோடு இந்திரியங்களைப் பயன்படுத்துவதே ஒருவித சமாதியாகிறது. ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர் கண்கொண்டு கார்மேகத்தையும் அதன் கீழ் உலாவிய கொக்கையும் பார்த்தார். அதனால் அவருக்கு ஆனந்த சமாதி ஏற்பட்டது. அவர் சிறுவராயிருந்தபோது நாடகத்துக்குச் சிவவேஷம் பூட்டினார்கள். சாம்பல் பூசுதல் முதலிய ஸ்பரிச உணர்ச்சி அவருக்கு சிவ பாவ சமாதியை உண்டுபண்ணிற்று. காதால் பகவந் நாமத்தைக் கேட்டபொழுதெல்லாம் அவருக்கு சமாதி வந்தது. நறுமணத்தை நுகர்ந்தபோதெல்லாம் ஈசுவர சிந்தனையும் சமாதியும் அவருக்கு வருவனவாயின. வாயில் வைத்துச் சுவைத்ததெல்லாம் அவருக்கு ஈசுவரப் பிரசாதம். ஆக, இந்திரியங்கள் ஐந்தையும் நன்கு பயன்படுத்தி அவர் ஈசுவர சந்நிதியையே சார்ந்திருந்தார். மனம் அடங்கப் பெற்றார்க்கு இந்திரியங்கள் கேடுடையவைகளல்ல என்பதற்கும், பிரசாதம் அல்லது தெளிந்த நிலையில் மனது திளைத்திருக்கும் என்பதற்கும் அவரது வாழ்க்கையே சான்றாகிறது.
ஸ்திதப்பிரக்ஞன் எப்படி நடமாடுகிறான் என்ற கேள்விக்கு இது விடை :
65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே
ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில், ஸர்வது:காநாம்-எல்லாத் துன்பங்களுக்கும் ஹாநி: உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது, ப்ரஸந்ந சேதஸ:-சித்தம் சாந்தி பெற்ற மனிதன், புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே நிலைப்படுகிறது
பொருள் : சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின்ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.
பலபேர் உலகைக் கேடு மிக நிறைந்ததாக நினைக்கின்றனர். நலம் கேடு ஆகிய இரண்டும் நிறைந்தது உலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லார்க்குமுண்டு. இவ்வுலகம் திருந்தியமையும்பொழுது தங்களுக்கு மனவமைதியுண்டாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகில் அல்லல் நிறைந்திருப்பதும் தாங்கள் அசாந்தியில் மூழ்கியிருப்பதும் இணைபிரியாதவைகளாம். வெளியுலகில் காணும் கேடுகளெல்லாம் மனதில் இருக்கும் கேட்டின் புறத்தோற்றங்களாம். மனது திருந்தியமையுமளவு புறவுலகக் காட்சியும் திருந்தியமைகிறது.
உண்மையில் புறவுலகம் கேடுடையது அன்று; அது ஈசுவர சொரூபம். அதைக் கடவுள் சொரூபமாகக் கருதுமளவு மனது அமைதியுறுகிறது. அமைதியுற்ற உள்ளத்தில் ஆத்ம சொரூபம் தென்படுகிறது. பிறகு அம்மனதே ஆத்ம சொரூபமாய் மாறுகிறது.
66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா
ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம்
அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு, புத்தி நாஸ்தி-புத்தியில்லை, அயுக்தஸ்ய ந பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை, அபாவயத: ந ஸாந்தி ச-மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை, அஸாந்தஸ்ய குத: ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
பொருள் : யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோபாவனை இல்லை. மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
விருப்பு வெறுப்பை வென்றவனே யோகி. அத்தகையவன் யுக்தன் எனப்படுகிறான். மேலே மொழிந்த விஷயம் மீண்டு மொருமுறை எதிர்மறையாகச் சொல்லப்படுகிறது. மனமடங்கப் பெறாதவனுக்கு இம்மிளயவும் இன்பமில்லை, புலன்களில் வேட்கையிருக்குமளவு மனிதன் துன்பப்பட்டே ஆகவேண்டும். துக்கப் பிராப்தி மட்டுமல்ல, வேறு என்னென்ன நஷ்டங்களெனின், இந்திரியங்களை வெல்லாதவனுக்கு ஆத்மாவைப் பற்றிய விவேகமில்லை. ஆகையால் ஆத்ம தியானம் அவனால் செய்யமுடியாது. ஆத்ம தியானம் செய்யாதவனுக்கு ஆத்ம சொரூப ஞானமில்லை. அதினின்று உண்டாகிற சாந்தியுமில்லை. இத்தனைவித நஷ்டங்கள் மனமடங்காமையால் வருகின்றன.
மனமடங்காதவனுக்கு ஞானம் ஏன் உண்டாவதில்லை? அதற்கு விடை வருகிறது:
67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி
ஹி-ஏனெனில், அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல், சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ, தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது.
பொருள் : இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது.
துடுப்பு, நங்கூரம், உள்யந்திரம், சுக்கான் முதலியவைகளால் ஆளப்பெறாத கப்பல் காற்றடிக்கும் திசையில் தள்ளுண்டு தடுமாற்றமடையும். அலைகின்ற இந்திரியங்களைப் பின்தொடரும் மனதுக்கு வரும் கேடும் அத்தகையது. புறவுலகைச் சார்தற் கென்றே இந்திரியங்கள் அமைந்தவைகள். ஒருவன் தூங்கும் பொழுது அவன் வாயில் இனிப்புப் பண்டத்தை வைத்தால் மனதின் வேகமின்றியே வாய் தானாக அப்பண்டத்தைச் சப்புகிறது; கசப்புப் பண்டத்தை வைத்தால் அதைத் துப்புகிறது. பழக்கத்தால் இவ்வியல்புகள் இந்திரியங்களுக்கு வந்துள்ளன. பண்படாத மனது இப்பொறிகள் வாயிலாகப் புறவுலகில் போமாயின் அது ஆத்ம சொரூபத்தைப் பற்றிய விவேகத்தை இழப்பதாகிறது.
அப்படியானால் அத்தகைய இந்திரியங்களை என்ன செய்ய வேண்டும்?
68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
மஹாபாஹோ-பெருந்தோளாய், தஸ்மாத்-ஆகையால், யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய புலன்கள், இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ, தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது.
பொருள் : ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது.
இந்திரியங்கள் தத்தம் தொழில் புரியாதிருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள். வஸ்துக்களை போகத்துக்குரியவைகளென்று எண்ணி அவைகள் மீது இந்திரியங்கள் உலாவுதலால் கேடு விளைகிறது. நலன் தரக்கூடிய வேறு ஒரு போக்கில் இந்திரியங்களைப் பழக்கலாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. ஆனால் அது கெட்ட உபாதியை உண்டுபண்ணுகிறபடியால் அதைத் தொடவேமாட்டேன் என்று ஸ்ரீராம கிருஷ்ணர் ஆழ்ந்து சங்கற்பித்தார். அதன் பயனாக அவரது நாடி நரம்புகளில் பெரியதொரு மாறுதல் வந்தமைந்தது. ஒரு நாணயத்தால் அவரது உடலைத் தூங்கும்பொழுது தொட்டாலும் அவருக்குச் சகிக்க முடியாத வலி வருவதாயிற்று. அவரைக் கீழ்மையில் இழுக்கக் காமக்கிழத்திகள் தோன்றியவுடனே, அம்பிகையை எண்ணி அவருக்கு ஆழ்ந்த சமாதி கூடிற்று. இந்திரிய நிக்கிரகம் என்பது. இந்திரியங்களைக் கீழ்மையினின்று மீட்டெடுத்து மேன்மையில் வைப்பது என்று அவரது ஜீவிதம் விளக்குகிறது. அப்படி இந்திரியங்களை நியாஸம் செய்பவர் ஞானம் பெறுகின்றனர். (நியாஸம் -சப்ளிமேஷன்-கீழ்மையை மேன்மையாக மாற்றுதல்)
அப்படி இந்திரியங்களின் தொழிலைத் தூயதாக மாற்றுபவன் அடையும் நன்மை யாது?
69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே:
ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், தஸ்யாம் ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான், யஸ்யாம் பூதாநி ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ, பஸ்யத: முநே: ஸா நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு.
பொருள் : எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.
ஸ்தூல உலகில் மக்களுக்குப் பகலாயிருக்கும் வேளையில் ஆந்தை, புலி முதலியன நன்கு பார்க்கமாட்டா. ஆக, அவ்வேளை அவைகளுக்கு இரவு. அவைகளுக்குப் பகல் போன்று கண் தெரியும் வேளையோ மற்றப் பிராணிகளுக்கு இரவு. இனி, இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்றிருக்கிறது. திருடர்களுக்குத் திருட்டைப்பற்றிய விவரங்கள் பகல் போன்று விளங்கும். மற்ற இயக்கங்கள் இருள் போன்று அவர்களுக்குப் புலப்படா. சூது ஆடுபவர்க்கு அச்செயல்மட்டும் பகல் போன்று விளங்கும். கற்றவர்க்கு அறிஞர் கூட்டம் பகலுக்கு ஒப்பானது. இங்ஙனம் இவ்வுலகிலேயே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்று விளங்கவும், ஏனைய துறைகள் இரவு போன்று விளங்காமலும் இருக்கின்றன.
இந்திரியங்களை வென்ற யோகிக்கு உலகக் காட்சிகள், உலக வியவகாரங்கள் ஆகியவைகள் இருள்போன்று மறைந்து கிடக்கின்றன. பரமாத்ம தத்துவ சம்பந்தமான யாவும் பகல் போன்று அவனுக்கு நன்கு விளங்குகின்றன. அனைத்தையும் ஈசுவர சொரூபமாகக் காண்பவனுக்கு யாண்டும் மங்களம் பொலிகிறது; அவனது வாழ்க்கை இன்பமே வடிவெடுத்ததாகிறது. இந்திரிய நுகர்ச்சியுடைய போகிக்கு உலகக் காட்சி பகல். இந்திரியங்களை அடக்கிய யோகிக்குக் கடவுள் காட்சி பகல்.
ஈசுவரக் காட்சி காண்பதால் வரும் நன்மை யாது?
70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத்
தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே
ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ
யத்வத்-எவ்விதம், ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில், ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்வத்-அதே விதமாக, யம் காமா: ப்ரவிஸந்தி-எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ), ஸ ஸாந்திம் ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
பொருள் : கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
பொருள் : கடலின்கண் கூட்டுதல் குறைத்தல் முதலியன செய்தல் எவருக்கும் இயலாது. உலகிலுள்ள நதிகளெல்லாம் ஓயாது அதில் வந்து வீழ்ந்தாலும் அது மிகைபடுவதில்லை. நதிகள் வராதொழியினும் கடல் குறைபடுதலில்லை. உள்ளே வரும் நதிகளோ உருவை இழந்துவிடுகின்றன. நாம ரூபம் அடிபட்டுப் போய் விடினும் நதி எப்பொருளாலானதோ அப்பொருளுக்கு நஷ்டமில்லை. கருவி கரணங்களை வென்ற முனிவனது மனம் கடல் போன்றது. காமத்தை உண்டுபண்ணும் பொருள்கள் ஓயாது அவனது முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கலாம். பொறிவாயிலாக அவன் அவைகளைப் பொருள்படுத்தவும் செய்யலாம். கடலில் நதிகள் ஒடுங்குவது போன்று இந்திரியார்த்தங்கள் என்னும் சித்த விருத்திகள் அவனது உள்ளத்தில் ஒடுங்கி மறைகின்றன. மனம் ஒரு விகாரத்தையும் அடையாத பரிபூரண நிலையில் அவன் வீற்றிருக்கின்றான். அகண்டாகார விருத்தி யென்று அதைப் பகர்வதுண்டு. கடல்போன்று அகண்டமாய்விடுகிறது ஞானியின் உள்ளம். கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறைமனது கலங்கிய மனது ஆவதில்லை. சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது. ஆசை வலையில் அழுந்துபவர்க்கும் அதற்கும் வெகு தூரம்.
இந்நிலையை அடைதற் பொருட்டுச் சாதகன் என்ன செய்ய வேண்டும்?
71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி
ய: புமாந்-எந்த மனிதன், ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து
நிர்மம: நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான், நி:ஸ்ப்ருஹ: சரதி-இச்சையற்றான், ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான்.
பொருள் : இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.
ஆசை இருக்குமளவு மனிதனுக்கு அசாந்தி; ஆசை அறுபடுமளவு அமைதி உண்டாகிறது. நான், எனது என்னும் எண்ணம் மனிதனைக் கரும பந்தத்தில் தளைக்கிறது. நான், எனது என்ற மன விருத்திகளை அகங்கார மமகாரம் என்று இயம்புவதுண்டு. கடலானது அலைகளாக வடிவெடுத்துச் தன்னைச் சிறு சிறு துண்டங்களாக மேற்பரப்பில் காட்டிக்கொள்கிறது. தோற்றத்தளவில் கடல் துண்டுபட்டது. உண்மையில் அது அகண்டமானது. அகங்காரமும் மமகாரமும் சேர்ந்து மனிதனிடத்து ஜீவபோதம் என்ற அலையை உண்டுபண்ணுகின்றன. ஆசை என்னும் காற்றே அகங்காரம் மமகாரம் என்ற அலையை உண்டுபண்ணுதற்கு முதற் காரணம். ஆசை ஒழிந்தால் நான், எனது என்பன ஒழிகின்றன. அகங்கார மமகாரம் அற்றவிடம் அகண்டாகார ஆனந்த சொரூபமே எஞ்சியுளது. நான், எனது என்னம் இப்பந்தங்களை ஒழித்தற்பொருட்டு வாழ்தலே பெருவாழ்வாம்.
ஸ்திதப்பிரக்ஞன் எப்படி வாழ்கிறான் என்பது மீண்டும் இயம்பப்படுகிறது. அத்தகைய வாழ்வினின்று உண்டாகும் மாண்பு வருமாறு :
72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி
பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
பொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
கனவில் இருக்கும்போது கனவில் காண்கிற பொருள்களுக்கு மதிப்புண்டு; ஆங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தமையுடனே கனவைப்பற்றிய மயக்கம் போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்குப் பிறகு மதிப்பில்லை. அங்ஙனம் கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம நிர்வாணம் என்று பகரப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய அவஸ்தைகளைப்பற்றிய மயக்கம் கிடையாது.
பிரம்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப்பெரு நிலையினின்று கீழே இறங்கி வந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். நதிகளெல்லாம் கடலைப் போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று பிரம்ம நிர்வாணம் அடைதல் ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம். விடுதலை யென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு.
இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஸாங்க்யயோகோ நாம த்விதீயோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸாங்கிய யோகம் என்ற இரண்டாம் அத்தியாயம்.
-
மூன்றாம் அத்தியாயம்
கர்ம யோகம்
கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டுவந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன். ஏனெனில், இவனது உண்மை நிலையறியாத பாமரர்களும், இவனைக் கண்டு தாங்களும் கர்மங்களைவிட்டு ஞானத்துறையில் துணிவுறுகிறார்கள்.
அதனால் அவர்கள் கர்ம யோகத்தை யிழந்ததுமன்றி ஞான யோகத்தையுமிழந்து முன்னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே காரணமாவான். ஆகையால் ஞானயோகத்தில் திறமையுள்ளவனுக்கும், திறமையில்லாதவனுக்கும் கர்ம யோகமே மேலானது. கர்மங்களைச் செய்யும்போது, இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும், ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடையை பிரீதிக்காகவே செய்கிறோம், என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்.
அர்ஜுனனுக்கு ஏற்பட்ட ஐயம் 1-2 -ஒன்றை ஒன்று அனுசரித்து இரண்டு மார்க்கங்கள் உள 3-8 -யக்ஞத்தின் சிறப்பு 9-13 -பிரவிருத்திச் சக்கரம் 14-16 -ஆத்ம நிஷ்டனுக்குக் கர்மமில்லை 17-18 -சாதனதசையில் இருப்பவன் செய்யவேண்டியது 19-26 -அஹங்காரத்தை அகற்றும் விதம் 27-32 -சுபாவத்துக்கு ஏற்ற சாதனம் 33-35 -பாபத்துக்குப் பிறப்பிடம் 36-43.
அர்ஜுன உவாச
1. ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஸவ
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஜநார்தந-ஜநார்த்தனா, கர்மண: புத்தி ஜ்யாயஸீ-செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது, தே மதா சேத்-நின் கொள்கையாயின், தத் கோரே கர்மணி-இந்தக் கொடிய செய்கையில், மாம் கிம் நியோஜயஸி கேஸவ-என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
2. வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோऽஹமாப்நுயாம்
வ்யாமிஸ்ரேண இவ வாக்யேந-குழம்பியது போன்ற பேச்சினால், மே புத்திம் மோஹயஸி இவ-என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல! யேந அஹம் ஸ்ரேய: ஆப்நுயாம்-எது எனக்கு நன்மை தருமென்பதை, தத் ஏகம் நிஸ்சித்ய வத-அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்
பொருள் : குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.
எக்காரணத்தாலும் அர்ஜுனன் கர்மத்தைப் புறக்கணிக்கலாகாது என்று பகவான் எடுத்தோதினார். கர்மத்தில் அவனைத் தூண்டியவர் கர்மத்தைக் கர்மயோகமாக மாற்றிவிடவேண்டுமென்று மேலும் உபதேசித்தார். கர்மயோகிதான் அனைத்தையும் சாதிக்கவல்லவன் என்பது பகவானது கோட்பாடு. பின்பு ஞானமடைந்தவனது சம்பூரண நிலையை சந்தேகத்துக்கு இடமில்லாது அவர் சிலாகித்துப் பேசினார். அதனால் அர்ஜுனனுக்கு இந்த ஐயம் வருவதாயிற்று. அவன் சொல்லுவதாவது: பிரபோ, தாம் உயிர்களின் அக்ஞானத்தைப் போக்குபவர்; துன்பங்கள் அனைத்தையும் துடைத்து வைப்பவரும் தாமே. அத்தகைய தாம் என்னைமட்டும் ஏன் குழப்பத்தில் ஆழ்த்திக்கெடுத்து விடுகிறீர்? பகவானுடைய பேச்சில் முரண்பாடு இருப்பது போன்று என் புல்லறிவுக்குத் தென்படுகிறது. அதனால் என்னிடத்துள்ள சிறிய அறிவு மேலும் கலங்குகிறது. என்னைக் கெடுத்து விடுவது உமது எண்ணம் அல்ல என்று நான் உறுதியாக நினைக்கிறேன். எனக்கு சிரேயஸைப் புகட்டவேண்டுமென்று நான் பணிந்து தங்களிடத்து விண்ணப்பித்திருக்கிறேன். ஆதலால் எனக்கு நலம் தரும் கோட்பாடு ஒன்றைமட்டும் நன்கு எடுத்துப் புகட்டுவீராக.
ஸ்ரீ பகவாநுவாச
3. லோகேऽஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அநக-பாபமொன்று மில்லாத அர்ஜுனா
லோகே மயா-இவ்வுலகில் என்னால், த்விவிதா நிஷ்டா-இரண்டுவித நிஷ்டை, புரா ப்ரோக்தா-முன்னர் கூறப்பட்டது, ஸாங்க்யாநாம் ஜ்ஞாநயோகேந-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால், யோகிநாம் கர்மயோகேந-யோகிகளின் கர்ம யோகத்தால்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது. ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.
விவேகம், வைராக்கியம், துறவு முதலியவைகள் வாயிலாகத் தெளிவுபட்ட அறிவானது ஆத்ம சொரூபத்தை நேரே கிரகிக்குமானால் அதற்கு ஞானயோகம் என்று பெயர். கர்மானுஷ்டானத்தை முறையாகச் செய்து வருவதால் அறிவு தெளிவடைகிறது. தெளிந்த அறிவு ஆத்ம சொரூபத்தை விளக்குகிறது. ஆக ஞானயோகம், கர்மயோகம் ஆகிய இரண்டும் ஆத்ம சொரூபத்தை விளக்குதற்கு உபாயங்களாயிருப்பதால் இரண்டும் நன்னெறிகளாகின்றன. விசாரத்தில் ஈடுபடுபவரும் செயலில் ஈடுபடுபவரும் என்றென்றும் இருக்கிறார்களாதலால் ஞான மார்க்கம், கர்மமார்க்கம் ஆகிய இரண்டு நிஷ்டைகளும் தொன்று தொட்டு உலகில் இருந்து வருகின்றன.
இவ்விரண்டு சாதனங்களும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள் என்று கேட்குமிடத்து விடை வருகிறது :
4. ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புரு÷ஷாऽஸ்நுதே
ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி
புருஷ: கர்மணாம் அநாரம்பாத்-தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால், நைஷ்கர்ம்யம் ந அஸ்நுதே-செயலற்ற நிலை அடைவதில்லை, ஸந்ந்யஸநாத் ஏவ-துறவினாலேயே
ஸித்திம் ச ந ஸமதிகச்சதி-ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்,
பொருள் : தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.
கல்வி வேண்டுபவர்கள் எல்லாரும் பள்ளிக்கூடத்துக்குப் போகக் கடமைப்பட்டிருக்கின்றனர். ஆனால் பள்ளிக்கூடத்திலேயே எக்காலமும் இருப்பது மக்களின் லட்சியமன்று. கற்க வேண்டியவைகளைக் கற்றானபிறகு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற வேண்டும். கல்வி பூர்த்தியாகும் முன்பு வெளியேகுதல் பொருந்தாது. உலக வாழ்க்கை என்கிற பள்ளிக்கூடமும் அத்தகையதே.
நைஷ்கர்ம்யம் என்பதற்கும் சித்தி என்பதற்கும் பொருள் ஒன்று. பழம் முற்றும் பழுக்குமிடத்து அது சித்தியாய்விட்டது எனலாம். அதற்கு முன்பு அது காய்த்து முதிர்ந்து கனிகிற செயல்களெல்லாம் அதனுடைய கர்மமாகிறது. முற்றும் கனிந்த நிலை நைஷ்கர்ம்யம். ஆக, நைஷ்கர்ம்யமும் சித்தியும் ஒன்றே. பழுத்த பழம் மரத்தைவிட்டுப் பிரிவது அதன் சந்யாசம். பிஞ்சு அல்லது காயாக இருக்கும்பொழுது அதை மரத்தைவிட்டுப் பறித்து எடுப்பதால் அது சித்தியடைந்ததாகாது.
மனிதனுடைய வாழ்க்கை இதற்கு ஒப்பானது. ஓயாது காய் முதிர்வது போன்று கர்மத்தின் மூலம் மனிதன் ஞான முதிர்ச்சியடைகிறான். பரிபூரணம் அடைதற்கு முன்பு அவன் கர்மத்தைத் துறப்பதால் ஒரு நன்மையையும் பெறுகிறதில்லை. முறையாகக் கர்மம் செய்துகொண்டிருப்பதே நிறைநிலை எய்துதற்கு உற்ற உபாயமாகிறது.
5. ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:
ஹி கஸ்சித் ஜாது க்ஷணம் அபி-எவனும் ஒரு கணப்பொழுதேனும், அகர்மக்ருத் ந திஷ்டதி-செய்கையின்றிருப்பதில்லை, ஹி ப்ரக்ருதிஜை குணை:-இயற்கையில் விளையும் குணங்களே, ஸர்வ: அவஸ:-எல்லா உயிர்களையும் தன் வசமின்றி, கர்ம கார்யதே-தொழில் புரிவிக்கின்றன.
பொருள் : எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.
சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரகிருதி. அது கர்ம சொரூபம். ஆதலால் அதில் கட்டுண்டு கிடப்பவர்கள் கர்மம் செய்தே ஆகவேண்டும். உண்பது, உறங்குவது, சுவாசிப்பது, ஹிருதயம் அடிப்பது ஆகிய எல்லாம் கர்மம். இயற்கையில் இயங்காதிருப்பது எது? அணுமுதல் அண்டம் வரையில் எல்லாம் அசைகின்றன. அதில் பிணிக்கப்பட்டுள்ள உயிர்க்குக் கர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது.
பிரகிருதியில் கட்டுண்டிருக்கும்போது கர்மத்தை விட்டுவிட முயலுதலின் விளைவைக் கேட்குமிடத்து அதற்கு உத்தரம் வருகிறது:
6. கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே
ய: விமூடாத்மா-எந்த மூடாத்மா, கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய-கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, இந்த்ரியார்தாந்-இந்திரிய விஷயங்களை, மநஸா ஸ்மரந் ஆஸ்தே-மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ, ஸ மித்யாசார: உச்யதே-பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள் : கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
பிரகிருதியில் ஆத்மா கட்டுண்டிருக்குமளவு மனது இருக்கிறது. ஓயாது சங்கற்பித்துக்கொண்டிருப்பது அதன் தொழில். மனது எண்ணுகிறது; அதே வேளையில் புறக்கரணங்கள் தடுக்கப்படுகின்றன. அப்படிச் செய்வது முறையன்று. உபமானத்தால் இதை விளக்குமிடத்து நீராவி யந்திரத்தில் ஆவி நிறைந்திருக்கிறது. ஆவி ஒருபுறம் சக்கரத்தை உந்தித்தள்ளுகையில் மற்றொரு புறம் அதற்கு முட்டுப்போடுவது சரியன்று. முதலில் ஆவியை அடைக்க வேண்டும். பிறகு சக்கரத்துக்கு முட்டுப் போட வேண்டும். ஆவியை அடைக்காது சக்கரத்துக்கு முட்டுப் போட்டால் யந்திரம் ஒடியும் அல்லது பழுதுபடும். மனிதன் மனதை அடக்காது வெளிக்கரணங்களை அடக்குவதால் தன் இயல்பை அவன் பிளவுபடுத்துகிறான். ஆகையால் அது மித்தியாசாரம் (பொய்யொழுக்கம்) எனப்படுகிறது. எது வாழ்வைக் குலைக்கிறதோ அது பொய்யொழுக்கம். அக்ஞானத்தில் இருப்பவன் கர்மத்தை விட்டுவிடுவதாகப் பாசாங்கு செய்வது மித்தியாசாரம் ஆகிறது. அது துராசாரத்துக்கு ஒப்பானது.
7. யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேऽர்ஜுந
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே
து அர்ஜுந-ஆனால் அர்ஜுநா, ய மநஸா இந்த்ரியாணி-எவன் இந்திரியங்களை மனத்தால்
நியம்ய அஸக்த:-கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல், கர்மேந்த்ரியை: கர்மயோகம் ஆரபதே-கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, ஸ விஸிஷ்யதே-அவன் சிறந்தவன்.
பொருள் : அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.
முன்பு கூறப்பட்டுள்ள மித்யாசாரி இந்திரியங்களை அடக்கினான்; ஆனால் மனதை அடக்க முடியவில்லை. அவனை விட மேலானவன் ஈண்டு எடுத்துச் சொல்லப்படுகிற கர்மயோகி. இவன் மனதை ஒழுங்குப்படுத்திக்கொண்டு இந்திரியங்களைப் பயன்படுத்துகிறான். பசித்த நாய் ஒன்று தன் முன்னே வைத்துள்ள உணவுக்காகப் பதைபதைக்கிறது. அவிழ்த்துவிட்டவுடன் அது பேர் ஆர்வத்துடன் உண்கிறது. அடங்காத மனதையுடையவனுடைய நிலைமை கிட்டத்தட்ட இது போன்றது. ஆசை சர்வ காலமும் அவனது உள்ளத்தில் குடிகொள்கிறது. அறிவுடையவனோ உணவு சர்வேசுவரனுடைய ஆராதனைக்கு நைவேத்யமாகச் சமைக்கப்படுகிறது என்று அதன்கண் பற்றற்றிருக்கிறான். பிறகு உண்ணும்பொழுது பகவானது பிரசாதம் என்று அமைதியோடு, தூய உணர்ச்சியோடு அதை ஏற்கிறான். இத்தகைய மனநிலையுடன் எல்லாக் கர்மங்களையும் செய்வது மேலானது. ஞானேந்திரியங்களைக் கையாளும் வகையும் இதில் அடங்கப்பெறுகிறது. உணவை உண்பது கர்மம். அதைச் சுவைப்பது ஞானம். சுவையைத் தனக்கேற்ற இன்பம் தருவது என்று ரசிப்பது போகம். அதே சுவையை ஈசுவரப் பிரசாதமாகப் போற்றுவது யோகம். ஆக, இந்திரியங்களைப் பாழ்படுத்துவது ஒண்ணாது; அடங்கிய மனதால் அவைகளை மேம்படுத்துவது முறை.
ஆகையால் சாதன தசையில் இருக்கிற ஒவ்வொருவனும் செய்யவேண்டியது யாதெனில் :
8. நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:
நியதம் கர்ம த்வம் குரு-விதிக்கப்பட்ட தொழிலை நீ செய், ஹி அகர்மண: கர்ம ஜ்யா ய:-ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ, அகர்மண:-தொழிலின்றி, தே ஸரீரயாத்ரா அபி-உனக்கு உடம்பைப் பேணுதல் கூட, ந ப்ரஸித்த்யேத்-சாத்தியம் ஆகாது.
பொருள் : விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டுசெலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.
உண்பது, உறங்குவது, நீராடுவது இவைபோன்றவைகளுக்கு நித்திய கர்மங்கள் என்று பெயர். உயிர் வாழ்க்கைக்கு இவைகள் முற்றிலும் இன்றியமையாதவைகள். நித்திய கர்மங்களைச் செய்வதால் புண்ணியம் ஏதும் கிடையாது. ஆனால் அவைகளைச் செய்யாவிட்டால் பாபம் உண்டு. உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம். உணவு அருந்துதலில் புண்ணியம் ஒன்றும் இல்லை. ஆனால் உண்ணாது பட்டினி கிடந்தால் உடல் நலிதல் என்ற பாபம் ஏற்படுகிறது. குறித்த இடத்துக்குப் பயணம் போய்ச் சேருதற்கு வாகனம் வேண்டும். அங்ஙனம், குறித்த லட்சியத்தை அடைவதற்குச் சரீர வாழ்க்கை முற்றிலும் வேண்டப்படுகிறது. ஆகையால் உடலைக் காப்பாற்றி வைப்பதே ஒரு பெரும் பயணம் போவதற்கு ஒப்பாகிறது. கர்மத்தாலன்றி இது சாத்தியப்படாது. மேம்பட வாழ விரும்புபவர் ஓயாது கர்மம் செய்தே ஆக வேண்டும். நித்திய கர்மத்தைமட்டும் செய்தால் போதுமா? போதாது. ஏனென்றால் தான் அடைந்த பண்பை இருந்தபடி காப்பாற்றி வைப்பதற்குமட்டும் நித்திய கர்மம் பயன்படும். ஒரு பருவத்தில் தவழ்தல் குழந்தைக்கு நித்தியகர்மம்.
அவ்வளவில் நின்று விட்டால் அதன் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. நிற்கவும் நடக்கவும் ஓடவும் ஆகிய புதிய கர்மங்களில் குழந்தை ஈடுபட்டாக வேண்டும். அங்ஙனம் மனிதன் புதிய புதிய கர்மங்களைச் செய்வதால்தான் ஜீவிதத்தில் முன்னேற்றமடைகிறான். ஆனால் முன்னேற்றத்துக்கு ஈடாக மற்றொரு புறம் இவன் கர்மபந்தத்தில் தளைக்கப்படுகிறான். ஆகையால் முன்னேற்றமும் வேண்டாம், கர்மபந்தமும் வேண்டாம் என்று கருதிக் கர்மத்தைச் சுருக்கிக்கொள்வார் உளர். அது தகாது. முன்னேற்றமும் அடையலாம்; கர்மபந்தத்தில் கட்டுப்படாதும் இருக்கலாம். எப்படி எனின், பகவானே பகர்ந்தருள்கிறார்:
9. யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மபந்தந:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர
யஜ்ஞார்தாத் கர்மண:-வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது, அந்யத்ர அயம் லோக கர்மபந்தந:-தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது, கௌந்தேய முக்தஸங்க:-குந்தி மகனே, பற்றைக் களைந்து, ததர்தம் கர்ம ஸமாசர-அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு.
பொருள் : வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.
கர்மத்தில் பறித்தல், பங்கிடுதல், படைத்தல் என்று மூன்று இயல்புகள் உண்டு. கடைநிலையில் உள்ள உயிர்கள் பறித்துப் புசித்து உயிர்வாழ்கின்றன. இந்நிலையில் வாழ்க்கை என்பது ஓர் ஓயாத போராட்டம். வலிவுடையது முன்னணிக்கு வருகிறது. வலிவற்றது பின்னணியில் வருந்தி வாழ்கிறது அல்லது அறவே துடைக்கப்படுகிறது. விலங்கு உலகு இக்காட்சியளிக்கிறது. இடைநிலையில் உள்ள உயிர்களுக்கிடையில் பறித்தல் குறைகிறது. பங்கிடுதல் அதிகரிக்கிறது. போட்டிக்கு ஈண்டு அதிக இடமில்லை. ஓர் உயிர் மற்றோர் உயிர்க்குத் துணைபுரிந்து வாழ்கிறது. மானுட சமூக அமைப்பு இதை அடிப்படையாகக் கொண்டது.
தலைநிலை என்பது இதனிலும் மேலானது. தனக்கென்று தேடாது, தன்னிடத்திருப்பதைப் பிறர்க்கென்றே பண்புடன் படைத்துவருவது இதன் கோட்பாடாகும். வகையறிந்து அன்புடன் கொடுப்பதால் கொடுப்பவனுக்கும் ஏற்பவனுக்கும் குறையொன்றும் வருவதில்லை. இறைக்க இறைக்கக் கேணிநீர் ஊறுவது போன்று, எடுத்து முறையாக வழங்க வழங்க ஆற்றலும் ஆக்கமும் உயிரின்கண் உயர்கிறது. தலைசிறந்த இச்செயலுக்கு யாகம் என்று பெயர். இது வாழ்க்கையின் மேலாம் கோட்பாடாகும். கல்வியை மற்றவர்களுக்குப் புகட்டுகிறவளவு ஒருவன் தானே கல்விமான் ஆகிறான். ஞானத்தை வழங்குபவனுக்கு ஞானம் வளர்கிறது. செல்வத்தையும் அப்படியே பொது நன்மையின் பொருட்டு முறையாகத் தேடிப் பயன்படுத்துகிறவளவு அது வளர்கிறது. பொது நன்மையில் தனி நன்மை அடங்கியிருக்கிறது.
தனி நலம் கருதாத புண்ணியச் செயல், தியாக புத்தியோடு செய்யும் சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே செய்யப்படும் செயல், ஈசுவர ஆராதனையாக ஆற்றும் வினை, பாரமார்த்திகப் பெரு நோக்கத்தோடு செய்யப்படும் கர்மம் ஆகிய இவையாவும் யக்ஞம் என்று அழைக்கப்படுகின்றன. போர்புரிவதை ஒருவன் உலக நன்மைக்காகவென்று செய்வானாகில், பொருள் ஈட்டுவதையும் பயிர்த்தொழில் செய்வதையும் ஒருவன் பொதுநலத்துக்காகவென்ற பாங்குடன் இயற்றுவானாகில், குற்றேவல் புரிவதையும் சமூகத் தொண்டாக ஒருவன் ஆற்றுவானாகில் இவை யாவும் யக்ஞமாகின்றன. எங்கு யக்ஞம் நடைபெறுகிறதோ அங்கு தெய்வ சான்னித்தியம் இருக்கிறது. விஷ்ணுவே யக்ஞசொரூபம் என்பது மறைமொழி. இப்படி யாகமாகக் கருதிச் செய்யும் கருமங்கள் மனிதனைப் பந்தப்படுத்தமாட்டா. யாக கர்மங்களை வேண்டிய அளவு விரிக்கலாம். அதனால் யாண்டும் சிறப்பே உண்டாகிறது. ஒழுங்கான உலக நடைமுறைக்கு ஆதாரமாயுள்ள திட்டம் யாது என்று வினவில் :
10. ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக்
புரா-முன்பு, ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா-பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து, உவாச-சொல்லினான், அநேந ப்ரஸவிஷ்யத்வம்-இதனால் பல்குவீர்கள், ஏஷ: வ: இஷ்டகாமதுக் அஸ்து-இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களையெல்லாம் தருவதாக ஆகட்டும்.
பொருள் : முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
உலகில் பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்வதும் துன்பம் என்று சிலர் கருதுகின்றனர். இன்னும் சிலர் அதை இன்பமாக எண்ணி இறுதியில் ஏமாற்றமடைந்து துன்பப் படுகின்றனர். போட்டி போடுதலை வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டவர்கள் ஏமாற்ற மடைந்தே ஆகவேண்டும். அதற்கு விலக்கு என்பது இல்லவே இல்லை. ஒரே ஒரு வழியில்தான் அதற்கு விலக்கு உண்டு. வாழ்க்கையில் அமைந்த செயல்கள் அனைத்தையும் யாகமாகச் செய்கிறவர்களுக்குத் துவக்கத்திலும் துன்பமில்லை; இடையிலும் துன்பமில்லை; இறுதியிலும் துன்பமில்லை. இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்னும் பெரும் பேறு அடையப்பெற்றவர்கள் சிருஷ்டியின் உட்கருத்தை அறிந்தவர்களாம். தங்களுக்கென்று தேடுபவர்க்குச் செல்வம் சேர்ந்து பிறகு தங்களைவிட்டுச் சென்று விடுகிறது. ஒன்றையும் எதிர்பாராது கொடுத்துக்கொண்டே இருப்பவர்க்குக் கொடைக்கு வேண்டிய பொருள் தானே வந்தமைகிறது. அந்த மனநிலையே அக்ஷய பாத்திரம் எனப்படுகிறது. ஆகையால் அதில் துன்பமில்லை. இதுதான் சிருஷ்டியின் மேலாம் திட்டம். அனுஷ்டித்துப் பார்ப்பவர்களுக்கெல்லாம் இவ்வுண்மை விளங்கும். ஆக, யாகத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது சிருஷ்டி. யாகம் செய்பவர்க்கு வேண்டிய பொருள்களெல்லாம் தாமாக வந்தமைகின்றன. அதாவது பொது நன்மைக்கென்றே பொருள் தேடுபவர்க்கும், பொது நன்மைக்கென்றே பொருளைப் சேகரிப்பவர்க்கும் தடையின்றிப் பொருள் வந்துகொண்டேயிருக்கும். அவர்களுடைய மனதும் விரிவடைகிறது. மனது விரிவடைவது ஒப்பற்ற பேறு ஆகும்.
காமதேனு என்பது ஒருவகை தெய்வீகப் பசு என்று புராணம் கூறுகிறது. அதை வைத்திருப்பவர்களுக்கு எப்பொழுதும் நிறை செல்வமும் சிறப்பும் உண்டு. அக்காமதேனு யக்ஞத்துக்குப் புறம்பானதல்ல. யக்ஞமே காமதேனு என்று உருவகப்படுத்தி இயம்பப்படுகிறது. வாழ்க்கையை யக்ஞமாக நடாத்துபவனுக்கு ஆக்கமே அதிகரிக்கிறது. யக்ஞம் சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும், முக்தி ஈறாக அனைத்தையும் ஈனும். இதை அறிபவரே சிருஷ்டியின் உட்கருத்தை உள்ளவாறு அறிபவர் ஆகின்றனர்.
இதை அறிந்தவர் இதை அனுஷ்டானத்தில் கொண்டுவருவது எப்படி? அதற்கு விடை வருகிறது:
11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத
அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர், தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர், பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால், பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை, அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.
பொருள் : இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
ஆத்மப் பிரகாசம் பொருந்தியவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பின்பு சரீரத்திலுள்ள இந்திரியங்களுக்குத் தேவர்கள் என்று பெயர் உண்டு. சில நாட்களாக உடலுக்கு உணவு கொடாது விட்டுவைத்தால் இந்திரியங்கள் தொழில் புரியா. கண் பூத்துப்போம், காது அடைக்கும். மறுபடியும் உணவு கொடுத்தால் இந்திரியங்கள் தத்தம் வேலைகளைப் புரியும். இந்திரியங்கள் ஒழுங்காக வேலை செய்தால் வாழ்க்கையானது செவ்வனே நடைபெறும். இப்படி உடல் வாழ்பவர் இந்திரியங்களைப் பேண, இந்திரியங்கள் அவர்களைப் பேண, பரஸ்பர உதவியால் வாழ்க்கை இனிது நடைபெறுகிறது.
மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள மேலோர்க்கு தேவர் என்று பெயர். மேதக்க செயல்களிலேயே அன்னவர் ஈடுபடுவார்கள். அவர்களது நல்வினையில் ஒத்துழைப்பது யாகமாகிறது. கைம்மாறு கருதாது சான்றோர்க்குத் துணைபுரிகின்றவளவு சான்றோர் அவர்களுக்குச் சகாயம் செய்வார்கள். சமூகத் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தேவையாயிருப்பவைகளை யெல்லாம் சமூகத்தார் எடுத்து வழங்குவதைக் கண் கூடாகக் காணலாம். ஒரு மனிதன் உலகத்தவர்க்கென்றே உயிர் வாழ்ந்திருக்கும்போது உலகம் முழுவதும் அவனது நன்மையில் கருத்துடையதாகிறது. தெய்வத்தை மனிதன் யாண்டும் முழுமனதோடு ஆராதித்தால் அத்தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம்மனிதனை வந்தடைகின்றன. பிறர்க்கு மனிதன் எதை எடுத்து வழங்குகின்றானோ அதையே இயற்கையானது எடுத்துப் பன்மடங்கு அதிகமாக அவனுக்கு வழங்குகிறது. இப்படிப் பரஸ்பரம் பேணுதல் என்ற யாகத்தால் எல்லார்க்கும் நன்மையே வந்தமைகிறது.
பிறரைப் பேணாதார் யார்? அதற்கு விடை வருகிறது :
12. இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:
யஜ்ஞபாவிதா: தேவா:-வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர், வ: இஷ்டாந் போகாந்-உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம், ஹி தாஸ்யந்தே-தருவர், தை தத்தாந்-அவர்கள் தந்தவற்றுக்கு, ஏப்ய: அப்ரதாய ய: புங்க்தே-அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன், ஸ: ஸ்தேந ஏவ-கள்வனே ஆவான்.
பொருள் : வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”
உலகில் பிறந்தது முதல் ஒருவன் அனுபவிக்கும் நன்மைகளெல்லாம் பிறர் செய்த யாகத்தின் பயனாகும். குழந்தை பரிபாலிக்கப்படுகிறது. அது பெற்றோர் செய்த யாகத்தின் பயன். இளைஞன் கல்வி பெறுகிறான். கலாசாலை நிறுவியவர்களின் யாக பலன் அது. உண்ண உணவும், குடியிருக்க வீடும், விதவிதமான இன்ப நுகர்ச்சிகளையும், பிரயாண வசதிகளையும், இதர சுகங்களையும் மனிதன் பெறுகிறான். இவை யாவும் மற்றவர் செய்த யக்ஞத்தின் பயனேயாம். இனி, தன்னுடைய வாழ்க்கை உலகுக்கு எப்படிப் பயன்படுகிறது என்று மனிதன் எண்ணிப் பார்க்கவேண்டும். ஒருவனால் உலகம் எவ்வளவு நன்மையடைந்திருக்கிறதோ அவ்வளவு அரும்பெரும் செயல்கள் அவனிடத்திருந்து உருவெடுத்தவைகளாகின்றன. ஆற்றுகின்ற வினையைப் பிறர்க்குப் பயன்படும்படி விரிக்குமளவு அது வேள்வியாக வடிவெடுக்கிறது. கணக்குப் பார்க்குமிடத்து மனிதன் உலகிலிருந்து நன்மைகளைப் பெறுவதைவிட அதிகம் உலகுக்கு எடுத்து வழங்க வேண்டும். பெறுவது பெரியது, வழங்குவது சிறியதாயிருக்குமிடத்து அவன் கடன்பட்டவனாகிறான். உலகுக்கு ஒன்றையும் கொடாது உலகத்திலிருந்து எல்லாம் தனக்காகவென்று ஏற்றுக் கொள்ளுதலிலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பவன் திருடனாகிறான். இத்தகைய இழி நிலை அறிவுடையோர்க்கு ஒவ்வாது. அப்படியாயின் வாழ்க்கைக்குத் தக்கது எது? தகாதது எது? விடை வருகிறது :
13. யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்
யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர், ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள், யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள், தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.
பொருள் : வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.
கர்மம் தன்னளவில் புண்ணியமுமல்ல, பாபமுமல்ல. எண்ணத்திற்கு ஏற்றாற்போன்று அது புண்ணியம் அல்லது பாபம் ஆகிறது. தீயாரைத் தகர்த்து நல்லாரைப் பேணுதற்கென்று புரியும் வெம்போர் புண்ணியச் செயலாகும். தனது தனி நலத்தை நாடிச்செய்யும் தேவாராதனை பாபச் செயலாகும். எத்தொழிலைச் செய்தாலும் அதன்மூலம் உலக நன்மையும் இறைவனது பெருமையும் முன்னணியில் நிற்கவேண்டும். தான் தனது என்னும் செருக்குப் பின்னணிக்குப் போகுமளவு அது புண்ணியச் செயலாம். நித்திய கர்மத்தில் தக்கதொரு சான்று எடுத்துக்கொள்ளுமிடத்து, சமைத்த உணவை மற்றவர்களுக்கு முதலில் வழங்கியபின் மிஞ்சியதை உண்பவன் மேலோன். மற்றவர்களைப்பற்றிய எண்ணமில்லாது தனக்கென்றே உணவைச் சமைப்பவன் அல்லது தேடிக்கொள்பவன் கர்மபந்தத்தைப் பெருக்குகிறான். அந்த அளவில் அவன் பாபத்தைப் புசிப்பவன் ஆகிறான்.
யக்ஞம் செய்யாத வாழ்நாளோ வீண்நாள் ஆகிறது. இல்வாழ்வான் ஒருவன் வீண்நாள் வழியடைப்பதற்கு ஐம்பெரும் வேள்விகளை நாள்தோறும் செய்தாக வேண்டும். அவையாவன :
1. தேவயக்ஞம் : கடவுள் வழிபாடு இல்லாது ஒரு நாளும் கழியலாகாது. இஷ்ட தேவதையை முறைப்படி நாள்தோறும் வாழ்த்தி வணங்கவேண்டும். 2. ரிஷியக்ஞம்: உலக நன்மையின் பொருட்டுச் சான்றோர் சிறந்த சாஸ்திரங்களை இயற்றி வைத்திருக்கின்றனர். அவர்களில் பலர் தங்கள் பெயரையும் வெளிக்குக்காட்டாது வைத்துச் சென்றனர். அவர்கள் அமைத்த தெய்வ நெறி நூல்களை முறையாக ஆராய்வதும் அவைகளை மற்றவர்களுக்கு எடுத்து ஓதுவதும் ஆகிய செயல்கள் அன்னவர்களைப் போற்றுதலுக்கு ஒப்பாகும். நூல்களை ஓதுதலிலும் ஆராய்தலிலும் ஒவ்வொரு நாளும் கழியவேண்டும். இதற்குப் பிரம்மயக்ஞம் என்றும் பெயர் உண்டு. 3. பித்ருயக்ஞம்: மனிதன் வாழ்ந்து வரும் உடல் வாழ்க்கையில் தன் முன்னோர்களுக்குக் கட்டுப்பாடு உடையவன் ஆகிறான். அவர்கள் எவ்வுலகில் எந்நிலைமையில் இருப்பினும் இன்புற்றிருப்பார்களாக, என்று அவர்களைக் குறித்து நித்தமும் நல்லெண்ணம் எண்ணுதல் வேண்டும். உயிரோடிருக்கும் பெற்றோர்களுக்கு நாள்தோறும் பணிவிடை செய்வதும் பித்ருயக்ஞத்தின் பிரிவினையாகும். 4. நரயக்ஞம்: மக்களது பசியைப் போக்குதல், பிணியை நீக்குதல், வாழ்க்கையைப் பண்படுத்துதல், கல்வியைப் பெருக்குதல் ஆகிய இவை யாவும் நரயக்ஞத்தில் அடங்குகின்றன. காலத்துக்கு ஏற்றாற் போன்று நரயக்ஞத்தை மாற்றியமைத்தல் வேண்டும். 5. பூதயக்ஞம்: ஆடு மாடு முதலிய ஜீவஜந்துக்கள் மக்களது வாழ்க்கைக்குப் பல விதங்களில் பயன்பட்டு வருகின்றன. அவ்வுயிர்வகைகளை மக்கள் நன்கு பேணிவருதல் பூதயக்ஞமாகும்.
இங்ஙனம் பஞ்ச மகாயக்ஞத்தில் மனிதன் உறுதியாக ஈடுபடவேண்டும். வேள்வியாக அமைத்து வினைகளை வெவ்வேறு விதமாக விரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கைக்கு உற்ற துணை. அதனால் இயற்கையின் நடைமுறை என்னும் சக்கரத்தின் பிரவிருத்தியும் நன்கு நடைபெறுகிறது. அது எப்படி எனின் :
14. அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:
பூதாநி அந்நாத் பவந்தி-உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன, பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:-மழையால் உணவு தோன்றுகிறது, பர்ஜந்ய: யஜ்ஞாத் பவதி-மழை வேள்வியால் ஆகிறது, யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:-வேள்வி செய்கையினின்று பிறப்பது.
பொருள் : அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.
முறைப்படி கர்மம் செய்தால் அது யக்ஞமாகிறது. அந்த யக்ஞத்தில் கர்மபலன் சூக்ஷ்ம வடிவெடுக்கிறது. வைதிக பரி பாஷையில் அது அபூர்வம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டொரு உதாரணங்களால் இதை அறியலாம். கடலில் உள்ள நீர் ஆவியாக மாறுகிறது. அந்த ஆவி கண்ணுக்குத் தென்படுவதில்லை. அது அபூர்வமாகிறது. பிறகு மழையாக மாறி வீழ்கிறது. குப்பை செத்தைகளை வைத்துக் கொளுத்தினால் அவை எரிந்து கரியமிலவாயு ஆகின்றது. கரியமிலவாயு கண்ணுக்குத் தென்படாததாகிறது. அந்நிலையில் அது அபூர்வம். செடிகள் அவ்வாயுவை இலைகள் வாயிலாக உண்டு வளர்கின்றன. அதே போன்று யாகம் மந்திரசக்தி அல்லது மனோ தத்துவத்தோடு கூடியிருக்கும் போது அது அபூர்வமாகிறது. உச்சரிக்கிற வார்த்தையே சக்தி படைத்த மந்திரமாகாது. அந்த வார்த்தைக்கு அடிப்படையாயிருக்கும் உணர்ச்சி மந்திர சக்தியாகிறது. அறச்செயல் புரிந்து வருபவர் நல்லார் ஆகின்றனர். அவர்களே நல்ல மனமுடையவர். மழை வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் மழை பெய்யும். யக்ஞத்தினின்று மழை வருகிறது என்னும் கோட்பாடு இதுவே. அறத்துப்பாலுக்கு முகப்பில் வான் சிறப்பை வள்ளுவர் வைத்ததின் உட்கருத்து இதுவே. முறையாக மழை பெய்யுமிடத்து அதினின்று உணவு உண்டாகிறது. உணவிலிருந்து உயிர்கள் தோன்றுவதும் நிலைபெற்றிருப்பதும் வெளிப்படை.
15. கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்
கர்ம ப்ரஹ்மோத்பவம்-செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர், ப்ரஹ்ம: அக்ஷரஸமுத்பவம் வித்தி-பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது, தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம-ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம், நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்-எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
பொருள் : செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
வேதம் அல்லது பிரம்மா என்பது முக்குணமயமாய், கால தேச வர்த்தமான மயமாய் உள்ள இயற்கையேயாம். தோன்றியுள்ள அனைத்தும் இயற்கையின் கூறுபாடுகளாதலால் அதை எங்கும் நிறைபொருள் எனலாம். அது வித்யாசாகரம் அல்லது அறிவுக்கடல். அனைத்தையும் அது விளக்குவதாதலாலும் அதை எங்கும் நிறைபொருள் எனலாம். சர்வக்ஞனாகிய பரமாத்மாவினிடத்திருந்து இந்த வேதம் அல்லது இயற்கை உதித்துள்ளது. பிரபஞ்ச முழுவதும் கர்மசொரூபமாக இருப்பதால் கர்மம் இந்த இயற்கையினிடத்திருந்து வந்ததாகிறது. இனி, இக்கருமத்தைச் சிறந்த முறையில் கையாளுமிடத்து இது யக்ஞம் என்ற பெயர் பெறுகிறது. உண்ணுதல் என்கிற கர்மத்தை முறையாகச் செய்தால் அது யக்ஞமாகிறது. வாழ்க்கை என்ற கர்மத்தைப் பண்புடன் செய்தால் அது யாகமாகிறது. நாட்டிலுள்ள மக்களெல்லாம் சட்டத்திற்கு நன்கு கீழ்ப்படிந்தால் ஆட்சிமுறை சிறப்படைகிறது. அங்ஙனம் உயிர்கள் அனைத்தும் யக்ஞம் செய்தால் தொகைவினை மயமாயுள்ள இயற்கையே சிறப்புற்று விளங்குகிறது. உயிர்கள் யக்ஞத்தைப் பலன் கருதிச் செய்தால் ஆக்கத்தை அடைகின்றன. பலன் கருதாது நிஷ்காமியமாகச் செய்தால் ஆக்கத்தையும் அடைகின்றன; பெரும்பேறு ஆகிய முக்தியையும் அடைகின்றன. பலன் கருதியோ, பலன் கருதாதோ யாகம் செய்கின்றவளவு இயற்கை தெய்வ சொரூபமாகத் திகழ்கிறது. ஆகையால்தான் வேதம் யாண்டும் யக்ஞத்தில் நிலை பெற்றுள்ளது எனப்படுகிறது. பூலோகத்தைச் சுவர்க்கமாக மாற்றியமைப்பது மனிதனுக்குச் சாத்தியமாகிறது. நல்வினையை நல்லெண்ணத்துடன் ஆற்றுவதே அதற்கு உற்ற உபாயம். இது இயற்கையின் பெருந்திட்டம். ஆயினும் இதில் ஈடுபடாவிட்டால் மனிதனுக்கு ஏதாவது குறை வந்துவிடுமோ? விடை வருகிறது :
16. ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி
பார்த ய: இஹ-பார்த்தா எவன் இவ்வுலகில், ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்-இங்ஙனம் சுழலும் வட்டத்தை, ந அநுவர்தயதி-பின்பற்றி ஒழுகாதவனாக, இந்த்ரியாராம:-புலன்களிலே களிக்கிறானோ, ஸ: அகாயு:-அவன் பாப வாழ்க்கையுடையான், மோகம் ஜீவதி-(அவன்) வாழ்க்கை விழலேயாம்.
பொருள் : இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்; புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.
பண்டங்களைப் பண்படுத்துதற்குத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அங்ஙனம் உயிர்களை ஓம்பி அவைகளை உயர்த்துதற்கு இயற்கைச் சக்கரம் இறைவனால் இயக்கப்பெற்றுள்ளது. பாடம் படிக்காவிட்டால் மாணாக்கன் பள்ளிக்கூடத்துக்குப் போயும் போகாதவனாகிறான். ஓர் ஊருக்குப் போனவன், போன காரியத்தைக் கவனிக்கா விட்டால் அங்குப் போயும் போகாதவனாகிறான். இவ்வுலகுக்குள் மக்கள் வந்துள்ளது இந்திரிய போகத்தில் உழல்தலுக்காகவன்று. ஜகத் பிரவிருத்தி சக்கரத்தில் கலந்துகொண்டு, யாகங்கள் செய்து, இயற்கை நடைமுறையை இனியதாக்கி, தம் வாழ்க்கையைப் பண்படுத்துதற்கென்றே மக்கள் இங்கு வந்துள்ளனர். அப்பெரு நோக்கத்தைப் புறக்கணித்து விட்டுச் சிற்றின்ப வாழ்க்கையில் புகுபவர் பிறந்தும் பிறவாதவர் ஆகின்றனர்.
முறையாகக் கர்மம் செய்தே ஆகவேண்டும் என்னும் விதிக்கு விலக்கானவர் யாருமில்லையா? விடை வருகிறது :
17. யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஸ்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே
து ய: மாநவ:-ஆனால் எந்த மனிதன், ஆத்மரதி ஏவ ச-தன்னிலேதான் இன்புறுவான், ஆத்மத்ருப்த ச-தன்னிலேதான் திருப்தியடைவான், ஆத்மநி ஏவ ஸந்துஷ்ட: ஸ்யாத்-தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான் எனில், தஸ்ய கார்யம் ந வித்யதே-அவனுக்குத் தொழிலில்லை.
பொருள் : தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.
பிரகிருதி கர்ம சொரூபம். ஆத்மாவிடத்துக் கர்மம் இல்லை. மனதோ பிரகிருதியின் கூறுபாடாகும். ஆகையால் அதனிடத்து ஓயாது கர்மம் நடந்துகொண்டிருக்கிறது. ஆயினும் அக்கர்மத்தில் ஒரு விசேஷம் உண்டு. மனது உலகப் பொருள்களை இந்திரியங்கள் வாயிலாகப் பற்றுங்கால் அதன் கர்மம் அதிகரிக்கிறது. அது ஆத்மாவைப் பற்றுங்கால் அதன் கர்மம் ஓய்கிறது. அதன் கர்மங்களில் கடைசியானது ஆத்மாவைப் பற்றுதல் என்ற கர்மம். ஆத்மாவானது ஆனந்த சொரூபம். ஆதலால் மனது ஆத்மாவைப் பற்றும்பொழுது அதற்கு நிலைத்த இன்பமும் திருப்தியும் மகிழ்வும் உண்டாகின்றன. நதியானது கடலை அடையும் பரியந்தம் ஓடுதல் என்ற கர்மம் அதற்கு இருக்கிறது. கடலை அடைந்தான பிறகு அதற்குக் கர்மம் ஒன்றுமில்லை. ஆத்மாவைச் சார்ந்து ஆத்மாவில் லயமாவது ஒப்பற்ற கர்மமாகிறது. எல்லா ஜீவர்களும் அறிந்தோ அறியாமலோ குறிக்கோளாகக் கொண்டிருப்பது இதுவே. ஆக, ஆத்மாவில் ஒடுங்கியிருக்கும் மனதுக்குக் கர்மமில்லை.
உலகத்தவரிடமிருந்தாவது அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லையா? விடை வருகிறது:
18. நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:
தஸ்ய இஹ க்ருதேந-அவனுக்குச் செய்கையில், கஸ்சந அர்த ந-யாதொரு பயனுமில்லை. அக்ருதேந: ஏவ ந-செயலின்றி இருப்பதிலும் (அவனுக்கு பயன்) இல்லை, ச ஸர்வபூதேஷு-எந்த உயிரிலும், அஸ்ய அர்த வ்யபாஸ்ரய:-அவனுக்கு எவ்வித பயனும், கஸ்சித் ந-சிறிது கூட இல்லை.
பொருள் : அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.
ஆத்மாவை அடைந்தவன் பூர்ணானந்தத்தைப் பெற்றவன் ஆகிறான். அதற்குமேல் அவன் பெறவேண்டியது ஒன்றுமில்லை. பெற்ற அப்பரமானந்தத்தை இழப்பதும் கிடையாது. ஆகையால் புல் முதல் பிரம்மா பரியந்தம் எந்த உயிரிடத்திருந்தும் எவ்விதமான தயவையும் அந்த ஆத்மஞானி எதிர்பார்ப்பதில்லை.
இந்நிலையை அடைந்து விட்டதாகப் பாசாங்கு செய்வதில் பயனில்லை. இப்பெருநிலையின் பொருட்டுக் கர்மத்தின் வாயிலாகத் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும். எப்படிக் கர்மம் செய்யவேண்டும்? விடை வருகிறது :
19. தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:
தஸ்மாத் ஸததம் அஸக்த:-ஆதலால், எப்போதும் பற்று நீக்கி, கார்யம் கர்ம-செய்யத்தக்க தொழிலை, ஸமாசர-செய்து கொண்டிரு, ஹி அஸக்த:-ஏனெனில் பற்றில்லாமல், கர்ம ஆசரந் பூருஷ:-தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன், பரம் ஆப்நோதி-பரம்பொருளை எய்துகிறான்.
பொருள் : ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.
ஓயாது ஹிருதயம் அடித்துக்கொண்டிருப்பதால் உடல் வாழ்க்கை நன்கு நடைபெறுகிறது. ஆனால் ஹிருதயம் அடிப்பதில் மனிதன் கருத்துச் செலுத்துவதில்லை. அதுபோன்று பல கருமங்களைப் பற்றற்றுச் செய்யவேண்டும். பற்று நீங்குமளவு வேலைகளுக்கிடையில் விச்ராந்தி தானே உண்டாகிறது. ஆத்ம சொரூபத்தை அறிதலும் அத்தகைய மனதுக்கு எளிதாகிறது. வேலை செய்யாது விச்ராந்தி பெறமுடியாது. விச்ராந்தி என்பது மனவமைதி.
அப்படி ஏராளமாக வியவகாரங்களைச் செய்து கொண்டிருப்பதற்கு இடையில் விச்ராந்தியடைந்தவர்கள் உண்டா? உண்டு. அவர்கள் யார் எனின் :
20. கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜநகாதய:
லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பஸ்யந்கர்துமர்ஹஸி
ஜநகாதய: ஹி-ஜனகன் முதலியோரும், கர்மணா ஏவ-செய்கையாலேயே, ஸம்ஸித்திம் ஆஸ்திதா-சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள், லோகஸங்க்ரஹம் ஸம்பஸ்யந்-உலக நன்மையைக் கருதியும், அபி கர்தும் ஏவ அர்ஹஸி-நீ தொழில் புரிதல் தகும்.
பொருள் : ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.
ஜனகர், அசுவபதி முதலிய ராஜரிஷிகள் ராஜ்யபரிபாலனம் என்ற நானாவிதமான கர்மங்களில் பிரவேசித்திருந்தனர். நன்கு அரசாளுதலோடு அவர்களுடைய பிரவேசித்திருந்தனர். நன்கு அரசாளுதலோடு அவர்களுடைய வாழ்க்கை நின்றுவிடவில்லை. கர்ம மார்க்கத்தைப் கைப்பற்றியே அவர்கள் முக்தியடைந்தார்கள்.
ஞானியர்கள் கர்மத்தில் ஈடுபடுதலில் இன்னொரு சிறப்பு உண்டு. குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது. கண்ணுடையவன் தான் கண்ணில்லாதவனைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போகமுடியும். ஞானக் கண்ணுடையவர்கள் கர்மத்தைத் தவறுதலின்றிச் செய்யவல்லவர் ஆவர். கர்மம் செய்தே முன்னேற்றம் அடைந்தாகவேண்டிய உலக மக்களை நல்வழியில் நடாத்துதல் அவர்களுக்கு இயலும். ஆக, அப் பொறுப்பை எண்ணிப்பார்க்குமிடத்து, கர்மம் செய்வது அவசியமாகிறது.
உலகத்தைப்பற்றிய பொறுப்பு அனாவசியமாக வருவித்துக் கொள்ளப்பட்டதல்லவா? அப்படியன்று. ஏனெனில் :
21. யத்யதாசரதி ஸ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந:
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே
ஸ்ரேஷ்ட யத் யத் ஆசரதி-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ, இதர ஜந: தத் தத் ஏவ-மற்ற மனிதர் அதை அதையே (பின்பற்றுகிறார்கள்), ஸ யத் ப்ரமாணம் குருதே-அவன் எதை பிரமாணம் ஆக்குகிறானோ, லோக தத் அநுவர்ததே-உலகத்தார் அதையே தொடருகிறார்கள்.
பொருள் : எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.
மனிதன் ஈசுவரானுக்கிரகத்தால் மேலோன் ஆகிறான். அப்படி மேன்மையுற்றவர்களிடத்து ஈசுவர விபூதியும் விசேஷமாக மிளிர்கிறது. உலகுக்கு மாதிரி மனிதனாக அல்லது வழிகாட்டும் ஆசாரியனாக அமைந்திருப்பவனும் அவனே. அவன் செய்வதையே முன் மாதிரியாக உலகம் ஏற்றுக்கொள்கிறது. ஆதலால் அவனுடைய பொறுப்பு மிகப் பெரியது. உடலை விட்டு உறுப்பு ஒன்றை எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படியே சமூகத்தை விட்டு மனிதன் பிரிந்திருப்பவன் அல்லன். அவனுடைய எண்ணமும் செயலும் நேர்முகமாக அல்லது மறைமுகமாக சமூகத்தைப் பாதிக்க வல்லவைகளாம். ஆதலால்தான் அவனுடைய செயல்களெல்லாம் நல்வழியில் செல்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தாக வேண்டும். ஈசுவரன் கொடுத்துள்ள பொறுப்பைப் புறக்கணிப்பது ஈசுவரனையே புறக்கணிப்பதற்கு ஒப்பாகும்.
பிறகு ஈசுவரனே எத்தகைய பொறுப்புடையவர் என்று வினவுமிடத்து அவர் விடையளிக்கிறார் :
22. ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி
பார்த-பார்த்தா, மே-எனக்கு, த்ரிஷு லோகேஷு-மூன்றுலகத்திலும், கர்தவ்யம் கிஞ்சந ந அஸ்தி-யாதொரு கடமையுமில்லை, அவாப்தவ்யம் அவாப்தம் ச ந-பெற்றிராத பேறுமில்லை, கர்மணி ஏவ வர்தே-தொழிலிலேதான் இயங்குகிறேன்.
பொருள் : பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.
ஈசுவரன் செயலை எண்ணிப்பார்க்குமிடத்து அண்டம் முழுதும் நீக்கமற அவன் நிறைந்திருந்து அனைத்தையும் இயக்குகிறான். ஓர் அவதார மூர்த்தியாக அவனைப் பார்க்குமிடத்து மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வருகிற லாப நஷ்டம் ஒன்றுமில்லை. எனினும் மற்றவர்களையெல்லாம்விட அதிகமாகக் கருமத்தில் ஈடுபட்டவர் கிருஷ்ணபகவான் ஒருவரேயாம். ஏன் அவர் அப்படிச் செய்யவேண்டுமென்று கேட்குமிடத்து :
23. யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித:
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:
ஹி பார்த-ஏனெனில் பார்த்தா! ஜாது அஹம் அதந்த்ரித:-ஒருக்கால் நான் சோம்பலில்லாமல் யதி கர்மணி ந வர்தேயம்-எப்போதும் தொழில் கொண்டிராவிடின், ஸர்வஸ: மநுஷ்யா: மம வர்த்ம அநுவர்தந்தே-எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
பொருள் : நான் சோம்பலில்லாமல் எப்போதும் தொழில் கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
நன்மை கடைப்பிடித்தல், ஓயாது உழைத்தல் முதலிய நல்வழிகளில் பெரியாரைப் பின்பற்றுதல் உலகில் மிகக் குறைவு. சோம்பித்திரிதல், முயற்சி குன்றுதல் முதலியன மேலோரிடத்தும் இருக்கின்றனவென்று சாக்குச் சொல்லி வாழாதொழிதல் பெரும்பாலோரது போக்காகும். நரோத்தமனாகிய பகவான் வீணே செயலற்றிருப்பதில்லை. மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக அவர் ஓயாது உழைக்கிறார். பின்பு வினை வழுவுவதில் வரும் கேடு யாது? பகவான் பதில் அளிக்கிறார் :
24. உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா:
அஹம் கர்ம ந குர்யாம் சேத்-நான் தொழில் செய்யாவிட்டால், இமே லோகா: உத்ஸீதேயு-இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள், ஸங்கரஸ்ய கர்தா-குழப்பத்தை ஆக்கியோன், இமா: ப்ரஜா:-இந்த மக்களை, உபஹந்யாம் ஸ்யாம்-கொல்வோன் ஆவேன்.
பொருள் : நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.
விதைகளுக்கிடையில் தரத்தில் அதிகம் வித்தியாசம் தெரிவதில்லை. அப்படி வித்தியாசம் தெரிந்தாலும் அவைகளின் வலிவும் வனப்பும் முளைத்து வளர்தல் என்னும் வினையால்தான் நன்கு தெரியும்.
தொழில் புரியாதிருப்பது உயிர் வாழாதிருப்பதற்கு ஒப்பாகிறது. செயல் புரியாதவர்களுக்கும் செத்தவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் மிகக் குறைவு. செத்தவர்களுடைய உடல் கண்ணுக்குத் தென்படுவதில்லை. செயல் புரியாதிருப்பவர்களுடைய உடல் கண்ணுக்குத் தென்படுகிறது. செயல் ஒன்றும் அதனிடத்திருந்து உதிப்பதில்லை. உலகுக்குச் சுவையாக அது வளர்கிறது. உடலை வளர்ப்பது கீழோர் மேலோர் ஆகிய எல்லார்க்கும் பொதுவானது. வெறுமனே உடலை வளர்த்துக்கொண்டிருப்பவர்களுக்கிடையில் தக்கார் தகவிலர் என்னும் வேற்றுமையைக் காணமுடியாது. அது ஜாதிக்கலப்புக்கு ஒப்பாகும். முறையாகத் தத்தம் தொழில்புரியும்பொழுது அதன் மூலம் அவரவர் மேன்மை மிளிரும். ஒவ்வொருவனுடைய வகுப்பு அல்லது ஜாதியும் அவன் புரியும் கர்மத்தினின்று விளங்குகிறது. ஆக, வினையாற்றாவிடின் வாழ்வு குன்றுகிறது; மேன்மையும் மறைகிறது. பகவான் பிரகிருதிகளைச் செயலில் தூண்டாவிடில் இத்தகைய சீர்கேடுகள் வந்தமையும்.
வினையாற்றுதலில் விவேகிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேற்றுமை வருமாறு :
25. ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத்வித்வாம்ஸ்ததாஸக்தஸ்சிகீர்ஷுர் லோகஸங்க்ரஹம்
பாரத-பாரதா, அவித்வாம்ஸ: கர்மணி ஸக்தா:-அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய், யதா குர்வந்தி-எப்படித் தொழில் செய்கிறார்களோ, ததா வித்வாம்ஸ: அஸக்த:-அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி, லோகஸங்க்ரஹம் சிகீர்ஷு-உலக நன்மையை நாடி, குர்யாத்-தொழில் செய்ய வேண்டும்.
பொருள் : பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.
வினைப்பயனை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையானது பாமரரைக் கர்மத்தில் தூண்டுகிறது. ஞானிக்கோ ஆசையொன்றும் கிடையாது. ஆயினும் அவன் ஓயாது வினையாற்றவேண்டும். சான்றோரைப் பின்பற்றி உலகம் நல்வழிக்கு வருதல் அதனால் விளையும் சீரிய பயனாகும்.
சொல்லாலும் செயலாலும் ஞானி எதைச் செய்யலாகாது எனின் :
26. ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந்யுக்த: ஸமாசரந்
யுக்த: வித்வாந்-அறிவுடையோன், கர்மஸங்கிநாம் அஜ்ஞாநாம்-தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு, புத்திபேதம் ந ஜநயேத்-புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது
ஸர்வகர்மாணி ஸமாசரந்-எல்லா கர்மங்களையும் செவ்வனே ஆற்றி, ஜோஷயேத்-(அவர்களையும்) செய்யச் செய்ய வேண்டும்.
பொருள் : அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.
தேகம் எடுத்தவன் ஒருவன் கர்மம் செய்யாது வீணில் வாழ்வதைவிட மேலானது பற்றுடன் கர்மம் செய்வது. பெரும்பான்மையோர் பற்றுடையவராயிருத்தால்தான் கர்மம் செய்ய வல்லவராயிருக்கின்றனர். பற்றற்றுக் கர்மம் செய்தற்கு மிக மிகச் சிலருக்கே சாத்தியப்படும். பற்றற்றுக் கர்மம் செய்பவர் இகம், பரம் ஆகிய இரண்டையும் பெறுகின்றனர். எல்லாரும் இகபரமிரண்டையும் பெறுக, என்னும் நல்லெண்ணத்துடன் அனைவர்க்கும் நிஷ்காமிய கர்மம் புகட்டினால் அதனால் நன்மையை விடக் கேடே அதிகம் விளையும். நிஷ்காமிய கருமத்தின் தத்துவத்தை அறியாமையே புத்திபேதமாகும். பண்டிதரைப் போன்று பாசாங்கு செய்து கர்மத்தைக் கடைப்பிடியாது அவர்கள் இம்மையையே இழந்துவிடுவார்கள். இம்மை ஒன்றையாவது பெறுதற்கு அவர்கள் பற்றுடன் கர்மம் செய்துகொண்டிருக்கட்டும். ஞானியர்கள் தீவிரமாகக் கர்மத்தில் ஈடுபடுவதைப் பார்த்து மற்றவர்கள் இகலோக வாழ்க்கையைப் பலப்படுத்த முயலுவார்கள்.
பாமரர் பூணும் பற்றுக்குப் பிறப்பிடம் யாது எனின் :
27. ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே
ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும், கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன, அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன், கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.
பொருள் : எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.
சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் ஆகிய பிரகிருதி அல்லது இயற்கை கர்ம சொரூபமானது. பிரகிருதி வேறு, ஆத்மா வேறு என்று அறியாதவன் அக்ஞானி. தனக்குப் புறம்பான ஒன்றைத் தன் மயமாகக் கருதுதல் அகங்காரம். பிரகிருதியை ஆத்மாவென்று அகங்கரித்து கர்மம் செய்யாத ஆத்மா கர்மம் செய்வதாக எண்ணி அவன் மயங்குகிறான். எதிரில் நிற்கும் ஒரு ரயில்வண்டித் தொடரைப் பார்த்துகொண்டிருப்பவன், அவ்வண்டி ஓட ஆரம்பித்ததும் தானிருக்கும் ரயில்வண்டியே ஓடுவதாக மயங்குதலை ஒத்தது இது.
பின்பு ஞானியோவெனின்,
28. தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே
து மஹாபாஹோ-ஆனால் பெருந்தோளாய்! குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின், தத்த்வவித்-உண்மையறிந்தோன், குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன, இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.
பொருள் : குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், குணங்கள் குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.
மேகம் மேகத்தின் மீது மோதினாலும் ஆகாசம் செயலற்றிருக்கிறது. இந்திரியங்களாக வடிவெடுத்துள்ள குணங்கள் விஷயங்களாக வடிவெடுத்துள்ள குணங்களில் பிரவர்த்திக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். ஒளி வீசுவது அக்கினி தத்துவத்தின் குணம். ஒளியைக் காணும் பாங்கு கண்ணில் அமைந்திருக்கிறது. அக்கினியின் குணம் கண்ணாக வடிவெடுத்து அக்கினியின் குணமாகிய வெளியுலக ஒளியை நுகர்கிறது. பஞ்சேந்திரியங்களுக்கும் இக்கோட்பாடு பொருந்தும். ஆத்மசைதன்யத்தை இவை வந்து தொடுவதில்லை. இவ்வுண்மையை அனுபவத்தில் கண்டுகொண்டவனுக்குப் பற்று உண்டாவதில்லை. இனி,
29. ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்
ப்ரக்ருதே: குணஸம்மூடா:-இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள், குணகர்மஸு ஸஜ்ஜந்தே-குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள், தாந் அக்ருத்ஸ்நவித:-அந்த முற்றும் அறிந்திராத, மந்தாந் ந விசாலயேத்-சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை உழல்விக்கக் கூடாது.
பொருள் : இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.
பிஞ்சு ஒன்றில் மேல் தோலுக்கும் சுளைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. முதிர்ந்து பழுத்த பின்பே அது விளங்குகிறது. அங்ஙனம் அறிவு தெளிவடையாதவர்களுக்குப் பிரகிருதியின் இயல்பு கர்மம் என்பதும், ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை யென்பதும் தெரியாது. ஆதலால் அவர்கள் கர்மபந்தத்தில் இருந்தே ஆகவேண்டும். ஆத்ம அநாத்ம விசாரம் வெறும் குழப்பத்தைத் தான் அவர்கள் உள்ளத்தில் உண்டுபண்ணும். அவர்கள் பற்றுடன் கர்மம் செய்துகொண்டிருப்பதில் தோஷமில்லை. தம் இயல்புக்கு ஏற்றபடி கர்மம் செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்துதற்கிடையில், அறிவுடையோர் செய்யவேண்டியது யாது எனில்:
30. மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்மசேதஸா
நிராஸீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:
அத்யாத்மசேதஸா:-என்னிடம் ஒன்றிய மனதுடயவனாக, ஸர்வாணி கர்மாணி-எல்லாச் செய்கைகளையும், மயி ஸந்ந்யஸ்ய-என்னில் அர்ப்பணம் செய்து விட்டு, விகதஜ்வர:-மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய், நிராஸீ நிர்மம: பூத்வா-ஆசை நீங்கி, எனது என்பது அற்று, யுத்யஸ்வ-போர் செய்.
பொருள் : எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.
எல்லாம் ஈசன் செயல், எல்லாம் அவன் உடைமை. நான் அவனது தொண்டன் என்கின்ற எண்ணம் வரும்பொழுது மனக் கொதிப்புப் போய்விடுகிறது. பின்பு கடமையும் நன்கு ஆற்றப்படுகிறது.
அனைத்துக்கும் தலைவன் ஈசுவரன் என்பதை அறியாவிட்டாலும்;
31. யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா:
ஸ்ரத்தாவந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி:
யே மாநவா: அநஸூயந்த:-எந்த மனிதர் பொறாமையின்றி, ஸ்ரத்தாவந்த:-சிரத்தையுடையோராய், மே இதம் மதம்-என்னுடைய இந்த கொள்கையை, நித்யம் அநுதிஷ்டந்தி-எப்பொழுதும் பின்பற்றுகிறார்களோ, தே அபி கர்மபி: முச்யந்தே-அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
பொருள் : என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.
ஓர் ஊருக்குச் செல்லுதற்கு வழி இன்னதென்று ஒரு மனிதன் யூகத்தாலும் தெரிந்துகொள்ள இயலாதவனாயிருக்கிறான். ஆனால் அவன் அவ்வூருக்குச் செல்பவர்கள் சொல்லில் விசுவாசம் வைத்து அவர்களைப் பின்பற்றுகிறான். அப்படிச் செய்வதால் அவன் அவ்வூரை நிச்சயமாகப் போய்ச் சேருவான். ஆத்ம சாதன சம்பந்தமான விஷயங்கள் ஒரு மந்த அதிகாரிக்கு நன்கு விளங்காவிட்டாலும் சான்றோர் சொல்லும் நெறியில் சிரத்தை வைத்துத் தானும் அவ்வழியில் செல்லுவானாகில் வினைத்தளைகளினின்று அவன் விடுபடுவான்.
சிரத்தை என்பது சிறந்ததோர் மனநிலை. எடுத்துக்கொண்ட கருமத்திலேயே கண்ணாயிருத்தல், பணிந்திருத்தல், எல்லார்க்கும் வணக்கம் காட்டுதல், விசுவாசம் பூணுதல் இவையாவும் சிரத்தையில் அடங்குகின்றன. குருவை வணங்குதல் அவரிடத்துச் சிரத்தை காட்டுவதாகும். பகவத்கீதையினிடத்துச் சிரத்தை கொள்ளுதல் என்பது அதில் அறிவுக்கு எட்டுகிற பகுதிகளைப் பாராட்டுதலும், எட்டாத பகுதிகள் கூடத் தனக்கு நன்மை பயப்பனவென்று விசுவாசம் வைத்தலுமாம். சிரத்தையோடு வறியோர்க்குத் தானம் கொடுத்தல் வேண்டும். கொடுக்கிற பொருளை அம்மனிதர் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும், அப்பொருள் அவர்களுக்குப் பயன்படவேண்டுமென்றும் அடக்க ஒடுக்கத்தோடு உணர்வது சிரத்தையாகும்.
தன்னால் அடைய முடியாத நல்லது ஒன்றை மற்றவர்கள் அடைந்தால் அதைக் கண்டு சகியாத மன நிலைக்குப் பொறாமையென்று பெயர். ஒரு மனிதனுடைய மேன்மைகளையெல்லாம் பொறாமையானது தேய்த்துவிடுகிறது. மற்றவர்களது முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்கின்றவளவு ஒரு மனிதன் தானே முன்னேற்றமடைகிறான்.
சிரத்தையோடு நன்னெறியைப் பின்பற்றுதலுக்குப் பதிலாக :
32. யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வஜ்ஞாநவிமூடாம்ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ:
து யே அப்யஸூயந்த:-யாவர் பொறாமையால், மே எதத் மதம் ந அநுதிஷ்டந்தி-என்னுடைய இக்கொள்கையை பின்பற்றாது விடுகிறார்களோ, தாந் அசேதஸ:-அந்த மூடர்களை, ஸர்வஜ்ஞாந விமூடாந்-முழுமையான ஞானத்தில் அறிவு மயக்கம் அடைந்தவர்கள் என்றும், நஷ்டாந் வித்தி-நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.
பொருள் : என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ, எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.
தீயில் கையை வைத்தால் அது சுடும். அதே அக்கினியை முறையாகப் பயன்படுத்தினால் அதைக்கொண்டு சமைக்கலாம். இதைத் தெரிந்துகொள்ளாதவர்கள் நஷ்டத்தையடைகிறார்கள். அங்ஙனமே ஆத்ம தத்துவங்களை அறிந்து அவைகளுக்கேற்றபடி வாழ்க்கை வாழாதவர்கள் நஷ்டத்தையும் கேட்டையும் அடைகிறார்கள்.
ஞானிகள் அக்ஞானிகள் ஆகிய எல்லோரையும் பற்றிய ஒரு பேருண்மை யாதெனின்:
33. ஸத்ருஸம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி
பூதாநி ப்ரக்ருதிம் யாந்தி-எல்லா உயிர்களும் (இயற்கைக்கு ஏற்ப) இயல்பை அடைகின்றன,
ஜ்ஞாந்வாந் அபி-ஞானமுடையவன் கூட, ஸ்வஸ்யா: ப்ரக்ருதே ஸத்ருஸம்-தன்னுடைய இயற்கைக்கு தக்கபடியே, சேஷ்டதே-நடக்கிறான், நிக்ரஹ: கிம் கரிஷ்யதி-(என்றால்) பலவந்தமாக அடக்குதல் என்ன செய்யும்?
பொருள் : ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.
செடிகள் தத்தம் இயல்புக்கேற்றாற்போன்று ஓங்கி அல்லது படர்ந்து வளர்கின்றன. அவைகள் இனிப்பதும் கைப்பதும் அவ்வகைகளின் இயல்பின்படியே. அவைகளின் இயல்பைத் தடுப்பது வளர்ச்சியையே தடுப்பதற்கு ஒப்பாகும். இயல்புக்கு ஒப்ப ஓங்கி வளரும்படி செய்தலே சாலச்சிறந்த முறையாகும். மனிதர்களுக்கிடையில் ஞானியர்களே வெவ்வேறு இயல்புடையவர்களாயிருக்கின்றனர். ஒருவர் அந்தர்முக திருஷ்டியிலேயே ஆழ்ந்து செல்லுகிறார். மற்றொருவர் பகிர்முக திருஷ்டியில் அனைத்தையும் கடவுள் மயமாக இந்திரியங்களைக் கொண்டு பொருள்படுத்துகிறார். ஒருவர் பக்தியில் பிரியமுடையவர். வேறு ஒருவர் ஞான விசாரத்தில் விச்ராந்தி பெறுகிறார். இப்படி இயல்புகளுக்கேற்ற படி நெறிகள் மாறினும், சாதகர்கள் அடையும் குறி ஒன்றே. ஆக, அவரவர் இயல்பின்படியே ஞானியர்கள் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.
பிரகிருதியில் கட்டுண்டு கிடக்கும் பாமரர் பல ஜன்மாந்தரங்களின் வாசனையினூடு வசப்பட்டவர்கள். அவர்கள் இயல்பைத் தடுப்பது வளர்ச்சியைக் கெடுப்பதற்கு ஒப்பாகும். அப்படி வளர்ச்சியை வீணாக்காது இயல்புக்கு ஏற்றபடியே வினையாற்றி முன்னேற்றமடைய அவர்களைத் தூண்டவேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வோர் இயல்பு உண்டு. அதைப் பின்பற்றுவதே அவனுடைய போக்கு என்றால் சுயப்பிரயத்தனம் அல்லது புருஷாகாரத்துக்கு இடமில்லை. இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே என்று சாஸ்திரம் ஆணையிடுதலிலும் அர்த்தமில்லை. இத்தகைய ஆட்சேபம் ஈண்டு இயல்பாக எழலாம். அதற்கு விடை வருகிறது.
34. இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந வஸமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ
இந்த்ரியஸ்ய இந்த்ரியஸ்ய அர்தே-இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில், ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ-விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன, தயோ: வஸம் ந ஆகச்சேத்-இவ்விரண்டுக்கும் வசப்படலாகாது, ஹி தௌ அஸ்ய பரிபந்திநௌ-ஏனெனில் இவ்விரண்டும் இவனுக்கு வழித்தடைகளாம்.
பொருள் : இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.
இத்தனைவித இயற்கைபேதம் உயிர்வகைகளுக்கிடையில் இருப்பதற்கு மூல காரணம் ஈண்டு இயம்பப்படுகிறது. மூன்று குணங்களின் தாரதம்மியத்தால் பிரபஞ்சம் முழுதும் உண்டாயின. அதே போன்று ஐந்து இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுதற்கிடையில் உண்டாகும் விருப்பு வெறுப்பின் தாரதம்மியத்தால் உயிர்களின் இயல்புகள் கணக்கற்ற விதங்களில் பிரிகின்றன. மல்லிகைப்பூவின் மணத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அதை வெறுப்பவர் பலர். அதன் பெருமித மணத்தால் ஒருவர்க்குத் தலைவலி. சிற்றின்ப நுகர்ச்சியை ஞாபக மூட்டுவதால் இன்னொருவருக்கு அது பிடிப்பதில்லை. சிறுமிகள் அதன் பொருட்டுக் காசை விரயம் செய்வதால் வேறு ஒருவருக்கு அதன் மீது வெறுப்பு. இனி, இதை விரும்புபவர்க்கிடையில் நறுமணத்தை முன்னிட்டும், இன்ப நுகர்ச்சியை முன்னிட்டும், அம்பிகையின் ஆராதனையை முன்னிட்டும் அதைப் போற்றுவார் பலர் உளர். இப்படியே எல்லா இந்திரியங்கள் வாயிலாகவும் எல்லாப் பொருள்களிடத்தும் வெவ்வேறு படித்தரங்களில் விருப்பு வெறுப்பு வளர்க்கப்படுகின்றன. விருப்பு வெறுப்பின் தொகுதியே ஒவ்வொரு ஜீவனது இயல்பு ஆகிறது.
இனி, சுயப் பிரயத்தனத்துக்கும் சாஸ்திரத்துக்கும் இடம் இந்த விருப்பு வெறுப்பை மாற்றியமைப்பதில்தான் இருக்கிறது. விருப்பு வெறுப்பை ஒரு மனிதன் ஒரு நெடிப்பொழுதில் மாற்றி விட முடியாது. விஷயங்களில் கொண்டுள்ள விருப்பு வெறுப்பை மீட்டெடுத்து சர்வேசுவரனிடம் வைத்தால் அவைகள் சத்துருக்கள் ஆகமாட்டா.
விருப்பு வெறுப்பு வாழ்க்கையை இன்னும் எப்படிக் குலைத்துவிடுகிறது எனின் :
35. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:
ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும், விகுண: ஸ்வதர்மோ ஸ்ரேயாந்-குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது, ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய:-ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம், பரதர்ம: பயாவஹ:-பரதர்மம் பயத்துக்கிடமானது.
பொருள் : நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.
இன்பம் தருவதில் விருப்பும், துன்பம் தருவதில் வெறுப்பும் கொள்ளுதல் மனிதனது இயல்பு. அர்ஜுனன் இளமையிலிருந்து பெற்ற பயிற்சி போர் புரிதற்கானது. அப்பயிற்சியில் அவன் பெருமகிழ்ச்சியும் பெறலானான். அதுவே அவனது ஸ்வதர்மம். இப்பொழுது அறப்போர் தொடுத்தவிடத்து அது பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல் என்ற துன்பத்தைத் தருமாதலால் ஸ்வதர்மத்தில் அவன் வெறுப்புக்கொள்ளலானான். காட்டில் போய் நிஷ்டை புரிதல், ஐயமேற்றுண்ணல் என்ற பரதர்மத்தில் பிரவேசிக்கப் பார்த்தான். வெறுப்பினால் அல்லது அச்சத்தினால் ஒருவன் தன் தொழிலை விட்டுவிடுவானானால் அதனால் ஒரு நன்மையும் வந்தமையாது. இனிய வாழ்க்கை கிட்டுமென்ற விருப்பத்தால் பரதர்மத்தில் பிரவேசிப்பதும் ஒண்ணாது. மனதைப் பக்குவப்படுத்துதலே வாழ்க்கையின் குறிக்கோள். விருப்பு வெறுப்பின் வசப்பட்டுத் தொழிலை மாற்றுவது உறுதியற்ற மனதின் போக்காகும். உயிரையே வழங்கவேண்டிவரினும் தன் கடமையினின்று பிறழாதிருத்தல் பக்குவமான வீரனது செயலாகும். பயப்படுவது சாதற்கு ஒப்பாகிறது. பயந்து தொழிலை மாற்றுபவன் ஓயாது செத்துக்கொண்டே இருக்கிறான். அத்தகையவன் அழியாப் பெருநிலையைப் பெறுதல் எங்ஙனம்.
கேடுகளுக்கெல்லாம் மூலகாரணம் யாது என்று அத்-2 சுலோ-62 லும், அத்-3 சுலோ-34 லும் பகவான் குறிப்பாகச் சொல்லியிருந்தும் வெளிப்படையாக விடை வாங்கவேண்டுமென்ற எண்ணத்துடன் அர்ஜுனன் ஈண்டு ஒரு கேள்வியைக் கேட்கிறான்.
அர்ஜுந உவாச
36. அத கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித:
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், வார்ஷ்ணேய-விருஷ்ணி குலத் தோன்றலே
அத அயம் பூருஷ:-பின் இந்த மனிதன், அநிச்சந் அபி-இச்சையில்லாத போதும், பலாத் நியோஜித: இவ-வலியக் கொண்டு புகுத்துவதுபோல், கேந ப்ரயுக்த: பாபம் சரதி-எதனால் ஏவப்பட்டு பாவம் செய்கிறான்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?
ஸ்ரீ பகவாநுவாச
37. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:
மஹாஸநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்
ஸ்ரீ பகவாநுவாச-பகவான் சொல்லுகிறான், ரஜோகுணஸமுத்பவ:-ரஜோ குணத்திற்பிறப்பது
ஏஷ: காம: க்ரோத-இஃது விருப்பமும் சினமும், மஹாஸந: மஹாபாப்மா-பேரழிவு செய்வது; பெரும்பாவம், யேநம் இஹ வைரிணம் வித்தி-இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.
பொருள் : பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.
உலகத்தவர் எல்லார்க்கும் பரம சத்துருவாயிருப்பது ஆசை, அந்த ஆசைக்குத் தடையுண்டாகும்போது அது கோபமாக வடிவெடுக்கிறது. ஆகையால் காமத்தையும் குரோதத்தையும் ஒன்றாகப் பகவான் பகருகிறார். அது ரஜோ குணத்திலிருந்து உதிக்கிறது. மேலும் ரஜோகுண வளர்ச்சியையும் உண்டுபண்ணுகிறது. நெருப்புக்கு எவ்வளவு விறகு கொடுத்தாலும் அதைப் பொசுக்கிவிட்டு மேலும் விறகை வேண்டி நிற்கிறது. அங்ஙனமே காமத்துக்கு விஷயங்களை ஊட்ட ஊட்ட அது அவைகளை உண்டு வளர்க்கிறது. விஷயம் என்னும் உணவை வேண்டியவாறு அது உண்ண வல்லது. ஆசை பெருகப் பெருக பாவமும் பெருகுகிறது. மனிதனுக்கு வரும் கேடுகளெல்லாம் ஆசையிலிருந்து வந்தவைகள். ஆகையால் அது இவ்வுலக வாழ்க்கையில் எல்லார்க்கும் பகையாம்.
ஆசை எப்போக்கில் பகை என்பது இனி விளக்கப்படுகிறது :
38. தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஸோ மலேந ச
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்
யதா தூமேந வஹ்நி- எப்படி புகையினால் தீயும், மலேந ஆதர்ஸ: ச-அழுக்கால் கண்ணாடியும், ஆவ்ரியதே-மறைக்கப் படுகிறதோ, யதா உல்பேந கர்ப ஆவ்ருத:-எப்படி தசையால் கர்ப்பம் மூடப் பட்டிருக்கிறதோ, ததா தேந இதம் ஆவ்ருதம்-அதே போல இது (ஞானம்) இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.
பொருள் : புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.
ஆசை என்னும் திரையினால் ஆத்மசொரூபம் மூடப்பட்டிருக்கிறது. மூன்று குணங்களை ஆதாரமாகக்கொண்டு ஆசையும் மூன்று படித்தரங்களில் இருக்கிறது. தீயைப் புகை மூடிக்கொண்டிருப்பது முதல் உபமானமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சத்வ குணத்தோடுகூடிய ஆசை இத்தகையது. புகைந்துகொண்டிருக்கிற தீயின்மீது சிறிது காற்று அடித்தால் அது பற்றி எரிகிறது; புகையும் மறைகிறது. தீயின் சுடர் நன்கு தென்படுகிறது. அங்ஙனம் சிறிது விவேகம் என்னும் காற்று வீசினால் சாத்வீக ஆசை என்னும் புகை பறந்தோடிவிடும். ஆத்ம சொரூபம் உள்ளபடி ஒளிரும். இரண்டாவது ஆசை ரஜோகுண மயமானது. கண்ணாடியின் மீது படிந்துள்ள அழுக்கைப் போக்குதற்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கொள்ளவேண்டும். ரஜோகுணத்தோடு கூடிய ஆசையைச் சிறிது முயற்சி செய்தே போக்கமுடியும். மூன்றாவது ஆசையோ தமோகுணமயமானது. காலக்கிரமத்தில் தான் தக்க வாழ்க்கையின் மூலம் சிசுவைக் கருப்பையிலிருந்து விடுவிக்கமுடியும். அங்ஙனம் தமோகுணத்தில் உதித்த ஆசையைப் போக்கக் காலமும் ஆயத்தமும் தேவை.
மேல் சுலோகத்தில் இயம்பப்பட்ட ஆசையானது இன்னும் தெளிவுபட இங்கு விளக்கப்படுகிறது:
39. ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச
ச கௌந்தேய-மேலும் குந்தியின் மகனே, துஷ்பூரேண அநலேந-திருப்தி அடையாத நெருப்பைப் போன்றதும், காமரூபேண-விருப்பமேனும் வடிவில் இருப்பதும், ஜ்ஞாநிந: நித்யவைரிணா-ஞானிக்கு நித்தியப் பகை, ஏதேந ஜ்ஞாநம் ஆவ்ருதம்-இந்த காமம் (ஆசை) ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
பொருள் : குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
உலகம் முழுதுக்குமே பகையாகிய ஆசையை அக்ஞானியானவன் அதன் வசப்பட்டிருக்கும்பொழுது நலம் செய்யும் நண்பனாக நினைக்கிறான். பிறகு அதனால் விளையும் கேடு வலுத்துவிடும்பொழுதே அதை ஹிதசத்துரு என்று அறிகிறான். ஆயினும் இந்த அனுபவம் நிலைத்திருப்பதில்லை. திரும்பவும் அவன் ஆசையின் வசப்படுகிறான். ஆனால் ஞானியின் நிலை அத்தகையதன்று. ஆசையின் வசப்பட்டிருக்கும்பொழுதும் வசப்படா திருக்கும்பொழுதும் அதைப் பகையென்று அவன் நன்கு உணர்கிறான். ஆகையால் ஆசை அவனுக்கு மட்டும் நித்திய சத்துருவாகிறது; என்றென்றும் அது அவனுக்கு எதிரி. ஆசையின் வடிவு ஒன்று இரண்டு அல்ல. விரும்பியவாறெல்லாம் அது வடிவெடுக்கிறது. ஒரே நாளில் ஒரு மனிதனது ஆசை எத்தனை விதமான வடிவெடுக்கிறது என்பதை அவன் கொஞ்சம் ஆராய்ந்துபார்த்தால் தெரியும். ஆதலால் அது காமரூபம் என்று அழைக்கப்படுகிறது. ஓட்டைச் சட்டியில் நீர்வார்த்து நிரப்பமுடியாது. ஆசையையும் நிரப்பி ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாது. விஷய சுகத்தைப் போதும் என்று ஆசையானது ஒருபொழுதும் பகர்வதில்லை.
ஆசைக்கு இருப்பிடம் எது? விடை வருகிறது :
40. இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்
இந்த்ரியாணி மந: புத்தி-இந்திரியங்களும், மனமும், புத்தியும், அஸ்ய அதிஷ்டாநம் உச்யதே-இதற்கு நிலைக்களன் என்பர், ஏதை: ஏஷ: ஜ்ஞாநம் ஆவ்ருத்ய-இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து, தேஹிநம் விமோஹயத்-மனிதனை மயங்குவிக்கிறது.
பொருள் : இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.
எதிரி எந்தக் கோட்டையில் எப்படி வாசம் செய்கிறான் என்பது தெரிந்தால் பின்பு அவனை எதிர்ப்பது எளிதாகிறது. ஆசை என்னும் எதிரி மனிதனது மனக்கோட்டையில் வசிக்கிறான். இந்திரியங்களையும், மனதையும், புத்தியையும் தன் கருவிகளாக அவன் கைப்பற்றிக்கொண்டான். கண்கொண்டு பார்ப்பதெல்லாம் காமத்தை வளர்ப்பதற்கேயாம். அப்படியே காது முதலிய மற்ற இந்திரியங்களும் காமத்தைப் பெருக்குதற்கே தொழில் புரிகின்றன. மனதில் உதிக்கும் உணர்ச்சிகளும். சங்கற்பங்களும் காமத்துக்கு உட்பட்டவைகளாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றன. அறிவைக்கொண்டு தீர்மானிப்பது, நூல்கள் பல கற்பது, வாதாடுவது இவையாவும் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளுதற்கென்றே நடைபெறுகின்றன. ஆத்மாவுக்கு அடிமைபூண அமைந்துள்ள கருவி கரணங்கள் ஆசைக்கு அடிமைகளாயின; அந்தோ!
இந்த ஆசையை வெல்லுதல் எங்ஙனம்? விடை வருகிறது :
41. தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸநம்
தஸ்மாத் பரதர்ஷப-ஆதலால் பாரத ரேறே, ஆதௌ இந்த்ரியாணி நியம்ய-தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ஜ்ஞாந விஜ்ஞாந நாஸநம்-ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய, ஏநம் பாப்மாநம் ஹி ப்ரஜஹி-இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.
பொருள் : ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.
முதலில் இந்திரியங்களை முற்றுகைபோட்டுக் கைப்பற்றிக் கொண்டால் எதிரியாகிய ஆசைக்கு இருப்பிடம் இல்லாது போய்விடுகிறது. அதில் எதிரியின் பலம் பெரிதும் குறைகிறது. பிறகு அதை வெல்தலும் எளிதாகிறது. நூலறிவு ஞானமென்றும், சுவானுபவம் விக்ஞானமென்றும் சொல்லடுகின்றன. இவ்விரண்டையும் தொலைக்கவல்லது ஆசை. ஆத்ம சொரூபத்தை மறைப்பதால் அது பாப சொரூபமானது. அத்தகைய ஆயையை வெல்லுதல் வீரனது செயல்.
சாதகன் எந்த இடத்தில் நின்றுகொண்டு ஆசையை முற்றுகை போடவேண்டும் என்ற கேள்வி எழுவதால் அதற்கு விடை வருகிறது.
42. இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:
இந்த்ரியாணி பராணி ஆஹு-இந்திரியங்களை உயர்வுடையன என்பர், இந்த்ரியேப்ய: பரம் மந:-அவற்றிலும் மனம் மேல், மநஸ: து பரா புத்தி-மனத்தைக் காட்டிலும் புத்தி மேல், புத்தே: பரத து ஸ:-புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).
பொருள் : இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).
சூக்ஷ்மமானது ஸ்தூலத்தைவிட யாண்டும் மேலானது. பொறிகள் ஐந்து உள. பருத்த உடலைவிடப் பொறிகள் மேலானவை. ஏனென்றால் உடலைவிடப் பரந்த போக்கில் அவைகள் செயல் புரிகின்றன. மனதோ இந்திரியங்களைவிட சூக்ஷ்மமானது. அது உணரவல்லது; சங்கல்ப விகல்ப மயமானது மனதில் தொழிலாகிய எண்ணத்துக்கு இந்திரியங்களின் தொழிலைவிட அதிக வியாபகமுண்டு. அதனினும் பெரியது புத்தி. மனது சந்தேகம் கொள்கிறது. மற்று, புத்தியோ மெய்ப் பொருளை நிச்சயிக்கிறது. ஆகையால் அது பெரியது. புத்திக்கும் எட்டாதது தேகி அல்லது ஆத்மா. ஆசையானது மனம் முதலியவைகளைப் பற்றிக்கொண் ஆத்ம சொரூபத்தை மறைக்கிறது.
பழம் ஒன்றின் மேல்தோலினின்று உட்பகுதிக்குப் போகப் போக அது சுளையின் பாங்கைப்பெறுகிறது. அங்ஙனம் தேகம், இந்திரியங்கள், மனது, புத்தி ஆகியவைகளுள் பிந்தியவைகள் படிப்படியாக உள்ளிருக்கும் ஆத்ம சொரூபத்தை அடைகின்றன. நுண்ணியத்தைப் பற்றுமளவு ஆசையும் வலிவு மிகப் பெறுகிறது. இந்திரியங்களைப் பற்றும் ஆசை உடல் ஆசையை வெல்லுகிறது. தூசி நிறைந்த காற்றும் மின்னலும் இடியும் வரும்போது உடலில் தூசி படிவதில் தடையில்லை. ஆனால் கண்ணும் காதும் காப்பாற்றப்படுகின்றன. நோய்வாய்ப்பட்ட கண்ணை நீக்காவிட்டால் அது மூளையைத் தாக்கி, பைத்தியம் பிடிக்கும் என்ற பிரச்னை ஏற்படுகிறது. அப்பொழுது நல்ல மனதின் பொருட்டுக் கண் என்ற இந்திரியம் பறிகொடுக்கப்படுகிறது. அறிவை வளர்ப்பதற்காக எத்தனை துன்பங்களையும் சகிக்கும் தன்மை மனிதனுக்கு வருகிறது. ஏனென்றால் புத்தியைப் பற்றியுள்ள ஆசையானது மனதைப் பற்றியுள்ள ஆசையை அகற்றுகிறது. இங்ஙனம் நுண்ணியதற்குப் போகப்போக ஆசையின் வலிவும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
புத்தியைப் பற்றியுள்ள ஆசையும் பந்தத்துக்கு ஏதுவானதே. ஆதலால் அதை அறுப்பது எங்ஙனம்? விடை வருகிறது:
43. ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா
ஜஹி ஸத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்
ஏவம் புத்தே: பரம்-இங்ஙனம் புத்திக்கு மேலான, புத்த்வா-பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, ஆத்மநா ஆத்மாநம் ஸம்ஸ்தப்ய-தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, துராஸதம் காமரூபம்-வெல்லற்கரிய விருப்பமாம், ஸத்ரும் ஜஹி மஹாபாஹோ-பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!
பொருள் : இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!
ஆசையானது இந்திரியங்களையும் மனதையும் புத்தியையும் பற்றி நிற்கும்பொழுது ஜீவபோதம் தடிக்கிறது. அதனால் மனிதனுக்குத் துன்பமே அதிகரிக்கிறது. மற்று, வாழ்வானது இன்பம் நிறைந்திருக்கிறது என்று மக்கள் கருதுகின்றனர். ஒவ்வோர் இன்பமும் இறுதியில் துன்பமாகப் பரிணமிப்பதை அவர்கள் நாளடைவில் அறிவார்கள். இந்திரியங்கள், மனது புத்தி ஆகிய இவை யாவும் பரமாத்மாவைச் சார்ந்திட அருள்தாகம் பெருக்கெடுக்கும்பொழுது விஷய ஆசை அடிபட்டு ஒழிகிறது. ஜீவபோதம் தேய்கிறது; பரபோதம் வளர்கிறது; பேரானந்தம் ஊற்றெடுக்கிறது. அது பின்பு துன்பமாக மாறுவதில்லை
-
நான்காம் அத்தியாயம்
ஞானகர்ம ஸந்யாஸ யோகம்
அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன். பிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறான்.
ஞானகுரு சிஷ்ய பரம்பரை 1-3 -அவதார மூர்த்தியின் மஹிமை 4-9 -ஞானயோகத்தின் சிறப்பு 10-எல்லா மார்க்கங்களும் இறைவனைப் போய்ச் சேர்கின்றன 11- சிறு தேவதைகளின் வழிபாட்டின் பயன் 12-நான்கு வர்ணமும் கர்மமும் 13-15 -கர்ம தத்துவம் 16-22 -விதவிதமான யக்ஞங்கள் 23-33 -குரு சிஷ்ய இணக்கம் 34 -ஞானத்தின் உயர்வு 35-39 -சந்தேகம் உதவாது 40-42.
ஸ்ரீ பகவாநுவாச
1. இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்ரவீத்
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், இமம் அவ்யயம் யோகம்-இந்த அழிவற்ற யோகத்தை, அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந்-நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
விவஸ்வாந் மநவே ப்ராஹ-விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான், மநு: இக்ஷ்வாகவே அப்ரவீத்-மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.
இந்த யோகத்தால் அடையப்படுவது அழிவற்ற வீடுபேறு ஆதலால் அதற்குச் சாதனமாயிருக்கும் யோகமே அழிவற்றது எனப்படுகிறது. முக்தியடைதற்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் முயற்சி சர்வகாலமும் நிலவுலகில் இருக்கும். அதற்கு ஏதுவாயுள்ள இந்த யோகத்தின் அனுஷ்டானமும் என்றென்றும் நிலைத்திருக்கும். விவஸ்வான் என்பது சூரியனுடைய பெயர். மனு என்பவர் ஸ்மிருதியை இயற்றியவர். அவர் தம் புதல்வனும் சூரியகுலத்து முதல் அரசனுமாகிய இக்ஷ்வாகுவுக்கு அதைப் புகட்டினார். அதை அனுஷ்டிப்பவர்களுக்கு இகபரமிரண்டையும் பெறுதற்கான வலிவு வந்தமைகிறது. உலகத்தைக் காக்கும் பொறுப்புடையவர்களுக்கு அத்தகைய பலம் இன்றியமையாதது.
2. ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப
பரந்தப-எதிரிகளை எரிப்பவனே ! ஏவம் பரம்பராப்ராப்தம்-இவ்விதம் வழிவழியாக வந்த
இமம் ராஜர்ஷய: விது:-இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர், ஸ: யோக மஹதா காலேந-அந்த யோகம் வெகுகாலமாக, ஹ நஷ்ட:-இவ்வுலகில் இழக்கப் பட்டது.
பொருள் : இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.
வழிமுறை வழிமுறையாக அரசர்கள் இந்த யோகத்தைக் கடைப்பிடித்து அதன்படி சிறப்படைந்துவந்தார்கள். நாளடைவில் தக்கார் குறைந்து, தகவிலர் மலிந்துவர யோகமும் பழுதுபட்டுப் போயிற்று.
நல்ல மனிதர் இல்லாத காலத்தில் நல்ல திட்டம் எதுவும் தலையெடுக்காது என்பது வெளியாயிற்று. நிழல் மனிதனைத் தொடர்ந்து வருவதுபோன்று நல்லாரைத் தொடர்ந்தே நல்ல திட்டம் வருகிறது. அதை பகவான் இங்ஙனம் நிரூபிக்கிறார்.
3. ஸ ஏவாயம் மயா தேऽத்ய யோக: ப்ரோக்த: புராதந:
பக்தோऽஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்
மே பக்த: ஸகா ச அஸி-என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய், இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக:-ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை, அத்ய மயா தே ப்ரோக்த:-இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது, ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம்-ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது.
பொருள் : அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.
இரஹஸ்யம் அல்லது மறை என்பது மற்றவர்களுக்குத் தெரியாது ஒளித்து வைப்பதாம். பலர் சுயநலம் கருதியே அதை வேறு யாருக்கும் தெரியாது மூடி வைக்கின்றனர். மனிதனை மேலோன் ஆக்குகின்ற இந்த யோகமானது அப்படி சுயநலம் கருதி மறைத்து வைக்கப்படுவதன்று. தகுதியில்லார்க்கு இது என்றைக்கும் மறைபொருள். ஏற்கனவே இயம்பியபடி காலாந்தரத்தில் இது மறைதற்குக் காரணம் இதைக் கையாளவல்ல மேன்மக்கள் இல்லாது போய்விடுவதேயாம். இன்று அதைப் பெற வல்லவனாய் நீ வந்துள்ளாய்; அந்த யோகமும் உன் பொருட்டு வெளிப்படுவதாயிற்று என்பது பகவானது கருத்து. ஒரு மனிதன் எதற்குத் தகுதியுடையவனாகத் தன்னைச் செய்து கொள்கிறானோ அதனை இயற்கை வலியக் கொண்டுவந்து அவனுக்குத் தக்க தருணத்தில் கொடுத்துதவுகிறது.
இங்கு அர்ஜுனனுக்கு இயல்பாக ஒரு சந்தேகம் வருகிறது:
அர்ஜுந உவாச
4. அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், பவத: ஜந்ம அபரம்-உன் பிறப்பு பிந்தியது
விவஸ்வத: ஜந்ம பரம்-விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது, த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி-நீ இதை ஆதியில் சொன்னவனென்று, ஏதத் கதம் விஜாநீயாம்-நான் தெரிந்துகொள்வதெப்படி?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?
இக்காலத்தில் வசுதேவருக்குப் புதல்வராகப் பிறந்தவர் நீர். விவஸ்வானோ இச்சிருஷ்டித் துவக்கத்தில் தோன்றியவர். பல் காலம் முன் இருந்தவர்க்குப் பல்காலம் பின் வந்தவர் புகட்டுதல் எப்படிச் சாத்தியமாகும் என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
5. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பரந்தப அர்ஜுந-அர்ஜுனா, மே தவ ச-எனக்கும் உனக்கும், பஹூநி ஜந்மாநி வ்யதீதாநி-பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன,
தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த-அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய், அஹம் வேத-நான் அறிவேன்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.
அர்ஜுனனோ கர்ம பந்தத்துக்கு உட்பட்ட ஜீவன். ஆகையால் பழைய பிறவிகளைப் பற்றிய ஞாபகம் இல்லை. கிருஷ்ணன் அவதார புருஷன். ஈசுவரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும். அவர் நித்திய சுத்தனாக, முக்தனாக, பூரண ஞானமுடையவராக இருக்கிறார். ஆகையால் தாம் முன்பு எடுத்த எல்லா ஜன்மங்களும் அவருக்குத் தெரியும். வேறு ஒரு வடிவந்தாங்கியிருந்து விவஸ்வானுக்கு அன்று புகட்டினார். இன்று இவ்வடிவெடுத்து அர்ஜுனனுக்குப் புகட்டுகிறார்.
ஜீவர்கள் வினையில் கட்டுண்டு பிறவி எடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது. பகவானோ நித்திய முக்தன். தர்மம் அதர்மம் ஆகிய வினையேதும் அவரிடத்து இல்லை. பின்பு அவர் பிறவி எடுப்பது எப்படி? விடை வருகிறது:
6. அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா
அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும், பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று, ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.
பொருள் : ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.
ஜீவர்கள் பிரகிருதியில் கட்டுண்டு பிறக்கிறார்கள். ஈசுவரனுக்கு அடிமைத்தொழில் புரிகிறது பிரகிருதி. பிறவாத அவன் பிறப்பவனாகவும், வளர்பவனாகவும் தன்னைக் காட்டிக்கொள்ளுதல் தனக்கு அடிமைப்பட்டுள்ள மாயா சக்தியின் வல்லமையாலேயாம். அதனால் தனக்கு இல்லாத கர்மத்தை இருப்பதுபோன்று அவன் காட்டுகிறான். அந்தக் கர்மமானது வெறும் குருட்டு வாய்ப்பாக அமைந்தது அன்று. ஜன சமூகத்தின் தொகைவினை முழுதும் அவதார புருஷனது ஜீவிதத்தில் விளங்குகிறது. அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் சிறந்த கருத்து ஒன்று அடங்கப் பெற்றிருக்கும். மானுடர் முன்னேற்றம் அடைவதற்கான மார்க்கத்தையும் அவதார புருஷன் விளையாட்டுப் போன்று வினையாற்றிக் காட்டுகிறான். ஆக, தனக்கென்ற வினையில்லை. மக்கள் உய்வதற்கான நெறி அவதார புருஷனது வாழ்வில் உண்டு. இயற்கையில் ஒவ்வொன்றும் தோன்றுதற்கேற்ற காலமுண்டு. அவதார புருஷன் ஒருவன் தோன்றுதற்கு ஏற்ற காலம் உளதா? விடை வருகிறது :
7. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்
பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது, தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய், அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ, ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.
பொருள் : பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.
சமூக முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் கர்மங்கள் தர்மங்களாகின்றன; தடையாயிருப்பவைகள் அதர்மங்களாகின்றன. அதர்மம் தலையெடுத்துப் பெருங் குழப்பங்களை உண்டுபண்ணும் நெருக்கடிகளிலெல்லாம் அவர் அவதரிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்படி அவதரித்து வந்து அவர் என்ன செய்கிறார்?
8. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும், துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும், தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும், யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
பொருள் : நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
களை யெடுத்தலும் நல்ல செடிகளுக்கு உரம் போடுதலும் சேர்ந்து அமைவது சிறந்த கிருஷியாகும். உலகில் கெட்டவர்களுடைய கூட்டம் பெருகிவிட்டால் அவர்களுக்கிடையில் தர்மம் தலையெடுக்காது. ஆகையால் யுத்தம், கொள்ளை நோய், பஞ்சம் இவைகள் வாயிலாக பகவான் அவர்களுக்குத் துன்பத்தை யூட்டுகிறார். துன்பம் ஒன்றே மக்களைச் சீர்திருத்துதற்கு உற்ற உபாயம். மரணத்தின் வாயிலாக அவர்களில் பெரும்பான்மையோரை ஒதுக்கித் தள்ளுதலும் அவசியமாகிறது.
மூன்று குணங்களில், ரஜோகுணமும், தமோகுணமும் அதிகரிக்கப் பெறுபவர்கள் அதர்மத்தில் ஈடுபடுகிறார்கள். ஆதலால் அவர்களுடைய தொகையைக் குறைத்தல் வேண்டும். சத்வ குணத்தில் இருப்பவர்களை ஓம்புதல் அடுத்தபடி நிகழ்கிறது. இங்ஙனம் மூன்று குணங்களுக்கிடையில் தாரதம்மியம் ஓரளவில் சமப்படுவதாகிறது. இதைத்தான் அவதார புருஷர் செய்து வைக்கிறார்.
மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்றுதானா நல்லார் அடையும் பயன்? காக்கப்படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :
9. ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந
அர்ஜுந!-அர்ஜுனா! மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது, ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன், ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர், புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.
பொருள் : எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.
பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயாசக்தியால் காட்டிக்கொள்கிறான். அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத்கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான். இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும் அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.
ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது. ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான். மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப்பற்றி நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.
இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திரபூர்வமானவர்களல்ல என்றும், சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும் உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திரபூர்வமாகவும் ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம். ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.
திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள். அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள். அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்குந்தான் போகமுடியும். அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய்வரலாம். அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை. ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்த து ஏழு ரிஷிகள் மாத்திரமே அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர். எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே, சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.
ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம். ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது. வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக்கண்ணால்தான் இந்த உண்மையைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.
என்ன சாதனம் செய்து ஞானியர் ஈசுவரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள்? விடை வருகிறது:
10. வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஸ்ரிதா:
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:
வீத ராக பய க்ரோதா- விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், மந்மயா:-என் மயமாய், மாம் உபாஸ்ரிதா:-என்னை அடைக்கலம் புகுந்து, பஹவ: ஜ்ஞாநதபஸா பூதா-ஞானத்தவத்தால் தூய்மை பெற்று, மத்பாவம் ஆகதா: பஹவ:-என்னியல்பு எய்தினோர் பலர்.
பொருள் : விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்.
சேற்று நீரிலுள்ள அழுக்கை நீக்கினால் அது நல்ல நீரோடு கலப்பதற்குத் தகுதியுடையதாகிறது. மனதிலுள்ள ஆசை, அச்சம், சினம் என்ற அழுக்குகளை நீக்கினால் அது ஈசுவரமயமாய் அமைகிறது. பிறகு ஈசுவரனுடைய மகிமையை அது அறிய வல்லதாகிறது. அவன் பெருமையை அறிந்தபின் அவனிடத்து அடைக்கலம் புகுதல் எளிதாகிறது. தீயோடு தொடர்வு வைக்கின்ற இரும்பு தானே தீ மயமாகிறது. சர்வேசுவரனிடத்து ஐக்கிய புத்தி வலுக்க வலுக்க ஜீவனுக்குப் பரபோதம் மேலிடுகிறது. ஆகையால் இந்த ஞானத்துக்கு நிகரான தபசு இல்லை. ஜீவபோதம் அறவே நீங்கிப் பரபோதம் நிலைத்து விடுவதால் இது மனிதனைப் பரிசுத்தவான் ஆக்குகிறது. இங்ஙனம் முக்தியடைவது இன்று ஏற்பட்டதன்று. தொன்றுதொட்டு இது உலகில் நிலைத்துள்ளது.
ஈசுவரன் ஏன் எல்லார்க்கும் முக்தி யளிப்பதில்லை? விடை வருகிறது:
11. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:
பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன், மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும், மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
பொருள் : யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
இயற்கையின் அமைப்பில் உணவு வகைகள் பல இருக்கின்றன. சுவையிலும், குணத்திலும், தரத்திலும் அவைகளுள் பேதமும் உள. ஓர் உயிர்க்கு உணவாவது மற்றோர் உயிர்க்கு நஞ்சு ஆவதும் உண்டு. ஆனால் அந்தந்த உயிர் தான் ஏற்கும் உணவைச் சேமித்து ஜீரணம் பண்ணுகிறது; அவ்வுணவினின்று புஷ்டியும் பெறுகிறது. உடலை வளர்த்து ஓம்புதல் உணவின் பயன் ஆகும். அதே விதத்தில் உலகில் மதங்கள் பல இருக்கின்றன. அவைகளுள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாதவைகளும் உண்டு. விக்கிரஹ ஆராதனை மஹாபாபம் என்கிறது ஒரு மதம். தானே ஒரு விக்கிரஹமாக வாய்த்துள்ள மனிதன் மற்றொரு விக்கிரஹத்தின் வாயிலாகவே பரமனை வழுத்தியாக வேண்டும் என்கிறது மற்றொரு மதம். இன்னும் வழிபாடு வேற்றுமை மதங்களுள் உண்டு. ஒரு மதம் ஆராதனை என ஆமோதிப்பதை மற்றொரு மதம் அடாத செயல் என ஒதுக்குகிறது. இப்படி மதங்கள் வேறுபட்டிருப்பினும் அவை யாவுக்கும் ஆதிநாயகனாக ஈசன் இலங்குகிறான். மக்களின் இயல்பு வேறுபாட்டுக்கு ஒப்பமத வேறுபாடும் இருக்கிறது. யார் யார் எந்த எந்த மதத்தின் மூலம் எப்படியெப்படி இறைவனை வணங்குகின்றார்களோ அப்படியெல்லாம் அவர் மக்களுக்கு ஊக்கம் கொடுத்து, பக்தியை வளர்த்து அவர்கள் தம்மை வந்தடைவதற்கு வழிகாட்டித் தருகிறார். மதங்கள் அனைத்துக்கும் அவருடைய அனுக்கிரஹம் உண்டு. மதங்கள் பலப்பலவாக அமைந்திருப்பது மானுட இயல்புகளுக்குத் தேவையாம். அவரவர் மதத்தை மக்கள் ஆழ்ந்து அனுஷ்டிப்பதற்கிடையில் மதங்களுள் சமரசம் காண்பது முற்றிலும் அவசியமாகிறது. சமரசம் காண்பது இறைவனுடைய பெருந்திட்டத்தைப் போற்றுவதாகும்.
முக்தியை நாடுபவர்களுக்கு பகவான் முக்தியைக் கொடுக்கிறான். புத்தியை (போகத்தை) நாடுபவர்களுக்கு பகவான் போகத்தைக் கொடுக்கிறான். போகப் பொருள்களாய்ப் பரிணமித்திருப்பதும் பகவானே யாதலால் போகத்தை நாடுபவர்களும் தம் அறிவுக்கு எட்டியபடி பகவானையே நாடுகிறார்கள். இயற்கையோடு வைத்துள்ள வெவ்வேறு விதமான இணக்கத்துக்கு ஏற்றாற்போன்று பலவிதமான அனுபவங்கள் வாயிலாக எல்லா உயிர்களும் இறைவனையே இறுதியாக வந்தடைவதால் மார்க்கங்கள் யாவும் அவனை நோக்கிச் செல்பவைகளாகின்றன. ஈசுவரன் கற்பக விருக்ஷம் போன்றவன். கற்பக விருக்ஷத்தின் அடியில் இருந்துகொண்டு யார் எதை விரும்புகிறார்களோ அதை அடைகின்றனர்.
ஈசுவரனையே அடைய விரும்பாது சிறிய பொருள்களைப் பெற மக்கள் ஆசைப்படுவது ஏன்?
12. காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா
இஹ மாநுஷே லோகே-இந்த மனிதவுலகத்தில், கர்மணாம் ஸித்திம் காக்ஷந், த:-தொழில்களில் வெற்றியை விரும்புவோர், தேவதா: யஜந்தே-தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள், ஹி கர்மஜா ஸித்தி:-தொழிலினின்றும் வெற்றி, க்ஷிப்ரம் பவதி-விரைவில் விளைவதன்றோ!
பொருள் : தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!
ஆத்ம ஞானத்தைவிட மிக எளிதில் அடையப்பெறுவது கர்மபலன். இம்மை என்றும் மனுஷ்யலோகம் என்றும் சொல்லப்படுவது இந்திரியங்களுக்குப் புலனாகும் இவ்வுலகம். அறிவிலிகள் எது விரைவில் அகப்படுகிறதோ அதில் பற்றுவைத்து அதையே நாடுகின்றனர். ஓர் அரசனோடு இணக்கம் வைப்பது அரிது எனினும் அவ்விணக்கம் எல்லா நன்மையையும் மேன்மையையும் பயக்கும். அரசனுடைய சிப்பந்திகளில் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் விரைவில் தொடர்வுகொள்ளலாம். ஆயினும் அவர்களிடமிருந்து அடையும் நன்மையும் மிக அற்பமானதேயாம். சர்வேசுவரனை ஆராதிப்பவர்கட்கு பக்தி, ஞானம், முக்தி முதலியன வரும். சிறு தெய்வங்களை வணங்குபவர்க்கு அதற்கேற்ற கர்மபலன் கிடைக்கிறது. மக்களுக்கிடையில் மனபரிபாகம் வேறுபடுகிறது. அதற்கு ஏற்ப அவர்கள் நாடுகின்ற நலனும் வெவ்வேறு வகைப்பட்டது.
அப்படியாயின் அவர்களது வகைகளை அறிவது எங்ஙனம்? விடை வருகிறது :
13. சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்
குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது, தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும், அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.
பொருள் : குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.
குணபேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வகுணம் நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன். சத்வகுணமும் சிறிது ரஜோகுணமும் கூடியிருப்பவன் க்ஷத்திரியன். ரஜோகுணம் பெரும்பகுதியும் சிறிது தத்துவம், தமசு ஆகியவை கூடியிருப்பவன் வைசியன். தமோகுணம் பெரிதும் சிறிது ரஜோகுணமும் சேர்ந்திருப்பவன் சூத்திரன். சத்வத்தின் வர்ணம் வெண்மை. ரஜோகுணம் சிவப்பானது. தமோகுணம் கறுப்பு. பிராம்மணனுடைய நிறம் வெண்மை. க்ஷத்திரியன் செந்தாமரை போன்றவன். வைசியனுக்கு நிறம் மஞ்சள். சூத்திரன் கறுத்திருக்கிறான். இந்நிறங்கள் ஸ்தூல சரீரத்தில் தென்படுபவைகளல்ல. ஸ்தூல உடலில் ஐரோப்பியர் வெள்ளையர்; ஆனால் அவர்கள் எல்லோரும் பிராம்மண இயல்புடையவர் அல்லர். அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம்; ஆயினும் அவர்கள் எல்லார்க்கும் க்ஷத்திரிய இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம். இராமன், கிருஷ்ணன் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆக, ஸ்தூல சரீரத்தின் நிறம் மனிதனது இயல்பை விளக்காது.
பின்பு, நான்கு வருணத்தார் நிறம் அந்தக்கரணம் அல்லது மனதை ஒட்டியதாகும். உலகத்தவர் பழக்க வழக்கத்தில் கொண்டுள்ள நான்கு வருணங்கள் பிறப்பை ஒட்டியனவாகும். சமூக அமைப்பில் ஒழுங்குப்பாடு இருக்கும் போது அவை தத்துவ அமைப்போடு ஒருவாறு ஒத்திருக்கும். இன்றைக்கு சமூகத்தில் உள்ள நிலைமையில் பிறப்பை அனுசரித்து வருணத்தை நிர்ணயிப்பது சிறிதும் பொருந்தாது. அத்யாத்ம வித்தைக்கு ஏற்ப நான்கு வருணங்கள் மனபரிபாகத்தை ஒட்டியனவாம். அதன்படி நான்கு சகோதரர்களுக்கிடையில் மனபரிபாகத்துக்கு ஏற்ப ஒருவன் பிராம்மணனாகவும், இன்னொருவன் க்ஷத்திரியனாகவும், மற்றொருவன் வைசியனாகவும், வேறு ஒருவன் சூத்திரனாகவும் இருக்கமுடியும். வருணத்தில் மேல்நோக்கிப் போகப் போக பரவித்தையில் ஈடுபடுதல் அதிகரிக்கிறது. வருணத்தில் கீழே போகப் போக கர்ம பலனில் பற்று அதிகரிக்கிறது. பழுத்த பழத்தில் தோல், சதை, விதை முதலியன பாகுபாடு அடைகின்றன. பிஞ்சில் எல்லாம் ஒரே பாங்கில் இருக்கின்றன. வருணத்தில் மேலோனுக்கு ஆத்ம தத்துவம், பிரகிருதி தத்துவம் முதலியன விளங்குகின்றன. பரிபாகம் அடையாத கீழ் வருணத்தவனுக்குப் பரவித்தை விளங்காது. (நான்கு வருணத்தின் கர்மங்கள் 18வது அத்தியாயம் 42,43,44வது சுலோகங்களில் விளக்கப்படுகின்றன.
இயற்கையில் முக்குணத்தாலாகிய எல்லாப்பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் நான்கு வருணங்கள் உண்டு. வாழ்க்கை முறையில் ஒரு வருணம் மற்றொரு வருணமாகப் பரிணமிப்பதும் சர்வ சாதாரணம்.
சமூகத்தார் தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் வருண தர்மம் பாரமார்த்திக உண்மைக்கு ஒத்ததாயிருக்குமானால் அச்சமூகம் முன்னேற்றமடைகிறது. பாரமார்த்திக உண்மையினின்று அது பிறழுகின்றவளவு சமூகமும் சீர்கேடு அடையும். அப்போதைக்கப்போது தோன்றும் அவதார புருஷர்கள் வருண தர்மத்தை ஒழுங்குப்படுத்தி வைக்கின்றனர். பகவான் உலகத்தைச் சிருஷ்டித்த போதிலும் அவர் கர்த்தா அல்ல என்பதன் உட்பொருள் 9வது அத்தியாயம் 5-10 வது சுலோகங்களில் விளக்கப்படுகிறது.
பகவான் பிரகிருதியிலுள்ள கர்மங்களுக்கெல்லாம் கர்த்தா அல்லவாதலால் :
14. ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா
இதி மாம் யோऽபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே
மே கர்மபலே ந ஸ்ப்ருஹா-எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லைல, மாம் கர்மாணி ந லிம்பந்தி-என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை, ய: இதி மாம், அபிஜாநாதி-இங்ஙனம் என்னை யறிவோன், ஸ: கர்மபி: ந பத்யதே-கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.
பொருள் : என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.
அகங்காரம் உடையவர்களிடத்துக் கர்மம் மனோவிகாரத்தை உண்டுபண்ணுகிறது. பகவானிடத்தோ அகங்காரம் சிறிதேனும் இல்லை. ஆகையால் கர்மங்களால் தீண்டப் பெறாதவராக அவர் இருக்கிறார். அடையாத ஒன்றை அடைய விரும்புதல் ஆசையாகும். பகவானோ பரிபூரணர். அனைத்தையும் தம்மகத்து அடக்கிக்கொண்டு அவைகளுக்கு அப்பாலும் அவர் இருக்கிறார். ஆதலால் அவர் ஆசைப்படுவதற்கு ஒன்றுமில்லை. பகவானது சொரூபத்தை அறிபவர் தாமும் அகங்காரமற்று ஆசையற்றிருப்பார்கள். எக்கருமமும் அவர்களைக் கட்டுப்படுத்தமாட்டாது. அவர்கள் மேன்மையை அறிந்ததன் அறிகுறி தாமும் மேன்மையில் நிலைபெற்றிருத்தலாம்.
பரமாத்மா நிர்விகாரி என்று அறிந்தவர்கள் தத்தம் கர்மங்களையே ஒழித்துவிட்டார்கள். அதைப்பற்றி பகவான் பகர்வதாவது :
15. ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷúபி:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்
பூர்வை: முமுக்ஷúபி: அபி-முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும், ஏவம் ஜ்ஞாத்வா-இதையுணர்ந்து, கர்ம க்ருதம்-தொழிலே செய்தனர், தஸ்மாத் த்வம்-அதனால் நீயும், பூர்வை: பூர்வதரம் க்ருதம்-முன்னோர்கள் முன்பு செய்தபடி, கர்ம ஏவ குரு-தொழிலையே செய்யக் கடவாய்.
பொருள் : முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.
விவேகமுடைய தேகியானவன் அகங்காரத்தையும் ஆசையையும் விட்டுவிடுகிறானே யொழிய அவன் கர்மத்தையே விட்டு விடுவதில்லை. முக்தியை நாடியவர்கள் எல்லோரும் தொன்று தொட்டு இம்முறையைத்தான் கையாண்டார்கள். அர்ஜுனனுக்காகவென்று இது புதிதாக வந்த ஏற்பாடு அல்ல.
அப்படியானால் அர்ஜுனனுக்கு இதைப்பற்றி மனக் குழப்பம் ஏன் உண்டாயிற்று? அதில் ஆச்சரியம் இல்லை ஏனென்றால் :
16. கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்
கிம் கர்ம கிம அகர்ம இதி-எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில், கவய: அபி அத்ர மோஹிதா:-ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள், யத் ஜ்ஞாத்வா-எதை தெரிந்து கொள்வதால், அஸுபாத் மோக்ஷ்யஸே-தீங்கினின்றும் விடுபடுவாய்,
தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி-அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்.
பொருள் : எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.
அசுபங்களிலெல்லாம் மிகப் பெரியது பிறவிப் பிணி என்பது. தொலையாத இத்தொல்லையைத் தொலைப்பதற்கு வினையின் கூறு முழுதும் விளக்கப்பெறல் வேண்டும். உடலைக்கொண்டு ஓயாது வேலை வாங்குவதுதானே கர்மம் என்று அவசரப்பட்டு முடிவு கட்டிவிட வேண்டாம்.
17. கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணஸ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:
கர்மண: அபி-தொழிலின் இயல்பும், போத்தவ்யம்-தெரிய வேண்டும், அகர்மண: ச போத்தவ்யம்-தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும், விகர்மண: ச போத்தவ்யம்-தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும், ஹி கர்மண: கதி: கஹநா-ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது.
பொருள் : தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.
இன்னதைச் செய் என்று சாஸ்திரம் விதித்துள்ளது கர்மம். இன்னதைச் செய்யாதே என்று சாஸ்திரம் விலக்கியிருப்பது விகர்மம். (விகர்மம் இங்கு இந்த அத்தியாயத்தில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அது 16வது 17வது அத்தியாயங்களில் ஆராயப்படுகிறது)
கர்மம் அகர்மம் ஆகிய இரண்டின் இயல்புகளாவன:
18. கர்மண்யகர்ம ய: பஸ்யேதகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்
கர்மணி அகர்ம-செய்கையில் செயலின்மையும், ச அகர்மணி கர்ம-செயலின்மையில் செய்கையும், ய: பஸ்யேத்-எவன் காணுகிறானோ, ஸ மநுஷ்யேஷு புத்திமாந்-அவனே மனிதரில் அறிவுடையோன், ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்-அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்).
பொருள் : செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.
1. கர்மம் பிரகிருதியின் இயல்பாகும்; அகர்மம் ஆத்ம சொரூபம். அவிவேகிகள் இரண்டுக்குமிடையில் வித்தியாசம் தெரியாது குழப்பமடைகின்றனர். ரயில்வண்டி ஓடுகிறது. அதில் ஊர்ந்து செல்லும் பிரயாணி யொருவன் நிலத்தில் நிற்கும் மரங்கள் தன்னை எதிர்த்து ஓடுவதாகக் காண்கிறான். செயல் இல்லாத ஒன்றில் ஓடுதல் என்னும் செயல் காணப்படுகிறது. இங்கு அக்ஞானத்தால் அகர்மத்தில் கர்மம் காணப்படுகிறது. கடலில் தூரத்தில் ஓடும் கப்பல் கரையிலிருந்து பார்ப்பவனுக்கு அசையாது நிற்பது போன்று தென்படுகிறது. வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனும் அப்படியே காட்சி கொடுக்கிறது. ஈண்டு அக்ஞானத்தால் கர்மம் அகர்மமாக விளங்குகிறது. ஆக, இயற்கையில் எப்பொழுதுமே கர்மம் கர்மமாகவும், அகர்மம் அகர்மமாகவும் பொருள்படுகின்றன என்று சொல்லமுடியாது. மயக்கத்தால் ஒன்றின் இயல்பு மற்றொன்றின்மீது சுமத்தப்படுகிறது. அக்ஞானியானவன் தேகத்தைத் தான் என்று வைத்துக்கொள்கிறான். நான் இப்பொழுது வேலை செய்கிறேன். நான் இப்பொழுது இளைப்பாறுகிறேன் என்று பிரகிருதியின் செயலை ஆத்மாவின்மீது ஆரோபிக்கிறான். இத்தகையவன் ஒரு செயலும் புரியாது சும்மா உட்கார்ந்திருந்தாலும் அகங்காரமும் கர்த்ருத்வமும் அவனிடம் இருக்குமளவு அவன் கர்மம் செய்பவனே ஆகிறான். இந்த அக்ஞான நிலை அகர்மத்தில் கர்மம் என்பதாகும். ஆத்ம சொரூபத்தை அறிந்த ஞானிக்கு அகங்காரமில்லை. அவனது உடல் ஓயாது வேலை செய்தாலும் ஆத்மா சாக்ஷியாயிருக்கிறது. ஒரு கர்மத்தோடும் அது சம்பந்தப்பட்டதல்ல. ரயில் வண்டியில் தூங்கிக்கொண்டு போனவன் நடந்தவனுமல்லன், தூக்கங்கெட்டவனுமல்லன். உடல் செய்யும் கர்மமெல்லாம் ஆத்மாவைச் சேர்வதில்லை. கர்மத்தில் அகர்மம் என்ற பெரு நிலையாகும் இது. ஞானியர்க்கும் நல்ல விவேகமுடையவர்க்குமே இது சாத்யம்.
2. கர்மம்=சரீரம் முதலானவைகளைக் கொண்டு. நடை பெறும் தொழில் யாவும். அகர்மம்=ஞானம்.
ஒரு மனிதன் முறையாக உணவைச் சமைத்துக்கொண்டே வருகிறான். சமைத்தல் என்னும் கர்மம் அவனிடம் நடைபெறுகிறது. அது நாளடைவில் நன்றாய்ச் சமைத்தல் என்ற ஞானத்தில் கொண்டு சேர்க்கிறது. ஆக கர்மத்தில் அகர்மத்தைக் காணுதல் என்பது செவ்வையாகக் கர்மம் செய்பவர்க்கு ஞானம் உண்டாகிறது என்பது அனுபவபூர்வமாகக் காணப்படுகிறது. சமைத்தலைப்பற்றிய ஞானம் வந்த பிறகு அச்சமையல் தொழில் இன்னும் திறமையுடன் செய்யப்படுகிறது. இஃது அகர்மத்தில் கர்மத்தைக் காணுதல் எனப்பொருள்படுகிறது. இங்ஙனம் கர்மம் ஞானவளர்ச்சிக்குத் துணைபுரிகிறது; ஞானவளர்ச்சி திறமையுடன் தொழில்புரிதலைத் தோற்றுவிக்கிறது. நல்வாழ்க்கை என்னும் கர்மம் ஆத்ம ஞானத்தை உண்டுபண்ணுகிறது. ஆத்ம ஞானம் அடைந்தவர் வாழ்க்கையை மிக மேலானதாகச் செப்பனிட்டு வாழ்கின்றனர்.
3. கர்மம்=ஜீவர்களால் செய்யப்படும் தொழில். அகர்மம்=(அ=விஷ்ணு) விஷ்ணுவின் கர்மம்.
ஜீவன் செய்கிற கர்மங்களுக்குத் தானே கர்த்தாவென்று அவன் எண்ணுகிறான். உண்மையில் அந்தக் கர்மங்கள் யாவும் விஷ்ணுவினுடையவைகளேயாம். தான் கர்த்தா என்ற எண்ணத்தையும் அகங்காரத்தையும் அகற்றி, தன் மூலம் நடைபெறுகிற கர்மங்களெல்லாம் பகவானுடையவைகள் என்ற எண்ணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தில் அகர்மத்தைக் காண்பவனாகிறான். சொப்பனத்தில் ஒரு ஜீவன் செய்யும் கர்மத்துக்கு அவன் கர்த்தாவல்லன். அங்கு நடைபெறுகிற கர்மங்களும் உண்மையில் விஷ்ணுவினுடையவைகளாம். சொப்பனத்தில் தான் கர்த்தா அல்லாத நிலையில் ஜீவன் அகர்மத்தில் இருக்கிறான். அப்பொழுதும் விஷ்ணுவினுடைய கர்மம் நடைபெறுகிறதென்று உணர்பவன் அகர்மத்தில் கர்மத்தைக் காண்கிறான். மனிதன் தன்னுடைய கர்மம் என்று எண்ணிச் செய்வதும், அகங்காரமில்லாது செய்வதும் ஆகிய எல்லாக் கர்மங்களும் உண்மையில் விஷ்ணுவினுடைய கர்மங்களாகின்றன. இதை அறிந்துகொள்பவனே புத்திமான்.
4. ஜீவனைப் பந்தப்படுத்துவது கர்மத்தின் இயல்பு. அகங்கார மமகாரமற்றுக் கர்மத்தை ஈசுவரார்ப்பணமாகச் செய்தால் அத்தகைய கர்மம் மனிதனைப் பந்தப்படுத்துவதில்லை. நிஷ்காமியமாகச் செய்யும் கர்மம் பழைய பந்தங்களையும் நீக்குகிறது. ஆக, கர்மத்தில் அகர்மத்தைக் காணுதல் என்பது பந்தத்தை உண்டு பண்ணுகிற கர்மத்தைக் கட்டவிழ்க்கும் கர்மமாக மாற்றுதல் என்று பொருள்படுகிறது. சோம்பலால் அல்லது அறிவின்மையினால் ஒருவன் நல்வினையொன்றும் செய்யாதிருப்பானாகில் அதனால் அவனுக்குக் கேடு விளைகிறது. கர்ம பந்தமும் அவனுக்கு அதிகரிக்கிறது. நல்வினையைச் செய்யாதொழித்தல் அகர்மமாகிறது. அதனால் விளையும் கேடு கர்மமெனப்படுகிறது. இங்ஙனம் அகர்மத்தில் கர்மத்தைக் காணுதல் விவேகியினுடைய செயலாகிறது.
5. சந்தடி நிறைந்துள்ள சமூக வாழ்க்கை, நிசப்தமான ஏகாந்த வாழ்க்கை ஆகிய இரண்டிலும் மனது பண்பட்டிருக்க வேண்டும்.
கர்மத்தில் அகர்மம்=யுத்தம் புரிதலும் அதற்கு ஒப்பானதுமாகிய பல்வேறு அலுவல்களுக்கிடையே மனது ஒரே சாந்த சொரூபமாயிருத்தலாம். அகர்மத்தில் கர்மம்=வெளிப்பார்வைக்கு வினையாற்றுதல் என்பது ஒன்றுமில்லாமல் ஏகாந்தமாக ஒரு குகையில் அமர்ந்திருக்கையில் மனது தைலதாரை போன்று இடையறாது ஈசுவரனே நாடிச் செல்லுதல் என்ற சிறந்த கர்மத்தைச் செய்தலாம்.
ஒரு சார்பாகப் பண்பட்ட மனது அரைகுறையானது. சிலர் ஏகாந்த வாசத்தில் நன்கு பயிற்சியடைந்திருக்கின்றனர். அத்தகையவர் சமூகக் குழப்பத்துக்கிடையில் வந்தால் தடுமாற்றமடைகின்றனர். இன்னும் சிலர் சர்வகாலமும் ஜனக்கூட்டத்துக்கிடையில் வாழ்ந்து வருகின்றனர். சிறிது நேரமாவது தனியாயிருக்க இவர்களுக்கு இயலுவதில்லை. இவர்களை ஏகாந்த வாசத்தில் வைத்தால் விரைவில் பைத்தியம் பிடித்துவிடும். தனியாக வசித்திருக்கமட்டும் தெரிந்துகொண்டவர், சமூகத்தைச் சார்ந்திருத்தலை மாத்திரம் தெரிந்துகொண்டவர் ஆகிய இவ்விருதிறத்தாரும் அரைகுறையான பயிற்சி பெற்றவர்களே. ஏகாந்தத்தில் ஈசுவர சிந்தனை என்ற சிறந்த செயல் நடைபெறுகிறது. சமூகச் சந்தடிக் கிடையில் சாந்தமே சித்தமிசை குடிகொள்கிறது. இப்படி இருவித இயல்பிலும் பயிற்சி பெற்றவரே நிறைமனிதர் ஆகின்றனர்.
6. ஸ்ரீ கிருஷ்ணனும் அர்ஜுனனும் அமர்க்களத்துக்கு வருகிறார்கள். பகவான் தேர் ஓட்டுகிறார். பார்த்தன் போருக்கு ஆயத்தமாக வருகிறான். யாரை எதிர்த்து எத்தகைய கடும் போர் புரிந்தாகவேண்டும் என்ற எதார்த்தம் இப்பொழுதுதான் அர்ஜுனனுக்குத் திடீரென்று விளங்குகிறது. எட்ட எறிகிறான் அம்பையும் வில்லையும். வேண்டாம் இவ்வெம்போர் என்று விளம்புகிறான். செயலற்றுச் சும்மா உட்கார்ந்துவிடுகிறான்.
ஒன்றோடொன்று ஒவ்வாத இரண்டுவிதக் காட்சிகளை இப்பொழுது பகவானும் பார்த்தனும் தருகிறார்கள். கர்மத்தில் அகர்மத்துக்கு விளக்கமாக வந்தமைகிறது பகவானது பெற்றி. தேர் கடவும் கடமை அவருடையது. அதில் பூட்டியுள்ள வேகம் வாய்ந்த வெண்குதிரைகள் நான்கையும் இடது கையில் அவர் கெட்டியாகக் கயிற்றால் பிடித்துக்கொண்டிருக்கிறார். கீதோபதேசம் செய்தவன் புறச்சின்னமாக வலது கையில் அவர் சின்முத்திரை தாங்கியிருக்கிறார். கைகள் இரண்டும் இப்படிச் செயலில் ஈடுபட்டிருக்கையில் முகவிலாசம் மற்றொரு காட்சி தருகிறது. அங்குச் சாந்தி தவழ்கிறது. மனம் மலைபோன்று அசையாதிருக்கிறது என்று அது விளக்குகிறது. கர்மம் பிரகிருதியோடு சேர்ந்தது. புருஷன் கர்மம் செய்வதில்லை என்ற பேருண்மையை ஸ்ரீ கிருஷ்ணன் என்ற பெயர்பூண்டுள்ள மூர்த்தியானவர் விளக்குகிறார். விரைந்து வினையாற்றுதற்கிடையில் விச்ராந்தி-கர்மத்தில் அகர்மம் என்ற கோட்பாட்டுக்கு அவரே சான்றாகின்றார்.
இனி, அர்ஜுனன் அம்பையும் வில்லையும் எறிந்துவிட்டுச் செயலற்றிருப்பவனாகத் தென்படுகிறான். பெயரளவில் வினையைத் துறந்துவிட்டான். அவனுக்கு மனதுக்குள் ஒரே குழப்பம். அச்சம் ஒருபுறம் அவனை அல்லற்படுத்துகிறது. மற்றொருபுறம் துன்பம் தேகத்தைத் துளைக்கிறது. அகத்தின் நிலைகுலைவு அவன் முகத்தில் மிளிர்கிறது. கர்மத்தைத் துறந்தவனாகத் தென்படுபவன் கர்மத்தில் காய்கிறான். அவனது நிலை அகர்மத்தில் கர்மமாகும்.
உலக வாழ்க்கையை யோகி ஒருவன் எங்ஙனம் நடாத்த வேண்டும் என்று யோகேசுவரனாகிற கிருஷ்ணன் தாமே நடாத்திக் காட்டுகிறார். முறை தெரியாது மனிதன் ஏமாற்றம் அடைந்து விடலாகாது என்பதற்கு அர்ஜுனனுடைய கீழ்நிலையே எடுத்துக்காட்டாகும். எல்லாப் பாஷ்யங்களினுடைய உட்கருத்தும் இவ்விருவர் தரும் காட்சியில் அடங்கப்பெற்றிருக்கின்றன. இவைகளைத் துருவி ஆராய்பவன் புத்திமானாகிறான்; அவன் சிறந்த யோகியாவான். முக்தி ஈறாக இகபர மிரண்டையும் பெறவல்லவனும் அவனே.
ஸ்ரீராமகிருஷ்ணர் வெளித்தோற்றத்தில் அகர்மத்தில் இருந்தார். உள்ளே கடவுள் நாட்டம் என்ற பெரிய கர்மம் நடை பெற்றது. விவேகானந்தர் லோகஹிதம் என்ற பெரிய கர்மத்துக்கிடையில் உள்ளே ஆத்ம சொரூபம் என்ற அகர்மத்தில் நிலைத்திருந்தார். தூணைப் பிடித்துக்கொண்டிருக்கும் பாலன், கீழே விழுந்து விடுவோம் என்ற பயம் கொஞ்சமுமில்லாமல், கன வேகத்துடன் அதைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அதுபோலவே, ஈசுவரனிடம் மனத்தைத் திடமாக நிறுத்திவிட்டு, நீ உனது காரியங்களைச் செய். அப்போது உனக்கு அபாயங்களே நேரமாட்டா.
19. யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா:-எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம், காம ஸங்கல்ப வர்ஜிதா:-விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம்-எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ, தம் புதா:-அவனை ஞானிகள், பண்டிதம் ஆஹு:-அறிவுடையோன் என்கிறார்கள்.
பொருள் : எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.
கயிறு ஒன்று கட்டுதற்கு உதவுகிறது. அக்கயிறு வெந்து பஸ்மமான பிறகு பழைய வடிவத்தை உடைத்திருக்கிறது. எனினும் அது கட்டுதற்கு உதவாது. கர்மமானது ஆசையினால் தூண்டப் பெற்றதாயிருக்கும்பொழுதும், அது சங்கற்பத்தில் தோய்ந்திருக்கும்பொழுதும் மனிதனைப் பிணிக்கவல்லதாகிறது. சர்வேசுவரனது அருளால் வந்த கர்மங்கள் சர்வேசுவரன் என்ற அக்கினியில் ஆகுதியாக அர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற எண்ணத்துடன், கர்மம் செய்கிறவனுக்கு அகங்காரம் இல்லை. தான் கர்த்தா என்ற எண்ணமும் இல்லை; ஆகையால் அவன் ஓயாது வினையாற்றினாலும் வினை என்னும் தளையில் பிணிக்கப்பட்டவன் அல்லன். அவனைப் பேரறிஞன் என்று ஞானிகள் பகர்கின்றனர். கர்மத்துக்கிடையில் அகர்மம் அவன்பால் எங்ஙனம் நிலைபெறுகிறது எனின் :
20. த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஸ்ரய:
கர்மண்யபிப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ:
கர்ம பலா ஸங்கம் த்யக்த்வா-கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக, நித்யத்ருப்த: நிராஸ்ரய:-திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக, ஸ: கர்மணி அபிப்ரவ்ருத்த: அபி-அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட, கிஞ்சித் ஏவ ந கரோதி-சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்).
பொருள் : கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.
அகர்மம் எது என்பதைப் புறத்தே தென்படும் செயலற்ற காட்சி விளக்காது. அகத்தில் உள்ள மனநிலை ஒன்றே அகர்மத்துக்கு விளக்கமாகும். தபால்காரன் ஒருவன் பணம்கொண்டு வந்து செலுத்தி ஒருவரை மகிழ்வூட்டுகிறான்; நற்செய்தி அடங்கப்பெற்ற கடிதம் கொடுத்து இன்பம் விளைவிக்கிறான். மற்றொருவர்க்கு இழவு செய்தி கொண்ட கடிதம் கொடுத்துத் துன்பம் விளைவிக்கிறான். இப்படி இன்ப துன்பங்களை வழங்கும் வினைகளில் அவன் பற்றுடையவன் அல்லன். இங்ஙனம் யோகி ஒருவன் தன் அலுவல்களெல்லாம் சர்வேசுவரனது ஆராதனையென்று கருதி ஆசையைத் துறந்து அவைகளை நன்கு செய்து முடிக்கிறான். பற்று இன்மையினால் அவன் நித்திய திருப்பதனாகிறான். கர்ம பலனில் ஆசையில்லாது தன் கடமையைச் செய்பவர்க்கு அரசன் முதல் ஆண்டிவரையில் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய மன நிலையுடையவன் கர்மத்துக்கிடையில் அகர்மத்தில் நிலைத்திருப்பவன் ஆகிறான்.
ஆத்ம ஞானத்துக்கு ஞான சாதனைகள் மிகவும் அவசியம். ஆனால் விசுவாசம் பூரணமாக இருந்தால், கொஞ்சம் அப்பியாசமே போதுமானதாக இருக்கும்.
ஒரு சமயத்தில் வியாஸர் யமுனை நதியைக் கடந்துபோக இருந்தார். அதே தருணத்தில் கோபிகாஸ்திரீகளும் அங்கு வந்தனர். ஆனால் ஓடக்காரன் ஒருவனுமில்லை. ஆதலால் அவர்கள் வியாஸரை நோக்கி, சுவாமி! இப்போது என்ன செய்கிறது! என்று கேட்டனர். அதற்கு வியாஸர், விசாரப்படவேண்டாம். நான் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றேன். ஆனால், எனக்குப் பசியாக இருக்கிறது. உங்களிடம் ஏதாவது தின்பண்டம் இருக்கிறதா? என்றார். கோபிகாஸ்திரீகள் தாங்கள் வைத்திருந்த பால், ஏடு, வெண்ணெய் எல்லாவற்றையும் கொடுக்க, வியாஸர் அவைகளை வாங்கிப் புசித்தார். பிறகு கோபிகள், ஆற்றைக் கடப்பது எப்படி? என்று கேட்க, வியாஸர் ஆற்றங்கரையில் நின்றுகொண்டு, யமுனாதேவீ! நான் இன்று உபவாஸமிருப்பது மெய்யானால் நீ எங்களுக்கு வழிவிடவேண்டும்; நாங்கள் ஆற்றைக் கடந்து அக்கரை போய்ச் சேருகிறோம் என்று பிரார்த்தித்தார். அப்படிப் பிரார்த்தித்தவுடன் யமுனை நதியின் ஜலத்தில் ஒரு பிளவு உண்டாயிற்று; தரை தெரிந்தது. கோபிகளுக்கு அதியாச்சரியமுண்டாயிற்று. அவர்கள் கொடுத்த பால் முதலியவற்றை வியாஸர் வாங்கிப் புசித்திருக்க அவர் இன்று உபவாஸமிருப்பது மெய்யானால் என எப்படிச் சொல்லக்கூடும் என்று அவர்கள் நினைத்தனர். அந்தப் பண்டங்களைப் புசித்தது அந்தர்யாமியான ஈசுவரனே தவிர வியாஸரல்லர். இந்த விஷயத்தில் வியாஸருக்கு இருந்த விசுவாசத்தின் பலத்தினால் அவர் அப்படிச் சபதம் பண்ணினார் என்பதைக் கோபிகா ஸ்திரீகள் தெரிந்து கொள்ளவில்லை.
யோகியின் மனநிலை மேலும் விளக்கப்படுகிறது :
21. நிராஸீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:
ஸாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்
யதசித்தாத்மா-சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, த்யக்த ஸர்வ பரிக்ரஹ:-எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, நிராஸீ-ஆசையற்றவனாய், கேவலம் ஸாரீரம் கர்ம குர்வந்-வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும், கில்பிஷம் ந ஆப்நோதி-பாவத்தையடைய மாட்டான்.
பொருள் : ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.
ஆத்ம வளர்ச்சிக்குத் தடையாக பந்தத்தை உண்டுபண்ணும் கர்மம் பாபமெனப்படுகிறது. எந்த யோகிக்குப் பாபமில்லை? ஆசையை அறவே அகற்றியவனுக்குப் பாபமில்லை. ஆசை என்னும் வேகம் கெடுமிடத்து அந்தக்கரணம், பாகியகரணம், உடல் ஆகிய யாவும் ஒழுங்காக வினையாற்றுகின்றன. காற்றை எம் மனிதனும் தனக்காகவென்று அலாதியாக எடுத்து வைத்துக் கொள்வதில்லை. அங்ஙனம் யோகி எப்பொருளையும் அலாதியாகத் தனக்காகவென்று தேடியோ அல்லது தானமாக வாங்கியோ வைத்துக்கொள்வதில்லை. ஒரு பொருளுக்கும் உரிமை பாராட்டாதிருப்பது அபரிக்கிரஹம் எனப்படும். உடலுக்கு வலிவு இருக்குமளவு அதைக்கொண்டு உழைக்கலாம். வேண்டியவளவு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். உழைப்புக்கென்றே ஏற்பட்ட உடல் வீணாய்க்கிடந்து கெட்டுப்போகவிடலாகாது. தேகம் தொழில் புரிகையில் மனத்துக்கண் நான் கர்த்தா என்ற விகாரம் ஏதேனும் ஏற்படலாகாது. ஸ்ரீ கிருஷ்ணபகவானும் மற்ற அவதார புருஷர்களும் உடல் தாங்கியிருந்த பாங்கே இதற்குச் சான்றாகும்.
பொருள்களினிடத்து உரிமை பாராட்டாதவனுக்கு உடல் வாழ்க்கை எங்ஙனம் நடைபெறும் என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :
22. யத்ருச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே
யத்ருச்சா லாப ஸந்துஷ்ட-தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக, விமத்ஸர:-பொறாமையற்றவனாக, த்வந்த்வ அதீத:-இருமைகளைக் கடந்தவனாக, ஸித்தௌ அஸித்தௌ ச ஸம:-வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான், க்ருத்வாபி ந நிபத்யதே-தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
பொருள் : தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
தான் முயற்சி யெடுத்துக்கொண்டாலொழியத் தனக்குப் பொருள் வந்து கைகூடாது என்று எண்ணுபவன் தன் கர்மத்துக்குக் கர்த்தாவாகிறான். இவ்வெண்ணம் அக்ஞானத்தினின்று உதிப்பதாகும். தனது உடலின் தேவைகளைப்பற்றி எண்ணாதிருக்குமளவு ஒருவன் ஆத்மசாதனத்துக்குத் தகுதியுடையவனாகிறான். அவன் தேவைகளைக் கவனித்துக் கொள்வது ஈசுவரனுடைய பொறுப்பாகிறது. ஈசுவரப் பிரீதியாக எது வந்து அமைகிறதோ அதைக்கொண்டு சாதகன் திருப்தியடைகிறான். குளிர் வெப்பம், வெற்றி தோல்வி இவைபோன்ற இருமைகளில் எது வந்து வாய்த்தாலும் அது ஈசுவரப் பிரசாதம் என்றே சாதகன் நினைக்கிறான். அந்நினைவால் அவன் இருமைகளை வென்றவனாகிறான். மற்றவர்களுக்குக் கிடைக்கும் லாபம் லௌகிகன் ஒருவன் உள்ளத்தில் பொறாமைக்கு இடம் கொடுக்கிறது. சாதகன் ஒருவனோ அது முற்றும் இறைவனது ஆணையென்று கருதி மகிழ்வடைகிறான். ஈசுவர கிருபையால் எல்லாம் நடை பெறுகிறது என்று அவன் முயற்சியற்றிருப்பதில்லை. தான் செய்ய வேண்டிய முயற்சிகளையெல்லாம் செய்துகொண்டேயிருக்கிறான். அம்முயற்சியால் வரும் வெற்றியும் தோல்வியும் தனதல்லவென்று அவன் நடுவு நிற்கிறான். இத்தகைய பான்மையுடையவனுக்குக் கர்மபந்தம் ஒன்றும் கிடையாது.
23. கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே
கதஸங்கஸ்ய-உலகப் பற்றை ஒழித்து, முக்தஸ்ய-உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:-ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன், யஜ்ஞாய ஆசரத:-வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான், ஸமக்ரம் கர்ம ப்ரவிலீயதே-கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.
பொருள் : பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.
பந்தமும் முக்தியும் மனதைப் பொறுத்தனவாம். பகவத் பிரீதியின் பொருட்டுக் கர்மம் செய்கிறவன் யாகம் செய்கிறவனாகிறான். மனப்பற்று நீங்கியபின் எவ்வளவு கர்மம் செய்தாலும் கேடு ஒன்றும் உண்டாவதில்லை. கடலுக்குள்ளே கொட்டிய உப்புப்போன்று கர்மம் பந்தத்தை உண்டுபண்ணாது கரைந்து போகிறது.
முதலில் உள்ளங்கைகளில் எண்ணெயைத் தடவிக்கொண்டு பலாப்பழத்தை அறுத்துச் சுளைகளை எடுப்பாயானால் பிசின் உன் கைகளில் ஒட்டிக்கொண்டு தொந்தரை செய்யாது. அதுபோல, முதலில் பரமாத்மாவைப்பற்றிய ஞானத்தால் உனக்குப் பாதுகாப்பை உண்டாக்கிக்கொள். பிறகு செல்வம் முதலான உலகப் பொருள்களினிடையே நீ வசித்தால், அவைகளில் நீ எவ்வழியிலும் வசப்படமாட்டாய்.
24. ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி:
ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா
அர்பணம் ப்ரஹ்ம-வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான், ஹவி: ப்ரஹ்ம-ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான், ப்ரஹ்மாக்நௌ ஹுதம்-பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான், ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா தேந-பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால், கந்தவ்யம் ப்ரஹ்ம ஏவ-அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்.
பொருள் : பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.
தன்னைக் கர்த்தாவாக அஹங்கரித்து யாகம் செய்பவனுக்குப் பேத புத்தியிருக்கிறது. யாகம் செய்கிற தன்னை எஜமானனென்றும், யாகத்துக்குரிய தீ யென்றும், திரவியம் என்றும், அதை ஏற்றுக்கொள்ளும் தேவதையென்றும் அவன் வேற்றுமை பாராட்டுகிறான். ஆனால் ஞானயக்ஞத்தில் நிலைபெற்றிருப்பவனுக்குத் தான், தீ, திரவியம், தேவதை, யாகம் ஆகிய அனைத்தும் பிரம்ம சொரூபமேயாம்.
ஆகாரத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஞானிக்கு இன்றியமையாத நித்திய கர்மமாகிறது. அந்த நித்திய கர்மத்தையே அவன் ஞான யக்ஞமாகக் கருதுகிறான். உண்ணும் உணவு பிரம்மம்; உண்ணுதல் என்ற செயலும் பிரம்மம்; உண்கிறவனும் பிரம்மம்; அதைச் செமிக்கும் உதரக்கனலும் பிரம்மம். இங்ஙனம் பிரம்ம நிஷ்டையில் நிலை நின்று ஒருவன் பிரம்மத்தை அடைகிறான்.
உண்ணலும் உனதே; உயிர்த்தலும் உனதே; உடலுயிர் மனமெல்லாம் உனதே. எண்ணலும் உனதே; இச்சையும் உனதே; என் செயற் பயனெலாம் உனதே.
25. தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி
அபரே யோகிந:-சில யோகிகள், தைவம் யஜ்ஞம் ஏவ-தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே, பர்யுபாஸதே-வழிபடுகிறார்கள், அபரே ப்ரஹ்மாக்நௌ-வேறு சிலர் பிரம்மத் தீயில், யஜ்ஞேந ஏவ யஜ்ஞம்-வேள்வியையே ஆகுதி செய்து, உபஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.
பொருள் : சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.
தேவதைகளை ஈசுவரனுடைய அம்சங்களாகக் கருதி அவர்களுக்கு யாகம் செய்வது சிலருக்குச் சாதனமாகிறது. ஆத்மாவுக்கு அமைந்துள்ள பெயர்களில் யக்ஞம் என்பதும் ஒன்று. ஆக யக்ஞத்தினால் யக்ஞத்துக்கு ஆகுதிகொடுப்பது என்பது ஆத்மாவினால் ஆத்மாவுக்கு ஹோமம் செய்தல் என்று பொருள்படுகிறது. நதி கடலில் கலந்து தன் தனி வியக்தியை இழக்கிறது. அங்ஙனம் உபாதியோடு கூடிய ஜீவாத்மாவானது அகண்ட சச்சிதானந்தமாகிய பரமாத்மாவின்கண் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. அப்பொழுது ஜீவபோதம் அகன்றுபோய் பரபோதம் எஞ்சி நிற்கிறது. இதுவே ஞானிகள் செய்யும் ஞான யக்ஞமாகிறது.
26. ஸ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
ஸப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி
அந்யே ஸ்ரோத்ராதீநீ இந்த்ரியாணி-வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை, ஸம்யமாக்நிஷு, ஜுஹ்வதி-அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள், அந்யே ஸப்தாதீந் விஷயாந்- வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை, இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி-இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்.
பொருள் : வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.
சம்யமம் செய்தல் என்பது அடக்குதல் என்று பொருள்படுகிறது. இந்திரியங்கள் விஷயாதிகளில் செல்லாது அடக்குதல் ஒருவித யாகம். இந்திரியங்கள் விஷயங்களில் பொருந்தும் படி செய்தல் மற்றொருவித யாகம். இதில் முரண்பாடு ஏதுமில்லை.
இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களிலே பற்றுதலோடு செல்லுதல் அவைகளின் இயல்பு. பொறிவாயில் ஐந்தும் அவிந்து வேலைக்கு உதவாதவைகள்போல் அடங்கியிருக்குங்கால் அவைகள் முறையாக சம்யமம் செய்யப்பட்டவைகளாகின்றன. இதனால் மனது ஞானத் தெளிவடைகிறது. ஆக, இது ஒருவித யாகமாகிறது.
ஒவ்வொரு இந்திரியமும் ஈசுவர சம்பந்தமான விஷயத்தையே பொருள்படுத்துமாயின் அந்த இந்திரியத்தால் கேடு ஒன்றும் உண்டாவதில்லை. கண்கொண்டு பார்ப்பதெல்லாம் கடவுள் சம்பந்தமானவைகள்; காதால் கேட்பதெல்லாம் கடவுளைப்பற்றிய சொற்களேயாம். இங்ஙனம் ஐந்து இந்திரியங்களையும் தெய்விக விஷயங்களிலேயே பிரவிருத்திக்கும்படி செய்வதால் மனது தெளிவடைகிறது. அது ஞானத்துக்குத் தகுதியுடையதாகிறது.
அடங்காத இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களைப் போகத்துக்குரியவைகளாகப் பொருள்படுத்துகின்றன. கட்டுக்கு அடங்கிய இந்திரியங்களோ இந்திரியார்த்தங்களில் செல்லுவதில்லை. அல்லது அவைகள்பாற் சென்றால் அவைகளையெல்லாம் போகவஸ்துக்களென்று பொருள்படுத்தாது ஈசுவர மயமாகப் பொருள்படுத்துவனவாகின்றன. ஆக, இரண்டு விதத்திலும் ஞான யக்ஞம் கைகூடுகிறது.
27. ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே
அபரே ஸர்வாணீ இந்த்ரியகர்மாணி-வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும், ப்ராணகர்மாணி ச-உயிர்ச்செயல்களையும், ஜ்ஞாநதீபிதே-ஞானத்தால் ஒளிபெற்ற, ஆத்ம ஸம்யம யோகாக்நௌ-தன்னாட்சியென்ற யோகத் தீயில், ஜுஹ்வதி-ஹோமம் செய்கிறார்கள்.
பொருள் : வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச்செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.
எண்ணெய் வார்க்குமிடத்துத் தீபம் பிரகாசிக்கிறது. அங்ஙனம் விவேகம் உதயமாகுமிடத்து ஞான தீபம் பிரகாசிக்கிறது. மனது வெளி விஷயங்களுக்கு உரியதல்ல; ஆத்மாவுக்கே உரியது என்ற எண்ணம் வலுக்குமிடத்து அதுவே விவேகமாகும். அக்னியில் நெய்யை ஆகுதியாகப் போடுங்கால் அந்த நெய்யே அக்னியாக மாறுகிறது. மனதை ஆத்மஞானம் என்ற அக்னியில் சமர்ப்பித்தால் அப்படி மனதுக்கும் ஆத்மாவுக்கும் ஏற்படும் யோகம் சுடர்விட்டெரியும் தீ போன்றதாகும். மனது ஆத்ம சொரூபத்தில் ஒடுங்கவே இந்திரிய கர்மங்களும் பிராண கர்மங்களும் கொடிய செயலற்று ஆத்மசொரூபமாய் மாறுகின்றன. தமது கீழான இயல்பை மேலான இயல்பாக மாற்றுவது இவர்கள் செய்யும் யாகமாகும். பிராண கர்மம் என்பது உடல் முழுதும் வியாபித்துள்ள உயிர்ச் சக்தியாம்.
28. த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்ச யதய: ஸம்ஸிதவ்ரதா:
அபரே த்ரவ்யயஜ்ஞா-வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர், தபோயஜ்ஞா-தவத்தால் வேட்போர், ததா யோகயஜ்ஞா ச-அதே போல யோகத்தால் வேட்போர்
ஸம்ஸிதவ்ரதா: யதய:-அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்,
ஸ்வாத்யாய ஜ்ஞாநயஜ்ஞா-சிலர் ஞானத்தால் வேட்போர்.
பொருள் : விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.
நல்வழியில் பொருளை ஈட்டுதல், அதைப் பொது நன்மைக்கென்று பயன்படுத்துதல் ஆகிய செயல்கள் திரவிய யக்ஞமாகும். இரும்பை உருக்கிப் புதுப்பிப்பதுபோன்று மனதை தெய்வப்பெற்றியில் இளக்கித் தெய்வத்தன்மை வாய்ந்ததாகச் செய்வது தபசு. இப்படித் தவம் புரிதலையே யாகமாகச் செய்பவர் சிலர். அஷ்டாங்க யோகத்தை அனுஷ்டிப்பது இன்னும் சிலர்க்கு யாகமாகிறது. தன்னடக்கம் பயிலுகிறவளவு ஒரு சாதகனுக்குச் சாஸ்திர ஆராய்ச்சி பயன்படும். அத்துடன் நல்வாழ்க்கையைப் பற்றிய உறுதியான விரதத்தைக் கையாளுதல் வேண்டும். ஆன்றோர் இயற்றிய நூல்களைக் கற்பதையும், அவைகளினின்று தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வழங்குதலையும் யாகமாகச் செய்பவனுக்குச் சாஸ்திர ஞானமும் அனுபவ ஞானமும் வளர்கின்றன. மற்றவர்களுக்கு ஒருவன் எதை எடுத்து வழங்குகின்றானோ அதுவே அவனிடத்து இன்னும் அதிகமாக வளர்கிறது. இதுதான் யாகத்தைப் பற்றிய உண்மை.
29. அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததாபரே
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:
அபரே ப்ராணாயாமபராயணா:-வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், ப்ராணஅபாநகதீ, ருத்த்வா-பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
அபாநே ப்ராணம், ப்ராணே அபாநம்-அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும், ஜுஹ்வதி-ஆகுதி பண்ணுகிறார்கள்.
பொருள் : இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.
மனதுக்கும் வாயுவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. மனம் ஒடுங்குமிடத்து வாயு ஒடுங்கும்; வாயு ஒடுங்குமிடத்து மனம் ஒடுங்கும். மனதில் உண்டாகும் பயம், காமம், குரோதம் ஆகிய கெட்ட விகாரங்களுக்கு ஏற்றபடி சுவாசப் போக்குவரவு தடுமாற்றமடைகிறது. அமைதி, அன்பு, மகிழ்வு ஆகிய நல்ல விருத்திகள் சித்தத்தில் உண்டானால் அவ்வேளைகளில் சுவாசத்தின் போக்குவரவு ஒழுங்காக நடைபெறுகிறது. இனி, சுவாசத்தின் போக்குவரவை ஒழுங்குபடுத்தினால் அதற்கு ஏற்றபடி மனது தெளிவடைகிறது. இத்தத்துவத்தை அறிந்து இதை அனுஷ்டிப்பவர் பிராணாயாமத்தில் ஈடுபடுபவர் ஆகின்றனர்.
வாய் வழியாகச் சுவாசிக்கலாகாது; நாசித்துவாரங்களிலேயே சுவாசித்தல் வேண்டும். நாசியில் உட்கொள்ளும் வாயுவுக்கு அபானன் என்று பெயர். நாசியில் வெளிப்படுத்தும் வாயுவுக்குப் பிராணன் என்று பெயர். அபானனை உள்ளுக்கு இழுப்பதைப் பூரகம் என்று சொல்வார்கள். பிராணனை வெளியில் விடுவதை ரேசகம் என்பர். பூரகம் அல்லது ரேசகம் செய்தான பிறகு வாயுவை உள்ளே அல்லது வெளியில் அடக்குதல் கும்பகம் எனப்படும். இந்த முறையை முரட்டுத்தனமாக உபயோகிப்பவர் நாடி நரம்புகளின் வலிவை இழந்து, மண்டையிடி முதலிய நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
பிரசாந்தமான மனதையுடைய யோகி சிரமப்படாது அளவெடுத்தாற்போன்று ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். கும்பகம் பெரிதும் எல்லார்க்கும் பொருந்தாது. பிராணன், அபானன் ஆகிய இரண்டையும் ஒன்றில் ஒன்றை ஆகுதி செய்வதுபோன்று (அதாவது கொழுந்துவிட்டு எரியும் தீயில் நெய்யை இலேசாகச் சொரிவது போன்று) சுவாசிப்பது சிறந்த பிராணாயாமம் ஆகிறது.
நன்றாக நடப்பவன் கால்களைப்பற்றிய உணர்ச்சி யில்லாது நடப்பதுபோன்று, நன்றாகப் பிராணாயாமம் செய்பவன் சுவாசத்தைப் பற்றிய உணர்ச்சியில்லாது ஒழுங்காகச் சுவாசிக்கிறான். அவனே பிராணாயாமத்தில் முறையாக ஈடுபடுபவன் ஆகிறான். மனது தெளிவு அடையுமளவு பிராணாயாமம் இயல்பாக நடைபெறுகிறது.
30. அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி
ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:
அபரே நியதாஹாரா:-வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி, ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி-உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள், ஏதே ஸர்வே அபி-இவ்வனைவரும்
யஜ்ஞவிதோ-வேள்வி நெறியுணர்ந்து, யஜ்ஞக்ஷபிதகல்மஷா:-வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
பொருள் : வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
யோகி ஒருவனுக்கு உண்டி சுருங்கின் உபாயம் பலவுள. உண்பதின் மூலம் உயிரை உயிருக்கு அவன் ஆகுதியாகக் கொடுக்கிறான். இரத்தம் குறைந்துள்ள ஒரு சரீரத்துக்கு மற்றொரு சரீரத்திலிருந்து இரத்தம் எடுத்து அப்போதைக்கப்போதே செலுத்தினால் வலிவும் ஊக்கவும் உண்டாகிறது. இது நவீன மருத்துவம் கையாளும் ஒரு சிறந்த முறையாகிறது. உண்மையில் இயற்கையெங்கும் உயிரைக்கொண்டே உயிர் வளர்கிறது. உயிர் அனைத்தையும் ஒரு பேருயிராகக் கருதி அதன் பொருட்டு அளவு எடுத்தாற்போன் உணவைப் கொடுக்கவும் வாங்கவும் செய்பவன் பிராணனில் பிராணனைச் சொரிகிறான். உயிர் வாழ்க்கையே அவனுக்கு ஒரு யாகமாகிறது.
இது பரியந்தம் (25வது சுலோகத்திலிருந்து 29வது சுலோகம் வரையில்) விதவிதமான யாகங்கள் விளக்கப்பட்டன. மக்களுள் இயல்பு வேறுபாடு ஏராளமாயுண்டு. அவரவர் இயல்புக் கேற்றவாறு வெவ்வேறு யாகங்களைச் செய்ய மக்கள் கடமைப்பட்டிருக்கின்றனர். உலக பந்தம் என்னும் பாபத்தினின்று விடுபடுதற்கு யாகம் செய்தல் ஒன்றே உற்ற உபாயம்.
அது எப்படி எனில் :
31. யஜ்ஞஸிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம
குருஸத்தம-குரு குலத்தாரில் சிறந்தோய், யஜ்ஞஸிஷ்ட அம்ருதபுஜ:-வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர், ஸநாதநம் யாந்தி ப்ரஹ்ம-என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள், யஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி-வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை, அந்ய: குத:-வேறு (பர உலகம்) ஏது?
பொருள் : வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?
மனிதன் எத்தொழிலைச் செய்தாலும் அதனால் உலகம் எல்லா நன்மைகளையும் அடையவேண்டும். தன்னலம் பின்னணிக்குத் தள்ளப்படுமளவு அவன் அருந்துவது அமிர்தம். தான், தனது என்ற ஜீவபோதத்தை துறப்பதே இயற்கையின் மேலாம் திட்டம். ஜீவபோதத்தை அடியோடு யாகம் செய்தவனுக்குப் பரபோதம் ஒன்றுதான் எஞ்சி நிற்கிறது. ஆக, தன்னையே ஆகுதியாகக் கொடுத்தவன் அடைவது சநாதன பிரம்மம். பெறுமவற்றுள் பிரம்மத்துக்கு நிகரானது ஒன்றுமில்லை. பெறுதற்கரிய பிரம்மமே யாகத்தின் மூலம் அடையப்பெறுகிறது என்றால் அதற்குக் கீழாகிய எதையும் யாகத்தால் பெறலாம் என்பது சொல்லாமலே விளங்குகிறது.
மிக எளிதில் அடையப்பெறுவது இவ்வுலகம்; இதைவிட எளிதானது ஒன்றுமில்லை. ஆனால் இவ்வுலகில் ஒருவன் ஒரு பிராப்தியையும் அடையப்பெறாது, பிறர்க்கு அடிமைப்பட்டு, பிறரால் அவமதிக்கப்பட்டு வாழ்வானாகில் அவன் சுயநலத்தில் ஊறியவனாம். ஒருவனிடத்துச் சுயநலம் வலுக்கின்றவளவு அவன் யாகத்தைப் புறக்கணித்தவனாகிறான். சில நாடுகள், சில சமூகங்கள், சில மனிதர்கள் க்ஷீணதசையடைவதற்குக் காரணம் சுய நலப் பற்றாகும். சுயநலம் நாடுபவன் இவ்வுலகத்தில் ஒரு மேன்மையையும் அடையப்பெறாது மக்களால் புறக்கணிக்கப்படுகிறான். இனி, அவன் சுவர்க்கம் முதலிய, இதைவிட மேலான உலகத்தைப்பெறுவது எங்ஙனம்? அது ஒருபொழுதும் வாய்க்காது. ஆக, வாழ்க்கையின் தத்துவம் யாது எனின்:
32. ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே
ஏவம் பஹுவிதா யஜ்ஞா-இங்ஙனம் பலவித வேள்விகள், ப்ரஹ்மண: முகே-வேதங்களின் வாயிலாக, விததா-விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன, தாந் ஸர்வாந் கர்மஜாந்-அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன, வித்தி-என்று உணர். ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே-இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.
பொருள் : பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.
பிரம்மா, வேதம், இயற்கை இவை யாவும் ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள். இயற்கையின் நடைமுறையை அறிபவன் வேதத்தை அறிபவன் ஆகிறான். இயற்கை கர்ம சொரூபமானது. அந்தக் கர்மத்துக்கும் அடிப்படையான திட்டம் ஒன்று உண்டு. அதாவது கர்மத்தை யாகமாக மாற்றுபவர் எல்லாரும் இயற்கை அல்லது வேதத்தின் திட்டத்தைத் தெரிந்துகொண்டவர் ஆகின்றனர். இயற்கையில் நடைபெறுகிற எல்லாக் கர்மங்களையும் யாகமாக மாற்றலாம். கர்மம் மனிதனைப் பந்தப்படுத்தும் தன்மையது. அதே கர்மத்தை யாகமாகச் செய்தால் அது விடுதலையை உண்டுபண்ணுகிறது.
விடுதலை எங்ஙனம் வந்து அமைகிறது? விடை வருகிறது :
33. ஸ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே
பரந்தப பார்த-பரந்தப அர்ஜுனா! த்ரவ்யமயாத் யஜ்ஞாத்-திரவியத்தைக் கொண்டு செய்யப்படும், ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்ரேயாந்-ஞானவேள்வி சிறந்தது, அகிலம் கர்ம: ஸர்வம் -கர்மமெல்லாம், ஜ்ஞாநே பரிஸமாப்யதே-ஞானத்தில் முடிவு பெறுகிறது.
பொருள் : பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.
மனிதன் அறிவைப் பெறுதற்கு உயிர் வாழ்ந்திருக்கிறேன். பொருளைப் பெருக்குவதால் கவலை அதிகம் உண்டாகிறது. ஓரளவுக்குமேல் திரவியம் ஒருவனுக்குப் பயன்படாது. ஞானம் பெறுகின்றவளவு சாந்தியும் மோக்ஷமும் கைகூடும். திரவிய விருத்தி ஜடபுத்தியை உண்டுபண்ணுகிறது. ஞான வளர்ச்சி ஆத்ம சைதன்யமாகிறது. திரவியம் பிரகிருதியில் கட்டுப்படுத்துகிறது. ஞானமோ, ஆத்மாவானது கர்மத்தில் கட்டுப்படாத சாக்ஷி என்ற பேருண்மையை விளக்குகிறது. ஆகையால்தான் யக்ஞமெல்லாம் விரைவில் ஞான யக்ஞமாக வடிவெடுக்கவேண்டும். தேவாராதனையில் ஒருவன் ஒரு மணங்கு கற்பூரத்தை எரித்து அதைப் பெரிய பூஜையென்று எண்ணினான். மற்றொருவன் கற்பூரம் எரிந்தால் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை; அங்ஙனம் கர்மம் ஞானமாய்விடுங்கால் ஜீவபோதத்தில் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை என்று அறிகிறான். முந்தையது திரவிய யக்ஞம்; பிந்தியது ஞான யக்ஞம். சாதகனுக்கு சிரேயஸைத் தருவது ஞானயக்ஞம்.
பணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் வாஸ்தவமான மனிதன். பணத்தை எப்படி உபயோகிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாதவர்கள் மனிதர்கள் என்ற பெயருக்கு அருகரல்லர்.
ஞானத்தைப் பெறுதற்கு இன்னும் எத்தகைய மனப்பான்மை வேண்டும்? விடை வருகிறது :
34. தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஸிந:
ப்ரணிபாதேந பரிப்ரஸ்நேந ஸேவயா-வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும், தத் வித்தி-அதனை அறிந்துகொள், தத்த்வதர்ஸிந: ஜ்ஞாநிந-உண்மை காணும் ஞானிகள், தே ஜ்ஞாநம் உபதேக்ஷ்யந்தி-உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.
பொருள் : அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.
பண்டம் மாற்றுவது போன்று ஞானத்தைப் பெறமுடியாது. அதற்கேற்ற சீரிய இணக்கத்தை சிஷ்யன் குருவோடு வைத்துக் கொள்ளவேண்டும். வீழ்ந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதன் மூலம் சிஷ்யன் தன்னைக் குருவிடம் ஒப்படைக்கிறான். பந்தம் மோக்ஷம், ஆத்மா அநாத்மா ஆகியவைகளைப்பற்றி முறையாகக் கேள்விகள் கேட்பதால் தனது மனபரிபாகத்தை அவன் தெரிவிக்கிறான். குற்றேவல் புரிவதால் குருவுடைய உடல் வாழ்க்கை என்ற யக்ஞத்தில் சிஷ்யன் தன்னை ஆகுதியாகச் சமர்ப்பிக்கிறான். இங்ஙனம் முறையாக மெய், மொழி, மனம் ஆகிய முக்கரணங்களும் ஆசாரியனுக்கென்றே அர்ப்பிக்கப்படுகின்றன.
அத்தகையவனிடத்து குரு கருணைகூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிக்கிறார். வெறும் வாசாஞானி குருவாகமுடியாது. எரியும் விறகுக்கட்டைதான் மற்றொரு விறகில் தீ மூட்டும். அங்ஙனம் யாரிடத்துப் பிரம்ம ஞானம் பூர்த்தியாயிருக்கிறதோ அவரே சிஷ்யனுக்கும் பிரம்மஞானத்தைப் புகட்டவல்லவராவார். பூரண ஞானமும் கருணையும் யாரிடத்து நிறைந்திருக்கிறதோ அவர் குரு ஸ்தானத்துக்குத் தகுதியுடையவர் ஆவார்.
தனது குருவைக் கேவலம் மனுஷ்யராகக் கருதுபவனுக்குப் பிரார்த்தனையாலும் பக்தியாலும் என்ன பலனுண்டாகக்கூடும்? குருவைக் கேவலம் மனுஷ்யரென அவன் கருதக்கூடாது. ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால், அத் திவ்விய தரிசனத்தின் முதல் அங்கமாகக் குருவைத்தான் சிஷ்யன் காண்கிறான். பிறகு அந்தக் குருவே ஈசுவரனாக மாறி ஈசுவர சொரூபத்தைக் காட்டுகிறார். அப்பால் ஈசுவரனும் குருவும் ஒருவரேயென்று சிஷ்யன் தெரிந்து கொள்கிறான். அவன் விரும்பும் வரங்களையெல்லாம் திவ்விய குரு அருளுவார். இம்மட்டோ! அவனைப் பிரம்ம நிர்வாணமாகிய பரமானந்த சுகத்துக்கும் அழைத்துச் செல்வார். அன்றி, பக்தன், ஈசுவரன் என்ற சம்பந்தமுள்ள துவைத நிலைமையில் அவன் இருக்கவேண்டினும் அங்ஙனமே இருக்கலாம். சிஷ்யன் எதைக் கேட்டாலும் குரு அதை நிச்சயமாகத் தருகிறார்.
மனுஷ்ய குருவானவர் மஹாமந்திரத்தை உனது காதில் மட்டும் உபதேசிக்கிறார். தெய்வ குருவோ, ஆத்மாவுக்குள் சைதன்யத்தைச் செலுத்துகிறார். ஈசுவரனுடைய ரகஸியங்களை அறிய வேண்டுமென்ற தீவிர புத்தி உனக்கு இருக்குமானால், அவ்வீசுவரனே ஸத்குரு ஒருவரை உன்னிடம் அனுப்புவார். பக்தனே, குருவைத் தேடவேண்டிய விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டாம்.
குருவும் சிஷ்யனும் மேலோராய் அமையுமிடத்து :
35. யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ
யேந பூதாந்யஸேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி
யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்து கொண்ட பின்னர், பாண்டவ புந: ஏவம் மோஹம்-பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம், ந யாஸ்யஸி-அடைய மாட்டாயோ, யேந பூதாநி அஸேஷாணி-இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி, ஆத்மநி அதோ மயி த்ரக்ஷ்யஸி-நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.
பொருள் : அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.
பொருள்களை உள்ளபடி காணாதிருப்பது மயக்கம். மெய்ஞ் ஞானம் உதயமாகுமிடத்து எல்லாப் பொருள்களும், உயிர்களும் ஒரே பரம்பொருளிடத்து ஒன்றித்திருப்பது பிரத்தியக்ஷமாகும். ஒன்றென உணர்வது ஞானம்; பலவாகக் காண்பது அக் ஞானம்.
ஞானத்தீயில் பாபச் செயல்களெல்லாம் வெந்து ஒழிகின்றன. எப்படி யெனின் :
36. அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி
ஸர்வேப்ய: பாபேப்ய: அபி-பாவிகளெல்லாரைக் காட்டிலும், பாபக்ருத்தம: அஸி சேத்-நீ அதிகப் பாவியாக இருந்தாலும், ஜ்ஞாநப்லவேந ஏவ-ஞானத்தோணியால், ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி-அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்.
பொருள் : பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய்.
பாபம் என்னும் சொல்லில் புண்ணியமும் அடங்கியிருக்கிறது. ஏனென்றால் ஒரேசெயல் பயன்படுத்துதற்கு ஏற்றவாறு புண்ணியமாகவோ பாபமாகவோ காட்சி கொடுக்கிறது. ஞானமில்லாதவர்கள் கர்மத்தை முறைதவறிச் செய்து அதைப் பாபமாகக்கிக் ள்கின்றனர். ஞானமுடையவர் அதே கர்மத்தை முறையாகச் செய்து அதைப் புண்ணியமாக மாற்றுவது மல்லாது கர்ம பந்தத்திலிருந்தும் விடுபடுகின்றனர். ஞானம் பாபத்தை எப்படிப் போக்குகிறது? அது ஒரு உபமானத்தால் விளக்கப்படுகிறது.
37. யதைதாம்ஸி ஸமித்தோऽக்நிர்பஸ்மஸாத்குருதேऽர்ஜுந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா
அர்ஜுந-அர்ஜுனா! யதா ஸமித்த அக்நி-நன்கு கொளுத்துண்ட தீ, ஏதாம்ஸி பஸ்மஸாத் குருதே-விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ, ததா ஜ்ஞாநாக்நி:-அதே போல ஞானத் தீ,
ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே-எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.
பொருள் : நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.
பிராரப்த கர்மத்தைத் தவிர மற்ற கர்மங்களெல்லாம் வெந்து போகின்றன. வெந்துபோன விதை பழைய வடிவத்தோடு இருப்பினும் அதை விதைத்தால் செடியாக முளைக்காது. அங்ஙனம் ஞானத் தீயானது கர்மங்களை அவித்துவிடுகிறது. பிராரப்த கர்மம் மட்டும் வேலை செய்யும் எனினும் அதற்கு வேகம் கிடையாது. சொப்பனத்தில் பயந்து எழுந்த ஒருவனுக்கு ஹிருதயம் துடிதுடிக்கிறது. எனினும் விழித்துக்கொண்ட பிறகு அதில் கேடு ஒன்றுமில்லை. அங்ஙனம் பிராரப்த கர்மமும் ஞானியை ஒன்றும் செய்யாது.
ஞானம் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததனால் :
38. ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி
இஹ ஜ்ஞாநேந ஸத்ருஸம்-இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல், பவித்ரம் ஹி ந வித்யதே-தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை, தத் காலேந யோகஸம்ஸித்த:-தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன், ஸ்வயம் ஆத்மநி விந்ததி-தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்.
பொருள் : ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.
கனவில் ஒருவன் அடியுண்கிறான்; குத்துப்படுகிறான்; பெருந்துன்பத்துக்கு ஆளாகிறான். அப்படி அவன் வருந்துகையில் தூக்கத்தினின்று அவனைத் தட்டியெழுப்பினால் ஜாக்கிரதாவஸ்தைக்கு வருகிறான். தன்னைப்பற்றிய உண்மை ஞானம் ஓரளவு ஜாக்கிர தாவஸ்தையில் வருகிறது. தன்னை யாரும் துன்புறுத்தவில்லை யென்றும், தான் உண்மையில் வருந்தவில்லையென்றும் ஜாக்கிரதா வஸ்தையில் அவன் உறுதிப்படுத்துகிறான். அந்த அளவில் விழிப்பானது அக்ஞான மலத்தினின்று அவனைத் தூயவனாக்குகிறது. இங்ஙனம் மனிதனுக்குத் தன் சொரூப ஞானம் உதயமாகுங்கால் ஜனன மரணம் என்ற அக்ஞான அழுக்கினின்று நித்திய சுத்தனாக மாற்றப்பெறுகிறான். ஆகையால்தான் பரிசுத்தப்படுத்துபவைகளுள் ஞானத்துக்கு நிகரானது ஒன்றுமில்லை. முறையாகக் கர்மயோகம் செய்பவன் வாழ்க்கையையே ஞான யக்ஞமாகச் செய்துகொள்கிறான். அதனால் நாளடைவில் மன பரிபாகம் அடைந்து ஞானத்தை நிச்சயமாகப் பெறுகிறான்.
கர்ப்பவாசம் செய்யும் சிசு பத்துமாசத்தில் பிறக்கிறது. அதுபோன்று காலக்கிரமத்தில் என்பதற்கு வரையறை இல்லை. அதற்கு விடை வருகிறது :
39. ஸ்ரத்தாவாம்லூல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஸாந்திமசிரேணாதிகச்சதி
ஸம்யதேந்த்ரிய:-இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக, தத்பர: ஸ்ரத்தாவாந்-சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன், ஜ்ஞாநம் லபதே-ஞானத்தையடைகிறான், ஜ்ஞாநம் லப்த்வா-ஞானத்தையடைந்த பின், அசிரேண பராம் ஸாந்திம் அதிகச்சதி-விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.
பொருள் : பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.
குருவை வணங்குதல், கேட்டல், பணிவிடை செய்தல் ஆகிய இவையாவும் சில சமயங்களில் வெளி வேஷமாய்ப் போய்விடலாம். ஆனால் எவ்விடத்தில் உண்மையான சிரத்தையும், ஞான முயற்சியும், புலனடக்கமும் மேலோங்கியிருக்கின்றனவோ அங்கு ஞான வளர்ச்சி உருவெடுப்பது உறுதி. சிரத்தை முதலியவைகளின் தீவிரத்திற்கு ஏற்றவாறு ஞானம் விரைவில் வந்தமையலாம்; பல ஜன்மங்களில் அது கைகூடலாம்; ஒரே ஜன்மத்தில் வந்தமையலாம்; சில வருஷங்களில் சித்தியாகலாம். ஒரு வருஷம், ஒரு கணப்பொழுது-இப்படித் தீவிரத்துக்கு ஏற்றவாறு காலம் குறுகுகிறது. ஞானத்தை அடைபவன் எல்லாம் ஈசுவரனிடத்து அடங்கப் பெற்றிருப்பதாகக் காண்பது மட்டுமல்ல, ஞானத்துக்கு ஏற்ற சாந்தியை அல்லது முக்தியையும் அக்கணமே பெறுகிறான்.
சம்சயம் வாழ்க்கைக்குச் சத்துருவாகிறது. அது எப்படி எனின் :
40. அஜ்ஞஸ்சாஸ்ரத்ததாநஸ்ச ஸம்ஸயாத்மா விநஸ்யதி
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஸயாத்மந:
அஜ்ஞ ச ஸ்ரத்ததாந் ச-அறிவும் சிரத்தையுமின்றி, ஸம்ஸயாத்மா விநஸ்யதி-ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான், ஸம்ஸயாத்மந: அயம் லோக: ந அஸ்தி-ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை, பர: ந ஸுகம் ச ந-மேலுலகமில்லை; இன்பமுமில்லை.
பொருள் : அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.
ஆத்ம சொரூபத்தை அறியாதவன் அறிவிலி அல்லது அக்ஞானியாவான். தன் மீதும், குரு மீதும், சாஸ்திரத்திடத்தும் நம்பிக்கை வைக்காதவன் சிரத்தையில்லாதவனாகிறான். உலகத்தில் எல்லாரிடத்தும் சந்தேகம் கொள்ளும் இயல்புடையவர் சிலர் இருக்கின்றனர். அத்தகையவர் ஐயமே வடிவெடுத்தவர் ஆவர். யார் எதைச் சொன்னாலும், செய்தாலும் அவையெல்லாம் தமக்குக் கேடு விளைவிக்கும் என்றே அன்னவர் கருதுகின்றனர். இம்மைக்குத் தகுதியுடையவனே மறுமைக்கும் தகுதியுடையவன் ஆகிறான். உலகத்தவரை நம்புகிறவளவு உலகத்தவர் ஒரு மனிதனுக்கு உரியவர் ஆகின்றனர். பரஸ்பர நம்பிக்கையிலும் உதவியிலுந்தான் உலக வாழ்க்கையில் சுகம் உண்டாகிறது. ஒருவரையும் நம்பாது உலகத்தவருக்கு வேற்றானாயிருப்பதே பெரிய வேதனையாகிறது. இத்தகைய பான்மையுடையவனுக்கு ஆத்ம ஞானம் கைகூடாது; வாழ்க்கைக்கும் அவன் தகுதியற்றவனாகிறான்.
நம்பிக்கையில் குழந்தையைப்போல ஆனாலொழிய ஈசுவரனைக் காண்பது துர்லபம். யாரேனும் ஒருவனைச் சுட்டிக்காட்டி, அவன் உன் சகோதரன் என்று தாய் ஒரு குழந்தையிடம் சொன்னால் அக் குழந்தை அவள் சொல்வதை உண்மையெனவே நம்பும். இப்படிப்பட்ட குழந்தையின் விசுவாசம் எவனிடமிருக்கிறதோ அவனிடந்தான் ஈசுவரனுக்குக் கருணை பிறக்கிறது. எல்லாவற்றிலும் கணக்குப் பார்க்கும் சுபாவத்துடனிருந்தால் ஈசுவரனைக் காணவே முடியாது.
ஐயத்தை அகற்றுவதற்கு உற்ற உபாயம்:
41. யோகஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சிந்நஸம்ஸயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய
தனஞ்ஜயா!-அர்ஜுனா, யோக ஸந்ந்யஸ்த கர்மாணம்-யோகத்தால் செய்கைகளைத் துறந்து,
ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்ஸயம்-ஞானத்தால் ஐயத்தை அறுத்து, ஆத்மவந்தம்-தன்னைத் தான் ஆள்வோனை, கர்மாணி ந நிபத்நந்தி-கட்டுப்படுத்த மாட்டா.
பொருள் : யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.
மீன் சேற்றுக்குள் புதைந்திருந்தும் சேற்றின் அழுக்கு அதன் மீது படிவதில்லை. ஓயாது கர்மம் செய்தும் அதில் கட்டுப்படாதவன் யோகி. உலகத்தைப்பற்றிய உண்மையை உள்ளபடி அறியுமளவு அதன்மீது சந்தேகம் நீங்கி சிரத்தை அதிகரிக்கிறது. அது பூரண ஞானமாகப் பரிணமிக்குமிடத்து எல்லாம் ஒரு பொருளின் பல்வேறு தோற்றம் என்ற ஐக்கிய புத்தி உண்டாகிறது. ஐயம் கொள்ளுதற்குப் பின்பு இடமில்லை. அனைத்திடத்தும் பூரண விசுவாசம் மேலிடும். ஆத்மபோதம் அடையப்பெற்ற நிறை மனிதன் ஆகிறான் அவன். நிறைகுடம் நீர் தளும்புவதில்லை. நிறை மனிதன் கர்மத்தில் தளையுறுவதுமில்லை; கர்மத்தை அவன் செய்யாது நிறுத்திவிடுவதுமில்லை
-
42. தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:
சித்த்வைநம் ஸம்ஸயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத
தஸ்மாத் பாரத-ஆகவே பாரதா, ஹ்ருத்ஸ்தம்-நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்,
அஜ்ஞாநஸம்பூதம் ஆத்மந: ஏநம் ஸம்ஸயம்-அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை,
ஜ்ஞாந அஸிநா: சித்த்வா-ஞானவாளால் அறுத்து, யோகம் ஆதிஷ்ட: உத்திஷ்ட-யோக நிலைகொள், எழுந்து நில்.
பொருள் : அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.
எல்லாக் கேடுகளையும் உண்டுபண்ணுவது சந்தேகம். அது அக்ஞானத்தில் பிறந்து அந்தக்கரணத்தில் குடியிருக்கிறது. வெளிச்சம் வந்தால் இருள் தானே மறைவது போன்று ஆத்ம ஞானம் ஒன்றே ஐயத்தை அகற்றுதற்கு உற்ற உபாயம்.
கேடு, தாபம், தவறு இவைகளை ஒழிக்கவல்லது ஞானம். சூரியோதயத்தில் வெளிச்சமும் வருகிறது; விழிப்பும் வருகிறது; வினையாற்றுகிற பான்மையும் வருகிறது. அங்ஙனம் ஆத்ம ஞானத்தில் ஆத்ம போதமும்; வினையாற்றும் வல்லமையும்சேர்ந்து வருகின்றன. ஆத்மபோதம் என்னும் விழிப்பைத் தருவதுதான் ஜீவன் ஒருவனுக்குச் செய்யும் சேவைகளில் தலைசிறந்ததாகிறது. விழித்துக்கொண்ட மனிதன் வாழ்க்கையில் தன் வல்லமையைக் காட்டுவான்.
சீதையைத் தேடித் தேன் திசைக்குச் சென்ற ஆஞ்ஜனேயனுக்குக் கடல் கரையில் ஐயம் வந்து அல்லல்படுத்தியது. ஆனால் அவனது நிஜசொரூபத்தை ஜாம்பவான் அவனுக்கு ஞாபக மூட்டினான். உடனே ஆத்மபோதம் பெற்று எழுந்திருந்தான். ஐயம் அகன்றது. அரும் செயலுக்கு அவன் அருகதையுடையவனானான்.
இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஞானகர்ம ஸந்யாஸ யோகோ நாம
சதுர்த்தோऽத்யாய:
-
ஐந்தாம் அத்தியாயம்
ஸந்யாஸ யோகம்
கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கியிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை அளிக்கும் என்று கூறுபவர் பலர். அவர்கள் அறிவில் தேர்ச்சி பெறாதவர்கள். ஆனால், கர்ம யோகமின்றி ஞான யோகத்தைப் பெற இயலாது. சுக துக்கங்களைப் பொருட்படுத்தாமல் கர்ம யோகத்தையே தழுவியிருந்தால் பலனைக் கடுகப் பெறலாம். எல்லா ஆத்மாக்களும் ஒரே மாதிரியானவை. தோற்றம் வேறுபாடுகளெல்லாம் தேக சம்பந்தத்தால் வந்தவை என்ற உணர்வு வேண்டும்.
கர்மயோகமே கர்ம ஸந்யாஸமாகிறது 1-13 -கர்மம் பிரகிருதிக்கு உரியது; ஆத்மாவுக்கு கர்மம் இல்லை 14-17 -சமதிருஷ்டி ஞானத்தின் விளைவு 18-19 -விஷய சுகம் வேறு, பிரம்ம சுகம் வேறு 20-29.
அர்ஜுந உவாச
1. ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஸம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஸ்சிதம்
அர்ஜுந உவாச க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான், கண்ணா ! கர்மணாம்-செய்கைகளின்
ஸந்ந்யாஸம் புந: யோகம் ச ஸம்ஸஸி-துறவியும் பின்னர் அவற்றுடன் கலப்பதை பற்றியும் புகழ்ந்து பேசுகிறாய், ஏதயோ: யத் ஏகம்-இவ்விரண்டில் எதுவொன்று, ஸ்ரேய: ஸுநிஸ்சிதம்-சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி, தத் மே ப்ரூஹி-என்னிடம் சொல்!
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.
நான்காவது அத்தியாயம் 18,19,21,22,24,32,33,37,41 சுலோகங்களில் கர்ம ஸந்யாஸத்தைப் பகவான் வற்புறுத்தினார். பிறகு அதே அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் கர்ம யோகத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றார். முரண்படுகிற இவ்விரண்டையும் ஏககாலத்தில் மனிதன் கையாள முடியாது. ஆக, அர்ஜுனன் உள்ளத்தில் இந்த ஐயம் எழுந்தது.
ஸ்ரீபகவாநுவாச
2. ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நி:ஸ்ரேயஸகராவுபௌ
தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ விஸிஷ்யதே
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஸந்ந்யாஸ: கர்மயோக உபௌ ச-துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும், நி:ஸ்ரேயஸகரௌ-உயர்ந்த நலத்தைத் தருவன, து தயோ: கர்மஸந்ந்யாஸாத் கர்மயோக-இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம், விஸிஷ்யதே-மேம்பட்டது.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.
சிரேயஸ் அல்லது சிறப்பு என்பது முக்தி. ஜீவன் அடைபவைகளுள் தலைசிறந்ததாகிய முக்தியானது கர்ம ஸந்யாஸத்தால் அடையப்படும். அதே முக்தி கர்மயோகத்தாலும் அடையப்படும். ஹிமாசலத்தில் பத்ரிகாச்ரமத்துக்கு ஆகாய விமானத்திலும் செல்லலாம், நடந்தும் போகலாம். இரண்டு முறைகளிலும் அந்த ÷க்ஷத்திரம் அடையப்பெறுகிறது. ஆனால் நடந்து செல்பவருக்கு உண்டாகும் உடல் பயிற்சியும், மக்கள் இணக்கமும், இதர இயற்கை ஞானமும் விமானத்தில் பறந்து செல்பவருக்கு உண்டாகாது. நடந்து செல்லுதற்கு ஒப்பானது கர்மயோகம். பல விதங்களில் அது ஜீவனைப் பண்படுத்துகிறது. தேகம் எடுத்தவர் கர்மயோகம் செய்வதே சிறந்தது. ஸந்யா ஸமோ சாந்தியையும் ஞானத்தையும் தருகிறது. கர்மயோகம் சாந்தியையும் ஞானத்தையும் எப்படித் தரும் என்று எண்ணலாம். அதற்கு விளக்கம் வருகிறது.
3. ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே
மஹாபாஹோ!-பெருந்தோளாய்! ய: ந த்வேஷ்டி-எவன் வெறுப்பு இல்லாமலும், ந காங்க்ஷதி-விரும்புதலும் இல்லாமலும், ஸ நித்ய ஸந்ந்யாஸீ ஜ்ஞேய:-அவன் எப்பொழுதும் சந்நியாசியே தான் என்று அறியத்தக்கவன், ஹி நிர்த்வந்த்வ:-இருமை நீங்கி, ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே-எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.
பொருள் : பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.
மனிதனைக் கட்டுப்படுத்துவது கர்மமல்ல. கஷ்டப்பட்டு வேலை செய்வதை ஒருவன் வெறுப்பானாகில், அல்லது வேலை செய்யாது சோம்பித்திரிவதை ஒருவன் விரும்புவானாகில் அவன் இன்பதுன்பம் முதலிய இருமைகளில் கட்டுண்டவனாகிறான். எத்தனையோ அலுவல்களை ஆற்றுதற்கிடையில் யோகி ஒருவன் விருப்பு வெறுப்பற்றிருப்பானாகில் அவன் சித்தத்தில் ஒரு விருத்தியும் உண்டாவதில்லை. மனதை எதுவும் தளைப்பதில்லை. ஆகையால் கர்மம் செய்தும் செய்யாதவனாகிறான். அந்த அளவில் அவன் நித்தியஸந்யாஸியே. ஸந்யாஸ ஆச்ரமம் எடுத்துக்கொண்டதன் வெளியறிகுறிகள் அவனிடத்து இருக்கவேண்டும் என்பதில்லை. மனமே பந்தம் அல்லது மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது.
4. ஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்
ஸாங்க்யயோகௌ-(மேலே கூறிய) சந்நியாசத்தையும் யோகத்தையும், ப்ருதக்-வெவ்வேறென்று, பாலா: ப்ரவதந்தி பண்டிதா: ந-அறியாதவர் கூறுகிறார்கள், பண்டிதர்கள் அங்ஙனம் கூறார், ஏகம் அபி ஸம்யக் ஆஸ்தித:-யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன், உபயோ: பலம் விந்ததே-இரண்டின் பயனையும் எய்துகிறான்.
பொருள் : சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான்.
கர்ம ஸந்யாஸம் ஈண்டு சாங்க்யம் எனப்படுகிறது. சாஸ்திரத்தின் உட்கருத்தை அறியாத அவிவேகிகள் பாலர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒன்றை அனுஷ்டிப்பது இரண்டின் பலனைப் பெறுவது எங்ஙனம் என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :
5. யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஸ்யதி ஸ பஸ்யதி
ஸாங்க்யை: யத் ஸ்தாநம் ப்ராப்யதே-சாங்கியர் எந்த நிலையை பெறுகின்றனரோ, தத் யோகை: அபி கம்யதே-அந்த நிலையையே யோகிகளும் அடைகிறார்கள், ய: ஸாங்க்யம் யோகம் ச ஏகம் பஸ்யதி-எவன் சாங்கியத்தையும் யோகத்தையும் ஒன்றாகக் காண்பானோ,
ஸ ச பஸ்யதி-அவனே காட்சியுடையோன்.
பொருள் : சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.
அறிவைக் கையாண்டு இயற்கையின் இயல்பு எத்தகையது என்று எண்ணிப் பார்ப்பது சாங்க்யம். ஞானமார்க்கம் என்பதும் இதுவே. அப்படி விசாரித்துப் பார்க்குமிடத்துப் பிரகிருதியில் பற்று வைப்பதே துன்பமனைத்துக்கும் முதற்காரணம் என்பது விளங்கும். பிரகிருதியினின்று விலகியிருத்தலே முக்தியாகிறது. இனி, யோகம் என்பது கர்மத்தின் மூலம் பிரகிருதியோடு தொடர்வு வைத்தலாகும். பற்றில்லாது கர்மம் செய்பவனுக்குப் பிரகிருதியானது தாய்போன்று துணைபுரிகிறது; ஆற்றலும் அறிவும் ஆனந்தமும் பெருகும்படி செய்கிறது. பிரகிருதியில் கட்டுப்படாதிருப்பதே அதன்கண் புனிதம் காண்பதற்கு உற்ற உபாயம். அதில் கட்டுப்படாமையினால் முக்தியின் மேன்மையெல்லாம் யோகிக்கு வந்தமைகிறது. இங்ஙனம் சாங்க்யமும் யோகமும் ஒன்றாகின்றன. இரண்டும் ஒன்று என்று அறிந்தவன் உண்மையை அறிந்தவனகிறான்.
இவ்விரண்டு மார்க்கங்களுள் பொதுவாக எல்லா சாதகர்களுக்கும் நன்கு பயன்படுவது எது? அடுத்த சுலோகம் விளக்குகிறது :
6. ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கமாப்துமயோகத:
யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம ந சிரேணாதிகச்சதி
து மஹாபாஹோ-ஆனால் பெருந் தோளாய், அயோகத: ஸந்ந்யாஸ: ஆப்தும் து:கம்-யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம், யோக யுக்த: முநி: ப்ரஹ்ம-யோகத்தில் பொருந்திய முனி பிரம்மத்தை, நசிரேண அதிகச்சதி-விரைவில் அடைகிறான்.
பொருள் : பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில் பிரம்மத்தை அடைகிறான்.
காய் ஒன்று மரத்தில் முறையாக ஒட்டியிருந்தால் மரத்திலிருந்து பெறவேண்டிய சாரத்தையும் வலிவையும் பெற்றுப் பின் தானே மரத்தைவிட்டுப் பிரிந்து பழமாக விழுகிறது. யோகி ஒருவன் முறையாகக் கர்மயோகம் செய்வதால் பிரகிருதியினின்று பெறவேண்டிய அனுபவங்களைப் பெற்று, அந்த ஞான முதிர்ச்சியால் பிரம்ம நிஷ்டனாகிறான். இதுவே முறையான கர்ம ஸந்யாஸமாகிறது. ஆக, எல்லாரும் கர்மயோகத்தைக் கையாளுதல் வேண்டும்.
கர்மயோகம் சாதகனை எப்படிப் பண்படுத்துகிறது? பகவான் பகர்கிறார்.
7. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே
விஜிதாத்மா-தன்னைத் தான் வென்றோன், ஜிதேந்த்ரிய:-இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், விஸுத்தாத்மா-தூய்மையுற்றோன், ஸர்வ பூதாத்ம பூதாத்மா-எல்லா உயிர்களுந் தானே யானவன், யோகயுக்த: குர்வந் அபி-அவன் கர்மயோகியாக தொழில் செய்து கொண்டிருப்பினும், ந லிப்யதே-அதில் ஒட்டுவதில்லை.
பொருள் : யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் அவன் தொழில் செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை.
ஜீவர்களெல்லாம் கர்மத்தில் ஈடுபடுகின்றவளவு அதில் கட்டுண்டு கீழ்மையடைகின்றனர். ஆனால் கர்மயோகி கர்மம் செய்கின்றவளவு அதினின்று விடுதலையடைகின்றான். நிஷ்காமியமாகக் கர்மம் செய்யப்படுவதால் நிராசை மனத்தெளிவை உண்டு பண்ணுகிறது. ஆசை அகலுகின்றவளவு உடலும் இந்திரியங்களும் வசப்படுகின்றன. நிராசை நாளடைவில் ஞானமாக வடிவெடுக்கிறது. எல்லா உயிர்க்கும் அந்தர்யாமியாயிருப்பவர் பரமாத்மா ஒருவரே என்ற அனுபவம் அத்தகைய ஞானத்தின் பயனாம். இங்ஙனம் கர்ம பந்தத்தை நீக்குவதால் கர்மயோகமே கர்ம ஸந்யாஸமாகப் பரிணமிக்கிறது.
ஒருவனுக்கு எவ்வளவு காலம் திவ்விய சக்ஷúஸ் உண்டாக வில்லையோ, எவ்வளவு காலம் பொற்குளிகையால் பித்தளை பொன்னாக மாறவில்லையோ அவ்வளவு காலம் வரையில் நான்தான் கர்த்தா என்ற மதிமயக்கம் இருக்கும்; அதுவரையில் இந்த நற்காரியத்தை நான் செய்தேன். அந்தக் கெட்ட காரியத்தை நான் செய்தேன் என்ற வித்தியாச மனோபாவம் இருந்து தீரும். இந்த வேறுபாடுற்ற மனோபாவந்தான் சம்ஸாரம் நீடித்திருப்பதற்குக் காரணமாகிய மாயை. நல்வழியில் செலுத்துவதும், ஸத்வகுணம் மேலோங்கி நிற்பதுமாகிய வித்யாமாயையில் சரணம் புகுந்தாலோ ஒருவன் ஈசுவரனை அடைவான். ஈசுவரனே நேரில் கண்டு அவனுடைய ஸ்வரூபத்தை அறிபவன்தான் உண்மையான முக்தன்; அவன் மாயையாகிய ஸமுத்திரத்தைத் தாண்டுபவன். ஈசுவரனே கர்த்தா, தான் கர்த்தா அல்லன் என்று உணர்பவன் சரீரத்தோடிருப்பவனும் அவன் முக்தனே.
கர்மபந்தத்தினின்று விடுபட்டதன் அறிகுறிகளாவன:
8. நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
பஸ்யஞ்ச்ருண்வந்ஸ்ப்ருஸஞ்ஜிக்ரந்நஸ்நங்கச்சந்ஸ்வபந்ஸ்வஸந்
9. ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்
பஸ்யந்-காண்கினும், ச்ருண்வந்-கேட்கினும், ஸ்ப்ருஸந்-தீண்டினும், ஜிக்ரந்-மோப்பினும், அஸ்நந்-உண்பினும், கச்சந்-நடப்பினும் ஸ்வபந்-, உறங்கினும், ஸ்வஸந்-உயிர்ப்பினும்
தத்த்வவித் யுக்த:-உண்மை அறிந்த யோகி, கிஞ்சித் ஏவ ந கரோமி-நான் எதனையும் செய்வதில்லை, இதி மந்யேத-என்று நினைக்க வேண்டும்.
ப்ரலபந்-புலம்பினும், விஸ்ருஜந்-விடினும், க்ருஹ்ணந்-வாங்கினும், உந்மிஷந்-இமைகளைத் திறப்பினும், நிமிஷந் அபி-மூடினும் இந்த்ரியாணி, இந்த்ரியார்தேஷு-இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில், வர்தந்தே இதி தாரயந்-செயல் படுகின்றன என்று உணர்ந்து கொண்டு, (நான் எதனையும் செய்வதில்லை என்று கருதி இருக்க வேண்டும்).
பொருள் : உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,
பொருள் : புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.
வாழ்க்கை சம்பந்தமான செயல்கள் யாவும் சரீரத்தில் நடை பெறுகின்றன. ஆத்மாவுக்கோ செயலில்லை என்ற உண்மையைத் தெரிந்து அதில் நிலைத்திருப்பவனுக்கு நான் கர்த்தா என்ற எண்ணமில்லை. வண்டியில் ஊர்ந்து செல்பவன் தன் செயலாய் அகங்கரிக்கும்பொழுது நான் போகிறேன் என்கிறான். தூக்கத்தில் பேசிய பேச்சுக்கு ஒருவன் கர்த்தாவல்லன். ஏதோ ஒன்றை ஆழ்ந்து எண்ணிக்கொண்டு ஆகாரம் புசித்தவனுக்கு என்ன பதார்த்தங்களை உண்டான் என்பது தெரியாது. அங்ஙனம் ஆத்ம சொரூபத்தில் திளைத்திருப்பவனுக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், பிராணன் ஆகியவைகளின் செயல்கள் தன்னுடையவைகளாகத் தென்படா.
தான் வெறும் கருவி; ஈசனே கர்த்தா என்று அனுபூதியில் அறிந்து கொண்டவனது வாழ்க்கை எப்படிப்பட்டது?
சுவர்ண குளிகையின் ஸ்பரிசத்தால் முற்றும் பொன்னாக மாறிய கத்தியானது பழைய வடிவத்தில் இருக்கிறது. ஆனால் அது வெட்டுதற்கு உதவாது. அங்ஙனம் எல்லாம் ஈசன் செயல் என்ற அனுபூதியடைந்தவன் பழையபடி கிருத்தியங்களைச் செய்கிறான். ஆயினும் அவனிடம் அகங்காரத்தின் விஷம் சிறிதளவுமில்லை. அவன் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.
கர்மத்துக்கும் அவனுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது? விடை வருகிறது. (8-9)
10. ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா
ய: கர்மாணி ப்ரஹ்மணி ஆதாய-எவன் செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டு,
ஸங்கம் த்யக்த்வா, கரோதி-பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அம்பஸா பத்ம பத்ரம் இவ-நீரில் தாமரையிலை போல், ஸ: பாபேந ந லிப்யதே-அவன் பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.
பொருள் : செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் தொழில் செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.
தாமரையானது தண்ணீரிலே தோன்றி தண்ணீரிலே வளர்ந்து தண்ணீரிலே நிலைபெற்றிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது தானே பட்டுப்போம். தண்ணீரில் தொடர்ந்திருப்பினும் தாமரையில் அதில் நனைவதில்லை. அங்ஙனம் மனிதன் கர்மத்திலே பிறந்து, கர்மத்திலே வளர்ந்து, கர்மத்திலே நிலை பெற்றிருக்கிறான். எனினும் தன் பேரியல்பாகிய பிரம்மத்தைச் சார்ந்திருக்கும் யோகி கர்மத்தில் கட்டுப்படுவதில்லை.
யோகிக்குக் கர்மம் எப்படிப் பயன்படுகிறது?
11. காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஸுத்தயே
யோகிந: ஸங்கம் த்யக்த்வா-யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்மஸுத்தயே-ஆத்ம சுத்தியின் பொருட்டாக, காயேந மநஸா புத்த்யா-உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும்
கேவலை: இந்த்ரியை: அபி-வெறுமே இந்திரியங்களாலும், கர்ம குர்வந்தி-தொழில் செய்வார்.
பொருள் : யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் தொழில் செய்வார்.
அகங்காரமும் சுயநலமும் யோகியினுடைய உள்ளத்திலிருந்து அடிபட்டுப்போய்விடுகின்றன. அப்பொழுது அகக்கரணங்களும் புறக்கரணங்களும் வெறுமனே வேலை செய்கின்றன. உள்ளிருந்து ஆசை என்னும் வேகம் ஒன்றும் அவைகளுக்கு வருவதில்லை. நீராவி, பெட்ரோல் எண்ணெய், மின்சக்தி முதலியன யந்திரங்களுக்கு விசையாகின்றன. விசையை அடைத்த பின்பும் யந்திரம் சிறிது ஓடுவது போன்று கரணங்கள் ஆசை என்ற விசையில்லாது வேலை செய்கின்றன. அதனால் சித்தம் தெளிவடைகிறது. கர்மத்தினின்று யோகி அடையப்பெறும் நன்மை இதுவே. மேலும் :
12. யுக்த: கர்மபலம் த்யக்த்வா ஸாந்திமாப்நோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே
யுக்த: கர்மபலம் த்யக்த்வா-யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து, நைஷ்டிகீம் ஸாந்திமாப்நோதி-நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான், அயுக்த: காமகாரேண-யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப், பலே ஸக்த:-பயனிலே பற்றுதல் கொண்டு, நிபத்யதே-தளைப்படுகிறான்.
பொருள் : யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.
வினையாற்றுதல் யோகிக்கும் யோகியல்லாதவனுக்கும் பொதுவானது. தன்மூலம் நடைபெறுகிற செயலெல்லாம் ஈசன் செயல் என்ற நினைவே யோகிக்கு நிஷ்டையாகிறது. அதில் அவன் உறுதிப்பாடு அடையுமளவு கவலையில்லை; சாந்தி நிலவுகிறது. சித்த சுத்தி வலுக்கிறது; ஞானம் உதயமாகிறது. யோகி யல்லாதவன் ஆசையின் வசப்பட்டுத் தன் செயலைத் தனக்காக வென்று புரிகிறான். அது அவனைத் தளைக்கின்ற வல்வினையாக வடிவெடுத்து வேதனைப்படுத்துகிறது.
ஈசுவரக் கிருத்தியம் தன்மூலம் நடைபெறுகிறது என்ற நிஷ்டையில் நிலைத்திருப்பவனது பான்மை எத்தகையது? விடை வருகிறது :
13. ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்
வஸீ தேஹீ-தன்னை வசங்கொண்ட ஆத்மா, ந குர்வந் ந காரயந் ஏவ-எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, நவத்வாரே புரே-ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில், ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய-எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து,
ஸுகம் ஆஸ்தே-இன்புற்றிருக்கிறான்.
பொருள் : தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.
மனப்பான்மைக்கு ஏற்றபடி கர்மங்கள் வெவ்வேறு வடிவெடுக்கின்றன. அவைகளுள் முக்கியமானது நித்திய கர்மம். எதைச் செய்தால் புண்ணியமில்லையோ, ஆனால் செய்யாவிட்டால் பாபமேற்படுமோ, அது நித்திய கர்மம். உண்பது, உறங்குவது, நீராடுவது, வழிபடுவது முதலியன நித்திய கர்மங்களாம். நைமித்திக கர்மம் என்பது சிவராத்திரி, ஏகாதசி, கிரகண வேளை போன்ற விசேஷகாலங்களில் செய்யப்படும் கர்மங்களாம். மூன்றாவதாக வருவது காமிய கர்மம். குறித்த பலனுக்காக அது செய்யப்படுவதாகும். ஆனால் அதைச் செய்யாது விட்டுவிடுவதால் கேடு ஒன்றுமில்லை. செய்யத்தகாதது என்று அடியோடு விலக்கப்பட்ட கர்மம் எதுவோ அது நிஷித்த கர்மம். யோகிக்கு ஆசையும் அகங்காரமும் இல்லாததினால் இந்த நான்குவித கர்மங்களில் எக்கர்மமும் அவனை வந்து சார்வதில்லை. அதாவது அவன் தன்னைக் கர்த்தாவென்று நினைப்பதில்லை.
ஒன்பது வாசல்களையுடைய உடல் ஓர் ஊராகக் கருதப்படுகிறது. அரசன் போன்று ஆத்மா அதில் கர்மம் ஒன்றும் செய்யாது சும்மாயிருக்கிறது. அதனுடைய மந்திரிபிரதானிகளாகிய அகங்காரம், மனம், புத்தி, பிராணன், இந்திரியங்கள் முதலியன தொழில் புரிகின்றன. பிராரப்த கர்மம் முடிவடையும் வரையில் இங்ஙனம் செயல்கள் நடைபெறுகின்றன. செயலுக்கு நான் கர்த்தா என்ற எண்ணம் யோகியினிடத்து இல்லை.
எல்லாம் ஈசன் செயல் என்று உறுதிகொண்டு யோகி கர்த்ருத்வத்தை ஒழிக்கிறான். அப்படியானால் சர்வேசுவரனே தொழில் புரிகின்றாரா? விடை வருகிறது.
கர்மம் பிரகிருதிக்கு உரியது : ஆத்மாவுக்கு அல்ல.
14. ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே
கர்த்ருத்வம்-செயலின் கர்த்தா என்னும் தன்மை, கர்மாணி-கர்மங்கள், கர்ம பல ஸம்யோகம்-செய்கைப் பயன் பெறுதல், ப்ரபு: லோகஸ்ய ந ஸ்ருஜதி-(இவற்றுள் எதனையும்) இறைவன் மனிதர்களுக்கு தரவில்லை, து ஸ்வபாவ: ப்ரவர்ததே-ஆனால் இயல்புதான் செயல்படுகிறது.
பொருள் : செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.
கர்த்ருத்வம் என்பது வினைத்தலைமை அல்லது செயலுக்கெல்லாம் தானே தலைவன் என்ற உணர்ச்சியாம். ஸ்வபாவம் என்பது இயற்கை அல்லது பிரகிருதியின் மற்றொரு பெயர். பிரகிருதியின் செயல் ஆத்மாவின் செயல்போன்று தென்படுவது அக்ஞானத்தால். ஆகையால் அக்ஞானத்தில் இருக்கும் ஜீவாத்மா தன்னைக் கர்த்தாவென்று எண்ணுகிறான். கர்மத்தைத் தன்னுடையது என்று எண்ணுகிறவனுக்குக் கர்ம பலனைச் சார்தலும் உண்டாகிறது. இவையாவும் உண்மையில் பிரகிருதியின் செயல்களே யொழிய ஆத்மாவின் செயல்களல்ல. அது மேலும் விளக்கப்பெறுகிறது.
15. நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:
பாபம் ஸுக்ருதம் ச-பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று, கஸ்யசித் ந ஆதத்தே-எவனையும் கடவுள் ஏற்பதில்லை, அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம்-அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது, தேந ஜந்தவ: முஹ்யந்தி-அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.
எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன.
எங்கும் நிறைந்துள்ள ஆகாசத்தின்மீது ஏனைய நான்கு பூதங்களும் நிலைபெற்றிருக்கின்றன. மண்ணில், நீரில், காற்றில் காணும் கேடுகளெல்லாம் ஆகாசத்தைக் கெடுப்பதில்லை. அவைகளில் உள்ள நன்மைகள் ஆகாசத்தை அலங்கரிப்பதில்லை. அங்ஙனம் பிரகிருதியின்கண் உள்ள நன்மை தீமைகளைப் பரமாத்மா ஏற்றுக்கொள்ளுதலுமில்லை, பொருட்படுத்துதலுமில்லை. ஸ்படிகத்துக்குப் பக்கத்திலுள்ள புஷ்பத்தின் நிறத்தை, ஸ்படிகம் ஏற்பது போன்று தென்படுகிறது. உண்மையில் நிறம் ஒன்றையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. அங்ஙனம் ஆத்மாவானது பிரகிருதியின் இயல்பை ஏற்றுக்கொண்டது போன்று காட்சி கொடுக்கிறது. அத்தகைய அக்ஞானத்தினால் ஜீவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
ஈசுவரனுக்கும் ஜகத்துக்கும் உள்ள தொடர்வு இந்த இரண்டு சுலோகங்களில் நன்கு விளக்கப்படுகிறது. சர்வேசுவரன் ஆனந்த சொரூபி; பரிபூரணன். காரண காரியத்தில் அவன் சம்பந்தப்பட்டவன் என்பது அவனது சொரூபத்துக்குச் சிறிதேனும் பொருந்தாது. அவனுடைய சன்னிதான விசேஷத்தால் பிரகிருதிக்கு சர்வ சக்தியும் வந்தமைகிறது. பிரகிருதியோடு தன்னை இணைத்துக்கொள்கையில் ஜீவன் பந்தத்துக்கு ஆளாகிறான். பிரகிருதியினின்று தன்னை விலக்கிக்கொள்கையில் அவன் விடுதலையடைகிறான். வேதாந்த சாரம் முழுதும் இக்கோட்பாட்டில் அடங்கியிருக்கிறது.
வெளிச்சத்தைத் தருவது தீபத்தின் சுபாவம். அதன் உதவியால் சிலர் சமையல் செய்கின்றனர். சிலர் பொய்ப்பத்திரம் தயார்ப்படுத்துகின்றனர்; வேறு சிலர் பாகவத படனம் பண்ணுகின்றனர். அதுபோல ஈசுவரனுடைய நாமத்தின் உதவியால் சிலர் மோக்ஷமடையப் பார்க்கின்றனர். வேறு சிலர் தங்கள் தீய எண்ணங்களைச் சாதித்துக்கொள்ள முயலுகின்றனர். என்றாலும் பகவந்நாமம் ஒருபோதும் அசுத்தமடையாமல் எப்போதும் தூயதாகவே இருக்கிறது.
சர்வேசுவரன் ஜீவர்களுடைய பாப புண்ணியங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை யென்றால் ஜீவர்கள் பாபத்தை நீக்கிப் புண்ணியத்தைச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்துதல் எதற்காக? விடை வருகிறது :
16. ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஸிதமாத்மந:
தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸயதி தத்பரம்
து ஏஷாம் தத் அஜ்ஞாநம்-ஆனால் எவர்களுடைய அஞ்ஞானம், ஆத்மந: ஜ்ஞாநேந நாஸிதம்-ஆத்ம ஞானத்தால் அழிக்கப் பட்டதோ, தேஷாம் ஜ்ஞாநம் ஆதித்யவத் -அவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய், தத்பரம் ப்ரகாஸயதி-பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.
பொருள் : அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.
சூரியன் உதிக்கும்பொழுது இருள் தானே மறைந்து போகிறது. ஞானம் உதிக்கும்போது அக்ஞானமும் அப்படியே அழிந்துபோகிறது. சூரியன் பிரபஞ்சப் பொருள்களை உள்ள படி காட்டுவது போன்று ஆத்ம ஞானம் பரப்பிரம்மத்தை நேராக விளக்குகிறது. ஆத்ம ஞானமும் பிரம்ம ஞானமும் ஒன்றே.
பரப்பிரம்மத்தை சாக்ஷõத்கரிக்க ஆரம்பித்த சாதகர்கள் அதைச் சாரும் விதம் சாற்றப்படுகிறது.
17. தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா:
கச்சந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா:
தத்புத்தய: ததாத்மாந: தந்நிஷ்டா: தத்பராயணா:-பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:-ஞானத்தால் தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், அபுநராவ்ருத்திம் கச்சந்தி-மீளாப் பதமடைகிறார்கள்.
பொருள் : பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.
சூரியன் எங்குச்சென்று தேடினாலும் இருளைக் காணாது; ஒளியையே காணும். அங்ஙனம் பிரம்ம ஞானத்தை அடைபவன் உள்ளும் புறமும் எங்கும் பிரம்ம சொரூபத்தையே காண்கின்றான். அவன் பெற்றுள்ளது பிரம்ம சாக்ஷõத்காரம் ஆகையால் அவன் பிரம்மஞானியாகத் திகழ்கிறான். மேலும் அவன் தானே பிரம்ம சொரூபம் ஆகின்றான். திரும்பவும் பிறப்பெடுப்பதென்பது அவனுக்கில்லை. அவன் முக்தியடைகிறான்.
யுக்தியினால் பெறப்படும் ஞானம் ஒருவகையானது என்பதையும், தியானத்தினால் வரும் ஞானம் முற்றிலும் வேறானதென்பதையும், ஈசுவர தரிசனத்தால் அதைவிட முற்றிலும் மேலான ஞானம் உதயமாகிறதென்பதையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன்.
முக்தியடைந்ததன் அறிகுறியை இவ்வுலகில் உடலோடு கூடியிருக்கும்போதே தெரிந்துகொள்ளுதல் எப்படி?
18. வித்யாவிநயஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி
ஸுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஸிந:
வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே -கவி ஹஸ்திநி ஸுநி ச ஏவ-பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும் கூட, ஸ்வபாகே: ச-நாயைத் தின்னும் புலையனிடத்தும்,
பண்டிதா: ஸமதர்ஸிந:-பண்டிதர் சமப் பார்வையுடையோர்.
பொருள் : கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர்.
சூரிய வெளிச்சம் எல்லாப் பொருள்கள் மீதும் சமமாகவேபடுகிறது. இது கங்கை, இது சாக்கடை யென்று சூரியன் பேதம் பாராட்டுவதில்லை. அங்ஙனம் பிரம்ம ஞானி பிரம்மத்தையே யாண்டும் காண்கிறான். வெறும் புஸ்தகங்கள் பல படித்தவன் பண்டிதன் அல்லன்; பிரம்ம சாக்ஷõத்காரம் பண்ணினவனே பண்டிதன். உலகத்தவர் காட்சியில் கல்வியடக்கமுடைய பிராம்மணன் மக்களுள் சிறந்தவன்; நாயை யுண்பவன் கடைப்பட்டவன். மிருகங்களுள் பரிசுத்தமானது பசு; அதிசயிக்கத்தக்கது யானை; அருகில் வரத் தகுதியற்றது நாய். அக்ஞானிக்கு வேற்றுமையை உண்டுபண்ணும் இந்த உயிர்வகைகளை யெல்லாம் ஞானி பிரம்ம சொரூபமாகவே காண்கிறான். ஆக, அவனுக்கு வேற்றுமையில்லை.
பேத புத்தியைத் தருவது அக்ஞானம்; ஐக்கிய புத்தியைத் தருவது ஞானம்.
இவ்வுலகில் இருப்பவர் இத்தகைய சமநிலையை அடைய முடியுமா? விடை வருகிறது:
19. இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:
ஏஷாம் மந: ஸாம்யே ஸ்திதம்-எவர்களுடைய மனம் சமநிலையில் நிற்கிறதோ, தை: இஹ ஏவ ஸர்க: ஜித:-இவ்வுலகத்திலேயே (உயிர் வாழும் போதே) இயற்கையை வென்றோராவர்,
ஹி ப்ரஹ்ம நிர்தோஷம் ஸமம்-ஏனெனில் பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது,
தஸ்மாத் தே ப்ரஹ்மணி ஸ்திதா:-ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.
பொருள் : மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.
கண்ணாடி கரடுமுரடாயிருந்தால் அதன் மூலம் காணப்படும் பொருள்களெல்லாம் பின்னப்பட்டுத் தெரியும். கண்ணாடி ஸமமாயிருந்தால் அதன் மூலம் பொருள்களை உள்ளபடி காணலாம். காண்போன் காணப்படுபொருளுக்கிடையில் தூய கண்ணாடியிருந்தால் மெய்க் காட்சிக்கு அது தடையாவதில்லை. மனது விருத்தி என்னும் வேகத்தோடு கூடியிருந்தால் பிறப்பு இறப்புக்கு ஏதுவான பிரபஞ்சத்தை அது காண்கிறது. மனம் ஸம நிலையில் உறுதியாயிருந்தால் பொருளை அது உள்ளபடி காண்கிறது. மெய்ப்பொருளுக்கு பிரம்மம் மற்றொரு பெயர். அதன்கண் அசைவொன்றும் இன்மையால் அது யாண்டும் ஸமமாயுள்ளது. சுத்த சைதன்யம் விகாரப்படுவதில்லை. கூடுதல், குறைதல், மாறுதல் என்பன அதனிடத்தில்லை. ஆகையால் அது தோஷமற்றது. கேடில்லாதது அது ஒன்றே. ஸமநிலையில் நிலைத்திருப்பவர் அதன் காட்சி கண்டு அதனிடத்தே நிலைத்திருப்பவர் ஆகின்றனர். கேடின்மை பிரம்ம ஞானிகளிடத்தும் வந்தமைகிறது.
மாயையும் பிரம்மமும் முறையே ஓடும் பாம்பையும் சலனமற்றுக் கிடக்கும் பாம்பையும் ஒக்கும். கிரியா சக்தி மாயையாகும்; நிஷ்கிரியா சக்தி பிரம்மம்.
ஞானிகளிடத்துக் கேடில்லையென்று எப்படித் தெரிந்து கொள்வது? விடை வருகிறது:
20. ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்
ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித:
ப்ரியம் ப்ராப்ய ந ப்ரஹ்ருஷ்யேத்-விரும்பிய பொருளைப் பெறும்போது மகிழ்ச்சி அடையாமலும், அப்ரியம் ப்ராப்ய ச ந உத்விஜேத்-பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்படாமலும்,
ஸ்திரபுத்தி: அஸம்மூட: ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:-பிரம்மஞானி பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.
பொருள் : விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான்.
விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம் இவையாவும் உடல் கூற்றோடு சம்பந்தப்பட்டவைகள். தேகத்தைத் தானென்று எண்ணுபவன் மனக் குழப்பமடைந்தவன். பிரம்ம திருஷ்டியிலேயே இருப்பவனுக்கு இத்தகைய சித்தவிருத்திகள் உண்டாவதில்லை.
காமமும் காசு ஆசையும் மனதை விட்டகலும்போது ஆத்மாவினிடம் வேறு என்ன தங்கியிருக்கும்? பிரம்மானந்தமே அங்குக்குடி கொண்டிருக்கும். பிரம்மசொரூபத்தில் நிலைபெற்றிருப்பதால் :
21. பாஹ்யஸ்பர்ஸேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே
பாஹ்ய ஸ்பர்ஸேஷு-புறத் தீண்டுதல்களில், அஸக்தாத்மா ஆத்மநி-பற்றற்ற சாதகன் உள்ளத்தில், யத் ஸுகம் விந்ததி-எந்த சுகம் தியானத்தால் விளைகிறதோ அதை பெறுகிறான்,
ப்ரஹ்ம யோக யுக்தாத்மா-(அதன் பிறகு) பிரம்ம யோகத்தில் பொருந்தி, ஸ: அக்ஷயம் ஸுகம் அஸ்நுதே-அவன் அழியாத இன்பத்தை எய்துகிறான்.
பொருள் : புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.
புறத்தில் பொறிகள் வாயிலாக வரும் போக சுகங்கள் நிலையற்றவைகள். அவைகள் சிற்றின்பம் எனப்படுகின்றன. அகத்தில் சுத்தியடைந்த அந்தக்கரணம் ஆத்மானந்தத்தை அனுபவிக்கிறது. அது தேயாது தெளிவடைகிறபடியால் அதற்குப் பேரின்பம் என்று பெயர்.
சிலர் ஏற்கனவே விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அறிந்து கொள்வதற்கு அவர்களிடம் சில அடையாளங்கள் இருக்கிறது. சக்கரவாகம் என்னும் பக்ஷி எப்போதும் ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கும். ஏழு சமுத்திரங்களிலும் தண்ணீர் இருக்கின்றது. கங்கை, யமுனை முதலிய அநேக ஆறுகளிலும் தண்ணீர் நிறைந்துள்ளது. என்றாலும் அப்பறவை மழை நீரையன்றி இவை யொன்றினின்றும் தண்ணீர் அருந்தாது. எவ்வளவுதான் தாகத்தால் தொண்டை வறண்டு போயினும் மழை நீரைத் தவிர்த்து வேறு எந்த நீரையுமே அது அருந்தவே அருந்தாது. அதுபோல இவர்களும் கடவுளைப் பற்றியும் கடவுள் சம்பந்தப்பட்டவைகளைப் பற்றியுமன்றி வேறு எந்த விஷயங்களைப் பற்றியும் கேட்கவும் பேசவும் மாட்டார்கள்.
முந்தியது சிற்றின்பம் என்று ஏன் சொல்லப்படுகிறது? விளக்கம் வருகிறது :
22. யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:கயோநய ஏவ தே
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:
ஸம்ஸ்பர்ஸஜா யே போகா:-புறத் தீண்டுதல்களில் எந்த இன்பங்கள் உள்ளனவோ, தே ஹி து:கயோநய: ஏவ-அவை நிச்சயமாக துன்பத்துக்குக் காரணங்களாகும், ஆதி அந்தவந்த:-தொடக்கமும் இறுதியுமுடையன (அநித்யமானவை), கௌந்தேய-குந்தி மகனே,
புத: தேஷு ந ரமதே-அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.
பொருள் : புறத் தீண்டுதல்களில் தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.
மனிதனுக்கு வருகிற எல்லா துக்கத்துக்கும் காரணம் விஷய சுகத்தை நாடுவதாலேயாம். இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில் தொடர்பு வைக்கும்பொழுது சுகம் ஆரம்பிக்கிறது. அர்த்தங்களை விட்டு அவைகள் விலகும்போது துக்கமாகப் பரிணமிக்கிறது. இடையில் மின்னல் போன்று சிறிது இன்பம் தென்பட்டது தான் மிச்சம். அறிவு இல்லாத விலங்குகளும் மாக்களும் அவைகளை நாடிச் செல்லுகின்றன. விவேகமுடையவன் அவைகளை அறவே விலக்கிவிடுகிறான்.
பாம்பைக் கண்டதும் மானஸதேவி! வாலைக்காட்டித் தலையை மறைத்துக்கொண்டு ஒதுங்கிப் போ என்று ஜனங்கள் சொல்லுவது வழக்கம். அதுபோல இந்திரிய சுகங்களைத் தூண்டும் விஷயங்களினின்றும் விலகியிருப்பது நல்லது. அவைகளில் அழுந்தி வருந்துவதனால் உண்டாகும் அனுபவத்தைக்காட்டிலும், அவைகளுடைய ஸஹவாசமே இல்லாது செய்து கொள்வது வெகு மேலானது.
ஆசையைப் போக்க எத்தகைய பிரயத்தனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
23. ஸக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஸரீரவிமோக்ஷணாத்
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:
ய: இஹ ஏவ-எவன் இவ்வுலகத்திலேயே, ஸரீரவிமோக்ஷணாத் ப்ராக்-சரீரம் நீங்குமுன்னர், காம க்ரோத உத்பவம்-விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும், வேகம் ஸோடும் ஸக்நோதி-எழுச்சியை பொறுக்க வல்லானோ, ஸ நர: யுக்த:-அந்த மனிதன் யோகி, ஸ ஸுகீ-அவன் இன்பமுடையோன்.
பொருள் : சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.
மனிதன் உடலில் உயிர்வாழுமளவு காமம் அல்லது குரோதம் தலையெடுப்பது திண்ணம். சாகும் தறுவாயிலும் இவைகள் தோன்றவல்லவைகள். இன்பம் தரும் பொருள்களை இந்திரியங்களால் நுகர்வதால், கேட்பதால் அல்லது எண்ணுவதால் காமம் தலையெடுக்கிறது. குரோதம் அல்லது சினம் என்பது துன்பம் தரும் பொருள்களை இந்திரியங்களால் நுகர்வதால், கேட்பதால் அல்லது சிந்திப்பதால் தோன்றுகிறது. காமம் உள்ளத்தில் தடிக்கும்போது அது புறத்தில் முகமலர்ச்சியாகவும் மயிர்க்கூச்சாகவும் வடிவெடுக்கிறது. சினம் சிந்தையில் சீறியெழும்போது உடல் வியர்த்து நடுங்குகிறது; உதடு கடியுண்கிறது; கண் சிவக்கிறது. இத்தகைய விருப்புவெறுப்பின் விசையை அடக்குபவனே யோகி. அவனுக்குத் தன்னகத்துள்ள இன்பம் தானே உதயமாகிறது.
காமமும் காசு ஆசையும் உலகம் முழுவதையும் பாபத்தில் அமிழ்த்திவிட்டன. ஸ்திரீகளே லோகமாதாவின் தோற்றங்களென்று கருதுவாயானால், உனக்கு அவர்களால் துன்பமுண்டாகாது.
ஆசை நசிக்காதிருக்கும் வரையில் ஈசனைக் காணமுடியாது.
எத்தகைய யோகி பிரம்மத்தில் நிலைத்திருந்து பிரம்மத்தை யடைகிறான்? பகவான் பதில் சொல்லுகிறார்.
24. யோऽந்த:ஸுகோ’ந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய:
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோऽதிகச்சதி
ய: ஏவ அந்த:ஸுக-எவன் தனக்குள்ளே இன்பமுடையவனாக, அந்தராராம:-உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், ததா ய: அந்தர்ஜ்யோதி:-அவ்வாறே உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி எவனோ, ஸ: ப்ரஹ்மபூத:-அவன் தானே பிரம்மமாய், ப்ரஹ்மநிர்வாணம் அதிகச்சதி-பிரம்ம நிர்வாணமடைகிறான்.
பொருள் : தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.
விஷயங்களில் சுகம் காணாது சுகத்துக்கு யதாஸ்தானமாகிய ஆத்மாவின்கண் அது காணப்பெறுகிறது. விளையாடி மகிழ்வூட்டும் பொருள் வெளியுலகில் இல்லாது ஆத்மாவின்கண்ணே அமைகிறது. ஞான வெளிச்சத்தை நாடி இந்திரியங்கள் வாயிலாக வெளியுலகில் செல்லாது ஆத்மா தன்னிடத்தே அதை அடைகிறது. சுருங்கச் சொல்லின் தான் நாடும் அனைத்தும் தன்னிடத்தே இருப்பதை சுவானுபவத்தில் காணும் யோகி தானே பிரம்ம சொரூபமாகி பிரம்ம நிர்வாணம் அல்லது முக்தியடைகிறான்.
உலகப்பற்று அதிகமுள்ள மனிதனுக்கு ஞானம் உதிக்காது. எவ்வளவுக்கு உலகப்பற்று குறைந்து இருக்கிறதோ அதற்கேற்றபடி ஞானமும் வளர ஆரம்பிக்கும்.
25. லபந்தே ப்ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்வபூதஹிதே ரதா:
சிந்நத்வைதா-இருமைகளை வெட்டிவிட்டு, ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தி, யதாத்மாந:-எவர்கள் சஞ்சலமின்றி பரமாத்மாவில் நிலைத்துள்ளதோ, ருஷய: க்ஷீணகல்மஷா:-(அந்த) ரிஷிகள் பாவங்களழிந்து, ப்ரஹ்மநிர்வாணம் லபந்தே-பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.
பொருள் : இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள்.
ரிஷிகள் என்பவர்கள் தத்வதர்சனம் அடையப்பெற்றவர்கள். பற்றற்ற வாழ்க்கையால் அவர்களுக்குப் பூரண ஞானம் வருகிறது. பற்று இல்லை யெனினும் எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதற்கான உபாயங்களையெல்லாம் அவர்கள் கையாளுகிறார்கள். மனமும் இந்திரியங்களும் அடங்கப் பெறாமையினால் அவர்கள் அங்ஙனம் செயலில் ஈடுபடுபவர்கள் அல்லர்; முற்றிலும் தன்னடக்கமே வடிவெடுத்தவர்கள். ஆக, அவர்களுக்கும் பாபம் ஒன்றும் வந்தமைவதில்லை. பிரம்ம நிர்வாணம் அல்லது பேரானந்தப் பிராப்திக்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.
மேலும் அவர்களது மகிமை யாதெனில் :
26. காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்
காமக்ரோதவியுக்தாநாம்-விருப்பமும் சினமும் தவிர்த்து, யதசேதஸாம் விதிதாத்மநாம்-சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய, யதீநாம் அபித:-முனிகளுக்கு நாற்புறமும்,
ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே-பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.
பொருள் : விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.
யாண்டும் மோக்ஷமுளது என்பதன் பொருள் இங்கு இவ்வுடலத்தோடு இருக்கும்பொழுது அத்தகைய பரிபாகமுடைய துறவிகள் ஜீவன் முக்தர்களாக யிருக்கிறார்கள். இவ்வுடலத்தை விடும்பொழுது அவர்கள் விதேகமுக்தர்களாகிறார்கள். ஆக, எங்கும் எப்பொழுதும் அவர்கள் முக்தர்களே.
முக்தியின் பொருட்டு மனதை ஒருமுகப்படுத்தியாகவேண்டும். அதன் விவரம் வருகிறது.
27. ஸ்பர்ஸாந்க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ஸ்
சக்ஷúஸ்சைவாந்தரே ப்ருவோ:
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா
நாஸாப்யந்தரசாரிணௌ
28. யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண:
விகதேச்சாபயக்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:
பாஹ்யாந் ஸ்பர்ஸாந் பஹி ஏவ க்ருத்வா-புறத் தீண்டுதல்களை வெளியிலேயே தள்ளி,
சக்ஷú: ப்ருவோ: அந்தரே-புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி, நாஸாப்யந்தர சாரிணௌ-மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும்,
ஸமௌ க்ருத்வா ச-சமமாகச் செய்துகொண்டு.
யதேந்த்ரிய: மந: புத்தி:-புலன்களை, மனத்தை, மதியையும் அடக்கி, விகத: இச்சா பய க்ரோத:-விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்து, மோக்ஷபராயண:-மோட்சத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிற, ய: முநி: ஸ: ஸதா முக்த ஏவ-அந்த முனிவன் எக்காலமும் முக்தனே யாவான்.
பொருள் : புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;
பொருள் : புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி. (27-28)
ஓசை முதலிய வெளி விஷயங்களை எண்ணாது விட்டுவிடும் பொழுது அவைகள் புறத்தே வைக்கப்படுவனவாகின்றன. தியானத்தில் கண்கள் பாதி மூடப்பெற்றிருக்கும்போது அவைகள் அசைவதில்லை; புருவங்களுக்கிடையில் குவிவனபோன்று அவைகள் தென்படும். நாசியால் புறத்தே விடும் மூச்சுக்குப் பிராணன் என்றும் உள்ளே இழுக்கும் காற்றுக்கு அபானன் என்றும் பெயர். இங்ஙனம் பிராணாயாமத்தின் மூலம் சுவாசத்தின் போக்கு வரவு ஒழுங்குபடுத்தப்படுகிறது. மனதின் அமைதிக்கும் பிராண அபானனின் ஒழுங்கு முறைக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. வாயு ஒடுங்குமிடத்து மனம் ஒடுங்குகிறது. மனம் ஒடுங்குமிடத்து வாயு ஒடுங்குகிறது.
ஆசை, அச்சம், சினம் குடிகொள்ளுமிடத்து மனம் தத்தளிக்கிறது. அசையும் நீரில் நிழல் அல்லது பிரதிபிம்பம் நன்கு தென்படாது. அசையும் மனதில் ஆத்ம சொரூபம் தென்படாது. மனதுக்குத் தேக்கம் முதலில் உண்டாகவேண்டும். தியானம் அதைத் தொடர்ந்து கைகூடும்.
யாருடைய மனது தைலதாரை போன்று ஈசுவரனை நோக்கிச் செல்லுகிறதோ அம்மனிதன் முனி, அல்லது மனன சீலத்தையுடையவன். ஆத்ம சாக்ஷõத்காரம் பண்ணிக்கொண்டிருக்குமளவு ஒருவன் முக்தனாகிறான். பின்வரும் அத்தியாயம் முழுதும் இந்த இரண்டு சுலோகங்களுக்கு விளக்கமாகும். ஈசுவரனிடத்து மனதைத் திருப்புகிற முனி ஈசுவரனே எங்ஙனம் கருதவேண்டும்? விடை வருகிறது :
29. போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம்ருச்சதி
மாம் யஜ்ஞதபஸாம் போக்தாரம்-என்னை வேள்வியும் தவமும் ஏற்பவன் என்றும், ஸர்வலோகமஹேஸ்வரம்-உலகுகட்கெல்லாம் ஒருபேரரசன் என்றும், ஸர்வபூதாநாம் ஸுஹ்ருதம்-எல்லா உயிர்கட்கு நண்பன் என்றும், ஜ்ஞாத்வா ஸாந்திம் ருச்சதி-என்று அறிபவன் அமைதி அடைகிறான்.
பொருள் : வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே; உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்; எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி யறிவான்.
யாகம், தபசு இவைகளைக் செய்விக்கும் கர்த்தாவாயிருப்பவரும், இவைகள் வாயிலாக யோகியால் அடையப்பெறும் தெய்வமாயிருப்பவரும் நாராயணனே. உலகம் முழுவதையும் அவர் ஆளுகிறார். அப்படிச் செய்வதால் அவரிடத்து அன்பு இல்லாதுபோய்விடவில்லை. கைம்மாறு கருதாது எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்கிறார் அவர். எல்லாருடைய உள்ளத்திலும் மன சாக்ஷியாக வீற்றிருந்து அவரவர் கர்மத்துக்கு ஏற்ற பலனை அவர் எடுத்து வழங்குகிறார். செயலுக்குத் தலைவனாயிருப்பது போன்று அறிவுக்கும் அறிவாய் இலங்குகின்றார் அவர். இவ்வுண்மையை அறிகின்றவர்களுக்கு மனச்சஞ்சலம் இல்லை. சாந்தி தானே வந்தமையும்.
இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஸந்யாஸயோகோ நாம பஞ்சமோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸந்யாஸ யோகம் என்ற ஐந்தாம் அத்தியாயம்.
-
ஆறாம் அத்தியாயம்
தியான யோகம்
கர்ம யோக ஞான யோகங்களில் சித்திபெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தியடைந்தவன் வேறு விஷயங்களில் மனதைச் செலுத்த மாட்டான். அவனுக்குத் தோழன், பகைவன், பந்து, நல்லவன், கெட்டவன் என்று வேறுபாடின்றி எல்லோரிடமும் ஒரேவிதமான மனப்பான்மை ஏற்படும்.
அவன் ஜனங்களுடைய சேர்க்கையை வெறுத்துத் தனிமையிலே விருப்பமுற்றுத் திடமான ஆசனத்திலமர்ந்து தனது ஆத்ம சொரூபத்தை எண்ணி எண்ணி மகிழ்வான். இவ்வாத்மானுபவமே பேரானந்தமென்று எண்ணியிருப்பான். எல்லா ஆத்மாக்களும் தேக சம்பந்தத்தை நீக்கிப் பார்த்தால் ஒருவகைப்பட்டவை என்று எண்ணி, முடிவில் கடவுளும் அவ்வாத்மாக்களும் ஒருவகைப்பட்டவர்களென்று உணர்வான். இந்நிலை பெற்றவனே யோகிகளில் சிறந்தவன்.
யோகமும் ஸந்யாஸமும் ஒன்றே 1-9 -யோகத்துக்கு ஏற்ற சூழ்நிலை 10-11 -யோகம் பயிலும் முறை 12-15 -முன்னேற்றத்துக்கு நிபந்தனைகள் 16-20 -யோகத்தில் முன்னேற்றம் 21-28 -யோக ஸித்தி 29-32 -அடங்காத மனதை அடக்கவேண்டும் 33-36 -யோகப்பிரஷ்டனது கதி 37-45 -யோகம் ஒப்பற்றது 46-47.
ஸ்ரீபகவாநுவாச
1. அநாஸ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய:
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ய: கர்மபலம் அநாஸ்ரித:-எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி, கார்யம் கர்ம கரோதி-செய்யத்தக்கது செய்கிறானோ, ஸ ஸந்ந்யாஸீ யோகீ ச-அவன் சந்யாசியும் யோகியும் ஆவான், ச நிரக்நி ந-மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான், அக்ரிய: ச ந-செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.
உலக வழக்கத்தில் ஸந்யாஸி என்பதற்குத் தப்பான ஒரு பொருள் உண்டு. அதாவது அவன் ஒரு கடமையையும் ஏற்றுக் கொள்ளலாகாது. அக்னிஹோத்ரம் என்றால் யாகம் செய்வது என்று பொருள். ஸந்யாஸி யாகம் செய்யாது, ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது செயலற்று இருக்கவேண்டுமாம். அர்ஜுனன் யுத்தம் செய்யமாட்டேன் என்று இயம்பி பிக்ஷõன்னம் அருந்தி உயிர் வாழ்வது நலம் என்று கருதியதே இக்கொள்கைக்குச் சான்றாகும். பின்பு பகவானுடைய கோட்பாடு அதுவன்று. பகவானுடைய கோட்பாடே உண்மையான வேதாந்தமாகும். தேகம் எடுத்தவர் யாரும் கர்மத்தை விட்டுவிடலாகாது. அவரவர் கடமையை நன்கு செய்துகொண்டிருக்கவேண்டும். ஆனால் கர்மபலனை யார் பொருட்படுத்துவதில்லையோ, தனது நித்திய கர்மத்தை நிஷ்காமியமாக யார் செய்கிறானோ அவன் ஸந்யாஸி; அவனே யோகியும் ஆகிறான். கர்ம பலனில் ஆசை அறவே அகன்று விடுவதால் அவன் ஸந்யாஸி. பின்பு, கர்மம் ஓயாது அவன் மூலம் நடைபெறுவதால் அவன் யோகி. அப்படியானால் ஸந்யாஸத்துக்கும் யோகத்துக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :
2. யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சந
பாண்டவ-பாண்டவா! யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு-எதனை சந்நியாச மென்கிறார்களோ,
யோகம் தம் வித்தி-அதுவே யோகமென்று அறி, ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப:-ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத, கஸ்சந யோகீ ந பவதி-எவனும் யோகியாக மாட்டான்.
பொருள் : பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.
கர்ம பலனைப்பற்றி மனதில் உண்டாகும் கற்பனா சக்திக்கே சங்கற்பம் என்று பெயர். இனி, கிடைக்கப்போம் பலனைப்பற்றி மனது இப்பொழுதே திட்டம் போடுகிறது. ஒரு போக்கில் ஏராளமாக மனோராஜ்யம் செய்துவிட்டுப் பின்பு அதை அடியோடு துடைத்துவிடுகிறது. திரும்பவும் இன்னொரு போக்கில் அது எண்ணுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் கிடைக்கப்போம் பலனைப்பற்றிய எண்ணத்துக்கு ஒரு முடிவில்லை. இங்ஙனம் ஆசையின் வேகத்தால் அனந்தங்கோடி எண்ணங்கள் உதிப்பதே சங்கற்பம் எனப்படும். இதனால் மனம் சலனமடைகிறது. மனச் சலிப்பு (மனஅலைச்சல்) இருக்குமளவு ஒருவன் யோகியாக முடியாது. ஆக, ஸந்யாஸத்தால் சங்கற்பம் துறக்கப்படுகிறது. சங்கற்பத்தைத் துறப்பதால் யோகம் உறுதி பெறுகிறது. மனது உறுதிபெற்றவனுக்கே நன்கு கர்மம் செய்யவும், தியானம் செய்யவும் முடியும். இங்ஙனம் கர்மபல ஸந்யாஸமும் கர்மயோகமும் ஒன்றாகின்றன.
சங்கற்ப ஸந்யாஸத்தால் யோகம் உறுதிபெறும் விதம் அடுத்த ஸ்லோகத்தில் விளக்கப்படுகிறது.
3. ஆருரு÷க்ஷõர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே
யோகாரூடஸ்ய தஸ்யைவ ஸம: காரணமுச்யதே
யோகம் ஆருரு÷க்ஷõ முநே-யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு, கர்ம காரணம் உச்யதே-தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது, தஸ்ய யோகாரூடஸ்ய-அந்நிலையில் ஏறியபின்
ஸம: ஏவ காரணம் உச்யதே-சாந்தம் கருவியாகிறது.
பொருள் : யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.
தியானம் செய்வதில் விருப்பம் கொண்டிருக்குமளவு ஒருவன் முனியாகிறான். ஆயினும் மனம் குவிந்து தியானம் அமைவதில்லை. அத்தகைய யோகி நிஷ்காமிய கர்மத்தை ஊக்கத்துடன் செய்யவேண்டும். காமிய கர்மத்தை ஊக்கத்துடனும் ஓயாதும் செய்பவனுக்கு நன்றாக உறக்கம் பிடிக்கிறது. நிஷ்காமிய கருமத்தை அதே ஊக்கத்துடனும் செய்பவனுக்குத் தியானம் கூடுகிறது. அதனால் மனம் தெளிவடைகிறது. தெளிந்த மனதில் தியான சித்தி தானாக அமைகிறது. சமம் என்பது செயலை ஒழுங்குபடுத்திய நடு நிலை. ஆத்மா செயலைக் கடந்திருப்பது போன்றதல்ல இது. பம்பரம் நடு நிலையில் நின்று வேகமாகச் சுழலும்போது அதனிடத்து ஒரு செயலும் வெளிக்குத் தென்படுவதில்லை. ஓய்ந்து நிற்பதுபோன்று அது காட்சி கொடுக்கிறது. ஒழுங்கான இயக்கம் என்பது அதுவே. அகர்மம் போன்று தென்படுகிற கர்மம் அது. தியானம் நன்கு கூடிவரும்பொழுது யோகியானவன் கர்மத்தை யெல்லாம் ஒழித்துவிட்டவனாகக் காட்சி கொடுக்கிறான். தியானத்தில் நிலைபெற்றிருத்தல் என்ற ஒப்பற்ற சூக்ஷ்ம கர்மம் ஆங்கு நிகழ்கிறது. கர்ம சொரூபமான மனதின் தெள்ளத் தெளிந்த கர்மம் அது. அகர்மம் என்றே அதைச் சொல்லலாம். விகல்பம் ஒன்றும் ஆங்கில்லாமையால் ஆத்ம சொரூபத்தை அது விளக்கவல்லது.
மனத்தெளிவு என்பதும் சித்த சுத்தி என்பதும் ஒன்றே. இதுவே ஒரு மனிதனுக்கு ஒப்பற்ற செல்வமாகிறது. இதினின்று ஒற்றுமை, சமத்துவம், உண்மை, ஒழுக்கம், உறுதி, அஹிம்சை, நேர்மை, கர்மங்களினின்று விலகுதல் ஆகியவைகள் முறையாக வந்தமைகின்றன. மனம், மொழி, மெய்களால் எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்தல் ஒழுக்கம் எனப்படும்.
யோகாருடன் அல்லது யோகத்தை அடைந்தவனாக ஒரு மனிதன் எப்பொழுதும் கருதப்படுகிறான்? விடை வருகிறது :
4. யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே
யதா இந்த்ரியார்தேஷு ந அநுஷஜ்ஜதே-எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ, கர்மஸு ஹி ந-கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ, ததா ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ-அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன், யோகாரூட உச்யதே-யோகாரூடன் என்று கூறப் படுகிறான்.
பொருள் : ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் யோக நிலையில் ஏறியவன் என்று சொல்லப்படுகிறான்.
யோகத்தில் நிலைபெற்றவன் யோகாருடன் எனப்படுகிறான். தியானம் முதிர்ந்து சமாதியாகும்போது அவனுக்கு வெளியுலகோடு ஒருவிதத் தொடர்வும் இல்லை. சப்தம், ஸ்பர்சம் முதலிய இந்திரியார்த்தங்களில் அவனது மனது ஒட்டுகிறதில்லை. நித்திய நைமித்திக கர்மங்களெல்லாம் உறக்கத்தில் ஒடுங்குவதுபோன்று சமாதியில் நின்றுவிடுகின்றன. பிறகு சங்கற்பங்களெல்லாம் அற்றுப்போகுமிடத்து ஓய்ந்த கடல்போன்று, எண்ணம் என்ற அலையற்றிருக்கிறது மனது. இவ்வுலகத்தை அல்லது மறுவுலகத்தைப் பற்றிய விசாரம் சிறிதளவும் அதனிடத்தில்லை.
சங்கற்பத்தினின்றே ஆசையும் செயலும் வடிவெடுக்கின்றன. மனு 11-2.
ஆசையே, உனக்குப் பிறப்பிடம் எது என்பதை நான் அறிகிறேன். சங்கற்பத்திலிருந்து நீ உதித்துள்ளாய். உன்னை நான் சங்கற்பிக்காமல் விட்டு விடுகிறேன். நீ நிர்மூலமாய்ப் போய்விடுவாய். சாந்திபர்வம் 177-25.
பிராணன் போனால் இந்திரியங்கள் ஒடுங்குவது போன்று சங்கற்பம் போனால் ஆசையும் கர்மமும் அடிபட்டுப் போகின்றன. இங்ஙனம் ஒருவன் யோகாரூடன் ஆகும்போது சம்சார துக்கங்களினின்று விடுபட்டு ஆத்மாவைக் கொண்டு ஆத்மாவை உன்னதத்துக்குக் கொண்டுவருகிறான். ஆசைகளாகிய பெருங்காற்றினால் சித்தமாகிய ஆகாசம் அலைக்கழிக்கப்படும் வரையில், ஈசுவரனாகிய ஒளியை அங்குக் காண இயலாது. ஈசுவரனுடன் ஐக்கியமாகி சாந்தமாக இருக்கும் மனதில்தான் அந்த திவ்விய தர்சனம் தோன்றும். ஆகையால் சாதகன் என்ன செய்யவேண்டும்?
5. உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:
ஆத்மாநம் ஆத்மாநா உத்தரேத்-தன்னைத் தான் உயர்த்திக் கொள்க, ஆத்மாநம் ந அவஸாதயேத்-தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா, ஹி ஆத்மா ஏவ ஆத்மந: பந்து-தனக்குத்தானே நண்பன், ஆத்மா ஏவ ஆத்மந: ரிபு:-தனக்குத்தானே பகைவன்.
பொருள் : தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.
பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலில் மூழ்கிப் போகாது தன்னைத்தானே மேல்நிலைக்குக் கொண்டுவரவேண்டும். மனிதன் அடைந்துள்ள சிறுமைக்கும் பெருமைக்கும் தானே பொறுப்பாளன். வேறு யாரும் அதற்குப் பொறுப்பாளர் அல்லர். பகைவன் தன்னைக் கெடுத்துவிட்டான் என்று ஒருவன் குறை கூறுவது உண்டு. அப்படிக் கெடுப்பது ஒரு நாளும் பகைவன் அல்லன். பகைவனாகத் தோன்றுபவனையே தனது சாதனத்துக்குற்ற துணையாக யோகி ஒருவன் எடுத்துக்கொள்ள முடியும். அறியாமையினால் அல்லது சரியான வாழ்க்கை வாழாமையினால் மனிதன் தன்னையே கெடுத்துக்கொள்கிறான். அப்படித் தன்னையே கெடுப்பதால் தனக்குத்தானே பகைவன் ஆகிறான். நல்வாழ்க்கை வாழ்ந்து தன்னை எடுப்பவன் தனக்கே தோழனாகிறான். தனக்குத் தன்னிலும் மிக்கதொரு நண்பனோ பகைவனோ எவ்வுலகிலும் இல்லை என்பதை அறிபவன் வாழ்க்கையைப்பற்றிய ஒரு பேருண்மையை அறிபவன் ஆகிறான். பகையை யாரும் வேண்டுவதில்லை; தோழமையையே வேண்டுகின்றனர். அப்படியாயின் தனக்குத் தானே பகைவனாகாது தோழனாவது எங்ஙனம்? விடை வருகிறது :
6. பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:
அநாத்மநஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்
ஏன ஆத்மநா ஆத்மா ஜித:-எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ, தஸ்ய ஆத்மநா-அந்த ஜீவாத்மாவிற்கு, ஆத்மா ஏவ பந்து-தனக்குத் தானே நண்பன், து அநாத்மந:-ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன், ஆத்மா ஏவ ஸத்ருவத்-தனக்குத் தான் பகைவனைப் போல, ஸத்ருத்வே வர்தேத-பகைமையாக செயல்படுவான்.
பொருள் : தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்; தன்னைத்தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.
யோகத்தில் நிலைபெறாத மனிதனிடத்து இரண்டு இயல்புகள் உண்டு. ஒன்று காட்டில் அடங்காத சிற்றியல்பு. மன்றொன்று தெய்வப் பெற்றியுள்ள பேரியல்பு. இவைகளுள் சிற்றியல்பு தலையெடுக்கும்போது பேரியல்பு தோல்வியடைகிறது. பேரியல்பு வலுக்குமிடத்துச் சிற்றியல்பு நசிக்கிறது. தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி ஆகியவைகள் கட்டில் அடங்கியிருக்கும் பொழுது பேரியல்பு தலையெடுக்கிறது. அந்நிலையில் மனிதன் தன்னைத் தான் வென்றவனாகிறான். கீழான இயல்புக்கு அவன் இடங்கொடுக்குங்கால் தன்னையே அவன் அடியோடு கெடுத்துப் பாழ்படுத்துகிறான். புறத்தில் உள்ள பகைவன் ஏதோ சில வேளைகளில்தான் தாக்குகிறான். அப்படியிருந்தும் அவனால் துன்பமடையாத மனநிலையை யோகி யொருவன் பெறக்கூடும். அகத்திலுள்ள பகையோ அல்லும் பகலும் அவனை அலக்கழிக்கிறது. தோழன் போன்றிருந்து பெருந்தீங்கை அது விளைவிக்கிறது. ஆகவே, தான் அடையும் துக்கத்துக்கெல்லாம் தானே முதற் காரணம். யோகி ஒருவனே தனக்குத்தான் உறவினன் ஆகின்றான். மற்றெல்லாரும் ஆசை என்ற ஹிதசத்துருவின் வசப்பட்டுத் தங்களுக்குத் தாங்களே பகைவர் ஆகின்றனர்.
பந்தம் மனத்தை யொட்டியது; முக்தியும் அவ்வாறே. நான் ஒரு முக்தாத்மா; நான் ஈசுவரனுடைய புத்திரன்; என்னை யாரால் பந்தப்படுத்த முடியும்? என்று நீ சொல்வாயானால் நீ முக்தனாக ஆவது நிச்சயம். பாம்பினால் கடிக்கப்பட்டவன் விஷமில்லை, விஷமில்லை என்று முழு நம்பிக்கையுடனும் மனோதிடத்துடனும் சொல்லக் கூடுமானால் அவனுக்கு விஷ உபத்திரவமே இராது.
தனக்குத்தானே நண்பன் ஆனவன் அடையும் நலங்களில் சிறந்தது யாது? விடை வருகிறது :
7. ஜிதாத்மந: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:
ஸீதோஷ்ணஸுகது:கேஷு ததா மாநாபமாநயோ:
ஸீதோஷ்ண ஸுகது:கேஷு-சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மாந அபமாநயோ:-மானாபிமானங்களிலும், ப்ரஸாந்தஸ்ய-சமநிலைப்பட்ட, ஜிதாத்மந:-தன்னை வென்ற மனிதனிடத்தில், பரமாத்மா ஸமாஹித:-பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார்.
பொருள் : தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.
புறத்தில் பூதங்களிடத்திருந்தும், உயிர்களிடத்திருந்தும் வரும் நன்மை தீமைகள் அவனை அசைக்கமாட்டா. தன்னை வென்றவனுக்கு வெளியுலகம் சுற்றமும் அன்று, பகையுமன்று. கீழான ஆசைகளை அடக்கித் தானே வெல்லுபவனுக்கு மனம் தெளிகிறது. தூய கண்ணாடியில் போன்று தெளிந்த மனதில் பரமாத்மாவின் சொரூபம் பிரகாசிக்கிறது. உலக நிகழ்ச்சி எதுவும் அக்காட்சியை மறைப்பதில்லை. நலங்கள் அனைத்திலும் தலை சிறந்ததாகிய பரமாத்ம தரிசனமே தன்னை வென்றவனுக்கு வாய்க்கிறது. மற்ற நலங்களெல்லாம் எளிதில் அந்த யோக சித்தனுக்கு அமைகின்றன. மனிதன் பெறவேண்டிய சிரேயஸ் என்பதும் இதுவே.
விஷய சுகங்களில் சிறிதும் சம்பந்தப்படாத மனம் ஈசுவரனிடம் சென்று அவனிடம் ஒற்றுமையடைகிறது. இப்படித்தான் பந்தத்தினின்று ஆத்மாக்கள் முக்தியடைகின்றன. ஈசுவரனிடம் போகும் பாதைக்கு எதிராகச்செல்லும் ஆத்மா பந்தப்படுவதாகும்.
யோகியின் மாறாத மனநிலை மேலும் விளக்கப்படுகிறது :
8. ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய:
யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந:
ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா-எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ, கூடஸ்த:-எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ, விஜிதேந்த்ரிய:-புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ, ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந:-ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும், யோகீ யுக்த: இதி உச்யதே-அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.
பொருள் : ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று, ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.
சாஸ்திர ஆராய்ச்சியால் வரும் அறிவு ஞானம் எனப்படுகிறது. அது சுவானுபவமாக முதிருமிடத்து அதற்கு விக்ஞானம் என்று பெயர். மற்றவைகளெல்லாம் மாறும்போது எது அகாசம் போன்று மாறாதிருக்கிறதோ அது கூடஸ்தன் எனப்படுகிறது. இந்திரியார்த்தங்களின் போக்கு வரவுகளில் தட்டுப்படாது தன்மயமாயிருக்கும் மனபரிபாகம் அடையப்பெற்றவன் கூடஸ்தன் எனப்படுகிறான். முதற்காரணமாகிய மனது ஒடுங்கியிருக்குமிடத்து இந்திரியங்களுக்கு வேகம் வருவதில்லை. ஆகையால் மனம் அடங்கிய யோகி இந்திரியங்களை நன்கு வென்றவனாகிறான். பாலர்களால் பெரிதும் மதிப்பிடப்படுகின்ற மணற்சோறு, கோலி, பொம்மை, பம்பரம் முதலியவைகளை முதியோர் பற்று வைக்காது சமதிருஷ்டியோடு காண்கின்றனர். பற்றுடைய உலகத்தவர் வெவ்வேறு படித்தரங்களில் வைத்து மதிப்பிடுகின்ற மண், கல், பொன் ஆகியவைகளைப் பற்றற்ற யோகி பஞ்ச பூதங்களால் ஆகியவைகளென்று சமதிருஷ்டியோடு காண்கிறான். பரதிருஷ்டி ஒன்றுதான் அவனுக்குளது. உலகப் பற்றுள்ளவர்கள் உபயோமற்ற பொருள்களைத் தேடுகின்றவராவர். உலகப்பற்றற்ற சுத்தாத்மாக்கள் ஈசுவரனை விசுவாசித்து அவனையே சதா சர்வ காலமும் சிந்தித்திருப்பார்கள்.
உயிரற்ற பொருள்களை இங்ஙனம் பொருள்படுத்துபவர் இனி உயிர்களை எங்ஙனம் பொருள்படுத்துகின்றனர்? விடை வருகிறது :
9. ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஸிஷ்யதே
ஸுஹ்ருத் மித்ர உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு-அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், ஸாதுஷு பாபேஷு ச அபி-சாதுக்கள், பாவிகளிடம் கூட, ஸமபுத்தி-எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன், விஸிஷ்யதே-மேலோனாவான்.
பொருள் : ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.
நல்ல மனமுடையவரே நல்ல எண்ணமுடையவர் ஆகின்றனர். பிரதிபலனை எதிர்பாராது அன்னவர் பிறர்க்கு நன்மை செய்கின்றனர். நல்லெண்ணமும் நற்செயலும் வடிவெடுத்துத் தோழனுக்காகத் தொண்டுபுரிய ஆயத்தமாயிருப்பவர் நண்பர் ஆவர். பகைவர் அதற்கு நேர் மாறாகக் கேடு செய்கின்றனர். உதா சீனரோ நலம் கேடு ஒன்றும் செய்யாது வெறுமனே ஒதுங்கிப் பொதுவாயிருக்கின்றனர். மத்யஸ்தர் இருதரத்தாருக்கும் நடுவு நின்று ஒற்றுமையை உண்டுபண்ணிவைக்க முயலுகின்றனர். வெறுப்பவரோ தங்களை நேசித்து நலம் புரிபவருக்கும் கேடே நினைக்கின்றனர். கெட்ட எண்ணம் எண்ணுவதே அவர்களது இயல்பு. இரத்தத் தொடர்வுடையவர் சுற்றத்தார் ஆகின்றனர். பாரமார்த்திக விஷயத்தில் ஈடுபடுவர் சத்புருஷர்களாகின்றனர். அதற்குத் தடையாகத் தீங்கு விளைவிக்கும் செயலில் இறங்குபவர்கள் பாபிகள். இத்தனைவித வேறுபாடுடைய மனிதர்களிடத்து சாதாரண மனிதன் ஒருவனுக்கு வேறுபாடான மனப்பான்மை வருவது உலக இயல்பு. ஆனால் யோகியோ எல்லாரிடத்தும் ஒரே நல்ல மனமுடையவனாகிறான். ஆகையால் அவன் சிறந்தவன்.
நாடகத்தில் நடிப்பவருள் ஒருவன் இராமனாக நடித்தான் என்று அவனை விரும்பவும், இராவணனாக நடித்தான் என்று மற்றொருவன் வெறுக்கவும் செய்வதில்லை நாடகத்தைப் பார்த்து ரசிப்பவர். யோகியோ உலக நடைமுறையனைத்தையும் நாடகமாகப் பார்க்கிறான். சர்வேசுவரனே இத்தனை பாத்திரங்களாகி விளையாடுகிறான் என்பது அவனுக்குத் தேற்றம். ஆகையால் எல்லாரிடத்தும் ஒரே மனமுடையவனாகிறான் யோகியானவன்.
ஒருவன் பூமியிலிருக்கையில் புல்லையும் வானுற ஓங்கி வளர்ந்த தேவதாரு மரத்தையும் கண்டு, இந்த மரம் எவ்வளவு பெரிது, புல் எவ்வளவு சிறியது என்கிறான். ஆனால் அவன் ஒரு மலை மீதேறி உச்சியிலிருந்து கீழே நோக்கும்போது, பெரிய தேவதாரு மரமும் சிறிய புல்லும் ஒருங்கே உருத்தெரியாத பச்சைப் படலமாகத் தோன்றுவதைக் காண்பான். அது போல உலகப் பற்றுள்ளவர்களுடைய பார்வைக்கு ஒருவன் அரசனென்றும், மற்றொருவன் தெரு பெருக்கும் தோட்டி யென்றும், ஒருவன் தகப்பன் என்றும் மற்றொருவன் மகனென்றும் இம்மாதிரியான ஸ்தான பேதங்களும், அந்தஸ்து வித்தியாசங்களும் தோன்றும். ஆனால் தெய்வ தரிசனம் பெற்றபிறகு எல்லாம் ஒரே தோற்றம். அப்போது நல்லவர் கெட்டவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசங்களே இருப்பதில்லை.
இத்தகைய சமதிருஷ்டி வருவதற்கு எத்தகைய யோக சாதனம் செய்யவேண்டும்? விடை வருகிறது :
10. யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித:
ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீரபரிக்ரஹ:
யத சித்தாத்மா நிராஸீ-உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, அபரிக்ரஹ:-ஏற்பது நீக்கிய
யோகீ ஏகாகீ-யோகி தனியனாக, ரஹஸி ஸ்தித:-மறைவிடத்தில் இருந்துகொண்டு, ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத-எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.
பொருள் : மறைவிடத்தில் இருந்துகொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.
உள்ளத்தை உள்ளபடி அறிதற்கு ஏகாந்த வாசம் இன்றியமையாதது. ஓர் அறைக்குள் யோகியானவன் தன்னை அடைத்துக்கொள்வானாகில் மற்றவர்க்குத் தென்படாதிருக்கிறான். ஆனால் அவன் அறையில் இருப்பது மற்றவர்க்குத் தெரியும். மற்றவர் தன்னைச் சூழ்ந்திருப்பது யோகிக்குத் தெரியும். ஆக, அது தனியனாய் இருக்கிற ஏகாந்த வாசமன்று. யோக சாதகன் எங்கே இருக்கிறான் என்பது வேறு யாருக்கும் தெரியலாகாது. கடவுளைத் தவிர தனக்குத் துணையாக வேறு யாரும் இல்லையென்று யோகியுணரவேண்டும். இதற்காகத்தான் அவன் இரகசியனாகவும் தனியனாகவும் இருக்கவேண்டும் என்றியம்பப்படுகிறது. உண்ணாவிரதம் இருக்கும் பொழுதுதான் உணவைப் பற்றிய எண்ணம் அதிகம் வரும். அங்ஙனம் ஏகாந்த வாசத்தில்தான் அடங்காத மனது அதிகம் கூத்தாடும். அப்படி மனதை அலைந்து திரியவிடலாகாது. எதன்கண் அதற்கு ஆசையோ அதனிடத்து மனது ஓடும். வழிபடு தெய்வத்தைத் தவிர வேறு ஒரு பொருளிடத்தும் மனது செல்லா திருப்பது நிராசையாகும். மோட்டார் வண்டியை ஒருவன் ஓட்டத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதன் வேகத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் வேண்டுமென்கிறபொழுது அவ்வண்டியை நிறுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும். வண்டியை நிறுத்தத் தெரியாதவனை நம்பி அவ்வண்டியில் பயணம் போவது ஆபத்து. மோட்டார் வண்டியை நிறுத்தத் தெரியாத வண்டிக்காரன் போன்று பலபேர் உடல் வாழ்வு என்னும் வண்டியை நிறுத்தத் தெரியாதவர்களாயிருக்கின்றனர். உடல் வாழ்க்கைக்குத் தாங்கள் தலைவர்களாயிருப்பது போய் அதற்கு அவர்கள் அடிமைகளாயிருக்கின்றனர். தலைவன் ஆவதற்கு உபாயம் ஒன்றுண்டு. உடலைக் கொண்டு முறையாக வேலை செய்யத் தெரிந்திருப்பது போன்று அதற்கு ஒரு வேலையும் கொடாது அமைதியுற்றிருக்கும்படி அதை அடக்கிவைக்கவும் தெரிந்திருப்பவனே யோகி. அவனது ஆணைக்குட்பட்டு அது உழைக்கிறது அல்லது உபரதி பெறுகிறது. உபரதி பெற்றிருப்பதற்கு உபாயமாவது தியானம். தேக ஸம்ரக்ஷணைக்காகவென்று யோகி வைத்திருக்கும் உடை, உணவுப்பொருள் முதலியன பரிக்கிரஹம் அல்லது உடைமைப் பொருள் எனப்படும். அவைகளை அதிகப்படுத்துகின்ற அளவு யோகம் தடைப்படும். அப்பொருள்களைக் காப்பாற்றுவதைப் பற்றிய எண்ணம் தியான வேளையில் வரும். அவைகளுக்காக உழைப்பதும் பின்பு அதிகரிக்கும். தேவைகளைக் குறைத்தால் உடல் அடக்கம் உண்டாகும். ஆகவே, பொருள்களை மிகவும் குறைத்துக்கொள்ளவேண்டும். அவைகளை உடைத்திருத்தல் என்ற உணர்ச்சி சிறிதேனும் இருக்கலாகாது. அப்பொழுது யோகி அபரிக்கிரஹத்தில் (பொருள் படையாமையில்) நிலை பெற்றவனாகிறான். இங்ஙனம் அகப்பற்று, புறப்பற்று நீங்கிய மனதே குவிய வல்லதாகிறது.
இருவித யோகிகள் இருக்கிறார்கள். ஒருவர் மறைந்து எவரது கண்ணுக்கும் தெரியாது தமது யோக சாதனங்களைச் செய்கிறார்; மற்றவர் யோகியின் சின்னங்களாகிய தண்டம், கமண்டலம் ஆகியவைகளைத் தாங்கிச் சமய சம்பந்தமாகப் பலரோடும் பேசுகின்றார்.
மனிதர் பார்க்காமற்போனாலும், ஈசுவரன் பார்க்கிறான் என்று நம்பித் தனியாக இருக்கும்போது எவனொருவன் ஒரு பாபத்தையும் செய்யதில்லையோ அவன்தான் வாஸ்தவமான தர்மசீலனாவான். மனிதர் கண்ணுக்குப் புலப்படாமலிருந்தாலும் ஈசுவரதிருஷ்டிக்குட்படுவோம் என்ற பயத்தினால் எவனொருவன் காட்டில் தனியாக இருக்கும்போதும் ஒரு கட்டழகியின் வலைக்குட்படாமலும், காம எண்ணத்தால் அவளைக் கண்ணெடுத்துப் பாராமலும் இருக்கிறானோ அவன்தான் வாஸ்தவமான யோகி. ஒருவருமில்லாது தனித்துள்ள ஒரு வீட்டில் காணப்படும் பொன்முடிப்பை எவனொருவன் எடுத்துக்கொண்டுபோக இச்சைப்பட மாட்டானோ அவனே தர்மவான். ஊரார் வசைமொழிக்குப் பயந்து வெளிவேஷத்துக்காக எவனொருவன் தர்மத்தை அனுஷ்டிக்கிறானோ அவனை தர்மவான் என்று சொல்லக்கூடாது. மௌனமாயும் மறைவாயும் அனுஷ்டிக்கும் தர்மமே வாஸ்தவமான தர்மம்.
ஏகாந்தத்தில் எத்தகைய ஆஸனம் அமைத்துக்கொள்ள வேண்டும்?
11. ஸுசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோத்தரம்
ஸுசௌ தேஸே-சுத்தமான இடத்தில், சைல அஜிந குஸ உத்தரம்-துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது, ந அத்யுச்ச்ரிதம் ந அதிநீசம்-அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், ஆத்மந: ஸ்திரம் ஆஸநம்-தனக்கோர் உறுதியான ஆசனம், ப்ரதிஷ்டாப்ய-அமைத்துக் கொண்டு.
பொருள் : சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,
தூயதும் மனதுக்கினியதுமான இடத்திலேதான் யோகி வாசம் செய்யவேண்டும். தூய வாசஸ்தானம் மனதைத் தூய தாக்குதற்குத் துணைபுரிகிறது. இயற்கையழகு இன்னொருவிதத்தில் அதைப் பண்படுத்துகிறது. சூழ்நிலைக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. கந்தைத் துணி கட்டியிருப்பவனது உள்ளத்தில் கீழ்மையுணர்ச்சி உதயமாகிறது. அகசியான இடத்தில் வசிப்பவனுக்கு மனத்தகத்தும் மாசு படிகிறது. மேலான எண்ணங்களை ஊட்டவல்ல சூழ்நிலையே யோகிக்கு உகந்த இருப்பிடமாகும். மரத்தில் கட்டித் தொங்கும் ஊஞ்சல் உறுதியானதன்று; அது அசையும் தன்மையுடையது. புற்குவியல், அடுக்கி வைக்கப்பட்ட மரக்கட்டை, குவிக்கப்பட்ட கூழாங்கற்கள் இவைகளாலும் ஸ்திரமான ஆஸனம் அமையாது. இயற்கையாக அமைந்த பாறை, கட்டுவிக்கப்பட்ட மேடை இவைகளே சிறந்தவைகளாம். பூமி மட்டத்துக்கு மேல் ஆஸனம் அதிக உயரமாய்ப் போனால் உட்காருதற்கு அச்சத்தை உண்டுபண்ணும்; மயங்கி அல்லது தூங்கி விழுந்தால் காயமாகும். ஆக, பூமி மட்டத்துக்கு இரண்டு அடிக்குமேல் போகலாகாது. பூமி மட்டத்தில் இருந்தால் புழு பூச்சிகள் வரும். அதனால் இடைஞ்சல் ஏற்படும். பூமி மட்டத்துக்குக் கீழே போனால் ஆரோக்கியத்துக்குக் கேடு வரும். ஆகையால் ஆஸனம் மிகத் தணிந்திருக்கலாகாது. மேடையின் மீது தர்ப்பாஸனம், அதன் மேல் மான்தோல் அல்லது புலித்தோல், அதன்மேல் துணி விரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அது மிக மிருதுவாயும் இராது; மிகக் கடினமாயும் இராது. இந்நிபுந்தனைகளுக்கு உட்பட்ட ஆஸனம் சாதனத்துக்குத் தகுதியுடையது ஆகும். மிக மிருதுவான ஆஸனம் நிமிர்ந்து உட்காருதற்கு உதவாது. சுக ஜீவனத்தைப்பற்றிய எண்ணத்தை அது ஊட்டுவதாகும். கடினமான ஆஸனமோ உடலை உறுத்தி வலியை உண்டுபண்ணும். ஆக, அது உதவாது. இரண்டுக்கும் இடைநிலையில் ஆஸனம் இருப்பது முறை. அத்தகைய ஆஸனத்தமர்ந்து யோகி என்ன செய்ய வேண்டும்? பகவான் பதில் அளிக்கிறார்.
12. தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:
உபவிஸ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஸுத்தயே
தத்ர ஆஸநே உபவிஸ்ய-அந்த ஆசனத்தில் அமர்ந்து, யதசித்த இந்த்ரிய க்ரி, ய:-உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, மந: ஏகாக்ரம் க்ருத்வா-மனதை ஒருமுகமாக்கி, ஆத்மவிஸுத்தயே-ஆத்மா நன்கு தூய்மையடையும்படி, யோக யுஞ்ஜ்யாத்-யோகத்திலே பொருந்தக் கடவான்.
பொருள் : அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.
இந்திரியங்கள் வாயிலாக மனது வெளி விஷயங்களில் செல்லுகிறவளவு அது தன் பரிசுத்தத்தை இழக்கிறது. சேற்றில் புரண்டோடும் பிரவாஹம் போன்று அது தன் நீர்மையைப் பறிகொடுக்கிறது. கருவி கரணங்களை மீட்டெடுத்து ஆத்ம சொரூபத்தில் வைக்கின்றவளவு சித்தம் சுத்தியடைகிறது. ஆத்மாவைச் சார்ந்திருப்பது அதன் எதார்த்த நிலை; அதன் கலப்பற்ற பாங்கு. வெளி விஷயாதிகளைச் சார்ந்திருப்பது மாசு படிந்தநிலை. மாசு படிந்திருக்குமளவு அதன் பேராற்றல் குன்றுகிறது. தூயதாகுமளவு அதன் அருள் சக்தி வலுக்கிறது.
ஆரம்பத்தில் ஒருவன் தன்னந்தனியனாக உட்கார்ந்துகொண்டு மனதை ஒருமுகப்படுத்த, அதாவது ஏகாக்ர சித்தத்தையடைய முயலவேண்டும். இல்லாவிட்டால் மனம் பற்பல விஷயங்களில் ஓடிச் சஞ்சலத்துக்குள்ளாகும். பாலையும் ஜலத்தையும் ஒன்றாக்கி வைத்தால் இரண்டும் நன்றாகக் கலந்துவிடுவது நிச்சயம். ஆனால், பாலைக் கடைந்து வெண்ணெயை எடுத்து ஜலத்தில் போட்டு வைத்தால் அவ்வெண்ணெய் ஜலத்துடன் கலக்காமல் அதன் மேலே மிதக்கும். அதுபோல இடைவிடாத பழக்கத்தால் ஒருவனுக்கு ஏகாக்கிர சித்தம் நிலைக்குமானால், அவன் எங்கிருந்த போதிலும் சரியே, அவனுடைய மனம் சுற்றிலுமுள்ள பொருள்களின்மீது சொல்லாமல் ஈசுவரனிடத்திலேயே செல்லும்.
மனவொடுக்கத்துக்கு உடலைப்பற்றிய நியமனம் ஏதேனும் உண்டா? உண்டு. அது வருமாறு :
13. ஸமம் காயஸிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஸஸ்சாநவலோகயந்
காய ஸிரோ க்ரீவம் ஸமம்-உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக, ச அசலம் தாரயந்-அசைவின்றி வைத்துக்கொண்டு, திஸ: அநவலோகயந்-திசைகளை நோக்காமல், ஸ்வம் நாஸிகாக்ரம்-தன்னுடைய மூக்கு நுனியை, ஸம்ப்ரேக்ஷ்ய-பார்த்துக் கொண்டு.
பொருள் : உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,
உடல், கழுத்து, தலை ஆகியவைகள் நேராயிருக்கும்போது மேருதண்டம் அல்லது முதுகின் முள்ளந்தண்டும் நேராகிறது. சுவாசம் ஒழுங்காகப் போகவும் வரவும் செய்யும். சிறந்த எண்ணங்கள் மனதில் உண்டாவதற்கு அத்தகைய உடல் நிலை முற்றிலும் வேண்டப்படுகிறது. யோகி ஆஸனத்தமரும்போது மேருமலைபோன்று அசையாது உறுதியாயிருக்கவேண்டும். அதனால் உடலைப்பற்றிய உணர்ச்சி தானே அகன்றுபோம். அவயவங்களைத் துன்புறுத்துகிற பாங்கில் அமரலாகாது. சுகமாக இருக்கும் பாங்கில் அமர்ந்திருக்கவேண்டும். மனது ஒடுங்குகிறவளவு கண் விழிகளும் அசைவற்றவைகளாகின்றன. ஓயாது இங்கும் அங்கும் பார்க்கும் இயல்பும் தானே குறைகிறது. இனி, தியானத்தமரும்பொழுது கண்கள் மூக்கு நுனியைப் பார்ப்பவைகள் போல் தென்படுகின்றன. உண்மையில் மூக்கைப் பார்த்தால் மூக்கைப் பற்றிய ஞாபகம்தான் மனதில் வரும். அந்தக்கரணம் ஆத்ம சொரூபத்தில் திளைத்திருக்கிற வேளையில் உடலைப்பற்றிய எண்ணம் உண்டாகாது. மனதில் அந்நிலை வரும்பொழுது கண்கள் மூக்கு நுனியைப் பார்ப்பவைகள் போல் தென்படும்.
தன் முட்டையின்மீது உட்கார்ந்து அடைகாக்கும் குருவி புறப்பொருள் ஒன்றையும் பாராது வெறுமனே விழித்துட்கார்ந்திருக்கிறது. யோகியினுடைய கண்ணும் அத்தகையதாகிறது.
தியானத்தில் தீவிரமான ஏகாக்ரம் உண்டாகிறது; அப்போது வேறொன்றும் கண்ணுக்குப் புலப்படாது; காதுகளிலும் சப்தம் விழாது; ஸ்பரிச உணர்ச்சியும் அகன்றொழிகிறது. அப்போது பாம்பு ஒன்று சரீரத்தின்மீது ஊர்ந்து போனாலும் அது தெரிவதில்லை. தியானிப்பவர்க்குப் பாம்பைப்பற்றிய உணர்ச்சி இருப்பதில்லை; பாம்புக்கும் அம்மனிதனைப்பற்றிய உணர்ச்சியிராது.
இனி உள்ளத்தை எப்படி ஒழுங்குபடுத்துவது?
14. ப்ரஸாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:
ப்ரஸாந்தாத்மா விகதபீ-நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:-பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மந: ஸம்யம்ய-மனதை வசப்படுத்தி,
மச்சித்த: மத்பர:-என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு, யுக்த: ஆஸீத-யோகத்திலிருக்கக் கடவான்.
பொருள் : நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.
தேங்கிய தடாகம் போன்று மனது தெளிவும் அமைதியும் அடையப்பெறுமிடத்து அது பிரசாந்தாத்மா எனப்படுகிறது. அந்த அமைதியில் வீரமும் சேர்ந்திருக்கிறபடியால் அச்சத்துக்கு ஆங்கு இடமில்லை. சிற்றின்ப போகம் எதிலும் ஈடுபடாதிருப்பது பிரம்மசரிய விரதம். குருவுக்கும் உலகுக்கும் சேவைபுரிவதன் மூலம் மனதினின்று காம எண்ணங்கள் அடியோடு அகற்றப்படுகின்றன. அதன் பிறகு மனதை அடக்குதல் எளிதாகிறது. அடங்கிய மனதில் ஈசுவரனைப்பற்றிய எண்ணமே குடிகொண்டிருக்குமானால் கீழான எண்ணங்கள் அங்குத் தலையெடுக்க மாட்டா. ஈசுவரன் ஒருவனே ஒப்பற்ற பொருள் என்றும், அவனை அடைதலே வாழ்வின் முடிவான நோக்கம் என்றும் கருதியிருப்பவன் நல்ல யோகியாகிறான்.
ஒருவன் பன்னிரண்டு வருஷங்கள் வழுவாத பிரம்மசரிய விரதம் அனுசரித்தால் அவனிடம் மேதாநாடி தோன்றுகிறது. அதாவது எதையும் அறிந்துகொள்ளும் சக்தி மலர்கிறது. வெகு சூக்ஷ்மமான விஷயங்களையும் அவன் சுலபமாக அறிந்துகொள்வான். அவ்வித அறிவால் ஒருவன் ஈசுவர தரிசனத்தையும் அடையக்கூடும். இவ்விதம் பரிசுத்தமடைந்த தெளிந்த அறிவுள்ளவர்களாலேயே கடவுளையடைய முடியும்.
யோகத்தினின்று விளையும் ஆக்கம் இனி விளக்கப்படுகிறது :
15. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ:
ஸாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி
நியதமாநஸ:-மனதைக் கட்டுப்படுத்தி, யோகீ ஏவம்-யோகி இவ்விதம், ஆத்மாநம் ஸதா யுஞ்ஜந்-ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு, மத்ஸம்ஸ்தாம் நிர்வாணபரமாம்-என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள, ஸாந்திம் அதிகச்சதி-ஆறுதலை அடைவான்.
பொருள் : இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி, என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.
புசித்தவனுக்குப் பசி யடங்குகிறது. மேலே சொல்லியபடி யோக சாதனம் செய்து மனது அடங்கப்பெற்றவனுக்கு இயல்பாக சாந்தி உதயமாகிறது. அக்னியில் சூடு இருப்பதுபோன்று ஸர்வேசுவரனிடத்து சாந்தி நிலவுகிறது. அதை அடையுமளவு ஒருவன் முக்த புருஷனாகிறான். இறைவனை அடைதல், சாந்தி பெறுதல், முக்தி சேர்தல் இவையாவும் ஒன்றாம். இதுவே யோகத்தின் பயனாகிறது.
பட்டணத்துக்குப் புதிதாக வருபவன் ராத்திரி வேளையில் தங்குதற்கு வசதியான விடுதியொன்றை முதலில் தேடி அதில் தன் சாமான்களை வைக்கவேண்டும். பிறகு அவன் ஊர் சுற்றி வேடிக்கை பார்க்கலாம். இல்லாவிட்டால் இருளில் இடம் தேடுவதில் சிரமப்படுவான். அதுபோல இவ்வுலகுக்குப் புதிதாக வருபவனும் ஈசுவரனாகிய நித்திய விடுதியைத் தேடிவைத்துவிட்டு, பயமின்றி இவ்வுலகில் திரிந்து, தான் செய்யவேண்டிய காரியங்களை யெல்லாம் செய்யலாம். இல்லாவிட்டால் மரணமாகிய பயங்கரமான அந்தகாரம் வரும்பொழுது மிகுந்த துயரங்களை அவன் அனுபவிக்க நேரும்.
வாழ்க்கையில் யோகி எத்தகைய நியமனங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும்? விடை வருகிறது :
16. நாத்யஸ்நதஸ்து யோகோऽஸ்தி ந சைகாந்தமநஸ்நத:
ந சாதிஸ்வப்நஸீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந
அர்ஜுந!-அர்ஜுனா! அத்யஸ்நத து யோக: ந அஸ்தி-மிகைபட உண்போனுக்கு யோகமில்லை, அநஸ்நத: ச ஏகாந்தம் ந-உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது, ந ச அதிஸ்வப்நஸீலஸ்ய-மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை, ஜாக்ரத: ஏவ ந-மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.
பொருள் : மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.
விணையின் தந்தியை அளவுக்கு மீறி இறுக்கினால் அது உடைந்துபோம்; மிக இளக்கினால் அதில் ஓசை வராது. உடலோ வீணை போன்றது. உணவு, உறக்கம் இவைகளில் மிகைபடுதலும் குறைபடுதலும் கூடாது. அந்தந்த சரீரத்துக்கு ஏற்ற உணவு எது, அளவு எது என்பதை அவரவரே தீர்மானம் செய்யவேண்டும். மிகைபட உண்பதால் சோம்பல் வருகிறது. குறைபட உண்பதால் மெலிவு ஏற்படுகிறது. அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால்வயிறு காற்றோட்டத்துக்கு இடம் இப்படி அமைப்பது சிறந்தது. உறக்கம் உடலைப் புதுப்பித்துத் தெளிவுபடுத்துகிறது. ஆனால் மிகைபட்ட அல்லது குறைபட்ட உறக்கம் தமோ குணத்தை வளர்க்கிறது. அதனால் தியானம் தடைப்படுகிறது.
பகற்பொழுதில் திருப்தியாகப் போஜனம் செய். ஆனால் இரவில் உட்கொள்ளும் உணவு குறைவாயும் இலேசாயுமிருக்கட்டும்.
சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்குச் சஞ்சலத்தையும் எந்த உணவு கொடுக்காதோ அந்த உணவைத்தான் சாதகன் உட்கொள்ளவேண்டும். யோக சித்தி கைகூடும் முறை வருகிறது :
17. யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா
யுக்த ஆஹார விஹாரஸ்ய- ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு
கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய-வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும்
ஸ்வப்ந அவபோதஸ்ய யுக்த-உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின்
து:கஹா யோக: பவதி-துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது
பொருள் : ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.
உடற்பயிற்சி யோகிக்கு முற்றிலும் தேவையானது. ஆனால் அதை அளவுடன் செய்யவேண்டும். குறித்த வேளையில் குறித்த காரியங்களை அளவெடுத்துச் செய்யவேண்டும். சந்திர சூரியன் செயல்களெல்லாம் ஒழுங்காக நடைபெறுவது போன்று யோகியின் வாழ்க்கை முறையும் பெருந்திட்டத்துக்கு உட்பட்டிருக்கிறது. அதனால்தான் தியானம் செய்வது எளிதாகிறது. நெறியான வாழ்க்கையுடைய யோகிக்கு உடல் உணர்ச்சியே இல்லாது போய்விடுகிறது. துக்கம் துடைக்கப்படுவதும் அதனாலேயாம். யோகி தியானத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்று உறுதி கூறுவது எப்பொழுது? உத்தரம் உரைக்கப்படுகிறது:
18. யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா
விநியதம் சித்தம்-தன்வசப் பட்டுள்ள உள்ளம், யதா ஆத்மநி ஏவ-எப்பொழுது தனதுள்ளேயே, அவதிஷ்டதே-நிலைபெற்றிருகிறதோ, ததா ஸர்வகாமேப்ய: நி:ஸ்ப்ருஹ:-அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன், யுக்த: இதி உச்யதே-யோக முற்றான் எனப் படுவான்.
பொருள் : உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.
காற்று அடிக்கும்போது கடல் கொந்தளிப்பால் நிலை குலைந்ததாகிறது. காமம் என்னும் காற்று வீசும்போது சித்தமும் நடுநிலையினின்று வழுவுகிறது. சித்தத்தில் எண்ணங்கள் உதிக்குமளவு அது தன் அமைதியை இழக்கிறது. மனம் தேங்கித் தூய தாயிருக்குமிடத்து யோகம் வலுக்கிறது. அசையாத மனதையுடையவன் யோகத்தில் மிக மேலேறியவன் ஆகிறான்.
கிழிந்த மூட்டையிலிருந்து சிதறி நாலாபக்கங்களிலும் ஓடிய கடுகைப் பொறுக்கி யெடுப்பது சிரமம். அதுபோல, உலக விஷயங்கள் பலவற்றிலும் உழலும் மனதைக் குவியச் செய்வது எளிதன்று. மனம் குவிந்து ஒருமைப்படுவதே தியானம்.
ஒருமைப்பட்ட மனது எத்தகையது என்பது விளக்கப்படுகிறது :
19. யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந:
நிவாதஸ்த: தீப:-காற்றில்லாத இடத்தில் விளக்கு, யதா ந இங்கதே-எப்படி அசையாமல் இருக்குமோ, ஸா உபமா-அதே உவமை, ஆத்மந: யோகம் யுஞ்ஜத: யோகிந:-ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய, யதசித்தஸ்ய ஸ்ம்ருதா-வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது.
பொருள் : சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.
தியானத்தில் அமர்ந்திருப்பவன் தானே ஜோதி சொரூபம் என்றும், சுத்த சைதன்யம் என்றும் பாவித்தல் வேண்டும். காற்று அடிக்காத இடத்தில் ஏற்றிவைத்த தீபம் தனது நிலை பிறழாது வரைந்த சித்திரம் போன்று நின்று எரிகிறது. ஆசை என்ற காற்று அடியாதிருக்கும் போது யோகியின் சித்தமும் அங்ஙனம் அசைவற்றிருக்கிறது.
தியானத்தில் முதிர்ந்தவனுக்கு முக்தி வெகு சமீபம் என்பது ஒரு பழமொழி. தியானத்தில் ஒரு மனிதனுக்கு எப்போது முதிர்ச்சி உண்டாகிறது தெரியுமா? அவன் தியானத்துக்கு உட்கார்ந்தவுடன் திவ்வியதேஜஸ் அவனைச் சுற்றிக் கொள்கிறது. அவனுடைய ஆத்மா ஈசுவரனுடன் கலந்துகொள்கிறது.
யோக முதிர்ச்சியால் வரும் வேறு பல அனுபவங்களும் இருக்கின்றன. அவைகளாவன :
20. யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா
யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி
யோகஸேவயா-யோகப் பயிற்சியினால், நிருத்தம் சித்தம்-கட்டுண்ட சித்தம், யத்ர உபரமதே-எங்கு ஆறுதல் எய்துமோ, ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்யந்-எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து, ஆத்மநி ஏவ துஷ்யதி-ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ.
பொருள் : எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ
மனம் அடங்கி அமைதிபெறுகிறவிடத்து ஆனந்தம் மிளிர்கிறது என்பதற்கு சுழுத்தியவஸ்தையே சான்று. ஆனால் சுழுத்தியில் ஆத்ம தரிசனம் மிகக் குறைவு. யோக சாதனத்தால் சித்த சுத்தி யடையுங்கால், தெளிவடைந்த மனதால் ஆத்ம சொரூபம் நன்கு அறியப்படுகிறது. ஆத்ம ஞானமே ஆத்ம திருப்தியாகிறது.
இன்னும் என்ன அடையப்பெறுகிறது?
21. ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்த்வத:
அதீந்த்ரியம்-புலன்களைக் கடந்து நிற்பதும், புத்திக்ராஹ்யம்-புத்தியால் தீண்டத்தக்கதும், யத் ஆத்யந்திகம் ஸுகம்-எந்த முடிவற்ற பேரின்பத்தை, தத் யத்ர வேத்தி-அதை எங்கு காண்பானோ, யத்ர ஸ்தித-எங்கு நிலைபெறுவதால், தத்த்வத: ந ஏவ சலதி-இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ.
பொருள் : புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,
சுகம் வெளியுலகில் இல்லை; அது ஆத்ம சொரூபத்திலேயே இருக்கிறது. உள்ளே இருப்பதை உணர இந்திரியங்களுக்கு இயலாது. தெளிவடைந்த புத்தியே அதைத் தெரிந்துகொள்கிறது. அது ஆத்ம சுகமாதலால் அது முடிவில்லாதது. ஆத்ம சொரூபத்திலே நிலைபெற்ற யோகி நீருக்குள்ளே திரும்பவும் இடம் பெற்ற மீன் போன்றவன். மீன் நீரினின்று நிலம் போக விரும்புவதில்லை. தெவிட்டாத ஆத்மானந்தத்தை அனுபவிப்பவன் தெவிட்டுகிற விஷய ஆனந்தத்துக்குப் போவதில்லை.
உண்மையான சமாதியடையும்போது ஒருவன் தன் இயல்பான சச்சிதானந்த சாகரத்தில் ஆழ மூழ்குகிறான். அவன் கருவி கரணங்கள் ஒடுங்குகின்றன.
22. யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:
யஸ்மிந்ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே
யம் லாபம் லப்த்வா-எதனை யெய்தியபின், தத: அபரம் அதிகம் ந மந்யதே ச-அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, யஸ்மிந் ஸ்தித:-எங்கு நிலை பெறுவதால், குருணா து:கேந அபி-பெரிய துக்கத்தாலும், ந விசால்யதே-சலிப்பெய்த மாட்டானோ.
பொருள் : எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,
அடையப் பெறாத உலகப் பொருள் ஒன்று பெரியதாகத் தோன்றுகிறது. அடைந்தவுடனே அது சிறியதாய்விடுகிறது. பிறகு அதனினும் பெரியதாக வேறு ஒரு பொருள் தோன்றுகிறது. இப்படி இவ்வுலகம் தருகிற நிலையற்ற இன்பம் ஒரு பொருளிலிருந்து மாறி இன்னொரு பொருளுக்குப் போய்க் கொண்டே யிருக்கிறது. பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள பரப்பிரம்மத்தை அடைந்தான பிறகு அதற்கு ஒப்பானது ஒன்றும் தென்படுவதில்லை. இனி, அதற்கு மிக்கதொரு பொருள் தோன்றுவது எங்ஙனம்? கடலை அடைந்த மின் அதிலும் பெரியது எதைப் பெறமுடியும்? அகண்ட சச்சிதானந்தத்தைப் பெற்ற பிறகு அதற்குமேல் பெறுதற்கு ஒன்றுமில்லை. துக்கமெல்லாம் உடல் சம்பந்தமானவைகள். பிரம்மானந்தத்தில் திளைத்திருப்பவர்களுக்குத் தேகவுணர்ச்சி வருவதில்லை. நிழல்போன்று தேகம் யோகியைச் சார்ந்திருக்கிறது. நிழலைக் கத்தியால் வெட்டுவதால் மனிதனுக்குத் துன்பம் வருவதில்லை. தேகத்தைச் சிதைப்பதால் ஆத்மஞானிக்குத் துன்பம் வருவதில்லை.
சரீரத்தில் அனுபவிக்கும் துன்பங்களும் இன்பங்களும் எப்படிப் பட்டவையாயினும் உண்மையான பக்தனுக்கு ஞானம், பக்தி இவைகளின் மஹிமையும் சக்தியும் ஒருபோதும் குறைவதில்லை. பாண்டவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் எவ்வளவு கொடியனவாக இருந்தன! என்றாலும் ஒரு நிமிஷங்கூட அவர்களுடைய ஞான ஒளி மங்கின தில்லை.
23. தம் வித்யாத்து:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம்
ஸ நிஸ்சயேந யோக்தவ்யோ யோகோऽநிர்விண்ணசேதஸா
து:க ஸம்யோக வியோகம்-துன்பத்துடன் கலத்தலை விடுதலை, தம் யோகஸம்ஜ்ஞிதம்-அந்நிலையே யோக நிலையென்று, வித்யாத்-உணர், ஸ யோக:-அந்த யோகத்தை,
அநிர்விண்ணசேதஸா-உள்ளத்தில் ஏக்கமின்றி, நிஸ்சயேந யோக்தவ்ய:-உறுதியுடன் பற்றி நிற்கக் கடவான்.
பொருள் : அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான்.
மனிதன் உண்மையில் சுக சொரூபி. அறியாமையினால் தன்னைத் துக்கத்தோடு இணைத்துக்கொண்டிருக்கிறான். வருவிக்கப்பட்ட துக்கத்தை விலக்கிவிட்டால் தனது எதார்த்தநிலை விளங்குகிறது. சொப்பனத்தில் வருந்துகின்ற ஒருவனை எழுப்பி ஜாக்கிர தாவஸ்தையோடு யோகம் பண்ணிவைப்பது போன்றது இது. யோகம் என்பதற்கு இணைத்தல் அல்லது சேர்த்துவைத்தல் என்று பெயர். எக்காரணத்தை முன்னிட்டாவது விசனப்படுபவன் யோகத்துக்குத் தகுதியுடையவன் ஆகான். அகமகிழ்வுடனும் குன்றாத ஊக்கத்துடனும் யோக சாதனம் செய்பவனுக்கு அது கைகூடும். ஏனென்றால் தனது நிஜசொரூபத்தை யணுகுதற்கு அத்தகைய மனபரிபாகம் முற்றிலும் அவசியமானது.
பாத்திரத்தின் அடியில் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் வரையில், அதிலுள்ள பால் கொதித்துப் பொங்கும். நெருப்பை எடுத்து விட்டாலோ, பொங்குதல் நின்றுவிடும். அதுபோல ஸாதன மார்க்கத்தில் இருக்கும் வரையில்தான் புதிய ஸாதகனது மனம் குதூகலத்தால் பொங்கும்.
யோகசாதனத்தில் இன்னும் சில அம்சங்கள் இருக்கின்றன. அவையாவன :
24. ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸேஷத:
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத:
ஸங்கல்பப்ரபவாந்-சங்கல்பத்தினின்றும் எழும், ஸர்வாந் காமாந் அஸேஷத: த்யக்த்வா-எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு, மநஸா இந்த்ரியக்ராமம் ஸமந்தத: ஏவ விநியம்ய-மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி.
பொருள் : சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு, எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,
சங்கல்பம் என்பது மனதில் வரும் எண்ணம். அது விதை போன்றது. ஆசையோ செடிபோன்றது. விறகுக் கட்டைகளுக்கிடையிலுள்ள சிறு தீ, பிறகு பெருந்தீயாகப் பரிணமிப்பது போன்று மனதில் ஆசை கொஞ்சம் மிச்சமிருந்தால் அது நாளடைவில் சாதகனுக்கும் தெரியாது பேராசையாகத் தடித்து விடும். ஆசைக்குச் சிறிதும் இடம் தரலாகாது. விவேகம் வைராக்கியத்தோடு கூடிய மனதால் இந்திரியங்களை அறவே அடக்குதல் வேண்டும்.
புகைசூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீரத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும் ஜாக்கிரதையாயும் இருந்தாலும் இந்திரிய விஷயங்களுக்கிடையில் வாசம் செய்வதால் அவனுக்குக் காம இச்சை கொஞ்சமாவது உண்டாவது நிச்சயம்.
25. ஸநை: ஸநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா
ஆத்மஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்
ஸநை: ஸநை: உபரமேத்- மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து, த்ருதி க்ருஹீதயா புத்த்யா-துணிந்த மதியுடன், மந: ஆத்மஸம்ஸ்தம் க்ருத்வா-மனதை ஆத்மாவில் நிறுத்தி, கிஞ்சித் அபி ந சிந்தயேத்-எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.
பொருள் : துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்; எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.
த்ருதி அல்லது தைரியம் என்பது நெறியான வாழ்க்கையினின்று வரும் வல்லமை. ஊசிப்புல் ஊசியைவிடக் கூர்மையாயிருக்கும். ஆனால் குத்தித் தைப்பதற்கு அது உதவாது. விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள சிலருக்கு நுண்ணறிவு உண்டு. தங்களுடைய புத்திக் கூர்மையினால் நித்திய அநித்திய வஸ்து விவேகம் மிகச் சாமர்த்தியமாகச் செய்வார்கள். ஆனால் ஆசையை அடக்கும் வல்லமை அவர்களுக்கில்லை. மனவலிவும் தைரிய புத்தியும் படைத்தவர்க்கே அது சாத்தியம். மனம் ஆத்மாவில் நிலைபெறுகிறவளவு அது விஷயங்களில் போகாது. விஷய போகங்களை எண்ணலாகாது. ஈசுவர சிந்தனையே மெள்ள மெள்ள வலுக்கவேண்டும்.
மனம்தான் எல்லாம். அது தனது சுயேச்சையை இழக்குமானால் நீயும் உனது சுயேச்சையை இழப்பாய். மனம் சுயேச்சையோடு இருக்குமானால் நீயும் சுயேச்சையோடு இருப்பாய். மனதை, வண்ணானிடமிருந்து வந்த வெளுப்பு வஸ்திரத்தைப் போல, எந்தச் சாயத்திலும் தோய்த்தெடுக்கலாம். ஆங்கில பாஷையைப் படித்தால் உனது சம்பாஷணையில், நீ தடுக்க முயன்றாலும் ஆங்கிலச் சொற்கள் கலந்துவிடும். சம்ஸ்கிருதம் படித்த பண்டிதன் நிச்சயமாய் சுலோகங்களை மேற்கோளர்க எடுத்துக் காட்டுவான். கெட்டவர்களோடு சகவாசம் செய்தால் மனமும் வாக்கும் கெட்டுப்போம். பக்தர்களின் மத்தியிலிருந்தால் மனம் ஈசுவரனைப் பற்றிச் சிந்திப்பது நிச்சயம். சகவாசத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி மனதின் சுபாவம் மாறுபடும்.
சிறிது சிறிதாகப் பழகவேண்டும் என்று பகவான் சொல்லியிருப்பதால் சாதகன் ஒருவன் தீவிரமான முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. பல பிறவிகளுக்குப் பிறகு யோகானு பூதி வந்தமைந்தால் போதும் என்று எண்ணி முயற்சியைக் குறைக்கலாம். அத்தகைய சந்தேகம் வாராதிருத்தற்பொருட்டு அதன் உட்கருத்தை பகவான் மேலும் விளக்குகிறார் :
26. யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம்
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஸம் நயேத்
யத: யத:-எங்கெங்கே, எதத் அஸ்திரம்-இந்த நிலையில்லாத, சஞ்சலம் மந: நிஸ்சரதி -சஞ்சலமான மனம் அலைகிறதோ, தத: தத: நியம்ய-அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி, ஆத்மநி ஏவ வஸம் நயேத்-ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.
பொருள் : எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.
ஓடும் தன்மையுடைய மனது ஒரு பொருளிடத்திருந்து விலக்கி யெடுக்கப்பட்டவுடன் மற்றொரு பொருளிடத்து அது பாய்கிறது. அப்படிக் பாய்தற்குத் தக்க காரணத்தையும் அந்த மனதே கண்டுபிடிக்கிறது. அரசாங்கம் உண்டுபண்ணும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் போன்று பாசாங்கு செய்துகொண்டே தங்கள் சுயநலத்துக்காக அதை மீறி நடக்கும் குணக்கேடர் பலர் உளர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு புதிய அடாத செயலையும் சட்டத்துக்கு உட்படுத்தப் புதிய சட்டங்கள் அமைப்பது அவசியமாகிறது. விஷயங்களில் செல்லும் மனது செய்கிற தொழிலும் அத்தகையது. அப்போதைக்கப்போது அதற்கு விவேகத்தை ஊட்டுதல் அவசியம். இச்செயலைத்தான் சிறிது சிறிதாக வசப்படுவது என்று பகவான் பகர்கிறார். ஆத்மாவில் ஊன்றி மனது உறுதிபெறும் வரையில் அதனோடு ஓயாது போராடியாக வேண்டும்.
இச்சையானது கடுகளவு இருந்தாலும் ஈசுவரனைக் காணமுடியாது. ஆதலால் உன்னிடத்துள்ள குற்றமற்ற சிறிய இச்சைகளைத் திருப்தி செய்துகொண்டு, விஷயாதிகளிலுள்ள கொடிய பெரிய இச்சைகளை விவேகத்தாலும் விசாரத்தாலும் ஒழித்துவிடு.
ஆசைகளை அடக்கியபின் ஆவதென்ன?
27. ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்
உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்
ஹி ப்ரஸாந்தமநஸம்-ஏனெனில் மனம் சாந்தமாக, அகல்மஷம் ஸாந்தரஜஸம்-மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி, ப்ரஹ்மபூதம்-பிரம்மமேயாகிய, ஏநம் யோகிநம்-இந்த யோகிக்கு, உத்தமம் ஸுகம் உபைதி-மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.
பொருள் : மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.
துன்பத்துக்கு ஏதுவான பற்றுதல்களை ரஜோகுணம் உண்டு பண்ணுகிறது. அதன் வேகம் தணியும்பொழுது மனதில் பிரசாந்தம்-இனிமையோடு கூடிய அமைதி-தானாக வந்தமைகிறது. அப்பொழுது யோகி ஜீவன் முக்தனாகிறான். எல்லாம் பிரம்மம் என்று அறிகிறவன் தானே பிரம்மமாகிறான். தானே பிரம்மமானவனுக்கு இருள்சேர் இருவினையும் சேர்வதில்லை. வினையே பாபம் எனப்படுகிறது. தர்மம் அதர்மமாகிய கர்மத்தில் கட்டுப்படாதவனுக்குப் பாபமில்லை. பின்பு சித் சுகமே யாண்டும் அவனை அடுத்திருக்கும்.
தனது வேலைக்காரனது வீட்டுக்கு அதிதியாகப் போவதற்கு முன்னால், அவ்வேலைக்காரன் தன்னைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரிக்க வேண்டியதற்காக அரசன் ஒருவன் தன்னுடைய பண்டகசாலையிலிருந்தே வேண்டிய ஆசனங்கள், ஆபரணங்கள், ஆகாராதிகள் இவைகளை அவ்வேலைக்காரனுக்கு அனுப்புகிறான். அதுபோல ஈசுவரன் பக்தனிடம் செல்லும் முன்னால் ப்ரேமை, பக்தி, சிரத்தை ஆகிய இவைகளை அந்த பக்தனுடைய ஆர்வமுற்ற ஹிருதயத்தில் புகும்படி அனுப்பியருள்கிறான்.
28. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ:
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஸமத்யந்தம் ஸுகமஸ்நுதே
விகதகல்மஷ:-குற்றங்களைப் போக்கி, ஏவம் ஸதா ஆத்மாநம் யுஞ்ஜந்-இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், ப்ரஹ்ம ஸம்ஸ்பர்ஸம்-(அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய, அத்யந்தம் ஸுகம்-மிக உயர்ந்த இன்பத்தை, ஸுகேந ஸுகம் அஸ்நுதே-எளிதில் துய்க்கிறான்.
பொருள் : குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.
பிரம்ம ஸம்ஸ்பர்சம், பிரம்மத்தைத் தொட்டுணர்வதால் வரும் பேரானந்தம் என்பது மூலம். ஸ்பர்சமணி என்று ஒரு கல் இருப்பதாகவும், அதைக்கொண்டு எதைத் தொட்டாலும் அது பொன்னாய்விடும் என்றும் ஓர் ஐதிகம் உண்டு. பொன் ஆவது என்பதன் பொருள் கீழானது மிக மேலானதாகும் என்பதாம். பிரம்மம் தான் அந்த ஸ்பர்சமணி. அது எளிதில் அகப்படுவது அன்று. ஆயினும் அதனோடு இணக்கம் வைத்துக்கொள்பவர்களெல்லாம் அதன் சொரூபத்தை அடையப்பெறுகின்றனர். அதன் அலகிலா ஆனந்தமும் அவர்களுக்குரியதாகிறது.
ஜலத்தில் அமிழ்த்தி வைத்த பாத்திரத்தின் உள்ளேயும் வெளியிலும் ஜலம் நிரம்பியிருக்கும். அதுபோல ஈசுவரனிடம் ஆழ்ந்துள்ள ஆத்மாவானது உள்ளும் புறமும் ஸர்வவியாபகமான சைதன்யத்தைத்தான் காணும்.
தன்னகத்து ஆத்ம சொரூபத்தை அறிந்து அனுபவித்தவனுக்கு உலகக் காட்சியில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? அதற்கு விடை வருகிறது :
29. ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந:
யோகயுக்தாத்மா-யோகத்தில் கலந்தவன், ஸர்வத்ர ஸமதர்ஸந:-எங்கும் சமப் பார்வையுடையவனாய், ஸர்வபூதாநி ஆத்மாநம்-எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், ஆத்மநி ச ஸர்வபூதாநி-தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும், ஈக்ஷதே-காணுகிறான்.
பொருள் : யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.
யோகத்தில் முதிர்ச்சியடைந்துவருபவனுக்கு இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற வேற்றுமை யெண்ணம் போய்விடுகிறது. சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மா முதல் சிருஷ்டிப்பொருள்களில் மிகச் சிறியதாகிய புல் பரியந்தம் எல்லாவற்றையும் சிறந்தபான்மையுடன் கருதுதல் அவனுக்கு இயல்பாகின்றது. பிறகு அவன் தன்னுயிர் போன்று மன்னுயிரையும், மன்னுயிர்போன்று தன்னுயிரையும் பாராட்டுபவன் ஆகிறான். அதற்குமேல் தன் உடல் முழுவதையும் தன் சொரூபமாகக் கருதுவது போன்று, பிரம்மா முதல் புல் வரையில் எல்லா உயிர்களையும் தன் சொரூபமாகவும், தன்னை எல்லா உயிர்களின் சொரூபமாகவும் உணரும் தன்மை அவனுக்கு வந்தமைகிறது.
நான் தனிப்பட்ட ஜீவன் என்று கூறுவது கங்கைப் பிரவாகத்துக்குள் ஒரு சிறு பாகத்தை அணையிட்டுக் கட்டி அவ்வணைக்குள்ளிருக்கும் நீரைத் தன்னுடய கங்கை என்று கூறுவதற்கொப்பாகும்.
ஜீவர்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் என்றால் இனி அவர்களுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :
30. யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி
ய: ஸர்வத்ர மாம் பஸ்யதி-எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, ஸர்வம் ச மயி பஸ்யதி-எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி-அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை, ஸ ச மே ந ப்ரணஸ்யதி-எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை.
பொருள் : எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.
உயிர்கள் அனைத்துக்குமிடையில் ஒற்றுமை கண்டான பிறகு அவைகள் எப்பொருளால் ஆக்கப்பெற்றவை என்ற மெய் அறிவு வருகிறது. பொன் ஆபரணங்கள் எல்லாம் பொன்னால் ஆக்கப்பட்டவை போன்று உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவினிடத்திலிருந்து வந்தவை என்ற ஞானம் உதிக்கிறது. நகை பொன் மயமாயிருப்பது போன்று பரமாத்மாவை அறிபவன் தானே பரமாத்மாவின் சொரூபமாயிருக்கிறான். அவன் எந்த இடத்தில் இருப்பினும், எத்தகைய மனநிலையை யுடையவனாயிருப்பினும், காலவேறுபாடு எதுவாயினும், பரமாத்மாவைப்பற்றிய ஞானம் அவனை விட்டகலுவதில்லை.
ஒரே வஸ்துவான சர்க்கரையினால் பக்ஷி போலவும், மிருகம் போலவும் வேறு வேறு உருவங்களைக்கொண்ட மிட்டாய் செய்யக்கூடும். அதுபோல ஆனந்த சொரூபியாகிய ஒரே கடவுள் பலவித நாம ரூபங்களால் பலவித கால தேசங்களில் ஆராதிக்கப்படுகிறான்.
ஞானம் தடைப்படுவதில்லை யாதலால் பரமாத்மாவுக்கும் யோகிக்கும் உள்ள தொடர்வு தெளிவுறுத்தப்படுகிறது.
31. ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித:
ஸர்வதா வர்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்ததே
ய: ஏகத்வம் ஆஸ்தித-எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக, ஸர்வபூதஸ்திதம்-எல்லா உயிர்களிடத்திலுமுள்ள, மாம் பஜதி-என்னைத் தொழுவோன், ஸ யோகீ:-அந்த யோகி
ஸர்வதா வர்தமாந அபி-யாங்கணும் சென்றபோதிலும், மயி வர்ததே-என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்.
பொருள் : ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.
சிறைச்சாலையிலிருந்து விடுபட்ட ஒருவன் ஓர் அறைக்குள்ளே தன்னை மூடிவைத்துக்கொண்டாலும், கை கால்களைத் தளைத்துக் கொண்டாலும் தான் இனி பந்தப்பட்டவன் அல்லன் என்று ஐயம் திரிபு அற உணர்கிறான். பிரம்மம் ஒன்றே இத்தனைக்கும் மூலப்பொருள் என்று அறிந்தவன் பிரம்மத்தையே யாண்டும் காண்கிறான். பிரம்ம பாவனையில் அவன் நிலைத்திருப்பதால் அவன் கொள்ளுகிற இணக்கமெல்லாம் இறை வணக்கமாகிறது. ஸர்வதா என்பதன் பொருள் தியானவஸ்தை, வியவகாரம், விச்ராந்தி ஆகிய எல்லா வேளைகளிலும் நிலைகளிலும் என்பதாகிறது. ஸகஜ நிஷ்டை என்பது இதுவே. நீரில் இருப்பவன் நனைவதும், நெருப்பின் அருகில் இருப்பவன் வெப்பம் பெறுவதும் இயல்பு. பிரம்ம சன்னதியில் இருப்பவன் தானே பிரம்ம சொரூபம் ஆகிறான். ஜீவன் முக்தன் நிலை இதுவே.
வாஸ்தவமான ஞானம் வாய்ந்தவன் ஈசுவரன் வெகு தூரத்திலிருப்பதாகக் காண்பதில்லை. அவன் என்று எட்ட இருப்பது போல் அல்லாது இது என்று இங்கே அவனுடைய உள்ளத்திலேயே இருப்பதாக அவன் உணர்கிறான். ஈசுவரன் எல்லாரிடத்திலும் இருக்கிறான். ஆகவே தேடுபவர்களுடைய காட்சிக்கு அவர்களிடமே அவ் ஈசுவரன் தென்படுகிறான்.
அந்த யோகியிடத்து மேலும் அமையும் பெருமையாவது :
32. ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோऽர்ஜுந
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:
அர்ஜுந ய:-அர்ஜுனா! எந்த யோகி, யதி ஸுகம் வா து:கம் வா-இன்பமாயினும், துன்பமாயினும், ஸர்வத்ர ஆத்ம ஒளபம்யேந-எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே, ஸமம் பஸ்யதி-சமமாக பார்க்கிறானோ, ஸ: பரம யோகீ மத:-அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.
பொருள் : இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.
தன் உடலில் உள்ள உறுப்புகளுக்கிடையில் மனிதன் உயர்வு தாழ்வு பாராட்டுவதில்லை. அவயவத்துக்கு உண்டாகும் இன்பமும் துன்பமும் தன்னுடையது. ஏனென்றால் அவயவங்கள் வேறு, தான் வேறு அல்ல. தானே அவயவங்கள் அவயவங்களே தான். இந்த ஞானம் சாதாரண ஜீவனுக்கு உறுதியாயிருப்பது போன்று சிறந்த யோகிக்குத் தானே உலகம், உலகமே தான் என்ற அனுபவம் அசையாதது. தானும் உலகும் பரம்பொருளுக்கு அவயவங்கள் போன்றவை. தனக்குத் துன்பம் வாராது தடுப்பது போன்று உலகுக்குத் தன்னால் துன்பம் வாராது அவன் தடுக்கிறான். தனது இன்பத்தை வளர்ப்பது போன்று உலகுக்கு இன்பத்தை அவன் நல்குகிறான். இத்தகைய ஐக்கிய உணர்வால் அவன் பரமயோகி யாகிறான்.
ஒரு கிராமத்தில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்திலிருந்த சந்யாஸிகள் தினந்தோறும் பிக்ஷõ பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே பிøக்ஷக்காகப் போவதுண்டு. ஒருநாள் ஒரு சந்யாஸி அப்படிப் போகும்போது ஏழைக் குடியானவன் ஒருவனை ஒரு மிராசுதாரன் கடுமையாக அடிப்பதைக் கண்டார். தயாளுவாகிய அந்தச் சாது, குடியானவனை அடிப்பதை நிறுத்த வேண்டுமென்று மிராசுதாரனைக் கேட்டுக்கொண்டார். கோபத்தால் தன்னை மறந்த மிராசுதாரன் உடனே, சாதுவின் மேல் பாய்ந்து அவரையும் அடி அடியென்று அடித்தான். அதனால் அவர் பிரக்ஞையற்றுத் தரையில் விழுந்தார். அதைக் கேள்வியுற்ற மற்ற சந்யாஸிகள் உடனே அவர் விழுந்து கிடக்குமிடத்துக்கு ஓடிவந்து, அவரை மடத்துக்குக் கொண்டுபோயினர். என்றாலும் அவருக்கு நெடுநேரம் வரையில் பிரக்ஞை வரவில்லை. ஆதலால் மற்றைய சாதுக்கள் அவருக்குக் காற்று வரும்படி விசிறி, முகத்தைக் குளிர்ந்த ஜலத்தால் துடைத்து, வாயில் பாலை வார்த்து, பிரக்ஞை வருவதற்கான சைத்யோபசாரங்களைச் செய்துகொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குத் தம் நினைவு வரத் தலைப்பட்டது. அவர் கண்ணைத் திறந்து மற்றைய சந்யாஸிகளைப் பார்த்ததும், அவர்களில் ஒருவர் சுவாமீ, இப்போது தங்களுக்குப் பால் வார்த்துக்கொண்டிருப்பது யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு அந்த சாது, எவன் என்னை அடித்தானோ அவனே இப்போது பால் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்று பதில் சொன்னார்.
ஈசுவரனே அடைந்து நன்மை தீமை, பாப புண்ணியம் இவைகளைக் கடந்து நின்றாலொழிய இப்படிப்பட்ட ஐக்கிய ஆத்மசொரூபம் ஸித்தியாகாது.
யோகம் இங்ஙனம் விளக்கப்படும்போது அர்ஜுனனுக்கு ஓர் ஐயப்பாடு உண்டாயிற்று. அதாவது :
அர்ஜுந உவாச
33. யோऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந
ஏதஸ்யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், மதுஸூதந!-மதுசூதனா, அயம் யோக ஸாம்யேந-இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று, ய: த்வயா ப்ரோக்த:-எது உங்களால் சொல்லப் பட்டதோ, ஏதஸ்ய ஸ்திராம் ஸ்திதிம்-அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை, சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்யாமி-எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.
சமமாகப் பார்த்தல் என்பது வி÷க்ஷபங்கள் அற்று மனம் ஒடுங்கியிருத்தலாம். விதவிதமான எண்ணங்கள் வி÷க்ஷபங்கள் என்று இயம்பப்படுகின்றன. அலையில்லாத கடல்போன்ற தேங்கிய மனநிலை வி÷க்ஷபங்கள் அற்ற மனநிலையாகிறது.
34. சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்
ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா! மந: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது, ப்ரமாதி-தவறும் இயல்பினது, பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது, தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல், ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்.
பொருள் : கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.
இக்கேள்வியில் மனதின் இயல்பு முழுதும் அடங்கி யிருக்கிறது. ஓயாது அலைந்து திரிவதால் மனது சஞ்சல முடையது. மான் போன்று அது அலைகிறது எனலாம். மான் யாருக்கும் துன்பம் தருவதில்லை. மனது அத்தகையதன்று. புலிபோன்று அது உயிர்களைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. அவைகள் அத்துஷ்ட ஜந்துவால் கலக்கமடைகின்றன. மனதும் அப்படி மனிதனைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் அது பிரமாதி எனப்படுகிறது. துன்புறுத்தும் கொசு ஒன்றுக்குப் பலமில்லை. ஆனால் புலிக்குப் பலமுண்டு. மனதும் அப்படிப் பலம் மிக உடையது. எனவே அது பலவத் எனப்படுகிறது. புலியைப் பட்டினி போட்டு அதன் பலத்தைக் குறைத்துவிடலாம். இரத்தத்தை உறிஞ்சும் அட்டை ஒன்றைப் பட்டினி போட்டால் அதன் தோல் அதிக வலியுடையதாகிறது. அதைக் கிள்ளித் துண்டிக்க முடியாது. மனதும் அத்தகைய அட்டை போன்றது. அது விரும்புவதைக் கொடாவிட்டால் இன்னும் பன்மடங்கு அது திடமுடையதாகிறது. ஆகையால் அது த்ருடம் என்று இயம்பப்படுகிறது. காற்றைப் போன்று அது கட்டில் அடங்காதது என்று இயம்பப்படுகிறது. நவீன மனிதன் ஒரு விதத்தில் காற்றைப் பிடித்து அடைத்துவைக்கக் கற்றிருக்கிறான். ஆனால் மனதைக் கட்டுவது மாந்தருக்குச் சாத்தியமன்று.
இனி, இத்தகைய மனதைக் கிருஷ்ணன் தான் ஒழுங்குபடுத்த வேண்டும். ஏனென்றால் அவன் பெயரே அவனது வல்லமையைக் குறிக்கிறது. கிருஷ் என்பதற்குச் சுரண்டுதல் என்று பொருள். அதைப் பகுதியாகக் கொண்டு பிறந்தது கிருஷ்ணன் என்ற சொல். கிருஷ்ணன் பக்தர்களுடைய பாபத்தைச் சுரண்டிப் போக்க வல்லவன்.
இதற்குப் பகவானது விடை வருகிறது :
ஸ்ரீ பகவாநுவாச
35. அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மஹாபாஹோ-பெருந்தோளாய், அஸம்ஸயம் மந: சலம்-ஐயமின்றி மனம் சலனமுடையதுதான், துர்நிக்ரஹம் து-கட்டுதற்கரியது தான், கௌந்தேய! அப்யாஸேந வைராக்யேண ச-குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும், க்ருஹ்யதே-வசப் படுத்தப் படுகிறது.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.
அப்பியாசம் என்பது பழக்கம். பழக்கத்தால் தன்னை எப்படி வேண்டுமானாலும் திருத்தியமைத்துக்கொள்ளலாம். அவரவர் பெற்றுள்ள பான்மை பழக்கத்தைப் பொறுத்தது. இடையறாப் பழக்கத்தால் எப்பான்மையை வேண்டுமானாலும் பெறலாம். நாடிய லட்சியத்தினிடத்து அல்லது வழிபடு தெய்வத்தினிடத்து மனதை அடிக்கடி திருப்புவது அப்பியாசமாகும். ஈசுவர தியானத்தை முறையாகச் செய்வது அப்பியாசம். எண்ணம் இறைவனைப் பற்றிய தாகுமளவு மனது வெளி விஷயங்களில் செல்லாது ஒருமுகப்படும். வைராக்கியம் என்பது ராகமின்மை. புலன்களில் பற்றில்லாதிருப்பது வைராக்கியம். மனம் அடங்காது ஓடுதற்குக் காரணம் யாது என்று விசாரித்துப் பார்த்தால் அது எப்பொழுதாவது எதனிடத்தாவது பற்று வைத்திருந்தால் அப்பொருளையே அது நாடியலைகிறது என்பது விளங்கும். இந்திரிய விஷயங்களிலுள்ள கேடுகளை மனதுக்கு ஞாபகமூட்டி அதை அவைகளிடத்திருந்து மீட்டெடுப்பது வைராக்கியமாம்.
நீந்தக் கற்றுக்கொள்ள விரும்புகிறவன் அதைத் தொடர்ந்து அப்பியசிக்கவேண்டும். ஒரே ஒரு நாள் அப்பியசித்தவுடன் கடலில் நீந்துவதற்கு ஒருவனும் துணியமாட்டான். அது போல பிரம்மமாகிய கடலில் நீந்தப் பிரியப்பட்டால் முதலில் அநேகம் தரம் பயன்படாத பிரயத்தனங்கள் செய்து தீரவேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக் கூடிய சக்தி உனக்கு உண்டாகும். விஷமுள்ள ஒருவகைச் சிலந்திப் பூச்சியிருக்கிறது. அதனால் உண்டாகும் கடி எந்த மருந்தினாலும் எளிதில் குணமடைவதில்லை. மஞ்சள் வேரினால் கடியின் மீது குழையடித்த பிறகுதான் எந்த மருந்தும் குணங்கொடுக்க ஆரம்பிக்கும். அதுபோலக் காமமும் காசு ஆசையுமாகிய சிலந்திப்பூச்சி ஒருவனைக் கடித்துவிட்டால் வைராக்கியமென்னும் மனோசக்தி அவனிடம் முதன் முதலில் உதிக்க வேண்டும். அப்பால்தான் அவன் ஆத்ம சாதனத்துக்கு அருகனாவான்.
யோகத்தை அடைபவர் யார், அடையாதவர் யார் எனின்:
36. அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:
வஸ்யாத்மநா து யததா ஸக்யோऽவாப்துமுபாயத:
அஸம்யத ஆத்மநா-தன்னைக் கட்டாதவன், யோக: துஷ்ப்ராப-யோக மெய்துதல் அரிது, து வஸ்ய ஆத்மநா யததா உபாயத:- தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும், அவாப்தும் ஸக்ய:-யோகத்தை அடைவதும் சாத்தியமானது, இதி மே மதி:-என்று நான் கருதுகிறேன்.
பொருள் : தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.
சித்த விருத்திகளைத் தடுத்தவன் மனதை அடக்கியவன் ஆகிறான். உபாயத்தால் முயலுதல் என்பது அப்பியாசத்தையும் வைராக்கியத்தையும் முறையாக அனுஷ்டித்தல் என்பதாம். என் குழந்தைகளே, நான் அக்காலங்களில் தியானம் செய்வதற்கு முன்னால் என் மனதிலுள்ள கெட்ட எண்ணங்கள், ஆசைகள் முதலான சகல கல்மஷங்களையும் அலம்பிச் சுத்தப்படுத்தி விட்டதாகப் பாவனை செய்துகொண்டு அதன் பிறகு பகவானை அவ்விடத்தில் எழுந்தருளப் பண்ணுவேன். நீங்களும் அவ்வாறு செய்யுங்கள் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சாதன நாட்களைப்பற்றி சிஷ்யர்களிடம் கூறுவார்.
யோகத்தைப் பூர்த்திபண்ணாதவனைப் பற்றி இப்பொழுது அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதாவது :
அர்ஜுந உவாச
37. அயதி: ஸ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ:
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஸ்ரத்தயா உபேத:-யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும், அயதி: யோகாத் சலிதமாநஸ:- தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவி, யவன் யோகஸம்ஸித்திம் அப்ராப்ய-யோகத்தில் தோற்றுப் போய், காம் கதிம் கச்சதி க்ருஷ்ண!-என்ன கதியடைகிறான் கண்ணா!
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?
யோகம் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் மனதில் உறுதியில்லை. அதனால் பூரணத்தை அவன் அடையவில்லை. அப்படி யோகத்தில் தோல்வியடைந்து உயிர் துறப்பவன் கதி என்னவாகும்?
38. கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நஸ்யதி
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி
மஹாபாஹோ ப்ரஹ்மண:-பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற, பதி விமூடோ-மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி, அப்ரதிஷ்ட:-உறுதியற்றவனாக, உபய விப்ரஷ்ட-இரண்டுங் கெட்டவனாக, சிந்ந அப்ரம் இவ-உடைந்த மேகம்போல், கச்சித் ந நஸ்யதி-அழிந்து போக மாட்டானா?
பொருள் : ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?
சிதறடைந்த மேகம் மண்ணுலகில் மழையாய்ப் பெய்வதில்லை; விண்ணுலகில் உருத்தெரியாது மறைந்து போகிறது. யோகப்பிரஷ்டன் இகம் பரம் ஆகிய இரண்டினின்றும் வழுவியவன் ஆகிறான். கர்மபலத்தில் பற்று வைக்காமையால் சுகபோகத்தைப் பூவுலகிலும் வானுலகிலும் அவன் அனுபவிப்பதில்லை. பிரம்ம மார்க்கத்தில் மனத்தெளிவு அடையாமையால் அவன் பிரம்மஞானியாகவில்லை. ஆக, புத்தி, முக்தி (போகம், யோகம்) ஆகிய இரண்டையும் இழந்தவன் ஆகிறான். இதைவிடப் பரிதாபகரமான நிலை மனிதனுக்கு யாது உளது?
39. ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத:
த்வதந்ய: ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே
க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸயம்-கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை, அஸேஷத: சேத்தும் அர்ஹஸி-மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன், ஹி அஸ்ய ஸம்ஸயஸ்ய சேத்தா-ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர், த்வத் அந்ய: உபபத்யதே-நின்னையன்றி வேறெவருமிலர்.
பொருள் : கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.
தேவர்கள், ரிஷிகள் ஆகிய மேலோர் யாரும் இச் சந்தேகத்தை நீக்குதலில் உமக்கு நிகராகமாட்டார்கள். ஏனென்றால் நீர் சர்வக்ஞனான ஈசுவரன்.
யாருக்கு யார் குரு? ஈசுவரன் ஒருவனே ஜகத்குருவும் வழிகாட்டியுமாவான்.
அவதார புருஷரால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை. ஜீவனையும் ஆத்மாவையும் பற்றிய சூக்ஷ்மமான பிரச்னைகளை யெல்லாம் அவர் வெகு சுலபமாகத் தீர்த்துவிடுகிறார். அவருடைய போதனைகளை ஒரு சிறு குழந்தைகூடத் தெரிந்துகொள்ளும், அவர் கற்பகோடி காலங்களாகச் சேர்ந்துள்ள அக்ஞானத்தை அகற்றும் ஒளியையுடைய திவ்விய ஞானி சூரியன் ஆவார்.
ஸ்ரீபகவாநுவாச
40. பார்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம் தாத கச்சதி
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த-பார்த்தா, தஸ்ய இஹ விநாஸ ந வித்ய,தே-அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை, அமுத்ர ஏவ ந-மேலுலகத்திலும் இல்லை, தாத-பிரியமானவனே (மகனே!), ஹி கல்யாணக்ருத்-ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக,
கஸ்சித் துர்கதிம் ந கச்சதி-எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.
தாத என்றால் தகப்பன். தந்தையே பிள்ளையாகப் பரிணமிப்பதால் பிள்ளையை அப்பா என்று அழைப்பது வழக்கம். தகப்பனுக்குப் பிள்ளை போன்றவன் குருவுக்கு சிஷ்யன். ஆகையால் குரு சிஷ்யனை மைந்தா என்றோ அப்பா என்றோ அழைப்பது முறை. ஈண்டு பகவானது கிருபை சுரப்பதற்கு இச் சொல் சான்றாகிறது.
இவ்வுலகம் நலத்தை அடிப்படையாகக் கொண்டதா, அல்லது கேட்டை அடிப்படையாகக் கொண்டதா என்று யார் வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். கடவுளே இவ்வுலகம் அனைத்தும் ஆனார். கடவுளே நலமுடையான், கேடு இலான். நலத்தினின்று வருவது நலம். இவ்வுலகில் நன்மை செய்வோன் எவனும் கேடு அடைவதே யில்லையென்பது பகவானுடைய உறுதிமொழி. பாண்டவர் உட்பட எல்லா பக்தர்களது வாழ்க்கையே இக்கோட்பாட்டுக்குச் சான்றாகும். யோகத்தில் வழுவிய ஒருவன் தான் அதுபரியந்தம் அடைந்த நிலையைவிடக் கீழான நிலைக்கு எவ்வுலகிலும் போவதில்லை. அது எப்படி யென்று பகவான் மேலும் விளக்குகிறார்.
ஒரு மனிதனுடைய எண்ணத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கபடி அவனுக்குச் சன்மானம் கிடைக்கிறது. ஈசுவரன் பக்தர்கள் விரும்புவனவற்றை யெல்லாம் கொடுக்கும் கற்பக விருக்ஷம் போன்றவன்.
41. ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ: ஸமா:
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே
யோகப்ரஷ்ட:-யோகத்தில் தவறியவன், புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய-புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, ஸாஸ்வதீ: ஸமா: ஊஷித்வா-அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே-தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
அபிஜாயதே-பிறக்கிறான்.
பொருள் : யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.
போகமும் யோகமும் ஒன்றோடொன்று பொருந்தாது. போகத்தில் ஆசை கொண்டவன் யோகத்திலிருந்து தவறியவன் ஆகிறான். தான் விரும்பின சுகபோகங்களை அவன் சுவர்க்கத்துக்குச் சென்று நெடுங்காலம் அனுபவிக்கிறான். இப்பூலோகத்தில் பிறக்கும்பொழுதும் ஆக்கம் நிறைந்த வாழ்க்கைக்கு ஏற்ற செல்வர்கள் வீட்டில் பிறக்கிறான். செல்வமுடையவர்களுள் தூய வாழ்க்கை வாழ்பவர் மிகச் சிலர். அத்தகைய நல்லொழுக்கமுடைய ஐசுவரியவான்கள் வீட்டிலேயே யோகப்ரஷ்டன் பிறக்கிறான். ஏனென்றால் யோகியின் இயல்பு எப்பொழுதும் தூயதானது. ஒவ்வொரு ஜீவனும் அதனதன் தன்மைக்கும் வினைக்கும் ஏற்ற இடத்தில் பிறப்பெடுப்பது இயல்பு.
மற்றொரு பாங்குடைய யோகப்ரஷ்டன் இருக்கிறான். இனி, அவன் வரலாறு விளக்கப்படுகிறது.
42. அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஸம்
அதவா தீமதாம் யோகிநாம்-அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின், குலே ஏவ பவதி-குலத்திலேயே பிறக்கிறான், ஈத்ருஸம் யத் எதத் ஜன்ம-இதுபோன்ற பிறவியெய்துதல்
ஹி லோகே துர்லபதரம்-ஐயமின்றி மிகவும் அரிது.
பொருள் : அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது.
முற்பிறப்பில் யோகம் நிறைவேறப்பெறாத ஒருவன் அதை நிறைவேற்றிக்கொள்ளுதற்காகப் பொருள் உடையார் வீட்டில் பிறப்பதைவிட அருள் உடையார் வீட்டில் பிறப்பது சாலச் சிறந்தது. அதற்குக் காரணம் மேலும் விளக்கப்படுகிறது.
-
43. தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந
தத்ர தம் பௌர்வதேஹிகம்-அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய, புத்திஸம்யோகம்-புத்தியைப் பெறுகிறான், குருநந்தந-குருநந்தனா, தத: பூய: ஸம்ஸித்தௌ-அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு, யததே-முயற்சி செய்கிறான்.
பொருள் : அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.
பொருளானது மனிதனைப் போகத்தில் ஈடுபடுத்தி யோகத்தைத் தற்காலிகமாக மறைத்து வைத்துவிடுகிறது. ஆசைகள் நிறைவேறியபின் யோகத்தைப் பற்றிய ஞாபகம் வருகிறது. அதைவிட மேலானது பிறந்தது முதல் தனியாக யோகத்திலே முயலுதல். முற்பிறப்பில் செய்த சாதனங்கள் சம்ஸ்காரமாக மனதில் புதைந்து மறைந்து கிடக்கின்றன. யோகிகள் குலத்தில் பிறந்து அவர்கள் செய்யும் சாதனங்களைப் பார்க்கும்போது பால யோகிக்குத் தன் பூர்வ ஜன்ம சாதனங்கள், பழைய பாடம் ஞாபகத்துக்கு வருவது போன்று மனதில் உதிக்கும். இடம், பொருள், ஏவல் இவைகளின் சகாயத்தால் முற்பிறப்பில் செய்த சாதனங்களைவிட இன்னும் தீவிரமாக அவன் இப்பிறப்பில் செய்கிறான். மீன் நீரை நாடுவது போன்று அவன் முக்தியை நாடுவது இயல்பாகிறது.
சுவாமி விவேகானந்தரும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் யோகாரூடர்கள். பிறவியிலிருந்தே பரிபூரணத் தன்மை அவர்களிடம் பொலிந்துகொண்டிருந்தது. அவர்களுடைய வாழ்க்கையே வேதாந்தத்துக்கு விளக்கமாகும். சுவாமி விவேகானந்தர் செல்வம் நிறைந்த நல்லோர்க்குப் பிள்ளையாகப் பிறந்து பூவுலக சம்பத்துக்களில் வாழ்ந்திருந்து யோகத்துக்கு வருகிறார். ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரோ யோகியர் குலத்தில் பிறந்து மேலும் யோக சாதனத்தில் ஈடுபடுகிறார். கீதா சாஸ்திரப் பிரகாரம் இருவர் பிறப்புகளும் மேலானவை. ஆனால் சுவாமி விவேகானந்தர் பிறப்பைவிட ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறப்பு பெறுவதற்கு அரிதாம்.
44. பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோऽபி ஸ:
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஸப்தப்ரஹ்மாதிவர்ததே
ஸ: அவஸ:-அவன் தன் வசமின்றியும், தேந பூர்வாப்யாஸேந ஏவ ஹ்ரியதே-பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான், யோகஸ்ய ஜிஜ்ஞாஸு அபி-யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட, ஸப்த ப்ரஹ்ம-ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து, அதிவர்ததே-செல்லுகிறான்.
பொருள் : பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான். திரள் திரளாக ஜனங்கள் தேவாலயத்துக்குள் நுழையும் போது அக்கூட்டத்தில் கலந்துகொள்பவன் சுயப்பிரயத்தனமின்றி ஆலயத்துக்குள் இழுத்துச் செல்லப்படுவான். அங்ஙனம் முற்பிறப்பில் செய்த யோகாப்பியாசம் வலிவுடைய சம்ஸ்காரங்களாக மனதில் புதைத்திருந்து இப்பிறப்பில் யோகப்ரஷ்டனைப் பரிபூரண நிலையின்கண் இழுத்துச் செல்கிறது. புதிதாகச் செய்த அதர்மம் சிறிதுகாலத்துக்கு அவனது சாதனத்தைத் தடைப்படுத்தினும், அதர்மத்தின் வலிவு குறைந்தவுடன் யோக சாதன சம்ஸ்காரம் அவனைச் சமாதி நிலைக்குக் கொண்டு சேர்க்கும்.
இரண்டு போர்வீரர்கள் எதிரியின் கையில் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தன் தாய்நாட்டை மறந்து விட்டு அடிமையாய் எதிரிகளுக்குக் குற்றேவல் செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கிறான். மற்றவன் எதிரிகளை விட்டுத் தப்பித்துக்கொண்டு தன் தேசம் போவது எப்படி என்று எண்ணிப் பார்க்கிறான். அங்ஙனம் எண்ணுபவன் அடிமையைவிட மேலானவன். இனி முயற்சி பண்ணுபவன் அவனிலும் மேலானவன். வேதம் ஓதுபவர், வேதம் புகட்டுகிற கர்மகாண்டத்தில் ஈடுபடுபவர் முக்குணமயமான இயற்கைக்கு அடிமைகளாய் முடிவில்லாத பிறவிப் பிணியில் வருந்துபவர். அவர்களைவிட மேலோர் யோக ஜிக்ஞாசு அல்லது யோக ஆராய்ச்சி செய்பவர். ஏனென்றால் இவர்களுக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும். யோகத்தில் பன்முறை முயன்று தவறிப்போன யோகப்ரஷ்டர்கள் யோக ஜிக்ஞாசுகளிலும் மேலோர். ஏனென்றால் முயற்சியுடைய இவர்கள் இன்னும் விரைவில் யோகாரூடர்கள் அல்லது முக்தர்கள் நிலையை அடைவார்கள்.
கர்ம காண்டத்தில் உழல்பவனைவிட யோக சாதனம் செய்பவனது வாழ்க்கை எவ்விதத்தில் சிறந்தது? விடை வருகிறது :
45. ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஸுத்தகில்பிஷ:
அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்
ஸம்ஸுத்த கில்பிஷ:-பாவம் நீங்கியவனாய், து ப்ரயத்நாத் யதமாந-முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும், யோகீ அநேகஜந்ம ஸம்ஸித்த:-யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய
தத: பராம் கதிம் யாதி-அக்கணமே பரகதியை அடைகிறான்.
பொருள் : பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.
கல்வியும் செல்வமும் இரண்டொரு நாளில் சேகரிக்கப்படுபவைகளல்ல. அவைகளின் பொருட்டு இடையறாத முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். கல்வி கற்கும்பொழுதே ஒருவன் கற்றவனாகக் கருதப்படுகிறான். செல்வம் சேர்ந்துகொண்டிருக்கும்போதும் ஒருவன் தனவான் எனப்படுகிறான். யோகம் தருகிற மோக்ஷமோ ஒப்பற்றது; நித்தியமானது. இனி, அதன் பொருட்டு அநேக ஜன்மங்களில் முயலவேண்டும் என்றால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அங்ஙனம் முயலுகிற மனிதன் யோகி எனப்படுகிறான். இப்படி யோகி தன்னை நெடிது பண்படுத்தி முக்தியடைகிறான்.
புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி நிற்கக் கற்றுக் கொள்ளுவதற்கு முன்னால், தட்டித் தள்ளாடிப் பல தடவை கீழே விழுகின்றது. அதுபோல சாதன மார்க்கத்தில் கடைசியாக ஜயம் பெறுவதற்கு முன்னால் அனேகம் தோல்விகள் நேரிடும்.
அப்படியானால் பெருநிலையடைதற்கு யோகத்தைப் புறக்கணித்துவிட்டு வேறு ஏதாவது உபாயத்தைக் கையாளலாகாதா? விடை வருகிறது :
46. தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோऽபி மதோऽதிக:
கர்மிப்யஸ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந
யோகீ தபஸ்விப்ய: அதிக:- யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன், ஜ்ஞாநிப்ய: அபி அதிக: மத:-ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான், ச கர்மிப்ய: யோகீ அதிக:-கர்மிகளிலும் அவன் சிறந்தோன், தஸ்மாத் யோகீ பவ அர்ஜுந!-ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.
பொருள் : தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.
வெறும் சாஸ்திர ஞானம் உடைத்திருப்பவனைவிட அதில் பகர்ந்துள்ளபடி யோகம் பயிலுவதனால் யோகி சிறந்தவனாகிறான். காமிய தபசு, காமிய கருமம் இவைகளை நெடுநாளாக வருந்திச் செய்து, இம்மையிலும் மறுமையிலும் மாந்தர் சுகபோகம் பெற முயலுகின்றார்கள். சாந்திராயணம் முதலிய தபசு புரிகின்றவர்களும், அக்னிஹோத்திரம் முதலிய கர்மம் செய்கிறவர்களும் அதற்குச் சான்றாவார்கள். அவர்கள் அப்படி வருந்தியடையும் சுவர்க்கப் பதவியும் பூலோகப் பதவியும் யோகப்ரஷ்டனுக்குத் தற்செயலாய் வந்தமைகின்றன. அதற்குக் காரணமுண்டு. நிராசையில் நிலைத்திருப்பவன் யோகி. ஆசையில்லாத மனதுக்குப் பேராற்றல் தானே உண்டாகிறது. பேராற்றல் படைத்துவரும் அவனுக்கு இன்னும் பரிபூரணம் அடையும்முன் ஆசை இடையில் தோன்றுமாகில் அவன் யோகப்ரஷ்டன் ஆகின்றான். சுத்தியடைந்த அவனது சித்தத்தில் உதிக்கும் இச்சை உடனே நிறைவேறப்பெறுகிறது. யோக சாதனத்தால் மனது எவ்வளவுக் கெவ்வளவு தூயதாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதில் உதிக்கும் ஆசையானது விரைவில் நிறைவேறுவதாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான ஒரு பேருண்மையாகும். ஆகையால் தான் புண்ணிய கர்மம் செய்பவர்கள் அடையும் லோகமாகிய சுவர்க்கமும் பூலோகத்தில் பெருவாழ்வும் யோகிக்கு விளையாட்டாக வந்தமைகின்றன. இனி யோகாரூடனுக்கு ஒப்பற்ற பிரம்ம ஞானம் உண்டாகிறது. யோகப்ரஷ்டனுக்கோ இகபரமிரண்டிலும் பெரும் பதவியும் யோகமும் எளிதில் கிட்டுகின்றன.
ராஜகுமாரன் ஒருவன் அரசனாகாவிட்டாலும் மற்ற உத்தி யோகத்தை நாடுபவர்களையெல்லாம்விட மேலானவன். அதே பாங்கில் யோகப்ரஷ்டனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் பேறு கிட்டுகிறது. ஆக, யோகத்தில் முயலுதல் ஒன்றே வாழ்க்கையின் பெரும் லட்சியமாகிறது.
சாஸ்திர ஞானத்தால் மட்டும் என்ன பயன்? பண்டிதர்களுக்கு கிரந்தங்களிலும் சுலோகங்களிலும் நல்ல பரிச்சயமிருக்கலாம். ஆனால் அவைகளைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் பிரயோஜனமென்ன? கிரந்தங்களில் சொல்லியவற்றையெல்லாம் அனுபவத்துக்குக் கொண்டுவரவேண்டும். ஒருவனுக்கு உலகப் பற்றுள்ள வரையில் அதாவது காமமும் காசாசையும் இருக்கும் வரையில், கேவலம் படிப்பு மட்டும் ஞானத்தையாவது மோக்ஷத்தையாவது தராது.
லௌகிகன் ஒருவன் ஒரு ஞானியைப் போலவே மேலான அறிவையும் புத்தி வன்மையையும் பெற்றிருக்கலாம். அவன் ஒரு யோகியைப் போல சாதனத்தில் மிகவும் சிரமப்படலாம்; அல்லது சந்யாசியைப் போல எளிய வாழ்க்கை வாழக்கூடியவனாயும் இருக்கலாம். என்றாலும் அவனுடைய முயற்சிகளெல்லாம் பயனற்றவையே. ஏனெனில் அவனுடைய சக்திகள் வேறு மார்க்கத்தில் செலுத்தப்படுகின்றன. மேற்கூறியவைகளை யெல்லாம் அவன் ஈசுவரனுக்காக அல்லாமல், கௌரவம், அந்தஸ்து, செல்வம் இவைகளைப் பெறுவதற்காகவே செய்கிறான்.
இனி யோகிகளுள் சிறந்தவன் யார் எனின் அதற்கு விடை வருகிறது :
47. யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:
ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ, மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால், மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ, ஸ: மே யுக்ததம மத:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.
பொருள் : மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.
தியான யோகிகள் எல்லாரும் மேலோரே. அவர்கள் எதைத் தியானிக்கிறார்களோ அதுவாகிறார்கள். சுத்தியடைந்து ஒருமுகப்பட்ட மனது தியானிக்கப்பட்ட லட்சியத்தை விரைவில் அடைகிறது. கீழான லட்சியங்களைத் தியானிக்கின்ற யோகிகளை விட மனதை முற்றும் சர்வேசுவரன்பால் செலுத்தி அவனையே சிரத்தையுடன் தியானிக்கின்ற யோகிகள் மிக மேலானவர்கள். ஏனென்றால் அத்தகைய தியானத்தால் அவர்கள் சர்வேசுவரனையே அடைகிறார்கள். அதற்குமேல் அவர்களால் அடையப்படுவது ஒன்றுமில்லை.
நித்தியமாயுள்ள ஞானத்தையும் ஆனந்தத்தையும் பற்றித் தியானம் செய். அப்போது உனக்கு ஆனந்தம் உண்டாகும். ஆனந்தமோ எப்பொழுதும் சாசுவதமானது; ஆனால் அக்ஞானத்தினால் அது மூடுபட்டு மறைந்துள்ளது. விஷய சுகங்களில் உனது ஆசை குறையுமளவு ஈசுவரனிடம் உனக்குப் பிரேமை அதிகமாகும்.
இதுவரையில் ஆறு அத்தியாயங்களில் ஜீவதத்துவம் விளக்கப்பெற்றது. ஜீவன் எவ்வளவு மேலோன் ஆகக்கூடும் என்பதும் காட்டப்பட்டது. மேன்மையுற்ற ஜீவன் பரமாத்மாவிடம் பக்தி பண்ணுதற்கு நிகரான செயல் வேறொன்றுமில்லை. இனி வரும் ஆறு அத்தியாயங்களில் பரமாத்ம சொரூபம் விளக்கப்பெறுகிறது. பக்தியும் படிப்படியாக வளர்க்கப்படுகிறது. ஆறாவது அத்தியாயத்தின் கடைசி சுலோகமாகிய இது கடந்த ஆறு அத்தியாயங்களில் உள்ள விஷயத்துக்கும், வரப்போகும் ஆறு அத்தியாயங்களில் உள்ள விஷயத்துக்கும் இணைப்பை உண்டுபண்ணுகிறது. இளைஞன் வாலிபன் ஆவது போன்று ஒரு யோகம் மற்றொன்றாகப் பரிணமிப்பதும் இதில் அடங்கியுள்ளது. கர்மயோகம் தியானயோகமாக வடிவெடுத்தது. இனி அது பக்தியோமாக மாறப்போகிறது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
த்யானயோகோ நாம ஷஷ்டோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸந்யாஸ யோகம் என்ற ஆறாம் அத்தியாயம்.
-
ஏழாம் அத்தியாயம்
ஞானவிக்ஞான யோகம்
பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் தடுத்துக் கொண்டிருப்பதால் இதை நீக்க வேண்டியது அவசியம். ஆனால், இறைவனைச் சரண் புகுந்தாலன்றி இத்தடையை நீக்க இயலாது. பக்தர்களில், துன்புற்றார், செல்வத்தை விரும்புவோர், ஞான சொரூப நிலையை விரும்புவோர், ஈசுவர தத்துவத்தையுணர்ந்தவர் என நான்கு வகையுண்டு, அவர்களில் நான்காம் வகுப்பினரே மேலானவர்.
அந்த நிலையைப் பெறுவதற்கு வெகு பிறப்புகள் எடுத்தாக வேண்டும். இறைவனைத் தவிர்த்து மற்ற தெய்வங்களைத் தொழுபவர்களும் உண்மையில் இறைவனளிக்கும் பயனையேதான் பெறுகின்றனர். ஆனால், அவ்விதமான பயன்கள் அழிவுற்றிருக்கும். இறைவனையே வணங்குபவர்கள் இறைவனையே யடைந்து அழிவிலா ஆனந்தத்தைப் பெறுகின்றனர். ஈசனும் அவருடைய சேதன அசேதன பிரகிருதிகளும் 1-7 -பூதங்களின் தன்மாத்திரைகளாயிருப்பவர் ஈசன் 8-9 -உயிர்களின் சிறப்புகள் ஈசனிடத்திருந்து வந்தவை 9-12 -முக்குண மயமான மாயை 13-15 -நான்குவித நல்லார்கள் 16-19 -சிறு தேவதைகளிடம் காமிய உபாஸனை 20-23 - பகவானது பாங்கு 24-26 -அறிவிலிகளும் அறிஞரும் 27-30.
ஸ்ரீ பகவாநுவாச
1. மய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஸ்ரய:
அஸம்ஸயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு
ஸ்ரீபகவாநுவாச, பார்த-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த்தா, மயி ஆஸக்தமநா:-என்பால் இசைந்த மனத்தினனாய், மத் ஆஸ்ரய:-என்னைச் சார்ந்து, யோகம் யுஞ்ஜந்-யோகத்திலே அமர்ந்தவனாய், ஸமக்ரம் மாம்-எல்லா ஐஸ்வர்யங்களும், விபூதிகள் பொருந்திய என்னை,
யதா அஸம்ஸயம் ஜ்ஞாஸ்யஸி தத் ஸ்ருணு-எந்தவித ஐயமும் இன்றி உணருமாறு (சொல்கிறேன்), அதை கேள்!
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய்.
மத் ஆச்ரய: என்பது கர்மபலன் கீர்த்தி முதலியவைகளில் பற்று வைக்காது இறைவனையே நாடியிருத்தல் எனப் பொருள்படுகிறது.
ஸமக்ரம் என்றால் விபூதி, பலம், சக்தி, ஐசுவரியம் ஆகிய குணசம்பன்னனாயிருக்கிற ஈசுவரன் என்பதாகிறது.
ஒரு அரசாங்கத்தின் அமைப்பு முழுவதையும் தெரிந்து கொள்ளுகிற அளவு நாம் அதைப் பாராட்டுகிறோம். அங்ஙனம் அறிவுக்கு எட்டுகிற அளவு இறைவனை நாம் தெரிந்துகொண்டால் அவன்பால் பக்தி நமக்கு அதிகரிக்கிறது.
2. ஜ்ஞாநம் தேऽஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யஸேஷத:
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோऽந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸிஷ்யதே
யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்தால், இஹ பூய: ஜ்ஞாதவ்யம்-இவ்வுலகில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய, அந்யத் ந அவஸிஷ்யதே-வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ, ஸவிஜ்ஞாநம் இதம் ஜ்ஞாநம்-விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை, அஸேஷத: அஹம் தே வக்ஷ்யாமி-முழுமையாக நான் உனக்கு சொல்வேன்.
பொருள் : ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை.
ஞானம் என்பது சிந்தனைக்குரிய அறிவு; விக்ஞானமோ அனுஷ்டானத்துக்கு உரிய அறிவு. ஞானம் விக்ஞானமாக மாற வேண்டும். சுவானுபவத்தில் பிரம்ம சாக்ஷõத்காரம் பண்ணினவனுக்கு, அதாவது அபரோக்ஷ அனுபூதியைப் பெற்றவனுக்கு வாழ்க்கையின் தத்துவம் முழுதும் விளங்கிவிடுகிறது. அவன் மேலும் கற்றுக்கொள்ளவேண்டியது ஒன்றுமில்லை.
3. மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்த்வத:
ஸஹஸ்ரேஷு மநுஷ்யாணாம்-பல்லாயிர மனிதரில், கஸ்சித் ஸித்தயே யததி-ஒருவன் சித்திபெற முயல்கிறான், யததாம் ஸித்தாநாம் அபி-(அவ்விதம்) முயற்சி செய்கிற யோகிகளிலும் கூட, கஸ்சித் மாம் தத்த்வத: வேத்தி-யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான்.
பொருள் : பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.
சித்தி என்னும் பதம் பேறு அடைதல், வெற்றி, இலக்கையடித்தல், நோயைப் போக்குதல், நிலைநாட்டுதல், சித்தாந்தப்படுத்துதல், அன்னம் முதலியன சமைத்தல், முதிர்தல், தகுதியுடையதாக்குதல், பேரின்பம், பரிபாகம், முக்தி, மனதின் அஷ்ட சித்தி அல்லது எட்டுவித வலிவுகள்-ஆக இத்தனை விதங்களாகப் பொருள்படுகிறது. இங்கு இச்சொல் நல்வினையின் காரியமாக, ஞானத்துக்காக மனது அடையும் பரிபாகத்தைக் குறிக்கிறது.
ஞானத்தைப் பெறுதல் மிக அரிது என்பது இதன் கருத்து. மரம் ஒன்றில் ஆயிரக்கணக்கான விதைகள் உண்டாகின்றன. அவைகளில் பெரும்பகுதி வேறு உயிர்களுக்கு உணவுப் பொருள்களாய்ப் போய்விடுகின்றன. விதைக்கப்பட்டவைகளுள் தரிசு நிலத்திலோ, பாறையிலோ வீழ்ந்தவைகள் சரியாக முளைத்து வளர்வதில்லை. நல்ல விருக்ஷமாவது ஒன்றிரண்டே. பெறுதற்கரிய மானுடப் பிறவி ஈசுவர லாபத்துக்கென்று அமைந்தது ஆயினும், அதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று அறிந்துகொள்பவரோ மிகச் சிலர். பின்பு அனுகூலமான சூழ்நிலை, முறையான முயற்சி ஆகியவைகள் வாயிலாகக் கடைத்தேறுவாரைக் காண்பது அரிதலும் அரிது. லட்சியம் எவ்வளவுக்கெவ்வளவு பெரியதோ அதை அடைதல் அவ்வளவுக்கவ்வளவு துர்லபம்.
காசியில் மாதா அன்னபூரணியின் கோயிலுக்குள் நுழைந்தவர்கள் பிரசாதம் பெறாது வெளியில் வரமுடியாது. சிலருக்கு உடனே பிரசாதம் கிடைக்கிறது. சிலர் காத்திருந்து பெறுகின்றனர். நெடுநேரம் காத்திருந்து பெறுபவர்களும் உண்டு. ஆனால் யாருக்காவது பிரசாதம் இல்லை என்பது கிடையாது. அங்ஙனம் பிறப்பெடுப்பவர்கள் எல்லார்க்கும் முக்தியுண்டு. சிலர் இப்பிறப்பிலேயே முக்தியடைகின்றனர். சிலர் இன்னும் இரண்டு மூன்று பிறவிகளில் எடுத்த பின்பு முக்திக்குரியவர் ஆகின்றனர். ஆனால் எல்லார்க்கும் முன்னது பின்னது ஆக முக்தியுண்டு.
ஈசனை உள்ளபடி அறிதற்கு அவனுடைய ஸ்தூல சொரூபத்தை முதலில் அறிய முயலுதல் நன்று. அதைப்பற்றிய விளக்கம் வருகிறது :
4. பூமிராபோऽநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா
பூமி: ஆப: அநல: வாயு: கம்-மண், நீர், தீ, காற்று, ஆகாயம்
மந: புத்தி அஹங்காரம் ச ஏவ-மனம், மதி, அகங்காரமும்
மே இயம் ப்ரக்ருதி-என் இந்த இயற்கை
இதி அஷ்டதா பிந்நா-இவ்வாறு எட்டு விதமாக பிரிந்து தோன்றுகிறது
மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.
மூலவஸ்துக்களைப் பாகுபடுத்துதலில் நவீன ரசாயன சாஸ்திரத்துக்கும் இந்திய தத்துவ தர்சனத்துக்கும் ஒரு வேற்றுமையுண்டு. ரசாயன சாஸ்திரப் பிரகாரம் எப்பொருளை அதனினும் வேறான ஒரு பொருளாகப் பிரிக்க முடியாதோ அது மூலவஸ்து (எலிமென்ட்) நீர் மூலவஸ்து அன்று; அது ஒரு கூட்டுப் பொருளாய் இருக்கிறது. ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து நீர் ஆகிறது. ஆனால் ஜலவாயு ஒரு முதற்பொருள்; பிராணவாயுவும் ஒரு முதற்பொருள் அல்லது மூலவஸ்து. வேறு எதினின்றும் இவைகள் ஆனவைகள் அல்ல. அப்படித் தொண்ணாறுக்குக் குறையாமல் மூலவஸ்துக்கள் இருக்கின்றன. அவைகளின் கூட்டாக உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் ஆயிருக்கின்றன. ரசாயன சாஸ்திரப்படி மண்-கூட்டுப்பொருள்; நீர்-கூட்டுப்பொருள்; தீ-பொருள் அல்ல, ஆனால் சக்தி (நாட் மேட்டர் பட் எனர்ஜி); காற்று-கூட்டுப்பொருள்; வானம்-எங்கும் எதிலும் வியாபித்து உள்ள மூலவஸ்து (எதர்).
இந்திய தத்துவ தர்சனத்தின்படி பொறி ஐந்தின் வாயிலாக உலகப் பொருள்படுத்தப்படுகிறது. பஞ்சேந்திரியங்களாலன்றி ஜகத் புலனாகாது.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்(று) ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு.
காது கேட்கிறது. ஓசைக்கு ஏதுவாயிருப்பது ஆகாசம் (வானம்). தேகம் ஸ்பர்சிக்கிறது. ஊறுதற்கு ஏதுவாயிருப்பது வாயு (காற்று). கண் வடிவத்தைப் பார்க்கிறது. ஒளிக்கு ஏதுவாயிருப்பது அக்னி (தீ அல்லது தேஜஸ்). நா சுவைக்கிறது. சுவை அல்லது ரஸத்துக்கு மூலகாரணம் அப்பு (நீர்). மூக்கு நாற்றத்தை முகர்கிறது. கந்தத்துக்குக் காரணம் பிருத்வி (மண்). ஆக, உலகாக அறிதற்கு மூலவஸ்துக்கள் (எலிமென்ட்ஸ்) பூதங்கள் ஐந்தாம்.
இவ்வைந்து பூதங்களும் சூக்ஷ்மம், ஸ்தூலம் என்று இரண்டு நிலைகளில் இருக்கின்றன. சூக்ஷ்ம பூதங்கள் ஸ்தூல பூதங்களாக வடிவெடுப்பதற்கு ஒரு கணக்குக் கிரமம் இருக்கிறது. சூக்ஷ்ம பூதம் ஒவ்வொன்றும் இரண்டு சமபாகங்களாகப் பிரிகிறது. ஒரு பாதி தன்னுடைய ஸ்தூல அமைப்புக்கு நின்று விடுகிறது. மற்ற பாதி நான்கு அரைக்கால் ஆகி, ஏனைய நான்கு பூதங்களுக்குச் சமனாகப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது.
இங்ஙனம் சூக்ஷ்ம பூதங்கள் ஐந்தும் ஸ்தூல பூதங்களாக மாறுதற்குப் பஞ்சீகரணம் என்று பெயர். உணரும் தன்மை மனதுக்குண்டு. நல்லது கெட்டது என்று புத்தி பாகுபடுத்துகிறது. தன்னைக் கர்த்தாவென்று கருதுவது அஹங்காரம். அஹங்காரம் இல்லாது கர்மம் ஒன்றும் நடைபெறாது. மண்ணுக்குள் மண்ணோடு மண்ணாக விதையானது புதைந்து கிடப்பது போன்று வாசனை சொரூபமாக அஹங்காரம் முதலிய அந்தக்கரணங்கள் மூலப்பிரகிருதியில் புதைந்திருக்கின்றன. தக்க வேளையில் எண்ணமாகவும் செயலாகவும் வடிவெடுக்க வல்ல இயல்புக்கு வாசனையென்று பெயர். இந்த எட்டுவிதப் பிரகிருதியையே இருபத்து நான்கு தத்துவங்களாக விரித்துச் சொல்வது வழக்கத்தில் உண்டு.
5. அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்
மஹாபாஹோ!-பெருந்தோளாய்! அபரா-இது என் (அபரா என்னும்) கீழியற்கை, இத: அந்யாம்-இதனின்றும் வேறுபட்டதாகிய, யயா இதம் ஜகத் தார்யதே-எந்தப் பிரக்ருதியினால் இந்த உலகம் முழுவதும் தாங்கப் படுகிறதோ, மே ஜீவபூதாம் பராம் ப்ரக்ருதிம்-எனது உயிர் வடிவான (பரா என்னும்) மேலியற்கையை, வித்தி-தெரிந்து கொள்.
பொருள் : இது என் கீழியற்கை. இதனின்றும் வேறுபட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.
பஞ்ச பூதங்களும் அந்தக்கரணங்களும் சேர்ந்து உரு ஆயிருப்பது கீழான பிரகிருதி. ஜீவபோதம் பெற்றிருப்பது மேலான பிரகிருதி. ஓர் உபமானத்தைக்கொண்டு இதை அறியலாம். தீ எரிகிறது; அதிலிருந்து புகை வருகிறது. புகை தீயின் கீழான பிரகிருதி. பொறி பறக்கிறது. பொறியோ தீயின் மேலாம் பிரகிருதி. தீயின் சொரூபம் பொறியில் இருக்கிறது. தீயின் செயல் புகையில் தோன்றுகிறது. புகையானது தீயினுடைய தடஸ்த லக்ஷணம். பொறி அதனுடைய சொரூப லக்ஷணம். பொறியை அறிவது தீயை அறிவதற்குச் சமானம். சுத்த சைதன்யமாகிய பரமாத்மாவின் இயல்பு சித் ஆபாசனாகிய ஜீவனிடத்து ஏகதேசம் இருக்கிறது. இனி, தீப்பொறியானது தீயை விட்டுச் சற்றுப் பிரிந்திருக்கிறது. ஜீவனோ பரமாத்மாவை விட்டுப் பிரியவில்லை. கடலில் அலைபோன்று பரமாத்மாவிலேயே அது ஓர் உபாதியுடன் கூடியிருக்கிறது.
ஜீவப்பிரகிருதி அல்லது ÷க்ஷத்ரக்ஞன் ஜடப்பிரகிருதியைத் தனது உடலாக அமைத்துக்கொண்டு அதைத் தாங்கியுள்ளது. ஆகாசம் என்ற பூதம் எங்ஙனம் மற்ற நான்கு பூதங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறதோ அங்ஙனம் ஜீவ ஆத்ம சைதன்யம் ஜடப் பிரகிருதிக்கு இருப்பிடமாயிருக்கிறது.
6. ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா
ஸர்வாணி பூதாநி-எல்லா உயிர்களும், ஏதத் யோநீநி-இந்த இரண்டு பிரக்ருதிகளிலிருந்து உண்டானவை (என்றும்), அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ:-நானே முழுமையாக உலகிற்கும் உற்பத்தியாகும் இடம், ததா ப்ரலய-அவ்வாறே ஒடுங்குகின்ற (அழிவு) இடம்
இதி உபதாரய-என்று உணர்ந்து கொள்.
பொருள் : எல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.
உடலும் உயிரும் சேர்ந்து வாழ்வாகப் பரிணமிக்கிறது. உயிரற்ற உடல் பிரேதமாய்விடும். உடலற்ற உயிர் செயல் புரியச் சக்தியற்றதாய்விடும். உயிரும் மெய்யும் (÷க்ஷத்ரக்ஞனும் ÷க்ஷத்ரமும்) சேர்ந்தால் ஜீவிதம் சாத்தியமாகிறது. தோற்றத்துக்கு வந்துள்ள உலகெங்கும் இவ்விரண்டு பிரகிருதிகளுடைய கூட்டுறவைக் காண்கிறோம். மேகமானது ஆகாசத்தில் தோன்றி, ஆகாசத்தில் நிலைத்திருந்து, பிறகு ஆகாசத்திலேயே ஒடுங்குகிறது. அங்ஙனம் ஈசுவரன் ஜகத்துக்கும் ஜீவர்களுக்கும் பிறப்பிடமாகிறான். அவைகள் ஒடுங்குவதும் அவனிடத்தேயாம்.
மாயையைக் காணவேண்டுமென்ற அபிப்பிராயங்கொண்ட நான், ஒருநாள் ஒரு காட்சியைக் கண்டேன். ஒரு சிறிய நீர்த்துளி கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணமிப்பது ஒரு சிறு பெண்ணாயிற்று. அப்பெண் ஒரு ஸ்திரீயாகி ஒரு குழந்தையைப் பெற்றாள். பெற்றதும் அவள் அக்குழந்தையை எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டாள்; இவ்விதம், அவளுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் அவள் விழுங்கினாள். அப்போது அவள் மாயை யென்பதை நானறிந்தேன்.
7. மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ
தநஞ்ஜய-தனஞ்ஜயா, மத்த: அந்யத் கிஞ்சித்-என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும், பரதரம் ந அஸ்தி-உயர்ந்த பொருள் இல்லை, இதம் ஸர்வம்-இவ்வையகமெல்லாம், ஸூத்ரே மணிகணா இவ-நூலில் மணிகளைப் போல், மயி ப்ரோதம்-என் மீது கோக்கப்பட்டது.
பொருள் : தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.
உலகு அனைத்தினுடைய உற்பத்தி, ஒடுக்கத்துக்கு ஈசனே முதற்காரணம். அவனுக்கு அன்னியமானது, அதன் நடைமுறையில் தலையிடவல்லது ஒன்றுமில்லை. ஜகத்தைத் தோற்றுவிப்பதும் துடைப்பதும் அவன் செயல் என்று முன் சுலோகத்தில் சொல்லப்பட்டது. அது நிலை பெற்றிருப்பதும் அவனாலேயாம். ஸூத்ரம் என்பது நூல். நூலிலே விதவிதமான முத்து, மணி, ரத்னம் முதலியவைகளைக் கோத்துவைப்பது போன்று அண்டங்களனைத்தும் சர்வேசுவரன் என்னும் ஸூத்திரத்தில் கோத்துவைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அவனுக்கு ஸூத்ராத்மன் என்ற பெயர் வந்துள்ளது. இணைக்கப்பெற்றுள்ள மணிகளும், முத்துக்களும், ரத்னங்களும் வெவ்வேறு பாங்குடையவகளாயிருக்கலாம். பின்பு, அவைகளை இணைக்கும் நூலோ ஒரே பாங்குடையது. அது போன்று எண்ணிறந்த குணபேதங்களையுடைய உயிர்களையும் ஜடப் பொருள்களையும் தாங்கி நிற்கும் ஆத்ம சைதன்யம் ஒன்றே.
சச்சிதானந்த பிரம்மம் இப்படிப்பட்டது என்று ஒருவராலும் அறிய முடியாது. அதனால்தான் இறைவன் பாதி புருஷனாகவும் பாதி பெண்ணாகவும் அர்த்தநாரீசுவர வடிவம் எடுத்தான். பிரகிருதியும் புருஷனும் தானே என்பதைக் காட்டவே அவ்வித வடிவம் தாங்கினான். அதே சச்சிதானந்தக் கடவுள் இன்னும் சிறிது கீழ்நிலைக்கு வந்து பல புருஷர்களாகவும் பல பிரகிருதிகளாகவும் விளங்குகின்றான்.
அவன் உலகனைத்தும் ஆனதை நாம் அறிவது எங்ஙனம்? விடை வருகிறது :
8. ரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஸஸிஸூர்யயோ:
ப்ரணவ: ஸர்வவேதேஷு ஸப்த: கே பௌருஷம் ந்ருஷு
கௌந்தேய-குந்தி மகனே! அஹம் அப்ஸு ரஸ:-நான் நீரில் சுவையாகவும், ஸஸி ஸூர்யயோ: ப்ரபா-ஞாயிறிலும் திங்களிலும் ஒளியாகவும், ஸர்வவேதேஷு ப்ரணவ:-எல்லா வேதங்களிலும் பிரணவமாகவும், கே ஸப்த:-வானில் ஒலியாகவும், ந்ருஷு பௌருஷம் அஸ்மி-ஆண்களிடத்து நான் ஆண்மை.
பொருள் : நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.
சர்க்கரையில் செய்த பண்டங்கள் எத்தனை விதங்களாயிருந்தாலும் அவையாவும் தித்திக்கும் தன்மையுடையவைகளாம். பரம் பொருளினின்று உண்டாயிருக்கும் பிரபஞ்சம் முழுதிலும் பரம் பொருளின் மகிமை தோன்றுகிறது. இயற்கையில் மிளிரும் ஈசனது மகிமையை விசாரித்து அறிதல் வேண்டும். அத்தகைய ஞானம் விக்ஞானமாக வடிவெடுப்பதும் அவசியமாகிறது. சுத்த ஜலத்துக்குச் சுவை கிடையாது. ஆனால் ஜலத்தின் துணையில்லா விட்டால் எது கல், எது கற்கண்டு, எது படிகாரம் என்று தெரிந்துகொள்ள முடியாது. பண்டங்களைக் கரைந்து அதன் தன் சுவையை வெளிப்படுத்துவது நீர். பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய நீரினுள் ஆத்மாவின் சொரூபம் சுவை என்னும் வடிவெடுத்திருக்கிறது என்று உணரவேண்டும். வடிவத்தைக் காட்டவல்லது ஒளி அல்லது வெளிச்சம். நமக்குத் தெரிந்துள்ள பொருள்களுள் வெளிச்சத்தை எங்கும் வியாபகமாக வழங்கவல்லவை சூரியனும் சந்திரனுமாம். வடிவங்களின் அழகை விளக்கவும், அறிவைப் பெருக்கவும் சந்திர சூரியர்களுடைய பிரபை எவ்வளவு பயன்படுகின்றதென்று ஓர்ந்து பார்ப்பவர்களுக்கு அது விளங்கும்.
ஞானமானது சரியான பாங்கில் ஓங்கும்பொழுது அது விக்ஞானமாகிறது. ஞான வளர்ச்சிக்கு ஐந்து பூதங்களும் துணைபுரிகின்றன. ஆகாசம் என்னும் பூதத்தின் தன்மாத்திரை சப்தம். ஓசைக்கு முதற்காரணம் ஆகாசம். ஆகாசவாணி அல்லது வான் ஒலி என்பது இன்றைக்கு எல்லாரும் அறிந்துள்ள விஷயம். ஒலியானது பேச்சுக்குரியதாக மாறும்பொழுது அது பாஷையாகின்றது. பிரணவம் அல்லது ஓங்காரம் மொழிகளுக்கு பீஜம் போன்றது. எல்லா வேதங்களிலும் பீஜ மந்திரமாயிருப்பது ஓங்காரம். சப்த பிரம்மம் என்று அது அழைக்கப்படுகிறது. அது எத்தனை பதங்களாக வடிவெடுத்து அவைகளின் அர்த்தத்தை இயற்கையின் வாயிலாகப் புகட்டிக்கொண்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அதைப்பற்றிய உண்மை விளங்கும். ஓசையின் துணையில்லாவிட்டால் இத்தனை சாஸ்திரங்களும் ஞானங்களும் மறைந்துபோம். பரம்பொருளே நாத வடிவெடுத்துத் தன்னை ஓயாது விளக்கிக்கொண்டிருக்கிறது. ஓசை அல்லது மந்திரத்தைச் சரியாக அறிதலும் அவ் ஓசையின் பொருளாகிய பரத்தை அறிதலும் ஒன்றே.
வெறும் மனித வடிவை எடுத்திருப்பதாலேயே ஒருவனுக்குச் சிறப்பு வந்துவிடாது. அவன் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் ஆண்மை திகழவேண்டும். செயற்கரிய செயல் ஒருவனைச் சான்றோனாக்குகிறது. மனிதனிடத்திருந்து கிளம்பும் சீரிய செயல்களெல்லாம் உண்மையில் தெய்வ சம்பத்துக்களாம். சீரிய செயலைப் போற்றுவது ஈசுவர ஆராதனையாகும்.
9. புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜஸ்சாஸ்மி விபாவஸௌ
ஜீவநம் ஸர்வபூதேஷு தபஸ்சாஸ்மி தபஸ்விஷு
ப்ருதிவ்யாம் புண்ய: கந்த: ச-மண்ணில் தூய நறுமணமாகவும், விபாவஸௌ தேஜ: அஸ்மி-நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன், ச ஸர்வபூதேஷு ஜீவநம்-அவ்வாறே எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விஷு தபஸ் அஸ்மி-தவம செய்வோரின் தவமாகவும் இருக்கிறேன்.
பொருள் : மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ் செய்வோரின் தவம் யான்.
பிருதிவி அல்லது மண்ணில் எல்லாவித மணமாகவும் இருப்பது தெய்வம். அவைகளுள் நறுமணம் அல்லது சுகந்தத்தை ஈண்டு எடுத்துச் சொல்லுதலில் பொருள் உண்டு. தெய்வப் பெற்றியை நறுமணம் ஞாபகமூட்டுவதுபோன்று துர்நாற்றம் ஊட்டாது. எது தெய்வ சொரூபத்தை எளிதில் விளக்குகிறதோ அது தெள்ளியெடுத்து ஓதப்படுகிறது. சாதகன் ஒருவனுக்குச் சாம்பிராணியினின்று வரும் நறுமணம் தெய்வ ஞாபகத்தை ஊட்டுவது போன்று ஏனைய கந்தங்கள் ஊட்டமாட்டா. சூரியனுடைய பிரபை எளிய முறையில் அக்கினியிடத்திருக்கிறது. ஆத்மப் பிரகாசத்தின் பௌதிகத் தோற்றம் தீ என்றுணர்வது ஆத்ம உபாசனைக்கு உற்ற உபாயமாம். அழியும் தன்மையுடைய பூத உடலுக்குள் அழியாத ஆத்மா இயங்கிக்கொண்டிருப்பதால் உயிர் வாழ்தல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உயிர்கள் ஜீவித்திருத்தல் அல்லது வாழ்தலுக்கு இயற்கையில் முடிவில்லை. என்றென்றும் உயிர் வாழ்க்கையானது நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. ஆதலால் அறிதற்கு அரிதாகிய ஆத்மாவின் சத்சொரூபம் இயற்கையின் வாயிலாக ஏகதேசம் விளங்குகிறது. உயிர் வாழ்வது வேறு, வாழ்வை மேலானதாக மாற்றுவது வேறு. உருக்கி இரும்பை எஃகு ஆக்குகிறோம். தெய்வீக உணர்ச்சியைக் கொண்டு வாழ்வை உருக்கி மேலான வாழ்வாக மாற்றுமிடத்து அது தபஸ் என்னும் பெயர் பெறுகிறது. எங்கே தபசு ஓங்குகிறதோ அங்கு தெய்வ சான்னித்தியம் திகழ்கிறது. கடவுளையே கோரதபஸ்வி என்று அழைக்கிறோம்.
10. பீஜம் மாம் ஸர்வபூதாநாம் வித்தி பார்த ஸநாதநம்
புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்
பார்த ஸர்வபூதாநாம்-பார்த்தா, எல்லா உயிர்களுக்கும், ஸநாதநம் பீஜம்-சநாதனமாகிய விதை என்று, மாம் வித்தி-என்னை அறிவாய், அஹம் புத்திமதாம் புத்தி-புத்தியுடையோரின் புத்தி நான், தேஜஸ்விநாம் தேஜ: அஸ்மி-ஒளியுடையோரின் ஒளியாக இருக்கிறேன்.
பொருள் : எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா, புத்தியுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான்.
ஸநாதனம் பீஜம் என்பது நிலைபேறுடைய வித்து எனப் பொருள்படுகிறது. கடல் நீர் ஆவியாக மாறி, பிறகு கார்மேகம் என்ற பெயர் பெறுகிறது. அது மழையாகப் பொழிந்துவிட்டாலும் பழையபடி கார்மேகத்துக்கு ஓயாத பிறப்பிடமாகக் கடல் இருக்கிறது. அங்ஙனம் பிரபஞ்சத்தில் விதவிதமான உயிர் வகைகளுக்கு ஸநாதன பீஜமாக ஈசுவரன் இருக்கிறான். அறிவானது தெளிந்த நிலைக்கு வருமளவு அது ஆத்ம சொரூபத்தைக் கிரகிக்க வல்லதாகிறது. ஆத்ம சொரூபத்தை அறிவதும் ஆத்ம சொரூபமாவதும் ஒன்றே. ஆக, புத்திமான்களிடத்துள்ள புத்தி போற்றுதற்குரியது. நல்ல தேகத்தினின்று கிளம்பும் ஒளி, வீரியம், பேராற்றல், கூர்மை ஆகியவைகளுக்கு தேஜஸ் என்று பெயர். தூய வாழ்வினின்று தோன்றும் திட்பமும் தேஜஸ் என்று அழைக்கப்படுகிறது. இறைவனுடைய பேராற்றல் மக்களிடத்து தேஜஸ் ஆகத் துலங்குகிறது. தேஜஸை வளர்ப்பது தெய்வ வணக்கமாகும்.
11. பலம் பலவதாம் சாஹம் காமராகவிவர்ஜிதம்
தர்மாவிருத்தோ பூதேஷு காமோऽஸ்மி பரதர்ஷப
பரதர்ஷப-பரதர் ஏறே, பலவதாம்-வல்லோரிடத்தே, காமராகவிவர்ஜிதம் பலம் அஹம்-விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான், ச தர்ம அவிருத்த:-மேலும் அறத்திற்கு மாறுபடாத,
காம: அஸ்மி-விருப்பமாவேன்.
பொருள் : வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே, உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன்.
காமம் என்பது புலப்படாத பொருள்களைப் பெறவிரும்புதலாம். பின்பு புலப்படுகின்ற பொருள்களைப் பெற விரும்புதல் ராகம். பலத்தை உடைத்திருப்பவன் அதை நலத்துக்கென்றே பயன்படுத்த வேண்டும். ஆசைகளை நிறைவேற்றுவதற்காகக் கையாளும் சாமர்த்தியம் புனிதத்தை இழந்துவிடுகிறது. நிராசையில் நிலை நின்று கையாளுகிற திறமையிலோ தெய்வசான்னித்தியம் தோன்றுகிறது. அதனால் பலமும் பெருகிக்கொண்டே போகிறது.
இனி, காமம் அல்லது ஆசை தன்னளவில் கேடுடையதன்று. பசித்திருக்கும் பொழுது உணவை உண்ண ஆசைப்படுகிறோம். இக்காமம் தர்மத்துக்கு உடன்பாடானது. நமது முன்னேற்றத்துக்குத் தூண்டுகோலாயிருக்கும் காமங்களெல்லாம் வேண்டப்படுபவைகளாம். ஆக, அறநெறி ஆமோதிக்கும் காமம், கடவுளிடத்துக்கொண்டுள்ள அருள் தாகம் முதலியன கடவுள் சொரூபமாகும். தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது ஏன் மனம் சலிக்கின்றது? வீட்டு ஈயானது பக்ஷணங்களின் மீது சில வேளைகளில் உட்காருகிறது. அது உடனே பக்ஷணத்தை விட்டு விட்டு மலத்தின் மேல் போய் உட்காருகிறது. தேனீயோ தேனைக் கிரஹிக்கும் பொருட்டு மலர்ந்த புஷ்பங்களில் உட்காருமே தவிர அருவருக்கத் தக்க பதார்த்தங்களை அது ஒருபோதும் அணுகுவதில்லை. உலகப் பற்றுள்ளவர்கள் முன்னே சொன்ன வீட்டு ஈக்குச் சமானம். ஏதோ சில வேளைகளில் ஈசுவரப் பிரேமையாகிய இன்பத்தை ஒரு சிறிது அனுபவித்தாலும், பழைய வாசனையால், அவர்கள் சிற்றின்ப சுகமாகிய மலக்குழியைத் தேடிப்போய் விழுகின்றனர். பரமஹம்ஸர்களான மஹான்களோவெனில் சதாசர்வகாலமும் பகவத் பிரேமையிலேயே ஆழ்ந்திருக்கின்றனர்.
12. யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஸ்ச யே
மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி
ச ஏவ-மேலும் கூட, யே பாவா:-எந்த உணர்வுகள், ஸாத்த்விகா: ராஜஸா: தாமஸா:-சத்வ ரஜஸ் தமோ குணங்களில் தோன்றியவையோ, தாந் மத்த: ஏவ-என்னிடத்தே பிறந்தன, இதி வித்தி-என்று அறிந்து கொள், து தேஷு மயி-ஆனால் அவை என்னுள் இருக்கின்றன,
அஹம் ந-நான் அவற்றுள் இல்லை.
பொருள் : சத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை.
முக்குணத்தாலாகிய உலகெலாம் அவனிடத்திருந்து வந்தவைகள். பால் தயிராகப் பரிணமிப்பது போன்று அவன் உலகமாக மாறிவிடவில்லை. கயிறு பாம்பாகத் தென்படுவது போன்று தனது மாயாசக்தியால் அவன் உலகமாகத் தோன்றுகிறான். மூல வஸ்துவாகிய கயிறு மோக வஸ்துவாகிய பாம்பை அதிஷ்டானமாகக் கொள்ளவில்லை. வெறும் தோற்றமாகிய பாம்போ மூலப்பொருளாகிய கயிற்றை அதிஷ்டானமாக அல்லது நிலைக்களமாகக்கொண்டுள்ளது. அதாவது பாம்பு கயிற்றின் மீது ஆரோபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே முக்குணமயமாகிய உலகம் பரமாத்மாவை அதிஷ்டானாமாகக் கொண்டுள்ளது. பரமாத்மா முக்குணப் பொருள்களை அதிஷ்டானமாகக் கொண்டிருப்பவன் அல்லன். தன்னுடைய மாயாசக்தியால் அவன் ஜகத்தாகத் தோன்றுகிறான். நான் அவைகளைச் சாரவில்லை; அவைகள் என்னைச் சார்ந்திருக்கின்றன என்பதன் பொருள் இதுவே.
ஆரோபிக்கப்பட்டுள்ள ஜகத் ஒடுங்கிட, அதிஷ்டானமாயிருக்கிற பரமாத்மாவின் தரிசனம் பெறுதலே ஜீவனுடைய லட்சியம். (அத்தியாயம் இரண்டு, சுலோகம் 45; அத்தியாயம் ஒன்பது, சுலோகங்கள் 4,5 ஆகியவைகளைப் பார்க்கவும்)
தொங்கும் விளக்கின் முப்பட்டைக் கண்ணாடிகளை இரவும் பகலும் ஒரு சாது நோக்கிப் புன்முறுவல் பூப்பது வழக்கம். காரணமென்னவெனில், அந்த ஸ்படிக மூலமாய் சிவப்பு, மஞ்சள், நீலம் முதலிய பல வர்ணங்களை அவர் காண்பார். இவ்வித வர்ணங்கள் உண்மையானவையல்ல என்பதை அவர் தெரிந்துகொண்டதும் உலகமும் அம்மாதிரியே உண்மையல்லவென்று அறிந்தார்.
13. த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத்
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்
ஏபி: த்ரிபி: குணமயை: பாவை:-இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால், இதம் ஸர்வம் ஜகத் மோஹிதம்-இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், ஏப்ய: பரம்-இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட, மாம் அபிஜாநாதி-என்னை உணராதிருக்கிறது.
பொருள் : இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது.
பரம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாதது. அவ்யயம் என்றால் நிர்விகாரம் அல்லது மாறாத்தன்மை வாய்ந்தது.
சினிமாப் படக்காட்சியைக் காண்பதில் கண்ணும் கருத்துமாயிருப்பவர்கள் அத்தோற்றத்துக்கு அடிப்படையாயிருக்கும் திரையைப்பற்றி நினைப்பதில்லை. குண பேதத்தால் உண்டான விருப்பு வெறுப்பு ஆகியவைகளின் வசப்பட்டிருப்பவர் உலகப் பொருள்களை வெவ்வேறு மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள். அப்பொருள்களில் தடைப்படாது எங்கும் வியாபகமாயுள்ள ஆகாசத்தை யாரும் அறிகிறதில்லை. குணபேதத்தால் வேறுபடும் சேதன அசேதனப் பொருள்களுக்கிடையில் நிறைபொருளாய், பேரறிவாய் எங்கும் வியாபித்து, அனைத்தையும் தன்னகத்து அடக்கியிருக்கும் சித்சொரூபத்தை முக்குணத்தில் வசப்பட்டவர் யாரும் அறிகிறதில்லை.
மனித ரூபமாக விளையாடுபவன் ஈசுவரனே. அவன் ஒரு செப்படி வித்தைக்காரன் போலாவான். ஜீவன், ஜகத் என்ற மாயைத் தோற்றமெல்லாம் அவனுடைய பெரிய வித்தைகள். செப்படி வித்தைக்காரன் மட்டுமே உண்மை. வித்தைகள் எல்லாம் மாயை.
இம்மயக்கத்தினின்று தெளிதல் எப்படி? உபாயம் இயம்பப்படுகிறது :
14. தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே
ஹி ஏஷா குணமயீ மம தைவீ மாயா-ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை, துரத்யயா-கடத்தற்கரியது, யே மாம் ஏவ ப்ரபத்யந்தே-யாவர் என்னையே சரணடைவரோ, தே ஏதாம் மாயாம், தரந்தி-அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.
பொருள் : இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.
தேவமாயை என்பது ஈசுவரனிடத்திருந்து உண்டான மாயாசக்தி. அது அவனுக்குச் சரீரம் போன்று அமைந்திருக்கிறது. விஷ்ணுவுக்கு மிகப்பெரியவன் என்பது அதன் பொருள். அவன் தன் சொரூபத்தை மாயையைக்கொண்டு மறைத்து வைத்திருக்கிறான். ஆனால் அவனிடத்து அடைக்கலம் புகுகின்றவர்களுக்கு அவன் தன்னைக் காட்டித் தருகிறான். அவனுடைய மெய்க் காட்சி கிட்டும்பொழுது மாயையின் பொய்க் காட்சி மறைகிறது. கயிற்றைக் காணுமிடத்துப் பாம்பின் காட்சி மறைவது போன்றது அது.
திவ்விய மாதாவை நம்மால் ஏன் காணமுடியவில்லை? அவள் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்தி, பிறர் கண்ணிற்படாமல் தான்மட்டும் எல்லாவற்றையும் பார்க்கும் உயர்குலத் துதித்த ஸ்திரீ போன்றவளாவாள். அவளுடைய உண்மையான பக்தர்கள் மட்டும், மாயையாகிய திரையைத் தாண்டி, சமீபத்தில் சென்று, அவளைத் தரிசிக்கின்றனர். ஈசனைச் சரண்புகாதவர் யார்?
15. ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஸ்ரிதா:
மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா-மாயையினால் ஞானம் அழிந்தோர், ஆஸுரம் பாவம் ஆஸ்ரிதா:-அசுரத் தன்மையை பற்றி நிற்போர், நராதமா: துஷ்க்ருதிந: மூடா:-மனிதரில் தாழ்ந்தவர்களும் இழிவான செயல்களை புரிகின்றவர்களுமான அறிவிலிகள், மாம் ந ப்ரபத்யந்தே-என்னைச் சரண் புகார்.
பொருள் : தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர், (இனையோர்) என்னைச் சரண் புகார்.
பிறரைத் துன்புறுத்துதல், பொய் பேசுதல் முதலியவைகளை இயல்பாகக் கொண்டிருப்பவர்கள் அசுரர். அவர்களுடைய இயல்பு அசுர சுபாவம் எனப்படுகிறது. (அத்தியாயம் 16, சுலோகம் 4-ல் இந்த இயல்பு மீண்டும் விளக்கப்படுகிறது) பரமேசுவரன் அல்லது நாராயணனைப் போற்றுதலை அசுரர் சிறிதும் அறியார். தங்களுடைய கொடூரம் தலையெடுக்கச் செய்வதே அவர்களுடைய தொழில்.
தெய்வத் தன்மையை மறைத்து, அசுரத் தன்மையை ஓங்குவிப்பது எதுவோ அது பாபச் செயல். அது அசுரர்களை முதலில் மூடர்களாக்குகிறது. கடவுளின் மகிமைப்பற்றிய விவேகம் இல்லாதவர்கள் மூடர். ஒருவனுடைய விவேகம் அழிந்தால் பின்பு அவன் தானே அழிந்துபட்டுப்போவது திண்ணம். மூடர் அங்ஙனம் நராதமர் அல்லது மக்களுள் கடைப்பட்டவர் ஆகின்றனர். ஏனென்றால், ஏதாவது ஒரு நலத்தையாவது கடைப்பிடித்து அவர்கள் முன்னேற்றமடைய முடியாது. மேலும் அவர்களது ஞானம் மாயையினால் அபகரிக்கப்படுகிறது. ஈசுவரனது சொரூபமாகப் பிரபஞ்சம் அனைத்துமிருக்க அவ்வுண்மை அவர்களுக்குச் சிறிதும் புலப்படுவதில்லை. எனவே கடவுள் சம்பந்தமான அனைத்தையும் வெறுக்கின்ற கயவர் ஆகின்றனர் அன்னவர்.
நுண்மையான தானியத்தைத் தள்ளிவிட்டு, பருமனான குப்பை முதலியவைகளைத் தங்கச் செய்வது சல்லடையின் இயல்பு. அது போல, நன்மையை விட்டுவிட்டுத் தீமையை மட்டும் கைக்கொள்வது தீயோருடைய குணம்.
பின்பு, இறைவனைப் போற்றுபவர் யார்?
16. சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப
பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா! அர்தார்தீ-பயனை வேண்டுவோர், ஆர்த:-துன்புற்றார், ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர், ஜ்ஞாநீ-ஞானிகள் என, சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள், மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.
பொருள் : நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.
துன்பத்தைத் தவிர்க்க எந்த உயிர்க்கும் இயலாது. தேகம் எடுத்தவனை அது ஏதேனும் ஒரு விதத்தில் வந்து தாக்குகிறது. நோய்க்கு மருந்தை நாடுவது போன்று துன்பத்தைத் துடைப்பதற்குத் தெய்வத்தின் துணையை நாடுவது நல்லோரது இயல்பு. திரௌபதிக்குத் துன்பம் வந்தபோது கண்ணனுடைய உதவியை அவள் நாடியது இதற்குச் சான்றாகும். திருநாவுக்கரசு சுவாமிகளது செயலும் அத்தகையது. பரம்பொருளைப்பற்றிய உண்மையை அறிய விரும்புபவன் ஜிக்ஞாசு அல்லது ஞான வேட்கையுடையவன் எனப்படுகிறான். சைவ சமயக் குரவர் நால்வருள் மாணிக்கவாசகர் ஒரு நல்ல ஜிக்ஞாசு ஆவார். விவேகானந்த சுவாமிகள் பரமஹம்ஸரால் ஆட்கொள்ளப்படுதற்கு முன்பு சிறந்ததொரு ஜிக்ஞாசுவாக விளங்கினார் மெய்ப்பொருளை அறிய வேண்டும் என்ற ஞானவேட்கை மனிதனுக்கு எளிதில் உண்டாவதில்லை. அர்த்தார்த்தீ என்பவன் செல்வத்தின்மீது ஆசை வைப்பவன். இம்மையில் போகத்தைத் தேடிக் கொடுப்பது திரவியம். அது தமக்கு வேண்டுமென்று கடவுளிடத்து விண்ணப்பிப்பவரும் பக்தர் ஆகின்றனர். சைவசமயக் குரவருள் *சுந்தரர் இக்கூட்டத்தவர்க்கு நல்ல சான்றாவார். சுகப்பிரம்மம், திருஞானசம்பந்தர் முதலாயினோர் பிறவியிலிருந்தே ஞானிகள். பரம்பொருளின் சொரூபத்தை அவர்கள் சாக்ஷõத்கரித்தவர்கள். அதன் பலனாக அவர்கள் சதா பரம்பொருளையே போற்றினார்கள். அப்படி அவனைப் போற்றுதலைவிடச் சிறந்த செயலை ஞானியர் அறிந்திலர். இந்த நான்கு தரத்தாரது மனப்பான்மைகள் நல்வினையினின்று வந்தவைகளாம். ஆகவே அவர்கள் ஸுக்ருதின: (அறச்செயலாளர்) என அழைக்கப்படுகின்றனர்.
பகவானை முதலாக வைத்துக்கொண்டு புருஷார்த்தங்களைத் தேடுபவர் புண்ணியசாலிகள்.
ஒன்று என்னும் இலக்கத்தோடு பூச்சியங்களைச் (சுழிகளைச்) சேர்த்தால் அவைகளுக்கு மதிப்பு உண்டு. ஒன்றை விட்டுப் பிரித்தால் அவைகள் வெறும் பூச்சியங்களே. கடவுள் ஒன்று என்னும் இலக்கமாவார். உலகப் பொருள்களெல்லாம் அவரோடு சேர்க்கப்பட்ட பூச்சியங்கள். தம்மளவில் அவைகளுக்கு மதிப்பில்லை.
இந்த நான்கு வகையினரில் சிறந்தவர் யார்?
17. தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:
தேஷாம் நித்யயுக்த-அவர்களில் நித்திய யோகம் பூண்டு, ஏகபக்தி: ஜ்ஞாநீ விஸிஷ்யதே-ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன், ஹி ஜ்ஞாநிந:-ஏனெனில் ஞானிக்கு, அஹம் அத்யர்தம் ப்ரிய:-நான் மிகவும் இனியவன், ஸ ச மம ப்ரிய:-அவன் எனக்கு மிகவும் இனியன்.
பொருள் : அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.
மஹாவிஷ்ணுவுக்கு சிஷ்டேஷ்ட: அறிஞர்களால் விரும்பப்படுபவன் என்று ஒரு பெயர் உண்டு. பக்தியின் மிகுதியால் பக்தனுக்கு இந்த ஞானம் வருகிறது.
போற்றுதற்கு உரிய பொருள் பரமாத்மா ஒருவரே என்று ஞானி அறிகிறபடியால் அவரிடத்து மாறாத பக்தி உண்டாகிறது. தன்னைத் தான் விரும்புவது உயிர்களின் இயல்பு. பின்பு, தன் உயிர்க்கு உயிர் இறைவன் என்பதை சுவானுபவத்தில் அறிபவன் ஞானி. ஆகையால் அவன் இறைவனிடத்து அத்தகைய உறவு பூணுகிறான்.
பகவத் தரிசனம் பெற்ற பிறகு ஒருவன் தானே தெய்வப் பெற்றியுடையவனாக மாறிவிடுகிறான்.
மற்ற மூவர் புறக்கணிக்கப்படவில்லை; ஏனென்றால் :
18. உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்
ஏதே ஸர்வே உதாரா: ஏவ-மேற்சொல்லிய யாவரும் நல்லாரே, து ஜ்ஞாநீ ஆத்மா ஏவ-எனினும், ஞானி என்னுடைய ஸ்வரூபமே, மே மதம்-(என்பது) என்னுடைய கருத்து, ஹி ஸ: யுக்தாத்மா-அவன், யோகத்தில் இசைந்து, அநுத்தமாம் கதிம்-உத்தம கதியாகிய, மாம் ஏவ ஆஸ்தித:-என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.
பொருள் : மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.
பக்தர்கள் எல்லாரும் பகவானுக்குப் பிரியர்களே. ஆனால் அனன்ய பக்தி பண்ணும் ஞானி பகவத் சொரூபத்தை அடைந்திருப்பதால் அவன் அவர்களுள் விசேஷமானவன்.
பகவானுக்கு (மாதவ:) என்பது ஒரு பெயர். (மா) ஞானத்தினுடைய (தவ:) தலைவன் என்று அது பொருள்படுகிறது. ஞானத்துக்கு அவன் நிலைக்களம். ஆதலால் ஞானிகளை அவனுடைய ஆத்ம சொரூபம் என்பது பொருந்துகிறது. தீயில் வைக்கப்பட்ட விறகுக்கட்டை தானே தீயாகின்றது. கடவுளிடத்துப் பக்தி பண்ணுபவன் தானே அவர் மயமாகிறான்.
முழு மனதுடன் தொண்டுபுரியும் வேலைக்காரனிடத்து எஜமானனுக்கு அதிகப் பிரியம் ஏற்படுகிறது. அவனுடைய தூய பாங்கையும் திறமையையும் கண்டு திருப்தியடைந்து தம்முடைய ஸ்தானத்திலேயே வேலைக்காரனை வைக்கவும் அவர் செய்வார். பகவானும் தம் பக்தனிடத்து இங்ஙனம் செய்கிறார்.
ஞானி மேலும் சிறப்பிக்கப்படுகிறான் :
19. பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:
பஹூநாம் ஜந்மநாம் அந்தே-பல பிறவிகளின் இறுதியில், ஜ்ஞாநவாந்-ஞானவான், ஸர்வம் வாஸுதேவ: இதி-எல்லாம் வாசுதேவனே என்று, மாம் ப்ரபத்யதே-என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான், ஸ: மஹாத்மா ஸுதுர்லப:-அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.
பொருள் : பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், எல்லாம் வாசுதேவனே என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.
வாசுதேவ என்றால் பிரத்தியகாத்மன், எதிலும் ஊடுருவி நிலைத்திருப்பவன் எனப் பொருள்படுகிறது. (ஸர்வம்) எல்லாம் என்பது சரம், அசரம், மேன்மக்கள், கீழ்மக்கள், நல்லார், பொல்லார் எனப் பொருள்படுகிறது. ஞானிக்கு நித்தியவஸ்து எது என்பது மனதில் தெளிவடைந்த பிறகும் அது சுவானுபவம் ஆதற்குப் பல பிறவிகள் பிடிக்கின்றன. காண்கின்ற அனைத்தும் பரமாத்ம சொரூபமாகத் தென்படும்போது ஞானம் பூர்த்தியாகிறது. இத்தகைய பிரம்ம ஞானி நடமாடும் தேவதையாகிறான். இம் மகோன்னத நிலையை அடைந்த மனிதன் உலகில் அரியருள் அரியனாவான். இந்த அத்தியாயத்தின் மூன்றாவது சுலோகம் இதைக் குறிப்பிடுகிறது.
வேதாந்தத்தை அனுஷ்டானத்தில் கொண்டுவர முயலும் நல்ல ஆத்ம சாதகர்கள் உலகத்தில் உள்ள மக்கள் எல்லாரையும் கடவுள் சொரூபமாகக் கருதி யொழுகுகிறார்கள். அதனால் தாங்கள் ஞானமடைவதுமன்றி சமூகத்திலுள்ள பல கேடுகளைக் களைதற்கு அவர்களுடைய மனப்பான்மை ஊக்கங் கொடுக்கிறது.
பேதபுத்தியைத் தருவது அக்ஞானம்; ஐக்கியபுத்தியைத் தருவது ஞானம்.
ஞானமும் பக்தியும் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள் எனின்:
20. காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தேऽந்யதேவதா:
தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா
தை: தை: காமை:-அந்த அந்த விருப்பங்களால், ஹ்ருதஜ்ஞாநா:-கவரப்பட்ட அறிவினையுடையோர், ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா:-தத்தம் இயற்கையால் கட்டுண்டு, தம் தம் நியமம் ஆஸ்தாய-வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய், அந்ய தேவதா: ப்ரபத்யந்தே-அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.
பொருள் : வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். பிற தெய்வங்கள் என்பவை, யாவுமாகிய சர்வேசுவரனுக்கு அன்னியமானவைகளல்ல. அவனுடைய சிறு அம்சங்களே அன்னிய தேவதைகள் எனப்படுகின்றன. ஓர் அரசாங்கத்திலுள்ள சிறு உத்தியோகஸ்தர்கள் அரசனுக்கு அடிமைப்பட்டவர்களே. அரசனுடைய நட்பைப் பெற்றால் சிப்பந்திகள் அனைவரும் நமக்கு உரியவர் ஆகின்றனர். ஆனால் அரசனது நட்பைப் பெறுதற்கு நாம் தகுந்தவர் ஆகவேண்டும். அதில் சிரமம் அதிகம். சிறு உத்தியோகஸ்தர் நட்பைப் பெறுவது எளிது. அவர்களைக்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை முடித்துக்கொள்ளுதலும் எளிது. அதேபோன்று இறைவனுடைய அம்சங்களாகிய சிறு தெய்வங்களை வணங்கி, சிறிய பலனை அடைவது எளிது. லட்சியம் ஒன்று எவ்வளவுக்கெவ்வளவு பெரியதோ அவ்வளவுக்கவ்வளவு அதை அடைதலும் அரிது. ஆசை மிகுந்திருப்பவர் சிறிய பொருளை நாடுகின்றனர். குறைபொருளை நிறைபொருளாய் எண்ணும்படி ஏவுவது ஆசை. மனபரிபாகத்துக்கு ஏற்ற படி ஆசையும் வெவ்வேறு வடிவெடுக்கிறது. அதை நிறைவேற்றுதற்கான உபாயங்களும் பலவாகின்றன.
தாழ்ந்த சுபாவமுள்ளவர்கள்தான் வியாதிகளைக் குணமாக்கல், வியாஜ்யங்களை வெல்லல், நீர் மேல் நடத்தல் முதலிய சித்திகளை நாடி ஓடுவார்கள். உண்மையான பக்தர்களோவெனில் ஈசுவரனுடைய பாதாரவிந்தகளைத் தவிர வேறெதையும் நாடுவதில்லை.
இத்தகைய காமிகளுள் :
21. யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்
ய: ய: பக்த:-எந்த எந்த பக்தன், யாம் யாம் தநும்-எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை), ஸ்ரத்தயா அர்சிதும்-நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ, தஸ்ய தஸ்ய ஸ்ரத்தாம்-அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை, அஹம் தாம் ஏவ-நான் அந்த தேவதையிடமே, அசலாம் விததாமி-ஸ்திரமாக செய்கிறேன்.
பொருள் : எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.
மனிதனுக்குத் தேவையாயிருப்பது கடவுள் பக்தி. தெய்வத்துக்கு அவன் எத்தகைய வடிவத்தைக் கற்பித்துக்கொண்டாலும் அது கடவுளுக்குச் சம்மதம். யானை, குதிரை, பசு வடிவம் பெற்றுள்ள மிட்டாய்களில் ஒவ்வொரு குழந்தைக்கும் விருப்பமான வடிவத்தோடு கூடியதைக் கடைக்காரன் அதற்குக் கொடுக்கிறான். பகவானும் அதே முறையில் பக்தனுக்கு உற்சாகம் ஊட்டுகிறார். சிறு தெய்வ வணக்கத்தையும் பாங்குடன் செய்தால் அது முடிவில் ஈசுவர ஆராதனையாகத் திருந்தியமைகிறது. பக்தனுடைய பக்தியைப் பெருக்குவது பகவானுடைய கருணையாகும்.
அத். 4, சுலோகம் 11; அத். 9, சுலோகம் 23 ஆகியவைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
22. ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே
லபதே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந்
ஸ தயா ஸ்ரத்தயா யுக்த:-அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து, தஸ்ய ஆராதநம் ஈஹதே-அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான், ச தத: காமாந் லபதே-மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான், ஹி தாந் விஹிதாந் மயா ஏவ-எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது.
பொருள் : அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.
கேணி, குளம், குட்டை மூலம் மக்களுக்குப் பயன்படுவது மழை நீரே. சர்வேசுவரனுடைய அருளும் அத்தகையது.
சிற்றுயிர்களுக்கு வேண்டத்தக்கதை அறிபவன் சர்வேசுவரன். அவர்கள் வணங்கும் தேதைவைகள் வாயிலாக இறைவனே வேண்டத்தக்கவைகளை அவர்களுக்கு வழங்குகிறான். வீட்டுக் கூரையின் மீது பசு, புலி, சிங்கம் முதலிய மிருகங்களின் வாய்போன்ற குழாய்கள் வைத்திருக்கின்றனர். அவ்வாய்களினின்று விழுகின்ற மழைநீர் உண்மையில் மனிதனுடைய தாகத்தை அடக்குதற்காக வானத்தினின்று பொழிந்ததாம். அவ்வாறே மேன்மக்கள் வாயினின்று வரும் சொற்கள் பல தடவைகளில் சர்வேசுவரனிடத்திருந்து வருபவைகளாம்.
அவர்கள் வேண்டுவது நிலையாய் பொருள்களாதலால் :
23. அந்தவத்து பலம் தேஷாம் தத்பவத்யல்பமேதஸாம்
தேவாந்தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி
து அல்பமேதஸாம் தேஷாம்-எனினும், அற்ப மதியுடைய அன்னோர், தத் பலம் அந்தவத் பவதி-எய்தும் பயன் இறுதியுடையதாக ஆகிறது. தேவ யஜ: தேவாந் யாந்தி= தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர், மத்பக்தா: மாம் அபி யாந்தி-என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.
பொருள் : எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.
நிலைத்த இன்பம், நிலையற்ற இன்பம் இவ்விரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அற்ப அறிவாளர்களாம். காட்டுக்குச் செல்லும் விறகுத் தலையர் எல்லாரும் எடுத்துக்கொள்ளும் முயற்சி ஒரேவிதமானது. ஆனால் எல்லைப் புறத்தில் சிறு விறகு எடுப்பவன் அடையும் பயன் அற்பமானது. உட்புறத்தில் இருக்கும் விலை மிகுந்த மரம் எடுப்பவன் எய்தும் பயன் பெரியது. அதுபோன்று தேவைகளை வணங்குவதிலும் சர்வேசுவரனை வணங்குவதிலும் முயற்சி யொன்று; பலன் வேறுபட்டது. அதே முயற்சியால் அந்தமில்லா ஆனந்தத்தைப் பெறுதற்குப் பதிலாக அற்ப சுகத்தைப் பெறுபவர் சிற்றறிவாளர் ஆகின்றனர்.
முழுமுதற் பொருளை எல்லாரும் ஏன் வணங்குவதில்லை? விடை வருகிறது :
24. அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்
அபுத்தய: மம அநுத்தமம்-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும், அவ்யயம் பரம் பாவம்-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பரநிலையை, அஜாநந்த:-அறிந்து கொள்ளாமல், அவ்யக்தம் மாம்-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை, வ்யக்திம் ஆபந்நம்-கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக), மந்யந்தே-கருதுகின்றனர்.
பொருள் : மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.
ஜீவர்கள் வினையின் வசப்பட்டு உடல் எடுப்பது போன்று அவதார புருஷர் உடல் எடுப்பதில்லை. ஜன்னலில் கட்டுண்டது போன்று வானம் தென்படுகிறது. ஆனால் உண்மையில் அது எதிலும் கட்டுப்படவில்லை. அவதார புருஷர் உடல் எடுத்தும் அதில் கட்டுப்படாதவர். பெருங்கொடையாளி ஒருவன் விளையாட்டுக்காகக் கந்தைத் துணியணிந்திருக்கலாம். அணிந்திருக்கும் துணியைப் பார்த்து அவ்வள்ளலின் பரந்த பாங்கைப் பாமரன் ஒருவன் புறக்கணித்துவிடலாம். கொடையாளியினிடமிருந்து பெறவேண்டிய பயனையும் பெறாது போய்விடலாம். அதனால் கொடையாளிக்கு நஷ்டமில்லை. அழியும் இயல்புடைய உடலை எடுத்திருக்கிற வேளையிலும் அவதார புருஷர் பரமாத்ம சொரூபமேயாவர். இவ்வுண்மையை அறியாத மானுடர் பரமாத்மாவின் உபாசனைக்குத் தகுதியற்றவர்களாகின்றனர்.
அவர்களுடைய அக்ஞானத்துக்குக் காரணம் :
25. நாஹம் ப்ரகாஸ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:
மூடோऽயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்
அஹம் ஸர்வஸ்ய ப்ரகாஸ:-எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோகமாயா ந ஸமாவ்ருத:-யோக மாயை சூழ்வதில்லை, அஜம் அவ்யயம் மாம்-பிறப்பும், கேடுமற்ற என்னை, அயம் மூட லோக:-இந்த மூடவுலகம், ந அபிஜாநாதி-அறியவில்லை
பொருள் : எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.
தன்னுடைய ஜால வித்தையினால் மாயாவி ஒருவன் மற்றவர்களுடைய மதி மயங்கும்படி செய்கிறான். அது விஷயத்தில் அவர்கள் மூடர்கள் ஆய்விடுகின்றனர். ஆனால் அந்த மாயாவியின் சொந்தக்காரர்கள் உள்ளத்தில் அதனால் எந்த விதமான குழப்பமும் உண்டாவதில்லை. தான் எடுத்துக்கொண்ட விளையாட்டு (யோக மாயை) எத்தகையது என்பது மாயாவிக்கு நன்குதெரியும்.
எதனாலும் மறைக்கப்படாத சூரியன் மேகத்தால் மறைக்கப்பட்டது போன்று தென்படுகிறது. தன்னை மறைப்பதுபோன்று தென்படும் மேகத்தின் இருப்பிடத்தையே விளக்கவல்லது சூரியன். அதன் பிரகாசத்தாலன்றி மேகத்தைக் காணமுடியாது. முக்குணத்தாலாகிய பிரகிருதி சர்வேசுவரனுடைய யோக மாயை. அவனைவிட்டு மாயை பிரிந்திருக்க முடியாதாதலால் அதற்கு யோகம் என்ற அடைமொழி வழங்கப்படுகிறது. சூரியப் பிரகாசத்தால் உண்டாகிற மேகம் சூரியனை மறைப்பதுபோன்று ஈசனுடைய யோகமாயை அவனுடைய அகண்ட சச்சிதானந்த சொரூபத்தை மறைத்துக்கொண்டிருக்கிறது. ஆதலால் அறிவிலிகளுக்கு அவன் ஒரு சாதாரண ஜீவன் போன்று தென்படுகிறான். ஈசுவரனுடைய லீலா விசித்திரம் அவ் ஈசுவரனுக்கும் அவனுடைய பக்தர்களுக்கும் நன்கு விளங்குகிறது. மேலும் தன்னுடைய யோக மாயையினால் ஈசுவரன் ஒருவிதக் கேடும் அடைவதில்லை. மயக்கம் முழுவதும் மற்றவர்களைச் சார்ந்தது. இறைவனோ சர்வக்ஞன். ஆக :
26. வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந
பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஸ்சந
அர்ஜுந!-அர்ஜுனா, ஸமதீதாநி வர்தமாநாநி பவிஷ்யாணி ச-சென்ற, நிகழ்வன, வருவன,
பூதாநி-ஆகிய உயிர்களையெல்லாம், அஹம் வேத-நானறிவேன், து கஸ்சந மாம் ந வேத-ஆனால் எவரும் என்னை அறிவதில்லை.
பொருள் : சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர்.
பகவான் மாயைக்கு அதிபதி. மாயை முற்றும் அவர் வசத்தில் இருக்கிறது. உயிர்களின் தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகியவைகள் மாயையின் காரியம். காலமும் மாயையின் சொரூபம். ஆகையினால் சர்வக்ஞனாகிய அவர் இவை யாவையும் அறிகிறார். கடந்துபோன, உயிர்கள், இப்பொழுது இருப்பவை, இனி வருபவையாகிய அனைத்தையும் அவர் அறிகிறார். ஜீவர்களோ தங்களையே தெரிந்து கொள்ளவில்லை; இனி சர்வேசுவரனை எப்படித் தெரியப்போகிறார்கள் ! பக்தர்கள் இக்கோட்பாட்டுக்கு விலக்காகின்றனர். பகவானை உபாசித்து அவனை அவர்கள் சரணடைகின்றனர். ஆகையால் அவர்கள் ஓரளவு ஈசனை அறிகிறார்கள். அவனைப்பற்றிய அறிவில்லாத மற்றவர்கள் அவனை உபாசிப்பதில்லை.
ஜலம் கலந்த பாலிலிருந்து ஜலம் வேறு, பால் வேறாகப் பிரிக்கக்கூடிய அன்னப்பறவை, பாலை மட்டும் குடித்து நீரைத் தள்ளி விடுகிறது. ஆனால் மற்ற பறவைகளுக்கு இப்படிச் செய்யச் சக்தியில்லை. ஈசுவரன் மாயையோடு இரண்டறக் கலந்திருக்கின்றார். சாதாரண மனுஷ்யர்களுக்கு மாயையினின்றும் தனித்து அவரைக் காணச் சக்தியில்லை. பரமஹம்ஸர்கள் மட்டுமே மாயையை அகற்றிவிட்டுச் சுத்தாத்மாவான ஈசுவரனைப் பற்றிக்கொள்ளச் சக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
மக்களது அக்ஞானத்துக்கும் பக்தியின்மைக்கும் காரணம் :
27. இச்சாத்வேஷஸமுத்தேந த்வந்த்வமோஹேந பாரத
ஸர்வபூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப
பரந்தப பாரத-பகைவரைச் சுடுவோய்! பாரதா! ஸர்கே இச்சா த்வேஷ ஸமுத்தேந-உலகில் விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த, த்வந்த்வ மோஹேந-இருமைகளின் மயக்கத்தால்,
ஸர்வபூதாநி ஸம்மோஹம் யாந்தி-எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன.
பொருள் : விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன, பகைவரைச் சுடுவோய்.
துவந்துவ மோகம் என்பது இருமை மயக்கம். நன்மை தீமை என்று இரண்டு இயல்புகள் இணைபிரியாது வாழ்க்கையில் அமைந்திருக்கின்றன. இன்பத்தைத் தருவது நன்மையென்றும் துன்பத்தைத் தருவது தீமையென்றும் கருதப்படுகின்றன. நன்மையை விரும்புவது மனதில் ஒருவித மயக்கத்தை உண்டுபண்ணுகிறது. தீமையை வெறுப்பது மற்றொருவித மயக்கத்தை உண்டு பண்ணுகிறது. விருப்பு வெறுப்பு என்னும் இரண்டு இயல்புகளும் மனிதனுக்கு நலம் செய்பவைகள் போன்று தோன்றிக் கேடு செய்துவருகின்றன. ஆக, அவைகளை ஹிதசத்ருக்கள் என்பது பொருந்தும். விருப்பு வெறுப்பு என்னும் வில்லங்கத்துக்கு உட்பட்டவர் உலக இயல்போடு கூடிய அறிவையே உள்ளபடி பெறுகிறதில்லை. ஓரம் சார்தல் என்ற குற்றத்துக்கு ஆளாகின்றனர். பின்பு, விருப்பு வெறுப்பு நீங்கப்பெற்று நடுவு நின்றார்க்கன்றி பரஞானம் (கடவுளைப்பற்றிய உணர்வு) உதிப்பதில்லை.
விருப்பு வெறுப்பு என்ற பகைவர்களை வாட்டி வெல்லுதற்கு ஒவ்வொரு ஜீவனும் கடமைப்பட்டிருக்கிறான். துவந்துவங்களை வென்றவர் என் செய்கின்றனர்?
28. யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்
தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா:
து யேஷாம் ஜநாநாம்-எந்த ஜனங்கள், பாபம் அந்தகதம்-பாவந் தீர்ந்து, புண்ய கர்மணாம்-புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா:-அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து, த்ருடவ்ரதா: மாம் பஜந்தே-திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.
பொருள் : எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.
சுயநலத்தை அகற்றும் செயல்களெல்லாம் புண்ணிய கருமங்களாகின்றன. நெடுநாள் நிஷ்காமிய கருமம் புரிந்து, மனதைத் தூயதாக்கியவர்களே உறுதியான உள்ளத்தோடு இறைவனை வணங்குகின்றனர். வெற்றி தோல்வி, லாபம் நஷ்டம் ஆகியவைகளுக்கிடையில் மாறாத பக்தி பூண்டொழுகுபவர் திட விரதமுடையவர் ஆகின்றனர்.
துருப்பிடித்த இரும்பு காந்தத்தின் கவர்ச்சிக்கு உட்படுவதில்லை. துரு நீங்கப்பெற்றதும் அது காந்தத்தால் இழுக்கப்படுகிறது. விருப்பு வெறுப்பு என்னும் துருப்பிடித்த உள்ளத்தில் பக்தி பெருக்கெடுப்பதில்லை. சுத்த மனதின்கண் பக்தி விரைவில் தோன்றுகிறது.
ஈசுவரனை உபாசிப்பவர் அறிவது யாது?
29. ஜராமரணமோக்ஷõய மாமாஸ்ரித்ய யதந்தி யே
தே ப்ரஹ்ம தத்விது: க்ருத்ஸ்நமத்யாத்மம் கர்ம சாகிலம்
யே மாம் ஆஸ்ரித்ய-என்னை வழிபட்டு, ஜரா மரண மோக்ஷõய யதந்தி-மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு முயற்சி செய்வோர், தே தத் ப்ரஹ்ம-அவர்கள் அது என்ற பிரம்மத்தையும், க்ருத்ஸ்நம் அத்யாத்மம்-ஆத்மஞான முழுதையும், அகிலம் கர்ம ச விது:-செய்கையனைத்தையும் உணர்வார்.
பொருள் : மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் அது என்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.
துவந்துவ மோகம் அல்லது இருமை மயக்கத்தில் இருப்பவர்களுக்கும் வாழ்வைப்பற்றி ஆராய்தற்குப் பெரியதொரு தூண்டுகோல் உண்டு. அவர்கள் கடவுளை அறியாதிருந்தாலும் கடவுளை நம்பாதிருந்தாலும் மக்களது வாழ்வில் உண்டாகும் மாறுதல்களை அறிந்தாக வேண்டும். மூப்பு, மரணம் ஆகிய இரண்டு மாறுதல்களும் மனிதனால் வேண்டப்படாதவைகள். வலிவிழந்து அழிந்துபட்டுப் போவதுதானா வாழ்வின் முடிவு? அரும்பெரும் செயல்களைச்செய்துவிட்டு ஏமாற்றம் அடைந்தவனாக மனிதன் இவ்வுலகைவிட்டு ஏகுதலில் பயன் யாது உளது? இப்படி யெல்லாம் விசாரித்து ஜீவிதத்தின் தத்துவத்தை உள்ளபடி அறிதற்கு மரணம் துணைபுரிகிறது. ஆக, முறையாக மூப்பையும் மரணத்தையும் ஆராய்ச்சி செய்பவர் உண்மையை அறிகின்றனர். பிரம்மத்தைப்பற்றியும், தங்களது ஆத்ம சொரூபத்தைப்பற்றியும், கர்மத்தின் முடிவான இயல்பைப்பற்றியும் அன்னவர் அறிந்தாக வேண்டும்.
வில்வப்பழத்தில் ஓடு, விதைகள், சதை இவைகள் எல்லாம் இருக்கின்றன. இவைகளில் எது ஒன்று மாத்திரம் வில்வப் பழத்தைக் குறிக்கும் ! ஓடு பழமல்ல; அது முக்கியமன்று என்று ஒருவன் தள்ளிவிடுகிறான். பிறகு விதைகளையும் அப்படியே அகற்றி விடுகிறான். கடைசியில் சதையைத் தனியாக எடுத்து அதுதான் வில்வப் பழமொன்று கருதுகின்றான். சிறிது சிந்தித்தபிறகு அவன் தெளிவு கொள்கிறான். சதை, விதை, ஓடு இம்மூன்றும் சேர்ந்ததே முழுப்பழம் என்று அறிய வருகிறான். அதேபோல ஒருவன் குணங்குறியற்ற நிராகாரக் கடவுளைச் சாக்ஷõத்கரித்த பிறகு நித்தியமாகிய அதே பரப்பிரம்மம் லீலாரூபமாய் இந்த உலகமாகவும் பரிணமித்திருக்கிறது என்று அறிய வருகிறான்.
30. ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது:
ப்ரயாணகாலேऽபி ச மாம் தே விதுர்யுக்தசேதஸ:
ஸாதி பூதாதிதைவம் ஸாதியஜ்ஞம் ச-பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் கூடியவனாக, யே மாம்-யாவர் என்னை, ப்ரயாணகாலே அபி விது:-இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யுக்த சேதஸ:-யோகத்திற் பொருந்திய சித்தமுடைய, தே மாம் ச விது:-அவர்கள் என்னையே அறிகிறார்கள்.
பொருள் : பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்.
அதிபூதம், அதி தெய்வம், அதியக்ஞம் ஆகியவைகளைப் பற்றிய விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் வருகிறது. மரண காலத்தில் மனக்குழப்பமடைவது மாந்தரது இயல்பு. ஆனால் யோகிக்கு அத்தகைய குழப்பம் வருவதில்லை. இயற்கையையும் அதன்பால் பொலிகிற மேன்மையையும், அதில் நிகழும் மேலாம் செயல்களையும் முறையாக அறிபவர்க்கு தெய்வபக்தி இன்னும் அதிகரிக்கும். பக்தியும் ஞானமும் அதிகரிப்பதை மரணகாலம் விளக்குகிறது. அவ்வேளையில் பகவானுடைய சொரூப ஞானம் இன்னும் அதிகரிக்கிறது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஞானவிக்ஞானயோகோ நாம
ஸப்தமோऽத்யாய:
-
எட்டாம் அத்தியாயம்
அக்ஷரப்ரஹ்ம யோகம்
முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் மனிதனின் மனத்துக்குள் இருக்கின்றதோ அத்தகைய பலனையே மறுபிறவியில் பெறுவானாதலால் பக்தர்கள் இறக்கும் தருணத்தில் கடவுளைத் தியானித்திருப்பது அவசியம்.
வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டு பண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டும்.
நான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்ற பலனெல்லாம் அழிவுற்றது. பக்தர்கள் இறந்தபிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக் கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம்.
சகுண பிரம்ம உபாஸனை 1-8 -மரணத்தின்பொழுது இருக்க வேண்டிய மனநிலை 9-13 -மீண்டும் பிறவாநிலை 14-16 -சிருஷ்டி கர்த்தாவின் இரவுபகல் 17-19 -மரணமிலாப் பெருநிலம் 20-22 -ஒளி மார்க்கமும் இருள் மார்க்கமும் 23-26 -யாண்டும் யோகியாயிரு 27-28.
அர்ஜுந உவாச
1. கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புரு÷ஷாத்தம
அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே
அர்ஜுந உவாச-அர்ஜுனன் செல்லுகிறான், புரு÷ஷாத்தம தத் ப்ரஹ்ம கிம்?-புரு÷ஷாத்தமா, அந்த பிரம்மம் எது? அத்யாத்மம் கிம்-ஆத்ம ஞானம் யாது? கிம் கர்ம-கர்மமென்பது யாது?
அதிபூதம் கிம் ப்ரோக்தம்-பூத ஞானம் என்று எது அழைக்கப் படுகிறது? அதிதைவம் கிம் உச்யதே-தேவ ஞானம் என்பது எதனை அழைக்கிறார்கள்?
பொருள் : அர்ஜுனன் செல்லுகிறான்: அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புரு÷ஷாத்தம, கர்மமென்பது யாது? பூத ஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை?
2. அதியஜ்ஞ: கதம் கோऽத்ர தேஹேऽஸ்மிந்மதுஸூதந
ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி:
மதுஸூதந! அதியஜ்ஞ: அத்ர க:-யாகஞானம் என்பதென்ன? அஸ்மிந் தேஹே கதம் ?-இந்த தேகத்தில் எப்படி (இருக்கிறார்?) ச நியதாத்மபி:-மேலும் தம்மைத் தாம் கட்டியவர்களால்,
ப்ரயாணகாலே கதம் ஜ்ஞேய: அஸி-இறுதிக் காலத்திலேனும் எவ்வாறு அறியப் படுகிறாய்?
பொருள் : யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே?
இவ்விரண்டு சுலோகங்களில் அடங்கிய ஏழும் அறியத் தகுந்த பொருள்கள் ஆகின்றன. முன் அத்தியாயத்தின் இறுதியில் வந்த சுலோகங்கள் இரண்டும் இக்கேள்விகளுக்கு இடந்தருகின்றன. ஆகவே, அர்ஜுனன் அவைகளைக் கேட்கிறான்.
ஸ்ரீ பகவாநுவாச
3. அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோऽத்யாத்மமுச்யதே
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ப்ரஹ்ம அக்ஷரம் பரமம்-அழிவற்ற பரம்பொருளே பிரம்மம், ஸ்வபாவ: அத்யாத்மம் உச்யதே-அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும், பூதபாவ: உத்பவகர:-உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை, விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:-இயற்கை கர்மமெனப்படுகிறது.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.
பிரம்மம் என்பது முழுமுதற்பொருள். அது எக்காலத்திலும் உள்ளது; எங்குமிருப்பது; எக்காரணத்தைக்கொண்டும் அதனிடத்து மாறுதல் உண்டாவது கிடையாது. ஆக, அது கால தேச நிமித்தத்தில் அடிபடாதது. ஆதலால் அதற்கு அக்ஷரம் என்ற பெயர் வந்துள்ளது. இந்திரியங்களுக்கு அது எட்டாதது. ஆகையினால் அது பரமம் என்றும் பகரப்படுகிறது. அண்டங்கள் அனைத்துக்கும் பரப்பிரம்மம் இருப்பிடமாகிறது.
ஒரு மனிதன் கோபிக்கும் தன்மையுடையவனாயிருக்கிறான். அது அவனுடைய ஸ்வபாவம் என்கிறோம். மற்றொருவன் யாண்டும் நேசிக்கும் தன்மையுடையவனாயிருக்கிறான். அப்படி இருப்பது அவனுடைய ஸ்வபாவம். அதே பாங்கில் பரப்பிரம்மத்தினுடைய சுபாவம் (ஸ்வபாவம்) உண்டு. எண்ணிறந்த ஜீவாத்மாக்களாகத் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொள்வது பரப்பிரம்மத்தின் ஸ்வபாவமாகும். அந்த ஸ்வபாவமே அத்யாத்மம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தேகத்தினுள்ளும் நான் என்னும் சொல்லுக்கு இலக்காக அது இருக்கிறது. அலைகள் கடலில் ஒடுங்குவதுபோன்று இந்த ஜீவர்கள் அனைத்தும் பரப்பிரம்மத்தில் ஒன்றுபடும் தன்மையனவாம்.
இயற்கையின் நடைமுறை அனைத்துக்கும் கர்மம் என்பது பொதுப்பெயர். மனிதனுடைய தோற்றத்துக்கும் முன்னேற்றத்துக்கும் முதற் காரணமாயிருக்கும் கர்மமே இங்கு கர்மம் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. அது ஆக்கத்துக்கு ஏதுவாயுள்ள நற்செயலாம். ஒவ்வொரு படித்தரத்திலும் மனிதனை மேலோன் ஆக்குவது எதுவோ, அது கர்மம். ஆறு சாஸ்திரங்களில் ஒன்றாகிய பூர்வமீமாம்ஸம் கர்மத்துக்கு உயர்ந்தது ஒன்றுமில்லை என்கிறது. கர்மத்தின் மூலம் எதையும் பெறலாம் என்பது அதன் கோட்பாடு.
4. அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஸ்சாதிதைவதம்
அதியஜ்ஞோऽஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர:
க்ஷரோ பாவ: அதிபூதம்-அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம், புருஷ அதிதைவதம் ச-புருஷனைப் பற்றியது தேவ ஞானம், தேஹப்ருதாம் வர:-உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! அத்ர தேஹே அஹம் ஏவ அதியஜ்ஞ:-உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.
பொருள் : அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப் பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.
அதிபூதம் : தேகம் முதலிய அழியும் தன்மையுடையவைகள் இப்பெயர் பெறுகின்றன. சைதன்யத்துக்கு அன்னியமானவைகள் எனினும், இவைகள் சைதன்யத்தைச் சார்ந்திருக்கின்றன. பிராணிகள் உயிர் பெற்றிருப்பதற்கு பூதங்கள் இன்றியமையாதவைகளாம்.
புருஷன் : புரியிலே சயனிப்பவன் புருஷன். அகிலாண்டத்தையும் தன் இருப்பிடமாகக்கொண்டு, அதில் நீக்கமற நிறைந்திருக்கிறவன் புருஷன்.
அதிதெய்வம் : ஹிரண்யகர்ப்பன், எல்லார்க்கும் முதலிலே உடலை எடுத்தவன், சுயம்பு அல்லது பிரம்மதேவனை இப்பதம் குறிக்கிறது. ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு வியக்தி இருப்பது போன்று, ஜீவத்தொகுதிக்கு உள்ள வியக்தியே பிரம்மதேவன் ஆகிறது.
அதியக்ஞம் :- ஜீவன் தன்னை அடியோடு இறைவனிடத்து ஆஹுதியாகக் கொடுத்துவிடும்பொழுது யக்ஞம் உச்ச ஸ்தானம் பெறுகிறது. தன்னைக் கடவுளுக்குக் கொடுத்துவிடுங்கால் ஜீவ போதம் அழிகிறது; பரபோதம் தோன்றுகிறது. ஆக, அதியக்ஞம் நடைபெறுகிற இடத்தில் பரமாத்மாவின் சான்னித்தியம் காணப்பெறுகிறது. முதிர்ந்த சாதகர்களிடத்தும் ஸித்த புருஷர்களிடத்தும் ஈசுவர சான்னித்தியம் தெளிவுறத் தென்படுவது போன்று வேறு எங்கும் அப்பாங்கில் காணமுடியாது. மானிட சரீரம் எடுத்ததன் முடிவான பலனும் இதுவே. தன்னை இறைவனுக்குக் கொடுப்பவனே உடல் எடுத்தவர்களுள் உயர்ந்தவன் ஆகிறான்.
எவனுடைய உடலும் உள்ளமும் பூரணமாக ஈசுவரனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அவன்தான் உண்மையான ஸாது. ஸதா ஸர்வகாலமும் ஈசுவரனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பான். அவ்வீசுவரன் எல்லா ஜீவர்களிடத்தும் இருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டு எல்லாருக்கும் தொண்டு செய்வான். இவைகள்தான் உண்மையான ஸாதுவின் முக்கியமான அடையாளங்கள்.
5. அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸய:
ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந்-எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன், கலேவரம் முக்த்வா ப்ரயாதி-உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்), ஸ: மத்பாவம் யாதி-எனதியல்பை எய்துவான், நாஸ்தி அத்ர ஸம்ஸய:-இதில் ஐயமில்லை.
பொருள் : இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.
என் சொரூபம் என்பது முழுமுதற் பொருளாகிய விஷ்ணு அல்லது பரத்தினைக் குறிக்கிறது. உடலை உகுக்கும்பொழுது ஜீவன் பரத்தினைப் பாவிக்க வல்லவனாயின், அவன் மீண்டும் பிறவாது பரத்தினை அடைகிறான். இது விதேக முக்தி எனப்படும். இவ்விதிக்கு விலக்கு இல்லை. ஆகவே இதைப்பற்றி ஐயம் கொள்ளவேண்டிய அவசியமில்லை.
இறைவனை நினையாது வேறு எண்ணத்தோடு உயிர் விடுகின்றவர்களது நிலை என்னாகிறது என்னும் கேள்வி பிறக்குமிடத்து :
6. யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித:
கௌந்தேய! அந்தே-குந்தியின் மகனே! மரணத்தருவாயில், யம் யம் பாவம் வா ஸ்மரந் அபி-எந்தெந்த ஸ்வரூபத்தை சிந்தித்த வண்ணமாய், கலேவரம் த்யதி-உடலைத் துறக்கின்றானோ,
ஸதா தத்பாவ பாவித:-எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய், தம் தம் ஏவ ஏதி-அந்த அந்த ஸ்வரூபத்தையே அடைகிறான்.
பொருள் : ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.
சொப்பனத்தில் தோன்றுகிற வடிவம் தன் மனதால் சிருஷ்டிக்கப்பட்டது. விலக்கமுடியாது தன் முன்னிலையில் அது நிற்பதுபோன்று சாகும் தறுவாயில் ஓர் எண்ணம் மனதில் தோன்றுகிறது. வாழ்நாளில் அது ஆழ்ந்து நெடிது எண்ணப்பட்டதோ அதுதான் அப்பொழுது முன்னணியில் வந்து நிற்கிறது. மேலும் வரும் பிறப்பானது அந்த எண்ணத்தின் ஸ்தூல அமைப்பாம். ஆக, இனி வரும் ஜன்மத்தை விரும்பியபடி மாற்றலாம்.
இம்மையிலும் மறுமையிலும் நலம் நாடும் ஒருவன் இடையறாது செய்ய வேண்டியது யாது எனின் :
7. தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச
மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ஸயம்
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு-ஆதலால், எல்லாக் காலங்களிலும், மாம் அநுஸ்மர:-என்னை நினையுத்ய ச-போர் செய், மயி அர்பித மந: புத்தி:-என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால், அஸம்ஸயம் மாம் ஏவ ஏஷ்யஸி-ஐயமின்றி என்னையே பெறுவாய்.
பொருள் : ஆதலால், எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.
போர் புரி என்கிறார் பகவான். அர்ஜுனனுடைய ஸ்வ தர்மத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லாரும் அவரவர் கடமைகளைச் செய்யவேண்டும் என்பதாகிறது.
இறைவனை உபாசிக்கின்றவர்கள் பலர் உலகக் கடமைகளைப் புறக்கணிக்கின்றனர். உலக வியவகாரங்களைச் செய்கின்றவர்கள் அநேகர் கடவுளை மறக்கவும் செய்கின்றனர். ஈசுவர சிந்தனையும் தொழில் புரிதலும் ஒன்றோடொன்று ஒவ்வாது என்பது அவர்கள் எண்ணம். ஆனால் காயத்தால் கடமைகளைச் செய்துகொண்டிருக்கையில் கருத்தைக் கடவுளிடம் செலுத்தவேண்டும் என்பது கண்ணனது கோட்பாடு. இத்தகைய பயிற்சி இகபரமிரண்டுக்கும் சாதனமாகிறது.
தெருப்பாடகன் ஒரு கையால் சுருதி மீட்டிக்கொண்டும், மற்றொரு கையால் ஒருவகை மேளத்தைத் தட்டிக்கொண்டும், அதே சமயத்தில் பாடிக்கொண்டுமிருக்கிறான். அதைப்போல உலக பந்தத்துக்குட்பட்ட மனிதன் தனக்கேற்பட்ட காரியங்களைக் கைகளால் செய்துகொண்டிருக்கையிலும் பகவந் நாமத்தை முழுமனதோடு சொல்லி, அவனைச் சிந்தனை பண்ணுவதை மறக்கக்கூடாது.
பரத்தினைச் சாரும் வழி :
8. அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந்
பார்த! ந அந்ய காமிநா-பார்த்தா! வேறிடஞ் செல்ல விரும்பாமல், யோக அப்யாஸ யுக்தேந சேதஸா-யோகம் பயிலும் சித்தத்துடன், அநுசிந்தயந்-சிந்தனை செய்து கொண்டிருப்போன்
திவ்யம் பரமம் புருஷம்-தேவனாகிய பரம புருஷனை, யாதி-அடைகிறான்.
பொருள் : வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.
உபாசனா மூர்த்தியைப் பற்றிய தியானத்தை வாழ்நாள் முழுதும் விடாது திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்பது அப்பியாச யோகமாகிறது. சூரியனைப்போன்று சுயம்பிரகாசமுடையவன் தேஜோமயமான புருஷனாகிறான். அவன் புரி என்னும் தேகத்தின்கண் எழுந்தருளியிருக்கிறான் என்பது இயம்பப்பட்டது. நாள்தோறும் அவனை ஒழுங்காக நினைக்க நினைக்க உடல் ஞாபகம் குறைந்து போகிறது. பழுத்த பழம் மேல் தோலினின்று பிரிவதுபோன்று ஆத்மபோதமானது தேக உணர்ச்சியைக் கடந்து மேலோங்குகிறது. அத்தகைய பரிபாகம் அடைந்த யோகியை மரணகாலம் நன்கு விளக்கிக் காட்டுகிறது. எப்படி எனின் :
9. கவிம் புராணமநுஸாஸிதார
மணோரணீயாம்ஸமநுஸ்மரேத்ய:
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப
மாதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத்
10. ப்ரயாணகாலே மநஸாசலேந
பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஸ்ய ஸம்யக்
ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்
கவிம் புராணம்-அறிவாளியானவரை, பழமையானவரை, நுஸாஸிதாரம்-எல்லாவற்றையும் ஆள்பவரை, அணோ: அணீயாம்ஸம்-அணுவைக் காட்டிலும் நுண்ணியவரை, ஸர்வஸ்ய தாதாரம்-எல்லாவற்றையும் தாங்குபவரை, ஆதித்யவர்ணம்-சூரியனின் நிறம் கொண்டிருப்பவரை, அசிந்த்யரூபம்-எண்ணுதற்கரிய வடிவுடையவரை, தமஸ: பரஸ்தாத்-அஞ்ஞான இருளுக்கு அப்பற்பட்டவரை, ய: அநுஸ்மரேத்-எவன் நினைக்கிறானோ.
ப்ரயாணகாலே-இறுதிக் காலத்தில், அசலேந மநஸா-அசைவற்ற மனத்துடன், ப்ருவோ: மத்யே ப்ராணம் ஸம்யக் ஆவேஸ்ய-புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்த்யா யோகபலேந ச யுக்த:-பக்தியுடனும், யோக பலத்துடனும் (நினைத்துக் கொண்டு), தம் திவ்யம் பரம் புருஷம் உபைதி-அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.
பொருள் : கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கின்றானோ,
பொருள் : இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான். (9-10)
இத்தகைய உயர்நிலையில் மனதையும் பிராணனையும் வைத்து, உடலை உகுப்பவனுக்கு பரம்பொருளோடு ஒன்றித்தல் அல்லது பிரம்ம நிர்வாணம் அடைதல் சாத்தியப்படுகிறது. அதற்காக அப்பியாச யோகம் உறுதியாதற்கு நாள்தோறும் சிந்தையில் வைக்கவேண்டிய இஷ்ட மூர்த்தியின் அஷ்ட குணங்கள் ஈண்டு வர்ணிக்கப்படுகின்றன. அவையாவன:
1. கவி-சர்வக்ஞன், அனைத்தையும் அறிபவன். எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் அறிவுக்கு அறிவாய், நுண்ணுணர்வாய் இருப்பதை உன்னிப்பார்க்க. 2. புராணன்-பழையவன்; பரமாத்மாவுக்கு முன்னவன் யாருமில்லை. 3. அனுசாஸிதாரம்-உலக நடைமுறை என்ன போக்கில் இருக்க வேண்டுமென்று ஆணையிடுபவன். 4. அணோரணீயாம்ஸம்-சூக்ஷ்மத்தில் மிக சூக்ஷ்மம்; நுணுக்கரிய நுண்மையன். 5. ஸர்வஸ்ய தாதாரம்-தோன்றிய யாவுக்கும் இருப்பிடமாயிருப்பவன் கானல் நீருக்குக் கானல் இருப்பிடமாவது போன்று, அவனிடத்துத் தோன்றிய உலகுக்கு அவனே இருப்பிடமாகிறான். 6. அசிந்த்யரூபம்-சித்தியடையாத சித்தத்தால் அவனது வடிவம் கிரகிக்கப்படாதது. 7. ஆதித்திய வர்ணம்-சூரியனுடைய நிறம் என்றும் மாறாதது. சூரியன் உதிப்பதுமில்லை, அஸ்தமனம் ஆவதுமில்லை. அதுபோன்று பரமாத்மா சைதன்ய வடிவினன். அவனுடைய சைதன்யத்தில் மாறுதல் ஒன்றும் ஏற்படுவதில்லை. 8. தமஸ: பரஸ்தாத்-மேகம் சூரியனை ஒரு நாளும் மறைப்பதில்லை. அவ்வாறே அக்ஞான இருள் ஆத்ம சைதன்யத்தைப் பாதிப்பதில்லை.
அசல மனசு, பக்தி, யோகபலம்-இம் மூன்றும் நெருங்கிய தொடர்வுடையவைகள். எக்காரணத்தை முன்னிட்டும் தளர்வடையாத மனது அசலத்தில் பிரதிஷ்டை பெற்றதாகிறது. தூய அன்பே வடிவெடுத்துள்ள மனது பக்தியில் நிலைபெற்றதாகிறது. யோக சாதனங்களை முறையாகவும் தீவிரமாகவும் அனுஷ்டிக்கின்றவர்களுக்கு இவை அமைவதால் யோகபலம் என்று இவை பெயர் பெறுகின்றன. ஆத்ம சாதனங்களெல்லாம் ஒருவனை பலவான் ஆக்குகின்றன.
வலிவுடையவனாக ஆதலே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வருவதற்கு அறிகுறியாகும். உடல் வலிவு பெற்றுக் கொண்டு வரவர, ஒருவன் வளர்ச்சியடைகிறான். மனவலிவும் வளர்ச்சியைக் குறிக்கிறது. அறிவின் வலிவு அதிலும் மேலானது. யானைப்பாகன் யானையை அடக்கியாளுதலே அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். சமுதாயத்தில் அறிவுடையோர் மற்றவர்களைத் தங்கள் காரியத்துக்குப் பயன்படுத்துவதை எக்காலத்திலும் எவ்விடத்திலும் காணலாம். ஆத்மபலத்தில் ஏனைய பலங்களெல்லாம் அடங்கியிருக்கின்றன. ஆத்மபலம் அடையப் பெற்றவன் மரணத்துக்கு அஞ்சுவதில்லை. மரணத்தை வென்று, அதற்கு அஞ்சாத வீரன் அஞ்சுதற்கு உரியது வேறு எதுவும் எவ்வுலகிலும் இல்லை. எதற்கும் அஞ்சாத பலவான் ஆவதே கீதையின் குறிக்கோள் என்பது இரண்டாவது அத்தியாயத்தின் துவக்கத்திலேயே விளக்கப்பட்டுள்ளது.
புருவங்களுக்கு மத்தியில் பிராணனை வைத்தல் : விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அக்ஞானி ஒருவனுக்கு அந்திய காலத்தில் பிராணன் நவத்துவாரங்களில் கூட்டைவிட்டுப் போகிறது. ஞானிக்கோ அது புருவத்தின் மத்தியில் நின்று, உச்சந்தலையில் பிரம்மரந்தரத்தின் வாயிலாக வெளியேகுகிறது.
11. யதக்ஷரம் வேதவிதோ வதந்தி
விஸந்தி யத்யதயோ வீதராகா:
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே
யத் அக்ஷரம் வேதவித: வதந்தி-எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், வீதராகா: யதய: யத் விஸந்தி-விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர், யத் இச்சந்த: ப்ரஹ்மசர்யம் சரந்தி-எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், தத் பதம் தே-அந்த பதத்தைப் பற்றி உனக்கு, ஸங்க்ரஹேண ப்ரவக்ஷ்யே-சுருக்கமாகச் சொல்லுகிறேன்
பொருள் : எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர். எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
இயற்கை என்கிற வேதத்தை முறையாக ஆராய்ந்துபார்த்தாலும் சரி; தத்துவ தரிசனம் அடையப்பெற்ற ஆன்றோர்கள் திருவாய் மலர்ந்தருளிய வேத சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்த்தாலும் சரி; அவைகள் வாயிலாக உண்மையொன்று நமக்கு விளங்கும். அழியும் இயல்புடைய இப்பிரபஞ்சத்தினுள்ளே, இதற்கு ஆதாரமாக நிலை பொருளொன்று உள்ளது. அது குணம் குறியற்ற நிர்குணப் பிரம்மம். அக்ஷரம் அல்லது அழிவற்றது எனப்படுவதும் அதுவே. நிராசையில் நிலைநின்று, பிரம்மசரிய விரதத்தை முறையாக அனுஷ்டிக்கின்றவர்களே சந்யாசிகள் ஆகின்றனர்.
பாதரசம் பூசிய கண்ணாடியில் முகம் நன்றாகப் பிரதிபிம்பிப்பது போன்று பிரம்மசரியத்தை நன்றாக அனுஷ்டிக்கின்றவர் உள்ளத்தில் அந்தப் பிரம்மத்தைப்பற்றிய ஞானம் உண்டாகிறது. நைஷ்டிக பிரம்மசாரிகளிடத்து மேதா என்னும் நாடி உண்டாகிறது. அது பேரறிவையும் பிரம்ம ஞானத்தையும் வளர்க்க வல்லது.
ஆத்ம சாதகன் ஒருவன் காமங்கொண்டவனாகப் பெண்களின் படத்தையும் கண்ணெடுத்துப் பார்க்கலாகாது.
12. ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச
மூர்த்ந்யாதாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்
13. ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந்
ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்
ஸர்வத்வாராணி ஸம்யம்ய-எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மந: ஹ்ருதி நிருத்ய-மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, ப்ராணம் மூர்த்நி ஆதாய-உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி, ஆத்மந: யோகதாரணாம் ஸ்தித:-யோக தாரணையில் உறுதி பெற்று.
ஓம் இதி ஏகாக்ஷரம் ப்ரஹ்ம-ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே, வ்யாஹரந் மாம் அநுஸ்மரந்-ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், ய: தேஹம் த்யஜந் ப்ரயாதி-உடம்பைத் துறந்து, பரமாம் கதிம் யாதி-பரமகதி பெறுகிறான்.
பொருள் : எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,
பொருள் : ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான். (12-13)
யோகி ஒருவனுக்கு உடல் வாழ்க்கை முற்றுப் பெறுகிற நிலை இதுவாம். நதியானது கடலினுள் நுழைவது போன்று யோகியினுடைய ஜீவபோதம் பரபோதமாக மாறியமைகிறது. அதாவது உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. அப்பொழுது பொறிவாயில்களாகிய கண், செவி, மூக்கு முதலியவைகளைப் பற்றிய உணர்ச்சி யோகிக்கு இல்லை. உடல் வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருந்தபோதும் அவைகள் முரட்டுத்தனமாய் வெளியுலகில் சஞ்சரிக்கவில்லை. தூங்கப் போவது போன்று இப்பொழுது அவைகள் தாமாக ஒடுங்கிவிடுகின்றன. அந்திவேளை வரும்போது, தான் வாசம் செய்யும் மரத்துக்குப் பறவையானது பறந்து வருவது போன்று யோகியின் மனது மரண காலத்தில் ஹிருதயத்தில் அடங்குகிறது. (யோகியர் அல்லாதவர்களுடைய உள்ளம் உலகப் பொருள்களில் பற்று வைத்துப் பரிந்து திரிகிறது.) உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயவத்தையும் விட்டு விலகுகிறது. பிரயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போன்று பிராணன் யோகியின் உச்சந்தலைக்கு வருகிறது. ஆதலால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு மிஞ்சியிருக்கும். (யோகியல்லாதவர்க்குப் பிராணன் வாயில் அல்லது மூக்கில் போவது வழக்கம்.) ஈசுவர சிந்தனை வலுத்து ஈசுவர சொரூபத்தில் மனது ஒன்றித்திருப்பது யோகதாரணையாகும். அப்பொழுது ஓம் என்ற ஓசையொன்றே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஓம் என்னும் ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்விய சொரூபம், அலகில்லா ஜோதி, பேரின்பம், சித் அம்பலம்-இந்நிலையை யோகி அடையப்பெறுகிறான். மற்றவர்களது உடல் போன்று யோகியின் உடலும் பிணமாய் ஒதுக்கப்படுகிறது. வீடுபேறு அடைந்தது யோகியின் சிறப்பு.
ஜீவனானது இவ்வுலகத்தைவிட்டுப் போகும் தருணத்தில் கடைசியாக எதைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்குமோ அதற்குரிய உடலில் மறுபடியும் வந்து பிறக்கின்றது. ஆதலால் பக்தி சாதனை மிகவும் அவசியமெனத் தோன்றுகிறது. இடையறாத அனுஷ்டானத்தினால் உலகப் பொருள்களைப் பற்றிய எண்ணம் மனதில் உண்டாகமாட்டாது. ஈசுவரனைப் பற்றிய சிந்தனையே ஆத்மாவினிடம் குடிகொள்ளும். சாகும் தறுவாயிலும் கூட அந்தச் சிந்தனை நீங்குவதில்லை.
சாகும்பொழுது தானாக அந்த நிலை வருகின்றதா? இல்லை. உலகில் வாழ்ந்திருக்கும்போது சாதகன் அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும்.
எப்படி மனதை லயப்படுத்துவது எனின் :
14. அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ:
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:
பார்த: ய:-பார்த்தா! எவன், அநந்யசேதா:-பிரிது நினைப்பின்றி, நித்யஸ: ஸததம் மாம் ஸ்மரதி-என்னை எப்பொழுதும் நினைக்கிறானோ, நித்யயுக்தஸ்ய தஸ்ய யோகிந:-அந்த நித்தியமாக யோகத்தில் இசைந்திருக்கும் யோகிக்கு, அஹம் ஸுலப:-நான் எளிதில் அகப்படுவேன்.
பொருள் : நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா. ஈசன் அடியார்க்கு எளியவன். நாம் முழுமனதை அவனிடத்துத் திருப்பாமையால் அவனை அடைகிறதில்லை. பொருள் உடையவர்க்கே மேலும் பொருள் சேருவது போன்று அருள் உடையவர்க்கே மேலும் அருள் வளர்கிறது.
பகவானை நோக்கி நாம் ஓர் அடி வைத்தால் அவன் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறான்.
15. மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமஸாஸ்வதம்
நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா:
மாம் உபேத்ய-என்னையடைந்து, பரமாம் ஸம்ஸித்திம் கதா:-பரம சித்தி பெற்ற, மஹாத்மாந:-மகாத்மாக்கள், அஸாஸ்வதம் து:காலயம்-நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய புநர்ஜந்ம ந ஆப்நுவந்தி-மறு பிறப்பை யடைய மாட்டார்.
பொருள் : என்னையடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறு பிறப்பை யடைய மாட்டார்.
மனிதன் தன்னை எதற்குத் தகுதியுடையவனாக்குகின்றானோ அதைத்தான் அவன் பெறுகின்றான். பகவானைப் பெறத் தகுந்தவனுக்கு பகவான் தன்னைக் கொடுத்துவிடுகிறான். பகவானை அடைந்தவனுக்கோ பிறவிப்பிணியில்லை. இறைவனை அடைந்தவன் இன்பமே எந்நாளும், பிறப்பு எப்பொழுதும் மாறுபடும் தன்மையுடையது. பிறவி எது, பிறவாமை எது என்று கேட்குமிடத்து :
16. ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திநோऽர்ஜுந
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே
அர்ஜுந! ஆப்ரஹ்மபுவநாத்-பிரம்மலோகம் வரை, லோகா: புந: ஆவர்திந:-எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன, து கௌந்தேய-ஆனால் குந்தி மகனே! மாம் உபேத்ய-என்னை அடைந்தவனுக்கு, புநர்ஜந்ம ந வித்யதே-மறுபிறப்பு இல்லை
பொருள் : அர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.
உலகம் என்பது இங்கு ஆகுபெயர். பிரம்மலோகம் பரியந்தம் எல்லா உலகங்களுக்கும் தோற்றமும் மறைவும் இருக்கின்றன. ஆதலால் அந்த உலகங்களில் உள்ள ஜீவர்களும் பிறக்கவும் இறக்கவும் செய்கின்றனர். அத்தகைய உலகங்களில் அடையும் பேற்றுக்கு பதவி முக்தி என்று பெயர். சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம் என்று அப்பதவி பலதரப்படுகிறது. இப்பதிகள் காலத்துக்கு உட்பட்டவைகள். ஆனால் கிரம முக்தியில் போகின்றவர்கள் வழிப்போக்கர்களாகப் பிரம்மலோகத்தில் தங்குகின்றனர். அவர்கள் மண்ணுலகுக்குத் திரும்பி வருவதில்லை. ஆங்கு அவர்கள் மேலும் பரிபக்குவம் அடைந்து பரத்தினைப் பெறுகின்றனர். ஆனால் இவ்வுலகிலிருந்தே நேர் பரத்தினை அடைகின்றவர்கள் விதேக முக்தி என்னும் பேரின்பவீடு அடைகின்றனர்.
வேகவைத்த நெல்லை பூமியில் விதைத்தால் அது மறுபடியும் பயிராக முளைக்காது. அதுபோல சித்தனான பிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறு ஜன்மம் அடைவதில்லை.
பிரம்மாவின் நாள்:
17. ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது:
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ ஜநா:
ப்ரஹ்மண: யத் அஹ:-பிரம்மாவுக்கு எது ஒரு பகலோ (அது), ஸஹஸ்ர யுக பர்யந்தம்-ஆயிரம் யுகங்களைக் கொண்டது, ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தரம்-இரவும் ஆயிரம் யுகங்களைக் கொண்டது என்று, விது:-அறிகிறார்களோ, தே ஜநா: அஹோராத்ரவித:-அந்த மக்களே இரவு பகலின் தத்துவத்தை அறிந்தவர்கள்.
பொருள் : பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல் ஆயிரம் யுகம் ஓரிரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.
ஒரு வாரம் என்பதில் ஏழுநாள் அடங்கியிருப்பது போன்று, ஒரு சதுர்யுகத்தில் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களும் அடங்கியிருக்கின்றன. இப்படி ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். இன்னும் ஓர் ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது ஓர் இரவு. இப்படி ஒரு பகலும் இரவும் சேர்ந்தது பிரம்மாவுக்கு ஒருநாள். 365 நாள் சேர்ந்தது ஒரு வருஷம். நூறு வருஷம் அவருடைய பூரண ஆயுள்.
இங்ஙனம் காலமானது காலாதீதத்தில் புரண்டோடுகிறது. காலம் எல்லையில் அடங்காதது என்பதும், இடம் அல்லது வெட்டவெளி எல்லையில் அடங்காதது என்பதும் நவீன வான சாஸ்திரம் கற்பவர்களுக்கு நன்கு விளங்கும். நமக்குத் தென்படும் இந்த அண்டம் எவ்வளவு பெரியது என்று அறியுமளவு நமது மனம் அகண்டாகார விருத்தி பெறும். நாம் பற்றுவைத்துள்ள இச்சிறு உடலும் உலகும் மிக அற்பமானவை என்பது அப்பொழுது விளங்கும்.
18. அவ்யக்தாத்வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே
அஹராகமே-பிரம்மாவின் பகல் தொடங்கும் போது, ஸர்வா: வ்யக்தய:-எல்லா விதமான சராசர தொகுதிகளும், அவ்யக்தாத் ப்ரபவந்தி-மறைவுபட்ட உலகத்தினின்றும் வெளிப்படுகின்றன, ராத்ர்யாகமே-இரவு வந்தவுடன், தத்ர அவ்யக்த ஸம்ஜ்ஞகே ஏவ-அந்த மறைவுலகத்திலேயே, ப்ரலீயந்தே-மீண்டும் மறைகின்றன
பொருள் : அவ்யக்தம்,அதாவது, மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்துவிடுகின்றன.
ஒவ்வொரு ஜீவனும் உறங்கப்போகும் பொழுது அவனது உலகம் அவனது உள்ளத்தில் ஒடுங்குகிறது; விழித்து எழுங்கால் அவனது உலகமும் விரிகிறது. அதே போன்று பிரம்மாவின் உறக்க விழிப்பில் அகிலாண்டங்களும் மறையவும் தோன்றவும் செய்கின்றன. இத்தோற்றமும் ஒடுக்கமும் சிருஷ்டி, சம்ஹாரம் எனவும் பெயர் பெறுகின்றன. ஒரு பிரம்மாவுக்கு இங்ஙனம் ஆயுள் முடியும்போது அவர் கிரம முக்தியடைகிறார்.
ஜீவன் ஒருவன் ஜீவபோதத்தில் இருந்துகொண்டே அடையும் பதவிகளில் தலையாயது பிரகிருதி லயம் என்பது. ஒரு பிரம்மா முக்தியடைந்த பிறகு பிரகிருதி லயத்தின் மூலம் அவருக்கு அடுத்தபடி அப்பதவிக்குத் தகுதியாயிருப்பவர் அந்த ஸ்தானத்திற்கு அவரைப் பின்பற்றுகிறார்.
19. பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே
ராத்ர்யாகமேऽவஸ: பார்த ப்ரபவத்யஹராகமே
பார்த ஸ: ஏவ அயம்-அர்ஜுனா! அதே இந்த, பூதக்ராம:-உயிரினங்களின் தொகுதிகள், பூத்வா பூத்வா அவஸ:-மீண்டும் மீண்டும் தன் வசமின்றியே, ராத்ர்யாகமே ப்ரலீயதே-இரவு வந்தவுடன் அழிகிறது, அஹராகமே ப்ரபவதி-பகல் வந்தவுடன் பிறக்கிறது.
பொருள் : இந்த பூதத் தொகுதி ஆதியாகித் தன் வசமின்றியே இரவு வந்தவுடன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.
கரும வசப்பட்டிருப்பதால் உயிர் வகைகளுக்குத் தன்வசம் என்பது இல்லை. கரும வசத்தால் அவைகள் கற்பாந்தரத்தில் மறையவும் கற்பாரம்பத்தில் தோன்றவும் செய்கின்றன. பல கற்பங்களுக்குப் பிறகும் அவரவர் கர்மமே அவரைத் தொடர்ந்து வருகிறது.
20. பரஸ்தஸ்மாத்து பாவோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதந:
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நஸ்யத்ஸு ந விநஸ்யதி
து தஸ்மாத் அவ்யக்தாத்-ஆனால் அந்த அவ்யக்தத்தை காட்டிலும், பர: அந்ய: நாதந:-மிகவும் உயர்ந்த வேறான சாஸ்வதமான, அவ்யக்த: பாவ: ய:-வெளிப்படாத தன்மையுடன் எது இருக்கிறதோ, ஸ: ஸர்வேஷு பூதேஷு நஸ்யத்ஸு-அது எல்லா உயிர்களும் அழிகையில்,
ந விநஸ்யதி-அழிவதில்லை.
பொருள் : அவ்யக்ததினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது
பிரம்மா உட்பட தோன்றியுள்ள அனைத்தும் தோன்றா நிலைக்கும் போகும்பொழுது அவ்யக்தம் என்று பெயர் பெறுகிறது. நீரானது ஆவியாகும் பொழுது கட்புலனாவதில்லை. அங்ஙனம் பிரம்மாவின் சிருஷ்டி மறையும்பொழுது புலன்களுக்குத் தென்படுவதில்லை; அவித்தையில் மறைந்து கிடக்கின்றது. மற்றொரு அவ்யக்தம் இதற்கு அன்னியமாக, பரமாக, ஸநாதனமாக இருக்கிறது. அது இந்திரியங்களுக்கு எப்பொழுதுமே எட்டுவதில்லை. வந்துள்ள உயிர்களுக்குப் போக்கு இருக்கிறது. அதீத அவ்யக் தமோ போக்கும் வரவும் இல்லாதது. என்றென்றைக்கும் அது தன்மயமாயிருக்கிறது.
அதன் சொரூபம் எத்தகையது என்று மேலும் ஆராயுமிடத்து:
21. அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம்
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம
அவ்யக்த: அக்ஷர: இதி உக்த:-அவ்யக்தம் அழிவற்றதெனப்படும், தம் பரமாம் கதிம் ஆஹு:-அதனையே பரமகதி யென்பர், யம் ப்ராப்ய ந நிவர்தந்தே-எதை எய்திய பின் மீள்வதில்லையோ, தத் மம பரமம் தாம-அது என்னுடைய பரம பதம் (உயர்ந்த வீடு).
பொருள் : அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.
அவ்யக்தம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாதது. அக்ஷரம் என்றால் பழுதுபடாதது.
பரப்பிரம்மம் எப்பொழுதுமே இந்திரியங்களுக்கு எட்டாததாகவும் பழுதுபடாததாகவும் இருக்கிறது. தோன்றா நிலையிலுள்ள பிரகிருதியும் அவ்யக்தம் என்று சொல்லப்படுகிறது. பரப்பிரம்மமும் அவ்யக்தமென்று சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டுக்குமுள்ள பொருள் வேற்றுமையைக் கருத்தில் வைக்க வேண்டும். பிரகிருதி க்ஷரம் அல்லது அழியும் தன்மையது. பிரம்மமோ அக்ஷரம். பிரகிருதியில் ஒடுங்குபவைகள் திரும்பவும் தோன்றுகின்றன. பிரம்மத்தில் ஒடுங்குபவைகள் தோற்றத்துக்குத் திரும்பி வருவதில்லை. பிரம்மத்துக்கு ஒப்பானது வேறு எதுவும் இல்லையாதலால், அது பரமபதம் எனப்படுகிறது.
அதை அடையும் வழி:
22. புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா
யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்
பார்த பூதாநி யஸ்ய அந்த: ஸ்தாநி-அர்ஜுனா எவனுள்ளே எல்லா உயிர்களும் இருக்கின்றனவோ, யேந இதம் ஸர்வம் ததம்-எவனால் இவை எல்லாம் நிறைந்திருக்கின்றதோ,
ஸ: பர: புருஷ: து-அந்த பரம புருஷன், அநந்யயா பக்த்யா-வேறிடஞ் செல்லாத பக்தியால்,
லப்ய-அடையப் படுவான்.
பொருள் : வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.
அனன்ய பக்தி என்பது வேறு ஒன்றையும் நினையாது அவனிடத்திலேயே செலுத்தும் பக்தி. இதை ஆத்ம சொரூபானு சந்தானம் என்பர். கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. ஆனால் அம்மலைகளுள் கடல் ஊடுருவிப் பாய்ந்து வியாபகமாயில்லை. ஸ்தூல வஸ்துவுக்கு வியாபகமும், தன்னகத்து அனைத்தையும் அடக்கும் வல்லமையும் இல்லை. ஆகாசத்தில் ஏனைய பூதங்களெல்லாம் அடங்கியிருக்கின்றன. மண், புனல், தீ, காற்று ஆகிய பூதங்களில் ஆகாசமானது நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறது. அங்ஙனமே சிதாகாசமாகிய பரம்பொருளில் சரம், அசரம் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. மேலும் அந்த சிதாகாசம் ஒன்றே எல்லாப் பொருள்களுக்கும் பிரிவற நிறைந்திருக்கின்றது.
கடவுள் எல்லாரிடத்திலும் இருக்கிறார். ஆனால் எல்லாரும் கடவுளிடத்து இல்லை.
23. யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகிந:
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப
பரதர்ஷப-பரதர் ஏறே! யத்ர காலே ப்ரயாதா யோகிந:-எக்காலத்தில் இறப்பதால் யோகிகள்,
அநாவ்ருத்திம் ச ஆவ்ருத்திம் ஏவ யாந்தி-மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ,
தம் காலம் வக்ஷ்யாமி-அக்காலத்தைச் சொல்லுகிறேன்.
பொருள் : யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.
24. அக்நிர்ஜ்யோதிரஹ: ஸுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா:
அக்நி: ஜ்யோதி: அஹ:-தீ, ஒளி, பகல், ஸுக்ல: உத்தராயணம் ஷண்மாஸா-சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள், தத்ர ப்ரயாதா ப்ரஹ்மவித: ஜநா:- இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள், ப்ரஹ்ம: கச்சந்தி-பிரம்மத்தை அடைகிறார்கள்.
பொருள் : தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள்.
25. தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம்
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே
தூம: ராத்ரி: ததா க்ருஷ்ண:-புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயநம் ஷண்மாஸா -தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள் இவற்றில் இறக்கும், தத்ர யோகீ சாந்த்ரமஸம் ஜ்யோதி ப்ராப்ய-அந்த யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து, நிவர்ததே-மீளுகிறான்.
பொருள் : புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.
26. ஸுக்லக்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஸாஸ்வதே மதே
ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந:
ஹி ஜகத: ஏதே ஸுக்ல க்ருஷ்ணே கதீ-ஏனெனில் உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும், ஸாஸ்வதே மதே-சாசுவதமாகக் கருதப்பட்டன, ஏகயா அநாவ்ருத்திம் யாதி- இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான், அந்யயா: புந: வர்ததே-மற்றொன்று மீளும் பதந் தருவது.
பொருள் : உலகத்தில் எந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந் தருவது.
24,25,26 இம்மூன்று சுலோகங்களின் உட்கருத்து சிந்தனைக்குரியது. மரணத்தின் வாயிலாக மறுபிறப்புக்குப் போம் ஜீவர்கள் தேவயானம், பித்ருயானம் என்னும் இரண்டு மார்க்கங்களில் செல்லுகின்றனர். அவைகளை முறையே ஜோதிர் மார்க்மென்றும் தூம மார்க்கமென்றும் பகர்வதுண்டு. முந்தையது ஒளி நிறைந்தது; பிந்தியது இருள் சூழ்ந்தது. ஒன்று படிப்படியாக ஜீவனை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவல்லது. மற்றது மனிதனை நெடுங்காலம் இடைநிலையிலும் கடைநிலையிலும் வைத்துவிடுகிறது. இனி, இவ்விரண்டு மார்க்கங்களுக்கு இந்தச் சுலோகங்களில் வந்துள்ள பதங்களுக்கு வாச்சியார்த்தம் எடுத்துக்கொண்டால் குறைபாடுகள் பல தென்படும். எப்படியென்று ஆராய்ந்து பார்ப்போம். அக்னி, ஜோதி நிறைந்த சூழ்நிலையில் மரணமடைபவன் மேன்மையடைகிறான். புகையில் மூடுபட்டு மறைபவன் கீழ்மையடைகிறான். ஒருவன் உயிர் துறக்கும்போது வீட்டில் கொழுந்துவிட்டு எரியும் அக்னியும் மின் விளக்கு ஜோதியும் நிறைந்திருக்கும்படி சுலபத்தில் செய்துவிடலாம். ஆனால் அதை முன்னிட்டு மறுபிறப்பில் மேன்மை வந்தமைகிறது என்பது யுக்திக்கும் அனுபவத்துக்கும் சிறிதும் பொருந்தாது. அடுத்தபடியாகப் பகலில் சாகின்றவனுக்கு ஜோதிர் மார்க்கமென்றும் இரவில் சாகின்றவனுக்கு தூம மார்க்கமென்றும் சொல்லப்படுகிறது. இன்றைக்கு ஆகாய விமானத்தின் துணைகொண்டு என்றென்றும் சூரியன்தென்படுகிற இடங்களில் சென்று வசிக்கலாம். பின்பு, அதை முன்னிட்டு மேலாம் பிறவி வருகிறது என்பது பொருந்தாது. வளர்பிறையில் வரும் சுக்ல பக்ஷம் மேன்மைக்குரியது; தேய்பிறையில் வரும் கிருஷ்ணபக்ஷம் கீழ்மைக்குரியது. இந்த ஒரு சூழ்நிலையை வெல்ல நவீனத்தில் அமைந்துள்ள உபாயம் எதுவும் உதவாது. இனி, உத்தராயணம் சூரிய வெளிச்சம் நிறைந்தது; தக்ஷிணாயனம் இருள் நிறைந்தது. ஆனால் ஆகாய விமானத்தின் துணைகொண்டு மனிதன் தக்ஷிணாயன காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் போய்விடுவானானால், அதே தக்ஷிணாயனம் அவனுக்குப் புண்ணிய காலம் ஆய்விடும். ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொழுது ஆங்கு அதிகமாக இருக்கிறது. ஆக மனிதன் அடையும் மேன்மையும் கீழ்மையும் மரணத்தின்போது அவனுக்கு அமையும் காலத்தையும், இடத்தையும், சூழ்நிலையையும் முன்னிட்டு அல்ல என்பது வெளியாகிறது.
வெளிச்சத்துக்கு அறிகுறியாகும் காலம், இடம்; இருளுக்கு அறிகுறியாகும் காலம், இடம் ஆக இருவகையாக அவை பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டும் ஆத்ம தத்துவத்துக்கு ரூபகமாக அமைந்தவையாகும். படிப்படியாக மேல் நிலைக்குப் போகும் ஜீவன் ஆத்மப் பிரகாசம் அடைகிறது. முன்னேற்றமடையாது இருந்தபடி இருக்கும் ஜீவனும் படிப்படியாகக் கீழ் நிலைக்குப் போகும் ஜீவனும் அக்ஞான இருளில் மறைபவையாகின்றன. வாழ்நாளில் ஒரு ஜீவன் அடைந்துள்ள மேன்மையை அல்லது கீழ்மையை அவனது மரணம் விளக்கும். அணையும் போது தீபம் அதிகம் சுடர் விடுவதுண்டு. நல்லார் அங்ஙனம் உடல் நீங்கும்போது பிரக்ஞை தெளிவடைவதுண்டு. பிரக்ஞையின் தெளிவுக்கு ஏற்றவாறு அதை அக்னி, ஜோதி, பகல், சுக்ல பக்ஷம், உத்தராயணம் என்று யோகிகள் இயற்கையோடு ஒப்பிட்டு வகைப்படுத்தினார்கள். அதேபாங்கில் பிரக்ஞையின் மறைவுக்கு ஏற்றபடி புகை, இரவு, கிருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயனம் என்று அவர்கள் வகைப்படுத்தினார்கள். பல ஜன்மாந்தரங்களில் மேலும் மேலும் ஆத்மஞானப் பிரகாசம் அடைபவர் மேலோர், மற்றவர்கள் கீழோர் என்பது இதன் கோட்பாடாகும்.
27. நைதே ஸ்ருதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஸ்சந
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந
பார்த! ஏதே ஸ்ருதீ ஜாநந்-பார்த்தா! இவ் வழிகளிரண்டையும் உணர்ந்த, கஸ்சந யோகீ முஹ்யதி-எந்த யோகியும் மயக்கமுறுவதில்லை, தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு-ஆதலால் எப்போதும் யோகத்தில், யோக யுக்த: பவ-யோகத்தில் கலந்திரு.
பொருள் : இவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுன, எப்போதும் யோகத்தில் கலந்திரு.
குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் யோக சாதனம் பயிலுதல் என்பதன்றி, எத்தொழிலைச் செய்தாலும், யாதவஸ்தைப்பட்டாலும் அவைகளுக்கெல்லாம் இடையில் யோகபரனாய். ஸகஜ நிஷ்டையில் இருப்பவன் மேலே சொல்லிய இரண்டு வழிகளில் சுக்ல கதி அல்லது ஜோதிர் மார்க்கத்தில் செல்பவனாகின்றான்.
கப்பல் எத்திசையில் போய்க்கொண்டிருந்தாலும் அதில் உள்ள திசைகாட்டி முள் வடதுருவத்தையே நோக்கி நிற்கிறது. அங்ஙனம் மனிதன் எதைச் செய்துகொண்டிருந்தாலும் அவனது மனது யாண்டும் சர்வேசுவரனிடத்தே நிலைத்திருக்கட்டும்.
28. வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ
தாநேஷு யத் புண்யபலம் ப்ரதிஷ்டம்
அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா
யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம்
யோகீ இதம் விதித்வா-யோகி இதனை யறிவதால், வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு தாநேஷு ச-வேதங்களிலும், யாகங்களிலும், தவங்களிலும், தானங்களிலும், யத் புண்யபலம் ப்ரதிஷ்டம்-எந்த புண்ணியத்தின் பயன் சொல்லப் பட்டிருக்கிறதோ, தத் ஸர்வம் அத்யேதி-அவை அனைத்தையும் கடந்து செல்கிறான், ச ஆத்யம் பரம் ஸ்தாநம் உபைதி-மேலும் ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.
பொருள் : இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அர்ஜுனன் கேட்ட ஏழு கேள்விகளுக்கும் விடைகளாக வந்த இதை அறிபவன் அக்ஷர பிரம்மத்தை அறிபவன் ஆகிறான். முறையாக வேதங்களை ஓதி, யாகங்களைச் செய்து, தவம் புரிந்து தானத்தை வழங்குவதினின்று விளையும் புண்ணிய கர்மபலனாகிய சுவர்க்காதி பதவிகளைப் பெறுவதைவிட மேலானதாகிற பிரம்ம சாக்ஷõத்காரம் அந்த யோகிக்கு ஏற்படுகிறது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
அக்ஷரப்ரஹ்மயோகோ நாம
அஷ்டமோ அத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் அக்ஷரப்ரஹ்ம யோகம் என்ற எட்டாம் அத்தியாயம்.
-
ஒன்பதாம் அத்தியாயம்
ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். பின்வரும் கடவுள் பெருமைகளையும் நன்குணர வேண்டும்:- கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். உலகமனைத்தும் அவரிடத்திலேயே நிலைபெற்று நிற்கிறது. பிரளய காலத்தில் உலகங்கள் அனைத்தும் அவற்றின் முதற் கிழங்காகிய பிரகிருதியில் மறைகின்றன. சிருஷ்டி காலத்தில் கடவுள் அவைகளைப் பிரகிருதியினின்றும் வெளிப்படுத்துகிறார். உலகத்திற்கு இறைவனும், இருப்பிடமும், சரணும், தோழனும் கடவுளே. பக்தர்கள் தங்கள் செயல்களனைத்தும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.
மற்ற விஷயங்களைத் துறந்து கடவுளையே தியானம் செய்பவன் எத்தகைய கொடிய பாவியாயினும் நல்லோன் என்றே கருதப்பட வேண்டும். கடவுளிடத்திலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். கடவுளையே நேசிக்க வேண்டும். கடவுளையே வணங்க வேண்டும். இப்படி இருப்பவன் கடவுளையே அடைவான்.
சகுண பிரம்மத்துக்கும் பிரகிருதிக்குமுள்ள தொடர்வு 1-10 -அறிவிலிகளது தரம் 11-12 -பக்தர்களது போக்கு 13-15 -அனைத்துமாயிருப்பவன் ஈசன் 16-19 -போகப்பிரியர்களின் பாங்கு 20-21 -வந்தனைக்கேற்ற விளைவு 22-25 -இறைவணக்கம் மிக எளிது 26-28 -நடுநிற்கும் இறைவன் இறைஞ்சுவார்க்கு எளியன் 29-34.
ஸ்ரீபகவாநுவாச
1. இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்
ஸ்ரீபகவாநுவாச-கடவுள் சொல்லுகிறான், யத் ஜ்ஞாத்வா து-எதை தெரிந்து கொள்வதாலேயே, அஸுபாத் மோக்ஷ்யஸே-தீமையில் இருந்து (துக்கவடிவமான உலகியலில் இருந்து) விடுபடுவாயோ, குஹ்யதமம்-ரகசியமான விஞ்ஞானத்துடன் கூடிய, இதம் ஜ்ஞாநம்-இந்த ஞானத்தை, அநஸூயவே தே-அசூயை யற்றவனாகிய உனக்கு, விஜ்ஞாநஸஹிதம் ப்ரவக்ஷ்யாமி-விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன்.
பொருள் : கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.
அசுபம் என்பது பிரபஞ்ச வாழ்க்கையிலிருந்து வருகிற கேடு. அக்ஞானமே அசுபம் அனைத்துக்கும் காரணமாகும். வெறும் வாசாஞானமல்லாது சுவானுபவத்தோடு கூடிய ஞானமே கேடுகளையெல்லாம் நீக்கவல்லது.
அசூயை அல்லது பொறாமை என்பது மற்றவர் அடையும் மேன்மையைக்கண்டு சகிக்கமுடியாதிருப்பதாம். ஆனால் மற்றவரை மகிழ்ச்சியோடு மேன்மைப்படுத்துகிற அளவு, மற்றவர் முன்னேற்றத்தில் முயற்சி கொள்ளுமளவு ஒருவன் தானும் மேன்மையடைகிறான். பொறாமையானது மனத்தகத்துப் பெரு நோயாயமைந்து மனிதனது சிறப்பையெல்லாம் அழித்துவிடுகிறது. இம்மையிலும் மறுமையிலும் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாயிருப்பது பொறாமை. அர்ஜுனன் பொறாமை யென்னும் நோய்க்கு இடங்கொடாத நல்ல மனமுடையவனாதலால் அவன் ஞான விக்ஞானத்துக்குத் தகுதியுடையவனாகிறான்.
அந்த ஞானத்தின் சிறப்பு வருமாறு :
2. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம்
ப்ரத்யக்ஷõவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம்
இதம்-இது, ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் உத்தமம்-ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது, ப்ரத்யக்ஷõவகமம்-கண்ணெதிரே காண்டற்குரியது, தர்ம்யம்-அறத்துக் கிசைந்தது, ஸுஸுகம் கர்தும்= செய்தற்கு மிக எளிது, அவ்யயம்-அழிவற்றது.
பொருள் : ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது.
யோகங்களுள் சிறந்தது ராஜயோகம் என்று பெயர் பெறுகிறது. அங்ஙனம் வித்தைகளுள் பிரம்மவித்தைக்கு ராஜவித்தை என்ற பெயர் வருகிறது. ராஜ மார்க்கத்தில் (பொது வழியில்) எல்லார்க்கும் செல்ல உரிமையிருப்பதுபோன்று பிரம்ம ஞானத்துக்கு ஜீவர்கள் எல்லார்க்கும் உரிமையுண்டு. ஆனால் பொறாமை முதலிய தோஷங்களினின்று மனபரிபாகம் அடையாதவர்களுக்கு இது ராஜ குஹ்யம். அதாவது ராஜ ரகசியம் அல்லது மிக மறைபொருள் ஆய்விடுகிறது. நீரானது உடலைத் தூயதாக்குவது போன்று பிரம்ம ஞானம் மனிதனைத் தூயவனாக்குகிறது. பிரம்ம ஞானி தானே பிரம்மம் ஆகிறபடியால், தூய்மை தருதலில் இது தலைசிறந்தது (உத்தமம் பவித்ரம்) ஆகிறது.
துக்கத்துக்கு ஏதுவான கனவு ஒன்றை ஒரு மனிதன் காண்கிறான். அங்ஙனம் கனவு கண்டுகொண்டிருக்கும் போது, அவனது துக்கத்துக்கு நிவர்த்தி கிடையாது. ஆனால் விழிப்பு என்னும் ஞானம் உதயமானால் கனவில் தோன்றிய துன்பமெல்லாம் முற்றும் அடிபட்டுப் போகிறது. பிரம்ம ஞானம் என்னும் விழிப்பு மனிதனுக்கு உண்டானால் பிறவிப் பெருங்கடலில் அவனுக்கு உண்டாகும் துன்பத்தை யெல்லாம் அது துடைத்துத் தள்ளுகிறது. இந்த ஞானத்துக்கு ஒப்ப மனிதன் வாழ்வானாகில், அவனுடைய செயலெல்லாம் தர்ம மயமாகிறது. நிலத்தில் துள்ளும் மீன் சேற்றினுள்ளும் நீரினுள்ளும் செல்வது எளிதாவது போன்று, தர்மத்தைக் கடைப்பிடித்து ஞானத்தை அடைபவனுக்குத் தன் சொரூபமாகிய பேரானந்தம் கிட்டுகிறது. ஆக, அது (கர்த்தும் ஸுஸுகம்) செய்தற்கு மிக எளியதாகிறது. எளிதில் அகப்பட்டது எளிதில் போய்விடுமோ என்ற ஐயம் வரலாம். ஆனால் மனிதன் அடைந்த பிரம்ம ஞானம் (அவ்யயம்) அழிவற்றது; காலத்தையும் கடந்த பெரு நிலையாம் அது.
ஆனால் யாருக்கு அது கிட்டுவதில்லை எனின் :
3. அஸ்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி
பரந்தப-பகையைச் சுடுவோய், அஸ்ய தர்மஸ்ய-இந்த அறத்தில், அஸ்ரத்ததாநா: புருஷா-நம்பிக்கையற்ற மனிதர், மாம் அப்ராப்ய-என்னை அடையாமல், ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி-நரக சம்சாரப் பாதைகளில், நிவர்தந்தே-மீளுகின்றனர்.
பொருள் : பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர்.
நிலத்திலே துள்ளி வீழ்ந்து வருந்துகின்ற மீனானது அருகில் நீர் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாவிட்டால், அந்நீருக்குள்ளே அது திரும்பித் துள்ளிக் குதிக்காவிட்டால், அது படும் துயரத்துக்கு முடிவில்லை. மனிதனுக்கு சர்வதுக்க நிவர்த்தி செய்வது பரஞானம். அதற்கு ஏதுவான நெறியைச் சிரத்தையுடன் பின்பற்றுதல் வேண்டும். அப்படிப் பின்பற்றாதவர்கள் பிறவிப் பிணியில் வருந்துவார்கள்.
4. மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா
மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித:
அவ்யக்தமூர்திநா-அவ்யக்த வடிவாய், மயா-என்னால், இதம் ஸர்வம் ஜகத்-இந்த அனைத்து உலகம் முழுவதும், ததம்-சூழ்ந்திருக்கிறேன், ஸர்வபூதாநி மத்ஸ்தாநி-பூதங்களெல்லாம் என்னிடத்தே நிலைபெற்றன, அஹம் தேஷு அவஸ்தித:-நான் அவற்றில் நிலை பெற்று இருக்கவில்லை.
பொருள் : அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை.
கடலில் அலைகளெல்லாம் அடங்கப்பெற்றிருப்பது போன்று பிரம்மா முதல் புல் பரியந்தம் உள்ள பூதங்களெல்லாம் பரமாத்மாவில் அடங்கியிருக்கின்றன. பாத்திரத்தில் நீர் இருப்பது போன்று பரமாத்மா உயிர்களிடத்து அடங்கப்பெறாதவர். ஆகாசம் போன்று அனைத்திடத்தும் ஊடுருவி அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்.
5. ந ச மத்ஸ்தாநி பூதாநி பஸ்ய மே யோகமைஸ்வரம்
பூதப்ருந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந:
பூதாநி ந மத்ஸ்தாநி ச-பூதங்கள் என்னுள் நிலை பெறுவன அல்ல, மே ஐஸ்வரம் யோகம் பஸ்ய-இந்த ஈஸ்வரத் தன்மையுடைய யோக சக்தியை பார், பூதப்ருத் ச-பூதங்களைத் தாங்குபவனும், பூதபாவந: ச-பூதங்களை உண்டாக்குகிறவனாக இருந்த போதிலும், மம ஆத்மா-என் ஆத்மா, பூதஸ்த: ந-உயிரினங்களில் நிலை பெற்று இருப்பதில்லை.
பொருள் : (மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது. அத்தியாயம் ஏழு, சுலோகம் பன்னிரண்டுக்குத் தந்துள்ள விளக்கத்தைப் பார்க்கவும்.
பிரம்மம் அசங்கனாதலால் ஒன்றிலும் பற்றுவைப்பதில்லை.
6. யதாகாஸஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந்
ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய
ஸர்வத்ரக: மஹாந் வாயு:-எங்கும் செல்கின்ற, பெருங்காற்று, யதா நித்யம் ஆகாஸஸ்தித:-எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, ததா ஸர்வாணி பூதாநி-அவ்வாறே எல்லா பொருட்களும், மத்ஸ்தாநீ இதி உபதாரய-நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்.
பொருள் : எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்.
வாயு முதலிய நான்கு பூதங்கள் ஆகாசத்தில் நிலைத்திருந்தாலும் அதில் அவைகள் ஒட்டுவதும் இல்லை, ஒரு மாறுதலையாவது உண்டுபண்ணுவதும் இல்லை. அங்ஙனம் பிரம்மத்தின் மாயாகாரியங்களெல்லாம் பிரம்மத்தில் நிலைத்திருந்தும் அதன் கண் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஆகாச தத்துவத்தைத் தெரிந்துகொள்ளுதல் பிரம்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுகிறது.
காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.
7. ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம்
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம்
கௌந்தேய-குந்தி மகனே, கல்பக்ஷயே ஸர்வபூதாநி-கல்ப முடிவில் எல்லா உயிர்களும், மாமிகாம் ப்ரக்ருதிம் யாந்தி-என் இயல்பை எய்துகின்றன, கல்பாதௌ தாநி புந:-மறுபடி கல்பத்தின் துவக்கத்தில் அவற்றை மீண்டும், அஹம் விஸ்ருஜாமி-நான் படைக்கிறேன்.
பொருள் : குந்தி மகனே, கர்ப்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கர்ப்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.
பிரம்மாவுக்கு இரவு வரும்பொழுது பிரளயம் அல்லது கற்பத்தின் முடிவு ஏற்படுகிறது. அவருக்குப் பகல் ஆரம்பிக்கும் பொழுது சிருஷ்டி அல்லது கற்பத் துவக்கம் ஏற்படுகிறது. பிரகிருதி என்பது முக்குண மயமான அபர பிரகிருதியாம்.
8. ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந:
பூதக்ராமமிமம் க்ருத்ஸ்நமவஸம் ப்ரக்ருதேர்வஸாத்
ப்ரக்ருதே: வஸாத்-இயற்கையின் வசத்தால், அவஸம் இமம் க்ருத்ஸ்நம் பூதக்ராமம்-தன் வசமிழந்த இந்த அனைத்து உயிர் தொகுதிகளையும், புந: புந:-திரும்ப திரும்ப, ஸ்வாம் ப்ரக்ருதிம் அவஷ்டப்ய- என்னுடைய இயற்கையின் வசத்தால் ஏற்றுக் கொண்டு, விஸ்ருஜாமி-படைக்கிறேன்.
பொருள் : என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.
அஷ்டப்ய என்பது உயிர் ஓங்கச் செய்து அல்லது அருளுடையதாகச் செய்து என்று பொருள்படுகிறது. பூமியைச் சாரமுடையதாகச் செய்கிறான் கிருஷிகன். தூங்கினவன் விழித்தெழுந்து, தன் உடலில் ஒவ்வொரு உறுப்பையும் முறுக்கி உறுதியாக்குகிறான். மாணாக்கனது உள்ளத்தினின்று கல்வி கிளம்பும்படி ஆசிரியன் துணைபுரிகின்றான். இச் செயல்கள் யாவும் அவஷ்டம்பனம் என்னும் சொல்லுக்குப் பொருளாகின்றன. இங்ஙனம் ஈசுவரனுடைய முன்னிலையில் பிரகிருதியாகிய தாய்க்கு வல்லமை அல்லது அருள் சுரக்கிறது. அவ் அருளைக்கொண்டு அவள் உலகனைத்தையும் இயக்குகின்றான். அது ஈசன் செயல் எனப்படுகின்றது. ஆனால் அதைப்பற்றிய உண்மை என்னவெனில் :
9. ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய
உதாஸீநவதாஸீநமஸக்தம் தேஷு கர்மஸு
தநஞ்ஜய-தனஞ்ஜயா! தேஷு கர்மஸு-அந்த தொழில்களில் (கர்மங்களில்), அஸக்தம்-பற்றில்லாமலும், தாநி கர்மாணி-அந்த செயல்கள், உதாஸீநவத் ஆஸீநம் ச-(ஒதுங்கி) மேற்பட்டவன் போல் இருக்கின்ற, மாம் ந நிபத்நந்தி-என்னை கட்டுப் படுத்துவதில்லை.
பொருள் : தனஞ்ஜயா, என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன்.
ஜகத் சிருஷ்டியில் நானாவகைக் கர்மங்களும் அடங்கியிருக்கின்றன. அவைகளில் பற்றுவிட்டவரே உதாஸீனர் ஆகின்றார். ஈசுவரன் அந்நிலையில் நிலைத்திருப்பதால் அவருடைய பிரகிருதி செய்யும் இத்தனைவிதக் கர்மங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை.
தான் கர்த்தாவென்று ஈசுவரன் அஹங்கரிக்காதிருப்பது போன்று, சாதகன் புரியும் வெவ்வேறு கர்மங்களுக்கிடையே தான் கர்த்தாவென்ற உணர்ச்சி நீங்கப்பெற்று நடுநிலையில் இருப்பானாகில் இருள் சேர் இருவினையும் அவனை வந்து சாரா.
நான் என்பது இறந்தால் துன்பமெல்லாம் தொலையும். ஈசுவர கிருபையால் என் செயலாலாவது யாதொன்றுமில்லை என்னும் கொள்கை மனதில் ஸ்திரமாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்த ஜன்மத்திலேயே முக்தியுண்டாகும்.
10. மயாத்ய÷க்ஷண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம்
ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே
கௌந்தேய-குந்தி மகனே,அத்ய÷க்ஷண மயா-தலைவனான என்னால் (என் மேற்பார்வையில்), ப்ரக்ருதி: ஸசராசரம்-ப்ரக்ருதியானது அசைவன, அசையாதன எல்லாம், ஸூயதே-தோற்றுவிக்கிறது. அநேந ஹேதுநா-இந்த காரணத்தால், ஜகத் விபரிவர்ததே-உலகமே சுழல்கிறது.
பொருள் : என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது.
7 முதல் 10 வரை நான்கு சுலோகங்களில் உலக நடைமுறைக்கும் தமக்கும் உள்ள தொடர்வு எத்தகையது என்பதை பகவான் நன்கு விளக்குகிறார். அதற்கு அருந்ததி நியாயம் கையாளப்படுகிறது. அதாவது ஒரு மரம், அதில் ஒரு கிளை, அதற்குப் பின் வானத்தில் ஒரு பெரிய மீன், அதற்குப் பக்கத்தில் உள்ள சிறு மீன்கள், அவைகளுக்கிடையில் நுண்ணியதாகத் தென்படுவது அருந்ததி நக்ஷத்திரம். இங்ஙனம் தெரிந்த பருப்பொருளிலிருந்து தெரியாத நுண்பொருளுக்குப் போதல் அருந்ததி நியாயமாகும். 7-வது சுலோகத்தில் நான் சிருஷ்டிக்கிறேன் என்கிறார்; 8-வது சுலோகத்தில் பிரகிருதியைக்கொண்டு அக் காரியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்; 9-வது சுலோகத்தில் நடுவுநிலை வகிக்கின்ற தம்மைப் பிரகிருதியின் அச்செயல் தளைப்பதில்லை என்கிறார்; 10-வது சுலோகத்தில் தாம் சாக்ஷியாய் வீற்றிருந்து கண்காணிக்கையில், தமது சன்னிதான விசேஷத்தால் பிரகிருதிக்கு ஜகத் காரியங்களைச் செய்யும் வல்லமை வந்தமைகிறது என்கிறார். சூரியனுடைய முன்னிலையில் சூரிய கிரணங்களால் பொருள்கள் பரிணமிப்பது போன்று, ஈசுவரனுடைய முன்னிலையில் அவனுடைய மாயா சக்தியால் உலகனைத்தும் உரு எடுப்பனவாகின்றன.
அத்யக்ஷன் என்பது சபாபதி அல்லது கண்காணிப்பவன் என்று பொருள்படுகிறது. உலக நடைமுறைக்கு இறைவன் சபாபதியாகின்றான். அரசன் சிங்காசனத்தில் வீற்றிருக்கையில் சிப்பந்திகள் தம் தொழில்களைப் புரிவது போன்று, பரமாத்மாவின் முன்னிலையில் பிரகிருதியானது அண்டங்களை இயக்கவல்ல உயிரையும் அருளையும் பெற்றுத் தொழில் புரிகிறது.
11. அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஸ்ரிதம்
பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஸ்வரம்
மம பரம் பாவம்-என்னுடைய மேலான இயல்பை, அஜாநந்த: மூடா-அறியாதவர்களான மூடர்கள், மாநுஷீம் தநும்-மனித உடலை, ஆஸ்ரிதம் பூதமஹேஸ்வரம்-தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான, மாம் அவஜாநந்தி-என்னை புறக்கணிக்கிறார்கள்.
பொருள் : மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.
கர்மத்தில் கட்டுப்படாதவன் வடிவத்திலும் கட்டுப்படுவதில்லை. ஜடாகாசத்தை எப்பொருளும் சிதைப்பதில்லை. பின்பு, அதற்கப்பாலுள்ள சிதாகாசம் சிதைவுபடுகிறது என்பது பொருந்தாது. அது நித்ய-சுத்த-புத்த-முக்த-ஸ்வபாவமுடையது. எல்லார்க்கும் பொதுவாக அந்தர்யாமியாயிருக்கின்ற பரமாத்மா உடலில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை மக்களுக்குக் காட்டுதற் பொருட்டே ஓர் அவதார புருஷராக தேகத்தைத் தரிக்கிறார். இதை அறியாதவர் அவரை அவமதிக்கின்றனர்.
யானைக்கு வெளியே தோன்றும் தந்தமும் உள்ளே இருக்கும் பற்களுமாக இரண்டுவகைப் பற்களிருக்கின்றன. அவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா போன்ற அவதார புருஷர்கள் சாதாரணமான வெளித்தோற்றம் உள்ளவர்களாய், எல்லாருடைய பார்வைக்கும் மனுஷ்ய ரீதியை உடையவர்களாகப் புலப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் கர்மவசத்துக்கு வெகுதூரம் அப்பாற்பட்டவர்களாகிப் பரமசாந்தியில் நிலைத்திருக்கின்றனர்.
அவதார புருஷர்களை அவமதிக்கின்றவர்களது இயல்பு எத்தகையது எனின்:
12. மோகாஸா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ:
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்ரிதா:
மோகாஸா:-வீணாசையுடையோர், மோககர்மாண:-வீண் செயலாளர், மோகஜ்ஞாநா - வீணறிவாளர், விசேதஸ:-மதியற்றோர், ராக்ஷஸீம் ஆஸுரீம் மோஹிநீம் ச-மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளின், ப்ரக்ருதிம் ஏவ ஸ்ரிதா:-இயல்பையே சார்ந்து நிற்கின்றனர்.
பொருள் : வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவன – அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்).
பொய்யுடலை மெய்யென்று நம்பி, அதன் மூலம் போகம் துய்த்தலே குறிக்கோள் என்ற மயக்கம் மோஹம் ஆகிறது. பின்பு, அதன் பொருட்டுக்கொள்ளும் ஆசையும், செய்யும் வினையும், வளர்க்கும் அறிவும், கையாளும் யுக்தியும் ஆத்ம லாபத்துக்கு உதவாதவைகளாய் வீணாகின்றன. இத்தகைய கீழான இயல்புடையவர்களுள் ரஜோ குணத்தோடு கூடியவர் ராக்ஷசர்; தமோ குணத்தோடு கூடியவர் அசுரர் ஆவர்.
மற்று, பக்திமான்களுடைய போக்கு பின் வருமாறு:
13. மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா:
பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்
து பார்த-ஆனால் பார்த்தா, தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:-தெய்விக இயல்பைக் கைகொண்ட,
மஹாத்மாந:-மகாத்மாக்கள், மாம் பூதாதிம் அவ்யயம் ஜ்ஞாத்வா-என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து, அநந்யமநஸ:-வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன், பஜந்தி-வழிபடுகிறார்கள்.
பொருள் : பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்.
தெய்விக இயல்பு சத்துவ குணத்தினின்று வருகிறது. ஜீவர்களெல்லாம் பகவானிடத்திருந்து தோன்றியவர்கள். இப்பேருண்மையை உணர்ந்து திரும்பி அவனைச் சென்று அடைய விரும்புபவர்கள் மகாத்மாக்கள் ஆகின்றனர். கரணங்களை அடக்குதல், அவனுடைய உயிர்களிடத்து அன்பாயிருத்தல், அவனை அடைதற்கு சிரத்தை காட்டுதல் முதலிய நல்லியல்புகள் அத்தகைய மேலோர்க்கு எளிதில் வந்து அமைகின்றன.
மேலோர் எப்படி யெல்லாம் வழிபடுகின்றனர் என்னும் வினா எழுமிடத்து :
14. ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:
நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே
த்ருடவ்ரதா:-திடவிரதத்துடன், ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும், யதந்த: ச-முயற்சி புரிவோராகவும், நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய், நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.
பொருள் : திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.
மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது; எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள்.
15. ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே
ஏகத்வேந ப்ருதக்த்வேந பஹுதா விஸ்வதோமுகம்
அந்யே மாம் ஜ்ஞாநயஜ்ஞேந ஏகத்வேந-வேறு சிலர் ஞான வேள்வியால் ஒன்றிய பாவனையுடன், யஜந்த: அபி-வழிபட்டுக் கொண்டும், ச பஹுதா விஸ்வதோமுகம்-மற்றும் சிலர் விராட்ஸ்வரூபத்துடன் ஈஸ்வரனாக என்னை, ப்ருதக்த்வேந உபாஸதே-தன்னிலும் வேறாக எண்ணி உபாசிக்கிறார்கள்.
பொருள் : வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள்.
(ஞானயக்ஞேன)- பரம்பொருளை உள்ளபடி அறிகிறவர்கள் தங்களைப் பரம்பொருளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஆகையால் அது ஞான யக்ஞமாகின்றது.
(ஏகத்வேன)- ஒன்றாய் என்னும் அத்வைத பாவனை, பரமாத்மா ஒன்றுதான் உள்ளது என்ற எண்ணம்.
(ப்ருதக்த்வேன)- வேறாய் இருக்கும் துவைத பாவனை. ஆண்டவன் அடிமைக்குப் புறம்பானவன் என்ற எண்ணம்.
(விச்வதோமுகம்)- பலவாய் உள்ள எல்லா அங்கங்களும் ஒரு புருஷனைச் சார்ந்தவைகள். இது விசிஷ்டாத்வைத பாவனை. ஒருவனே இத்தனையும் ஆனான் என்ற எண்ணம் இப்பாவனையில் உண்டு. ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தை துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளில் எதில் வைத்துச் சாதனம் செய்தாலும் அது ஞான யக்ஞம் ஆகிறது.
இத்தனைவித உபாசனைகள் எப்படி ஒரே பொருளைச் சார்வதாகும் என்ற ஐயம் எழுகிறது. அதற்கு இறைவன் விடையளிக்கிறார்:
16. அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம்
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்
அஹம் க்ரது:-நான் ஹோமம், அஹம் யஜ்ஞ:-நான் யாகம், அஹம் ஸ்வதா-நான் ஸ்வதா என்ற வாழ்த்துரை, அஹம் ஒளஷதம்-நான் மருந்து, அஹம் மந்த்ர:-நானே மந்திரம், அஹம் ஆஜ்யம்-நானே நெய், அஹம் அக்நி-நானே தீ, அஹம் ஹுதம்-நான் அவி, அஹம் ஏவ-நானே தான்!
நான் ஓமம்; நான் யாகம்; நான் ஸ்வதா என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி.
கிரது என்பது வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒருவகைக் கர்மத்தின் பெயர். யக்ஞமாவது ஸ்மிருதியில் விதிக்கப்பட்டுள்ள கர்மம். பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவுக்கு ஸ்வதா என்று பெயர். எது மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிறதோ அது ஒளஷதம். என்ன எண்ணத்துடன் கொடுக்கப்படுகிறதோ அவ்வெண்ணமே மந்திரம். ஹோமத்தில் சொரியப்படும் நெய்க்கு ஆஜ்யம் என்று பெயர். இங்கு ஹோமாக் கினியே அக்னி என்று குறிப்பிடப்படுகிறது. வேள்வி வேட்டல் என்னும் வினையானது ஹுதம் என்று சொல்லப்படுகிறது.
நான்காவது அத்தியாயம் இருபத்து நான்காவது சுலோகத்தில் செய்கிற வினை யெல்லாவற்றையும் பிரம்ம சொரூபமாகக் கருதுபவனை வினை தளைப்பதில்லையென்பது சொல்லப்பட்டது. இங்கு பொருள்களெல்லாம் பாரமார்த்திக திருஷ்டியில் பிரம்ம சொரூபம் ஆகின்றனவென்பது சொல்லப்படுகிறது. பொருள்களையெல்லாம் அவன் சொரூபமாகக் காண்பது பாரமார்த்திக திருஷ்டியைப் பெறுவதற்கு உபாயமாகிறது.
17. பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ:
வேத்யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச
அஸ்ய ஜகத: தாதா-இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும், பிதா மாதா பிதாமஹ: -தந்தை, தாய், பாட்டனாரும், வேத்யம் பவித்ரம்-அறியத் தக்கவனும், புனிதமானவனும், ஓங்கார:-ஓங்காரமும், ருக் ஸாம யஜு: ச-ரிக்; ஸாம; யஜுர் என்ற வேதங்களும், அஹம் ஏவ-நானே தான்.
பொருள் : இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர்.
உலகனைத்துக்கும் ஈசுவரன் முதற் காரணமாயிருப்பதால் அவன் தந்தை, தாய், பாட்டனார் ஆகின்றான். அவரவர் செய்கின்ற வினைக் கேற்றவாறு கர்ம பலனைக் கொடுப்பவன் தாதா. யாரை அறிந்தால் வாழ்க்கையின் மர்மம் முழுதும் விளங்குகிறதோ அவன் அறியத்தக்கவன், ஈசுவரன்.
தம்மை வந்து சாரும் பொருள்களைத் தூயதாக்கும் இயல்பு மண், நீர், தீ, காற்று முதலியவைகளுக்கு உண்டு. அங்ஙனம் பூதங்களால் புனிதமடைந்த பொருள்கள் திரும்பவும் மலினமடையக்கூடும். பகவானை அணுக அணுக உயிர்கள் பெருநிலையைப் பெறுகின்றன. அந்த அளவில் அவைகள் புனிதப்படுகின்றன. இக்காரணத்தை முன்னிட்டே பக்தர்களுக்கு பகவானுடைய நாமம் குலம் தரும் என்று கருதப்படுகிறது. பகவானை அடைவதால் வரும் புனிதம் என்றும் மாறாதது.
அதர்வண வேதம் மிகப் பிற்காலத்தில் உண்டானதால் அது ஈண்டு பகரப்படவில்லை. இயற்கையினுடைய தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகியவைகளை ரிக், சாமம், யஜுர் ஆகிய வேதங்கள் விளக்குகின்றன. இந்த வேதங்களே சப்தல் அல்லது ஓசையின் துணையைக்கொண்டு தோன்றியவைகள். ஓசை யனைத்தும் ஓங்காரத்தில் அடங்கியிருக்கின்றன. ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் மூலமந்திரமாகும். அது அ-உ-ம் ஆகிய மூன்று ஓசைகளின் வடிவம் கொண்டது. அது என்னும் எழுத்து தோற்றத்தையும் உ என்பது இருப்பையும் ம் ஒடுக்கத்தையும் குறிக்கின்றன.
பகவான், பாகவதம், பக்தர்கள் இறைவரது ஒன்றேயாம்.
18. கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத்
ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்
கதி:-அடையத் தக்க பரம பதம், பர்தா-காப்பவன், ப்ரபு:-ஆள்பவன், ஸாக்ஷீ-நல்லன – தீயனவற்றைப் சாட்சியாக இருந்து பார்ப்பவன், நிவாஸ:-உறைவிடம், ஸரணம்-சரண் புகலிடம்
ஸுஹ்ருத்-தோழன், ப்ரபவ: ப்ரலய:-தொடக்கமும் அழிவும், ஸ்தாநம் நிதாநம்-நிலையாகத் தாங்குமிடமும், நிதானமும், அவ்யயம் பீஜம்-அழியாத விதை.
பொருள் : இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை.
செய்த கர்மத்துக்கு ஏற்றவாறு அடையுமிடம் அல்லது புகலிடம் கதி எனப்படுகிறது. கர்மம் ஓய்ந்தவிடத்து பகவானைத் தவிர புகலிடம் பிறிதொன்றில்லை. உண்டி முதலியன கொடுத்து வளர்ப்பவன் பர்த்தா. ப்ரபு என்பதற்கு சுவாமி, தலைவன், இறைவன், உடையவன் என்று பொருள். உயிர் வகைகள் தத்தம் கடமைகளை முறையாகச் செய்ததற்கும் செய்யாததற்கும் சாக்ஷி அல்லது பார்த்திருப்பவராக உள்ளார் பகவான். நிவாஸ: என்றால் உயிர்கள் வசிக்குமிடம், இருப்பிடம் என்று பொருள்படுகிறது. சரணம், தன்னைத் தஞ்சமடைந்தவர்களது துக்கத்தைத் துடைப்பவன் அல்லது அடைக்கலம் என்பதாம். ஸுஹ்ருத் என்பதற்குக் கைம்மாறு கருதாது நன்மை செய்பவன், தோழன் என்று பொருள். நிதானமாவது எதிர்காலத்தில் உயிர்வகைகள் அனுபவிப்பதற்குச் சேகரித்து வைத்துள்ள களஞ்சியம். பூமியில் நட்ட வித்து அழிந்து செடியாக மாறுகிறது. ஆனால் பிரம்மம் என்கிற வித்து ஒருவிதமான மாறுதலையும் அடையாது இருந்துகொண்டு ஜீவ ஜகத் வகைகளைத் தன்னிடத்திருந்து தோன்றிவர இடங் கொடுக்கிறது.
19. தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச
அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்ச ஸதஸச்சாஹமர்ஜுந 9
அஹம் தபாமி-நான் வெப்பந் தருகிறேன், வர்ஷம் நிக்ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச-மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன், அம்ருதம் ச ம்ருத்யு: ச-நானே அமிர்தம்; நானே மரணம், ஸத் அஸத் ச அஹம் அர்ஜுந-உள்ளதும்; இல்லதும் நான் அர்ஜுனா!
பொருள் : நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான்.
சூரியனைக்கொண்டு பகவான் வெப்பத்தை உண்டுபண்ணுகிறார்; சூரிய கிரணத்தால் மழை பெய்யவும், நிற்கவும் செய்கிறார். அவரவர் கர்மபலனுக்கு ஏற்றாற் போன்று தேவர்கள் சாகாமையும் நரர் சாவையும் பெறுகின்றனர். சாகாமை, சாவு ஆகிய இரண்டும் சில வேகைளில் விருப்பையும் வேறு சில வேளைகளில் வெறுப்பையும் தருகின்றன. ஆக, ஜீவனை ஞானத்துக்குப் பக்குப்படுத்துதற்கு தேவர்களுடைய சாகாமையயும் நரர்களுடைய சாவும் மாறி பயன்படுகின்றன.
கர்மம் காரியப்படுவதால் உயிர்களிடத்து ஏற்படும் தோற்றம் ஸத்தென்று ஈண்டு இயம்பப்படுகிறது; தோன்றா நிலையே அஸத்தாகிறது. ஆக, அஸத்து என்பது சூன்யமல்ல.
காமிய கர்மத்தின் பலன் :
20. த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோக
மஸ்நந்தி திவ்யாந்திவி தேவபோகாந்
த்ரைவித்யா: ஸோமபா:-மூன்று வேதம் அறிந்தோர், சோமம் உண்டோர், பூதபாபா-பாவம் அகன்றவர்கள், மாம் யஜ்ஞை: இஷ்ட்வா-என்னை வேள்விகளால் உபாசித்து, ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே-வானுலகு தர வேண்டுகின்றனர், தே புண்யம் ஸுரேந்த்ரலோகம் ஆஸாத்ய-அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து, திவி-ஸ்வர்கத்தில்
திவ்யாந் தேவபோகாந் அஸ்நந்தி-திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.
பொருள் : சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.
ரிக், சாம, யஜுர் ஆகிய மூன்று வேதங்களில் சொல்லியுள்ள காமகாண்டத்தைப் பின்பற்றுபவர்கள் அடையும் மறுமைப் பயன்களில் மிகப்பெரியது இதுவாம். இந்திர பதவியே அவைகளுள் தலையாயது. காமிய கர்மி ஒருவன் நூறு யாகங்கள் செய்தால் அவனுக்கு இந்திர பதவி கிட்டுகிறது.
21. தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஸாலம்
க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸந்தி
ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா
கதாகதம் காமகாமா லபந்தே
தே தம் விஸாலம் ஸ்வர்கலோகம் புக்த்வா-அவர்கள் விரிவாகிய வானுலகத்திலே இன்புற்று,
புண்யே க்ஷீணே மர்த்யலோகம் விஸந்தி-புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய உலகத்துக்குத் திரும்புகிறார்கள், ஏவம் த்ரயீதர்மம்-இப்படி மூன்று வேத முறைகளை, அநுப்ரபந்நா: காமகாமா:-சார்ந்திருக்கிற போகப் பற்றுள்ளவர்கள், கதாகதம்-திரும்ப திரும்ப பிறந்து இறத்தலை, லபந்தே-அடைகிறார்கள்.
பொருள் : விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.
பொருள் உள்ள அளவு மண்ணுலகில் மதிப்பு இருப்பது போன்று புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகில் மதிப்பு உண்டு. அது அழிந்ததும் ஆங்கு அவர்களுக்கு இடமில்லை. புதிய புண்ணியத்தைத் தேடக் கர்ம பூமிக்கு அவர்கள் திரும்பி வருகிறார்கள். சுதந்திரமற்று இன்ப நுகர்ச்சிக்காக அவர்கள் யாண்டும் உழன்றாகவேண்டும்.
ஆசையை வென்று பக்தி பூண்டுள்ளவர்களோவெனின் :
22. அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக÷க்ஷமம் வஹாம்யஹம்
அநந்யா: யே ஜநா-வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள், மாம் சிந்தயந்த:-என்னை தியானித்துக் கொண்டு, பர்யுபாஸதே-எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ, நித்யாபியுக்தாநாம் தேஷாம்-இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய, யோக÷க்ஷமம் அஹம் வஹாமி-நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்.
பொருள் : வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.
அனன்யம் என்றால் பரமாத்மா தங்களுக்கு அன்னியமானவர் அல்லர் என்று எண்ணுதல் அல்லது அவரைத் தவிர வேறு எதையும் எண்ணாதிருத்தல். யோகம் என்பது வேண்டியதைப் பெறுதல். பின்பு பெற்றதை வைத்துக் காப்பாற்றுதல் ÷க்ஷமமாகும்.
கர்ப்பத்திலிருக்கும் சிசு தாய்க்கு அன்னியமானதல்ல; ஆதலால் அதன் போஷணை முழுதும் தாயினிடத்திருந்தே இயல்பாக வருகிறது. பிறந்த பின்பும் தாயைத் தஞ்சமடைந்திருக்குமளவு அவள் உணவைத் தேடிவந்து ஊட்டுகிறான். அனன்னிய பக்தியில் ஈடுபடுவோர் அடையும் பேறு யாண்டும் அதைவிடப் பெரியது.
பொருளைத் தேடுபவர்க்குப் பொருள் அமையவும், பிறகு அழியவும் செய்கிறது. இறைவனது அருள் ஒன்றையே நாடுபவர்க்கு அழியாத அவனது அருள் சுரக்கிறது. மேலும் உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளின் யோக ÷க்ஷமமும் இறைவனாலேயே அளிக்கப்படுகிறது. பக்தர் மீது பித்தம் கொண்டுள்ள பகவான் தாயினும் சாலப்பரிந்து அவர்களைப் பராமரித்து வருவதாக வாக்குக் கொடுக்கிறார். அனன்னிய பக்தி பண்ணுபவர்களுடைய பெரு வாழ்க்கையே பகவானது பிரமாணிக்கத்துக்குப் பரம சான்றாகிறது. பக்தியின் பெருக்கால் தங்கள் உயிரையே அவர்கள் பொருள்படுத்துவதில்லை. ஆகையால் அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு பகவானுடையதாகிறது.
பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கிப் பத்து அடி வருகிறார்.
மற்ற தேவதைகளை வணங்குதல் ஈசுவர ஆராதனையாகாதோ வெனின்:
23. யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்
கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர்.
பொருள் : அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.
சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.
ஓர் அரசாங்கத்தை நிர்வகிக்கும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் ஆதிக்கத்தையெல்லாம் அரசனிடமிருந்து பெறுகிறார்கள். விண்ணப்பதார் ஒருவன் தன் காரியம் நிறைவேறுவதற்கு உத்தியோகஸ்தருடைய தயவைப் பெற்று அதினின்று தனக்குக் காரிய சித்தி ஏற்பட்டதென்று எண்ணுவானாகில் அவ்வெண்ணம் அரசனது ஆதிக்கத்தைப்பற்றிய அக்ஞானத்தினின்று உதித்ததாகும். அரசனுடைய ஆட்சி முறையே காரியசித்திக்கு அடிப்படையான காரணமாகும்.
காரியசித்தி, புக்தி, முக்தி ஆகிய யாவும் முழுமுதற் பொருளாகிய சர்வேசுவரனிடத்திருந்து வருபவைகள் என்ற உண்மையை அறியாது, சிறு தேவதைகள் ஈசனுக்குப் புறம்பானவைகள் என்றெண்ணி, அச்சிறு தேவதைகளிடத்து வரம் வேண்டுபவர் விதிவழுவி விண்ணப்பித்தவர் ஆகின்றனர்.
ஏன் அதை முறை வழுவிய விண்ணப்பம் என்று சொல்ல வேண்டும்? விடை வருகிறது :
24. அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே
ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும், போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்! து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர், அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.
பொருள் : நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார்.
போக்தா என்பது உண்பவன் என்று பொருள்படுகிறது. தலைவன் அல்லது சொந்தக்காரன் பிரபு எனப்படுகிறான். சிறு உத்தியோகஸ்தர்களிடமிருந்து சிறு நன்மையைத் தற்காலிகமாகப் பெற்றுப் பிறகு அதை இழந்துவிடுவது போன்று சிறுதேவதைகளை வணங்கி, அத்தேவலோகங்களை அடையப்பெற்றுக் காலாவதியில் பிறப்புலகுக்குத் திரும்புகிறார்கள். ஆதலால் சிறுதேவதைகளை வணங்குதல் விதிவழுவிய விண்ணப்பமாகும்.
இனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன் என்று பகவான் 8வது அத்தியாயம், நான்காவது சுலோகத்தில் சொல்வதைக் கவனிக்கவும்.
ஒவ்வொருவரும் அடையும் நிலையைப்பற்றிய உண்மையாவது :
25. யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா:
பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோऽபி மாம்
தேவவ்ரதா: தேவாந் யாந்தி-தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி-பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார், பூதேஜ்யா பூதாநி யாந்தி-பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார், மத்யாஜிந: அபி மாம் யாந்தி-என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.
பொருள் : தேவ விரதிகள் தேவரை எய்துவார்; பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்; பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்; என்னை வேட்போர் என்னை எய்துவார்.
மனிதனினும் மேம்பட்டவர், ஆனால் தேவர்களுக்குக் கீழோர் பூதங்கள் எனப்படுகின்றனர். இங்கு என்னை என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது.
தன்னிலும் மிக்காரை அணுகி, அவர்களுக்கு ஒப்பாக வேண்டுமென்று முயலுவது உபாசனையாம். வழிபாடு என்பதும் அதுவே. சிறு செல்வம் உடையவன் பெருஞ் செல்வம் படைக்க முயலுகிறான். சிற்றறிவுடையோன் பேரறிஞனாதற்குப் பாடுபடுகிறான். ஆற்றலில் தாழ்ந்தவன் மேலோனாக விரும்புகிறான். இங்ஙனம் பெருநிலை யடையப் பாடுபடுதலே உபாசனையாகிறது. மனது ஆழ்ந்து எதை எண்ணுகிறதோ அதன் தன்மையைப் பெறுகிறது. உபாசகனுக்கு உபாசனா மூர்த்தியின் விபூதி அல்லது மகிமையெல்லாம் வந்தமைகிறது. உயரத்தில் இருக்கிற நீர்ப்பாண்டத்தோடு இணைத்துள்ள குழாயிலும் நீர் உயர ஏறுகிறது. சீரிய பொருளைச் சிந்திக்கிற மனது சீரியதாகிறது; தாழ்ந்ததை நினைப்பது தாழ்ந்ததாகிறது. ஆகையால்தான் தேவதைகளை உபாசிப்பவன் தேவதைகளை அடைகிறான். பிதிர்க்களை வணங்குபவன் பிதிர்க்களைச் சேருகிறான். பூதப் பிசாசுகளைப் போற்றுபவன் தானே பிசாசு ஆகிறான். ஈசுவரனை உபாசிப்பவன் ஈசுவரனை அடைகிறான்.
ஓர் சாயக்காரன் வஸ்திரத்துக்குச் சாயமேற்றுவதில் ஒரு அலாதியான முறையைக் கைப்பற்றிவந்தான். உன் வஸ்திரத்துக்கு எந்த நிறம் வேண்டும்? என்று அவன் ஒருவனைக் கேட்பான். சிவப்பு வர்ணம் என்று விடை வந்தால் சாயக்காரன் தனது தொட்டியில் அவ் வஸ்திரத்தைத் தோய்த்து எடுத்து இதோ உன் வஸ்திரத்துக்குச் சிவப்புச் சாயம் போட்டாயிற்று என்று கொடுப்பான். மஞ்சள் சாயம் வேண்டுமென்று இன்னொருவன் கேட்பான். அதே தொட்டியில் சாயக்காரன் அவனுடைய வஸ்திரத்தையும் தோய்ப்பான்; வெளியில் எடுக்கும்போது அது மஞ்சள் நிறமாயிருக்கும். நீலம், ஊதா, பச்சை முதலிய எந்த நிறம் வேண்டியிருந்தாலும் சரியே, ஒரே தொட்டியில்தான் சாயக்காரன் வேஷ்டியை நனைப்பான். வேண்டப்பட்ட சாயம் வஸ்திரத்தில் ஏற்றப்பட்டிருக்கும். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒருவன் சாயக்காரனிடம் வந்து, நண்பா, எனக்குத் தகுந்தது எது என்று நீயே தீர்மானம் செய்து அந்தச் சாயத்தில் தோய் என்று சாயக்காரனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்து விட்டான். நமது மனம் வஸ்திரம் போன்றது. ஈசுவரனே சாயக்காரனாகவும் அவனுடைய சாயத்தொட்டியாகவும் இருக்கிறான். விரும்பியதை அவனிடம் கேட்கிற மனநிலை நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒன்றும் கேளாது நம்மை அவனிடம் கொடுத்துவிடுவது நலம். அப்பொழுது அவன் தன்னை நமக்குக் கொடுக்கிறான்.
சிறு உத்தியோகஸ்தர் முன்னிலைக்கு யாரும் எளிதில் செல்லலாம். ஆனால் அரசன் முன்னிலைக்குச் செல்ல எல்லார்க்கும் தகுதியில்லை. சிறு தேவதைகளை எளிதில் வசப்படுத்தலாம். சர்வேசுவரனைத் திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதன்று என்று ஒருவர் கருதலாம். அதற்குப் பகவானது விடை வருகிறது :
26. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந:
ய: பக்த்யா-எவர் அன்புடனே, பத்ரம் புஷ்பம் பலம் தோயம்-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் மே ப்ரயச்சதி-எனக்கு அளிப்பவன் ஆயின், ப்ரயதாத்மந:-முயற்சியுடைய அவர், பக்த்யுபஹ்ருதம்-அன்புடன் அளித்த, தத் அஹம் அஸ்நாமி-அவற்றை நான் அருந்துகிறேன்.
பொருள் : இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.
ஒரு பொருளின் விலை மதிப்புக்கு ஏற்றபடி அதைப் பெரிய சம்மானமாகக் கருதுதல் உலகத்தவர் இயல்பு. இந்திராதி தேவர்களது போக்கும் அத்தகையதே. ஆனால் லக்ஷ்மி தேவியையே பணிப்பெண்ணாகவுடைய பகவானுடைய பண்பு வேறானது. ஜகத்துக்கெல்லாம் நாதன் எனினும் தன்னில் தானே திருப்தியடைந்திருப்பவன் அவன். எப்பொருளைக்கொண்டும் அவனைப் பெறமுடியாது. நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் அவன் படுகிறான். பக்திக்கு அறிகுறியாக இயற்கையில் எளிதில் அகப்படுகின்ற கனி, மலர், இலை, நீர் ஆகிய எதைப் படைத்தாலும் அவன் மகிழ்வோடு வாங்கிக்கொள்கிறான். விதுரர் வார்த்த கஞ்சியை அமிழ்தெனப் பாராட்டி அவர் அருந்தினார். சுதாமா என்று அழைக்கப்பட்ட குசேலர் கொண்டு வந்த அவலை அவர் வலியப் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார். சபரி கொடுத்த உலர்ந்த காய்கனிகள் இராமனுக்கு ஏற்புடையனவாயின. கண்ணப்பனது உமிழ் நீரும் அவன் மென்ற மாமிசமும் சிவனாருக்கு ஒப்பற்ற நைவேத்தியமாயின. பக்தியானது பகவானுக்கு அவ்வளவு பெரியது.
பக்தியையே பகவான் பெரிதும் பாராட்டுகிறபடியால் :
27. யத்கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம்
கௌந்தேய-குந்தி மகனே! யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ, யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ, யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ, யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ, யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ, தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு.
பொருள் : நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.
வாழ்க்கையில் வந்தமையும் நிகழ்ச்சிகளை யெல்லாம்
யத்கரோமி யதச்னாமி யஜ்ஜுஹோமி ததாமி யத்
யத்தபஸ்யாமி பகவான் தத்கரோமி த்வதர்ப்பணம்
என்று இவ்வாறு ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணத் தெரிந்து கொண்டால் இது ஈசுவர ஆராதனை, இது லௌகிகம் என்கிற வேறுபாடு இல்லாது இனிது அமைகிறது. வாழ்க்கையே ஓர் இடையறாத ஆராதனையாகிறது. செய்வது தீவினையாயிருந்தாலும் அது இறைவனது கைங்கரியம் என்கிற எண்ணம் வலுக்க வலுக்க தீவினை யொழிந்து நல்வினை நிலைபெறுகிறது.
உணவில் வைத்துள்ள பற்றானது போகப்பிரியத்துக்கு அறிகுறியாகும். தீனியில் வைத்துள்ள நாவாசையை அடக்காதவன் மற்ற ஆசைகளை அடக்க முடியாது. உண்பதையே கடவுள் ஆராதனையாகச் செய்து பழகப் பழக போகமானது யோகமாக மாறியமைகிறது.
எதைத் தானமாகக் கொடுக்கிறாயோ அதையும் ஈசுவரார்ப் பணமாகச் செய். ஈயாத லோபியைவிட மேலானவன் ஐயமிடுபவன். ஈதல் அறம் எனப்படுகிறது. அப்படிக் கொடுக்கிறவன் தன்னைப் பெரியவனாகக் கருதுவானானால் அஹங்காரத் தடிப்பால் அவன் சிறியவனாகிறான். தானம் செய்வதை நாராயண சேவையாகக் கருதுமிடத்து அஹங்காரம் தேய்கிறது. கடவுளுக்குப் பூஜை செய்யும் பாவனையே தானம் செய்வதிலும் வந்தமையவேண்டும்.
தவம் புரிதலைத் தன் சித்தியின் பொருட்டு ஒருவன் செய்யக்கூடும். அது காமிய தபசு ஆகிறது. அதனால் ஜீவபோதம் வளர்கிறது. தவசிகளுக்கிடையில் நான் தபசாயிருக்கிறேன் என்று பகவான் பகருகிறார். (அத்.7, சுலோகம் 9) ஆகையால் தபசு என்னும் தெய்வ சம்பத்து அவரிடத்திருந்து வந்தது. அதனால் அவரது பெருமையே நிலைபெறுக, என்றெண்ணித் தவம் புரிதல் சாலச்சிறந்தது.
இங்ஙனம் வாழ்க்கையில் வந்து அமைந்துள்ள செயல்களெல்லாம் ஈசுவர ஆராதனையாகின்றன. அதனால் ஜீவபோதம் குறைகிறது; பரபோதம் மேலிடுகிறது. எல்லாம் அவன் உடைமையே; எல்லாம் அவன் செயலே என்ற திருக்காட்சி அமையப்பெறுகிறது.
தாயே நான் ஒரு யந்திரம்; நீ ஒரு யந்திரீ. நான் ஓர் அறை; நீ அதில் குடியிருப்பவள். நான் உறை; நீ அதனுள் போடப்படும் வாள். நான் ரதம்; நீ சாரதி. நீ ஆட்டிவைக்கிறபடி நான் ஆடுகிறேன். நீ பேசுவிக்கிறபடி நான் பேசுகிறேன். என் செயல் என்பதெல்லாம் என் உள்ளிருக்கும் உன் செயலே. நான் அல்லேன், நான் அல்லேன், எல்லாம் நீ தான்.
எல்லாம் ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணுவதால் ஜீவன் அடையும் நன்மை வருமாறு :
28. ஸுபாஸுபபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை:
ஸம்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி
ஏவம் ஸுப அஸுப பலை:-இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களை, கர்மபந்தநை:-கர்மத் தளைகளினின்றும், மோக்ஷ்யஸே-விடுபடுவாய், ஸந்யாஸ யோக யுக்தாத்மா-துறவெனும் யோகத்திசைந்து, விமுக்த:-விடுபட்டவனாக, மாம் உபைஷ்யஸி-என்னையும் பெறுவாய்.
பொருள் : இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய்.
இப்படி ஈசுவரனுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் வினைத்தளைகள் போம். நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் ஆகிய வினைகளெல்லாம் பிறவிக்கு வித்தாகின்றன. பிறவி என்னும் இருளில் சேர்க்கின்ற இரு வினைகளையும் ஈசுவரார்ப்பணம் என்னும் தீயில் போட்டுவிட்டால், அவைகள் வெந்த விதைபோன்று வலிவை இழக்கின்றன. வெந்த விதை பின்பு முளைக்காது. ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணின கர்மம் பிறவியை உண்டு பண்ணாது.
கர்மத்தை விடுதல், கர்மத்தைச் செய்தல் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள முரண்பாடு இங்கு சந்நியாச யோகத்தில் சமரசம் பெறுகிறது. மனிதன் தனக்கென்று ஒன்றும் செய்யாது எல்லாம் ஈசுவரார்ப்பணமாகச் செய்கிறபடியால் அது சந்நியாசமாகிறது. பகவான் பொருட்டு முறையாகவும் ஊக்கத்துடனும் கர்மம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறபடியால் அது யோகமாகிறது. அத்தகைய யோகிக்குக் கர்ம சொரூபமாயுள்ள வாழ்க்கையில் குறையொன்றுமில்லை. ஜீவன் முக்தனாக யோகி உடலில் வாழ்கிறான். உடலை உகுத்ததும் அவன் விதேக முக்தனாகிறான்.
இவ்வுலகில் இருக்கையில் நீ என்ன செய்யவேண்டும்? எல்லாவற்றையும் ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்துவிடு. நீயும் அவனைச் சரணமடை. அப்பால் உனக்குத் துன்பமே இராது. சீக்கிரத்தில் ஈசுவர சன்னிதானத்தை அடைவாய்.
29. ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்
அஹம் ஸர்வபூதேஷு ஸம:-நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன், மே த்வேஷ்ய: ந-எனக்குப் பகைவனுமில்லை, ப்ரிய: ந அஸ்தி-நண்பனுமில்லை, து யே பக்த்யா மாம் பஜந்தி-ஆனால் என்னை அன்புடன் தொழுவோர், தே மயி ச அஹம் தேஷு அபி-அவர்கள் என்னிடமும் நான் அவர்களிடமும் (காணக் கூடியவனாக இருக்கிறேன்).
பொருள் : நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.
நல்லது கெட்டது என்று வேற்றுமை பாராட்டாது எல்லாப் பொருள்கள் மீதும் சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. அவ் வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளுதல் அந்தந்தப் பொருள்களின் இயல்பைப் பொறுத்ததாகும். கருமணல், வெண்மணல், கண்ணாடி ஆகிய இவை யாவும் ஒரு பொருளின் வெவ்வேறு தோற்றங்கள். சூரிய வெளிச்சம் இவைகளின் மீது ஒரே விதமாகப் படிகிறது. ஆனால் சூரியனுடைய சான்னித்தியத்தைக் கண்ணாடியில் காண்பது போன்று வெண்மணலில் காண முடியாது; வெண்மணலில் காண்பதுபோன்று கருமணலில் காண முடியாது. ஈசுவர சான்னித்தியம் ஓரளவு அதுபோன்றது. சூரியன் மணலுக்கு வெகுதூரத்தில் இருக்கிறான். ஆனால் ஈசுவரன் ஜீவனுக்குப் புறம்பாயில்லை. தீப்பற்றி எரியும் தன்மை மரமெங்கும் வியாபகமாயிருக்கிறது. பச்சை மரத்திலும் அவ்வியல்பு மறைந்துள்ளது. அது உலரவேண்டும். பிறகு தொடர்ந்து உராய்வதால் அல்லது தீயோடு தொடர்வு வைப்பதால் மரக்கட்டை பற்றி எரிகிறது. அவ்வேளையில் விறகுக்கட்டை வேறு, தீ வேறு அல்ல. விறகே தீ; தீயே விறகு.
நீக்கமற எங்கும் நிறைந்துள்ள இறைவன் இமைப்பொழுதும் நீங்காது நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கிறான். உள்ளத்தைத் தூயதாக்காதவர்களுக்கு அவ்வுண்மை விளங்குவதில்லை. அனன்ய பக்தியால் மனதைப் பண்படுத்தியவர்களுக்கு அது விளங்குகிறது. யாண்டும் பகவானுடைய முன்னிலையிலேயே அத்தகைய பக்தர்கள் வாசம் செய்கிறார்கள். கண்ணாடியில் சூரியன் போன்றும், உலர்ந்த விறகுக்கட்டையில் தீப்போன்றும் கருவி கரணங்கள் ஓய்ந்த தொண்டர்களிடத்து பகவான் வீற்றிருக்கிறான்.
எல்லா மனிதர்களிடத்தும் ஈசுவரன் இருக்கிறான். ஆனால் ஈசுவரனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம்.
பக்தியின் சிறப்பு எத்தகையது என்பது விளக்கப்படுகிறது :
30. அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக்
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ:
ஸுதுராசார: அபி-மிகவும் தீய நடத்தை உள்ளவனானாலும், அநந்யபாக்-வேறு எதிலும் நாட்டமின்றி என் பக்தனாக ஆகி, மாம் பஜதே சேத்-என்னை வழிபடுவானாகில், ஸ: ஸாது: ஏவ மந்தவ்ய:-அவன் நல்லோனென்றே கருதுக, ஹி ஸ: ஸம்யக் வ்யவஸித:-ஏனெனில் அவன் நன்கு முயல்கின்றான்.
பொருள் : மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின்,
தர்மத்தை முறையாகச் செய்கின்றவர்களும் இந்திரிய நிக்கிரகம் நன்கு செய்கிறவர்களும் சதாசாரம் உடையவர்கள் ஆகின்றனர். கொலை, களவு முதலிய பாபச் செயலைச் செய்கின்றவர்களும் மனம் அடங்காது இந்திரியங்கள் வழியாக விஷயங்களில் மூழ்குபவரும் துராசாரம் உடையவர் ஆகின்றனர். அன்னவர் மேலும் மேலும் அதோகதியை அடைகின்றனர். அத்தகைய கீழ் மக்களும் விரைவில் மேன்மக்கள் ஆதற்கு வழியுண்டு. எண்ணமே பெருமைக்கும் சிறுமைக்கும் முதற்காரணம். இடையறாது இறைவனிடத்துப் பக்தி பண்ணவேண்டும் என்ற எண்ணம் வலுக்கும் போது முன்பு பாபச் செயல்களைப்பற்றியும் கீழான விஷய போகங்களைப்பற்றியும் எண்ணிய எண்ணங்கள் அடிபடுகின்றன. பகவானைப் பற்றிய நல்லெண்ணம் ஒன்றே பாக்கியிருக்கிறது. சுடர் வெளிச்சமுள்ள வீட்டுக்குள் திருடன் நுழையான். அது போன்று பகவத் சிந்தனையுள்ள மனதில் துராசாரத்துக்கு ஏதுவான எண்ணங்களுக்கு இடமில்லை. நற்செயலுக்கும் நல்லியல்புக்கும் வித்தாவது நல்லெண்ணம். ஆக, இடையறாது இறைவனைப் பஜிக்கத் தீர்மானம் செய்கிற வளவில் கேடுடைய ஒருவன் சாதுவாகிறான். சிறப்பு அனைத்தும் அதினின்று வருமாதலால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்.
எல்லாவற்றையும் பரித்தியாகம் செய்துவிட்டு, ஈசுவரனுடைய பாதாரவிந்தங்களில் சேரவேண்டுமென்று செய்யும் உபதேசங்களை உலகப்பற்றுள்ளவர்கள் கேட்கமாட்டார்கள். இப்படிப் பட்டவர்களை எப்படி நல்வழிக்குக் கொண்டுவரலாமென்பதை நன்றாக ஆலோசனை செய்து தெளிந்த கௌராங்க சுவாமியும் நித்தியானந்த சுவாமியும், ஜனங்களே! வாருங்கள்; பகவந் நாமத்தை வாய்விட்டுப் பாடினால் உங்களுக்கு நல்லுணவும் நாரியர் போகமும் கிடைக்கும் என்று ஆசைகாட்டி அழைத்தனர். அநேகர் அவ்வுணவையும் போகத்தையும் அடையலாம் என்ற நோக்கத்தோடு பகவந் நாமத்தைச் சொல்ல ஓடிவந்து அவர்களை திரளாகச் சூழ்ந்துகொண்டனர். ஆகவே அவர்கள் எல்லாரும் வலைக்குள் அகப்பட்டுக்கொண்டனர். பகவந் நாமமாகிய அமிர்தத்தின் இன்பத்தைச் சிறிது சிறிதாகச் சுவைத்ததும் அவர்கள் நித்தியானந்த சுவாமி சொன்ன வார்த்தைகளின் உட்கருத்தை யறிந்துகொண்டனர். ஈசுவரனிடம் பூரண பக்தி செய்வதாலுண்டாகும் ஆனந்த பாஷ்பந்தான் நல்லுணவு; பக்தி பரவசமானவன் தன்னையறியாமல் இள நங்கையாகிய தரையைத் தழுவிப் புரளுவதுதான் நாரியர் போகம்.
எத்தனை பிறவிக்குப் பிறகு சாதகன் சாது ஆகிறான் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது.
31. க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச்சாந்திம் நிகச்சதி
கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி
க்ஷிப்ரம் தர்மாத்மா பவதி-விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான், ஸஸ்வத் ஸாந்திம் நிகச்சதி-நித்திய சாந்தியு மெய்துவான், கௌந்தேய-குந்தி மகனே, மே பக்த:-என்னுடைய பக்தன், ந ப்ரணஸ்யதி-அழிவதில்லை, ப்ரதி ஜாநீஹி-சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள்.
பொருள் : அன்னவன் விரைவிலே அறவானாவான்,நித்திய சாந்தியு மெய்துவான்.
குந்தி மகனே; குறிக்கொள்! என தன்பன் சாகமாட்டான்.
வால்மீகி, கண்ணப்பர் முதலாயினோர் முதலில் துராசாரமுடையவர்களாயிருந்தார்கள். ஏனென்றால் மேலோர்களால் ஆமோதிக்கப்படாத வாழ்க்கை முறை அவர்களிடத்திருந்தது. பகவத்பக்தியில் அவர்கள் மனது திரும்பியது. அதே பிறவியில் அதிவிரைவில் அவர்களது வாழ்க்கை மாறியது. அறச்செயலுக்கு அவர்கள் இருப்பிடமானார்கள். முன்பு அறிந்திராத நித்திய சாந்தியும் அவர்களுக்கு உண்டாயிற்று. அவர்கள் கேடு அனைத்தும் நீங்கப்பெற்று, நலம் அனைத்தும் அடைவாராயினர்.
கண்ணனிடத்து மாறாத பக்தி பூண்டு வாழ்ந்தவர்கள் பாண்டவர்கள். அவர்கள் ராஜ்யத்தை இழந்தார்கள்; ஆபத்துக்கள் பல நேர்ந்தன; கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்தது; வனவாசத்தில் படாத பாடுபட்டனர். ஆனால் பக்தியை மட்டும் அவர்கள் கைவிடவில்லை. கிருஷ்ணனைச் சார்ந்து இருந்தது ஒன்றே அவர்களுக்கு எல்லா வல்லமையையும் ஊட்டியது. நித்திய வாழ்க்கையை அவர்களே பெற்றனர். பிரஹ்லாதன், அப்பர் முதலாயினோர் வாழ்க்கையும் இதற்குச் சான்றாகும். பக்தர்களுக்கு அழிவில்லையென்பதைப் பக்தர்களுடைய வாழ்க்கையே விளம்பரம் செய்கிறது.
கடைத்தரமான பாபிகளும் கடைத்தேற முடியும் என்று சொல்லியான பிறகு இடைத்தரமானவர்களைப் பற்றிய பேச்சு வருகிறது. அதாவது :
32. மாம் ஹி பார்த வ்யபாஸ்ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய:
ஸ்த்ரியோ வைஸ்யாஸ்ததா ஸூத்ராஸ்தேऽபி யாந்தி பராம் கதிம்
ஹி பார்த-ஏனெனில் பார்த்தா, ஸ்த்ரிய: வைஸ்யா: ஸூத்ரா:-பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும், ததா-அதே போல, பாபயோநய:-பாவிகளானாலும், யே அபி ஸ்யு:-எவர்களாக இருந்தாலும், தே அபி மாம் வ்யபாஸ்ரித்ய-அவர்களும் என்னை தஞ்சமடைந்து, பராம் கதிம் யாந்தி-மேலான கதியை அடைகிறார்கள்.
பொருள் : பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார்.
மனபரிபாகத்துக்கு ஏற்றாற்போல பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது. ஈண்டு இயம்பப்பட்ட மூவரும் கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையவர் அல்லர். பேதைமையே பெண்டிரது இயல்பு. திண்மை வாய்ந்திருக்கும் தையலர் மிகக் குறைவு. அத்தகைய சிறுபான்மையர் விதிக்கு விலக்கானவர் என்றே சொல்லாம். ஆக, பொதுவாகப் பெண்மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும்; இழிச்சொல் அல்ல.
இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்படுகிற பொருளைச் சேகரிப்பதிலேயே மனதை வைப்பவர்கள் வைசியர்கள். அருளை நாடாது, பொருளை நாடுதலே அவர்களது போக்கு. ஜடப்பொருளை எண்ணுகின்றவளவு ஜட புத்தியே அவர்களிடத்து வலுக்கிறது. அத்தகைய பிரவிருத்தியையுடைவர்களெல்லாம் கீழான பிறவியை யுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அதிலும் கீழ்ப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால் பிறரிடத்து அடிமைத்தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும். ஜீவனோபாயத்தின் பொருட்டுத் தம் வாழ்க்கையை யார் பிறரிடத்து ஒப்படைக்கின்றனரோ அவரே சூத்திரர். இவ்வுலகம் ஒன்றைமட்டும் அறிந்து, அதைச் சார்ந்திருக்கும் அன்னவர் இறைவனைச் சார்கிறதில்லை. அழுக்குப் படிந்த உடல் நீராடுவதால் சுத்தியடைகிறது. பரமனைப் பக்தியுடன் போற்றுவதால் சித்தமலம் அகலுகிறது; மனம் குவிகிறது; பரபோதம் ஓங்குகிறது; பரகதியும் கைகூடுகிறது.
கீழான பிறவி ஒருநாளும் பக்திக்கு இடைஞ்சல் அல்ல. கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின்றன. புண்ணியநதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன. அங்ஙனம் கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். செயலில் அல்லது பிறவியில் கீழோரும் பக்தியால் மேலோர் ஆகின்றனர். கடவுளின் அருள் அவர்களை மேலோர் ஆக்குகிறது. கடவுளை அடையத்தகாதார் என்பார் எவருமில்லை.
புயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல பக்தி என்னும் புயற்காற்று ஒருவனுக்குள் அடிக்கும்போது அவனிடம் ஜாதிபேதம் இருக்க முடியாது.
இனிப் பாரமார்த்திகத்துக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் நிலை யாது?
33. கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா
அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்
புண்யா:-புனிதமான, ப்ராஹ்மணா: ராஜர்ஷய: பக்தா:-அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின், கிம் புந:-சொல்லவும் வேண்டுமோ! அநித்யம் அஸுகம்-நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய, இமம் லோகம் ப்ராப்ய-இவ்வுலகப் பிறவி யெய்திய நீ, மாம் பஜஸ்வ-என்னை வழிபடக் கடவாய்.
பொருள் : அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின், என்னே! ஆதலால்; நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய இவ்வுலகப் பிறவி யெய்திய நீ என்னை வழிபடக் கடவாய்.
மேலே சொன்ன பாபயோனிகளுக்கு எதிரிடையாக இங்குப் புண்ணியவான்கள் பகரப்படுகின்றனர். அவை கீழான பிறவிகளாவது போன்று, இவை மேலான பிறவிகளாகின்றன. ஏனென்றால் பிரம்மரிஷிகளும் ராஜரிஷிகளும் சர்வேசுவரனிடத்து அனன்னிய பக்தி பண்ணுவதையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். அறம் வளர்ப்பவர் அந்தணர் ஆகின்றனர். அறம் வழங்குபவர் அரசர் ஆகின்றனர்.
கேணியில் நீர் ஊறவும் வேண்டும்; உண்ணுதற்கு அதை உலகுக்கு எடுத்து வழங்கவும் வேண்டும். மரம் காய்த்துப் பழுக்கவும் வேண்டும்; அதை உலகுக்கு உணவாகக் கொடுக்கவும் வேண்டும். திரவியத்தை மணலுக்கு ஒப்பாகத் தள்ளி விட்டுத் தவத்தையே தனமாகத் தேடுபவர், ஈசுவர சேவையிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பவர், ஈசுவர பக்திக்குப் புறம்பாகிய எதற்கும் சிந்தையில் இடங்கொடாதவர் அந்தணர் ஆகின்றனர். அவர்களது நல்வாழ்க்கையால் அறம் வளர்கிறது. உயிர்களை அல்லும் பகலும் அறநெறியில் ஓம்புதலே அரசர் செயல். அதுவும் சிறந்த ஈசுவர சேவையாகின்றது. ஆக, கடவுள் வழிபாட்டுக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் கடவுளையடைதற்குச் சந்தேகம் யாதுளது?
கீழான மனதையுடையவர் நிலையற்ற உலகத்தை நிலைபெற்ற உலகம் என்று எண்ணி, அதில் பற்று வைக்கின்றனர். இயற்கையில் எவ்வுயிரை அல்லது எப்பொருளைப் பார்த்தாலும் அது அழியும் தன்மையுடையது என்ற உண்மையையே அது ஓயாது புகட்டிக்கொண்டிருக்கிறது. வளரும் வாலிபன் மரணத்தை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறான் அல்லவா? நேற்றுப் பச்சிலையாயிருந்தது இன்று உதிர் சருகு ஆகின்றது. அணு முதல் அண்டம் வரையில் எல்லாம் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளிடத்து அமையும் மாறுதலே இன்பத்தைத் துன்பமாகச் சமைக்கிறது.
இன்று பிள்ளை பிறந்தான் என்ற பூரிப்பானது நாளை அவன் இறந்தான் என்ற வாட்டமாகிறது. வெற்றி என்ற மகிழ்ச்சி, தோல்வி என்ற துன்பமாக மாறுகிறது. தவளையின் பின்னங்காலைப் பாம்பு பிடித்துக்கொண்டது; அதை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டது. அதற்கிடையில் தன்னெதிரே வந்த பூச்சியொன்றைத் தவளை பிடித்துத் தின்று திருப்தியடைகிறது. இங்ஙனம் மனிதனை நமன் பற்றிக்கொண்டான்; காலத்தைக்கொண்டு அளந்து அவனை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டான். அதைப் பொருட்படுத்தாது உலகம் தருகிற இன்பத்தை நுகர்ந்து அவன் இறுமாந்திருக்கிறான். அறிவுடையோனுக்கு இது பொருந்தாது. அநித்தியமும் அசுகமுமான இவ்வுலகைப் பெற்றதனால் ஆய பயன் ஒன்றே உளது. அது யாது எனின், இதைப் பொருட்படுத்தாது சர்வேசுவரனைப் பஜித்தலேயாம். அதுவே செயற்கரிய செய்கையாகும்.
எந்த வழியாக நமக்கு ஈசுவர தரிசனம் கிடைக்கும்?
உருகிய உள்ளத்துடன் அவனுக்காக உன்னால் கதறியழ முடியுமா? மனைவி, மக்கள், பொன், பொருள் இவைகளுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் உகுக்கிறார்கள். ஆனால் இறைவன் வேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை விளையாட்டுப் பொருள்ளோடு ஈடுபட்டிருக்கும் வரையில் தாய் தன் சமையல் வேலைகளையும் இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டுக் கருவிகள் பசியை நீக்குகின்றதில்லை. எனவே குழந்தை அவைகளை வீசி எறிந்துவிட்டுத் தாயை வேண்டிக் கோவென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், சாதத்தின் கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாலும் கூட எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து குழந்தையை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொள்கின்றாள். இறைவன் அங்ஙனம் பக்தனை ஓம்புகிறான்.
அவனைப் போற்றும் விதம் வருமாறு :
34. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:
மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு, மத்பக்த:-பக்தியை எனக்காக்கு, மத்யாஜீ-என்னைத் தொழு, மாம் நமஸ்குரு-என்னை வணங்கு, ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி, மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.
பொருள் : மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.
மனது முழுதும் ஈசுவர எண்ணத்தால் நிறையப் பெறவேண்டும். ஒருவனை வெறுத்தால் அல்லது ஒருவனுக்கு அஞ்சினால் மனது முழுதும் அவனைப்பற்றிய எண்ணமுடையதாகிறது. அப்படிச் செய்யாது பக்தியோடு கூடிய பேரன்பு ததும்பிய எண்ணமாயிருக்கவேண்டும். சிறுவன் ஒருவனுக்குத் தன் தாயினிடத்து அத்தகைய நிறைமனதும் பேரன்பும் உண்டாகின்றன. ஆனால் அவனுக்கு ஆகவேண்டிய காரியங்களையெல்லாம் தாய் செய்து முடிக்க வேண்டும் என்று அச்சிறுவன் எதிர்பார்க்கிறான். அர்ஜுனா, நீ அப்படிச் செய்யாதே, என்னிடத்து பக்தி பண்ணுவதோடு சேர்த்து எனக்கு யாகம் செய். அதாவது நீ வாங்கிப் பிழைப்பவனாக உலகத்தில் வாழாது பெருங்கொடையாளியாயிரு. அப்படி எங்கு யாருக்கு எதைக் கொடுத்தாலும் அதை என்னுடைய ஆராதனையாகக் கருது. நான் கொடையாளி என்ற கர்வம் வராதிருத்தற்பொருட்டு, உன் கொடையை ஏற்றுக்கொள்பவர்களையெல்லாம் என் சொரூபமாகக் கருதி நமஸ்காரம் செய்.
பகவானை அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பக்தியும் பூஜையும் சேவையும் சர்வகாலமும் செய்துவரவேண்டும். அதனால் உள்ளம் யோகத்தில் உறுதியடைகிறது. துரு நீங்கப்பெற்ற இரும்பு காந்தத்தினிடத்தில் சேர்வதுபோன்று பக்தியில் பண்பட்ட மனது பகவானிடம் சேர்கிறது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ராஜவித்யா ராஜகுஹ்யயோகோ நாம
நவமோ அத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம்.
-
பத்தாம் அத்தியாயம் (http://temple.dinamalar.com/news.php?cat=175)
விபூதி யோகம்
பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. அவரே அமரர்க்கும் முன்னோர். அவரே பிறப்பிலர். அவரே இறைவன். அவரே உயிர்களனைத்தின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆத்மா. அவரே வேதங்களுள் சிறந்த சாம வேதம். தேவரில் இந்திரன், ருத்திரர்களில் சங்கரன். மலைகளில் மேருமலை, சப்தங்களுள் பிரணவம். ஸ்தாவரங்களுள் இமயமலை. மரங்களுள் அரச மரம். மனிதர்களுள் அரசன்.
பசுக்களில் காமதேனு. அசுரருள் பிரகலாதன். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துகளுள் அ என்னும் முதலெழுத்து, மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவையெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப் பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரை விட்டுத் தனித்து நிற்க முடியாது. அனைத்துக்கும் ஆதிமூலமாயிருப்பவர் பகவான் 1-6 -ஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9 -அதனால் புத்தியோகம் உண்டாகிறது 10-11 -தெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18 -தமது சிறப்பு இயல்புகளை பகவான் விளக்குகிறார் 19-40 -விபூதிகளின் ஸாரம் 41-42.
ஸ்ரீபகவாநுவாச
1. பூய ஏவ மஹாபாஹோ ஸ்ருணு மே பரமம் வச:
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா
ஸ்ரீபகவாநுவாச-பகவான் சொல்லுகிறான், மஹாபாஹோ-பெருந்தோளுடையாய், ப்ரீயமாணாய-மிகவும் அன்பு கொண்டவனான, தே அஹம்-உனக்கு நான், ஹிதகாம்யயா-உன் நலம் கருதி, யத் பூய ஏவ வக்ஷ்யாமி-எதை மீண்டும் கூறுவேனோ, மே-என்னுடைய
பரமம் வச:-மிகவும் உயரிய அந்த வாசகத்தை, ஸ்ருணு-கேள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே.
பகவத் விபூதியைக் கேட்பதில் அர்ஜுனன் கொண்டுள்ள பிரியத்தை பகவான் பெரிதும் பாராட்டுகிறார். கேள்வியில் முயற்சியுடையார்க்கு அதை எடுத்துச் சொல்லுதலில் சொல்லுபவர்க்கு ஊக்கம் பிறக்கும். அதை இங்குக் காண்கிறோம். புகட்டுபவர் அதிசயிக்கத் தகுந்த மேலானவர்; அதைக் கேட்கப் பெறும் சிஷ்யன் கெட்டிக்காரன் என்ற வேதாந்த வாக்கியம் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுனனாகிய இவ்விருவர் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அமிர்தபானம் பண்ணுவது போன்று அர்ஜுனன் அவரது அருள்மொழியைக் கேட்கின்றான்.
ஏழாவது அத்தியாயத்திலும் ஒன்பதாவது அத்தியாயத்திலும் பகரப்பட்ட பொருள் இங்கு மீண்டும் விளக்கப்படுகிறது. உருக்கிய பொன்னைத் திரும்பவும் உருக்கினால் அது மாசு நீங்கி ஒளிவீசும். அவ்வாறே பகவத் விபூதியை ஆராய ஆராய உபாசனை வலுக்கிறது; பக்தி பெருகுகிறது; தியானம் தெளிவுபடுகிறது; பரமவஸ்துவைப்பற்றிய மெய்ம்மொழியாதலால், அச் சொல்லும் பரம வசனமெனப்படுகிறது. விளைநிலத்தின் நலம் கோலும் வேளாளன் அதைப் பண்படுத்துகிறான். அங்ஙனமே பார்த்தனது ஹிதத்தில் காமுற்ற கிருஷ்ண பகவான் பரம வசனத்தைப் பகர்கிறார்.
அப்படி ஒரு மனிதனோடு பேசிக்கொண்டிருப்பதனால் காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டவர்போன்று தென்படுகிற இறைவனது உண்மை இயல்பு இத்தகையது என்பதை அவரே ஈண்டு இயம்புகிறார் :
2. ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:
அஹமாதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ:
ஸுரகணா: மே ப்ரபவம் ந விது:-வானவர் கணங்கள் என் மகிமையை உணரார், மஹர்ஷய: ந-பெருந்தகை முனிவருமுணரார், ஹி அஹம் ஸர்வஸ:-ஏனெனில் நான் எல்லாவிதங்களிலும், தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஆதி-வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.
பொருள் : வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவருமுணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.
பிள்ளையின் பிறப்பு முதலியவைகளைப் பிதா அறிகிறார். ஆனால் பிதாவின் பிறப்பு, பால்யம் முதலியவைகளைப் புத்திரன் ஒருநாளும் அறியான். பரம புருஷனிடத்திருந்து பிரம்மா முதலிய தேவர்களும், பிருகு முதலிய ரிஷிகளும் தோன்றினார்கள். சூரியனிடத்திருந்து கிளம்பிய கிரணம் சூரியனை முற்றும் அளந்து அறிய இயலாதது. அதுபோன்று தங்களுக்கு முதற்காரணமாயுள்ள பரம புருஷனுக்கு உற்பத்தி காண தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இயலாது.
உண்மையில் அவனுக்கு உற்பத்தி இல்லவே இல்லை. பிறவாத அவன் பிறப்பவன் போன்று அவதாரங்களில் காட்டுகிறான். அப்படி மனித வடிவெடுத்திருக்கையிலும் அவனது மகிமையை முழுதும் யார் அறிவார்? பிரபவம் என்பதற்கு மகிமை என்று பொருள் உண்டு. அனைத்துக்கும் முதற்காரணனாகிய அவள் பெருமையை அவன்தான் உணர்வான்.
பிரம்மமாகிற சமுத்திரத்திலிருந்து வீசும் காற்று, அது மோதும் ஒவ்வொரு ஹிருதயத்தையும் விகஸிக்கச் செய்கின்றது. ஸனகர், ஸனந்தனர் முதலிய பூர்வ ரிஷிகள் இந்தக் காற்றினால் பக்குவமாயினர். ஈசுவர பிரேமையால் பைத்தியங்கொண்ட நாரதர் கொஞ்ச தூரத்திலிருந்து அதை ஸமுத்திரத்தைத் தரிசித்தனர் போலும்! அது காரணமாக அவர் தம்மையே மறந்து சதா சர்வகாலமும் ஸ்ரீ ஹரியின் புகழைப் பாடிக்கொண்டு, பித்தரைப் போல உலகமெங்கும் திரிகின்றார். பிறவித் துறவியான சுகதேவர், அந்த மஹாஸமுத்திர ஜலத்தை மூன்றுதரம் கையினால் தொட்ட மாத்திரத்தில் பரிபூரண ஆனந்தத்தினால் குழந்தையைப்போல் அங்கும் இங்கும் ஓடியாடிக்கொண்டிருக்கிறார். லோக குருவாகிய மஹாதேவர், அந்த ஸமுத்திர ஜலத்தில் மூன்று கை அள்ளிக் குடித்ததனால், திவ்யானந்தப் பித்தேறி, பிணம்போல அசைவற்றுக் கிடக்கிறார். இந்த மஹா சமுத்திரத்தின் ஆழத்தையோ அல்லது அபூர்வ சக்தியையோ எவரால் கண்டுபிடிக்க முடியும்?
அவனைப்பற்றி ஒன்றுமே தெரிந்துகொள்ள முடியாதோ என்ற கேள்விக்கு விடை வருகிறது :
3. யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஸ்வரம்
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே
அஜம் அநாதிம் லோகமஹேஸ்வரம் ச-பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று, ய: வேத்தி-எவர் அறிகிறாரோ, மர்த்யேஷு அஸம்மூட: ஸ-மானிடருக்குள்ளே மயக்கம் தீர்ந்த – தெளிந்த அறிவுடைய அவர், ஸர்வபாபை: ப்ரமுச்யதே-பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்.
பொருள் : பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்.
இயற்கையில் காணப்படும் பொருள்களெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியவைகள். மரத்திலிருந்து விதை உண்டாகிறது. பிறகு விதையிலிருந்து மரம் உண்டாகிறது. இவ்வாறு காரண காரிய மயமாக அவைகளிடத்துப் பெருந் தொடர்பு உண்டு. இக்கோட்பாட்டின்படி பரமாத்மாவினிடத்திருந்து தேவர்களும் ரிஷிகளும் உண்டானார்களானால், அப்பரமாத்மா யாரிடத்திருந்து உண்டானார் என்ற கேள்வி பிறக்கக்கூடும். இதற்கு விடையாக அவர் தம்மை அனாதி என்று சொல்லுகிறார். அவருக்குத் துவக்கம் கிடையாது. ஆகையால் அவர் பிறவாதவர் ஆகிறார். கானலில் நீர் தோன்றுவதுபோன்றும், சூரியனிடத்திருந்து கிரணங்கள் வருவது போன்றும், கடலிலிருந்து ஆவியாக நீர் வருவதுபோன்றும் சர்வேசுவரனிடத்திருந்து சரம் அசரம் ஆகிய அனைத்தும் தோன்றுகின்றன. அதனால் அவரிடத்து ஒரு குறையும் ஏற்படுவதில்லை. யாண்டும் நிறைபொருளாகவே இருக்கிறார். அவருடைய முன்னிலையில் இந்த உலகங்களின் நடைமுறை கோணலின்றிக் காரியப்படுகிறது. அணுவும் அவரது ஆணையை மீறி நடப்பதில்லை. ஆதலால் அவர் லோக மகேசுவரன் என்று அழைக்கப்படுகிறார்.
மடியும் தன்மையுடைய மக்களுக்கு மடியாப் பொருளைப் பற்றிய உண்மை தெரிவதில்லை. பக்தி சாதனத்தால் சித்த சுத்தி அடையப் பெறுபவர் சர்வேசுவரனது விபூதியைச் சிறிது அறிகின்றனர். அழியும் பொருள்களுக்கு ஆதாரமாயுள்ள அழியாப் பொருள் அவர் என்பது ஓரளவு விளங்குகிறது. அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிற வெட்டவெளியை ஒரு சிறு துவாரத்தின் வாயிலாகப் பார்ப்பது போன்றது அது. சுவானுபூதியில் அவரது விபூதியை அறிபவனுக்கு மயக்கம் ஏற்படுவதில்லை. சர்வேசுவரனுக்குப் புறம்பாக உலகத்தையும் வாழ்க்கையையும் பொருள்படுத்துவதே பாபம். மயக்கத்திலிருந்து தெளிவடைந்து ஈசுவரக் காட்சியைக் காண்பவன் பாபத்திலிருந்து விடுபடுகிறான்.
மேலே மொழிந்தது அவருடைய அபிராகிருத விபூதியாம். அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டது. பிரகிருதியோடு சேர்ந்த விபூதிகளும் பல உண்டு. அவையாவன :
4. புத்திர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஸம:
ஸுகம் து:கம் பவோऽபாவோ பயம் சாபயமேவ ச
5. அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யஸோऽயஸ:
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக்விதா:
புத்தி: ஜ்ஞாநம் அஸம்மோஹ:-மதியும், ஞானமும், மயக்கமின்மையும், க்ஷமா ஸத்யம் தம: ஸம:-பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், ஸுகம் து:கம் பவ: அபாவ:-இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், பயம் ச அபயம் ஏவ ச-அச்சமும், அஞ்சாமையும்.
அஹிம்ஸா ஸமதா துஷ்டி-துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், தபோ தாநம் யஸ: அயஸ:-தவமும், ஈகையும், புகழும், இகழும், பூதாநாம் ப்ருதக்விதா: பாவா-உயிரினங்களுடைய வெவ்வேறான மனப்பாங்குகள் இயல்புகள், மத்த: ஏவ பவந்தி-என்னிடமிருந்தே உண்டாகின்றன.
பொருள் : மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும்,
பொருள் : துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலமிடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள். (4-5)
புத்தி-நுண்ணறிவு அல்லது ஆழ்ந்த கருத்துக்களை வாங்க வல்ல அந்தக்கரணம். ஞானம்-ஆத்மாவை அறியவல்ல இயல்பு. அஸம்மோஹம்-எந்த நெருக்கடியிலும் மனக்குழப்பம் ஏற்படாமை. க்ஷமை-பொறுமை அல்லது பிறரால் தாக்கப்படும் போதும் மனம் நோகாதிருத்தல். சத்தியம்-வாய்மை அல்லது பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் அறிந்தவைகளை அப்படியே பிறர்க்கெடுத்துப் பகர்தல். தமம்-புறக்கரணங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவைகளை அடக்குதல். சமம்-அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவைகளிடத்து அமைதியேற்படுதல். சுகம்-இன்பம் அல்லது ஆஹ்லாதம். துக்கம்-துன்பம் அல்லது சந்தாபம். அஹிம்சை-ஓருயிர்க்கும் தீங்கு செய்யாமை. ஸமதா-விருப்பு வெறுப்புகளை விளைவிக்கும் செயல்களுக்கிடையில் மனது நடுநிலை பிறழாதிருத்தல். துஷ்டி-திருப்தி, சந்தோஷம் அல்லது போதுமென்ற மனநிலை. தபசு-இந்திரியங்களை ஒடுக்குதல், அல்லது உடலை அடக்கியாளுதல். தானம்-தனக்குப் பயன்படும் பொருள்களை மற்றவர்களுக்கும் உவந்தளித்தல். யச:-தர்மம் செய்வதால் வரும் புகழ்ச்சி. அயச:- அதர்மம் செய்வதால் வரும் இகழ்ச்சி.
மின்சாரத்தை ஒரு அடுப்பு, ஒரு தணுப்பைத் தரும் கருவி, ஒரு விசிறி, ஒரு விளக்கு, ஒரு யந்திரம் ஆகிய இவைகளுள் அதனதன் அமைப்புக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். அதுபோன்று, ஜீவர்கள் இவ்வித விபூதிகளை ஈசுவரனிடத்திருந்து அவரவர் வினைக்கேற்றபடி வாங்கிக்கொள்கின்றனர்.
ஈசுவரனுடைய விபூதிகளை ஏராளமாக ஏற்றவர்கள் யார் எனின்:
6. மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா
மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா:
லோகே இமா: ப்ரஜா:-உலகில் இந்த பிரஜைகள் அனைவரும், யேஷாம் ஜாதா-எவரிடம் இருந்து உண்டானார்களோ அந்த, ஸப்த மஹர்ஷய: பூர்வே-சப்த ரிஷிகளுக்கும் முந்தையவர்களான, சத்வார: ததா-சனகர் முதலான நான்கு முனிவர்களுக்கும் அவ்வாறே,
மநவ: மாநஸா: மத்பாவா ஜாதா:-மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர்.
பொருள் : முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.
ஏழு மஹரிஷிகளின் பெயர்கள்-பிருகு, மரீசி, அத்ரி, புலகர், அங்கிரஸ், கிரது, புலஸ்தியர். நான்கு மனுக்களின் பெயர்கள்-சுவாரோசிஷர், சுவாயம்புவர், ரைவதர், உத்தமர்.
ஈசுவரனுடைய மனதிலிருந்து அவனுடைய மானச புத்திரர்களாக ஏழு மஹரிஷிகளும் பதினான்கு மனுக்களில் முக்கியமானவர்கள் நால்வரும் உண்டானார்கள். தங்களுடைய மனதை அவர்கள் எப்பொழுதும் சர்வேசுவரனிடத்தே வைத்திருந்தபடியால் ஈசுவர பிரபாவம் அவர்களுக்கு உண்டாயிற்று. மனது எதை உபாசிக்கிறதோ அதன் தன்மைகளை எடுத்துக்கொள்ளவல்லது. ஆகையால்தான் அது ஈசுவரனிடத்தே வைக்கப்படவேண்டும்.
ஈசுவரனிடத்திருந்து உதித்த ஞானத்தைக்கொண்டு ஏழு ரிஷிகள் உலகில் ஞானத்தைப் பரப்பி வந்தார்கள். அவனிடத்திருந்து வந்த ஐசுவரியத்தைக்கொண்டு நான்கு மனுக்கள் உலகையெல்லாம் ஆண்டுவந்தார்கள். இன்னும் அந்த ஏழு ரிஷிகள் உயிர்வகைகள் அனைத்தையும் சிருஷ்டித்தார்கள். மனுக்களோ அவைகளைப் பரிபாலித்தார்கள். இங்ஙனம் சிருஷ்டிக்கிரமம் நடைபெறுகிறது. ஏழு பிறப்பு என்பது ஏழு படித்தரங்களாயுள்ள ஞான பூமிகளாம். சராசரங்களாகிய உயிர்வகைகள் அனைத்தும் ஏழு ஞான பூமிகளில் அடங்கப்பெறுகின்றன. அவைகளின் உருவகமாயிருப்பவர்கள் ஏழு ரிஷிகள். ஆக, எல்லா உயிர்களுக்கும் மூலமாக இந்த ரிஷிகள் அமைகிறார்கள்.
ஈசுவரனுடைய இத்தகைய வல்லமையைத் தெரிந்துகொள்பவனுக்கு உண்டாவது யாது? விடை வருகிறது:
7. ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத:
ஸோऽவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஸய:
ய: மம-எவன் என்னுடைய, ஏதாம் விபூதிம் யோகம் ச-இத்தகைய எனது பெருமையும் யோகந்தனையும், தத்த்வத: வேத்தி-உள்ளவாறு உணர்வோன், ஸ: அவிகம்பேந யோகேந யுஜ்யதே-அவன் அசைவில்லாது யோகத்தில் அமர்கிறான், அத்ர ஸம்ஸய: ந-இவ்விஷயத்தில் ஐயமில்லை.
பொருள் : இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் அசைவிலா யோகத்தமர்வான்; இதிலோர் ஐயமில்லை.
பகவானே இத்தனை விதமான விரிவுகளை அடையவல்லவனாதலால் அவை யாவும் அவனுடைய விபூதிகளாகின்றன. இத்தனையுமாய் விரிந்தபின் அவன் அவைகளோடு எத்தகைய இணக்கம் வைத்திருக்கிறான் என்பதை ஆராயுங்கால் அவனுடைய யோகம் அறியப்படுகிறது. தீயின் தன்மையை உள்ளபடி அறிகிறவர்கள் அதில் கையை வைத்துக் காந்திப்போக விடமாட்டார்கள். ஆனால் அதைச் சமைப்பதற்கென்று நன்கு பயன்படுத்துவார்கள். ஈசுவரனுடைய விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி பேரறிவுகொண்டு அறிகிறவர்கள் அவனிடத்துத் தளராத இணக்கம் அல்லது அசையாத யோகம் வைப்பார்கள்.
எண்ணெய் இல்லாதுபோனால் விளக்கு எரியாது. அதுபோல ஈசுவரனில்லாமற் போனால் மனிதன் ஜீவித்திருக்க முடியாது.
அசையாத யோகம் என்றால் என்ன? விடை வருகிறது :
8. அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:-நான் அனைத்திற்கும் தொடக்கம், மத்த: ஸர்வம் ப்ரவர்ததே-என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது, இதி மத்வா-என்று புரிந்து கொண்டு, பாவஸமந்விதா: புதா:- நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள், மாம் பஜந்தே-என்னை தொழுவார்.
பொருள் : நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.
செடிகளின் வளர்ச்சிக்கு முதற்காரணம் பூமி என்று அறியும் கிருஷிகர் அந்தப் பூமியைப் பண்படுத்தலிலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். உலகு அனைத்துக்கும் முதற்காரணம் கடவுள் என்றும், கடவுளிடத்து மனதைத் திருப்புகிறவர்களுக்கே தெய்வப்பெற்றிகள் யாவும் வந்தமைகின்றன வென்றும் அறியும் சான்றோர் அன்புடன் தங்கள் மனதைக் கடவுளிடத்துத் திருப்புகிறார்கள். ஏது நிகழ்ந்திடினும் அவர்கள் மனது கடவுளைவிட்டு மாறுவதில்லை. செடி பூமியைப் பற்றிக்கொண்டிருப்பதுபோன்று அவர்களது இயல்பு முழுதும் ஈசனையே பற்றிக்கொண்டிருக்கிறது. அப்படி அவனைப் பற்றுமளவு யோகம் அசைவற்றதாகிறது.
வாழ்க்கையில் மனிதன் கொண்டுள்ள வெவ்வேறு இயல்புகளுக்கு ஈசுவர உபாசனையில் இடமில்லையா? விடை வருகிறது :
9. மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச
மத்சித்தா-அகத்தினை என்பால் வைத்து, மத்கதப்ராணா-உயிரை என்னுள்ளே புகுத்தி, பரஸ்பரம்-தங்களுக்குள்ளே, போதயந்த: ச-விளக்கிக் கொண்டும், கதயந்த: ச-(என்னுடைய புகழைப் பற்றி) பேசிக் கொண்டும், நித்யம் துஷ்யந்தி ச மாம் ரமந்தி-எப்போதும் மகிழ்கிறார்கள்; என்னிடமே இன்புறுகிறார்கள்.
பொருள் : அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை யருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.
விரும்பிய பொருளில் மனதை வைப்பது மிக எளிது. தாய் தந்தையர்களிடத்திருந்து தங்களுக்கு எல்லாம் வந்தமைந்தனவென்று அறியும் குழந்தைகள் முழுமனதையும் அவர்களிடத்தே திருப்புகின்றனர். தனக்குத் தோற்றமும் இருப்பிடமும் பகவான் என்பதை அறிகிற பக்தன் தன்னுடைய உள்ளத்தை இறைவன் பால் வைக்கிறான். தான் வளர்ந்தபின் பெற்றோரைப் பேணப் பிள்ளை ஒருவன் தன் உயிரையே கொடுக்கிறான். உயிரினும் மிக்க தொன்று யாருக்குமில்லை. பக்தன் அதைப் பகவானுக்குக் கொடுக்கிறான். காதலன் காதலிக்கு உயிர்கொடுப்பது போன்றது அல்ல பக்தன் செயல். காதலில் தனி நலமும் தனியுரிமையும் இருக்கிறது. பக்தியில் மற்றவர்கள் எல்லாரும் சேர வேண்டுமென்று, தான் பகவானைக் காண்கிறவாறு மற்றவர்களுக்கு பக்தன் விளக்குகிறான். மற்றவர் புகட்டுவதையும் தெவிட்டாது சுவைக்கிறான். அதைப் பலதடவை சொல்லுதலிலும் கேட்பதிலும் மகிழ்வு வருகிறது. ஆனால் சிற்றின்பம் போன்று அது முடிவில் மனக்கிலேசத்தையோ, குறையையோ உண்டுபண்ணுவதில்லை. பக்தியினால் என்றைக்கும் நிறை மனது அமையப்பெறுகின்றது. அந்த நிறைவில் ஆனந்தமும் ஓயாது ஊற்றெடுக்கிறது.
வெறுங் கண்ணாடியில் யாதொரு உருவமும் பதிவதில்லை. ஆனால் தகுந்த ரசாயனப் பொருளை அக்கண்ணாடியின்மேல் பூசிய பிறகு, படங்களை எழுதலாம். அதுபோல பக்தியாகிய ரசாயனப் பொருளை ஹிருதயத்தின்மீது தடவினால், ஆங்கு ஈசுவரனுடைய ரூபத்தைப் பதியச் செய்யலாம்.
இங்ஙனம் பக்தி பண்ணுகிறவர்களிடத்து பகவான் எப்படி நடந்துகொள்கிறார்? விடை வருகிறது :
10. தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே
ஸததயுக்தாநாம்-எப்போதும் யோகத்தில் இருப்பாராகில், ப்ரீதிபூர்வகம் பஜதாம்-அன்புடன் என்னை வழிபடும், தேஷாம்-அவர்களுக்கு, யேந-எந்த உபாயத்தின் மூலம், மாம் உபயாந்தி-என்னை அடைவார்களோ, தம் புத்தியோகம் ததாமி-அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்.
பொருள் : எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னை யவர் எய்துவார்.
சர்க்கரையை நாவில் வைத்தால் அது தித்திக்கிறது என்பது தெரிகிறது. பிறகு அந்தச் சர்க்கரையை என்னென்ன வகைப் பட்சணங்களாகச் செய்தால் அதன் சுவையை நன்கு ரசிக்கலாம் என்று அறிவது சர்க்கரையைப் பற்றிய புத்தியோகமாகிறது. உள்ளன்போடும் உறுதியாகவும் யோகத்தில் நுழைபவர்க்கு இறைவனது மகிமை கொஞ்சம் விளக்குகிறது. அது யோகத்துக்கு இன்னும் தூண்டுகோலாகிறது. பகவான் தந்து கொண்டே வருகிற புத்தியோகத்தால் அவருடைய சொரூபம் மேலும் மேலும் அறியப்படுகிறது. அவருடைய சொரூபத்தைத் தொடர்ந்து அறியுமளவு பக்தன் இன்னும் அதிகமாகப் பகவானைச் சார்ந்து நிற்கிறான். இங்ஙனம் புத்தியோகத்தின் மூலம் பக்தி வளர்கிறது.
ஒரு சிறு துவாரத்தின் வழியாக ஒரு இருட்டறைக்குள் ஒரு கிரணம் வெளிச்சம் வருகிறது. அவ்வறைக்குள்ளிருப்பவனுக்கு வெளிச்சத்தைப் பற்றியிருக்கும் அபிப்பிராயமானது அந்தக் கிரணத்தின் அளவுக்குத் தகுந்தபடிதானிருக்கும். கதவுகளிலும் ஜன்னல்களிலும் துவாரங்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமான வெளிச்சம் வரும். அதைப்பற்றிய அறிவும் அதிகரிக்கும். அக்கதவுகளையும் சாளரங்களையும் நன்றாகத் திறந்துவிட்டால் வெளிச்ச மயமாக அவ்வறை இருப்பதை அவன் காண்பான். ஆனால் வெட்ட வெளியில் நிற்பவனோ வெளிச்சத்திலேயே இருக்கிறான். அதுபோல பக்தர்களுடைய சுபாவத்துக்கும் சக்திக்கும் தகுந்தபடி ஈசுவரன் தன்னைத் தோற்றுவித்தருள்கிறான்.
பகவான் கொடுக்கிற புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :
11. தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:
நாஸயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா
தேஷாம் அநுகம்பார்தம்-அவர்களுக்கு இரங்கி நான், ஆத்மபாவஸ்த:-அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று, அஹம் ஏவ-நானே, அஜ்ஞாநஜம் தம:-அறியாமையால் உண்டான இருளை, பாஸ்வதா-ஒளிமயமான, ஜ்ஞாநதீபேந-ஞான வடிவான விளக்கினால், நாஸயாமி-அழிக்கிறேன்.
பொருள் : அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.
அன்பர்களது உள்ளத்தில் நீங்காது குடியிருந்து, அவர்கள் நன்மையடைய வேண்டும் என்று கருதுவது கடவுளின் கருணையாகும். அவர் ஏற்றிவைக்கும் ஞான தீபத்தின் தத்துவங்களாவன: விவேகம் அந்த விளக்கின் உருவமாகிறது. பக்தியினின்று வரும் மனத்திருப்தியே அதற்கு எண்ணெய். விஷக்காற்றில் விளக்கு எரியாது. ஆழ்ந்த ஈசுவரத் தியானமே இவ்விளக்கை எரிப்பதற்கான தூய காற்று ஆகிறது. தடைப்படாத பிரம்ம சரிய விரதத்தால் வளரும் பிரக்ஞை இதற்குத் திரியாகிறது. ஓய்வடைந்த அந்தக்கரணமே இதற்கு அகலாக அமைகிறது. பெருங் காற்று வீசி தீபத்தை அணைத்துவிடலாகாது. விருப்பு வெறுப்பற்ற தெளிந்த மனது அதற்கேற்ற வீடாக அமைகிறது. தங்கு தடையற்ற ஒருமுகப்பட்ட தியானத்தினின்று உதிக்கும் நிறை காட்சியே இத்தீபத்தின் ஒளிப்பிழம்பாகும். இதுவே பக்தனது உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஞான தீபமாகும். இதனால் அவன் கடவுள் காட்சியை உள்ளபடி அடையப்பெறுகிறான்.
தாணாக்காரன் தனது விளக்கின் வெளிச்சம் எவர்மீது படும் படி திருப்புகிறானோ அவரைப் பார்க்கக்கூடும். ஆனால் அந்த விளக்கைத் தன்மீது திருப்பாதிருக்கும் வரையில் அவனை ஒருவராலும் பார்க்க முடியாது. அதுபோல ஈசுவரன் எல்லாரையும் பார்க்கிறான். ஆனால் தனது கிருபை மூலமாக அவன் தன்னைத் தோற்றுவிக்கும் வரையில் ஒருவராலும் அவனைக் காணமுடியாது.
ஈசுவர விபூதியைப்பற்றியும் ஐசுவரியத்தைப்பற்றியும் தான் கேட்டறிந்து கொண்டதன் கருத்தை இப்பொழுது அர்ஜுனன் சொல்கிறான் :
அர்ஜுந உவாச
12. பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்
புருஷம் ஸாஸ்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும்
13. ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், பவாந்-நீங்கள், பரம் ப்ரஹ்ம பரம்தாம-பரப்பிரம்மம்; பரம பதம் (வீடு பேறு), பரமம் பவித்ரம்-தூய்மை அனைத்திலும் சிறப்புடைய தூய்மை, ஸாஸ்வதம் திவ்யம் புருஷம்-என்றும் உள்ளவர் – என்றும், தெய்வீகமான புருஷன் என்றும், ஆதிதேவம் அஜம் விபும்-ஆதி தேவன் என்றும்; பிறப்பற்றவன் என்றும்; எங்கும் நிறைந்தவர் என்றும்.
ஸர்வே ருஷய: த்வாம் ஆஹு-முனிவரெல்லாரும் உன்னைப் பற்றி கூறுகிறார். ததா தேவர்ஷி: நாரத-அவ்வாறே தேவரிஷி நாரதரும், அஸிதோ தேவலோ வ்யாஸ: ச-அசிதரும் தேவலரும் வியாசரும் (கூறுகிறார்கள்), ஸ்வயம் ஏவ மே ப்ரவீஷி-நீயும் அதையே என்னிடம் கூறுகிறாய்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே நித்திய புருஷ னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும்,
பொருள் : முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய்.
பர பிரம்மம் - நிர்க்குண நிருபாதிக பிரம்மம்.
அபர பிரம்மம் - சகுண சோபாதிக பிரம்மம் அல்லது ஈசுவரன்.
பரம் தாமம் - சினிமாப் படம் முழுதுக்கும் திரை இருப்பிடமாவது போன்று சராசரம் அனைத்துக்கும் பிரம்மம் முடிவான இருப்பிடமாகிறது. அனைத்தையும் விளக்கவல்ல பரஞ்ஜோதியும் அதுவே.
ஆதி தேவன் - மற்ற தேவர்களெல்லாம் தோன்றுதற்கு முன்பே இருந்தவன்.
பரமம் பவித்ரம் - நீர், நிலம், தீ முதலியவைகள் தற்காலிகமாகப் பொருள்களைத் தூய்மைப்படுத்த வல்லவைகள். பரபிரம்மத்தைச் சாருமளவு ஜீவர்கள் பிரம்ம சொரூபமாகிறார்கள். அவர்களது குற்றமெல்லாம் அகலுகிறது. ஆகையால் ஜீவர்களைப் புனிதமாக்குபவைகளில் பரபிரம்மம் தலையாயது.
ரிஷி - மனதையும் இந்திரியங்களையும் அடக்கிப் பர தத்துவத்தை சுவானுபவத்தில் கண்டறிந்தவர். தேவ ரிஷிகளில் சிறந்தவர் நாரதர். (12-13)
14. ஸர்வமேதத்ருதம் மந்யே யந்மாம் வதஸி கேஸவ
ந ஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா:
கேஸவ-கேசவா! யத் மாம் வதஸி-எதை என்னிடம் கூறுகிறாயோ, ஏதத் ஸர்வம் ருதம் மந்யே-இந்த அனைத்தும் உண்மையே என்று எண்ணுகிறேன், பகவந் தே வ்யக்திம்-பகவானே! உங்களுடைய ஸ்வரூபத்தை, தாநவா: ந விது:-அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை, தேவா ஹி ந-தேவர்கள் கூட அறிந்து கொள்ள வில்லை.
பொருள் : கேசவா, நினது கிளவி யனைத்தையும் மெய் யெனக் கொண்டேன். பகவனே, விண்ணவரும் அசுரரும் நின் விளக்கத்தை யறிவரோ?
யாரிடத்தில் பலம், தர்மம், ஐசுவரியம், வீரியம், வைராக்கியம், தேஜஸ் ஆகிய இவைகள் ஆறும் நிறைந்திருக்கின்றனவோ அவர் பகவான். பகவான் என்பதற்கு ஷட்குண சம்பன்னன் என்னும் பொருள் உண்டு. இந்த ஆறுவித குணங்களை ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், வீரியம், ஸ்ரீ, கீர்த்தி என்று பொருள்படுத்துவதும் உண்டு. ஜீவர்களுடைய முக்கால நிலையை அறியும் வல்லமை அவருக்குண்டு. பகவானுடைய வியக்தியென்பது அவருடைய பிரபாவம் அல்லது தோற்றம். அவர் அவதரிப்பதன் உட்கருத்து தேவர்களுக்கே விளங்குவதில்லை; இனி, தானவர்கள் அல்லது அசுரர்கள் எப்படி அறியப்போகிறார்கள் ! நல்லோரைக் காப்பதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் அவர் அவதரிக்கிறார் என்பது ஓரளவு சில பக்தர்களுக்குப் புலப்படுகிறது.
சூரியன் பூமியைக் காட்டிலும் பன்மடங்கு பெரியதாயினும், வெகுதூரத்துக்கப்பாலிருப்பதால் ஒரு சிறிய தட்டைப் போலக் காணப்படுகிறது. அதுபோலவே, ஈசுவரன் அளவற்ற மகத்துவமுடையவனாயிருந்தும், நமக்கும் அவனுக்குமிடையே உள்ள தூரத்தினால் நாம் அவனுடைய உண்மையான மகத்துவத்தை அறியச் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் அவனே மூலகாரணமாதலால்:
15. ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புரு÷ஷாத்தம
பூதபாவந பூதேஸ தேவதேவ ஜகத்பதே
புரு÷ஷாத்தம! த்வம்-புரு÷ஷாத்தமா நீ, ஆத்மநா ஆத்மாநம்-தன்னால் தன்னை, ஸ்வயம் ஏவ வேத்த-தானே அறிய வல்லவன், பூதபாவந-பூதங்களானாய், பூதேஸ-பூதத் தலைவனே,
தேவதேவ-தேவ தேவ, ஜகத்பதே-வையத்து இறைவா!
பொருள் : புரு÷ஷாத்தமா, உன்னை நீயே அறிவாய். பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத் திறைவா!
புருஷர்களில் இவர் ஒருவரே அழிவற்றவர், ஒப்பற்றவர்; ஆதலால் இவர் புரு÷ஷாத்தமர். உயிர்களுக்கெல்லாம் இவர் முதற் காரணமாதலால் இவர் பூதபாவனன். படைத்தபின் அவைகளுக்குத் தலைவராயிருக்கிறார். ஆதலால் அவர் பூதேசன். பின்பு, அவைகளையெல்லாம் ஆளுகிறபடியால் அவர் ஜகத்பதி. தமது முழுமகிமையை அவர் தாமே அறிந்துகொள்கிறார். அனந்த கல்யாண குணங்களையுடைய அப்புரு÷ஷாத்தமனை மற்றவர்கள் உள்ளபடி அறிந்துகொள்ள இயலாதவர்கள்.
வைரம் ஒன்றை ஒருவன் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றான். அது என்ன விலைபெறும் என்று அவன் ஒரு கத்தரிக்காய்க்கடையில் கேட்டான். கத்தரிக்காய்க் கடைக்காரன் அதற்கு ஒரு கூடை கத்திரிக்காய் கொடுக்கலாம் என்றான். அரிசிக் கடைக்காரன் அந்த வைரத்துக்கு ஒரு மூட்டை அரிசி கொடுக்கலாம். இப்படி ஒவ்வொருவனும் தன் அறிவுக்கு எட்டியபடி அதை மதிப்பிட்டான். பிறகு ஒரு வைர வியாபாரி அது பத்து லட்சம் ரூபாய் பெறும் என்று மதிப்பிட்டான். இப்படி பிரம்மத்தையும் அவரவர் அறிவுக்கு எட்டியபடி மதிப்பிடுகிறார்கள். பிரம்மமே பிரம்மத்தை முழுதும் அறியும்.
16. வக்துமர்ஹஸ்யஸேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய:
யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி
யாபி: விபூதிபி:-எந்த மகிமைகளால், இமாந் லோகாந் வ்யாப்ய திஷ்டஸி-நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, திவ்யா: ஆத்மவிபூதய:- தெய்வீக சிறப்புடைய பெருமைகளை, த்வம் ஹி-நீயேதான், அஸேஷேண வக்தும் அர்ஹஸி-முழுமையாக கூறுவதற்கு திறமை உள்ளவன்.
பொருள் : எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.
சங்கீதத்தின் மகிமையை சங்கீத வித்வானே நன்கு விளக்க வல்லவன். யானையின் பலத்தை யானையே தன் செயலால் விளக்கவல்லது. அரசனுடைய ஐசுவரியத்தை அரசனே நன்கு எடுத்துச் சொல்ல வல்லவன். அங்ஙனம் ஈசுவர விபூதிகளை ஈசுவர அவதாரமே நன்கு விளக்க வல்லதாகிறது.
ஈசுவரன் தனது கிருபையாலேயே தன்னைத் தோற்றுவிக்கிறான். அவன் ஞான சூரியன். அவனுடைய ஒற்றைக் கிரணமே இவ்வுலகம் முழுமைக்கும் அறிவைக் கொடுத்துள்ளது. அதனால் தான் நாம் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ளவும் பலவிதமான ஞானங்களைப் பெறவும் வல்லவர்களாய் இருக்கிறோம். அவன் தனது ஒளியைத் தனது திருமுகத்திலே திருப்பிக்கொள்ளும் பொழுதுதான் நம்மால் அவனைக் காணமுடியும்.
17. கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோऽஸி பகவந்மயா
யோகிந்-யோகியே! கதம் ஸதா பரிசிந்தயந்-எவ்வாறு எப்போதும் தியானித்து, அஹம் த்வாம் வித்யாம்-நான் உன்னை உணருவேன்? பகவந்!-பகவனே! கேஷு கேஷு பாவேஷு ச-எந்தெந்த ஸ்வரூபங்களில், மயா சிந்த்ய: அஸி-என்னால் தியானிக்குமாறு இருக்கிறாய்.
பொருள் : யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்?
என் மனம் வெளி விஷயங்களில் போய்க்கொண்டிருந்தாலும் அவ்விஷயங்களை நான் எங்ஙனம் பொருள்படுத்தினால் என் எண்ணம் உம்மைப்பற்றியதாக மாறும்? தாய் ஒருத்திக்குத் தன் குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளைப் பார்த்தாலும் குழந்தையின் ஞாபகம் வந்தமைகிறது. எனக்கு அப்படி உலகினை இந்திரியங்கள் மூலமாகப் பார்ப்பதற்கிடையில் உம்மைப்பற்றிய சிந்தனையை வருதற்கு ஏதேனும் உபாயம் உண்டா?
விளையாட்டுப் பழமும் விளையாட்டு யானையும் வாஸ்தவமான பழத்தையும் யானையையும் நினைப்பூட்டுவதைப்போல, ஆராதிக்கப்படும் விக்கிரகங்கள் நித்தியனும் அரூபுயுமான ஈசுவரனை நினைப்பூட்டுகின்றன.
18. விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந
பூய: கதய த்ருப்திர்ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம்
ஜநார்தந-ஜனார்த்தனா, ஆத்மந: யோகம் விபூதிம் ச-உன்னுடைய யோகத்தையும் பெருமையையும், விஸ்தரேண-விரிவாக, பூய: கதய-மற்றொரு முறை சொல்க, ஹி அம்ருதம் ஸ்ருண்வத:-ஏனெனில் அமுதம் போன்ற சொற்கள், மே த்ருப்தி நாஸ்தி-எனக்கு திருப்தி ஏற்படவில்லை (மேலும் கேட்க வேண்டும் போல இருக்கிறது).
பொருள் : ஜனார்த்தனா, நின் யோகத்தையும் பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை.
புக்தி, முக்தி ஆகிய இரண்டின் பொருட்டு ஜனங்களால் ஆராதிக்கப்படுபவர் ஜநார்தனர். இங்கு யோகம் என்பது அனைத்தையும் அறியும் தன்மை, ஆளும் தன்மை ஆகிய இரண்டு இயல்பையும் குறிக்கிறது. எந்தெந்த வஸ்துவின் மூலம் அவன் உபாஸிப்பதற்குத் தகுந்தவனோ, அவையெல்லாம் அவனுடைய விபூதிகளாம். உலகப்பொருள்களெல்லாம் தெவிட்டும் தன்மையுடையவைகள். பகவத் விஷயம் ஒன்றுதான் தெவிட்டாதது. நிலத்திலிருந்து சேறு, சேற்றினின்று சிறு பாண்ட நீர், அதினின்று பெரு நீர்நிலை இவைகளுக்குப் போகப்போக மீன் ஒன்று தன் இயல்பையே இன்னும் உறுதியாகப் பெறுகிறது. அங்ஙனம் ஜீவன் ஈசுவரனுடைய விபூதிகளில் சிந்தையைச் செலுத்துமளவு தன் பேரியல்பையே பெறுகிறான். அதில் போதுமென்ற மனநிலை வருவதில்லை.
ஈசுவரனுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் காந்தத்துக்கும் இரும்புக்குமுள்ள சம்பந்தத்தைப் போன்றது.
ஸ்ரீபகவாநுவாச
19. ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், குருஸ்ரேஷ்ட-குரு குலத்தில் சிறந்தவனே! ஆத்மவிபூதய: திவ்யா:-என் பெருமைகள் தெய்வீகமானவை, ஹந்த-இப்பொழுது,
தே-உனக்கு, ப்ராதாந்யத:-பிரதானமானவற்றை, கதயிஷ்யாமி-சொல்லுகிறேன், ஹி மே-ஏனெனில் என்னுடைய, விஸ்தரஸ்ய-விரிவுக்கு, அந்த: நாஸ்தி-முடிவு இல்லை.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.
இயற்கையின் சிறப்பு அனைத்தும் ஈசுவர விபூதிகளே. அவைகளைச் சொல்லில் அடக்குவது ஈசுவரனுக்கே இயலாது. ஆங்காங்கு முக்கியமான சிலவற்றை மட்டும் எடுத்து மொழிய முடியும். அவைகளினின்று மற்றவைகளை யூகித்து அறிந்து கொள்ளலாம்.
கிரந்தங்களைப் படித்துவிட்டு மட்டும் ஈசுவரனை விவரிக்க முயலுவது தேசப்படத்தில் மட்டும் காசியைப் பார்த்துவிட்டு, அந்நகரைப்பற்றி இன்னொருவனுக்கு விவரிக்க முயல்வதை ஒக்கும்.
உலகைப்பற்றிய முடிவான உண்மையை முதலிலேயே தெரிந்துகொள். அதாவது :
20. அஹமாத்மா குடாகேஸ ஸர்வபூதாஸயஸ்தித:
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச
குடாகேஸ-அர்ஜுனா, ஸர்வபூத ஆஸயஸ்தித: ஆத்மா அஹம்-உயிர்கள் அனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான், பூதாநாம் ஆதி ச-அவ்வுயிர்களின் ஆதி, மத்யம் ச-இடையும்
அந்த: ச அஹம் ஏவ-அவற்றின் இறுதியும் நானே தான்.
பொருள் : அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும் அவற்றின் இறுதியும் யானே.
குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் அல்லது அடர்ந்த கூந்தலையுடையவன் என்று பொருள். தூக்கத்தை வென்று, ஆன்மபோதத்தில் விழிப்பு அடையப் பெறுபவர்க்கே பரமாத்மாவின் வியாபகம் விளங்கும். உயிர்கள் தோன்றுவதும் நிலைபெற்றிருப்பதும் ஒடுங்குவதும் பரமாத்மாவினிடத்திலேயாம்.
ஏகமாய் இருக்கும் என் தாய் பராசக்தி பல்வேறு தோற்றத்துடன் விளங்குகிறாள். அளவில்லாத சக்தியுடைய அவள் ஜீவனாகவும் ஜகத்தாகவும் பேதப்பட்டு, சரீரம் புத்தி சன்மார்க்கம் ஆத்மார்த்தம் முதலிய வேறுபட்ட சக்திகளையுடைவளாய்க் காணப்படுகிறாள். சக்தி, வேதாந்தத்தில் கூறப்படும் பிரம்மமே தவிர வேறல்ல. கட்புலனாகாத பிரம்மத்தின் பிரத்யக்ஷ ஸ்வரூபமே அவள்.
21. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ
ஆதித்யாநாம் விஷ்ணு-ஆதித்யர்களில் நான் விஷ்ணு, ஜ்யோதிஷாம் அம்ஸுமாந் ரவி:-ஒளிகளில் நான் கதிர்களுடன் கூடிய சூரியன், மருதாம் மரீசி:-வாயு தேவர்களில் நான் மரீசி, நக்ஷத்ராணாம் அஹம் ஸஸீ அஹம் அஸ்மி-நட்சத்திரங்களுள் சந்திரனாக நான் இருக்கிறேன்.
பொருள் : ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.
விளைபொருள்கள் யாவும் ஒரே பூமியைச் சேர்ந்தவைகள் எனினும், அவைகளுள் மிக முக்கியமானவைகளையே பொருட் காட்சிகளில் வைத்துக் காட்டுவது வழக்கம். அனைத்தும் பகவானுடைய விபூதி எனினும், எவை விசேஷமாக பகவானை ஞாபக மூட்டுபவைகளாக அல்லது மனதைக் கவர வல்லவைகளாக இருக்கின்றனவோ அவைகளைத் தனியாகப் பொறுக்கி யெடுத்துத் தம் சொரூபம் என்று பகவான் சொல்லுகிறார்.
பன்னிரண்டு மாதங்களுக்குப் பன்னிரண்டு ஆதித்தியர்கள் இருக்கிறார்கள். ஒருவரே பன்னிரண்டு பெயர் பெற்றுப் பன்னிரண்டு விதமாகத் தொழில் புரிகிறார். அவர்களின் வரிசைக் கிரமம் :-சித்திரைக்கு அம்சு, வைகாசிக்கு தாதா, ஆனிக்கு இந்திரன், ஆடிக்கு அரியமா, ஆவணிக்கு விவசுவான், புரட்டாசிக்கு பகன், ஐப்பசிக்கு பர்ஜந்நியன், கார்த்திகைக்கு துவஷ்டா, மார்கழிக்கு மித்திரன், தைக்கு விஷ்ணு, மாசிக்கு வருணன், பங்குனிக்கு பூஷா என்று அமைந்துள்ளது. இத்தகைய பன்னிரண்டு ஆதித்தியர்களுள் தை மாதத்தில் உத்தராயண புண்ணிய காலத்தை யுண்டுபண்ணி, பனியைக் குறைத்து, வெப்பத்தை அளவுபட வளர்க்கும் விஷ்ணுவாகிய ஆதித்யன் எல்லாராலும் பெரிதும் விரும்பப்படுகிறான்.
விஷ்ணு சஹஸ்ர நாமம் 258வது பெயர், நகர்வதால் அவர் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார் என்பதாகும். விஷ்ணுவே சூரியன் ஆனதாக ஐதிகம் உண்டு. நாற்பத்தொன்பது மருத்து தேவதைகளுள் (வாயு தேவதைகளுள்) மரீசி என்பவன் பகவான். காற்று வீசுவது உலக நடை முறைக்குப் பெரிதும் பயன்படுகிறது. அவைகளுள் மிக முக்கியமானது ஈண்டு அவர் சொரூபமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பகலில் ஒளிர்பவைகளுள் சிறந்தது சூரியன், இரவில் ஒளிர்பவைகளுள் சிறந்தது சந்திரன். அது உண்மையில் நக்ஷத்திரம் அல்லவெனினும் நாம் அடையும் பயனை முன்னிட்டு அது முன்னணியில் வைக்கப்படுகிறது. ஆக, அவ்விரண்டும் பகவத் சொரூபமாகக் கருதப்படுபவைகளாம்.
22. வேதாநாம் ஸாமவேதோऽஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:
இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா
வேதாநாம் ஸாமவேத: அஸ்மி-வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன், தேவாநாம் வாஸவ: அஸ்மி-தேவரில் இந்திரனாக இருக்கிறேன், இந்த்ரியாணாம் மந அஸ்மி-புலன்களில் மனமாக இருக்கிறேன், ச பூதாநாம் சேதநா அஸ்மி-மேலும் உயிர்களிடத்தே உணர்வாக இருக்கிறேன்.
பொருள் : வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.
மஹா விஷ்ணுவுக்கே ஸாமக அதாவது ஸாமவேதம் ஓதுபவர் என்ற பெயர், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் அமைந்துள்ளது.
இசையோடு கூடியிருப்பதால் ஸாமவேதம் பொருள் விளங்காதவர்களுக்கும் உள்ளத்தைக் கவர வல்லதாகிறது. ஈசுவர எண்ணத்தை விரைவில் கொண்டுவர வல்லதாகையால், அது முதன்மை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களுக்குத் தலைவனாயிருப்பதால் இந்திரனிடம் ஈசுவர சம்பத்து அதிகமாக இருக்கிறது. நூறு யாகங்களைச் செய்தவன் தேவேந்திரன் ஆகிறான் என்பது அவனது மேன்மையை விளக்குகிறது.
மனம் இல்லாது மற்ற இந்திரியங்கள் தொழில் புரிவதில் பயன் இல்லை. மனம் எங்கேயோ போய்விடும் பொழுது காதால் கேட்டாலும் கண்ணால் பார்த்தாலும் ஒன்றும் பொருள்படுவதில்லை. மனதின் உதவியில்லையெனின் ஓர் இந்திரியமும் உதவாது. உயிரற்றதற்கும் உயிர் உற்றதற்கும் வித்தியாசம் உணர்வில் அல்லது அறிவில் இருக்கிறது. சேதனம் அல்லது அறிவு அதிகரிக்குமளவு உயிர் மேலானதாகிறது. இறுதியில் தூய அறிவே தெய்வமாகிறது. செல்வத்தின் மூலம் செல்வனைத் தெரிந்து கொள்ளுதல்போன்று, இந்த விபூதிகள் மூலம் இறைவனைத் தெரிகிறோம்.
23. ருத்ராணாம் ஸங்கரஸ்சாஸ்மி வித்தேஸோ யக்ஷரக்ஷஸாம்
வஸூநாம் பாவகஸ்சாஸ்மி மேரு: ஸிகரிணாமஹம்
ருத்ராணாம் ஸங்கர:-ருத்திரர்களில் நான் சங்கரன், யக்ஷரக்ஷஸாம் வித்தேஸ:-இயக்கர் அரக்கருள் குபேரன், வஸூநாம் பாவக:-வசுக்களில் நான் தீ, ச ஸிகரிணாம் அஹம் மேரு: அஸ்மி-மலைகளில் மேருவாக இருக்கிறேன்.
பொருள் : ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.
ருத்திரர்கள் பதினோரு பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் புராணங்களில் பல இடங்களில் பலவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அஜைகபதன், அஹிர்புத்னியன், வீரபத்ரன், கிரீசன், சங்கரன், அபராஜிதன், ஹரன், அங்காரகன், பிநாகன், பகன், சம்பு என்பன அவர்களின் வெவ்வேறு பெயர்களாம். அவர்கள் எல்லாரும் சிவனுடைய அம்சங்களாகின்றனர். ருத்திரன் என்பதன் பொருள் ரோதனம் உண்டுபண்ணுபவன், அழச்செய்பவன் என்பதாம். ராவணன் என்னும் சொல்லுக்கும் அதே பொருள். ஆனால் இவ் இருவர் உண்டுபண்ணும் அழுகையில் வரும் பயன் வெவ்வேறானவைகள். கொலை களவு செய்பவன் மக்களுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணி அழச் செய்கிறான். ராவணன் அங்ஙனம் உயிர்களுக்குக் கேடு உண்டுபண்ணி, மக்களை அழச் செய்கிறான். ரண வைத்தியனோடு உடலை அறுத்து அழச் செய்கிறான் எனினும் அதனால் உயிர்கள் பிணி நீங்கப்பெறுகின்றன. ருத்திரன் மக்களை அழச்செய்தவன் மூலம் அவர்களைப் பண்படுத்தி மேலோராக மாற்றுகிறான். சங்கரன் என்றால் மங்களத்தைச் செய்பவன் என்று பொருள். ருத்திரர்களுள் நான் சங்கரனாக இருக்கிறேன் என்பதன் கருத்து துன்பத்தின் மூலம் மக்களைப் பண்படுத்துபவன் என்பதாம். இடையறாது ஈசன் இச் செயலைச் செய்துவருவது வெளிப்படை.
யக்ஷஸர்கள் ரக்ஷஸர்கள் ஆகிய இருவரும் தேவகணத்தைச் சேர்ந்தவர்கள். விரைந்தோடிப் பொருள்தேடும் தன்மையுடையவர்கள் யக்ஷஸர்கள். பொருளைக்காக்கும் இயல்புடையவர்கள் ரக்ஷஸர்கள். இவ்விருதரத்தாரும் குபேரனுடைய சேனைகளாகின்றனர். செல்வம் யாரிடம் சேருகிறதோ அவன் குபேரனாகிறான். எங்கு உழைப்பும் சேமிப்பும் இருக்கின்றனவோ அங்குச் செல்வம் பெருகுகிறது. செல்வம், ஐசுவரியம் அல்லது வல்லமையைத் தருகிறபடியால் அது ஈசுவர ஸம்பத்து எனப்படுகிறது.
வஸுக்கள் எட்டுப்பேர். நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி, சந்திரன், சூரியன், நக்ஷத்திரம் ஆகிய இவையெட்டும் ரூபகப்படுத்தி வஸுக்கள் என்று இயம்பப்படுகின்றன. அக்கினி வெவ்வேறு வடிவெடுத்து உயிர்களை ஓம்புவதால் வஸுக்களுள் நாள் அக்கினி என்கிறார் பகவான்.
சிகரத்தையுடைய மலைகளுள் பொன்மலையாகிய மேருவானது சந்திர சூரியன் ஆகிய அனைத்துக்கும் நடு நாயகமானது. அத்யாத்மிகத்தில் பிரம்ம தண்டம் அல்லது சுஷும்னை நாடி ரூபகப்படுத்தி மேருமலை யெனப்படுகிறது. பொன்னின் ஒளியானது சைதன்யத்தோடு கூடிய சுஷும்னைக்குத் தக்க சான்றாகிறது. தேவர்களெல்லாம் மேருவைச் சார்ந்திருப்பதுபோன்று சரீரத்தில் இந்திரியங்கள், பிராணன் யாவும் சுஷும்னை நாடியைச் சார்ந்திருக்கின்றன. ஆதலால் இயற்கையின் அமைப்பிலும் மானுட உடல் அமைப்பிலும் மேருமலை முக்கியமான இடம் பெற்றிருக்கிறது.
24. புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம்
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர:
புரோதஸாம் ப்ருஹஸ்பதிம்-புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி, மாம் வித்தி பார்த-என்று என்னை அறிந்து கொள் பார்த்தா! ஸேநாநீநாம் அஹம் ஸகந்த: -படைத்தலைவரில் நான் கந்தன், ஸரஸாம் ஸாகர: அஸ்மி-நீர் நிலைகளில் நான் கடலாக இருக்கிறேன்.
பொருள் : பார்த்தா, புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி நான் என்றுணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.
நல்வழியில் நடப்பவர்கள் தேவர். அவர்களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரனுக்கே வழிகாட்டியாக பிரஹஸ்பதி யிருப்பதால் அவர் புரோகிதர்களுள் முக்கியமானவராகிறார். வியாழ பகவான் என்றும் அவரை இயம்புகிறோம். ஈசுவர விபூதியைச் சிறப்பாக அத்தகையவரிடத்துக் காண்பது எளிது. படை ஒன்றின் வெற்றியானது சேனாபதியின் வல்லமையைப் பொருத்ததாகும். தக்க செயலைத் திறமையுடன் காலத்தில் செய்தலே வல்லமையாம். சிவனது குமாரர்களுள் கணபதி அறிவு சொரூபம்; சுப்ரமண்யர் அல்லது முருகக் கடவுள் ஆற்றலே வடிவெடுத்தவர். ஸ்கந்தன் என்னும் சொல் துள்ளிக்குதிப்பவன் எனப் பொருள்படுகிறது. அறிவும் ஆற்றலும் உடையவரே இறைவனையடைவர். ஆற்றல் வடிவினன் ஆகிய ஸ்கந்தன் என்று கிருஷ்ணன் தன்னைப் பகர்வது பொருந்தும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வப்பற்றியுண்டு. அவைகளில் பெரியது கடல். அதில் மகிமை காண்பவர் கடவுள் சான்னித்தியத்தை உணர்கின்றனர்.
25. மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம்
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:
மஹர்ஷீணாம் ப்ருகு அஹம்-மகரிஷிகளில் நான் பிருகு, கிராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி-வாக்குகளில் நான் ஓம் என்ற ஓரெழுத்தாக இருக்கிறேன், யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி-யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம், ஸ்தாவராணாம் ஹிமாலய:-மலைகளில் நான் இமாலயம்.
பொருள் : மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் ஓம் என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம்.
பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் தவத்தில் சிறந்தவர் பிருகு. ஆதலால் அவரிடத்து ஈசுவர விபூதி ஓங்கப் பெற்றிப்பது இயல்பு. எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகிறது. பிரணவம் என்னும் ஏகாக்ஷர பதத்துக்கு அர்த்தம் பிரம்மம். அது அனைத்தும் அடங்கப் பெற்றது. அந்த ஏகாக்ஷரத்தையே நாத பிரம்மம் என்கிறோம். ஆக அதற்கு ஒப்பான சொல் இல்லை. எனவே, அது ஈசுவர சொரூபம் . ஜீவன் தன்னைப் பரமாத்மாவுக்குக் கொடுத்துவிடுகிற கர்மம் எதுவோ அது யக்ஞம். அத்தகைய யக்ஞங்கள் எல்லாவற்றிலும் மிக எளிதில் செய்யக்கூடியது ஈசுவர நாம ஜபமாகிய யக்ஞம். எல்லாரும் எப்பொழுது வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். மற்ற யக்ஞங்களிலெல்லாம் நன்மை, தீமை இரண்டும் ஓரளவில் கலந்திருக்கின்றன. ஜபயக்ஞத்திலோ கேடு எதற்கும் இடமில்லை. ஈசுவர எண்ணத்தில் ஜீவன் தன்னை இழந்துவிடுதல் என்ற நன்மையானது நன்கு அமையப்பெறுகிறது. ஆக, யக்ஞங்களுள் ஈசன் தானே ஜப யக்ஞமாக இருப்பது மிகப் பொருத்தமானது. ஸ்தாவரம் என்பது நிலைத்திணை. பூமியில் முளைத்து, அவ்விடத்திலேயே உயிரோடிருப்பது எதுவோ அது ஸ்தாவரம். மலைக்கு உயிருண்டு என்பது அறிஞர் கொள்கை. ஆக பூமியில் முளைத்து உயிரோடிருப்பவைகளில் மிகப் பெரியது ஹிமாலயம் என்பது தேற்றம். ஹிமாலயத்தைக் காண்பது இறைவனைக் காண்பதற்கு ஒப்பாகும். மலையில் ஈசுவர மஹிமை காண விரும்புபவர் ஹிமாலயம் காண்க.
26. அஸ்வத்த: ஸர்வவ்ருக்ஷõணாம் தேவர்ஷீணாம் ச நாரத:
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தாநாம் கபிலோ முநி:
ஸர்வவ்ருக்ஷõணாம் அஸ்வத்த:-மரங்களனைத்திலும் நான் அரசமரம், ச தேவர்ஷீணாம் நாரத:-தேவரிஷிகளில் நான் நாரதன், கந்தர்வாணாம் சித்ரரத:-கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்,
ஸித்தாநாம் கபிலோ முநி: -சித்தர்களில் கபில முனி.
பொருள் : மரங்களனைத்திலும் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி.
அரசமரம், அதன் இலை, காய், பூ முதலியன ஒன்றுக்கும் உதவாவெனினும், தொன்று தொட்டு ஆத்ம சாதனங்கள் யாவும் அரசமரத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. அதைக் காணுந்தோறும் வேறு ஞாபகம் இல்லாது ஈசுவர சிந்தனையே தோன்றும். ஆதலால் பகவான் அம்மரத்தைத் தமது விசேஷ விபூதி என்கிறார்.
தேவர்கள் நரர்களிலும் மிக்கார். ஆனால் தேவர்கள் எல்லாரும் ரிஷிகள் ஆகார். அவர்களில் தத்துவ தர்சனம் அடையப்பெற்றவர்களே ரிஷிகள். தேவரிஷிகளுள் நாரதர் மிக முக்கியமானவர். ஏனென்றால் அவர் பக்தர் கூட்டத்தில் தலை சிறந்து விளங்குகிறார். மேலும் அவர் கிளப்பும் கலகங்களெல்லாம் இறுதியில் மங்களத்தையே உண்டுபண்ண வல்லவைகள். நோய் தோன்றி, உடலை நலப்படுத்துவது போன்று அவரது கலகங்களெல்லாம் நன்மை பயப்பனவாம்.
கந்தர்வர்கள் தேவகணத்தில் ஒரு பிரிவினர். சோம பானத்தைப் பாதுகாப்பது அவர்களுடைய முக்கிய வேலை வைத்தியத்தில் அவர்கள் வல்லவர்கள்; இசை ஞானத்தில் அலாதித் தேர்ச்சியுடையவர்கள். காமத்தில் அவர்கள் பெரிதும் ஈடுபட்டவர்கள். ஆதலால் விவாகத்துக்கு அவர்களுடைய துணை நாடப்படுகிறது. சூதாட்டத்தில் கந்தர்வர்கள் நிபுணர்கள். சூதாடுபவர் அவர்களின் உதவியை நாடுகின்றனர். வேதம் அவர்களால் விளக்கப்பட்டது. ரிஷிகளுக்கு ஆச்சாரியர்களாக அவர்கள் அமைவதுண்டு. அவர்களுக்கு அரசன் சித்ரரதன். ஆதலால் பகவான் தம்மைக் கந்தர்வர்களுள் சித்ரரதன் என்பது பொருத்தம்.
பிறவியிலேயே விசேஷமான தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம் ஆகியவைகளையுடையவர்கள் சித்தர்கள் எனப்படுகின்றனர். மனன சீலத்தை யுடையவர் அல்லது ஜப யக்ஞத்தில் உறுதி பெற்றவர் முனி எனப்படுகின்றார். ஆறு தர்சனங்களில் ஒன்றாகிய சாங்கிய தர்சனத்தை விளக்கியவர் கபிலர். இவர் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் எனப்படுகிறார். நித்திய சித்தராய் இவர் இருப்பதால் பகவான் தம்மைச் சித்தர் கணத்தில் கபில முனி என்கிறார்.
27. உச்சை:ஸ்ரவஸமஸ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம்
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்
அஸ்வாநாம் அம்ருத உத்பவம்-குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த, உச்சை:ஸ்ரவஸம்-உச்சை சிரவம் என்றுணர், கஜேந்த்ராணாம் ஐராவதம் ச-யானைகளில் என்னை ஐராவதமென்றும், நராணாம் நராதிபம் மாம் வித்தி-மனிதரில் அரசனென்றும் என்னை தெரிந்து கொள்.
பொருள் : குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி.
இன்பம் என்னும் அமிர்தத்துக்காக வாழ்க்கை என்னும் பாற்கடலை நல்லாரும் பொல்லாரும் கடைந்தார்கள். அமிர்தத்துடன் வாழ்க்கைக்கு இன்றியமையாத பல திரவியங்கள் உண்டாயின. அவைகளுள் இந்திரன் ஏற்றுக்கொண்ட உச்சைசிரவஸ் என்கிற அழகிய குதிரையும், ஐராவதம் என்கிற வெள்ளை யானையும் அடங்கப்பெறுகின்றன. இராவதியின் குழந்தை ஐராவதம் என்பது ஐதிகம்.
மக்களைக் காக்கவும் ஆளவும் வல்லவன் அரசன். பிறப்பு உரிமையினால் அரசனாக உபசரிக்கப்பட்டு, வெறுமனே சிம்மாசனத்து வீற்றிருப்பவன் அரசன் ஆகான். இறைமை யாரிடத்து இருக்கிறதோ அவன் அரசன். ஆகையால்தான் ராஜா, விஷ்ணுவினுடைய அம்சம் என்ற கொள்கை எழலாயிற்று. சிறந்த பரி, கரி, நரன் ஆகியவர்களிடத்துத் தெய்வப்பெற்றி பொலிவதை பகவான் இங்கு ஞாபகமூட்டுகிறார்.
28. ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக்
ப்ரஜநஸ்சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி:
ஆயுதாநாம் அஹம் வஜ்ரம்-ஆயுதங்களில் நான் வஜ்ரம், தேநூநாம் காமதுக் அஸ்மி - பசுக்களில் நான் காமதேனுவாக இருக்கிறேன், ப்ரஜந: கந்தர்ப: அஸ்மி-பிறப்பிப்போரில் நான் மன்மதன், ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி-மேலும் பாம்புகளில் வாசுகியாக இருக்கிறேன்.
பொருள் : ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.
விஷ்ணுவினுடைய ஆயுதங்களாகிய கதை, சக்கரம் ஆகியவைகளை பகவான் இங்குக் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவைகள் உண்டுபண்ணப்பட்டவைகளல்ல. ஈசுவர சொரூப லக்ஷணத்தில் அவைகள் நித்தியமாய், உருவகமாக அடங்கப் பெற்றவைகள். உண்டுபண்ணப்பட்ட ஆயுதங்களில் இந்திரன் கையாளும் வஜ்ராயுதம் தலைசிறந்தது. விருத்திராசுரனைக் கொல்லுதற்கென்றே அது ஆயத்தப்படுத்தப்பட்டது. ததீசி என்ற முனிவரது எலும்பினின்று அது உண்டாக்கப்பட்டது. அந்த மஹரிஷியின் நைஷ்டிக பிரம்மசரியமும், தபோவலிவும், அவர் பெற்ற ஈசுவரப் பிரசாதமும் சேர்ந்து அவரது எலும்புக்கே அலாதி சக்தியை உண்டுபண்ணின. அசுரரை அடக்குதல் என்ற தேவ காரியத்துக்கு ஆயுதமாக அவரது எலும்பு வேண்டியிருக்கிறது என்று விண்ணவர் விண்ணப்பித்தவுடனே, ததீசி மனமுவந்து தேகத் தியாகம் செய்தார். பிறகு அவரது எலும்பினின்று வஜ்ராயுதம் செய்யப்பட்டது. மனிதன் தூய வாழ்க்கை வாழ்ந்து அதை உலக நன்மைக்காக ஒப்படைக்கவேண்டும் என்ற சிறந்த லட்சியத்தின் சின்னமாக வஜ்ராயுதம் அமைந்துள்ளது. மக்கள் இதை வாழ்க்கைக்குக் குறிக்கோளாக வைப்பது அவசியம்.
பாற்கடலில் அமிர்தம் கடைந்தபொழுது உண்டான திரவியங்களுள் ஒன்று காமதேனு. வேண்டிய பொருள்களை யெல்லாம் வேண்டியவாறு அது வழங்கவல்லது. வசிஷ்டமஹரிஷி ஆச்ரமத்தில் அது நிறைந்த செல்வத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. நல்ல மனதுடன் முறையாக உழைத்தலே காமதேனுவாகிறது என்று கீதை மூன்றாம் அத்தியாயம் பத்தாவது சுலோகத்தில் விளக்கப்பட்டது. நல்ல மனமும் பேருழைப்புமே ஈசுவர விபூதியாகின்றன.
பிரஜா விருத்தி சம்பந்தமான ஆசையே மன்மதன் அல்லது கந்தர்ப்பன் என்று உருவகப்படுத்திய பெயர் பெறுகிறது. இந்த ஆசையின் வலிவால்தான் உயிர்கள் விரிவடைந்து வருகின்றன. ஜகத் சிருஷ்டிக்கே மூல காரணமாயிருப்பது இந்த இச்சா சக்தியாம். கடவுள் காதல் சொரூபம் என்பது உண்மை.
சர்ப்பம் விஷமுடையது; ஒற்றைத் தலையோடு இருப்பது. எல்லாத் தெய்வங்களோடும் பாம்பு ஏதேனும் ஒருவிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கடவுளின் சக்திக்கு இது ஒரு சின்னம். மனிதனிடத்துள்ள சக்தியும் குண்டலினி என்னும் சர்ப்ப வடிவெடுத்திருக்கிறது. சக்தியினின்று இன்ப துன்பம் இரண்டும் தோன்றுகின்றன. துன்பத்தைக் குறிப்பது விஷம். துன்பம் எல்லார்க்கும் பொதுவானது. ஆகையால் அது ஒற்றைத் தலையுடையது. கடல் கடைவதற்கு வாசுகி என்ற விஷப் பாம்பு பயன்பட்டது. சிரமப்பட்டுச் சக்தியைப் பயன் படுத்தினால்தான் உயிர்வாழ முடியும். பிறகு, அவ் உயிர் வாழ்க்கையிலிருந்து மரணம் என்னும் விஷமும் வருகிறது. ஈசுவர சிருஷ்டியில் கேட்டுக்கும் இடமுண்டு. நலம், கேடு ஆகிய இரண்டும் கலந்தது உலகம்.
29. அநந்தஸ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம்
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம்
அஹம் நாகாநாம் அநந்த:-நான் நாகர்களினிடையே அநந்தன், யாதஸாம் வருண: ச அஸ்மி-நீர் வாழ்வோரில் வருணனாக இருக்கிறேன், பித்ரூணாம் அர்யமா ச அஸ்மி-பிதிர்க்களில் நான் அரியமான், ஸம்யமதா: அஹம் யம:-அடக்கி ஆள்பவர்களில் நான் யமன்.
பொருள் : நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் கட்டினவர்களில் நான் யமன்.
விஷமில்லாததும் பல தலைகளையுடையதும் நாகம். அவைகளுள் நாகராஜாவாயிருப்பது அனந்தன். அது மகாவிஷ்ணுவுக்குச் சயனம். அது ஐந்து தலையோடிருப்பது, மாயாசக்தி முழுதும் பஞ்சபூத சொரூபம் என்பதை விளக்கும். ஐந்துதலை நாகம் ஹரிக்குச் சயனமாய் அமைந்திருப்பதுமல்லாது, அவர் தலைக்குமேல் குடையாகவும் அமைந்திருக்கிறது. சிலந்திப்பூச்சி தன் உடலினின்று வந்த வலையிலேயே வசிப்பது போன்று, தன்னிடத்திருந்து உண்டான பிரகிருதியிலேயே பகவான் வீற்றிருக்கிறான் என்பதை சயனம் விளக்குகிறது. நாகமே குடையாயமைவது, வழிபாடு எப்பொழுதும் பிரகிருதிக்கு உட்பட்டது என்பதை விளக்குகிறது. பகவானுக்கு அனந்தன் சேஷம் ஆதலால் அதை அவருடைய விபூதி என்பது தகும்.
வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ள தேவர்களில் ஒருவன் வருணன். அவனுக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டிலும் ஆதிக்கம் உண்டு. அறிவில் சிறந்தவன் அவன். நாளடைவில் அவன் ஜல தேவதைகளோடு இணைக்கப்பட்டு, அவர்களுக்கு அரசனாகிறான். சிந்துபதி அல்லது கடல் வேந்தன் என்ற பட்டமும் அவனுக்கு அளிக்கப்படுகிறது. மேற்குத் திசைக்குத் திக்பாலனாக அமைந்திருப்பவனும் வருணன். ஜல தேவதைகளுக்குள் அவனே அரசனாயிருப்பதால், அவன்பால் ஈசுவர விபூதி விளங்குதல் இயல்பு.
மரணத்தின் வாயிலாகப் பித்ரு லோகத்துக்குச் சென்ற முன்னோர்களுள் முதலானவன் அரியமான். ஆதலால் அவன் பித்ருக்களுக்கெல்லாம் தலைமை வகிக்கிறான். பித்ருக்களை வணங்குபவர்களெல்லாம் அவனையும் வணங்குவதுண்டு. ஆதலால் பித்ருக்களுள் தான் அரியமான் என்று கிருஷ்ணன் சொல்லுவது பொருத்தம்.
தானே தன்னையடக்கி ஆளுதற்கு யமம் என்று பெயர். அடக்கம் அமையாதவிடத்து அது தண்டனையாகிறது. மனிதன் தன் வாழ்க்கையிலேயே இவ்வுண்மையைக் காணலாம். துக்கமாகத் தனக்கு வந்து அமையும் தண்டனைக்கெல்லாம் காரணம் தான் அடக்கம் பழகாமையேயாம். அஷ்டாங்க யோகத்தில் யமம் முதல் அங்கமாகிறது. ஏனென்றால் அடக்கமில்லாது யோகமில்லை.
மனிதர்களுள் யுதிஷ்டிரன் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறான். தேவர்களுள் யமன் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறான். தர்மன் என்றாலும் யமனையே குறிக்கிறது. அவனது ஆட்சி செங்கோல் வளையாது நடைபெறுகிறது. யமபுரம் என்பது அவன் இருப்பிடம். மரணத்திற்குப் பிறகு ஜீவன் அவனுடைய முன்னிலைக்குப் போகிறது. அங்கு சித்திரகுப்தன் என்பவன் அந்த ஜீவனுடைய பாப புண்ணியங்களின் கணக்கை வாசிக்கிறான். அவனது கணக்குப் புஸ்தகத்திற்கு அக்ரசந்தானம் என்று பெயர். பிறகு, வினைக்கேற்ற தீர்ப்பை யமன் சொல்லுகிறான். அதன்படி சுவர்க்கம், நரகம் முதலியன வந்தமைகின்றன. யமன் தென் திசைக்கு இறைவன். தர்மம் இம்மியளவும் பிசகாது நடைபெறுவதால், அடக்கியாள்பவர்களில் தான் யமன் என்று பகவான் சொல்லுவது பொருத்தமானது.
30. ப்ரஹ்லாதஸ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம்
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோऽஹம் வைநதேயஸ்ச பக்ஷிணாம்
தைத்யாநாம் ச ப்ரஹ்லாத: அஸ்மி-அசுரரில் பிரகலாதனாக இருக்கிறேன், கலயதாம் அஹம் கால:-இயங்குனவற்றில் நான் காலம், அஹம் ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ர:-நான் விலங்குகளில் சிங்கம், பக்ஷிணாம் வைநதேய: ச-பறவைகளில் கருடன்.
பொருள் : அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.
திதி என்பவள் தக்ஷப்பிரஜாபதியின் புதல்வி. காச்யபருக்கு அவள் மனைவியானாள். அவளுடைய மக்களுக்குத் தைத்தியர்கள் என்று பெயர். அவர்கள் அனைவரும் தேவர்களுக்குப் பகைவர்கள். அவர்களுள் ஹரண்யகசிபுவின் மகன் பிரஹ்லாதன். அவனது பக்தி உலகுக்கோர் எடுத்துக்காட்டாகும். கீழ் மக்கள் கூட்டத்திலும் மேலோர் தோன்றுவதுண்டு. அத்தகைய மேலோனாகிய பிரஹ்லாதனைத் தம் சொரூபம் என்கிறார் பகவான். அண்டங்களும் அவைகளில் உள்ள அனைத்தும் தோன்றி, நிலைத்திருந்து, மறைவதைக் காலம் முறையாக அளந்துகொண்டே இருக்கிறது. ஆதலால் எண்ணிக்கை எடுப்பவர்களில் காலம் முதன்மை பெறுகிறது. அத்தகைய காலமாய் இருப்பது தாமே என்று பகவான் பகர்கிறார். விலங்குகளுள் வேந்தனாயிருப்பது சிம்மம். அது அம்பிகைக்கு வாஹனம். ஈசுவர விபூதிக்கு அது இருப்பிடமாவது வெளிப்படை. விஷ்ணுவின் வாஹனமாகிய கருடன் விஷ்ணுவை ஞாபகமூட்டுவதால், பறவைகளுள் அது சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. ஈசுவர சொரூபத்தை ஞாபக மூட்டுபவைகளெல்லாம் ஈசுவர விபூதி அமையப்பெற்றுள்ளன.
31. பவந: பவதாமஸ்மி ராம: ஸஸ்த்ரப்ருதாமஹம்
ஜஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ
பவதாம் பவந: அஸ்மி-தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான், ஸஸ்த்ரப்ருதாம் அஹம் ராம:-ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன், ஜஷாணாம் மகர: ச அஸ்மி-மீன்களில் நான் சுறா, ஸ்ரோதஸாம் ஜாஹ்நவீ அஸ்மி-ஆறுகளில் கங்கையாக இருக்கிறேன்.
பொருள் : தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படைதரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.
நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கும் தூய்மைப்படுத்தும் தன்மையுடையவைகள். அவைகளுள் காற்று எங்கும் நிறைந்திருந்து, எப்பொழுதும் பொருள்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வருகிறது. நிலம், நீர், தீ ஆகியவைகளையும் தூய்மைப்படுத்தவல்லது காற்றே. அது தீயை எரியும்படிச் செய்கிறது; நீரை ஆவியாக மாற்றி, மழை நீராகப் பண்ணுகிறது. பூமி, பிணம் முதலியவைகளில் உள்ள துர்நாற்றத்தை அது அகற்றுகிறது. ஆகையால் காற்றைப் பகவானோடு ஒப்பிடுவது பொருந்தும்.
ஆயுதம் பிடித்தவனுக்கு ஆற்றல் அதிகம். அதை முறையோடு கையாளுபவன் மேலோன். ஸ்ரீ ராமன் எங்கும் தன் கோதண்டத்தைச் சரியாகவே கையாண்டான். அவன் ஆயுதத்தை ஓரிடத்திலாவது துர்ப்பிரயோகம் பண்ணியது கிடையாது. தர்மத்தை ஸ்தாபனம் பண்ணுதற்கே அது கையாளப்பட்டது. நல்வழியில் ஆயுதப் பிரயோகம் பண்ணுதலிலும் பராக்கிரமம் வேண்டும். பராக்கிரமத்தில் ராமனுக்கு ஒப்பான ஒரு வீரனைக் காண்பது அரிது. அவனது வில்லும் அம்பும் கெட்டவர்க்குத் துன்பத்தைக் கொடுத்து, நல்லார்க்கு இன்பத்தை வளர்த்தன. ஆகையால் படைபிடித்தவர்களுள், தான் ராமன் என்று கிருஷ்ணன் சொல்லுகிறான்.
நீரில் வாழ்பவைகளுள் மகரம் வலிவு மிகப்படைத்தது. சுறா என்பது அதற்கு மற்றொரு பெயர். ஆற்றல் மிகுதியால் அது இறைவனோடு ஒப்பிடப்படுகிறது.
கங்கைக்கு ஜாஹ்னவீ என்பது ஒரு பெயர். ஜன்னு மஹரிஷியின் புத்திரி என்று அது பொருள்படுகிறது. பகீரதனது வேண்டுதலுக்கு இரங்கி, ஆகாச கங்கை பூலோக கங்கையாக வந்தது. தவத்தில் இருந்தபொழுது தம்மீது அந்த நதி மோதுவதைக் கண்டு கோபித்து, ஜன்னு முனிவர் அதை எடுத்து விழுங்கிவிட்டார். பிறகு, பகீரதனது வேண்டுதலுக்கு இணங்கித் தம் காது வழியாகக் கங்கையை வெளியில் விட்டார். ஆகையால் அந்நதிக்கு ஜாஹ்னவீ என்ற பெயர் வந்தது. நதிகளுள் இது புனிதமே வடிவெடுத்தது. இது முற்றிலும் பிரம்ம சொரூபம் என்பது ஆன்றோர் கொள்கை.
32. ஸர்காணாமாதிரந்தஸ்ச மத்யம் சைவாஹமர்ஜுந
அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம்
ஸர்காணாம் ஆதி அந்த: மத்யம் ச அஹம் ஏவ-படைப்புகளின் ஆதியும் அந்தமும் நடுவும் நானேதான், அர்ஜுந-அர்ஜுனா! வித்யாநாம் அத்யாத்மவித்யா-வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை, ப்ரவததாம் அஹம் வாத:-பேசுவோரிடையே நான் பேச்சு.
பொருள் : படைப்புகளின் ஆதியும் அந்தமும் நான். அர்ஜுனா, வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.
இந்த அத்தியாயம் 20-வது சுலோகத்தில் சொல்லியபடி இறைவன் உயிர்களுக்குத் தோற்றம், இருப்பு, ஒடுக்கமாவது போன்று, பஞ்ச பூதங்களுக்கும் பிறப்பிடம், இருப்பிடம், ஒடுங்குமிடமாகிறான். ஆபரணத்தை யுண்டுபண்ணும் போதும், அது ஆபரணமாக நிலைத்திருக்கும் போதும், அதை அழிக்கும்போதும் அது பொன்னேயாம். அங்ஙனம் உலகமாகப் பரிணமிக்கும் போதும் மூல வஸ்துவாகிய பரம் பொருள் அனைத்துக்குமே ஆதாரமாயிருக்கிறது. ஆத்ம வித்தை என்பது பிரம்ம வித்தை. பிரம்மத்தை யறிந்தால் அக்ஞானம் அறவே அகலுகிறது. பிறவிப் பிணி போகிறது. ஆக, அவனே ஆத்ம வித்தையாயிருக்கிறான். வாதிப்பது அல்லது முறையாகப் பேசுவது உண்மையை அறிதற்கு உற்ற உபாயமாகிறது. வாதம், ஜல்பம், விதண்டை என்று அது மூவகைப்படுகிறது. விருப்பு, வெறுப்பு இன்றி உண்மையை அறியவேண்டும் என்ற ஓர் எண்ணத்துடன் முறையாகப் பேசுவது வாதம். இதில் வெற்றி தோல்வியைப் பற்றிக் கேள்வியில்லை. உண்மையை அறியவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஒவ்வொருவனும் தன் கொள்கையையே நிலை நாட்டப் பார்ப்பது ஜல்பம். சாஸ்திரப் பிரமாணம், யுக்தி இவைகளைக் கையாண்டு, எதிரியை வாயடக்குவது இதன் நோக்கம். விதண்டத்தில் தன் கொள்கையை ஸ்தாபிப்பதுமில்லை, எதிரியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளுதலுமில்லை. மற்று எதிரியையும் அவனது கொள்கையையும் ஏளனம் பண்ணுவதே அதன் நோக்கமாகும். உண்மையாராய்ச்சிக்கு வாதம் ஒன்றே துணைபுரிவதால் தர்க்கத்தில் தாம் வாதமாக இருப்பதாக பகவான் பகர்கிறார்.
மூலமாகிய ஒன்றைத் தெரிந்துகொள்; பிறகு உனக்கு எல்லாம் தெரியவரும். ஒன்று என்ற இலக்கத்தின்பின் பூஜ்யங்களைச் சேர்த்தால், அது நூறாகவும் ஆயிரமாகவும் ஆகின்றது. ஆனால் அந்த ஒன்று என்னும் இலக்கத்தை அழித்துவிட்டால் மிகுந்திருப்பனவற்றுக்கு மதிப்பு இல்லை. ஒன்றில்தான் பலவற்றுக்கு யோக்கியதை யுண்டாகிறது. முதலில் ஒன்று; பின்னர் பல. முதலில் ஈசுவரன்; பின்னர் ஜீவனும் உலகமும்.
ஒன்றை அறிவது ஆத்மவித்தை அல்லது பரவித்தை. பூஜ்யங்களை அறிவது அபரவித்தை.
33. அக்ஷராணாமகாரோऽஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச
அஹமேவாக்ஷய: காலோ தாதாஹம் விஸ்வதோமுக:
அக்ஷராணாம் அகார: அஸ்மி-எழுத்துகளில் நான் அகரம், ஸாமாஸிகஸ்ய த்வந்த்வ: ச - புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு, அக்ஷய: கால: அஹம் ஏவ-அழிவற்ற காலம் நானே,
விஸ்வதோமுக: தாதா அஹம்-எல்லா பக்கங்களிலும் முகம் கொண்ட விராட் ஸ்வரூபனும், எல்லாவற்றையும் சுமப்பவனும் நான்.
பொருள் : எழுத்துகளில் நான் அகரம்; புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.
நாத பிரம்மமே அகரமாகத் துவங்குகிறது. பிறகு அது வெவ்வேறு விதங்களாகப் பரிணமித்து மற்ற எழுத்துக்களாகின்றது. அகர முதல வெழுத்தெல்லாம் என்பது வள்ளுவர் வாக்கு.
சம்ஸ்கிருத சொற்கள் கூட்டுச் சொற்களாக அமைதற்குச் சில முறைகள் இருக்கின்றன. அவைகளுள் இரண்டு சொற்கள் சேர்ந்து கூட்டுச்சொல் ஆனபிறகு, இரண்டும் சம அந்தஸ்து வகிப்பது எதுவோ அது துவந்துவ ஸமாஸம் அல்லது இருசொற் கூட்டு. ராமன்+கிருஷ்ணன்=ராமகிருஷ்ணன் என்பது இதற்கு உதாரணம்.
ஒரு க்ஷணம், ஒரு மணி. ஒருநாள், ஒரு கற்பம் என்று பார்க்குமிடத்து, காலத்துக்கு உற்பத்தியும் நாசமும் உண்டு. ஆனால் அதற்கு முன்னும் பின்னும் அதை அளந்துகொண்டுபோனால் காலம் அகண்டாகாரத்தில் விரிந்தோடும். ஆக, அது அழிவற்றதாகிறது. ஆகையால் சர்வேசுவரனே மகாகாலன் எனப்படுகிறான்.
அவன் ஒருவனே பல்கோடி உருவங்களாகப் பரிணமிப்பது, ஒவ்வொரு வடிவத்தின் மூலம் ஒருவிதக் கர்மபலனை அனுபவித்து வருகிறான். அவன் எங்கும் நிறைந்திருந்து, எண்ணரிய முகங்களை உடைத்திருந்து, வினைப்பயனை வழங்கி வருதல் இயற்கையில் நாம் யாண்டும் காணும் காட்சியாகும்.
34. ம்ருத்யு: ஸர்வஹரஸ்சாஹமுத்பவஸ்ச பவிஷ்யதாம்
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி: க்ஷமா
அஹம் ஸர்வஹர: ம்ருத்யு: ச-எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான், பவிஷ்யதாம் உத்பவ: ச-எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான், நாரீணாம்-பெண்களிடத்து நான், கீர்தி: ஸ்ரீ: வாக் ஸ்ம்ருதி:-கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதா த்ருதி: க்ஷமா-மேதை, ஸ்திதி, பொறுமை.
பொருள் : எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை
தோன்றிய யாவும் அழிவது திண்ணம். அவைகளைத் தோற்றுவிப்பது போன்று, ஈசன் சம்ஹாரமும் செய்கிறான். ஆகையால் அவன் அனைத்தையும் துடைக்கும் தெய்வமாகிறான். பிறப்பையும் இறப்பையும் ஒன்றாகக் கருதுபவர் அவனை அறிய வல்லவர் ஆவர். திருமகள் இருக்குமிடத்தில் செல்வம் வளர்கிறது. திருமகளும் திருமாலும் ஒன்றே. ஆக, எங்குச் செல்வமோ, ஆங்கு அவனே இருக்கிறான். அம்பிகையின் பிரபையில் மற்றும் சில அம்சங்கள் ஈண்டு இயம்பப்பெறுகின்றன. நல் வாழ்க்கை நிலைத்திருக்குமிடத்து கீர்த்தி தானே வந்தமைகிறது. வடிவம் பொருத்தமாக அமைந்தால், அது அழகு எனப்படுகிறது. ஓசையில் அழகு பொலிந்தால், அது இசை எனப்படுகிறது. அசைதலில் பொலியும் அழகுக்கு நாட்டியம் என்ற பெயர் வருகிறது. கடவுளே அழகன். ஆக, எதன்கண் திருவானது திகழ்கிறதோ அது தெய்வம். உள்ளத்தில் உள்ள கருத்து சொல்லாகப் பரிணமிக்கிறது. சொல்லில் முறைமையும் மகிமையும் இருக்குமாகில் அது ஈசுவர விபூதியே. சக்தி சொல்வன்மையாகப் பரிணமிக்கும்போது அவள் வாணி என்ற பெயர் பெறுகிறாள். முன்பு நிகழ்ந்தவைகளை ஞாபகத்துக்குக் கொண்டுவருவது நினைவு அல்லது ஸ்மிருதி எனப்படுகிறது. நினைவு நெடிது தெளிந்திருப்பது சக்தியின் பிரபாவமாகும். சாஸ்திரங்களின் உட்கருத்தை உள்ளபடி உள்ளுதல் மேதை அல்லது அறிவு என்று பெயர் பெறுகிறது. உடலும் இந்திரியங்களும் துன்பங்களுக்கிடையில் தடுமாற்றமடையாமல் இருக்குமாகில் அது திருதி அல்லது திண்மையாகிறது. உண்ணும் பொழுது அல்லது பேசும் பொழுது பல்லானது தவறி உதட்டைக் கடித்துவிடுமாகில் அதற்காக யாரும் பல்லை நொந்து கொள்ளுவதில்லை. அங்கு மனிதன் பொறையே வடிவெடுத்தவனாகிறான். ஒவ்வொருவனும் தான் செய்த குற்றத்தைத் தானே மன்னித்துக்கொள்கிறான். அங்ஙனம் பிறர் செய் குற்றத்தையும் கேட்டையும் பொறுத்துக் கொள்ளுதலே க்ஷமை அல்லது பொறையாகிறது. இம்மேலாம் தன்மைகளே சிறந்த பெண்மைகளாகின்றன.
மாயைதான் பிரம்மத்தைத் தோற்றுவிக்கின்றது. மாயையில்லா விட்டால் பிரம்மத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? ஈசுவரனுடைய சக்தியை அறிந்துகொள்ளாமற் போனால் அவனை அறியவே முடியாது.
35. ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்÷ஷாऽஹம்ருதூநாம் குஸுமாகர:
ததா ஸாம்நாம் ப்ருஹத்ஸாம:-சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் பிருகத்சாமம் என்ற பெரிய சாமம், சந்தஸாம் காயத்ரீ அஹம்-சந்தஸ்களில் நான் காயத்ரி, மாஸாநாம் மார்கஸீர்ஷ: அஹம்-மாதங்களில் நான் மார்கழி, ருதூநாம் அஹம் குஸுமாகர:-பருவங்களில் நான் மலர் சான்ற இளவேனில்.
பொருள் : அங்ஙனமே, சாமங்களில் நான் பிருகத்சாமம் என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர் சான்ற இளவேனில்.
இசை நிறைந்தது ஸாமவேதம். சங்கரனும் நாராயணனும் ஸாமகானப்பிரியர்கள். ஸாமகானம் செய்து சிவனை இராவணன் மகிழ்வித்தான். அத்தகைய ஸாமவேதத்தில் பிருஹத் ஸாமம் என்பது மிகச் சிறந்தது. இசையும் நுண்பொருளும் ஒன்று சேர்ந்து அதை அங்ஙனம் பெரியதாக்குகின்றன. சந்தம் என்பது செய்யுள் அமைப்பு அல்லது யாப்பிலக்கணம். வேதத்தில் அமைந்துள்ள பலவிதமான செய்யுள் வண்ணங்களில் காயத்ரீ என்பது மிக முக்கியமானது. பல தெய்வங்களைப் பற்றிய புகழும், வணக்கமும், வேண்டுதலும் காயத்ரீ சந்த வடிவமாக அமைந்திருக்கின்றன. ருத்திர காயத்ரீ, தேவி காயத்ரீ, சூரிய காயத்ரீ, பரமஹம்ஸ காயத்ரீ இவை போன்றவைகளை மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். செய்யுள் அமைப்பையும் கருத்து விசேஷத்தையும் முன்னிட்டுத் தாம் சந்தங்களுள் காயத்ரீ என்கிறார் பகவான். பெரும்பான்மையோர் ஜபித்தும் தியானித்தும் வரும் சூரிய காயத்ரீயை ஆராய்வோம்.
36. த்யூதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்
ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம்
சலயதாம் த்யூதம் அஸ்மி-வஞ்சகரின் சூது நான், தேஜஸ்விநாம் தேஜஸ் அஹம-ஒளியுடையோரின் ஒளி நான், ஜய: அஸ்மி-நான் வெற்றி, வ்யவஸாய:-நான் நிச்சயம், ஸத்த்வவதாம் ஸத்த்வம் அஹம் அஸ்மி-உண்மையுடையோரின் உண்மை நான் இருக்கிறேன்.
பொருள் : வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி; நான் நிச்சயம். உண்மையுடையோரின் உண்மை நான்.
பிறரை ஏமாற்றுவது யாருக்கும் பொருந்தாத காரியம். திருடுவது, பொய்ப் பத்திரம் தயாரிப்பது, விலையை மிகைபட உயர்த்தி விற்பது, போலிப் பொருள்களை நல்ல பொருள்களென்று சொல்லி விற்பது இவையாவும் வஞ்சகமாகும். சூதாட்டத்தை அத்தகைய ஏமாற்றங்களோடு சேர்க்கலாம். ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் சில சூதாட்டங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கிறது. குதிரைச் சவாரியின் மீது பந்தயம் கூறுவது சிலர்க்கு உடன்பாடு. சூதாட்டமாக சீட்டாடுவது மற்றொரு சாரார்க்குச் சம்மதமானது. பாண்டவர், கௌரவர்க்குப் பகடைகள் மூலம் சூதாடுவது சட்ட பூர்வமானது எனத் தோன்றிற்று. வெளிப்படையாக மற்ற வஞ்சகங்களைச் செய்யமுடியாது. சூதாடுவது ஒன்றுமட்டும் பெரிய சபை நடுவே வெளிப்படையாகச் செய்யப்படுகிறது. அதனால் வரும் லாப நஷ்டங்களுக்கும், சுக துக்கங்களுக்கும் மக்கள் கட்டுப்பட்டவர்கள் ஆகிறார்கள். வஞ்சகச் செயல்கள் யாடுமே கேடுடையவைகள். அவைகளுள் சூதாட்டம் ஒன்று மட்டும் ஓரளவு விதிக்கு உட்பட்டதாயிருக்கிறது. அதற்கு அறிவுத் திறமை வேண்டும். அறிவு தெய்வத்திடமிருந்து வருகிறது. பொய்ப்பத்திரம் தயாரிப்பவர்களுக்கு தீப வெளிச்சம் பயன்படுவது போன்று சூதாடுபவர்களுடைய அறிவுத்திறனும் தெய்வத்திடமிருந்தே வருகிறது. ஆதலால் வஞ்சகர்களுள் தாம் சூதாட்டமாக இருப்பதாக பகவான் சொல்லுகிறார். அதனால் சூதாட்டம் ஆதரிக்கப்படுகிறது என்று பொருள் படுத்தலாகாது.
தேஜஸ் என்பது ஒளி என்று பொருள்படுகிறது. ஆரோக்கியம், இந்திரிய நிக்கிரகம், பிரம்மசரியம் முதலியவைகளினின்று உண்டாகும் பொலிவும், மனத்தெளிவும், செயலாற்றும் வன்மையும் சேர்ந்து தேஜஸ் ஆகின்றன. கீழ்மையை அகற்றி, மேன்மையை நிலைநாட்டுதல் வெற்றியாகும். அது அரசர்கள், ஆசாரிய புருஷர்கள், மதஸ்தாபகர்கள் ஆகிய இவர்களுடைய செயலாம். பண்பும் பயனுமுடைய தொழிலைத் தளராமனதுடன் புரிதல் வியவசாயமாகும். முயற்சி திருவினையாக்கும். முயற்சியே மனிதனை ஈசுவர முன்னிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது. மூன்று குணங்களும் பிரகிருதி சொரூபம் எனினும், அவைகளுள் சத்துவ குணம் சாதகனை இறைவனது சன்னிதிக்கு அழைத்துச் செல்ல வல்லது.
37. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோऽஸ்மி பாண்டவாநாம் தநஞ்ஜய:
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி:
வ்ருஷ்ணீநாம் வாஸுதேவ: அஸ்மி-விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன், பாண்டவாநாம் தநஞ்ஜய:-பாண்டவர்களில் தனஞ்ஜயன், அபி முநீநாம் அஹம் வ்யாஸ:-முனிகளில் வியாசன், கவீநாம் உஸநா கவி:-கவிகளில் சுக்கிர கவி.
பொருள் : விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிர கவி.
யாதவர்கள் எல்லாரும் விருஷ்ணியின் வம்சத்தில் வந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு விருஷ்ணிகள் என்று ஒரு பெயர் உண்டு. கிருஷ்ணன் வசுதேவருடைய புதல்வர். எனவே அவருக்கு வாசுதேவன் என்ற பெயர் வந்துள்ளது. யாதவர் கூட்டத்தில் இவரே எல்லார்க்கும் மிக்கார் என்பது வெளிப்படை. தனஞ்ஜயன் என்பது அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மற்றொரு பெயர். ஆங்காங்குப் புதைந்து, பயன்படாது கிடந்த செல்வங்களை யெல்லாம் அந்தந்த அரசர்களிடத்திருந்து வென்று வந்து , நல்வழியில் பயன்படுத்தியபடியால் தனஞ்ஜயன் என்ற பெயர் அர்ஜுனனுக்கு வந்தது. பாண்டவர்களுள் பகவான் தம்மை தர்மராஜா என்று சொல்லாது, தனஞ்ஜயன் என்று சொன்னது அர்ஜுனனுக்குத் தன் யதார்த்த சொரூபத்தைப் புகட்டுதற் பொருட்டேயாம். மேலும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் யாண்டும் இணைபிரியாது இருந்துவருவது ஈண்டு நினைவூட்டப்படுகிறது. பகவானே எல்லா ஜீவர்களாகவும் பரிணமித்திருக்கிறார். அர்ஜுனன் தனக்குத் தனி வியக்தி யிருக்கிறதென்றாவது, தன் வெற்றிக்கெல்லாம் தானே முதற்காரணம் என்றாவது எண்ணுவது ஒவ்வாது. ஆகையால் நேரே அர்ஜுனனுடன் பேசும்போது அவனுக்கும் முதற்காரணம் பகவான் என்பதை நினைவூட்டுகிறார். ஒவ்வொரு ஜீவனும் தனக்கு முதற்காரணம் கடவுள் என்று அறிந்து, அதன்படி நடந்துகொண்டால் அந்த ஜீவன் சிறப்பு எய்துவான்.
அந்தர்முக திருஷ்டியில் மனதை முழுதும் செலுத்தி, மெய்ப் பொருளை முற்றும் அறிந்துகொள்ள வல்லவர் ஒருவர்க்கு முனி என்று பெயர். அத்தகைய பூரண ஞானிகளுள் பிரதானமானவர் வியாசர். அவருக்கு வேதவியாசர் என்றும், பாதராயணர் என்றும் துவைபாயனர் என்றும் வேறு பெயர்கள் உண்டு. அவரது கருநிறத்தை முன்னிட்டு கிருஷ்ண துவைபாயனர் என்றும் அவர் அழைக்கப்படுவதுண்டு. பராசரருக்கும் சத்தியவதிக்கும் பிள்ளையாகப் பிறந்தவர் அவர். வேதங்களை யெல்லாம் தொகுத்தவர்; வேதாந்த சூத்திரங்களை வகுத்தவர். மகாபாரதத்தையும் புராணங்களையும் எழுதியவர் அவர். அவர் சுகருக்குத் தந்தையாவார். அவரை மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதில் வியப்பொன்றுமில்லை.
வெளியுலகத்தைப்பற்றிய பரந்த அறிவுடையவர் கவி என்று அழைக்கப்பட்டது பழைய வழக்கம். நாளடைவில் புலவர்களுக்குக் கவி என்ற பெயர் வந்தது. உசனா என்பது சுக்கிரருக்கு மற்றொரு பெயர். செத்தவர்களைப் பிழைப்பிக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. அவர் தந்த பயிற்சியால் அசுரர்களுக்கு ஆற்றல் மிக உண்டாயிற்று.
38. தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்
தமயதாம் தண்ட: அஸ்மி-ஆள்வோரிடத்தே கோல் (அடக்கும் சக்தி) நான் ஜிகீஷதாம் நீதி: அஸ்மி-வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி (நியாய உணர்வு) நான் குஹ்யாநாம் மௌநம் ச-ரகசியங்களில் நான் மௌனம்! ஜ்ஞாநவதாம் ஜ்ஞாநம் அஹம் ஏவ அஸ்மி-ஞானமுடையோரிடத்தே ஞானம் நானே.
பொருள் : ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.
தண்டனையை மிகைப்படுத்தாமலும் குறைக்காமலும் அளந்து வழங்குதல் அரசன் கடமை. முறையான தண்டனைக்கு அறிகுறியாயிருப்பது செங்கோல். குற்றத்துக்கு ஏற்ற தண்டனை விதிக்கப்படும்பொழுது குற்றவாளியானவன் யார்மீதும் குறை கூறாது தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். அத்தகைய தண்டனையே அவனைச் சீர்திருத்துகிறது. அது பாமரர்க்கிடையில் பெரிய சீர்திருத்தம் செய்கிறபடியால் அதை இறைவனிடத்துள்ள இறைமை எனலாம். இனி, இயற்கையானது நோய் முதலியவைகளை விளைவிப்பது தவறுதலான வாழ்க்கைக்காக விதிக்கப்பட்ட தண்டனை என்பது பொருந்தும். யமதர்மராஜாவாக பகவான் இருப்பது போன்று, தண்டனையை விதிப்பவரிடத்தில் செங்கோல் சொரூபமாகவும் அவர் இருக்கிறார்.
நேர்மையான முறையில் எடுத்துக்கொள்ளும் முயற்சி நீதி எனப்படுகிறது. அரசனுக்கு சாமம், தானம், பேதம், தண்டம் இந்நான்கும் நீதிக்குட்பட்டவைகளாகும். முறைவழுவிய முயற்சி வெற்றியைக் கொடுத்தாலும், அது நிலைத்த வெற்றியாகாது. கையாளும் முறை நேர்மையானதாயிருக்குமாகில், அதினின்று விளையும் வெற்றியும் நிலைத்ததாகும். பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். வாய் பேசாதிருக்கும்போது ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆகையால் மௌனம் இரகசியத்தை நன்கு காக்கின்றது. சப்தம் செய்யாதிருப்பது மௌனம். எது அசைகின்றதோ அது சப்தம் செய்கிறது. பிரகிருதி முழுதும் அசைகிறது. ஆக, பிரகிருதியின்கண் மௌனம் இல்லை. மனது அடங்க அடங்க, அது மௌனத்தில் நிலை பெறுகிறது. முற்றிலும் மனது அடங்கி ஒடுங்கினால் ஆத்ம சொரூபம்மட்டும் எஞ்சியிருக்கும். ஆத்மா அசையாதது. ஆதலால் அதில் சப்தமில்லை. ஆத்மாவே மௌன சொரூபம். இந்த ஆத்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்கமுடியாது. ஆகையால் இரகசியங்களுள் முடிவானது மௌனம் அல்லது ஆத்ம சொரூபம்.
ஞானி, ஞானம், ஞேயம் (அறிபவன், அறிவு, அறியப்படு பொருள்) என மூன்றாகப் பிரிகிறவிடத்துப் பிரபஞ்சமுண்டு. மூன்றும் ஒன்றாகுமிடத்து அது பரம்பொருள். அவைகளுள் முதலில் ஞானம், ஞானி ஆகிய இரண்டையும் ஒன்றாக்கும் வழியை பகவான் சொல்லுகிறார். பிறகு மூன்றும் ஒன்றாவது எளிது. அக்கினியின் உஷ்ணம் போன்று அறிஞர் இடத்து அறிவாயிருப்பது பகவான். அறிவுக்கு அன்னியராய் அறிஞர் இல்லை. ஈசுவரனே ஜீவர்களிடத்து ஞான சொரூபமாயிருக்கிறார் என்பது பொருள்.
39. யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்
ச அர்ஜுந-மேலும் அர்ஜுனா! ஸர்வபூதாநாம்-எல்லா உயிர்களிலும், யத் பீஜம் தத் அபி அஹம்-விதை எதுவோ அது நானே, மயா விநா-நான் இன்றி, யத் ஸ்யாத்-எது இருக்கக் கூடுமோ, தத் சராசரம் பூதம் ந அஸ்தி-அத்தகைய அசையும், அசையாததுமான பொருட்கள் எதுவும் இல்லை.
பொருள் : எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.
மேலே சொன்னவைகளை யெல்லாம் தொகுத்து ஆராயுமிடத்து ஈசுவரன் ஒருவனே உலகு அனைத்துக்கும் முதற்காரணம். இயங்குவன, இயங்காதவனவாகிய அனைத்தும் அவனிடத்திருந்தே வந்தவைகள்.
அப்படியானால் பகவானுடைய விபூதி முழுதையும் அவர் சொல்லிவிட்டாரா? அதற்கு விடை வருகிறது :
-
40. நாந்தோऽஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப
ஏஷ தூத்தேஸத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா
பரந்தப-எதிரிகளை சுடுபவனே! மம திவ்யாநாம் விபூதீநாம்-என் திவ்ய மகிமைகளுக்கு, ந அந்த: அஸ்தி-முடிவில்லை, விபூதே:-பெருமைகளில், ஏஷ: விஸ்தர: து-இந்த விரிவும் கூட,
உத்தேஸத: மயா ப்ரோக்த:-ஓரளவுதான் என்னால் கூறப்பட்டது.
பொருள் : பார்த்தா, என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.
கோழி ஒன்று தன் குஞ்சுக்கு உணவு தேடும் விதத்தைச் சிறிது காட்டித் தருகிறது. அவ்வழியைப் பின்பற்றிப் பின்பு தனக்குத் தேவையாயுள்ள உணவை யெல்லாம் அக்குஞ்சே தேடிக்கொள்கிறது. அங்ஙனம் ஈசுவர மஹிமையைக் காண்பதற்கான வழியை பகவான் புகட்டியருள்கிறார். அதன்படி அனுஷ்டிக்கும் சாதகன் தன் அறிவுக்கு எட்டிய அளவு ஈசுவரனை அறிகிறான்.
ஈசுவரனை யாரால் முற்றிலும் அறிய முடியும்? அந்தப் பாக்கியம் நமக்கு இல்லை. நாம் அவனைப் பூரணமாக அறிய வேண்டுமென்பதுமில்லை. அவனைக் கண்டு, அவன் ஒருவனே உண்மைப் பொருள் என்று உணர்ந்தால் போதுமானது. ஒருவன் புண்ணிய நதியாகிய கங்கைக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். அதைக் கங்கோத்திரியிலிருந்து கங்கா சாகரம் வரையில் தரிசிக்கவும் ஸ்பர்சிக்கவும் வேண்டியதில்லை. ஓர் இடத்தில் அதைத் தொட்டு நீராடினாலே அவன் கிருதார்த்தனாகிறான்.
ஈசுவரனுடைய மகிமையைச் சிறிதாவது சுவானுபவத்தில் அறிந்துகொண்டவன் பிறகு உலகை எங்ஙனம் பொருள்படுத்துகிறான்? விடை பகவானுடைய வாக்கியத்திலிருந்தே வருகிறது :
41. யத்யத்விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ऽஸஸம்பவம்
யத் யத் விபூதிமத்-எதெது பெருமையுடையது, ஸத்த்வம்-உண்மையுடையது, ஸ்ரீமத் -அழகுடையது, ஊர்ஜிதம் வா-வலிமையுடையது, தத் தத்-அது எல்லாம், மம தேஜோம்ऽஸ ஸம்பவம் ஏவ-எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது, த்வம் அவகச்ச-நீ புரிந்து கொள்.
பொருள் : எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.
சூரிய கிரணம் எங்கும் வியாபித்து, எல்லாப் பொருள்களையும் விளக்குகிறது. ஈசுவரனோ எல்லாப் பொருளுமாய் அதனதன் வாயிலாகத் தன் பெருமையையும், சிறப்பையும், அழகையும், வல்லமையையும் விளக்குகிறான். ஏதேனும் ஒரு பொருள் அல்லது உயிர் ஏதேனும் ஒரு விதத்தில் மனதைக் கவர வல்லதாயின், அத்தகைய மாண்பு ஈசுவரனுடையதே என்றும், அது அவ்வடிவத்தின் வாயிலாக மிளிர்கிறது என்றும் அறிந்து கொள்க.
பகவானது சாகாரநிலை அதாவது ரூபத்தோடு கூடிய நிலையென்றால் என்ன என்பது உனக்குத் தெரியுமா? நீர்ப்பரப்பின் மேல் தோன்றும் குமிழிகள் போன்றது அந்நிலை. சிதாகாசத்தில் பலவித ரூபங்கள் எழுவதை உண்மையாகக் காணலாம். பகவத் அவதாரமும் அவ்வித ரூபங்களில் ஒன்று.
அப்படியாயின் அகிலாண்டங்களிலுமுள்ள உருவத் தொகுதி தானே கடவுள்? இக்கேள்விக்கு விடை வருகிறது :
42. அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஸேந ஸ்திதோ ஜகத்
அதவா-அன்றி, அர்ஜுன-அர்ஜுனா, ஏதேந பஹுநா ஜ்ஞாதேந தவ கிம்-இதைப் பலவாறாகத் தெரிந்து கொள்வதில் உனக்குப் பயன் யாது? அஹம் இதம் க்ருத்ஸ்நம் ஜகத்-நான் இந்த உலகனைத்தும், ஏகாம்ஸேந-எனது சக்தியின் ஓர் அம்சத்தால், விஷ்டப்ய ஸ்தித:-தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.
பொருள் : அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.
வல்லவன் ஒருவனை ஒரு கோணிப்பையில் கட்டி ஓடவிட்டால் அவன் தனது முழு ஆற்றலையும் அப்பொழுது காட்ட முடியாது. பல வடிவங்கள் வாயிலாக பகவான் தமது மகிமையை விளக்குகிறார் எனினும், அவ்விளக்கம் அரைகுறையானதே. இனி அலையாகப் பரிணமித்திருப்பது சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதியே. அங்ஙனம் அகிலாண்டமாய்ப் பரிணமித்திருப்பது ஈசுவரனுடைய ஒரு சிறு கலை மட்டுமே. அவனுடைய சொரூபத்தின் பெரும் பகுதி தோற்றத்துக்கு அப்பால் பரம்பொருளாய் உள்ளது.
கடவுள் உருவமற்றவரும், உருவமுள்ளவரும் ஆவார். உருவம் அருவம் இவ்விரண்டையும் கடந்தவரும் ஆகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரேதான் முற்றிலும் அறிவார்.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
விபூதியோகோ நாம தசமோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின் கண் விபூதி யோகம் என்ற பத்தாம் அத்தியாயம்.
-
பதினோன்றாம் அத்தியாயம் (http://temple.dinamalar.com/news.php?cat=176)
விச்வரூபதர்சன யோகம்
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான். விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுவதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான்.
பிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். அர்ஜுனனது வேண்டுதல் 1-4 -ஞானக்கண்ணை வழங்குதல் 5-8 -அனைத்தும் ஈசன் எனத் தொகுத்துக் காணுதல் 9-14 -தான் கண்ட விசுவரூபத்தை அர்ஜுனன் விளக்கியுரைத்தல் 15-31 -கால சொரூபியாகிய ஈசன் தமது செயலைத் தாமே செய்துமுடிக்கிறார் 32-34 -அர்ஜுனன் செய்கிற ஸ்துதி 35-44 -அர்ஜுனன் விசுவரூபதர்சனம் தனக்குப் போதுமென்றது 45-46 -அர்ஜுனனுக்குக் கிட்டிய தனி வாய்ப்பு 47-49 -மீண்டும் எடுத்த சாந்த சொரூபம் 50-51- வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டிய முறை 52-55.
அர்ஜுந உவாச
1. மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம்
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோऽயம் விகதோ மம
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், மத் அநுக்ரஹாய-என் மீது அருள் பூண்டு, த்வயா அத்யாத்ம ஸம்ஜ்ஞிதம்-உன்னால் ஆத்ம ஞானம் என்னும், பரமம் குஹ்யம்-மிக உயர்ந்ததும் மறைத்துக் காப்பாற்றத் தக்கதுமான, யத் வச: உக்தம்-எந்த உபதேசம் கூறப் பட்டதோ,
தேந மம-அதனால் என்னுடைய, அயம் மோஹ: விகத:-இந்த மோகம்/மயக்கம் தீர்ந்து போயிற்று.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று.
தம்முடைய ஒரு சிறு அம்சம் இவ்வுலகனைத்தும் ஆனது என்றும், தாம் அகிலாண்டத்தையும் தாங்கிக் கொண்டு அதற்கப்பாலும் இருப்பதாக பகவான் சொன்னார். அதைக் கேட்ட அர்ஜுனன் தான் அந்த சொரூபத்தை நேரே சாக்ஷõத்கரிக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டான்.
அவன் பகர்ந்ததன் உட்கருத்தாவது :
என்னைப்பற்றியும், உலகைப்பற்றியும், உலகுக்கும் எனக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், என் கடமையைப் பற்றியும் நான் இது பரியந்தம் கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் வெறும் மயக்கமேயாம். தாம் உபதேசித்தருளிய பரதத்துவ போதத்தால் அந்த மோஹம் அகன்று போயிற்று. மேலும் :
2. பவாப்யயௌ ஹி பூதாநாம் ஸ்ருதௌ விஸ்தரஸோ மயா
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்
ஹி-ஏனெனில், கமலபத்ராக்ஷ-தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், மயா த்வத்த:-என்னால் உங்களிடமிருந்து, பூதாநாம் பவ அப்யயௌ-உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும், விஸ்தரஸ: ஸ்ருதௌ-விரிவாகக் கேட்டேன், ச அவ்யயம் மாஹாத்ம்யம் அபி-அவ்வாறே அழிவற்ற பெருமையும் (கேட்கப் பட்டது).
பொருள் : உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.
பகவான் சுருக்கமாகச் சொன்னேன் என்றதை அர்ஜுனன் விரிவாகச் சொல்லப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறான். இருவர் கருத்தும் அவரவர் நிலைமையில் உண்மையே.
அனைத்துக்கும் பகவான் முதற் காரணமாயிருக்கிறார். ஆனால் அவர் ஒன்றிலும் கட்டுப்படுவதில்லை. நடைமுறைகளனைத்துக்கும் விளக்கம் அவரிடத்திருந்து பெறலாம். இத்தனையும் உண்டு பண்ணியும் அவரிடத்துத் தேய்வு ஒன்றுமில்லை. இவை யாவும் அவருடைய மஹிமையாம்.
3. ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஸ்வர
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஸ்வரம் புரு÷ஷாத்தம
பரமேஸ்வர-பரமேசுவரா, புரு÷ஷாத்தம-மனிதர்களில் உயர்ந்தவனே, த்வம் ஆத்மாநம் யதா ஆத்த-நீ உன்னைப் பற்றி எவ்வாறு கூறினாயோ, ஏதத் ஏவம்-அது அவ்வாறே, தே ஐஸ்வரம் ரூபம்-உன்னுடைய ஈசுவர ரூபத்தை, த்ரஷ்டும் இச்சாமி-காண விரும்புகிறேன்.
பொருள் : பரமேசுவரா, புரு÷ஷாத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.
எங்கும் நிறைந்துள்ள விஷ்ணுவாகிய அவரிடம் ஞானம், ஐசுவரியம், பலம், சக்தி, வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்திருக்கின்றன. பகவான் என்னும் சொல்லுக்கு ஷட்குண சம்பன்னன் என்று பொருள். ஆறுவித தெய்வ சம்பத்துக்கள் அவரிடம் இருக்கின்றன. அத்தனை மஹிமைகளோடு கூடிய அவரைக் காண அர்ஜுனன் விரும்பியது இயல்பே.
4. மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ
யோகேஸ்வர ததோ மே த்வம் தர்ஸயாத்மாநமவ்யயம்
ப்ரபோ-பிரபுவே, மயா தத் த்ரஷ்டும் ஸக்யம் இதி-என்னால் அதை பார்க்க முடியும் என்று, யதி மந்யஸே-நீ கருதுவாயெனில், யோகேஸ்வர:-யோகேசுவரா, தத:-அப்போது, த்வம் ஆத்மாநம் அவ்யயம்-நீ உன்னுடைய அழிவற்ற ஆத்மாவை, மே தர்ஸய-எனக்குக் காட்டுக.
பொருள் : இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.
யோகத்துக்கும் யோகிகளுக்கும் தலைவன் யோகேசுவரன். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பஞ்ச கிருத்தியங்கட்கும் தலைவன் இறைவன். காட்சியளித்தல் அல்லது அருளல் வேண்டுமென்று அர்ஜுனன் விண்ணப்பிக்கிறான். ஈசுவரனது விசுவரூபத்தைக் காணவேண்டுமென்பது அவன் விருப்பம். ஞான தர்சனம் கொடுத்தருள யோகேசுவரனுக்கு இயலும்.
தன்னுடைய தீர்மானத்துக்கு முக்கிய ஸ்தானம் தராது, ஈசுவரனுடைய அனுக்கிரகத்துக்கு முதன்மை கொடுப்பது பக்தனுடைய இயல்பு. மனிதன் எதற்குத் தகுதியுடையவன் அல்லது தகுதியற்றவன் என்று தான் அறிந்துகொள்வதைவிட பகவானே அதை உள்ளபடி அறிகிறார்.
இங்ஙனம் அர்ஜுனனால் விண்ணப்பிக்கப் பெற்றதும் :
ஸ்ரீ பகவாநுவாச
5. பஸ்ய மே பார்த ரூபாணி ஸதஸோऽத ஸஹஸ்ரஸ:
நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஸதஸ: ஸஹஸ்ரஸ:-பல நூறாகவும், பல்லாயிரமாகவும், நாநாவிதாநி ச-பல வகை, நாநாவர்ண ஆக்ருதீநி ச-பல நிறம் அளவு பலவாக, அத-இப்போது, திவ்யாநி ரூபாணி பஸ்ய பார்த-திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா!
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பல நூறாகவும், பல்லாயிரமாகவும், வகை பல, நிறம் பல, அளவு பலவாகும் என திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா.
தெய்வத்தோடு சம்பந்தப்படாதவைகள் போல் தென்படுபவைகள் உண்மையில் தெய்வப் பெற்றியுடைத்திருக்கின்றன. ஆகையால் அவைகள் திவ்வியமானவைகள் எனப்படுகின்றன. வடிவத்திலும் நிறத்திலும் தன்மையிலும் வேறுபட்டு, எண்ணிக்கையில் அடங்காதிருப்பவைகளெல்லாம் ஒரு பொருளின் எண்ணிறந்த தோற்றங்கள் என்பது இனி விளங்கும்.
ஒவ்வொரு வஸ்துவும் நாராயணன். மனிதன் நாராயணன்; ஜீவப் பிராணி நாராயணன். ரிஷியும் நாராயணன்; போக்கிரியும் நாராயணனே. உலகில் உள்ள யாவும் நாராயணனே. நாராயணன் பல விதமான திருவிளையாடல்களைச் செய்தருள்கின்றான். எல்லாப்பொருள்களும் அவனுடைய பல்வேறு உருவங்களாகவும் அவனது பிரபாவத்தின் தோற்றங்களாகவும் இருக்கின்றன.
6. பஸ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஸ்விநௌ மருதஸ்ததா
பஹூந்யத்ருஷ்டபூர்வாணி பஸ்யாஸ்சர்யாணி பாரத
பாரத-அர்ஜுனா! ஆதித்யாந் வஸூந் ருத்ராந்-ஆதித்யர்களை, வசுக்களை, உருத்திரர்களை,
அஸ்விநௌ மருத:-அசுவினி தேவரை, மருத்துக்களை, பஸ்ய-பார், ததா-அவ்வாறே, அத்ருஷ்ட பூர்வாணி-இதற்கு முன் கண்டிராத, பஹூநி ஆஸ்சர்யாணி பஸ்ய-பல ஆச்சரியங்களைப் பார்.
பொருள் : ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.
நீ இதுவரையில் கண்டிருந்தது மிகமிகக் குறைந்தது. மேலும் காணக்கிடப்பது கணக்கில் அடங்காதது என்பதை நீ இப்பொழுது உணர்வாய். அதுமட்டுமல்ல :
7. இஹைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் பஸ்யாத்ய ஸசராசரம்
மம தேஹே குடாகேஸ யச்சாந்யத் த்ரஷ்டுமிச்சஸி
குடாகேஸ-அர்ஜுனா, அத்ய இஹ மம தேஹே-இன்று, இங்கே என்னுடலில், ஏகஸ்தம்-ஒரே இடத்தில், க்ருத்ஸ்நம் ஜகத்-உலகம் முழுவதும், அந்யத் ச-அவ்வாறே மேற்கொண்டு, யத் த்ரஷ்டும் இச்சஸி-நீ எதைக்காண விரும்பினும், பஸ்ய-காண்.
பொருள் : அர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப்பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண்.
பாண்டவர்கள் கௌரவர்களை ஜயிப்பதா அல்லது கௌரவர்கள் பாண்டவர்களை ஜயிப்பதா? இதில் எது உசிதம் என்று தனக்குத் தெரியவில்லையென்று அர்ஜுனன் இரண்டாம் அத்தியாயம் ஆறாவது சுலோகத்தில் சொன்னான். அதுபோன்ற மர்மங்களைத் தெரிந்துகொள்ள விருப்ப மிருந்தாலும் அவைகளைத் தெரிந்துகொள்க. விசுவரூபதர்சனத்தில் அண்டங்களின் அமைப்பும், நடைமுறையும் மற்றும் யாவும் உள்ளபடி விளங்கும்.
ஆனால் அக்காட்சி ஊனக்கண்ணால் காணக் கூடியதா? இதற்கு விடை வருகிறது :
8. ந து மாம் ஸக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷúஷா
திவ்யம் ததாமி தே சக்ஷú: பஸ்ய மே யோகமைஸ்வரம்
து அநேந ஸ்வசக்ஷúஷா-ஆனால் இயற்கையான இக்கண்களால், மாம் த்ரஷ்டும் ஏவ ந ஸக்யஸே-என்னை பார்க்க முடியாது, தே திவ்யம் சக்ஷú: ததாமி-உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன், மே ஐஸ்வரம் யோகம் பஸ்ய-என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.
பொருள் : உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.
பிராகிருத கண்கொண்டு பிரகிருதியைத்தான் காணமுடியும். அதிலேயும் தூரத்தில் இருப்பதைப் பார்க்க தூர திருஷ்டிக் கண்ணாடியின் உதவிவேண்டும். நுண்பொருளை அதற்கேற்ற கண்ணாடியின் துணைகொண்டே காணலாம். அங்ஙனம் ஈசுவரனது விசுவரூபத்தைக் காண்பதற்கு ஞானக்கண் தேவை. நெறியான வாழ்க்கை யுடையவர்க்கு அது இறைவனது அருளால் உண்டாகிறது. பஞ்சேந்திரியங்களின் துணையின்றியே ஞானக் கண்ணானது அவ் இந்திரியங்களின் தொழில்களைச் செய்கிறது. அதற்குமேல் ஈசுவர மஹிமையை வேண்டியவாறு தெரிந்து கொள்ளவும் ஞானக் கண்ணுக்கு இயலும். தெளிந்த மனமே ஞானக் கண்ணாகிறது.
பெரியோர்கள் பக்தியைக் கண்களில் தீட்டும் மைக்கு ஒப்பிட்டிருக்கின்றனர். ஸ்ரீமதி ராதை ஒரு சமயம் ஸகிகாள், நான் எனது கிருஷ்ணனை எல்லாவிடங்களிலும் காண்கிறேன் என்றான். அதற்குக் கோப ஸ்திரீகள், தோழி, நீ பக்தியாகிய அஞ்சனத்தைக் கண்களில் இட்டுக்கொண்டிருக்கிறாய். ஆதலால்தான் அப்படித் தெரிகின்றது என்றார்கள்.
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவது போன்று அந்த விசுவரூபக் காட்சியை ஸஞ்ஜயனும் வியாசபகவானும் அதே சமயத்தில் காண்கிறார்கள். தான் கண்டபடி ஸஞ்ஜயன் அதை திருதராஷ்டிரருக்கு விளக்குகிறான்.
ஸஞ்ஜய உவாச
9. ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஸ்வரோ ஹரி:
தர்ஸயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஸ்வரம்
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், ராஜந்-அரசே, மஹாயோகேஸ்வர: ஹரி:-யோகத்தலைவனாகிய ஹரி, ஏவம் உக்த்வா தத:-இவ்வாறு உரைத்துவிட்டு அப்பால், பார்தாய-பார்த்தனுக்கு, பரமம் ஐஸ்வரம் ரூபம்-மிக உயர்ந்த தன் கடவுள் வடிவை, தர்ஸயாமாஸ-காட்டினான்.
பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.
10. அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஸநம்
அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்
அநேக வக்த்ர நயநம்-(அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது, அநேக அத்புத தர்ஸநம்-பல அற்புதக் காட்சிகளுடையது, அநேக திவ்ய ஆபரணம்-பல திவ்ய ஆபரணங்கள் பூண்டது, திவ்ய அநேக உத்யத ஆயுதம்-பல தெய்வீக ஆயுதங்கள் ஏந்தியது.
பொருள் : (அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.
உலகெலாம் அவன் சொரூபமாதலால் அவனுக்கு முகங்களும் கண்களும் கணக்கில் அடங்காதவைகள். மனிதனது சிற்றறிவுக்கு எட்டாத அரும்பெரும் செயல்கள் அவனால் நடைபெறுகின்றன. வாதலால் அவனிடத்து அற்புத தர்சனங்கள் நிறைந்துள்ளன. அழகுக்குப் பிறப்பிடம் அவன். பிரகிருதியிலும் அதற்கப்பாலும் உள்ள செந்தரியம் யாவும் அவனுடையவைகள். அதை முன்னிட்டு அவன் தெய்விக ஆபரணங்களை அணிந்தவன் எனப்படுகிறான். தேவகாரியம் எவ்விதத்திலும் நடைபெற்று விடுகிறது. யாரும் அதற்கு இடைஞ்சல் செய்ய முடியாது. அவன் ஏந்தியிருக்கும் திவ்விய ஆயுதங்கள் பல அத்திறனை விளக்குகின்றன.
11. திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்
ஸர்வாஸ்சர்யமயம் தேவமநந்தம் விஸ்வதோமுகம்
திவ்ய மால்ய அம்பரதரம்-திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது, திவ்ய கந்த அநுலேபநம்-திவ்ய கந்தங்கள் பூசியது, ஸர்வ ஆஸ்சர்ய மயம்-எல்லா வியப்புக்களும் சான்றது, அநந்தம்-எல்லையற்றது, விஸ்வதோமுகம் தேவம்-எங்கும் முகங்களுடைய தேவரூபம்.
பொருள் : திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம்.
இயற்கையை உடலாய் ஏற்றுக்கொண்டு அதனுள் இறைவன் உயிராய் ஒளிருமிடத்து இவ்வருணனைகளெல்லாம் ஊனக்கண்ணால் காண்பவர்களுக்கே பொருத்த முடையவைகளாகின்றன. பின்பு, ஞானக்கண் கொண்டு காணுமிடத்து தெய்வப் பெற்றியே யாண்டும் பொலியும்.
12. திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா
யதி பா: ஸத்ருஸீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந:
திவி-வானத்தில், ஸூர்யஸஹஸ்ரஸ்ய-ஆயிரம் சூரியன்கள், யுகபத்-ஒரே நேரத்தில், உத்திதா-உதயமானால், பா: யதி பவேத்-பிரகாசம் எப்படி இருக்குமோ, ஸா-அந்த பிரகாசம்,
தஸ்ய மஹாத்மந:-அந்த மகாத்மாவின், பாஸ-ஒளிக்கு, ஸத்ருஸீ-நிகராக, ஸ்யாத்-இருக்கலாம்.
பொருள் : வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.
தெரிந்த ஒன்றை உபமானமாகக் கொண்டுதான் தெரியாத ஒன்றை ஏகதேசம் அறிந்துகொள்ளலாம். காணாதவர்க்கு ஈசனது காந்தி ஒன்றும் விளங்காது. உண்மையில் அவன் அவனுக்கே ஒப்பாவான். ஒருமிக்க உதயமான ஆயிரம் ஞாயிறுகளோடு ஒப்பிடுவதே அவன் ஒப்பில்லான் என்பதை விளக்குகிறது. ஆதலால் அவன் ஒருவனே மஹாத்மா என்னும் சொல்லுக்கு இலக்காகிறான்.
13. தத்ரைகஸ்தம் ஜகத்க்ருத்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா
அபஸ்யத்தேவதேவஸ்ய ஸரீரே பாண்டவஸ்ததா
பாண்டவ: ததா-பாண்டவன் (அர்ஜுனன்) அப்போது, அநேகதா ப்ரவிபக்தம்-பல பகுதிப்பட்டதாய், க்ருத்ஸ்நம் ஜகத்-வையகம் முழுவதும், தேவதேவஸ்ய-அந்தத் தேவ தேவனுடைய, தத்ர ஸரீரே-அந்த உடலில், ஏகஸ்தம்-ஒரே இடத்தில், அபஸ்யத்-கண்டான்.
பொருள் : அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.
வேற்றுமையில் ஒற்றுமை குடி கொள்வது இயற்கையின் அமைப்பு. வானவர், மக்கள், விலங்கு, பறவை, நிலைத்திணை ஆகிய எண்ணிறந்த இனங்களாக உயிர்கள் வடிவெடுக்கின்றன. இவையாவும் சேதனத்தின் பல்வேறு தோற்றங்கள். மண், உலகு, கீழ் உலகு, மேல் உலகு ஆகிய இவையாவும் போகத்துக்குரிய இடங்களாகின்றன. போகப் பொருள்கள் பல இவ்வுலகெங்கும் நிறைந்திருக்கின்றன. இவை யாவும் உயிர்க்குயிராய், அறிவுக் கறிவாய் உள்ள இறைவனில் அடங்கியிருப்பது ஒற்றுமையைக் காட்டுகிறது.
14. தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தநஞ்ஜய:
ப்ரணம்ய ஸிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிரபாஷத
தத: ஸ: தநஞ்ஜய:-அப்போது அந்த தனஞ்ஜயன், விஸ்மய ஆவிஷ்ட:-பெரு வியப்பு அடைந்து, ஹ்ருஷ்ட ரோமா:-மயிர் சிலிர்த்து, தேவம்-அக்கடவுளை, ஸிரஸா ப்ரணம்ய-தலை குனிந்து வணங்கி, க்ருத அஞ்ஜலி:-கைகளைக் கூப்பிக் கொண்டு, அபாஷத-கூறினார்.
பொருள் : அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.
தேவதர்சனம் மனதின்கண் பெரிய மாறுதலை உண்டுபண்ணுகிறது. அது அகத்தும் புறத்தும் சில அறிகுறிகளுடன் பரிணமிக்கிறது. வியப்படைதல் உள்ளத்தின் இயல்பு. உரோமம் சிலிர்த்தல், தலைவணங்குதல், கைகூப்புதல் முதலியன உடலின் கண் தோன்றும் பரவசச் செயல்களாம். இனி, மன நிறைவு நிறைவுமொழியாய்ப் பொங்கி வழிகிறது. அது வருமாறு :
அர்ஜுந உவாச
15. பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே
ஸர்வாம்ஸ்ததா பூதவிஸேஷஸங்காந்
ப்ரஹ்மாணமீஸம் கமலாஸநஸ்தம்
ருஷீம்ஸ்ச ஸர்வாநுரகாம்ஸ்ச திவ்யாந்
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், தேவ! தவ தேஹே-தேவனே, உன் உடலில், ஸர்வாந் தேவாந்-எல்லாத் தேவர்களையும், ததா பூதவிஸேஷஸங்காந்-அவ்வாறே அநேகப் பிராணி வர்க்கங்களையும், கமல ஆஸநஸ்தம்-தாமரை மலரில் வீற்றிருக்கும், ஈஸம் ப்ரஹ்மாணம்-ஈசனாகிய பிரமனையும், ஸர்வாந் ருஷீந்-எல்லா ரிஷிகளையும், திவ்யாந் உரகாந் ச-தெய்வீக சர்ப்பங்களையும், பஸ்யாமி-காண்கிறேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.
உயிர்களுக்கெல்லாம் தலைவனாயிருப்பதால் நான்முக பிரம்மா ஈசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் மஹாவிஷ்ணுவின் உந்திக் கமலத்தில் வீற்றிருப்பவர். சரம் அசரம் ஆகிய உயிர்த் தொகுதிகள் யாவும் விசுவ ரூபத்தில் அடங்கப்பெற்றிருக்கின்றன. வாஸுகி முதலிய ஸர்ப்பங்களும் வசிஷ்டர் முதலிய ரிஷிகளும் அங்குத் தென்படுகின்றனர்.
16. அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம்
பஸ்யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம்
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம்
பஸ்யாமி விஸ்வேஸ்வர விஸ்வரூப
விஸ்வேஸ்வர-எல்லாவற்றுக்கும் ஈசனே, அநேகபாஹூ உதர வக்த்ர நேத்ரம்-பல தோளும், வயிறும், வாயும், விழிகளுமுடைய, அநந்த ரூபம்-எல்லையற்ற வடிவாக, த்வாம் பஸ்யாமி-உன்னைக் காண்கிறேன், விஸ்வரூப!-எல்லாம் தன் வடிவாகக் கொண்டவனே, தவ அந்தம் ந பஸ்யாமி-உன்னுடைய முடிவேனும் நான் பார்க்கவில்லை, மத்யம் ந-இடையும் காணவில்லை, புந: ஆதிம் ந-மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை.
பொருள் : பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன்.
தோன்றிய யாவும் அவனேயாகி அவைகளுக்கு அப்பாலும் அவனே இருக்கிறான் என்பது பொருள்.
17. கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச
தேஜோராஸிம் ஸர்வதோ தீப்திமந்தம்
பஸ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத்
தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்
கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச-மகுடமும், கதையும், சக்கரத்தோடு, ஸர்வத: தீப்திமந்தம் தேஜோராஸிம்-எங்கும் ஒளிரும் ஒளிதிரளாகவும், தீப்த அநல அர்க த்யுதிம்-தழல்படு தீயும் ஞாயிறும் போல, துர்நிரீக்ஷ்யம்-பார்க்கக் கூசுகின்ற, ஸமந்தாத்-எங்கும் நிறைந்ததுமாக,
அப்ரமேயம் த்வாம் பஸ்யாமி-அளவிடற்கரியதாக உன்னைக் காண்கிறேன்.
மகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன்.
சொப்பனத்தில் காணும் ஜோதி ஊனக் கண்ணுக்குத் தட்டுப்படுதல் இல்லையெனினும் அதில் கண் கூசுவது போன்றிருக்கிறது. அதிலும் பரந்த பாங்கில் ஞானக் கண்ணுக்கும் கூசுதல் உண்டாகிறது. அவ்வொளி உள்ளத்தை உறுதிப்படுத்தும் தன்மையது. ஞானக்கண் மற்ற இந்திரியங்களைவிடப் பன்மடங்கு தெளிவுடையது எனினும், அதைக்கொண்டும் விசுவ ரூபத்தை முழுதும் அளக்க முடியாது. ஆகையால் அது அப்ரமேயம் எனப்படுகிறது.
சத்வ குணத்தின் நிறம் தூவெண்மை. ஆத்ம பிரகாசம் அதன்கண் தோயுமிடத்து அது சுடர்விட்டெரியும் சூரியாக்கினி போன்று மிளிர்வது இயல்பு.
இத்தகைய காட்சியை அடையப்பெற்ற அர்ஜுனன் சித்தாந்தப்படுத்துவது யாது என்றால்:
18. த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம்
த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்
த்வமவ்யய: ஸாஸ்வததர்மகோப்தா
ஸநாதநஸ்த்வம் புரு÷ஷா மதோ மே
அவ்யயம்-அழிவிலாய், பரமம் வேதிதவ்யம்-அறியத்தக்கதில் சிறந்தது, த்வம் அஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்-நீயே உலகத்தில் உயர் தனி உறைவிடம், அக்ஷரம்-கேடிலாய், த்வம் ஸாஸ்வத தர்ம கோப்தா-நீ என்றும் நிலையாக அறத்தினை காப்பாய், த்வம் ஸநாதந: புருஷ:-சநாதன புருஷன் நீயே, மே மத:-எனக் கொண்டேன்.
பொருள் : அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; சநாதன புருஷன் நீயெனக் கொண்டேன்.
பகவானை அறிந்தவன் பரத்துக்கு உரியவன் ஆகின்றான். ஆதலால் பகவான் ஒருவரே சாதகன் ஒருவனால் அறியத்தகுந்தவர். சஞ்சரிக்கும் மேகத்துக்குச் சலனமற்ற ஆகாசம் இருப்பிடமாவது போன்று உலகம் யாவுக்கும் இருப்பிடம் பரமாத்மா. உலகம் அழியும் பொழுது அவர் மாறாதிருக்கிறார். அவருடைய சந்நிதான விஷேத்தால் தர்மம் - இயற்கையின் நடைமுறை-கோணாது நிகழ்கிறது. இவை யாவும் இப்பொழுது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷமாகின்றன. மேலும் அவன் அறிவதாவது :
19. அநாதிமத்யாந்தமநந்தவீர்ய
மநந்தபாஹும் ஸஸிஸூர்யநேத்ரம்
பஸ்யாமி த்வாம் தீப்தஹுதாஸவக்த்ரம்
ஸ்வதேஜஸா விஸ்வமிதம் தபந்தம்
த்வம் அநாதி மத்ய அந்த-ஆதியும் நடுவும் அந்தமுமில்லாதவனாகவும், அநந்தவீர்யம்-வரம்பில்லாத வீரனாகவும், அநந்தபாஹும்-கணக்கிலாத் தோளுடையவனாகவும், ஸஸி ஸூர்ய நேத்ரம்-ஞாயிறுந் திங்களும் கண்களாகவும், தீப்த ஹுதாஸ வக்த்ரம்-கொழுந்து விட்டெறியும் தீ போன்ற வாயுடன் கூடியவனாகவும், ஸ்வதேஜஸா-தம்முடைய வெப்பத்தினால், இதம் விஸ்வம் தபந்தம் பஸ்யாமி-இந்த உலகத்தை எரிப்பவனாகவும் காண்கிறேன்.
பொருள் : ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன்.
காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்படாமையினால் அவருக்கு ஆதி நடு அந்தமில்லை. உலகத்தைப் படைத்துக் காத்துத் துடைப்பது அவருக்கு விளையாட்டாக நடைபெறுவதாதலால் அவர் அனந்த வீரியமுடையவர். உலகத்திலுள்ள கைகளையெல்லாம் கொண்டு அவர் தமது காரியத்தைச் செய்துமுடிப்பதால் அவர் கணக்கற்ற கைளையுடையவர் என்று சொல்லப்படுகிறார். இந்திரியங்களுக்குப் பிரகாசத்தைக் கொடுப்பது ஆத்மா. சந்திரன், சூரியன், அக்கினி ஆகியவைகள் பெற்றுள்ள ஒளி பரமாத்மாவினிடத்திருந்து பிரதிபலிக்கின்ற ஒளிகளாம். அகிலாண்டத்திலும் ஆத்ம பிரகாசம் ஜ்வலிப்பதால் உபசாரமாக ஞாயிறு திங்கள் கண்களென்றும், தீ வாயென்றும் வர்ணிக்கப்படுகின்றன. விறகுக் கட்டையில் தீ வியக்தமாவது போன்று விசுவத்தின் வாயிலாகப் பரம்பொருள் வியக்தமாகிறது.
20. த்யாவாப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேந திஸஸ்ச ஸர்வா:
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம்
லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்
மஹாத்மந்-மகாத்மாவே! த்யாவா ப்ருதிவ்யோ:-வானத்துக்கும் பூமிக்கும், இதம் அந்தரம் - இந்த இடைவெளியும், ஸர்வா: திஸ: ச-எல்லாத் திசைகளும், த்வயா ஏகேந ஹி வ்யாப், தம்-உன் ஒருவனாலேயே நிறைந்திருக்கிறது, தவ இதம் அத்புதம் உக்ரம் ரூபம்-உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தை, த்ருஷ்ட்வா-கண்டு, லோகத்ரயம் ப்ரவ்யதிதம்-மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.
பொருள் : வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளான் என்பது இப்பொழுது அர்ஜுனனுக்கு பிரத்யக்ஷமாக விளங்குகிறது. இனிமையும் பயங்கரமும் ஆகிய இரண்டும் இறைவன்பால் உள. அவைகளுள் ஈண்டு பயங்கரக் காட்சியை பார்த்தன் பார்க்கிறான். அவனது மனப்பான்மையே அதற்குக் காரணம். பயங்கரமான யுத்தக்காட்சி தன்னுடைய சிருஷ்டியென்று முதலில் எண்ணினான். உலகைத் திருத்தியமைக்கத் தெய்வமே அத்தகைய உக்கிர வடிவெடுக்க வல்லவனென்று இப்பொழுது உணர்கிறான்.
வெற்றி யாருடையது என்ற ஐயம் அர்ஜுனனுக்கு இருந்தது (அத். 2; சு.6) அதை அகற்றுதற்கான காட்சியை பகவான் தருகிறார். பாண்டவர்களுக்கே வெற்றி என்பது விளங்குகிறது. அதைக் காணலுற்ற குந்தி மைந்தன் கூறுகிறான் :
21. அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஸந்தி
கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா:
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி:
அமீ ஸுரஸங்கா: ஹி-இந்த வானவர் கூட்டமெல்லாம், த்வாம் விஸந்தி-நின்னுள்ளே புகுகின்றது, கேசித் பீதா: ப்ராஞ்ஜலய: க்ருணந்தி-சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர், மஹர்ஷி ஸித்தஸங்கா:-மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார், ஸ்வஸ்தி இதி உக்த்வா-மங்களம் உண்டாகட்டும் என்று கூறி, புஷ்கலாபி: ஸ்துதிபி:-வண்மையுடைய புகழுரைகள் சொல்லி, த்வாம் ஸ்துவந்தி-உன்னை புகழ்கின்றார்.
பொருள் : இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார்.
நர வடிவெடுத்து வந்துள்ள வசுக்கள் முதலிய தேவகணங்கள் தங்கள் பூலோக லீலையை முடித்துக்கொண்டு பகவானிடத்து ஒடுங்குகின்றனர். பூ பாரம் ஒழிகிறது என்பதைத் தெரிந்தும் தெரியாமலும் அவர்கள் மௌனமாக மறைகிறார்கள். பகவானுடைய உக்கிர விளையாட்டை ஒருவாறு அறிந்துகொண்ட சிலர் சிரசின்மீது கைகூப்பி நடுங்கி வணங்குகின்றனர். அச்சத்தால் நிறைமொழி யொன்றும் இயம்ப அவர்களுக்கு இயலவில்லை. உலகுக்குக் கேடுகள் பல வரப்போகின்றனவென்று குறிப்பால் அறிந்த நாரதர் போன்ற மஹரிஷிகளும் கபிலர் போன்ற சித்தர்களும் சம்பூரண ஸ்தோத்திரங்களால், சொற்சுவையும் பொருட் சுவையும் நிறைந்த புகழ்களால் உலகுக்கு மங்களம் உண்டாகுக என்று போற்றினார்கள். உடலில் உள்ள கேடுகளை நீக்குதற் பொருட்டு நோய் வருவது போன்று உலகில் உள்ள கேடுகளை நீக்குதற்பொருட்டு இறைவன் இத்தகைய ஸம்ஹாரச் செயலைச் செய்க. அதினின்று நன்மை விளைக என்ற கருத்தடங்கிய பாசுரங்களைப் பேரறிஞர் பாடிப் போற்றினார்கள். இறைவனது ஆணையால் நடைபெறும் உலகச் செயல்களில் பொருள் படாதவை ஒன்றுமில்லையென்பது பேரறிஞருக்கு விளங்குகிறது.
22. ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா
விஸ்வேऽஸ்விநௌ மருதஸ்சோஷ்மபாஸ்ச
கந்தர்வயக்ஷõஸுரஸித்தஸங்கா
வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்சைவ ஸர்வே
யே ருத்ராதித்யா-எந்த ருத்திரர்கள் ஆதித்தியர்கள், வஸவ: ச-வசுக்களும், ஸாத்யா:-ஸாத்யர்,
விஸ்வே-விசுவேதேவர், அஸ்விநௌ ச-அசுவினி தேவரும், மருத: ச-மருத்துக்கள், உஷ்மபா: ச-உஷ்மபர், கந்தர்வ யக்ஷ அஸுர ஸித்த ஸங்கா-கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும், ஸர்வே ஏவ விஸ்மிதா: ச-எல்லோரும் வியப்புடன், த்வாம் வீக்ஷந்தே-உன்னைப் பார்க்கிறார்கள்.
பொருள் : ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.
ஊஷ்மபர் என்பது உஷ்ணமாயிருப்பதைப் பானம் செய்பவர்கள் என்று பொருள்படுகிறது. பித்ரு தேவர்கள் அங்ஙனம் அருந்துதலில் மகிழ்ச்சியடைகிறார்கள். அத்தகைய தேவகணங்களும் பகவானுடைய விசுவ ரூபத்தை முழுதும் தெரிந்துகொள்ள இயலாதவர்களாயிருக்கிறார்கள். தங்கள் அறிவுக்கு எட்டியவளவு அவர்கள் அந்த ரூபத்தைக் கண்டு வியந்து நிற்கிறார்கள்.
23. ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம்
மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்
பஹூதரம் பஹுதம்ஷ்ட்ராகராலம்
த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ்ததாஹம்
மஹாபாஹோ-பெருந்தோளாய், பஹு வக்த்ர நேத்ரம்-பல வாய்களும், விழிகளும், பஹு பாஹூ ஊரு பாதம் பஹூதரம்-பல கைகளும், பல கால்களும் பல வயிறுகளும், பஹுதம்ஷ்ட்ராகராலம்-பல பயங்கரமான பற்களுமுடைய, தே மஹத் ரூபம் த்ருஷ்ட்வா-உன் பெரு வடிவைக் கண்டு, லோகா: ப்ரவ்யதிதா:-உலகங்கள் நடுங்குகின்றன, ததா அஹம்-யானும் அங்ஙனமே.
பொருள் : பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே.
தன் மனநிலையையே ஒருவன் உலகின்கண் காண்கிறான். பகவானது விசுவரூபத்தையும் அவரது பயங்கரச் செயலையும் முன்பு அர்ஜுனன் கண்டு அறிந்தவன் அல்லன். அதை அவன் இப்பொழுது முதல் கண்டு கலங்குகிறான். உலகிலுள்ள மற்ற உயிர்களும் கலங்குவதாக அவன் காட்சியில் படுகிறது. அவனது நிலையில் இருக்கிறவர்களுக்கெல்லாம் கலக்கமேயாம். ஏன் அவனுக்கு அச்சம் ஏற்பட்டதெனின் அதற்கு விடை அவனது வாயினின்று வருகிறது :
24. நப:ஸ்ப்ருஸம் தீப்தமநேகவர்ணம்
வ்யாத்தாநநம் தீப்தவிஸாலநேத்ரம்
த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா
த்ருதிம் ந விந்தாமி ஸமம் ச விஷ்ணோ
ஹி விஷ்ணோ-ஏனெனில் விஷ்ணுவே! நப:ஸ்ப்ருஸம்-வானைத் தீண்டுவது, தீப்தம் அநேகவர்ணம்-பல வர்ணங்களுடையது, வ்யாத்தாநநம்-திறந்த வாய்களும், தீப்தவிஸாலநேத்ரம்-கனல்கின்ற விழிகளுமுடைய, த்வாம் த்ருஷ்ட்வா-உன்னைக் கண்டு, ப்ரவ்யதிதா அந்தராத்மா-பயத்தினால் நிலைகொள்ளாமல், த்ருதிம் ஸமம் ச ந விந்தாமி-தைரியத்தையும் அமைதியையும் நான் அடையவில்லை.
பொருள் : வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி காணவில்லை.
காணாத ஒன்றைக் காணுமிடத்து ஒருவனுக்குக் கலக்கம் உண்டாவது இயல்பு. கோர சொரூபத்தை சாந்த சொரூபத்தோடு சேர்த்துணரும் பரியந்தம் மனக் கலக்கத்தை மாற்றலரிது.
அம் மனக்கலக்கத்தால் மேலும் விளைந்தது யாது? விடை வருகிறது :
25. தம்ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி
த்ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி
திஸோ ந ஜாநே ந லபே ச ஸர்ம
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ
தம்ஷ்ட்ராகராலாநி ச-கோரைப் பற்களால் பயங்கரமானவையும், காலாநலஸந்நிபாநி-பிரளய கால தீ போன்ற, தே முகாநி த்ருஷ்ட்வா-உன் முகங்களை, திஸோ ந ஜாநே-திசைகள் தெரியவில்லை, ச ஸர்ம ந லபே-சாந்தி தோன்றவில்லை, தேவேஸ ஜகந்நிவாஸ-தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடமே, ப்ரஸீத-அருள் செய்க.
பொருள் : அஞ்சுதரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க.
ஒரு சூரியனை அல்லது சந்திரனை இலக்காக வைத்துக் கொண்டு திசைகள் அறியப்படுகின்றன. பார்க்குமிடமெங்கும் பரஞ்சோதியாயிருப்பதால் திக்குகள் தென்படாமற் போய்விட்டன. ஊழித்தீயானது பொருள்களையெல்லாம் விழுங்குவது மீண்டும் நாள் அமைதியடைதற் பொருட்டு சாந்த சொரூபத்தைக் காட்டியருள்வீராக.
-
26. அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை:
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ
ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை:
27. வக்த்ராணி தே த்வரமாணா விஸந்தி
தம்ஷ்ட்ராகராலாநி பயாநகாநி
கேசித்விலக்நா தஸநாந்தரேஷு
ஸந்த்ருஸ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை:
அமீ த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஏவ-இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும்
அவநிபாலஸங்கை: ஸஹ த்வாம்-மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் உன்னுள்ளே (புகுகின்றனர்), பீஷ்ம: த்ரோண: ச-பீஷ்மனும், துரோணனும், ததா அஸௌ ஸூதபுத்ர: - அவ்விதமே சூதன் மகனாகிய இந்த கர்ணனும், அஸ்மதீயை: அபி யோதமுக்யை: ஸஹ-நம்மைச் சார்ந்த முக்கியப் போர்வீரர்களுடன் கூட.
தே தம்ஷ்ட்ராகராலாநி-உன்னுடைய கொடிய பற்களுடைய, பயாநகாநி-பயங்கரமான க்த்ராணி-வாய்களில், த்வரமாணா விஸந்தி-விரைவுற்று வீழ்கின்றனர், கேசித் தஸந அந்தரேஷு விலக்நா:-சிலர் உன் பல்லிடுக்குகளில் அகப்பட்டு, சூர்ணிதை உத்தமாங்கை: - பொடிபட்ட தலையினராக, ஸந்த்ருஸ்யந்தே-காணப்படுகின்றனர்.
பொருள் : இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்.
பொருள் : கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர். (26-27)
சூதபுத்திரன் என்றால் தேர் ஓட்டியின் மகன் என்று பொருள் இங்கு இச்சொல் கர்ணனைக் குறிக்கிறது.
அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் பெரும்பகை. அத்தகைய பகைவனே அழிவதை முற்கூட்டி அர்ஜுனன் அறிகிறான் அதற்குமேல் பகைவர் எல்லாரும் அழிவதையும் அவன் அறிகின்றான். தன் பக்கத்திலும் பெரிய வீரர்கள் பலர் மடிவது திண்ணம். போரின்போக்கு பொதுப்பட பூபாரத்தைக் குறையிருப்பதாயிருக்கிறது. யாருக்காவது தனி நன்மை வந்தமையும் அறிகுறிகள் தென்படவில்லை.
28. யதா நதீநாம் பஹவோऽம்புவேகா:
ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி
ததா தவாமீ நரலோகவீரா
விஸந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி
நதீநாம் பஹவ: அம்புவேகா:-பல ஆறுகளின் வெள்ளங்கள், ஸமுத்ரம் ஏவ அபிமுகா :-கடலையே நோக்கி, யதா த்ரவந்தி-எவ்வாறு பாய்கின்றனவோ, ததா-அவ்வாறே, அமீ நரலோகவீரா-இந்த மண்ணுலக வீரர்கள், அபிவிஜ்வலந்தி தவ வக்த்ராணி-சுடர்கின்ற உன் வாய்களில்விஸந்தி-புகுகிறார்கள்.
பொருள் : பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.
மலையினின்று வெளிவந்ததும் நதிகள் கடலைநோக்கி ஓடியாக வேண்டும். அதைத்தவிர அவைகளுக்குப் புகலிடம் வேறு ஏதுமில்லை இந்த மண்ணுலக வீரர்கள் என்னென்னவோ மனக் கோட்டை கட்டுகின்றனர். ஆனால் அவர்களெல்லாம் உமது விராட் வடிவத்தில் மறைவது திண்ணம். அவர்கள் இன்னும் உண்மையை அறியவில்லை யெனினும் நீர் அவர்களை எடுத்து விழுங்க ஆரம்பித்துவிட்டீர்.
29. யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா
விஸந்தி நாஸாய ஸம்ருத்தவேகா:
ததைவ நாஸாய விஸந்தி லோகா
ஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்தவேகா:
பதங்கா-விளக்குப் பூச்சிகள், ஸம்ருத்தவேகா:-மிகவும் விரைவுடன், ப்ரதீப்தம் ஜ்வலநம் - எரிகின்ற விளக்கில், நாஸாய யதா விஸந்தி-அழிவதற்காக எவ்வாறு புகுகின்றனவோ, ததா ஏவ-அவ்விதமே, லோகா: அபி நாஸாய-உலகங்களும் அழிவதற்காக, ஸம்ருத்தவேகா:-மிகவும் விரைவுடன், தவ வக்த்ராணி விஸந்தி-உன் வாய்களில் புகுகின்றன.
பொருள் : விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.
சமுத்திரத்தில் சங்கமமான நதிகள் தமது நாமரூபங்களை இழக்கின்றன. ஆயினும் நதியின் நீருக்கு அழிவில்லை. தீயில் வீழும் விட்டில் பூச்சிகள் உடலையே இழக்கின்றன. போர்முனையில் கூடிய வீரர்கள் தங்கள் சுபாவத்தால் தூண்டப்பெற்று, அறிவை இழந்து உடலையும் இழக்க முந்துகின்றனர். அவர்களை அழித்துப் புதிய வடிவில் அமைப்பதன் மூலம் அவர்களைத் திருத்துதற்குப் பகவான் துணைபுரிகிறார்.
30. லேலிஹ்யஸே க்ரஸமாந: ஸமந்தால்
லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி:
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம்
பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ
ஸமக்ராந் லோகாந்-அனைத்து உலகங்களும், ஜ்வலத்பி: வதநை: க்ரஸமாந:-கனல்கின்ற வாய்களால் விழுங்கிக் கொண்டு, ஸமந்தாத்-எப்புறத்தும், லேலிஹ்யஸே-(நாக்குகளால்) தீண்டுகிறாய், விஷ்ணோ-விஷ்ணுவே, தவ உக்ரா: பாஸ-நின் உக்கிரமான சுடர்கள், ஸமக்ரம் ஜகத்-வையம் முழுவதையும், தேஜோபி: ஆபூர்ய ப்ரதபந்தி-வெப்பத்தினால் நிரப்பி சுடுகின்றன.
பொருள் : கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.
எங்கும் வியாபித்திருப்பவர் விஷ்ணு. அவர் மங்கள சொரூபமாக எங்கும் வியாபித்திருப்பது போன்று ஊழித்தீயாக உக்கிர சொரூபம் எடுத்து வியாபகமாவதும் உண்டு. உலகைச் சீர்படுத்த வேண்டிய நெருக்கடியில் அவர் அங்ஙனம் செய்கிறார். ஆனால் அவர் போக்கை அறியாத அர்ஜுனன் விண்ணப்பித்ததாவது :
31. ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ
நமோऽஸ்து தே தேவவர ப்ரஸீத
விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம்
ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்
தேவவர-தேவர்களில் சிறந்தவனே, உக்ரரூப:-உக்கிர ரூபந் தரித்த, பவாந்-நீ க:-யார்? நமோऽஸ்து-உன்னை வணங்குகிறேன், ப்ரஸீத-அருள் புரி, ஆத்யம் பவந்தம்-ஆதியாகிய உன்னை, விஜ்ஞாதும் இச்சாமி-அறிய விரும்புகிறேன், ஹி-ஏனெனில், தவ ப்ரவ்ருத்திம் ப்ரஜாநாமி-உன்னுடைய செயலை அறிகிலேன் (புரிந்து கொள்ள முடியவில்லை).
பொருள் : உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.
அழகுத்தெய்வம் மனதைக் கவர்கிறது. அக் கவர்ச்சியே வணக்கமென்று சொல்லப்படுகிறது. பின்பு, பயங்கர சொரூபம் இன்னொரு போக்கில் உள்ளதைக் கவர்கிறது. அச்சமூட்டுகிற உக்கிர மூர்த்தியின் அருள் பிரசாதத்தை எப்படியாவது பெறவேண்டுமென்று மனது நடுநடுங்கி விண்ணப்பிக்கிறது. அப்படி அச்சமூட்டும் தெய்வத்தின் அருளாலேயே அச்சம் வெல்லப்படுகிறது. பயங்கர மூர்த்தியோடு அங்ஙனம் பயந்து செய்யும் இணக்கமும் வணக்கமெனக் கருதப்படுகிறது. ஜீவர்களின் இயல்பு உக்கிர மூர்த்தியை விரும்பி வணங்குவது அல்ல என்பதை ஈண்டு அர்ஜுனனது செயல் விளக்குகிறது. தேவர்கள் உட்பட அகிலத்துக்கும் முழுமுதற் பொருள் ஈசன் என்பது அர்ஜுனனுக்குப் பிரத்தியக்ஷம். ஆனால் அதனாலேயே அவன் அவரை முழுதும் அறிந்துகொண்டவன் அல்லன். ஒரு மனிதனும் அவனது செயலும் தொடர்ந்து சம்பந்தப்பட்டவைகள். செயலைக் கொண்டு மனிதனை அறியலாம். செயலைக்கொண்டு கடவுளையும் ஒருவாறு அறியலாம். அர்ஜுனன் விரும்புவதும் அதுவே. பகவானது கிருத்தியங்களைக்கொண்டு பகவானது மகிமைகளை அறிய அவன் அவாவுறுகின்றான். அவ்விருப்பத்தை அவன் அஞ்சி வெளியிடுவானாயினன். அதற்கு பகவானது விடையும் வருகிறது :
ஸ்ரீபகவாநுவாச
32. காலோऽஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்தோ
லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த:
ருதேऽபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே
யேऽவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், லோகக்ஷயக்ருத் ப்ரவ்ருத்த:-உலகத்தை அழிக்க பெருகி வளர்ந்துள்ள, கால: அஸ்மி-காலனாக இருக்கிறேன், இஹ லோகாந் ஸமாஹர்தும்-இப்போது உலகனைத்தையும் அழிப்பதற்காக, ப்ரவ்ருத்த:-தொடங்கி இருக்கிறேன், யே யோதா: ப்ரத்யநீகேஷு அவஸ்திதா:-எந்த போர் வீரர்கள் எதிரில் இருக்கின்றார்களோ, ஸர்வே த்வாம் ருதே அபி-அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும், ந பவிஷ்யந்தி-இருக்க மாட்டார்கள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்
நீ யார்? என்ற கேள்விக்கு நான் வல்லமை வாய்ந்த காலம் என்று பகவான் விடை விடுக்கிறார். பகவானுக்கு அமைந்த பல விளக்கங்களுள் அவர் மஹா காலம் என்பதும் ஒன்று. காலம் முன்னும் பின்னும் அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிறது. செயல்களுக்கு இடையில் உள்ள இடையீடாக அது நமக்குத் தோன்றுகிறது. பிறகு செயல்களுக்கே அது அளவையாகிறது. பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தன்பால் அடக்கி வைத்திருப்பது போன்று காலமானது செயல்கள் யாவையும் தன்பால் அடக்கிவைத்திருக்கிறது; ஆதலால் அது எல்லாம் வல்லது. மலையுச்சிக்குப் போகப்போக சமவெளியில் உள்ள மேடுபள்ளங்களெல்லாம் ஒரே வெளியாய்த் தென்படுகின்றன. காலத்தை அகண்டாகாரக் காட்சியில் காணுமிடத்து அண்டங்களின் கிருத்தியங்களெல்லாம் அதில் வீழ்ந்து மறைகின்றன. நிகழ்கின்ற அனைத்தையும் என்றென்றும் அளந்து கொண்டிருக்கின்ற காலமே பகவத் சொரூபமாகிறது.
உம் செயல் யாது? என்ற கேள்விக்கு உலகங்களையும் உலக மக்களையும் எடுத்து விழுங்குவது தம் பிரவிருத்தி என்று பகவான் சொல்லுகிறார். தோன்றியவைகளைச் சிறிது சிறிதாக அவர் சதா விழுங்கிக்கொண்டிருப்பது போன்று பெருவாரியாக சில வேளைகளில் விழுங்கவேண்டிய அவசியம் வருகிறது. மகாபாரத யுத்தம் அத்தகைய தொன்று. சிறிது சிறிதாக அழிவதை இயற்கையின் போக்கு என்கிறோம். பெருமிதமாக அழிவது யாருடைய செயல்; ஏன் அப்படி நடைபெறுகிறது என்று வியப்படைகிறோம். அவையாவும் ஈசன் செயல். எந்த வேளையில் உலகை எப்படி அழிக்க வேண்டுமோ அப்படி அவர் அழிக்கிறார். சிறியது பெரியது ஆகிய எல்லாம் அவர் செயல் என்று அறிபவன் அவரை உண்மையில் போற்றுகிறான். பின்பு, பயங்கரமான எச்செயலைக் கண்டும் அவன் நடுங்குவதில்லை.
பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலிய போர் வீரர்கள் அழிவது திண்ணம் என்று அர்ஜுனனுக்கு இப்பொழுது காட்டப்படுகிறது. பாட்டனாரையும் ஆசாரியரையும் கொல்லுதல் தகுமோ என்று தயங்கிய தனஞ்ஜயனுக்கு அச்செயல் தன்னுடையதல்ல என்ற தேற்றம் இப்பொழுது பகவானால் ஏற்படுகிறது. கர்ணன் மடிவதும் தன்னைப் பொருத்ததன்று என்று அர்ஜுனன் அறிவிக்கப்படுகிறான். அர்ஜுனன் யுத்தத்தில் இறங்காவிட்டாலும் அவர்கள் அழியப்போகிறார்கள். அப்படியானால் அர்ஜுனன் யுத்தத்தில் தலையிடுவானேன்? இக்கேள்விக்கு விடைவருகிறது.
33. தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஸோ லபஸ்வ
ஜித்வா ஸத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்
மயைவைதே நிஹதா: பூர்வமேவ
நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்
தஸ்மாத் த்வம் உத்திஷ்ட-ஆதலால் நீ எழுந்து நில், யஸ: லபஸ்வ-புகழெய்து, ஸத்ரூந் ஜித்வா-பகைவரை வென்று, ராஜ்யம் ஸம்ருத்தம் புங்க்ஷ்வ-செழிப்பான ராஜ்யத்தை ஆள்வாயாக, ஏதே பூர்வம் ஏவ மயா நிஹதா:-இவர்கள் முன்பே என்னால் கொல்லப் பட்டிருக்கிறார்கள், ஸவ்யஸாசிந்-இடது கையாளும் அம்பு எய்யும் வீரனே! நிமித்தமாத்ரம் பவ-நீ வெளிக் காரணமாக மட்டுமே இருப்பாயாக!
பொருள் : ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று தொழில் செய்.
ஜீவர்கள் செயல் புரிதலை அல்லது புரியாதிருத்தலை முன்னிட்டு பகவானுடைய காரியம் எவ்விதத்திலும் மாறுதல் அடையாது. அவனது திட்டத்தில் யாண்டும் ஒழுங்கும் உறுதியும் உண்டு. அதில் கலந்துகொள்ளுகிறவளவு ஜீவனுக்கு எல்லா நன்மையும் உண்டு. அதன் பொருட்டு அவன் எழுந்திருப்பது அவனது முதற் கடமையாகும். ஆத்ம போதம் பெற்று எழுந்திருக்கிறவளவு அவன் செயலுக்குத் தகுதியுடையவனாகிறான். நற்செயல் புகழைத் தருகிறது. நன்மைக்கு இடைஞ்சலாயிருப்பவனே பகைவன். அவனை வெல்லுவது நன்மைக்காகப் பாடுபடுவதாகும். தான் மட்டும் நன்மை செய்தால் போதாது. நன்மைக்கு இடையூறு உண்டு பண்ணுபவனை எதிர்ப்பது ராஜதர்மம். தர்மத்தை நன்கு கடைப்பிடிப்பவர்க்கு இம்மையுமுண்டு, மறுமையுமுண்டு, முக்தியுமுண்டு. அதில் முதலாவது இகலோக வாழ்க்கையில் சிறப்பு. ஆக, செல்வம் நிறைந்த ராஜ்யத்தோடு கூடிய இகலோக வாழ்க்கை வாய்ப்பது தர்மத்தின் பலனாம். அது படிப்படியாக முக்திக்கும் எடுத்துச் செல்லவல்லது.
அதர்மத்தில் மூழ்கிய எதிரிகளை மாய்க்க பகவான் திட்டம் போட்டுள்ளார். அர்ஜுனன் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒப்புக்குப் போர் புரிந்தாலும் போதுமானது. ஆயினும் அவனைப்பற்றிய உண்மை யென்ன? இடது கையாலும் நன்கு அம்பு எய்ய அவன் வல்லவன். துணிந்து சண்டை செய்வானானால் யாரையும் தோற்கடிக்க வல்லவன். அத்தகையவன் இந்தச் சிறந்த சந்தர்ப்பத்தைக் கைவிடலாகாது. தேவர்களையும் வெல்லவல்ல துரோணர், பீஷ்மர் முதலியவர்களை வென்றான் என்ற கீர்த்தி பகவான் கையில் கருவியாயிருப்பதால் எளிதில் வந்தமையும். தக்க வேளையில் தக்க கடமையைச் செய்கின்றவனுக்கு எல்லா மேன்மைகளும் எளிதில் வாய்க்கின்றன.
தான் கண்காட்சி மனோகற்பிதமோ என்ற ஐயமும் யாரெல்லாம் உண்மையாகவே மடியப்போகின்றார்கள் என்ற ஐயமும் அர்ஜுனனுக்கு வருகிறது. அவைகளை நீக்குதற்கு பகவான் மேலும் பகர்கிறார்:
34. த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச
கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா
யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம்-துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும், ததா அந்யாந் அபி யோதவீராந்-அவ்வாறே மற்ற யுத்த வீரர்களையும், த்வம் ஜஹி-நீ கொல், மா வ்யதிஷ்டா-அஞ்சாதே, யுத்யஸ்வ-போர் செய்,
ரணே ஸபத்நாந் ஜேதாஸி-போர் களத்தில் பகைவரை வெல்வாய்.
பொருள் : துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்.
துரோணரையும் பீஷ்மரையும் கொல்லுவது தர்மத்துக்கு முரண்பட்டதன்று என்பது ஏற்கனவே புகட்டப்பட்டது. இனி, அவர்களைக் கொல்லமுடியுமா என்ற ஐயம் எழுகிறது. ஏனென்றால் துரோணர் தெய்வீக அஸ்திர சஸ்திரங்களை யுடையவர்; மேலும் குரு பீஷ்மருக்கோ அவர் விரும்பினாலொழிய மரணம் வராது. இதுவரையில் அவரை யாரும் வென்றது கிடையாது. ஜயத்ரதனுடைய தலையை யார் பூமியில் வீழ்த்துகிறானோ அவனுடைய தலை வெடித்துப் பூமியில் விழும்படி ஜயத்ரதனுடைய தந்தை கடுந்தவம் புரிகிறார். ஆக, அதுவும் கஷ்டத்துக்கு ஏதுவான யுத்தம். இனி, கர்ணன் விஷயமும் அப்படியே இருக்கிறது. அவன் இந்திரனிடத்திருந்து சக்தி என்னும் ஆயுதத்தைப் பெற்றிருக்கிறான். கர்ணன் அதை யார்மீது பிரயோகித்தாலும் அது வீண் போகாது. அர்ஜுனனைக் கொல்லுதற்கென்றே அவன் அதை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான். இந்த நெருக்கடிகளை நினைத்து அர்ஜுனன் அஞ்சி வருந்துவது இயல்பு.
ஆனால் பகவானே அவர்களைத் திருவுளங் கொண்டுள்ளார். அவர்களுடைய வல்லமையை ஏற்கனவே கரந்தாயிற்று. சித்திரத்தில் வரைந்த சிங்கங்களைத் துடைப்பது போன்று அவர்களை ஒடுக்குவது எளிதாகும். வேடன் கையில் உள்ள அம்புபோன்று பகவானுடைய திட்டத்துக்குக் கருவியாயிருப்பது அர்ஜுனன் கடமையாகும். ஆனால் வெல்ல முடியாதவர்களை அவன்தான் வென்றான் என்ற கீர்த்தி அவனுக்கு வரும். இக்கருத்துகளை பகவான் பார்த்தனுக்குத் தெளிவுறுத்துகிறார். இதைக் கேட்ட அர்ஜுனன் என்ன செய்தான்? அது ஸஞ்ஜயரால் விளக்கப்படுகிறது :
ஸஞ்ஜய உவாச
35. ஏதச்ச்ருத்வா வசநம் கேஸவஸ்ய
க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம்
ஸகத்கதம் பீதபீத: ப்ரணம்ய
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், கேஸவஸ்ய ஏதத் வசநம் ஸ்ருத்வா-கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டு, கிரீடீ வேபமாந: க்ருதாஞ்ஜலி: நமஸ்க்ருத்வ-பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி செய்து, பூய: ஏவ க்ருஷ்ணம் ப்ரணம்ய-மீண்டும் கண்ணனை வணங்கி, பீதபீத: ஸகத்கதம் ஆஹ-அச்சத்துடன் வாய் குழறி சொல்லுகிறான்.
பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.
கிரீடம் தரித்துள்ள கோமகன் யாருக்கும் தலை வணங்கலாகாது. அச்சம் தவிர்ப்பது அவனது தர்மம். பிறர் வணங்க அவ்வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுதல் அரசனுக்கு முறை. திட்பத்துடன் உறுதிமொழி கூறுதல் அவனது இயல்பு. இங்கு ஈசுவரனது முன்னிலையில் அம் முறைமைகளெல்லாம் பறந்தோடுகின்றன. கடவுள் முன்னிலையில் குறுகுதல் உயிர்களது முடிவான செயல் என்பது வெளியாகிறது.
அப்படிக் குறுகிய அர்ஜுனன் யாது மொழிந்தான் ? விடை வருகிறது:
அர்ஜுந உவாச
36. ஸ்தாநே ஹ்ருஷீகேஸ தவ ப்ரகீர்த்யா
ஜகத்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச
ரக்ஷõம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி
ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா:
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஹ்ருஷீகேஸ-இருஷீகேசா, தவ ப்ரகீர்த்யா-உன் பெரும் பெயரில் (புகழில்), ஜகத் ப்ரஹ்ருஷ்யதி-உலகம் மகிழ்கிறது, அநுரஜ்யதே ஸ்தாநே ச-இன்புறுவதும் பொருந்தும், பீதாநி ரக்ஷõம்ஸி திஸ: த்ரவந்தி-ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், ச ஸர்வே ஸித்தஸங்கா:-மேலும் சித்தர் கூட்டத்தினர், நமஸ்யந்தி-வணங்குகிறார்கள்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.
முன்பு காணாத மோட்டார் வண்டி முதலியவற்றை நாட்டுப் புறத்தார் பார்த்தால் உடனே அச்சம் கொள்ளுதல் இயல்பு. காணாத அற்புதச்செயலை முதன் முதல் கண்டதும் அதனிடத்துப் பீதி கொள்ளுதல் அறிவிலிகளின் இயல்பு. ராக்ஷஸர்கள் இறைவனைப் பற்றிய ஞான மில்லாதவர்கள்; அகங்கரித்து அடாத செயலில் ஈடுபடுபவர்கள். அத்தகையவர் இறைவனது உலக நடை முறையைத் தொகுத்துக் காணுமிடத்து நடுங்கி நாலா பக்கமும் ஓடுவார்கள். மோட்டார் வண்டி ஒன்றன் அமைப்பையும் பயனையும் அறியுமளவு மக்கள் அதை மெச்சுவார்கள். அங்ஙனம் பகவானது மகிமைகளைத் தெரிந்துகொள்ளுமளவு பக்தர்கள் அவனைப் போற்றிப் புகழ்வார்கள். அப்படிச் செய்வதில் அவர்களுக்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. இனி, மோட்டார்வண்டியைப் பயன்படுத்துபவரோ ஒரு சிறு கூட்டத்தார். பகவானை வணங்கி அவனிடத்து யோகம் செய்து அவனுக்கு உரியவர் ஆகின்றவர்கள் சித்தர்கள். அங்ஙனம் நிறை நிலைகள் யாவையும் அவர்கள் எய்துகின்றனர். உலகை அறிகின்றவளவு ஒருவன் உலகைப் பயன்படுத்துகிறான். பகவானை அறிகின்றவளவு ஒருவன் பண்பும் பயனும் அடைகிறான். இது அர்ஜுனனுக்கு அனுபவ பூர்வமாக இப்பொழுது விளங்குகிறது. ஆக. ராக்ஷசர் முதல் சித்தர் ஈறாக அவரவர் அறிவுக்கு எட்டியவாறு கடவுளோடு இணக்கம் வைப்பது யுக்தமானதே என்று பார்த்தன் பகர்கிறான்.
தெய்விகம் வாய்ந்த ரிஷிகள் ஈசுவரனுடைய நெருங்கிய உறவினரைப் போன்றவர்கள். அவர்கள் அவனுடைய நண்பர்கள் போலவும், ஸகாக்கள் போலவும், உறவினர்கள் போலவும் இருக்கின்றனர். சாதாரண மனிதர்கள் எல்லாரும் எட்டிய உறவினர் போன்றவர்கள். அவர்கள் கேவலம் ஈசுவர சிருஷ்டிகள் மாத்திரமே.
37. கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்
கரீயஸே ப்ரஹ்மணோऽப்யாதிகர்த்ரே
அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ
த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்
மஹாத்மந்-மகாத்மாவே! ப்ரஹ்மண: அபி ஆதிகர்த்ரே-பிரம்ம தேவனையும் ஆதியில் படைத்தவனாகவும், கரீயஸே-மூத்தவராகவும் உள்ள, தே கஸ்மாத் ந நமரேந்-உனக்கு ஏன் வணங்கமாட்டார்? அநந்த தேவேஸ ஜகந்நிவாஸ-அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, யத் ஸத் அஸத்-எது சத்தாகவும் அசத்தாகவும், தத்பரம்-அவற்றைக் கடந்ததாகவும் உள்ள, அக்ஷரம்-அழிவற்ற பரம்பொருள் த்வம்-நீ.
பொருள் : மகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அசத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.
பகவானைப் போற்றி வணங்கும் எண்ணம் இயல்பாகவே சித்தர்களது உள்ளத்தில் எழுகின்றது. ஏனென்றால் அவர் எல்லாருக்கும் பெரியவர், மஹாத்மா, காலதேச நிமித்தத்தில் கட்டுப்படாதவராதலால் அவர் அனந்தர். தேவர்களுக்கெல்லாம் அவரே அதிபதி. ஜகத்துக்கு இருப்பிடமாக அவர் இருக்கிறார். உலகைப் படைத்த ஹிரண்யகர்பன் அல்லது நான்முக பிரம்மாவுக்கும் அவர் முதற்காரணம். உலகாகத் தோன்றியுள்ளது ஸத்; தோன்றாத மூலப்பிரகிருதி அஸத் எனப்படுகிறது. தோன்றிய உலகம் அதனிடத்திருந்து வருவதால் அது சிறிதும் தேய்வடைவதில்லை. ஆகையால் அது அக்ஷரம். ஸத் அஸத் இரண்டையும் அது கடந்திருப்பதால் அது பரம். பகவான் இத்தனையுமாயிருப்பதால் அவரை வாழ்த்தி வணங்காது வேறு என்ன செய்ய முடியும்? பெரியதைப் போற்றுவதால் ஒருவன் பெரியவனாகிறான்.
38. த்வமாதிதேவ: புருஷ: புராண:
த்வமஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம
த்வயா ததம் விஸ்வமநந்தரூப
த்வம் ஆதிதேவ:-நீ ஆதிதேவன், புராண: புருஷ:-பழமையான புருஷன், த்வம் அஸ்ய விஸ்வஸ்ய பரம் நிதாநம்-நீ இந்த அகிலத்தின் பரம நிலையம், வேத்தா ச வேத்யம் ச-நீ அறிவோன், நீ அறிபடு பொருள், பரம் தாம: அஸி-பரமபதம், அநந்தரூப-அநந்தரூபனே,
த்வயா விஸ்வம் ததம்-உன்னால் உலகனைத்தும் நிறைந்துள்ளது.
பொருள் : நீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள், நீ பரமபதம்; அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்.
யாவும் அவரிடத்திருந்து உதயமாவதால் அவர் ஆதிதேவன். பிரபஞ்சம் என்னும் புரியிலே அவர் வாசம் செய்வதால் அவர் புருஷன். அவருக்கு மூத்தவர் ஒருவருமில்லை. ஆகையால் அவர் புராணன் அல்லது தொல்லோன். மஹா பிரளயத்தில் அனைத்துக்கும் அவர் ஒடுங்குமிடமாதலால் அவர் நிதானமாகிறார். அறியும் தன்மை அவரிடத்திருந்து வருகிறது. ஆதலால் அவர் வேத்தா. அறியப்படு பொருள்களெல்லாம் அவரிடத்திருந்து வந்தனவாதலால் அவர் வேத்யம். கடலில் அலை தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் அது ஒடுங்குவது போன்று உலகம் அவரிடத்துத் தோன்றி, இருந்து, மறைகிறது. ஆதலால் அவர் யாண்டும் அதற்குப் பெருநிலம் அல்லது பரம்தாமம் ஆகிறார். அதுவே மஹா விஷ்ணுவுடைய பரமபதம் எனப்படுவது. அவர் இன்னும் என்னவாகிறார் எனில் :
39. வாயுர்யமோऽக்நிர்வருண: ஸஸாங்க:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஸ்ச
நமோ நமஸ்தேऽஸ்து ஸஹஸ்ரக்ருத்வ:
புநஸ்ச பூயோऽபி நமோ நமஸ்தே
வாயு: யம: அக்நி: வருண: ஸஸாங்க:-வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், த்வம் ப்ரஜாபதி-நீ பிரம்மன், ப்ரபிதாமஹ: ச-பிரமனுக்கும் தந்தை (பிதாமகன்-பிரம்மன்), ஸஹஸ்ரக்ருத்வ: நமோ நமஸ்தே அஸ்து-ஆயிரமுறை கும்பிடுகிறேன், பூய: அபி-மீண்டும், தே நம: - உனக்கு நமஸ்காரம், புந: ச நம:-திரும்ப திரும்ப நமஸ்காரம்.
பொருள் : நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டானாகிய பிரம்மன் நீ, உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டுமீட்டும் உனக்கு “நமோ நம!
காச்யபர் முதலிய லோகபிதாக்களுக்கு பிரஜாபதி என்று பெயர். பிரம்மா உலகுக்குப் பாட்டனார் ஆகிறார். அவருக்கு தந்தை விஷ்ணு. ஆகையால் முப்பாட்டனார் என்பது பகவானையே குறிக்கிறது. நமஸ்கரிப்பதற்கு முடிவின்மையானது பக்திப் பெருக்கை விளக்குகிறது.
40. நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே
நமோऽஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோऽஸி ஸர்வ:
தே புரஸ்தாத் அத ப்ருஷ்டத நம:-உன்னை முன் புறத்தேயும் பின்புறத்தேயும் கும்பிடுகிறேன்
ஸர்வ-எல்லாமாவாய், தே ஸர்வத ஏவ நமோऽஸ்து-உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன்,
அமிதவிக்ரம:-எல்லையற்ற வீரியமுடையாய், அநந்தவீர்ய:-அளவற்ற வலிமையுடையாய், ஸமாப்நோஷி-சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய், தத: ஸர்வ: அஸி-எனவே நீ அனைத்துமாக இருக்கிறாய்.
பொருள் : உன்னை முன் புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன்; எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.
எங்குத் திரும்பிப் பார்த்தாலும் எல்லாம் இறைவனுடைய சொரூபம். ஆகையால் நாலா பக்கங்களிலும் அவனுக்கு நமஸ்காரம் செய்வது பொருத்தமாகும். வீரியம் என்பது வல்லமை. அளவற்ற வல்லமையை ஒருவன் உடைத்திருந்தும் அதைக் கையாளாது விட்டுவிடலாம் அதனால் அது வீணாகிறது. பகவான் அத்தகையவரல்லர். தமது முடிவற்ற வல்லமையை எண்ணிறந்த விதங்களில் அவர் செயலுக்குக் கொண்டு வருகிறார். இந்த ஜகத் நடைமுறையே அதற்குச் சான்று. ஆதலால் அவர் பரந்த பராக் கிரமத்தையுடையவர் எனப்படுகிறார். பழம் என்று சொல்லுமிடத்து அதன் சதை, மேல் தோல், கொட்டை ஆகிய எல்லாம் அதில் அடங்கப் பெறுகின்றன. அங்ஙனம் பகவான் என்று சொல்லுமிடத்து, ஜகத் ஜீவகோடியனைத்தும் அவரிடத்து அடங்கப்பெறுகின்றன. அவரைப் போற்றுதலில் எல்லாம் போற்றப்படுகின்றன; எல்லாவற்றையும் போற்றுதலில் அவர் போற்றப்படுகிறார்.
பகவானைப்பற்றிய உண்மையை அறிந்த அர்ஜுனனுக்கு மனப்பான்மை மாறுகிறதா? விடை வருகிறது :
41. ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி
அஜாநதா மஹிமாநம் தவேதம்
மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி
42. யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி
விஹாரஸய்யாஸநபோஜநேஷு
ஏகோऽதவாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷõமயே த்வாமஹமப்ரமேயம்
தவ இதம் மஹிமாநம் அஜாநதா-இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், ஸகா இதி மத்வா-தோழன் என்று கருதி, ப்ரமாதாத் அபி வா ப்ரணயேந-தவறுதலாலேனும் அன்பாலேனும், ஹே க்ருஷ்ண! ஹே யாதவ! ஹே ஸகே! இதி-ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா என்று யத் ப்ரஸபம் உக்தம் ச-எது துடிப்புற்று சொல்லி யிருப்பதையும்
விஹார ஸய்யாஸந போஜநேஷு-விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், ஏக:-தனியிடத்தேனும், அதவா-அன்றி, தத்ஸமக்ஷம் அபி-மற்றவர் முன்னேயெனினும்,
அவஹாஸார்தம்-வேடிக்கையாக, யத் அஸத்க்ருத: அஸி-எந்தவிதமாக அவமதிக்கப் பட்டாயோ, தத் அப்ரமேயம் த்வாம் அஹம் க்ஷõயே-அவற்றையெல்லாம் அளவற்ற பெருமையுடைய உன்னை நான் பொறுக்கும்படி வேண்டுகிறேன்.
பொருள் : இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ஏ கண்ணா, ஏ யாதவா ஏ தோழா என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும்.
பொருள் : விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!
பகவானைப்பற்றிய மெய்யறிவு வந்ததும் அர்ஜுனனுடைய மனப்பான்மை அடியோடு மாறுகிறது. கிருஷ்ணனாகத் தோன்றிய தோற்றம் ஒன்றுமட்டுமல்ல; இவ்வுலகிலுள்ள தோற்றங்கள் யாவும் ஈசுவரனுடையவகளே. அறியாமையினால் நாம் அவைகளை அலட்சியப் படுத்துகிறோம். அவைகளைப் பாராட்டுமளவு நமக்கு நல்லறிவு வருகிறது. நல்லறிவுக்கு மற்றோர் அறிகுறியுண்டு. நம் அறிவு எவ்வளவு தெளிந்தது எனினும் நம் அறிவால் அவனை முழுதும் அளந்துவிட முடியாது. வணக்கம் நிறைந்த இணக்கம் இறைவனிடத்தும் இறைவனது சிருஷ்டியின் கண்ணும் வைக்கக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இதுவே தெளிவுபட்ட மனமாறுதல் ஆகிறது.
அர்ஜுனன் கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதற்குக் காரணம் யாது? விடை வருகிறது : (41-42)
43. பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர்கரீயாந்
ந த்வத்ஸமோऽஸ்த்யப்யதிக: குதோऽந்யோ
லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபாவ
த்வம்-நீ, அஸ்ய சராசரஸ்ய லோகஸ்ய-இந்த சராசரமாகிய இவ்வுலகத்துக்கு, பிதா-தந்தை ஆவாய், ச பூஜ்ய: அஸி-இவ்வுலகத்தால் தொழத் தக்கவன், கரீயாந் குரு-மிகவும் சிறந்த குரு,
த்வத்ஸம: ந அஸ்தி-உனக்கு நிகர் யாருமில்லை, அபி அப்யதிக: குத: அந்ய:-எனில் உனக்கு மேல் வேறுயாவர்? லோகத்ரயே அப்ரதிமப்ரபாவ-மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
பொருள் : சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
சிருஷ்டி முழுதுக்கும் ஈசுவரன் முதற்காரணமாதலால் அவர் நகர்வன, நிலைத்திருப்பன அனைத்துக்கும் பிதா என்று அழைக்கப்படுகிறார். அத்துடன் பெருமை யனைத்தும் அமையப் பெற்றிருப்பதால் அவர் எல்லாராலும் போற்றுதற்கு உரியவராயிருக்கிறார். ஈசன் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு ஒப்பானவரே இல்லை யென்றால் அவரினும் உயர்ந்தவரைக் காண்பது எங்ஙனம்? ஆக, உலக நடைமுறைக்கு அதிபதியாக இருப்பவர் ஈசுவரன் ஒருவரே எனலாம். ஒருவருக்கு மேற்பட்ட ஈசுவரர்கள் இருப்பார்களானால் உலக நடைமுறையில் ஒழுங்கின்மை உண்டாகும். ஒருவர் சிருஷ்டிக்க எண்ணுகையில் மற்றொருவர் ஸம்ஹாரம் செய்ய நினைப்பாரானால் ஒரு செயல் மற்றொரு செயலோடு முரண்பட்டுக் குழப்பம் வந்து அமையும். மற்று ஒழுங்கான உலக நடைமுறைக்குத் தலைவனாக ஈசன் ஒருவரே இருக்கிறார். அவர் எல்லார்க்கும் பெரியவர். அவருக்கு மிக்கார் யாருமல்லாததால் மனிதன் என்ன செய்ய வேண்டும்?
44. தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாமஹமீஸமீட்யம்
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு:
ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்
தஸ்மாத் காயம் ப்ரணிதாய ப்ரணம்ய-ஆதலால், உடல் குனிய வணங்கி, ப்ரஸாதயே-அருள் கேட்கிறேன், ஈட்யம் ஈஸம் தேவ-வேண்டுதற்குரிய ஈசனே! பிதா புத்ரஸ்ய இவ-மகனைத் தந்தை போலும், ஸக்யு: ஸகா இவ-தோழனைத் தோழன் போலும், ப்ரிய: ப்ரியாயா:-அன்பனையன்பன் போலவும் (அன்பான மனைவியைக் கணவன் போலவும்), த்வாம் அஹம் ஸோடும் அர்ஹஸி-நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்
பொருள் : ஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும், அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.
பகவானது மகிமையை அறியும்போது அவன் போற்றுதற்குரிய பொருள் என்பது புலப்படுகிறது. ஆதலால் அர்ஜுனன் காயத்தால் வீழ்ந்து வணங்குகிறான். போற்றுதற்கு உரிய பொருள் அவன் என்று அறிவதால் பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள இணக்கம் தடைப்படுவதில்லை. அது படிப்படியாக நெருங்கி ஐக்கியத்தை உண்டுபண்ணுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் பிரிக்கமுடியாத தொடர்வுண்டு. ஆனால் பயபக்தியால் பிள்ளை பிதாவிடத்துச் சம உரிமை கொண்டாடுவதில்லை. தொடர்வு இருப்பது மட்டும் அல்ல, உயர்வு தாழ்வு பாராட்டாத தோழமையும் உண்டு என்பது அடுத்தபடியாகச் சொல்லப்படுகிறது. அத் தோழமையில் இனிமையும் உண்டு என்று காதல் நிலையில் வைத்து அது மேலும் விளக்கப்படுகிறது. அத்தகைய பேரிணக்கத்தில் குற்றங்காணாது குணமே காணும் பண்பு நன்கு அமையப் பெறுகிறது.
பராபக்தியில் பக்தன் ஈசுவரனைத் தனக்கு அத்யந்தம் நெருங்கிய அன்பனாகக் கருதுகிறான். அது கிருஷ்ண பரமாத்மாவிடம் கோபஸ்திரீகளுக்கு இருந்த பக்தி போன்றது. அவர்கள் அவரை எப்பொழுதும் கோபிகாநாதன் என்று கருதி யழைத்தனரே தவிர ஜகந்நாதன் என்று கருதி அழைத்ததில்லை.
அர்ஜுனன் எத்தகைய வடிவத்தைத் தொடர்ந்து காண விரும்பினான் என்பது மேலும் அவனது வாயினின்று வெளியாகிறது :
45. அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோऽஸ்மி த்ருஷ்ட்வா
பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே
ததேவ மே தர்ஸய தேவ ரூபம்
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ
அத்ருஷ்டபூர்வம்-இதற்கு முன் காணாததை, த்ருஷ்ட்வா ஹ்ருஷித: அஸ்மி-கண்டு மகிழ்சியுறுகிறேன், மே மந: பயேந ப்ரவ்யதிதம் ச-என் மனம் அச்சத்தால் சோர்கிறது, தத் தேவரூபம் ஏவ மே தர்ஸய-அந்த தேவ வடிவத்தையே எனக்கு காட்டுக, தேவேஸ ஜகந்நிவாஸ-தேவேசா, ஜகத்தின் நிலையமே, ப்ரஸீத-அருள் செய்க.
பொருள் : இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்சியுறுகிறேன்; எனினும் என் மனம் அச்சத்தால்சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே எனக்கருள் செய்க.
விசுவரூபத்தைக் காட்டியருள வேண்டுமென்று அர்ஜுனன் பிரார்த்தித்தான். அதற்கு இரங்கிய பகவான் யுத்த நெருக்கடிக்குப் பொருத்தமாயிருந்த ஸம்ஹார சொரூபத்தை விசேஷமாகக் காட்டியருளினார். அதனால் அர்ஜுனனுக்கு யுத்தத்தைப் பற்றிய மயக்கம் ஒழிந்தது. எனினும் எப்பொழுதும் அதிலேயே திளைத்திருக்க தனஞ்ஜயனுக்குப் பிடிக்கவில்லை. கொந்தளிப்புள்ள கடலில் மீன் மருளுவது போன்று அவன் மயங்கினான். யாண்டும் இன்பம் தருகிற சாந்த சொரூபத்தைக் காணவேண்டுமென்று விண்ணப்பித்தான். உக்கிரரூபம் எடுப்பதும் பகவானது லீலை என்பதைத் தெரிந்து கொண்டால் போதுமானது. அக் காட்சியிலேயே நிலைபெற்றிருக்க பக்தன் விரும்புவதில்லை.
சிங்கம் போலப் பொய்க்கோலம் பூண்டுகொண்ட ஹரி, பார்க்க வெகு பயங்கரமாகத்தான் இருக்கிறான். அவன் தன் தங்கை விளையாடுமிடத்துக்குச் சென்று பயங்கரமாகக் கூச்சலிடுகிறான். அதைக்கேட்டு நடுநடுங்கிய அவள், இந்த குரூரப் பிராணியிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமே யென்று துக்கத்தோடு உரக்கக் கூச்சலிட்டு அழுகிறாள். ஆனால் ஹரி தன் வேஷத்தைக் கலைத்து விட்டதும், பயந்து போயிருந்த சிறுமி தனது பிரிய சகோதரனைக் கண்டு, ஓ அண்ணாதானா இது என்று சொல்லிக் கொண்டு அவனிடம் ஓடுகிறாள். மாயையாகிற கோலத்தில் பிரம்மம் தன்னை மறைத்துக் கொள்கிறது. அப்பொழுது அது இரக்க மற்ற மூர்த்தியாகவும் தோன்றுகிறது. மாயையை அகற்றிவிட்டால் பிரம்மம் அன்புருவான அந்தர்யாமியாகவே தோன்றும்.
தான் விரும்பும் வடிவம் இன்னதென்று இனி அர்ஜுனன் தெளிவுபடுத்துகிறான்:
46. கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த
மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ
தேநைவ ரூபேண சதுர்புஜேந
ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்தே
கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்தம்-கிரீடமும் கதையும் கையில் சக்கரமுமாக, ததா ஏவ த்வாம் த்ரஷ்டும் அஹம் இச்சாமி-அந்த விதமாகவே உன்னைக் காண நான் விரும்புகிறேன், விஸ்வமூர்தே-அகில மூர்த்தியே, ஸஹஸ்ரபாஹோ-ஆயிரத் தோளாய், தேந ஏவ சதுர்புஜேந ரூபேண-அதே நான்கு தோலுடன் கூடிய வடிவினை, பவ-எய்துக.
பொருள் : முன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரத் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.
இரண்டு கைகளையுடைத்திருப்பவர் மக்கள். நான்கு கரங்கள் கடவுள்பால் வைத்து அறிவது அவருடைய அமானுஷிய சக்திக்கு அறிகுறியாகும். கெட்டிக்காரன் ஒருவன் பல கைகளை யுடையவனாகக் கருதப்படுகிறான். இனி, கடவுள் விசுவ வடிவத்துடன் இருப்பவர்; ஆதலால் கைகளெல்லாம் அவருடையவைகளேயாம். ஒரு தொழிற்சாலையில் இருப்பவர்கள் அத்தனை பேரும் தொழில் புரிகிறார்கள்; எனினும் தொழில் வல்லமையைக் காட்டுதற்கு அதில் திறமை வாய்ந்த ஒருவனது வேலைப்பாடு மற்றவர்களுக்குக் காண்பிக்கப்படுகிறது. கிருஷ்ணனது மானுட வடிவத்தின் மூலம் தெய்வச் செயல் யாவும் அறியப்படுகின்றன. ஆதலால் தான் எப்பொழுதும் கண்டுவந்த மானுட வடிவத்தையே மீண்டும் காட்டும்படி குந்தியின் மகன் வேண்டுகிறான்.
சில வேளைகளில் சிலருக்குத் தன் வடிவத்தை நான்கு கரங்களுடன் கிருஷ்ணன் காட்சி கொடுத்ததாகப் பாகவதப் புராணம் கூறுகிறது.
தமது காட்சியை பகவான் மாற்றியருள்கிறார். மேலும் அர்ஜுனனுக்கு ஆறுதல் அளிக்கின்றார்.
47. ஸ்ரீ பகவாநுவாச
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம்
ரூபம் பரம் தர்ஸிதமாத்மயோகாத்
தேஜோமயம் விஸ்வமநந்தமாத்யம்
யந்மே த்வதந்யேந ந த்ருஷ்டபூர்வம்
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அர்ஜுந-அர்ஜுனா, ப்ரஸந்நேந-அருள் கொண்டு, மயா ஆத்மயோகாத்-என்னுடைய யோக சக்தியினால், பரம் தேஜோமயம்-மிகச் சிறந்ததும் ஒளி மயமானதும், ஆத்யம் அநந்தம்-முதல் ஆனதும் முடிவற்றதுமான, யத் மே விஸ்வம் ரூபம்-எந்த என்னுடைய விஸ்வ ரூபத்தை, தவ தர்ஸிதம்-உனக்குக் காட்டப் பட்டதோ, இதம் த்வத் அந்யேந-இவ்வடிவம் உன்னைத் தவிர (வேறு எவராலும்), ந த்ருஷ்டபூர்வம்-பார்க்கப் படவில்லை.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது.
ஈசுவர சாக்ஷõத்காரம் பண்ணினது அர்ஜுனனுடைய தனி யுரிமை யென்று பொருள்படுத்தலாகாது. மெய்ப்பொருள் காட்சிக்குத் தனியுரிமையிருக்குமானால் அது எல்லார்க்கும் பொது, எங்கும் வியாபகம், எல்லார்க்கும் அந்தராத்மா என்ற பேருண்மை அடிபட்டுப்போம். அதனுடைய பரிபூரணத்துக்குக் குறையும் வந்துவிடும். கருத்து யாது எனின் சகுணப் பிரம்மம், நிர்க்குண பிரம்மம்-அதன் இத்தனைவிதப் படித்தரங்கள் ஆகிய இவை யாவையும் தொகுத்து ஒருங்கே காட்சி காண்பவர் மிகச் சிலர். அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் காணவில்லை என்பது அதன் சிறப்பைக் குறிக்கிறது.
48. ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநைர்
ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை:
ஏவம்ரூப: ஸக்ய அஹம் ந்ருலோகே
த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர
வேத யஜ்ஞ அத்யயநை: தாநை:-வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், க்ரியாபி-கிரியைகளாலேனும், உக்ரை: தப: அபி ச-உக்ரமான தவங்களாலும் கூட,
ந்ருலோகே-மனித உலகில், த்வத் அந்யேந-உன்னையன்றி, ஏவம் ரூப:-இந்த உருவத்தில், அஹம் த்ரஷ்டும் ஸக்ய-நான் காண இயலாதவன், குருப்ரவீர-குருகுலத்தில் சிறந்த வீரா!
பொருள் : வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா!
வேதத்தை அத்யயனம் செய்வது என்பதைச் சிலர் நெட்டுருப் போட்டு ஓதுதல் என்று பொருள்படுத்துகின்றனர். அதுவெறும் ஞாபகசக்தியையும் மனப்பாடம் பண்ணும் திறமையையும் உண்டுபண்ணுகிறது. அதற்குமேல் அதை அர்த்தம் பண்ணவும் அதில் சொல்லியுள்ள யாகங்களைச் செய்யவும் கற்றுக் கொள்ளவேண்டும். அப்படி நான்கு வேதங்களை அறிந்து எல்லா யாகங்களையும் அனுஷ்டிக்கத் தெரிந்துகொண்டால் வேதாத்யயனம் பூர்த்தியாகிறது. தனக்குப் பயன்படும் பொன், பசு முதலியவைகளைப் பிறர்க்கு வழங்குவது தானமாகும். பலவந்தத்தால் பொருளை ஏராளமாகச் சிரமப்பட்டுச் சேகரித்து அபிஷேகம் அலங்காரம் முதலியவைகளில் பெருமிதமாகச் செலவிடுவது கர்மமாகும். சாந்திராயண விரதம் போன்றவைகள் உக்கிர தபசு ஆகின்றன. இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறவர்கள் பவுர்ணமியன்று பதினைந்து கவளம் அன்னம் உண்கின்றனர். பிறகு நாள் ஒரு கவளம் கிருஷ்ணபக்ஷத்தில் குறைத்துக்கொண்டுவந்து அமாவாசையன்று ஒரு கவளம் உண்கின்றனர். திரும்பவும் சுக்கிலபக்ஷத்தில் நாள் ஒரு கவளம் அதிகப்படுத்திக்கொண்டு போகின்றனர். இவ் விரதத்தால் பெரிதும் சித்த சுத்தி உண்டாகிறது.
விலைகொடுத்து ஒரு பொருளை வாங்குவது போன்று இத்தகைய யக்ஞ, தான, தப கர்மங்களால் ஈசுவரப் பிராப்தி யடைந்துவிடலாம் என்பதில்லை. அவனை அடைதற்கு அவன் அருளையே நாடி நிற்கவேண்டும். அவனை அடைந்தவர்களும் அவனை முழுதும் அறிந்துகொண்டவர்கள் அல்லர்.
கொஞ்சம் சாராயத்தைக் குடித்ததும் சிலர்க்குப் போதையுண்டாகிறது. இன்னும் சிலர்க்குப் போதையுண்டாக இரண்டு மூன்று புட்டிகள் வேண்டியிருக்கிறது. ஆயினும் இருவகையினரும் அடையும் ஆனந்தம் ஒன்றுதான். அதுபோல, ஈசுவர மகிமையில் தினையளவைக் கண்டதும் சிலருக்கு ஆனந்தம் உண்டாகிறது. வேறு சிலருக்கு ஈசுவர ஸந்நிதானத்தில் நேருக்கு நேராக வந்த பிறகு தான் ஆனந்தமுண்டாகிறது. ஆயினும் இருவரும் அடையும் ஆனந்தம் ஒன்றே.
49. மா தே வ்யதா மா ச விமூடபாவோ
த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம்
வ்யபேதபீ: ப்ரீதமநா: புநஸ்த்வம்
ததேவ மே ரூபமிதம் ப்ரபஸ்ய
ஈத்ருக் மம கோரம் ரூபம் த்ருஷ்ட்வா-இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு, தே வ்யதா மா-உனக்கு கலக்கம் வேண்டாம், மா விமூடபாவ: ச-மதி மயக்கமும் வேண்டாம், த்வம் வ்யபேதபீ:-நீ அச்சம் நீங்கி, ப்ரீதமநா:-இன்புற்ற மனத்துடன், தத் ஏவ மே இதம் ரூபம் புந: ப்ரபஸ்ய-எனது இந்த வடிவத்தை மறுபடி பார்!
பொருள் : இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே, அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்!
கொந்தளிப்புள்ள கடல் தேங்கியிருக்கும்போது மனமகிழ்வுண்டாவது போன்று ஹம்ஹார மூர்த்தியின் காட்சி சாந்த மூர்த்தியின் காட்சியாக மாறுகையில் அதைப் பார்க்கும் ஜீவனுக்கு மனவமைதி ஏற்படுவது இயல்பு.
ஸஞ்ஜய உவாச
50. இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா
ஸ்வகம் ரூபம் தர்ஸயாமாஸ பூய:
ஆஸ்வாஸயாமாஸ ச பீதமேநம்
பூத்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், வாஸுதேவ: இதி அர்ஜுநம் உக்த்வா-இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடம் கூறி, பூய: ததா ஸ்வகம் ரூபம் ச-மறுபடியும் அதே விதமான தன்னுடைய உருவத்தையும், தர்ஸயாமாஸ-காட்டினான், புந: மஹாத்மா ஸௌம்யவபு: பூத்வா-அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி, ஏநம் பீதம் ஆஸ்வாஸயாமாஸ-இந்த அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.
பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடங் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.
வசுதேவர் வீட்டில் எப்படிப் பிறந்தாரோ அப்படிப்பட்ட வடிவத்தை இப்பொழுது காட்டியருளினார். உயிர்களுக்குப் பாடம் புகட்டுதற்கு வேண்டியவளவே அவர் அச்சமூட்டுகிறார். பின்பு இனிய வடிவங்காட்டி அவர்களை மகிழ்விக்கிறார். அவர் இத்தகைய தன்மையுடையவராயிருப்பதால் அவர் மஹாத்மா வாகிறார்.
அர்ஜுந உவாச
51. த்ருஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தந
இதாநீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத:
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஜநார்தந-ஜனார்த்தனா, தவ இதம் ஸௌம்யம் மாநுஷம் ரூபம்-நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தை, த்ருஷ்ட்வா இதாநீம்-கண்டு இப்போது, ஸசேதா: ஸம்வ்ருத்த: அஸ்மி-நிலையான மனம் கொண்டவனாக ஆகிவிட்டேன், ப்ரக்ருதிம் கத:-இயற்கை நிலையெய்தினேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.
எல்லாம் ஈசன் வடிவெனினும் சிங்கத்தின் வடிவெடுத்துள்ள ஈசனிடத்திருந்து சிறிது எட்ட நிற்க ஜீவன் விரும்புகிறான். அவனிடத்து ஜீவபோதம் இருக்குமளவு இத்தகைய மனப்பான்மையும் இருக்கும்.
ஸ்ரீ பகவாநுவாச
52. ஸுதுர்தர்ஸமிதம் ரூபம் த்ருஷ்டவாநஸி யந்மம
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஸநகாங்க்ஷிண:
ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மம யத் ரூபம் த்ருஷ்டவாந் அஸி - என்னுடைய எந்த வடிவம் இப்போது பார்த்தாயோ, இதம் ஸுதுர்தர்ஸம்-இது காண்பதற்கு அரிதானது, தேவா அபி-தேவர்கள் கூட, நித்யம் அஸ்ய ரூபஸ்ய-எப்போதும் இந்த உருவத்தை, தர்ஸந காங்க்ஷிண:-காண விருப்பம் கொண்டு இருக்கிறார்கள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்குக் கண்டனை, தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.
தேவர்கள் இச்சித்துக்கொண்டிருக்கிறார்களாதலால் அவர்கள் இன்னும் இறைவனை முழுதும் கண்டதில்லை. ஒரு நதியில் நீராடப் போகின்றவன் அதை ஓர் இடத்தில் ஸ்பரிசித்து மூழ்கி நீராடினால் அந்நதியைக் கண்டவன் ஆகிறான். ஆனால் அது உற்பத்தியாகுமிடத்திலிருந்து சமுத்திரத்தில் சங்கமமாகும் பரியந்தம் அதைப் பார்த்தவர்கள் மிக மிகச் சிலர். அங்ஙனம் அர்ஜுனன் இறைவனைக் கண்டதுபோன்று அவரைப் பெரிதும் அறிந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.
கடவுளைக் காண்பதற்கு சாதகர்கள் கையாண்ட உபாயங்கள் எவை? விடை வருகிறது :
53. நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
ஸக்ய ஏவம்விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா
யதா மாம் த்ருஷ்டவாந் அஸி-எவ்வாறு நீ என்னைப் பார்த்தாயோ, ஏவம்வித: அஹம் - இவ்விதமாக நான், வேதை: த்ரஷ்டும் ந ஸக்ய-வேதங்களாலும் காணப் பட முடியாதவன், தபஸா ந-தவத்தாலும் இல்லை, தாநேந ந-தானத்தாலும் இல்லை, இஜ்யயா ச ந-வேள்வியாலும் இல்லை.
பொருள் : என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.
பொற்காசு ஒன்றை இழந்தவன் அதன்மீது நின்றுகொண்டே அதை எவ்வளவு தேடினாலும் அதை அடையமாட்டான். வேதம், வேள்வி, தானம், தபசு முதலியன மனிதனைப் பண்படுத்துதற்குப் பயன்படலாம். ஆனால் கடவுளைக் காண இவையாவும் உதவமாட்டா.
கடவுளைக் காண வேறு என் செய்வது? விடை வருகிறது:
54. பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப
து பரந்தப-ஆனால், எதிரிகளை எரிப்பவனே! அர்ஜுந-அர்ஜுனா, ஏவம் வித: அஹம் - இவ்விதமாக நான், அநந்யயா: பக்த்யா-வேறெதுவும் வேண்டாத பக்தியால், த்ரஷ்டும் ஸக்ய-காணுதல் இயலும், தத்த்வேந ஜ்ஞாதும் ப்ரவேஷ்டும் ச-உள்ளபடி அறியவும் ஒன்றவும் (முடியும்).
பொருள் : பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.
அனன்ய பக்தி-கடவுளைத்தவிர வேறு ஒன்றையும் நாடாத பக்தி. அது கடவுளுக்குப் புறம்பாக எதையும் பொருள்படுத்துவதில்லை. எல்லாம் அவன் மயம், எல்லாம் அவன் செயல் என்ற மனநிலை அனன்ய பக்தியினின்று வருகிறது.
ஒரு ராஜ மாளிகையில் சிப்பந்திகள் நடந்துகொள்ளும் முறையினின்று அரசன் அதில் வீற்றிருக்கின்றான் என்று யூகித்து உணரலாம். அந்த உணர்ச்சி மட்டும் போதாது. அரசனைக் கண்கூடாகக் காண்பது அதிலும் மேல். இனி, அவனைக் காண்பதிலும் பெரிய நிலையொன்று உண்டு. அரசனோ ஒட்டி உறவாடுதலே சாலச்சிறந்தது. அங்ஙனம் அனன்ய பக்தியால் ஒருவன் கடவுளின் சாந்நித்தியத்தை முதலில் உணர்கிறான். அதன்மேல் தர்சனம் உண்டாகிறது. பிறகு தானே அதில் ஒடுங்குகிறான். இத்தனையும் செய்ய வல்லது பக்தி.
பலர் பாலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் பாலைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் பாலைப் பருகினவர்கள் அதிலும் சிலரே.
ஊனக்கண் கொண்டு கடவுளைக் காணமுடியுமா என்ற பேச் செழுந்தது. இல்லை; ஊனக் கண்களால் காணமுடியாது. பக்தி பண்ணும்போது அன்பு மயமான சரீரம் ஒன்று நமக்குள் உண்டாகிறது. அச்சரீரத்துக்கு அன்பு மயமான கண்களும் காதுகளும் உண்டு. அவற்றால் நீ இறைவனைக் காணவும் கேட்கவும் முடியும்.
பக்தியைப் பெருக்கி இறைவனை அடைதற்கு என்ன செய்ய வேண்டும்? விடை வருகிறது :
55. மத்கர்மக்ருந்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித:
நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ
பாண்டவ-பாண்டவா! ய: மத்கர்மக்ருத்-எவன் செய்ய வேண்டிய கடமைகளை என் பொருட்டே செய்வானோ, மத்பரம:-என்னையே அடையவேண்டும் என்று குறிக்கோள் கொள்வானோ, மத்பக்த:-என்னிடம் பக்தி கொண்டவனோ, ஸங்கவர்ஜித:-பற்றற்றவனோ, ஸர்வபூதேஷு நிர்வைர:-எவ்வுயிரிடத்தும் பகை இல்லாதவனோ, ஸ:-அவன் மாம் ஏதி-என்னையே அடைகிறான்.
பொருள் : என்தொழில் செய்வான், எனைத் தலைக் கொண்டோன்,என்னுடைய அடியான் பற்றெலாம் இற்றான், எவ்வுயி ரிடத்தும் பகைமை யிலாதான் யாவன், பாண்டவா! அவனென்னை எய்துவான்.
எல்லா ஜீவர்களும் கர்ம சொரூபம். ஒருவன் எத்தகையவன் என்பதை அவன் செய்யும் கர்மம் விளக்குகிறது. மக்களுள் கடவுளுக்கென்றே கர்மம் செய்பவன் சிறந்தவன். அரசாங்கத்துக் கென்றே கர்மம் செய்கிறவர்கள் உளர். அதன் மூலம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வது அவர்களிற் சிலரது குறிக்கோள். ஆனால் பக்தனோ கடவுளை அடைதலையே ஒப்பற்ற குறிக்கோளாகக் கொள்கிறான்.
ஆயுளெல்லாம் ஒருவன் சிறைவாசம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதில் விருப்பமில்லாது அவன் அவ்வாழ்வை நடத்துகிறான். ஆனால் கடவுள் வழிபாடு அத்தகையதன்று. நாள்தோறும் புதிய இனிமை அதினின்று பிறக்கிறது. இறைவன்பால் அளவில்லா அன்பு ஊற்றெடுக்கிறது.
இறைவனிடம் அன்பு அதிகரிக்கின்றவளவு உலகப் பொருள்களிடத்துப் பற்று அகலுகிறது. ஒருவன் மற்றொருவனை வெறுப்பதற்குக் காரணம் தான் அடையவிரும்பும் பொருளை மற்றொருவன் கைக்கொள்ள முயலுவதால் வருகிறது. பக்தனுக்கோ ஒரு பொருளிலும் பற்றில்லை யாதலால் அதை முன்னிட்டு யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமில்லை. மனிதன் எதன்பால் தன்னை ஒப்படைக்கின்றானோ அதை அவன் அடைகிறான். கடவுள்பால் தன்னை ஒப்படைப்பவன் கடவுளை அடைகின்றான்.
ஈசுவரனிடம் நமக்கு எவ்வளவு தீவிரமான பக்தி இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா? தனது கணவனிடம் ஒரு கற்புடைய மாதுக்கு இருக்கும் அன்பு, தான் புதைத்து வைத்த பணத்தினிடம் ஒரு லோபிக்கு இருக்கும் ஆசை, உலகப் பொருள்களைப் பெறவேண்டுமென்று பற்றுள்ளவர்கள் கொள்ளும் ஆவல் இந்த மூன்றும் ஒன்று கூடினாற்போன்ற தீவிர பக்தியானது ஈசுவரனைக் காணவேண்டியதற்காக உன் மனதில் உதித்திருக்குமானால் அப்போது அவனை நீ நிச்சயமாக அடைவாய்.
-
பன்னிரண்டாம் அத்தியாயம்
பக்தி யோகம்
ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்கார மற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில் தான் கடவுளுக்கு அதிக பிரீதி. சகுண நிர்க்குண பிரம்ம உபாஸனைகள் 1-5 -சகுண பிரம்ம உபாஸனை முறைகள் 6-12 -பக்தனது பேரியல்புகள் 13-20.
அர்ஜுந உவாச
1. ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், யே பக்தா: ஏவம் ஸததயுக்தா:-எந்த பக்தர்கள் இவ்வாறு யோகத்தமர்ந்து, த்வாம் பர்யுபாஸதே-நின்னை வழிபடுகிறார்களோ, யே ச அக்ஷரம் அவ்யக்தம் அபி-மேலும் எவர்கள் அழிவற்ற வஸ்துவை வழிபடுகிறார்களோ,
தேஷாம் யோகவித்தமா: கே-இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது நாசமற்ற “அவ்யக்த” வஸ்துவை வழிபடுவோரா இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
முன் அத்தியாயத்தின் கடைசி சுலோகத்தில் சொல்லியபடி சகுண பிரம்ம உபாசனை செய்வது சிறந்ததா அல்லது நிருபாதி, நிர்விஷய, நிர்க்குண பிரம்ம உபாசனை செய்வது சிறந்ததா என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
2. மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மயி மந: ஆவேஸ்ய-என்னிடத்தே மனத்தைச் செலுத்தி, நித்யயுக்தா:-நித்திய யோகிகளாய், யே-எந்த பக்தர்கள், பரயா ஸ்ரத்தயா உபேதா:-சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக, மாம் உபாஸதே-என்னை வழிபடுகிறார்களோ, தே யுக்ததமா-அவர்கள் யோகிகளிலேயே மேலானவர் என்று, மே மதா:-என்னால் மதிக்கப் படுபவர்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.
பகவான் விசுவரூபத்தை யுடையவர்; பரமேசுவரன். அவர் சகுண பிரம்மம். உலகுக்கு அந்தர்யாமியாயிருந்து அதை ஆளுகிறார். யோகிகளுக்கெல்லாம் அவரே மேலான ஈசுவரன். சர்வக்ஞன் என்று அவரைத்தான் சொல்ல வேண்டும். முழுமனதையும் ஒழுங்குப்படுத்தி அவர்மீது செலுத்துகிறவர்கள் பக்தர்கள். அவர்களுக்கு விருப்பு, வெருப்பு, மனக்கிலேசம் முதலியன கிடையா. இரவும் பகலும் இறைவனைப் பற்றிய சிந்தனை யொன்றே அவர்களின் உள்ளத்தில் குடிகொள்கிறது. அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பதும் இறைவன் பொருட்டேயாம். ஆதலால் அவர்கள் சிறந்த யோகிகள் ஆகிறார்கள்.
கடவுளை அரூபியெனத் தியானிப்பது முற்றிலும் சரியானதே. ஆனால் அதுதான் உண்மை, மற்றக் கொள்கைகளெல்லாம் பொய் என்று எண்ணிவிடாதே. அவன் ரூபி எனத் தியானிப்பதும் சரியானதே. ஆனால் அவனை நீ காணும் வரையில் உனது பிரத்தியேகமான கொள்கையைக் கைவிடாதே. அப்பால் எல்லாம் தெளிவாகும்.
மற்று, நிர்க்குண நிராகார பிரம்மத்தை உபாசிப்பவர்கள் சிறந்த யோகிகள் ஆகமாட்டார்களா? அதற்கு விடை வருகிறது :
3. யே த்வக்ஷரமநிர்தேஸ்யமவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம்
4. ஸந்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய:
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:
து யே அக்ஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம்-எவர், அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), ஸர்வத்ரகம் அசிந்த்யம்-எங்கும் நிறைந்ததும், மனம்-புத்திகளுக்கு அப்பாற்பட்டதும், கூடஸ்தம் அசலம் த்ருவம்-நிலையற்றதும், அசைவற்றதும் , உறுதி கொண்டதுமாகிய பொருளை, பர்யுபாஸதே-வழிபடுகின்றனரோ.
இந்த்ரியக்ராமம் ஸந்நியம்ய-புலன்களின் கூட்டத்தை நன்கு அடக்கி, ஸர்வத்ர ஸமபுத்த, :-எங்கும் சமபுத்தியுடையோராய், ஸர்வபூதஹிதே ரதா:-எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய, தே மாம் ஏவ ப்ராப்நுவந்தி-அவர்களும் என்னையே அடைகிறார்கள்.
பொருள் : இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ
பொருள் : இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்
நிர்க்குண பிரம்மம் எத்தகையது என்பது விளக்கப்படுகிறது. அது அநிர்தேச்யம்-உலகப்பொருள் எதனோடும் சீர்தூக்க இடந்தருகிறதில்லை யாதலால் அது எத்தகையது என்ற சொல்லால் விளக்க முடியாது. உலகமோ தோன்றவும் மறையவும் செய்கிறது. தோன்றியபொழுது வியக்தமாகவும் மறைந்தபொழுது அவ்யக்தமாகவும் உலகம் இருக்கிறது. ஆனால் பரபிரம்மத்தின் கண் இத்தகைய விகாரம் ஒன்றும் கிடையாது. அதீதத்தில் அது இருந்தபடி இருக்கிறது. ஆதலால் அது அவ்யக்தம். கடலின் கீழ் உள்ள பனிக்கட்டி தோன்றாது இருந்தபடி இருப்பது போன்றதா பிரம்மம் என்ற கேள்வி எழுகிறது. அப்படியல்ல, இது ஸர்வத்ரகம்-அங்கு இங்கு என்று சொல்ல இடந்தராது நீக்கமற எங்கும் நிறைபொருள். இடமே அதனுள் ஒடுங்கியது எனலாம். சொப்பனத்தில் பார்த்த ஒரு பெரிய இடம் மனதில் ஒடுங்குகிறது. அதே மனதானது நன்மை தீமை, இன்ப துன்பம் ஆகியவைகளை எண்ணவும் உணரவும் செய்கிறது. ஆனால் அம்மனது பிரம்மத்தை உணரவல்லதன்று. பிரம்மம் அசிந்த்யம்-சிந்தனைக் கெட்டாதது. கூட என்ற சொல் மாறுபடும் தன்மையுடையது என்று பொருள்படுகிறது. பிரபஞ்சம் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. மாறுபடும் பிரபஞ்சத்துக்கு பிரம்மம் இருப்பிடமாகிறது. நிலையற்றதை இது நிலைத்திருந்து தாங்குவதால் இதற்கு கூடஸ்தன் என்று பெயர். ஓயாது மாறுபடுகிற மேகத்தைத் தூக்கிக்கொண்டு காற்று நகர்ந்தோடுகிறது. சலிப்பது காற்றின் இயல்பு. பிரம்மத்திலோ சலனம் இல்லை. அது அசலம்-நகராதது. இனி, ஆகாசம் அசைவதில்லை. இருந்தபடி அது தோன்றுகிறது. பிரளயத்தில் இருந்தபடி அது அழிகிறது. பிரம்மம் அத்தகையதோ? அல்ல, அது த்ருவம்-நிலைபேறு உடையது. சுத்த சைதன்யமாகிய அது கால தேச வர்த்தமானத்தால் அடிபடாதிருப்பதால் அது அக்ஷரம், அதாவது அழியாதது.
இனி, நிர்க்குண பிரம்ம உபாசனைக்குத் தகுதியுடையவர் யார் எனின், அவர்களிடத்து சமபுத்தி யிருக்க வேண்டும். இன்பம் தருபவைகள், துன்பம் தருபவைகள் ஆகிய இரண்டையும் ஒரே பான்மையுடன் கருதுதல் சமபுத்தியாகும். இந்திரியக் கூட்டங்களை யெல்லாம் யார் நன்கு கட்டியாளுகிறார்களோ அவர்களுக்கே மனதின் நடுநிலை வந்தமைகிறது. மனதின் நடுநிலை என்பது உலகுக்குப் பயன்படாது பிணம்போன்று கிடப்பதல்ல. எல்லா உயிர்களையும் பிரம்ம சொரூபமாகக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அவர்களின் நன்மையில் நாட்டம் வைத்திருப்பதற்குச் சேவை செய்வதே அறிகுறியாகும். ஒரு சிலர் பிரம்ம சொரூபத்தில் லயித்துக் கர்மமற்றிருப்பார்கள். அங்ஙனம் ஜீவர்களை யெல்லாம் பிரம்ம சொரூபமாகக் காண்பதும் அந்த ஜீவர்களுக்கு பரம நன்மையை விளைவிக்கிறது. தைலதாரை போன்று இடையறாது மனது பிரம்ம சொரூபத்தில் போவது உபாஸனையாகும்.
மணியை அடிக்கும்போது, அடுத்தடுத்து வரும் அதன் ஒவ்வொரு ஓசையும் தனித்தனி உருவத்தையுடையதுபோலத் தோன்றும்; ஆனால் அடிப்பதை நிறுத்தினால் ஓசை சிறிது நேரம் வரையில் கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தொழியும். தெளிவற்ற சப்தமோ உருவமில்லாதது போலத் தோன்றுகிறது. மணியின் ஓசையைப் போலக் கடவுள் உருவமுள்ளவனாயும் உருவமில்லாதவனாயுமிருக்கிறான்.
இரண்டு உபாஸனையும் ஒன்று எனில் எதை வேண்டுமானாலும் ஒருவன் உபாஸிக்கலாமா? உபாஸிக்கலாகாது. ஏனென்றால் : (3-4)
5. க்லேஸோऽதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே
அவ்யக்த ஆஸக்த சேதஸாம்-உருவற்ற (அவ்யக்த) பிரம்மத்தில் மனதை ஏற்படுத்தும், தேஷாம் க்லேஸ: அதிகதர:-அந்த மனிதர்களுக்கு சாதனையில் உழைப்பு அதிகம், ஹி தேஹவத்பி-ஏனெனில் உடலில் பற்றுள்ளவர்களால், அவ்யக்தா கதி-உருவற்ற பிரம்ம விஷயமான மார்க்கம், து:கம் அவாப்யதே-மிகுந்த சிரமத்துடன் அடையப் படுகிறது.
பொருள் : ஆனால், அவ்யக்தத்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லையதிகம், உடம்பெடுத்தோர் அவ்யக்த நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.
இருதர உபாஸகர்களும் அடையும் குறி ஒன்றே. ஆனால் தேகாபிமானம் உடைய ஒருவனுக்கு நிர்க்குண பிரம்ம உபாஸனையைவிட சகுண பிரம்ம உபாஸனை எளிது. நிர்க்குண பிரம்ம உபாஸகன் துவக்கத்திலேயே உடல் பற்றை அறவே நீக்க வேண்டும். பிஞ்சாகிக் காயாகிக் கனியாகின்றவிடத்து மேலோடு பழத்தினின்று தானாகப் பிரிந்து போகிறது. அங்ஙனம் ஞான முதிர்ச்சி யடைபவனுக்கு தேகாபிமானம் போய்ஒழிகிறது. தேகப்பற்றுடையவனுக்கு எளிதாயிருப்பது சகுண பிரம்ம உபாஸனை. அதில் துவக்கி மேல் நோக்கிப் போகின்றவனுக்கு சாதனத்தில் அதிக சிரமம் ஏற்படுவதில்லை.
ஞானயோகி நானே பிரம்மம் என்கிறான். ஆனால் சரீரத்தை ஆத்மன் என்று கருதும் வரையில் அவ்வித பாவனை கெடுதியை உண்டுபண்ணும். அவனை அத்யாத்மிக வாழ்க்கையில் முன்னேறச் செய்யாமல் நாசப்படுத்திவிடும். அவன் மற்றவர்களை ஏமாற்றுகிறதோடு தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறான்.
இனி, ஈசுவர உபாஸனை எப்படிச் செய்யவேண்டும்? விடை வருகிறது :
6. யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா:
அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே
7. தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்
பவாமி நசிராத்பார்த மய்யாவேஸிதசேதஸாம்
து மத்பரா:-ஆனால் என்னையே கதியாகக் கொண்ட, யே ஸர்வாணி கர்மாணி-எந்த பக்தர்கள் எல்லா கர்மங்களையும், மயி ஸந்ந்யஸ்ய-என்னிடம் சமர்ப்பணம் செய்து, மாம் ஏவ - என்னையே, அநந்யேந யோகேந-பிறழாத யோகத்தால், த்யாயந்த உபாஸதே-இடையறாது நினைத்து வழிபடுவார்களோ,
பார்த-பார்த்தா! மயி ஆவேஸித சேதஸாம்-என்பால் அறிவைப் புகுத்திய, தேஷாம் நசிராத்-அவர்களை சீக்கிரமாகவே, அஹம் ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்-நான் மரணவடிவான சம்சாரக் கடலிலிருந்து, ஸமுத்தர்தா பவாமி-கரையேற்றுபவனாக ஆகிறேன்.
பொருள் : எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்?
பொருள் : என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்
விசுவ ரூபத்தையுடைய ஈசுவரனைத் தவிர வேறு ஒன்றையும் பற்றுக்கோடாகக் கொள்ளாது அவனையே சார்ந்து யார் அவனுக்கென்றே பணி செய்யும் பான்மை யுடையவர்களாயிருக்கிறார்களோ அவர்கள் பிறப்பு இறப்பு மயமாயுள்ள சம்சாரப் பெருங் கடலினின்று விரைவில் கரையேற்றப்படுகிறார்கள்.
ஈசுவரானுபவத்துக்கும் அடையாளங்கள் உள்ளன. பக்தி எவனிடம் பொங்கித் ததும்புகின்றதோ அவனுக்கு வெகு சீக்கிரத்தில் ஈசுவர தரிசனம் கிடைக்குமென்று தெரிந்துகொள்.
அதற்காக ஜீவன் செய்யவேண்டியதென்ன? விடை வருகிறது : (6-7)
8. மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஸய
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஸய:
மயி ஏவ மந: ஆதத்ஸ்வ-என்னிடமே மனதை நிலைநிறுத்து, மயி புத்திம் நிவேஸய -என்னிடமே புத்தியை ஈடுபடுத்து, அத: ஊர்த்வம்-அதற்கு மேல், மய்யேவ நிவஸிஷ்யஸி-என்னிடமே வாழ்வாய், ந ஸம்ஸய:-ஐயமில்லை.
பொருள் : மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.
உணர்ச்சி மயமாயிருப்பது மனது. தீர்மானிக்கும் தன்மையது புத்தி. இவ்விரண்டும் அந்தக் கரணத்தின் பிரிவுகள். ஒருவனது உடல் எங்கே இருக்கிறது என்பதிலிருந்து அவனது வாசஸ்தானத்தை அறிய வொண்ணாது. உள்ளம் எங்கிருக்கிறதோ மனிதன் அக்கணமே அங்கிருக்கிறான். இப் பூவுலகிலேயே சிலர் நரக வாசம் செய்கின்றனர்; வேறு சிலர் விண்ணுலகு நண்ணியவர் போன்று இன்பமடைகின்றனர். இங்கு இருந்தபடியே சித்தத்தைச் சிவத்தின்பால் வைத்து அவனது சந்நிதி சேருவார் உளர். அகம் எப்படியோ புறம் அப்படி. உள்ளத்தை இறைவனிடம் வைத்தது முதற்கொண்டு ஒருவன் இறைவனிடத்தே வசிக்கிறான் என்பதற்கு அவனது மனநிலையே சான்று. ஆதலால் அதைப் பற்றி ஐயமில்லை என்கிறார் பகவான்.
உலகத்தில் மனிதன் பிறக்கும்போது, வித்தியாகுணம் அவித்யா குணம் என்ற இரண்டு குணங்களுடன் பிறக்கிறான். வித்தியா குணம் முக்தியை அடையச் செய்யும். அவித்யா குணமோ மனிதனை உலகப் பற்றுக்குள்ளாக்கும். பிறக்கும்போது இவ்விரு குணங்களும் தராசின் தட்டுகளைப் போலச் சரிசமமாக இருக்கும். சீக்கிரமத்தில் உலக இன்பங்கள் ஒரு தட்டிலும் ஆத்ம விஷயங்கள் மற்றொரு தட்டிலும் ஏற்றப்படுகின்றன. மனம் உலக சுகங்களை விரும்புமானால் அவை வைக்கப்பட்டிருக்கும் தட்டு கனத்துக் கீழே செல்லும். அவ்வாறன்றி ஆத்ம விஷயத்தை மனம் பற்றுமானால் அவ்வாத்ம விஷயங்களடங்கிய தட்டு ஈசுவரனை நோக்கித் தாழும்.
உள்ளத்தை உறுதியாக இறைவன்பால் வைக்க இயலாதவர் என்ன செய்வது? விடை வருகிறது:
9. அத சித்தம் ஸமாதாதும் ந ஸக்நோஷி மயி ஸ்திரம்
அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய
அத சித்தம்-ஒரு வேளை சித்தத்தை, மயி ஸமாதாதும்-என்னிடம் நிறுத்தி வைப்பதற்கு, ந ஸக்நோஷி-முடியாவிட்டால், தத: அப்யாஸ யோகேந-அப்போது (இறைவன் திருநாமம் ஓதுதல் போன்ற) பயிற்சியினால், மாம் ஆப்தும் இச்ச தநஞ்ஜய-என்னை அடைய விரும்பு அர்ஜுனா!
பொருள் : என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு.
மனது உறுதியாக இறைவன்பால் நிலைத்து நின்றுவிடுமானால் அது முதிர்ந்த பக்தியாகிறது. அப்படியல்லாது அது விஷயாதிகளில் சலித்து ஓடும் தன்மையதானால் பழக்கத்தால் அதை ஒழுங்குப்படுத்தவேண்டும். விஷயங்களிலிருந்து அதை மீட்டெடுத்து பகவானிடம் வைப்பதற்கு அப்பியாச யோகம் என்று பெயர். நல்லியல்பு, கெட்ட இயல்பு இரண்டுக்கும் அப்பியாசமே காரணமாகிறது. பழக்கத்தால் ஆகாததை ஆகும்படி செய்யலாம்.
ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான்; விளையாடுவான். அதைக் கைகளில் தூக்கிக்கொண்டு போவான்; அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தைக் கவனித்த ஓர் அறிஞர் நாயுடன் அப்படிப் பழகலாகாது என்றார். நாயின் சொந்தக்காரன் அதைக் கேட்டதும் நாயைத் தூர எறிந்துவிட்டான். இனி, அதனோடு கொஞ்சிக் குலாவுவதில்லை என்றும் தீர்மானித்தான். தன் எஜமானனது மாறிய மனதை நாய் அறியவில்லை. அது அடிக்கடி அவனிடம் ஓடிவந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனதில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த ஆசை என்னும் நாயை நீ விடவேண்டுமென்றாலும் அது உன்னை எளிதில் விடாது; இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிரமத்தில் அதனுடைய தொந்தரைகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும்.
மனது அப்பியாசம் என்ற கட்டுக்கு அடங்குவது இல்லவே இல்லை. அப்பொழுது என் செய்வது? விடை வருகிறது :
10. அப்யாஸேऽப்யஸமர்தோऽஸி மத்கர்மபரமோ பவ
மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி
அப்யாஸே அபி அஸமர்த அஸி= (இவ்விதமான) பயிற்சியில் கூட திறமை அற்றவனாக இருந்தால், மத் கர்ம பரம: பவ-எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதையே மேலான லட்சியமாகக் கொண்டிரு, மதர்தம் கர்மாணி குர்வந் அபி-என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும், மாம் அவாப்ஸ்யஸி-என்னை அடைவாய்.
பொருள் : பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.
அப்பியாசம் செய்ய மனது ஒருப்படாதவிடத்து அது நெடு நாளாக வழக்கமாகச் செய்துவந்த வினையில் ஈடுபடுகிறது. பற்றுதலால் வந்த வினையைத் தனக்கென்று செய்யாது ஈசுவரனுக்காக வென்று செய்யுங்கால் சாதகன் இறைவன் கையில் கருவி போல ஆகிறான். கருவிக்குத் தனிச் சுதந்திரம் கிடையாது. சாதகன் தன்னைக் கருவியாக எண்ணி வினையாற்றுவதால் சித்த சுத்தி உண்டாகி ஞானத்தைப் பெற்றுப் பக்குவமடைகிறான். இறைவனுக்குக் கைங்கரியம் செய்வதால் ஜீவபோதம் போய்ப் பரபோதம் வருகிறது.
எல்லாம் ஈசுவரனுடைய ஆக்ஞையால் நடக்கின்றனவென்றும் தான் ஈசுவரன் கையில் வெறும் கருவியென்றும் எவனுடைய மனதில் பதிகின்றதோ அவன் ஜீவன் முக்தனாவான். ஈசுவரா, உனது காரியத்தை நீயே செய்தருள்கிறாய். ஆனால் நான் செய்கிறேன் என்று ஜனங்கள் சொல்கின்றனர்.
கர்மத்தைத் தனக்காகவென்றே செய்யும் தன்மை யுடையவனுக்குக் கர்மபந்தம் ஒழிய வழியில்லையா? விடை வருகிறது :
11. அதைததப்யஸக்தோऽஸி கர்தும் மத்யோகமாஸ்ரித:
ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்
மத்யோகம் ஆஸ்ரித:-என்னை அடைவது என்ற யோகத்தை சார்ந்து நின்று, தத் அபி-இதைக் கூட, கர்தும் அத: அஸக்த: அஸி-செய்யத் திறமையற்றவனாக இருந்தால், தத: யதாத்மவாந்-அப்போது தன்னைத்தான் கட்டுப்படுத்தி, ஸர்வகர்மபலத்யாகம் குரு-எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
பொருள் : இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
முழு மனதை இறைவனுக்கென்றே ஒப்படைத்து விடுவது சிறந்தது. அதில் சாதனம் பூர்த்தியடைகிறது. அப்பெருநிலையில் நிலைத்திருக்க இயலாதவர்கள் பழக்கத்தால் மனதை இறைவன்பால் திருப்பவேண்டும். மனம் வெளிஉலகப் பிரவிருத்தியில் நாட்டம் கொள்ளும் தன்மையதானால் அப்பியாசம் செய்வதும் கடினமாகும். அப்பொழுது பகவானுக்கென்றே பணிவிடை செய்வது சிலாக்கியம். கர்மத்தில் வைத்த பற்றுதலாலும், தன் கர்மத்துக்குத் தானே கர்த்தாவென்று எண்ணுவதாலும் கர்மபலத் தியாகம் உண்டாவதில்லை. பெரும்பற்றுடையவன் குறிப்பிட்ட சில வேளையிலாவது தன் கர்மமெல்லாம் ஈசனுடைய கர்மம் என்று தனக்கு ஞாபகமூட்டி வருவானாகில் அந்த எண்ணம் நாளடைவில் அவனைப் பக்குவப்படுத்தும்.
உன்னால் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. ஸ்வபாவம் ஒவ்வொருவனையும் கர்மம் செய்யும்படி ஏவுகின்றது. ஆகையால் கர்மங்கள் முறையாகச் செய்யப்படட்டும். கர்மம் பற்றுதலின்றிச் செய்யப்படுமானால் அது பகவானிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும். இகபரங்களில் உண்டாகும் பாவ புண்ணியங்களில் வெறுப்பு விருப்புக் கொள்ளாமல் செய்யப்படும் கர்மம் பற்றுதலற்றதாகும். இவ்வித மனோபாவத்துடன் செய்யப்படும் கர்மம் முடிவில் கடவுளிடம் கொண்டுபோகும் மார்க்கமாக அமைகிறது.
பக்குவமடைதலின் அறிகுறி யாது? அதன் விளக்கம் வருகிறது :
12. ஸ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஸிஷ்யதே
த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம்
அப்யாஸாத் ஜ்ஞாநம் ஸ்ரேய:-பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது, ஜ்ஞாநாத் த்யாநம் விஸிஷ்யதே-ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது, த்யாநாத் கர்மபல த்யாக:-தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது, த்யாகாத் அநந்தரம் ஸாந்தி-அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது (தியாகத்தின் மூலம் அமைதி கிடைக்கிறது).
பொருள் : பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தை காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.
ஒருவன் ஆலயத்தை வலம் வந்து சர்வ திக்கிலும் திரும்பி நமஸ்காரம் செய்கிறான். தான் ஏன் அப்படிச் செய்யவேண்டுமென்று அவனுக்குத் தெரியாது. எல்லாரும் செய்வதைப் பார்த்துக் குருட்டுப் போக்காக அவனும் அப்பழக்கத்தில் ஈடுபடுகிறான். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுதற்கே அத்தகைய வழிபாடு ஏற்பட்டுள்ளது என்பது அவனுக்குத் தெரியாது. விவேகமில்லாத அந்த அப்பியாசத்தைக் காட்டிலும் கடவுள் எங்கும் நிறைபொருள் என்ற வாசா ஞானம் சிறந்தது. அந்த வாசா ஞானத்தோடு நின்று விடுவதை விட சாதகன் காண்கின்ற அனைத்தும் பரமன் மயம் என்று தியானிப்பது மேலானது. அனைத்தையும் கடவுள் மயமாகத் தியானித்து அவைகளைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணலாகாது. தான் வாழ்ந்திருப்பது கடவுளுக்காக வென்று கருதித் தனது கர்மத்தின் பயன் முழுவதையும் அவனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டும். தான் செய்கின்ற கர்மம் தனக்காகவல்ல, கடவுளுக்காகவே செய்யப்படுகிறது என்ற நினைவு தோன்றுகிற அதே வேளையில் சாந்தியும் வருகிறது. தனக்கென்று தொழில் புரிபவன் அசாந்தியடைகிறான். இறைவனுக்கென்று தொழில் புரிபவன் இன்பமடைகிறான்.
ஒரு பருந்து அலகில் ஒரு மீனைக் கௌவிக் கொண்டிருந்தது. அதைப் பிடுங்குதற்காகச் சில காக்கைகளும் பருந்துகளும் அப் பருந்தைப் பின்தொடர்ந்து கொத்தி ஆரவாரித்தன. அது எத்திக்கில் சென்றாலும் காகங்களும் பருந்துகளும் கூடவே பறந்து சென்றன. தொந்தரவைப் பொறுக்கமாட்டாமல் அப்பருந்து மீனை அப்பால் போட்டுவிட்டது. உடனே அதை வேறொரு பருந்து கௌவிக்கொள்ள காகங்களும் மற்ற பருந்துகளும் இந்தப் புசிய பருந்தைத் தொந்தரவு செய்யத் தொடங்கின. ஆனால் உபத்திரவத்தினின்று தப்பித்த முதல் பருந்து சாந்தமாய் ஒரு மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. இப்படி சாந்தமாய் விருக்கும் பக்ஷியைப் பார்த்து வணங்கி, ஓர் அவதூதர், பருந்தே, நீ எனக்கு குரு. உலகப்பற்றுக்களாகிய சுமையை மனிதன் கீழே போடாத வரையில் அவனால் உலக சஞ்சலங்களினின்றும் தப்பித்துக்கொள்ள முடியாது. அவனுக்குச் சமாதானம் ஏற்படாது. இதை நீ எனக்குக் கற்பித்தாய் என்றார்.
எத்தகையவன் கடவுளுக்கு உவந்த பக்தனாகிறான்? விடை வருகிறது :
13. அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக: க்ஷமீ
14. ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருடநிஸ்சய:
மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:
ய: ஸர்வபூதாநாம் அத்வேஷ்டா-எவர் எவ்வுயிரையும் பகைத்தலின்றி, மைத்ர: கருண ஏவ -அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், நிர்மம நிரஹங்கார:-யானென்பதும் எனதென்பதும் நீங்கி, ஸமது:கஸுக: க்ஷமீ-இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்.
ஸததம் ஸந்துஷ்ட:-எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், யதாத்மா த்ருடநிஸ்சய:-தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், மயி அர்பித மந: புத்தி:-என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து, மத்பக்த: ஸ: யோகீ-என் தொண்டனாகிய யோகி, மே ப்ரிய:-எனக் கினியவன்.
பொருள் : எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,
பொருள் : எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.
வெறுப்பானது வேற்றுமையை வளர்க்கிறது; உடலெங்கும் விஷத்தை உண்டுபண்ணுகிறது. ஆதலால் வெறுப்பு நல்வாழ்க்கைக்கு உதவாது. வெறுப்பு அற்றிருந்தால் மட்டும் போதாது. ஜடப்பொருள்கள் வெறுப்பதில்லை. உயிர் வாழ்பவன் எல்லா உயிர்களிடத்தும் நட்புக்கொள்ளவேண்டும். அன்பின் வழியது உயிர் நிலை; அஃது இலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. ஆக, நட்பே உயிர்களை இணைக்கின்றது. பிறரைத் தன் காரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதற்கு ஒருவன் உறவாடலாம். அது பொருந்தாது. தன் வாழ்க்கை பிறருக்குப் பயன்படும்படி செய்யவேண்டும். அப்பொழுதே அது கருணை எனப் பெயர் பெறுகிறது. பிறரிடத்துக் கருணை காட்டுவதால் தன் பொருளுக்கே நஷ்டம் வரலாம். அதைப் பொருள்படுத்தாத நிலை மமகாரம் அற்ற நிலையாம். எனது என்ற எண்ணம் ஒழிந்து பட்டுப்போகிறது. உடல் அபிமானம் அஹங்காரம் என்று சொல்லப்படுகிறது. கருணையின் மேலீட்டால் பக்தன் ஒருவனுக்கு அஹங்காரம் அறவே அகன்றுவிடுகிறது. தன் பொருள், தன் உடல்வாழ்க்கை இவைகளை மதியாமையினால் ஒருவனுக்கு இன்பமே வந்தமையலாம் அல்லது துன்பமே வந்தமையலாம். அவைகளை இன்ப துன்பமாக அவன் பாகுபடுத்துவதில்லை. தனக்குற்ற துன்பத்தைச் சகித்துக்கொண்டு துன்பம் செய்தவனிடத்துப் பொறாமை பூணலாம். பக்தன் ஒருவன் அப்படிப் பொறாமை கொள்வதில்லை. தன்னைத்தானே மன்னிப்பது போன்று மற்றவர்களையும் மன்னிக்கிறான். துன்பத்தைச் சகித்தல் ஒருவித எதிர்மறை நிலையாகிறது. பக்தனோ இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற கோட்பாட்டின்படி சந்தோஷமுடையவனாயிருக்கிறான். வாழ்க்கையில் அடக்கமும் ஒழுங்குப்பாடும் நன்கு அமைந்திருப்பதால் அவன் யோகியாகிறான். பாரமார்த்திக விஷயத்தில் அவனுக்குச் சந்தேகம் கிடையவே கிடையாது. அதைப்பற்றி அவனுக்கு உறுதியான நிச்சய புத்தி யிருக்கிறது. யோகத்தால் தான் பெற்ற தெள்ளிய மனதையும் புத்தியையும் அவன் கடவுளுக்கென்றே ஒப்படைக்கிறான். இங்ஙனம் பகவானிடத்து பக்தி பண்ணுபவனே அவனுக்கு முற்றும் உவந்த தோழனாகிறான்.
மனிதன் சமர்ப்பிக்கும் சொத்துக்களையெல்லாம் ஈசுவரன் மதிக்கிறானோ? இல்லவே இல்லை. பக்தியையும் பிரேமையையும் எவனொருவன் ஸமர்ப்பிக்கிறானோ அவனுக்கு மட்டுந்தான் ஈசுவரனுடைய கிருபை உண்டாகும். தன் பொருட்டு உண்டாகும் பக்திப் பிரேமைகளையும் விவேக வைராக்கியங்களையுமே ஈசுவரன் சிலாகித்துக் கொண்டாடுகிறான். (13-14)
இன்னும் யார் அவனுக்கு உவந்தவர்கள்? விடை வருகிறது :
15. யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய:
ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய:
யஸ்மாத் லோக: ந உத்விஜதே-எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, ச லோகாத் ந உத்விஜதே-எவன் உலகத்தாரை வெறுப்பதில்லையோ, ச ஹர்ஷ அமர்ஷ பய: உத்வேகை-களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும், ய: முக்த: ஸ: மே ப்ரிய:-எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்.
பொருள் : எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்
பக்தன் ஒருவனுடைய வாழ்க்கை உலகுக்கு ஒரு நாளும் இன்னல் விளைவிப்பதில்லை. இன்னல்போன்று தோன்றும் சில செயல்கள் உண்மையில் ஹிதமாகவே முடியும். ஆசிரியர் மாணாக்கனைக் கண்டிப்பது, மருத்துவர் ரணவைத்தியத்தில் நோயாளிக்குத் துன்பம் விளைவிப்பது, அறப்போரில் வீரன் எதிரியைத் தாக்குவது இவையாவும் வெளித்தோற்றத்திற்கு இடர் போன்று இருப்பினும் உண்மையில் உலகுக்குச் செய்த நன்மைகளாகும். இனி, தனது உடல் வாழ்க்கையில் தனக்கு என்ன தான் கேடுவந்தாலும் அதனால் அவன் கிலேசமடைவதில்லை. துன்பப்படாத உயர்ந்த மன நிலையையுடைய ஒருவனைப் புற உலகம் எவ்விதத்திலும் வருத்தப்படுத்த முடியாது. அப்பர், பிரஹ்லாதன் போன்றவர்கள் இதற்குச் சான்றாகிறார்கள்.
எத்தகைய பயிற்சியால் இத்தகைய மனநிலை வருகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை இதே சுலோகத்தில் வருகிறது. இன்பந்தரும் பொருள்களைப் பெற்று ஒருவன் களிப்புறலாகாது. களிப்புக்கு வசப்படும் மனது துன்பத்துக்கும் வசப்படக் கூடியது என்பதாகிறது. உறுதியான மனதே இன்பதுன்பம் இரண்டையும் சமனாகப் பாராட்டுகிறது. அமர்ஷம் என்பது சினம். ஒருவனுக்குக் கோபம் வருகின்றவளவு மனவலிவு குறைகின்றது. வலிவுடைய மரம் காற்றில் அசைவதில்லை. வலிவில்லாத கொடி காற்றில் அசைகிறது. கோபத்துக்கு உட்படாத மனது வலிவு பெற்று இன்பதுன்பங்களை நிகராகக் கருதுகிறது. பயம் மரணத்துக்கு ஒப்பானது. அஞ்சும் போதெல்லாம் ஒருவன் அழிந்துபட்டுப் போகிறான். அஞ்சாதிருப்பவனே உயிர் வாழ்கிறான். அச்சம் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. கலங்கிய நீரில் பிம்பம் தெரிவதில்லை. தெளிந்த நீரில் பிம்பம் தெரிகிறது. அங்ஙனம் கலங்கிய மனதில் ஆத்ம சொரூபம் விளங்குவதில்லை. கலங்கா நெஞ்சம் படைத்தவனே இறைவனைக் காண்கிறான் இறைவனைக் கண்டதும் அவனுக்கு உவந்த பக்தனாகிறான்.
பிறருடைய குணதோஷங்களைப் பற்றிப் பேசுவதில் காலத்தைச் செலவிடுபவன் தன் காலத்தை வீணிலே கழிப்பவனாகிறான். ஏனெனில் அப்படிச் செலவிடப்பட்ட காலம் தன்னையாவது ஈசுவரனையாவது பற்றிச் சிந்திக்கப்படாமல் பிறரைப்பற்றி யாதொரு பிரயோஜனமுமில்லாமல் சிந்திக்கப்பட்ட காலமாகிறது.
16. அநபேக்ஷ: ஸுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத:
ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த: ஸ மே ப்ரிய:
அநபேக்ஷ: ஸுசி:-எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், தக்ஷ உதாஸீந:-திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கதவ்யத:-கவலை நீங்கியவனாய், ஸர்வ ஆரம்ப பரித்யாகீ-எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து, ஸ: மத்பக்த: மே ப்ரிய:-என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்.
பொருள் : எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்
இந்திரியங்கள் வாயிலாக வரும் இன்பங்களில் ஆசையற்றவன் அனபேக்ஷனாகிறான். அங்ஙனம் ஆசைகளை யகற்றுமளவு அவன் (சுசி:) தூயவனாகிறான். மனம், மொழி, மெய் மூன்றும் மாசற்றிருப்பது தூய்மை. அதனால் செயலில் சாமர்த்தியமுண்டாகிறது. எதிர்பாராது ஒரு கணப்பொழுதில் வந்தமையும் கருமத்தை உள்ளபடி அறிந்து கொள்ளவும் அதற்கேற்ப நடந்து கொள்ளவும் அவனுக்கு இயலுகிறது. அதை முன்னிட்டே அவனை தக்ஷ: என்று அழைக்கவேண்டும். செயலாற்றும் வல்லமையைத் தனக்கு ஒத்தவர்களுக்கு ஒருவிதமாகச் செய்தலும் ஒவ்வாதவர்களுக்கு வேறு விதமாகச் செய்தலும் அவனிடத்தில்லை. நிறைகோல் போன்று ஓரம் சாராது எல்லார்க்கும் பொதுவாக நடந்து கொள்வதனால் அவன் உதாஸீனன் ஆகிறான். அப்படி நேர்மையாக நடந்து கொள்பவனுக்கு மனத்துயரம் ஒரு நாளும் உண்டாவதில்லை. அவனுக்குக் கவலை கிடையாதெனினும் கர்ம பலனில் பற்றுவைத்திருக்கலாம் என்று நினைத்தல் கூடும். ஆனால் உண்மையில் அவன் பற்று அற்றவன். தனக்கென்று கருமம் செய்வதையெல்லாம் அவன் அறவே துறந்தவன் ஆகிறான். இறைவனிடத்திருந்து அவன் எதையும் எதிர்பார்ப்பதில்லை யாதலால் அவன் உண்மையான பக்தனாகிறான். ஆகையினாலே அவன் பகவானுக்கு மிக இனியவன் ஆகிறான்.
தன் மனதை ஏமாற்றாத ஒருவனே பகவானது சந்நிதானத்தை அடையப்பெறுவான். அதாவது கள்ளங்கபடமற்ற தன்மையும் உண்மையான அன்பும் பரமனை அடைய உற்ற பாதைகளாகும்.
17. யோ ந ஹ்ருஷ்யதி ந த்வேஷ்டி ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸுபாஸுபபரித்யாகீ பக்திமாந்ய: ஸ மே ப்ரிய:
ய: ந ஹ்ருஷ்யதி-எவன் எதற்காகவும் மகிழ்வதில்லையோ, ந த்வேஷ்டி-எதையும் வெறுப்பதில்லையோ, ந ஸோசதி-எதற்காகவும் துயரப் படுவதில்லையோ, ந காங்க்ஷதி-எதற்காகவும் ஆசைப் படுவதில்லையோ, ஸுப அஸுப பரித்யாகீ-நன்மையையுந் தீமையையுந் துறந்த,
ஸ: பக்திமாந் மே ப்ரிய:-தொண்டனே எனக் கினியவன்.
பொருள் : களித்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன்.
இன்பமூட்டுகிற பொருளைப் பெற்றால் உலக மக்கள் மகிழ்கின்றனர். பக்தனுக்கோ அத்தகைய பொருள் வருவதால் மகிழ்ச்சி உண்டாவதில்லை. வேண்டாதவை வந்து வாய்க்குமிடத்து அவர்கள் வெறுக்கின்றனர். பக்தனுக்கு அது கிடையாது. விரும்பிய பொருள் கிடைக்கவில்லை அல்லது கைவிட்டுப் போய்விட்டது என்ற துன்பம் அவனுக்கில்லை. கடவுள் பக்தியிலேயே அவனுக்குத் திருப்தியுண்டாகிறபடியால் ஆசைப்பட வேண்டிய அவசியம் பக்தனுக்கில்லை. அன்புருவாய் இருக்கும் குழந்தைக்குப் பாபபுண்ணியம் இரண்டும் தெரியாது. பக்தியின் மேலீட்டால் பக்தனும் நன்மை தீமை யிரண்டையும் மறந்துவிடுகிறான். இத்தகைய பாங்குள்ளவனே பகவானுக்கு உவந்த பக்தனாகிறான்.
விருப்பு, வெறுப்பு, அச்சம் இவைகள் குடிகொண்டிருக்குமிடத்துக்கு ஈசுவரன் வருவதில்லை.
18. ஸம: ஸத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ:
ஸீதோஷ்ணஸுகது:கேஷு ஸம: ஸங்கவிவர்ஜித:
19. துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித்
அநிகேத: ஸ்திரமதிர்பக்திமாந்மே ப்ரியோ நர:
ஸத்ரௌ ச மித்ரே ச-எவன் பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மாந அபமாநயோ: ஸம: - மானத்திலும், அவமானத்திலும் சம பாவனையுடன் எவன் இருக்கிறானோ, ததா ஸீதோஷ்ண ஸுகது:கேஷு ஸம:-குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டவன்,
ஸங்கவிவர்ஜித:-பற்றறுத்தவனோ.
துல்ய நிந்தா ஸ்துதி மௌநீ-புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யேந கேநசித் ஸந்துஷ்ட:-யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான், அநிகேத:-குறியற்றான் (வசிக்கும் இடத்தில் தனக்கு என்ற பற்று அற்றவன்), ஸ்திரமதி:-திடமான புத்தி உடையவன், பக்திமாந் நர: மே ப்ரிய:-இத்தகைய பக்தன் எனக் கினியவன்.
பொருள் : பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.
பொருள் : புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, யாதுவரினும் அதில் மகிழ்ச்சியுறுவான். குறியற்றான், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய பக்தன் எனக் கினியவன்
எல்லாரும் ஈசனுடைய குழந்தைகள். ஈசனுடைய வடிவங்களைப் பகையென்றும் நட்பென்றும் பிரிப்பது பொருந்தாது. புதிதாக ஏற்படும் களவுக் காதலர் அவமானத்துக்கு அஞ்சுகின்றனர்; மானத்தைக் காப்பாற்ற முயலுகின்றனர். முதிர்ந்த காதலோ அஃதொன்றையும் பொருள்படுத்துவதில்லை. முதிர்ந்த பக்தியின் போக்கும் அத்தகையது. உடலில் அபிமானம் உடையவனுக்குக் குளிர் உண்டு; வெப்பம் உண்டு. அவைகளின் காரியமாக வரும் இன்ப துன்பம் முதலியனவுண்டு. உழைப்பாளி உடலைப் பொருள்படுத்தாது உழைப்பிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பது போன்று பக்தன் பகவத் சேவையிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கிறான். வெயில், மழை, உணவு, ஓய்வு இவைகளைப் பற்றி அதிகம் நினைக்க அவனுக்கு நேரமில்லை. உடல் அபிமானம் நீங்குமளவு அவன் இயல்பாகவே பற்றற்றவன் ஆகிறான் நடு வீதியில் நின்றுகொண்டு அழுகின்ற ஆள் ஒருவனைப் பார்த்து உலகம் இகழ்கிறது. அவன் உற்றானை இழந்த துயரத்தால் அழுவானாயின் உலகத்தவர் இகழ்ச்சியைப் பொருள்படுத்தான். பக்தன் கடவுளைக் காண விரும்பி அழுகிறான். அவனைப் பித்தன் என்று உலகம் இகழ்தலைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை. மேடையில் நன்றாகப் பாடும் ஒருவனை உலகம் புகழ்கிறது. அது பாடகனுக்கு உற்சாக மூட்டுகிறது. பக்தனோ பரம்பொருளைப் போற்றிப் பாடுகிறான். பரம்பொருளின் பெருமையே அவனைப் பாடச் செய்கிறது. உலகத்தவர் புகழ்ச்சியில் அவனுக்குப் பொருள் ஒன்றுமில்லை. இறைவனது புகழைத் தவிர வேறு எதையும் அவன் பேசாதிருப்பதால் அவன் மௌனியாகிறான். சொந்த ஊருக்கு மகிழ்வுடன் திரும்பிப்போகிறவனுக்கு வழிப் பயணத்தில் வசதிகள் அதிகம் அமையாவிட்டால் அவன் அவைகளைக் குறித்து மனக்கிலேசமடைவதில்லை. ஊருக்குப் போகும் உற்சாகம் முன்னணியில் நிற்கிறது. பக்தனோ தனது தாய் தந்தையாகிய தெய்வத்தைக் குறித்துப் பயணம் போகிறான். உலக வாழ்க்கை என்ற வழியில் கிடைக்கின்ற எதைக்கொண்டும் அவன் திருப்தியடைகிறான். நன்றே வரினும் தீதே வரினும் அவனுக்குத் தொல்லை யொன்றுமில்லை. மேலும் தனக்கென்று வசிக்குமிட மொன்றை அவன் உரிமைப்படுத்துவதும் கிடையாது. அகப்பட்ட வளையில் ஸர்ப்பம் சிறிது காலம் சுருண்டிருப்பது போன்று தற்செயலாய் நேர்ந்த இடத்தைப் பக்தன் தங்குமிடமாக்குகிறான். ரயில் வண்டியில் எவ்விடத்தில் இருக்க இடம் கிடைத்தாலும் பிரயாணிக்கு ஒன்றே. பக்தனது நிலையும் அத்தகையதே. மாறுபடுகிற உலகில் மாறுபடாத கடவுள் நாட்டத்திலேயே பக்தன் கண்ணுங்கருத்துமாயிருப்பதால் அவன் ஸ்திர புத்தியுள்ளவனாகிறான். நாட்டமெல்லாம் கடவுளிடத்திலேயே இருப்பதால் அவனே பக்தனாகிறான். ஆக, அவன் கடவுளுக்கு இனியவன் ஆவது இயல்பு.
உலகத்தைப்பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனத்தைச் சஞ்சலப்படுத்தும்படி செய்துகொள்ளாதே. செய்யவேண்டிய காரியம் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் ஈசுவரனிடம் நிலைத்திருக்கட்டும். (18-19)
20. யே து தர்ம்யாம்ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே
ஸ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தேऽதீவ மே ப்ரியா:
தர்ம்யாம்ருதமிதம்-இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை, யதா உக்தம் பர்யுபாஸதே-யான் சொல்லியபடி வழிபடுவோர், ஸ்ரத்ததாநா-நம்பிக்கையுடையோர், மத்பரமா-என்னை முதலாகக் கொண்டோர், தே பக்தா: மே அதீவ ப்ரியா:-அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.
பொருள் : இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.
எல்லாவிதமான சாதனங்களுக்கும் சிரத்தை இன்றியமையாததாதலால் அது ஈண்டு பக்தியோடு இணைத்து இயம்பப்படுகிறது. பகவானைக் கதியாகக்கொள்வது பக்தனுடைய இயல்பு. அதனால் அவன் செயலற்றவன் ஆய்விடுகிறானல்லன். தர்மத்தை உறுதியாக அனுஷ்டிக்கிறான். அருளோடு முக்தி என்னும் பெருநிலம் தர்மத்தினின்று வருவதால் தர்மமே அமிர்தத்துக்கு (மூவா மருந்துக்கு) ஒப்பாகிறது. தர்மத்தைக் கையாளுபவன் யாரும் அழிந்துபட்டுப் போகமாட்டான். அன்பும் அறநெறியும் யாரிடத்திருக்கிறதோ அவன் இறைவனுக்கு உவந்தவன் ஆகிறான்.
பக்தியில் வைதிக பக்தி என்பது ஒன்று. அதாவது சாஸ்திரங்கள் விதிக்கிறபடி பக்தி பண்ணுதலாம். பகவந் நாமத்தைப் பலதடவை உச்சாரணம் பண்ணுதல், உபவாசமிருத்தல், தீர்த்த யாத்திரை போதல், வேண்டிய ஸாமக்கிரியைகளைக் கொண்டு பூஜை பண்ணுதல் முதலியன வைதிக பக்தியில் சேர்ந்தவை. இப்படி நெடுங்காலம் பக்தி செய்தால் ஈசுவர பக்தியில் இன்னும் உயர்ந்த நிலையாகிய ராக பக்தி யைக் பெறக்கூடும். எல்லாவற்றிற்கும் பிரேமைதான் முக்கியம். உலகப்பற்று முற்றிலும் அகல வேண்டும். முழுமனதும் ஈசுவரனிடம் பொருந்தவேண்டும். அப்போதுதான் அவனை அடையமுடியும். ராக பக்தியில்லாமல் அவனை அடையமுடியாது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
பக்தி யோகோ நாம த்வாதசோऽத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் பக்தியோகம் என்ற பன்னிரண்டாம் அத்தியாயம்.
-
பதின்மூன்றாம் அத்தியாயம் (http://temple.dinamalar.com/news.php?cat=178)
ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம்
இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது. இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை. அத்தகைய நிலையைப் பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேண்டும்.
ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும். அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்தினாலும், ஞானயோகத்தினாலும் பெறலாம். தாவர, ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.
இருப்பதெல்லாம் பிரகிருதி புருஷன் மயம் 1-3 -இவைகளைப்பற்றிய உண்மை வெளியாகிய விதம் 4 -ஷேத்ரதிரத்தின் பாகுபாடுகள் 5-6 -ஞானத்துக்கு ஏதுவாயிருப்பவைகள் 7-11 -பிரம்மம் எத்தகையது 12 -ஞானபரிபாகத்தின் விளைவு 13-15 -ஒன்று பலவாகத் தோன்றுகிறது 16-17 -பக்தியினின்று ஞானம் வருகிறது 18 -புருஷனும் பிரகிருதியும் யாண்டும் உள 19-20 -பிறவிக்கு வித்து 21 -பிரம்மஞானம் பிறவிப் பெருங்கடலை அகற்றுகிறது 22-23 -நான்கு யோகங்கள் 24-25 -ஒன்று என்று அறிவது முக்தி 26-28 -கர்மம் பிரகிருதிக்கு உரியது 29-30 -பிரம்மம் தன் மயம் 31-34.
அர்ஜுந உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞமேவ ச
ஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸவ
அர்ஜுந உவாச கேஸவ-அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா, ப்ரக்ருதிம் புருஷம் ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞ ச-பிரகிருதி, புருஷன், ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞன், ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச - ஞானம், ஞேயம் என்னும், ஏதத் வேதிதும்-இவற்றை அறிய, இச்சாமி-விரும்புகிறேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகின்றான் பிரகிருதி, புருஷன், ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞன், ஞானம், ஞேயம் என்னும் இவற்றை அறிய விரும்புகிறேன்.
ஸ்ரீ பகவாநுவாச
1. இதம் ஸரீரம் கௌந்தேய ஷேத்ரமித்யபிதீயதே
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், கௌந்தேய-குந்தி மகனே, இதம் ஸரீரம் ஷேத்ரம் இதி-இந்த உடம்பு ஷேத்ரதிரம் என்று, அபிதீயதே-சொல்லப்படுகிறது, ஏதத் ய: வேத்தி-இதனை எவன் அறிகிறானோ, தம் ஷேத்ரஜ்ஞ இதி-அவனை ஷேத்ரதிரக்ஞன் என்று
தத்வித: ப்ராஹு:-ஞானிகள் கூறுகிறார்கள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு ஷேத்ரதிரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை ஷேத்ரதிரக்ஞ னென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.
எது கெட்டுப் போகாது காப்பாற்றப்படுகிறதோ அது ஷேத்ரதிரம். உடலானது அங்ஙனம் காப்பாற்றப்படுகிறது. இனி, ஷேத்ரதிரம் என்பதற்கு மற்றொரு பொருள் வயல் என்பதாம். வேலை செய்வதற்கு ஏற்றவளவு அது விளைவு தரக்கூடியது. நல்லது கெட்டது ஆகிய இரண்டும் பூமியில் விளையும். நமது தேகம் ஷேத்ரதிரம் எனப்படுகிறது. இதில் அவரவர் கர்மபலனை அனுபவிக்கின்றனர். ஆக, ஜீவனுக்கு தர்ம ஷேத்ரதிரமாவது அவனது உடல். உள்ளே இருந்து உடலை அறிகிற பொருள் எதுவோ அது ஷேத்ரதிரக்ஞன்.
மானிட சரீரம் ஒரு பானையைப்போன்றுள்ளது. மனம், புத்தி, இந்திரியங்கள் அப்பானையில் இடப்பட்ட ஜலம், உருளைக்கிழங்கு, அரிசி இவைகளுக்குச் சமானம். இவையெல்லாம் அடங்கிய பானை யொன்றை அடுப்பின்மீது வைத்தால், அடுப்பின் நெருப்பு அவைகளை வேகச் செய்யும். அவைகளை ஒருவன் தொட்டால் அவனது விரல்களைச் சுட்டுவிடும். என்றாலும் அவ்வுஷ்ணம் வாஸ்தவத்தில் பானையினுடையதன்று. ஜலம், அரிசி, உருளைக்கிழங்கு இவைகளினுடையதுமன்று. அதுபோலவே, மனிதனிடம் உள்ள பிரம்மத்தின் சக்தியால்தான் அவனுடைய மனம், புத்தி, இந்திரியங்கள் எல்லாம் தத்தம் வேலைகளைச் செய்கின்றன.
அண்டத்திலுள்ள ஷேத்ரதிரங்களுக்கிடையில் தொடர்வு ஏதேனுமுண்டா? விடை வருகிறது :
2. ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வஷேத்ரேஷு பாரத
ஷேத்ரஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம
பாரத-பாரதா, ஸர்வஷேத்ரேஷு-எல்லா ஷேத்ரதிரங்களிலும், ஷேத்ரஜ்ஞம் அபி-ஷேத்ரதிரக்ஞனும், மாம் வித்தி-நானே என்றுணர், ச ஷேத்ரஷேத்ரஜ்ஞயோ:-ஷேத்ரதிரமும், ஷேத்ரதிரக்ஞனும் (பற்றி அறியும்), யத் ஜ்ஞாநம்-எது ஞானம், தத் ஜ்ஞாநம் மம மதம்-அதுவே ஞானமென்பது என் கொள்கை.
பொருள் : பாரதா, எல்லா ஷேத்ரதிரங்களிலும் ஷேத்ரதிரக்ஞன் நானே என்றுணர். ஷேத்ரதிரமும், ஷேத்ரதிரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.
ஷேத்ரதிரம் என்பது பிரகிருதி; ஷேத்ரக்ஞன் என்பது புருஷன். பிரகிருதியின் சேர்க்கையால் அதன் கூறுபாடுகளைப் புருஷன் தன்னுடையது என்று கருதுகிற பொழுது அவன் ஜீவாத்மாவாகிறான். ஸ்படிகத்துக்குப் பக்கத்தில் வைத்த புஷ்பத்தின் நிறத்தை ஸ்படிகத்தினுடையது என்று எண்ணுவது போன்றது அது. பிரகிருதி பேதம் அனந்தம். ஆதலால் ஜீவாத்மாக்களும் அனந்தம்.
பிரகிருதியின் சேர்க்கையால் உபாதியோடு கூடியதாகத் தென்படுகிற ஆத்மா உண்மையில் பிரகிருதியின் தன்மையை வாங்கிக்கொள்கிறதில்லை; வாங்கிக் கொண்டது போன்றது அது தென்படுகிறது. பிரகிருதியை உடைத்திருந்தும் அதில் கட்டுப்படாது இருக்கிற ஆத்மாவுக்கு ஈசுவரனென்று பெயர். அவர் ஒருவரே இத்தனை ஜீவர்களுக்கும் அந்தர்யாமியாயிருக்கிறார். அவருக்கு அன்னியமாக இந்த ஜீவர்களும் ஜகத்தும் இல்லை. ஆகையால் அவர் எல்லா ஷேத்ரதிரங்களுக்கும் ஷேத்ரதிரக்ஞனாக இருக்கிறார்.
இனி, ஞானம் என்பது ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞன் பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டு தத்துவங்களையும் முறையாக அறிவதேயாம். ஷேத்ரதிரத்தைப்பற்றிய வித்தை அபரவித்தை யென்றும், ஷேத்ரதிரக்ஞனைப்பற்றிய வித்தை பரவித்தை யென்றும் பகரப்படுகின்றன. வேதங்கள், வியாகரணம், கலைஞானங்கள், பூத பௌதிக சாஸ்திரங்கள் இவையாவும் அபரவித்தை. பிரம்ம ஞானமோ பரவித்தை. அபரவித்தையில் துவக்கிப் பரவித்தையில் ஆராய்ச்சி முற்றுப்பெறுவதே ஞானமாகும். தனியாக ஷேத்ரதிரத்தை ஆராய்ந்து அதை மட்டும் கையாளுவது உலோகாயதம். அதை ஷேத்ரதிரக்ஞனோடு இணைத்து ஆராய்வது சிறந்ததும் பாராட்டத்தக்கதுமாகிய அபரவித்தையாம்.
ஒரு புராண வரலாறு இக்கோட்பாட்டை நன்கு விளக்குகிறது. கார்த்திகேயனும் கணபதியும் பரமசிவனுக்குப் பிள்ளைகள். உள்ளதை எல்லாம் துருவி ஆராய்ந்துவிட்டு முதலில் வருபவனுக்குக் கனியொன்று தருவதாகக் கடவுள் தம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னார். குமரக் கடவுள் உலகம் யாவையும் அளந்தறிய விரைந்து ஓட்டம் பிடித்தார். நடக்கமுடியாத கணபதியோ கடவுளையே சுற்றிவந்து கனியைக் கேட்டார். அதற்குள் சுப்ரமண்யமும் உலகம் யாவையும் அறிந்து விட்டுக் கடவுள் அருகில் வந்துசேர்ந்தார். இருவரும் வல்லவர் ஆயினர். கணபதி அறிந்தது ஷேத்ரதிரக்ஞனாகிய ஈசுவரனை. சுப்ரமண்யம் அறிந்தது ஷேத்ரதிரமாகிய பிரபஞ்சம் முழுதையும். இவ்விருவர் ஆராய்ச்சியின் தொகுதியே முழு ஞானமாகிறது.
இக்காலத்து அறிஞர் கையாளுகிற பௌதிக ஆராய்ச்சி ஷேத்ரதிரத்தைப்பற்றிய ஞானத்துக்குப் பெருந்துணையாகும். சுப்ரமண்யக் கடவுள் உலகெல்லாம் ஆராய்ந்துவிட்டுப் பரமனுடைய சன்னதி வந்தது போன்று இக்காலத்திய பௌதிக ஆராய்ச்சியும் பரமனுடைய அடியை நோக்கிப் போவதன் அறிகுறிகள் தென்படுகின்றன. கடவுளுக்கு அன்னியமாக உலகம் இல்லை. கடவுளோடு இணைத்தே உலகத்தை அறிந்துகொள்ளும்போது அது மெய்ஞ்ஞானமாகிறது.
பணத்தை வைத்திருப்பதாலேயே ஒருவன் பணக்காரனாகி விடமாட்டான். பணக்காரனுடைய வீட்டிற்கு அடையாளம் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் விளக்குகள் எரிவதாகும். ஏழைக்கு எண்ணெய் கிடைக்காதாகையால் அத்தனை விளக்குகளை ஏற்றமாட்டான்.
பகவானது ஆலயமாகிய இச்சரீரத்தை அந்தகாரத்தில் வைத்திருக்கக்கூடாது. அதில் ஞான விளக்கு ஏற்றப்படவேண்டும். உன் ஹிருதயமாகிய அறையில் ஞானவிளக்கை ஏற்றித் தெய்வத்தின் திவ்விய முகத்தைக் காண்பாய். ஒவ்வொருவரும் ஞானத்தை அடையமுடியும். நான் என்கிற குறுகிய ஆன்மா என்றும், விசாலமான பரமான்மா வென்றும் இரண்டுவகையுண்டு. ஒவ்வொரு சிறு ஆன்மாவும் அதாவது ஜீவான்மாவும் பரமான்மாவோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரசக்தி இருக்கிறது. இந்த மின்சாரம் கம்பெனியிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் செலுத்தப்படுகிறது. தகுந்த அதிகாரிகளிடம் மனுச் செய்ய வேண்டியதுதான். அப்போது உன் வீட்டில் மின்சார விளக்கைப் பெறுவாய். பரஞானம் உனது உடல் வாழ்க்கையையும், உன்னையும், உனது தெய்வத்தையும் விளக்கும்.
3. தத்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஸ்ச யத்
ஸ ச யோ யத்ப்ரபாவஸ்ச தத்ஸமாஸேந மே ஸ்ருணு
தத் ஷேத்ரம் யத்-அந்த ஷேத்ரதிரமென்பது யாது? ச யாத்ருக்-எவ்வகைப்பட்டது? ச யத்விகாரி-என்ன மாறுதல்களுடையது? யத: யத் ச-எங்கிருந்து வந்தது? ஸ: ய: ச-அவன் (ஷேத்ரதிரக்ஞன்) யார்? யத்ப்ரபாவ ச-அவன் பெருமை எப்படிப்பட்டது? தத் ஸமாஸேந மே ஸ்ருணு-இவற்றை சுருக்கமாக என்னிடமிருந்து கேள்.
பொருள் : அந்த ஷேத்ரதிரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? ஷேத்ரதிரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.
வேத வேதாந்தம் புகட்டுவதெல்லாம் இவ்விரண்டு தத்துவங்களையே யாம். இவ்விரண்டின் நிலைகளை விளக்குதற்கென்று அமைந்தவைகளெல்லாம் கலைகளாகின்றன.
அது எப்படி யென்று அடுத்த சுலோகத்தில் பகவான் விளக்குகிறார்.
4. ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக்
ப்ரஹ்மஸூத்ரபதைஸ்சைவ ஹேதுமத்பிர்விநிஸ்சிதை:
ருஷிபி: பஹுதா கீதம்-ரிஷிகளால் பலவகைகளிலே பாடப் பட்டது, விவிதை: சந்தோபி: ப்ருதக்-பலவிதமான சந்தங்கள் (வேத மந்திரங்கள்) மூலமாகவும் தனித்தனியே கூறப் பட்டது,
ச விநிஸ்சிதை: ஹேதுமத்பி-நல்ல நிச்சயமுடையனவுமாகிய, யுக்திகளுடன் விளங்கும்,
ப்ரஹ்மஸூத்ரபதை: ஏவ-பிரம்ம சூத்திர பதங்களிலும் இசைக்கப்பட்டது.
பொருள் : அது (ஷேத்ரதிரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.
முடிந்த நிலையை விளக்குதற்குக் கலையைக் கவிகள் நன்கு கையாண்டிருக்கிறார்கள். மெய்ப்பொருள் எக்காலத்துக்கும் உண்மையாதலால் அது நிலையெனப்படுகிறது. தெளிவற்ற சொற்களைக்கொண்டு விளக்கினாலும் மெய்ப்பொருளுக்குள்ள மதிப்புக் குறைவதில்லை. ஆனால் ரிஷிகளோ அதை விளக்குதற்கு இயல் இசை இரண்டையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இயல் என்பது தெளிந்த மொழி. உலகில் உள்ள எம்மொழியும் தெளிந்ததாகுங்கால் அது உள்ளத்தைக் கவரவல்லது. இசை அல்லது பாட்டுக்கு மற்றொரு வன்மையுண்டு. எல்லா உயிர்களையும் அது வசப்படுத்த வல்லது. துஷ்ட ஜந்துக்களும் இசைக்கு இணங்கி நல்லியல்பு பெறுகின்றன. உணர்ச்சியைக் கிளப்பவும் அதைச் செப்பனிடவும் வல்லது கீதம். இனிமையும் ஆனந்தமும் அதனால் வளர்க்கப்படுகின்றன. ஆக, மெய்ப்பொருள் விளக்கத்தில் ரிஷிகள் இயல் இசை ஆகிய இரண்டையும் நன்கு கையாளுதல் மூலம் அதில் விருப்பத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துள்ளார்கள். தனியாக உணர்ச்சியை மட்டும் வளர்த்தால் போதாது. பகுத்தறிவைக்கொண்டும் மெய்ப்பொருளை ஆராய்தல் வேண்டும். யுக்திக்கு ஒத்திருப்பது உண்மை. ஆகையால் யுக்தி அல்லது பகுத்தறிவை முறையாகக் கையாளுமளவு உண்மை நிரூபிக்கப்படுகிறது.
ஆக, வேத வேதாந்தத்தை நிறுவிய மேலோர் மக்களிடத்து உணர்ச்சி, அறிவு ஆகிய இரண்டையும் நன்கு வளர்த்தல் பொருட்டு இயல், இசை, யுக்தி இவைகளைச் செவ்வையாகக் கையாண்டிருக்கிறார்கள்.
யுக்திக்கு ஒவ்வாத உணர்ச்சியோ பாங்கற்ற மனக்குழைவு ஆகும். பக்தியின் பெயரால் சிலர் வெறும் மனக்கசிவு உடையவர்களாய் இருக்கிறார்கள். திண்மை அல்லது உறுதிப்பாட்டை அவர்கள்பால் காணமுடியாது. மற்று, வெறும் விசாரத்தில் ஈடுபடுகிறவர்களது நுண்ணறிவு உலர்ந்த அறிவாய்ப் போய்விடுகிறது. எண்ணெயில்லா யந்திரம் போன்றது அவர்களுடைய வாழ்க்கை. அறிவு பெருகியிருந்தாலும், நெஞ்சத்தில் ஈரமின்மை பாராட்டத்தக்கதன்று. நிறை மனிதன் என்பவன் நெஞ்சக் குழைவும் அறிவு வளர்ச்சியும் ஒருங்கே அமையப் பெற்றவனாம். அதாவது ஒவ்வொருவனிடத்தும் அன்பும் அறிவும் சேர்ந்திருக்க வேண்டும்.
நாரத மஹரிஷியினிடத்திருந்தது போன்று ஞானமிச்ர பக்தி, அதாவது ஞானத்தோடு கலந்துள்ள பக்தி சாதகர்களுக்கு முற்றிலும் வேண்டப்படுகிறது.
5. மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச
இந்த்ரியாணி தஸைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா:
6. இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸங்காதஸ்சேதநா த்ருதி:
ஏதத்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்
மஹாபூதாநி அஹங்கார: புத்தி: ச-மகா பூதங்கள் (ஐம் பூதங்கள்), அகங்காரம், புத்தி, அவ்யக்தம் ஏவ-அவ்யக்தம், தஸ இந்த்ரியாணி ச-பத்து இந்திரியங்கள் (புலன்கள்), ஏகம் ச - மனதுடன் சேர்த்து (பதினொன்று), பஞ்ச இந்த்ரியகோசரா:-இந்திரிய நிலங்கள் ஐந்து (சுவை, ஒளி, ஓசை போன்ற புலன் நுகர் பொருட்கள்).
இச்சா த்வேஷ:-வேட்கை, பகைமை, ஸுகம் து:கம்-இன்பம், துன்பம், ஸங்காத: சேதநா - உடம்பு, சைதன்ய சக்தி, த்ருதி:-உள்ளத்துறுதி, ஸவிகாரம்-ஆகிய மாறுபாடுகள் உடைய, ஏதத் ஷேத்ரம்-இந்த ஷேத்ரதிரம், ஸமாஸேந உதாஹ்ருதம்-சுருக்கி சொல்லப் பட்டது.
பொருள் : மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,
பொருள் : வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணவு, உள்ளத்துறுதி இவையே ஷேத்ரதிரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.
ஆகாசம், வாயு, அக்கினி, அப்பு, பிருத்துவி ஆகிய ஐந்து பூதங்களும் சூக்ஷ்மமாக எங்கும் நிறைந்திருக்கிறபடியால் அவைகள் மஹாபூதங்கள் என்று சொல்லப்படுகின்றன.
அகங்காரம் - இது மஹாபூதங்களுக்குக் காரணமாகிறது. பூதங்கள் மூலமாக எழும் இருக்கிறேன் என்ற உணர்ச்சி அஹங்காரம் என்ற பெயர் பெறுகிறது.
புத்தி - இது நிச்சயவடிவு அல்லது தீர்மானம் செய்யும் தன்மையது. மஹத் என்ற பெயரும் இதற்கு வழங்கப்படுகிறது. இது அஹங்காரத்துக்குக் காரணமாயுள்ளது.
அவ்யக்தம் என்பது மூலப்பிரகிருதி என்று பொருள்படுகிறது. தோன்றா நிலையில் இருப்பதால் இதன்கண் விகாரம் அல்லது வேறுபாட்டைக் காணமுடியாது. இது புத்திக்குக் காரணமாகும். இவையாவும் ஈசுவர சக்தி.
தெய்விகம பொருந்திய என் மாயை கடத்தற்கு அரிது என்று ஏழாவது அத்தியாயம் பதினான்காம் சுலோகத்தில் பகவான் பகர்கிறார். இவைகளைத் தம்முடைய எட்டுவிதப்பிரகிருதி என்றும் பகவான் ஏழாவது அத்தியாயம் நான்காவது சுலோகத்தில் சொல்லுகிறார்.
பத்து இந்திரியங்கள் : கண் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து பத்து ஆகின்றன.
மனம் - இது சங்கல்ப விகல்ப மயமானது. எண்ணமும் ஐயமும் இதைச் சேர்ந்தவைகள். மனமானது பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது. பத்துத் தலைகளையுடைய ராவணன் பத்து இந்திரியங்களையுடைய மனதின் புறத்தோற்றமாக வந்தவன்.
இந்திரியார்த்தங்கள் - சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்த - வடிவங்களாயுள்ள ஐந்து இந்திரியங்களின் விஷயங்களாம்.
இவைகளையெல்லாம் தொகுத்து இருபத்து நான்கு தத்துவங்கள் என்று சொல்லுகிறது சாங்கிய தர்சனம்.
இச்சை, துவேஷம் முதலியன ஆத்மாவின் குணங்களென்று வைசேஷிகர் சொல்லுவார்கள். ஆனால் இவையாவும் அறியப்படும் தன்மையுடையனவாதலாலும், இவைகள் மூலமாக ஷேத்ரதிரத்தைப் பற்றிய போதமே வளர்க்கப்படுகிறதாதலாலும் இவைகளை பகவான் ஷேத்ரதிரம் என்று பகர்கின்றார்.
இச்சை என்பது விருப்பு. இன்பம் கொடுக்கும் ஒரு பொருளைத் திரும்பவும் பெற எண்ணங்கொள்வது இச்சை. இது அந்தக்கரணத்தின் தர்மமாகும்.
துவேஷம் என்றால் வெறுப்பு. துன்பம் கொடுக்கும் ஒரு பொருளை அல்லது அவ்வினத்தைச் சேர்ந்த ஒன்றைக் காணுமிடத்து அதை விலக்க நினைப்பது வெறுப்பு.
ஸுகம் இன்பமென்று பொருள்படுகிறது. அனுகூலமாகத் தோன்றி அமைதி தந்து ஸத்வகுணத்தை வளர்ப்பது எதுவோ அது ஸுகம். காணப்படு பொருளாதலால் இது ஷேத்ரதிரம் என்று அழைக்கப்படுகிறது. துக்கம் அல்லது துன்பம் பிரதிகூலமாகத் தோன்றி அமைதியின்மையை வளர்க்கிறது.
ஸங்காதம் என்பது உடலமைப்பு. உடலையும் இந்திரியங்களையும் ஒன்றாகப் பொருத்தி வைப்பதற்கு ஸங்காதம் என்று பெயர். பல பாகங்கள் ஒன்றாகப் பொருத்தப்பெற்று ஒரு யந்திரம் ஆகிறது. அங்ஙனம் வெவ்வேறு அங்கங்கள், அவயவங்கள், இந்திரியங்கள் முறையாக அமையப்பெற்று உடல் அல்லது ஷேத்ரதிரம் உருவெடுக்கிறது.
சேதனம் என்னும் சொல்லுக்குப் பொருள் உணர்வு. தீயோடு தொடர்வுள்ள இரும்பு தீயை விளக்குவது போன்று, இந்திரியங்கள் ஆத்ம சைதன்யத்தை உணர்வாக விளக்குகின்றன. இந்திரியங்கள் வாயிலாக சேதனம் அறியப்படுகிறது. அது தேகாத்ம புத்தியை வளர்க்கிறது. ஆகவே அது ஷேத்ரதிரம் என்று சொல்லப்படுகிறது.
திருதி என்றால் உறுதி. உடலும் இந்திரியங்களும் சோர்வடையும் தன்மையுடையவைகள். அவைகளைத் தளரவொட்டாது பொருத்தமாகத் தாங்கிப் பிடிப்பது எதுவோ அது திருதி. இதன் வலிவால் உடல் வாழ்க்கை நெடிது நிலைபெறுகிறது. காணப்படு பொருள் ஆதலால் இதுவும் ஷேத்ரதிரத்தோடு சேர்க்கப்படுகிறது. இச்சை முதல் திருதி பரியந்தம் இவையாவும் அந்தக் கரணத்தின் விகாரங்களாம்.
ஷேத்ரதிரம் என்று உடலை முதல் சுலோகத்தில் சொல்லியதன் முழுவிளக்கம் இந்த இரண்டு சுலோகங்களில் வந்து அமைகிறது.
இந்தச் சரீரம் உபயோகமற்றதும், அழிந்துபோகக்கூடியதுமானால் ஆத்மசாதகர்கள் ஏன் இதை ஜாக்கிரதையுடன் காப்பாற்றுகிறார்கள்? உள்ளே ஒன்றுமில்லாத வெறும் பெட்டியை ஒருவரும் ஜாக்கிரதையாகப் பாதுகாப்பதில்லை. விலையுயர்ந்த நகைகளும், பணமும், பொருள்களும் உள்ள பெட்டியை எல்லாரும் பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். அதுபோல, பக்தர்கள் ஈசுவரன் வாசம் செய்கிற இந்தச் சரீரத்தைப் பாங்குடன் காப்பாற்றுகிறார்கள். இதைப் பராமுகமாக விட்டுவிட மாட்டார்கள். நமது சரீரங்களெல்லாம் ஈசுவரனாகிய பொக்கிஷம் நிறைந்த பெட்டிகளாகும்.
சாதகன் எத்தகைய பாங்குடன் இருந்தால் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனை அறிகிற ஞானம் வருகிறது? இதற்கு விடை வருகிறது: (5-6)
7. அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷõந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஸௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:
அமாநித்வம்-கர்வமின்மை, அதம்பித்வம்-டம்பமின்மை, அஹிம்ஸா-ஹிம்சை செய்யாமை,
க்ஷõந்தி-பொறுமை, ஆர்ஜவம்-நேர்மை, ஆசார்ய உபாஸநம்-ஆசாரியனை வழிபடுதல், ஸௌசம்-தூய்மை, ஸ்தைர்யம்-ஸ்திரத்தன்மை, ஆத்மவிநிக்ரஹ:-தன்னைக் கட்டுதல்.
பொருள் : கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.
ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞனைப் பற்றிய ஞானம் வெறும் ஏட்டுக் கல்வியால் வருவதன்று. வாழ்க்கையின்மூலம் தன்னைப் பண்படுத்துவதாலேயே ஞானம் வளர்கிறது. மற்றவர்களைவிட மேலோனாகத் தன்னை நினைத்துக்கொள்ளாதிருத்தல் அமானித்வம் என்னும் பெயர் பெறுகிறது. தற்பெருமை ஜீவபோதத்தை வளர்க்கிறது. தற்பெருமையின்மை பரபோதத்தை வளர்க்கிறது. அடுத்தபடியாகத் தன் செயலைச் சிலாகித்துப் பேசலாகாது. ஏனென்றால் செயலெல்லாம் உண்மையில் ஈசனுடையவைகள். அவைகளைத் தனது என்று தருக்கிப்பதால் அக்ஞானமே வளர்கிறது. உயிர்களுக்கு ஹிம்சை செய்யும் எண்ணம் அவைகளை ஈசுவரனுக்குப் புறம்பாக கருதுவதால் வருகிறது. அவைகளுக்குத் தீங்கு செய்யாதிருப்பதால் ஞானம் வளர்கிறது. இனி, மற்ற உயிர்களிடத்திருந்து தனக்குத் துன்பம் வரும்பொழுது அதைப் பொறுத்திருத்தல் வேண்டும். ஓர் உதாரணத்தால் இதை விளக்குவோம். பேசும்பொழுது தன் பல் தன் உதட்டைக் கடித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் பல்லைப் பகைப்பதில்லை. ஏனென்றால் பல்லும் உதடும் தன் சொரூபம். உயிர்கள் தனக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்திருக்குமளவு அவைகளைத் தன்மயமாயுணரும் தன்மை வருகிறது. ஆர்ஜவம் அல்லது நேர்மையென்பது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையாகும். எண்ணியபடியே இயம்புவது கள்ளங்கபடமற்ற மனதுக்கே இயலும். அது ஞான வளர்ச்சிக்கு முற்றிலும் இன்றியமையாதது. ஆசாரியருக்குப் பணிவிடை செய்வதால் தன்னை ஆசாரியருக்கு உரியவனாகச் சாதகன் செய்து கொள்கிறான். மனிதன் யாருக்குப் பணிவிடை செய்கின்றானோ, யாரை உபாசிக்கின்றானோ அவருடைய பான்மையெல்லாம் தனக்கே வந்தமைகின்றன. ஆதலால் குரு சேவை முற்றிலும் வேண்டப்படுகிறது. உடலையும் உள்ளத்தையும் தூயதாக வைத்துக் கொள்ளுதல் சௌசம் எனப்படுகிறது. நீராடுதல் போன்ற செயலால் உடல் தூயதாகிறது. இந்திரியார்த்தங்களிலுள்ள கேடுகளை ஓர்ந்து அவைகள்பால் பற்றுவைக்காதிருப்பது உள்ளத்தின் தூய்மையாகும். ஆத்ம சாதனம் எத்தனை காலம் நடைபெறுவதாயிருந்தாலும் அதனால் மனத் தளர்ச்சியுண்டாகாது. இடைவிடாது முயற்சியிருக்குமானால் அது ஸ்தைர்யம் எனப்படுகிறது. உடலும் இந்திரியங்ளும் வெளியுலகில் விஷயாதிகளில் செல்லும் தன்மையுடையவைகள். அவைகளை அப்படிச் செல்லவொட்டாது தடுத்து சன்மார்க்கத்தில் ஈடுபடும்படி செய்வது தன்னடக்கமாகும்.
8. இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கதோஷாநுதர்ஸநம்
இந்த்ரிய அர்தேஷு வைராக்யம் ச-இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அநஹங்கார: ஏவ-அகங்காரம் இல்லாமை, ஜந்ம ம்ருத்யு-பிறப்பு, இறப்பு, ஜராவ்யாதி-நரை, நோய், து:க தோஷ-துக்கம், தோஷம், அநுதர்ஸநம்-இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.
பொருள் : இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.
ஐந்து இந்திரியங்களுக்கு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து விஷயங்களிருக்கின்றன. தூண்டிலில் உள்ளதைச் சுவைக்க முயன்று மீன் மாய்கிறது. தீயின் ஒளியை விரும்பி விட்டில் பூச்சி வதையுண்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நாடிக் காட்டானை பழகிய பெண் யானையின் மூலம் மக்களிடம் பிடிபடுகிறது. ஓசையைக் கேட்டு மூச்சடக்கி மானானது வேடர் வசப்படுகிறது. நாற்றத்தை நாடி மலரில் வண்டு மாட்டிக்கொள்கிறது. இனி, இந்திரிய போக விஷயங்கள் ஐந்திலுமே ஈடுபடும் மனிதன் கதி என்னாவது? இதை எண்ணிப்பார்த்து அவைகளிடத்துப் பற்று வைக்காதிருக்கவேண்டும்.
சரீரத்தைத் தான் என்று அபிமானிப்பது அஹங்காரம். அப்படி அபிமானம் கொள்ளாதிருப்பது அகங்காரமின்மையாகும்.
நன்றாக விசாரித்துப் பார்க்குமிடத்து பிறப்பு முதலிய யாவும் துன்பத்தை உண்டுபண்ணுபவைகளாய் இருக்கின்றன. அப்படி வரும் துன்பங்களைத் தானே உண்டுபண்ணியிருக்கலாம், அல்லது இயற்கையில் அவை வந்து அமைந்திருக்கலாம், அல்லது தெய்வா தீனமாக அவைகள் ஏற்பட்டிருக்கலாம். இப்படி விசாரிப்பதால் விஷயங்களில் விரக்தி வருகிறது. மனது அந்தர்முகமாக ஆத்மாவிடம் திரும்புகிறது. அங்ஙனம் ஞானத்துக்கு அது தகுதியுடையதாகிறது.
இந்திரிய விஷயங்களின் மீதுள்ள பற்று எவ்வளவுக்குக் குறைந்து வருமோ அவ்வளவுக்குக் கடவுளிடத்து பக்தி அதிகரித்து வரும்.
9. அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு
புத்ர தார க்ருஹாதிஷு-மகனையும் மனைவியையும், வீட்டையும், அஸக்தி-பற்றின்மை, அநபிஷ்வங்க:-தன்னுடைமையெனக் கருதாமை, ச-மேலும், இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு - விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே, நித்யம் ஸமசித்தத்வம்-எப்போதுமே சமசித்தமுடைமை.
பொருள் : பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை
பொருள்களை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமலிருந்தாலும் அவைகளிடத்துப் பற்றுதல் உண்டாகலாம். அப்படிப் பற்று வர இடந்தரலாகாது. மனைவி, மக்கள், வீட்டினிடத்து வைக்கும் அளவுக்கு மிஞ்சிய பற்றுதலால் தன்னை அவர்கள் மயமாய் உணரும் தன்மை வந்தமைகிறது. உற்றாருக்கு வந்த நோய் தனக்கே வந்ததாகவும், உற்றார் மடியத் தானே செத்துப்போனதாகவும் உணர்தல் அபிமானத்தால் வருகிறது. அதற்குப் பதிலாகத் தன்னையும் மற்ற எல்லா உயிர்களையும் இறைவனது குழந்தைகளாகக் கருதவேண்டும். உலக நிகழ்ச்சிகளில் வேண்டப்படுவனவாகவும், வேண்டப்படாதவைகளாகவும் பிரிவுபடுவது பற்றுடையார்க்கேயாம். மற்று, மனதை நடுநிலையில் வைப்போர்க்கு நலம் கேடு இரண்டும் ஒரே பாங்குடன் புலனாகும். இத்தகைய மன நிலையினின்றே ஞானம் உதிக்கிறது.
தன் உறவினர் ஒருவர்மேல் அபரிமிதமான பாசம் வைத்திருந்ததால் பகவானிடம் மனம் குவியப் பெறாத ஒரு பக்தரிடம் பகவான் அவர் நேசிக்கும் உறவினரைக் கடவுள் சொரூபமாகப் பாவித்து அன்பு வைக்கும்படி உபதேசித்தார். இவ்விஷயமாக உபதேசிக்கும்போது பகவான் கூறியதாவது - உன் ஆசைக்குப் பாத்திரமானவரிடம் உன் இஷ்ட தெய்வத்தைக் காண்பாயாகில், சுலபமாக மனம் பகவானை நாடிச் செல்வதை உணர்வாய்.
10. மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஸஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி
மயி அநந்யயோகேந-என்னிடம் பிறழ்ச்சியற்ற யோகத்துடன், அவ்யபிசாரிணீ பக்தி: ச - தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, விவிக்த தேஸ ஸேவித்வம்-தனியிடங்களை மேவுதல்,
ஜநஸம்ஸதி அரதி-ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை.
பொருள் : பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை
பகவானுக்கு ஒப்பான பொருள் வேறு ஒன்றுமில்லை யென்று உறுதிகொண்டு முழுமனதையும் அவனிடத்தே திருப்புதல்வேண்டும். தன் மனதை பக்தன் பங்குபோடுவதில்லை. அது முழுதையும் இறைவனுக்கென்றே கொடுத்துவைக்கிறான்.
துஷ்ட ஜந்துக்களால் இடைஞ்சல் உண்டாகாததும், ஆரோக்கியமானதும், இயற்கை வனப்பு வாய்ந்ததும், தூயதும், மனதுக்கு இனியதுமான இடத்தில் வசிப்பது ஆத்ம சாதனத்துக்குப் பொருத்தமானது. நல்லாரோடு கூடியிருத்தல், பிறகு அவர்களிடத்திருந்தும் பிரிந்து தனித்திருத்தல் தவத்துக்கும் ஞான வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றன.
தீபத்தைக் கண்டதும் பூச்சி இருட்டிலிருந்து ஓடி வருகின்றது. சர்க்கரைப் பாகிலேயே எறும்பு பிராணனை விடுமன்றி அதினின்றும் திரும்பிப் போகிறதில்லை. அதுபோல பக்தனும் ஈசுவரனையே எப்போதும் பற்றி நிற்பானாகையால் மற்ற பொருள்களையெல்லாம் அவன் கைவிட்டுவிடுகிறான்.
11. அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஸநம்
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோऽந்யதா
அத்யாத்ம ஜ்ஞாந நித்யத்வம்-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்த்வஜ்ஞாந அர்த தர்ஸநம்-தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு, ஏதத் ஜ்ஞாநம்-இவை ஞான மெனப்படும், யத் அத: அந்யதா அஜ்ஞாநம்-இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம், இதி ப்ரோக்தம்-என்று சொல்லப் பட்டது.
பொருள் : ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞான மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.
ஏழாவது சுலோகத்தில் அமானித்வம்-தற்பெருமை யின்மை என்பதில் துவக்கி இந்த சுலோகத்தில் தத்துவ ஞானார்த்த தர்சனம் என்பது முடிய இவை யாவும் ஞானம் எனப்படுகின்றன. இத்தகைய மனநிலைகள் ஞான வளர்ச்சிக்குக் காரணமாயிருப்பதால் இம்மனநிலைகளே ஞானமாகக் கருதப்படுகின்றன. இவைகளுக்கு எதிரிடையான மனநிலைகளாகிய தற்பெருமை, தருக்கு, ஹிம்சை, பொறாமை, மனக்கோணல், குருபராமுகம், மாசு, தளர்ச்சி, அடங்காமை, ஆசை, அஹங்காரம், கேடறியாமை, பற்று, உற்றாரைச் சார்தல், ஓரம் சார்தல், காமியபக்தி, சகவாச தோஷம், ஆத்மஞான விசாரமின்மை-ஆகிய இவையாவும் அக்ஞானத்தை வளர்க்கின்றன.
ஈசுவரன் எங்கும் நிறைந்திருப்பவரானால் நம்மால் ஏன் அவரைப் பார்க்க முடியவில்லை? பாசியும் நாணலும் மிகுந்திருக்கும் குளத்தின் கரையில் நின்றுகொண்டால் அக்குளத்தில் ஜலமே இல்லையென்றுதான் நீ சொல்வாய். ஜலத்தைக் காணவேண்டுமானால் குளத்தின் மேற்பரப்பிலிருந்து பாசியை அகற்றவேண்டும். மாயையாகிற திரையால் மூடப்பட்ட கண்களையுடைய நீ ஈசுவரனைக் காணமுடியவில்லையென்று குறை கூறுகிறாய். அவரைக் காணவேண்டுமானால் உனது கண்களினின்றும் மாயையாகிய திரையை அகற்று.
ஞானத்தால் வரும் பயன் யாது? விடை வருகிறது :
12. ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்நுதே
அநாதி மத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே
யத் ஜ்ஞேயம்-எது அறியப் படவேண்டியதோ, யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்தால், அம்ருதம் அஸ்நுதே-சாகாமல் இருப்பானோ, தத் ப்ரவக்ஷ்யாமி-அதை விளக்கிக் கூறுவேன், அநாதி மத்-அநாதியாகிய, பரம் ப்ரஹ்ம-பரப்பிரம்மம், ஸத் ந உச்யதே-“சத்” என்பதுமில்லை, அஸத் ந-“அசத்” என்பதுமில்லை.
பொருள் : ஞேயம் எதுவென்பதைச் சொல்கிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம், அதை “சத் என்பதுமில்லை, அசத் என்பதுமில்லை.
ஒன்பதாவது அத்தியாயம் பத்தொன்பதாவது சுலோகத்தில் பகவான் தம்மை (ம்ருத்யு:) சாவு என்றும் (அம்ருதம்) சாகாமையென்றும் சொன்னார். மேலும் தம்மை (ஸத்) உளதென்றும் (அஸத்) இலதென்றும் சொன்னார். ஸகுணப் பிரம்மம் பிரபஞ்ச சொரூபமாக இருக்கும்போது எல்லா முரண்பாடுகளும் அவரிடத்துச் சந்திக்கின்றன. வியாவகாரிக நிலையில் வைத்து விரைவில் மறையும் மக்கள் சாகின்றவர்கள் என்றும், நெடிது நிலைத்திருக்கும் தேவர்கள் சாகாதவர்கள் என்றும் சொல்லப்பட்டனர். அங்ஙனமே குணத்தோடு சம்பந்தப்பட்டுத் தோன்றியுள்ள காரியப் பிரம்மம் ஸத் என்று சொல்லப்பட்டது. அதனுடைய தோன்றா நிலை அஸத் என்று சொல்லப்பட்டது.
இத்தகைய விவகாரங்கள் யாவும் நிர்க்குண பிரம்மத்திடத்துக் கிடையா. அதைத் தோன்றியுளதென்றும் இலதென்றும் சொல்லலாகாது; அது தோற்றம் மறைவு அற்றது. அதனாலே தான் பரப்பிரம்மம் என்று அது அழைக்கப்படுகிறது. அது ஆதி அந்தம் அற்றது. மாறுபாடே அதனிடத்து இல்லை. அம்ருதம் என்பது அதற்கே முற்றிலும் ஒவ்வும். அபரோக்ஷõனுபூதியில் அறியத் தக்கது அதுவே. அதை அறிந்தபின் ஜீவனுக்குத் தான் வேறு, அது வேறு என்ற பேதமில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மமாகிறான். ஆகையால் சாகாத்தன்மை பிரம்மஞானியினுடையதாகிறது. பிரம்ம நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்பது அதுவே. அது மனம் மொழியைக் கடந்த பெருநிலை.
அகண்ட பரம்பிரம்மத்தை ஸமாதியில் மட்டும்தான் அறியலாகும். அப்பால் ஒரே மௌனம்; ஜீவன் ஜகத் இவைகளைப்பற்றிய ஆராய்ச்சி, ஞானம் அக்ஞானம் என்ற விவாதம் இவைகளெல்லாம் அடங்கிவிடுகின்றன. ஸ்வரூபத்தைத் தவிர வேறொன்றும் ஆங்கில்லை. உண்மையில் உப்புப் பிரதிமை பிரம்மாண்ட ஸமுத்திரத்தில் மூழ்கிய பிறகு தன்னுடைய கதையைச் சொல்ல வெளிவருவதில்லை. இதுதான் பிரம்ம ஞானம்.
இந்த அமிர்த சாகரத்தில் கலப்பதற்கு முன்பு சாதகன் காணும் காட்சி யாது? விடை வருகிறது :
13. ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோऽக்ஷிஸிரோமுகம்
ஸர்வத: ஸ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி
தத் ஸர்வத: பாணிபாதம்-அது எங்கும் கைகால்களுடையது, ஸர்வதோ அக்ஷி ஸிர; முகம் - எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது, ஸர்வத: ஸ்ருதிமத்-எங்கும் செவியுடையது,
லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி-உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது.
பொருள் : அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்துநிற்பது.
கடலையணுகும் நதி கடலின் தன்மையைப் பெறுகிறது. நிர்க்குண பிரம்மத்தில் லயமாதற்கு முன்பு ஞானி ஜகத்திலுள்ள வடிவங்களை யெல்லாம் ஈசுவரசொரூபமாகப் பார்க்கிறான். அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை என்பது அவனுக்குப் பிரத்தியக்ஷமாகிறது.
அஹங்காரம் என்னிடம் இருக்கும் வரையில் ஜீவனாயும், ஜகத்தாயும் வேறு வேறு ஐசுவரியங்களுடன் தம்மைத் தோற்றுவிக்கும் ஈசுவரன் என் முன்னால் இருக்கின்றார்.
14. ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச
ஸர்வ இந்த்ரிய குண ஆபாஸம்-எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது, ஸர்வ இந்த்ரிய விவர்ஜிதம்-எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது, ச அஸக்தம் ஏவ - பற்றில்லாதது, ஸர்வப்ருத் ச-அனைத்தையும் பொறுப்பது, நிர்குணம் குணபோக்த்ரு-குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.
பொருள் : எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.
பல வடிவங்களைக் காணுதற்குப் பகல் வேளை உதவுகிறது. ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொருள்களை விளக்குகிறது. பல பொருள்களின் விளக்கமாகச் சூரியப் பிரகாசம் ஒளிர்கிறது எனலாம். மேலும் சூரிய வெளிச்சம் இவ் வடிவங்கள் யாவையும் அற்றது. அவ் வடிவங்களில் அது பற்றற்றிருக்கிறது. ஆத்ம சைதன்யம் இந்திரியங்களில் அத்தகைய தொடர்வுடையதாயிருக்கிறது. சினிமாத் திரையானது படங்களை யெல்லாம் தாங்குவது போன்று சிதாகாசம் ஜகத்திலுள்ள அனைத்தையும் தாங்குகிறது. படத்தில் காணும் விதவிதமான வர்ணங்கள் திரையினுடைய வர்ணங்களல்ல. ஆனால் அத்தனை வர்ணங்களையும் திரை உள்ளபடி விளக்குகிறது. அங்ஙனம் முக்குணங்களும் பரமாத்மாவினிடத்து இல்லை. ஆயினும் குணங்களையெல்லாம் விளக்கவும் ரசிக்கவும் செய்கிறது அறிவு சொரூபமாகிய சிதாகாசம்.
ரூபியும் அரூபியுமான கடவுள் ஒன்றேதான். ஒன்றை நம்பினால் இன்னொன்றையும் நம்பினதாகும். எரியக்கூடிய சக்தியைத் தவிர்த்து நெருப்பையும், நெருப்பைத் தவிர்த்து எரிக்கிற சக்தியையும் சிந்திக்க வொண்ணாது. இன்னும் சூரிய கிரணங்களைத் தவிர்த்துச் சூரியனையும், சூரியனைத் தவிர்த்துச் சூரிய கிரணங்களையும் நினைக்க முடியாது; பாலைத் தவிர்த்து அதன் வெண்மையையும், வெண்மையைத் தவிர்த்துப் பாலையும் கருதவொண்ணாது. அது போல குணஸ்வரூபமான ஈசுவரனைத் தவிர்த்து நிர்க்குண ஸ்வரூபனையும், நிர்க்குண ஸ்வரூபனைத் தவிர்த்து குணஸ்வரூபனையும் சிந்திக்க முடியாது.
15. பஹிரந்தஸ்ச பூதாநாமசரம் சரமேவ ச
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்
பூதாநாம் அந்த: பஹி: ச-பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது, சரம் அசரம் ஏவ ச-அசரமும் சரமுமாவது, தத் ஸூக்ஷ்மத்வாத்-நுண்மையால், அவிஜ்ஞேயம்-அறிய முடியாதது, அந்திகே ச-அருகில் இருப்பது, தூரஸ்தம் ச தத்-தூரமானது.
பொருள் : பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது.
கடலுக்குள் மிதக்கிற பனிக்கட்டிக்கு உள்ளும் புறமும் இருப்பது நீர். அங்ஙனம் பரமாத்மா நீக்கமற எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கிறார். கடலின் மேல்பாகம் அலைவீசி அசைகிறது; அடிபாகம் அசையாதிருக்கிறது. பரமாத்மா குணங்களோடு கூடிப் பிரகிருதியாக இயங்குகிறார். குணம் போனவிடத்து அவர் அசையாதிருக்கிறார். கடல் நீர் ஆவியாக மாறி சூக்ஷ்மமாகும் பொழுது கண்ணுக்குத் தென்படுவதில்லை. அங்ஙனம் சுத்த சைதன்யமாகிய நிர்க்குண பிரம்மம் பேரறிவு சொரூபம் எனினும் மன பரிபாகமாகாத மந்த அதிகாரிகளுக்கு அப்பொருள் அறியவொண்ணாதது.
தன் சொந்த பூமியில் தன் பாதத்துக்குக் கீழ் பொன் இருப்பதை அறியாதவனுக்கும் பொன்னுக்கும் வெகுதூரம். தன்னுள் இருக்கும் பரமாத்மாவை அறியாதவனுக்கு அவர் மறுமையில் எங்கேயோ இருப்பதாக எண்ணம். தன் அந்தராத்மா அவர் என்று அறிகிறவனுக்கு அவரைவிட அருகில் உள்ள பொருள் வேறொன்றுமில்லை.
ஸமாதி நிலையிலிருந்து இந்திரிய நிலைக்கு வருபவனுக்கு இலேசான அஹங்காரம் இருக்கும். இதனால் அவன் ஒரே கடவுளின் பல்வேறு தோற்றங்களாகத் தன்னையும் ஜீவர்களையும் ஜகத்தையும் காண்கிறான். உனக்கென்று தனி வியக்தி இருக்கும் வரையில், அதாவது உன்னிடம் அஹங்காரம் இருக்கும் வரையில் ஈசுவரன் உருவம் உள்ளவன் என்பதைத் தவிர வேறுவிதத்தில் அவனை உன்னால் தியானிக்கவோ, நினைக்கவோ, காணவோ முடியாது. அதுவரையில் அகண்ட நிர்க்குணப் பிரம்மத்தை நீ உள்ளும் புறமும் சகுணக் கடவுளாகத்தான் காணுவாய். சகுணக் கடவுளின் இந்தத் தோற்றங்கள் பொய்யானவையல்ல. சரீரம், மனம், உலகம் இவைகளைக் காட்டிலும் அவை பன்மடங்கு மெய்யானவை.
16. அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச
ஜ்ஞேயம் தத்-அறியத் தக்க அது (பிரம்மம்), பூதேஷு அவிபக்தம் ச-உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல், விபக்தம் இவ ச ஸ்திதம்-பிரிவுபட்டதுபோல் நிற்பது. பூதபர்த்ரு-பூதங்களைத் தாங்குவது, ச க்ரஸிஷ்ணு-அவற்றை உண்பது, ச ப்ரபவிஷ்ணு-பிறப்பிப்பது.
பொருள் : உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.
ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொரு வடிவத்துக்குள்ளும் பிரிவுபட்டது போன்று தென்படுகிறது. பிரிவுபடுத்துகிற வடிவத்துக்குள்ளும் அது இடையீடின்றி வியாபித்திருக்கிறது. பரமாத்மா அத்தகையவர். பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தாங்குவது போன்று ஜகத், ஜீவன் ஆகிய அனைத்தும் ஆத்ம சைதன்யத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அவைகள் பிரளய காலத்தில் ஒடுங்குவது ஆத்மாவில்; சிருஷ்டி காலத்தில் தோன்றுவது ஆத்மாவில். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய மூன்று நிலைகளிலும் அவைகள் ஆத்மாவுக்குப் புறம்பாயில்லை. அலைகள் கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் ஒடுங்குவது போன்று இவையாவும் பரமாத்மாவிடம் தோன்றி, இருந்து, இறக்கின்றன.
மாசு மறுவற்று விளங்கிய ஆகாசத்தில் திடீரென்று மேகங்கள் தோன்றுவதையும் அடுத்த நிமிஷத்தில் அவை காற்றினால் அப்பால் போக்கப்படுவதையும் ஒருக்கால் கண்ட பரமஹம்ஸர் ஒருவர், மிகுந்த குதூகலத்துடன் குதிக்கத் தொடங்கி, இதைப் போன்றதுதான் ஜகத்தும்; முதலில் அது இருந்ததில்லை. பிரம்ம மாகிற நிர்மல ஆகாயத்தில் திடீரென்று தோன்றி இத்தனை பொருள்களையும் உண்டாக்கியது. பிறகு அதே பிரம்மத்தின் காற்றினால் அகற்றப்படுகிறது, என்றார்.
பிரளய காலத்தில் காரிருள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றையும் அது விழுங்கவும் செய்கிறது எனலாம். பரபிரம்மம் அத்தகையதோ என்ற ஐயம் ஏற்படலாம். அதற்கு விடை வருகிறது.
17. ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்
தத் ஜ்யோதிஷாம் அபி ஜ்யோதி:-ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி, தமஸ:-இருளிலும், பரம் ஜ்ஞாநம்-உயர்ந்த ஞானம், ஜ்ஞேயம்-அறியத் தக்கது, ஜ்ஞாநகம்யம்-ஞானத்தால் எய்தப்படுபொருள், ஸர்வஸ்ய ஹ்ருதி விஷ்டிதம்-எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது, உச்யதே-என்று கூறப் படுகிறது.
பொருள் : ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்ததென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படுபொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.
சுயம் ஜோதியாகத் தென்படும் சூரியன் நக்ஷத்திரம் முதலியவைகள் பிரளய காலத்தில் தங்கள் ஒளியை இழந்து மறைகின்றன. புத்தியானது ஆத்மாவிடத்து வாங்கிய உணர்ச்சியை இழக்கலாகிறது. ஆத்மாவோ தன் ஒளியை ஒருக்காலும் இழப்பதில்லை. ஜடப் பொருள்களுக்கு உண்டாகிற இருளும் வெளிச்சமும் ஆத்ம சைதன்யத்தை அணுகமாட்டா. நள்ளிருளில் ஒருவனுக்குத் தன் உடலும் உடையும் தென்படுவதில்லை. ஆயினும் நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி இருளில் மறைவதில்லை. சூரிய வெளிச்சத்தில் அவ்வுணர்ச்சி அதிகமாகத் தோன்றுவதுமில்லை. ஆத்ம சைதன்யத்தின் அறிவைக் கொண்டே சூரியனையும் அறிகிறோம், இருளையும் அறிகிறோம். அந்த ஆத்மா ஞானவடிவு. அது தன்னைத்தானே அறிகிறது. அது தன்னைத்தானே சார்ந்திருக்கும்பொழுது தன்னை நிறைபொருளாக உணர்கிறது. ஆக, ஆத்மாவால் அடைதற்கு உரியது ஆத்மாவே. அது ஹிருதய கமலத்தில் யாண்டும் நிலைத்திருக்கிறது.
உள்ளே (ஹிருதயத்தில்) ஈசுவரனை உணர்பவன் புறம்பேயும் அவனைக் காண்பான். தன்னுள்ளே ஈசுவரனைக் காணாதவன் தனக்கு வெளியேயும் அவனைக் காணமாட்டான். ஆகவே தேகாலயத்தில் தெய்வத்தைக் காண்பவன் அகிலாண்டத்திலேயும் அவனைக் காண்பான்.
18. இதி ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத:
மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே
இதி ஷேத்ரம்-இங்ஙனம் ஷேத்ரதிரம், ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச-அவ்வாறே அறிவு (ஞானம்), அறியப் படு பொருள் (ஞேயம்), ஸமாஸத: உக்தம்-சுருக்கமாகச் சொல்லப் பட்டது, மத்பக்த: ஏதத் விஜ்ஞாய-என் பக்தன் இதையறிந்து, மத்பாவாய உபபத்யதே-எனது தன்மையை அடைகிறான்.
பொருள் : இங்ஙனம் ஷேத்ரதிரம், ஞானம், ஞேயன் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.
மனிதன் எதனிடத்துத் தன் முழுமனதைச் செலுத்துகிறானோ அதை அறிய வல்லவனாகிறான். ஈசுவரனை உபாசிக்கிறவன் ஈசுவரனை அறிகிறான். இத்தனையுமாய் இலங்குவது ஈசனே என்ற ஞானம் வந்த பிறகு யாண்டும் அவன் ஈசனுடைய சான்னித்தியத்திலேயே இருந்து ஈசனை அடையத் தகுந்தவனாகிறான்.
ஈசுவரனைக் கண்டவனே ஞானி. அவன் அப்போது குழந்தையின் சுபாவமுடையவனாகின்றான். குழந்தைக்குத் தனி வியக்தித்வம் ஒன்று இருக்கிறதென்றாலும் அது வாஸ்தவமானதல்ல; வெளித் தோற்றம் மட்டுமே. குழந்தையின் இயல்பு வயது வந்தவனுடையதைப் போன்றதன்று.
19. ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி
விகாராந்ஸ்ச குணாந்ஸ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்
ப்ரக்ருதிம் புருஷம் ச உபௌ ஏவ-பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும், அநாதீ வித்தி ச-அநாதி , (ஆரம்பம் இல்லாதது) என்றுணர், விகாராந் ச-வேறுபாடுகளும், குணாந் அபி-குணங்களும்,
ப்ரக்ருதிஸம்பவாந் ஏவ-பிரகிருதியிலேயே பிறப்பன என்று, வித்தி- அறிந்து கொள்.
பொருள் : பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.
காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டதாகத் தென்படும் போது அது பிரகிருதி என்றும், மாயை யென்றும், இயற்கை யென்றும் அழைக்கப்படுகிறது. புத்தி முதல் ஜடப்பொருள் பரியந்தம் வெவ்வேறு வடிவெடுக்கும் தன்மை பிரகிருதியினிடமுண்டு. முக்குணங்களாகப் பரிணமிப்பதும் அதுவே. அது நிர்விகாரியாய் நிர்க்குணமாய்ப் பேரறிவாய்த் தன்மயமாயிருக்கும் போது புருஷன் என்ற பெயர் பெறுகிறது. ஆயினும் பொருள் ஒன்று ஆதலால் இவை இரண்டும் அத்வைதம். உண்டாக்கப்பட்டதல்லவாதலால் அது அனாதி.
ஸமுத்திர ஜலம் சிலவேளை அமைதியாயும், சிலவேளை அலைகள் பொங்கிக் கொந்தளித்தும் இருப்பதுபோல பிரம்மமும் மாயையும் இருக்கின்றன. சலிக்கும் சமுத்திரம் மாயை; சலனமற்ற சமுத்திரம் பிரம்மம்.
20. கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே
புருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே
கார்ய கரண கர்த்ருத்வே-கார்யங்களையும் கரணங்களையும் ஆக்கும் விஷயத்தில், ப்ரக்ருதி ஹேது: உச்யதே-பிரகிருதியே காரணம் என்பர், ஸுக து:காநாம் போக்த்ருத்வே-சுக துக்கங்களை அனுபவிப்பதில், புருஷ: ஹேது உச்யதே-புருஷன் (ஜீவாத்மா) காரணம் என்பர்.
பொருள் : கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷனென்பர்.
தந்தையே மைந்தன் ஆகின்றான். மைந்தனுடைய செயல்களில் சில தந்தைக்கு இன்பமூட்டுகின்றன; வேறு சில துன்பமூட்டுகின்றன. புருஷனே பிரகிருதி ஆகின்றான். பிரகிருதியின் வெவ்வேறு விகாரங்களே உடலாகவும், இந்திரியங்களாகவும் பரிணமிக்கின்றன. அவ்விந்திரியங்கள் ஞானேந்திரியங்களாகவும் கர்மேந்திரியங்களாகவும் பாகுபடுகின்றன. ஜீவாத்மாவானது பிரகிருதியோடு மேலும் சம்பந்தப்படுதற்கு இந்திரியங்கள் பயன்படுகின்றன. அத்தகைய சம்பந்தம் இன்ப துன்பமாக வடிவெடுக்கிறது. இங்ஙனம் புருஷன் பிரகிருதியோடு சேர்வதால் புருஷன் பாடம் கற்று வருகிறான். இப்படி ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துவதே பிரகிருதியின் தொழில்.
பிரம்ம ஞானப் பிராப்தி. பரமானந்த போகம் முதலியவைகளெல்லாம் மாயையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. இல்லாவிட்டால் இவையெல்லாம் நமக்கு லபிக்குமெனக் கனவிலும் கண்டவர் எவர்? மாயையிலிருந்துதான் துவைதமும் மற்ற வியவகாரமும் உண்டாகின்றன. மாயைக்கு அப்பால் போகம், போகி என்பவை கிடையா.
ஜீவன் என்னபோக்கில் பாடம் கற்கின்றான் என்பது அடுத்து எழும் வினாவாகின்றது. அதற்கு விடை வருகிறது :
21. புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந்குணாந்
காரணம் குணஸங்கோஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு
ப்ரக்ருதிஸ்த: ஹி-பிரகிருதியில் நின்றுகொண்டு, புருஷ:-புருஷன் (ஜீவாத்மா), ப்ரக்ருதிஜாந் குணாந் புங்க்தே-பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான், குணஸங்க:-குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே, அஸ்ய ஸத் அஸத் யோநி ஜந்மஸு-இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக், காரணம்-காரணமாகிறது.
பொருள் : புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.
வெயிலில் நிற்பவன் வெயிலை அனுபவிக்கிறான். பனியில் நிற்பவன் பனியை அனுபவிக்கிறான். அங்ஙனம் ஜீவாத்மா பிரகிருதியோடு பொருந்தியிருக்கையில் பிரகிருதியின் தன்மைகளையெல்லாம் தன்னுடையவைகளெனக் கருதி அனுபவிக்கிறான். நான் இன்பம் துய்க்கிறேன், நான் துன்பம் துய்க்கிறேன், நான் மயங்கிப்போனேன், நான் அறிவுடையவனாயிருக்கிறேன்-இவை போன்ற உணர்ச்சிகள் குணத்தோடு பற்று வைப்பதால் வருகின்றன. இனி, பிறப்புக்குக் காரணமாயிருப்பதும் பற்றுதலே. மேலான குணத்தோடு பற்று வைப்பவன் தேவன் போன்ற மேலானவனாகப் பிறக்கின்றான். கீழான குணத்தில் பற்று வைப்பவன் விலங்கு போன்ற கீழானவனாகப் பிறக்கிறான். மேலானதும் கீழானதும் கலந்த குணத்தில் பற்று வைப்பவன் சாதாரண மனிதனாகப் பிறக்கிறான்.
இப்படித் தொடர்ந்து வருகிற ஜனன மரண சம்சாரத்தினின்று விடுதலையடைதற்கு வழியொன்றுமில்லையா? விடை வருகிறது :
22. உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஸ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேऽஸ்மிந்புருஷ: பர:
உபத்ரஷ்டா அநுமந்தா ச-மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், பர்தா போக்தா மஹேஸ்வர: -சுமப்பான், உண்பான், மகேசுவரன், இதி அஸ்மிந் தேஹே பர புருஷ:-இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன், பரமாத்மா அபி ச உக்த:-பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.
பொருள் : மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.
உடலிலே இத்தனை செயல்கள் நடைபெறுகையில் அக்ஞானத்தில் உழலும் ஜீவனானவன் தன்னை இத்தனைக்கும் கர்த்தாவாக எண்ணுகிறான். அந்த ஜீவ சைதன்யமே பரமாத்மாவின் தோற்றமாகும். உள்ளே இருக்கும் உத்தமன் எத்தகையவன் என்று கேட்குமிடத்து, அவன் :
உபத்ரஷ்டா - அருகிலிருந்து காண்போன் அல்லது சாக்ஷியாக இருக்கிறான். சொக்கட்டான் ஆடுபவர்களை விட அதைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு யார் எங்கே எக்குற்றம் செய்கிறார்கள் என்பது நன்கு புலப்படுகிறது. மனத்தகத்து சாக்ஷியாயிருக்கும் பரமாத்மா உடலிலும் உள்ளத்திலும் நிகழ்வனவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அனுமந்தா - அனுமதி அல்லது சம்மதம் கொடுப்பவர். ஒன்றும் தெரியாத அவிவேகி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். பார்த்ததை நல்லதென்று ஆமோதிக்கவோ, அல்லது கெட்டதென்று நிராகரிக்கவோ அவனுக்குத் தெரியாது. அறிஞனுக்கோ அது சாலும். ஜகத்தின் நடைமுறைக்குப் பரமாத்மா அங்ஙனம் அனுமந்தாவாயிருக்கிறார்.
பர்த்தா - விளையாட்டைப் பார்க்கவும் அனுமதிக்கவும் ஒருவனுக்கு இயலலாம். ஆனால் அதற்கு ஆகிற செலவு கொடுத்து அதை ஆதரிக்க இயலுகிறவன் அதிலும் மிக்கான் ஆகிறான். அவனைப் பர்த்தா என்று சொல்லவேண்டும். தாங்குபவன் என்பது அதன் பொருள். சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குவது போன்று பரமாத்மா பிரகிருதியைத் தாங்குகிறார்.
போக்தா - சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குகிறது எனினும் அப்படத்தை ரசிக்க அதனால் இயலாது. திரை ஜடப்பொருளாயிருப்பதே அதற்குக் காரணம். மனைவிக்குக் கணவன் பர்த்தா. அதற்குமேல் அவளுடன் கூடின இல்வாழ்க்கைக்கு போக்தாவாக, அதாவது இல்வாழ்க்கையை அனுபவிப்பவனாக அவன் இருக்கிறான். அங்ஙனம் சித் சொரூபியாகிய, ஆனந்த சொரூபியாகிய பரம புருஷன் பிரகிருதிக்கு போக்தாவாக இருக்கிறார்.
மகேச்வரன் - கணவன் மனைவியை ஆதரித்து அவளுடன் கூடிய இல்வாழ்க்கையை அனுபவிக்கலாம். ஆனால் மனைவி அவன் கட்டுப்பாட்டில் அடங்காதவளாயிருக்கலாம். பின்பு, பரம புருஷனோ அரசன் போன்றவர். ராஜாவுக்கு அவனுடைய பிரகிருதிகளெல்லாம் உட்பட்டவைகள். மகேச்வரனது ஆளுகைக்குப் பிரகிருதி அல்லது ஷேத்ரதிரம் முற்றிலும் கட்டுப்பட்டது. அவருடைய ஆணையை மீறுதற்கு அதற்கு இயலாது.
இத்தனை விதங்களில் அவர் இயற்கையோடு தொடர்வு வைத்திருந்தும் அவர் இயற்கையில் கட்டுப்பட்டவரல்லர். ஆகையால் அவர் பரமாத்மன், அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டவர். இங்ஙனம் இத்தேகத்தினுள்ளேயே பிரகிருதியின் செயல் ஒன்றிலும் கட்டுப்படாதவராக, ஆனால் அதற்கு ஆதரவும், ஒழுங்குப்பாடும் தருபவராகப் பரம புருஷன் வீற்றிருக்கிறார்.
புருஷ பிரகிருதியின் மூலமாகவே உலகம் உண்டாயிற்று. அது எப்படி யென்று தெரியுமா? வீட்டு எஜமானன் ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு அதிகாரம் செலுத்துகிறான். வீட்டு எஜமானி இப்பக்கமும் அப்பக்கமும் ஓடி அலைந்து அலுவல்களைக் கவனிக்கிறாள். சுறுசுறுப்பாக வேலைபார்த்து, வீட்டுக்கு வருபவர்களையும் வரவேற்றுக் கவனித்துக்கொள்கிறாள். அடிக்கடி தன் கணவனிடம் சென்று அலுவல்கள் எவ்வாறு நடந்து வருகின்றன வென்பதை அறிவிப்பதோடு ஆலோசனைகளையும் கேட்டு வருகிறாள். தலைவனும் குறிப்பறிந்து தன் சம்மதத்தைத் தலையசைப்பின் மூலமாகத் தெரிவிக்கிறான். பிரகிருதி புருஷன் இவர்களது காரியமும் இப்படித்தான் நடைபெற்று வருகிறது.
பிரகிருதி புருஷனைப்பற்றிய ஞானத்தினின்று வரும் நலன் ஏதாவது உண்டா? விடை வருகிறது :
23. ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ
ஸர்வதா வர்தமாநோऽபி ந ஸ பூயோऽபிஜாயதே
ஏவம் புருஷம் ப்ரக்ருதிம் ச-இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், குணை: ஸஹ-அதன் குணங்களையும், ய: வேத்தி-எவன் அறிகிறானோ, ஸ: ஸர்வதா வர்தமாந: அபி-அவன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், பூய: ந அபிஜாயதே-மறு பிறப்பில்லை.
பொருள் : இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.
கண்ணாடியின் எதிரே தோன்றும் வடிவங்களின் பிம்பத்தை அப்படியே காட்டவல்லது கண்ணாடி. ஆனால் கண்ணாடி அதனால் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரகிருதியின் விகாரங்களால் பிரம்மமும் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மாகிறான். பிராரப்த கர்மத்தால் உடலில் ஏற்படும் இன்ப துன்பங்களில் அவன் கட்டுப்படுவதில்லை. கானல் நீர் போன்றுள்ள பிரகிருதியின் தோற்றத்தைப் போற்றிப் பாராட்டுவதால் அவனுக்குப் பிரகிருதியில் பற்று ஒன்றும் உண்டாவதில்லை. ஜகத் என்பது வெறும் தோற்றம் என்று அவன் அதைப் புறக்கணிப்பதால் அவனுக்கு நஷ்டம் வருவதுமில்லை. இவ்வுடலம் இருக்கும்வரை அதில் வாழ்க்கை பிராரப்தத்துக்கு ஏற்றவாறு விதவிதமாய் நடைபெறுகிறது. அதற்கிடையில் ஞானி ஜீவன்முக்தனாய் வாழ்கிறான். உடல் வீழ்ந்த பிறகு அவன் இன்னொரு பிறவி எடுப்பதில்லை. தீயில் வெந்த கயிறு கட்டுதற்கு உதவாது. அங்ஙனம் ஞானாக்கினியில் வெந்த சஞ்சித ஆகாமிய கர்மம் இன்னொரு பிறவியை உண்டுபண்ண மாட்டா.
சூளையில் வேகாத மண்பாண்டம் உடைந்தால் அம்மண்ணை வேறு புதிய பாண்டம் உண்டாக்கக் குயவன் உபயோகிப்பான். ஆனால் சூளையில் வெந்த மண்பாண்டம் உடைந்தாலோ அதன் துண்டுகளை அப்பால் அவன் உபயோகிக்க முடியாது. அதுபோல ஒருவன் அக்ஞானத்துடன் மரணமடைந்தால் மறு ஜன்மம் அடைவான். ஆனால் உண்மை ஞானமாகிய அக்கினியால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறு ஜன்மம் கிடையாது.
ஞானத்தை அடைதற்கான வழிகள் எவை? விடை வருகிறது :
24. த்யாநேநாத்மநி பஸ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே
கேசித் ஆத்மாநம் ஆத்மநா-சிலர் ஆத்மாவில், ஆத்மாவால், த்யாநேந ஆத்மநி பஸ்யந்தி-தியானத்தின் மூலமாக ஆத்மாவை அறிகிறார்கள், அந்யே ஸாங்க்யேந யோகேந-பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள், அபரே கர்மயோகேந ச-பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.
பொருள் : சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.
ராஜயோகம், ஞானயோகம், கர்மயோகம் ஆகிய மூன்றும் இங்குச் சொல்லப்பட்டுள்ளன. பக்தியோகம் அடுத்த சுலோகத்தில் வருகிறது.
25. அந்யே த்வேவமஜாநந்த: ஸ்ருத்வாந்யேப்ய உபாஸதே
தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்ருதிபராயணா:
து அந்யே ஏவம் அஜாநந்த:-வேறு சிலர் இவ்வாறு அறியாமல், அந்யேப்ய ஸ்ருத்வா-அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை, உபாஸதே ச-வழிபடுகிறார்கள், தே ஸ்ருதிபராயணா: அபி-அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின், ம்ருத்யும் அதிதரந்தி ஏவ-மரணத்தை வெல்வார்.
பொருள் : இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.
பக்தியோகம் மற்ற மூன்று யோகங்களைவிட மிக எளியது. சாஸ்திர ஞானமும் விவேகமும் இதற்கு ஏராளமாய் வேண்டியதில்லை. ஆயர் குலத்து தித்த பெண்களே கல்வியறிவின்றி, நூல் ஆராய்ச்சியின்றி, சுத்த பக்தியால் கண்ணனை அடைந்தார்கள் என்றால் விவேகமும் வைராக்கியமும் உடைய மேலோர்க்கு அது இன்னும் எவ்வளவு எளிதாகாது?
பகவத் பக்தியை ஒரு புலியோடு ஒப்பிடலாம். புலியானது மிருகங்களை விழுங்குவதுபோல், பக்தியானது காமாதிகளான பெரும் பகைவர்களை விழுங்குகிறது. பகவத் பக்தி ஒருதரம் நன்றாக உண்டாகிவிட்டால், காமம் குரோதம் முதலிய கெட்ட பாசங்கள் முற்றிலும் நசிந்துவிடும். பிருந்தாவனத்து கோபஸ்திரீகள் கிருஷ்ணனிடம் வைத்த தீவிரபக்தியால் இப்படிப்பட்ட நிலைமையை அடைந்திருந்தனர்.
கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய நான்கும் ஸ்ரீமத் பகவத்கீதையில் சம அந்தஸ்துப் பெறுகின்றன. ஒன்றைக் குறைபடுத்துதலும் மற்றொன்றை மிகைப்படுத்துதலும் கீதையில் இல்லை. இந்த நான்கு யோகங்களில் ஏதேனும் ஒன்றே போதுமானது. ஏதேனும் ஒரு யோகத்தின் மூலமாக மனிதன் பரிபூரணத் தன்மையடையலாம். பின்பு நான்கு யோகங்களும் சமரசம் அடைதலே சாலச்சிறந்தது. கர்மயோகம் ஆற்றலைத் தருகிறது. ராஜயோகம் மனோவலிவை வளர்க்கிறது. பக்தி அன்பைப் பெருக்குகிறது. ஞானம் அறிவை வளர்க்கிறது. நிறை மனிதனிடத்து இவையாவும் பூரண வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
இனி, நான்கு யோகங்களையும் முறையாகக் கையாளுவதால் வரும் நிறை ஞானம் விளக்கப்படுகிறது.
26. யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்
ஷேத்ரஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப
பரதர்ஷப:-பரதக்காளையே, யாவத் கிஞ்சித் ஸ்தாவர ஜங்கமம்-எத்தனை எத்தனை ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும், ஸத்த்வம் ஸஞ்ஜாயதே-பிராணிவர்க்கம் உண்டாகின்றதோ, தத் ஷேத்ர ஷேத்ரஜ்ஞ ஸம்யோகாந்-அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்தது, வித்தி-என்று அறி.
பொருள் : பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.
சினிமாத் திரையும் அதன்மீது படுகிற நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் சேர்க்கையும் படக் காட்சிக்குக் காரணங்களாகின்றன. அசையாத திரையின் துணையால் அசையும் மனிதன் ஒருவனது தோற்றம் அங்கே தென்படுகிறது. நிறத்தின் அமைப்பு விசேஷத்தால் அவ்விடத்தில் தீப்பற்றி எரிவது போன்று காட்சி உண்டாகிறது. நிழல், நிறம் இவைகளின் தன்மை திரையின் மீது ஏற்றப்படுகிறது. பின்பு திரையின் தன்மையானது நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் மீது ஏற்றப்படுகிறது. படத்தோற்றத்துக்கு இதுவே காரணம். சித் ஆகாசம் என்கிற திரையின் மீது முக்குண மயமான ஷேத்ரதிரம் அரோபிக்கப்படுகிறது - அதாவது ஏற்றுவிக்கப்படுகிறது. இங்ஙனம் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனுடைய சேர்க்கையால் ஜடமாகிய ஷேத்ரதிரம் அறிவுடையதுபோல் தென்படுகிறது. உண்மையில் அறியும் தன்மை ஆத்மாவினுடையது. பிறவாத, இறவாத ஆத்மாவானது பிறந்து இறப்பதுபோன்று தென்படுகிறது. பிறப்பும் இறப்பும் - அதாவது தோன்றுவதும் மறைவதும் ஷேத்ரதிரத்தினுடைய இயல்பு. இது ஆத்மாவினிடத்து நிகழ்கிறது என்ற மித்தியா ஞானம் அக்ஞானிக்கு உண்டாகிறது. தீப்பற்றி எரிகிற சினிமாக் காட்சி தென்பட்டாலும் திரையில் தீப்பற்றிவிடாது என்ற ஞானம் அதன் தத்துவத்தை அறிகிறவர்களுக்குண்டு. உலகம் உண்டாவது, நிலைபெறுவது , மறைவது என்பதெல்லாம் இத்தகையது என்று ஞானி உள்ளபடி அறிகிறான். ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனைப் பாகுபடுத்தி உள்ளபடி அறிவதே ஞானம்.
நீ வியக்தி ஸ்வரூபனாக இருக்கும் வரையில், அதாவது நீ ஜீவனாய் இருக்கும் வரையில், வெண்ணெய், மோர் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும்; அதாவது ஈசுவரன் ஜகத் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும். உவமையை விளக்கிச் சொல்வோமானால் முதன் முதலில் இருந்த பாலானது ஸமாதி மூலமாய் அறியப்படும் பிரம்மமாகும்; வெண்ணெய் ஈசுவரனாகும்; மோர் இருபத்துநான்கு தத்துவங்களாலான உலகமாகும்.
ஞானம் அடைந்தவன் பரமாத்மாவை எப்படிக் காண்கிறான்? விடை வருகிறது ?
27. ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம்
விநஸ்யத்ஸ்வவிநஸ்யந்தம் ய: பஸ்யதி ஸ பஸ்யதி
ய: விநஸ்யத்ஸு ஸர்வேஷு பூதேஷு-எந்த மனிதன் அழியக் கூடிய எல்லா பூதங்களிலும், அவிநஸ்யந்தம் ஸமம் திஷ்டந்தம்-அழியாதவனாகவும் சமமாக நிற்பவனாகவும், பரமேஸ்வரம்-பரமேச்வரனை, பஸ்யதி-பார்க்கிறானோ, ஸ: பஸ்யதி-அவனே காட்சி உடையவன்.
பொருள் : எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரசுராமன். அழிவனவற்றில் அவன் அழிவான். அவனைக்காண்போனே காட்சியுடையோன்.
படங்கள் அனைத்துக்கும் சினிமாத் திரை சமமாயிருக்கிறது. படத்தின் அமைப்பில் இதன் இடத்தில் அது இருக்கிறது, இன்ன இடத்தில் இல்லை என்பது கிடையாது. இனி, படங்களெல்லாம் ஓயாது தோன்றி மறைகின்றன. திரையோ மாறுதல் அடையாது நிலைத்திருக்கிறது. சித் ஆகாசம் என்னும் திரையின் மீது ஜகத் என்னும் படம் உண்டாகி அழிந்துகொண்டிருக்கிறது. சினிமா என்னும் படம் உயிரற்ற ஓவியம். ஜகத் என்னும் படமோ உயிர் ஓவியம். ஏனென்றால் அதற்கு ஆதாரமாயுள்ள சித் ஆகாசம் அல்லது பரமாத்மாவிடமிருந்து அது சைதன்யத்தை, அதாவது உணரும் தன்மையைப் பெறுகிறது. ஜகத்து அல்லது ஷேத்ரதிரத்துக்கு உயிர் வழங்குவதால் அது பரமேசுவரன் எனப்படுகிறது. திரையின்றிப் படமில்லை. பரமேசுவரனின்றி உலகம் ஒன்றுமில்லை. அப்பரமேசுவரனையும் அவன் மயமாக உலகத்தையும் காண்பவனே உண்மையைக் காண்பவன் ஆகிறான். மற்றவர்கள் படத்தை மெய்யென நினைக்கும் குழந்தைகள் போன்றவர்களாய் இருக்கின்றனர்.
சூரியன் உலக முழுதிலும் சமனாகப் பிரகாசித்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால் ஒரு சிறுமேகம் அதை நம் கண்ணுக்குத் தெரியாது மறைத்து வைக்கிறது. அங்ஙனம் மாயையாகிய திரை எங்கும் நிறைபொருளை - கடவுளை, நம் கண்ணுக்குத் தெரியாது மறைக்கிறது. மாயையை நீக்கிப் பார்ப்பவருக்கு எல்லாம் சச்சிதானந்த சொரூபமாகத் தோன்றும்.
ஈசுவரக் காட்சி காண்பவனது வாழ்க்கையில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? விடை வருகிறது :
28. ஸமம் பஸ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஸ்வரம்
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்
ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதம் ஈஸ்வரம்-எங்கும் சமமாக ஈசன் நிற்பதை, ஸமம் பஸ்யந் - சமமாகவே பார்த்துக் கொண்டு இருப்பவன், ஆத்மாநம் ஆத்மநா ந ஹிநஸ்தி-தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான், தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.
பொருள் : எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.
மனிதன் செய்கிற எல்லாக் கேடுகளுக்கும் காரணமாயிருப்பது அக்ஞானம். கேடுகளிலெல்லாம் பெரிய கேடு தன்னை ஷேத்ரதிரம் அல்லது பிரகிருதியாக நினைத்துக்கொள்வது. சரீரத்தைத் தான் என்று நினைப்பவன் பல பிறவிகளை எடுக்கிறான். ஒவ்வொரு தடவையும் தன் உடல் கூற்றை அழித்துக்கொண்டு புதிய பிறவியெடுக்கிறான். அழியாத ஆத்மா அக்ஞானத்தால் பலதடவை அழிக்கப்பட்டது போன்று ஆகிறது. மற்ற உயிர்களை மனிதன் தனக்கு வேறானவைகளாக நினைப்பதால் அவைகளுக்குத் தீங்கு செய்கிறான். இது மித்தியா ஞானம் அல்லது மயக்கத்தின் பயனாகும். பிரம்மஞானி பிரம்மத்துக்கு அன்னியமாக எதையும் காண்பதில்லை. அவனுக்கு உலகமெல்லாம் ஒரே பிரம்ம சொரூபமாகக் காட்சி கொடுக்கிறது. அதுவே அவன் அடைகிற பரகதியாம்.
குருவியின் கூண்டு அழிந்துபோனால், அக்குருவி ஆகாயத்தில் பறந்துபோய்விடுகிறது. அதுபோல, சரீர உணர்ச்சியும் உலக உணர்ச்சியும் மனத்தைவிட்டு நீங்கினால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய ஆகாயத்தில் பறந்து சென்று சமாதிநிலையில் ஐக்கியமாகிறது.
பூவுலகில் நடைபெறுகிற கிருத்தியங்களுக்கும் பிரம்மஞானிக்கும் ஒருவிதமான தொடர்வும் இல்லையா? இக்கேள்விக்கு விடை வருகிறது :
29. ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ:
ய: பஸ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஸ்யதி
ச ய:-மேலும் எவன், ஸர்வஸ: கர்மாணி-எங்கும் தொழில்கள், ப்ரக்ருத்யா ஏவ க்ரியமாணா,நி-இயற்கையாலேயே செய்யப்படுகின்றன, ததா ஆத்மாநம் அகர்தாரம் பஸ்யதி-ஆதலால் தான் கர்த்தா இல்லையென்று காண்பானே, ஸ: பஸ்யதி =காட்சியுடையான்.
பொருள் : எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்
சூரியன் இருக்குமிடத்தில் வெளிச்சம் உண்டு. அக்கினி இருக்குமிடத்தில் வெப்பம் உண்டு. அங்ஙனம் பிரம்மத்தின் சன்னிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் கிருத்தியங்கள் வேண்டிவாறு நடைபெறுகின்றன. நிறைஞானியின் பிர கிருதியாகிய உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் சம்பூரண நிலை சிறிதும் கலைந்து விடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான்.
பரம்பொருளை சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யாத நிஷ்கிரியர் என்ற கோட்பாட்டில் பிரம்மம் அல்லது புருஷன் என்று சொல்லுகிறேன். ஆனால் அத்தொழில்களைச் செய்தருளுகின்றார் என்ற கோட்பாட்டில் சக்தி, மாயை, பிரகிருதி என்ற பெயர்களுள் ஒன்றால் அழைக்கிறேன்.
ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞனுக்கிடையில் உள்ள தொடர்வு அடுத்த சுலோகத்தில் இன்னும் நன்கு விளக்கப்படுகிறது :
30. யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஸ்யதி
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா
யதா பூத ப்ருதக் பாவம்-எப்போது பலவகைப்பட்ட பூதங்களின் தன்மை, ஏகஸ்தம்-ஒரே ஆதாரமுடையன, தத: ஏவ விஸ்தாரம் ச-அந்த ஆதாரத்தில் இருந்து (பரமாத்மாவிடம் இருந்து) விரிவடைந்தனவாகவும், அநுபஸ்யதி-காண்கிறானோ, ததா ப்ரஹ்ம ஸம்பத்யதே-அப்போது பிரம்மத்தை அடைகிறான்.
பொருள் : பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.
அலை, திவலை, நுரை முதலிய தனித்தனி வடிவங்களெல்லாம் கடலுக்குப் புறம்பாயில்லை. எல்லாம் கடல் என்ற ஒரு பொருளிலே நிலைத்திருக்கின்றன. மேலும் அவைகளெல்லாம் கடலிருந்தே உண்டானவைகள். கடலே தனது சக்தியால் அத்தனைவித வடிவெடுத்திருக்கிறது. அது போன்று மாயா சக்தியின் வல்லமையால் பல்லுயிர்களாகத் தோன்றியிருப்பவைகளெல்லாம் பரபிரம்மத்திடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அந்த மாயா சக்தியே பிரம்மத்துக்கு அன்னியமானதல்ல. யார் ஒருவன் சுவானுபூதியில் இதை அறிகின்றானோ அத்தகைய பிரம்மஞானி பிரம்மமாகிறான்.
இயங்காப் பரபிரம்மமும் இயங்கும் சக்தியும் உண்மையில் ஒன்றேயாம். அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபி எவனோ அவனே ஸர்வசக்தி, ஸர்வ ஞானம், ஸர்வானந்தம் இவைகளையுடைய ஜகன் மாதாவாகவுமாகிறான். நெருப்பும் அதன் வெப்பமும் ஒன்றானவை. அக்கினியின்றி உஷ்ணத்தையும் உஷ்ணமின்றி அக்கினியையும் மனத்தினால் சிந்திக்க முடியாது. சக்தியும் பிரம்மமும் ஒன்று. சக்தி கர்மம் செய்கிறது. அந்த கர்மம் பிரம்மத்தைச் சார்கிறதா? இதற்கு விடை வருகிறது :
31. அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய:
ஸரீரஸ்தோऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே
கௌந்தேய-குந்தியின் மகனே, அநாதித்வாத்-ஆதியின்மையால், நிர்குணத்வாத் - குணமின்மையால், அயம் பரமாத்மா அவ்யய:-இந்தப் பரமாத்மா கேடற்றான், ஸரீரஸ்த: அபி-இவன் உடம்பிலிருந்தாலும், ந கரோதி-செயலற்றான்; ந லிப்யதே-பற்றற்றான்.
பொருள் : ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.
மாயா காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டவைகள் ஆதலால் அவைகளுக்குத் துவக்கமுண்டு. பரபிரம்மம் சிருஷ்டிக்கப்பட்ட தல்ல; எனவே அது ஆதியில்லாதது. மாயா காரியங்கள் குண சம்பந்தப்பட்டவைகள். எதற்குக் குணம் மாறுகிறதோ அது கேடடைகிறது. பரமாத்மா குணமில்லாதது; ஆதலால் அதனிடத்து மாறுதல் ஒன்றுமில்லை. அது கேடு அடைவதில்லை. நிறை பொருள் அசையாதது; ஆகையால் அதனிடத்துக் கர்மம் கிடையாது. அசையாத ஒன்று, கர்மம் செய்யாத ஒன்று எதையும் போய்ப் பற்றுவதில்லை.
பிரம்ம ஞானியினுடைய சரீரத்துக்கு ஏற்படும் அழிவு அவனுக்குரியதன்று. சரீரம் செய்கிற வேலை அவனுடைய தன்று. கடலின் மேற் பரப்பு ஆடுகிறது, அலையாக மோதுகிறது, பற்றுகிறது; அதன் உட்புறம் சலனமற்றுத் தன்மயமாயிருக்கிறது. நிறை ஞானியினுடைய தன்மையும் அத்தகையது.
பிரம்மம் எப்படிப்பட்டது? பிரம்மத்துக்குக் குணங்கள் இல்லை, சலனமில்லை, அது போக்கு வரவற்றது; மகாமேரு பர்வதத்தைப் போல் நிலைத்திருப்பது.
எதுபோன்று பரமாத்மா செயலற்றுப் பற்றற்று இருக்கிறது? அது மேலும் விளக்கப்படுகிறது :
32. யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஸம் நோபலிப்யதே
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே
யதா ஸர்வகதம் ஆகாஸம்-எங்குமிருந்தாலும் ஆகாசம், ஸௌக்ஷ்ம்யாத் ந உபலிப்யதே-தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், ததா தேஹே-அவ்வாறே உடம்பில், ஆத்மா ஸர்வத்ர அவஸ்தித:-ஆத்மா எங்கணுமிருந்தாலும், ந உபலிப்யதே-பற்றுறுவதிலன்.
பொருள் : எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுறுவதிலன்.
ஜலமானது உறைந்த பனிக்கட்டியாக, இளகிய நீராக, நுண்ணிய ஆவியாக மூன்று நிலைகளில் இருக்கிறது. நுண்ணிய நிலையில் அதை அழுக்குப்படுத்த முடியாது. பஞ்ச பூதங்களுள் ஆகாசம் மிக நுண்ணியது. ஆகையால் அதை மற்றவைகள் அழுக்காக்குவதில்லை. இனி ஆத்மாவைவிட நுண்ணியது ஒன்றுமில்லை. ஆதலால் அது எதுனாலும் தோய்வுறாதிருக்கிறது. ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. பூமி முதலியவைகளில் உள்ள வடிவங்கள் ஆகாசத்தைப் பிளவுபடுத்துவதில்லை. எண்ணிறந்த உடல்களில் பிளவுபடாது நிறைந்துள்ள சிதாகாசம் அல்லது பரமாத்மா எதிலும் பிளவுபடாது, தோய்வுறாது, களங்கமடையாக இருக்கிறது.
ஞானம் அக்ஞானம், நன்மை தீமை, தர்மம் அதர்மம் இப்படிப்பட்ட துவந்தங்களுக்கு அப்பாலும் மேற்பட்டும் பிரம்மம் இருக்கிறது.
இன்னும் அது அத்தகையது?
33. யதா ப்ரகாஸயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி:
ஷேத்ரம் ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஸயதி பாரத
பாரத-பாரதா, யதா ஏக: ரவி-எப்படி சூரியன் ஒருவனாய், இமம் க்ருத்ஸ்நம் லோகம் - இவ்வுலக முழுவதையும், ப்ரகாஸயதி-ஒளியுறச்செய்கிறானோ, ததா ஷேத்ரீ-அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், க்ருத்ஸ்நம் ஷேத்ரம் ப்ரகாஸயதி-ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.
பொருள் : சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுவதையும் எங்ஙனம் ஒளியுறச்செய்கிறானோ, அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.
பூமி முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுக்கிறான். ஆனால் பூமியிலுள்ள நன்மை கேடுகளால் சூரியன் பாதிக்கப்படுவதில்லை. இங்ஙனம் உலக முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுப்பதுபோன்று பரமாத்மா அகிலாண்டத்துக்கும், சரம் அசரம் அனைத்துக்கும் சைதன்யத்தை அல்லது அறிவை வழங்குகிறார். அந்தந்த ஜீவனது அறிவில் ஏற்படும் நலம் கேடு முதலியன பரமாத்மாவைப் பந்தப்படுத்துவதில்லை.
பிரம்மம் ஒரு விளக்கின் ஒளிப்பிழம்பைப் போன்றது. விளக்கின் வெளிச்சத்தில் நீ பாகவதத்தைப் படித்தாலும் படிக்கலாம்; அவ்வெளிச்சத்தின் உதவியைக்கொண்டே பிறரைக் கெடுக்க வேண்டி ஒரு பொய்ப் பத்திரத்தை எழுதினாலும் எழுதலாம். எல்லார்க்கும் அறிவு என்னும் வெளிச்சத்தைத் தருவது பிரம்மம். ஆனால் அது நன்மை தீமைகளோடு சம்பந்தப்படுவதில்லை.
முடிவான கருத்து யாதுவெனின்:
34. ஷேத்ரஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷúஷா
பூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்
ஏவம் ஷேத்ர ஷேத்ரஜ்ஞயோ:-இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள,
அந்தரம்-வேற்றுமையையும், பூதப்ரக்ருதிமோக்ஷம் ச-ப்ரக்ருதி, பிரக்ருதியினுடைய செயல்கள் இவற்றிலிருந்து விடுபடுவதையும், யே ஜ்ஞாநசக்ஷúஷா விது-எவர்கள் ஞானக் கண்ணால்
தே பரம் யாந்தி-அவர்கள் பரம்பொருளை அடைகின்றனர்.
பொருள் : ஞானக் கண்ணால் இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதப் பிரக்ருதியினின்றும் விடுதலை பெற்று பரம்பொருளை அடைகின்றனர்.
நோயையும் நோயாளியையும் நன்கு அறிகின்றவளவு மருத்துவன் நோயை நீக்க வல்லவன் ஆகிறான். இரண்டில் ஒன்றைத் தெரியாது போனாலும் சிகிச்சை சிலாக்கியப்படாது. அங்ஙனம் புருஷன் பிரகிருதி ஆகிய இரண்டையும் உள்ளபடி அறிதல் வேண்டும். எது புருஷன், எது பிரகிருதி என்று பாகுபடுத்துதலும் அவசியமானது. இதற்கெல்லாம் மேலாக ஞானவாழ்க்கையின் வாயிலாக ஞானக்கண்ணைப் பெறுதல் மிக முக்கியமானது. வெறும் சாஸ்திர ஞானம் போதாது. ஞானக்கண் திறக்கப்பெறுமிடத்து ஜீவர்கள் பிரகிருதியில் கட்டுண்டு கிடப்பதெல்லாம் அக்ஞானத்தால் என்பது விளங்கும். அதற்கெல்லாம் மேலாகப் பிரகிருதியானது புருஷனைச் சார்ந்திருக்கிறதென்றும், புருஷன் பிரகிருதியைச் சார்ந்திருப்பதில்லையென்றும், பிரகிருதி புருஷனுக்கு அன்னியமானதல்லவென்றும் சுவானுபூதியில் தோன்றும். அத்தகைய அபரோக்ஷ அனுபூதியைப் பெறுபவன் பிரம்ம ஞானியாகிறான். அவனே முக்தன் ஆகிறான்.
உலகம் மாயை யென்று சொல்லுவது எளிது. ஆனால் அதன் பொருள் இன்னதென்று உனக்குத் தெரியுமா? அது மிகுதி ஒன்றையும் வைக்காத கற்பூரத்தைக் கொளுத்துவது போலாம். சாம்பலை மிகுதியாக்கும் விறகுக் கட்டைகளைக் கொளுத்துவது போன்றதன்று. விசாரணை முடியும் நிலையில், உயர்ந்த சமாதி நிலை கிட்டும். அப்போது நான், நீ, உலகம் என்ற உணர்ச்சி கொஞ்சமேனும் இராது.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகோ நாம
த்ரயோதசோத்யாய:
பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷத்தின்கண் ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்ற பதின்மூன்றாம் அத்தியாயம்.
-
பதினான்காம் அத்தியாயம்
குணத்ரய விபாக யோகம்
தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும் சேர்க்கிறார். பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக்கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.
ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது; தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைத் தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான். பிரம்ம ஞானம் மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது 1-2 -பிறவிக்கு மூலகாரணம் 3-4 -குணங்களின் செயல் 5-10 -குணங்களின் முன்னீட்டத்தை அறிவது எப்படி 11-18 -குணாதீதம் முக்தி நிலை 19-20 -குணங்களைக் கடந்தவனது லக்ஷணம் 21-27.
ஸ்ரீபகவாநுவாச
1. பரம் பூய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், யத் ஜ்ஞாத்வா ஸர்வே முநய:-எதை அறிந்து எல்லா முனிவர்களும், இத: பராம் ஸித்திம் கதா:-இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்களோ, ஜ்ஞாநாநாம் உத்தமம்-அந்த ஞானங்களிலேயே உயர்ந்த, பரம் ஜ்ஞாநம்-பரம ஞானத்தை, பூய: ப்ரவக்ஷ்யாமி-மறுபடி உரைக்கிறேன்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.
முன்னமே பகரப்பட்ட இந்த ஞானத்தை இன்னொரு போக்கில் பகவான் பகர்கிறார். பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் மேலும் அடையவேண்டியது ஒன்றுமில்லை. மனது பரிபக்குவம் அடைந்தவர்களுக்கு ஞான சாதனம் மிக எளியது எனினும், பக்குவம் அடையாதவர்களுக்கு அது மிகக் கடினமானது. ஆதலால் வெவ்வேறு பாங்குகளிலே வைத்து அது விளக்கப்படுகிறது. ஞான பராயணர்களாயிருந்தவர்கள் முனிவர் என்ற பெயர் பெற்றனர். ஞான முதிர்ச்சிக்கு ஏற்ப அவர்களிடத்து சித்தி அல்லது பரிபூரண நிலை அமைவதாயிற்று. பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் நிறைநிலை எய்துகின்றனர் எனினும், அவர்களது உடல் வாழ்க்கை குறைபாடுடையது போன்று தென்படுகிறது. உடலில் குற்றத்தைப் புருஷனது குற்றம் என்றெண்ணி மயங்கி விடலாகாது. அவ்வுடலத்தைத் துடைத்தான பிறகு முனிவர்கள் பரிபூரணமாகிய பரவெளியில் கலக்கின்றனர். அதற்கேற்ற ஞானம் வேறு ஒரு முறையில் இங்கு விளக்கப்படுகிறது.
ஈசுவரனை அறியும் வித்தை பரவித்தை எனப்படும். சாஸ்திரங்கள், தத்துவம், தர்க்கம், இலக்கணம் முதலியன வெல்லாம் மனத்தில் பெருங்குழப்பத்தையுண்டாக்கும். கிரந்தங்கள் எல்லாம் கிரந்தி (முடிச்சு)களைப் போன்றுள்ளன. பரவித்தையைக் கற்பிக்குமானால்தான் அவைகள் பயன்படுவனவாகும்.
பிரம்ம வித்தையின் பயன் யாது?
2. இதம் ஜ்ஞாநமுபாஸ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா:
ஸர்கேऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச
இதம் ஜ்ஞாநம் உபாஸ்ரித்ய-இந்த ஞானத்தை அடைந்து, மம ஸாதர்ம்யம் ஆகதா:-அதனால் என்னியல்பு பெற்றோர், ஸர்கே அபி ந உபஜாயந்தே-படைப்புக் காலத்தில் பிறவார், ப்ரலயே ந வ்யதந்தி ச-ஊழியிலும் சாகமாட்டார்.
பொருள் : இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.
கடலைச் சார்ந்த உப்புப் பொம்மை கடலில் தன் வியக்தியை இழக்கிறது; அதே வேளையில் கடலின் சொரூபத்தைப் பெறுகிறது. ஞானியின் நிலை அத்தகையது. பிரம்ம சொரூபத்தில் அவன் ஒன்றாகிறான். அது பிரகிருதி மயமான தோற்றம் ஒடுக்கம் எல்லாம் கடந்திருப்பதால், அதை அடைகின்றவனுக்குப் பிறப்பு, இறப்பு, பிணி முதலியன கிடையா.
வேகவைத்த நெல்லைப் பூமியில் விதைத்தால் அது மறுபடியும் முளைக்காது. வேகவைக்காத நெல்தான் முளைவிடும். அதுபோல ஸித்தனான பிறகு ஒருவன் இறப்பானானால் அவன் மறுஜன்மம் அடைவதில்லை. அஸித்தனோ தான் ஸித்தனாகும் வரையில் திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க வேண்டும்.
பிறவி எப்படி உண்டாகிறது? விடை வருகிறது :
3. மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம்
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத
பாரத-பாரதா, மம மஹத்ப்ரஹ்ம யோநி-பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம், அஹம் தஸ்மிந் கர்பம் ததாமி-அதில் நான் கருத்தரிக்கிறேன், தத: ஸர்வபூதாநாம் ஸம்பவ: பவதி - எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
பொருள் : பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
பிரகிருதிக்கு பிரம்மா என்பது மற்றொரு பெயர். சதுர்முக பிரம்மா என்பதும் அதுவே. முக்குணமாயுள்ளது அது; சராசரம் அனைத்துக்கும் அது உபாதான காரணம். காரியமாகப் பரிணமித்துள்ள அனைத்துமாய் அவைகளுக்கு அப்பால் இன்னும் தோன்றா நிலையிலும் அது இருக்கிறது. ஆதலால் அது மஹத்பிரம்மா எனப்படுகிறது. எங்கும் வியாபிக்கும் தன்மை அதனிடத்துள்ளது.
பூமியில் விதையை நடுகிறோம். பூமி யோனியாயிருக்கிறது. விதை கர்ப்பமாகப் பரிணமிக்கிறது. சிசு உண்டாவதில் பெண் பால் பிரகிருதி தத்துவமாகவும் ஆண்பால் புருஷ தத்துவமாகவும் காரியப்படுகிறார்கள். அங்ஙனம் மூலப்பிரகிருதி என்ற யோனியில் ஆத்ம சைதன்யம் என்ற கர்ப்பம் வைக்கப்படுகிறபொழுது ÷க்ஷத்திர-÷க்ஷத்திரக்ஞனுடைய சம்யோகம் ஏற்படுகிறது. பிரகிருதியில் பிரகாசிக்கும் புருஷன் ஹிரண்யகர்ப்பன் என்று பெயர் பெறுகிறான். அவனுடைய எண்ணிறந்த கிரணங்களே உயிர்கள் அனைத்துமாய் இருக்கின்றன. ஜீவர்களும் ÷க்ஷத்திரக்ஞன் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அறியுந்தன்மை அவர்களுக்கும் உண்டு. அவித்தையால் ஏற்பட்ட உபாதிக்கும், காமத்துக்கும், கர்மத்துக்கும் ஏற்ப எண்ணிறந்த ஜீவாத்மாக்கள் உண்டாகின்றன. அவைகளின் பாங்குகளும் எண்ணிறந்தவைகளாம்.
அடுத்த சுலோகத்தில் இக்கருத்து இன்னும் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது.
4. ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா:
தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத: பிதா
கௌந்தேய-குந்தியின் மகனே, ஸர்வயோநிஷு-பல விதமான பிறப்பிடங்களிலும், யா: மூர்தய: ஸம்பவந்தி-எந்த உடல்கள் (வடிவங்கள்) கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ,
தாஸாம் மஹத் ப்ரஹ்ம: யோநி:-அவை எல்லாவற்றிற்கும் பிரக்ருதியே பிறப்பிடம் (கருத்தரிக்கும் தாய்), அஹம் பீஜப்ரத: பிதா-நான் விதை அளிக்கும் தந்தை.
பொருள் : எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.
கர்ப்பாசயங்கள் அல்லது யோனிகள் கணக்கற்றவை. தேவர்களாக, நரர்களாக, விலங்குகளாக, பறவைகளாக, பூச்சிகளாக, புழுக்களாக, ஸ்தாவரங்களாக அவ்வவைகளுக்கேற்ற யோனிகளிடத்திருந்தே உயிர்களெல்லாம் உண்டாகின்றன. இவைகளுக்கெல்லாம் தாயாயிருப்பவன் மூலப்பிரகிருதி. அவள் பெரிய நாயகி என்று அழைக்கப்படுகிறாள். தந்தையாயிருப்பவர் பரமாத்மா.
பிரகிருதி எங்ஙனம் உயிர்களை பந்தப்படுத்துகிறது? விடை வருகிறது :
5. ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா: ப்ரக்ருதிஸம்பவா:
நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்
மஹாபாஹோ-பெருந்தோளாய், ஸத்த்வம் ரஜ: தம இதி-சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள், ப்ரக்ருதிஸம்பவா: குணா:-பிரகிருதியில் எழுவன, தேஹே-இவை உடம்பில், அவ்யயம் தேஹிநம்-அழிவற்ற ஆத்மாவைப், நிபத்நந்தி-பிணைக்கின்றன.
பொருள் : சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.
பிரகிருதி முக்குணமயமாயிருக்கிறது. உருவம் முதலிய பண்புகள் ஒரு பொருளைச் சார்ந்திருப்பது போன்று குணம் என்ற பண்பு பிரகிருதி சொரூபமாகிய குணியைச் சார்ந்திருக்கிறது என்று எண்ணலாகாது. அக்கினியும் அதன் உஷ்ணமும் வேறானவைகளல்ல, ஒன்றே. அங்ஙனம் பிரகிருதியும் குணமும் ஒன்றேயாம். உலகத்தில் உள்ள நிறங்களை யெல்லாம் மூன்று அச்சில் தொகுத்துப் படங்கள் தீட்டிவிடலாம். அதே பாங்கில் பிரகிருதி முழுதும் முக்குணங்களில் அடங்கியிருக்கிறது. முக்குணங்கள் என்பனவும் பிரகிருதி என்பதும் சொரூபத்தில் ஒன்றேயாம். முக்குணங்களை முப்பாழ் என்று சொல்லுவதும் உண்டு.
பிரகிருதி அல்லது ÷க்ஷத்திரம் ÷க்ஷத்திரக்ஞனைச் சார்ந்திருக்கிறது. குணசொரூபம் அல்லாத அவனை குணம் எப்படிப் பிணிக்க முடியும்? பிணிக்கப்படாத ஆத்மா அக்ஞானத்தால் பிணிக்கப்பட்டது போன்று தென்படுகிறது. நீர் அசைவதால் நீரிலுள்ள சூரிய பிம்பம் அசைகிறது. சூரியனே அசைவது போன்று பிம்பத்தினின்று தென்படுகிறது. உண்மையில் சூரியன் அசைவதில்லை. அங்ஙனம் கட்டுப்படாத ஆத்மா கட்டுப்பட்டது போன்று தென்படுகிறது.
இனி, முக்குணங்களின் தன்மை விளக்கப்படுகிறது :
6. தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக
அநக-பாவமற்றவனே, தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம்-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது, அநாமயம்-நோவற்றது, ஸுகஸங்கேந-அது இன்பச் சேர்க்கையாலும், ஜ்ஞாநஸங்கேந ச-ஞானச் சேர்க்கையாலும், பத்நாதி-கட்டுப்படுத்துவது.
பொருள் : அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.
கண்ணாடி ஒன்று தூயதாய் இருப்பதோடு சத்துவகுணத்தை ஒப்பிடலாம். அழுக்குப்படியாததும் ஸ்படிகம் போன்று அமைந்ததுமான கண்ணாடியின் வாயிலாக வெளிச்சம் நன்கு வெளியாகும். சத்துவகுணம் அங்ஙனம் ஆத்மப் பிரகாசத்தை விளக்கவல்லது. ஒப்பமான கண்ணாடியின் மூலம் அப்புறம் பார்த்தால் அது காட்சியை இடர்ப்படுத்துவதில்லை. பொருள்கள் உள்ளபடி அதன் வாயிலாக விளங்குகின்றன. அவைகளை உள்ளபடி கண்டறிவது ஞானம். புறப்பொருள்களைப் பார்த்தறியும்போது அவைகள் தரும் இன்பத்தில் நாட்டம் வருகிறது. சுகத்தை அனுபவிப்பதற்கு ஏற்றவாறு அதில் பற்றுதல் உண்டாகிறது. இன்னும் அதிக சுகத்தைப் புறப்பொருள்கள் எப்படித் தரும் என்ற ஆராய்ச்சி மேலும் ஞானப்பற்றை வளர்க்கிறது. புற உலகத்தைப்பற்றிய ஞானமும் அதனிடத்திருந்து பெறும் சுகமும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகளாயிருக்கின்றன. ஆதலால் சத்துவகுணம் ஓங்கப்பெற்றுள்ள ஒருவன் மனதைப் பிரவிருத்தியிலே திருப்புவானாகில் அவனுக்கு சுகப்பற்றும் பிரகிருதி ஞானப்பற்றும் ஏராளமாயுண்டாகின்றன. மற்ற பந்தங்களை யெல்லாம்விட ஸத்துவகுணம் உண்டுபண்ணுகிற பந்தம் மிக வலிவு வாய்ந்தது. அந்த பந்தத்தை உடைத்தெறிவது மிகக் கஷ்டமானது. ஏனென்றால் ஆத்மானந்தத்துக்கு ஒப்பான சுகத்தை அது கொடுக்கிறது; நுண்ணறிவையும் அது வளர்க்கிறது. சுகத்துக்கும் அறிவுக்கும் அப்பால் செல்ல மனிதனுக்கு விருப்பம் வருவதில்லை.
7. ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணாஸங்கஸமுத்பவம்
தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்
கௌந்தேய-குந்தி மகனே, ராகாத்மகம் ரஜ:-விருப்ப இயல்புடையது ரஜோகுணம், த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் வித்தி-அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள், தத் தேஹிநம் கர்மஸங்கேந-அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால், நிபத்நாதி-கட்டுகிறது.
பொருள் : ரஜோகுணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்திமகனே, அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.
ரஜோகுணம் ஆசை வடிவெடுத்து முடிவில்லாத பிரவிருத்தியை உண்டுபண்ணுகிறது. காவிக்கல் வெள்ளை வஸ்திரத்தைச் சிவப்பாக்குவது போன்று ரஜோகுணம் ஆத்மாவுக்கு வர்ணம் கொடுக்கிறது. திருஷ்ணா அல்லது வேட்கை யென்பது அடையாத பொருளின்மீது அடையவேண்டுமென்று கொண்டுள்ள விருப்பம். ஆஸங்கம் அல்லது பற்றுதல் என்பது பெற்றுள்ள பொருளை விட்டுப் பிரியலாகாது என்ற மனப்பான்மை. தோற்றத்திலுள்ள இவ்வுலகப் பொருள்களில் பற்றும், தோன்றாதுள்ள மறுமையில் பற்றுதலும் ரஜோகுணத்தால் ஆத்மாவுக்கு வருகின்றன. விறகுக் கட்டையானது எரிகின்ற தீயை வளர்ப்பது போன்று ரஜோ குணம் வினைப்பற்றை வளர்க்கிறது. கர்மம் செய்யாத ஆத்மாவைக் கர்த்தாவாகப் பண்ணிவைப்பது இக்குணம். ரஜோகுணம் இருக்கும் வரையில் கர்மத்தில் பற்றும் தன்னைக் கர்த்தாவென்று எண்ணுகிற எண்ணமும் ஆத்மாவுக்குண்டு.
8. தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்
ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத
பாரத-பாரதா! ஸர்வதேஹிநாம் மோஹநம் தம:-உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ, அஜ்ஞாநஜம் வித்தி-அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள், தத் ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி-அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்,
நிபத்நாதி-கட்டுப்படுத்துகிறது.
பொருள் : தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!
அக்ஞான இருளினின்று வருவது தமோகுணம். இது விவேகத்தை மறைக்கும் தன்மையுடையது. சத்வகுணத்தைக் கெடுப்பது ரஜோகுணம். தமோகுணமோ சத்துவம், ரஜஸ் ஆகிய இரண்டையும் கெடுக்கிறது. அதனால் அறிவற்று, உணர்ச்சியற்று, செயலற்று மனிதன் ஜடம்போன்று ஆய்விடுகிறான்.
மூன்று குணங்களும் தொகுத்து மீண்டும் பகரப்படுகின்றன:
9. ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பாரத
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத
பாரத-பாரதா, ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி-சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது,
ரஜ: கர்மணி-ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது, தம: து ஜ்ஞாநமாவ்ருத்ய-தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை), ப்ரமாதே உத ஸஞ்ஜயதி-மயக்கத்தில் பிணிக்கிறது.
பொருள் : சத்வம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா, ரஜோகுணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.
ஒரு மனிதன் எதில் பற்று வைத்திருக்கிறானோ அதிலிருந்து அவனிடத்து எக்குணம் தலையெடுத்திருக்கிறது என்பது விளங்கும். விதவிதமான இன்பங்களை அனுபவிக்கவேண்டுமென்று விரும்புபவனிடத்து சத்துவகுணம் முன்னணியில் இருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாகப் பலவிதமான அலுவல்களில் ஈடுபட ஆசைப்படுபவனிடத்து ரஜோகுணம் ஓங்கியிருக்கிறது. மேகம் சூரியனை மறைப்பது போன்று தமோகுணம் ஞானத்தை மறைக்கிறது. தனக்கு ஏற்பட்டுள்ள கடமைகளைச் செய்யாது விட்டு விடுவதால் தமோகுண விருத்தியுடையவனுக்குக் கவலை யொன்றும் உண்டாவதில்லை. காலத்தை வீணாகக் கழிப்பது, பொருள் விரயமாவது ஆகியவைகளைக் குறித்து அவன் வருந்துவதில்லை. ஜடம்போன்று அவன் செயலற்றுக் கிடப்பான்.
இக்குணங்களின் ஆதிக்கம் எப்படி நடைபெறுகிறது? அதற்கு விடை வருகிறது :
10. ரஜஸ்தமஸ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத
ரஜ: ஸத்த்வம் தமஸ்சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா
பாரத-பாரதா, ரஜ: தம: ச அபிபூய ஸத்த்வம் பவதி-ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது, ஸத்த்வம் தம: ச ரஜ:-சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி, ரஜோ குணம் நிற்கிறது, ததா ஏவ ஸத்த்வம் ரஜ: ச தம:-அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.
பொருள் : பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.
தேகம் எடுத்துள்ள ஒருவனிடத்து மூன்று குணங்களும் இருக்கின்றன. அவைகளுள் ஒரு குணம் முன்னணிக்கு வரும்பொழுது மற்ற இரண்டும் பின்னணிக்குப் போய்விடுகின்றன. விழித்திருந்து அமைதியே வடிவெடுத்தவனாக மனிதன் ஆகும்போது சத்துவகுணம் ஓங்கிநிற்கிறது. அப்பொழுது இன்பமும் ஞானமும் விரிவடைகின்றன. ரஜோகுணம் தலையெடுக்கின்றபொழுது விதவிதமான கர்மத்தில் மனிதன் ஈடுபடுகின்றான். பின்பு தமோ குணம் ஓங்குமிடத்து, மனிதன் கற்கவும் முடியாது, கர்மம் செய்யவும் முடியாது; சோம்பலும் தூக்கமும் வருகின்றன. நாள்தோறும் மூன்று குணங்களும் மாறி மாறி முன்னணிக்கு வருகின்றன. இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது.
அந்தந்த குணத்தின் செயல் மேலும் விளக்கப்படுகிறது :
11. ஸர்வத்வாரேஷு தேஹேऽஸ்மிந்ப்ரகாஸ உபஜாயதே
ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவ்ருத்தம் ஸத்த்வமித்யுத
யதா அஸ்மிந் தேஹே ஸர்வத்வாரேஷு-எப்போது இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும், ப்ரகாஸ ஜ்ஞாநம் உபஜாயதே-ஞான ஒளி பிறக்கிறதோ, ததா ஸத்த்வம் உத-அப்போது சத்வ குணம், விவ்ருத்தம் இதி வித்யாத்-வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.
பொருள் : இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.
பல வர்ணங்கள் தீட்டிய கண்ணாடிகள் அமைக்கப்பெற்றுள்ள பெட்டி ஒன்றனுள் தீபம் வைத்தால் எல்லாக் கண்ணாடிகள் வாயிலாகவும் அதன் வெளிச்சம் வெளியாகும். தீபத்தின் பிரகாசத்திற்கேற்ப வெளிச்சமும் அதிகரிக்கும். மனிதனுடைய உடல் அத்தகைய பெட்டி போன்றது. கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய இந்திரியங்கள் வாயில்களாகின்றன. குண வேறுபாட்டுக்கு ஏற்ற ஆத்மப் பிரகாசம் இந்திரியங்கள் வாயிலாக ஒளிர்கின்றது. சத்துவகுணம் ஓங்குமிடத்து ஆத்மப் பிரகாசம் நன்கு மிளிர்கிறது. பார்ப்பதில், கேட்பதில், ஒவ்வொரு இந்திரியத்தையும் கையாளுதலில் எழிலும் தெளிவும் திகழ்கின்றன. இந்நிலையில் மெய்யறிவு ஓங்குகிறது.
12. லோப: ப்ரவ்ருத்திராரம்ப: கர்மணாமஸம: ஸ்ப்ருஹா
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே பரதர்ஷப
பரதர்ஷப-பாரதக்காளையே! ரஜஸி விவ்ருத்தே-ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து, லோப: ப்ரவ்ருத்தி-அவா, முயற்சி, கர்மணாம் ஆரம்ப:-தொழிலெடுப்பு, அஸம: ஸ்ப்ருஹா - அமைதியின்மை, விருப்பம், ஏதாநி ஜாயந்தே-இவை தோன்றுகின்றன.
பொருள் : அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம் இவை ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே!
பிறர் பொருள்களையெல்லாம் தன்னுடையவையாக்கிக் கொள்ள விரும்புதல் பேராசை அல்லது லோபமாகிறது. இந்திரியங்கள் வாயிலாக வெளியுலக வியவகாரங்களில் முனைந்து போதல் பிரவிருத்தியெனப்படுகிறது. அப்படிச் செல்வதால் புதிய புதிய கர்மங்களைத் துவக்குவதில் ஊக்கம் உண்டாகிறது. அங்ஙனம் துவக்கிய கர்மங்களில் வெற்றியடையும்பொழுது மகிழ்வும், தோல்வியடையும்பொழுது மனச்சோர்வும் உண்டாகி, அமைதியின்மையை வருவித்துவிடுகிறது. தொடுத்த கர்மங்களைச் செப்பனிட விருப்பம் ஏற்படுவதால் வினைவேட்கை அல்லது தொழில் தாகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இவை யாவும் ரஜோகுணத்தின் அறிகுறிகளாம்.
13. அப்ரகாஸோऽப்ரவ்ருத்திஸ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்தே குருநந்தந
குருநந்தந-குருகுலச்செல்வமே! தமஸி விவ்ருத்தே- தமோ குணம் ஓங்குமிடத்தே, அப்ரகாஸ: அப்ரவ்ருத்தி: ச ப்ரமாத: மோஹ ஏவ ச-ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம்,
ஏதாநி ஜாயந்தே-இவை பிறக்கின்றன.
பொருள் : ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே!
தமோகுணத்தின் ஆதிக்கத்தால் மனத்தகத்து இருள் சூழ்கிறது; அதனால் விவேகம் மறைந்துபட்டுப்போகிறது. ஒரு செயலையும் செய்யாது சோம்பித் திரியும் தன்மை தலையெடுக்கிறது. அஜாக்கிரதையே வடிவெடுத்தவனாக மனிதன் மாறியமைகிறபடியால் அவன் தவறுதல் செய்தற்கு இடம் ஏற்படுகிறது. மதி மயக்கம் அல்லது திரிவுபட்ட அறிவும் அதன் பயனாக வருகிறது.
குணம் மேலோங்குதற்கும் மறுபிறப்புக்கும் தொடர்வு உண்டா? இதற்கு விடை வருகிறது :
14. யதா ஸத்த்வே ப்ரவ்ருத்தே து ப்ரலயம் யாதி தேஹப்ருத்
ததோத்தமவிதாம் லோகாநமலாந்ப்ரதிபத்யதே
யதா தேஹப்ருத் ஸத்த்வே ப்ரவ்ருத்தே- எப்போது மனிதன் சத்வம் ஓங்கி நிற்கையிலே, ப்ரலயம் யாதி-இறக்கிறானோ, ததா து உத்தமவிதாம்-அப்போது மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின், அமலாந் லோகாந்-களங்கமற்ற உலகங்களை, ப்ரதிபத்யதே -அடைகிறான்.
பொருள் : சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.
உடலை விடும்பொழுது உள்ளத்தில் என்ன எண்ணம் நிலைத்திருக்கிறதோ அதற்கு ஏற்ப மறுபிறப்பு அமைகிறது. சத்துவ குணம் ஓங்கியிருக்கும்பொழுது தெய்விக சிந்தனையிருப்பது உறுதி. பிரம்மலோகம் முதலிய இடங்களில் சத்துவகுணமே நிறைந்திருப்பதால் அம்மனிதன் அந்த லோகத்தை அடைகிறான். உத்தமத்தை அறிந்தவர்கள் என்று ஈண்டு இயம்பப்படுவது பிரம்மா அல்லது ஹிரண்யகர்ப்பனை அறிந்தவர்களாம். ஆனால் அவர்களுடைய அந்த ஞானம் இன்னும் பரஞானம் ஆகவில்லை.
15. ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே
ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே
ரஜஸி ப்ரலயம் கத்வா-ரஜோ குணத்தில் இறப்போன், கர்மஸங்கிஷு ஜாயதே-கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான், ததா தமஸி ப்ரலீந:-அவ்வாறே, தமஸில் இறப்போன், மூடயோநிஷு ஜாயதே =மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
பொருள் : ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
முன்பு சொன்ன சத்துவகுணத்தில் உடலை வகுப்பவன் முழு அறிவோடு அமைதியாகச் சாகிறான். ரஜோகுணத்தில் மரணமடைபவன் பதைபதைப்போடும், பேராவலோடும், துன்பத்தோடும் உயிர் துறக்கிறான். இடையறாது கர்மம் செய்யும் பாங்குடையவனாக அவன் பிறக்கிறான். தமோகுணத்தில் தேகத்தை விடுபவன் பிரக்ஞையின்றி ஜடநிலையில் சாகிறான். அவன் மிருகமாக அல்லது அறிவிலியாகப் பிறக்கிறான்.
தமோகுணத்தில் இருப்பவன் ரஜோகுணத்துக்கு வரமுயல வேண்டும். ரஜோகுணத்தில் இருப்பவன் சத்துவகுணத்திற்கு மேலேறுதல் முறை. ஏனென்றால் :
16. கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் பலம்
ரஜஸஸ்து பலம் து:கமஜ்ஞாநம் தமஸ: பலம்
ஸுக்ருதஸ்ய கர்மண:-நற்செய்கையின், பலம் து ஸாத்த்விகம்-பயனே சத்வ இயல்புடைய, நிர்மலம் ஆஹு:-நிர்மலத் தன்மை என்று கூறுவர், ரஜஸ: பலம் து:கம்-ரஜோ குணத்தின் பயன் துன்பம், தமஸ: பலம் அஜ்ஞாநம்-தமோ குணத்தின் பயன் அறிவின்மை.
பொருள் : சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.
தமோகுணத்தினின்று தொழிலின்மையும் தீவினையும் தோன்றுகின்றன. அதனால் மனிதனுக்கு முன்னேற்றம் இல்லை. ஆழ்ந்து செயலில் ஈடுபடும்போது அது துன்பத்தை விளைவிக்கும். ஆனால் அத்துன்பம் வேண்டப்படாததல்ல. துன்பப்படுபவனே தன்னைத் திருத்தியமைக்கிறான். மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துன்பம் பயன்படுவதுபோன்று வேறு எதுவும் பயன்படுவதில்லை. துயரத்தால் தன்னைத் தூயவனாக்குகின்றவன் நற்செயலுக்கு வருகிறான். அப்பொழுது தர்மம் அவன் மூலம் திகழ்கிறது. அதனால் அவன் சத்துவகுணம் எய்துகிறான்; தூயவன் ஆகிறான்.
குணங்களின் பயன் இன்னும் எவ்விதமாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :
17. ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞாநமேவ ச
ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே-சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது, ரஜஸ: லோப ஏவ ச-ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமஸ: ப்ரமாத மோஹௌ ச-தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஜ்ஞாநம் ஏவ பவத:-அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
பொருள் : சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
இதனால்தான் மனிதன் படிப்படியாகக் கீழான குணங்களினின்று மேலான குணங்களுக்குப்போக ஓயாது முயலவேண்டும். மேலும் :
18. ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா:
ஜகந்யகுணவ்ருத்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா:
ஸத்த்வஸ்தா : ஊர்த்வம் கச்சந்தி-சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள், ராஜஸா: மத்யே திஷ்டந்தி-ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள், ஜகந்ய குண வ்ருத்திஸ்தா:-மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க், தாமஸா: அத: கச்சந்தி-தாமஸர் கீழே செல்வர்.
பொருள் : சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.
ஜீவர்கள் மேலான அல்லது கீழான பிறப்பெடுப்பதற்கும் குணவளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. சத்துவகுணம் ஓங்கப்பெற்ற ஒருவன் தெய்வப் பிறப்பும், விவேகம் வைராக்கியம் வாய்க்கப்பெற்ற மானுடப் பிறப்பும் எடுக்கிறான். அவைகளின் வாயிலாக அவன் படிப்படியாகப் பரத்தை நோக்கிச் செல்லுகிறான். ரஜோகுணம் நிறைந்துள்ளவன் கர்மங்கள் பல செய்கின்றானெனினும் விவேகமின்மையால் முன்னேற்றமடைவதில்லை. பிற்போக்கில் போவதுமில்லை. தனக்கு விவேகம் வரும் வரையில் அவன் நெடுங்காலம் வினையாற்றுவதிலேயே கருத்துடையவனாயிருக்கிறான். ஆனால் தமோகுணத்தில் ஆழ்ந்தவனோ படிப்படியாகக் கீழ்மையையே அடைகிறான். கீழ்மையகற்றி மேன்மையடைந்தால் மட்டும் போதுமா? விடை வருகிறது :
19. நாந்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஸ்யதி
குணேப்யஸ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோऽதிகச்சதி
யதா த்ரஷ்டா குணேப்ய:-எப்போது பார்ப்பவன் குணங்களை, அந்யம் கர்தாரம் ந அநுபஸ், யதி-தவிர வேறான ஒன்றை கர்த்தா (செயலை செய்பவன்) என்று பார்ப்பதில்லையோ, குணேப்ய: ச பரம் வேத்தி-குணங்களுக்கு மேலுள்ள பொருளை (பரமாத்மாவை) அறிகிறானோ,
ஸ: மத்பாவம் அதிகச்சதி-அவன் என் இயல்பை அறிவான்.
பொருள் : குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.
மூன்று குணங்களும் பிரகிருதி சொரூபமாதலால் இக்குணங்களுக்குப் புறம்பாகக் கர்மத்துக்குக் கர்த்தா யாருமில்லை. முக்குணங்களே கர்த்தாக்களாகின்றன. இந்திரியங்கள், இந்திரியார்த்தங்கள் எல்லாம் குணத்தினின்று உண்டானவைகள். கீழான குணத்தைக் கடந்து மேலான குணத்துக்கு வருவது ஜீவிதத்தின் லட்சியமாகும். பின்பு சுத்த சத்துவகுணத்தை யடைந்தால் போதுமா? அதற்குமேல் ஒன்றுமில்லையா? உண்டு. முக்குணங்களையும் கடந்து அப்பால் செல்லுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும். முக்குணங்களுக்கு அப்பால் இருக்கிறது பரமாத்மா. அது ஒரு செயலுக்கும் கர்த்தா அல்ல. அது வெறும் சாக்ஷி மாத்திரம். அப்பரமாத்மாவை அறிகிறவன் பரமாத்மாவுக்கு உரியவன் ஆகிறான். இன்னும் பரமாத்மாவின் சொரூபமும் அவனுக்குரியது ஆகிறது.
மனிதனுடைய ஹிருதயத்தில் ஈசுவரன் தோற்றமடைவதன் அடையாளங்கள் யாவை? அருணோதயத்தின் போது தோன்றும் பிரகாசம் சூரியனுடைய உதயத்தைத் தெரிவிக்கின்றது. அது போல, ஈசுவரன் உள்ளத்தில் உதயமாவதற்கு முன்னால், சுயநலம் கருதாத்தன்மை, பரிசுத்தம், சன்மார்க்கம் ஆகிய குணங்கள் உண்டாகின்றன.
பிரம்ம சாக்ஷõத்காரத்தால் வரும் நன்மை யாது? விடை வருகிறது :
20. குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்
ஜந்மம்ருத்யுஜராது:கைர்விமுக்தோऽம்ருதமஸ்நுதே
தேஹீ தேஹஸமுத்பவாந்-உடம்பிலே பிறக்கும், ஏதாந் த்ரீந் குணாந் அதீத்ய-இந்த மூன்று குணங்களையும் கடந்து, ஜந்ம ம்ருத்யு ஜரா து:கை:-பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும், விமுக்த: அம்ருதம் அஸ்நுதே-விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.
பொருள் : உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.
பிரம்ம சொரூபத்தை அடைதல் என்பதன் பொருள் இங்கு விளக்கப்படுகிறது. குணங்களால் ஆகிய உடலில் ஜீவன் வசிக்கிறான். ஆனால் அவன் உடலோடு சம்பந்தப்பட்டவனல்லன். தேகத்துக்குரிய பிறப்பு, இறப்பு, மூப்பு இவைகளால் வரும் துன்பம் ஜீவன் முக்தனுக்குக் கிடையாது. இவ்வுடலில் இருக்கும் பொழுதே அவன் தங்கு தடையற்ற பிரம்மானந்தத்தில் இருக்கிறான். குணாதீதத்தில் அவன் பேரானந்தம் துய்க்கிறான்.
சரீரம் தோன்றியிருக்கிறது. அது மறுபடியும் நசித்துப் போகும். ஆனால் ஆத்மாவுக்கு மட்டும் நாசமே இல்லை.கொட்டைப் பாக்கைப்போல் ஆத்மாவும் உடலும் இருக்கின்றன. பாக்கு முற்றினால் கொட்டை வேறு, மேல்தோல் வேறாகிவிடும்; முற்றாமல் காயாக இருக்கும்போது அப்படிப் பிரித்தெடுப்பது மிகவும் கடினம். ஈசுவர தரிசனம் உண்டான பிறகு ஆத்மா வேறு, சரீரம் வேறு என்ற ஞானம் உதிக்கும்.
இப்பொழுது கேள்வி ஒன்று கேட்பதற்கான சந்தர்ப்பம் உண்டாகிறது. அர்ஜுனன் அதைப் பயன்படுத்துகிறான்.
அர்ஜுந உவாச
21. கைர்லிங்கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ
கிமாசார: கதம் சைதாம்ஸ்த்ரீந்குணாநதிவர்ததே
அர்ஜுந உவாச ப்ரபோ!-அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, ஏதாந் த்ரீந் குணாந் அதீத:-மூன்று குணங்களையும் கடந்தோன், கை: லிங்கை: பவதி-என்ன அடையாள ங்களுடையவன்? ச கிமாசார:-எங்ஙனம் ஒழுகுவான்? கதம் ஏதாந் த்ரீந் குணாந் அதிவர்ததே-இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
மூன்று குணங்களையும் கடந்திருப்பதன் அறிகுறிகள் எவை? கடந்தவன் பிறகு உடல் வாழ்க்கையை எப்படி நடாத்துகிறான்? ஒருவன் முக்குணங்களைக் கடக்க ஆரம்பித்துவிட்டான் என்று எப்படித் தெரிந்துகொள்வது ?
இதுதான் அர்ஜுனனுடைய கேள்வி. இதற்கு விடை வருகிறது :
ஸ்ரீபகவாநுவாச
22. ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்டவ
ந த்வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி
ஸ்ரீபகவாந் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பாண்டவ-பாண்டவா, ப்ரகாஸம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹம் ஏவ-ஒளி, தொழில், மயக்கம் – இவை, ஸம்ப்ரவ்ருத்தாநி-தோன்றும்போது,
ந த்வேஷ்டி-இவற்றைப் பகைத்திடான், நிவ்ருத்தாநி ந காங்க்ஷதி-நீங்கியபோது இவற்றை விரும்பான்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி, தொழில், மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.
சத்துவ குணத்தில் கட்டுண்டிருப்பவன் அறிவையும் இன்பத்தையும் வேண்டுகிறான். சாஸ்திர ஞானப்பற்று மிக வல்லமை வாய்ந்தது. எளிதில் அது மனதைவிட்டு அகலாது. கேள்வியறிவும் இன்பமும் வாய்க்காதவிடத்து ஒருவன் பேராவலோடு அவைகளை நாடுகிறான். சத்துவ குணத்தைக் கடந்து அப்பாற் சென்றவனுக்கு இந்த விருப்பு வெறுப்பு இரண்டும் இல்லை. ரஜோகுணத்தின் வசப்பட்டவன் சும்மா இருக்கமுடியாது. ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். சில கர்மங்களில் அவனுக்கும் பெருவிருப்பம் உண்டாகிறது. வேறு சில கர்மங்களில் தாங்கவொண்ணா வெறுப்பு உண்டாகிறது. நல்ல கர்மம் என்று தனக்குத் தோன்றுவதை அவன் ஆவலோடு செய்கிறான். கெட்ட கர்மம் என்று தோன்றுவதை அவன் சினந்து வெறுக்கிறான். குணத்தைக் கடந்தவனோ மறந்தும் கேடுடைய கர்மம் செய்ய முடியாது. தோட்டியின் வேலையிலிருந்து தேவாராதனை ஈறாக எத்தொழிலையும் அவன் பற்றற்றுச் செய்கிறான். அப்படிச் செய்யத் தொழிலொன்றும் இல்லாது போய்விட்டால் அதனால் துன்பம் ஒன்றும் அவனுக்கில்லை. தமோகுணப் பற்றுடையானுக்குச் சோம்பலிலும் தூக்கத்திலும் விருப்பம். அதற்குப் பங்கம் வந்தால் வெறுப்பு. குணாதீதத்தில் இருப்பவனுக்கு விழிப்பும் உறக்கமும் ஒன்றே. தூய கண்ணாடியின் முன்னிலையில் எது தோன்றினாலும் அதை அது அப்படியே விளக்குகிறது. அக்கண்ணாடியில் ஒன்றும் தோன்றாதிருக்கும்பொழுது கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. அதன் முன்னிலையில் பொருள்களின் தோற்றத்தாலும் மறைவாலும் கண்ணாடிக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. குணாதீதத்தில் சென்றவனது மனத்தகத்து முக்குணங்களின் தோற்றமும் மறைவும் அத்தகைய இடம் பெறுகின்றன. குணங்களின் செயல்களுக்கிடையில் அவன் குணாதீதனாய் இருக்கிறான். அதாவது அவன் யாண்டும் ஸஹஜ நிஷ்டையில் இருக்கிறான்.
ஜீவன் முக்தர்கள் உலகத்தில் வாழ்வது எங்ஙனம்? மீன் கொத்திப் பறவைகளைப்போன்று அவர்கள் உலகில் வாழ்கின்றார்கள். அப்பறவை நீரில் ஆழ முழுகுகிறது என்றாலும் அதன் சிறகுகள் தண்ணீரால் நனைவதில்லை. இரண்டொரு துளி நீர் ஒட்டிக் கொண்டிருக்குமானால், சரீரத்தை அசைத்துச் சுலபமாக அதனை நீக்கிவிடுகிறது.
இது அர்ஜுனனுடைய முதற்கேள்விக்கு விடை :
23. உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே
குணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்டதி நேங்கதே
ய: உதாஸீநவத் ஆஸீந:-புறக்கணித்தான் போலே இருப்பான், குணை: ந விசால்யதே-குணங்களால் சலிப்படையான், குணா: ஏவ வர்தந்தே இதி-குணங்கள் சுழல்கின்றன என்று, ய: அவதிஷ்டதி-எவன் எண்ணி இருக்கிறானோ, ந இங்கதே-அவன் அதிலிருந்து நிலை குலைவதில்லை.
பொருள் : புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். குணங்கள் சுழல்கின்றன என்றெண்ணி அசைவற்று நிற்பான்.
மலையில் உள்ள மரம் செடி கொடிகளெல்லாம் அசைந்தாலும் மலை அசைவதில்லை. அங்ஙனம் ஆத்மாவைச் சார்ந்துள்ள குணங்களெல்லாம் அசைந்தாலும் ஆத்மா அசைவதில்லை. உதாசீனன் அல்லது ஒரு பக்ஷமும் சாராதவனாய் குணாதீதத்தில் சென்ற ஞானி நடுவு நிற்கின்றான். மேலும் :
24. ஸமது:கஸுக: ஸ்வஸ்த: ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந:
துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம்ஸ்துதி:
ஸ்வஸ்த: ஸமது:கஸுக:-தன்னிலை உணர்ந்து நிற்பவன் துன்பத்தையும் இன்பத்தையும் நிகராக கொண்டவன், ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந:-ஓட்டையும், கல்லையும், பொன்னையும், சமமாக காண்பவன், ப்ரிய அப்ரிய: துல்ய தீர:-இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன், துல்ய நிந்தா ஆத்ம ஸம்ஸ்துதி:-இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.
பொருள் : துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்; ஓட்டையும், கல்லையும், பொன்னையும், நிகராகக் காண்பான்; இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்.
தன் உடலாக வடிவெடுத்திருப்பதும் குணங்கள்; புறவுலகாக வடிவெடுத்திருப்பதும் குணங்கள். இங்ஙனம் குணங்கள் குணங்களோடு விதவிதமாகச் சம்பந்தப்பட்டிருக்கையில் ஆத்ம சொரூபத்தை முற்றும் அறிந்துள்ள ஞானி ஆத்ம திருப்தனாக, குணாதீதனாக இருக்கிறான்.
25. மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ:
ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத: ஸ உச்யதே
மாநாபமாநயோ: துல்ய:-மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான், மித்ரா அரிபக்ஷயோ: துல்ய:-நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான், ஸர்வாரம்பபரித்யாகீ-எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், ஸ: குணாதீத: உச்யதே -அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.
பொருள் : மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எல்லாவிதத் தொழிலெடுப்புகளையுந் துறந்தான், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.
குணங்களில் கட்டுண்டு அக்ஞானத்தில் இருப்பவர்களுக்கு மானம், அவமானம், நட்பு, பகை முதலியன உண்டு. ஜீவபோதம் இருப்பதால் தனக்கெனத் தொழில் புரிதலும் உண்டு. குணங்களைக் கடந்த நிறை ஞானிக்கு இவையொன்றுமில்லை. இந்த மூன்று சுலோகங்களும் அர்ஜுனனுடைய இரண்டாவது கேள்விக்கு விடையாக வந்துள்ளன.
எந்த உபாயத்தைக் கையாண்டு ஞானி மூன்று குணங்களையும் கடக்கிறான் என்ற கேள்விக்கு இனி விடை வருகிறது :
26. மாம் ச யோऽவ்யபிசாரேண பக்தியோகேந ஸேவதே
ஸ குணாந்ஸமதீத்யைதாந்ப்ரஹ்மபூயாய கல்பதே
ச ய: அவ்யபிசாரேண-மேலும் எவன் வேறுபாடில்லாத, பக்தியோகேந மாம் ஸேவதே-பக்தியோகத்தால் என்னை வழிபடுகிறானோ, ஸ: ஏதாந் குணாந் ஸமதீத்ய-அவன் இந்த குணங்களைக் கடந்து, ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.
பொருள் : வேறுபாடில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.
பரம பிரேமை சொரூபமாயிருக்கிற பக்தி யோகத்தால் யார் ஒருவன் அனைத்தையும் நாராயண சொரூபமாகக் கருதி அந்தர்முக திருஷ்டியில் ஆத்மானு சந்தானம் செய்துகொண்டே இருக்கிறானோ அவன் பிரம்ம சொரூபம் ஆகிறான். வெளிச்சம் வர இருள் இருக்குமிடம் தெரியாது மறைவதுபோன்று பிரம்ம சாக்ஷõத்காரத்தில் திரிகுணத்தைக் கடத்தல் மிக எளிதாகிறது.
பக்தனுக்கு ஈசுவரன் பல்வேறு உருவங்களில் தோன்றுகிறான், ஆனால் சமாதியில் பிரம்மஞானத்தை அடைந்தவனுக்கு அவன் அகண்ட நிராகார நிர்க்குணப் பிரம்மமாக இருக்கின்றான். இதில் தான் ஞானமும் பக்தியும் ஸமரஸப்படுகின்றன.
முக்குணங்களைக் கடக்க பக்தியைத் தவிர வேறு மார்க்கங்கள் இல்லையா? விடை வருகிறது :
27. ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச
ஸாஸ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச
ஹி அவ்யயஸ்ய ப்ரஹ்மண: ச-ஏனெனில் அழிவற்றதான பிரம்மத்துக்கும், அம்ருதஸ்ய -சாவற நிலைக்கும், ஸாஸ்வதஸ்ய தர்மஸ்ய ச-என்றும் இயலும் அறத்துக்கும், ஐகாந்திகஸ்ய ஸுகஸ்ய-தனிமையின்பத்துக்கும், அஹம் ப்ரதிஷ்டா-நானே உறைவிடம்.
பொருள் : சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம்.
நான்கு யோகங்களும் இங்கு சமரசம் அடைகின்றன. முன் சுலோகத்தில் பக்தியும் அதன் மூலம் அடையப்படும் சகுண பிரம்மமும் விளக்கப்பட்டன. அழியாத மோக்ஷநிலையாகிய நிர்க்குண பிரம்மம் ஞானத்தின் மூலம் அடையப்படுகிறது. கர்மயோகத்தின் மூலம் பகவத் கைங்கரியம் செய்து சாசுவதமான தர்மம் அடையப்பெறுகிறது. பின்பு ராஜயோகத்தின் மூலம் அமிர்ததாரையினின்று உதிக்கும் ஒப்பற்ற சுகம் அடையப்பெறுகிறது. ஆக, இந்த நான்கு யோகங்களும் குணாதீதத்துக்குச் செல்ல உற்ற உபாயங்களாகின்றன. இந்த நான்கு யோகங்களும் சேர்ந்தே கையாளப்படவேண்டும். அவைகளை அப்படி அனுஷ்டிக்கின்றவன் குணங்களைக் கடந்துகொண்டிருப்பவன் ஆகிறான். இது கடைசிக் கேள்விக்கு விடையாகிறது.
ஒரு மனிதன் ஒரு காட்டு வழியே போய்க்கொண்டிருந்தான். வழியில் மூன்று திருடர்கள் அவனை மடக்கிப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் இருந்த பொருள்கள் எல்லாவற்றையும் அவர்கள் பிடுங்கிக்கொண்டனர். அப்பால் முதல் திருடன் இவனை உயிருடன் வைத்திருப்பதில் என்ன லாபம்? என்று சொல்லித் தன் கத்தியை உருவி அவனை வெட்டப் போனான். அப்போது இரண்டாவது திருடன் இவனைக் கொல்வதால் லாபம் என்ன? கை கால்களைக் கட்டி ஒரு பக்கத்தில் போட்டுவிட்டுப்போகலாம், என்றான். உடனே அவர்கள் அப்படியே செய்து சாலையின் பக்கத்தில் அவனைப் போட்டுவிட்டுச் சென்றனர். அவர்கள் கொஞ்சதூரம் சென்றதும் மூன்றாவது திருடன் திரும்பி அவனிடம் வந்து, அப்பா, உனக்கு நோகிறதா? நான் உன் கட்டுகளை அவிழ்த்து, உன்னை விடுதலை செய்கிறேன், இரு என்று சொல்லிக் கட்டுகளை அவிழ்த்துவிட்டு என்னுடன் வா; வழியைக் காட்டுகிறேன் என்று வெகுதூரம் அழைத்துக்கொண்டு போனான். அப்பால் அவன், அதோ பார்; உன் வீடு தெரிகிறது, இந்த வழியே போவாயானால் சீக்கிரம் வீடுபோய்ச் சேருவாய் என்றான். இதைக் கேட்டதும் வழிப்போக்கன் நன்றியறிவுடன், அப்பா, நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். என்னுடன் கூட என் வீட்டுக்கு வரக்கூடாதா? என்று கேட்டான். அதற்குத் திருடன், நான் வரக்கூடாது. போலீஸார் வந்து என்னைப்பிடித்துக் கொள்வார்கள், என்று சொல்லிப் போய்விட்டான்.
இந்த உலகந்தான் அந்தக் காடு; ஸத்வ, ரஜஸ், தமோகுணங்கள் மேற்கூறிய மூன்று திருடர்கள். ஜீவன்தான் காட்டுவழியே போன பிரயாணி. ஆத்ம ஞானம் அவனிடம் இருந்த பொருள். தமோகுணமும் ரஜோகுணமும் உலக பந்தங்களாகிய சங்கிலியால் அவனைக் கட்டுகின்றன. உலக பந்தங்களிலிருந்து அவனை ஸத்துவ குணம் காப்பாற்றுகின்றது. ஸத்துவகுணத்தைச் சரணமடையும் ஜீவன் தமோ ரஜோகுணங்களின் பயன்களாகிய காமக்குரோதாதி மாயைகளினின்றும் விடுதலையடைகின்றது. உலக பந்தங்களினின்றும் ஜீவனைக் கரையேற்றுவது அந்த ஸத்துவகுணந்தான் என்றாலும் அந்த ஸத்துவகுணமும் ஒரு திருடனே. பரமபதத்துக்குச் செல்லும் வழிவரையில் ஒருவனை அது அழைத்துவந்து, அதோ உன் வீட்டைப்பார், என்று சொல்லிவிட்டு மறைந்துபோகிறது. ஸத்துவகுணமும் பரம பதத்தினருகே செல்லாது.
-
பதினைந்தாம் அத்தியாயம்
புரு÷ஷாத்தம யோகம்
பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புரு÷ஷாத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து, முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பது போல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது.
இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.
ஸம்ஸார விருக்ஷம் 1-2 -மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 -எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 -பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 -ஜீவதத்துவ விளக்கம் 7-9 -ஞானக்கண் 10-11 -பரமாத்மனது சொரூபம் 12-15 -ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.
ஸ்ரீபகவாநுவாச
1. ஊர்த்வமூலமத:ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ஊர்த்வமூலம்-மேலே வேர்கள், அத:ஸாகம் - கீழே கிளை, அஸ்வத்தம்-அரச மரம, அவ்யயம்-அழியாதது, ப்ராஹு-என்று கூறுவார்கள், யஸ்ய சந்தாம்ஸி பர்ணாநி-எந்த (அரச மரத்திற்கு) வேதங்களே கிளைகளோ, தம்-சம்சாரம் என்ற அந்த அரசமரத்தை, ய: வேத-எவர் அறிகிறாரோ, ஸ: வேதவித்-அவனே வேத மறிவோன்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.
அச்வத்தம் என்பது அரசமரம். ஈண்டு அது ஆலமரம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அரசமரம் ஆலமரம் இவையிரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவைகள்; ஆலமரம் உபமானத்துக்கு முற்றிலும் பொருத்தமுடையதாகிறது. ஆலம் விழுது மற்ற வேர்களுக்கு நேர் மாறாக வேலைசெய்கிறது. வேர் கீழே பூமியில் சத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்கிறது. ஆலம் விழுதோ மேலே கிளையில் சத்தை வாங்கிக்கொண்டு கீழ் நோக்கி வருகிறது. அச்வத்தம் என்னும் சொல்லுக்குப் பொருள் ஒருநாள் இருப்பது போன்று அடுத்தநாள் அது இருப்பதில்லை என்பதாகிறது. ஸம்ஸாரமாகிய ஜகத் அத்தகையது. ஆலம் விழுது மேலே சத்தை வாங்கிக்கொண்டு கீழே இறங்கி வருவது போன்று மாயப்பிரபஞ்சம் மேலே பரம்பொருளிடத்திருந்து சத்தை வாங்கிக்கொண்டு கீழே பிரகிருதியாகப் பரிணமித்து வருகிறது. தோன்றாநிலையில் சக்தி பிரம்மத்துக்கு அபின்னமாயிருக்கிறது. பிரம்மம் இருக்கும்வரை சக்தியும் இருக்கிறது. ஆகையால் ஸம்ஸாரத்துக்கு அது முடிவற்ற முதற்காரணமாகிறது. அச்சக்தி மூல பிரகிருதியாக, மஹத் தத்துவமாக, அகங்கார தத்துவமாக இப்படியெல்லாம் கிளைகளாகக் கீழே பிரிந்து வருகிறது. கீழே வரவர அது ஸ்தூலமாகப் பரிணமிக்கிறது.
பிரபஞ்சம் முழுதும் அந்த அரசமரத்தோடு ஒப்பிடப்படுகிறது. இலைகள் இல்லாவிட்டால் மரம் உருப்படாது. அங்ஙனம் இயற்கையை உருப்படுத்தி வைத்திருப்பது வேதம். இவ்வுலக சம்பந்தமான அறிவைப் புகட்டுகின்ற நூல்கள் அனைத்தும் சேர்ந்து வேதம் எனப் பொருள்படுகிறது. பண்டை நான்மறை மட்டும் வேதமல்ல. நவீன ரசாயன சாஸ்திரம், இயற்கை நூல் ஆகிய அனைத்தும், எல்லா மொழிகளும் எல்லா மொழிகளிலுள்ள நூல்களும் சேர்ந்து வேதம் எனப்படுகின்றது. நலம், கேடு ஆகிய இரண்டையும் பெறுதற்கான வழிகளை வேதம் விளக்குகிறது. பிரம்ம ஞானம் அடையும் வரையில் இப்பிரபஞ்ச வாழ்க்கைக்கு முடிவில்லை. அது நீடூழி நிலைத்திருக்கிறது. அக் காரணத்தை முன்னிட்டே அது அவ்யயம் அல்லது அழிவற்றது எனப்படுகிறது. எழுதிவைத்த நூலைப் படிப்பவன் வேதவித்து ஆகான்; பிரபஞ்ச நடைமுறையை உள்ளபடி அறிந்துகொள்பவன் வேதத்தை அறிபவன் ஆகின்றான். நல்லறிவு பெற முயலுபவனுக்கு மொழியினுடைய துணையைவிட இயற்கையின் நடைமுறையின் துணை மிகவும் முக்கியமானது.
ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்திலிருக்கும் போது உருத்தெரியாத ஹோ என்ற சப்தத்தை மட்டும் கேட்கிறான். ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக்கிழங்குக்கும் மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் இம்மாதிரியாக மனிதர்கள் பேரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாகக் கேட்கிறான். ஒருவன் ஈசுவரனிடமிருந்து வெகு தூரத்துக்கு அப்பாலிருக்கும் வரையில் அவன் குழப்பத்திலும் காரண காரிய வாதப்பிரதிவாத அமளியிலுமே இருப்பான். ஆனால் அவன் ஈசுவரனை நெருங்குங்கால் காரண காரிய வாதம், வாதப் பிரதி வாதம் எல்லாம் நின்றொழிகின்றன. தெய்விக ரகஸ்யங்களெல்லாவற்றையும் வெகு தெளிவாயும் ஸ்பஷ்டமாயும் அறிந்துகொள்கிறான்.
முக்குணமயமாகப் பிரகிருதி இருப்பதும் முக்குணத்தைக் கடந்து அப்பால் பரமாத்மா இருப்பதும் பதினான்காவது அத்தியாயம் விளக்கியது. இந்த அத்தியாயம், அந்தப் பரமாத்மாவிடத்திருந்து இப்பிரபஞ்சம் கிளையாகக் கீழே இறங்கிவந்திருக்கிறது என்று விளக்குகிறது. அம்பிகை துர்க்காதேவியின் வடிவு இந்த இரண்டு அத்தியாயங்களின் கருத்துக்களை நன்கு விளக்குகிறது. தரையின் மீது கன்னங்கரேலென்று நிற்கிற மஹிஷாசுரனை அம்பிகை மர்த்தனம் புரிகின்றாள். அவள் சிங்கத்தின்மீது உயர நின்றுகொண்டிருக்கிறாள். மஞ்சள் மேனியுடைய அவள் சிவப்பு வஸ்திரம் அணிந்திருக்கிறாள். ஆயுதங்கள் பல கையாளுகின்றாள். மஹிஷாசுரன் தமோகுணத்தின் பிரதிநிதியாகவும், துர்க்கை ரஜோகுணத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள். அம்பிகையின் தலைக்குமேல் சதாசிவம் தூவெண் வடிவெடுத்து ஆழ்ந்து ஆத்ம நிஷ்டையிலிருக்கிறார். அவரது வெண்ணிறம் சத்துவகுணத்தைக் காட்டுகிறது. அவர் தன்னில் தானாயிருப்பது பரதத்துவத்தை விளக்குகிறது. உருவமில்லாத அவரிடத்திருந்து சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள் மூன்று வடிவெடுத்து ஒன்றன் கீழ் ஒன்றாக வருகின்றன. மேலே போகப் போகக் கர்மத்தின் போராட்டம் குறைகிறது. கீழே எல்லாம் ஒரே அமளி என்பதை அம்பிகையும் மஹிஷாசுரனும் புரியும் போர் விளக்குகிறது. அக்கருத்தை அடுத்த சுலோகம் தெளிவுபடுத்துகிறது.
2. அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸாகா
குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:
அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி
கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே
தஸ்ய குணப்ரவ்ருத்தா-(சம்சாரமென்னும் அந்த மரத்தின்) அதன் கிளைகள் குணங்களால், விஷயப்ரவாலா:-(புலன் நுகர் போகப் பொருட்கள் என்னும்) விஷயத் தளிர்களுடன் கூடிய,
ஸாகா:-தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள், அத: ஊர்த்வம் ச ப்ரஸ்ருதா:-கீழும் மேலுமாக பரவியுள்ளன, மநுஷ்யலோகே கர்ம அநுபந்தீநி-மனித உலகில் கர்ம பிணைப்புகளாக, மூலாநி-அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும், அத ச-கீழும் (மேலும்) ஆக, அநுஸந்ததாநி-(எல்லா உலகங்களிலும்) பரவி உள்ளன.
பொருள் : அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.
சம்சாரமாகிய இப் பிரபஞ்சத்துக்கு அரசமரமே மேலும் தகுந்த உபமானமாக அமைகிறது. அதன் கிளைகள் மேலும் கீழும் நாலாபக்கமும் பரவியிருக்கின்றன. இப் பிரபஞ்சம் என்ற மரத்துக்கு மிக மேலானதாக இருக்கும் கிளை பிரம்மாவும் பிரம்ம லோகமுமாம். கீழான கிளை மானுடலோகமும் மற்றுமுள்ள அஃறிணை உயிர்களுமாம். ஞானத்துக்கு ஏற்ப மேலான பிறவியும், வெறும் கர்மத்துக்கு ஏற்பக் கீழான பிறவியும், ஞானமும் கர்மமும் கலந்திருப்பதற்கேற்ப நடுத்தரமான மானுடப்பிறவி போன்றவையும் அமைகின்றன. கிளைகளுள் சாரமிருந்தால்தான் அவைகள் தளிர்விடும். இந்திரியங்கள் வாயிலாக இந்தியார்த்தங்களில் உழல்வது இந்த சம்சாரத்துக்குத் தளிர்களாகின்றன. இந்தக் குணங்கள் இருக்கும் வரை கிளைகள் தளிர்த்துக்கொண்டேயிருக்கும்.
ஒரு மரத்துக்கு இரண்டுவிதமான வேர்களிருக்கின்றன. ஒன்று ஆணிவேர்; மற்றவைகள் சல்லிவேர்; மாயாஸஹிதனாகிய ஈசுவரனிடத்திருந்து ஜகத் கீழே வந்திருப்பதால் ஈசுவரன் இந்த அசுவத்தத்துக்கு மேலே உள்ள ஆணிவேர். பூவுலகில் விதவிதமான கர்மங்களாகப் பரிணமித்து வருவது சல்லிவேர்கள். சல்லி வேர்களை இடையிடையே களைவதால் மரம் பண்படுகிறது. அங்ஙனம் பூவுலகில் கர்மங்களைச் செப்பனிடுவதால் மனிதன் திருந்தியமைகின்றான். அவனுடைய இயல்பை மாற்றுதற்குக் கர்மம் பயன்படுகிறது. நல்லியல்பில் அல்லது கெட்ட இயல்பில் பந்தப்படுத்தி மனிதனைப் பிறப்பு இறப்பு மயமான பூவுலகில் பிடித்து வைத்திருப்பதும் கர்மம் என்கின்ற வேர். இது ஜீவர்கள் எல்லார்க்கும் பொதுவானதால் வேர் எங்கும் பரவியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
3. ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே
நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா
அஸ்வத்தமேநம் ஸுவிரூடமூலம
ஸங்கஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா
அஸ்ய ரூபம் ததா-இந்த மரத்தின் உருவத்தைப் போல, இஹ ந உபலப்யதே-இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை, ந அந்த: ந ஆதி ச ந ஸம்ப்ரதிஷ்டா-முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை, ஸுவிரூடமூலம் ஏநம் அஸ்வத்தம்-அஹங்காரம், மமகாரம், முற்பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை, த்ருடேந அஸங்கஸஸ்த்ரேண சித்த்வா-பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு.
பொருள் : ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப்பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,
இப்படி ஈண்டு இயம்பப்பட்ட பிரபஞ்சம் என்ற அசுவத்த மரத்துக்கு நிலைத்த வடிவம் ஒன்றுமில்லை. அதனிடத்து நாம் ஒரு வடிவத்தைக் காணுமுன்பு அது இன்னொரு வடிவெடுத்துவிடுகிறது. பார்க்கும்பொழுதெல்லாம் அதற்குப் புதியதொரு வடிவம் வருகிறது. நிலைத்த சொந்த வடிவம் ஒன்று அதற்கில்லை. இது எப்பொழுது ஆரம்பித்ததென்று யாருக்கும் தெரியாது. இதற்கு முடிவு ஏதேனும் உண்டா? பிரம்மஞானம் அடைந்தவனுக்கு இது முடிவடைகிறது. மற்றவர்களுக்கு இது முடிவில்லாததாயிருக்கிறது. துவக்கமும் முடிவும் காட்டாத இது இடையில் எப்படி இருக்கிறது? இதன் இருப்பு எத்தகையது? - இதுவும் விளங்குவதில்லை. ஆக, இதை முழுதும் விளக்க யாரே வல்லவர்! மரத்தை வெட்டுதற்குக் கோடரி வேண்டும். அங்ஙனம் மாயா காரியமாகிய பிரபஞ்ச வாழ்க்கை என்ற மரத்தை வெட்டுதற்குப் பற்றின்மை அல்லது வைராக்கியம் என்ற வாள் ஒன்றே தகுந்தது. பற்றின்மை எவ்வளவு வலியதோ அவ்வளவு விரைவில் சம்சார விருக்ஷம் வெட்டப்படும்.
வண்ணாத்திப் புழு, தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. அதுபோல உலகப்பற்றுள்ள ஆத்மா அதனுடைய ஆசைகளாகிய வலையில் சிக்கிக்கொள்கிறது. ஆனால் அந்தப் புழு ஓர் அழகிய வண்ணாத்திப் பூச்சியாகப் பரிணமிக்கும்போது, கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்து வெளிச்சத்தையும் காற்றையும் ஆனந்தமாய் அனுபவிக்கிறது. அதுபோல விவேகம் வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால், உலகப்பற்றில் உழலும் ஆத்மாவானது மாயையாகிய வலையைக் கிழித்துக்கொண்டு வெளிப்படக்கூடும்.
4. தத: பதம் தத்பரிமார்கிதவ்யம்
யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ
தத: யஸ்மிந் கதா பூய: ந நிவர்தந்தி-அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, தத் பதம் பரிமார்கிதவ்யம்-அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்,
ச யத: புராணீ-மேலும் எதனிடமிருந்து பழமையான, ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா-சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ, தம் ஏவ ஆத்யம் புருஷம்-அந்த ஆதி புருஷனையே,
ப்ரபத்யே-சரணம் அடைகிறேன்.
பொருள் : அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத முடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.
உலகப்பற்று அறவே நீங்குவது எதிர்மறைச் செயல். அது மட்டும் போதாது. பிறகு அது உடன்பாட்டுச் செயலாக மாறவேண்டும். பிரம்ம பதத்தை ஆவலோடு தேடுதல் அவசியமாகிறது. பிரபஞ்ச வாழ்க்கைக்கும் பிரம்மபதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒன்று பிறவிப் பெருங்கடலாகப் பரிணமிக்கின்றது. மற்றொன்று பிறப்பு இறப்பைக் கடந்த பெருநிலை. அது முழுமுதற் பொருள் என்றும் ஆதி புருஷன் என்றும் அழைக்கப்படுகிறது. அது அகண்ட சச்சிதானந்த வஸ்து. கடலினின்று மேகம் வருவது போன்று கர்ம சொரூபமாயுள்ள தொல்லுலகம் அப்பரம புருஷனிடத்திருந்து வந்துள்ளது. அத்தொல்லுலகம் தோன்றுவதாலும் பரம புருஷனுக்கு லாப நஷ்டம் ஒன்றுமில்லை. கானலினின்று கானல் நீர் தோன்றுவதுபோன்று அவனிடத்து உலகம் தோன்றி ஒடுங்குகிறது. அந்த ஆதி புருஷனிடத்து அடைக்கலம் புகுதலே சம்சார விருக்ஷம் திரும்பவும் தழையா திருக்கும்படி செய்தற்கு உற்ற உபாயம்.
கண்டுபிடிக்கப்பட்டதும் திருடன் ஓடிப்போகிறான். அதுபோல மாயையின் சுபாவம் இன்னதென்று நீ ஆராய்ந்து கண்டு பிடிக்குமிடத்து, அது உன்னிடமிருந்து ஓடிப்போகிறது.
பற்று நீங்கிப் பரத்தைச் சார்ந்திருப்பது இனித் தெளிவுபட விளக்கப்படுகிறது :
5. நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா
அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞைர்
கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத்
நிர்மாநமோஹா-செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள், ஜிதஸங்கதோஷா-பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள், அத்யாத்மநித்யா-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விநிவ்ருத்தகாமா:-விருப்பங்களினின்றும் நீங்கியோர், ஸுகது:கஸம்ஜ்ஞை: த்வந்த்வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், அமூடா:-மடமையற்றோர், தத் அவ்யயம் பதம் கச்சந்தி-அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.
பொருள் : செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர், இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.
மனத்தகத்து அமைந்துள்ள மாசுகளெல்லாம் நீங்கப்பெறுதல் ஒரு புறம். தீவிரமாகப் பரமாத்மாவிடத்து நாட்டம் கொள்ளுதல் மற்றொரு புறம். ஒரு சாதகனிடத்து இந்த இரண்டு பாங்குகளும் சேர்ந்து அமைகின்றவளவு அவன் விரைந்து பரிபக்குவமடைகிறான். முற்றிலும் பரிபக்குவம் அடைந்தவனுக்குக் கேடு என்பது இல்லை.
பந்தப்பட்ட ஆத்மா மனுஷ்யனாகும்; மாயையாகிய சங்கிலியில் கட்டுப்படாத ஆத்மா ஈசுவரனாகும்.
6. ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக:
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம
யத் கத்வா-எதை அடைந்த பிறகு, ந நிவர்தந்தே-திரும்பி வருவதில்லையோ, தத் ஸூர்யோ ந பாஸயதே-அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை, ந ஸஸாங்க: ந பாவக:-சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை, தத் மம பரமம் தாம-அதுவே என் மேலான வீடு (பரம பதம்).
பொருள் : அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.
கடலினுள் பாய்ந்த நதி கடலாகிறது. அங்ஙனம் பரத்தைச் சார்ந்த மனிதன் பரவெளியில் ஒன்றுபடுகிறான். அதுவே சித் ஆகாசம் எனப்படுகிறது. இருட்டறையில் உட்கார்ந்திருக்கும் ஒருவனுக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கிறது. இந்த உணர்வை சூரிய வெளிச்சம் விளக்குமா? விளக்காது. அப்படியே சந்திரனும், தீயும் அதை விளக்கமாட்டா. இருக்கிறேன் என்ற உணர்வை அந்த உணர்வே விளக்குகிறது. அந்த உணர்வு அல்லது பிரக்ஞை யாண்டும் நிலைத்துள்ளது. அது தெளிவடைந்த நிலையே பரமபதம் எனப்படுகிறது. தெளிவடைந்த பிறகு அது அகண்டாகாரமாய் விரிகிறது. அதன்கண் போக்குவரத்து இல்லை; பிறப்பு இறப்பு இல்லை. கால தேச வர்த்தமானம் எல்லாம் அதனுள் ஒடுங்கி மறைகின்றன. இப் பரவெளியில் கலக்கின்ற ஜீவன் முக்தர்கள் திரும்பவும் ஜீவபோதத்துக்கு வருகிறதில்லை.
கற்பூரத்தைக் கொளுத்திவைத்தால் மிகுதி யொன்றுமிருப்பதில்லை. பகுத்தறிவு (விவேகம்) ஒழிந்து; மகோன்னதமான ஸமாதி நிலையைப் பெற்றால், அப்பொழுது நான் என்பதும் நீ என்பதும் உலகமென்பதும் இரா. ஏனென்றால் இந்த மனமும் மமகாரமும் விசுத்தப் பிரம்மத்தில் ஒன்றாய்க் கலந்துவிடுகின்றன.
ஜீவாத்மாவானது பரமாத்மாவுக்குப் புறம்பானதாயிருந்து பிறகு பிரம்மஞானத்தால் அதற்குரியதாகின்றதா? விடை வருகிறது :
7. மமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி
ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா, மம அம்ஸ ஏவ-எனது அம்சமே! ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள, மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும் கர்ஷதி-ஈர்க்கிறது.
பொருள் : எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.
ஸநாதன - எக்காலத்தும் என்று சொல்லுவதன் கருத்து அது ஜீவனாக இருக்கும்பொழுதும் பரமாத்மாவுக்கு உரியதே. பரமாத்மாவுக்கு வேறாக இருந்து பிறகு அதில் கலத்தல் என்பதல்ல. அறியாமையினால் பிரகிருதியில் தன்னைக் கட்டுண்டவனாக நினைத்துக்கொள்பவன் ஜீவாத்மா. பிரகிருதியின் சேர்க்கையாலே அவனுக்கு இந்திரியங்கள் உண்டாகின்றன. அந்நிலையில் ஜீவன் போகியென்று அழைக்கப்படுகிறான். போகியாக போகத்தில் கட்டுண்டிருப்பவர்களெல்லாம் ஜீவலோகத்திலிருப்பவர்களே. இந்திரிய நிக்கிரகம் செய்கின்றபொழுது ஒருவன் யோகியாகின்றான். புலனடக்கத்துக்கு ஏற்றவாறு அவன் பரத்தைச் சார்ந்தவனாகிறான்.
ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்வுக்குத் தகுந்த உபமானம் ஒன்று சொல்லலாம். பானைக்குள் உள்ள வெளி கடாகாசம் எனப்படுகிறது; பரந்து எங்கும் நிறைந்துள்ள வெளி மஹாகாசம் எனப்படுகிறது. கடாகாசம் எப்பொழுதும் மஹாகாசத்துக்குள்ளேயே இருக்கிறது. பானையை உடைப்பதால் அதற்குள் உள்ள ஆகாசத்துக்கு ஒரு கேடும் வருவதில்லை. கடாகாசம் என்ற பெயர் தரித்திருக்கும்பொழுதும் அது மஹாகாசமே.
பிரகிருதியோடு வைத்த தொடர்வால் ஜீவன் கர்த்தாவென்றும் போக்தாவென்றும் சொல்லப்படுகிறான். கர்த்தா போக்தா வென்ற உபாதியை நீக்கிவிட்டால் ஆத்மாவின் எதார்த்த நிலை வந்தமைகிறது. ஜீவாத்மாவாக இருக்கும்போது அது பரமாத்மாவின் அம்சம். ஜீவபோதம் அற்றுப்போனால் எஞ்சியிருப்பது பரமாத்மாவே.
ஜீவனின் உண்மை ஸ்வபாவம் சச்சிதானந்தமே. இவ்வளவு உபாதிகள் எல்லாம் அகங்காரத்தினால் உண்டாயின. ஆதலால் ஜீவனுக்குத் தன் உண்மை சுபாவமே மறந்துபோயிற்று.
ஜீவன் உபாதியைப் பெறும் விதம் எப்படி? விடை வருகிறது :
8. ஸரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்வர:
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தாநிவாஸயாத்
வாயு: ஆஸயாத் கந்தாந் இவ-காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல, ஈஸ்வர: அபி-உடலை ஆளும் ஜீவாத்மாவும், யத் உத்க்ராமதி - எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ, ஏதாநி ச க்ருஹித்வா-மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு, யத் ஸரீரம் அவாப்நோதி ஸம்யாதி-எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்.
பொருள் : கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன், யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.
உடலை ஆளும் தன்மையுடையவனாதலால் ஜீவன் இங்கு ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறான். காற்று தன்னளவில் ஒரு வித மணமும் இல்லாதது. புஷ்பத்தோடு வைக்கிற சேர்க்கையால் அதற்கு மணம் உண்டாகிறது. அந்த மணத்தைப் பிறகு சிறிது சிறிதாக நீக்கவும் அதற்கு இயலும். ஜீவன் பிரகிருதியோடு வைக்கிற தொடர்வால் உபாதியுடையவனாகிறான். பிரகிருதியினிடத்துப் பற்று நீங்குகிறவளவு ஜீவன் சுத்த சைதன்யமாகிறான். ஆனால் பிரகிருதியில் பற்று வைத்திருக்கிறவளவு ஜாலவித்தைக்காரன் போன்று அவன் நடந்துகொள்கிறான். ஓரிடத்தில் தன்னுடைய சாமான்களையெல்லாம் விரித்துவைத்து வேடிக்கை பண்ணுகிறான். பிறகு அவைகளையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு இன்னோர் ஊருக்குப் போகிறான். அங்ஙனம் ஜீவன் மனதையும் இந்திரியங்களையும் பிறக்கும்பொழுது விரிக்கிறான்; சாகும்பொழுது ஒடுக்குகிறான்.
இந்திரியங்களைக்கொண்டு ஜீவன் என்ன செய்கிறான்? விடை வருகிறது :
9. ஸ்ரோத்ரம் சக்ஷú: ஸ்பர்ஸநம் ச ரஸநம் க்ராணமேவ ச
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுபஸேவதே
அயம் ஸ்ரோத்ரம் சக்ஷú: ச-கேட்டல், காண்டல், ஸ்பர்ஸநம் ரஸநம் க்ராணம் மந: ச-தீண்டுதல், சுவை, மோப்பு, மனம், அதிஷ்டாய ஏவ-இவற்றில் நிலைகொண்டு, விஷயாந் உபஸேவதே-ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.
பொருள் : கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.
ஐம்பொறிகளும் ஐந்துவித ஜன்னல்கள் ஆகின்றன. ஜன்னல் இல்லாத வீட்டுக்குள் ஒருவனை அடைத்து வைத்துவிட்டால் வெளியுலகோடு அவன் தொடர்வு வைக்க முடியாது. காற்றும் வெளிச்சமும் நீரும் உணவுமில்லாவிடில் அவன் செத்துப் போவான். ஐம்பொறிகள் ஐந்து பூதங்களோடு தொடர்வு வைக்க உதவுகின்றன. ஆகாசத்தின் தன்மாத்திரையாகிய ஓசையைக் கேட்கக் காது உதவுகிறது. அக்னியின் தன்மாத்திரையாகிய வடிவத்தைக் காணக் கண் உதவுகிறது. வாயுவின் தன் மாத்திரையாகிய ஊறு அல்லது ஸ்பரிசத்தை உணர்தற்கு உடல் உதவுகிறது. நீரின் நீர்மையாகிய சுவையை அறிய நாவு உதவுகிறது. நிலத்தின் பாங்காகிய நாற்றத்தைப் பெற நாசி பயன்படுகிறது. மனதோ இவ் ஐந்துக்கும் பொது. உடல் என்னும் கோட்டைக்குள் இருக்கும் ஜீவனானவன் ஐம்பொறிகளின் வகை தெரிந்துகொள்ளுதற்கு மனம் என்னும் கருவியே பாலம்போன்று அமைந்துள்ளது. வெளியுலகினின்று இன்பதுன்ப மயமான செய்திகள் அவனுக்கு இங்ஙனம் எட்டுகின்றன.
10. உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்
விமூடா நாநுபஸ்யந்தி பஸ்யந்தி ஜ்ஞாநசக்ஷúஷ:
உத்க்ராமந்தம் வா-அவன் புறப்படுகையிலும், ஸ்திதம் வா-நிற்கையிலும், புஞ்ஜாநம் வா - உண்ணுகையிலும், குணாந்விதம் அபி-முக்குணங்களைக் கூடி இருக்கும் போதும், விமூடா ந அநுபஸ்யந்தி-அவனை மூடர் காண்பதில்லை, ஜ்ஞாநசக்ஷúஷ: பஸ்யந்தி-ஞான விழியுடையோர் காண்கின்றனர்.
பொருள் : அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.
அறிவிலிகளுக்கு ஸ்தூல உடல் காட்சியும் உடலின் மூலம் வெளியுலகினின்று பெறும் இன்பதுன்பம் மட்டும் விளங்குகின்றன. உடலுக்குள் தங்களது மேலாம் சொரூபமாகவிருக்கும் உத்தமனைக் காண அவர்களுக்கு இயலாது. இந்திரியங்கள் புறவுலகைப் பார்ப்பதற்கென்றே அமைந்தவைகள். அவைகளின் வசப்பட்டவர்களே மூடாத்மாக்கள். விழாக்களில் பெரிய பொம்மைகளைத் தூக்கிக்கொண்டு அவைகளின் உட்புகுந்து சிலர் விளையாடுகின்றனர். அறிவுடையவர்க்குப் பொம்மையின் உள்ளிருக்கும் மனிதன் வேறு என்பது தெரியும். அங்ஙனம் ஞானக் கண்ணுடையார்க்கு உடல் என்னும் பொம்மைக்குள் இருக்கும் ஆத்மா வேறு என்பது தெரியும்.
மனிதர்கள் தலையணையைப் போன்றவர்கள். ஒன்று சிவப்பாயும், மற்றொன்று நீலமாயும், வேறொன்று கருப்பாயுமிருந்த போதிலும் அவைகளுக்குள்ளிருக்கும் பஞ்சு ஒன்றே. அதுபோலத் தான் மனிதனும். ஒருவன் பார்வைக்கு அழகாக இருக்கிறான். இன்னொருவன் கருப்பாயிருக்கிறான். மற்றொருவன் பரிசுத்தனாக இருக்கிறான்; வேறொருவன் கெட்டவனாக இருக்கிறான். என்றாலும் ஈசுவரன் அவர்கள் எல்லாருள்ளும் வாசம் செய்கிறான்.
ஞானக்கண்ணைப் பெறுவது எங்ஙனம்? விடை வருகிறது :
11. யதந்தோ யோகிநஸ்சைநம் பஸ்யந்த்யாத்மந்யவஸ்திதம்
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்யந்த்யசேதஸ:
யதந்த: யோகிந:-முயற்சியுடைய யோகிகள், ஆத்மநி அவஸ்திதம் ஏநம் பஸ்யந்தி-இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர், ச யதந்த: அபி அக்ருதாத்மாந:-முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் தூய்மைப் படுத்தாதவர்கள், அசேதஸ:-அஞ்ஞானிகள், ஏநம் ந பஸ்யந்தி-இவனைக் காண்கிலர்.
பொருள் : முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.
யோகி, ஆத்ம. பரிபாகம் அடையாத அறிவிலி ஆகிய இருவர்க்கும் முயற்சி பொதுவானது. முயற்சியின்றி ஒன்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மனபரிபாகமில்லாத மனிதன் வெறும் மாடுபோல் உழைக்கிறான். வெறும் வினைப்பயனே அதன் விளைவு ஆகும். முயலுகின்ற யோகியோ ஆத்ம பரிபாகம் அடைகிறான். உலகக் கிருத்தியங்களைச் செய்து சாதிப்பதற்கிடையில் ஒழுக்கத்தாலும் தவத்தாலும் யோகியானவன் மனதைப் பண்படுத்துகிறான். அந்தர்முகமாகவும் அதைத் திருப்பிப் பழகுகிறான் அங்ஙனம் சித்தசுத்தி அடையப்பெற்று, அது ஆத்ம சொரூபத்தில் தேங்கியிருப்பது ஆத்ம தரிசனத்துக்கு இன்றியமையாததாகிறது.
நீர்ப்பானையின் அடியில் வெகு சிறிய துவாரம் ஒன்று இருந்தாலும் அதன் வழியாக ஜலமெல்லாம் ஒழுகிப்போம். அதுபோல சாதகன் ஒருவனது மனதில் உலகப்பற்று வெகு அற்பமாக இருந்தாலும்கூட அவனது பிரயத்தனங்களெல்லாம் வீணாய் முடியும்.
பரமாத்ம தரிசனம் அடைந்தவர்கள் அதை எப்படிக் காண்கிறார்கள்? விடை வருகிறது :
12. யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேऽகிலம்
யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்
ஆதித்ய கதம் தேஜ:-சூரியனிடமிருந்து ஒளி, அகிலம் ஜகத் பாஸயதே-அனைத்து உலகத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, ச யத் சந்த்ரமஸி-சந்திரனிடத்துள்ளதும், யத் அக்நௌ ச - தீயிலுள்ளதும், தத் தேஜ: மாமகம் வித்தி-அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.
பொருள் : சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடையதே யென்றுணர்.
வெளிச்சத்தைக் கொண்டுதான் ஜடப் பொருள்கள் இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்ளலாம். நாம் கண்டறிந்த வெளிச்சங்களுள் சூரியன், சந்திரன், தீ இவைகளிடத்திருந்து வருபவை சர்வ சாதாரணமானவைகள். எங்கு வெளிச்சம் இருக்கிறதோ அங்கு சத்துவகுணத்தின் தோற்றமுண்டு. மினுக்கெடுத்த சுவரில் அல்லது கண்ணாடியில் முகம் நன்றாய்த் தெரிவதுபோன்று சத்வ குணத்திலே ஆத்ம சைதன்யம் ஒளிர்கிறது. ஆத்ம சைதன்யத்தை விளக்குகின்ற சத்வகுணமும் பரமாத்மாவினிடத்திருந்து வந்தது. சூரிய வெளிச்சம் ஜடப்பொருள் இருக்கிறது என்று விளக்குவதுபோன்று ஆத்ம சைதன்யம் நான் இருக்கிறேன் என்ற பிரக்ஞையை விளக்குகிறது. சூரியனிடத்து இருப்பது ஜடப்பிரகாசம். நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சியோ ஆத்மப் பிரகாசம். ஜடப்பிரகாசத்துக்கு மூலகாரணமாயிருப்பது ஆத்மப் பிரகாசம். அது எப்படி என்று ஆராய்வோம். இரண்டு அறைகளினுள்ளே சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. ஓர் அறையினுள் ஆள் யாருமில்லை. சூரிய வெளிச்சம் இருக்கிறது என்று பொருள்படுத்துவார் ஆங்கில்லை. இருக்கிறேன் என்ற உணர்ச்சி அந்த வெளிச்சத்துக்கும் கிடையாது. அவ் அறையினுள் வெளிச்சம் இருப்பதும் இல்லாததும் ஒன்றே. மற்ற அறையில் வெளிச்சம் இருக்கிறது. மனிதன் ஒருவன் இருக்கிறான். தான் இருப்பதற்கும் அவ்வெளிச்சம் இருப்பதற்கும் அம்மனிதனே அத்தாட்சியாகிறான். சந்திரன், சூரியன், அக்னி சொரூபமாக ஈசுவரனிடத்திருந்து வந்துள்ள ஜடப் பிரகாசத்தை ஈசுவரன் என்னும் ஆத்மப்பிரகாசம் அல்லது ஆத்ம சைதன்யம் அறிகிறது. அறிபவனுடைய அறிவே அறியப்படுபொருளை விளக்குகிறது. சூரியன், சந்திரன், அக்கினி முதலியன அறியப்படு பொருள்களாம்.
மேலும் அந்த ஆத்ம சைதன்யம் உயிருக்கு உயிராய் இருக்கிறது. எப்படியெனின் :
13. காமாவிஸ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா
புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக:
ச அஹம் காம் ஆவிஸ்ய-நான் பூமியுட் புகுந்து, ஒஜஸா பூதாநி தாரயாமி-உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன், ரஸாத்மக: ஸோம: ச பூத்வா-மேலும் நான் நிலவாகி, ஸர்வா: ஒஷதீ: புஷ்ணாமி-அனைத்து பயிர்பச்சைகளையும் போஷிக்கிறேன்.
பொருள் : நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.
ஈசுவர சக்தி ஓஜஸ் என்கிற பெயர் பெறுகிறது. அது அண்டமெங்கும் வியாபித்து அதை உறுதியாய்த் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. சராசரங்களெல்லாம் அதனிடத்திருந்து நிலைபேறு பெறுகின்றன. சுவைக்கேற்ற ரசம் சந்திரனிடத்திருக்கிறது என்பதும், அது படிவதால்தான் பூமியிலுள்ள பயிர்களெல்லாம் செழித்து வளர்கின்றன என்பதும், அவ்வவைகளின் இயல்பை நன்கு பெற்று வருகின்றன வென்பதும் கோட்பாடு. இங்ஙனம் உயிர்களைத்துக்கும் ஏற்ற உயிர்ச்சக்தி பரமாத்மாவினிடத்திருந்து வருகிறது.
அவரிடத்திருந்து வரும் மூன்றாவது வல்லமை யாதென்று இனி விளக்கப்படுகிறது :
14. அஹம் வைஸ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஸ்ரித:
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம்
அஹம் ப்ராணிநாம் தேஹம் ஆஸ்ரித:-உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன், ப்ராணாபாநஸமாயுக்த :-பிராண-அபான வாயுக்களுடன் கூடி, வைஸ்வாநர: பூவா - வைசுவாநரன் என்கிற அக்னியாகி, சதுர்விதம் அந்நம் பசாமி-நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.
பொருள் : நான் வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன்; பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.
வயிற்றுக்குள் இருந்துகொண்டு உணவைச் செமிக்கும் அக்கினிக்கு வைசுவானரன் என்கிற பெயர் ஏற்பட்டுள்ளது. அதற்கு உணவு நான்கு விதங்களில் அளிக்கப்படுகிறது. மெல்லுதல், உறிஞ்சுதல், நக்குதல், விழுங்குதல் ஆகிய நான்கு விதங்களில் உணவானது உட்கொள்ளப்படுகிறது. ரொட்டிபோன்ற கடின பதார்த்தம் மெல்லப்படுகிறது. இளம் நுங்கு போன்றது உறிஞ்சப்படுகிறது. தேன் நக்கப்படுகிறது. பாயசம் விழுங்கப்படுகிறது. இவையாவையும் ஜீரணம் செய்வது வைசுவானரன் என்ற அக்கினி.
ஆற்றல் சொரூபமாக இருப்பதுமல்லாமல் மற்றொரு மகிமை பகவானிடத்துண்டு. அதாவது :
15. ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத்வேதவிதேவ சாஹம்
ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான், ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன, ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ - எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் நான், வேதாந்தக்ருத் வேதவித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.
பொருள் : எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.
எல்லாருடைய உள்ளத்திலும் பிரக்ஞை அல்லது அறிவு சொரூபமாக அவர் இருக்கிறார். ஆதலால் முன் செய்தவைகளைப் பற்றிய ஞாபகமும், ஓர்ந்து உணரவேண்டிய ஞானமும், அவைகள் தேவையில்லாதபோது அவைகளை அழித்துவிடுதலும் ஆகிய இவையாவும் ஆத்ம சைதன்யத்திலிருந்தே வருகின்றன. வேதம் என்பது பிரபஞ்சம். இயற்கையில் இத்தனையுமாயிருப்பது பரம் பொருள். இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும் அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு ஈசுவரனது மஹிமையையே விளக்கிக்கொண்டிருக்கிறது. அழியும் பொருள்களின் மூலம் அவனது அழியாத் தன்மை ஒருபுறம் காண்பிக்கப்படுகிறது. அவன் அறிவாளி என்பதை ஒவ்வொரு ஜடப்பொருளின் அமைப்பும் எடுத்து உணர்த்துகிறது. அவன் இன்ப வடிவினன் என்பதற்கு இயற்கை யாவும் சான்றாகிறது. அவனுடைய ஆற்றலும் இயற்கையினூடு தோன்றிக்கொண்டிருக்கிறது. ஈசன் அழகன் என்பதற்கு இவ்வுலகமே எடுத்துக்காட்டாகும். இயற்கைத் தாய் திரிபுரசுந்தரி எனப்படுவதும் இக்காரணத்தை முன்னிட்டேயாம். பிரபஞ்சமே அவனுக்கு விளக்கம். ஆனால் இந்த விளக்கத்தில் அவன் அடங்கியவன் அல்லன். அது அவனுடைய ஒரு சிறு பகுதி. இவையாவையும் அவன் உணர்கிறான். ஆதலால் அவன் வேதவித்-வேதத்தை அறிபவன் அல்லது இயற்கையை அறிபவன் ஆகிறான். பிரபஞ்சத்தைக் கடந்து வேதாந்த சொரூபமாயிருப்பதும் பரமாத்மாவே.
பரமாத்மாவின் சொரூப விளக்கத்தின் படித்தரங்கள் வருமாறு :
16. த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே
லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என, இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர், ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும், கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
பொருள் : உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
நிலவுலகம் இருக்கும் வரையில் அதில் நீர் உண்டு. அது ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர், மழை நீர், மேகம் என்று வெவ்வேறு வடிவும் பெயரும் எடுக்கிறது. இந்த வடிவங்களெல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மை யுடையவைகள். நீரோ அக்ஷரம் அல்லது பிரளயம் வரும் வரையில் நிலைத்திருப்பது. அங்ஙனம் ஜகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் க்ஷரம் அல்லது அழியும் தன்மையுடையவைகள். ஈசுவரன் என்ற புருஷனுக்கு இவைகள் உபாதியாகையால் இவைகளும் புருஷன் எனப்படுகின்றன. பரமாத்மாவைச் சார்ந்துள்ள மாயா சக்தியோ அக்ஷர புருஷன் அல்லது என்றைக்கும் நிலைத்திருப்பது ஆகிறது. பிரம்மஞானம் அடைந்தவனுக்கு மட்டும் அது வியவகாரமயமான தோற்றத்தில் இல்லை. மற்று ஈசுவரனை அது சாசுவதமாகச் சார்ந்துள்ளது. கூடஸ்தன் என்பது வெவ்வேறு வடிவங்களும் தோற்றங்களும் மாயக்காட்சிகளும் காட்டவல்லது என்று பொருள்படுகிறது. ஈசுவரன் அல்லது சகுண பிரம்மத்தின் வெவ்வேறு சொரூபங்களாகிய சிவன், சக்தி, விஷ்ணு முதலியன ஒன்றுசேர்ந்து கூடஸ்தன் ஆகிறது. இதுவும் புருஷனுடைய உபாதியாகையால் புருஷன் என்றே அழைக்கப்படுகிறது. பிரபஞ்ச மயமான மாயாசக்தி என்றென்றைக்கும் இருக்கிறது. அதன் வடிவங்கள் மட்டும் புதியன புதியனவாக மாறியமைகின்றன.
பழத்தின் மேல்தோல், சதை, கொட்டை எல்லாம் மரத்தின் ஒரே மூல விதையினின்றும் உண்டாகின்றன. அதுபோல ஒரே ஈசுவரனிடமிருந்து ஜீவ, ஜட, சித்து, அசித்து ஆகிய ஸர்வ சிருஷ்டிப் பொருள்களும் தோன்றுகின்றன.
இனி, பரமாத்மா எப்படி இருக்கிறார் என்றால் :
17. உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:
ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து, பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ, அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும், உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ, உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன், அந்ய:-இவரில் வேறுபட்டோன்.
பொருள் : இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.
சகுண பிரம்மம் அல்லது ஈசுவரன் மாயாசஹிதன். உலகங்களும் உயிர்களும் (ஜகத், ஜீவன்) அவருடைய தோற்றங்களாம். நமது பண்பட்ட தூய அறிவுக்கு எட்டும் விபூதிகள் யாவும் ஈசுவரனைச் சார்ந்தவைகள். அதற்கு அப்பாற்பட்டவர் புரு÷ஷாத்தமன். அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாவதில்லை. சுத்தசைதன்யமாக நீக்கமற அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூவுலகும் அவரிடத்து அவரது பராசக்தியில் அடங்கிக் கிடக்கின்றன. அவரே முழுமுதற்பொருளாகிய பரபிரம்மம். நிர்க்குண பிரம்மம் என்றும், நாராயணன் என்றும், சதாசிவம் என்றும் அவர் சமயங்களால் அழைக்கப்படுகிறார்.
சரீரத்தில் ஈசுவரன் எவ்வாறு வசிக்கிறான்? பீச்சாங்குழலின் உள்ளேயிருக்கும் கம்பியைப்போல அவன் சரீரத்தில் வாசஞ்செய்கிறான். அதாவது சரீரத்தின் உள்ளேயிருக்கிறானென்றாலும் அச் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவனவல்லன்.
18. யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:
யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும், அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ, அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும், புரு÷ஷாத்தம: ப்ரதித: அஸ்மி-புரு÷ஷாத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.
பொருள் : நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புரு÷ஷாத்தம னென்று கூறப்படுகிறேன்.
க்ஷரம் என்பது அழியும் தன்மையுடைய பிரபஞ்சம். இது அரசமரத்தோடு ஒப்பிட்டு ஏற்கனவே விளக்கப்பட்டது. அக்ஷரம் என்பது உலகுக்கு மூலகாரணமாயிருக்கும் மூலப் பிரகிருதியோடு கூடிய ஈசுவரன். சித் சக்தியாக இப் பொருளைக் கருதுமிடத்து பரமேசுவரி என்று அவள் பெயர் பெறுகிறாள். ஜீவாத்மாக்களெல்லாம் ஈசுவரனில் அடங்கியிருக்கிறார்கள். நிர்க்குண நிர் விகாரமாயிருப்பவர் பரபிரம்மம். பக்தர்களும் கவிகளும் அவரைப் புரு÷ஷாத்தமன் என்று அழைப்பதற்கு அவரது பெருநிலையே காரணமாகிறது.
இத்தகைய புரு÷ஷாத்தமனை அறிந்தவன் எத்தகைய பாங்குடையவனாகிறான்? விடை வருகிறது :
19. யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புரு÷ஷாத்தமம்
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத
பாரத:-பாரதா! ய: அஸம்மூட: மாம்-எந்த ஞானி என்னை, ஏவம் புரு÷ஷாத்தமம் ஜாநாதி - இவ்வாறு புரு÷ஷாத்தமன் என்று அறிகிறானோ, ஸர்வவித் ஸ: ஸர்வபாவேந-எல்லாமறிந்த அவன் எல்லா விதமாகவும், மாம் பஜதி-என்னை வழிபடுகிறான்.
பொருள் : மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புரு÷ஷாத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.
பொருள் ஒன்று. மதிமயக்கம் உள்ளவனுக்கு அது உலகாகக் காட்சி கொடுக்கிறது; மயக்கம் நீங்கப்பெற்றவனுக்கு அது கடவுள் காட்சி கொடுக்கிறது. கடவுள் காட்சியில் சில படித்தரங்கள் இருக்கின்றன. அனைத்தையும் ஆதரிப்பவராக அவர் முதலில் தோன்றுகிறார். அனைத்தும் அவரிடத்து அடங்கியிருக்கின்றன. பின்பு அவரே அனைத்தும் ஆகியிருக்கிறார். அடுத்தபடி தோற்றத்தளவில் அனைத்தும் இருக்கின்றன; உண்மையில் அவர்தான் இருக்கிறார். அவர் யாண்டும் உள்ளது உள்ளபடி இருக்கிறார். பூரணப் பொருளாகிய அவரிடத்து ஒருவிதமான மாறுதலும் உண்டாகிறதில்லை. இது ஞானத்தின் முடிவான நிலை. கடவுள் காட்சி பெற்றவனே எல்லாம் அறிந்தவன் ஆகிறான். ஏனென்றால் அதற்குமேல் அவன் அறியவேண்டியது ஒன்றுமில்லை. கடவுள் காட்சி பெற்றவுடனே மனப்பான்மையும் மாறியமைகிறது. மனது எந்த அவஸ்தையிலிருந்தாலும் அது கடவுளை வழுத்தும் பாங்குடையதாகிறது. தெய்வ வழிபாடே வடிவுடையதாகிறது அது.
ஈசுவர தரிசனத்தைப் பெற்ற பிறகு, ஈசுவரன் எங்கும், எல்லாவற்றிலும் இருப்பதாகவே பக்தனுக்குத் தோன்றும். ஆனால் ஈசுவரனுடைய மேலான தோற்றம் மனிதனிடம் காணப்படுகிறது. இன்னும் அதைவிட மேலான தோற்றமோ சுத்தசாத்விக பக்தர்களிடம் இருக்கும்.
கடவுள் காட்சியிலேயே நிலைபெறுவதால் மனிதன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :
20. இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமிதமுக்தம் மயாநக
ஏதத்புத்த்வா புத்திமாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்ச பாரத
அநக:-குற்றமற்றோய், இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை, மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது, ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்ய, த்தக்கது செய்பவன் ஸ்யாத்-ஆகிறான்.
பொருள் : குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யத்தக்கது செய்தான்.
பகவத்கீதை முழுதும் சாஸ்திரம் எனப்படுகிறதெனினும் இந்த அத்தியாயம் மட்டும் சிறப்பாக சாஸ்திரம் எனப்படுகிறது. ஏனென்றால் வேதாந்தத்தின் சரீரம் முழுதும் இதில் இருக்கிறது. பரத்தை அறிபவனே ஞானியாகிறான். அவனுடைய கடமைகளெல்லாம் பிரம்மஞானத்தைப் பெறுதலில் முற்றுப்பெறுகின்றன. பரத்தை அறிய முயலுவதைவிட மேலான கடமை மனிதனுக்கு இல்லை. பரத்தை அறிந்துகொள்ளுதற்கு நிகரான குறி வேறு எதும் இல்லை. பரத்தை அறிதற்கு மேலான புருஷார்த்தமில்லை. பரத்தை அறிபவன் பரத்தை அடைகிறான். பரத்தை அறிபவன் பரன் ஆகிறான். அவனே முக்தனாகிறான்.
பெறுதற்குரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே ஈசுவரனை அறிய முயலாது போனால் அவன் வீணில் பிறந்தவனேயாவான்.
-
பதினாறாம் அத்தியாயம்
தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார். அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.
மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.
தெய்வீக இயல்பு 1-3 -அஸுர இயல்பு 4 -இரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6 -அஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18 -ஆஸுரனது வீழ்ச்சி 19-21 -அஸுர இயல்பினின்று விடுதலை 22 -சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24.
ஸ்ரீபகவாநுவாச
1. அபயம் ஸத்த்வஸம்ஸுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி:
தாநம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், அபயம் ஸத்த்வஸம்ஸுத்தி-அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஜ்ஞாநயோக வ்யவஸ்திதி:-ஞான யோகத்தில் உறுதி, தாநம் தம ச-ஈகை, தன்னடக்கம், யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாய:-வேள்வி, கற்றல், தப ஆர்ஜவம்-தவம், நேர்மை.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.
அறியாமையினின்று அச்சம் வருகிறது. அஞ்சுபவன் ஒன்றுக்கும் உதவான். அஞ்சாமையோ மேன்மையனைத்தையும் கொடுக்கிறது. ஒவ்வொரு தெய்வமும் அபயகரம் உடைத்திருப்பது, அஞ்சாமையும் தெய்வத்தை அணுகுதலும் ஒன்றே என்று விளக்குதற்காம். உள்ளத்தூய்மை என்பது வஞ்சகமும் பொய்யுமின்றிப் பிறரோடு இணக்கம் கொள்ளுதலாம்.
நித்திய அநித்திய வஸ்துக்களைத் தெளிவுபட அறிதல் ஞானம். அப்படி அறிந்தான பிறகு அதற்கேற்ப ஒழுகுதல் யோகமாகிறது. இங்ஙனம் ஞானத்திலும் யோகத்திலும் யாண்டும் நிலைத்திருத்தல் வேண்டும். தனக்குப் பயன்படுகிற பொருள் பிறர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவைகளை அன்புடனும் பணிவுடனும் வழங்குதல் தானமாகிறது.
தமம் அல்லது பொறிகளை அடக்குதல் என்பது வெளியுலகில் உள்ள விஷயங்களின்மீது, அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திரியங்களை உலவவிடாது தடுத்தலாம். தான் செய்கின்ற கிருத்தியங்களின் மூலம் தன்னைக் கடவுளுக்கென்றே ஒப்படைத்தல் யாகம் என்று பெயர் பெறுகிறது. தேவாராதனைகளையெல்லாம் யாகமென்று சொல்லலாம்.
பாரமார்த்திக விஷயங்களைப் புகட்டுகிற சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பது சுவாத்யாயம் என்ற பெயர் பெறுகிறது. உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற முயலுதல் தவம். சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் கோணலில்லாத் தன்மையே ஆர்ஜவம் அல்லது நேர்மை.
2. அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஸாந்திரபைஸுநம்
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்
அஹிம்ஸா-கொல்லாமை, ஸத்யம்-வாய்மை, அக்ரோத:-சினவாமை, த்யாக:-துறவு, ஸாந்தி-ஆறுதல், அபைஸுநம்-வண்மை, பூதேஷு தயா-ஜீவதயை, அலோலுப் த்வம் - அவாவின்மை, மார்தவம் ஹ்ரீ:-மென்மை, நாணுடைமை, அசாபலம்-சலியாமை.
பொருள் : கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,
உயிர்களைத் தனக்கும் இறைவனுக்கும் புறம்பாக நினைக்கும் பொழுது அவைகளுக்குத் தீங்கு செய்து தனக்கு வேண்டியதைப் பெறலாம் என்ற எண்ணம் வருகிறது. அவைகளையெல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டவைகளாக அறியும்போது அஹிம்சை தானாக வந்தமைகிறது. கடவுள் ஒருவரே மெய்ப்பொருள் என்னும் தத்துவத்துக்கு ஒப்ப உணர்வதும் உரைப்பதும் சத்தியமாகும். மற்றவர்கள் தன்னை ஹிம்சை செய்கின்றபொழுது தான் அவர்களைத் தன்மயமாயுணர்ந்து அவர்களிடத்துக் கோபித்துக் கொள்ளாதிருப்பது குரோதமின்மையாகும். பொருள்களெல்லாம் பரமனுக்கு உரியவைகளென்று அறிந்து அவைகளிடத்து உரிமை பாராட்டாதிருப்பது தியாகம். மனதின்கண் அமைந்துள்ள நடு நிலை சாந்தி எனப்படுகிறது. உயிர்களிடத்து இரக்கம் அல்லது பூத தயை என்பது துன்புறுபவர்களைப் பார்த்து மனம் கசிதல். இந்திரியார்த்தங்களிடத்து இந்திரியங்கள் உலவும் பொழுதும் மனப்பற்று வாராதிருத்தல் அலோலுப்த்வம் அல்லது பிறர் பொருளை விரும்பாமை என்பதாகிறது. பிறரைத் தாழ்த்திப் பேசுதல் சிற்றியல்புடையாரது போக்கு. அது பைசுனம் எனப்படுகிறது. பிறரது சிறப்பைப்பற்றியே பேசும்பொழுது அது அபைசுனம் எனப்படுகிறது. புறங்கூறாமை அல்லது கோள் சொல்லாமை சீரியரது பாங்காகும். மார்தவம் அல்லது மிருதுத்தன்மை அல்லது இனிமை பண்பட்டவர்களிடத்தே காணப்படும். மற்றவர்கள் தங்களைப் புகழும்போது நல்லார்க்கு நாணம் வருகிறது. தகாத செயலில் ஈடுபடவும் அவர்கள் நாணுகின்றனர். மனம் சலனமடையும்போது அதன் புறத்தோற்றமாகிய உடலும் அனாவசியமாக அசைகிறது. உள்ளத்தையும் உடலையும் காரணம் ஏற்பட்டாலொழிய அசையாது வைத்திருப்பது அமைதி பெற்றவர்களுடைய செயலாகும்.
3. தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசமத்ரோஹோ நாதிமாநிதா
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத
தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசம்-ஒளி, பொறை, உறுதி, சுத்தம், அத்ரோஹ:-துரோகமின்மை –
ந அதிமாநிதா-செருக்கு கொள்ளாமை, தைவீம் ஸம்பதம்-தெய்வ சம்பத்தை, அபிஜாதஸ்ய பவந்தி-எய்தியவனிடம் காணப்படுகின்றன, பாரத-பாரதா.
பொருள் : ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!
கயவர்களுக்கிடையில் பயப்படாதிருத்தல் தேஜஸ் அல்லது தைரியமாம். பிறர் செய்த தீங்குகளுக்காக அவர்களைத் தண்டிக்க வல்லவனாயிருந்தும் அவர்களை மன்னிப்பதுடன், அதை மறந்து விடுவது க்ஷமை என்ற பெயர் பெறுகிறது. மனதின்கண் அமைந்துள்ள திருதி அல்லது உறுதியானது உடலுக்கும் இந்திரியங்களுக்கும் உண்டாகின்ற சோர்வை நீக்குகிறது. விரைவில் சோர்வு உண்டாகாதும் அது தடுக்கவல்லது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் அழுக்குப்படியாதிருத்தல் சௌசம் அல்லது தூய்மையாம். உடலின் அழுக்கை நீக்குவது யாருக்கும் எளிது. மனத்தகத்துக் கீழான எண்ணம் வராது தடுப்பதால் அது தூயதாகிறது. எண்ணம் சுத்தமாயிருந்தால் சொல்லும் தானே சுத்தியடைகிறது. பிறர்க்குத் தீங்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதிருந்தால் அது அத்ரோகம் அல்லது வஞ்சகமின்மையாகிறது. பிறர் தன்னை மிக மதிக்க வேண்டும் என்று நினைப்பது செருக்கு. அச்சமின்மையிலிருந்து செருக்கின்மை ஈறாக இவையாவும் தெய்வ சம்பத்துக்களாகின்றன.
இனி, இதற்கு மாறாயுள்ள அசுர சம்பத்து விளக்கப்படுகிறது :
4. தம்போ தர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்
பார்த-பார்த்தா, தம்ப: தர்ப: அபிமாந ச-டம்பம், இறுமாப்பு, கர்வம், க்ரோத: பாருஷ்யம் ஏவ ச-சினம், கடுமை, அஜ்ஞாநம் ஏவ-அஞ்ஞானம், ஆஸுரீம் ஸம்பதம்-அசுர சம்பத்தை, அபிஜாதஸ்ய-எய்தியவனிடம் காணப் படுகின்றன.
பொருள் : டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!
ஒழுக்கத்தில் தன்னைச் சிறந்தவனாகக் காட்டிக்கொள்ளுதலும், ஆடை ஆபரணங்களைக்கொண்டு தன்னை மிகைபட அலங்கரித்தலும் பகட்டாகிறது. தனக்குக் கல்வியும், செல்வமும், குலமும் மிக வாய்த்திருப்பதாக எண்ணித் தற்பெருமை கொள்ளுதல் இறுமாப்பாம். அழகில்லாதவனை அழகன் என்றும், குருடனைக் கண்ணன் என்றும், கீழோனை மேலோன் என்றும் சொல்லிப் பரிகசிப்பது கடுமைக்குச் சான்றாகிறது. தர்மம் அதர்மம் ஆகியவைகளைப்பற்றித் தவறுதலாக நினைப்பது அக்ஞானமாம்.
பக்ஷணங்களின் மேல்கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும். அவைகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பண்டங்கள் வேறு வேறு விதமானவைகளாக இருக்கும். உள்ளிருக்கும் பொருள்களுக்கு ஏற்ப பக்ஷணங்கள் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். அதுபோல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே விதமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்.
இயல்பு வேறுபாட்டால் வரும் பயன் யாது? விடை வருகிறது :
5. தைவீ ஸம்பத்விமோக்ஷõய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ
தைவீ ஸம்பத் விமோக்ஷõய-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், ஆஸுரீ நிபந்தாய மதா-அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை, பாண்டவ-பாண்டவா, தைவீம் ஸம்பதம் அபிஜாத: அஸி-தேவ சம்பத்தை எய்தி விட்டாய், மா ஸுச:-துயரப்படாதே.
பொருள் : தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.
முற்பிறப்பில் மனிதன் செய்த முயற்சி வீண்போவதில்லை. தேவ இயல்பு சம்சார பந்தத்திலிருந்து விடுபடுதற்கு ஏதுவாகிறது. அசுர இயல்பு பிறப்பு இறப்புக்குக் காரணமான பந்தத்தைப் பலப்படுத்துகிறது. தன்னிடத்துள்ள இயல்பு எத்தகையதோவென்று அர்ஜுனனுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஜீவனுடைய முக்கால நிலைமைகளை அறிகிற பகவானுக்கு அர்ஜுனனுடைய வரலாறு நன்கு தெரியும். அவனுக்கு ஆறுதல் சொல்லுவதோடுகூட தெய்வ சம்பத்தையுடைய அவன் முக்திக்கும் தகுந்தவனாகிறான் என்கிறார் பகவான். ஒரு ஜன்மத்தில் அடைந்த பயிற்சி அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக அவனிடத்து அமைகிறது என்பதும் விளங்குகிறது.
ஜீவர்களுடைய இயல்புகளை யெல்லாம் சுருக்கமாக எப்படி வகைப்படுத்தலாம்? விடை வருகிறது :
6. த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு
பார்த-பார்த்தா, அஸ்மிந் லோகே-இவ்வுலகத்தில், பூதஸர்கௌ த்வௌ ஏவ-உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும், தைவ ஆஸுர ச-தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது, தைவ: விஸ்தரஸ: ப்ரோக்த-தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன், ஆஸுரம் மே ஸ்ருணு-அசுர இயல் பற்றி என்னிடம் கேள்.
பொருள் : இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.
ஸ்தாவர ஜங்கமங்களாகிய உயிர் வகைகள் அனைத்திடத்தும் ஏற்றத்தாழ்வுபட தெய்வ சம்பத்தோ அல்லது அசுர சம்பத்தோ உண்டு. ஒன்று இனியது; மற்றொன்று இன்னாதது. ஒன்று ஆத்ம வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது; மற்றொன்று பிற்போக்கை உண்டாக்குகிறது. மனிதர்களுக்கிடையில் உள்ள அசுர இயல்பு இனி விரிவாக விளக்கப்படுகிறது. கருத்தில் வைக்கத் தகுதியற்ற எதிர்மறையான எண்ணங்களும் போதனைகளும் கீதையில் காணப்படுவது அரிது. ஈண்டு அத்தகைய கருத்துக்கள் வருவது ஒரு காரத்தை முன்னிட்டேயாம். சாதகர்கள் அவைகளின் தோஷத்தை யறிந்து அவைகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அசுர இயல்பு விரித்து விளக்கப்படுகிறது.
7. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விதுராஸுரா:
ந ஸௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே
ஆஸுரா: ஜநா-அசுரத் தன்மை கொண்டோர், ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது-தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார், தேஷு ஸௌசம் ந-அவர்களிடம் தூய்மையேனும் இல்லை, ஆசார: ச ந-ஒழுக்கமேனும் இல்லை, ஸத்யம் அபி ந வித்யதே-வாய்மையேனும் காணப்படுவதில்லை.
பொருள் : அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
நலம் தருவது எதுவோ அது செய்யத்தகுந்தது. அது தர்மம் எனப்படுகிறது. கேடு விளைவிப்பது எதுவோ அது செய்யத்தகாதது. அத்தகையது அதர்மம் எனப்படுகிறது. விலங்கு இனங்களும் ஓரளவு நலம் கேடுகளை அறிந்துகொள்கின்றன. அசுர இயல்புடையார்க்கு அவை விளங்குவதில்லை. அவர்கள் மனதில் எழும் எண்ணங்கள் தூயவைகளல்ல, உடலில் ஆகும் செயல் ஒழுக்கமில்லாதது; பின்பு அவர்கள் வாயில் பேசுவது உண்மையல்ல. ஆக, முக்கரணங்களும் அவர்களால் முறைதவறிக் கையாளப்படுகின்றன.
ஏன் அவர்கள் அப்படித் தாறுமாறாக நடந்துகொள்ளுகிறார்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்களிடமிருந்து வரும் விடையாவது :
8. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஸ்வரம்
அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்
ஜகத் அஸத்யம் அப்ரதிஷ்டம்-இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும், அநீஸ்வரம்-கடவுளற்றதென்றும், அபரஸ்பரஸம்பூதம்-சொல்லுகிறார்கள், காமஹைதுகம்-காமத்தை ஏதுவாக உடையது, அந்யத் கிம் தே ஆஹூ:-இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்?
அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள். சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள். அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர். காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை.
சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம். பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை. பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும், தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான்.
இக்கொள்கை எத்தகைய வாழ்க்கையாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :
9. ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோऽல்பபுத்தய:
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோऽஹிதா:
ஏதாம் த்ருஷ்டிம் அவஷ்டப்ய-இந்தக் காட்சியில் நிலைபெற்று, அல்பபுத்தய: நஷ்டாத்மாந: - அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள், அஹிதா:-தீமையையே நினைப்பவர்களாக, உக்ரகர்மாண:-கொடிய தொழில் செய்பவர்களாக, ஜகத: க்ஷயாய ப்ரபவந்தி-உலக நாசத்திற்கே முனைகிறார்கள்.
பொருள் : இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.
இந்திரியங்களின் வசப்பட்டு விரைந்து விஷயங்களில் மூழ்குமளவு ஒருவன் புல்லறிவாளன் ஆகிறான். தன்னையே அழித்துக் கொள்ளுதல் அதன் முதற்படி. அதர்மம் அபரிமிதமாய்க் கையாளப்படுகிறது. உலகுக்கும் அது கேடாய் முடிகிறது. பொய்யும் அதர்மமும் வாழ்க்கைத் திட்டமல்ல என்பதற்கு அவனுடைய கொடியே செயலே சான்றாகிறது.
அசுர இயல்புடையவரது தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது என்று வினவுமிடத்து அதன் விரிவான விளக்கம் வருகிறது :
10. காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா:
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தேऽஸுசிவ்ரதா:
தம்பமாந மதாந்விதா:- டம்பமும் மதமும் பொருந்தியவராய், துஷ்பூரம்-நிரம்பவொண்ணாத,
காமம் ஆஸ்ரித்ய-காமத்தைச் சார்ந்து, மோஹாத் அஸத்க்ராஹாந் க்ருஹீத்வா-மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு, அஸுசிவ்ரதா: ப்ரவர்தந்தே-அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
பொருள் : நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.
11. சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா:
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா:
ப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம்-பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில், உபாஸ்ரிதா:-பொருந்தி, காமோபபோகபரமா: ச-விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ஏதாவத் இதி நிஸ்சிதா:-உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக.
பொருள் : பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், உண்மையே இவ்வளவுதான் என்ற நிச்சய முடையோராய்,
மரணத்தோடு அவர்களது ஆசை முடிவுபெறுவதாக மற்றவர்களுக்குத் தென்படுகிறது. ஆனால் திரும்பப் பிறக்கும்பொழுது அதே ஆசை தோற்றத்துக்கு வருகிறது. ஆகையால் அது பூர்த்தி பண்ண முடியாத ஆசையாகிறது. கொடிய துன்ப துயரங்களை மிகுதியாக அனுபவித்தாலும் லௌகிகர்களுக்கு நற்புத்தி உண்டாவதில்லை. ஒட்டகங்களுக்கு முட்செடிகளில் ஆசை அதிகம். அவைகளைத் தின்னத்தின்ன ஒட்டகங்களின் வாயிலிருந்து ரத்தம் அதிகமாகப் பெருகும். என்றாலும், அவைகள் முட்செடிகளைத் தின்பதை விடுவதில்லை.
அதைப்போல் அநேகரால் ஏமாற்றப்பட்டபோதும் ஆபத்துக்கள் அநேகம் வந்துற்றபோதும் லௌகிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். அடுத்த கணத்தில் எல்லாவற்றையும் மறந்து உலக விஷயங்களையே தேடி அலைகின்றார்கள். ஒருவனது மனைவி இறந்துவிடுகிறாள்; அல்லது தன்னை விட்டு ஓடிவிடுகின்றாள். ஆனாலும் திரும்பவும் விவாகம் செய்துகொள்ள முற்படுகிறான் ! அல்லது அவனது குழந்தை இறந்துவிடுகிறது; கதறி அழுகின்றான் ! பெரிதும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து வருந்துகிறான். என்றாலும் மறு கணத்தில் அந்தக் குழந்தையின் நினைவே இல்லாது அவன் வாழ்க்கை நடத்துகிறான்! குழந்தையைப் பறிகொடுத்த தாய் துக்கத்தால் சோகமாகிவிடுகின்றாள். ஆனால் சற்றுப் பிறகு அவள் தன் நகைகளைச் சரிப்படுத்துவதிலும், நல்ல புடவைகள் உடுத்துவதிலும், வாசனை சோப்பைத் தேடுவதிலும் ஈடுபடுகிறாள்! பெண் குழந்தைகளின் விவாகங்களால் பெற்றோர் தரித்திர தசையை அடைந்து விடுகிறார்கள்; பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன ! இவர்கள் வழக்கு வியாச்சியங்களில் சகல பொருள்களையும் இழந்துவிட்டு வருந்தினாலும் மேலும் வழக்கு சம்பந்தமாக நீதி ஸ்தலத்திற்குப் போவதை நிறுத்துகிறதில்லை. குழந்தைகளைக் காப்பாற்ற வழியில்லாமற் போனாலும் ஒவ்வொரு வருஷமும் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தவறுவதில்லை. என்ன ஆச்சரியம் !
12. ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்
ஆஸாபாஸஸதை-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால், பத்தா:-கட்டுண்டு, காம க்ரோதபராயணா:-காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க், காமபோகார்தம்-காம போகத்துக்காக, அந்யாயேந அர்த ஸஞ்சயாந்-அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க,
ஈஹந்தே-விரும்புகிறார்கள்.
பொருள் : நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.
செல்வத்தை நேர்மையான வழியில் சம்பாதித்து நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்களானால் அது திரவிய யக்ஞமாகின்றது. பேராசையில் கட்டுண்டு, பொய்யும் களவும் புரிந்து பொருளைப் பெருமிதமாகத் தேடி போகத்தில் மூழ்குவது அசுரச் செயலாகிறது. மனிதர்கள் இருவகுப்பினர்-மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர் (மனுஷ்யர்). அறிவு விளங்கப்பெற்றவர் (மன்-ஹுஷ்யர்). ஈசுவரனை அடையவேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையவர்கள் பின்னர் சொன்ன வகுப்பினர். காமமும் காசாசையும் பிடித்து அலைபவர்கள் மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்கள்.
13. இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்
மயா அத்ய இதம் லப்தம்-என்னால் இன்று இன்ன லாபம் அடையப் பட்டது, இமம் மநோரதம் ப்ராப்ஸ்யே-இன்ன மனோரதத்தை இனி எய்துவேன், மே இதம் தநம் அஸ்தி - என்னிடம் இந்த செல்வம் உள்ளது, புந: அபி இதம் பவிஷ்யதி-இனி இன்ன பொருளை பெறுவேன்.
பொருள் : இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”
14. அஸௌ மயா ஹத: ஸத்ருர்ஹநிஷ்யே சாபராநபி
ஈஸ்வரோऽஹமஹம் போகீ ஸித்தோऽஹம் பலவாந்ஸுகீ
அஸௌ ஸத்ரு மயா ஹத:-இன்ன பகைவரைக் கொன்று விட்டேன், ச அபராந் அபி அஹம் ஹநிஷ்யே-இனி மற்றவர்களைக் கொல்வேன், அஹம் ஈஸ்வர: போகீ-நான் ஆள்வோன், நான் போகி, அஹம் ஸித்த:-நான் சித்தன், பலவாந்-பலவான், ஸுகீ-சுகத்தை அனுபவிப்பவன்.
பொருள் : இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”
15. ஆட்யோऽபிஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்ருஸோ மயா
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா:
ஆட்ய: அபிஜநவாந் அஸ்மி-நான் செல்வன்; பெரிய குடும்பத்தை உடையவன், மயா ஸத்ருஸ: அந்ய: க: அஸ்தி-எனக்கு நிகர் வேறு யாவருளர்? யக்ஷ்யே-வேள்வி செய்கிறேன், தாஸ்யாமி-கொடுப்பேன்; மோதிஷ்ய-களிப்பேன், இதி அஜ்ஞாநவிமோஹிதா:-என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்.
பொருள் : நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
16. அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா:
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேऽஸுசௌ
அநேகசித்தவிப்ராந்தா-பல சித்தங்களால் மருண்டோர், மோஹ ஜால ஸமாவ்ருதா:-மோகவலையில் அகப்பட்டோர், காமபோகேஷு ப்ரஸக்தா:-காம போகங்களில் பற்றுண்டோர்,
அஸுசௌ நரகே பதந்தி-இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
பொருள் : பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
மன நிலைக்கு ஏற்றபடி வெளியுலகம் காட்சி கொடுக்கிறது. தெளிந்த மனமுடையவர்களுக்கு உலகம் சுவர்க்கமாகக் காட்சி கொடுக்கிறது. கெட்ட மனமுடையவர்களுக்கு அதே உலகம் கொடிய நரகமாகப் பிரதிபலிக்கிறது.
அசுரர்களும் யாகம் செய்வதுண்டு. அதன் விதம் வருகிறது :
17. ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா:
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்
ஆத்மஸம்பாவிதா:-இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், ஸ்தப்தா:-முரடர், தந மாந மத அந்விதா:-செல்வச் செருக்கும் மதமுமுடையோர், தே நாமயஜ்ஞை-அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி, தம்பேந அவிதி பூர்வகம் யஜந்தே-டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர்.
பொருள் : இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.
இக்காலத்தில் சிலர் கோயில்கள் கட்டுவிப்பதும், விழாக்கள் கொண்டாடுவதும், ஆராதனை அபிஷேகங்கள் செய்வதும் இத்தகைய சிற்றியல்புகளுடையவைகளாகின்றன. தங்களை விளம் பரப்படுத்திக்கொள்ளுதல் ஒன்றே இவர்களின் கருத்தாகும். கடவுளின் பெருமைக்கென்றே வினையாற்றுவது தெய்வ சம்பத்துடையவர்களது இயல்பு. தங்களது சொந்தப் பெருமைக் கென்றே வினையாற்றுவது மற்றவர்களுடைய இயல்பு.
18. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோऽப்யஸூயகா:
அஹங்காரம் பலம் தர்பம்-அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், காமம் க்ரோதம் ச ஸம்ஸ்ரிதா:-விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய, அப்யஸூயகா:-பிறரை இகழ்கின்றவர்களாக, ஆத்மபரதேஹேஷு-மற்றவர் உடல்களிலும் உள்ள, மாம் ப்ரத்விஷந்த-என்னை வெறுக்கிறார்கள்.
பொருள் : அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.
தங்களிடத்து உண்மையாகவே அமைந்துள்ள சில மேன்மைகளை மிகைப்படுத்தியும், இல்லாத சில சிறப்புக்களை இருப்பதாகப் பாவித்தும் அகங்கரிக்கின்றனர் அசுர இயல்புடையவர்கள். அவித்தியா சொரூபமான இத்தகைய ஆணவத்தை அகற்றுவது எளிதன்று. பின்பு, தங்களிடத்து வாய்த்த பலத்தையெல்லாம் மற்றவர்களைச் சிறுமைப்படுத்துவதிலேயே உபயோகிக்கின்றனர். இனி, இறுமாப்பு ஒருவனை நெறி பிறழ்ந்து போகும்படியே தூண்டுகிறது.
எல்லார் உள்ளத்திலும் ஈசுவரன் வீற்றிருக்கிறான் என்பதை மறந்து, அவனது மேலான ஆலயமாகிய உடலைக் கீழ்மைப் படுத்தி இறைவனையே அவர்கள் புறக்கணிக்கின்றனர். அதனால் அசுரர்களுக்கு உண்டாகும் வீழ்ச்சியாவது :
19. தாநஹம் த்விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாம்யஜஸ்ரமஸுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு
த்விஷத: க்ருராந்-வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும், நராதமாந் தாந் அஸுபாந், -உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, அஹம் அஜஸ்ரம்-நான் எப்போதும், ஸம்ஸாரேஷு-சம்சாரத்தில், ஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி -அசுர பிறப்புகளில் எறிகிறேன்.
பொருள் : இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.
வினைக்கேற்ற பிறவியுண்டாகிறது. வினையின் வேகம் தொடர்ந்து போகுமளவு பிறவியும் வளர்கிறது. இக்காரணத்தை முன்னிட்டே பகவான் இங்ஙனம் பகர்கிறார்:
20. ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்
கௌந்தேய-குந்தியின் மகனே! மூடா: மாம் அப்ராப்ய ஏவ-இம்மூடர் என்னை யெய்தாமலே,
ஜந்மநி ஜந்மநி-பிறப்புத் தோறும், ஆஸுரீம் யோநிம் ஆபந்நா:-அசுரக் கருக்களில் தோன்றி, தத: அதமாம் கதிம் யாந்தி-மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள்.
பொருள் : பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!
கெட்ட இயல்பு ஒருவனை இன்னும் அதிகக் கேடுடையவனாக்குகிறது. ஆதலால் கீழ்மையிலேயே அவன் மேலும் மேலும் செல்பவனாகின்றான். மலையுச்சியினின்று கீழே உருண்டு வருகிற கல் பள்ளத்தாக்கு வரையில் விரைவது போன்று அசுரன் ஒருவன் புல்லிய நிலையின் எல்லை காணும் வரையில் கீழ்மையுறுகிறான்.
இத்தகைய கீழ்மைக்கு மூலகாரணம் யாது ? விடை வருகிறது :
21. த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநமாத்மந:
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்
இதம் ஆத்மந: நாஸநம்-இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான, த்ரிவிதம் நரகஸ்ய த்வாரம்-இம் மூன்று நரக வாயில்கள், காம: க்ரோத: ததா லோப-காமம், சினம், அவா, தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத்-ஆதலால், இம்மூன்றையும் விடுக.
பொருள் : ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்:(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.
அசுரப்பான்மைக்குப் பிறப்பிடம் ஈண்டுக் காட்டப்படுகிறது. இம்மூவிதக் குற்றங்களிலிருந்து அரக்கத்தன்மை வளர்கிறது. லோபம் என்பது போகப் பொருள்களைத் தனக்கென்றே கட்டிப் பிடித்தலாம். மனிதன் மேன்மையடைதற்கு இம்மூன்றும் இடந் தருவதில்லை. இவைகளை நீக்கினால் மனிதன் மேலோன் ஆவான். இவைகளில் உழன்று உழன்று இறுதியில் உள்ளத்தினுள் விரக்தியுண்டாகும் வரையில் ஒருவன் அசுரப் பிறவிகளில் அழுந்தியாகவேண்டும்.
பின்பு அவன் எப்படி மேன்மையடைகிறான்? விடை வருகிறது :
22. ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர:
ஆசரத்யாத்மந: ஸ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்
கௌந்தேய-குந்தியின் மகனே, ஏதை: த்ரிபி: தமோத்வாரை: விமுக்த:-இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன், நர: ஆத்மந: ஸ்ரேய: ஆசரதி-தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான், தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.
பொருள் : இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.
துக்கங்களுக்கெல்லாம் காரணம் அக்ஞானம். அக்ஞானத்தினின்றே காமம், குரோதம், லோபம் வருகின்றன. ஆக, அக்ஞான இருள் நரகத்துக்கு வாயிலாகிறது. அதினின்று விலகியவன் சிறப்பு எய்துகிறான். முக்தியடைதல் அவனுக்கு இயல்பாக வந்தமைகிறது. கெட்டவன் ஒருவன் திரும்பி மேல்நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டால் அவன் அதிவிரைவில் முன்னேற்றமடைந்து வருகிறான். ஏனென்றால் காமத்தையும் குரோதத்தையும் லோபத்தையும் அவன் நீக்க வல்லவனாகிறான்.
அசுரத் தன்மையை அகற்றி மேன்மையடைதற்கு வழிகாட்டுவது எது? விடை வருகிறது :
23. ய: ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத:
ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்
ய: ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவன் சாஸ்திர விதியை மீறி, காமகாரத: வர்ததே-விருப்பத்தால் தொழில் புரிவோனோ, ஸ: ஸித்திம் ந அவாப்நோதி-அவன் ஸித்தி பெற மாட்டான், பராம் கதிம் ந-பரகதி அடைய மாட்டான், ஸுகம் ந-அவன் இன்பம் எய்த மாட்டான்.
பொருள் : சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.
சித்தி அல்லது பரிபூரணத் தன்மையடைகின்றவனுக்கு வாழ்க்கை சுகமுடையதாகத் துவங்கி முக்தியடைதலில் முடிவு பெறுகிறது. இன்னதைச் செய் என்றும், இன்னதைச் செய்யாதே என்றும் சாஸ்திரம் ஆணையிடுகிறது. ஆசைக்கு அடிமையானவன் செய்யவேண்டாமென்பதைச் செய்கிறான்; செய்ய வேண்டியதைச் செய்யாது தவிக்கிறான். சாஸ்திரமோ மனிதனை மேலோனாக்குதற்கென்று அமைந்தது. ஆசையை வென்று சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்க்கு அசுர இயல்பைக் களைந்து தெய்வ சம்பத்தைப் பெறுவது எளிதாகிறது.
இக்காரணத்தை முன்னிட்டுச் சாதகன் ஒருவன் செய்ய வேண்டியதாவது :
24. தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யாகார்யவ்யவஸ்திதௌ
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ரவிதாநோக்தம்
கர்ம கர்துமிஹார்ஹஸி
தஸ்மாத் தே-ஆதலால் உனக்கு, இஹ கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ-எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில், ஸாஸ்த்ரம் ப்ரமாணம்-நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள், ஜ்ஞாத்வா-அதை அறிந்து, ஸாஸ்த்ர விதாந உக்தம்-சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை, கர்தும் அர்ஹஸி-செய்யக் கடவாய்.
பொருள் : ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.
சம்சார சாகரத்தைக் கடந்து அப்பாற் செல்லுதற்கு சாஸ்திரம் உற்ற துணையாகிறது. ஆதலால் இவ்வுலகில் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் இதினின்று மீளுதற்குக் கையாளுகிற கர்மங்களெல்லாம் சாஸ்திரத்துக்கு உடன்பாடானவைகளாயிருக்க வேண்டும். முற்றிலும் தெய்வ சம்பத்தில் ஊறியிருப்பவர்கள் இயல்பாகவே சாஸ்திரத்தின் ஆணையைப் பின்பற்றுபவர்களாயிருப்பார்கள். அவர்களுடைய செயலும் சாஸ்திரப் பிரமாணமும் ஒன்றுபட்டிருக்கின்றன.
நீங்கள் எந்த சாஸ்திரத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஓர் அன்பர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்டார். நான் ஒரு சாஸ்திரத்தையும் பின்பற்றுவதில்லை. என் சித்தமிசை குடிகொண்டுள்ள தெய்வத்தின் அனுமதி கேட்டு என் வாழ்க்கையை நடாத்துகிறேன். ஆகையால் நான் தவறிப் போவதில்லை; என் வாழ்க்கை சாஸ்திரத்துக்கு முரண்படாது என்றார் அவர்.
இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே
தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகோ நாம
சோடசோத்யாய:
-
பதினேழாம் அத்தியாயம்
சிரத்தாத்ரய விபாக யோகம்
அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.
மூன்றுவித சிரத்தை 1-7 மூன்றுவித உணவு 8-10 -மூன்று வித ஆராதனை 11-13 -மூன்றுவிதத் தபசு 14-19 -மூன்றுவித தானம் 20-22 -குறைகளை நிறையாக்குதல் 23-28.
அர்ஜுந உவாச
1. யே ஸாஸ்த்ரவிதிமுத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேஷாம் நிஷ்டா து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம:
அர்ஜுந உவாச, க்ருஷ்ண-அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, யே ஸாஸ்த்ரவிதிம் உத்ஸ்ருஜ்ய-எவர்கள் சாஸ்திர விதியை மீறி, ஸ்ரத்தயா அந்விதா: யஜந்தே-ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ, தேஷாம் நிஷ்டா து கா-அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம:-சத்துவமா அல்லது ரஜசா, தமசா?
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)
ஈண்டுக் கேள்வியொன்று கிளப்ப அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது. முன்னேற்றமடைய வேண்டுமென்று யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவனிடத்து சிரத்தையிருக்கிறது. ஆதலால் அவன் காமம், குரோதம், லோபம் இவைகளின் வசப்படமாட்டான். ஆனால் சாஸ்திரத்தைப்பற்றி ஒன்றும் நினையாது தேவாராதனை செய்கிற பாங்குடன் கர்மங்களில் ஈடுபடுகிறான். அப்படிச் செய்வதால் அவன் மேன்மையடைகின்றானா இடைநிலையில் ரஜோகுணத்துக்குட்பட்டு நின்றுவிடுகிறானா அல்லது தமோகுணத்துக்கு உரியவனாய்க் கீழ்மையடைகின்றானா? மனித வாழ்க்கையில் சாஸ்திரத்தின் ஆணை முற்றிலும் இன்றியமையாததா, என்பது கேள்வி.
ஸ்ரீபகவாநுவாச
2. த்ரிவிதா பவதி ஸ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்ருணு
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், தேஹிநாம் ஸ்வபாவஜா-ஜீவர்களிடம் இயற்கையான சுபாவத்தால் உண்டான, ஸா ஸ்ரத்தா-அந்த நம்பிக்கை, த்ரிவிதா பவதி-மூன்று வகையாகத் தோன்றுகிறது, ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி-சாத்விகம், ராஜசம், தாமசம் என, தாம் ஸ்ருணு-அதைக் கேள்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.
முற்பிறப்பில் செய்த வினைகள் சம்ஸ்காரங்களாக மனதில் பதிந்து அடுத்த ஜன்மத்தில் அந்த ஜீவனது இயல்பாக வடிவெடுக்கிறது. பிறகு இயல்புக்கு ஏற்றபடி அவன் புதிய ஜன்மத்தில் வினையாற்றுகிறான். இயல்பையும் வினையையும் கொண்டு ஒருவனிடம் படிந்துள்ள குணத்தைக் கண்டுபிடிக்கலாம்.
3. ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்ரத்தா பவதி பாரத
ஸ்ரத்தாமயோऽயம் புரு÷ஷா யோ யச்ச்ரத்த: ஸ ஏவ ஸ:
பாரத-பாரதா, ஸர்வஸ்ய ஸ்ரத்தா ஸத்த்வாநுரூபா பவதி-யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே அமைகிறது, அயம் புருஷ: ஸ்ரத்தாமய:-மனிதன் சிரத்தை மயமானவன், ய: யத் ஸ்ரத்த: ஸ:-எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ அவன்,
ஸ: ஏவ-அந்தப் பொருளேதான் ஆகிறான்.
பொருள் : பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.
விழிப்பும், மன எழுச்சியும், வகையுடன் விரைந்து வினையாற்றுதலும், வினையாற்றுதலில் உள்ள மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இத்தனையும் சேர்ந்து சிரத்தையெனப் பெயர் பெறுகிறது. இதுவரையில் மனிதன் அடைந்துள்ள பாங்கு, இனி அவன் அடையப்போவது, இவை யாவையும் அவன்பால் உள்ள சிரத்தையைக் கொண்டு அளந்துவிடலாம். வானை நோக்கி வீசிய கல், அதற்குக் கொடுத்த வேகத்துக்கு ஏற்ப உயரப் போகிறது. மரம் தன் உள்வலிவுக்கு ஏற்ப வானுற வளர்கிறது. அங்ஙனம் மனிதனிடத்துள்ள சிரத்தைக்கேற்ப அவன் மேலோன் ஆகிறான். நசிகேதன் என்னும் ரிஷி புத்ரன் சிரத்தையே வடிவெடுத்தவன் ஆனான். அவனுடைய தந்தை ஆற்றிய விச்வஜித் யக்ஞம் குறைபட்ட யக்ஞமாயிருந்தது. மைந்தனுக்கு அக்குறையைக் காணப்பிடிக்கவில்லை. ஆகவே சிரத்தையானது அவனுடைய மனதுதகத்து எழுந்தது. தந்தையின் ஆணைப்படி அவன் யமலோகத்துக்குச் சென்றான். பிதாவின் குறைபிலையை நிறைநிலையாக்கினான். உலக முன்னேற்றத்துக்கு ஏதுவான முயற்சி யாது என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் தானே ஆத்ம ஞானத்தை யமனிடமிருந்து கற்றுக் கொண்டான். இத்தனையும் சீரிய சிரத்தையால் அவனுக்கு அமைந்தன. ஒருவனுடைய சிரத்தையை அளப்பது அவனையே அளப்பதற்கு ஒப்பாகிறது.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
சிரத்தையானது வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வடிவெடுக்கிறது. அவைகளில் ஒன்று ஆராதனை அல்லது வழிபாடு. அது வருமாறு :
4. யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷõம்ஸி ராஜஸா:
ப்ரேதாந்பூதகணாம்ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா:
ஸாத்த்விகா தேவாந் யஜந்தே-ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர், ராஜஸா: யக்ஷரக்ஷõம்ஸி-ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்), அந்யே தாமஸா ஜநா:-மற்றத் தமோ குணமுடையோர், ப்ரேதாந் பூதகணாந் ச-பிரேத பூத கணங்களுக்கு, யஜந்தே-வேள்வி செய்கிறார்கள்.
பொருள் : ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.
அவரவர் தன்மைக்குத் தகுந்தாற்போன்று மனிதர் மனிதரோடு இணக்கம் வைக்கிறார்கள். நல்லவர் நல்லாரைச் சார்தலும், கெட்டவர்கள் கெட்டவர்களோடு இணக்கம் வைப்பதும் இயல்பு. அதேபோன்று தெய்வ வழிபாட்டிலும் படித்தரங்கள் பல அமைகின்றன. சாத்விக குணமுள்ள நல்லார் பரமாத்மாவைப் பற்றி நிற்கின்றார்கள். பரமாத்மாவின் சொரூபங்களாக சிவம், சக்தி, விஷ்ணு, கணபதி, சுப்ரமணியம் முதலிய தெய்வங்கள் இலங்குகின்றன. இயற்கையில் துஷ்டத்தனம் நிறைந்த சக்தியைக் கையாளுபவர்கள் ரஜோகுணத்தினின்று வந்த சிற்றியல்பை உடையவர்களேயாம். அத்தகையவர்கள் வழிபாட்டுக்காகவென்று கற்பித்துக்கொள்ளும் தெய்வங்களும் கொடூரம் வாய்ந்தவைகளாக, துஷ்டத்தனம் நிறைந்தவைகளாக இருக்கும். சோம்பலும் அக்ஞான இருளும் நிறைந்தவர்கள் அதற்கேற்ற இயற்கையின் பகுதியைப் பாராட்டுகிறார்கள். தமோகுணம் பொருந்தியவர்கள் கற்பிக்கும் வனதேவதைகள் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்கு செய்பவைகளாகத் தென்படும். இவர்களுள் சாத்துவிக சுபாவமுடையவர்கள் மிகச் சிலர். பெரும்பான்மையோர் போக்கு எத்தகையது எனின்:
5. அஸாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா:
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா:
6. கர்ஷயந்த: ஸரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ:
மாம் சைவாந்த:ஸரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஸ்சயாந்
யே ஜநா:-எந்த மக்கள், அஸாஸ்த்ரவிஹிதம்-நியமத்தை மீறி, தம்ப அஹங்கார ஸம்யுக்தா: - டம்பமும் அகங்காரமுமுடையராய், காமராக பல அந்விதா:-விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரம் தப: தப்யந்தே-கோரமான தவஞ் செய்கிறார்களோ.
ஸரீரஸ்தம் பூதக்ராமம் ச-உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும், அந்த:ஸரீரஸ்தம் மாம் ஏவ - அகத்திலுள்ள என்னையும், கர்ஷயந்த:-வருத்துகிறார்கள், தாந் அசேதஸ:-அந்த அறிவு கெட்டவர்கள், ஆஸுர நிஸ்சயாந் வித்தி= அசுர நிச்சய முடையோரென்றுணர்.
பொருள் : (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.
பொருள் : இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.
அசுர இயல்புடையவர்கள் புரியும் கொடுந்தவம் அவர்களுக்கே இன்பம் தருவதில்லை. முள்ளின்மீது படுத்துக்கிடக்கின்றனர்; கையைத் தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கின்றனர். பார்க்கின்றவர்களுக்கும் அக்காட்சி துன்பமளிக்கிறது. சூரியனையே உற்று நோக்குதல் போன்ற செயல்களால் இந்திரியங்களை அவர்கள் பாழாக்குகிறார்கள். மனதினுள் மனசாக்ஷியாக சர்வேசுவரன் வீற்றிருக்கிறார். சலனமடைந்த நீரில் சந்திர பிம்பம் நன்றாக விளங்காததுபோன்று பகட்டும், ஆணவமும், ஆசையும் நிறைந்துள்ள அவர்களது மனதில் ஈசுவர சான்னித்தியம் உணரப்படுவதில்லை. இறைவன் புறக்கணிக்கப்படுகிறார். இன்ப துன்பம் கடந்துள்ள அவர் துன்புறுத்தப்படுவர் போன்று காணப்படுகிறார். சான்றோர்கள் செல்லும் நெறி இதுவன்று. ஆதலால் இது சாஸ்திரத்துக்குச் சிறிதும் பொருந்தாது. இத்தகைய பாங்குடையவர்களே அசுரர் ஆவர்.
இன்னும் எவைகளைக்கொண்டு மக்களை வகைப்படுத்தலாம் என்று கேட்குமிடத்து அதற்கு விடை வருகிறது : (5-6)
7. ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய:
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஸ்ருணு
ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி-ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும், த்ரிவித: பவதி - மூன்று வகைப்படுகிறது, ததா யஜ்ஞ: தப: தாநம்-அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும்,
தேஷாம் இமம் பேதம்-அவற்றின் வேற்றுமையைக், ஸ்ருணு-கேள்.
பொருள் : ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.
யக்ஞம் அல்லது யாகம் என்பது நாளடைவில் தேவாராதனை என்னும் வடிவெடுத்துள்ளது. முன்னாளில் தீ மூட்டி அதன்மூலம் நிகழ்ந்த வழிபாடானது காலக்கிரமத்தில் ஆலய வழிபாடாக மாறியிருக்கிறது.
8. ஆயு:ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா:
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ருத்யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா:
ஆயு: ஸத்த்வ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி-உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி, விவர்தநா:, ரஸ்யா: ஸ்நிக்தா:-மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, ஸ்திரா: ஹ்ருத்யா: ஆஹாரா:-உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள், ஸாத்த்விகப்ரியா:-சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.
பொருள் : உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.
பிரீதியானது என்பது பசியை உண்டுபண்ணுவது என்றும், ஸ்திரமானது என்பது நெடுநேரம் தாங்குவது என்றும் பொருள்படும். சத்தில்லாத உணவு விரைவில் ஜீரணமாகிவிடுகிறது. அது உடலுக்கு பலம் கொடுக்காது. மற்று, ஜீரணம் பண்ணமுடியாத கடினமான உணவு ஜீரணக் கருவிகளைக் கெடுத்துவிடுகிறது. அதனால் ஆயுளும் குறைந்துபோம். இந்த உணவு வகைகள் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு மாறுபடுதல் இயல்பு. காலையில் உண்ணும் உணவு இலேசானதாக இருக்கவேண்டும். இரவில் உண்ட உணவில் பெரும் பகுதி தூங்கப்போகும்பொழுது ஜீரணமாயிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களில் உடலுக்குக் கதகதப்பைத் தரும் உணவை அருந்துதல் அவசியம். வெப்பம் நிறைந்த நாடுகளிலோ குளிர்ச்சி தருகிற உணவு வேண்டப்படுகிறது.
பகல் வேளையில் வேண்டியவாறு உணவு அருந்து, ஆனால் இரவில் அருந்தும் உணவைப் பெரிதும் குறைத்துவிடு.
9. கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந:
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கஸோகாமயப்ரதா:
கடு அம்ல லவண தீக்ஷ்ண-கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும், அதிஉஷ்ண-அதிகச் சூடு கொண்டன, ரூக்ஷ விதாஹிந:-உலர்ந்தன, எரிச்சலுடையன, ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: - இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர், து:க ஸோக ஆமயப்ரதா:-இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.
பொருள் : கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.
நாவில் சுரீலென்று பாய்கிறது; கண் சிவந்து கண்ணீர் சொட்டுகிறது; நாசியில் நீர் வடிகிறது; தலை சுழல்கிறது; வயிறு எரிகிறது-இத்தகைய பாங்குடையவைகள் ரஜோகுணத்தை வளர்க்கும் உணவுகள். ஆயுளைக் குறைக்கும் தன்மை இவைகளிடத்தில் உண்டு.
10. யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்
யத் போஜநம் யாதயாமம்-எந்த உணவு கெட்டுப் போனது, கதரஸம்-சுவையற்றது பூதி - அழுகியது, பர்யுஷிதம் ச-பழையது, உச்சிஷ்டம் ச-எச்சில் பட்டது, அமேத்யம் அபி-அசுத்தம், தாமஸப்ரியம்-தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.
பொருள் : பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.
மூன்று மணி நேரத்துக்கு முன்பு சமைக்கப்பட்ட உணவு யாமம் கழிந்த உணவாகிறது. ஆகையால் அது சுவையிழந்து விடுகிறது. மேலும் அது ஊசிப்போய் துர்நாற்றமெடுக்கிறது. முந்திய இரவு சமைத்தது பழைய உணவாகிறது. மற்றொருவர் உண்டு எஞ்சியிருக்கும் உணவு எச்சில்பட்டது அல்லது உச்சிஷ்டமானதாகிறது. இன்னும் சில உணவுகள் தீண்டுதற்கும் தகுதியற்றவைகளாகின்றன. தமோகுண இயல்புடையார் இத்தகைய உணவுகளை விருப்புடன் புசிக்கின்றனர்.
இனி, ஈசுவர ஆராதனையிலுள்ள மூன்று படித்தரங்கள் விளக்கப்படுகின்றன:
11. அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ருஷ்டோ ய இஜ்யதே
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்த்விக:
ய: விதித்ருஷ்ட:-எவர் விதிகள் சொல்லியபடி, யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ-வேள்வி புரிதல் கடமையென்று, இதி மந: ஸமாதாய-மனம் தேறி, அபலாகாங்க்ஷிபி: இஜ்யதே-பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ, ஸ ஸாத்த்விக:-அந்த வேள்வி சத்துவ குணமுடையது.
பொருள் : பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.
குழந்தையைப் பராமரிக்கும் தாய் கைம்மாறு கருதாது சேவையைத் தன் கடமையென்று செய்கிறாள். நல்லார் கடவுள் வழிபாடு செய்வது கைம்மாறு கருதியல்ல. கடவுளை வழிபடுவதே அவர்களது இயல்பு. அந்த ஆராதனை சாஸ்திர ஆணைக்கு முற்றும் ஒத்ததாயிருக்கிறது. சத்துவகுண மேலீட்டால் வரும் வேள்வி அத்தகையது. பாண்டவர் ஐவர் திரௌபதியுடன் வனவாசம் செய்தபொழுது அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எண்ணிக்கையில் அடங்கா. தர்மமே வடிவெடுத்துள்ள தங்களுக்கு இத்தனை துன்பங்கள் ஏன் வரவேண்டும்? என்று திரௌபதியானவள் கணவன் தர்மராஜாவிடம் கேட்டாள். அதற்கு விடையாக தர்மராஜா பகர்ந்ததாவது:- தேவீ, தூரத்தில் தென்படும் ஹிமயமலையைப் பார். மகிமை நிறைந்த அதை நான் வணங்குகிறேன். துன்பம் ஒன்றையும் நான் அறியேன். இங்ஙனம் நல்லதை வணங்குவது அவரது இயல்பு ஆயிற்று.
சாத்விகம் நிறைந்தவர்களுடைய மனப்பான்மைக்கு இது சான்றாகும்.
12. அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்
இஜ்யதே பரதஸ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்
து பரதஸ்ரேஷ்ட-பாரதரிற் சிறந்தாய்! தம்பார்தம் ஏவ ச பலம் அபி அபிஸந்தாய- ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு, யத் இஜ்யதே- வேள்வி வேட்கப் படுகிறதோ, தம் ராஜஸம் யஜ்ஞம் வித்தி-அது ராஜச வேள்வி என்று உணர்
பொருள் : பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!
கடையில் பண்டம் மாற்றுவது போன்று, தனது விருப்பத்தை நிறைவேற்றிவைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி வணங்குவது சிறந்த வழிபாடாகாது. தற்பெருமைக்காகவென்று பூஜைகள் பல செய்வாரும் உளர். தங்களை விளம்பரப்படுத்திகொள்வதற்காகத் தெய்வ வழிபாடு செய்கிறவர்களும் உண்டு. இவ்விருவித ஆராதனைகள் ரஜோ குணத்தினின்று உதிப்பவைகளாம்.
13. விதிஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்
ஸ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே
விதிஹீநம்-விதி தவறியது, அஸ்ருஷ்டாந்நம்-பிறர்க்குணவு தராததும், மந்த்ரஹீநம்-மந்திர மற்றது, அதக்ஷிணம்-தக்ஷிணையற்றது, ஸ்ரத்தாவிரஹிதம்-நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது, யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே-இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.
பொருள் : விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.
எந்த ஆராதனையில் குற்றமிருக்கிறதோ அது வேதநெறி வழுவியதாகும். அன்னதானம் எல்லா உயிர்களுக்குமிடையிலுள்ள தொடர்வை நிலைநாட்டுகிறது. அன்னம் வழங்காதவிடத்து வேற்றுமை பரவுகிறது. அதனால் கேடு விளைகிறது. நல்லெண்ணமில்லாத செயல் மந்திரமில்லாத செயல் எனப்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாகவுள்ள எண்ணமே அதற்குச் சிறப்பளிக்கிறது. ஆழ்ந்த எண்ணமில்லாத வழிபாடு யந்திரம் செய்கிற செயலுக்கு ஒப்பாகிறது. கடவுள் வழிபாடு சம்பந்தமான கிரியைகளைப் பிரதிபலன் எதிர்பாராது செய்துவைப்பவர் புரோகிதர் ஆகிறார். புரோகிதர்க்கும் அறிவு ஒழுக்கமுடைய மற்றவர்க்கும் வழங்கும் பொருள் தக்ஷிணை எனப்படுகிறது. தக்ஷிணை வழங்காத வழிபாடானது பிறரைப் பொருள் படுத்தாதது எனவே அது வழிபாடாகாது. ஊக்கமின்றி, விசுவாசமின்றிக் கடனைக் கட்டுவது போன்று செய்யப்படும் காரியம் சிரத்தையற்றதாகிறது. இத்தனை குறைபாடுகளோடு கூடியதால் அந்த ஆராதனை கீழ்த்தரமானதாகிறது.
மனிதன் சிரத்தையோடு எதைப் பூஜிக்கிறானோ அவன் அதுவாகிறான். அதற்குத் தவம் பெருந்துணைபுரிகிறது. தவம் யாது என்பது இனி விளக்கப்படுகிறது.
14. தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஸௌசமார்ஜவம்
ப்ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸாரீரம் தப உச்யதே
தேவ த்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம்-தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், ஸௌசம் ஆர்ஜவம் ப்ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச-தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை, ஸாரீரம் தப உச்யதே-இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
பொருள் : தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
தப: என்பது உலையில் உருக்குதல் என்று பொருள்படுகிறது. பூமியில் வெட்டிய தாதுக்களை உருக்கித் தூய உலோகங்களாக்கிறோம். துருப்பிடித்த உலோகங்களை உருக்கிப் புதியதாக்குகிறோம். அங்ஙனம் தவத்தின் மூலம் மனிதன் தன்னைப் புதுப்பிக்கிறான். மெய், மொழி, மனம் ஆகிய மூன்று கரணங்களோடு கூடியவன் மனிதன். இம்மூன்று கரணங்களையும் புதுப்பிப்பது தவம். அதன் விவரம் வருகிறது.
பரப்பிரம்மத்தின் வெவ்வேறு தோற்றங்கள் தேவர்கள் எனப்படுகின்றனர். பாரமார்த்திக வாழ்க்கையில் புதிய பிறவியெடுத்தவர்கள் பிராம்மணர். நல்வாழ்க்கையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பவர்கள் குருமார்கள். மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ஞானிகள். இவர்களை வணங்குவது மேன்மையடைதற்கு உற்ற உபாயம். நீராடி உடலைத் தூயதாய் வைத்திருத்தல் வேண்டும். காயத்தைக்கொண்டு செய்கிற செயல்களெல்லாம் ஒழுக்கம் நிறைந்திருக்குமிடத்து அது ஆர்ஜவம் அல்லது நேர்மையெனப் பெயர் பெறுகிறது. சம்போகத்துக்குக் கருவியாயிருப்பது உடல். இந்திரியங்கள் வாயிலாக வரும் அவ் இன்பங்கள் துன்பங்களாகப் பிறகு பரிணமிக்கின்றன. போகம் என்னும் குறைவின்கண் சென்றழியாது யோகம் என்னும் நிறைநிலையில் தன்னைக் காப்பது பிரம்மசரிய விரதமாம். தேகத்தால் மற்ற தேகங்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பது அஹிம்சை உடலைக் கொண்டு செய்கிறபடியால் இவையாவும் ஒன்று சேர்ந்து சரீர சம்பந்தமான தவமெனப்படுகிறது.
15. அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்
ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே
யத் அநுத்வேககரம் ஸத்யம் ச-சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, ப்ரியஹிதம்-இனியது, நலங் கருதியதுமாகிய, வாக்யம் ச-சொல்லுதல், ஸ்வாத்யாய அப்யஸநம் ஏவ-கல்விப் பயிற்சி, வாங்மயம் தப: உச்யதே-இவை வாக்குத் தவமெனப்படும்.
பொருள் : சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி – இவை வாக்குத் தவமெனப்படும்.
காயத்தால் அடித்துத் துன்புறுத்துவதைவிடக் கொடியது கடுஞ்சொல் சொல்லிக் காய்தல். தவசி ஒருவனுக்கு அது பொருந்தாது. சில வேளைகளில் உண்மையை உரைக்குங்கால் அது துன்பந்தருவதாகிறது. ஆதலால் பொய் பேசலாமாவென்றால் அது ஒண்ணாது. சத்தியத்தையே சொல்லவேண்டும். எப்போக்கில் சத்தியம் சொல்லவேண்டும்? ஏற்றுக்கொள்பவர்களுக்கு இன்பம் தருவதாய் அது இருத்தல் வேண்டும்.
மெய்ம்மையே மொழிந்து முகஸ்துதி செய்யலாமா? கடும் சொல்லைக் கேட்டுக் கெட்டுப்போனவர்கள் மிகக் குறைவு. இச்சகம் கேட்டு, இறுமாப்புற்றுக் கெட்டுப் போனவரோ பலர். ஆகையால் முகஸ்துதி மொழியலாகாது. கேட்கின்றவர்களுக்கு இதம் தரும் இன் சொற்களையே செப்புதல் வேண்டும்.
பரத்தினை சாக்ஷõத்கரித்த பெருமக்கள் பூரித்துப் பகர்ந்துள்ள ஆப்த வாக்கியங்களே வேதமெனப்படுகின்றன. இதை வேதாந்தமென்பது இன்னும் பொருத்தமுடையதாகும். வேத வேதாந்தம் எம்மொழியில் வேண்டுமானாலும் அமையலாம். அவை யாண்டும் அருள் நிறைந்திருக்கும். அத்தகைய சாஸ்திரங்களை வாய்விட்டு ஓதிப் பழகுவதால் சொல் சுத்தப்படுகிறது. பிறகு அது சாதகனது சொந்த அருள் மொழியாகவும் வடிவெடுக்கிறது. இங்குப் பகர்ந்துள்ள நான்கு பகுதிகளும் முறையாக அமையப்பெற்றதே வாக்கு மயமான தபசாகிறது.
16. மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ:
பாவஸம்ஸுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே
மந: ப்ரஸாத:-மன மகிழ்ச்சி, ஸௌம்யத்வம்-அமைதி, மௌநம்-மௌனம், ஆத்மவிநிக்ரஹ: - தன்னைக் கட்டுதல், பாவஸம்ஸுத்தி:-எண்ணத் தூய்மை, இதி ஏதத் மாநஸம் தப: உச்யதே-இவை மனத் தவமெனப்படும்.
பொருள் : மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத்தவமெனப்படும்.
சோர்வடையாது, குழப்பமடையாது, குதூகலத்தில் அமைதியுற்றிருத்தல் மனப்பிரசாத்மாம். சீரிய எண்ணங்களே உள்ளத்தில் உதிக்க இடந் தருதலும், கெட்ட எண்ணங்களை வரவொட்டாது தடுத்தலும், ஈசுவர சிந்தனை தைலதாரை போன்று ஊற்றெடுப்பதும் மௌன மெனப்படும். சொல்லிலும் செயலிலும் விடச் சிந்தனையில் தன்னடக்கம் பயிலுதல் சாலச்சிறந்தது. சிந்தனையில் அடக்கம் பழகியவனுக்கு வாயடக்கமும் மெய்யடக்கமும் தாமே வந்து அமைகின்றன. மனதில் உண்டாகிற உணர்ச்சி பாவமெனப்படுகிறது. வியவகார வேளையிலும் இந்த உணர்ச்சி தூயதாயிருத்தல் வேண்டும்.
17. ஸ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை:
அபலாகாங்க்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே
அபலாகாங்க்ஷிபி: யுக்தை: நரை:-பயனை விரும்பாத யோகிகளான மனிதர்களால், பரயா ஸ்ரத்தயா தப்தம்-உயர்ந்த நம்பிக்கையுடன், தத் த்ரிவிதம் தப:-மேற்கூறிய மூன்று வகைகளிலும் செய்யப்படும் தவம், ஸாத்த்விகம் பரிசக்ஷதே-சாத்வீகமெனப்படும்.
பொருள் : பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.
பயனை விரும்புமளவு தவம் புனிதத்தை இழக்கிறது. பயன் விரும்பாதிருப்பதும், செய்யும் தவத்தை நிறுத்தாதிருப்பதும் சாத்விகர்களது போக்கு. வெற்றியே வாய்த்திடினும் தோல்வியே தோன்றிடினும் அவைகளால் அலக்கழிக்கப்படாதிருப்பவர்கள் யோகத்தில் உறுதிபெற்றவர்களாகின்றார்கள். அவர்களது பெரு முயற்சியோ ஒருபொழுதும் தளர்ச்சியடைவதில்லை. முக்கரணங்களைக் கொண்டு அவர்கள் முறையாகப் பாடுபடுகின்றனர்.
18. ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்
யத் தப:-எந்த தவம், ஸத்காரமாநபூஜார்தம் ச ஏவ-மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் (போற்றுதலையும்), தம்பேந க்ரியதே-ஆடம்பரத்துக்காகவும் செய்வதுமாகிய, இஹ ராஜஸம் ப்ரோக்தம்-தவம் ராஜசமெனப்படும், தத் அத்ருவம் சலம்-அஃது நிலையற்றது; உறுதியற்றது.
பொருள் : மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.
தவம் ஒன்றுதான் தங்களைத் தக்கவர்களாகத் திருத்தியமைக்கிறது என்ற தெளிவு ராஜஸ இயல்புடையவர்களுக்கு வருகிறதில்லை. வெறும் வெளி வேஷத்துக்காகவே அவர்கள் அதைச் செய்கிறார்கள். தவமுடையவர்களென்று மற்றவர்கள் தங்களைப் பாராட்டி வரவழைக்க வேண்டும்; போற்றிப் புகழவேண்டும்; வீழ்ந்து வணங்க வேண்டும் - இப்பாங்குடன் தவமிழைப்பவர் போன்று அவர்கள் நடிக்கின்றனர். பாசாங்காகச் செய்யும் அத்தவம் சில நாட்களுக்கு நடைபெறும். பிறகு அது இல்லாது மறைந்து போகும். செய்யும் பொழுதே அதில் உறுதிப்பாடு ஒன்றும் இராது. இப்பூவுலகில் மட்டும் அது பெயரையும் புகழையும் தற்காலிகமாகத் தருகிறது.
19. மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப:
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ருதம்
யத் மூடக்ராஹேண-எந்த மூடக் கொள்கையுடன், ஆத்மந: பீடயா வா-தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு, பரஸ்ய உத்ஸாதநார்தம் க்ரியதே-பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய, தத் தப: தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தவம் தாமசம் எனப்படும்.
பொருள் : மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.
விவேகமில்லாதவர்கள் தவத்தின் உட்கருத்தை உள்ளபடி அறிகிறதில்லை. திரிவுபட அதைப் பொருள்படுத்துகிறார்கள். பட்டினி கிடந்து, உடலைக் குலைத்து, அதைத் தீயில் வாட்டி, நீரில் நனைத்துச் சிறிது சிறிதாகத் தற்கொலை செய்வது போன்று தங்களையே அவர்கள் துன்புறுத்திக்கொள்கிறார்கள். அல்லது ஏவல் முதலிய மாந்திரிகச் செயல்களால் பிறரை அழிக்க அவர்கள் முயலுகிறார்கள். அக்ஞான இருளில் தோன்றிய இத்தகைய தபசு தாமசமெனப்படுகிறது.
20. தாதவ்யமிதி யத்தாநம் தீயதேऽநுபகாரிணே
தேஸே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்
தாதவ்யம் இதி யத் தாநம்-கொடுத்தல் கடமையென்று கருதி எந்த தானம், தேஸே காலே ச பாத்ரே ச-தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும், அநுபகாரிணே தீயதே - கைம்மாறு வேண்டாமல் கொடுக்கப் படுகிறதோ, தத் தாநம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம்-அந்த தானம் சாத்வீகமென்பர்.
பொருள் : கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.
செய்த உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் எதிர்பார்ப்பது வியாபாரமாகிறது; அது தானமாகாது. தனக்குப் பயன்படும் பொருள் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டுமென்று மனமுவந்து கொடுப்பது தானம். கொடுத்த பொருள் யாரிடம் சென்றால் பலருக்குப் பெரிதும் பயன்படுமோ அவரே தகுந்த பாத்திரமாகிறார். ஒரு நாட்டிலிருப்பவர்க்கு வேறு ஒரு நாட்டிலுள்ள நிலம் அல்லது பொருளை தானம் பண்ணுவது தக்கவிடத்தில் செய்யப்பட்டதாகாது. இருக்குமிடத்திலேயே நன்கு பயன்படுவதே சிறந்த தானமாகிறது. பயன்படுத்துகிற காலத்துக்கு மிக முன்போ பின்போ கொடுப்பது காலத்தில் செய்த தானமாகாது. தக்க தருணத்தில் பயன்படும்படி தானம் செய்வதே மேலானது.
21. யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஸ்ய வா புந:
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்
து யத் பரிக்லிஷ்டம் ச-ஆனால் மன வருத்தத்துடன், ப்ரத்யுபகாரார்தம் வா-கைம்மாறு வேண்டியும், பலம் உத்திஸ்ய புந: தீயதே-பயனைக் கருதியும் கொடுக்கப்படுகிறதோ, தத் தாநம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த தானத்தை ராஜசமென்பர்.
பொருள் : கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.
தானம் கொடுக்கும் விஷயத்தில் வலது கை செய்வதை இடது கை அறியலாகாது என்பது கோட்பாடு. அதாவது அவ்வளவு அடக்கத்துடனும் பணிவுடனும் ஊக்கத்துடனும் பொருளை எடுத்து மற்றவர்களுக்கு வழங்கவேண்டும். ரஜோகுணமுடையவனது பாங்கு இதற்கு முற்றிலும் மாறானது. ராஜஸ சுபாவமுடையவனுக்குத் தன் பொருளைப் பிறர்க்குக் கொடுக்க விருப்பமில்லை. வருத்தப்பட்டுக்கொண்டு அரை மனதோடு தானம் பண்ணுகிறான். அப்படிக் கொடுக்கும்பொழுதும் அது தனக்குப் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்று எதிர் பார்க்கிறான். தான் ஒரு மடங்கு தானம் செய்தால் தெய்வம் தனக்குப் பத்து மடங்காகப் பலனைக் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறான். இது கொடுப்பவர் ஏற்பவர் ஆகிய இருதரத்தாருக்கும் துன்பம் விளைவிக்கிறது. ரஜோகுணமுடையவனிடத்து மற்றொரு மனப்பான்மையுண்டு. ஒரு பொது ஸ்தாபனத்துக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ அவன் ஏதாவது கைங்கரியம் செய்தால் அதைபற்றித் தனக்கு நிரந்தரமான விளம்பரம் வேண்டுமென்கிறான். தன்னுடைய பெயரை மிக முன்னணியில் பகட்டுடன் பொறித்து வைக்கவேண்டுமென்பது அவனுடைய விருப்பம். தன்னுடைய சொந்தப் பதுமையை அத்தகைய பொது இடங்களில் வைத்துப் பாராட்டவேண்டுமென்பதும் அம் மனிதனுடைய பெருவிருப்பமாகும். இனி, தேவாலயங்களில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்தப் பெயர் சொல்லி அர்ச்சனை பண்ண வேண்டுமென்று விரும்புகிறான். இத்தகைய விருப்பமும் ரஜோ குணத்தினின்று உதித்ததாம்.
22. அதேஸகாலே யத்தாநமபாத்ரேப்யஸ்ச தீயதே
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ருதம்
யத் தாநம் அஸத்க்ருதம்-எந்த தானம் மதிப்பின்றி, அவஜ்ஞாதம்-இகழ்ச்சியுடன், அதேஸகாலே ச-தகாத இடத்தில், தகாத காலத்தில், அபாத்ரேப்ய தீயதே-தகாதர்க்குச் தரப் படுகிறதோ,
தத் தாமஸம் உதாஹ்ருதம்-அந்த தானம் தாமசமெனப்படும்.
பொருள் : தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.
புனிதமற்றதும் வசிக்க உதவாததும் தகாத இடமாகிறது. தூங்கும் வேளை, உடலின் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் வேளை, வேறு அலுவல்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் வேளை-ஆகிய இவைகள் தானம் செய்தற்குத் தகாத காலங்களாம். ஒழுக்கம் கெட்டவர்கள், அடக்கம் பயிலாதவர்கள், பொதுநல சேவை செய்யாதவர்கள், பணத்தை வீண் விரயம் செய்பவர்கள் ஆகியவர்கள் தானத்துக்குத் தகுதியற்றவர்களாம். முகமலர்ச்சியோடு கூடி வரவேற்பும், உபசாரமும் இல்லாது போவதுமன்றி, புன் மொழிகளால் இகழ்ந்து பேசி, ஏற்பவர்களுக்கு மன வருத்தம் உண்டுபண்ணிக் கொடுக்கும் தானம் தாமசமானது.
ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்க உத்தியோகஸ்தர் போன்றவர்களின் வற்புறுத்தலுக்காக இணங்கிக்கொடுக்கும் தானம் தமோகுணமானது. லஞ்சம் அல்லது கைக்கூலி கொடுப்பதற்குப் பதிலாக ஏதேனும் ஒரு பொதுநலத்துக்கு நன்கொடை கொடுப்பதாக வெளிக்குக் காட்டிக்கொள்வது பொருத்தமான தானமாகாது. ஒழுக்கமின்மையையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அத்தகைய தானம். அது தமோகுணத்தைச் சேர்ந்ததாகும்.
செய்கின்ற யக்ஞ, தான, தபக் கர்மங்களில் குற்றம் வாராது காப்பது எப்படி என்ற வினா எழலாம். அதற்கு விடை வருகிறது :
23. ஓம்தத்ஸதிதி நிர்தேஸோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத:
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா
ஓம் தத் ஸத் இதி த்ரிவித:-ஓம் தத் ஸத்” என்ற மூன்று விதமாக, ப்ரஹ்மண: நிர்தேஸ: ஸ்ம்ருத:-பிரம்மத்தைக் குறிப்பது என்பர், தேந புரா-அதனால் முன்பு, ப்ராஹ்மணா: வேதா: ச யஜ்ஞா: ச-பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும், விஹிதா:-வகுக்கப்பட்டன.
பொருள் : ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.
ஓம் தத் ஸத் என்ற மூன்று பெயர்களால் பிரம்மம் சர்வ சாதாரணமாக அழைக்கப்படுகிறது. மூன்றும் மூன்று குறிப்புப் பெயர்களாக அதற்கு அமைந்துள்ளன. அது ஓசையாகப் பரிணமிக்கிறது. ஓசையினின்று உலகெலாம் உண்டாகிறது. ஆதலால் அது நாதப்பிரம்மம் எனப்படுகிறது. ஓம் என்பது அகிலாண்டத்தின் ஓசையின் தொகை. ஓசையின் தொகை ஓம்கார சொரூபமாக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது. பிரணவம் என்றும் அதைப் பகர்வது உண்டு. ஆக, பிரம்மத்தை ஓம்கார வடிவினன் என்பது ஒவ்வும். கற்புடைய மாது ஒருத்தி தன் கணவனை அவர் என்று குறித்துச் சொல்லுகிறான். அங்ஙனம் ஞானிகள் அது என்று சொல்லும்பொழுதெல்லாம் பிரம்மத்தைக் குறிக்கிறார்கள் (தத்) என்னும் சொல் அது என்று பொருள்படுகிறது. பெரியபொருளைப் பெயரிட்டு அழையாது வெறும் தத் என்ற பதத்தால் வேதம் அதைப் பல்கால் குறிப்பிடுகிறது.
எது சத்தியமாயுள்ளதோ அது ஸத் எனப்படுகிறது. காலத்தால் இடத்தால் அடிபடாதிருப்பது பிரம்மம். எனவே அது ஸத் என்னும் பெயர் பெறுகிறது. ஆக, ஓம் தத் ஸத் என்பதன் பொருள் ஓசை வடிவமாயுள்ள அந்த பிரம்மமே மெய்ப்பொருள் என்பதாம்.
பாலினின்று மோரும் வெண்ணெயும் உண்டாகின்றனவெனினும் சிறந்தபொருளாகிய வெண்ணெயே பாலினின்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரம்மத்தினிடத்திருந்து அனைத்தும் உண்டாயின வெனினும் அவைகளுள் சிறப்பாயுள்ள அந்தணர், வேதம், வேள்வி முதலியன உண்டாயினவென்று சொல்லப்படுகின்றன. உயிர் வகைகளுள் சிறந்தவர்கள் செந்தண்மையே வடிவெடுத்துள்ள அந்தணர். அறிவைப் புகட்டும் நூல்களுள் சிறந்தவைகள் வேதம். செயல்களுள் புனிதமும் நல்லுணர்ச்சியும் நிறைந்தவைகள் வேள்வி அல்லது யக்ஞம். நாத பிரம்மமாகத் தோன்றியுள்ள பிரபஞ்சத்தில் இம் மூன்றும் முக்கியமானவைகளென்று குறிப்பிடப்படுகின்றன.
இம் மந்திரங்கள் எதற்கு உதவுகின்றனவென்று இனி இயம்பப்படுகிறது :
24. தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஜ்ஞதாநதப:க்ரியா:
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம்
தஸ்மாத் ப்ரஹ்மவாதிநாம்-ஆதலால், பிரம்மவாதிகள், விதாநோக்தா: யஜ்ஞ-விதிப்படி புரியும் வேள்வி, தாந தப: க்ரியா:-தவம், தானம் என்ற கிரியைகள், ஸததம் ஓம் இதி-எப்போதும் ஓம் என்று, உதாஹ்ருத்ய ப்ரவர்தந்தே-தொடங்கிச் செய்யப்படுகின்றன.
பொருள் : ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ஓம் என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.
குறைபாடில்லாத கர்மமில்லை. குறைபாட்டை முகாமையாகக் கொண்டு கர்மம் செய்யாமலிருக்க முடியாது. தேகமெடுத்தவன் கர்மம் செய்யாமலிருக்க முயற்சி பண்ணுவதும் பொருந்தாது. கர்மத்தில் உள்ள அக்குறைபாட்டைப் போக்குதற்குக் கர்மம் ஒவ்வொன்றும் ஓம் என்று உச்சரித்துக் கொண்டு துவக்கப்படுகிறது. அதாவது இயற்கையின் நடைமுறைக்கு ஒத்ததாக ஒவ்வொரு செயலும் இருக்கவேண்டும். இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. ஜீவர்களின் முன்னேற்றத்துக்கு அந்த ஒழுங்குப்பாடு துணைபுரிகிறது. அருள் நிறைந்த அந்தத் திட்டத்தை உணர்ந்து அதற்கேற்றபடி வினையாற்ற வேண்டும். இச்செயல் நாளடைவில் விக்கினேசுவர பூஜையாக வடிவெடுக்கலாயிற்று. விக்கினேசுவரனே ஓம்கார வடிவினன். செய்கிற வினை ஒவ்வொன்றிலுள்ள விக்கினத்தை நீக்குதற்கும், அதை வெற்றிகரமாக முடித்தற்கும் விநாயக வணக்கம் செய்யப்படுகிறது. ஓசையெல்லாம் ஓங்காரத்தில் ஒடுங்குவது போன்று தனித்த செயல்களெல்லாம் இயற்கைத் திட்டத்திற்கு ஒத்திருக்கவேண்டும். அப்பொழுது அது குறையின்றி நிறைவேறுகிறது. ஓம் என்று உச்சரித்து ஒவ்வொரு கர்மத்தையும் துவக்குவதன் உட்கருத்து இதுவேயாம்.
25. ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா:
தாநக்ரியாஸ்ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி:
தத் இதி-தத் என்ற சொல்லை உச்சரித்து, பலம் அநபிஸந்தாய-பயனைக் கருதாமல், விவிதா: யஜ்ஞதப:க்ரியா:-பல வகைப்பட்ட வேள்வியும் தவமும், தாநக்ரியா: ச-தானமுமாகிய கிரியைகள், மோக்ஷகாங்க்ஷிபி: க்ரியந்தே-மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
பொருள் : தத் என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
தத் என்று பிரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்ற பொழுது எல்லாம் அவன் உடைமை யென்றும், எல்லாம் அவன் செயல் என்றும் எண்ணம் வருகிறது. கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது தனக்கென்று செய்யப்படும்பொழுது அதில் தோஷம் அதிகரிக்கிறது. போர்புரிதல் போன்ற கர்மங்கள் கேடு நிறைந்தவைகளாகும். ஆனால் சில நெருக்கடியில் அத்தகைய கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும். உலக நடைமுறையில் ஈசனது பெருந்திட்டத்தை அறிபவன் அவை யாவும் ஈசன் செயல் என்று கருதி அவனுடைய ஆராதனையாக அச்செயலைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் கர்மபலன் தன்னுடையதாகாது என்கிற தெளிவு ஏற்படுகிறது; பரத்திலேயே நாட்டமதிகரிக்கிறது. அதனால் முமுக்ஷúத்வம் வந்தமைகிறது. பின்பு யக்ஞமும் தபசும் தானமும் அதற்கேற்ற சாதனங்களாக மிளிர்கின்றன.
26. ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே
ஸத் இதி-ஸத் என்ற சொல், ஏதத் ஸத்பாவே-உண்மை யென்ற பொருளிலும், ஸாதுபாவே ச ப்ரயுஜ்யதே-நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது, பார்த-பார்த்தா, ததா ப்ரஸஸ்தே கர்மணி-புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும், ஸத் ஸப்த: யுஜ்யதே -ஸத் என்ற சொல் வழங்குகிறது.
பொருள் : ஸத் என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ஸத் என்ற சொல் வழங்குகிறது.
முக்காலத்திலும் மாறாத, அழியாத, நகராத பிரம்மமே ஸத் என்று சொல்லப்படுகிறது. பிரமமம் ஒன்றுதான் உள்ளது. பிரபஞ்சமும் அதிலுள்ள ஜீவர்களும் அஸத் என்றாலும் புத்திரன் பிறந்தால் அவனைக் குறித்துச் சிரஞ்சீவி என்கிறோம். நிலையற்ற உயிரை நிலையானதென்று சொல்லுவது உபசாரத்துக்காக. லௌகீக வாழ்க்கை முறையில் உண்மையல்லாததை உண்மை யென்று பாவித்தல் வேண்டும் என்ற கருத்துடன் ஸத் என்ற சொல் வழங்கப்படுகிறது.
சாது பாவம் என்பது நன்மையை வளர்க்கும் கருத்து. பிரம்மம் ஒன்றே நிர்தோஷம் அல்லது குற்றமற்றது. பாக்கி அனைத்திடத்தும் சிறிதளவாவது கேடு உண்டு. கேடு உடைய மனிதனைக் கெட்டவன் என்று சொல்லலாகாது. அவனை நல்லவன் என்றே சர்வகாலமும் சொல்லிக்கொண்டிருந்தால் நல்லவனாகி வருகிறான். சாது பாவம் உலகத்தைச் சீர்திருத்த உற்ற உபாயமாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான சிறந்ததொரு கோட்பாடு ஆகிறது. இதற்காகவும் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது.
இனி, ஸ்வஸ்தி வசனமும் ஸத் எனப்படுகிறது. மங்கள மல்லாததை மங்களமென்று சொல்லி மனதை ஒழுங்குபடுத்துதற்கு அது உதவுகிறது. பொய்யானதெல்லாம் பொருந்தியது நம் உடல். அதை மெய் யென்று மொழிகிறோம். மங்களம் வேண்டி அங்ஙனம் மொழிகிறோம். விவேகமுடையவர்க்கு விவாகத்தைவிடக் கொடியது ஒன்றுமில்லை யென்பது விளங்கும். மனிதனுடைய வீழ்ச்சிக்கு விவாகம் காரணம். அமங்களமான மணச்சடங்கை சுபகாரியம் என்கிறோம். அஸத் தை ஸத் என்கிறோம். மங்களமல்லாததை மங்களமாக்குதற்கு ஸத் என்ற சொல்லை வழங்குகிறோம்.
பொய்யானதும், கெட்டதும், பொருந்தாததுமான உலக வாழ்வை நித்தியமானதென்றும், நலம் நிறைந்ததென்றும், முற்றிலும் பயன்தர வல்லதென்றும் எண்ணுவது அவசியம். வாழ்வில் இனிமை காண்பதற்கு அது உற்ற உபாயமாகிறது. ஸத் என்னும் சொல் அத்தகைய மனநிலையை வருவிக்கிறது.
இன்னும் எதற்கெல்லாம் ஸத் என்னும் சொல் வழங்கப்படுகிறது? விடை வருகிறது :
27. யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஸதிதி சோச்யதே
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே
யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி: ஏவ-வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும், ஸத் இதி உச்யதே-ஸத் எனப்படுகிறது, ச ததர்தீயம்-மேலும் பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும்,
கர்ம ஏவ ஸத் இதி அபிதீயதே-கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.
பொருள் : வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ஸத் எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ஸத் என்றே சொல்லப்படும்.
யாகம், தபசு, தானம் ஆகியவைகளை முறையாகச் செய்தால் அவைகள் இயல்பாகவே ஸத் என்னும் சொல்லுக்கு இலக்காய் இருக்கின்றன. சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். உயரமாக வீடு கட்டுதற்கு முதலில் மூங்கில், பலகை முதலியவைகளைக் கொண்டு சாரம் கட்டுகிறோம். வீடு கட்டுவது நிலைத்துள்ள செயல். சாரம் கட்டுவது நிலையற்ற செயல். அப்படியிருந்தும் சாரம் கட்டினால்தான் வீடுகட்ட முடியும். நிலைத்த செயலுக்குத் துணை புரிகின்றவளவு சாரம் கட்டுதல் இன்றியமையாத செயல் ஆகிறது. யாகம், தபசு, தானம் ஆகியவைகள் தம்மளவில் நிலைத்த செயல்கள் ஆகா. நிலைபொருளாகிய தெய்வத்தை அடைதற்கு அவைகள் பயன்படுகின்றனவாதலால் அவைகள் ஸத் கர்மங்கள் எனப்படுகின்றன. முறை தவறிச் செய்யப்படும் பொழுதும் ஸத் என்ற மந்திரத்தை உச்சரித்துச் செய்துவந்தால் அவைகளிடத்துள்ள குறைபாடுகள் நீங்கி அவைகள் நாளடைவில் நலம் பெறுகின்றன. அதற்கும் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். பத்ரிகாச்ரமம் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன் இந்தியாவின் தென்முகமாக நடந்து செல்வானானால் அது முறை தவறிய முயற்சி. தனது விருப்பம் ஹிமயமலையில் பத்ரிகாச்ரமம் போய்ச் சேர்வது என்று அவன் வழி நெடுகச் சொல்லி வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது விஷயம் தெரிந்த ஆள் ஒருவன் அவனுடைய செயலைத் திருத்தியமைக்கத் தோன்றி வருவான். தென் திசையை நோக்கிப் போகலாகாது. வட திசையை நோக்கிப் போகவேண்டும் என்ற ஆணை பிறக்கும். பிறகு அவன் பத்ரிகாச்ரமம் போய்ச் சேருவான். அங்ஙனம் கடவுளைக் குறித்துச் செய்யும் செயல் துவக்கத்தில் குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் திருத்தியமைக்கப் பெறுகிறது. தன் பொருட்டுச் செய்யும் கர்மம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது கேடுடையதாகிறது. கடவுள்பொருட்டுச் செய்யப்படும் கர்மம் எவ்வளவு குற்றமுடையதாயிருந்தாலும் அது விரைவில் ஸத் கர்மமாய் மாறி மேன்மையுறுகிறது.
28. அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத்
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ
பார்த-பார்த்தா, அஸ்ரத்தயா ஹுதம் தத்தம்-அசிரத்தையுடன் வேள்வியும் தானமும், தப்தம் தப: ச-செய்யும் தவமும், யத் க்ருதம்-கர்மமும், அஸத் இதி உச்யதே-அஸத் எனப்படும்,
தத் இஹ நோ ப்ரேத்ய ச ந-அவை இம்மையிலும் பயனில்லை மறுமையிலும் இல்லை.
பொருள் : அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், அஸத் எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;
யாகத்தையும் தானத்தையும் தபசையும் முறையாகச் செய்தால் பரபோதம் மேலிடுகிறது. ஜீவபோதம் தேய்கிறது. இச் செயல்களைச் சுயநலத்துடன் செய்தால் ஜீவபோதம் மேலும் வளர்கிறது. இயற்கையினின்று வருகிற இன்பங்களை அனுபவிப்பதற்கு ஜீவபோதம் வேண்டும். பரம்பொருளிடத்திருந்துவரும் பேரானந்தத்தை அனுபவிக்கப் பரபோதம் வேண்டும். சிரத்தையில்லாத மனிதனுக்கு ஜீவபோதமும் இல்லை; பரபோதமும் இல்லை.
சிரத்தையில்லாது செய்யும் கர்மம் எத்தகையதாயிருந்தாலும் அது எவ்வுலகுக்கும் பயன்படாது. கர்மம் செய்வதால் யந்திரங்கள் முன்னேற்ற மடைவதில்லை. அவைகள் ஒழுங்காக நன்கு உழைக்கின்றன. ஆனால் எப்பொழுதும் அவைகள் யந்திரமாகவே இருக்கின்றன. சிரத்தையில்லாத மனிதனும் யந்திரம் போன்று ஆய்விடுகிறான். யாகம், தானம், தபசு ஆகியவைகளுக்குப் புறம்பாயுள்ள மற்றக் கர்மம் என்று சொல்லுவது, தனியாக இவ்வுலகுக்கு மட்டும் பயன்படுகிற கல்வி, செல்வம், உடல்திட்பம் முதலியன அடங்கப்பெற்ற செயலாம். பொருள் சம்பாதிப்பதை அதற்குச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். சிரத்தையில்லாதவன் பொருள் சம்பாதிக்க முடியாது. தற்செயலாய் அவனுக்குப் பொருள் சேர்ந்தால் அவன் அதைக் காப்பாற்றமுடியாது. அதை அனுபவிக்கவும் அவனால் இயலாது. யாருக்கும் பயன்படாது அது விரயமாய்விடும். சிரத்தையுடன் செய்யப்படுகிற கர்மங்களெல்லாம் நன்மை பயக்கின்றன. சிரத்தையுடன் செய்யும் பொழுதே ஓம் தத் ஸத் என்று உச்சரித்துக்கொண்டு செய்தால். அம்மூன்று சொற்களுக்கும் அடிப்படையாகவுள்ள பரம் பொருளை நினைந்து செய்ததாகும். அதனால் கர்மங்களில் இயல்பாயுள்ள கேடுகள் நீங்கி நலம் நிறைகிறது. பரத்தைப்பெற அதுவே உற்ற உபாயமாகிறது.
-
பதினெட்டாம் அத்தியாயம்
மோஷ சந்நியாச யோகம்
சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும். எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.
அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம் என்று மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.
ஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6 -தாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8 -ஸாத்விக தியாகம் வேண்டும் 9-12 -கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16 -ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 -முக்குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40 -நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48 -கர்மயோகமே கர்மஸந்யாஸமாகிறது 49-57 -அஹங்காரம் கொடியது 58-60 -எல்லாம் ஈசன் செயல் 61-62 -உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63 -சரணாகதி தத்துவம் 64-66 -கீதைக்கு அதிகாரி யார்? 67-71 -ஞானோதயம் 72-73 -ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.
அர்ஜுந உவாச
1. ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஸ ப்ருதக்கேஸிநிஷூதந
அர்ஜுந உவாச மஹாபாஹோ-அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய், ஹ்ருஷீகேஸ-ஹ்ருஷீகேசா, கேஸிநிஷூதந-கேசியைக் கொன்றவனே, ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம்-சந்நியாசத்தின் இயல்பையும், த்யாகஸ்ய ச-தியாகத்தின் இயல்பையும், ப்ருதக் வேதிதும் இச்சாமி-பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
ஏற்கனவே இயம்பியுள்ள முக்கியமான கோட்பாடுகள் முடிவுரையில் மீண்டும் ஒருமுறை விமர்சனம் செய்யப்படுகின்றன. ஆக, இந்த அத்தியாயத்தின் முதற்பகுதியானது யோகங்களையெல்லாம் தொகுத்து சமரசப்படுத்தும் பாங்கில் அமைகிறது. ஒரே கோட்பாட்டை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் விளக்கலாம். புதிய வடிவம் பெறுமிடத்து அது புதிய கோட்பாடாகவே தென்படும். சந்தர்ப்ப பேதத்தை முன்னிட்டும் பழைய கோட்பாடு புதிய போதனை போன்று தென்படுவது இயல்பு. யானையின் அவயவம் ஒவ்வொன்றுக்கும் தன்னளவில் அழகு இருக்கிறது. அவைகளையெல்லாம் தொகுத்து யானை வடிவத்தில் பார்க்குங்கால் அவைகளின் அழகு பன்மடங்கு அதிகரிக்கிறது. பதினெட்டு அத்தியாயங்களும் பதினெட்டு யோகங்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றன. அவைகள் அனைத்துக்கும் பொதுவாக யோக சாஸ்திரம் என்னும் பெயர் இந்த அத்தியாயத்தில் பூர்த்தி பெறுகிறது.
கேசி என்ற அசுரன் குதிரை வடிவெடுத்துக் கிருஷ்ணனை விழுங்க வாயைத் திறந்துகொண்டு வந்தான். கண்ணனோ தன் கையை அதன் வாயினுள் நீட்டி வயிற்றுக்குள் செலுத்திக் குடலைக் கசக்கிக் கொன்றுவிட்டான். ஆதலால் அவனுக்கு கேசி நிஷூதனன் என்ற பெயர் வந்தது. கை வலிவை இங்குக் காட்டியதால் அவன் மகாபாகு என்றும் அழைக்கப்படுகிறான். இச் செயல்களுக்கிடையில் அவன் இந்திரியங்களுக்கெல்லாம் இறைவனா யிருந்தமையால் ஹிருஷீகேசனாகிறான்.
அத் 5-சுலோ 13, அத் 9-சுலோ 28 இவைபோன்ற இடங்களில் பகவான் சந்நியாசத்தைப் பற்றிப் பகர்ந்தார்.
அத் 4-சுலோ 20, அத் 12-சுலோ 11 இவைபோன்ற இடங்களில் தியாகத்தைப்பற்றிச் சொன்னார். இவ்விரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன வென்பது கேள்வி.
வாழ்க்கையைப்பற்றிய கோட்பாடுகளில் சந்நியாசமும் தியாகமும் மிகச் சீரியவைகளாகும். அவைகளை வெறும் சாஸ்திரத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியாது. தீப்பற்றி எரிவது போன்று படம் வரையலாம். ஓவியத்தில் தீட்டிய தீயானது உணவு சமைக்க உதவாது. உண்மையாக எரிந்துகொண்டிருக்கும் தீ ஒன்றே அச்செயலுக்கு உதவும். எரிகின்ற தீ போன்றவை தியாகமும் சந்நியாசமும். யார் ஒருவர் சந்நியாசியோ அல்லது தியாக மூர்த்தியோ அவர்தான் அவ் உயர் நிலையை மற்றவர்க்கு வழங்க முடியும். ஸ்ரீ கிருஷ்ணன் அச் செயலைச் செய்யத் தகுந்தவரா என்ற கேள்வி எழுகிறது.
அர்ஜுனனால் அவர் ஹிருஷீகேசன் என்றும் மஹாபாகு என்றும் கேசிநிஷூதனன் என்றும் அழைக்கப்பட்டார். சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்துப் பரிபூரணன் ஆகும் வரையில் உள்ள படித்தரங்கள் எல்லாம் இம் மூன்று சொற்களில் அடங்கியிருக்கின்றன. அசுரனைக் கொல்லுதல் தீமையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறுதற்கு அறிகுறியாகும். எல்லா உயிர்களும் தீமையை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் உயிருக்கும் அதனதன் நிலையில் எதிர்ப்பும், பகையும், தீமையும் உண்டு. இயற்கையில் யாண்டும் இக்காட்சியைக் காணலாம். தீமையை வெல்லுதலில் மற்ற உயிர்கள் ஏகதேசம் வெற்றி பெறுகின்றன; மனிதனோ பெரும் வெற்றி பெறுதற்கு அடையாளமாகக் கிருஷ்ணன் பெருந் தோள்வலிவு பெற்றவன் (மகாபாகு) ஆகிறார். உடல் அமைப்பில் பரிபூரணநிலை அவரிடத்திருக்கிறது. மனத்தகத்து உள்ள கேடுகள் இந்திரியங்கள் மூலம் வெளியாகின்றன. கிருஷ்ணனோ இந்திரியங்களையும் மனதையும் முற்றிலும் வென்றவர். ஆதலால் அவருக்கு ஹிருஷீகேசன் என்ற பெயர் வந்தது. ஜன்மம் எடுத்தவனது பரிபூரண நிலைக்கு எடுத்துக்காட்டு ஸ்ரீ கிருஷ்ணன். யோகேசனாகிய அவரே சந்நியாசத்தையும் தியாகத்தையும் விளக்கவல்லவர். அத்தகையவரிடம் அர்ஜுனன் இக்கேள்வி கேட்டது முற்றிலும் பொருத்தமானதாம்.
ஸ்ரீபகவாநுவாச
2. காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது:
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம்-விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது, ஸந்ந்யாஸம் கவய: விது:-சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர், ஸர்வகர்மபல த்யாகம்-எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல், த்யாகம் விசக்ஷணா: ப்ராஹு-தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
காமிய கர்மம் என்பது இம்மையில் தனக்குப் பட்டம், புகழ், பேர், புத்திர பாக்கியம், செல்வம், தீர்க்காயுள், ஆரோக்கியம் முதலியன அமையவேண்டுமென்று ஆசைப்படுவதும், மறுமையில் சுவர்க்காதி பதவிகள் வேண்டுமென்று விரும்புவதுமாம். இத்தகைய ஆசைகளை ஒழிப்பது சந்நியாசம். இது சில ஞானியர்கள் கருத்து. வேறு சில ஞானிகள் நித்திய, நைமித்திய, காமியமாகிய எல்லாக் கர்மங்களின் பயனை விட்டுவிடுவதே தியாகம் என்கின்றனர். சந்நியாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒரே கருத்தைத்தான் விளக்குகின்றன. அற்றது பற்று எனில் உற்றது வீடு. இது விஷயத்தில் பேரறிஞர்களுக்கிடையில் அபிப்பிராய வித்தியாசமில்லை. தனது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா யிருப்பவைகளை யெல்லாம் துறந்துவிட வேண்டும். காமிய கர்மங்கள் புதிய பந்தங்களை உண்டுபண்ணுகின்றன. அவைகளை நிறைவேற்றுதற்குப் புதிய பிறவிகள் எடுத்தாகவேண்டும். பிறவிப்பிணி வேண்டாமென்கிற விவேகிகள் அதற்குப் புதிய வித்துக்களை விதைக்கலாகாது. ஏற்கனவே முளைத்து வளர்ந்திருக்கும் விருக்ஷத்துக்கு ஒப்பான இவ்வுடல் வாழ்க்கை தானாகப் பட்டுப்போம் பரியந்தம் அதைத் தன் போக்கில் விட்டுவிடுவது முறை என்பது சில ஞானிகளின் கோட்பாடு. வேறு சிலர் புதிய மரத்துக்கு விதையும் நடவேண்டாம், பழைய மரத்தை விட்டும் வைக்கவேண்டாம் என்கின்றனர். அனைத்தையும் வேரறக் களைதல் வேண்டும் என்பது அவர்களது கோட்பாடு. கர்மத்தை அறவே ஒழித்துவிடவேண்டுமாம்.
சத்வகுணமுள்ளவர்களுக்குக் கர்மங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை. கர்மங்கள் தாமாகவே அவர்களைவிட்டு விலகிவிடுகின்றன. வலிய முயன்றாலும் அவர்களால் கர்மஞ்செய்ய முடியாது. கடவுள் அவர்களைக் கர்மஞ்செய்ய விடமாட்டார். கர்ப்பமாயிருக்கும் மருமகப்பெண், வீட்டு வேலைகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுவிக்கப்படுகிறாள்! குழந்தை பிறந்த பிறகு அவள் முழுக் கவனத்தையும் குழந்தையைப் பராமரிப்பதிலேயே செலுத்தும்படி விடப்படுகிறாள். அதேபோல, சத்வகுணமுள்ளவர்களது கர்மங்களையும் பகவான் அகற்றிவிடுகின்றார். ஆனால் சத்வகுணம் வாய்க்கப்பெறாத மக்கள், எல்லா உலகக் கடமைகளையும் கவனிக்க வேண்டும். ஒரு பணக்காரனுடைய வேலையாள்போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு, வீட்டு அலுவல்களையெல்லாம் கவனிக்க வேண்டும். இதுவே கர்மயோகமெனப்படும். இவ்வித பரித்யாக புத்தியோடு சகல கர்மங்களையும் புரிந்துகொண்டு, பகவந் நாமத்தை உச்சரித்து அவனை தியானம் செய்வதிலேயே கர்ம யோகத்தின் சாரமெல்லாம் அடங்கும்.
3. த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே
ஏகே மநீஷிண:-சில அறிஞர், கர்ம தோஷவத்-கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி,
த்யாஜ்யம் இதி ப்ராஹு-விட்டுவிடவேண்டும் என்கிறார்கள், யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை, ந த்யாஜ்யம் இதி ச அபரே-விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்.
பொருள் : சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.
கர்மங்கள் அனைத்திலும் காரணம், காரியம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. காரணம் இருக்கும் வரையில் காரியமும் உண்டு. மழை பெய்கிறது; அது காரணம். பூமி நனைகிறது; புதிதாகக் கட்டுகிற வீடும் நனைகிறது. இவ்விரண்டும் காரியங்கள். பூமி நனைதல் என்னும் காரியம் கிருஷிகனுக்கு நல்லது. புதிதாகக் கட்டுகிற வீடு நனைதல் என்பது கட்டுகிறவனுக்குக் கெட்டது. ஆக, மழைபெய்தல் என்னும் கர்மத்தில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. தீபம் எரிகிறது. அது பகவத்கீதை வாசிக்க உதவுகிறது. அச்செயலை நலம் எனலாம். தீபத்தில் பூச்சிகள் பறந்து வந்து வீழ்ந்து சாகின்றன. அச்செயலோ கொடியது. ஆக, தீபம் எரிதலில் நலம் கேடு ஆகிய இரண்டும் உண்டு. உயிர் வாழ்ந்திருக்க சுவாசிக்கிறோம். உயிர் வாழ்க்கை தேவாராதனைக்கென்றே பயன்படுத்தப்படுகிறது. அது சீரிய செயல். சுவாசிக்கும் மனிதன் காற்றிலுள்ள எண்ணிறந்த சிற்றுயிர்களைக் காற்றுடன் உறிஞ்சி ஒழிக்கிறான். அது கொடிய செயல். இங்ஙனம் எல்லாச் செயல்களிலும் நலமும் கேடும் நிறைந்திருக்கின்றன. கர்மத்திலுள்ள கேடுகளையெல்லாம் கருத்தில் வாங்கும் மனிதர் கர்மம் துறத்தற்குரியதென்று பகர்கின்றனர். வேள்வி, தானம், தபசு ஆகிய வினைகளில் கேடு இருந்தாலும் அவைகளை விடலாகாது. மக்கள் அவைகளைச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்பது மட்டும் சிலரது கருத்து. ஏனென்றால் வாழ்க்கையிலேயே கேடு இருக்கிறது. அதை முன்னிட்டு வாழ்க்கையை யாரும் அழித்துவிடுவதில்லை. ரோஜாச் செடியில் முள் உண்டு. முள்செடி என்று எண்ணி அதைப் பயிர் செய்யாவிட்டால் மணமும் அழகும் நிறைந்த மலர் நமக்குக் கிடைக்காது. விஷம் கொடியது. உடலினுள் சென்றால் அது உயிரை வாங்கிவிடும். பின்பு அதே விஷத்தை ஒளஷதமாக மாற்றியமைத்தால், அதை உடலினுள் செலுத்தலாம்; உயிரையும் அது காப்பாற்றவல்லது. கர்மம் அத்தகையது. மனிதனை அது பந்தப்படுத்தும் தன்மையுடையது. ஆனால் அதே கர்மத்தை யாகமாகவோ, தபசாகவோ, தானமாகவோ செய்தால் தோஷம் நீங்கப்பெற்று நலன் உண்டாகும். ஆக, இத்தகைய ஸத் கர்மங்களை நீத்தலாகாது என்பது அவ் அறிஞரது கோட்பாடு.
அப்படியானால் இவைகளைப் பற்றிப் பகவானது கோட்பாடு யாது? விடை வருகிறது :
4. நிஸ்சயம் ஸ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:
பரதஸத்தம-பாரதரில் சிறந்தவனே, புருஷவ்யாக்ர-புருஷப் புலியே, தத்ர த்யாகே மே நிஸ்ச, யம் ஸ்ருணு-தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள், ஹி த்யாக: த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:-தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
பொருள் : பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
சந்நியாசமும் தியாகமும் ஒன்றே என்பது பகவானுடைய கோட்பாடு. தியாகமே வாழ்க்கைக்குப் பற்றுக்கோடு ஆகிறது. பார்க்குமிடமெங்கும் இயற்கை இக்கோட்பாட்டை விளக்கிக் கொண்டிருக்கிறது. தன்னிடத்துள்ள வெப்பத்தை சூரியன் ஓயாது தியாகம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அதனால் கோளங்களில் உள்ள உயிர்கள் வாழ்ந்திருக்க முடிகிறது. மரத்தைப் பற்றிப் பிடித்திருக்கிற காயானது கனிந்ததும் தனக்குப் பற்றுக்கோடாயிருந்த மரத்தைத் தியாகம் செய்கிறது. அப்படி அது மரத்தை விடுதலில் பண்பும் பயனும் சேர்ந்தே அமைந்திருக்கின்றன. தாய் ஒருத்தி தன் சொரூபமாகக் கர்ப்பத்தில் சிசுவை வைத்திருக்கிறாள். பத்து மாசம் ஆனதும் அதை அவள் தன் உடலினின்று தியாகம் செய்யாவிட்டால் அவளுக்கும் கெடுதல், அக்குழவிக்கும் கெடுதல். பழுதுபட்ட சரீரத்தை ஜீவன் தியாகம் செய்கிறான். சுகம் பெறுதற்கு தியாகம் ஒன்றே உற்ற உபாயம். மனிதனுக்குப் பாடம் புகட்டுதற்கென்றிருக்கிறது கர்மம். தனக்குப் பயன்படுகிற பள்ளிக்கூடத்தை மாணாக்கன் ஒருநாள் தியாகம் பண்ணியாகவேண்டும். ஆயுளெல்லாம் அப்பள்ளிக்கூடத்தில் கட்டுண்டு இருப்பது அவனுடைய குறிக்கோள் அன்று. கர்மத்தை மனிதன் முடிவில் துறந்து அதற்கு அதீதத்தில் போக வேண்டும். கர்மத்தை விடுதற்கு முன்பு கர்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. அதாவது :
5. யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்
யஜ்ஞோ தாநம் தபஸ்சைவ பாவநாநி மநீஷிணாம்
யஜ்ஞ தாந தப: கர்ம-வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை, ந த்யாஜ்யம்-விடக் கூடாது,
தத் கார்யமேவ-செய்யவே வேண்டும், யஜ்ஞ: தாநம் ச தப ஏவ-வேள்வியும் தானமும், தவமும், மநீஷிணாம் பாவநாநி-அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
பொருள் : வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
பட்டுப்புழு தனக்கென்று கூடு கட்டுகிறது. கட்டிய கூட்டுனுள் பிறகு அது அடைபட்டுப் போகிறது. சிறைவாசம் செய்வது போன்று நெடுநாள் அதனுள் கிடக்கிறது. தன்னைப் பந்தப்படுத்தும் செயலை அது தனக்குத்தானே செய்துகொள்கிறது. அப்படித் தன்னை அடைத்து வைப்பதில் பயன் ஒன்று உண்டு. புழுவாக இருந்தது, அழகிய பட்டுப்பூச்சியாக மாறுகிறது. இனி வெளிச்சத்தையும், காற்றையும், வெட்ட வெளியையும் காண அது வெளியே வந்தாக வேண்டும். அதற்காகத் தான் கட்டிய கூட்டை அது தானே உடைத்துத் தள்ளுகிறது. முதலில் கூட்டைக் கட்டுவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் பின்பு கூட்டை உடைப்பதில் இருக்கிறது. மனிதனுக்குக் காமிய கர்மங்ளெல்லாம் கூடு கட்டுதற்கு ஒப்பானவை. காமிய கர்மத்தின் வாயிலாக உலக வாழ்வின் தரத்தை மனிதன் கற்றுக்கொள்கிறான். அவனைப் பக்குவப்படுத்துதற்கு அது பயன்படுகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது. பக்குவம் அடையும்போது அவனுக்கு விரக்தி வருகிறது; அதாவது பற்று நீங்குகிறது. இவ்வுலக வாழ்வைக் கடந்து பரத்தினைச் சார வேண்டுமென்ற எண்ணம் உதிக்கிறது. அதன் பிறகு செய்கிற செயல்கள் யக்ஞமாகவும், தானமாகவும், தபசாகவும் மாறியமைகின்றன. பட்டுப்பூச்சி கூட்டை உடைத்தல் என்கிற செயலைச் செய்கிறது. ஆத்ம சாதகனிடத்து அதற்கு நிகரான செயல் யக்ஞம், தானம், தபசு ஆகியவைகளில் அடங்கியிருக்கிறது. ஆகையால் வேள்வி, தானம், தபசு ஆகியவைகளை எல்லா மனிதர்களும் செய்யவேண்டும். அவைகளைச் செய்கின்றவளவு உலகுக்கு நன்மை உண்டாகிறது. இப்பூவுலக வாழ்க்கை அதனால் மேன்மையடைகிறது. அதற்குமேல் மற்றொரு பிரயோஜனமும் உண்டு. அவைகளைக் கையாளும் வகை தெரிந்துள்ள அறிஞர்களை அவைகள் புனிதப்படுத்துகின்றன.
அறிஞர் யார்? விடை வருகிறது :
6. ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச
கர்தவ்யாநீதி மே பார்த நிஸ்சிதம் மதமுத்தமம்
து பார்த-ஆனால் பார்த்தா, ஏதாநி கர்மாணி ஸங்கம் த்யக்த்வா-இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பலாநி ச-பயன்களை வேண்டாமலும், கர்தவ்யாநி இதி-செய்ய வேண்டும் என்பது, மே உத்தமம் நிஸ்சிதம் மதம்-என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.
பொருள் : ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.
தாய் ஒருத்தி தன் உடலினின்று பாலை உண்டுபண்ணித் தன் குழந்தைக்கு ஊட்டுகிறாள். குழந்தையின் பொருட்டுத் தான் பத்தியம் இருக்கிறாள்; ஊண் உறக்கத்தை ஒழிக்கிறாள். பசு ஒன்று தன் கன்றுக்கும் உலகுக்கும் பாலைத் தன் உடலிலிருந்து உண்டுபண்ணிக் கொடுக்கிறது. இவ்விரண்டும் சுயநலம் கருதாத கர்மத்துக்கு நல்ல சான்றுகளாகின்றன. தியாகத்தின் உச்ச நிலையை ஆங்குக் காணலாம். தவத்துக்கு விளக்கமும் அச்செயல்களில் அடங்கியிருக்கிறது. பின்பு அதற்கு நிகரான தானத்தை வேறு எங்கும் காணமுடியாது. இடையறா யக்ஞம் இவ்வுயிர்களிடத்து ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பற்றற்ற செயலின் பண்பை இங்குக் காண்கிறோம். கொடுக்கின்றவர், ஏற்கின்றவர் ஆகிய இரு தரத்தாரும் புனிதமடைகின்றனர். பற்றுதலையும் பயனையும் ஒழித்தவர்களே மேன்மைக்கு இருப்பிடமாகின்றனர். ஆசையை வென்ற மேலோர் இவ்வுலகக் கிருத்தியங்களை யக்ஞமாகச் செய்வார்களானால் இவ்வுலகமே பரலோகமாகக் காட்சி கொடுக்கும். உலகம் மேன்மையடைதற்கு ஏற்ற கோட்பாடு இதுவாதலால் இது பகவானுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை யெனப்படுகிறது.
ஈசுவரனை அடைய விரும்புவோரும் ஸாதன மார்க்கத்தில் அபி விருத்தியைக் கோருவோரும் ஆசையாகிய வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்களாகார்.
7. நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:
து நியதஸ்ய கர்மண:-ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை, ஸந்ந்யாஸ: ந உபபத்யதே-துறத்தல் தகாது, மோஹாத் தஸ்ய பரித்யாக-மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல், தாமஸ: பரிகீர்தித:-தமோ குணத்தால் நேர்வதென்பர்.
பொருள் : நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
பருவத்தில் பழுத்த பழங்களை உதிர்த்து உலகுக்கு ஊட்டுவது பழம் உதிர் சோலையின் தியாகமாகும். அதற்காகப் பூத்துக் காய்த்துக் கனியாக்குவது அச்சோலையின் நித்திய கர்மமாகும். சோலையின் தியாகத்தை விரைவில் பயன்படுத்தவேண்டுமென்று எண்ணிய அறிவிலி காய்களை மரங்களினின்று பிடுங்குகின்றான். அது பலவந்தத்தில் செய்த தியாகமாகும். அங்ஙனம் பறித்த காய்கள் கனிதற்குப் பதிலாக வெம்பிப்போம். சுவையற்ற கனியும் முளைக்கப்போடத் தகுதியற்ற விதையும் அதன் பயனாகும். அறியாமையினால் செய்வித்த கர்மத் தியாகத்தின் விளைவு அது.
மனிதனுடைய பரிபாகத்துக்கு ஏற்றவாறு நித்திய கர்மம் உயர்கிறது. உண்பதும் உறங்குவதும் அறிவிலிக்கு நித்திய கர்மமாயிருப்பது போன்று விவேகிக்கு யக்ஞம், தானம், தபசு முதலியன நித்திய கர்மமாகின்றன. உடல் இருக்கும் பரியந்தம் நித்திய கர்மம் நடைபெறவேண்டும். ஏனென்றால் உடல் வாழ்வும் நித்திய கர்மமும் இணைபிரியாதவைகள். மேலோனை அது மேலும் மேலும் பரிசுத்தப்படுத்திக்கொண்டே வருகிறது. அவிவேகத்தால் அதை விடுவதால் கேடு விளையும். அக்ஞான இருள் இன்னும் அதிகரிக்கும். பணக்காரனைப் போன்று தானும் சுகஜீவனம் செய்ய வேண்டுமென்று கூலியாள் தன் வேலையை நிறுத்தினால் அவன் வருந்துவான். தமோகுணத்தினின்று உதித்த நித்திய கர்மத் தியாகம் அது போன்றது.
மனம் சச்சிதானந்தத்தில் லயமாகிற வரையில் ஒருவன் பகவந் நாமத்தை உச்சரிப்பதும், உலகக் காரியங்களைக் கவனிப்பதும் ஆகிய இரண்டையும் செய்து வரவேண்டும்.
8. து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஸபயாத்த்யஜேத்
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்
யத் கர்ம-எது செய்ய வேண்டிய கருமமோ, து:கம் ஏவ இதி-துன்பமாகக் கருதி, காய க்லேஸ பயாத்-உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால், த்யஜேத்-செய்யாமல் விடுவானேயானால், ஸ:-அவன். ராஜஸம் த்யாகம் க்ருத்வா-அவன் ராஜஸ தியாகம் செய்து, த்யாக பலம் ந லபேத் ஏவ-தியாகப் பயனை அடையமாட்டான்.
பொருள் : உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப்பயனை அடையமாட்டான்.
மெய் வருத்தமில்லாத மண்ணுலக வாழ்க்கையில்லை. உலகக் கடமைகளைச் செய்து வருத்தப்பட வேண்டாமென்றும், சந்நியாச ஆஸ்ரமம் எடுத்துக்கொண்டு பிறர் செய்யும் உபகாரத்தைப் பெற்று நிம்மதியாக சுகஜீவனம் செய்யலாமென்றும் தியாகம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போவது சிரமமென்றெண்ணிச் சிறுவன் ஒருவன் பள்ளிக்கூட வாழ்க்கையைத் தியாகம் பண்ணுவானாகில், அங்குப் படித்து முடித்தவன் அடைகிற பயனை அவன் அடையமாட்டான். அதாவது அவனுக்கு நல்லறிவும் மேலாம் படிப்பும் உண்டாகமாட்டா. பரிபூரணமடைந்தவன் செய்கிற கர்மத்தியாகம் மோக்ஷமாகிறது. ஆகையால் அதுவே தியாகபலன் எனப்படுகிறது. உழைப்புக்கு அஞ்சுபவனுக்கு அது கிட்டாது.
போர்க்களத்துக்கு யுத்த சன்னத்தனாக வந்த அர்ஜுனனுக்குத் திடீரென்று தியாகபுத்தி வருகிறது. உற்றாரைக் கொன்று துன்பமடைதல் வேண்டாமென்கிற மனப்பான்மை வருகிறது. வலிய வந்துள்ள அறப்போர் புரிவது அவனுடைய நித்திய கர்மமாகிறது. நெறிவழுவாத வேந்தனுக்கு உறவினரைவிட அறம் பெரியது. அறப்போரை அவன் புறக்கணிக்க எண்ணியது ரஜோ குணத்தினின்று உதித்த தியாகம். ஆகவே பகவான் அதற்குச் சம்மதம் கொடுக்கவில்லை.
9. கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:
அர்ஜுந நியதம் யத் கர்ம-அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை, கார்யம் இதி ஏவ-இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால், ஸங்கம் பலம் ச த்யக்த்வா - ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து, க்ரியதே-செய்தால், ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக: மத:-அதுவே சாத்விக தியாகம் எனப்படும்.
பொருள் : நியமத்துக் கிணங்கிய செய்கையை, இது செய்தற்கு உரியது என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.
தாமஸத் தியாகத்திலும் ராஜஸத் தியாகத்திலும் கர்மமே செய்யாது விட்டொழிக்கப்படுகிறது. சாத்விக தியாகத்திலோ கர்மம் நின்றுபோவதில்லை. கர்மம் முறையாக நடைபெறுகிறது. நித்திய கர்மம் உட்பட எல்லாக் கர்மங்களுக்கும் கர்மபலன் உண்டு. சாத்விக சாதகனோ கர்மத்துக்குத் தான் கர்த்தா என்று அபிமானிக்காது, கர்மத்தில் பற்றுவைக்காது, வினைப்பயனை விரும்பாது தன் கடமையென அதைச் செய்து வருகிறான். அத்தகைய மனநிலையே அமைதியையும் அந்தக்கரண சுத்தியையும் உண்டுபண்ணுகிறது.
மருத்துவ சாலையில் சிகிச்சை பெறுகிற நோயாளி மருத்துவ சாலையிலேயே இருக்கவேண்டும் என்ற பற்றுதல் உடையவன் அல்லன்; சிகிச்சை பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வினைப்பயனை விரும்புபவனும் அல்லன். ஆயினும் அங்குத் தங்கியிருந்து தன் கடமையாகிய சிகிச்சை பெறுதல் என்ற கர்மத்தை அவன் முறையாகச் செய்கிறான். அவனே உண்மையில் நோயைத் தியாகம் பண்ணியவன் ஆகிறான். கர்மபலத் தியாகம் சாத்விக சாதகனுக்கு அத்தகையதாகிறது.
ஆனால் நோயினிடத்து நோயாளிக்குக் கசப்பு ஏற்படுகிறது. தனது நித்திய கர்மத்தை சாத்விக குணமுடைய தியாகி மேலான பாங்கில் கருதுகிறான். சுவாசிப்பது உயிர் வாழ்பவைகளுக்கு நித்திய கர்மமாகிறது. அவ் உயிர் வகைகளுள் ஆரோக்கியமுடைய மனிதன் முறையாக ஆழ்ந்து சுவாசிக்கிறான். ஆயினும் சுவாசிப்பதற்குத் தான் கர்த்தா என்ற உணர்ச்சி அவனிடத்தில்லை. உண்மையில் உடல் உணர்ச்சியின்றி உடல் வாழ்க்கை வாழ்பவனே நோயற்ற நிலையில் இருப்பவன் ஆகிறான். கடவுள் வழிபாடு. சமூக சேவை. தியானம் முதலியன நல்ல ஆத்மசாதகனது நித்திய கர்மங்களாகின்றன. அவைகளை அவன் ஒழுங்காகச் செய்கிறான். அப்படி வினையாற்றுதற்கிடையில் அவன் கர்மத்தைப்பற்றிய உணர்ச்சியில்லாதிருக்கிறான். ஆத்ம போதத்தில் அவன் நிலைத்திருக்கிறான். அந்த மனநிலையே சாத்விகத் தியாகமாகிறது.
அவன் பற்றற்றவன் என்பதை எத்தகைய மனப்பான்மை விளக்குகிறது? விடை வருகிறது :
10. ந த்வேஷ்ட்யகுஸலம் கர்ம குஸலே நாநுஷஜ்ஜதே
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஸய:
ஸத்த்வஸமாவிஷ்ட: மேதாவீ-சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், சிந்நஸம்ஸய: த்யாகீ =ஐயங்களையறுத்த தியாகி, அகுஸலம் கர்ம-இன்பமற்ற செய்கையை, ந த்வேஷ்டி-வெறுப்பதில்லை, குஸலே ந அநுஷஜ்ஜதே-இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை.
பொருள் : சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.
சத்வ குணத்திலேயே உறுதியாக நிற்பவன் தெளிந்த மனமுடையவனாகிறான். தூயதும் தெளிந்ததுமாகிய உள்ளத்தில் ஞானம் உருவெடுக்கிறது. ஆத்ம சொரூபத்தையும் பிரகிருதி சொரூபத்தையும் அவன் உள்ளபடி உணர்கிறான். அக்காரணத்தை முன்னிட்டு அவன் மேதாவியென்று அல்லது பேரறிஞனென்று அழைக்கப்படுகிறான். அத்தகையவனுக்குக் கர்மமும் அகர்மமும் நன்கு விளங்குகின்றன. நிலைக்கண்ணாடி போன்றது அகர்மமாகிய ஆத்ம சொரூபம். பிம்பங்களைக் காட்டும்பொழுதும் காட்டாதிருக்கும்பொழுதும் கண்ணாடி தன்மயமாயிருக்கிறது. கர்மம் நடைபெறும் பொழுதும் நடைபெறாத பொழுதும் ஆத்ம சைதன்யம் தன்மயமாயிருக்கிறது. அழகான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குப் புதிய பெருமை யொன்றும் வருவதில்லை. கோணலானதும் அழுக்குப் படிந்ததுமான வடிவம் எதிரில் வருவதால் கண்ணாடிக்குக் குறையொன்றுமில்லை. பொருள்களை உள்ளபடி பிரதிபிம்பிப்பதற்கிடையில் கண்ணாடி யாண்டும் தன்மயமாயிருக்கிறது. ஆத்ம சாக்ஷியின் முன்னிலையில் நிகழும் பிரகிருதியின் செயல் எதுவானாலும் தன் எதார்த்த சொரூபத்தைப்பற்றிப் பேரறிஞனுக்குச் சந்தேகம் ஒன்றும் உண்டாவதில்லை.
அர்ஜுனனது ஸ்வதர்மம் அறப்போர் புரிவதாம். உழைத்துப் பாடுபடுவது எல்லார்க்கும் ஏற்பட்டுள்ள தர்மம். இச்செயல்களைத் துன்பம் நிறைந்தவைகளாகக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்த பேரறிஞருக்கு அவைகளைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. அவைகளை வெறுக்காது, மனதை நடுநிலையில் நிறுத்தித் தம் கடமையை அவர்கள் முறையாகச் செய்கின்றனர். உண்டு, உடுத்துக் களித்திருப்பது பாமரர்களுக்கு இன்ப வினைகளாகின்றன. அவர்கள் அவைகளைப் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் சத்வம் நிறைந்த விவேகி அவைகளில் மகிழ்வுறுவது கிடையாது. இன்ப துன்ப வினைகளைச் சமனாக அவன் நினைக்கின்றான். அதுவே அவனது பற்றற்ற நிலைக்கு அறிகுறியாகும்.
பற்றற்றுக் கர்மம் செய்தற்குப் பதிலாகக் கர்மத்தை ஏன் அடியோடு விட்டு விடலாகாது? விடை வருகிறது :
11. ந ஹி தேஹப்ருதா ஸக்யம் த்யக்தும் கர்மாண்யஸேஷத:
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே
ஹி தேஹப்ருதா-மேலும் உடம்பெடுத்தவனால், அஸேஷத: கர்மாணி-முழுதுமே செய்கைகளை, த்யக்தும் ந ஸக்யம்-விட்டுவிட முடியாது, ய கர்ம பலத்யாகீ-எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, ஸ: து த்யாகீ இதி அபிதீயதே-அவனே தியாகி யெனப்படுவான்.
பொருள் : (மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.
ஒருவன் ஆகாய விமானத்தில் ஊர்ந்து செல்லுகிறான். அதனுள் அமர்ந்திருக்கும் பரியந்தம் அவனுக்குப் பிரயாணி என்று பெயர். அவ் விமானம் அழகான சமவெளிக்கு மேலே பறக்கிறது; ஆபத்து நிறைந்த மலைப்பிரதேசத்துக்கு மேலே பறக்கிறது; மேகப் படலங்களைப் பொத்துக்கொண்டு போகிறது; மழையில் நனைகிறது; வெயிலில் காய்கிறது; கடலுக்கு மேலே வானத்தில் நீந்துகிறது; ஆங்கு மேலும் கீழும் ஆக இரண்டு இடங்களிலும் ஆபத்து உண்டு. விமானத்தின் உள்ளே இருக்கும் பிரயாணி இத்தனைவிதச் செயல்களுக்கும் உட்பட்டாக வேண்டும். அவனுக்கு விருப்பமில்லாத இடத்துக்கும் அவன் அஞ்சுகிற இடத்துக்கும் விமானம் செல்லாது இருக்கமுடியாது. பயணத்தின் திட்டப்படி அது போயாகவேண்டும். விமானத்தின் போக்கில் நிகழ்வனவற்றைப்பற்றிக் கவலையற்றவனாகப் பிரயாணி தன் அலுவலைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். தொல்லையை ஒழிப்பதற்கு அது ஒன்றே உற்ற உபாயம். உடல் வாழ்வு என்ற பயணத்தில் ஆத்மா அங்ஙனம் இருந்து பழகவேண்டும்.
தேகம் இருக்கும் வரையில் கர்மமும் உண்டு. மூச்சு விடுவதே கர்மம். சுவாசிக்காது யார் வாழ முடியும்? உண்பது கர்மம்; உறங்குவது கர்மம். ஆக, உடல் எடுத்தவனுக்குக் கர்மத்தை விடுதல் என்பது வெறும் பேச்சு. கர்மத்தை விடமுயலுபவன் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். மற்று, கர்மத்தைப் பற்றற்றுச் செய்யவேண்டும். விவேகி ஒருவனது விவேகத்துக்கு ஏற்றவாறு பற்றற்றுக் கர்மம் செய்தல் அமைகிறது. உடலில் பட்ட காயத்தை நாம் நன்கு கவனிக்கிறோம். அதை ஜாக்கிரதையாகக் கட்டி வைக்கிறோம். அதன் பொருட்டுப் பணச் செலவு செய்து மருந்து முதலியன போடுகிறோம். அப்படியெல்லாம் செய்வது அக்காயம் நிலைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல; காயத்தை ஒழித்தல் பொருட்டே அவ்வளவு கவனம் செலுத்துகிறோம். அதில் பற்றற்றிருந்து அதைப் பாங்கு படுத்துகிறோம். அவரவர் கர்மத்தை அங்ஙனம் பற்றற்றுச் செய்ய வேண்டும். கர்மத்தை மனிதன் நீத்துவிட முடியாது; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்னும் எண்ணத்தை நீத்துவிடவேண்டும். அப்படிச் செய்கின்றவனே தியாகி யாகின்றான். பற்றற்றவனுக்கு வினைப்பயன் இல்லை.
பின்பு பற்றுடையவனுக்கோ? விடை வருகிறது :
12. அநிஷ்டமிஷ்டம் மிஸ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித்
அநிஷ்டம் இஷ்டம் மிஸ்ரம் ச-வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என, த்ரிவிதம் கர்மண: பலம்-மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள், அத்யாகிநாம் ப்ரேத்ய பவதி-தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது, ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந -சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
பொருள் : வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
நரகப் பிராப்தியும் விலங்கு இனமாகப் பிறப்பதும் இன்னாதது அல்லது அனிஷ்ட கர்மபலனாகிறது. சுவர்க்கப் பிராப்தியும் தேவகணப் பிறப்பும் இஷ்ட கர்மத்தின் பலன். பூவுலகப் பிராப்தியும், மக்களாகப் பிறத்தலும் கலப்புக் கர்மத்தின் பயனாகும். இனியது, இன்னாதது ஆகிய இரண்டும் சேர்ந்தது கலப்புக் கர்மம். கர்ம பலத்தில் பற்று வைக்கிறவர்களுக்குப் பிறவிகள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. அவைகள் வாயிலாக சுகதுக்கங்களுக்கு அவர்கள் ஆளாக வேண்டும். கர்மபலனில் பற்று வைக்காதவர்களுக்குப் பிரபஞ்ச சம்பந்தமான இன்பமுமில்லை, துன்பமுமில்லை; பிறப்பும் இறப்பும் உண்டாவதில்லை. அவர்கள் முக்தியடைகிறார்கள்.
எடுத்த பிறவிகளுள் இது கடைசி ஜன்மம்; இத்துடன் பிறவியை ஒழித்துவிட்டு முக்தியடையும் நிலையில் இருப்பவர்களைச் சில அறிகுறிகளால் கண்டுகொள்ளலாம். அத்தகைய ஜீவன் முக்தர்கள் எப்பொழுதும் ஆத்ம திருப்தர்களாக இருக்கிறார்கள். நிழல் போன்று உடல் அவர்களைச் சார்ந்திருக்கிறது. அவ்வுடலின் மூலம் ஒழுங்காகக் கர்மம் நடைபெறுகிறது. ஆனால் அதை ஜீவன் முக்தர்கள் கருத்தில் வாங்கிக்கொள்ளார்கள்.
தியாகியல்லாதவர்கள் இனி எடுக்கப்போம் பிறவி எத்தகையது என்பதையும் இப்பொழுது இவ்வுலகிலேயே யூகித்துத் தெரிந்துகொள்ளலாம். தூங்கி எழுந்திருப்பது போன்றவை ஜனன மரணம். தூங்குகிற மனிதன் அதே சரீரத்தில் எழுந்திருக்கிறான். செத்தவன் புதிய சரீரத்தில் புதிய இடத்தில் எழுந்திருக்கிறான். படுக்கப்போம்பொழுது கெட்டவனாயிருந்தவன் தூங்கியெழுந்திருக்கும்போதும் கெட்டவனே. நல்லவனுடைய நிலைமையும் அத்தகையது. இங்கு இவ்வுலகில் இருக்கும் போதே நரகத்தில் இடர்ப்படுபவர் உண்டு; விலங்கு போன்று வாழ்பவர் உண்டு. சுவர்க்க வாழ்வை இங்கேயே காண்பவர் உண்டு. இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள மனுஷ நிலையில் இருப்பாரும் உளர். இதே அமைப்பு சரீரத்தை மாற்றும்பொழுதும் தொடர்ந்து வருகிறது. ஆக, இயல்புக்கு ஏற்ற உடல் அமைப்பு உண்டாகிறது.
கர்மத்துக்குத் தன்னைக் கர்த்தாவென்று நினைக்கிறவனுக்குக் கர்ம பலன் உண்டாகிறது. அவன் சுக துக்கங்களுக்கு ஆளாகிறான் உண்மையில் மனிதன் கர்மத்துக்குக் கர்த்தாவா? இக் கேள்விக்கு விடை வருகிறது :
13. பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்
மஹாபாஹோ-பெருந்தோளாய், க்ருதாந்தே ஸாங்க்யே-கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில், ஸர்வகர்மணாம் ஸித்தயே-எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு, ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி-ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன, மே நிபோத-(அவற்றை) என்னிடம் கேட்டுணர்.
பொருள் : எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.
சாங்க்ய சாஸ்திரம் என்பது வேதாந்த சாஸ்திரம். கபில முனிவர் இயற்றியுள்ள சாங்கியம் வேறு. ஆறு சாஸ்திரங்களில் அது நான்காவது ஸ்தானம் பெறுகிறது. பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றிய கோட்பாடுகளை அது விளக்குகிறது. வேதாந்தத்தின் கோட்பாட்டின்படி கர்மம் செய்வதெல்லாம் விரைவில் ஒழுங்காகக் கர்மத்தை முடித்துக்கொண்டு கர்மாதீதத்தில் போவதற்கே யாம். கர்மசொரூபமாயுள்ள இயற்கையானது ஜீவாத்மாவுக்கு ஒரு பள்ளிக்கூடம் போன்று இருக்கிறது. அறிவு வேண்டுமென்கிற ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும். அங்கு வீண்காலம் கழிக்கலாகாது. ஒழுங்காகப் பயிற்சி பெறவேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும். கற்றபின் பள்ளிக் கூடத்தைவிட்டு வெளியில் வருவதுதான் மாணாக்கனது குறிக்கோள். பள்ளிக்கூடத்தில் இருக்கும்போதே அவ்வுண்மையை அவன் தெரிந்துகொள்கிறான். மனிதன் கர்ம மயமான உலகில் இருக்கும்போதே கர்மத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எது எவ்விதத்தில் கர்மத்துக்குக் காரணமாகிறது என்பது இனிப் பகரப்படுகிறது :
14. அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்
அத்ர அதிஷ்டாநம் ச-அவை இடமும், கர்தா ச-செயலை செய்பவன், ப்ருதக்விதம் கரணம் ச-பலவிதக் கரணங்கள், விவிதா: ப்ருதக் சேஷ்டா ச-வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், தைவம் ச பஞ்சமம்-இயற்கை என ஐந்து (காரணங்கள்).
பொருள் : அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.
ஒரு மோட்டார் வண்டி ஓடுகிறது. அதன் இயக்கத்துக்கு முகாமையாயிருப்பவைகள் எவை என்று தெரிந்துகொள்ளவேண்டும். அத்தகைய வண்டி ஒன்றைப் பூட்டுதற்கு முன்பு கணக்கற்ற ஆணிகள், வில்லைகள், தகடுகள், சக்கரங்கள். இரும்புச் சட்டங்கள் குவியல் குவியலாகத் தொழிற்சாலையில் வைத்திருப்பதைக் காணலாம். மரத்தில் ரப்பர் பால் இருக்கிறது. மண்ணினுள் பெட்ரோல் என்னும் எண்ணெய் இருக்கிறது. மண்ணின்மேல் நீர் இருக்கிறது. விண்ணில் காற்று இருக்கிறது. இனி, இவைகளை முறையாகப் பொருத்தியமைக்குமிடத்தே வண்டி யுண்டாகிறது. தொழிற்சாலை அதற்கு அதிஷ்டானம் அல்லது இருப்பிடம். தொழிற்சாலைக்குச் சொந்தக்காரன் அதற்குக் கர்த்தாவாகிறான். சக்கரங்கள், ஓட்டும் கருவி, நிறுத்தும் கருவி முதலியன அதன் இந்திரியங்கள் ஆகின்றன. அதற்கு விசைகொடுக்கும் பெட்ரோல் எண்ணெய் அதன் பிராணன் ஆகிறது. பலப்பல காரியங்களுக்கு அவ்வண்டியைப் பயன்படுத்தலாம். அதை ஓட்டும் சாரதி அதற்கு அதிஷ்டான தெய்வமாகிறான். இதே முறையில் தான் உடல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது.
விருப்பு வெறுப்பு, இன்ப துன்பம், ஞானம் முதலியவைகளை விளக்குதற்கு இருப்பிடமாயிருப்பது உடல். ஆகையால் அது அதிஷ்டானம் எனப்படுகிறது. இன்ப துன்பங்களாகிய உபாதிகளை ஏற்றுக்கொண்டு அவைகளை அனுபவிக்கும் அகங்காரமே கர்த்தா எனப்படுகிறது. ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய இவைகள் வெவ்வேறு இந்திரியங்களெனப்படுகின்றன. பிராணன், அபானன் முதலியவைகளின் பலவகைப்பட்ட செயல்கள் அதன்பின் குறிக்கப்படுகின்றன. பிராணனுடைய துணையின்றி ஒரு செயலும் நடைபெறாது. அந்த ராத்மாவாகிய தெய்வம் அந்தந்த இந்திரியத்துக்கு அதிஷ்டான தெய்வமாகிச் செயல்புரிகிறது.
15. ஸரீரவாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ:
நர: ஸரீர வாக் மநோபி:-மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும், யத் கர்ம ப்ராரபதே-எந்தச் செயலைத் தொடங்கினாலும், ந்யாய்யம் வா விபரீதம் வா-அது நியாயமாயினும் விபரீதமாயினும், தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ:-அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்.
பொருள் : மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.
வெவ்வேறு காரணங்களைக் கொண்டு அமைத்துள்ள மோட்டார் வண்டியைக் கொலை, களவின் பொருட்டு ஒரு சாரார் எடுத்துச் செல்லலாம். ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னொரு சாரார் அவ்வண்டியைச் செலுத்தலாம். நோயாளிக்கு விரைவில் சிகிச்சை செய்வதற்கு அது உதவுகிறது. களியாட்டத்தில் வீண்பொழுது போக்குதற்கும் அது பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்குதற்கும் அதே வாகனம் உதவுகிறது.
கிட்டத்தட்ட அதே முறையில் உடலை நாம் பயன்படுத்துகிறோம். தர்ம÷க்ஷத்திரம் என்று இவ்வுடல் இயம்பப்படுகிறது. செய்கின்ற ஸத்கர்மங்கள் அனைத்துக்கும் ஐந்து ஹேதுக்களாலாகிய உடல் வாழ்வு பயன்படுகிறது. இதே உடலத்தைத் தேவாலயமாகப் பாராட்டிப் பயன்படுத்துபவரும் உளர். இத்தகைய செயல்களெல்லாம் தர்மத்துக்கு உடன்பாடானவைகள். ஆகவே அவைகள் நியாயமானவைகள். அதர்மமே வடிவெடுத்து வந்து அடாத செயலைச் செய்தற்கும் இவை காரணங்களாகின்றன. இவ் ஐந்தின் துணையின்றி நலம் கேடு ஆகிய எச்செயலும் நடைபெறுவதில்லை.
உடலின் மூலம் நிகழ்கின்ற செயல்களைச் சாதாரண வாழ்க்கை முறையில் திரிகரணங்களைக்கொண்டு செய்தவைகள் என்கிறோம். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் கரணங்களாகின்றன. எண்ணுவதும், பேசுவதும், செய்வதும் ஒவ்வொன்றும் தன்னளவில் கர்மமாகிறது. எண்ணத்தால் நிகழும் கர்மங்கள் எண்ணிறந்தவை.
இனிக் கர்ம நடைமுறைக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :
16. தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:
பஸ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஸ்யதி துர்மதி:
து ஏவம் ஸதி-இங்ஙனமிருக்கையில், ய: அக்ருதபுத்தித்வாத்-எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை, தத்ர கேவலம் ஆத்மாநம்-அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய, ஆத்மாவை, கர்தாரம் பஸ்யதி-கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ,
ஸ துர்மதி: ந பஸ்யதி-அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
பொருள் : இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
இக்கோட்பாட்டை அறிதற்கும் மோட்டார் வண்டி ஒன்றை அமைப்பதையே மீண்டும் உபமானமாக எடுத்துக்கொள்ளலாம். மண், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களும் அவ்வண்டியமைப்புக்கு இன்றியமையாதவைகளாகின்றன. வண்டிக்குத் தேவையானவைகளெல்லாம் பூமியினின்று வந்தவைகள். அவைகளை யெல்லாம் கொடுத்து உதவியது பூமி. பிறகு வண்டி ஓடுதற்கு நிலைக்களமாயிருப்பதும் பூமி. ஆனால், மோட்டார் வண்டியின் செயல் ஒன்றிலும் பூமி சம்பந்தப்பட்டதல்ல. அது எப்பொழுதும் தன்மயமாயிருக்கிறது. வண்டி ஓடும் விஷயத்தில் பூமியைக் கர்த்தாவென்று கருதுவது பொருந்தாது.
எது கர்மம் செய்கிறதோ அது கர்த்தா. பிரகிருதியின் கூறுபாடுகள் கர்மம் செய்கின்றன. மேலே சொன்ன ஐந்தும் பிரகிருதியினுடைய கூறுபாடுகள். ஐந்து காரணங்களில் ஒன்றாகிய அந்தராத்மா அல்லது தெய்வம் பிரகிருதியோடு சேர்ந்ததா அல்லது ஆத்ம சொரூபமா என்ற கேள்வி எழுகிறது. எங்கும் வியாபகமாகிய ஆகாசத்துக்கு அடுத்தபடியில் இருப்பது வாயு. அது கிட்டத்தட்ட ஆகாசம் போன்றது என்றாலும் அது ஆகாசம் ஆகாது. ஆகாசம் அசைவற்றது. வாயு அசையும் தன்மையது. இங்குத் தெய்வம் என்று சொல்லுவது சித் ஆபாசனாகிய ஜீவாத்மா. அது சேதனம் போன்று தோன்றுகிறது. உண்மையில் அது ஜடமாகிய பிரகிருதியே. ஆத்மாவின் சன்னிதான விசேஷத்தால் பிரகிருதி வேலை செய்கிறது. சித் ஆகாசத்தில் அது தோன்றி, நின்று பிறகு நீங்குகிறது. ஆத்மாவோ செயலற்றது. அது சுத்த சைதன்யம். மாயாசக்தியாகிய பிரகிருதி அதை ஆரோபித்து அதன்மீது தோன்றிக்கொண்டிருக்கிறது. அதனால் ஆத்ம சொரூபத்துக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. கர்மத்துக்கு அப்பாற்பட்டுள்ள சுத்த சைதன்யம் அல்லது பேரறிவு மனிதனது எதார்த்த சொரூபம். புத்தி தெளிவடையாதவனுக்கு இது விளங்குவதில்லை. ஆகையால் அவன் உண்மையைக் காண்கிறானில்லை.
17. யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே
யஸ்ய அஹங்க்ருதோ பாவ ந-எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ, யஸ்ய புத்தி ந லிப்யதே-பற்றுதல்கள் அற்று மதியுடையவன், ஸ: இமாந் லோகாந்-அவன் இந்த உலகங்கள் அனைத்தையும், ஹத்வா அபி ந ஹந்தி ந நிபத்யதே-கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்.
பொருள் : நான் எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.
தன்னைக் கர்த்தாவென்று கருதுவதிலும், அகங்காரம் கொள்ளுதலிலும் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் காட்டுகிறான். நாடக மேடையில் ஒருவன் கொலை புரிபவன் போன்று நடிக்கிறான். மற்றொருவன் கொலையுண்பவனாக நடிக்கிறான். மற்று, இதே செயல் உலகில் உண்மையாக நிகழ்கிறது. பாசாங்காகச் செய்த கர்மம் அகங்காரத்தையோ கர்த்ருத்வத்தையோ உண்டு பண்ணவில்லை. வாஸ்தவத்தில் நிகழ்ந்த கொலைச் செயலானது அதில் சம்பந்தப்பட்டவர் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தது. இவ்விரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று கூடியது ஞானியின் செயல். போர்க்களத்தில் அர்ஜுனன் தன் பாட்டனாராகிய பீஷ்மரைக் கொன்றான். ஆயினும் கொன்றவனாக அவன் தன்னைக் கருதவில்லை. ஏனென்றால் அகங்காரமும் பற்றுதலும் அவனுடைய மனதைவிட்டு அகன்றுவிட்டன. பீஷ்மர் கொல்லப்பட்டவராகத் தம்மைக் கருதவில்லை. அணிந்திருந்த சட்டையைப் பலவந்தமாகக் கிழித்து எறிந்ததற்கு ஒப்பாயிற்று அவர் உடலைக் களைந்த செயல்.
கண்ணாடியில் ஒருவனுடைய பிம்பம் தோன்றி ஆடுகிறது. அத்தோற்றத்துக்கும் ஆட்டத்துக்கும் கர்த்தா கண்ணாடியல்ல. இனி, அந்தப் பிம்பம் கண்ணாடியில் பதிந்திருப்பதும் இல்லை. பிம்பத்தை விளக்குதற்கிடையில் கண்ணாடி பற்றற்றிருக்கிறது.
ஆத்ம சைதன்யத்தின்மீது பிரகிருதியின் செயல்களெல்லாம் தோன்றுகின்றன. அதனால் ஆத்மா ஒரு செயலும் செய்வதன்று. அப்பேரறிவு பிரகிருதியை விளக்கியதால் அது பிரகிருதியில் பந்தப்பட்டதுமல்ல. தனது நிஜசொரூபமாகிய சைதன்யத்தில் உறுதிபெற்றிருப்பவன் உடலும் இந்திரியங்களும் செய்கின்ற செயலிலே கட்டுண்டு போவதில்லை. கொல்லுதல் முதலியன பிரகிருதியின் வியவகாரங்களேயாம்.
புருஷன் யாதொரு காரியத்தையும் செய்யாது சலனமற்றுக் கிடக்கிறான் என்றும், பிரகிருதியே சகலத்தையும் செய்துவருகின்ற தென்றும், புருஷன் வெறும் சாக்ஷிமாத்திரமாகத்தானிருக்கிறானென்றும் சாங்கியதர்சனம் கூறுகின்றது. மேலும், பிரகிருதியும் புருஷனில்லாது எதனையும் செய்யவியலாது என்றும் அது கூறுகின்றது.
18. ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸங்க்ரஹ:
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா-அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், த்ரிவிதா கர்மசோதநா-இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன, கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித:-கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும், கர்மஸங்க்ரஹ:-கர்மத்தின் அமைப்பு ஆகும்.
பொருள் : அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.
அறிவு அல்லது ஞானம் என்பது இவ்வுலக சம்பந்தமான ஞானம். அறியப்படுபொருள் அல்லது ஞேயம் என்பது பொதுவாயுள்ள உலகப் பொருள்கள். அறிபவன் அல்லது பரிக்ஞாதா என்பவன் உபாதிகளோடு கூடியுள்ள ஜீவன். இம்மூன்றும் சேர்ந்து திரிபுடி எனப்படுகிறது. ஒன்று உள்ள இடத்தில் மற்ற இரண்டும் இருக்கும். அதாவது அறிபவன் ஒருவன் இருந்தால் அறிவு என்னும் இயல்பு அவனுக்குரியதாகிறது. அத்தகையவன் எதை அறிகிறான் என்ற கேள்வி வருகிறது. முக்கோணம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதுபோன்று திரிபுடியும் இணைந்திருக்கிறது. இம்மூன்றினுடைய சேர்க்கையால் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் கர்மம் நடைபெறுகிறது. கர்மத்தில் இனியது எது, இன்னாதது எது என்ற பாகுபாடு திரிபுடியால் ஏற்படுகிறது.
கருவியில் அகக்கருவி, புறக்கருவி என இருவகை உண்டு. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய இவை அந்தக்கரணம் அல்லது அகக்கருவி. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐந்தும் புறக்கருவிகளாம். இவைகள் ஞானேந்திரியம் ஐந்து, கர்மேந்திரியம் ஐந்து ஆகப் பரிணமிக்கின்றன. கர்மம் செய்பவனாகிய ஜீவனே கர்த்தாவாகிறான். இங்ஙனம் ஞானமும் கர்மமும் ஜீவனிடத்து இணைபிரியாது அமைந்திருக்கின்றன. ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துதற்கு ஞானமும் கர்மமும் இன்றியமையாதவைகள். படிப்பும் விளையாட்டும் சேர்ந்திருந்தால்தான் சிறுவன் ஒருவன் முன்னேற்றமடைய முடியும். அவனது உடலும் உள்ளமும் சேர்ந்தே வளரவேண்டும். ஜீவாத்மாவோ ஞான அனுபவம் இருக்கிறவளவு கர்மத்தைச் செவ்வையாகச் செய்கிறான். முயன்று வினையாற்றும்பொழுது அது ஞான அனுபவத்தை உண்டுபண்ணுகிறது. ஆக, ஞான திரிபுடியும் கர்ம திரிபுடியும் அவனுக்குத் தேவை.
ஜீவன் பெறுகிற ஞானத்திலும், செய்கின்ற கர்மத்திலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற வேறுபாட்டைக் காண்கிறோம். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் யாது? விடை வருகிறது :
19. ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குணபேதத:
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி
குணஸங்க்யாநே-குணங்களை யெண்ணுமிடத்தே, ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச-ஞானம், கர்மம், கர்த்தா, குணபேதத:-இவை குண பேதங்களால், த்ரிதா ஏவ-மும்மூன்று வகைப்படும் என்று,
ப்ரோச்யதே-சொல்லப் படுகின்றன, தாநி அபி யதாவத் ச்ருணு-அவற்றையும் உள்ளபடி கேள்.
பொருள் : குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.
ஆறு சாஸ்திரங்களுள் சாங்க்ய சாஸ்திரம் நான்காவது ஸ்தானம் பெறுகிறது. இது கபில முனிவர் இயற்றியது. பிரகிருதி தத்துவங்களை விளக்குதற்கு இது முடிவான பிரமாணம். ஆகையால் குணங்களின் பாகுபாடுகளை இந்நூலினின்றே தெரிந்துகொள்ளவேண்டும். பல புருஷர்கள் இருப்பதாக சாங்க்ய சாஸ்திரம் சொல்லுகிறது. அவைகளுக்கெல்லாம் மேலாக ஒரு பரமாத்மா உள்ளது என்பதை சாங்க்ய சாஸ்திரம் சொல்லுவதில்லை. பரபிரம்மத்தை அறிதற்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமல்ல. அதற்கு வேதாந்த சாஸ்திரமே பிரமாணமாகிறது. முக்குணமயமாயுள்ள இயற்கைத் தத்துவங்களுக்கு சாங்க்ய சாஸ்திரம் பிரமாணமாகிறது. அவைகளை உள்ளபடி கேள் என்று பகவான் பகர்வது யுக்திக்கும் அனுபவத்துக்கும் அவைகள் ஒவ்வும் என்பதாம்.
அதிகாரி பேதம் என்பது முக்கியமானதொரு கோட்பாடாகும். உத்தமம், மத்திமம், அதமம் என்று அதிகாரியின் பேதம் பிரித்தெடுக்கப்படுகிறது. தலைமாணாக்கன், இடைமாணாக்கன், கடைமாணாக்கன் என்பது இதுவே. உத்தம அதிகாரிக்குச் சிறிது புகட்டினாலும் உண்மை விளங்குகிறது. அவனுக்கு மௌனோப தேசம் ஒப்பற்ற உபதேசமாகிறது. கீழ்நிலைக்குப் போகப் போக உபதேசம் வெவ்வேறு வடிவெடுத்தாகவேண்டும். பின்பு, புகட்டுகின்றவனிடத்து வல்லமையிருந்தால் மிக மந்த அதிகாரிக்கும் ஓரளவு உண்மையைப் புகட்டலாம்.
20. ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்
ஏந விபக்தேஷு-எந்த ஞானத்தினால் தனித்தனியான, ஸர்வபூதேஷு-உயிர்கள் அனைத்திலும், அவிபக்தம் அவ்யயம் ஏகம் பாவம்-பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை, ஈக்ஷதே - காணுகிறானோ, தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்தி-அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி.
பொருள் : பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.
பிரகிருதியின் கூறுகள் வேறுவேறாய்ப் பிரிந்துள்ளன. சராசரங்களனைத்தும், ஜட சேதனங்களனைத்தும் மாயா காரியங்களே. அவைகளுக்கெல்லாம் ஆதாரமாயிருப்பது பரமாத்மா. அது ஏக வஸ்து. ஆகாசத்தைப் போன்று அது பிளவுபடாதது. ஜகத் அதனிடத்திருந்து தோன்றி வருவதால் அது குறைவுபடுகிறதில்லை. ஏனென்றால் அது அகண்ட வஸ்து; கூடுதல் குறைதல் என்பது அதற்கு இல்லை. ஆகையால் அது அழியாதது. ஆகாசமானது பாண்டங்களில் பிளவு படுவதில்லை. அங்ஙனம் வெவ்வேறு பூதத்திடத்து ஆத்மா வெவ்வேறு ஆத்மாவாக வடிவெடுக்கவில்லை. துவைதமல்லாத இந்த ஆத்மாவை உள்ளபடி அறிவது சாத்விக ஞானமாம்.
காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும்கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.
21. ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்
து யத் ஜ்ஞாநம்-ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக, ஸர்வேஷு பூதேஷு-உயிர்களனைத்திலும், ப்ருதக்விதாந் நாநாபாவாந்-வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள், ப்ருதக்த்வேந வேத்தி-பிரித்துக் காணும், தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்தி-அந்த ஞானம் ராஜசம் என்றுணர்.
பொருள் : உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.
ஒவ்வொரு தேகத்திலும் ஒரு தனி ஆத்மா இருக்கிறதென்றும், அதற்கு அலாதி லக்ஷணங்கள் இருக்கின்றன வென்றும் அறிவது ராஜஸ அறிவு. பொன் தாதுவைப் பூமியில் வெவ்வேறு பிரதேசங்களில் வெட்டி யெடுக்கலாம். தாதுவில் படிந்துள்ள அழுக்கு தேசத்துக்கு ஒருவிதமாயிருக்கலாம். அவ் அழுக்குகளை யெல்லாம் நீக்குதல் முறை. அழுக்கு நீங்கப்பெற்ற பின் தூய தங்கம் ஒரே பாங்குடையது. இது இன்ன தேசத்துத் தங்கம் என்ற வேற்றுமை போய்விடுகிறது. உபாதிபேதத்தால் ஆத்மாக்கள் பலவாகத் தென்படுகின்றன. உபாதிகளுக்கு முதன்மை கொடுப்பது ரஜோகுண அறிவின் இயல்பு. உபாதிகள் என்ற அழுக்கை நீக்கிவிட்டால் எஞ்சியிருக்கிற சுத்த சைதன்யம் அல்லது ஆத்ம சொரூபம் யாண்டும் ஒன்றே என்பது விளங்கும். கனவு இல்லாத ஆழ்ந்த உறக்கத்துக்கு சுழுத்தி என்று பெயர். ஆங்கு வெவ்வேறு பிரக்ஞைகள் இல்லை. வேற்றுமையைக் கடந்துள்ள அந்நிலையை எண்ணிப்பார்க்கவேண்டும். ஒற்றுமையை உணர அது உதவும்.
22. யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம்
து யத் ஏகஸ்மிந் கார்யே-ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை, க்ருத்ஸ்நவத் ஸக்தம்-அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், தத் அஹைதுகம்-யுக்திக்கு பொருந்தாததும், அதத்த்வார்தவத்-உண்மையில் அறியாததும், அல்பம் ச-அற்பத் தன்மை உடையதும், தாமஸம் உதாஹ்ருதம்-தாமசமென்று கூறப்படும்.
பொருள் : காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.
பஞ்ச பூதங்களால் ஆகிய தேகத்தை ஆத்மாவென்று கருதுபவர் இருக்கின்றனர். கடவுள் வழிபாட்டுக்கு விக்கிரகம் துணைபுரிகிறது. கல்லால் அல்லது மரத்தால் செய்த விக்கிரகத்தையே கடவுளாக நினைப்பவர் உளர். அந்த விக்கிரகம் சிதைவுபட்டுப் போனால் கடவுள் அழிந்துபோய்விட்டார் என்பது அத்தகையவர் நம்பிக்கையாகும். ஒரு காரியத்தை முழுதுமென்று பற்றிக் கொள்ளுதற்கு இது சான்று ஆகும். தான் தேகத்தைவிட மேலானவன் என்பதையும், கடவுள் வடிவங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் மந்த புத்தியுள்ள அம்மனிதன் அறியான். விக்கிரகமானது கடவுளுடைய சொரூபத்துக்கு வெறும் புறச் சின்னமாகிறது. கடவுள் அவ்வடிவத்தில் அடங்கியவர் அல்லர். புல்லறிவாளர்க்கு இது விளங்குகிறதில்லை. தமோ குணத்தில் உதித்துள்ள அவ்வறிவை ஆராய்ந்து பார்த்தால் அது யுக்திக்குப் பொருந்தாதது என்பது விளங்கும். யுக்திக்கு அது முற்றிலும் முரண்பட்டது. உண்மைக்கும் அப்புல்லறிவுக்கும் வெகுதூரம். நன்மை ஒன்றும் அவ்வறிவினின்று விளைவதில்லை. ஆக, அது அற்பமானதென்று இயம்பப்படுகிறது.
23. நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே
யத் கர்ம-எந்த செய்கை, நியதம் ஸங்கரஹிதம்-விதிப்படி பற்றுதல் இன்றி, அபலப்ரேப்ஸுநா-பயனைக் கருதாமல், அராகத்வேஷத:-விருப்பு வெறுப்பின்றி, க்ருதம்-செய்யப் படுகிறதோ, தத் ஸாத்த்விகம் உச்யதே-அது சாத்விக மெனப்படும்.
பொருள் : பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை, சாத்விக மெனப்படும்.
சுவாசிப்பது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கர்மமாகிறது. ஆயினும் அது விருப்பு வெறுப்பு அற்றுச் செய்யப்படுகிறது. ஒருவனுக்கு நியமிக்கப்பட்டுள்ள கர்மமே அவனுடைய நித்திய கர்மமாகிறது. நித்திய கர்மம் மனபரிபாகத்துக்கு ஏற்றபடி மாறுகிறது. கணிதத்தில் கூட்டல் கழித்தல் போடுவது புதிதாகப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கும் சிறுவன் ஒருவனுக்கு நித்திய கர்மமாகும். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கனுக்கு அத்தகைய கணக்குப்போடுவது நித்திய கர்மமாகாது. அவனது வகுப்புக்கேற்ற மேலான கணக்குகளை அவன் போடவேண்டும். அதுபோன்று அவரவர் பரிபாகத்துக்கு ஏற்றபடி சமுதாயத்தில் எல்லார்க்கும் கடமையுண்டு. அறப்போர் புரிந்து தீமையைக் களைந்து நலத்தைக் காப்பாற்றுவது அர்ஜுனனுக்கு நியமிக்கப்பட்ட கர்மமாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகைய மேலான கடமையுண்டு. அதை முறையாகச் செய்யவேண்டும்; சுவாசிப்பது போன்று இடைவிடாது செய்யவேண்டும். பின்பு, அதில் பற்றுவைக்காது செய்யவேண்டும். பற்று அற்றவன் தன்னை எக்கர்மத்துக்கும் கர்த்தாவென்று எண்ணுவதில்லை; வெறும் கருவியென உணர்கிறான். அது சாத்விகமான கர்மமாகும்.
சாத்விக இயல்புடையவன் செய்யும் ஆத்ம சாதனங்களை ஆடம்பரமாக மற்றவர்களிடம் காட்டிக் கொள்வதில்லை. கூடிய வரையில் தனியாக அவன் அவைகளைச் செய்து முடிக்கிறான். இரவில் மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கொசு வலைக்குள் உட்கார்ந்துகொண்டு அமைதியாகத் தியானம் செய்கிறான்.
24. யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந:
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்
து யத் கர்ம-ஆனால் எந்த செயல், புந: காமேப்ஸுநா-விருப்பங்களுக்கு வசப்பட்டவனால், வா ஸாஹங்காரேண-அல்லது அகங்காரமுடையவனால், பஹுலாயாஸம்-செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை, தத் ராஜஸம் உதாஹ்ருதம்-அது ராஜசம் எனப்படும்.
பொருள் : விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.
ஆசையில் இரண்டுவிதமுண்டு. ஒன்று மனிதனுடைய முன்னேற்றத்துக்குத் துணைபுரிவது. அருள் தாகம், சீலத்தில் விருப்பம், பரோபகாரச் சிந்தனை முதலியன வேண்டப்படும் ஆசைகளாகின்றன. ஆனால் மனிதனை உலக பந்தத்தில் மேலும் ஆழ்த்தும் கீழான ஆசைகளை அகற்றவேண்டும். முறையாக, அளவாகப் பணம் சம்பாதிப்பதும் செலவிடுவதும் திரவிய யக்ஞமாகும். ஆனால் பொருந்தாத வழிகளில் மனிதன் பணம் சம்பாதிக்கும் யந்திரமாய் மாறிவிடலாகாது. அப்பேராசையானது அவனிடத்திருக்கும் மனுஷத்தன்மைகளையெல்லாம் பாழாக்குகிறது.
சரீரம் உடைத்திருப்பதே ஒருவித அகங்காரம். அதை சுகபோகத்துக்கென்றே வைத்திருப்பது, அதை அலங்கரிப்பது, கொழுக்கச் செய்வது முதலியன கொடிய அகங்காரமாகும். கிடைப்பதற்கு அரிய மானுடப் பிறவி அதனால் அனர்த்தமாய்ப் போகிறது. தனக்கு நிகரானவர் யார் இருக்கிறார் என்ற எண்ணத்துடன் உடலை வளர்ப்பவருடைய தடித்த அகங்காரம் ரஜோகுணத்திலிருந்து உண்டானது. சரீரம் ஈசனுடைய ஆலயம் என்ற எண்ணத்தால் அதை வெல்லவேண்டும்.
துஷ்ட அகங்காரம் என்பது யாது? என்னைத் தெரியாதா? எனக்கு அவ்வளவு செல்வமிருக்கிறது; என்னிலும் மேம்பட்டவர் யார்? என்று சொல்லுகிற அகங்காரந்தான்.
25. அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம்
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே
யத் கர்ம அநுபந்தம்-எந்தச் செய்கையின் பின்விளைவையும், க்ஷயம்-அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், ஹிம்ஸாம்-துன்பத்தையும், பௌருஷம் ச-செய்வானது திறமையையும், அநவேக்ஷ்ய-கருதாமல், மோஹாத் ஆரப்யதே-அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ, தத் தாமஸம் உச்யதே -தாமச மெனப்படும்.
பொருள் : செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.
தமோகுணம் நிறைந்த மனிதனுக்குத் தான் தொடுத்த கர்மத்தினின்று விளைவது நன்மையா, கேடா என்று எண்ணிப்பார்க்கும் நல்லறிவு இல்லை. உடலின்கண் உள்ள வலிவு நஷ்டமும், பொருள் நஷ்டமும், ஆயுள் நஷ்டமும் சேர்ந்து உண்டாகும் என்பது அறிவின்மையில் ஆழ்ந்திருப்பவனுக்கு விளங்காது. அவனுடைய முயற்சி தனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் துன்பத்தை உண்டு பண்ணும் தன்மையது. தான் படைத்துள்ள திறமையானது தான் எடுத்துக்கொண்டுள்ள கர்மத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றதல்ல என்பதை அம்மனிதன் அறியான். விவேகமின்மையே அதற்குக் காரணமாகும்.
மிகுந்த தபசுக்குப் பிறகுதான் மனிதர்கள் கபடமற்றவராகவும் தயாளகுணம் வாய்ந்தவராகவும் ஆகின்றார்கள். கள்ளங் கபடமற்ற மனதையுடையவராயிருந்தால் கடவுள் காட்சி கிடைக்கும். அவ்வித எளிய மனதை யுடையவர்க்கே கடவுள் தம்மைக் காட்டுவிப்பார் என்று பகவான் கூறுவது வழக்கம். ஆனால் எளிமை, உண்மை இவற்றின் பேரால் ஒருவன் ஏமாளியாகிவிடக் கூடாதென்று அஞ்சிப் பின்வருமாறு குறிப்பிடுவதும் உண்டு. பக்தனாக இருக்கவேண்டும்; ஆனால் அதன்பேரில் மூடனாக இருக்கக்கூடாது. எப்பொழுதும் மெய்ப்பொருளிலிருந்து பொய்ப்பொருளையும், நித்தியத்திலிருந்து அநித்தியத்தையும் அகற்றுவதற்காக மனதிலே விசாரணை செய்து பார்க்கவேண்டும். பிறகு அநித்தியத்தை அகற்றிவிட்டு நித்திய வஸ்துவின்மீது மனதை நிறுத்த வேண்டும்.
ஞானத்தையும் கர்மத்தையும் பாகுபடுத்தியான பிறகு பகவான் இனி கர்த்தாவைப் பாகுபடுத்துகிறார்.
26. முக்தஸங்கோऽநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே
முக்தஸங்கோ-பற்றற்றவனாகவும், அநஹம்வாதீ-நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும், த்ருத்யுத்ஸாஹஸமந்வித:-உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும், ஸித்தி அஸித்த்யோ நிர்விகார:-வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும், கர்தா ஸாத்த்விக உச்யதே-உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.
பொருள் : நசைக ளற்றான், நானென்ப தற்றான், உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் புடையா னென்ப.
எல்லா வடிவங்களும் ஈசன் சொரூபம்; எல்லாச் செயல்களும் அவனுடையவை என்ற எண்ணத்தில் சாதகன் நிலைத்திருக்கிறான். எனவே அவன் பற்று நீங்கியவன் ஆகிறான். உடல் தன்னுடையது என்பது அல்லாது அது ஈசனுடைய ஆலயமென்று சாதகன் கருதுகிறான். அவ்வுடலின் மூலம் நிகழ்கின்ற கர்மங்களுக்குத் தான் பொறுப்பாளன் அல்லன்; அது ஈசன் செயல் என்று அவன் உறுதியாக உணர்கிறான். ஆதலால் அவனிடத்து அகங்காரமில்லை. தன்னை பகவானுடைய தொண்டன் என்று கருதுகிறபடியால் தொடுத்த கர்மங்களில் அவனுக்கு உறுதியும் ஊக்கமும் உண்டாகின்றன.
பற்றுடையார் வெற்றியில் மகிழுறவும், தோல்வியில் துன்புறவும் செய்கின்றனர். கடவுளுடைய செயல் என்று எண்ணுபவன் கர்மத்துக்குக் கர்த்தாவாகத் தோன்றுகிறானெனினும், மனத்தினுள் எல்லாம் ஈசன் செயல் என்ற திடநம்பிக்கையிருப்பதால் அவன் நிர்விகாரியாக, மனதின்கண் வேறுபாடு அடையாதவனாக இருக்கிறேன்.
கள்ளங் கபடமற்ற மனமிருந்தால் ஈசுவரனை எளிதில் அடையலாம். கற்கள் இல்லாமல் உழுது பண்படுத்தப்பட்ட மிருதுவான பூமியில் நடப்படும் வித்து எளிதில் முளைத்துக் கிளம்பி, சீக்கிரத்தில் பயன் அளிப்பதைப் போல, கள்ளங்கபடமற்ற மனத்தில் ஆத்மீக உபதேசங்கள் எளிதில் பயன் அளிக்கின்றன.
27. ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோऽஸுசி:
ஹர்ஷஸோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:
ராகீ-வேட்கையுடையோன், கர்மபலப்ரேப்ஸு-செய்கைப் பயன்களை விரும்புவோன், லுப்த:-லோபி (பேராசை உள்ளவன்), ஹிம்ஸாத்மக:-இடர் செய்வோன், அஸுசி:-தூய்மை யற்றோன், ஹர்ஷஸோகாந்வித:-இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன், கர்தா ராஜஸ: பரிகீர்தித:-இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்
பொருள் : வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.
ஏதேனும் ஒருவிதத்தில் பிறர் பொருளைத் தன்னுடையதாக்கிக்கொள்ள முயலுபவன் உலுத்தன் அல்லது உலோபியாகிறான். அதன் பொருட்டு மற்றவர்களைத் துன்புறுத்தவும் அவன் ஆயத்தமாயிருக்கிறான். அத்தகையவன் எண்ணுவதிலும், பேசுவதிலும், செய்வதிலும், உடலை வைத்துக்கொள்ளும் முறையிலும் சுத்தமில்லை. விரும்பியது வந்தமையுங்கால் அவன் விரைவில் மகிழ்வடைகிறான். வேண்டாதது வந்தமையுங்கால் அவன் விரைவில் சோகித்துத் துன்பப்படுகிறான்.
ரஜோகுணம் நிறைந்தவனது கர்த்ருத்வம் (கர்த்தா என்று உணரும் பான்மை) இத்தகையதாம்.
வீண் கர்வம் பிடித்தவனாகயிருப்பது கேவலம் தாழ்ந்த சுபாவம். காக்கையைப் பார். தான் சாமர்த்தியமுள்ள பக்ஷியென அது நினைத்துக்கொண்டிருக்கிறது. ஒருபோதும் அது வலையில் அகப்படுவதில்லை. ஆபத்து வருமென்பதைச் சற்றுத் தெரிந்துகொண்டதும் பறந்தோடி விடுகிறது. வெகு தந்திரமாக ஆகாரத்தைத் திருடுகிறது. என்றாலும் மலம் தின்பதில் மட்டும் அதற்கு அருவருப்பில்லை. அதிகச் சமர்த்தாக இருப்பதின் பலன் இதுதான்.
28. அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஸடோ நைஷ்க்ருதிகோऽலஸ:
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே
அயுக்த:-கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன், ப்ராக்ருத:-அறிவு முதிர்ச்சி அடையதவன்,
ஸ்தப்த:-கர்வமுடையவன், ஸட:-வஞ்சகம் உடையவன், நைஷ்க்ருதிக:-பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன், விஷாதீ-கவலை கொண்டவன், அலஸ:-சோம்பேறியும், தீர்கஸூத்ரீ ச-காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், கர்தா தாமஸ உச்யதே - இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்
பொருள் : யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.
அடக்கமும், ஒடுக்கமும், சாதனமும் உடைய மனது யோகத்துக்கு உரியது. அத்தகைய நல்லியல்பு ஒன்றும் இல்லாத மனது ஈண்டு உரைக்கப்படுகிறது. புத்தி வளர்ச்சியடையாது பாமரனாகவும் பாலன் போன்றும் இருப்பவன் பிராகிருதன். வணங்க வேண்டிய இடத்தில் வணங்காதிருப்பவன் முரடனாகிறான். வேலை செய்தற்கு விருப்பமில்லாது தன் வல்லமையை யெல்லாம் மறைத்து வைத்துக்கொள்பவன் வஞ்சகனாகிறான். பிறருக்கிடையில் வேண்டுமென்ற பகைமையை உண்டுபண்ணுபவன் பழிகாரனாகிறான். செய்ய வேண்டியதை ஒன்றும் செய்யாதிருப்பவன் சோம்பேறி. மனம் தளர்ந்து யாண்டும் துன்பம் துய்க்கும் தன்மையன் ஒருவன் அரும்பெரும் செயலுக்கு அருகன் ஆகான். துன்பப்படுபவனிடத்திருந்து பேராற்றல்களெல்லாம் மறைந்துபட்டுப் போகின்றன. தற்காலிகமாகத் துன்பத்தின் வசப்பட்டிருந்த அர்ஜுனனைத் தட்டி யெழுப்புதற்கே கீதா உபதேசம் நிகழ்வதாயிற்று. ஒரே நாளில் முடிக்கவேண்டிய வேலையை ஒரு மாதத்துக்கு நீட்டிக்கொண்டு போகிறவன் காலத்தை வீணே கடத்துபவன் ஆகிறான். அதனால் அவனது வாழ்க்கைப் பயன் குன்றுகிறது.
ஒரு செம்படவன் ஆற்றில் வலையை வீசி அநேக மீன்களைப் பிடித்தான். சில மீன்கள் வலைக்குள் அசைவற்றிருந்து வெளியே போகக் கொஞ்சமேனும் பிரயத்தனப்படாமலிருந்தன. வேறு சில மீன்கள் பிரயத்தனப்பட்டுத் துள்ளிக் குதித்தன. ஆனால் வெளியே போக முடியவில்லை. இன்னும் சில மீன்கள் எப்படியோ வலையைவிட்டுத் தப்பித்துக்கொண்டு போய்விட்டன. உலகத்திலுள்ள மனிதர்களும் இவ்வாறு மூவகையினராக இருக்கின்றனர். 1. முக்தியடையப் பிரயத்தனப்படாது பந்தப்பட்டிருப்பவர்கள் 2. பிரயத்தனப்படும் முமுக்ஷúக்கள் 3. விடுதலையடைந்த முக்தர்கள்.
அறிவும் உறுதியும் பெறுகிற படித்தரங்கள் இனி விளக்கப்படுகின்றன:
29. புத்தேர்பேதம் த்ருதேஸ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஸ்ருணு
ப்ரோச்யமாநமஸேஷேண ப்ருதக்த்வேந தநஞ்ஜய
தநஞ்ஜய-தனஞ்ஜயா, குணத: ஏவ-குண வகையால், புத்தே: த்ருதே: ச-புத்திக்கும் மன உறுதிக்கும், த்ரிவிதம் பேதம்-மூன்று விதமான வேறுபாட்டை, அஸேஷேண ப்ருதக்த்வேந-முழுமையாகவும் பகுத்தும், ப்ரோச்யமாநம் ஸ்ருணு-உரைக்கிறேன், கேள்.
பொருள் : குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.
திக்விஜயம் செய்தபொழுது அர்ஜுனன் தேவலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள தனத்தையெல்லாம் ஜயித்தானாதலால் அவன் தனஞ்ஜயன் என்ற பெயர் பெற்றான். யாருக்கும் பயன் படாது ஓர் இடத்தில் அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைப் பயன்படுகிற இடத்துக்கு மீட்டெடுத்துக்கொண்டு வருவது அரசனுடைய கடமையாகும்.
செய்யத்தக்கது எது, தகாதது எது என்று முடிவுகட்டுந் தன்மையானது அறிவு என்றும் புத்தி என்றும் பகரப்படுகிறது. அத்தகைய புத்தியினிடத்து மூன்றுவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன. செய்யவேண்டிய காரியத்தைத் தளர்வுறாது திட்பத்துடன் செய்வது உறுதி அல்லது திருதி என்று பெயர் பெறுகிறது. அதுபோன்ற மனவலிவின்கண் மூன்று படித்தரங்கள் அமைந்திருக்கின்றன.
உப்பினாலும் துணியினாலும் கல்லாலும் செய்யப்பட்ட மூன்று வகைப் பதுமைகள் இருக்கின்றன. அவைகளைத் தண்ணீரில் அமிழ்த்தினால் முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது தன் உருவத்துடனிருந்தே நிறையத் தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக்கொள்ளும். மூன்றாவதில் தண்ணீரே நுழையாது. முதல் பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு ஒன்றி ஐக்கியமாய்விடும் மனிதனைக் குறிக்கும். அவன் முக்த புருஷன். இரண்டாவது பதுமை திவ்யானந்தத்தையும் திவ்ய ஞானத்தையுமுடைய வாஸ்தவமான பக்தனைக் குறிக்கும். மூன்றாவதோ, ஞானமானது கொஞ்சமேனும் நுழையாத ஹிருதயத்தையுடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.
அவ் அறிவுக்கும் உறுதிக்கும் இனி விளக்கம் வருகிறது :
30. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ
பார்த-அர்ஜுனா, யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச-எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம், கார்யாகார்யே பயாபயே ச-செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தம் மோக்ஷம் ச வேத்தி-பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும், ஸா புத்தி: ஸாத்த்விகீ-அந்த புத்தியே சாத்விக புத்தியாம்.
பொருள் : தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.
பிரபஞ்சத்தில் ஜீவனைப் பந்தப்படுத்திப் பிறப்பு இறப்பைப் பெருக்கிக்கொண்டுபோகும் கர்மம் பிரவிருத்தி எனப்படுகிறது. மற்று, மோக்ஷத்துக்கு ஏதுவான கர்மம் நிவிருத்தி என்று சொல்லப்படுகிறது. இதையே அகர்மம் என்றும் சந்நியாசம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் கர்மத்தைக் கடப்பதற்கு அது உறுதுணையாகிறது. கால தேச வர்த்தமானத்தை அனுசரித்து எதைச் செய்தால் மனிதனுக்கு நலன் வருகிறதோ அது செய்யத் தகுந்த கர்மம். எதைச் செய்தால் கேடு உண்டாகுமோ அது தகாத கர்மமாகிறது. தகாத கர்மத்தைச் செய்ய மனிதன் பயப்படவேண்டும். பெயரளவில் அது பயமெனப்படுகிறது. உண்மையில் அது வீரத்தின் தோற்றமாம். விஷப் பாம்பு, புலி முதலியவைகளுடன் பழகப் பயப்படவேண்டும். அதாவது மடத்தனமாகப் பாதுகாப்பின்றி அவைகளின் அருகில் செல்லலாகாது. தானாக வந்தமைகிற மரணத்துக்குப் பயப்படலாகாது. பிசாசு, பூதகணங்கள் முதலியவைகளைப்பற்றிப் பயப்படுவதில் பொருளில்லை. அவைகளைப்பற்றிய பயமெல்லாம் அக்ஞானத்தால் வருவது. இல்லாததை இருப்பதாகக் கோழைநெஞ்சம் கற்பித்துக் கொண்டு அஞ்சுகிறது. பிரவிருத்தியும், தகாத கர்மமும், பயமும் பந்தத்தை உண்டுபண்ணுகின்றன. நிவிருத்தியும், தக்க கர்மமும், அபயமும் மோக்ஷத்தைத் தருகின்றன. அக்ஞானத்தால் பந்தம் ஏற்படுகிறது. ஞானத்தால் மோக்ஷம் விளைகிறது. சாத்விக புத்தி இவைகளையெல்லாம் நன்கு ஓர்கிறது.
இவ்வுலகம் அநித்தியமா? நீ ஈசுவரனை அறியாமலிருக்கும் வரையில் அது அநித்தியந்தான். ஏனெனின், நீ ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஈசுவரனைக் காண்பதில்லை. ஆகவே, நான், எனது என்ற மனோபாவம் உன்னிடம் ஆழ்ந்துகிடக்க, நீ உலக வசத்தவனாகிறாய். இவ்விதம் அக்ஞானத்தினால் மதிமயங்கிய நீ, விஷயப்பொருள்களையே கருதுபவனாகி, மாயையாகிய சமுத்திரத்தில் மேலும் மேலும் ஆழமாக மூழ்கிக்கொண்டேயிருக்கிறாய். வழி நேராக இருப்பினும், ஸம்ஸாரத்தினின்று கரையேற வொண்ணாதபடி மாயையானது மனிதர்களுடைய கண்களை முற்றிலும் குருடாக்கி வருகின்றது. ஸம்ஸாரம் எவ்வளவு அநித்தியமென்பது உனக்கே தெரியும். நாம் வசிக்கிற வீட்டைப் பற்றிச் சற்று யோசனை செய்வோம். எத்தனை பேர்கள் அதில் பிறந்து இறந்து போயிருக்கின்றனர்! உலகப் பொருள்கள் ஒரு நிமிஷத்தில் நம் முன்னர் தோன்றி, அடுத்த நிமிஷத்தில் மறைந்து போகின்றன. பந்துக்கள் என யாரை நீ கருதுகிறாயோ அவர்கள் நீ கண்மூடிய பிறகு உனக்குப் பந்துக்கள் ஆகிறதில்லை. அப்படியிருந்தும் லௌகிகனுடைய பற்று எவ்வளவு பலமானது ! குடும்பத்தில் அவனுடைய பராமரிப்பை எதிர்பார்ப்பவர் ஒருவருமில்லாத காலத்தில் கூட அவனுக்குக் காசிக்குப் போய்வரச் சந்தர்ப்பப்படுவதில்லை. பக்தி சாதனம் செய்ய அவனுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. பேரன் ஹரீசன் என்ன செய்வான்? என்ற விசாரம் அவனை உலகத்தோடு பிணிக்கின்றது. மீன்பறியின் வாய் எப்போதும் திறந்திருக்கிறது; என்றாலும் மீன்கள் வெளியே ஓடிப் போவதில்லை. வண்ணாத்திப்புழு தான் இழைத்த கூண்டிலேயே கிடந்து சாகின்றது. அப்படிப்பட்ட ஸம்ஸாரம் அநித்தியமென்றும் அழிந்து போகக்கூடியதென்றும் ஏற்படவில்லையா?
31. யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ
பார்த-பார்த்தா. யயா தர்மம் அதர்மம் ச-எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும், கார்யம் அகார்யம் ஏவ ச-செய்யத் தக்கது, தகாதது, அயதாவத் ப்ரஜாநாதி-உள்ளபடி அறியாத, ஸா புத்தி: ராஜஸீ-புத்தி ராஜச மெனப்படும்.
பொருள் : தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.
அசைகின்ற நீரில் பிம்பம் உள்ளபடி தெரிகிறதில்லை. அங்ஙனம் ராஜஸ புத்தியில் சாஸ்திரோக்தமான தர்மமும் காரியமும் உள்ளபடி தென்படமாட்டா; திரிவுபட்டே தென்படுகின்றன. சூதாடுதலாகிய தகாத காரியத்தைத் தகுந்த காரியமாக துரியோதனன் எண்ணி தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான். தனக்கு உரியதல்லாத ராஜ்யத்தை உரியதென்று பற்றிக்கொண்டு பாண்டவரைப் போரில் தூண்டியது அதர்மச் செயல். ஆயினும் அவன் அதை தர்மமென்று எண்ணினான்.
ரஜோகுணத்தினின்று உதித்த புத்தியுடையவனிடத்துப் பெருமிதமான உழைப்பு இருக்கிறது. ஆனால் அந்த உழைப்பில் நேர்மையைக் காணமுடியாது. அயலார் இருவர் கிருஷியோ, வர்த்தகமோ, கைத்தொழிலோ செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுள் ரஜோகுண விருத்தியுடையவன் தனது ஆற்றலையும் அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான். ஆனால் அம்முயற்சி ஆக்கத்துறையில் இராது. அயலான் சம்பாதித்ததைத் தான் அபகரித்துக்கொள்ள அவன் எத்தனிப்பான்; அல்லது அயலானுக்கு நலம் செய்வது போன்று வெளிப்படையில் காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனைக் கெடுக்க எத்தனிப்பான்; வெளிப்படையாக அவனோடு போட்டி போட்டும் அவனை அழிப்பான். தன்னருகில் அமைதியாக வாழ்ந்திருக்க அவன் யாரையும் விடமாட்டான்; ஏதேனும் ஒரு விதத்தில் அயலானை அல்லல்படும்படி செய்துவைப்பான். வழக்குக் தொடுப்பதில் ரஜோகுணத்தானுக்கு நிகரானவனைக் காணமுடியாது. காலமெல்லாம் நீதி மன்றங்களில் வியாச்சியங்களும் வில்லங்கங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். மெய்யைப் பொய்யாக்குதலிலும் பொய்யை மெய்யாக்குதலிலும் அவன் வல்லவன். முறை தவறிய முயற்சியிலேயே அவன் பெருமகிழ்வடைவான். நேர்மையாக நடந்துகொள்பவர்களை ஒன்றுக்கும் உதவாத அப்பாவிகளென்று அவன் ஏளனம் பண்ணுவான். நல்லார் அருகில் அவன் ஒருநாளும் செல்லான். பாரமார்த்திக வாழ்வு சம்பந்தமான பேச்சு அவனுக்குக் கசப்பாக இருக்கும். பிழைக்கத் தெரியாதவர்களது போக்கு அத்தகையது என்று அவன் அனுதாபம் காட்டுவான் அல்லது பராமுகமாய் இருப்பான். கெட்ட வழியில் சம்பாதிக்கும் அவன் செல்வம் கெட்ட காரியத்துக்கே ஓயாது போய்க்கொண்டிருக்கும். நல்ல காரியத்துக்குச் செல்வத்தைச் சிறிதேனும் அவன் ஈயான். ரஜோகுணத்தில் உதித்த அறிவு செய்யும் செயல்கள் இவை போன்றவைகளாம்.
32. அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா
ஸர்வார்தாந்விபரீதாம்ஸ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ
பார்த-பார்த்தா, யா தமஸா ஆவ்ருதா-எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய், அதர்மம் தர்மம் இதி ச-அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும், ஸர்வார்தாந் விபரீதாந் ச-எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக, மந்யதே-நினைக்கிறதோ, ஸா புத்தி: தாமஸீ-அது புத்தி தாமச புத்தியாம்.
பொருள் : பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.
நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் நினைப்பது விபரீத புத்தி. நோயாளி ஒருவன் மருந்தை அருந்தமாட்டேன் என்று நோயை வளர்க்கிற உணவை உண்டால் என்னாகுமோ அதுவே தாமஸபுத்தியின் விளைவு. அறிவிலியாகிய சிறுவன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை; துஷ்டப் பிள்ளைகளுடன் கூடிக்கொண்டு வீண்காலம் போக்குகிறான். அவனுக்குப் பள்ளிக்கூடம் போவது கெட்டதாகத் தோன்றுகிறது. கூடாநட்புக் கொள்வதை நலமென நினைக்கிறான். முதியவர்களில் பலர் உழைத்துப்பாடுபடுவதில்லை; சோம்பலே வடிவெடுத்திருக்கின்றனர். உழைப்பவர், சுகஜீவனம் பண்ணத் தெரியாதர்கள் என்று அன்னவர் நினைக்கின்றனர். கடவுள் வழிபாடு, பாரமார்த்திக விஷய ஆராய்ச்சி ஆகியவைகளில் அவர்களுக்குக் கசப்பு ஏற்படுகிறது. வேதாந்த விசாரம் செய்தற்கு இப்பொழுது அவசரம் ஒன்றுமில்லை என்பது அவர்களது கருத்து. விருத்தாப்பியத்தில் அதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று சாக்குச் சொல்லுகின்றனர். ஊரார் விஷயங்களைப் பற்றி வீண்பேச்சுப் பேசுவது, அவர்களிடத்துள்ள குணத்தைக் குற்றமாகவும், குற்றத்தைக் குணமாகவும் ஓர்தலில் தமோகுண விருத்தியுடையவர்க்குப் பெருமகிழ்வு உண்டாகிறது. ஆண்மை தரக்கூடிய நல்ல விளையாட்டுகளை அவர்கள் விளையாடமாட்டார்கள். சூதாடுவது போன்ற விளையாட்டுகளில் அவர்கள் வீண் காலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். இலவசமாக உணவு கிடைக்கக்கூடிய இடங்களில் அவர்கள் அழைப்பின்றியே வந்து கூடிக் கலந்துகொள்வார்கள்.
இனி, திருதி விளக்கப்படுகிறது
-
33. த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ
பார்த-பார்த்தா, யயா அவ்யபிசாரிண்யா த்ருத்யா:-எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால், யோகேந-யோகத்தின் மூலம், மந: ப்ராண இந்த்ரியக்ரியா:-மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை, தாரயதே-நிலை நிறுத்துகிறானோ, ஸா த்ருதி: ஸாத்த்விகீ-அந்த உறுதியே சாத்வீகமாவது.
பொருள் : மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.
திருதி என்னும் சொல்லை உறுதி என்று மொழி பெயர்த்திருக்கிறோம். மனத்தகத்து அமையும் திட்டம் என்பதும் அதுவே. நல் வாழ்க்கையில் நிலைத்துள்ள மனதுக்கு அது உண்டாகிறது. சூரிய வெளிச்சம் கிரணங்களாகச் சிதறடைந்து போகிறது. அக்கிரணங்களைத் திரும்பவும் ஒருமுகப்படுத்தினால் பேரொளி உண்டாகிறது. அப்பேரொளியை எப்பொருளின்மீது திருப்பினாலும் அப்பொருளை அது நன்கு விளக்கிக் காட்டவல்லது. அறிவும் ஆற்றலும் ஒன்றுபட்ட அந்தக்கரண நிலை திருதி என்பதாகிறது. திருதி படைத்துள்ள யோகியின் மனதும், பிராணனும், இந்திரியங்களும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் வேலைசெய்ய வல்லவைகளாகின்றன. இந்தச் செயல்களெல்லாம் பரமாத்மாவினுடைய சேவைக்கென்றே ஒப்படைக்கப்படுகின்றன. அதாவது மனதில் உண்டாகிற உணர்ச்சியும், பிராணன் உயிர்பிடித்திருப்பதும், கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் தத்தம் வேலைகளைச் செய்வதும் ஆகிய இவையெல்லாம் விதவிதமான ஈசுவர வழிபாடுகளாகின்றன. வஸ்திரத்தில் அமைந்துள்ள நூலானது பல இழைகளைக் கொண்டது. அங்ஙனம் திருதி என்பது மனம், பிராணன், இந்திரியங்கள் ஆகியவைகளின் உயர்ந்த செயல்களைக் கொண்டது. நூலானது ஊசியின் காதிலே நுழைதற்கு இழைகள் பிளவுபடாதிருக்க வேண்டும். இழைகள் குவிந்து இருந்தால் ஊசியின் காதில் எளிதில் செல்லும். ஆனால் ஊசியின் காது அடைபட்டிருந்தால் குவிந்த நூலும் வளைந்துபோய்விடும். உள்ளே நுழையாது. ஏனென்றால் நூலில் உறுதியில்லை. யோகி ஒருவனுடைய திருதியோ குவிந்த நூல்முனை போன்றும், கூரிய உறுதியான ஊசிமுனை போன்றும் இருக்கும். அத்தகைய பண்பட்ட திருதியானது பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வேறு எப்பொருளுக்கும் அது பங்கிட்டுக் கொடுக்கப்பட்டதன்று. காந்த ஊசி யாண்டும் வடதிசையையே நோக்கி நிற்பதுபோன்று யோகியின் திருதி எப்பொழுதும் பரமாத்மாவுக்கென்றே ஒப்படைக்கப்பட்டதாகிறது. அந்த உறுதிப்பாடு சாத்விகமானது. அது மனிதனை மேலோன் ஆக்குகிறது.
34. யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதேऽர்ஜுந
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ
து பார்த-ஆனால் பார்த்தா, அர்ஜுந-அர்ஜுனா, பலாகாங்க்ஷீ-பயன்களை விரும்புவோன், யயா த்ருத்யா-எந்த உறுதியினால், ப்ரஸங்கேந-மிகுந்த பற்றோடு, தர்மகாமார்தாந் தாரயதே-அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ, ஸா த்ருதி: ராஜஸீ-அந்த உறுதி ராஜசம் ஆகும்.
பொருள் : பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.
புருஷார்த்தம் அல்லது உறுதிப்பொருள் நான்கு, தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம் அவை. சாத்விக திருதி மோக்ஷத்தை நாடுகிறது. தர்மம், அர்த்தம், காமம் ஆகியவைகள் பிரபஞ்ச வாழ்க்கையின் முக்கிய பகுதிகளாகிய இவ்வுலக வாழ்க்கைக்கும் சுவர்க்க வாழ்க்கைக்கும் உதவுகின்றன. உலகப்பற்றைப் பொதுவாக இரண்டாகப் பிரித்து வைக்கலாம். காசு ஆசை அல்லது பொருளில் பற்றுதல்; இது எவ்வளவு உறுதியாக மனதைப்ற்றிப்பிடித்திருக்கிறது என்பது மனிதனுக்குத் தெரியாது. உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்துவிட்டு மனிதன் அல்லும் பகலும் உழைக்கிறான். அதன் பயனாக இன்னும் கொஞ்சம் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை அவனை அச்செயலில் தூண்டுகிறது. சொந்த ஊரையும் உற்றாரையும் உறவினரையும் பிரிந்து தூர தேசத்துக்கு ஒருவன் போகிறான். அதிகம் திரவியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனை ஆங்கு இழுத்துச் செல்லுகிறது. இனி, உடலின் தேவைகளையும் சுருக்கிக்கொண்டு ஒருவன் பாடுபடுகிறான். மேலும் செல்வம் சேரவேண்டும் என்ற நோக்கம் அவனை அப்படித் தூண்டுகிறது. அடுத்தபடியாக இருப்பது இன்பத்தில் வைத்துள்ள பற்றுதல். எல்லா உயிர்களும் இன்பத்தை நாடுகின்றன. இன்பம் கிடைப்பதாலேயே அவைகள் இவ்வுலக வாழ்க்கையை விரும்புகின்றன. அவைகள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளெல்லாம் காமத்தை நிறைவேற்றுதற்பொருட்டேயாம். சலிப்படையாது, தளர்வுறாது எல்லா உயிர்களும் உழைக்கின்றன. இன்பத்தின் பொருட்டே அவைகள் அங்ஙனம் செய்கின்றன. வெவ்வேறு உயிர்கள் வெவ்வேறு விதங்களில் இன்பத்தைப் பெறலாம். ஏதேனும் ஒருவிதத்தில் அது அகப்பட்டால் போதுமானது. உயிரைக் கொடுத்து இன்பத்தைப் பெற அவைகள் எத்தனிக்கின்றனவென்றால் அது மிகையாகாது. நல்லறம் பயிலுதல் பொருளையும் இன்பத்தையும் பெற்று வைத்திருத்தல் பொருட்டேயாம். பொருளோடும் இன்பத்தோடும் கூடிய அறம் இவ்வுலக சம்பந்தமானது. இம்மைக்கு ஏதுவாகிய அறம் பொருள் இன்பங்களில் பெரும் பற்றுதல் வைப்பது ரஜோகுணத்தின் இயல்பு. ஆகையால் இம்மூன்றைக் கடைப்படிக்கும் உறுதி ராஜஸமானது. அது மனிதனை உலக பந்தத்திலேயே ஆழ்த்தி வைக்கிறது.
தாபஜுரத்தினால் பிதற்றுகிறவன் சமீபத்தில் குளிர்ந்த ஜலத்தையும் இனிமையான தின்பண்டங்களையும் வைத்திருந்தால் அவன் அத்தண்ணீரை அருந்தாமலும் தின்பண்டங்களை ருசிபார்க்காமலும் இருப்பானா? அதுபோல காமஜுரத்தினால் வாதைப்பட்டுச் சிற்றன்பங்களில் ஆசை வைத்த உலகப்பற்றுள்ளவன் ரூப லாவண்யங்களின் வனப்பினிடையும் செல்வத்தின் கவர்ச்சியின் மத்தியிலும் இருந்தால் அவனால் ஆசையை அடக்க முடியாது. அவன் பக்திமார்க்கத்தை விட்டுப் புறம்பே போவது நிச்சயம்.
35. யயா ஸ்வப்நம் பயம் ஸோகம் விஷாதம் மதமேவ ச
ந விமுஞ்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ
யயா-எந்த (மன உறுதியினால்), ஸ்வப்நம் பயம் ஸோகம்-உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும், விஷாதம்-ஏக்கத்தையும், மதம்-செருக்கையும், ந விமுஞ்சதி-விடமுடியவில்லையோ, பார்த த்ருதி: ஸா தாமஸீ-பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
பொருள் : பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
தமோகுணமும் அக்ஞான இருளும் ஒன்றோடொன்று சேர்ந்தவைகளாகின்றன. தூங்குகின்ற நிலை ஜட அவஸ்தைக்கு ஒப்பானது. கனவு காணும் இயல்பும் அதில் அடங்கியிருக்கிறது. பகற் கனவு காணும் தமோகுண முடையவனை உலகில் காணலாம். அத்தகையவன் விழித்திருந்து வியவகாரம் செய்வது தூக்கத்தில் சொப்பனம் காண்பது போன்று உறுதியற்றது. அவன் புரியும் செயல்கள் உலகுக்குப் பயன்படாதவைகளாகும்.
தமோகுண உறுதிக்குத் தக்க சான்று திருதராஷ்டிர மன்னன் ஆவான். அவன் பிறவியிலேயே குருடன். தெளிந்த அறிவும் நல்ல விவேகமும் இன்மைக்கு அவன் அந்தகனாயிருந்தது புறச் சின்னமாகும். துரியோதனன் முதலாயினோர் அவனுக்குப் புதல்வர்களாயிருந்ததும் பொருத்தமானது. ஏனென்றால் அக்ஞானத்தினின்றே கேடுகள் அனைத்தும் உதிக்கின்றன. குருட்டு அரசனுக்கு ராஜ்யத்தில் பெரும் பற்றுதல் இருந்தது. தன் புதல்வர்களின் கையைவிட்டு அது ஒருவேளை போய்விடுமோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் அடிக்கடி உண்டாயிற்று. அவர்கள் புரிந்த அடாத செயல்களை அரசன் கேள்வியுற்றுத் துயரத்தை யடைந்தான். ஆனால் புதல்வர்கள் மீது அவன் தீவிரமான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. தனது புகழுக்கே பங்கம் வந்துகொண்டிருந்ததைக் குறித்து அரசன் மனம் கலங்கினான். ஆனால் பீஷ்மர், துரோணர், கிருஷ்ணன் போன்றவர்களது புத்திமதியைக் கேட்க அவன் ஆயத்தமாயில்லை. எப்படியிருந்தாலும் தானே பேரரசன் என்ற செருக்கும் அவனுடைய உள்ளத்தில் நிறைந்திருந்தது. விவேகமில்லாத அவ்வேந்தன் விடாது பிடித்த திருதியானது தமோகுணத்தினின்று உதித்ததாம்.
திருதராஷ்டிரன் போன்ற மக்கள் பலரை இன்று நாம் சமூகத்தில் காணலாம். முன்னோர்கள் தேடி வைத்த செல்வம் அவர்களுக்குச் சொந்தமானதாயிருக்கிறது. ஆனால் நல்லறிவும் முயற்சியும் அவர்களிடத்து இல்லை. அந்த அளவில் அவர்கள் குருடரேயாவர். உண்பதும் உறங்குவதுமே அவர்களுக்கு முக்கியமான தொழில்களாகும். செல்வத்தை முறையாகக் காக்கவும் வளர்க்கவும் அவர்களுக்குத் தெரியாது. எனவே அது கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும். செல்வத்தில் சில பகுதி விரயமான பிறகே அவர்களுக்கு விஷயம் விளங்குகிறது. பின்பு அதைக் குறித்து அவர்கள் துன்பத்தில் அழுந்துவார்கள். மனக்கலக்கத்துக்கு இங்கு மூலத்தில் விஷாதம் என்னும் சொல் அமைந்திருக்கிறது. கீதையின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு அர்ஜுன விஷாதம் என்பதாம். அதாவது தற்காலிகமாக அவனுக்கு மனம் கலங்கிற்று. தமோகுணத்தில் உதித்த உறுதியுடையவருக்கோ ஓயாத மனக்கலக்கமாம். ஏனென்றால் அவர்களுடைய வாழ்வு துர்மேதை என்னும் சேற்றில் கட்டிய வீடு போன்றது. ஓயாது அது இடிந்துவிழுந்துகொண்டே இருக்கும். இத்தனைவிதக் கேடுகளுக்கிடையில் தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் செருக்கு அவர்களை விட்டு அகலுவதில்லை. இது தமோகுணத்தினின்று உதித்த உறுதியாம்
36. ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஸ்ருணு மே பரதர்ஷப
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி
பரதர்ஷப-பாரதக் காளையே! இதாநீம் த்ரிவிதம் ஸுகம்-இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை, மே ஸ்ருணு-என்னிடமிருந்து கேள், யத்ர அப்யாஸாத் ரமதே-எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, து:காந்தம் ச நிகச்சதி-எதனில் துக்க நாச மெய்துவானோ.
பொருள் : பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,
உயிர் வாழ்க்கைக்கு உற்சாகம் தருவது சுகப்பிராப்தி. சுகம் வேண்டாத உயிர் எவ்வுலகிலும் இல்லை. அதன் பொருட்டு ஜீவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு ஓரளவில்லை. ஆயினும் அதை அடைதலில் தார தம்மியமுண்டு. மின்னல்போன்று சிலருக்கு அது தோன்றுகிறது. இதோ, சுகம் கிட்டிவிட்டது என்று உணருதற்கு முன்பு அது மாயமாய் மறைந்து போகிறது. மீண்டுமொரு நீண்ட முயற்சி. இங்ஙனம் பெருமுயற்சிக்கிடையில் இன்பப்பேறு மின்னல் போன்று இடையீடு உடையதாகிறது. இன்னும் சிலர்க்கு அது ஓட்டைப் பாத்திரத்தில் கொட்டும் ஜலம் போன்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. பிறகு எங்கே போய் மறைகிறது. ஏன் போகிறது என்பதும் பிடிபடுவதில்லை. பூரணகும்பம் போன்று ஒரு நாளைக்கு இன்பம் நிறைநிலையடையும் என்று நம்பியிருக்கின்றனர். அந்த நம்பிக்கையே வாழ்க்கைக்குத் தூண்டுகோலாகிறது. ஏதோ ஒரு சிலர்க்கு வளர்பிறை போன்று சுகம் ஓங்குகிறது. அது இடர்ப்படுவதில்லை. இன்பம் துய்ப்பதில் வாய்க்கும் இத்தகைய ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் ஏதாவது உண்டா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அப்பியாசம் அல்லது பயிற்சியானது வாழ்க்கையை வேண்டியவாறு மாற்றியமைக்க வல்லது. உடலுக்கு ஏற்ற பயிற்சி யுண்டு. அதே பாங்கில் உள்ளத்துக்கு ஏற்ற பயிற்சிகளும் உண்டு. ஜன்மாந்தரத்தின் வாசனைகள் என்று சொல்லுவது எல்லாம் பயிற்சியினின்று வந்தவைகள். பயிற்சியை மாற்றினால் வாசனையை மாற்றலாம். அப்பியாசத்தின் மூலம் சுபாவத்தையே மாற்றியமைக்கலாம். விலங்கினிடத்து ஒழுங்குப்பாட்டை உண்டு பண்ணுதற்கும் பயிற்சி பயன்படுகிறது. அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்குக் கையாளுவது போதாது. இடையறாப் பழக்கமாக அது வடிவெடுக்க வேண்டும். துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் இன்பத்தைப் பெறுதற்கும் அப்பியாசம் சிறந்ததொரு உபாயமாகிறது.
37. யத்ததக்ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம்
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்
யத் அக்ரே விஷம் இவ-எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய், தத் பரிணாமே அம்ருதோபமம்-அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ, தத் ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தம்-அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது, தத் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம்-அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது.
பொருள் : எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.
வைராக்கியமும் தியானமும் கூடிய பாரமார்த்திக வாழ்க்கை துவக்கத்தில் துன்பம் நிறைந்ததாகத் தென்படுகிறது. பிறகு மனத்தெளிவினின்று விளையும் சித் சுகோதயம் ஒப்பு உயர்வு அற்றது. அது ஒன்றே பிறவிப் பெரும்பயன் என்பது அப்பொழுது விளங்குகிறது.
பாரமார்த்திக வாழ்வினின்று வரும் பேரின்பம் சாதாரண சாதகர்களுக்குப் பிடிபடாது போகலாம். ஆனால் நல்லொழுக்கத்தின் பயனை எல்லாரும் எளிதில் காணலாம். விஷயங்களில் விரைந்து செல்லும் இந்திரியங்களைத் தடுத்து ஆளுதல் ஆரம்பத்தில் கஷ்டமாயிருக்கும். அதில் வெற்றிபெற்றான பிறகு வரும் நிலைத்த இன்பமானது நிலையற்ற விஷய சுகத்தைவிட மேலானது என்பது விளங்கும். யோகிகளுடைய வாழ்க்கையையும் போகிகளுடைய வாழ்க்கையையும் சீர்தூக்கிப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்கும்.
முற்காலத்தில், ஜயபுரியிலிருக்கும் கோவிந்தஜீயின் கோவிலிலிருந்த அர்ச்சகர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதில்லை ஆகவே அவர்கள் ஆத்ம சக்தியால் வெகு பலம் படைத்தவர்களாக இருந்தனர். ஒரு சமயம் அவ்வூர் அரசன் அவர்களைத் தன்னிடம் வரும் படி சொல்லியனுப்பினான். அவர்கள் போகாமல், அரசனைத்தான் எங்களிடம் வரச் சொல்லுங்கள், என்று பதில் அனுப்பினர். அப்பால், அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டனர். அதன்பின் அர்ச்சகர்களை அரண்மனைக்கு வரவழைக்க வேண்டிய அவசியம் அரசனுக்கு இல்லாது போயிற்று. ஏனெனில், அவர்கள் தாமாகவே அரசனிடம் வந்து, மகராஜ்! நாங்கள் ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கிறோம். சுவாமிக்குச் சாத்திய புஷ்பங்களைக் கொணர்ந்திருக்கிறோம். அங்கீகரிக்கவேண்டும், என்று சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கு அப்படிப்பட்ட அவசியம் நேர்ந்துவிட்டது பாவம்! அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்! ஒரு நாளைக்கு வீடுகட்டவேண்டியிருந்தது. இன்னொரு நாள் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யவேண்டியிருந்தது. வேறொரு நாள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டியிருந்தது. இப்படியாக அவர்களுக்கு இடைவிடாத பணமுட்டுப்பாடு உண்டாயிற்று. அதனால் ராஜசபைக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தது.
பிறர்க்கு அடிமையாக வேலை செய்வதன் பயனை நீங்களே நன்கு உணர்வீர்கள். ஆங்கிலமும் மேனாட்டுப் பயிற்சியும் பெற்ற வாலிபர்களில் அநேகர் பிறர்க்கு அடிமைவேலை செய்து தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் உதைகளை வாய்பேசாது பெற்று அனுபவிக்கின்றார்கள். ஏன் அவ்வளவு அவமதிப்புக்கெல்லாம் அவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா? அவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பொதுப்பட பெண்ணாசையே யாகும்.
இந்திரிய நிக்கிரகம் அல்லது புலனடக்கம் பழகுதல் ஒன்றே வளர்பிறை போன்று சுகத்தை வளர்ப்பதற்கு உற்ற உபாயம். அம்மனிதன் எவ்வுலகில் எதற்கும் அடிமைப்படான். உலப்பில்லா ஆனந்தம் அவன் பெறும் பேறு ஆகும்.
38. விஷயேந்த்ரிய ஸம்யோகாத் யத் ததக்ரேऽம்ருதோபமம்
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்
யத் விஷயேந்த்ரிய ஸம்யோகாத்-எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால், அக்ரே அம்ருதோபமம்-தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து, பரிணாமே விஷமிவ - விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ, தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்-அந்த இன்பம் ராஜசம் எனப்படும்.
பொருள் : விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.
இந்திரியங்களைக் கொண்டு இந்திரியார்த்தங்களை அணைந்து பெறும் இன்பம் நஞ்சு ஆகிறது. அதனால் பலம் குறைகிறது. வீரியத்துக்கு விரயம் உண்டாகிறது. அதாவது ஆண்மையோடு செயலாற்ற இயலாது. ரூபம் அல்லது சுந்தர வடிவம் குலைகிறது. வயோதிகம் விரைவில் வருகிறது. நிறம் மங்குகிறது. இயல்பாக மேதாவியாக வேண்டியவன் விஷய சுகத்தால் புல்லறிவாளனாகித் தாழ்வுறுகிறான். இறைவனைப்பற்றிய ஞாபகசக்தி ஒழிந்து போகிறது. செல்வமும் கையைவிட்டுச் சென்று அழிகிறது. ஊக்கத்தோடு வினையாற்றும் வல்லமை வருவதில்லை. அதர்மமே மேலும் மேலும் தலையெடுக்கிறது. அதனால் வாழ்க்கையே நரகவேதனையாய்க் கழிகிறது. ஓட்டைப் பாத்திரத்தில் வார்க்கும் ஜலம் போன்று இன்பம் தோன்றவும் மறையவும் செய்கிறது.
வாழ்வு என்னும் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். முதலில் அவர்கள் பெற்ற உலக விஷயங்களாகிய செல்வம், கல்வி, வண்டி, வாகனம், ஆபரணம் முதலியன அமிர்தம் போன்று இன்பம் கொடுத்தன. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் என்பது உண்டு. யாரும் அதைத் தடுக்க முடியாது. வாழ்வு என்பதற்கு எதிர்ச் செயல் மரணம். அது விஷத்துக்கு ஒப்பானது. வாழ்வில் விருப்பங்கொண்டிருந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பின்பு மரணம் என்னும் விஷம் வந்தது. அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் வரவில்லை. எனவே அவர்கள் மிக வருந்தினார்கள். எங்கெங்கேயோ ஓடினார்கள்; என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பயன்படவில்லை. முன்பு பெற்ற சுகவாழ்வே இப்பொழுது துன்பம் நிறைந்ததாகத் தென்பட்டது. புலனடக்கமே வடிவெடுத்துள்ள துறவி வேந்தனாகிய சங்கர மகாதேவனிடம் ஓடினார்கள். மரணத்தை வென்றவனாகிய அப்பரம புருஷன் தன்னை வந்தடைந்த உயிர்களை மரணத்தினின்று காப்பாற்றினான். ரஜோகுண சுகத்தைத் தவிர்த்து சத்வகுண சுகத்துக்குப் போகவேண்டும். இறுதியாக குணாதீதத்திலுள்ள சுகத்தைப் பெறவேண்டும்.
39. யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்
யத் ஸுகம் அக்ரே ச அநுபந்தே ச-எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும், ஆத்மந: மோஹநம்-ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், நித்ரா ஆலஸ்ய ப்ரமாத: உத்தம் - உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும், தத் தாமஸம் உதாஹ்ருதம்-அது தாமசமென்று கருதப்படும்,
பொருள் : தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.
ஏதேனும் ஒருவிதத்தில் தனக்கு இன்பம்கிடைத்தால் போதுமென்று அறிவிலி ஆர்வத்தோடு அதை நாடுகிறான். சுகத்தை அவன் அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுதே அது மயக்கத்தைக் கொடுத்துத் துன்பமாக மாறியமைகிறது. கள் குடித்தல் அல்லது மதுபானத்தை அதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதன் வெறியில் விவேகம் போய்விடுகிறது. மற்றவர் ஏளனம் செய்வது குடிகாரனுக்குப் புலப்படுவதில்லை. மிகைபட்ட துக்கத்தை அது உண்டுபண்ணுகிறது. வெறி அடங்கியதும் தளர்வுற்ற மனதும் வலிவற்ற உடலும் மேலும் துன்பத்தை விளைவிக்கின்றன. அவன் சோம்பலே வடிவெடுத்தவன் ஆகிறான். இங்ஙனம் துவக்கத்திலும் இடைவேளையிலும் இறுதியிலும் தமோகுணப் பிரவிருத்தி துன்பத்தையே வளர்க்கிறது. மின்னல் போன்று இடையிடையே இன்பம் தோன்றி உடனுக்குடனே மறைந்தது தான் மிச்சம்.
ஒட்டகம் முட்செடியைப் பெருவிருப்பத்தோடு தின்கிறது. முள்தைத்து அதன் உதடெல்லாம் ரத்தம் சொட்டின;õலும் அது முள்ளைத் தின்பதை நிறுத்துவதில்லை. விஷய சுகத்தை நாடுபவர் போக்கு அத்தகையது.
40. ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:
ப்ரக்ருதிஜை:-இயற்கையில் தோன்றும், ஏபி: த்ரிபி: குணை:-இம்மூன்று குணங்களினின்றும், முக்தம்-விடுபட்ட, யத் ஸத்த்வம் ஸ்யாத்-எந்த உயிர் இருக்குமோ, தத் ப்ருதிவ்யாம் வா-அது மண்ணுலகத்திலோ, திவி தேவேஷு வா-வானுலகத்தில் தேவருள்ளேயொ, புந: ந அஸ்தி-வேறு இடங்களிலோ இல்லை.
பொருள் : இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.
புல்முதல் பிரம்மா ஈறாக எல்லா உயிர்களும் முக்குண மயமான பிரகிருதியில் கட்டுண்ட ஆத்மாக்களாவார்கள். அவர்கள் மக்களாக இருந்தாலும் சரி, தேவர்களாக இருந்தாலும் சரி, முக்குணங்களைக் கடக்கும் வரையில் அவர்கள் எல்லாரும் பத்தாத்மாக்களேயாம். அதாவது பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. குணபேதத்துக்கு ஏற்ப அந்த ஜீவர்களின் பிறப்பு மேலானதாகவோ கீழானதாகவோ அமைவதும் இயல்பு. ஜீவர்கள் எல்லாரிலும் மிகப்பெரியவர் பிரம்மா. அவர் அடைந்திருப்பது ஒரு பதவியேயொழிய முக்தியல்ல. அதாவது முக்குணங்களில் அவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார். முக்குணங்களைக் கொண்டல்லாது படைப்புத் தொழில் நிகழாது. பிரகிருதி லயம் என்பது அவர் பெற்றுள்ள ஒரு பெரிய பதவியாகும். ஆனால் மற்ற ஜீவர்களுக்கு இருப்பது போன்று பிரம்மாவுக்கு மேலும் பிறப்பு இல்லை. ஒரு கல்பத்தின் முடிவில் பிரம்மாவானவர் கிரமமுக்தியடைகிறார். அப்பொழுது அவர் முக்குணங்களைக் கடந்தவர் ஆகிறார்.
ஒருவன் தாழ்ந்த சுபாவத்தோடு நெடுங்காலம் போராடியும் ஆத்ம ஞானத்தின் பொருட்டு இடைவிடாது உழைத்தும் ஸமாதி நிலையை அடையும் போது அகங்காரம் அடியோடு அகலும். ஆனால் ஸமாதி நிலையை அடைவது மிகவும் கஷ்டம். முக்குணத்தில் பிறந்த அகங்காரமானது எளிதில் நீங்குவதில்லை. அதனால்தான் நாம் இவ்வுலகில் மறுபடியும் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறோம்.
இனி, மோக்ஷத்துக்கு ஏதுவான மார்க்கங்கள் விளக்கப்படுகின்றன :
41. ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:
பரந்தப-எதிரிகளை வாட்டுபவனே, ப்ராஹ்மண க்ஷத்ரியவிஸாம் ஸூத்ராணாம் ச-பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய, கர்மாணி-தொழில்கள், ஸ்வபாவப்ரபவை: குணை:-அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி, ப்ரவிபக்தாநி-வகுப்புற்றனவாம்.
பொருள் : பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.
ஸ்வபாவம் என்பது ஈசுவரனுடைய பிரகிருதி அல்லது மாயை. அது முக்குணமயமாயுள்ளது. குணத்துக்குத் தகுந்தபடி கர்மம் வேறுபடுகிறது. கர்மத்தினின்று பெறுகிற சம்ஸ்காரத்துக்கு ஏற்ப சுபாவம் மாறுகிறது. அதாவது கர்மமும் சுபாவமும் இணைபிரியாதவைகள். சுபாவம் எப்படியோ அப்படி வருணம் மாறுகிறது. ஆக, ஒரு மனிதன் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதை அவனுடைய சுபாவத்தினின்றும் கர்மத்தினின்றும் தெரிந்து கொள்ளலாம். சுபாவமோ மிக சூக்ஷ்மமானது. எளிதில் அதைத் தெரிந்துகொள்ள முடியாது. ஞானிகளுக்கு மட்டும் அது கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ள வஸ்துபோன்று நன்கு விளங்கும். பின்பு, கர்மமோ ஸ்தூலமானது. ஒருவன் செய்கிற கர்மத்திலிருந்து அவனுடைய வருணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
வர்ணபேதத்தை பகவான் சிருஷ்டிக்கலாமா, உயர்வு தாழ்வை அவர் உண்டுபண்ணலாமா என்ற கேள்விகள் பிறப்பதுண்டு. இந்தியாவில் வர்ணபேதமும், மேலோன் கீழோன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையில் அந்நாடு சிறந்த நாடு ஆகாது என்று கருதுவாரும் உளர்.
சிருஷ்டி என்பதன் பொருளே பேதத்தை உண்டுபண்ணுவது என்பதாகும். எல்லாம் ஒரே இயல்பை யடைவதும் சம்ஹாரம் ஆவதும் ஒன்று. ஆக, பேதம் இருந்தாகவேண்டும். உடலில் அவயவ பேதம் உண்டு. வயதில் குழந்தை, யுவன், விருத்தன் என்ற பேதம் உண்டு. பாலில் ஆண்பால் பெண்பால் என்ற பேதம் உண்டு. மனபரிபாகத்திலும் புரிகின்ற செயலிலும் உள்ள பேதம் வர்ணபேதம் என்று சொல்லப்படுகிறது. இது சிருஷ்டி முழுதிலும் அமைந்திருக்கிறது. அப்படி அமைக்காது சிருஷ்டி செய்யவும் முடியாது. வர்ணபேதம் இயற்கையின் அமைப்பு. அது இந்தியாவில் பாங்கை உள்ளபடி அறிந்துகொள்ளவில்லை. ஆக, வர்ணபேதத்தை அங்கீகரிப்பதைத் தவிர மனிதன் வேறு ஒன்றும் செய்யமுடியாது.
உலகில் எங்கும் வர்ணபேதம் இருக்கிறது. ஆனால் மேல் நிலைக்கு வந்திருப்பவன் கீழ் நிலையில் இருப்பவனை அலட்சியப்படுத்தலாகாது. அப்படி அலட்சியப்படுத்தும் சமூகம் விரைவில் கீழ்நிலைக்கு வந்து சேரும். இக்கோட்பாடு எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.
வருணத்துக்குரிய கர்மத்தின் பிரிவினை வருமாறு :
42. ஸமோ தமஸ்தப: ஸௌசம் க்ஷõந்திரார்ஜவமேவ ச
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்
ஸமோ தம: தப:-மன அடக்கமும், புலனடக்கமும், தவமும், ஸௌசம்-தூய்மை, க்ஷõந்தி-பொறுமை, ஆர்ஜவம்-நேர்மை, ஆஸ்திக்யம்-ஆத்திகம், ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ - ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும், ஸ்வபாவஜம் ப்ரஹ்ம கர்ம-இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
பொருள் : அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
ஒருவன் பிறந்த குடியை முன்னிட்டு ஒருவனை பிராம்மணன் என்கிறது லௌகிகம். மனபரிபாகத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்து ஒருவனை பிராம்மணனென்கிறது வேதாந்தம். எந்த சமூகத்தில் எந்தக் குடியில் எக்காலத்தில் வேண்டுமானாலும் பிராம்மணன் தோன்றலாம். ஏனென்றால் பிறப்பு உரிமையில் பொருள் ஒன்றுமேயில்லை. மனபரிபாகமே முக்கியமானது. வேதாந்தம் விளக்குகிறபடி பிராம்மண இயல்பை அடையப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது. ஆனால் அந்நிலையை அடைய மனிதன் முயலவேண்டும்.
கட்டுப்பாடான வாழ்க்கையே வடிவெடுத்தவன் அந்தணன். மனவடக்கமும் பொறிகளின் அடக்கமும் இயல்பாக அவனிடத்து அமைந்திருக்கின்றன. பரத்தை நாடித் தவம் புரிதல் ஒன்றே அவன் தொழில். தவத்தால் அவனது மனம் மொழி மெய் ஆகிய திரிகரணங்களும் தூய்மையடைகின்றன. புறவுலகினின்று அவனுக்கு ஏற்படும் இடுக்கண்களிடத்து பிராம்மணன் பொறுமையே வடிவெடுத்தவனாகிறான். துன்புறுத்துவார் யாரையும் அவன் நொந்துகொள்வான். தனது சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் அவன் நேர்மையே வடிவெடுத்தவனாகிறான். சாஸ்திர ஞானத்துக்கும் சுவானுபவ ஞானத்துக்கும் அவன் களஞ்சியமாகிறான். சாஸ்திரத்தின் உட்கருத்தையும் பிரபஞ்சத்தில் உயிர் வாழ்க்கையின் தத்துவத்தையும் அவனே உள்ளபடி அறிய வல்லவனாகிறான். ஆஸ்திக்யம் அல்லது ஈசுவர நம்பிக்கையென்பது கடவுளைச் சார்ந்திருப்பது கடவுளுக்கென்றே உயிர் வாழ்தலாம். அந்தணன் அருளுக்கே உரியவன் ஆகிறான். பொருளை அவன் ஒருபொழுதும் தேடான். எளிய வாழ்க்கையே வடிவெடுத்தவன் அவன். உடலை அலங்கரிப்பது அந்தணன் செயலன்று. எல்லா உயிர்களிடத்தும் அவன் அருளைச் சொரிந்து செந்தண்மை பூண்டொழுகுகிறான். ஸ்ரீராமகிருஷ்ணரது ஜீவிதம் அந்தணன் ஒருவனுடைய பாரமார்த்திக வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இத்தகைய வாழ்வுடையவனே பிராம்மணன். இங்ஙனம் பண்பாடு அடைந்துள்ள பிராம்மணன் தொகை அதிகரிக்கின்றவளவு உலகத்துக்கு ÷க்ஷமம் உண்டாகிறது.
43. ஸௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்
தாநமீஸ்வரபாவஸ்ச க்ஷõத்ரம் கர்ம ஸ்வபாவஜம்
ஸௌர்யம்-சூரத் தன்மை, தேஜ:-ஒளி, த்ருதி:-உறுதி, தாக்ஷ்யம் ச-திறமை, யுத்தே அபி அபலாயநம்-போரில் புறங்காட்டாமை, தாநம் ஈஸ்வரபாவ: ச-ஈகை, இறைமை (ஆளும் தன்மை), ஸ்வபாவஜம் க்ஷõத்ரம் கர்ம-இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.
பொருள் : சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.
அறம் அல்லது தர்மமே வடிவெடுத்திருப்பவன் க்ஷத்திரியன் ஆகிறான். சமூகத்தினுடைய இகலோக வாழ்க்கையை ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமையாகும். க்ஷத்திரியன் என்பதன் பொருள் உடலில் காயம் பட்டவன் என்பதாகிறது. நலத்தை நிலைநாட்டுதற்காக உடல் வாழ்க்கையை அவன் ஒப்படைத்திருக்கிறான். அப்பெரு முயற்சியின் விளைவாக உடல் அடிக்கடி புண்பட்டாலும் அல்லது சிதைக்கப்பட்டாலும் அதை அவன் பொருள்படுத்தான். பீஷ்மர் வதைக்கப்பட்டது போன்று க்ஷத்திரியன் ஒருவனுடைய தேகம் வதைக்கப்படுமானால், அதற்கிடையில் அவர் படைத்திருந்த உயர்ந்த மனப்பான்மையை அவன் கொண்டிருப்பானானால் அவ்வரசன் நன்கு வாழ்ந்தவன் ஆவான். இனி, எல்லாரும் அரசன் ஆகமுடியுமா என்ற கேள்வி எழலாம். நாடு ஆளும் முறையில் எல்லாரும் அரசர் ஆகவேண்டியதில்லை. சமூகத்தில் மேலாம் பொறுப்பை நிறைவேற்றும் பாங்கில் பலபேர் அரசர் ஆகலாம்.
கேடும், கேடுடைய மனிதனும் ஒன்றே. நல்லான் ஒருவன் கேடுடைய மனிதனை யாண்டும் எதிர்க்கக் கடமைப்பட்டிருக்கிறான். பயிர்களுக்கிடையில் உள்ள களைகளைக் களையக் கிருஷிகன் கடமைப்பட்டிருப்பது போன்று சமூகத்தில் அறம் பிறழ்பவர்களை அடக்கவும், ஒடுக்கவும், வெல்லவும், ஒழிக்கவும் அறவாளன் கடமைப்பட்டிருக்கிறான்.
எதிரிக்கு அஞ்சாது வீரத்தோடு பாய்ந்து தாக்கவல்லவன் சூரத்தன்மை யுடையவனாகிறான். அச்சத்தை அறியாத மனநிலை தேஜஸ் அல்லது துணிவெனப்படுகிறது. எவ்வளவு ஏராளமாக உழைத்தாலும் களைப்பை அறியாத மனநிலை திருதி அல்லது உறுதி எனப்படுகிறது. காலதேச வர்த்தமானம் அறிந்து எதிரியை வல்லமையோடு தாக்கக் கூடிய நிலைக்குச் சாதுரியம் என்று பெயர். திடீரென்று எதிரி வந்து தாக்குவானாகிலும் மனம் தளராது நொடிப் பொழுதில் தூக்கி வினைசெய்வது சாதுரியமாகிறது. சில வேளைகளில் பின்னோக்கிச் சென்று எதிரியைப் பின்பு வளைத்து அடிப்பதும் சாதுரியமாம். ஆனால் பகைவனுக்குப் பயந்து போர்க்களத்தினின்று புறங்காட்டி யோடிப் பிழைக்க நினைப்பவன் க்ஷத்திரியனாகான். பகைவனுக்கு அடிமைப்படுவதைவிட வீரத்துடன் எதிர்த்து நின்று அடிபட்டுச் சாவது மேல். குடிகளை முறையாக ஓம்புதலே தானமென்று சொல்லப்படுகிறது. வள்ளலாக இருந்து அவர்களுக்கு அரசன் யாண்டும் பொருளை வழங்கவேண்டும். மக்கள் நேர் கோடாவண்ணம் அவர்களை ஆளுதல் இறைமையாகிறது. இதற்கு ஈச்வர பாவம் என்பது மூலம். தலைவனாயிருத்தல் என்றும் இச்சொல் பொருள்படும். இரண்டு அல்லது மூன்று பேர்களுடன் சேர்ந்து வாழும் பொழுதும் ஒன்றும் தலைவனாகத் திகழலாம். எப்பொழுதும் தலைவன் ஆவது தகைமையினாலேயாம். சுயநலம் கருதாது காரியத்தை நிர்வகிப்பவனும் அதை வெற்றிகரமாகக்கொண்டு சாதிப்பவனும் தலைவன் ஆகிறான். தாய் ஒருத்தி வீட்டுக்குத் தலைவியாகிறாள். ஏனென்றால் அன்புடன் பணிவிடை செய்யும் திறமையும், காரியங்களை நன்கு நிர்வகிக்கும் திறமையும் அவளிடத்து உண்டு. இறைமை வாய்க்கப்பெற்ற மக்கள் மேன்மக்கள் ஆகின்றனர். பகைவரிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் நாட்டு மக்களிடத்து நடந்துகொள்ளுகிற முறையும் சேர்ந்து ஈண்டு விளக்கப்பட்டுள்ளன. அந்தணனுடைய அருளையும் வைசியனுடைய பொருளையும் அரசன் இனிய முறையில் சேகரிக்கிறான். அவைகளுடன் தனது ஆண்மையை அவன் உவந்து கலக்கிறான். பின்பு, இவையாவும் அவன் உலக நன்மைக்கு எடுத்து வழங்குகிறான். பாரமார்த்திகத் துறையிலே விவேகானந்த சுவாமிகள் இச்செயலைச் செய்திருக்கிறார்; அவர் ஒரு ராஜரிஷி.
44. க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்
க்ருஷி கௌரக்ஷ்ய வாணிஜ்யம்-உழவு, பசுக்காத்தல், வணிகம், வைஸ்யகர்ம ஸ்வபாவஜம் - இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம், பரிசர்யாத்மகம் கர்ம-மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல், ஸூத்ரஸ்ய அபி-சூத்திரனுக்கு, ஸ்வபாவஜம்-அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
பொருள் : உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
பயிர்த்தொழில் புரிவது, ஆடுமாடுகளை வளர்த்தல், வியாபாரம் பண்ணுதல், தொழிற்சாலைகளை நிறுவுதல் ஆகிய இவையாவும் செல்வத்தை உண்டுபண்ணும் தொழில்களாம். சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தைப் பெருக்குபவர்களெல்லாம் வைசியர்கள். இக்காலத்தில் புதியதாகத் தோன்றியுள்ள வக்கீல்களும் டாக்டர்களும் இடை அல்லது கடைத்தரமான வைசியர்கள். இவர்கள் சமூகத்துக்குச் செல்வத்தை உண்டுபண்ணுபவர்களல்லர்; செல்வத்தை ஏற்பவர்களாம். இகலோக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன தானியங்களை விருத்தி பண்ணுவதும், மூலப்பொருள்களைச் சேகரிப்பதும், அவைகளைப் பண்படுத்திப் பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பதும், வாணிகத்தின் மூலம் பொருள்களை நாலா பக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசிய தர்மமாகும். கஞ்சா, அபினி, மதுபானம் போன்றவை மக்களுடைய நல்வாழ்வைக் கெடுக்கின்றன. அத்தகைய பொருள்களை உண்டு பண்ணுவதும், அவைகளில் வர்த்தகம் பண்ணுவதும் வைசிய தர்மமாகாது.
பிறரிடத்து வேலைக்காரனாயிருந்து இட்டவேலையைச் செய்து சம்பளம் ஏற்று ஜீவிப்பவன் சூத்திரனாகிறான். இக்காலத்துக் குமாஸ்தாக்களெல்லாரும் சூத்திரர்களாம். நல்ல மனப்பான்மையுடன் ஆசிரிய வேலை செய்கிறவர்கள் பிராம்மண கர்மம் செய்கிறார்கள். அரசாங்கத்தில் முறையாக ஆட்சி முறையைச் செலுத்துபவர்கள் க்ஷத்திரிய கர்மம் இயற்றுகிறார்கள். அவர்கள் சம்பளம் ஏற்பதில் குறையில்லை. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காகவென்று அத் தொழில்களை நாடுவார்களானால் அவர்கள் சூத்திரர்களாகிறார்கள். கைக்கூலி அல்லது லஞ்சமேற்கிற எல்லாரும் சூத்திர்களேயாம். உடல் வாழ்க்கை ஒன்றில் மட்டும் கருத்து வைத்திருப்பவன் சூத்திரன். அதற்கு மேல் மேலான சிந்தையும் செயலும் உடையவன் செய் தொழிலுக்கு ஏற்ப வைசியன், க்ஷத்திரியன் அல்லது பிராம்மணன் ஆகிறான்.
இந்த நான்கு வர்ணங்களும் மனபரிபாகத்தைப் பொறுத்தவைகள். உலகெங்கும் உள்ள ஜன சமூகங்களில் இவைகள் இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரே குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதரர்க்கிடையில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு வர்ணத்தைச் சேர்ந்தவனாயிருக்கலாம். ஒரு சமுதாயத்தில் உள்ள மக்களுள் பெரும் பான்மையோர் ஏதேனும் ஒரு வர்ணத்தின் சுபாவத்தை உடைத்திருக்கலாம். பள்ளிக்கூடம் ஒன்றில் கீழ் வகுப்பும் மேல் வகுப்பும் இருப்பதுபோன்று சமுதாயத்தில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள். மேல் வகுப்பில் இருப்பவனுக்குக் கீழ் வகுப்பின் படாமும் தெரியும். அங்ஙனம் நான்கு வர்ணங்களின் கர்மங்களையும் நன்கு செய்யத் தெரிந்தவன் அந்தணன். மூன்று வர்ணங்களின் கர்மங்களை நன்கு செய்யத் தெரிந்தவன் க்ஷத்திரியன். இங்ஙனம் வினையாற்றும் திறமை கீழே இறங்கி வருகிறது.
கர்மயோகத்துக்கு ஒப்பானது சூத்திரனுடைய தர்மம். ராஜயோகத்துக்கு ஒப்பாகிறது வைசியனுடைய தர்மம். ராஜயோகி தன் சொரூபத்தில் உள்ள சக்தியைச் சேகரிக்கிறான். வைசியன் புறவுலகில் சக்திக்குச் சின்னமாயிருக்கும் பொருளைச் சேகரிக்கிறான். பக்தியோகத்தின் வடிவினன் ஆகிறான் க்ஷத்திரியன். சமூகத்தினிடத்து அன்பு கொண்டிருந்தால்தான் அதனிடத்து நல் வாழ்க்கையை அவன் வழங்க முடியும். சமூகத்துக்குப் பெருங்கேடு செய்பவன் கொடுங்கோல் வேந்தன். ஞானயோகத்துக்கு எடுத்துக்காட்டாவான் பிராம்மணன். சிருஷ்டி முழுதையும் பிரம்ம சொரூபமாக அவன் காண்கிறான். நான்கு யோகமும் ஒரு மனிதனிடத்து ஒழுங்காக அமைந்திருந்தால் அவன் நிறைமனிதன் ஆகிறான். பின்பு நான்கு வர்ண தர்மங்களையும் ஒருங்கே ஆற்ற வல்லவனே நிறைமனிதன் ஆகிறான். நான்கு வர்ணங்களும் ஒரு சமூகத்தில் நன்கு அமைந்திருந்தால் அது தலை சிறந்த சமூகமாகும்.
நல்ல சமூகம் ஒன்றில் உள்ள பாடசாலைகளில் படிப்பைக் கட்டாயப்படுத்தி எல்லாச் சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நான்கு வர்ணங்களுக்குரிய பயிற்சிகளைக் கொடுத்து அவரவர் பாங்குக்கு ஏற்ப மேலே வரத் தூண்டுதல் செய்தால் இரண்டு மூன்று தலை முறைகளுக்குள் அந்தச் சமுதாயத்தைத் தலையாயதாக்கலாம்.
45. ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு
ஸ்வே ஸ்வே கர்மணி-தனக்குத் தானே உரிய கர்மத்தில், அபிரத: நர:-மகிழ்ச்சியுறும் மனிதன்,
ஸம்ஸித்திம் லபதே-ஈடேற்றம் பெறுகிறான், ஸ்வகர்மநிரத:-தனக்குரிய தொழிலில் இன்புறுவோன், யதா ஸித்திம் விந்ததி-எங்ஙனம் சித்தியடைகிறான் என்று, தத் ஸ்ருணு-அதைக் கேள்.
பொருள் : தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரியதொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.
பயிற்சியால் எந்தக் கர்மத்துக்குத் தகுதியுடையவனாக மனிதன் தன்னைச் செய்துகொள்கிறானோ அது அவனுடைய ஸ்வகர்மமாகிறது. ஸ்வதர்மம் என்பதும் அதுவே. ஸ்வகர்மத்தை மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் செய்பவன் நல்ல ஆத்ம சாதகன் ஆகிறான். அர்ஜுனனுக்குத் தன் ஸ்வதர்மத்தில் வெறுப்பு ஏற்பட்டது சீரிய மனப்பான்மையின் விளைவு அன்று. தற்காலிகமாகத் தோன்றிய மனக் குழப்பமே அதற்குக் காரணமாயிற்று. பள்ளியில் படிக்கும் மாணாக்கன் ஒருவன் தனது வகுப்பிலும் பாடத்திலும் மகிழ்வு கொள்ளுதல் வேண்டும். தன் கர்மத்தில் களிப்புறுபவனே முன்னேற்றமடைகிறான். படிப்புப் பூர்த்தி யாவதற்குப் பள்ளிப் பிள்ளை மேல் வகுப்புக்குப் போவது அவசியம். மற்று, ஆத்ம சாதகன் பரிபக்குவம் அடைதற்கு ஸ்வகர்மத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை. தோட்டி வேலை செய்கிற ஒருவன் அவ்வேலையில் மகிழ்வுறுதல் வேண்டும். வேலையில் மேலானது என்பதும் கீழானது என்பதும் கிடையாது. மனத்தகத்து உள்ள மாசு ஆனது கர்மத்தில் மாசு படிந்திருப்பது போன்று காட்சி கொடுக்கிறது. எத்தொழிலைச் செய்தாலும் நல்ல மன நிலையுடன் அதைச் செய்தால் மனபரிபாகமடையலாம். அதன் விவரம் வருமாறு:
46. யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:
யத: பூதாநாம் ப்ரவ்ருத்தி-எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ, யேந இதம் ஸர்வம் ததம் - எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ, தம்-அந்த பரமாத்மாவை, ஸ்வகர்மணா அப்யர்ச்ய-தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும், மாநவ: விந்ததி-மனிதன் ஈடேறுகிறான்.
பொருள் : உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.
இப்பிரபஞ்சத்தை முறையாக இயக்குவது ஈசனுடைய செயல். இதில் பயன்படாத உயிர் என்பது ஒன்றுமில்லை. ஒவ்வொரு ஜீவனும் அவனவன் தொழிலை முறையாகச் செய்தவன் மூலம் பிரகிருதியின் நடைமுறைக்கு நன்கு துணைபுரிகிறான். ஆகையால் அறிவுடைய மனிதன் தான் எக் கர்மத்தை நன்கு செய்ய முடியுமோ அதை ஈசுவர ஆராதனையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் அவன் மனபரிபாகம் அடைகிறான். ஞானத்தைப் பெறுதற்கும் ஈசுவரனை அடைதற்கும் அக்கர்மம் சாதனமாகிறது.
ஈசுவர ஆராதனை வேறு, அவரவர் தொழில் புரிவது வேறு என்று பலர் எண்ணியிருக்கின்றனர். கடவுள் வழிபாட்டின் தத்துவம் அறியாதவரே அத்தகைய எண்ணம் கொள்ளுவர். செய்கிற ஒவ்வொரு வேலையும் தேகத்துக்கு வலிவு கொடுக்கிறது என்பதை நாம் காண்கிறோம். தேகப்பயிற்சியையும் பொருள் சம்பாத்தியத்தையும் ஒரே தொழிலில் அடக்குவது சாத்தியம். இனி, அதே தொழிலை தேவாராதனையாகச் செய்யவும் முடியும். வியாதன் ஒருவன் கசாப்புக்கடை வைத்து ஜீவனம் பண்ணினான். அதே தொழில் அவனுக்கு சமுதாய சேவையும் ஆயிற்று; தேவாராதனையும் ஆயிற்று. அவன் பரமஞானியானான். அவன் ஒரு துறவிக்குச் செய்த உபதேசம் வியாதகீதை என்னும் பெயர் பெற்றுள்ளது. வயிற்றுப் பிழைப்புக்கு என்பதை அடியோடு மறந்துவிட்டு ஈசுவர ஆராதனை யென்றே கருதி ஒருவன் தன் தொழில் புரியலாம். அத்தகைய உணர்ச்சியின் வாயிலாக அவனது தொழில் அதிவிரைவில் அவனை ஈசனிடம் அழைத்துச் செல்கிறது. உலக வாழ்வே யோகிக்குக் கடவுள் வழிபாடாக வடிவெடுக்கிறது.
தென்னை நெற்று ஒன்றில் தேங்காய், ஓடு, மட்டை முதலியன இருக்கின்றன. தேங்காயை உண்ண மட்டையை உரித்து ஓட்டை உடைக்கவேண்டும். ஸ்வகர்மத்தை தேவாராதனையாகச் செய்வது மட்டையை உரித்து ஓட்டை உடைப்பதற்கு ஒப்பாகும். அதனால் தெய்வம் என்னும் தேங்காய் நமக்குரியதாகிறது.
47. ஸ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்
ஸ்வநுஷ்டிதாத் பரதர்மாத்-பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும், விகுண: ஸ்வதர்ம: ஸ்ரேயாந்-தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று, ஸ்வபாவ நியதம் குர்வந்-இயற்கையி லேற்பட்ட தொழிலை, கில்பிஷம் ந ஆப்நோதி-பாவமடைய மாட்டான்.
பொருள் : பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.
சுபாவத்திலமைந்த கர்மமே ஸ்வதர்மம் அல்லது தனக்கு உகந்த தொழில் எனப்படுகிறது. அர்ஜுனனுக்கு நன்றாகப் போர்புரிய முடியாவிட்டாலும் யுத்த நெருக்கடியில் அவன் போர் புரிவதே உசிதம். துஷ்டர்கள் சமூகத்துக்குக் கேடு செய்து கொண்டிருக்கையில் தான் வனத்துக்குச் சென்று நன்கு தவம் புரிவது அவனுக்கு ஒவ்வாது. போக்கிரிகளை எதிர்த்துப்போராடி மாய்வது மேல்.
வைத்தியத்தில் பயிற்சிபெற்ற ஒருவன் தனக்கு வாக்குவன்மையிருக்கிறதென்று வழக்கறிஞனாக மாற முயலலாகாது. விருப்பத்தாலோ அல்லது வெறுப்பினாலோ தூண்டப்பெற்று ஒருவன் தன் தொழிலை மாற்றலாகாது. அதனால் காலமும் ஆற்றலும் வீணாக்கப்படுகின்றன. குறைந்த முயற்சியில் பரந்த காரியத்தைச் சாதிப்பவன் நல்ல யோகியாகிறான். உலக வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதும் ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவதும் யோகிக்குக் குறிக்கோள். எந்த நகையை வேண்டுமானாலும் பொன்னாக மாற்றலாம். பொன்னாக்கும் விஷயத்தில் பாதி வேலையை ஒரு நகையிலும் மற்றப் பகுதியை இன்னொரு நகையிலும் செய்யலாகாது; பொருள் நஷ்டம், அறிவின்மை ஆகிய இரண்டும் ஆங்குப் புலப்படும். எக்கர்மத்தை முறையாகச் செய்தாலும் அது கடவுள் வழிபாடாகிறது. தனக்கு வாய்த்த கர்மத்தையே விடாது செய்வதால் ஸ்திர புத்தி ஏற்படுகிறது. ஸ்திரபுத்தியில்லாதவன் யோகியாக முடியாது. அப்படியானால் பொல்லாங்கு நிறைந்த போர்க்களத்துக்கென்று தன்னை ஆயத்தப்படுத்தியவன் அதை வேண்டாமென்று விலக்கிவிட்டுத் தூய்மை திகழும் தவச் செயலில் துணியலாகாதா என்ற கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை வருகிறது.
48. ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:
கௌந்தேய-குந்தி மகனே, ஸஹஜம் கர்ம ஸதோஷம் அபி-இயல்பான தொழில் குறையுடையதாயினும், ந த்யஜேத்-கைவிடலாகாது, ஹி தூமேந அக்நி: இவ-ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல, ஸர்வாரம்பா-எல்லா தொழில்களிலும், தோஷேண ஆவ்ருதா:-சூழ்ந்தே நிற்கின்றன.
பொருள் : குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது. எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.
விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நின்று ஆராய்பவனுக்கு இப்பேருண்மை விளங்கும். அதாவது கேடு இல்லாத கர்மம் இப்பிரபஞ்சத்தில் எங்குமில்லை. சுவாசிக்கின்றோம்; அதனால் காற்றிலுள்ள அணுப்போன்ற உயிர்கள் மடிகின்றன. உண்கிறோம்; மற்றொருவருக்கு அவ்வுணவு இல்லாது போகிறது; கருவி கரணங்களை ஒடுக்கித் தவம் புரிகிறோம். பிறர் உழைப்பால் வளர்ந்த நம் உடல் பிறருக்கு உழையாது போகிறது. ஆக, தீங்கு இல்லாத கர்மம் இயற்கையில் இல்லை. அப்படியானால் நல்வினை தீவினை யென்று பிறகு ஏன் பாகுபடுத்துகிறோம் ? தீவினையகற்றி நல்வினையை நன்கு இயற்றுக, என்று சான்றோர் சாற்றியிருப்பது எதற்காக என்ற கேள்வி எழுகிறது. விறகுக்கட்டை எரிகிறது. எந்த விறகில் அதிகம் புகையிருக்கிறதோ அது கெட்ட விறகு. எதில் புகை குறைந்திருக்கிறதோ அது நல்ல விறகு. ஒரு சந்தர்ப்பத்தில் அதிக நலத்தையும் குறைந்த கேட்டையும் உண்டு பண்ணும் ஒரு வினையானது மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகையான கேட்டையும் குறைந்த நலத்தையும் விளைவிக்கலாம். காலத்துக்கும், இடத்துக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறு ஒருவினையில் அமைந்துள்ள நலமோ, கேடோ மாறுபாடு அடைகிறது. வினைப்பயனை விரும்புவர் இவைகளையெல்லாம் தூக்கி வினைசெய்கிறார்கள். யோகியின் இயல்பு மிக உயர்ந்தது. தனக்கு அமைந்த கடமையை அவன் தேவ ஆராதனையாகச் செய்கிறான். வழிப்போக்கன் ஒருவன் ஒரு சத்திரத்தில் கிடைத்த விறகைக்கொண்டு சமைத்துப் புசித்துவிட்டுப் புறப்படுகிறான். நல்ல விறகு கிடைக்கவில்லையென்று ஆங்கு அவன் காத்திருக்க மாட்டான். யோகி ஒருவன் எடுத்த உடல் எக் கர்மத்துக்குத் தகுதியானதோ அக்கர்மத்தை தேவ ஆராதனையாகச் செய்து முடிக்கிறான். தேகம் தாங்கியுள்ள ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு கர்மம் செய்தே ஆகவேண்டும். ஆகையால் தன் இயல்புக்கு ஒத்த கர்மம் எதோ அதைச் செய்வது முறை.
தனக்கு அமைந்த கர்மத்தை எப்படிச் செய்வது என்பது இனி விளக்கப்படுகிறது :
49. அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸேநாதிகச்சதி
அஸக்தபுத்தி:-பற்றற்ற மதியுடன், விகதஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந-விருப்பம் தவிர்த்தவனாக, ஜிதாத்மா-தன்னை வென்றவன், ஸர்வத்ர-எங்கும், பரமாம் நைஷ்கர்ம்யஸித்திம்-செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி), அதிகச்சதி-அடைகிறான்.
பொருள் : யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.
கர்மயோகி ஒருவன் ஓயாது வினையாற்றுகிறான். ஓய்வு ஒழிவை அவன் அறிந்தவன் அல்லன். அவனைப் பார்ப்பவர் கண்ணுக்கு அவன் இத்தகைய காட்சி கொடுக்கிறான். மற்று மனதினுள் அவனுடைய இயல்பு எத்தகையது என்று பார்க்க வேண்டும். எந்த இடத்தையாவது தேசத்தையாவது தனக்குச் சொந்தமானதென்று அவன் அபிமானிப்பதில்லை. ஊரெல்லாம் அவனுக்குச் சொந்தமெனலாம்; அல்லது ஓர் ஊரும் இல்லான் எனலாம். பொருள்கள் பல அவனால் கையாளப்படுகின்றன. அவைகள் வந்ததும் போனதும் அவனுடைய மனதில் ஒரு விகாரத்தையும் உண்டுபண்ணவில்லை. பாலத்தில் ஒருபுறம் நீர் வருகிறது; மற்றொருபுறம் அது வடிகிறது; நீரில் பற்றற்றுப் பாலம் இருக்கிறது. பொருளில் யோகியின் மனது அங்ஙனம் பற்றற்று இருக்கிறது. மக்களுள் எத்தனைபேர் தன்னைச் சார்ந்திருக்கின்றனர், உதாசீனராயிருப்பவர் யார், பகை கொள்பவர் யார் என்றெல்லாம் அவன் எண்ணுவதில்லை. பற்றற்ற புத்தியின் பாங்கு இதுவாம். கடலில் அலைகள் தோன்றுவது போன்று சிந்தையில் ஓயாது எண்ணங்கள் உதிப்பது இயல்பு. திரைகடல் போன்றது உலகத்தவர் உள்ளம். யோகியின் உள்ளமோ தேங்கித் திரையற்ற கடல் போன்றது. சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பவன் என்று அவனை இயம்பவேண்டும். போகத்துக்கு உரிய பொருள்களை ஏராளமாகச் சிறு குழந்தையின் முன்னிலையில் கொண்டுவரலாம். அவைகளைப் போகவஸ்து என்று குழந்தை பொருள்படுத்துவதில்லை. யோகியின் மனநிலையும் அப்படிப்பட்டது. ஏனென்றால் அவன் ஆசையற்றவன். நிராசையின் நேர்மை அத்தகையது. அதுபோன்ற மன நிலையுடையவன் சந்யாசி யாகிறான். ஏனென்றால் கர்மாதீதத்திலுள்ள பிரம்மத்தில் அவன் நிலைபெற்றவனாகிறான். நைஷ்கர்ம சித்தி அல்லது வினையொழிந்த பெருநிலையென்பதும் பரப்பிரம்மம் என்பதும் ஒன்றேயாம்.
50. ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா
ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா-ஞானத்தினுடைய உயர்ந்த நிலை, யா-எதுவோ, ஸித்திம் ப்ராப்த:-(அந்த) நிலையை அடைந்த மனிதன், யதா ப்ரஹ்ம ஆப்நோதி-எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ, ததா-அந்த நிலையை, ஸமாஸேந ஏவ-சுருக்கமாக, மே நிபோத - என்னிடமிருந்து தெரிந்து கொள், கௌந்தேய-குந்தி மைந்தனே!
பொருள் : சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.
சித்தியடைதல் என்பது பக்குவப்படுதல் என்று பொருள்படுகிறது. பக்குவப்படுத்துதல் இயற்கையின் இடையறாத் தொழில் ஆகிறது. சேதனம் அசேதனம் ஆகிய எல்லாப் பொருள்களும் ஓயாது பண்பட்டுக்கொண்டு வருகின்றன. பூமியிலே ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் அடுப்புக்கரியானது நாளடைவில் வைரமாக மாறுகிறது. பளபளப்புடைய ஆபரணமாகி அது காதை அலங்கரித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு களிக்கிறோம். அத்தகைய பரிபாகம் அடைதற்கு அது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. சுவை நிறைந்த ஆப்பிள் கனியொன்றை உண்டு மகிழ்வடைகிறோம். அது அடைந்துள்ள சித்தியானது நமக்கு ஆனந்தத்தை ஊட்டுகிறது. மகிழ்வடையும் நாம் சித்தியின் பொருட்டு ஆப்பிள் செடி எடுத்துக்கொண்ட முயற்சியை எண்ணிப்பார்ப்பதில்லை. வெயிலும், மழையும், பனியும், நீரும், நிலமும், காற்றும் அதன் பண்பாட்டுக்குத் துணைபுரிந்திருக்கின்றன. ஒவ்வோர் உயிரும் அதனதன் நிலையில் சித்தியடைய முயன்று வருகிறது.
எல்லா உயிர்களின் முயற்சிகளுக்கிடையில் மனிதனது முயற்சி மிக மேலானது. மற்றவைகளின் சித்தி ஸ்தூல வடிவத்தில் அமைகிறது. ஸ்தூல வடிவத்தோடு அழிந்தும் போகிறது. மனிதனுடைய பரிபாகம் மனத்தகத்தில் அமைகிறது. ஒரு மனிதனைப்போன்று இன்னொரு மனிதன் இருப்பதில்லை. எத்தனை மனிதரோ அத்தனைவித மனபரிபாகம் உண்டு எனலாம். பல ஜன்மாந்தரங்களில் அது வந்து அமைகிறது.
யோக சாதனங்கள் எல்லாம் மனதை ஒழுங்குபடுத்துதற்கென்றே அமைந்துள்ளன. திண்ணிய மனதையுடையவனே சித்தன். பிறகு அம்மனிதன் பரஞானத்தைப் பெறுதலும் பரத்தை அடைதலும் எளிதில் கைகூடுகின்றன. ஆகையால் அதை விஸ்தரித்து விளக்க வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால் போதுமானது.
51. புத்த்யா விஸுத்த்யா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச
ஸப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச
விஸுத்த்யா புத்த்யா யுக்த:-தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், த்ருத்யா ஆத்மாநம் நியம்ய ச-உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஸப்தாதீந் விஷயாந் த்யக்த்வா-ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து, ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச-விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு.
பொருள் : தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,
சுத்தியடைந்துள்ள ஒரு பொருளில் அதற்கு அன்னியமானது ஒன்றும் இருக்கலாகாது. சுத்த ஜலம் என்று சொல்லுமிடத்து அது ஜலவாயுவும் பிராணவாயுவும் சேர்ந்து உண்டானது. வேறு எப்பொருளுக்கும் அதில் கலந்திருக்க இடமில்லை. பரிசுத்தமான புத்தி எது என்பது கேள்வி. தூய கண்ணாடி போன்றது அது. நீலக்கண்ணாடியில் மஞ்சள் வஸ்துவைப் பார்த்தால் அது பச்சை நிறமுடையது போன்று தென்படும். நிறமில்லாத தூய கண்ணாடியில் பார்த்தால் மஞ்சள் மஞ்சளாகவே தோன்றும். புத்தியின்கண் உள்ள கலக்கம் அதை அழுக்குப்படுத்துகிறது. கோணலான புத்தியில் காணப்படு பொருளும் குற்றமுடையதாகத் தென்படும். சுத்தியடைந்த புத்தியானது ஐயமும் திரிவும் நீங்கப் பெற்றுள்ளது. இறைவனைப்பற்றிய நினைவு அதனிடத்து இடையறாது நிலைத்திருக்கும். உறுதியுடன் உடலையும் உள்ளத்தையும் அடக்கி ஆளுபவன் மேலோன் ஆகிறான். மிகைப்பட்ட பொருள்களை ஆத்ம சாதகன் தனக்கென்று வைத்துக் கொள்வதில்லை. உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருள், உடை முதலியவைகளைத் தவிர வேறு ஆடம்பரமான பொருள்களை அவனிடத்துக் காண முடியாது. அப்பொருள்களிடத்தும் அவன் விருப்பு வெறுப்பு அற்றவனாக இருக்கிறான். அடக்கமும் எளிய வாழ்வும் வடிவெடுத்தவன் ஆகிறான் அவன். மேலும் :
52. விவிக்தஸேவீ லக்வாஸீ யதவாக்காயமாநஸ:
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித:
விவிக்தஸேவீ-தனி இடங்களை நாடுவோனாய், லக்வாஸீ-எளிய உணவு உண்பவனாக,
யதவாக்காயமாநஸ:-வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி, நித்யம் த்யாநயோகபர:-தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து, வைராக்யம் ஸமுபாஸ்ரித:-பற்றின்மையை நன்கு பற்றியவனாய்.
பொருள் : தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,
விஷயப் பற்றுடன் கூடிய லௌகிக புத்தியுடைய ஒருவன் பலபேருடன் சேர்ந்திருந்து காலங்கழிக்க விரும்புகிறான். பேச்சுக்கு ஆள் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தவன் போன்று அவன் ஆகிறான். யோகிக்கோ தனித்திருக்குமளவு பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. புதிதாகத் தனித்திருந்து பழகுபவனுக்கு மனதைப் பரிசீலனை பண்ண இயலுகிறது. உணவு உடலைப் பேணுவதுபோன்று ஏகாந்தம் மன பரிபாகத்துக்குப் பயன்படுகிறது. சாதனத்தில் முதிர்ந்தவன் தனித்திருக்கும்போது ஆத்ம போதத்தில் திளைத்திருக்கிறான். மிகைபட்ட உணவு உடலுக்குச் சுமையாகிறது; சோம்பலையும் உண்டுபண்ணுகிறது. குறைபட்ட உணவு பலவீனத்தில் கொண்டுசேர்க்கும். அளவுடன் உண்பவன் யோகியாகிறான். மனதில் தெளிவும் உடலில் ஊக்கமும் அதனால் உண்டாகின்றன. யோகியின் ஆணைக்கு உட்பட்ட சித்த விருத்திகளே அவனுடைய உள்ளத்தில் உண்டாகின்றன. மனது அடங்கியிருப்பதற்கு அது அறிகுறியாகும். அவன் மிகைபடப் பேசான். பயன் படாத புன்மொழிகள் அவன் வாயினின்று வரமாட்டா. மொழியை அடக்கியதன் பயன் அதுவாம். நல்ல சாதகனது உடல் யாண்டும் அசைவற்றிருக்கும். அனாவசியமாக அது இயங்காது. ஆத்ம சொரூபத்தில் மனது மகிழ்ந்து குவிந்திருப்பது தியானமாகிறது. உலக வியவகாரம் பண்ணுவது சாதாரண மனிதனுக்கு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானது அவனுக்குத் தியானம் பண்ணுவது. வைராக்கியம் என்பது பற்றின்மை. இம்மையிலும் மறுமையிலும் உள்ள விஷய இன்பங்களில் பற்று வைக்காதிருப்பது யோகத்துக்கு உற்ற உபாயம்.
53. அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மம: ஸாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்-அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல், விமுச்ய-விடுத்து, நிர்மம: ஸாந்த:-மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்,
ப்ரஹ்மபூயாய கல்பதே-பிரம்மமாகத் தகுவான்.
பொருள் : அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.
மனிதன் வேறு, அவன் அணிந்திருக்கும் உடை வேறு. உடையைத் தன் சொரூபமாக எண்ணி இன்பமும் துன்பமும் அடைவார் உண்டு. அது ஒருவிதமான அகங்காரம். ஜன்மாந்தரங்களில் தனக்கு வந்தமையும் எண்ணிறந்த தேகங்களைத் தான் என்று அபிமானித்தல் பிறவிக்கு ஏதுவான அகங்காரமாகும். ஆத்ம போதத்தில் வளரும் வன்மை அல்லது பலம் வேண்டப்படுகிறது. அத்தகைய சீரிய பலமில்லாதவன் ஆத்மாவை அடையமாட்டான். பின்பு ஆசைக்கு ஒருவிதமான பலம் உண்டு. அதை ஆசையின் வேகம் என்று சொல்லுகிறோம். ஆசையின் வேகம் கெட வேண்டும். காமங்களை நிறைவேற்றுதற்கு வருவிக்கப்படும் பலம் வேண்டப்படுவதன்று. தனக்கு உடல் வலிவு மிகவும் அமைந்திருக்கிறதென்று மகிழ்ந்து ஒருவன் அதர்மத்தில் ஈடுபடுவதுண்டு. அத்தகைய இயல்பு செருக்கு என்னும் பெயர் பெறுகிறது. குற்றங்கள் பல செய்வதற்குச் சிலர்க்கு உடல் வலிவே முதற்காரணமாகிறது. இந்திரிய விஷயங்களில் வைத்துள்ள ஆசைக்குக் காமம் என்று பெயர். காமத்துக்கு இடைஞ்சல் பண்ணுகிறவனிடத்து சினம் வருகிறது. குரோதம் என்பது இதுவே. உடல் வாழ்க்கைக்குப் பொருள் தேவை. ஆனால் நான் பொருள் படைத்தவன் என்ற எண்ணம் உதவாது. ஆத்ம சாதனத்துக்கும் தர்மானுஷ்டானத்துக்கும் அது இடைஞ்சலாகிறது. பொருள் படைத்தவன் என்ற உணர்வு பரிக்கிரஹமெனப்படுகிறது. வாழ்க்கைக்கு இன்றியமையாததும் எளிதில் அகப்படுவதுமாகிய பொருளை யோகி ஒருவன் உடைத்திருக்க வேண்டும். பின்பு, அதைத் தன்னுடையதென்று அவன் கருதலாகாது. தன்னுடையதென்று கருதாத மனப்பான்மையே நிர்மமகாரமெனப்படுகிறது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் யாரிடத்து அமைந்திருக்கின்றனவோ அம்மனிதன் சாந்தியடைகிறான். அவனுக்கு மனத்தெளிவு இயல்பாக உண்டாகிறது. அதனால் அவன் பிரம்மத்தையடையத் தகுந்தவனாகிறான். அது எப்படியெனில் :
54. ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்
ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா-பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், ந ஸோசதி ந காங்க்ஷதி-துயரற்றோன், விருப்பற்றோன், ஸர்வேஷு பூதேஷு ஸம:-எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், பராம் மத்பக்திம் லபதே-உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
பொருள் : பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
ஞானம் பெரியதா, பக்தி பெரியதா என்னும் கேள்வி பலர் உள்ளத்தில் எழுகிறது. சிலர் ஞானம் பெரியது என்பர்; இன்னும் சிலர் பக்தி பெரியது என்பர். அப்படி யெல்லாம் பகர்வது அவரவர் மனப்பான்மையை விளக்குகிறது. முதிர்ந்த நிலையில் பக்தியும் ஞானமும் ஒன்றே. குழந்தை ஒன்றுக்குத் தாயினிடத்து அன்பு பெருக்கெடுத்திருக்கிறது. தாயும் தன் குழந்தையினிடத்து ஆழ்ந்து அன்பு காட்டுகிறாள். பக்தியின் தோற்றத்தை இருவரிடத்திலும் காண்கிறோம். இதில் ஞானம் எங்கே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். குழந்தை தாய்க்குரியது; தாயே அக்குழந்தையாக வடிவெடுத்திருக்கிறாள் என்ற ஞானம் அதில் மறைமுகமாயிருக்கிறது.
ஒரு பணக்காரனிடம் எத்தனையோ யாசகர்கள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்களை யார் என்று கவனியாது அம்மனிதன் தானம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் தோன்றிய வயிராகிகள் கூட்டத்தில் இருந்த பதினைந்து வயது இளைஞன் அப்பணக்காரனுடைய மனதைச் சிறிது கவர்ந்தான். அவ் இளைஞனது இடக் கன்னத்தில் இருந்த தழும்பும் முகச்சாயலும் ஆராய்ச்சிக்கு உரியவைகளாயின. பிரக்ஞைகெட்டு ஆற்றங்கரையில் கிடந்த குழந்தையைத் தாங்கள் எடுத்து வளர்த்ததாக வயிராகிகள் சொன்னார்கள். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு படகு விபத்து ஒன்றில் தான் இழந்துவிட்ட குழந்தை இப்பொழுது அகப்பட்டான் ! விசாரித்து உண்மையைத் தெரிந்தவுடன் தந்தையின் மனதில் அன்பு சுரந்தது. ஞானத்தினின்று அன்பு தோன்றுவதற்கு இது சான்று ஆகும். ஆக ஞானமுள்ள இடத்தில் பக்தியிருப்பதும், பக்தியுள்ள இடத்தில் ஞானம் இருப்பதும் இயல்பு. பிரம்ம ஞானத்தில் உறுதி பெறுகின்றவனுக்கு ஈசுவர பக்தி மேலிடுகிறது. தன்னையும் மன்னுயிர்கள் எல்லாவற்றையும் ஒரே பாங்குடன் அவன் காண்கிறான். ஏனென்றால் எல்லா உயிர்களும் ஈசுவரனுடைய பல்வேறு தோற்றங்கள் என்பது அவனுக்கு நன்கு விளங்குகிறது. தனக்கு ஏதாவது நஷ்டம் வந்துவிட்டதென்று அவன் துயரப்படுவதுமில்லை; தான் அடைய வேண்டிய பொருளை இன்னும் அடையவில்லை என்று அவாவுறுவதுமில்லை. ஏழாம் அத்தியாயம் பதினேழாவது சுலோகத்தில் பகர்ந்த மேலாம் பக்தி ஈண்டுக் குறிப்பிடப்படுகிறது.
55. பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஸ்சாஸ்மி தத்த்வத:
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்
மாம் ய: ச-என்னை யார் எனவும், யாவாந் அஸ்மி ச-எத்தன்மை உடையவன் என்றும், பக்த்யா தத்த்வத: அபிஜாநாதி-பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான், தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா-என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர், ததநந்தரம் விஸதே-தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
பொருள் : யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் தத் (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
ஆகாததை ஆகுமாறு செய்வது அன்பு அல்லது பக்தி. தெரியாததைத் தெரிவிப்பதும் அதே அன்பு. டாக்டர் ஒருவர் வெறும் நோயை ஆராய்ச்சி பண்ணுவதைவிட நோயாளியிடம் அன்பு கொள்ளுவாராகில், அந்த அன்பால் நோயாளியின் வருத்தத்தை உள்ளபடி அறிகிறார். பின்பு அது நோயை உள்ளபடி அறிந்ததாகும். அன்பின் மூலம் எதை அறிந்தாலும் அது உண்மையான அறிவாகிறது.
பகவானிடத்து பக்தி பண்ணுபவர் அவரை நன்கு அறிகின்றனர். அவரை அறியுமளவு பக்தி அதிகரிக்கிறது. ஞானத்தோடுகூடிய பக்தி மிகச் சிறந்தது. அவரே சகுண பிரம்மமாகவும் நிர்க்குணபிரம்மமாகவும் இருக்கிறார் என்பது பக்தனுக்கு விளங்குகிறது. உலகெல்லாம் அவரிடத்திருந்தே வந்தது. தனக்கும் தன் தலைவனுக்கும் உள்ள தொடர்வு தெரியும்போது பக்தன் பகவானுக்கே உரியவன் ஆகிறான். இந்த உண்மையை அறிந்த அக்கணமே பக்தன் பகவானை அடைந்தவன் ஆகிறான்.
ஜீவாத்மாவால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க முடியும். அப்போதுதான் ஒருவன் அவனே நான் என்று உணர்ந்து சொல்லக் கூடும். ஒரு வீட்டில் நெடுநாளாக வேலை செய்து வந்த வேலைக்காரன் ஒருவன், காலக்கிரமத்தில் அவ்வீட்டார்களுள் ஒருவனாகவே பாவிக்கப்படலாம். வீட்டு எஜமானன் அவனுடைய வேலைத்திறமையைக் கண்டு மகிழ்ந்து, ஒருநாள் அவனைத் தன்னுடைய ஆசனத்தில் உட்காரச் செய்து தன்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கி, இந்த க்ஷணம் முதல் இவனுக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை. நானும் இவனும் ஒன்று. எனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதைப்போல இவனுடைய கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படியவேண்டும். இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்று சொல்லலாம். அப்போது அந்த வேலைக்காரன் சங்கோசத்தினால் இந்தப் புதிய கௌரவத்தைக் காட்டிக்கொள்ளத் தயங்கலாமானாலும், எஜமானன் அவனைக் கட்டாயப்படுத்தி கௌரவ ஸ்தானத்தில் வைப்பான். ஈசுவரனை நெடுங்காலம் வழிபட்டு அவனுடன் ஐக்கியமான ஜீவனுடைய நிலைமையும் இப்படிப்பட்டதே. ஈசுவரன் தன்னுடைய மஹிமையை இவர்களுக்கு அருளி, இவர்களைத் தனது ஒப்பற்ற ஸ்தானத்துக்கு உயர்த்துகிறான்.
56. ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்
மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன், ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும், ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், மத்ப்ரஸாதாத்-எனதருளால், ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை, அவாப்நோதி-எய்துகிறான்.
பொருள் : எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.
முடிந்த நிலையில் எப்படி ஞானமும் பக்தியும் ஒன்றோ அதை விதத்தில் முடிந்த நிலையில் ஞானமும் கர்மமும் ஒன்றாகின்றன. சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் கர்மத்தைத் தியாகம் பண்ணுவதில்லை; கர்மத்துக்குத் தான் கர்த்தா என்ற எண்ணத்தைத் தியாகம் செய்கிறான். தான் கர்த்தா என்ற எண்ணம் போய்விடும்பொழுது அத்துடன் ஜீவபோதமும் போயொழிகிறது. தன்னைக் கர்த்தாவென்று எண்ணிக்கொள்ளாது ஏராளமாகக் கர்மம் செய்பவனுக்கு ஆயாசம் வருவதில்லை. தன்னைக் கர்த்தா வென்று எண்ணிக்கொள்பவனுக்கோ விரைவில் ஆயாசம் வருகிறது. அவன் சிறிது வினையாற்றினாலும் அது ஏராளமானதாகத் தோன்றும். மனநிலையே அதற்குக் காரணம். ஈசுவரனுக்காகக் கர்மம் செய்பவன் ஈசுவரனை நினைக்கிறான். தன்னை நினைப்பதில்லை. ஈசுவர நினைவில் தன்னை மறந்திருப்பவன் சரணடைந்தவன் ஆகிறான். கடலைச் சென்று அடையும் வரையில் நதிக்குச் சொந்த வியக்தியிருக்கிறது; சொந்தச் செயலும் இருக்கிறது. கடலினுள் நுழைந்த பிறகு நதி என்று பெயர் போய்விடுகிறது. கடலில் இருக்கிற நீரோட்டத்தில் நதியும் கலந்துகொள்ளலாம்; நதியினுடையதன்று. ஈசுவரனிடம் அடைக்கலம் புகுந்த ஜீவனது பாங்கு அத்தகையது. சரீரம் என்ற வடிவம் இருக்கிறது எனினும் அதனுள் இருக்கிற உணர்ச்சி முற்றிலும் பரபோதமாம். அச்சரீரத்தில் நிகழ்கின்ற கிருத்தியங்கள் எல்லாம் ஈசன் செயலேயாம். அங்ஙனம் வித விதமான செயல்கள் நிகழலாம். போர் புரிவது போன்ற பயங்கரமான செயல் நடைபெறலாம். அக்கர்மங்களைச் சொந்தம் பாராட்டுதற்கு ஜீவபோதம் மிச்சமில்லை. நிலைத்த நித்தியமான பரபோதம் ஜீவனால் அடையப்பெற்றதாகிறது.
கர்மம் செய்தலே வாழ்க்கையின் முடிவன்று; அது ஒரு மார்க்கமே. பற்றுதலற்றுச் செய்யப்படுமானால் அது வாழ்க்கையின் முடிவான லட்சியமாகிய இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. மார்க்கத்தையே முடிவென்று மருள் கொள்ளவேண்டாம். ஓர் ஊருக்குச் செல்லும் வழி ஊராகிவிடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.
ஆகையால் நீ வாழவேண்டிய விதமாவது :
57. சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ
ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம், சேதஸா-அறிவினால், மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு, புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று, மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு, ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
பொருள் : அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
ஒரு மனிதனை ஓர் அரசாங்க உத்தியோகத்தில் வைத்தால் அந்த அரசாங்கத்துக்குரிய ஆதிக்கம் அவனிடத்துச் சிறிது வருகிறது. தன் கடமையை முறையாகச் செய்துகொண்டுபோனால் இன்னும் அதிகமான பொறுப்பும் ஆதிக்கமும் அவனுக்கு வரும். அந்த உத்தியோகஸ்தன் சமூகத்தில் ஆணை செலுத்துதற்கிடையில் அப்பதவியில் தனக்குச் சொந்தமானது ஒன்றுமில்லையென்றும் எல்லாம் அரசாங்கத்தினுடைய தென்றும் அறிவானாகில் அவன் தனது பதவியைப்பற்றிய புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். அதைத் தனது என்று சொந்தம் பாராட்டுவானாகில் அவன் விவேகத்தைப் பெற்றவன் ஆகான். அதே முறையில் ஜீவாத்மாவுக்கு ஏற்பட்டிருக்கும் வியக்தியைப்பற்றிய உண்மையை ஜீவன் அறிவானானால் அவன் புத்தியோகம் பெற்றவன் ஆகிறான். தான் என்பதற்கு இலக்காகத் தன்னிடத்து இருப்பது யாது என்று அவன் ஆராய்ந்து பார்க்கவேண்டும். தனது என்பதற்கு இலக்காக இருப்பது எது என்று அடுத்தபடியாக விசாரித்துப் பார்க்க வேண்டும். கர்மத்தையும் அதே விதத்தில் துருவிப் பார்ப்பது அவசியம். தான் என்பதும், தனது என்பதும், தன் செயல் என்பதும் உண்மையில் இல்லை.
புத்தியோகத்தைச் சார்ந்திருப்பவன் இங்கு பகவான் இடுகின்ற ஆணைகளை யெல்லாம் அப்படியே நிறைவேற்றி வைப்பான். காயத்தால் அவன் கர்மங்களை விட்டொழிக்க மாட்டான். விவேகத்தின் துணைகொண்டு கர்மத்தில் வைத்த பற்றுதலையே ஒழித்து விடுவான். சர்வேசுவரனுடைய கிருத்தியமே யாண்டும் நிகழ்கிறது. எந்த ஜீவன் அதற்குக் கருவியாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவன் செயல் நின்றுவிடாது. ஈசுவரன் செயலை ஈசுவரனுக்காகச் செய்வது சந்நியாசமாகிறது. பரம்பொருளில் ஒடுங்குவதைத் தவிர ஜீவாத்மாவுக்கு வேறு ஒரு அலுவலும் கிடையாது. அதற்காகத் தனது முழு மனதையும் பரம்பொருளிடத்து நாட்டி வைத்தல் வேண்டும்.
பகவானைக் காணும் பாக்கியம் உனக்குக் கிடைத்தால் நீ அவரிடம் என்ன கேட்பாய்? வைத்திய சாலைகள், குளங்கள், பாட சாலைகள், அன்னச் சத்திரங்கள் இவைகள் வேண்டுமென்று இறைஞ்சுவாயா? இவைகளெல்லாம் நாம் கடவுளைக் காணும் வரையில் நமக்கு உண்மையாகத் தோன்றும். ஆனால் கடவுளை நேருக்கு நேர் கண்டதும் இவையனைத்தும் நிலையில்லாதனவாகக் கனவில் காணப்படுவன போலத் தோன்றும். ஆகையால் அவனிடம் அன்பு வேண்டியும் அறிவு வேண்டியும் பிரார்த்திப்போம். அவனிடம் அன்பு செலுத்துவதால் மனிதத் தன்மையிலிருந்து நாம் தெய்வத் தன்மைக்கு உயர்த்தப்படுவோம். அறிவுக்கும் ஆனந்தத்திற்கும் உறைவிடம் பகவான் என்பதை அவ் அன்பினின்று நாம் அறிவோம். நாம் அவருடைய புதல்வர்கள் என்பதும் அப்பொழுது நமக்கு விளங்கும்.
புத்தியோகத்தால் விளையும் நலன் எது வெனின்:
58. மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி
அத சேத்த்வமஹங்காராந்ந ஸ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி
மத் சித்த:-என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய், ஸர்வதுர்காணி-எல்லாத் தடைகளையும், மத்ப்ரஸாதாத்-எனதருளால், தரிஷ்யஸி-கடந்து செல்வாய், அத அஹங்காராத் த்வம் ந ஸ்ரோஷ்யஸி சேத்-அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், விநங்க்ஷ்யஸி-அழிந்து போவாய்.
பொருள் : என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.
உலக வைபவத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று புறவுலகம்; மற்றது அகவுலகம். விக்கினங்களும் இடைஞ்சல்களும் வெளியுலகிலும் உண்டு; அகவுலகமாகிய மனதிலும் உண்டு. வெளியுலகைத் திருத்தியமைக்கின்றோம். நோய் வரக் கூடிய இடத்தை நோயற்ற இடமாக்கலாம். நீர் இல்லாத இடத்துக்கு நீர் கொண்டு வரலாம். வெப்பம் நிறைந்த இடத்தில் வெப்பத்தைக் குறைக்கலாம். இப்படியெல்லாம் செய்வது புறவுலகில் உள்ள விக்கினங்களை அகற்றுவதாகும். நவீன பௌதிக சாஸ்திரத்தின் துணைகொண்டு அச்செயல் ஏராளமாகச் செய்யப்படுகிறது. ஆனால் அதனாலேயே உலகுக்கு இன்பம் வந்தமையாது. வெளியுலகைத் திருத்தியமைப்பதைவிட முக்கியமானது அகவுலகமாகிய மனதைத் திருத்தியமைப்பது மனதைத் திருத்தியமைக்கத் தெரியாதவனுக்குப் புறவுலகம் எவ்வளவு நல்லதாயிருந்தாலும் அது இன்பம் தராது. புறவுலகம் எவ்வளவு கெட்டதாயிருந்தாலும் மனதைத் திருத்தியமைத்துக்கொண்டவனுக்கு அது கேடு செய்யாது.
இடைஞ்சல்களும் விக்கினங்களும் வெளியுலகிலில்லை; மனிதனுடைய மன நிலையில்தான் இருக்கின்றன. மனதை ஈசன் பால் வைத்தவர்களுக்கு உலகம் தரும் இடைஞ்சல்களும் ஈசன் செயலாகவே தோன்றும். அதற்குச் சிறந்த சான்று அப்பரது வாழ்க்கையில் நிகழ்கிறது. வந்த விக்கினங்களைக் குறித்து அவர் பகர்ந்ததாவது :
நாமார்க்குங் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலையில்லோம்;
ஏமாப்போம், பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும் துன்பமில்லை;
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்
சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
ஆனால் துன்பங்கள் எல்லாம் அஹங்காரத்தினின்றே வருகின்றன.
என்னதான் முயன்றாலும் ஈசுவரனுடைய கிருபை மட்டும் இல்லாது போனால் உனக்கு ஒன்றும் லபிக்காது. நீ ஈசுவரனை அடையமாட்டாய். ஆனால் இந்தக் கிருபை எளிதில் கிடைத்து விடும் என்று நம்பாதே. உனது ஹிருதயத்திலிருந்து அஹங்காரம் முழுவதும் நீங்க வேண்டும். நான் கர்த்தா என்ற எண்ணம் உன் மனதிலிருந்தால் நீ ஒருபோதும் ஈசுவரனைக் காணமாட்டாய். நானே கர்த்தா வென்று எவன் நினைக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஈசுவரன் ஒரு போதும் தோன்றுவதில்லை.
அஹங்காரத்தில் விளையும் கேடு யாது? விடை வருகிறது :
59. யதஹங்காரமாஸ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி
யத் அஹங்காரம் ஆஸ்ரித்ய-எந்த அகங்காரத்தின் வசப்பட்டு, ந யோத்ஸ்யே இதி மந்யஸே-நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ, தே ஏஷ: வ்யவஸாய: மித்யா-இந்தத் தீர்மானம் பொய்யானது, ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி-(ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்.
பொருள் : நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.
கைக்குழந்தை ஒன்றின் முன்னிலையில் கொலையும், களவும், சூதும் நிகழ்கின்றன. கொலை புரிவதைப் பார்த்துக் குழந்தை சிரித்துக்கொண்டிருக்கலாம். ஏனென்றால் அதனிடத்து இன்னும் அஹங்காரம் தோற்றத்துக்கு வரவில்லை. பெரியவனாக வளர்ந்த பின் வியாபகத்துக்கு வரக்கூடிய அவனுடைய சுபாவமும் இப்பொழுது குழந்தைப் பருவத்தில் தோன்றா நிலையில் இருக்கிறது. கொலையையும், களவையும், சூதையும் குழந்தை ஏன் எதிர்த்துப் போராடவில்லை என்ற கேள்வியை நாம் கேட்க முடியாது. அஹங்காரம் அடையப்பெறாத குழந்தையின் காட்சியில் அக்கொடிய செயல்கள் இல்லை. ஆனால் கொடுமையை உலகில் காண்பவர்களின் கடமை வேறு. குழந்தை போன்று தாங்கள் ஆயிருப்பதாக அவர்கள் பாசாங்கு செய்யலாகாது. அர்ஜுனனுக்கு பகவான் பகர்வதாவது :
இன்றுவரை நீ பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் க்ஷத்திரிய சுபாவத்துக்கு ஒத்தது. தீமையை எதிர்த்துப் போராடும் பாங்குடையவன் நீ. தீமை தாண்டவமாடுவதைப் பார்த்துக்கொண்டு நீ சும்மாவிருக்க முடியுமா? தூங்கும்பொழுதும் நம் உடலைக் கொசுக்கடித்தால் நம் கை தானே கொசுவை அடித்து ஓட்டுகிறது. அங்ஙனம் உன் சுபாவமே போருக்கு எழுந்து நிற்கும். அதற்கு மாறாகத் தீர்மானிப்பது உன் ஆத்ம சக்தியைக் கெடுப்பதாகும். எண்ணமும் செயலும் மாறுபடுவதைவிட ஒரு மனிதனுக்குக் கேடு வேறு ஒன்றுமில்லை.
தீமையைப் களைந்தாக வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் காயத்தால் செயல் புரிய மாட்டேன் என்று உன் இயல்பைக் கரக்கின்றாய். ரஜோகுணத்தில் உதித்த பயன்படாத அகங்காரம் அது. அதன் வசப்பட்டு வீணாகத் தீர்மானிக்காதே.
அஹங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடா; ஜனன மரணமும் நீங்கா. மேலும் :
60. ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோऽபி தத்
கௌந்தேய-குந்தியின் மகனே! யத் மோஹாத் கர்தும் ந இச்சஸி-எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தத் அபி ஸ்வேந ஸ்வபாவஜேந கர்மணா-அதையும் நீ, உன்னுடைய இயல்பான கர்ம வினையால், நிபத்த:-கட்டப் பட்டு, அவஸ: கரிஷ்யஸி-தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.
பொருள் : இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.
ஒவ்வொரு மனிதனிடத்திலும் அவனது இயல்பு அல்லது சுபாவம் உள்ளுற உறைந்து கிடக்கிறது. அதன் வேகம் எத்தகையது என்பதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்ளலாம். ஒரு கொடிய நோயைப் போக்குதற்கு ஒருவன் மருந்து உண்ண வேண்டியது அவசியமாயிற்று. மருத்துவனும் அதற்கேற்ற மருத்தைக் கொடுத்தான். பிறகு அதற்குப் பத்தியம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது. நோயாளி மருந்து உண்ணும்போது குரங்கைப்பற்றி நினைக்கலாகாது என்ற நிபந்தனை ஏற்பட்டது. அதுதான் பத்தியம் ! அது மிக எளியது என்று நோயாளி எண்ணிக்கொண்டு பத்தியத்துக்கு உட்பட இசைந்தான். காலையில் மருந்து ஜாடியைக் கையில் எடுத்த பொழுதெல்லாம் குரங்கைப்பற்றிய எண்ணம் முன் வந்து நின்றது. பத்திய நிபந்தனையை நிறைவேற்ற அவனால் இயலவில்லை! எணணத்துக்கு எவ்வளவு வலிவோ அதைவிட அதிகம் வலிவுண்டு இயல்பில் பிறந்த வினைக்கு.
மற்றொரு சான்றும் இங்குத் தேவையாகிறது. பிறரைத் தாக்கித் துன்புறுத்தும் ஒருவன் தானே அடியுண்ண விரும்புவதில்லை. அத்தகையவன் பிறரால் தாக்கப்படுவது போன்று கனவு கண்டான். கனவில் அவனுடைய நிலைமை அனுதாபத்துக்கு உரியதாயிருக்கிறது. உண்மையில் பிறர் யாரும் வந்து அவனைப் புடைக்கவில்லை. அவனது சுபாவத்தினின்று உதித்த சித்த விருத்தி அச்செயலை வரவழைத்துக்கொண்டது. கனவில் அடிபடுவதினின்று தப்பித்துக்கொள்ள அவனுக்குச் சுதந்தரம் இல்லை. தன் இயல்பில் பிறந்த வினையின் வன்மை அத்தகையது. சுவர்க்கத்துக்குச் சென்றாலும் நரகத்துக்குச் சென்றாலும் மனிதன் தன் இயல்பைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறான். தன் நிழல் எப்படித் தன்னைவிட்டுப் பிரிவதில்லையோ, தன் சுபாவமும் அப்படியே தன்னைவிட்டுப் பிரிவதில்லை. அதிலிருந்து உதிக்கும் கர்மத்தை அவன் செய்தே ஆகவேண்டும். மற்று அதன் வேகத்தை முறையாகக் கையாளுதலே அதை ஒடுக்குதற்கு உற்ற உபாயமாகும்.
வெள்ளைப் பூண்டின் சாறு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எத்தனை தரம் கழுவித் துடைக்கப்பட்ட போதிலும் அது நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அஹங்காரமானது வெகுபிடிவாதமுள்ள அக்ஞானம். எவ்வளவுதான் சிரமப்பட்டபோதிலும் அதை முற்றிலும் போக்குவது முடியாத காரியம்.
-
வினையின் வேகத்தை முறையாகக் கையாளுதல் என்பதன் பொருள் யாது? விடை வருகிறது:
61. ஈஸ்வர: ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸேऽர்ஜுந திஷ்டதி
ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா
அர்ஜுந-அர்ஜுனா, யந்த்ராரூடாநி ஸர்வபூதாநி-உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும், ஈஸ்வர:-ஈசுவரன், மாயயா ப்ராமயந்-மாயையினால் சுழற்றிக் கொண்டு, ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஸே-எல்லா உயிர்களின் உள்ளத்தில், திஷ்டதி-நிற்கிறான்.
பொருள் : அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் போர்க்களத்துக்கு வந்த கோலமே இக்கோட்பாட்டை விளக்குகிறது. ரதத்தின் மீது அர்ஜுனன் ஏறியிருந்தான். அந்த ரதம் உடலுக்குச் சமானம்; அவன் ஜீவாத்மாவாகிறான். ரதமும் இயங்கியது. பார்த்தனும் போர் புரிந்தான். இயங்கியதைப் பற்றிய உணர்ச்சி ரதத்துக்கு இல்லை. சண்டை செய்ததைப் பற்றிய உணர்ச்சி அர்ஜுனனுக்கு இருந்தது. நிகழ்ந்தது தன் செயல் என்று எண்ணியிருந்த அப்போர்வீரன் அது உண்மையில் ஈசன் செயல் என்று அறிந்து கொள்ளக் கடமைப்பட்டிருந்தான். கிருஷ்ணன் தேர் ட்டினான்; ஆனால் ஆயுதம் எடுத்துப் போர்புரியவில்லை. அங்ஙனம் எல்லாருடைய ஹிருதய கமலத்திலும் அவன் சாக்ஷியாக வீற்றிருக்கிறான்.
அர்ஜுனன் என்பது வெள்ளையானவன் அல்லது தூயவன் என்று பொருள்படுகிறது. தூய மனமுள்ளவன் உண்மையைத் தெரிந்துகொள்ள வல்லவனாகிறான். ஹிருதயத்தில் வீற்றிருக்கின்ற சர்வேசுவரனின் சன்னிதான விசேஷத்தால் மாயை இயங்குகிறது. இயங்குகின்ற மாறை அதன் வசப்பட்டிருக்கிறவர்களையெல்லாம் இயக்குகிறது. சக்கரங்களில் கட்டுண்ட பொம்மைகள் போன்று அவர்கள் அசைகிறார்கள். அசைவைத் தங்கள் சொந்தக் கர்மமென்று அவிவேகிகள் எண்ணிக்கொண்டு அதைச் செய்வேன் என்றும், இதைச் செய்யமாட்டேனென்றும் இச்சா சுதந்தரம் பாராட்டுகிறார்கள். அதனால் மாயையில் அவர்கள் அதிகம் கட்டுண்கின்றனர். ஈசா, நீ ஆட்டுவிக்கும் விதத்தில் நான் ஆடுகிறேன் என்ற மன நிலை வேண்டும். விதவிதமான ஜீவர்களைக் கருவிகளாகக் கொண்டு ஈசன் தன் செயலைச் செய்து கொள்கிறான் என்ற எண்ணத்துடன் கர்மம் செய்தலே அதை முறையாகக் கையாளுவதாகும்.
பாம்புக்குப் பல்லில் விஷமிருந்தபோதிலும் அவ்விஷத்தால் அது தீமையை அடைவதில்லை. ஆனால் அது பிறரைக் கடித்தால் அவ்விஷம் கடியுண்டவனுக்கு மரணத்தைத் தரும். இதைப்போல ஈசுவரனிடத்திலும் மாயை உள்ளது. ஆனால் அது அவரைப் பந்தப்படுத்தாது. ஜகத் முழுதையும் அவர் தனக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்.
கடவுள் ஆட்டுவிக்கிறார் என்ற கருத்தில் வரும் பயன் இனி விளக்கப்படுகிறது :
62. தமேவ ஸரணம் கச்ச ஸர்வபாவேந பாரத
தத்ப்ரஸாதாத்பராம் ஸாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஸாஸ்வதம்
பாரத-பாரதா, ஸர்வபாவேந-எல்லா வடிவங்களிலும், தம் ஏவ ஸரணம் கச்ச-அவனையே சரணெய்து! தத்ப்ரஸாதாத்-அவனருளால், பராம் ஸாந்திம் ஸாஸ்வதம் ஸ்தாநம்-பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை, ப்ராப்ஸ்யஸி-அடைவாய்.
பொருள் : அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.
எல்லாப் பாங்கிலும் அவனையே தஞ்சமடைதல் ஜீவாத்மாவினது செயற்கரிய செயலாகும். உடலைத் தன்னுடையது என்று கருதுதல், தன் செயலுக்குத் தான் கர்த்தாவென்று நினைத்தல், உலக நடைமுறையில் தனக்குத் தனியந்தஸ்து ஒன்று உண்டு என்று எண்ணுதல் இவையாவும் ஜீவபோதத்தை வளர்க்கின்றன. அது தஞ்சமாகாது. கடலில் அலை இருப்பதுபோன்று ஜீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருக்கின்றன. அலைக்குச் சொந்தமான நீர் கிடையாது. ஜீவனுக்குச் சொந்தமான சரீரம் கிடையாது. அலைக்கிருக்கின்ற வடிவம் வேளைக்கு ஒன்று. தேகத்துக்கு இருக்கிற வடிவமும் அத்தகையது. அலையின் செயலோ உண்மையில் கடலின் செயல். கடலுக்கு அன்னியமாக அலை இருக்கமுடியாது. ஜீவனுடைய செயல்களெல்லாம் உண்மையில் ஈசனுடைய செயல்கள். ஈசனுக்கு அன்னியமாக ஜீவர்கள் இல்லை. இப்பேருணர்ச்சியில் நிலைபெற்றிருப்பது தஞ்சமாகும்.
பாண்டவர், விதுரர், திரௌபதி, குசேலர் முதலாயினோர் கிருஷ்ணனைத் தஞ்சமடைந்திருந்தனர். உடன் பிறந்த சகோதரர்கள் தசரத ராமனைத் தஞ்சமடைந்திருந்தனர். குகன், சுக்ரீவன், விபீஷணன் முதலாயினோர் அவனைத் தஞ்சமடைந்தனர். அங்ஙனம் அடைக்கலம் புகுந்தவர்க்கு மன அமைதி உடனே உண்டாயிற்று. கைகேயி, வாலி, ராவணன் முதலியவர்கள் அடைக்கலம் புகவில்லை; அவர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாயினர்.
ஈசனுடைய அருள் என்னும் காற்று சதா வீசிக்கொண்டிருக்கிறது. தங்களை முற்றும் ஈசனிடம் ஒப்படைத்தவர்கள் அக்காற்றைப் பயன்படுத்தும் மாலுமிகளுக்குச் சமமானவர்கள். காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் மாலுமிக்குக் கஷ்டமில்லை. அருளைப் பயன்படுத்தும் அன்பனுக்கு அல்லல் இல்லை. அவன் கர்மம் செய்வதற்கிடையில் கர்ம பந்தம் கலைகிறது. சாந்தியும் முக்தியும் அவனுக்கு வாய்க்கின்றன.
ஸ்ரீ ராதை தன் கற்பு நிலையை நிரூபிப்பதற்கு ஆயிரம் துவாரங்கள் உள்ள ஒரு பாத்திரத்தில் ஜலங்கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டாள். ஒரு துளி ஜலங்கூடக் கீழே விழாமல் அவள் கொண்டுவந்தவுடன், அங்கிருந்தவர்கள் எல்லாரும் இவளைப் போல் கற்புடைய ஸ்திரீ ஒருத்தி இதுவரையில் இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவது மில்லை என்று வெகுவாகச் சிலாகித்தனர். அப்போது ராதை ஏன் என்னை சிலாகிக்கிறீர்கள்? கீர்த்தியெல்லாம் கிருஷ்ணனுடையதே என்று சொல்லுங்கள். நான் கேவலம் அவனுடைய பணிப்பெண் என்றாள்.
63. இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா
விம்ருஸ்யைததஸேஷேண யதேச்சஸி ததா குரு
இதி குஹ்யாத் குஹ்யதரம் ஜ்ஞாநம்-இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை, மயா தே ஆக்யாதம்-என்னால் உனக்கு கூறப்பட்டது, ஏதத் அஸேஷேண விம்ருஸ்ய-இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து, யதா இச்சஸி ததா குரு-எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
பொருள் : இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
விளங்காத ஒன்றை இரகசியம் என்றும் மறைபொருள் என்றும் பகர்கிறோம். இயற்கையின் உட்பொருள் முழுதும் நமக்கு விளங்குகிறதில்லை. அது ரகசியமாய் மறைந்து கிடக்கிறது. இயற்கையைப்பற்றி இக்காலத்தில் நாம் அறிந்துள்ள பல மர்மங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்தன. உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம். மின் சக்தியை உண்டு பண்ணும் முறை இப்பொழுது நமக்குத் தெரிந்திருக்கிறது. இயற்கையில் இதுகாறும் மறைந்து கிடந்த விசையானது இப்பொழுது வெளிப்படையாயிற்று. அந்த விசையின் தன்மை எத்தகையதென்றும், அதை எப்படி உண்டுபண்ணுவது என்றும், அதை எங்ஙனம் உபயோகப்படுத்தலாம் என்றும் புகட்டுவது சாஸ்திரம். விளங்காததை விளக்குவது சாஸ்திரம். இயற்கையைப் பற்றி அப்படி எண்ணிறந்த சாஸ்திரங்கள் இருக்கின்றன. மானுட வாழ்க்கையைப் பற்றிய சாஸ்திரம் இருக்கிறது. அது பிரம்ம வித்தையென்றும் யோக சாஸ்திரம் என்றும் பெயர் பெற்று உள்ளது. அனுஷ்டான முறையில் சாஸ்திரம் நமக்கு அளிக்கப்படும்பொழுது அது உடன்பாட்டு முறையென்றும் எதிர்மறை முறையென்றும் இரண்டுவித வடிவெடுக்கிறது. இன்னதைச் செய் என்று ஆக்ஞாபிக்கும்பொழுது அது உடன்பாட்டு முறை. இன்னதைச் செய்யாதே என்று ஆக்ஞாபிக்கும் பொழுது அது எதிர்மறை முறை. ஏன் ஒரு விதத்தில் ஒழுகவேண்டும், ஏன் மற்றொரு விதத்தில் ஒழுகலாகாது என்பதற்குத் தக்க காரணங்களையும் அது எடுத்துப் போதிக்கிறது. யுக்தி பூர்வமாகக் புகட்டுவது சாஸ்திரம். குருட்டு நம்பிக்கையை சாஸ்திரம் ஆமோதிப்பதில்லை. குருட்டு நம்பிக்கையை விரைவில் கலைத்துவிடலாம். ஆனால் யுக்திக்கும் அனுபவத்துக்கும் ஒத்திருக்கும் கோட்பாட்டை யாரும் அசைக்க முடியாது.
மிக ஆழ்ந்தவைகளான வாழ்க்கைத் தத்துவங்களைக் கருணை கூர்ந்து கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு எடுத்து வழங்கினார். அவர் புகட்டியவைகளை வேண்டியவாறு ஆராய்ச்சி செய்வதற்கான இச்சா சுதந்தரத்தையும் அவனுக்கு அவர் அன்புடன் அளித்தார். உண்மையானது எம்மனிதனால் சொல்லப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. உண்மை தனக்குத் தானே சான்று ஆகிறது. உண்மையை நன்றாக அலசி ஆராய்ந்து நீ விரும்பியதைச் செய் என்கிறார் பகவான். உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் சுதந்தரம் முற்றிலும் அவசியமானது. அடிமைத் தனத்தில் அடக்கி வைக்கப்பட்ட உயிர் ஓங்கி வளராது. புகட்ட வேண்டிய யாவையும் சொல்லியான பிறகு, அவைகளுள் விரும்பியதைச் செய் என்று கிருஷ்ணன் அனுமதி கொடுக்கிறார். சான்றோர் புகட்டும் செந்நெறியின் சிறப்பு இதுவேயாம்.
மனிதனுடைய முயற்சிகளெல்லாம் எதில் முற்றுப்பெறுகின்றன என்ற முடிவான உண்மையை இனி மூன்று சுலோகங்களில் பகவான் பகர்கின்றார்.
64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்
ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய, மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை, பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள், மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன், தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.
பொருள் : மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.
நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும். இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது. சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான். அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது- பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம். வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது. ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.
புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது. எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன். உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத் தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன் கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டுபண்ணும் கானமோ மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது. பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான். இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.
உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல, பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.
பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :
65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே
மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக, மத்பக்த:-என் தொண்டனாகுக, மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க, மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக, மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய், ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.
பொருள் : உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.
சத்தியம் சொல்லுகிறேன் என்று சத்தியப்பொருளாகிய பகவான் பகர்கிறார். சூரியனிடத்திருந்து கிளம்பி வருவதெல்லாம் அக்கினி சொரூபம். வெப்பத்தைத் தவிர வேறு ஒன்றும் ஆங்கில்லை. பரமாத்மா உடல் தாங்கி வந்து உரைப்பது சத்தியமே. அதைப் பின்பற்றுகின்ற சான்றோரது ஜீவிதம் அதை சத்தியமென்றே நிரூபிக்கிறது. நீ எனக்குப் பிரியமானவன் என்பது மகாவாக்கியம். ஜீவர்கள் எல்லாம் இறைவனுக்குப் பிரியமானவர்களே. அந்த அன்பை விளக்குதற்கான பரிபாகம் வந்தமையும்போது தனிச் சிறப்புடன் அப்பேரிணக்கம் பகரப்படுகிறது. துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளும் பிரியத்தைப் படிப்படியாய் உறுதிப்படுத்திக்கொண்டு போகின்றன. அன்பிற்கும் உண்டோ பிரித்துவைத்து அடைக்கும் தாழ்? நானே நீ, நீயே நான் என்பதைவிட உயர்ந்ததொரு நிலையில்லை. இது வெறும் பேச்சில் நிரூபிக்கப்படுவதன்று ; சுவானுபவத்தில் அடையப்பெறுவதாம்.
வண்டியில் ஏறி ஓர் ஊருக்குப் போகிறோம். வண்டியில் செல்லுவது நெறி. ஊரை அடைவது குறி. கடவுள் விஷயத்தில் நெறியும் குறியும் ஒன்றே. அவனைத் துணையாகக்கொண்டு அவனை அடைகிறோம். அவன் அருளால் அவன்தாள் வணங்குகிறோம். பிறகு அவன் அருளால் அவனை அடைகிறோம். அவன் யாண்டும் துணைபுரிந்தும், அவன் துணையை ஏற்க நம்மில் பலர் மறுக்கிறோம். இதற்கெல்லாம் இடையில் இடைஞ்சலாய் நிற்பது நமது பண்படாத மனது. அந்த மனது பல ஜன்மாந்தரங்களில் வேறு பல காரியங்களுக்கு உதவிவந்தது. விழலுக்கு நீர் இறைத்தவாறு அது அநித்தியப் பொருள்களை நாடிநின்றது. ஆனால் அது கடவுளை அடைதற்கே கருவியாக அமைவது அவசியமாகிறது. உள்ளம் அவனுக்கே இடமாக வைக்கப்படவேண்டும். மனிதன் செய்யவேண்டிய செயல் அதுவேயாம். அவன் மீது பக்தி பண்ணுமளவு மனது மிக உயர்ந்ததாகிறது. பக்தனிடத்து இறைவனே பித்துப்பிடித்தவன் ஆகிறான். பக்தன் செய்கிற செயலெல்லாம் இறைவனது ஆராதனையாகிறது. கடவுள் உணர்ச்சியிலேயே அவன் ஊறியிருப்பதால் செயல்கள் அனைத்தின் வாயிலாக இறைவனுக்கு அவன் இடையறா நமஸ்காரம் செய்கிறான். கடலை அணுகிய நதியானது கடலுக்குள் நுழைந்தே ஆகவேண்டும். அங்ஙனம் இத்தகைய பான்மையைப் பெற்றுள்ள பக்தன் பரம்பொருளை அடைந்தே ஆகவேண்டும். பரமாத்மாவே அதைக் குறித்து சத்தியம் செய்கிறார். உறுதிமொழி கூறுகிறார்.
ஒன்பதாவது அத்தியாயம் முப்பத்தொன்றாவது சுலோகத்தில் பக்தன் அழிந்துபட்டுப் போவதில்லை என்பதைப் பிரகடனம் பண்ணும்படி அர்ஜுனனைத் தூண்டினார். இறுதியில் அப் பேருரையைப் பகர பகவான் தாமே முன் வந்துள்ளார்.
தண்ணீரில் மூழ்கிவிட்டவன் மூச்சு விடுவதற்கு மிகவும் தவிப்பதைப் போல, ஈசுவரனைக் காண்பதற்கு முன்னால் ஒருவனுடைய மனம் அதற்காக மிகவும் ஆசைகொள்ள வேண்டும்.
பகவான் கூறும் அந்த உறுதிமொழிதான் யாது? விடை வருகிறது :
66. ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு, மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ - என்னையே சரண் புகு, ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும், அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன், மா ஸுச:-துயரப்படாதே.
பொருள் : எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.
ஜீவன் செய்கிற செயல்களிலெல்லாம் கடைசியான செயல் ஈசனிடத்து அடைக்கலம் புகுதலாம். அடைக்கலம் புகுதல் என்பதன் பொருள், தன் முயற்சி போதவில்லை அல்லது பலிதமாக வில்லை; ஆகையால் தெய்வத்தினிடம் தஞ்சமடைந்து அவர் துணையையும் கொஞ்சம் தேடிக்கொள்ளலாம் என்பதல்ல. சிற்றோடை பெரிய நதியில் கலந்து பிறகு சமுத்திரத்தில் சங்கமமாவது போன்றது சரணாகதி. ஜீவனுடைய இச்சா சுதந்தரமெல்லாம் ஈசுவர சங்கற்பத்தில் சேர்ந்துவிடுகிறது. தனக்கெனத் தனிச் செயல் ஒன்றுமில்லை. ஈசன் செயல் கடலின் செயல் போன்றது. ஜீவன் செயல் அலையின் செயல் போன்றது. அலையானது கடலுக்கு அன்னியமானதல்ல. ஜீவன் செயலெல்லாம் உண்மையில் ஈசுவரன் செயல். கர்மயோகம் ஜீவனை முடிந்த இந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.
பக்தன் எப்பொழுதும் தன் தெய்வத்தைச் சார்ந்திருக்கிறான். தனக்கு வரும் நன்மை கேடுகளெல்லாம் கடவுளது ஆணை. ஆகையால் ஒரு செயலை நன்கு என்றும் மற்றொரு செயலைக் கேடு என்றும் பக்தன் பொருள்படுத்துவதில்லை. தர்மம் அதர்மம் ஆகிய இரண்டும் ஈசன் செயல் என்ற புனித நிலையை அடைவனவாகின்றன.
அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!
பக்தர்கள் எல்லாரும் அடைக்கலம் என்னும் பெருநிலையை அடைந்திருக்கிறார்கள். இறைவனது பேரன்பில் அவர்கள் தங்களை மறந்துவிட்டார்கள். ஞாபகக் குறைவில் ஒருவன் நடுவீதியில் நடப்பானாகில் அவன் ஓடும் வண்டிகளால் ஆபத்துக்கு உள்ளாவான். பக்தனோ அன்பில் தன்னை மறந்தவன் என்றாலும் ஒரு சிறு செயலிலும் சொப்பனத்திலும் அவன் பிழைபோவதில்லை. ஒழுங்குப்பாடே வடிவெடுத்ததாக அவனது வாழ்க்கை நடை பெறுகிறது. தாயின் மார்பில் அணைக்கப்பெற்ற சேய்போன்று அவன் சரணாகதியில் இன்பம் துய்க்கிறான்.
இனி ஞானியின் ஞானோதயமும் சரணாகதி எனப்படுகிறது. கண்ணாடியில் நல்லது கெட்டது ஆகிய இரண்டின் பிம்பங்கள் தோன்றலாம். எனினும் கண்ணாடியின் சொரூபம் மாறுவதில்லை. தர்மம் அதர்மம் என்று சொல்லப்படும் கர்மங்களெல்லாம் பிரகிருதியினுடையவைகள். அந்தராத்மாவாயிருக்கும் சித் சொரூபம் என்னும் பரவெளியை அவைகள் பாதிக்கமாட்டா. சுத்த சைதன்யமாகிய தன்னில் தானாயிருப்பவன் உபாதிகளையெல்லாம் தியஜித்து பரவெளியில் ஒன்றாய்விடுகிறான். பேரறிவு அல்லது பேருணர்வு ஒன்றே பாக்கியிருக்கிறது. உள்ளும் புறமும் என்கிற பாகுபாடுகள் அப்பரவெளிக்கில்லை. ஞானியடையும் சரணாகதி இதுவே.
யோகி, பக்தன், ஞானி ஆகிய மூவரும் அடையும் சரணாகதி ஒன்றேயாம். அது மூன்று விதமாக விளக்கப்படுகிறது. சத் சொரூபத்தில் யோகி லயமாகிறான்; சித் சொரூபத்தில் ஞானி லயமாகிறான்; ஆனந்த சொரூபத்தில் பக்தன் லயமாகிறான்.
சிறு குழந்தையொன்று தாயின் மடியில் உட்கார்ந்திருக்கிறது. அதனிடத்து மற்றவர்கள் காட்டும் அன்பை அங்கீகரிக்கும் பரிசு அதற்கு வந்திருக்கிறது. ஆனால் அதனுடைய மனது இன்னும் விகாரப்படவில்லை. எந்த நாட்டுக்கு உரிய குழந்தை எந்த மொழி பேசும் குழந்தை, எத்தகைய பழக்க வழக்கங்களையுடையது ஆகிய பேதங்களையும் பாகுபாடுகளையும் அது இன்னும் அறியவில்லை. பூர்வ ஜன்மத்திலிருந்து அது கொண்டுவந்திருக்கும் இயல்புகளும் இன்னும் அவ்யக்தமாக மறைந்து கிடக்கின்றன. அதாவது அதன் மனத்தகத்து இருக்கும் மனோதர்மங்களெல்லாம் இன்னும் வடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் குழந்தையானது ஞானிக்கு ஒப்பானது. அதன்பால் உள்ள அபேத நிலை உயிரனைத்தையும் தனக்குரிய தாக்குகிறது. குழந்தையின் தூய அன்புக்கு வசப்படாத உயிர் இல்லை.
தான் அடைந்துள்ள மன பரிபாகத்தால் ஞானி குழந்தை போன்று ஆகிறான். அந்தக்கரண மடங்கத் துறப்பதுவே எந்தத் துறவினும் நன்று என்பது கோட்பாடு. ஞானியாவதற்கு முன்பு விதவிதமான இயல்புகள் மனதைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்றன. அவரவர் ஸ்வதர்மம் என்பது அதுவே. ஸ்வதர்மத்தைக் கையாளுதலே ஸ்வதர்மத்தை விட்டொழிப்பதற்கு உற்ற உபாயம். நோய் வந்தால் அது தன் வேலையைச் செய்ய இடங் கொடுப்பதே அதை ஒழிப்பதற்கு உபாயமாகிறது. நோயை அடக்கினால் வேறு ஒரு நோயாக அது வடிவெடுக்கும். வந்துள்ள நோய் உடலில் வேலை செய்தால் அந்நோய் ஓய்ந்து அறவே அகன்றுபோம். நாம் எடுத்துக்கொண்ட ஸ்வதர்மம் அத்தகையது. ஸ்வதர்மத்தைக் கையாண்டு அதன் வேகத்தை ஒழித்து விடுவது நம் குறிக்கோள். மழைபெய்து மேகம் ஒழிந்துபோனால் எஞ்சியிருப்பது வெட்டவெளி. பற்றற்று தர்மம் செய்து தர்மத்தை ஒழித்துவிட்டால் எஞ்சியிருப்பது சுத்த சைதன்யமாகிய ஆத்ம சொரூபம்.
தனக்கு அன்னியமானதெல்லாம் தன்னை வந்து சாரும் பொழுது அது அழுக்கு அல்லது பாபம் ஆகிறது. ஜீவபோதம் பெற்றிருப்பது பாபம்; அது தனது நிஜ சொரூபமல்ல. கடலுக்குள் வந்த நதியின் நதித்தன்மையை நீக்கிவிட்டுக் கடலின் தன்மையைப் பெறும்படி அது செய்துவைக்கிறது. பரமாத்மாவை சரணடைந்த ஜீவனிடத்திருந்து ஜீவபோதம் என்ற பாபத்தை அகற்றிவிட்டு பரபோதத்தை அது வழங்குகிறது. ஜீவபோதத்திலிருந்து விடுதலை யடைவதே மோக்ஷமாம். பரமாத்மா அமிர்த சொரூபம்; அதனுள் அழிவு என்பதில்லை. அது பரமானந்தம். ஆக, அதனுள் துன்பமில்லை. அது பரஞானச்சுடர் ; ஆக, அதனுள் அக்ஞான இருள் இல்லை. சத்தியம், ஞானம், ஆனந்தம் பிரம்மம். அந்தக்கரணம் அகன்றபின் ஜீவன் பிரம்மமே.
கோழைத்தனத்தை அகற்று ; ஆண்மையுடன் எழுந்திரு; உன் கடமையைச் செய் என்ற கருத்துடன் கீதா ஆசாரியன் கீதையைத் துவக்கினான். உன் கடமைகளை யெல்லாம் நீத்து விட்டு எனது அகண்ட சத் சித் ஆனந்த சொரூபத்தில் திளைத்திருப்பாயாக என்று கீதாசாரியன் முடிவு கூறினான். இடையில் பகர்ந்துள்ள யாவும் கர்மத்தைக் கடப்பதற்கு உற்ற உபாயங்களாம். அவனைச் சரணடைந்து, அவன் அருளை நாடி நிற்பவர்க்கு அவனருளால் அவனுடைய போதனையும் நன்கு விளங்கும். பிறகு ஜீவபோதத்தைக் கலைத்துவிட்டு அவனுடைய அகண்ட ஸத் சித் ஆனந்த சொரூபத்தில் இரண்டறக் கலத்தலும் எளிதாகின்றது.
பரிபூரண சரணாகதியின் தன்மை எப்படிப்பட்டது? களைப்படைந்தவன், அன்றைய வேலையை முடித்த பிறகு தலையணையின் மீது சாய்ந்துகொண்டு, நிம்மதியாய்ப் புகைச் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆனந்த நிலையைப் போன்றது அது. துயரமும் துன்பமும் இல்லாத நிலையாகும் அது.
இத்துடன் கீதா உபதேசம் முற்றுப் பெறுகிறது. இந்தக் கீதா சாஸ்திரத்தைப் படித்தும் அனுஷ்டித்தும் பயன் அடைய வல்ல அதிகாரி யார் என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :
67. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
ந சாஸுஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்யஸூயதி
தே இதம் கதாசந-உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும், அதபஸ்காய-தவமிலாதோனுக்கும், அபக்தாய ச-பக்தியில்லாதோனுக்கும், அஸுஸ்ரூஷவே-கேட்க விரும்பாதோனுக்கும், ய: மாம் அப்யஸூயதி-என்பால் பொறாமையுடையோனுக்கும், ந வாச்யம்-சொல்லாதே.
பொருள் : இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.
வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் அடங்கப் பெற்றது பகவத்கீதை. அதை முறையாக எல்லார்க்கும் எடுத்து வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தியமையும். ஆனால் இதை யாருக்குப் புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான் பண்ணுகிறார். கண்ணில்லாதவர்க்குச் சித்திரம் பயன்படாதது போன்று தவம் அல்லது நெறியான வாழ்க்கையில்லாதவர்களுக்குக் கீதோபதேசம் பெரும் பயன் அளிக்காது. வெறும் தவம் மட்டும் போதாது. அது பக்தியோடு கூடியதாயிருக்க வேண்டும். பக்தியே தவத்தைத் தூயதாக்குகிறது. பிறகு பக்தியின் அறிகுறியாக சேவை வந்தமைகிறது. ஈசனிடத்தும் உயிர்களிடத்தும் விருப்பமிருக்குமளவே தொண்டுபுரிய ஒருவன் துணிகிறான். தோன்றாத் துணையாயுள்ள ஈசுவர பக்தி பண்ணுகிறவர்களுள் தோற்றத்தில் வந்துள்ள கிருஷ்ணனைச் சாமான்ய மனிதன் என்று இகழ்பவர் உண்டு. பலவிதச் செருக்கும் தேகாத்ம புத்தியும் உடையவர்கள் அக்காலத்தில் இருந்ததுபோன்று எக்காலத்திலும் இருக்கிறார்கள். அப்படி அகங்கரிக்கிறவர்கள் கீதையின் உட்கருத்தை அறிந்துகொள்ளமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு அதைப் புகட்டுவது பயன்படாது. அசுச்ரூஷவே என்பது கேட்க விருப்பமில்லாதவனுக்கு என்றும் பொருள்படுகிறது. தன்னைப்பற்றிய பெரிதாக நினைத்துக்கொண்டோ அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டோ இதை ஊக்கத்தோடு கேட்க மனமில்லாதவனுக்கு இதை உபதேசிக்கலாகாது.
மழைத்தண்ணீர் மேட்டுநிலத்தில் தங்கிநிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஓடிவந்துவிடுகிறது. அதுபோல ஈசுவர கிருபையானது தற்பெருமையும், கர்வமுமுள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கிநிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தில்தான் அது தங்கிநிற்கும்.
ஈசுவர கைங்கரியமாக கீதா பிரசாரம் செய்பவன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது:
68. ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:
ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி, இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை), மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ, மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான், அஸம்ஸய:-ஐயமில்லை.
பொருள் : இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.
மனிதன் பிறர்க்கு எதை எடுத்து மனமுவந்து வழங்குகிறானோ அது அவனுக்குச் சொந்தமாகிறது. தனக்கென்று எதைப் பிடித்து வைக்கிறானோ அது சொந்தமாவதில்லை. உடலுக்கு இன்றியமையாத ஒன்றை முதல் சான்றாக எடுத்துக்கொள்வோம். உணவு இல்லாது யாரும் உயிர்வாழ முடியாது. உணவைத் தனக்கென்று தேடிவைத்துக் கொள்ளுதல் உயிர்களிடத்து அமைந்துள்ள இயல்பு. ஒருவன் பிறர்க்கு உணவு வழங்கிப் பிறகு தான் உண்கிறான். மற்றொருவன் பிறரைப்பற்றி ஒன்றும் நினையாது தனக்கென்றே தேடிவைத்து உண்கிறான். இவ் இருவருள் பிறரைப்பற்றி நினைப்பவன் அடைகிற உடல் நலனை மற்றவன் அடையமாட்டான். இதை ஒவ்வொருவனும் தன் சொந்த அனுபவத்தில் காணலாம்.
அடுத்தபடியாக அறிவுக்கு உரியது கல்வி. கற்பவர்களுள் நன்கு கற்பவன் யார் என்ற கேள்வி எழுகிறது. தனக்கு என்று கற்பவனைவிடப் பிறர்க்குப் பயன்படுமாறு புகட்டுதற்குக் கற்பவன் நன்கு கற்கிறான். பிறர்க்குப் புகட்டும்பொழுதெல்லாம் தனது அறிவு தெளிவடைகிறது. பிறர்க்கு ஒரு விஷயத்தை விளங்கச் செய்யுமளவு தனக்கே அது நன்கு விளங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்குமளவு நீர் ஊறுவதுபோன்று கல்வியைப் புகட்டுமளவு ஒருவனிடத்துக் கல்வி வளர்கிறது.
பகவத் விஷயங்களைப் பக்தர்களிடத்து பக்தி விசுவாசத்தோடு எடுத்தோதுவதே பகவத் சேவையாகிறது. தன்னை ஓர் ஆசாரியன் என்று அத்தகையவன் அகங்கரிப்பதில்லை. அகங்காரம் கொள்கிறவனுக்கு பக்தி பெருகுவதில்லை. பகவத் மகிமையானது நல்லார்க்கிடையில் பேசப்பெறுகிறது என்று இன்புறுபவனுக்கு அன்பும் அறிவும் வளர்கின்றன. அத்தகைய பேச்சாளன் பணிவுடன் செய்யும் பகவத் கைங்கரியமாக அது கருதப்படுகிறது. கடவுளை அடைதலே அதில் விளையும் பயனாகும்.
பகவான், பாகவதம் (சாஸ்திரங்கள்), பக்தர்கள் இவையாவும் ஒன்றேயாம்.
சாஸ்திரங்களின் உட்கருத்தை நல்லாரிடம் பரப்புபவனைக் கடவுள் எப்படிப் பொள்படுத்துகிறார்? விடை வருகிறது:
69. ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரியக்ருத்தம:
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி
தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம-அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன், மநுஷ்யேஷு கஸ்சித் ச ந-மானிடருள்ளே வேறில்லை, புவி தஸ்மாத் மே-உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு, ப்ரியதர: அந்ய:-எனக்கு உகந்தவன் வேறு எவனும், ந பவிதா-ஆக மாட்டான்.
பொருள் : மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.
எல்லாச் செயல்களும் இறைவனுடைய செயல்களே. இயற்கை விளக்குவதெல்லாம் இறைவனுடைய மகிமையையேயாம். அவ்விளக்கங்கள் அனைத்திலும் பகவத் கீதையின் விளக்கம் தனிப்பெருமை பெற்றுள்ளது. இயற்கையின் சிறப்பை அது விளக்குகிறது. வாழ்க்கைத் தத்துவத்தை அது விவரித்துச் சொல்லுகிறது. அனைத்துக்கம் மூலப்பொருள் எது என்பதை அது இயம்புகிறது. பரவித்தை அபரவித்தை ஆகிய இரண்டும் கீதையில் அடங்கியிருக்கின்றன. அதாவது கடவுளை அடைதற்கான வழியும் இவ்வுலக வாழ்க்கையை நன்கு நடாத்துதற்கான வழியும் கீதையினால் புகட்டப்படுகின்றன. அதன் போதனையைக் கேட்டு அதன்படி நடப்பவன் விரைவில் நல்லான் ஆவது திண்ணம். ஆகவே தக்கார்க்கிடையிலே கீதா தத்துவத்தைப் புகட்டுதற்கொப்பான செயல் வேறு எதுவுமில்லை. அப்படிப் புகட்டுபவனைப் போன்று கடவுளுக்குச் சொந்தமானவனும் வேறு யாருமில்லை. கடவுளின் மகிமை அவன் மூலம் நன்கு வெளியாவதே அதற்குக் காரணமாகிறது.
வீட்டுக் கூரையின் மேலிருந்து விழும் மழை ஜலம் புலித்தலை போன்ற குழாயின் மூலமாகக் கீழே தரையில் விழும்போது, பார்வைக்குப் புலித்தலையினின்றும் விழுவதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது ஆகாயத்திலிருந்து விழுகிறது. அதுபோல, தெய்விகம் வாய்ந்த மனிதர்கள் கூறும் உபதேச மொழிகள் பார்வைக்குக் கேவலம் மனிதர்களிடமிருந்து வருவனவாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் ஈசுவர ஸன்னிதியினின்றே வருகின்றன.
பிறர்க்கு எடுத்துப் புகட்ட இயலாதவர்க்கும் கீதையின்பால் ஒரு கடமையுண்டு. அது யாதெனின் விடை வருகிறது :
70. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:
இமம் ஆவயோ: தர்ம்யம் ஸம்வாதம்-நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை, ய: அத்யேஷ்யதே-எவன் கற்றறிகிறானோ, தேந ச அஹம்-அவனாலும் நான், ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம்-ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன், இதி மே மதி:-இஃதென் கொள்கை.
பொருள் : நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.
கேள்வியால் கீதையை அறிந்துகொள்வது போன்று சொந்த ஆராய்ச்சியாலும் கீதையை அறிய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். கீதையை ஓதி அறிவது பகவத் விஷயத்தை அறிவதாகிறது. பகவத் விஷயத்தை நன்கு அறிந்தவனே பகவானை வழுத்த வல்லவனாகிறான். உண்மையை அறிந்து அதற்கேற்ற பிரகாரம் வாழுதல் சிறந்த பிரசாரமாகிறது. வாழ்க்கையைப்பற்றிய மேலாம் தத்துவத்தை உபதேசிப்பவன் ஒருவன் இருக்கிறான். அக்கோட்பாட்டின்படி வாழ்பவன் மற்றொருவன் இருக்கிறான். இவ்விருவருள் நல்வாழ்வு வாழ்பவனே நல்ல பிரசாரம் செய்கிறான். நல்ல பேச்சைவிடச் சிறந்தது நல்ல பழக்கம். பேசுபவர் ஏராளமாயிருக்கின்றனர்; நல்வாழ்வு வாழ்பவர் மிகச் சிலரே. கீதையை ஓதும் அவர்களது நல்வாழ்வு மற்றவர்களை நல்வழியில் தூண்டுகிறது. ஆக, அது ஞான யக்ஞ ஆராதனை என்னும் பெயர் பெறுகிறது.
தனக்குத் தானே கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு இயலவில்லை. அப்பொழுது அவன் என் செய்வது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது :
71. ஸ்ரத்தாவாநநஸூயஸ்ச ஸ்ருணுயாதபி யோ நர:
ஸோऽபி முக்த: ஸுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்
ய: நர:-எந்த மனிதன், ஸ்ரத்தாவாந்-நம்பிக்கை உடையவனாக, அநஸூய: ச-பொறாமை போக்கியவனாக, ஸ்ருணுயாத் அபி-கேட்பது மட்டுமே செய்வானெனினும், ஸ: அபி முக்த:-அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்யகர்மணாம் ஸுபாந் லோகாந்-புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை, ப்ராப்நுயாத்-எய்துவான்.
பொருள் : நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.
உணவை அலட்சியப்படுத்துபவன் தனது உடல் வாழ்வை அலட்சியப்படுத்துகிறான். உணவுப் பொருளின் தத்தவத்தை அறிந்து ஒருவன் உணவு உண்கிறான். மற்றொருவன் அதன் தத்துவம் தெரியாது விருப்புடன் அதைப் புசிக்கிறான். அறிந்தவன் அறியாதவன் ஆகிய இருவரும் உணவினின்று பெறும் நன்மை ஒன்றேயாம். அதே விதத்தில் கீதா சாஸ்திரத்தைச் சிரத்தையோடு கேட்டுத் தெரிந்துகொள்பவன் எல்லா நன்மைகளையும் அடைகிறான். பிறர்க்கு எடுத்துப் புகட்டுவதால் அது ஒருவன் மனிதன் நன்கு பதிகிறது. பக்தி விசுவாசத்துடன் கேட்பதால் இன்னொருவன் மனதில் அது பதிகிறது. இருவரும் கீதா தத்துவத்தை அறிந்துகொண்டவர் ஆகின்றனர். மனதுக்கு ஊட்டும் நல்லெண்ணங்களுக்கு சம்ஸ்காரங்கள் என்று பெயர். பகவத் விஷயங்களைக் கேட்பது சம்ஸ்காரங்களுள் சிறந்த சம்ஸ்காரமாகிறது. பக்தி சிரத்தையுடன் கேட்பவன் கீழ்மையினின்று விடுதலையடைந்து முன்னேற்றமடைவது உறுதி.
மாணாக்கனுக்கு எல்லாம் பிடிபட்டு விட்டதாவென்று ஓர்வது ஆசிரியரின் இயல்பு. அக்கோட்பாட்டுக்கு இணங்க பகவான் இப்பொழுது கேட்பதாவது:
72. கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய
பார்த-பார்த்தா, ஏதத் த்வயா ஏகாக்ரேண சேதஸா-உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு, கச்சித் ஸ்ருதம்-கேட்கப் பட்டதா? தநஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ:-தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம், கச்சித் ப்ரநஷ்ட:-அழிந்து விட்டதா?
பொருள் : பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?
ஞானோபதேசம் புகட்டுபவர் புகட்டப் பெறுபவனிடத்து எதை எதிர்பார்க்கிறார் என்பது ஈண்டு விளங்குகிறது. ஒருமை மனது உண்மையைத் தெரிந்துகொள்ளுதற்கு முற்றிலும் அவசியமானது. எவ்வளவு தான் புகட்டினாலும் சிதறடைந்த மனது போதனையின் உட்பொருளைத் தெரிந்துகொள்ளாது. கொஞ்சம் எடுத்துப் புகட்டினாலும் குவிந்த மனது புகட்டப்பெறும் கோட்பாட்டை உள்ளபடி வாங்கிக்கொள்கிறது. புகட்டப்பெறுபவன் அத்தகைய நலன் அடையவேண்டும் என்பதே புகட்டுபவரது எண்ணம்.
குவிந்த மனது ஞானத்துக்கு உரியதாகிறது. சூரியகிரணங்கள் குவிந்து வருமளவு அவை பேரொளி பெறுகின்றன. ஒளிப்பிழம்பு மற்றப் பொருள்களையும் விளக்க வல்லது; தன்னையும் அது சர்வகாலமும் விளக்கிக்கொண்டிருக்கிறது. அங்ஙனம் குவிந்த மனது ÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரக்ஞனாகிய பொருள்களை உள்ளபடி தெரிந்துகொள்கிறது. ஞான வெளிச்சமும் அக்ஞான இருளும் ஒன்று சேர்ந்து இருக்கமாட்டா. ஞானவெளிச்சத்தில் பொருள் உள்ளபடி தென்படுகிறது. அக்ஞான இருளில் அதே பொருள் வெவ்வேறு வடிவெடுத்துத் தென்படுகிறது. இருளில் தென்பட்ட ஒரு வடிவத்தைத் திருடன் போலீஸ்காரன் என்று நினைத்தான். அதே வடிவத்தைப் போலீஸ்காரன் திருடன் என்று எண்ணினான். அச்சம் கொண்ட ஒருவன் அவ்வடிவத்தைப் பிசாசு என்று பொருள்படுத்தினான். வெளிச்சத்தில் அதை ஏற்கனவே பார்த்திருந்த ஒரு விவேகி அத்தகைய மயக்கம் ஒன்றும் கொள்ளவில்லை. அதை ஒரு மரக்கட்டை என்று உள்ளபடி ஓர்ந்தான். ஞானோதயம் பிறந்திருக்குமிடத்து அக்ஞான ஸம்மோஹம் தானே அகன்றுபோகிறது. அத்தகைய தெளிந்த நிலை அர்ஜுனனுக்கு வந்துவிட்டதாவென்று பகவான் வினவுகிறார்.
நல்லாசிரியரை அடையும் தலைமாணாக்கன் அடையப்பெறும் தகைமையானது அர்ஜுனனுடைய விடையிலிருந்து வெளியாகிறது :
அர்ஜுந உவாச
73. நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத
ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ
அர்ஜுந உவாச அச்யுத!-அர்ஜுனன் சொல்லுகிறான், அச்சுதா, த்வத்ப்ரஸாதாத் மோஹ: நஷ்ட:-நின்னருளாலே மயக்கம் அழிந்தது, மயா ஸ்ம்ருதி: லப்தா-நான் நினைவு அடைந்தேன், கதஸந்தேஹ: ஸ்தித: அஸ்மி-ஐயம் விலகி நிற்கிறேன், தவ வசநம் கரிஷ்யே-நீ செய்யச் சொல்வது செய்வேன்.
பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.
போர் புரியமாட்டேன் என்று சொல்லித் தேர்த் தட்டின் மீது அர்ஜுனன் சும்மா இருந்துவிட்டான். அப்படிச் சும்மா இருந்தவன் உபதேசம் கேட்ட பிறகு ஒரு சிறந்த செயலைச் செய்தான். மிச்சமின்றித் தன்னை மாதவனிடம் ஒப்படைக்கலாயினான். விறகுக்கட்டையானது பச்சையாயிருந்தாலும் உலர்ந்திருந்தாலும் தன்னைத் தீயினிடம் ஒப்படைத்தால் அது தானே அக்கினி சொரூபத்தை யடைகிறது. அங்ஙனம் அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு சிஷ்யன் ஆனான். பிரபத்தியும் பண்ணலானான். அதாவது மேலும் நிகழ்வது எதுவானாலும் தான் கண்ணனிடமிருந்து பின் வாங்குவதில்லை; அதைப்பற்றி நினைப்பதும் இல்லையென்று முடிவு கட்டினான். தீயில் குதிக்கின்ற விட்டில் பூச்சி அதன் விளைவைப்பற்றி நினைப்பதில்லை. பகவானிடம் பிரபத்தி பண்ணுபவன் மனநிலை அத்தகையது. செயற்கரிய அச்செயலை தனஞ்ஜயன் செய்தான்.
அத்தகையவனுக்கு கீதோபதேசம் நிகழ்ந்தது. அது நல்லார் அனைவருக்கும் நலம் தரும் அருள் விருந்து. எக்காலத்துக்கும் உதவுகிற இன்னமுது என்று அதை இயம்பவேண்டும். பெரு வாழ்வுக்கு அதுவே உற்றதுணை. பிறவிப்பிணியைப் போக்கவல்ல அருமருந்து அது. ஆனால் உலகில் ஒருவர்க்காக ஆயத்தப்படுத்தும் அரிய பொருள் ஒன்று வேறு யாருக்கோ உதவுவதாக முடிந்துவிடுவதுண்டு. ஓர் இடத்தில் மேகம் கூடி மற்றோர் இடத்தில் போய் அது பொழிவது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்து போவதைக் காண்கிறோம். கீதா சாஸ்திரம் அப்படிப் போய்விடவில்லை. ஒருவன் பொருட்டு உதித்த அந்த அருள் வெள்ளம் உலகனைத்துக்கும் யாண்டும் அருட்பேறு ஆயிற்று. யாருக்காக அந்த ஆரமுது உதயமாயிற்றோ அவன் அதை வாய்மடுத்து உண்டு பெரும் பேறு பெறலானான். அதன் விளைவை இங்குக் காண்கிறோம். இதுவரையில் அக்ஞானத்திலிருந்த அர்ஜுனன் பெரியதொரு வாக்குமூலம் பண்ணுகிறான். அவன் பெற்றபேறு எது என்பதை அந்த வாக்குமூலமே நிரூபிக்கிறது. அவன் வாயினின்று வந்த ஒவ்வொரு சொல்லிலும் பொருள் ஏராளமாகப் புதைந்து கிடக்கிறது :
அச்யுதா என்று தன்னை ஆட்கொண்டவனை அவன் அழைக்கிறான். அச்யுதன் என்பது பெருநிலையினின்று பிறழாதவன் எனப் பொருள்படுகிறது. தீயில் குதித்த வீட்டில் பூச்சி தீயின் செயலுக்கு இரையாகிறது. அச்யுதனிடம் அடைக்கலம் புகுபவன் தானும் பிறவி என்னம் படுகுழியில் வீழாத பெருநிலையடைவனன்றோ! அர்ஜுனன் பெற்ற பேறு அதுவே.
மோஹ: நஷ்ட :- மோகம் அழிந்து ஒழிந்தது, அல்லது மயக்கம் போய்விட்டது என்பது முதல் வாக்குமூலம். மயக்கம் வரும்பொழுது நடுப்பகலில் விண்ணில் நக்ஷத்திரம் தென்படும். வாமனன் போன்ற சிறிய ஆள் ஈரடியாலே மூவுலகளக்கும் பெரிய ஆள்போன்று அவனுக்குத் தென்படுவான். அத்தகைய மயக்கம் அர்ஜுனனைப் பிடித்திருந்தது. இவ்வுலக வாழ்வு அவனுக்கு ஒரு பெரிய தலைச்சுமையாகத் தோன்றியது. அதைக் கீழே இறக்கிவைக்கவும் முடியவில்லை; தூக்கிக்கொண்டு நடக்கவும் இயலவில்லை. இப்படித் தனக்குத்தானே அவன் கற்பித்துக்கொண்டிருந்த மயக்கம் ஒழிந்தது.
ஸ்ம்ருதி: மயா லப்தா - ஞாபகம் என்னால் அடையப் பெற்றுள்ளது என்பது இரண்டாவது வாக்குமூலம். மயங்கியிருப்பவனுக்கு, தான் எங்கு, எக்காரணத்தால், எந்நிலையில் இருக்கிறான் என்பது விளங்காது. மயக்கம் தெளிந்த பிறகே உண்மையான ஞாபகம் வருகிறது. தான் ஏன் மண்ணில் கிடந்தான் என்பதைப் பிறகு சிந்திக்கிறான்; எதைப் பிதற்றினான் என்று விசாரிக்கிறான். பின்பு அதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தன் எதார்த்த நிலையைப் பற்றி நினைவு கூர்கிறான். தனது பேரியல்பைப்பற்றிய ஞாபகம் இப்பொழுது அர்ஜுனனுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஜீவனும் மயக்கத்தால் ஜனன மரணங்களுக்கு ஆளாயினான். சித்த சுத்தியடைந்த பிறகு உறுதியான ஞாபகம் வருகிறது. அது தனக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள இணக்கத்தைப்பற்றிய ஞாபகமாம். ஜீவன் எத்தகைய பெருநிலைக்குரியவன் என்பதை அந்த ஞாபகம் விளக்குகிறது.
த்வத் ப்ரஸாதாத் - உமது பிரசாதத்தால் அல்லது உமது அருளால் என்பது மூன்றாவது வாக்குமூலம். மயங்கிக் கிடந்த ஒருவனை மற்றொருவன் கிருபைகூர்ந்து, நீர் தெளித்து, விசிறி வீசிப் பிரக்ஞைக்குக் கொண்டு வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அச்செயல் சாமானியமானதன்று. அது பாராட்டுதற்குரிய பெருஞ்செயலாம். ஈண்டு அர்ஜுனனுக்கு மயக்கம் தெளிந்ததும், தனது மேலாம் சொரூப ஞாபகம் வந்ததும் தன் சுயப் பிரயத்தனத்தாலன்று. அது சுயப்பிரயத்தனம் என்று எண்ணி அவன் செருக்குறலாகாது. அது கண்ணனது காருண்யத்தால் விளைந்தது. குந்தியின் மகன் அதற்குக் கடப்பாடு உடையவன் ஆனான். முழுமனதோடு அதை எடுத்து அவன் மொழிந்துகொள்கிறான். ஜீவாத்மா பரபோதம் பெறும்போது அது பரம்பொருளின் பேரருள் என்று இயம்புகிறான். தன் முயற்சியின் சிறுமையும், அவனருளின் பெருமையும் அப்பொழுது உள்ளபடி அவனுக்கு விளங்குகிறது.
ஸ்தித: அஸ்மி- உறுதியாய் இருக்கிறேன் என்பது இதன் பொருள். இது நான்காவது வாக்குமூலம். புயல் காற்றும் பெருமழையும் சேர்ந்து வந்தமையுங்கால் மரம், செடி, கொடியெல்லாம் அசைகின்றன, ஒடிகின்றன வேருடன் பெயர்த்து எடுக்கப்படுகின்றன. அந்நிலைமையில் அவைகளுள் உறுதி பெற்றிருப்பது ஒன்றுமில்லை. பூமியில் உள்ள மண்ணும் பறித்தெடுக்கப்படுகிறது. ஆனால் மலையொன்றோ இதற்கெல்லாம் அசைவதில்லை. அது உறுதியாக நிற்கிறது. ஞானம் அங்ஙனம் உறுதி பெற வேண்டும். அத்தகைய ஞானம் அடையப்பெற்றவன் ஸ்திதப் பிரக்ஞன் எனப்படுகிறான். அர்ஜுனன் இப்பொழுது ஸ்திதப் பிரக்ஞன் ஆய் உள்ளான். தன் சொரூபத்தைப்பற்றி இப்பொழுது அவன் கொண்டுள்ள பேரறிவை யாரும் கலைத்துவிடமுடியாது. பரஞானம் அடையப்பெற்றபின் அது மறைந்துவிட்டுப் போவதில்லை.
கத ஸந்தேஹ : - சந்தேகங்கள் போய்விட்டன. இது ஐந்தாவது வாக்குமூலம். ஆத்ம சொரூபத்தை அனுபூதி வாயிலாக சாக்ஷõத்கரித்தவனுக்கு அதைப்பற்றி ஐயம் உண்டாவதில்லை. இன்னும் உயிரோடிருக்கும் ஒருவனுக்குத் தன் உயிர் வாழ்க்கையைப் பற்றி எப்படிச் சந்தேகம் உண்டாவதில்லையோ அப்படி அனுபூதி பெற்றவனுக்கு ஆத்ம சொரூபத்தைப்பற்றிச் சந்தேகம் வருவதில்லை.
தவ வசனம் கரிஷ்யே என்பது உமது சொற்படி செய்வேன் என்று பொருள்படுகிறது. இது கடைசி வாக்குமூலம். அவன் எதைச் செய்ய ஆரம்பத்தில் மறுத்தானோ, அதைச் செய்ய இப்பொழுது துணிந்தான். செய்வது இன்னதென்று இப்பொழுது விளங்கிற்று. மெய்ஞ்ஞானம் பெற்றதே அதற்குக் காரணமாயிற்று. சாஸ்திரம் புகட்டுவதும், குரு கிருபை புரிவதும், சாதகன் அனுபவ பூர்வமாகப் பெறுவதும் முடிந்த நிலையில் ஒன்றுபட்டு நிற்கின்றன.
தவளைக்குஞ்சினுடைய வால் விழுந்ததும் அது தண்ணீரிலும் தரையிலும் வாழக்கூடும். அக்ஞானமாகிய வால் மனிதனிடமிருந்து விழுந்துவிட்டால் அவனுக்க முக்தியுண்டாகிறது. அப்போது அவன் கடவுளிடத்தும், அதுபோலவே உலகத்தினிடத்தும் நன்கு வாழக்கூடியவனாகிறான்.
ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன ஸம்வாதம் இத்துடன் முடிவடைகிறது. இனி, இது மற்ற சம்பவங்களுடன் தொடர்வு பெறுவது மேலும் சில சுலோகங்களில் விளக்கப்படுகிறது :
ஸஞ்ஜய உவாச
74. இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:
ஸம்வாதமிமமஸ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்
ஸஞ்ஜய உவாச-சஞ்சயன் சொல்லுகிறான், இதி அஹம்-இப்படி நான், வாஸுதேவஸ்ய மஹாத்மந: பார்தஸ்ய ச-வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும், இமம் அத்புதம் ரோமஹர்ஷணம்-இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும், ஸம்வாதம் அஸ்ரௌஷம்-உரையாடலைக் கேட்டேன்.
பொருள் : சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.
உள்ளத்தில் பேருணர்ச்சி உண்டானால் மயிர்க்கூச்செடுக்கிறது. நல்லது கெட்டது இரண்டும் உடலில் மயிர் சிலிர்க்கச் செய்யும். பொதுவாக நல்ல விஷயந்தான் நல்லவர்களுக்கு இப்படிப் புளகாங்கிதம் உண்டாகும்படி செய்யும். பேசுபவனாகிய கிருஷ்ணன், பேசப்படுபவனாகிய அர்ஜுனன், பேசும் விஷயமாகிய கீதா தத்துவம் ஆகிய இம்மூன்றும் சேர்ந்து ஸஞ்ஜயன்பால் புளகாங்கிதம் உண்டாக்கியதில் வியப்பொன்றுமில்லை. திருதராஷ்டிரனுக்கு அது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதற்குச் சரித்திரமே சான்றாயிருக்கிறது.
அர்ஜுனனை மகாத்மாவென்று மொழிவதன் மூலம் அவன் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுபவர்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
தொலைவில் போர்க்களத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பாஷணையைக் கேட்க ஸஞ்ஜயனுக்கு எப்படி முடிந்தது என்ற கேள்வி பிறக்கிறது. அதற்கு விடை வருகிறது :
75. வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்
யோகம் யோகேஸ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷõத்கதயத: ஸ்வயம்
யோகேஸ்வராத் க்ருஷ்ணாத்-யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து, பரம் குஹ்யம்-பரம ரகசியமான, ஏதத் யோகம் ஸ்வயம்-இந்த யோகத்தை தான், ஸாக்ஷõத் கதயத:-நேராகவே சொல்லும்போது, அஹம் வ்யாஸப்ரஸாதாத்-நான் வியாசனருளால், ஸ்ருதவாந்-கேட்டேன்.
பொருள் : யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.
ஸஞ்ஜயனுக்கு ஞானக் கண்ணை வழங்கியவர் வியாசர். ஆகையால் கிருஷ்ணனுடைய திவ்விய தர்சனத்தைப் பெறவும் விச்வரூப தர்சனத்தைப் பெறவும் அவர் பகர்ந்ததை யெல்லாம் அப்படியே கேட்கவும் அவனுக்கு இயன்றது. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன் படுவதுபோன்று தான் பெற்ற பேறு யாது, அது யாருடைய அனுக்கிரகத்தால் ஆயிற்று என்பதை சஞ்ஜயன் தெரிவிக்கிறான்.
அது பெரும்பேறு என்பதற்கு அத்தாட்சி மேலும் வருகிறது :
76. ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்
கேஸவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:
ராஜந்-அரசனே, கேஸவார்ஜுநயோ:-கேசவ அர்ஜுனரின், அத்புதம் புண்யம் ச இமம் ஸம்வாதம்-வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை, ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து, முஹுர்முஹு:-மீண்டும் மீண்டும், ஹ்ருஷ்யாமி-மகிழ்கிறேன்.
பொருள் : அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.
ஸஞ்ஜயன் அடைந்த மகிழ்வு சாஸ்திரத்தின் மகிமையைக் குறிக்கிறது. நலத்தை அடையப்பெற்ற நல்லார் அந்த நலத்தினின்று உலப்பிலா ஆனந்தத்தை அடைவது இயல்பு.
77. தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந:
ராஜந்-அரசனே! ஹரே: அதி அத்புதம்-ஹரியின் மிகவும் அற்புதமான, தத் ரூபம் ச-அந்த ரூபத்தை, ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய-நினைத்து நினைத்து, மே மஹாந் விஸ்மய:-எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது, ச புந: புந: ஹ்ருஷ்யாமி-மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.
பொருள் : அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.
பல யோகிகளுக்கும் பக்தர்களுக்கும் காண்பதற்கரிய விசுவரூப தரிசனத்தைத் தற்செயலாய் ஸஞ்ஜயன் கண்டான். சூழ்நிலையால் சிலருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் இது மிகப்பெரியது. விசுவரூப தரிசனத்தின் ஒரு சிறு பகுதியைக் காணாத ஜீவன் ஜகத்தில் இல்லை. வியப்புக்குரியதும் மனதை மேல் நிலைக்குக் கொண்டு போகக் கூடியதும் எதுவானாலும் அது இறைவனுடைய மகிமையேயாம். ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தகைய காட்சிகள் கிடைக்கின்றன. பெரும்பாலார்க்கு அவைகளைப் பயன்படுத்தும் வழி தெரிகிறதில்லை. திரும்பத் திரும்ப அக்காட்சிகளைப் பற்றி நினைப்பது ஒருவித தியானமாகும். மனது அதனால் நன்கு பண்படுகிறது. தனது மனதை உயிர்நிலைக்குக் கொண்டுபோன காட்சி எதுவென்று சாதகன் ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதை பக்தியுடன் ஞாபகத்துக்குக் கொண்டு வரவேண்டும்.
78. யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம
யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ண:-எங்கு யோகக் கடவுள் கண்ணனும், யத்ர தநுர்தர: பார்த:-எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ, தத்ர ஸ்ரீ: விஜய: பூதி:-அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும், த்ருவா நீதி-நிலை தவறாத நீதியும் (இருக்கும்),
மம மதி:-என் உறுதியான கருத்து (இது).
பொருள் : கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்? அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.
இது ஸஞ்ஜயனுடைய சொந்த அபிப்பிராயம் என்றாலும் சிறந்த கீதை தத்துவங்களில் இதுவும் ஒன்றாகும். கண்ணன் யோகேசுவரனாதலால் புருஷார்த்தங்களெல்லாம் அவன் மூலம் நிறைவேறுகின்றன. தர்மம், அதர்மம், காமம், மோக்ஷம் ஆகிய நான்கில் ஜீவாத்மாவுக்கு எது வாய்க்கப்பெற்றாலும் அது யோகமாகிறது. அவைகளுள் சிறப்பாயுள்ள மோக்ஷத்தைக் கிருபைகூர்ந்து வழங்க வல்லவன் கிருஷ்ணன். முதல் அத்தியாயத்தில் தனுசைத் தூர எறிந்து விட்டவனாக அர்ஜுனன் காட்சி கொடுத்தான். முயற்சியற்ற அல்லது முயற்சி குன்றிய வாழ்க்கையை அது எடுத்துக் காட்டுவதாகும். இப்பொழுது காண்டீவம் என்னும் வில்லை ஏந்திய அர்ஜுனன் காட்சி கொடுக்கிறான். கிருஷ்ணனுடைய யோக வல்லமையும் பார்த்தனுடைய பராக்கிரமமும் சேர்ந்து ஆகாத காரியத்தை ஆக்குவிக்கும். இதைக் கேட்ட பிறகாவது திருதராஷ்டிரனுக்கு மனது மாறியிருக்கவேண்டும் ! அதாவது தன் பிள்ளைகளுக்கு வெற்றியுண்டாகாது; உயிர் நஷ்டமும், பொருள் நஷ்டமும் ஏற்படுவது உறுதி. அதைத் தடுக்க ஒருவிதத்தில் சமாதானம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் வந்திருக்கவேண்டும். ஆனால் அவிவேகமே வடிவெடுத்திருப்பவனுக்கு அது ஒன்றும் விளங்காது. கடவுளே அருகிலிருந்து கொண்டு செய்கிற செயலும் அவனுக்குப் புலப்படாது.
தெய்வத்தின் சகாயமும் மனிதனுடைய நேர்மையான முயற்சியும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். மனிதனுக்கு ஆகவேண்டியதை யெல்லாம் தெய்வம் செய்துவைக்கும் என்று நினைத்துக் கொண்டு தன் முயற்சியை நிறுத்திவிடலாகாது. பிறகு துர்யோதனன் கூட்டம் செய்தது போன்று ஈசுவரனது திட்டத்தைப் புறக்கணித்துவிட்டுத் தனது சொந்த முயற்சியால் எல்லாம் ஆய்விடும் என்று கருதி வினையாற்றலாகாது. யாண்டும் கடவுளைச் சார்ந்திருந்து தன் கடமையைக் கடவுள் பொருட்டு முழுமனதுடன் செய்யவேண்டும்.
கார் இருளில் கண் தெரியாது. பேர் ஒளியிலும் கண் தெரியாது. கண்தெரியாமையை முன்னிட்டுக் கார் இருளையும் பேர் ஒளியையும் ஒன்றாகக் கருதலாகாது. தமோ குணத்தில் புதைந்து கிடப்பவன் வினையாற்ற மாட்டான். சத்வகுணத்தில் நிலைத்திருப்பவன் வினையாற்றுவதில்லை. அதை முன்னிட்டு அவர்கள் இருவரும் ஒப்பாகமாட்டார்கள். தேகம் எடுத்திருப்பவன் தேகம் இருக்கும் வரையில் நல்வினையாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வினையை ஈசுவர ஆராதனையாகச் செய்ய வேண்டும். அதனால் ஞான முதிர்ச்சி தானே வந்தமைகிறது. இகம் பரம் ஆகிய இரண்டிலும் வாழ்க்கையின் குறிக்கோள் இனிது நிறைவேறுகிறது. பாரமார்த்திக வாழ்வின் பெயரால் சோம்பித் திரிபவனும், சமுதாயத்துக்கு வெறும் சுமையாக வாழ்ந்திருப்பவனும் கீதா தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகார். தூக்கி வினையாற்றுபவனே வேதாந்தம் அறிந்தவனாகிறான்.
ஸ்ரீ என்பது இங்கு ராஜ்யலக்ஷ்மி. எடுத்துக்கொண்ட காரியங்களெல்லாம் ஈசுவர சங்கற்பத்துக்கு உட்பட்டவைகளாக இருக்கவேண்டும். அப்பொழுது விஜயம் அல்லது வெற்றி நிச்சயமாக வந்தமையும். அதற்குமேல் நல்ல முயற்சியுடையவனுக்குச் செல்வமும் சீரும் சிறப்பும் வளரும். வெற்றியையும் ஆக்கத்தையும் முன்னிட்டுக் கடவுளை நம்பியிருப்பவன் முறைதவறி நடந்து கொள்ளமாட்டான். நேர்மையையும், நிலைத்த நீதியையும், தெளிந்த ராஜ தர்மத்தையும் அவனிடத்துக் காணலாம்.
ஈசுவர கிருபையும் ஜீவப்பிரயத்தனமும் ஒன்று சேருமானால் இகபரமிரண்டுக்கும் அவை நல்ல சாதனமாகின்றன. அவைகளின் சேர்க்கையே சிறந்த யோகமாகிறது. மற்ற யோகங்களெல்லாம் அதினின்று உருவெடுக்கின்றன. ஈசுவர கிருபை சந்ததமும் நம் பொருட்டுக் காத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாம் நேர்மையாக முயற்சி செய்வது ஒன்றே பாக்கி. இப்பொழுதே முயலுவது முறை.
சூரிய வெளிச்சம் எங்கும் சமமாய் வீழ்கிறது; ஆனால் ஜலம், கண்ணாடி, மெருகிட்ட உலோகம் இவைபோன்ற வஸ்துக்களில் அவ்வெளிச்சம் நன்றாகப் பிரதிபலிக்கின்றது. அதுபோலத்தான் தெய்விக ஒளியும். அது எல்லாரிடத்தும் சமமாயும் பாரபக்ஷமின்றியும் வருகின்றது. என்றாலும் ந்லலாருடைய தூய மனமும், ஸாதுக்களுடைய இருதயமுமே அவ்வொளியை நன்றாய்ப் பிரதிபலிக்கச் செய்கின்றன.
பகவத் பக்திகொண்ட பரிசுத்த பக்தர்களுக்காகவே பகவான் உலகத்தில் அவதாரம் செய்கின்றார். அவதார புருஷரோடு வருபவர்கள் நித்தியமுக்தர்களாவார்கள்; அல்லது கடைசி ஜன்மம் எடுத்தவர்களாவார்கள்.
இதி ஸ்ரீமஹாபாரதே சதஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம்வையா
ஸிக்யாம் பீஷ்மபர்வணி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன
ஸம்வாதே மோக்ஷஸந்யாஸயோகோ நாம
அஷ்டாதசோऽத்யாய:
வியாசர் இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய மஹாபாரதத்தில், பீஷ்மபருவத்தில், பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் மோக்ஷ ஸந்யாஸ யோகம் என்ற பதினெட்டாம் அத்தியாயம்.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.