FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 12, 2025, 05:37:04 PM

Title: கவலைகளை களை எடுங்கள்....
Post by: MysteRy on June 12, 2025, 05:37:04 PM
(https://i.imgur.com/d0ACSKm.jpeg)


🌿ஒருவன் தன் நிழல் ஏன் கூடவே வருகிறது? அதை எப்படியாவது விரட்டியடிக்க வேண்டும் என விரும்புகிறான். என்ன செய்தாலும் அவனால் தன் நிழலை விரட்டவே முடியவில்லை. நிழலை விரட்ட இருட்டுக்குள் போய்விடுவது ஒரு வழியாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால், அவனுக்கு இருட்டு என்றால் பயம். வெளிச்சத்திலும் வாழவேண்டும்; ஆனால் நிழலும் இருக்கக் கூடாது என நினைத்தான். அவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. தன் நிழலை புதைத்துவிட்டால் என்னவென்று நினைத்து, ஓர் ஆளை அழைத்து குழி தோண்ட வைத்தான். மேட்டில் நின்று கொண்டு, தன் நிழல் குழியில் விழும்போது மண்ணை போட்டு மூடினான். பெரிய புதைமேடு உருவானது. ' நல்லவேளை நிழலை புதைத்துவிட்டேன்…’ என சந்தோஷமாக நினைத்தபோது புதைமேட்டின் மீது அவனது நிழல் தெரிந்தது. பாவம் அவன் ஏமாந்து போனான் . நிழலைப் புதைக்க முயன்ற மனிதனை போன்றதே கவலையை ஒழிக்க முயற்சிப்பதும்.

கவலையே இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். ஆனால், கவலைகளின் கூடாரமாகவே பலர் இங்கு வாழ்கிறார்கள்.

கவலைதான் கோபமாகிறது. கவலைதான் பொறாமையாகிறது... கவலைதான் இயலாமையாகிறது... கவலைதான் குரோதமாகிறது...

 கவலைகள் பல்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. மனதில் ஒரு கவலை தீரும்போது, இன்னொரு கவலை உருவாகிவிடுகிறது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான கவலை நம்மைப் பற்றிக் கொள்கிறது. நாளை விடுமுறையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்கிற கவலை சிறார்களுக்கு...
கடனை எப்படி அடைப்பது?
எப்போது வீடு வாங்குவது?
எப்போது கார் வாங்குவது?
 திருமணம் எப்போது நடக்கும் என ஆளுக்கு ஒரு விதமான கவலை.

தன் கவலைகளை யாரிடமாவது கொட்டிவிடவே பெரும்பான்மையினர் முயற்சிக்கிறார்கள். தேடிப் போய் கவலைகளை பரிமாறுகிறார்கள். ஒருவர் தனது கவலையை மறக்க நிறைய சாப்பிடுவார். எதற்காக சாப்பாட்டில் இவ்வளவு ஆர்வம் எனக் கேட்டால், ''மனசு நிறைய கவலையிருக்கு சார்; அதை மறைக்கிறதுக்கு இப்படி எதையாவது செய்ய வேண்டியிருக்கு…’’ என்பார்.
இன்னொருவர் கவலையாக இருக்கிறது…’ என்று சொல்லி சாப்பிடவே மாட்டார். வற்புறுத்தினால் ஒரு இட்லி அல்லது ஒரு டம்ளர் பால் இவ்வளவே அவரது ஒருநாள் உணவு. ஒருவர் அப்படி; மற்றவர் இப்படி. இருவரும் கவலையால் பீடிக்கப்பட்டவர்களே. நம் கவலைக்கு சிலர் காரணமாக இருப்பதைப் போல, சிலரது கவலைக்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். கவலைகொள்வது அலாரத்தில் மணி அடிப்பதைப் போன்றது. நாம்தான் அந்த அலாரத்தை செட் செய்து வைத்திருக்கிறோம். அது அடிக்கும்போது சத்தமாக ஒலிக்க வேண்டும் என்று ரெடி செய்திருக்கிறோம். அலாரம் அடிக்கும்போது நமக்கு அது பிடிக்கவில்லை என்றால், தவறு யார் மீது? எந்த அலாரமும் தானே அடித்துக் கொள்வதில்லையே...

எப்போதுமே நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகளை நமக்கு சொல்லிவிடுகிறது. நாம்தான் அதைக் கேட்காமல் அலட்சியப்படுத்துகிறோம். வீண் எதிர்ப்பார்ப்புகளை, பொய்யான நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். அல்லது குருட்டு அதிர்ஷ்டத்தை எதிர்ப்பார்க்கிறோம். நாம் ஏமாற்றப்படும்போதோ, நாம் நினைத்தபடி நடக்காதபோதோ, விரும்பியது கிடைக்காதபோதோ நாம் கவலைப்படுகிறோம். அப்போது நாம், ' அப்பவே நினைச்சேன்’ என நமக்குள் சொல்லிக் கொள்ளவே செய்கிறோம். அது மனம் சொன்னதை கேட்காமல் விட்டுவிட்டோம் என்பதன் அறிகுறியே.

சந்தோஷத்தை உண்டாக்கவும், பகிரவும் தெரியாமல் போவதே கவலை கொள்வதற்கான காரணம். உங்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் நீங்கள் செய்யும் வேலை சிறியதாக இருக்கக் கூடாது. எவ்வளவு சிறப்பாக செயலை செய்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். நிறைவான வேலை செய்துவிட்டவனுக்கு கவலைகள் தோன்றாது. நமக்கு எது தேவை என்பதைப் போலவே, எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் பலன்கள் மட்டுமே தீர்வு கிடையாது. சில தீர்வுகள் நாம் அறியாத வடிவத்தில் அறியாத விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேரக்கூடும் என்பதை உணர முயற்சியுங்கள். உண்மையில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் எதிரி இருக்கிறான். அவன் நாம் விரும்பாததை நம்மைக் கொண்டே செய்ய வைக்கிறான். அவனைக் கண்டறிவதும், அவன் உருவாகும் விதம் பற்றி ஆராய்வதுமே கவலையை விரட்டுவதற்கான வழிகள்.  எதிர்பார்ப்புகள் யாவும் எளிதாக நிறைவேறுவதில்லை என்ற உண்மையைத்தான் கவலைகள் புலப்படுத்துகின்றன.

வறுமையும், நோயும், உடற்குறைபாடுகளும் ஏற்படுத்திய கவலைகளைத் தாண்டி எத்தனையோ மனிதர்கள் அரும்பெரும் சாதனைகள் செய்திருக்கிறார்கள். ஒருவரது சந்தோஷம் மற்றவருக்குத் தொற்றிக் கொள்வதில்லை. ஆனால், கவலைகள் உடனே தொற்றிக் கொண்டு விடுகின்றன.

🌿

வயல் இருக்கும் வரை களைகள் முளைக்கவே செய்யும். களைகளைக் கண்டறிந்து பிடுங்கி எறிவது தானே புத்திசாலித்தனம். ஆனந்தம் எனும் பூஞ்சோலை ஆரோக்கியமாக நிலைக்க கவலைகளை களை எடுங்கள்.