FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: சாக்ரடீஸ் on June 03, 2025, 11:08:38 PM
-
(https://i.ibb.co/2L0PbZw/20250603-224414.jpg) (https://ibb.co/9fm2MZJ)
JUNE - 03 - 2025
தலைவா ❣️
நீ நின்றபோதும், சக்கர நாற்காலியில் நகர்ந்தபோதும், மெரினாவில் ஓய்வெடுக்கும்போதும், உன் பெயரை உச்சரிக்காமல் இங்கு எவனாலும் அரசியல் செய்ய முடியாது. தமிழினத்தை ஒற்றை மனிதராகக் காத்த கலைஞரின் பிறந்தநாளில், மகிழ்ந்து நினைவு கூர்வோம்.
ஏன் கலைஞருக்கு இத்தனை விமர்சனங்கள், வன்மம், துரோகம்? காரணம், பெரியார் மற்றும் அண்ணாவின் சமூகநீதிக் கொள்கைகளை தமிழ்நாட்டில் ஓரங்கட்ட நினைத்தவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கியவர் கலைஞர். அவர் மறைந்த பின்னும், அவரது எண்ணங்கள் ஒரு சித்தாந்தமாக வாழ்கிறது.
இது அரிது ! பல அரசியல் தலைவர்கள் வரலாற்றில் அடிக்குறிப்புகளாக மட்டுமே இருக்க, கலைஞர் ஒரு கலாச்சார சீர்திருத்தவாதியாக, தமிழினத்தின் அத்தியாயமாக இன்றும் திகழ்கிறார்.
ஓய்வறியா சூரியன்! இனத்தின் மீது தீராக் காதல், மொழியின் மீது அளவற்ற பற்று, தொலைநோக்கு சிந்தனை, கொள்கைகளில் உறுதி, எதற்கும் அஞ்சாத மனம், எதிரிகளை நடுங்க வைக்கும் செயல், "என்னைப்போல் எவனும் இல்லை" எனும் தன்மானம் !
நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனக்கு பெருமிதம்!
கலைஞர் வாழ்க !
-
(https://i.ibb.co/hJqdgfWF/1000211646.jpg) (https://ibb.co/5g7j1F8h)
JUNE - 03 - 2026
என் தலைவர் கலைஞர், என் பெருமை, என் உணர்வு.
சில மனிதர்களை நாம் அரசியல் தலைவர்களாக மட்டுமே பார்க்க முடியும். சிலரை நல்ல பேச்சாளர்களாக ரசிக்க முடியும். ஆனால் சிலர் மட்டும் நம் மனதுக்குள் ஒரு உணர்வாக வாழ்ந்து விடுவார்கள். எனக்கு அப்படிப்பட்டவர் கலைஞர்.
அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது அவரது துணிச்சல். மிரட்டல்களுக்கு தலைகுனியாத மனம், அழுத்தங்களுக்கு அடிபணியாத குணம், எதிர்ப்புகளுக்கு அஞ்சாத தைரியம், தமிழர் உரிமையில் பின்வாங்காத உறுதி. அதுதான் கலைஞர்.
அவர் சந்தித்த சோதனைகளையும் நெருக்கடிகளையும் நினைத்துப் பார்க்கும்போது இன்று கூட வியப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு அரசியல் தாக்குதல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தும், மீண்டும் மீண்டும் எழுந்து நின்ற ஒரு மனிதரை வரலாற்றில் காண்பது அரிது. வேறு யாராக இருந்திருந்தாலும் காணாமல் போயிருப்பார்கள். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் முன்பைவிட வலிமையாக திரும்பி வந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியை இழந்த போதும் துவண்டு போகாமல், மீண்டும் எழுந்து வந்து எதிரிகளை கலங்கடித்த இயக்கத்தை கட்டிக்காத்த தலைவர் அவர். அதனால்தான் கலைஞர் ஒரு தலைவர் மட்டுமல்ல, ஒரு சகாப்தம்.
அவரது பேனா பிடித்தால் தமிழ் பேசும் என்று சொல்வார்கள். அது மிகையல்ல. அவர் எழுதிய வார்த்தைகளில் தமிழ் இருந்தது. அவர் பேசிய பேச்சுகளில் தமிழ் இனத்தின் உணர்வு இருந்தது. அவர் மேடை ஏறினால் தமிழகம் கேட்கும் என்பதற்கு காரணம் அவரது குரலில் இருந்த உண்மையும் உறுதியும் தான்.
அந்தக் குரலில் அப்படி என்ன மாயம் இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அந்தக் குரலைக் கேட்கும்போது ஒரு நெகிழ்ச்சி ஏற்படுகிறது. அரசியல் எல்லைகளைக் கடந்து ஒரு தலைவரை நேசிக்க வைத்த குரல் அது.
ஒப்பனை செய்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம், கற்பனையில் கூட யாரும் முத்தமிழ் அறிஞர் கலைஞராக முடியாது என்ற வரிகள் என் மனதில் ஆழமாக பதிந்தவை. ஏனெனில் கலைஞர் என்பது ஒரு பெயர் அல்ல, அது உழைப்பு, போராட்டம், அறிவு, தமிழ், சமூகநீதி மற்றும் மக்கள் நலம் ஆகியவற்றின் மொத்த உருவம்.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவர் செய்த சாதனைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாது. தமிழ் வெல்லும் என்ற அவரது தாரக மந்திரம் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் உலகத் தமிழர்களின் இதயங்களில் கலைஞரின் நினைவும் புகழும் நிலைத்திருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
கலைஞரை என் தலைவர் என்று அழைப்பதில் நான் என்றென்றும் பெருமை கொள்வேன். அவர் மீதான அன்பும் விசுவாசமும் எனக்கு என்றுமே குறையாது. காலம் மாறலாம், தலைமுறைகள் மாறலாம். ஆனால் என் மனதில் கலைஞருக்கான இடம் மட்டும் மாறாது.
வாழ்க கலைஞரின் புகழ்.
என்றும் என் தலைவர், என்றும் என் பெருமை, என்றென்றும் கலைஞர்.