FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on April 29, 2025, 11:38:10 AM

Title: மண்ணில் கால் ஊன்றி நடந்தால் மனம், உடல் நலம் பெறும்......
Post by: MysteRy on April 29, 2025, 11:38:10 AM
(https://i.imgur.com/qV3KJBn.jpeg)

வெறும் காலில் நடக்கும் பயிற்சி என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல், அதாவது இயற்கையான மேற்பரப்பில் கால்களில் எதையும் அணியாமல் நடைபயிற்சி செய்வது. இதை ஆங்கிலத்தில் எர்த்திங் என கூறுவர்.

வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது முறையான ரத்த ஓட்டத்துக்கும் நலவாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவவியல் அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.

காலணி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடக்கும்போது ஏற்படும் உடம்பில் ஏற்படும் மாற்றம் பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சுகாதார நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் பூமியில் வெறும் கால்களுடன் நடப்பதால் பல நன்மைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பூமி இயற்கையாகவே எதிர் மின்னணு (நெகடிவ் சார்ஜ்) கொண்டது. கால்களை ஒவ்வொருமுறையும் இயற்கையான மேற்பரப்பில் பதிக்கும் பொழுது கால்களுக்கும் பூமியில் உள்ள எலெக்ட்ரான்களுக்கும் இடையில் ஏற்படும் பிணைப்பு உடல் நலனை மேம்படுத்துகிறது.

உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராகப் பராமரிக்கப்படுகிறது.

மேலும், வெறும் கால்களுடன் பூமியில் நடக்கும்போது உடல் அணுக்களைப் பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது. அதாவது உடலுக்கு நேரடியாகப் பூமியில் இருந்து வைட்டமின் சி கிடைக்கிறது. எலும்பு, கல்லீரல், மூளை போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு நோய்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

கடற்கரை மணலில் நடப்பது கால்களுக்கு நல்ல உடற்பயிற்சி. படம்: இணையம்
வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் மன அழுத்தம், உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

தொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் மண்ணுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், ரத்த ஓட்டம் சீராகவும் பராமரிக்கப்படுகிறது. இதனால் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது. மிக முக்கியமாக ரத்த சிவப்பு அணுக்களின் மேற்பரப்பின் சக்தியை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் ரத்த அணுக்கள் குவிவது தவிர்க்கப்படுகின்றன. இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கப்படுகிறது.

வெறும் கால்களில் நடப்பது மூளையில் மின்மாற்றத்தை மாற்றி அமைத்து சீர் ஆக்குகிறது எனக் கண்டறிந்துள்ளது.

மண்தரை, புல் தரையில் நடப்பது மனதுக்கும் உடலுக்கும் இதமளிக்கும். படம்: இணையம்
மேலும் சில ஆய்வுகளில், வெறும் கால்களில் நடப்பதால், தோல் பராமரிப்புத் திறன், மிதமான இதயத் துடிப்பு, மன அழுத்தத்தை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல நன்மைகள் விளைவதாகத் தெரிய வருகிறது.

ஒருநாளுக்கு குறைந்தது அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற்கொள்வதால் புற்றுநோயின் ஆபத்தை குறைக்க முடியும். இதய நலத்தை மேம்படுத்தலாம். உடற்பருமன், நீரிழிவு பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். ரத்த ஆக்சிஜனேஷன், சுழற்சி, நோயெதிர்ப்பு, நச்சு நீக்குதல், மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற பலன்களையும் பெறலாம்.

மேலும் உடற் சூட்டை குறைத்து தூக்கத்தை அதிகப்படுத்துவதாகவும் மன உளைச்சலைக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தோட்டத்திலோ, பூங்காவிலோ, கடற்கரையிலோ வெறும் காலுடன் நடக்கலாம்.

கரடு முரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் பெறுகின்றது. இது உடலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்து இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இதயம், சிறுநீரகம் முதலிய எல்லா உறுப்புகளுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை வேகப்படுத்தும்.

ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கிறது. நரம்பு மற்றும் எலும்பு மண்டலமும் வலுவடைகிறது.

வீட்டுக்கு வெளியே வெறும் கால்களால் நடக்கும்போது அவை நன்மைகளைக் கொடுத்தாலும் கால்களில் காயங்கள், தொற்றுகள் ஏற்படும் ஆபத்தும் உண்டு.

சிறிய முள், கல், குச்சி, கம்பி, கண்ணாடி போன்றவை குத்தலாம். கழிவுகளைத் தெரியாமல் மிதித்துவிடலாம்.

அதனால் சுத்தமான இடங்களில் பார்த்து நடப்பது முக்கியம்.

நடந்தபின்னர் கால்களை இளம் சூடான நீரில் சுத்தமாகக் கழுவித் துடைப்பது முக்கியம்.

கால்களில் காயம், புண் இருப்பவர்கள் வெறுங்காலில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.