FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on April 16, 2025, 08:26:11 PM
-
(https://i.imgur.com/tHSwGcC.jpeg)
-----------------------------------------
சினம்-வெகுளி என்று சொல்லப்படும் கோப உணர்வு என்னுள் எப்போதும் மிகைத்து நிற்கும் மன உணர்வு.
செல்லா இடத்தும்- அதாவது பணிக்காலத்தில் மேலதிகாரிகள் இடத்து சினங்கொண்டும், அதன் விளைவாக இடருற்றதும்- அந்த இடரின் எதிர்வினையாக சினம் எளிதாகச் செல்லும் இடமாகிய மனைவி மக்களிடம் காட்டியதும் எனது வாழ்வில் நான் கண்ட துயரமான அனுபவங்கள்.
இப்போது எல்லாம் ஓய்ந்த நிலையில் கோபம் குறித்த ஒரு சிந்தனை:
-----------------------------------------
"கோபத்தில் கண் மண் தெரியாமல் செய்து விட்டேன்" என வருத்தப் பட்டு சொல்வோரை நாம் நித்தம் பார்க்கிறோம்.
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்.."
" காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்.." என வள்ளுவம் குறிப்பிடுவதில், அறநெறி சார்ந்த வாழ்வில் ஒதுக்க வேண்டியதில் வெகுளி எனும் கோபமும் ஒன்றாகும்.
கோபம், மனித சுபாவங்களில்- மன உணர்வுகளில் ஒன்றாகும்.
நாம் எதிர்பார்ப்பவை நிறைவேறாத போதும், நம்முடைய ஆசைகள் நிராசையாகும் போதும் குரோதமாகிறது.
கோபம் என்பது மன உளைச்சலின்- மனவலியின் வெளிப்பாடாகும்.
மனவலிகள் யாவும் ஏமாந்து போன எதிர்பார்ப்புகள்;
தகர்ந்து போன மனக்கோட்டைகள்;
அடக்கி வைத்த ஆசைகள்;
நிறைவேறாத திட்டங்கள்.
அவையாவும் உள்ளே வலிகளாகத் தேங்கிக் கிடக்கின்றன.
அவற்றை யாராவது சீண்டினால் அவை வெடித்து கோபமாகி விடுகிறது.
நம்மிடமுள்ள வெறிக்குணமே கோபமாக வெளிப்படுகிறது.
சாதாரண மனநிலையில் இருக்கும் போது நாம் நடந்து கொள்ளும் முறைக்கும், கோபமாக இருக்கும் போது நாம் நடந்து கொள்ளும் முறைக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நம் சொந்த அனுபவத்திலே உணர்கிறோம்.
பேச்சு காரசாரமாகி விடும்.
நம் கை கால்கள் நீண்டு, அடிதடியென செயல்கள் முரட்டுத்தனமாகி விடும்.
நாம் எப்போதுமே கோப உணர்வு கூடாது என்று தான் நமக்கும், ஊருக்கும் உபதேசம் செய்து கொண்டிருக்கிறோம்.
கோப வயப்படக் கூடாது என்று தான் நினைக்கிறோம்.
ஆனாலும் கோபம் வராமல் இருப்பதில்லை.
அதைக் கடந்து செல்லவும் முடிவதில்லை.
ஆம்! கோபம் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லையே.
நம்மைக் கேட்டோ அல்லது நாம் இஷ்டப்படியோ கோபம் கொள்ள முடிவதில்லை.
நம் அனுமதியின்றி- நம்முடைய அறிவழிந்த நிலையில்தான் தானாகப் பொங்கி எழுகிறது.
அதை அடக்குவது என்பது அவ்வமயம் நம்மால் முடியாத காரியமாக இருக்கிறது.
கோபம் கொண்டவர்க்கு அறிவு முற்றிலும் வேலை செய்யாது.
நாகரிகம், பண்பாடு ஏதும் இருக்காது.
தனது தகுதியை முற்றிலும் மறந்து விடும்.
தாய், தந்தை, பெரியோர் இவர்களைத் தம்மிலும் மூத்தோர் என்று பாராது அவமதிக்கும் அளவிற்கு மனிதர்களைக் குருடர்கள் ஆக்கிவிடும்.
கோபத்தை அடக்க முடியாது என்றால் பின் என்னதான் செய்வது?
வாக்கு, பாணி, பாதம், பாயுறு, உபத்தம் எனும்- அதாவது வாய், கை, கால், எருவாய், கருவாய் எனும் ஐந்து கர்மேந்திரியங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க பழக வேண்டும்.
கோபப்படுங்கள்.
ஆனால் கோபத்தில் எதையும் பேச வேண்டாம்;
செய்ய வேண்டாம்.
உடலால் ( வாய், கை மற்றும் கால்) எந்த செயலையும் செய்யாமல் இருக்கப் பழகுங்கள்.
கோபம் உள்ளத்தில் இருக்கலாம்; ஆனால் செயல் வடிவம் தர வேண்டாம்.
" நான் இப்போது கோபமாக இருக்கிறேன்; கொஞ்ச நேரம் கழித்து பேசுகிறேன்" என்று சொல்லி கோபத்தில் ஏதும் செய்யாமல் இருப்பதே கோபத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி.
கோபம் கொள்வதில் தவறில்லை.
கோபத்தில் எதையாவது செய்வதுதான் தப்பு.
கோபத்தில் இருக்கும் போது எந்தக் காரியத்தையும் செய்வதைத் தவிர்த்து, கோபம் தணிந்த பின்னர் செயலில் ஈடுபடுவதே நல்லது.
கோபத்தில் பெரும்பாலும் வாய்தான் பேசும்.
சிலருக்கு கையும் காலும் பேசும்.
இரண்டுமே ஆபத்தானவை; அநாகரிகமானவை.
கைகால்கள் பேசுவதை விட, வாய்ப்பேச்சு ஆழமான ரணத்தை- வடுவை உண்டாக்கி விடும்.
"தீயினால் சுட்டபுண் உள்ஆறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
-திருக்குறள்.129
கோபம் வந்தால் பேசாமல் இருப்பதே நல்லது.
இவ்வளவு சொல்லியும் கோபம் வந்தால் என்ன செய்வது?
"உங்களில் ஒருவருக்குக் கோபம் வந்து விடுமாயின், அவர் நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து கொள்ளவும்.
கோபம் அடங்கிவிட்டால் நல்லது.
இல்லாவிடில் படுத்துக் கொள்ளவும்."
- அண்ணல் நபி
கொஞ்சம் ஆழ்ந்து சிந்தனை செய்து பாருங்கள்.
🔥👂🌹 திருவாளர் தென்னம்பட்டு ஏகாம்பரம் ஐயாவின் பதிவில் இருந்து