FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on April 12, 2025, 02:37:01 PM

Title: அரசு ஊழியர்களும் மக்களும்...
Post by: MysteRy on April 12, 2025, 02:37:01 PM
(https://i.imgur.com/lngl5Ga.jpeg)


1. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால், மக்களுக்கு முழுநேர பணி செய்ய அரசாங்கத்தால் நியமிக்கப் படுபவர்கள்தான் அரசு ஊழியர்கள் எனப்படுபவர்கள். இங்கு எஜமான்கள் எல்லாவிதத்திலும் மக்களே. ஆனால் நிஜ வாழ்வில் மக்கள் எல்லா விதத்திலும் அரசு ஊழியர்களால் அடிமைகளைவிட மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

2. பட்டா வாங்க கிராம அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என்று மாதக்கணக்கில் அலைந்து வேதனையின் உச்ச கட்டத்துக்கு செல்லும் மக்களைக் காண்கிறோம். பல இளைஞர்கள் இந்த வேதனையைப் பார்த்து அசையா சொத்து வாங்கும் விருப்பத்தையே கைவிட்டு விடுகிறார்கள்.

3. பத்திரப் பதிவு அலுவலகம் சென்றால் பத்திர பதிவு செய்ய சொத்தின் விலையின் அடிப்படையில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

4. தங்களுக்கு ஏற்படும் அநீதியை எழுத்து வடிவில் போலீசிடம் கொடுத்தவன் ‘போதுமடா சாமி... இனி வாழ்வில் இந்த பக்கமே வர மாட்டேன்’ என்று ஓடுகிறான்.

5. முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு எழுதும் மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நடவடிக்கைக்கு அனுப்பப்படுகின்றன. பல முறைகள் மனுக்கள் நடவடிக்கை இன்றி மாதக் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. அரசு ஊழியர்கள், முதலமைச்சர் அலுவலக கடிதம் என்று விசேச முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பொது மக்கள் இதைத் தட்டிக் கேட்டால் மேலும் கடினமான துன்பத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

6. ஒரு அரசு அதிகாரி தான் பணியில் இருந்த போது நேர்மையாக இருந்ததாகவும், லஞ்சம் வாங்கியதில்லை என்றும் மேடைதோறும் பேசுகிறார். அரசு பணியில் இருக்கும் ஒவ்வொருவரும் நேர்மையாக பணியாற்ற வேண்டியது அவரவர் கடமை. இதில் பெருமை பேசுவதற்கு என்ன இருக்கிறது? இதில் இருந்து என்ன தெரிகிறது?

7. நமது அரசு அலுவலகங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உள்ள அதே நிலையில் தொடர்கின்றன. நாம் மேலும் ஒரு படி முன்னால் போய் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அரசியல் சட்ட பாதுகாப்பு கொடுத்துள்ளோம். இன்று அமுலில் உள்ள சட்ட விதிகளின் படி ஒரு அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பது மிகக் கடினம். அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் நல்ல ஒரு வழக்கறிஞர் துணையுடன் தப்பிக்கும் வாய்ப்பும் மிக அதிகம். அதுதான் சட்ட நிலை. அரசு ஊழியர்களது மெத்தனப் போக்கிற்கு இது ஒரு முக்கிய காரணம்.

8. அரசு ஊழியர்கள் அவர்களது ஒற்றுமையாலும், சக்தி வாய்ந்த யூனியனாலும் தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலைக்கு வளர்ந்திருக்கிறார்கள்.

9. வெந்த புண்ணில் வேல் பாய்த்தது  போல இவர்களை தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தனது நிரந்தர வாக்கு வங்கியாக உருவாக்கி வைத்துள்ளது. இவர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் தட்டிக் கேட்பார்களா? இது மக்களுக்கு இழைக்கும் பெரிய துரோகம் ஆகாதா?

10. மொத்தத்தில் அரசு ஊழியர்கள் மக்களிடம் இருந்து முற்றிலும் விலகி சுக வாழ்க்கை வாழும் எஜமானர்களாகவும், மக்கள் அவர்களை எந்த கேள்வியும் கேட்க முடியாத அடிமைகளாகவும் வாழ்கிறார்கள்.

இந்த நிலை எப்போது மாறும்?