FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on March 25, 2025, 11:46:12 AM

Title: மயில்... 🦚🦚🦚
Post by: MysteRy on March 25, 2025, 11:46:12 AM
(https://i.imgur.com/r7FLjrF.jpeg)


நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில்.  இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் ‘Pavo cristatus’ என்பதாகும். பறவைகள் அனைத்திலுமே பார்க்க மிக மிக அழகானது மயில். அது தன் மின்னும் நீலப் பச்சை வண்ணத்திலும் சரி, தோகை விரித்தாடும் அதன் நடன நளினத்திலும் சரி ஈடு இணையற்ற ஒரு பறவை.

ஆணும் பெண்ணும் வண்ணத்தில் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருக்கும்.  ஆனால் ஆண் பறவைக்கு மட்டும் தான் தோகை உண்டு.  தோகை என்பது வால் சிறகுகளின் மேல் வளரும் குச்சி போல் சுமார் இரெண்டடி முதல் மூன்றடி வரை நீளமுள்ள இறகுகள்.  இந்தத் தோகை இறகுகளில் தான் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் ‘மயில் கண்கள்’ இருக்கும்.  இந்தக் ‘கண்கள்’ வண்ண மிக்க மெல்லிய சிறகுகளால் ஆனவை.  தோகை விரித்தாடும்போது இந்தக் கண்கள் ஆங்காங்கே மிக அழகாகத் தெரியும். நம் அனைவர் மனத்தையும் கவரும் கண்ணன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது அவன் தலையை அலங்கரிக்கும் அழகிய மயில் கண் கொண்ட இறகுகள்தானே.

மயில் ஆடுவது நாம் பார்த்து ரசிப்பதற்காக அல்ல.  அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய காலத்தில் துணைதனை வசியம் செய்வதற்காக ஆடுகிறது.
ஆண் மயில் ஆடும்போது அதன் பின்னே சாதாரணமாக நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் சிறகுகளை விரித்துக் கொண்டு மெதுவாக இப்படியும் அப்படியுமாகத் திரும்பும் வகையில் சிறு அடிகளை எடுத்து வைக்கும்.  அவ்வப்போது தன் தோகை சிறகுகளை பட பட வெனத் துடிப்பது போல ஆட்டும்.  இது கணகளுக்கு விருந்தாக இருக்கும்.

கண்களுக்கு விருந்தளிக்கும் மயிலின் குரலோ காதுகளுக்கு மிக நாராசமான ஒன்று.  காடுகளில் அதிகாலையில் “மே..யாவ் மே..யாவ்” என மயில் கத்துவது காட்டையே
அதிர வைக்கும். இவை அதிகாலையில் மட்டும் கத்தும் என்பதில்லை.  புலி சிறுத்தை போன்ற மிருகங்கள் பதுங்கிப் பதுங்கி புதர்களில் மறைந்து செல்லும்போது மயில்கள் அவற்றுக்கு மேலாக மரத்துக்கு மரம் பறந்து சென்று “மே..யாவ் மே..யாவ்” என்று கத்தி மற்ற மிருகங்களுக்கு புலி சிறுத்தை பற்றித் தகவல் அறிவிக்கும்.

மயில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் ஒரு பறவை.  ஒரு கூட்டத்தில் ஒரு ஆணும் நான்கைந்து பெண் பறவைகளுமாக வாழும்.  முற்றிலும் வளர்ச்சியடையாத பறவைகள் ஒரே இனக் கூட்டங்களாக வசிப்பதும் உண்டு. மயில் புதர்கள் அடியே சிறிய பள்ளம் செய்து அதில் சுள்ளிகள் இலைகள் இவற்றைச் சேர்த்து திறந்த கூடமைத்து அதில்  ஒரு கிண்ணப் பாலிலே இரண்டு சொட்டு காப்பிக் கஷாயம் விட்டது போன்ற வெளிர் பழுப்பு நிறத்தில் மூன்று முட்டைகளை இடும்.  முட்டைகளை அடை காப்பது பெண் மயிலே. மயில் தரையில் தன் உணவைத் தேடும். உண்பது தானியங்கள், புழு, பூச்சிகள், பல்லி, ஓணான், பாம்பு எனப் பல வகையாகும்.

இந்துக்கள் வணங்கும் முருகக் கடவுளின் வாகனம் மயில்.

மயிலினத்தில் மற்றொரு வகையும் உண்டு.  அதன் நிறம் பால் வெள்ளை.
வெள்ளை மயில்
மயில் இந்தியாவின் தேசீயப் பறவை. அப்படி இருந்தும் மயிலைக் கொல்பவர் அனேகம்.  மயிலுக்கு முதல் எதிரி அதன் அழகிய தோகைப் பீலிகள்.  இதை வைத்து கை விசிறிகள் தயாரிக்க பலர் மயில்களைக் கொல்கின்றனர்.  இரண்டாவது எதிரி இதன் ரத்தத்திலிருந்து தயாரிக்கப் படும் தைலமும் மயில் உடல் கொழுப்பும் பல வியாதிகளுக்கு மருந்து என நாட்டில் பரவியுள்ள தவறான நம்பிக்கைகள்.  மயில்கள் அழிவதை நாம் தடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததியினர் இவ்வளவு அழகிய ஒரு பறவையை படங்களில் தான் பார்க்க வேண்டி வரும்.

இந்திய மயிலுக்கு நீல மயில் என்றொரு பெயரும் உண்டு.  காரணம் இதன் நிறம் மின்னும் நீலப் பச்சை.  இந்தொனேசியா, பர்மா இங்கெல்லாம் காணப்படும் மயில் பச்சை வண்ணம் கொண்டது என்பதால் அது பச்சை பயில் என்றழைக்கப் படுகிறது. வெள்ளை மயில் வெள்ளைப் புலி போன்று நீல மயிலின் மறுவிய தோற்றமே என்றெண்ணப் படுகிறது.

நீல மயிலினை ஒரே கூண்டில் நான்கைந்து மயில்களை ஒன்றாக வைத்து வளர்க்க முடியும்.  பச்சை மயிலை அவ்வாறு வளர்க்க முடியாதாம்.  காரணம் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு இறந்து விடும் என்பதாம். ஒன்றுபோல் காணப் பட்டாலும் அவற்றுள் தான் எத்தனை வித்தியாசம்..