FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 23, 2024, 07:28:28 PM

Title: காத்திருப்பு !
Post by: joker on December 23, 2024, 07:28:28 PM
ஜன்னல் அருகில் அமர்ந்து
நான் இப்போது
நினைவுகளை
அசைபோட்டு கொண்டிருக்கிறேன்

காலங்கள் பல
உருண்டோடிய பின்னும்
இன்னும் வாழ்க்கை
மீதமிருக்கிறது
வாழ்ந்து தீர்க்க என 

காலத்தின் சுழற்சியில்
மாய்ந்து போகாத
நினைவுகள்

இன்று
இன்னொருவரையுடையதாய்
மாறியிருந்தபோதும்
அந்த முதல் காதலுக்கான
நினைவுகளுக்கு
என்றும் இதய கதவு
திறந்தே இருக்கிறது

சின்ன இதயத்தில்
துளிறிவிட்ட
முதல் காதல் அது

ஒவ்வொரு நாளும்
என் இதயத்தில்
தோன்றும்
உன் புன்னகை முகம்

காதல்
சொன்ன தருணம்
கனவு உலகத்தில்
இருப்பதாய்
உணர்ந்தேன்
இன்றும் அவ்வாறே
உணர்கிறேன்

திருமண அழைப்பிதழை
தரும்போது
நீ ஒரு நடிப்பு அரசி என
உணர்ந்தேன்
இன்று
முதல் காதலை
நினைக்கையில்
நானும் அதற்கு விதிவிலக்கல்ல
என உணர்கிறேன்

அழியாத
உள்ளுணர்வுகளை
தட்டியெழுப்பி
காத்திருக்கிறேன்
உன் நினைவுகளுடன்
கடைசி மூச்சு வரும் வரை


****JOKER****
Title: Re: காத்திருப்பு !
Post by: joker on January 16, 2025, 07:37:45 PM
இன்னுமொருமுறை
உன்னை பார்க்கும் நாள் வரும்
என்றறிந்தால் உனக்கு முன்
நான் அங்கு வந்து காத்திருப்பேன்

அந்த ஒற்றை ரோஜா செடியினூடே
தெரியும் வழியின் மேல்
விழி வைத்து

புகார்களின் குவியலில்
கேள்வி கணைகளை தொடுக்க
தயாராக இருக்கலாம்

இதுவரை
உன்னிடம்
சொல்லப்படாத
அனுபவங்கள் சேர்த்து
எழுதி வைத்ததை
எந்த சலனமுமின்றி
படித்து முடிக்கலாம்
நீ

எஞ்சிருக்கும்
காதலில்
ஏதேனும்
சொல்ல விடுபட்டிருந்தால்
மறக்காமல்
சொல்லிவிடு

வெளிப்படுத்திய
காதலில் அல்லது
நேசத்தில்
ஏதேனும் குறை இருப்பின்
மறக்காமல்
பதிவு செய்ய மறக்காதே

அந்த
கண்களை  ஒருபோதும்
கண்ணீரால் நிரப்பி விடாதே

என்னை
பார்க்க வேண்டுமென
அடம்பிடிக்க வேண்டாம்
உன்னை உள்ளில் வைத்து
மனக்கதவை திறக்கமுடியாதபடி
அடைத்து வைத்திருக்கிறேன்

தயவு செய்து
புன்முறுவல்
செய்யாதே
பதிலுக்கு போலியாய் சிரிக்கக்கூட
மறந்து விட்டன என் இதழ்கள்

முடிந்தால்
சில பூக்களை
கொண்டு வா
நாம் வாழ்ந்தோம்
என்று இவ்விடத்தை
அடையாளப்படுத்திக்கொள்ள

இதோ தெரியும்
ரோஜா செடியை போல தான்
வாழ்க்கை
முள்ளும் பூவும் நிறைந்தது
எனக்கோ
பூவாய் தொடங்கி முள்ளாய்
முடிகிறது
வாழ்க்கை

நன்றி



****JOKER****