FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Anu on April 11, 2012, 02:32:42 PM
-
முன்பெல்லாம் கல்விப்பாடங்களில் உயர்குணங்களை வலியுறுத்தும் பாடல்கள் அதிகம். எல்லா இந்திய மொழிகளிலும் இசையுடன் கூடிய மிக அருமையான பாடல்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருந்ததை நம்மால் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆனால் காலப்போக்கில் அது போன்ற அருமையான பாடல்கள் குறைந்து, மறைந்தே போய் விடும் அவலத்திற்கு நிலைமை வந்திருக்கிறது. ’ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’, ’பா பா ப்ளேக் ஷீப்’ போன்ற ஆங்கிலப் பாடல்களை குழந்தைகள் வாயால் கேட்கின்ற அளவிற்கு நம் பண்பாட்டுப் பாடல்கள் கேட்க முடிவதில்லை. இது மிக மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அது போன்ற பாடல்களில் ஒன்று கன்னட மொழியில் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வரை படித்து மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்த மிக அற்புதமான பாடல். சத்தியமே இறைவன் என்று வாழ்ந்து அதற்காகத் தன் உயிரையும் தரத் துணிந்த புண்யகோடி என்ற பசுவின் கதை அது. “தரணி மண்டல மத்யதொலகே...” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். சத்தியமே இறைவன் என்ற புண்யகோடியின் கதையிது (சத்யவே பகவந்தனெம்ப புண்யகோடி கதையிது!) என்று ஒவ்வொரு பாராவின் இறுதியிலும் முடியும் அந்த பாடலின் கதை இது தான்.
கர்னாடகா மாநிலத்தில் ஒரு செழிப்பான கிராமத்தில் காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன.
அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது. ”புலியே என் கன்று மிகுந்த பசியுடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். நீ எனக்கு சிறிதே சிறிது அவகாசம் கொடுத்தால் நான் அதற்குப் பால் கொடுத்து விட்டு, அனாதையாகப் போகும் என் கன்றை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து விடுகிறேன். பிறகு நீ என்னை உண்டு பசியாறுவாயாக”.
புலி சொன்னது. “நான் சிறிது காலமாக இரை கிடைக்காமல் கடும்பசியோடு இருக்கிறேன். உன்னை விட்டு விட்டால் நீ தப்பித்து விடுவாய். கண்டிப்பாக திரும்பி வர மாட்டாய். உன்னை விடுவதற்கு நான் என்ன முட்டாளா?”
புண்யகோடி உருக்கமாகச் சொன்னது.”புலியே சத்தியமே என் தாய், தந்தை, நட்பு, உறவு எல்லாமே. அப்படி இருக்கையில் நான் சத்தியம் தவறினால் அந்த இறைவனே என்னை மெச்ச மாட்டான். நான் சத்தியம் செய்து சொல்கிறேன். கண்டிப்பாக என் கன்றுக்குக் கடைசியாகப் பால் கொடுத்து விட்டு வருவேன். என்னை நம்பு”
புலிக்கு புண்யகோடியின் உருக்கம் மனதை அசைத்திருக்க வேண்டும். புண்யகோடியைச் செல்ல அனுமதித்தது. புண்யகோடி தன் இருப்பிடத்திற்கு வந்து தன் கன்றிடம் நடந்ததைச் சொல்லி விட்டு சொன்னது. “மகனே கடைசியாக பாலருந்திக் கொள். நான் சீக்கிரம் அந்தப் புலியிடம் செல்ல வேண்டும். வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். இனி எக்காலத்திலும் நீ அந்த வழியில் சென்று அந்தப் புலியிடம் மாட்டிக் கொள்ளாதே. எச்சரிக்கையாக இரு”
பால் குடித்த கன்று பசுவைப் போக அனுமதிக்கவில்லை. ”தாயே இனி எனக்கு பசித்தால் பால் தர யாரிருக்கிறார்கள்? என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? நான் யாருடன் இருப்பேன்? என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விடாதே. நீ இங்கேயே இருந்து விடு”.
அதை ஏற்றுக் கொள்ளாத புண்யகோடி தன் உறவுப் பசுக்களை எல்லாம் அழைத்து உருக்கத்துடன் வேண்டிக் கொண்டது. “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அதனை அனாதையாக்கி விடாதீர்கள். அதனைக் கருணையோடு நடத்துங்கள்”
அந்தப் பசுக்களும் புண்யகோடியைப் போக வேண்டாமென்றன. அங்கேயே இருந்து விடச் சொல்லி வற்புறுத்தின. புண்யகோடி மறுத்து விட்டது. ”இந்த அற்ப வாழ்க்கைக்காக நான் வாக்கு மாற மாட்டேன். இது என் கர்ம பலன். அதனை அனுபவித்தே நான் ஆக வேண்டும். என் குழந்தையை மட்டும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அது போதும்” என்று கிளம்பியது. பசுக்களும், புண்யகோடியின் கன்றும் பெரும் துக்கத்துடன் புண்யகோடியை வழியனுப்பி வைத்தன.
புலியிடம் வந்து நின்ற புண்யகோடி சொன்னது. “புலியே நான் சொன்னபடி வந்து விட்டேன். கடும் பசியுடன் இருந்த உன்னைக் காக்க வைத்து நான் உனக்கு தவறிழைத்து விட்டேன். இனி என்னைத் தின்று நீ பசியாறுவாயாக”
சொல்லி விட்டு அதன் முன் மண்டியிட்டு புண்யகோடி படுத்துக் கொண்டது. அதனையே பார்த்துக் கொண்டிருந்த புலிக்கு புண்யகோடியின் சத்தியம் தவறாமையும், உயர்வான தன்மையும் என்னவோ செய்தன. அந்தக் கணத்தில் மனமாற்றம் அடைந்த புலி சொன்னது. “உன்னைப் போன்ற ஒரு சத்தியம் தவறாத பசுவைக் கொன்று தின்றால் அந்த இறைவனும் என்னை மன்னிக்க மாட்டான். நீ என் சகோதரியைப் போன்றவள். உன்னைத் தின்று உயிர் வாழ்ந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். என்னை மன்னித்து விடு”.
புண்யகோடியைத் தின்று பசியாற விரும்பாமல், பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அற்புதா என்ற அந்தப்புலி மலையுச்சியில் இருந்து கீழே குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டது. புண்யகோடி மீண்டும் தன் இருப்பிடம் திரும்ப அதன் கன்றும், காளிங்கனும், மற்ற பசுக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தன.
கற்பனைக் கதை என்றாலும் பாடல் வரிகளும், அதில் உரையாடல்களில் இருக்கும் அழுத்தமும் கல்லையும் கரைய வைப்பவை. கன்னடம் தெரிந்தவர்கள் இணையத்தில் “punyakoti govinda hadu” அல்லது “punyakoti lyrics” என்ற தேடல்களில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழலாம். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட பாடலை முகமது ரஃபியும் பாடி உள்ளார்.
இது போன்ற பழம்பாடல்களில் நாம் நமது பண்டைய காலத்தின் அடையாளங்களையும், ஒரு காலத்தில் நாம் வைத்திருந்த மதிப்பீடுகளையும், நம் வேர்களையும் இன்றும் காணலாம். இது போன்ற பாடல்களை பாட புத்தகங்களில் இருந்து விலக்கியும் விட்டோம். அதற்கு இணையான மேன்மையான படைப்புகளை உருவாக்கி நம் சிறார்களுக்குப் படிக்கத் தரவும் தவறிக் கொண்டிருக்கிறோம். இந்த அலட்சியம் அறிவீனம் மட்டுமல்ல, ஒருவிதத்தில் தற்கொலையும் கூடத் தான். சிந்திப்போமா!
-
Nice one anu :) :) :)..... Thanks for sharing......
-
anu paada sumaiyaagathan sendru kondirukirathu sugamaaga alla
niruverum ithu karpanaikkum etta kathai, arasiyal vaathigal nammaiyum mathipathillai
paadangalaiyum mathipathillai..... engu poi mudiyumo.... pillaigalin ethirgaalam kelvi kuri.......