FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on December 19, 2020, 08:12:53 PM
-
முதன் முதலில் உன்னை
பார்த்ததும்
கருவை சுமக்கும் தாயின்
மன நிலையில் உன்னை
சுமக்க துவங்கினேன்
என் இதயத்தில்
ஒவ்வொரு அசைவிலும்
ஆனந்தப்படும் தாயை போல
உன் ஒவ்வொரு செயலுக்கும்
குதூகலித்தேன்
இரவு அகன்று
பகல் வந்தாலும்
பகல் அகன்று
இரவு வந்தாலும்
நொடிப்பொழுதும்
உன் நினைவுகள்
என்னை விட்டு
அகலுவதில்லை
அர்த்தமுள்ள அனைத்தும்
உன் காதலாய்
கண்டேன்
விழிவழி கடந்து
இதயத்தில்
நுழைந்த நீ
வாழ்வின் வழியில்
தொலைந்தாய்
கருகலைந்த
தாயின் வலியில்
நான்
வருடங்கள்
உருண்டோடும்
வலிகளோடு
மலடி போல
காத்திருக்கிறேன்
****JOKER***
-
என்னை விட
அழகான ஒருத்தி
கண்டதில்லை இவ்வுலகில்
என்றான்
என் நினைவில்லாமல்
ஒரு நொடி பொழுதும்
கடக்காது
என்றான்
செல்ல செல்ல சண்டையிட்ட
போதெல்லாம்
இரவில் உன் ஒற்றை
முத்தம் போதும்
வெள்ளை புறா பறக்க
என்றான்
என்னுடன் சண்டையிட
சேகரித்து வைத்த
சொற்கள் எல்லாம்
கானல் நீராகி விடும்
கண்டதும்
என்றான்
என்னை விட அழகான
பரிசு ஒன்று தருவேன் -அது
நம் பிள்ளை
என்றான்
தேவதைகள் மண்ணில்
பிறப்பதில்லை
நீ விதிவிலக்கு
என்றான்
எந்த உணர்வுகளும்
நிரந்திரமில்லை
எந்த உறவுகளும்
நிரந்திரமில்லை என்று
சொல்லாமல் விட்டு
சென்றாய்
நகரத்தின் பேரிரைச்சலில்
பீறிட்டு வரும் என் அழுகையின்
சத்தம் கேட்காமலிருக்க
கட்டி அணைத்து கொள்கிறேன்
என் பிள்ளையை
தந்தையை எங்கே என கேட்கும்
பிள்ளைக்கு சொல்வேன்
நீல வானை காட்டி
ஆண் தேவதைகள்
மண்ணில் பிறப்பதுண்டு
சில காலம் தங்கியிருந்து
நீங்கா நினைவை
விட்டு செல்வார்கள் என்று
****JOKER****
-
மீண்டும் மீண்டும்
வெறிச்சோடிய மூலையில்
என்றுமே வராத
உன் நிழல்களுக்காக
காத்திருந்தேன்
பழைய நான்
இறந்துவிட்டேன்
புதியதாய்
பிறந்த என்னை
மீண்டும் கொல்ல
துடிக்கிறது
உன் நினைவுகள்
-
தனிமை
கருவறையின்
தனிமையை
போக்கியது
தொப்புள்கொடி
சிறு வயதில்
தனிமையை
போக்கியது
நட்புக்கள்
இளமையின்
தனிமையை
போக்கியது
காதல்
முதிர் பருவத்தின்
தனிமையை
போக்கியது
பிள்ளைகள்
பயணத்தின்
தனிமையை
போக்கியது
ராஜாவின் இசை
இரவின்
தனிமையை
போக்கியது
நிலவு
இன்று
முதுமையின்
தனிமையை
மரணம் தான்
போக்கிடுமோ ?
-
கண்ணுக்கு தெரியாத
காதல் உணர்வு என்பது
அதன் தீவிரம் பயங்கரமானது
உன்னை மிகவும்
ஆழமாக நேசிக்கிறேன்
நேருக்கு நேர் பார்க்காமல்,
அமைதியாக நேசிக்கும் ஒவ்வொருவருக்கும்
மனதில் காதல் உலகம்
வரையறுக்க முடியாததாகிறது
எப்பொழுதும் விளையாடிக் கொண்டும்
சிரித்துக் கொண்டும் இருப்பவர்களைப்
பார்த்து நீங்கள் எப்போதாவது
பொறாமைப்பட்டிருக்கிறீர்களா?
அவர்களைத் தெரிந்துகொள்ள
முயற்சித்தீர்களா?!
ஒரு வேளை நாம் சற்றும் எதிர்பார்க்காத
அத்தனை வலிகளையும்
உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு
சிரிக்கும் மனிதர்களாக இருப்பார்களோ
என்று நினைக்கலாம்
சிலரது கதை கேட்ட பின்
உன்னைப் பார்த்தால்
இவ்வளவு சோகத்தை உள்ளுக்குள்
வைத்திருக்கும் ஆள் என்று
சொல்லவே முடியாது என்பார்கள்
சிலரது வாழ்க்கை அப்படித்தான்,
வலிகளுக்குப் பின்னால்,
மீண்டும் மீண்டும் வலிகள் வந்துகொண்டே இருக்கும்.
வாழ்க்கையின் எதிர்பாராத வலிகள்
நம்மை இழுத்துச் செல்கின்றன
ஒவ்வொருவரும் வலி மற்றும் துன்பத்தை
அனுபவித்து வருகின்றனர்...
நான் மட்டும் இப்படியா என்று
மனதுக்குள் அடிக்கடி கேள்வி கேட்பதில்லையா?
ஆனால் எப்படியோ
எல்லோரும் நேரடியாக பிரச்சனைகளை
எதிர்கொள்பவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
சோகமாக இருக்கும் போது அழ வேண்டும்,
ஆனால் எப்பொழுதும் அழாதே,
ஒரு வேளை நம்மை ஆதரிப்பவர்கள் கூட
சோர்ந்து போகலாம்..
போனது போய்விட்டது,
வந்து சேரவேண்டியது வந்து சேர்ந்தது,
இப்போது இருப்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள்...
இனி உட்கார்ந்து அழ வேண்டிய
அவசியமில்லை என்பதை உணரும்
அந்த நேரத்தில்,
புன்னகையுடன் எல்லாவற்றையும்
நேரடியாகத் தொடங்குங்கள்.
நாம் சோர்வாக இருக்கும் போது
இன்னொரு வசந்தம் மலரும்
****JOKER****
-
மனம் சோர்வடைய
ஆரம்பிக்கும் போது
விழாமல் பிடித்த
ஒரு சில நட்புக்களும்
பிரார்த்தனையால்
வாடாமல் காத்த
ஒரு சில தெய்வங்களின்
மிச்சம் தான்
இந்த நான்
மீண்டுமொரு முறை
அந்த நாட்களுக்குள் சென்று வர
யோசிக்காத நாட்கள்
குறைந்து கொண்டே வருகிறது
போனது திரும்ப வராது
என்ற உண்மையை
மனம் அங்கீகரிக்க மறுக்கிறது
ஒருவேளை அந்த காலங்கள்
மனதுக்கு பசுமையாக
இருப்பதால் கூட இருக்கலாம்
ஒவ்வொரு முறையும்
நான் கட்டுப்படுத்த
ஆரம்பிக்கும் போது
அந்த நாட்களின் நினைவுகள்
என்னை கடுமையாக தாக்குகின்றன
எல்லா எதிர்மறையான
சூழ்நிலையிலும் மனம்
மீண்டுமொரு முறை
பரஸ்பரம் பார்த்து கொள்ளவும்
இதயங்களை பகிர்ந்து கொள்ளவும்
முத்தங்கள் பெற்றுக்கொள்ளவும்
விரும்புகிறது
உன் மனமும் அவ்வாறே விரும்பும் என
நாம் பழகிய நாட்களில்
உன்னை புரிந்துகொண்ட வரை
அதுவே உண்மையாக இருக்கும்
இல்லையென்றாலும்
அவ்வாறே இருக்கும் என
நம்புகிறது
என் மனம்
****JOKER****
-
தனியாக
அமர்ந்திருக்கும் போது
உதடுகள் முணுமுணுக்கும்
பாடல் போல் நீ
சதா சர்வ காலமும்
நினைத்து கொண்டிருக்க
வேண்டியதில்லை
விழித்து
கொண்டிருக்கையிலும்
சூழ்ந்து கொண்டுவிடும்
உன் நினைவுகள்
ஒரு வார்த்தையால்
பிரிந்தபோது
உடன் தொலைந்த
கனவுகளும் ஏராளம்
காதல் என்றால் என்ன
என்று இன்று யோசித்தாலும்
மனது நின்று விடுகிறது
பூஜ்யத்தில்
ஆதலால்
நான் தோல்வியடைந்தததில்
ஆச்சர்யமொன்றுமில்லை
நீ
என்னுடையவளாயிருந்தாய்
என்பது மட்டுமே
காலம் எனக்கு
மிச்சம் வைத்தது
காதலில்
விழுந்தவர்களுக்கே
அதன் வலியும்
இன்பமும் புரியும்
என்பதே உண்மை
***Joker***
-
கடிதங்கள்
தனிமையின்
மிகவும்
சக்திவாய்ந்த மருந்து.
வாழ்நாளில்
ஒரு முறையாவது
தனிமைப்படுத்தப்பட்டவர்களில்
பெரும்பாலானோர்
பின்னர் கடிதங்களுக்கு
அடிமையாகினர்
சில வரிகளை
மனதாரப் படிக்கும் போது
ஏதோ ஒரு விஷயம்
மனதிற்கு பிடித்து
கண்ணீர் விடுவது போல்
உணர்கிறேன்
ஏதோ சில வரிகளை
கேட்கையில்
என் வலி இவருக்கு
யார் சொல்லியது என
வியக்கிறேன்
இதுவரை வாழ்வதில்
அர்த்தமே இல்லை என்பது
கடந்து வந்த பாதைகளைத்
திரும்பிப் பார்க்கும்போதும்
கடைசியில் உணர்தலின் பாதையில்
காலடி எடுத்து வைக்கும் போதும்
தோன்றுகிறது
எதற்காக என்று தெரியாமல்,
நமக்காகத் தவிர,
யாருக்காகவும் அலைந்து
சோர்ந்து போகிறோம்
இவ்வாழ்வில்
புதிய அனுபவங்களுக்குப்
புதிய பாதைகளில்
நடக்க முடிவு செய்து
ஆயத்தமிட்டேன்
இன்னும் எவ்வளவு காலம்
தனிமையில் இருப்பேன் என்று
எனக்குத் தெரியவில்லை,
ஆனால்
என்னை அப்படி உணராதவர்களுடன்
இருப்பதை விட
தனியாக நடப்பது நல்லது
திரும்பும் பயணத்தைவிட
கரை சேராத பயணம்
விரும்பும் மனம்
உண்மை நிகழ்வுகள்
மறந்தாலும்
வாழ்கின்றன
***Joker***
-
குழந்தை பெற்ற பின்
அக்குழந்தையை
அனாதையாய் விட
அவள் எத்தனிக்க
எது தள்ளியிருக்கும்
பத்து மாதம்
சுமந்த வலியை விட
பெரிய வலியோ?
அவளை பிரசவிக்க
அனுபவித்த
வலியை விட
பெரிய வலியோ?
குழந்தை கொன்றால்
பாவம் என ஊர்
சொல்லி குடுத்த
பாடமோ ?
இல்லை
நம் வாழ்வு நாசமாய்
போனது இருந்தும்
குழந்தையை
தெய்வம்
காப்பாற்றும் என்ற
அதீத நம்பிக்கையோ ?
குழந்தை தந்தவன்
வாழ்வு தர மறுத்தான்
எனில்
அது அவள் கண்ட
கனவின் தவறா ?
இல்லை
அவன் மேல் வைத்த
நம்பிக்கையின்
தவறா?
மலர்
தானே மலர்ந்து
உதிர்ந்து விழுகிறது
மனிதன் மட்டும்
உறவின் மேல்
அதீத நம்பிக்கை
வைத்திருக்கிறான்
இருந்தும்
ஒருத்தி
சுமந்த குழந்தையை
குப்பை தொட்டியில்
வீசி செல்ல முடிகிறதென்றால்
அவள் மன நிலை
என்னவாய்
இருந்திருக்கும் ?
அந்த நிலைக்கு தள்ளபட்டதற்கு
யார் தான் பொறுப்பு ?
பெண்கள்
பேரறிவு கொண்டவர்களாய்
மாறுவதே
பேதைமை அகற்றும்
***Joker***