FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 13, 2020, 10:36:46 AM

Title: மறுபடியும் பிறந்திடு
Post by: thamilan on December 13, 2020, 10:36:46 AM
ஏ எமதர்மனே
யாரென்று புரியாமல்
யானை வேடமிட்டு
யாரை நீ அழித்திட்டாய் தெரியுமா
தமிழ் யாழை நீ
மீண்டும் தர முடியுமா

பாரையெல்லாம் நடுங்க வைத்த
பாரதியாம் என் தலைவன்
பாட்டுக்கொரு ஈடுஇணை ஆகுமா- இனி
நாட்டுக்கொரு நல்வழி நடந்தேறுமா

சீறிவரும் பகைவரையும்
தீப்பிழம்பாம் சொல்லெடுத்து
சிதறியோட வைத்த தமிழ் சிங்கமே
தமிழ்குலம் காத்து கரை சேர்த்திட்ட
என் தங்கமே

விடுதலை துப்பாக்கிக்கு
உன்பாடல் வெடிமருந்து
வெற்றுக்கதை பேசும் வீணருக்கோ
பெரும் சாட்டை
பகல்வேஷக்காரர்களை பதம் பார்க்கும்
போர்வாள் நீ
மழலை குழந்தைகளுக்கோ நீ
தெவிட்டாத தேன்மிட்டாய்

பாரதியே
நீ விழித்துப் பார்த்தால்
சூரியனுக்கும் வியர்க்கும்
நாவசைத்து நீ பாட்டுரைத்தால்
நாட்டிலெங்கும் புயல்வீசும்
பாட்டுக்கென்று பிறந்தவனே - நீ
எமைமறந்து போனதெங்கே - உன்
தலைமறைந்த பின்னாலே
தமிழும் மறைந்து போனதுவே
தலைமுறை தாண்டியதால்
தாய் மம்மி ஆனதுவே

தலைமுறை பிரச்சனையால்
தடம்புரண்டு தவிக்கின்றோம்
மறுபடியும் பிறந்திடு
தமிழ்மொழிக்கோர் வாழ்வு தந்து விடு