FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on November 30, 2020, 01:14:23 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: Forum on November 30, 2020, 01:14:23 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F2501.jpg&hash=a8f877d5567494747a5339bb72bca29a8dbb88c0)

**250ஆவது வார சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு முதலில் பதிவிடப்படும்  10 கவிதைகள் நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.எதிர்வரும் சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.



நிழல் படம் எண் : 250
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F250.png&hash=0854624092780523449c4750a4a059faed3d435b)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: இளஞ்செழியன் on November 30, 2020, 04:20:30 PM
சூல்கொண்டிருந்தாள் அவள்
பிறசவித்தலின் வலியில்
துடித்திடல் என்பதை
கேட்டறிந்தாளவள்...

பயமுற்றமர்பவள்
மருத்துவச்சிகளில் யார்
மென்மையானவளென கேட்டறிவாளவள்
வயிற்றில் மேல் உரசிச்செல்லும்
தென்றலை கொஞ்சம்
கடிந்துகொள்வாளவள்...
.
சரிந்து படுத்துக்கொண்டவள்
மீண்டுமொருமுறை மறுப்பக்கம் சரிய
மரித்தெழுந்து மீண்டுவருதாய்
உணர்வாளவள்...
.
ஒவ்வொரு கதவிலும்
சாய்வாளவள் - மிதித்தலின்
கால்பாடுகள் வயிற்றில்
வரைந்து வியப்பாளவள்...
.
தூரத்துக்கணவனை அருகில்
அழைப்பாளவள் - துறந்த
தலையணையை முத்தமிடுவாளவள்
நினைந்து நினைந்து
உருகுவாளவள்...
.
வாசலில் வாய்ப்பாடும்
விசித்திரக்கிழவியின்
வேஷம் மறந்து சோசியம் ரசிப்பாளவள்..
முகராசிக்காரியெனும் வார்த்தையை
மீண்டும் மீண்டும் கேட்கவைத்து
சந்தோஷிப்பாளவள்....
.
உண்ணாமல் உறங்காமல்
உரக்க சப்தமிடவியலாமல்
அவஸ்த்தைகளை அமைதியாய்
நொந்துகொள்வாளவள்...
.

பிரமிப்பின் உச்சத்தை
அனுபவித்து பிறசவிப்பாளவள்
ஒரு குழந்தையாய் மாறி
மீண்டுமொரு குழந்தையை
பெற்றெடுப்பாளவள்...
.
சூல்கொண்டிருந்தாளவள்....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: JsB on December 01, 2020, 12:48:03 PM

உலகம் உருவாவதற்கு முன்னே
நீர் என்னை முன்குறித்தீரே...
என் தாயின் கருவில்
என்னை தெரிந்தெடுத்தீரே...

என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே!
என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!
அஞ்சத்தகு, வியத்தகு முறையில்
நீர் என்னைப் படைத்த தால்,
நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்...

எனக்கு உ‌யி‌ர் கொடு‌த்த
என் தொ‌ப்பு‌ள் கொடி உறவே...
உருவம் ...முகம்...வர்ணம்
கூட தெரியாத என்னை
எந்த எதிர்பார்ப்பு இல்லாமலே...
கருவிலே நேசித்த
என் முதல் புனிதமான உறவே ...

அர்த்தம் அறிய முடியாத
உயிர் சித்திரம் நீ அம்மா...
உன் கருவறையில்
உதைத்து...உதைத்து...
உருண்டு...புரண்டு...
நான் உன்னை காணும்
வரையிலும் கொடுத்த
ஒவ்வொரு வலியையும் வேதனையும்...
அழகு பார்த்து ரசித்தவள் நீயம்மா...

என்னை சுமையாக நினைக்காமல்...
பத்து திங்களும் என்னை
காற்று ...வெயில்...இடி...மழை...என
இயற்கை பேரிடர்களிலிருந்து
என்னை கண்ணின் மணியைப் போல்
பாதுகாத்து...சுகமாக சுமந்து பெற்ற
புண்ணியம் செய்த புண்ணியவதியே...
காலமெல்லாம் நீ வாழ்க பல்லாண்டு!

இவ்வுலகில் எனக்கு கிடைத்த
ஒரே ரத்த பந்தமே...
பெற்ற கடனையே அடைக்க  முடியாமல்
வழி தேடித் கொண்டிருக்கும் நான்...
எப்படி வளர்த்த கடனை அடைக்க போகிறேனோ
என்று தெரியவில்லையே...

தாய் செய்த தியாகத்தை...
நான் தாயானவளான போது
ஒவ்வொன்றையும் உணர்ந்தவளாக...
கற்றுக் கொண்டவளாக...
நீ செய்தவைகளைப் பின்பற்றி
ஓர் அழகிய வாழ்க்கையை
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்...

உயிர் எழுத்தில் தொடங்கி...
மெய் எழுத்தில் பிறந்து...
உயிர்மை...மெய்மை என்று
என்னுடல் உறுப்பிற்கு...
சொந்தமான அம்மா...என்ற வார்த்தையின்
அர்த்தத்திற்கு தகுதியான
என்னுயிர் தாயே...
சொல்லி முடியா அழகிய கவிதை நீயே...
மீண்டும்  வர வேண்டும் நீயே...
என் தாயாக...
என் குழந்தையாக...
ஐ லவ் யூ அம்மா!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: SweeTie on December 01, 2020, 10:27:40 PM
ஆதியும் அந்தமும்  இல்லா தமிழ் மொழியே
உன்னிடம் எல்லையில்லாக்  காதல் கொண்டேன்   
சித்தம்   குலைந்து  பித்தானேன்  உன்மீது
என் மத்தம்  தணித்து   வித்தாகி 
என் கருவிலே   வந்துதித்த   தமிழே

பத்து மாதங்கள்    பகலிரவாய்  சுமந்தேன்
சித்து  விளையாட்டுக்கள்  செய்து  சிரிக்கவைத்தாய்
ஐந்தாம்  மாதம்   எட்டி  உதைத்தாய்  என் வயிற்றில்
எட்டாம்  மாதம்   உருண்டு   கரணமிட்டாய்
பத்தாம் மாதம்    ஆ   ....எனஅலறி  பக்கம் வந்து படுத்துவிட்டாய்

தத்தி நடை    பயின்று   மழலையில் தமிழ் பேசி
தாய்மையின்     உச்சி குளிரவைத்தாய்   
சித்தம் தெளிந்தேன்  உன் முத்துச் சிரிப்பினிலே   
நித்தமும்  நீ  வேண்டும்  என்னோடு     -   தமிழே! 
உன் நினைவோடு  என்றும் நான் வாழ்ந்திடவேண்டும்

பள்ளிப் பருவமதில்   படித்தேன்  உன்னோடு  ஆத்திசூடி   
அறம்   செய்தல் வேண்டும் புறம் பேசல் வேண்டாம்
கற்றேன்   உன்னுடன்  கொன்றை வேந்தன்
புலையும்  கொலையும்  களவும்  தவிர் 
நன்னெறியோடு நறுந்தொகையும் கற்றேன்

கன்னிப்  பருவமதில்  கற்றேன்  உன்  காவியங்கள் 
காணத்   தெளிந்தேன்   உன் அழகு சொரூபங்கள் 
மேல் அண்ணம்  தொடுகின்ற  ழகரம்   
வேற்று மொழிகளில்  காணாத    தனித்துவம்   
இதழோரம்  இழையோடும்  தமிழ்

இசையாகி  இயலாகி  நாடகமாய்   
உன் மூன்று முகங்களில்  மூச்சையுற்றேன் தமிழே
முப்பாலும்  கண்டேன்  மூவினமும்  கண்டேன்
உயிரோடு இணைந்த  மெய்யும் உயிர்மெய்யாய் கண்டேன்
எப்பாலும்  மறவேன்  உன் குறில் நெடில்  வேட்டுக்கள்

வளர்ந்துவிட்டாய்  தமிழே 
புலவர்கள்  நாவிலே புரண்டு விளையாடுகிறாய்
கவிஞர்கள்  கையேடுகளில் கரைபுரண்டோடுகிறாய்
என் கருவிலே   உருவாகி என்னை வியக்கிநின்றாய்  அன்று
உன்னை வியந்து நிக்கிறேன் உன் பிள்ளையாய்  இன்று.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: AgNi on December 02, 2020, 08:05:19 AM

அகரத்தில் கருவுற்று அகிலத்தில் ....
அறம் தழைக்க விரும்பினாள்!   
ஆணாதிக்க மகவையும் பாரபச்சமின்றி
ஆனந்தமாக  அவளே சூல் கொண்டாள்  !

இயற்கையின் கருவை  இயல்பாக
இதயத்தில் உவகையுடன்    சுமந்தாள் !
ஈகையின் பண்பை இருமடங்கு ஏற்றி
ஈரத்தோடு வீரத்தையும் ஊட்டினாள் !

உதிரத்தை பாலாக்கி உணர்வலையில் நல்
உயிரை உயர்ந்தநிலைக்கு   வளர்த்தாள்!
ஊன் உறக்கம் இன்றி உழைத்து ..
மாண்பில் மலை என உயர்ந்தாள்!

என்றும் அவர்கள் நலனுக்காக வாழ்ந்து  ...
எளிமையின்  எடுத்துக்காட்டானாள்!
ஏழை எனினும்  கோழையாக்காமல் ...
ஏற்றம் பெற  உருவாக்கினாள்!

ஐயங்கள் தெளிவு பெற குருவாகி
ஐந்தெட்டு நூல்களை படிப்பித்தாள்! 
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என
ஒற்றுமையை உறவுகளில் காட்டினாள் !

ஓர் நாளும்   உலகை ஆள  புகழ்
ஓங்கி செழிக்க வழி காட்டினாள் !
ஔவையும்   ஔடதமும்  சொல்லி
ஔவியம்   பேச  தடுத்தாள் .

ஆயுதங்களையும் எடுக்க பழக்கினாள்
அஃறிணைகளும் உயிர் தழைக்க !
அவள் இன்றி அசையாது ஓர் அணுவும்
அன்னையே அகிலம்  !அன்னையே சரணம்!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: thamilan on December 02, 2020, 02:03:46 PM
 அம்மா

'ஆ' என்ற உயிர் எழுதும் 
'ம்'  என்ற மெய் எழுதும்
'மா' என்ற உயிர்மெய் எழுதும் சேர்ந்த 
அழகுத் தமிழின்  அவதாரம் அம்மா நீ

விந்தை கருவாக்கி
கருவை உதிரமாக்கி
உதிரத்தை உயிராக்கி
உயிரை உருவமாக்கி
உருவத்தை உலகுக்களித்த அன்னையே

அம்மா
சிறுக  சிறுக என்னை செதுக்கிய
சிற்பி நீ
உன் உதிரம் கொண்டு
நீ வரைந்த ஓவியம் நான்
உன் கருவறைக்குள்ளே நீ
பொத்தி வைத்த பொக்கிஷம்  நான்

உன் மடியில் தாலாட்டி
உன் தோளில் சீராட்டி
அன்பு அமுதம் ஊட்டி
கோழியின் சிறகுக்குள்ளே
இதமான அரவணைப்பில் வாழும்
குஞ்சிகள் போலே
பொத்திப் பொத்தி வளர்த்தாயே

கருவறையில் உன்னை  எத்தனை தடவை
எட்டி எட்டி உதைத்திருப்பேன்  நான்
உதைக்கும் ஒவ்வொரு  தடவையும்
வயிற்றை தொட்டு தொட்டு
குதூகலிப்பாயே அம்மா நீ

உயிரை வருத்தி
உயிர் கொடுத்தவள்
உத்திரம் பெருக்கி
உருவம் கொடுத்தவள்
மூச்சடக்கி என்னைப் பெற்று
மூச்சு உள்ளவரை என்னை
உயிர்மூச்சாய் காத்திடும் தெய்வம் அம்மா நீ

எனக்கு 
ஒரே ஒரு ஆசை தான் இறைவா
இன்னொரு பிறவி எனக்கிருந்தால்
நான் தாயாகவும் என் தாய்
எனக்கு சேயாகவும் பிறந்திட வேண்டும் இறைவா





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: அனோத் on December 03, 2020, 03:24:56 PM
மறத்தமிழ் கொடுத்த உரமதில்
அறவழி கொண்டு வளர்த்தாய்
உரித்தாய்......

அருந்தவம் என்றெண்ணி
அனுதினம் இனிதமிழ் கொடுத்தாய்
உணர்வாய்.......

பெருஞ் சுமையானபோதும் 
ஆணைபலமாய் அணைத்தாய்
உயிர்ப்பாய்......

கரம் பிடிக்கத்  துணையில்லா உலகாங்கே
அறம் ஆற்றத்   துணிந்தாய்
உயர்வாய்......

தரம் குறையா மொழியாமதன்
அறம் கற்று புறம் பேசா வாழ்வை
நுகர்ந்தாய்  உவந்தாய்..........

வீரத்தின் மொழி
உதிரத்தில் உரைந்தபோதும்
வீணற்ற சினம்
போகப்  போதித்தாய்
ஈடற்ற அறத்தின்  வழி..........

ஆதலாலோ அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினமென
அகிலம் முழுதும் சொல்லிச் சென்றாள்
அன்னையவர் ஒளவையார்..........
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: இணையத்தமிழன் on December 03, 2020, 04:03:56 PM
அன்னம் இட்டவனோ நடுரோட்டில்
அழுது புலம்பிட விடியலும் இல்லை
ஆட்சியில் இருப்பவனோ அல்லல்படுத்த 
ஆளநினைப்பவனோ அலட்சியப்படுத்த
இல்லையென்று வந்தவனை
ஈகையோடு அழைத்தவனோ- இன்று
ஈரமில்லா மிருகமொன்று
இரக்கமற்று கதைப்பேச
உழுதுஉழுது கலைத்தவனோ
உரிமைக்காக நடைப்பயில
ஊடகத்தின் கவனம் எல்லாம்
உள்ளுர் நடிகனிடம்
என்னதான் நடந்தாலும்
எண்ணமது மாறாது
ஏர்பிடித்த கையும் இன்றோ
ஏக்கமோடு வந்து நிக்க
ஏளனமாய் பார்த்தவனோ
அஞ்சிநடுங்கும்  காலமிது
ஐயம் தெளிய வந்திடுமே
ஒற்றுமையாய் ஒன்றிணைந்தோம்
ஒடுக்கத்தான் பார்க்காதே
ஓயாது எந்தன் குரல்
ஓநாய்போல் சூழ்ச்சி செய்து
ஒடுக்கத்தான் பார்க்காதே
ஔவியம்தான் கொள்ளாதே
ஊதியம்தான் கேட்கின்றேன்
                                     -இணையத்தமிழன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: Raju on December 03, 2020, 10:51:15 PM
ஏழை எளியவர்
எவரும் இல்லை என்றே
கரம் கோர்த்து
கனவுகளை விதைத்திடு

பாருக்குள் ஏராளம்
பட்டினி போராட்டம்
நித்தமும் ஏங்கிடும்
நிறைவேறா ஆசைகளாய்

அச்சாணியாய் நீயும் 
அறமாக சுழன்றிடு
துச்சமாய் என்னாது
துயரங்கள் துடைத்திடு

மானிடர் வாழ்வுதனில்
மலர்ச்சிகள் செய்திடு
நாடோடி வாழ்க்கையிலும்
நறுமணங்கள் கலந்திடு

கர்ணனின் தர்மமது
காலத்தையும் வென்றதைப்போல்
புண்ணியங்கள் தேடாமல்
கண்ணியமாய் அறம் செய்

இல்லாதான் வாழ்க்கையில்
ஏற்றமதை செய்திடு
பொல்லாத பூமியிலும்
பொறுமையை காத்திடு

மண்ணிலே மனிதத்தின்
நேயங்கள் போற்றிடு
கண்ணிலே கருணையை
காலமெல்லாம் கலந்திடு


அறம் செய்!  மாற்றம் சமை!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: joker on December 03, 2020, 11:43:56 PM
11 வது கவிதை பத்தாவதாக படிக்கவும்

நன்றி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: MoGiNi on December 04, 2020, 12:11:06 AM
அன்பென்ற  சொல்லுக்கு அம்மா
அவள் அமுதென்னும் பாலூட்டி வளர்த்தாலே
அம்மா ..
அன்பென்ற சொல்லுக்கு அம்மா ...

கருவிலே சுமந்தவள்
எனக்கு கற்று தந்தது
அவள்
பொறுமையின் அறமென்பேன் ..

அவளெனை
பூமியில்
பிரசவிக்க கொண்டதொரு
பூமாதேவியின் பொறுமை
ஒரு அறமென்பேன்

காலங்களோடு போராடி
என்னை
கண்போல் வளர்த்த
அந்த ஆளுமை
அறமென்பேன் ..

கண்ணுக்குள் வைத்து
காத்திடும் அவள்
காவல் கூட
அறமென்பேன் ..

இழித்தொருவர்
என்னை பேசின்
இடியென முழங்கும்
அவள் கோபமும்
அறமென்பேன் ..

இல்லாத பொழுதும்
இயன்றளவு ஈந்திடும்
அவள் ஈகை
ஒரு அறமென்பேன் ..

கல்லாத போதிலும்
என்னை
கல்லென்று ஒதுக்காத
அவள் காதல்
ஒரு அறமென்பேன் ..

நான் இல்லாள் ஆயினும்
என்றுமவள்
இனிமை குறையாத
அன்பு
ஒரு அறமென்பேன் ...

காலனே  வந்தென்னை
கவர்ந்து செல்லினும்
அவன் கால்களோடு
பின்னி என்
ஆயுளுக்காய் போராடும்
அவள் போர்க்குணம்
ஒரு  அறமென்பேன் ...

ஆருயிர் போயினும்
அறுந்து கிடக்கும்
ஓருயிராம்
அன்னையவள்  அசைவுகளில்
கற்காத அறம்  தன்னை
எங்கே கற்று நீ
எங்கனம் அறம் செய்வாய் மனிதா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 250
Post by: TiNu on December 04, 2020, 02:55:52 AM
உயிரை மெய்யோடு கலந்து
உருக்கொடுத்த எனது அன்னையே!
உன்முகம் காண ஏங்கிய நொடியில் 
உன் வாசம் என் நாசி துளைக்க,  சட்டென திரும்பினேன்..

அழகிய முகமொன்றில் அன்பு மிளிர
அசையும் விழி இரண்டிலும் கருணை பொங்கிட
அற்புத இதழ்களில் புன்னகை தவழிந்திட
அருகில் வாவென அழைக்கும் அவளின் பூங்கரங்கள்..

என் விழிகள் விரிய, புருவம் சுருங்க
என் எண்ணங்களை ஓரமாக நிறுத்தி 
என் எதிரில் சிரிக்கும் உன் முகம் நோக்கினேன்
என்ன  ஓர் அழகு!  என்ன ஓர் அற்புதம் !!

உன்னுள் எத்தனை...... எத்தனை உருவங்கள்
உள்ளத்தின் இயல்பை காட்டும் இயல் வடிவானாய்   நீ
உள்ளுணர்வுகளை உரைக்கும் இசை வடிவானாய்   நீ
உணர்ச்சிகளை ஊரார் உணர நாடக வடிவானாய் நீ

அன்பான உன் அணைப்பில் வளரும் என்னை
ஆசையாக ஒரு முறை அழைப்பாயா? மகளே என
இப்பிறவியில் உன் காலடியில் தவழும் எனை
ஈன்றெடுப்பாயா? என் அடுத்த ஜென்மத்தில்!! 

உன் ஆசியில் என்றென்றும் நான் வாழ்
என் சிரம் தாழ்த்தி வணங்கி வேண்டுகிறேன்
என் மனதில் வீரமாக  வீற்றிருக்கும்
அன்னையே! தமிழ் தாயே!  நீ வாழ்க!!