FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on July 18, 2020, 11:42:01 PM

Title: FTC ஒன்பதாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Forum on July 18, 2020, 11:42:01 PM
நண்பர்கள் கவனத்திற்கு ...

நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் ஒன்பதாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ...
 கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் ..

எதிர்வரும் ஜூலை 25 ஆம்  தேதிக்கு  முன்பாக  உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..பதிவு செய்யப்பட்டகவிதைகள் ஒன்பதாம்  ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின்பொழுது நண்பர்கள் இணையதள வானொலி மூலம் உங்களை வந்தடையும்.
 

Title: Re: FTC ஒன்பதாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: thamilan on July 20, 2020, 06:00:59 PM
நண்பர்கள் தமிழ் இணையத்தளமே - நீ 
ஒன்பதாவது ஆண்டை நிறைவு செய்து
பத்தாவது ஆண்டுக்குள்  காலடி வைக்கிறாய் 
ஒன்பது ஆண்டுகளாக உன்னோடு பயணித்த
பெருமையும் கர்வமும் எனக்கு

இந்தக் குழந்தை பிறந்ததில் இருந்து
தவழ்ந்து  தட்டுத்தடுமாறி  நடந்து
இன்று யாருமில்லாமல் சுயமாக கம்பீரமாக   
நடக்கும் நடையை
ஒரு நண்பனாக ஒரு நலன்விரும்பியாக
ஒரு பயனாளியாக ஒரு பயணியாக
பிறந்தது முதல் இன்றுவரை
கூட இருந்து ரசிக்கிறேன் நான்

நண்பர்கள் இணையதளமே  - நீ
ஒரு ஆலமரம் போலே
உன் நிழலில் இளைப்பாறும்
பயணிகள் பலர்
இந்த ஆலமரத்தின் கிளைகளிலே
வர்ணவர்ணப்  பறவைகள்
இசைபாடும் குயில்கள்
கதைப்பேசும் கிளிகள்
இப்படி பலப்பல பறவைகள்
இந்த கிளிகள் குயில்களையும் வேட்டையாட
எதிர்பார்த்து காத்திருக்கும்
பருந்துகளும் இங்குண்டு

முகம்  தெரியாவிட்டாலும்
நல்அகம் காட்டும் நண்பர்கள்
இனிக்க பேசி இன்புற வைக்கும் நண்பிகள்
அண்ணா என்று கூப்பிட்டு
அன்பால் உருகவைக்கும் தங்கைகள் தம்பிகள்
வாய் விட்டு சிரிக்கவைத்திடும்
விகட கவிகள்
எட்டிப்போனாலும் துரத்தி பிடிக்கும்
கடலை மன்னர்கள்
குதூகலத்துக்கு குறைவில்லை
நண்பர்கள் இணையதளத்தில்

காதல் பெருக்கெடுக்கையில்
என்னை கவிஞன் ஆக்கிய
தூங்கிக் கிடந்த என் சிந்தனைகளை
தூசுதட்டி சிந்தனையாளனாக்கிய
சாப்பிட்டே பழக்கப்பட்ட என்னையும்
சமையல்காரன் ஆக்கிய
இரும்பாக இருந்த என்னை
குறும்பாகப் பேசி
சிரிக்கவும் சொல்லித்தந்த
சோகராகம் மட்டுமே
கேட்டுப் பழகிய எனக்கு
இன்னிசை நாதங்களை அள்ளித் தந்த
FTC எனும் பல்கலைக்கழகமே
உன்னால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவன் நான்

ஆயிரம் இணையதளங்கள் இருக்க
உன்னில் மட்டும் ஒன்றிப்போனேன் நான்
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும்
நீ வளர வளர
தோள் கொடுக்கும் தோழனாக 
துணை நிற்ப்பேன் நான்
நீ இன்னும் மென்மேலும் வளர
எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்
Title: Re: FTC ஒன்பதாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: MoGiNi on July 21, 2020, 02:50:25 AM
எனக்கும் உனக்குமான
பயணம்
ஒரு நாட் குறித்தோ
நிமிடம் குறித்தோ
மணித்துளிகள் குறித்தோ
ஏற்படடதல்ல

சில தேடல்களின் பதிலை
தனிமைகளின் தாள் உடைப்பாய்
ஏக்கங்களின் வடிகாலாய்
எனக்குள் நீயும்
உனக்குள் நானுமாய்
உறவாடும்  தருணங்கள்
உவப்பானவை

காலம் கடந்து
நேரம் தொலைத்து
மணித்துளிகள் கரைந்து
உன்னோடு கலந்து
கடக்கும் நாட்கள்
ரம்மியமானவை

சின்ன சின்ன கோபங்கள்
சிறகடிக்கும் இன்ப கனவுகள்
சில சண்டை
சில்லீர்க்கும் அன்பு
முகம் தெரியா உறவு
முழுவதும் தொலைந்த
நினைவுகள் என்ன
இரவும் பகலும்
இனித்து கிடந்த
நாட்கள் பகிர்ந்தனை ...

தூரங்களின்
தொலைவு குன்றி
உறவுகளின் உருக்கங்கள்
அக்கா அண்ணா தம்பி தங்கை
மாமா மச்சி என
உறவுகொண்டு
உட்சாகமாய் கழியும் பொழுதுகள் ..

உன் விருப்பம் என் விருப்பம்
உயிர்கொள்ளும் ஓவியம்
உனக்கான என் பாடல்
நாம் மறந்த
நம் பிறந்தநாள் கொண்டாட்டம்
இன்ன பிற பண்டிகை விழாக்கோலம் பூணும்
நாட்கள்
பேசிப் பாடி சண்டையிட்டு
மகிழ்ந்து மகிழும்
நண்பர்கள் இணையத்தளமே
இன்றோடு
ஒன்பது ஆண்டுகள்
கடந்து பயணிக்கிறாய் ..

இன்னும்
நினைவிருக்கிறது
குழந்தையாய்
உன்னை பிரசவித்த
நாட்களின் வலியும்
சந்தோஷமும் அனுபவித்த
அந்த நாட்கள் ..

இன்னும் பல ஆண்டு
என் உணர்வுகளோடு
உரிமையாக விளையாடும்
உன் நகர்வுகள்
தொடரட்டும்
வளரட்டும்
வாழ்க பல்லாண்டு ...
Title: Re: FTC ஒன்பதாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Raju on July 22, 2020, 02:12:54 PM
கனவுகள் பூத்திடும்
கவிதைகள் பிறந்திடும்
கருவறை என்பதா

மனமது மயங்கிடும்
மகிழ்வுடன்
பிதற்றிடும்
மதுவிது என்பதா...

சலசலக்கும்
அருவிபோல்
கலகலக்கும்
நண்பர் குழாம்

முகமறியா
நட்பெனினும்
முகமனுக்கு
குறைச்சலில்லை
வளமறியா
வார்த்தையெனினும்
வாஞ்சைகட்கு
பஞ்சமில்லை..

செவிக்கினிதாய்
கற்றலுக்கெழிதாய்
உற்றவர்போன்று
உறவாடும்
FTC இணையமே
ஒன்பதல்ல
எண்பது கடந்தும்
வாழ்க நீ வாழியவே...
Title: Re: FTC ஒன்பதாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: joker on July 22, 2020, 05:49:45 PM
தனிமையே போதும்
என்று இருப்பவனும்
உன்னை காண நேரிட்டால்
தனிமையை வெறுக்க
தொடங்கி உன்னை
நேசிக்க தொடங்கிடுவான்

சோர்ந்து போய் இருப்பவனுக்கு
கவலை போக்கி
தோள் கொடுக்கும்
நண்பனாய் நீ

ஒன்பது அத்தியாயங்கள்
எனும் ஒன்பது வருடங்கள்
கடந்து தொடரும்
தொடர்கதை
நீ

எத்தனை
கதாபாத்திரங்கள்
எத்தனை
எதிர்ப்புகள்
எத்தனை
கோவங்கள்
எத்தனை
சண்டைகள்
எத்தனை
சச்சரவுகள்
கடந்திருக்கும்

இருந்தும்
உன்னுடன்
அன்பு ,  நட்பு
பாசம், நேசம்
வைக்கும்
கூட்டம் இருக்கு
அத்தியாயங்கள்
தொடர்ந்திட

வருபவர்கள் எல்லாம்
காலடி தடத்தை பதிந்து விட்டு
செல்கிறார்கள்
தத்தம் பாதையில்

கிணற்றில் இட்ட
கல்லாய் இருந்த
என் சிந்தனை
இன்று
கிரீடத்தை அலங்கரிக்கும்
கல்லாய்
மாற்றினாய்

நீ பல பல ஆண்டுகள்
வீர நடை போடு

போகும் பாதையில்
இயல்பாய்
இனிமையாய்
பிறரை
மகிழ்வித்து
மகிழ்ந்து செல்
குழந்தையாய்


HAPPY BIRTHDAY FTC

****JOKER*****
Title: Re: FTC ஒன்பதாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: SweeTie on July 26, 2020, 04:34:48 AM
ஆல்   போல் வளர்ந்துவிட்டாய்
அறுகு போல்  வேரூன்றிவிட்டாய்
கற்பக தருவானாய்  நீயே
கண்களுக்கும் விருந்தானாய்

உன் கனவுகளை   
என் நினைவுகளில்   சுமக்கிறேன் 
உன் கைகோர்த்து  நடக்கையில்
 உணர்கின்றேன்    பெருமிதம்

செதுக்கிவிட்டாய்  என்னை
சிலைபோல்  ஆக்கிவிட்டாய்
வாழ்த்துவேனா    உன்னை
மனமுருகி   வேண்டுவேனா
 
சொற்பதங்கள்   இல்லை 
உன்னை வாழ்த்த    சிந்தையிலும்
தீர்க்கம் இல்லை   எப்படி 
வாழ்த்தட்டும்   என்னுயிரே 

ஆழி சூழ்  உலகமெங்கும்
ஜோதியாய்  நிற்கின்றாய்
அன்பான உள்ளங்களில் 
அழியாத   இடம் கொண்டாய்

வாழ்க   நீ பல்லாண்டு 
இவ்வையகம்   உள்ளவரை 
வளர்க  நீ   பல்லாண்டு
திக்கெட்டும்   உன்  புகழ் பரவ!!! 

 
Title: Re: FTC ஒன்பதாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: TiNu on July 26, 2020, 03:29:20 PM
அன்புள்ள FTC க்கு
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து
இன்று உங்களுடன் .இணைந்த நான்
எழுதும் ஓர் அழகான  மடல்

திக்குத்தெரியாது பறந்து திரிந்து....   
இப்பொழுது FTC விருட்சத்தின்
கிளைகளில் புதிதாக அமர்ந்த
சிறு பறவை நான்.

இணைந்த பின்னே புரிந்தது
தமிழால் இணைந்த பறவைகள்
இங்கே அதிகம் உண்டென... இன்று
நானும் உங்களுள் ஒருவள்

ஆரம்ப கட்டத்தில் ஐவருக்கு 
மேல் இருந்தாலே.. உள்ளே வர
பயந்து.. நுழையவே தயங்கி
வெளியே நின்றிடுவேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் என் பயம் நீக்கி
எல்லோருடனும் பேச வைத்தாய்
பலருடன் கைகோர்த்து நிற்க செய்தாய்
இன்று ஓர் ஆண்டும் கடந்து விட்டன

என் முதல் பாடல், காதலர்தின
பாட்டு பாடவா நிகழ்ச்சியில்
அன்றைய தினம் மனதில் படபடப்பு.
தெய்வமே.... சொல்ல முடியாதா மகிழ்ச்சி..
உன்னால் கிடைத்த முதல் சந்தோசம்..

அளவற்ற மகிழ்ச்சிகள் கொடுத்தாய்.. 
எனது பிறந்தநாள் நிகழ்ச்சியில்
ஆழமான.... அழுத்தமான...
மறக்க முடியாத நினைவுகள்.

அன்று தான் நான் புதிதாய்
பிறந்தது போல் உணர்ந்தேன்
இதற்கு  முன்னே உணர்ந்திடாத
உணர்வுகளை கொடுத்தாய்

தமிழுக்கும் எனக்குமான பந்தம்
நான்காண்டுகளில் முடிந்ததோ..
என குமுறியது என் மனமே..
கவலையுடன் கழிந்தன சில நாட்கள்
 
என் துக்கம் தெரிந்தோ என்னவோ
எனை  இங்கே இணைத்தது காலம்
என் தமிழும் மீண்டும் உயிர்த்தெழுந்து
ஓவியம் உயிராகிறது பதிவினால்...

உன்னாலே நானும் பயணிக்கிறேன்
என் தமிழ்த்தாயின் சுண்டுவிரல் பிடித்து..
தமிழ் பேசும் நண்பர்களுடன்

கடந்த 8 ஆண்டு காலம் தெரியாது
ஆனால் இனி வரும் காலங்களில்
 உங்களுடன் நான் கைகோர்ப்பேன்..
இப்படிக்கு அன்பானவள்..
Title: Re: FTC ஒன்பதாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Ninja on July 31, 2020, 12:07:36 PM
புதிதாய் ஒரு வசந்தகாலம் மலர்கிறது
வலசை போகும் பறவைகள் கூட்டம் போலே
கடல் கடந்து, மலை கடந்து
கண்டம் கடந்து,
ஆலமரமென பரந்து விரிந்திருக்கும்
நண்பர்கள் இணையதளத்தின்
நிழலில் இளைப்பாறுகின்றோம்
வேறு வேறு வண்ணங்களும்
வேறு வேறு சிறகுகளும் கொண்டாலும்
ஒன்றாய் ஒரே வானத்தின் கீழ்
பறந்து திரிகிறோம்

சில நாட்களாய் நான் இங்கே வந்தாலும்
பல நாட்களை பழகிய பாங்கினை
கொடுத்த நண்பர்கள் இணையதளத்திற்கு
அகவை ஒன்பது கடந்தது
ஆச்சரியமேதுமில்லை.
சிறு குழந்தை வளர்வதை நேசத்துடன்
இங்கே பார்த்து சென்றவர் பலர் இருப்பினும்,
அழகாய் மலர்ந்திருக்கும் இந்த
பூவனத்தின் மணத்தில் திளைத்திருக்க
காலம் எனக்கு இப்பொழுது தான் வாய்த்திருக்கிறது

முகமறியாதிருந்தாலும்
இங்கே மனமறிந்து இணைகிறோம்
மனம் கோணலானாலும்
மறுமுறை பார்த்து சிரிக்கிறோம்.
அன்பாய் அரவணக்கும் உறவுகளும்
ஆறுதலாய் தலைசாய்க்கும் மடிகளும்
தாங்கி நிற்கும் தோள்களுமாய்
புது நட்புகளையும்
புது உறவுகளையும்
கொடுத்த நண்பர்க்ள் இணையதளத்திற்கு
அவ்வளவு அன்பும்
அவ்வளவு நன்றிகளும்
உரித்தானது.

ஒரு நாள் பார்க்காவிடினும் பதறி தேடும்
இதயங்களை
ஆண்டுகள் பல கடந்து
இங்கே பார்க்கின்றேன்
உடல் நலம் குறைந்தாலும், மன நலம் குலைந்தாலும்
தாங்கி பிடிக்கும் நண்பர்களை
ஆண்டுகள் பல கடந்து
இங்கே பார்க்கின்றேன்
மாமா, மச்சான், அக்கா, அண்ணனென
இங்கே
புது உறவுகளுக்கு உயிர்கொடுத்து
உவகை கொள்கிறோம்
எந்த காலத்தில் என்ன நன்மை செய்தோம்
நண்பர்கள் இணையதளத்தில்
நண்பர்களாய் இணைவதற்கு?

மனதின் அலுப்புகளை துடைத்தெறிய
தென்றலாய் தீண்டும் பண்பலை பாடல்களும்,
தேனமுதாய் மனதை
ஈர்க்கும் பல பல நிகழ்ச்சிகளும்,
ஊர் உறவும் கூட கொண்டாடிடாத
பிறந்தநாள் கொண்டாட்டங்களும்
தேடல்களை தீர்த்து வைக்கும்,
திறமைகளை வளர்த்துவிடும் பொதுமன்றமும்
வேறேங்கேயும் கிடைத்திடாத வரப்பிரசாதம்.
நண்பர்களால், நண்பர்களுக்காய்
வாழும் இந்த இணைதளத்தை
வரித்திட வார்த்தைகளும் பஞ்சமாகி போகிறது

முகமறியா பல நட்புகளையும்,
பாசமிகு நெஞ்சங்களையும்
குறுகிய காலத்தில் கொடுத்த
இந்த நண்பர்கள் இணையதளத்தில்
நட்பெனும் பிணைப்புக் கயிற்றால்
என்றென்றும் இணைந்திருப்பேன்.
காலங்கள் கடந்தாலும்
காட்சிகள் புதிதானாலும்
அதே கிளைகளில்
பல பல
பறவைகள் என்றுமே இளைப்பாறலுக்கு அமர்ந்திருக்கும்
பெரும் ஆலமரமாய்
FTC என்றென்றும் வேறூன்றி நிற்கும்

FTC எனும் வலுவான வேர்கள் கொண்ட பெரும் ஆலமரத்திற்கு
9 ஆம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் நண்பர்கள் முழுமையாய் சூழ இன்னும் பல ஆண்டு நிறைவு விழாக்களை காண வாழ்த்துகிறேன்