FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 23, 2020, 11:43:38 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: Forum on May 23, 2020, 11:43:38 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 232
இந்த களத்தின்இந்த  நிழல் படம்   FTC Team சார்பாக        வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F232.png&hash=678b513fa125b31ee411575a61ca7419fb425b28)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: JeGaTisH on May 24, 2020, 01:37:12 AM
காலம் என்னும் சிறு படகில் பயணிக்கிறோம்
கடைசிவரை செல்பவர்கள் யாருமில்லை!

தன் அழகை காட்டும்
பச்சை  மரங்கள்கூட
அதன் ஆயுள்  சில காலமென
அறியாமல்  சிலிர்த்து நிற்கிறது

மனிதனின் ஆயுளும்
சிறிதென  அறிவதில்லை!
ஆறடி பெட்டியில்  அவன்
அடங்கி ஒடுங்கும் வரை

காலம் என்பது கடிகாரமாக
நாம்  அதன் முட்களாக
ஓடிக்கொண்டிருக்கிறோம்
காலத்தின் முடிவை தேடி  !

குறைவான காலத்தோடு
பல கனவுகளை சுமந்தபடி
மனிதனில் அழியாதிருப்பது அறிவு
அதை நீ பயன்படுத்தி வென்றால்
ஒருநாள்  காலம் உன் கை வசப்படும்
வாழும் காலம் கொஞ்சம்
பிறர் மனம் வாடாமல்  வாழ்ந்துவிடு   !




                                      அன்புடன் ரோஸ் மில்க் ஜெகதீஷ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: Raju on May 24, 2020, 06:33:43 PM
இன்னும்
அவள்
இயங்கிக்கொண்டிருக்கிறாள்...

பெண் என்று
முகம் சிணுங்கி
பெற்றவள்
உச்சி முகர்ந்த பொழுதை
உவகையாக கொண்டு..

ஊருக்கு அடங்கி
உற்றவனுக்குள் ஒடுங்கி
பெற்றவள் ஆகி
பிள்ளை பாராட்டி
சீராட்டி
அவர்தம் குழந்தைக்கு
ஊர்க் கதை பேசி
உவகையோடு சிரித்து..

தோல் சுருங்கி
சுகம் கனந்து
ஓய்ந்து கடந்து
திரும்பிய கணங்களில்..

அவள் தொலைத்திருந்தது
அழகிய  இளமைக் காலம்...

இன்னும்
இவளைப்போல்
எத்தனை பெண்களோ
முதுமையில்
தொலைத்த இளமையை தேடுவோர்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: thamilan on May 24, 2020, 10:35:16 PM
பருவம் என்பது
காலங்களுக்கு மட்டுமல்ல
பெண்களுக்கும் உரித்தாகும்

பெண்களுக்கு தான் எத்தனை அவதாரங்கள்
சிறுமியாக இளம்பெண்ணாக
குமரியாக மனைவியாக
தாயாக பாட்டியாக
அப்பப்பா எத்தனை அவதாரங்கள்
எத்தனை பட்டங்கள்

ஒவ்வொரு பருவமும் பெண்ணுக்கு
ஒவ்வொரு மையில் கல்
அவள் ஏறிவந்த படிக்கட்டுக்கள்
அவள் தண்டி வந்த
தடை கற்கள்

பெண் என்பவள்
ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அழகு
தத்தி நடக்கும் பருவத்திலேயே
பெண்குழந்தைகள் தனிஅழகு
பாவாடை தாவணியில்
பருவம் வந்த பெண்ணாக
அவள் பேரழகு
கல்யாண காலம் வந்ததும்
அது தனியழகு
கல்யாணம் முடிந்து
கழுத்தில் தாலியும்
உச்சில் குங்குமமுமாக
மரியாதை கலந்த ஓரழகு
வயிற்றில் குழந்தை சுமந்து
வயிறு பெருத்து நடக்கமுடியாமல் நடக்கும்போது
தெய்வீக  அழகு
தலை நரைத்து
தோல் சிறுத்து
நடை தளர்ந்து
தள்ளாடி அவள் நடக்கையிலே
வளர்ந்த  குழந்தையாக
அன்பை  கூட்டும்  அவள் அழகு 

எத்தனை பருவங்கள் எடுத்தாலும்
பெண்மை போற்றப்பட வேண்டிய ஒன்று
நாம் கண்ணால் காணாத கடவுள் இறைவன்
கண்ணால் காணும் கடவுள் தாயாகிய பெண்   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: Unique Heart on May 25, 2020, 02:13:52 AM
காலம் எனும் கடலில் மூழ்கி தவிக்கும் கட்டுமரம் நாம்..

மக்களே !
வாழ்க்கை எனும் பயணத்தில் எவரும்,
எவருடனும் தொடர்ந்து பயணிக்க இயலாது.

அவர் அவர் அவர்களுடைய நிறுத்தத்தில்
இறங்கியே தீர வேண்டும்.

இப்பயணத்தில் சிலர் உடமையை இழக்க நேரிடும், 
சிலர் உறவுகளை இழக்க நேரிடும்.

சிலர் கனவுகளை இழக்கின்றனர், 
சிலர்  தம் கனவுகளுக்காக இளமையை இழக்கின்றனர்...

பயணிகள் எவராக இருப்பினும்,
பயணம் அது நிர்பந்தத்தில் நியமிக்க பட்டதே...

இதை விரும்பினும், மருப்பினும்
பயணம் அது நம்மீது சுமத்தப்பட்ட தீர்மானம்...

என்ன செய்வது?  நம் வாழ்க்கை எனும் ரப் நோட்டில்
நம்மை விட அதிகமாய், படைத்தவன் எழுதியது  ஏராளம்..

வாழ்க்கை எனும் ஆசிரியர் ஒவ்வொருவரிடமும்
ஒரு கேள்வி எழுப்புகிறார், அக்கேள்விக்கு நாம் பதில் தேடி முடிப்பதற்குள்,
அந்த வாழ்க்கை எனும் ஆசிரியர் தன் கேள்வியையே மாற்றி விடுகிறார்.

இப்பயணத்தில் நான் இழந்தவைகளும், கடந்தவைகளும் ஏராளலமாக இருப்பினும்,
நம் முதுமை நம்மை  தெளிவு படுத்தும், நம்மில் நம் இளமையில்
கழித்த நாட்கள் அதனை.....

மக்களே இதுவே வாழ்க்கையின் எதார்த்தம். படைத்தவனின் தீர்மானமும் கூட..

எனவே  வாழும் காலங்களில் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி,
க்ரோதம் தவிர்த்து, புன்னகை விதைத்து,
படைக்க பட்ட உறவுகள் அனைவரின் பேரிலும் 
அன்பு எனும் கொடியை மலரச்செய்வோமாக....

வெறுப்பது யாராயினும், நேசிப்பது நாமாக இருப்போம்.

என்றும் எம் மக்களை நினைக்க மறவா உறவாளன் --- MNA.......


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: MoGiNi on May 26, 2020, 08:12:57 PM
யாராலும்
எழிதில்
கிறுக்கிவிட முடியாத
ஓவியம் இவள்..

நடை தளர்ந்து
இடை மெலிந்து
உடல் குறுகி
ஊன் சுருங்கி
ஒழுங்கற்ற சுவடுகளால்
ஊர் அழந்த பொழுதிலும்

உன் மீதான ப்ரியங்களை
உதட்டிலேயே உறங்க வைத்தவள்

 நிலவென நீ
வர்னித்த பொழுதுகளை
இன்னும் ஸ்வாசித்து
வாழ்கிறது இதயப் பறவை...

நீ எப்படி இருப்பாய்
எனைப்போல்
எல்லாம்
தளர்ந்து
என்னவாக ஆகியிருப்பாய்...

காலச் சக்கரத்தில்
வயதை தொலைத்த பொழுதும்
இன்னும்
உன்னை
நினைக்கும் பொழுதுகளில்
அந்த
பதின்ம வயதிற்கே
மனது பறந்து தவிக்கிறது.

உனக்காக
எழுதப்பாடத
என் கடிதங்களுடன்
இயலாமையிலும்
காத்திருக்கிறது மனது..

இறந்துவிடுமுன் வா
இறுதியாய்
அந்த கண்களோடு
நான் கலந்து
கடந்திட வேண்டும்
காதலோடு காலத்தை...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: TiNu on May 27, 2020, 04:08:24 PM
வாழ்வின் விளிம்பில் நிற்கும்
எனை பார்த்து சிரித்தது
என் நாட்குறிப்பின்
இளமை பக்கங்கள்...

சிறுவயது அறியா குறும்புகள்
நண்பகல் நாளொன்றில்
நாவல் மரத்தடி பேய் தேடி
பேதையாய் சென்ற நாட்கள்...

திருட்டு மாம்பழம்
மறைக்க இடம் தேடி
மண்ணுக்குள் ஒளித்து... பின்
ஒளிந்த இடம் மறந்து..
துளிர் விட்ட மா கன்றுகள்..
இப்பெதும்பை(பெதும்பை)  பார்த்து நகைத்த நாட்கள்...

எறும்பின் மனை தேடி...
அதன் பின்னே பல காதை தூரம்
காட்டுக்குள் தொலைந்து.. தனியே
மங்கையாய் மிரண்டு நின்ற நாட்கள்..

பள்ளி தோழனின்.. தேன் தமிழ்
காதல் மடல் புரியாது
தமிழ் அய்யாவிடம் கடிதத்தின் 
பொருள் கேட்டு..
தோழனை  மலங்க  மலங்க
விழிக்க  வைத்த நாட்கள்...

வாழ்வின் பொருள் விளங்க..
பருவத்தே... மணக்கோலம் தரித்து..
தாயென பிறந்து... தாதியென வாழ்ந்து..
தனியே போகிறேன்... மீளா உறக்கம் தேடி...

உதிரும்  சருகிற்கு...
சில நொடி பசுமை
கொடுத்த நாட்குறிப்பே..
நீயும் என் பொக்கிஷமே...
இன்றும் என் மனதை வருடும்
சொல்லா காதல் போல...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: SweeTie on May 27, 2020, 06:05:21 PM
மீட்கப்படுகின்றன   என் ஞாபகங்கள் 
கடந்த காலத்தின் காதல்  விளம்பரங்கள்
நிகழ் காலத்தின்  நினைவுச் சின்னங்கள்
மூடிய  இதயத்தின்   மூலையில்   கிடக்கும்
தூசி படிந்த  திறந்த  புத்தகம்  அது 

என் புத்தகத்தின்  முகவரி அவன்
அழகான பக்கங்களின்  ஓவியமும் அவன் 
நிகரில்லா ஆண்மையின்   ஆளுமை
மிடுக்கான தோற்றம்
எனக்கெனவே  பிறந்தவனோ  ?
என்   கண்கள்  அவனை கைது செய்ய
;பழக்கங்கள்  சந்திப்புகள்  நெருக்கங்களாகின 

காதலில் சில்லிட்டு  உறைந்த நாட்கள்
காரிருள்   பகலாய்  தெரிந்த கணங்கள்
நட்ச்சத்திர கூட்டங்கள்  என் தோழிகளாய்
புடை சூழ்ந்து  நடந்து வர     
 நான் ஒரு  ராஜகுமாரி   
 ராஜ குமரணனுக்காக காத்திருக்கிறேன்
காத்திருப்பதும்   காதலில் சுகம்தானே!!

 என் விரல்கள்  எதையோ தேடுவதுபோல்
சில பக்கங்களை வேகமாக புரட்டுகின்றன

வாழ்க்கையின்  சுவாரஷ்யமான  அத்தியாயம்   
 கொட்டுமேளம்  நாதஸ்வரம்  இல்லாமல்
ஒரு காதல் திருமணம் நடந்தேறுகிறது
இருவரி திருக்குறள்  போல்
மலரும்  மணமும்  போல்   
வர்ணமயமான   பக்கங்கள் பல 
தீண்ட தீண்ட தித்திக்கும்   தேன்  துளிகள்
வண்ண வண்ண  பட்டாம்பூச்சிகள் 
தேய்பிறையை  மறந்த வானம்   
தினம்தோறும்   பௌர்ணமிகள்

பூமியின்  சுழற்சி  அப்படியே நின்றுவிடாதா
என் பேதை  மனம்  அடிக்கடி கேட்கிறது
ஓடும் மேககூட்டங்களே   நின்றுவிடுங்கள் என
கெஞ்சுகிறது  என் உள்மனம்

காலச்சக்கரம்  கட கட வென ஓடியது
புத்தகத்தின்  பக்கங்கள்  கனக்கின்றன   
புரட்டுகிறேன்
வெறுமையான  பக்கங்கள்  பல 
எனக்கு  என்னாயிற்று????
காதல் தேவன் பொறுமையை இழநதான்
என்னவனை  தன்னவன்  ஆக்கிக்கொண்டான் 
புயலில்  சிக்கிய  படகு தத்தளித்தது
காலம் நமக்காக காத்திருப்பதில்லை
 
மீண்டும் அத்தியாயம் தொடர்கிறது
எனது  பேனா  முனையில்   வார்த்தைகள்
சிக்கி தவிக்கின்றன
எழுத்துக்களில்  கை  நடுக்கம்  தெரிகிறது 
நரை யுடன்  முதுமை  கூடவே வந்துவிட்டது
கண்களில் பார்வை மங்கலாகிறது
ஆனால் நினைவுகள்  மட்டும்  மாறாமல்   நிற்கின்றன
இன்னும்  அதே இளமை யுடன்
பழுத்த  இலைகள்  வீழ்வதை  காண்கிறேன்
நியதியை  யார்தான் தடுக்க முடியும்
தூசி படிந்த  திறந்த புத்தகம்  திறந்தே இருக்கிறது 
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 232
Post by: gab on May 28, 2020, 12:00:02 AM
கடந்தகால பக்கங்களில் நிகழ்காலத்தின்
ஒளி கீற்று விழும் பொழுதுகளில்
பருவ நினைவுகள் தென்றல் காற்றென தீண்டிச் செல்கின்றது
பின்னோக்கி விழும் காலத்தின் பக்கங்களில்
நினைவுகளின் காலடியைப் பின்பற்றி செல்கிறேன்,
நினைவுகளை மீட்டெடுக்க...

கால வெள்ளத்தில் மனிதர்கள் கடந்து சென்றாலும்
நினைவுகள்  சிதறிக் கிடக்கின்றன பக்கங்கள்தோறும்
நினைவுகள் வழி மிளிரும் இளமையை நினைத்து
மூன்றாகிப் போன கால்களைக் கொண்டு
பால்யத்தின் பந்துகளை உதைத்திடுகிறேன்.

இளைமை முறுக்கில்..
நான் எடுத்தெறிந்தவர்களும், வறட்டு கௌரவங்களின்
பிடியில் விலகி சென்றவர்களும்
நினைவில் வருகின்றனர்.
அனுபவங்கள் படிப்பினைகளாக மாறிப்போயின
இழந்து போன சந்தர்ப்பங்கள் பெரியதொரு மாற்றத்தை தந்துவிடவில்லை
என்கிற புரிதல் நிலையை அடைந்திருக்கிறது.

பழைய பிடிவாதங்கள்
சிறு புன்முறுவலை மட்டுமே தருகின்றது.
வேதனைப்பொழுதுகள் பெருமூச்சுகளாகிவிட்டன.
எனினும் ஓடிக்கொண்டே இருந்த கால்களுக்கு
ஓய்வென வாய்த்திருக்கும் இந்த முதுமை ஒரு நோயல்ல..
இளமையைப் போல் முதுமையும் ஒரு பருவமே!

எல்லா படகும் கரையினை தொட்டிடத்தான் வேண்டும்.
காலமென்னு நதியில் உருண்டோடிடும் அப்படகு,
நதி சங்கமிக்கும் கடலடையும்பொழுது
சாயலிழப்பது விசித்திரமல்ல.
இளமையின் சாயங்கள் வெளுத்து
முதுமை நரையிடும்பொழுது மிடுக்கிழந்தாலும் ,
காலமென்னும் நதி தந்திட்ட இந்த நினைவுகள் அளப்பரியது...

வேதனையை மட்டும் முதுமைக்கு
எடுத்துச்செல்ல  வேண்டுமெனில்
முதுமையின் பாரத்தில்
பழுத்த இலைகள் போல
உதிர்ந்திடத்தான்  வேண்டும்.

கடந்து வந்த இளமை கால பக்கங்களின்
இன்ப நினைவுகளை கொண்டு
ஊஞ்சலாடும் மனதிற்கு மட்டும்
முதுமை என்பது எப்பொழுதும் இல்லை.


  -என்றும் மனது 22 இல் நிலைத்திருக்கும்  நான்.