FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 01, 2012, 06:45:41 PM
-
ஆறுகள் பலவும் வற்றிப் போயாச்சி
குளங்கள் மனையாகி மாடி வீடாச்சி
வயலில் உழைப்பவன் என்றும் வறியவன்
விளைச்சலுக்கு கிடைப்பது சொற்ப விலை
வாங்குபவன் கொடுப்பது கொள்ளை விலை
இடையில் எங்கோ பதுங்குது பெருந்தொகை
சேரியில், நடைபாதையில் லட்சம் பேர்
வியர்வையில், வியாதியில் வாழ்க்கைமுறை
விடியலில்லை, விடுதலையில்லை இவர்கட்கு
வேட்கையுடன் விரட்டுகிறார் கானல்நீரை
வெள்ளித்திரை வித்தகர்கள் பை நிறைக்க
விசிலடித்து மெய் சிலிர்க்கும் விசிறிகள்
குளுகுளு அறையில் கோடிகளின் கதகதப்பில்
கொழிப்பவர் மேலும் மேலும் கொழிக்க
மகன், மகள், பேரனென குலம் செழிக்க
தக்கவைத்த அதிகாரம் ஆனைபலம்
கூடா நட்பும், கொடிய பேராசையும்
கூடாரம் மாறி மாறி கோலோச்சும்
விலை கொடுத்து பெற்ற கல்வி
வேலை பெற்றுத்தர உதவவில்லை
திண்டாடுது இளைஞர் பட்டாளம்
திசை மாறுது இளையவர் கூட்டம்
இவர் உய்ய அரசில் இல்லை திட்டம்
இயற்றுவதில்லை அர்த்தமுள்ள சட்டம்
இயற்கை வளத்தை அழிக்கும் கயவர்கள்,
இயல்பு வாழ்வை அச்சுறுத்தும் வெறியர்கள்,
சுயநலம் மறவா கொடுமன தலைவர்கள்,
சுயபுத்தியில்லா ஆட்டுமந்தை தொண்டர்கள்,
வசதியாய் வளரத் தெரிந்த குள்ள நரிகள்,
நாட்டின் நலம் குலைக்கும் பாதகர்களிவர்.
அரசியலிங்கு கவர்ச்சியானதோர் நாடகம்
கண்கட்டு வித்தை போலொரு காலட்சேபம்
வேடிக்கை பார்க்கும் கோடான கோடிக்கு
ஆக்கமில்லை, ஊக்கமும் உயர்வுமில்லை
வளர்ச்சிக்கு வழிகாட்ட யாருமில்லை
வியர்த்தமான கேளிக்கைக்கு பஞ்சமில்லை
வக்கிரங்கள் அம்பலத்தில் ஆடவேண்டும்
அகில உலக பந்தயத்தில் ஓட வேண்டும்
வெட்கமில்லா வழக்கங்கள் வளர்க்க வேண்டும்
விவேகமில்லா விளக்கங்கள் வழங்க வேண்டும்
அழிவுப் பாதையிலே பாய்ந்து செல்லவேண்டும்
முழு இனமும் சீரிழந்து அலைய வேண்டும்
படைத்தவன் அலுத்துத்தான் போனானோ?
மீண்டும் படைக்க ஆவல் கொண்டானோ?
அழித்திட அவன் திருவுளம் கொண்டபின்
அவலங்கள் இங்கு தொடர்கதைதானே!
-
சமூக அவலங்களின் நீண்டதொரு பட்டியல்!
பட்டியல் வசிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும் கூட!
நாமும் சிந்திப்போம் பிறரையும் சிந்திக்க வைப்போம்!
நல்ல புரட்சிகரமான கவிதை ஜாவா மச்சி!
தொடரட்டும் உங்கள் கவிகள்!