FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on June 27, 2019, 09:50:28 PM

Title: கண்ணாடிக் குடுவைக்குள் கடல் தேடும் மீனாய்
Post by: இளஞ்செழியன் on June 27, 2019, 09:50:28 PM
     
பின்னாளில் என் பிரார்த்தனைகள் வேறாகிப் போயிருந்தது
நான் அப்போதைக்கு அடிவாங்கிப் பக்குவப்பட்டிருக்கலாம்
எப்போதும் கேட்கும் பணம், செல்வம், காதலெல்லாம்
தள்ளி நிறுத்தப்பட்டிருக்கலாம் அதற்கு மடைமாற்றியாய்
சில மனிதர்கள் பயன்பட்டிருக்கலாம்.

ஒருநாள் அத்தனைப் பிடிக்கரமும்
என்னைத் தூக்கி வீசி விடும்
பெரும் வானில் பறக்கும் போது
சிறகிரண்டும் காணாமல் போன
சிறு வண்ணத்துப் பூச்சியாய் விடப்பட்டிருப்பேன்
ஊடவே பயணித்து வந்து ஆசுவாசத்தைப்
பகிர்ந்து கொண்டவர்களால் சபிக்கப்படலாம்

இருப்பவர்களெல்லாம்
உதாசீனப்படுத்தி விட்டுச் செல்லலாம்
என் இருப்பு நிலையற்றதாகிப் போகலாம்
நான் சென்றடையக் கூடில்லாமல் திரியலாம்
உரிமையான ஒவ்வொன்றும் பிடுங்கி எறியப்படலாம்
உடுத்தியவைகள் கூட உனதில்லை எனக் கூறி
உடம்பைக் கூசச் செய்யலாம்.

பிடிவாய்ச் சோற்றுக்காகத் பிச்சையெடுக்கலாம்
செய்து மன்னிப்பு கோரிய தவறுகள்
கோர்த்துக் கொச்சையாக்கிக் குத்திக் காட்டப் படலாம்
எனக்கென்று இருந்ததெல்லாம் இல்லாமல் போகலாம்
நேற்றின் வார்த்தைகள் உள்ளூறக்
கொப்பளித்துக் கொண்டிருக்கலாம்

எல்லாவற்றையும் துறந்து
அப்போதைக்கு அழுது தீர்க்க ஓர் இரவு வேண்டும்
இருளோடு நான் உரையாடினால் போதும்
பேருலகமே இருண்டிருந்தாலும்
என் இருளான அறை மட்டும் எனக்கு
ஒளியாய் இருந்தால் போதும்
தேவையில்லாத குப்பைகளுள்
ஒன்றாகவே வாழ்ந்திடுவேன்

நீளுமென்_சரீர_பயணம்