FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on June 17, 2019, 12:14:12 PM

Title: விலகியே இரு சகியே.....
Post by: இளஞ்செழியன் on June 17, 2019, 12:14:12 PM
சுயவிளக்கம் தேவையிராத ஒரு பேரன்பை உனதாக்குவேன்

ஆயினும்
கூர்படிந்த நகங்களும்
கரடுமுரடான சருமம் கொண்ட கரங்களாலுமானது
என் அன்பு

மென்தகடொத்த மெல்லிய சவ்வாய்
உடைதல் தவிர்த்திருக்கும்
உன் இதயத்தை
நித்தம் உடைக்கும் தொழில் செய்யும்படிக்கான
சாபமேறிய கையறுநிலை கொண்டு
ஆசிர்வதிக்கப்பட்ட என் அன்பை
பேரன்பு என சொல்லித்த்திரியும் திராணியில்லை இனியும்

எக்காரணமும் உன்னை தேற்றா..
இன்னும் சில நாழிகைகளுக்கு
இல்லையெனில் சில நாட்களுக்கு

உடைவாய்..
உடைதலின் நிமித்தமாய்
சுயம் வருத்திச் சிறுக்கி
பின் சுருக்கி
மௌனத்தின் சிமென்றுக்கலவை கொண்டு
உன் நியாங்களுக்கு அணையுமிடுவாய்

உன் பேரமைதிக்கு முன்
மண்டியிட்டு கெஞ்சவோ
இல்லை அறுதியின்றி
மன்னிப்பின் நதியாய் உன்னை சூழ்ந்துக்கொள்வதிலோ தயக்கமொன்றும் இல்லை

சொல்லும் உண்மைகள்
சூழலுக்கு பொருந்தவில்லை என
நீ உரைப்பதோ
இல்லை உண்மை என
ஏற்றுக்கொள்ள இயலாத
உன் உள்ளத்து வெளிப்பாடோ

பின்னரொருப் பொழுதில் காரணங்களின்றி என்னை மன்னித்தப்பின் நீ திரும்புகையில்
உன் மீது வெறுப்போ கோபமோ கொள்ளவைப்பதில்லை

மெல்லிய இழையொன்றில் ஊசலாடும் என் மீதான உன் நம்பிக்கையின் பாரங்களை கடந்தே நிற்கிறது உனக்கான என் இதயம்

உனக்கு வலிகளை மட்டுமே பரிசளிப்பவன் நான்
எனக்கு அன்பை பரிசளிப்பவள் நீ
எனும் விளக்கத்தை
எப்போதென தெரியாப்பொழுதொன்றில்
சிந்தனைச் செல்களின் உட்சுவரெங்கும் கிறுக்கி வைத்திருக்கிறேன்

எனக்கான வலி என்பது
உனை உடைத்தல்

நீ தேவதை
நானோ
உடைத்ததலிற்கான சுத்தியல்

உடைதல் தவிர்த்திட வேண்டியேனும்
விலகியே இரு சகியே..
Title: Re: விலகியே இரு சகியே.....
Post by: Guest 2k on June 19, 2019, 12:54:26 PM
அட்டகாசமான கவிதை நண்பா