FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on January 13, 2019, 12:57:23 AM

Title: ♡♡ இரவு பெண் ♡♡
Post by: Guest on January 13, 2019, 12:57:23 AM
பொன்னந்தி பொழுது.
ஒரு திசை சூரியன்
ஓய்வெடுக்க
உறிஞ்சியெடுத்த
சில துளி
வெளிச்சங்களை
உமிழத் தயாராகிறது
சந்திர அகல் விளக்கு.

சூரிய புத்திரனோ
வேறு திசையில்
வெளிச்சம் பரப்பி
பகல் விளக்காய்

இரவுகளோ
இதற்காக தான்
காத்திருந்தது போல
களி நடன அரங்கேற்றம்

வீடுகள் மாடிகள்
எல்லாவற்றிற்கும்
தாமஸ் ஆல்வாவின்
செயற்கை சூரியன்
அத்தியாவசிய மாகிறது.

உழைப்பின்
அசதி இரவாகிறது.
உயிர் கூடு சற்று
உறங்குகிறது
நிம்மதியில்.
ஒரு புறம்

காமப் பேய்களின்
களிநடனம்
கறை படிந்த
இரவின் வசந்தம்
மறுபுறம்.

இரவுகள்
இறைவன் வகுத்த
நிம்மதி உறக்கங்கள்.
இமைக்க மறந்தால்
பித்தனாகி விடும்
அபாயம்.

இரவுகள்
இளைப்பாறுவதற்கு
ஆசீர்வதிக்கப்
பட்டவைகள்.

பறந்து ஒய்ந்த
பறவைகளின்
அமைதிச் சிறகுகள்
ஓய்வெடுக்கும் வேளை.

கடலன்னை சற்று
நிதானமாக
தன்னை
தாலாட்டும்
நேரங்கள்.

ஆனால்
பல முகாரிகள்
இங்குதான்
பிறக்கின்றன.

பூபாளத்திற்கும்
ஏங்குகின்றன.
ஆடைகள்
களையப்படுவதும்
அரங்கேற்றங்கள்
அநாவசியமாக
நடைபெறுவதும்
பெரும்பாலும்
சூரியனின் மறைதலில்.

கவிதைகளின்
அதிக ஜனனம்.
காயங்களின்
மரண வலிகள்
வாழ்க்கையின்
உச்ச பட்ச விரக்தி

எல்லாமே
ஞாபகங்களாய்
என்னிலும்
எல்லோரிலும்
தூசி தட்டிக்
கொள்ளும்
தருணங்கள்.

இரவுகளும்
புனிதமானவைகள்
மனிதம் பேணும்
மனிதர்களுக்கும்
மனிதனாக
வாழ
நினைப்பவர்களுக்கும்

சற்றே ஓய்வு தேவை
சாய்ந்து கொள்ள
தோள் தேவை.
தேவைகள்
பூர்த்தியாக்க
தேவதை தேவை.

இரவே உன்
அருள் தேவை.
நித்தமும் வந்தெனை
அணைத்துக் கொள்.

நினைவுகளை
முத்தமிட
நிலா முற்றம்
நிம்மதியாய்
நானுறங்க
தாலாட்டு நீ
பாடி என் நெஞ்சு
குளிர்விக்கும்
குளிர் இரவே
என் மஞ்சம்

என்ன ஒரு அழகு
அட
இரவு பெண்ணுக்கு
யார் பொட்டு வைத்தது?!
Title: Re: ♡♡ இரவு பெண் ♡♡
Post by: Guest 2k on January 16, 2019, 11:44:28 AM
அருமை நண்பா!