FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on December 04, 2018, 09:11:04 AM

Title: மழைப் பாடல்
Post by: Guest 2k on December 04, 2018, 09:11:04 AM
மழைப் பாடல்

இன்றைக்கும் மழையென
சலித்துக் கொண்டு வீதியில்
இறங்கும் ஒரு நாளில்
புதுதளிர் மலர்ந்த
தெருவோர செடி
மழைத்துளி சூடி நிற்கிறது
கழுவி துடைக்கப்பட்ட
ரோட்டில் முகம் பார்த்துச் செல்கின்றன
ஒவ்வொரு வாகனமும்
பொம்மையின் சாயலில்
தந்தையின் முதுகில் முகம் பதித்து
செல்லும் ஒரு தேவதைக் குழந்தை
மென்முறுவலை ஏந்திக் கொண்டு
நீர் குட்டைகள் தாண்டும்
வண்ணத்துப்பூச்சி பெண்ணொருத்தி
பலநிற குடைக்களுக்கிடையே
புதிதாய் பூத்த ஒற்றை ரோஜா போன்ற
செந்நிற குடையொன்று
பூக்களுக்கு குடைப் பிடித்து
அமர்ந்திருந்த
வெறுப்பின் பாவனையற்ற
மலர் முகம்
சில்லிட்டிருந்த ரயில் கம்பிகளின்
வழி
மிச்சமிருக்கும் நீர்த்துளிகளை
சுவைக்கும்
நகப்பூச்சு அணிந்த பாவை விரல்கள்
தொடர்பறுத்திருந்த
பேரன்பு ஒன்றின் எதிர்பாராத தொலைப்பேசி அழைப்பு
மழை நனைத்த மஞ்சள் நிற
ஊர்தியில் இருந்து
மழையை நனைத்தபடி செல்லும்
பிஞ்சு விரல்கள்
மழை வெறுத்து, மழை நனைத்து
எழுத்தப்படும் கவிதை ஒன்றின்
முடிவில்
பொழியத் துவங்குகிறது
பெருமழையொன்று
Title: Re: மழைப் பாடல்
Post by: Guest on December 04, 2018, 03:12:53 PM
ஏசி மனிதர்களுக்கும்
தூசி மனிதர்களுக்குமான
வாழ்வியல் இடைவெளி - அடைமழை!
Title: Re: மழைப் பாடல்
Post by: Guest 2k on December 04, 2018, 04:32:18 PM

நண்பா இதற்கு ஒரு எதிர் கவிதை நானே எழுதலாம்னு இருக்கேன் 😀
Title: Re: மழைப் பாடல்
Post by: Guest on December 04, 2018, 05:25:28 PM
ஆஹா! .. நல்லது மழை  என்றாலே கூடவே எதிர்காற்று அடிப்பது வாடிக்கையே......
Title: Re: மழைப் பாடல்
Post by: joker on December 04, 2018, 07:53:56 PM


அருமை

தங்களின் மழை கவிதை படித்து எனக்கு தோன்றியது இது


அதோ கார்மேகங்கள்
வானத்தை சூழ்ந்துகொண்டிருக்கிறது
இதோ தும்பிகள் ரீங்காரம்
என் காதில் விழுகிறது

சில்லென்று மழை துளிகள்
மண்ணை நனைக்கிறது

மண்ணின் வாசனை
மெல்ல மேல் எழும்புகிறது

இடியின் சத்தம்
என்னை அதிர்ச்சியுடன்
ஆச்சரியபடுத்துகிறது

இதோ நனைய நான்
ஆசை கொண்டு
வெளியில் வருகிறேன்

கால் தடுக்கி
மழை நீரில் விழுகிறேன்

நண்பன் தோளில் தட்டி
எழுப்புகிறான்

விழித்தேன்
வறண்டபூமியில்
கனவிலேனும்
மழையை ரசிக்க விடாமல்
எழுப்பிய நண்பனை
திட்டியபடி


Title: Re: மழைப் பாடல்
Post by: Guest 2k on December 04, 2018, 11:35:03 PM
பதில் கவிதை மிக்க அருமை ஜோக்கர் :) அன்புக்கு நன்றி