FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 30, 2018, 04:04:18 PM

Title: சலனமற்றுகிடக்கிறது பூமி....
Post by: Guest on November 30, 2018, 04:04:18 PM
அப்படியே சலனமற்றுக்கிடக்கிறது பூமி
துளைத்து ஆழங்களில்
அதிபயங்கரமாய் செலுத்திய
நச்சுக்களை தாங்கி
உள் வெந்து நெருப்புக்கவளங்களாய்
குடல்கள் கொப்பளித்து வீசும்
வெப்பத்தை அணைத்து குளிர் தருவார் தேடி
அப்படியே சலனமற்று கிடக்கிறது பூமி....
.
சூரியக்கதிர்களின் வீச்சில்
வெந்த சருமங்களை வியர்வையால்
நனைத்துழும் உழவனின் பாதச்சுவடுகளின்
மசக்கலில் செழுமை கொண்டு
குதூகலித்த பூமி வெறுமையில்
வீற்றிருக்கிறது....
.
தீர்த்தமாய் தூறும்
மழையின் முன்னால்
மண்டியிட்டமர காத்துக்கிடக்கிறது
வானம் பாத்த பூமி - இரை தி்ன்று
புறந்தள்ளிய தூண்டில்களாய்
வளைந்து நெளிந்து
நொடிந்து வீழ்கிறான் விவசாயி....
.
தண்ணீர் கேட்கிறது பூமி
சலனமற்று சாவின் வளிம்பில்
தொண்டை நனைக்க
துளி தண்ணீர் கேட்கிறது பூமி
வாய்க்கால்களில் மிதந்து போயின
வரப்புகளின் நீதி....
.
களனியில் பதித்த பாதங்களில்
சோற்றுப்பருக்கைகள்
முட்களாய் குத்தின
உலர்ந்து போனதொரு பழைய சாதத்தின்
பருக்கைகள்.....
.
நெருப்பை விதைத்து
நெருப்பை கொய்து
நெருப்பாய் போகும் மண்
சலனமற்றுகிடக்கிறது பூமி....