FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on November 15, 2018, 04:09:08 PM

Title: பகல்பொழுதுகளின் யட்சி
Post by: Guest 2k on November 15, 2018, 04:09:08 PM
பகல்பொழுதுகளின் யட்சி

பகல் பொழுதுகளில் தனித்திருக்கும்
வீட்டுப் பெண்ணிற்கு
இரவைப் பழக்குவதை விட பகலைப் பழக்குவது கடினமான ஒன்றாயிருந்தது
இரவிற்கு பல கதைகள் உண்டு, இரவைப் பழக்குவதற்கென்றும் சில கதைகள் உண்டு
ஆனால் பகல் ஒரு முற்றும் துறந்த முனிவரின் சாயலில் பேரமைதி கொண்டிருக்கும்.

பகல் பொழுதுகளில் தனித்திருக்கும்
வீட்டுப் பெண்ணிற்கு
பகல் ஒரு நெடுங்கால சோகத்தை கொண்டிருப்பதாக தோன்றும்
குட்டிப் போட்ட பூனைப் போல
வீட்டை வலம் வரும் அவளுக்கு பகலின்
சோகம் தாளவியலாததாக இருக்கும்
ஆயினும் பகல் பொழுதின் மௌனம்
கனத்த இறுக்கம் கொண்டது
இரவு போல் அழுகைகளை என்றும்
புதைத்துக் கொள்ளாது பகல் பொழுது

பகல் பொழுதுகளில் தனித்திருக்கும்
வீட்டுப் பெண்ணிற்கு
தொலைந்தவை, தொலைந்துப் போகக் கூடிய சாத்தியமுள்ளவை
என அனைத்தும் அத்துப்படி
நொடியில் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு பின் சேர்த்து வைக்கும் அற்புதம் நிகழ்த்தித் தரும்
பகல்பொழுது
உணர்வுகளும் உணர்வற்றதன்மையும் தரும் பகல் பொழுது ஒரு
நெருப்பினூடே நகரும் நத்தை

பகல் பொழுதுகளில் தனித்திருக்கும்
வீட்டுப் பெண்ணிற்கு
வீட்டின் மதில்கள் வாழ்வியலை சொல்லிக் கொடுக்கும் பேராசான்
வீட்டின் கிணற்றடி அவளுக்கு போதிமரம்
வீட்டின் சாளரங்கள் இடைவெளி அளவுகோல்கள்
வீட்டின் முற்றம் அவளின் பால்யம் தாங்கி நிற்கும் பெருமரம்
வீட்டின் நிலைகள் உண்மைக்கும் பொய்க்குமான திறவுகோல்கள்

பகல் பொழுதகளில் தனித்திருக்கும்
வீட்டுப் பெண்
தனிமைக்கு தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்வாள்
தனிமையின் அதீதன் யட்சனை தேடிச் செல்வாள்
யட்சனுக்கு பல கதைகள் சொல்லுவாள்
யட்சனுடன் நடனமாடி மகிழ்வாள்
யட்சன் மடியில் முயங்குவாள்
முடிவற்று நீளும் அப்பகல் பொழுதில்
வீட்டுப் பெண் ஒரு யட்சி போல
தனித்து
வலம் வருவாள்
Title: Re: பகல்பொழுதுகளின் யட்சி
Post by: JeGaTisH on November 15, 2018, 04:15:12 PM
இரவு போல் அழுகைகளை என்றும்
புதைத்துக் கொள்ளாது பகல் பொழுது

 ;) ;) ;) ;) அழகான வரிகள் சிக்கு ...கவிதைகள் தொடரட்டும்.
Title: Re: பகல்பொழுதுகளின் யட்சி
Post by: Guest 2k on November 15, 2018, 04:29:09 PM
ஆஹா ஜெகாமா என் கவிதையை படிச்சிட்டீங்களா  ;D இந்த சந்தோஷத்த கொண்டாட இன்னொரு கவிதை எழுதனும் போலயே..