FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on November 15, 2018, 02:06:23 AM
-
மீட்சிகளில் நம்பிக்கையிழந்த
தினமொன்றில் வாழ்கை குறித்தான
உன் அவநம்பிக்கைகளை முணுமுணுத்தபடி கடக்கிறாய்...
நம்பிக்கைகளின் காலிக்கோப்பையை
சுட்டிக்காட்டி யார் யாரோ இதுவரை
ஊட்டிச்சென்ற நம்பிக்கைகளை
மாயை எனக்கொள்கிறாய்.
கண்ணாடிப் பாலமொன்றின்
விளிம்பிலமர்ந்து இனிக்கடக்கயியலா
என அழுது பிதற்றுகிறாய்.
காதலும் வாழ்க்கையும்
ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை
அப்படியே அவற்றின் இயல்புகளும்.
எத்தனை நேசித்தாலும்
எத்தனை முறை உணர்த்தியிருந்தாலும்
தினம் தினம் புதிதாய்
கவனம் கேட்கும் காதல்.
எத்தனை அடர்த்தியாய் இருப்பினும்
மெனக்கெடல்கள் கொண்டல்லாமல்
காதலை கொண்டலைய இயலாது.
வாழ்க்கையும் அப்படியே
புதிது புதிதாய் காரணங்களை தேடும் அது.
குறைந்தப்பட்சமாய்
அனுதினமும் அதற்கான நம்பிக்கைகளை
தேடிக்கொண்டே நிற்கும்.
வாழ்வின் நம்பிக்கைகள்
வெறும் தன்னம்பிக்கைகள் மட்டுமல்ல..
'தீதும் நன்றும் இறை தராது வாரா'
என்னும் நம்பிக்கை கொள்.
உனக்கான வலிகளை கொஞ்சம்
விலகிநின்று ரசிக்கும் கலை பழகலாம்..
இதுவரை அற்புதங்களில்
நம்பிக்கையில்லையெனில் இனியேனும்
அற்புதங்களை நம்பத்தொடங்கு..
வாழ்க்கையென்பது வழிநெடுக
அற்புதங்களை மறைத்து
வைத்துக் காத்திருக்கும்
ஒரு காட்டுவழிப்பாதை...
-
வரிகளின் நடை அருமை வாழ்த்துக்கள்.