FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on November 10, 2018, 12:39:56 AM

Title: ஒழுங்கற்றவைகளின் அழகியல்
Post by: Guest 2k on November 10, 2018, 12:39:56 AM
ஒழுங்கற்றவைகளின் அழகியல்

ஒற்றைச் சாளரத்தின்
நூலாம்படையில் சிக்கியிருக்கும்
பூவிதழ் ஒன்று
புறக்கணிப்புகளின் வழி நெடுநாளாய்
நின்றிருக்கும் பெரும்பாறை
ஒன்று
சாக்கடைப் புழுக்களை
கொத்தித் தின்ன காத்திருக்கும்
வெண்கொக்கு ஒன்று
மீதமிருக்கும் கடைசி பழத்தை
அழுகல்களிடையே கிடக்கும் தெருவோரவாசிக்கு விட்டுச் செல்லும்
ஏழைப் பெண்ணொருத்தி
அழகான வர்ண சுவர் நிறைந்த கொஞ்சும் மழலையின் கிறுக்கல்
மைவிழிக்கண்களை விட்டு வெளிச் சிதறும்
மைத்தீற்றல்
குளிரில் சிணுங்கித் திரியும் தெருநாயின்
சிறு குட்டிகள்
அஜ்ஜியின் மஞ்சள் முக வெற்றிலைச் சிரிப்பு
சிகரெட் கங்குகளிடைய முடிக்கப்படாத
பேரழகியின் சித்திரம்
பாதம் சுடும் பொன்மணல்
கடைசி இணுங்கல் மிச்சமிருக்கும் தேய்பிறை
முகமழிந்த பழைய புகைப்படத்தின் கடைசி தங்கயின் பஞ்சு விரல்கள்
பிரிந்து சென்றவரின் மணம் மீதமிருக்கும்
பழந்துணி ஒன்று, மற்றும்
எந்தவித ஒழுங்கும் இல்லாமல்
சிதறிக் கிடக்கும் இச்சிறு கவிதை கூட
ஒழுங்கற்றவையின் அழகியல் தான்
Title: Re: ஒழுங்கற்றவைகளின் அழகியல்
Post by: gab on November 10, 2018, 11:40:00 PM
கவிதை அருமை. தோராயமாக தினமும் ஒரு கவிதை என்ற அளவில் உங்களோட கவிதை புயல் வீசிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துகள்  சிக்கு .
Title: Re: ஒழுங்கற்றவைகளின் அழகியல்
Post by: Guest 2k on November 11, 2018, 07:45:01 AM
அன்பிற்கு நன்றி gab, தினம் ஒரு கவிதை எழுத எனக்கும் ஆசை தான். இருந்தாலும் என் கற்பனை வறட்சி அதற்கு இடமளிப்பதில்லை :).
Title: Re: ஒழுங்கற்றவைகளின் அழகியல்
Post by: SweeTie on November 12, 2018, 04:50:36 AM
ஒழுங்கற்றவைகளின் அழகியல்  ஒழுங்காக  அழகு படுத்தப்பட்டுள்ளது.
கவிதை வரிகள் ஒன்றின்மேல் ஒன்று கட்டிப் புரள்கின்றன.   அவை  பந்திகளாக
பிரிக்கப்பட்டால்   மேலும் அழகுறும்  என்பது எனது கருத்து .    தொடரட்டும் 
உங்கள்  கவிப்பயணம்.    வாழ்த்துக்கள்.  .