FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on November 01, 2018, 04:02:59 PM

Title: பேரன்பின் வாசல்
Post by: Guest 2k on November 01, 2018, 04:02:59 PM
பேரன்பின் வாசல்

வெட்கை நிரம்பிய ஒரு பகற் பொழுதில்
தாகம் தணிந்திட
என் மீது கொடிகளை படரச் செய்தாய். பிறகெப்போதும் வாடிவிடாத
கொடிகள் எனை
பசலை கொள்ளச் செய்தன.
களைய முடியாத கொடிகள்
நாளும் வளர்ந்து நிற்கிறது.
நீ தொடும் ஒவ்வொரு அற்புதத்திற்கும்
என் கொடியில்
ஒரு
செங்காந்தள் மலரும்.

என் குளிர்ந்த கண்களை
சிவக்கச் செய்யும்
வித்தை அறிந்த அதீதன் நீ
கலாபமென உன் தோகையை
மஞ்சமென அந்திக்காவலன் ஒளியில் விரித்திருக்கும்
உன் கவின் பேரழகிலும் பேரழகு.
உன் விரல் உரசிடும் ஒவ்வொரு
தருணத்திற்கும்
ஒரு காயாம்பூ மலரும்

உனை காணும் நொடிபொழுதெல்லாம்
ஏறி இறங்கும் என் வானம்.
மின்னும் உன் கண்களின் ஒளியை
கைகளில் ஏந்தி பிடிக்கும் தருணத்தில்
என் வானில் மழை பொழியும்.
இந்த வானத்திற்கு
காத்திருப்பை அறியச் செய்தவன் நீ

சரிகைத் தாளை சுற்றிய இதயங்கள் பறக்கும் கனவுகளை பரிசளிப்பவன் நீ
என் மனவலிமைகளை கொல்லும்
மாலைப் பொழுதுகளில்
சாளரத்தின் அருகே தோள்கள் உரச அமர்ந்திருக்கும் தருணங்களை நீ தரும் நேரத்திற்காக காத்திருப்பேன்.

என் கதவுகளின் காவலனே,
உன் பாதங்களுக்கு கோடி முத்தங்கள்.
உன் கரங்கள் பற்றிடும்
அந்நாள் நான்
நினைக்கும்பொழுதே வாய்க்க வேண்டும். ஆகிருதியான உன் புஜங்களில்
நான் தலை சாய்க்க வேண்டும்
உன் மடி மீது நான் வீழ்ந்து கிடைக்க
ஜீவ நதிகள் வெளியேறும்
நம் உடல்களில்
மெல்லிய வெண்ணிற பூக்கள் மலரும்.
கடக்க முடியாத எல்லைகளை
கடந்து முடிக்கும் அத்தருணத்தில்
கடவுளின் பட்டாம்பூச்சிகளாய்
உலா வருவோம்.

முடிவிலியான ஒரு பெருங்காதலுக்கு
என்னை
தயார் செய்து கொள்கிறேன்.

Title: Re: பேரன்பின் வாசல்
Post by: gab on November 01, 2018, 04:18:13 PM
கவிதை எழுதும் திறமையை  பொதுமன்றத்தில் பதிவிட்ட  முதல் கவிதையிலேயே வெளிப்படுத்தியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சிக்கு.
தொடரட்டும் உங்கள் கவிதை பயணம்.