FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest 2k on October 30, 2018, 09:31:34 PM

Title: வாழ்ந்துகெட்டவனின் வீடு
Post by: Guest 2k on October 30, 2018, 09:31:34 PM
வாழ்ந்துகெட்டவனின் வீடு

காலம் தின்றுசெரித்த பூவரச மரத்தின்
நிழல் விழும் அவ்வீடு
வாழ்ந்துகெட்டவனின் வீடு

நொடித்திருந்த நிலைக்கதவுகளுக்கு
பேரானந்தத்தையும் பெருஞ்சோகத்தையும் தாங்கிய
ஓராயிரம் கதைகள் தெரியும்

வண்ணப் பொட்டுகள்
நிறைந்திருக்கும்
ரசம் ஏறிய கண்ணாடியில்
காலம் சொல்லும் வீட்டுப்
பெண்களின் கண்ணீர் கதைகள்

வலசைப் போன
பறவையின் சாயல்களைக் கொண்ட
சாவிகளற்ற பூட்டுகள்
ஆளற்ற வீட்டில்
குழந்தைமையின் சபரிசங்களை தேடும்
கை உடைந்த பொம்மைகள்
துருப்பிடித்த பெட்டியில் மிஞ்சியிருக்கும்
அம்மம்மாவின் புடவை வாசனை
யாரோ எப்பொழுதோ விட்டு சென்ற
சோழிகளிரண்டு தனித்திருக்கும்
சிதலமடைந்த திண்ணைகள்

கரையான் அரித்த புகைப்படங்களின்
தெளிவற்ற முகங்களின் புறத்தே
நித்தியமாய் தெரிவது
வாழ்ந்துகெட்டவனின்
கம்பீரமான வீடு மட்டுமே

எலிவளைகளும் கரையான் புற்றுகளும்
தாங்கி நிற்கும்
அவ்வாழ்ந்துகெட்டவனின் வீட்டிற்கு
மட்டும்
ஆயிரம் வாசல்கள்
Title: Re: வாழ்ந்துகெட்டவனின் வீடு
Post by: Guest on November 01, 2018, 04:49:30 PM
Wow.... nice one
Title: Re: வாழ்ந்துகெட்டவனின் வீடு
Post by: Guest 2k on November 01, 2018, 05:32:13 PM
நன்றி நண்பா :)