FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on October 22, 2018, 06:51:31 PM
-
சிலந்திவலை மகுடமணிந்த
சிரசோடு பரிச்சயமான அந்த
வீட்டில் மெல்ல உள் நுழைகிறேன் நான்.
உட்பக்க தாழ்ப்பாளிட்டே பூட்டப்பட்ட
அவ்வீட்டின் உள் அறைகளிலும்
ஜன்னல்கள் வழியே கைவிட்டு
தாழ்திறக்கும் இலாவகம் அறிந்தவன்.
இருந்தாலும் பொறுமை கொள்கிறேன்.
இது பழமை மாறாத உள்ளும்
புதுமைக்கூடிய புறமும்
சரிவரக் கலந்து கட்டிய
ஒரு பழம்புது வீடு.
எனக்காக மாடிப்படிகளையும்
ஓடுகள் கூடிச்சேரும்
மழை முற்றங்களையும்
மாடி முகப்புகளையும்
அறைகளோடு சேர்ந்த வெளிகளையும்
நட்சச்திர கூரையிட்ட மொட்டைமாடிகளையும்
மனம் சுருங்கும் ஒரு நாளில் கதைவடைத்து உறங்க
இருட்டடர்ந்த ஒரு உலர் அறையையும்
கொண்டாட்ட மனநிலையில்
கூடியமர்ந்து கதை பேசவென
சாய்வு நாற்காலியிட்ட
ஒரு தளத்தையும் கொண்ட
எனக்கான வீடு.
கதகதப்பாய் உணர
எங்கே துயில வேண்டுமெனவும்
கவிதை ஊற
எங்கு அமர வேண்டுமெனவும்
காற்று வர
எந்த ஜன்னலை திறக்க வேண்டுமெனவும்
அத்தனையும் நான் அறிந்த வீடு
தாழிடப்பட அவ்வீட்டின் உள்ளறைகளை
எளிதாய் திறக்கும் சூட்சுமம் அறிந்தவன் நான்.
ஆயினும் எனோ
பூட்டியிருக்கும் அவ்வீட்டில்
ஒட்டடை படரல்களை
கையால் புறந்தள்ளி
உலாத்திக் கொண்டிருக்கிறேன்.
இது எனக்கான என் வீடு..