FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on September 22, 2018, 08:07:15 PM
-
அவனோடொரு சந்திப்பமைந்தால்
முன்முடிவுகளோடு மறுதலிக்காதிரு..
உனக்காக உன்னை விட்டுப்போனதின்
காயங்களை கவிதையாக்கி உனக்கு
வாசித்துக் காட்டவென காத்திருந்திருக்கலாம் அவன்.
தன்னை மீறிய ஒரு தயக்கத்தால்
கைநழுவிப்போன உன் நேசத்தைக்
குறித்த ஒரு ஆற்றாமையோடே
நாட்கள் நகர்த்திக் கொண்டிருக்கலாம் அவன்.
உன் முகம் நோக்கும் வலிமையில்லாமல்
குற்றஉணர்ச்சியில் உழன்றுக்
கொண்டிருக்கலாம் அவன்.
இத்தனை தாண்டியும் உன்னை
வெறுத்தல் இயலாது என்பதால்
எங்கோ நீ மகிழ்ச்சியாய் இருப்பதாய்
ஆறுதல் கொண்டலையலாம் அவன்.
உன்னை தொலைத்த பேரிழப்பை
தாங்கி நின்றவன் உனக்கிழைத்த
பெருங்குற்றத்த்தின் ஆற்றாமை தாங்காது
உன்னிடம் தண்டனை யாசித்து உன் முன்
மௌனித்து நிற்கும் ஒரு நொடிக்காய் உயிர்
கொண்டலைபவனாய் நீடித்திருக்கலாம்.
எதுவாகினும் அவனோடான ஒரு சந்திப்பு
அமையுமென்றால் தவிர்த்து விடாதே ..
மௌனமோ கோபமோ எது கொண்டாயினும் அலங்கரி.
அவன் இருப்பென்பதே உன்
முன் கூனி நிற்கப்போகும் அந்த
ஒரு நொடிக்காக வேண்டி மட்டுமிருக்கலாம்.
அவனோடொரு சந்திப்பமைந்தால்
முன்முடிவுகளோடு மறுதலிக்காதிரு..