FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on September 11, 2018, 09:23:04 PM
-
அழகு குறித்த ஒரு ஆராய்ச்சிக்காய்
சில மாதிரிகள் தேடிக்கொண்டிருந்தேன்.
இது வரை அழகு குறித்து அண்டம் கொண்டிருந்த
அத்தனை முன்முடிவுகளையும், ஆய்வறிக்கைகளையும்,
அனுமானங்களையும், தீர்மானங்களையும் புறந்தள்ளி
புதிதாய் ஒரு சமன்பாடை கண்டடைதலே குறிக்கோளாய்...
அழகின் அலகுகள் குறித்து அறிவதற்காய் மட்டுமாய்
சில தெரிவுகளோடு தொடங்கினேன்.
நிலா குறித்தும், நிலம் குறித்தும்,
நதி குறித்தும், மழை குறித்தும் எனத்தொடங்கி
காற்று, ஒளி, மலை, இசை என நீண்டு பூக்கள், புள்ளினங்கள்
வாசனை என தொடர்ந்து மனிதர்கள் தாண்டி நிற்கிறது ஆராய்ச்சி.
அழகு குறித்து ஏறக்குறைய ஒரு
இலக்கணம் ஒன்றை தயாரித்திருந்தேன்.
ஆராய்ச்சியின் முடிவாய் உன்னை மாதிரியாக
கொண்டொரு முடிவுறல்...
ஆச்சர்யம் ஏதும் இல்லை, அழகின்
இலக்கணங்கள் அத்தனையோடும்
ஒத்துப்போயிருந்தாய்.
மென்மையேறிய ஒரு அகமும்,
புன்னகையேறிய முகமும்,
அளவான கோபமும்,
அளவில்லா அன்பும்,
தீர்க்கமான முடிவுகளும்,
திகட்டாத பேச்சும்,
தெளிவான சிந்தனையும்,
கருணையூறும் ஒரு மனமும் கொண்டு
அழகென நான் கொண்ட இலக்கணங்கள்
அத்தனையோடும் ஒத்துப்போயிருந்தாய்..
விதிவிலக்கென விலக்க முடியாதபடியாய்
அத்தனை அலகுகளையும் கடந்து நிற்கிறாய்..
அழகென உனை சுருக்குதல் அநியாயம்...
ஆதலால் பேரழகின் இலக்கணம் நீயென எழுதிப்போகிறேன்....அம்மா...