FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on September 04, 2018, 01:53:45 AM

Title: வெள்ளிக்கிழமைகளில்........
Post by: Guest on September 04, 2018, 01:53:45 AM
நேற்றைய நாட்களை
மறக்காமல் இருக்கவேண்டும்
என்னில் கடந்துபோன நிகழ்வுகள் பலதும்
வலிகள் தாங்கியதானபோதும்
ஒன்றுசேர்த்து வெள்ளிக்கிழமைகளில்
உன் மனதில் கொட்டித்தீர்ப்பேன்...

கோபங்களின் வெளிப்பாடு
பலபொழுதும் என்னிலிருந்து
அநாயாசமாய் வெடித்துப்புறப்படும்
தகாத வார்த்தைகளானபோதும்
சில சமிக்ஞைகளால் உன்
முகம் கோபித்து என்னை
அமிழ்த்திவைப்பாய்....

பொறுமைக்கும் உனக்கும்
எட்டா தூரமெனும்போதும்
என்னை சகித்துக்கொண்டாயே
என எண்ணுவதுண்டு நான்...

வெட்கித்தலைகூன
மனமில்லாமல் இல்லை
நீ கை நீட்டி அடித்துவிடும்
அளவுக்கான உன்னை அவமதிக்க
மனமில்லாததால்தான்...

உறவுகளில் சிறந்தது எது
என்ற கேள்விகளுக்கு தினமும்
ஓராயிரம் பொய்கள்
விளம்பப்படுகிறது - நீதான்
உறவில் சிறந்தது என்று
சுட்டுவதற்கு மட்டுமே
என் விரல்கள் நீழும்......

வெள்ளிக்கிழமைகள்
உன்னையும் என்னையும் தாண்டி
பயணப்பட்டுக்கொண்டேயிருந்தது
இன்னொரு வெள்ளிக்கிழமை
என்னை தொடும்போது
சில நினைவுகள் மனதை
கசக்கிவிடக்கூடும் எதிர்பாராமல்
என்னில் ஏற்பட்ட வெற்றிடம் ....

ஏதோ ஓரிடத்தில்
ஏதோ ஓன்றால்
என்னவோவாகிப்போன நீ
என்னவானால் என்ன
என்று என்னால் மட்டும்
நினைத்து மறந்துவிட இயலவில்லை..

நீ விட்டுச்சென்ற வெற்றிடம்
இன்றும் அப்படியே உள்ளது
யாரும் கால் வைக்கவும்
உன் காற்சுவடுகளை
மாய்த்துவிடவும் இயலாத
ஏதோ ஒரு பயம் எல்லோரிடத்தும்...

உன் வெற்றிடத்தை நிரப்ப
பலர் முயன்றும் - உன்னால்
மட்டுமே அது இயலும் என்று
ஒவ்வொர் கணமும் என் கன்னம்
கிள்ளி சொல்லுகிறாய்......

நீ இருப்பதை எல்லா நொடிகளும்
உணர்கின்றன - நீ இல்லாததையும்
எல்லா நொடிகளும் உணர்கின்றன
சில நேரங்களில் விழிகள் கண்ணீரால்
ஞாபகம் கொள்கின்றன....

வார்த்தைகளில் ஒதுங்குவதல்ல
உன்னோடான உறவு - வெறும்
வரிகளில் எழுதிவைத்து
நானே வாசித்துக்கொள்ளும்
யாருக்கும் புரிபடாத
வழியே வீசப்பட்ட நினைவுகள் அம்மா....

----------
Title: Re: வெள்ளிக்கிழமைகளில்........
Post by: NiYa on September 06, 2018, 05:56:45 AM
யார் இடத்தையும்
யாராலும் நிரப்ப
முடியாது தான்


கவி அருமை