FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on August 26, 2018, 06:12:18 AM

Title: ***ஆண்ட்ராய்டு இரவுகள்***
Post by: Guest on August 26, 2018, 06:12:18 AM
விடியல்கள் அந்திகளாகவும்
அந்திகள் விடியலுமாகட்டும்
நித்திரைகள் துயிலெழ
சுலபம் கேட்கி்ன்றன...
.
ஆண்களை ஆண்ட்ராய்டுகள்
ஆட்கொண்டபின் இரவுகள்
அதிகமும் இருண்ட பகலாய்
மாறிப்போயிருக்கிறது..
.
விடியலை அறிவித்த சேவல்கள்
கூவலை நிறுத்திக்கொண்டு
சிற்சில முனகல்களோடு
தூங்கிவிடுகின்றன...
.
எல்லா விடியிலும்
வெளிறிய வெளியையும்
புகைமண்டல ப்பார்வையோடும்
இரத்தக்கண்களோடும்
புலர்கின்றன...
.
அதிகாலை நடைபழகலும்
அந்திமாலை குசலம் பேசலும்
அந்நியப்பட்டுப்போயின
நடைபழக வாங்கிய
பனியன்கள் இடை தொடாமல் நின்றன...
.
எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர்
தனித்தனியே சிரித்து
தனித்தனியே குழைந்து
தனித்தனியே கோபித்து
தனித்தனியே உறைந்துபோயினர்
ஒரு பேதலித்தவனின் பசியைப்போல்
அவ்வப்போது தங்களை
நினைவில் மீட்டுக்கொண்டனர்...
.
இமைகள் இப்போதெல்லாம்
சரியாக இமைப்பதேயில்லை
கருவிழிகள் எப்போதுமே
தூங்காமல் இருக்கிறது
வாட்சப் விழிகளின் குருட்டுப்பார்வையில்
மூர்ச்சையாகின்றன மூளைகள்...
.
ஸ்மைலிகளின் புன்னகையில்
புதைந்துபோயின
நம் குதூகலச்சிரிப்புகள்
வலியின், பரிவின்
கண்ணீர் வடியும் விழிகளும்
நிலைத்தன அதே ஸ்மைலிகளில்...
.
சில இரவுகள் முழுமையாய் வேண்டும்
வெளிராத ஒளிராத சில இரவுகள்
முழுமையாய் வேண்டும்
நித்திரையை மீட்டெடுத்து
மகிழ்ந்துகொள்ளவேண்டும்....
.
ஆண்ட்ராய்டு இரவுகளை
அன் ஃபிரண்ட் செய்யவேண்டும்...