FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on August 17, 2018, 02:54:19 PM

Title: 'தேவதைகள் யார்??.
Post by: Guest on August 17, 2018, 02:54:19 PM
தேவதைகள் குறித்த
ஒரு புள்ளியில் வந்து குவியும் வரை எதைக்குறித்தோ பேசிக்கொண்டிருந்தோம்..

'தேவதைகள் யார்??.' என்றாய்..

அழுகைகளோடும்,புன்சிரிப்புகளோடும்
யார் வாழ்கையையேனும் அழகாக்கி போவதற்க்காய் கடவுளால்
ஏவப்பட்டவர்கள் என்றேன்..

'ஆஹான்' என்றவாறே
ஆச்சரிய முகபாவனையில்
மீண்டும் தொடர்கிறாய் ..
'தேவதைகளை எப்படி உணர்வது' என்பதாய்.

தேவதைத்தனம் என்பது
புறத்தோற்றம் மட்டுமன்று...
தேவதைகள் மானசீகமானவர்கள் என்கிறேன்..

'பாலினம்?.' தொடர்கிறாய்...

தங்கள் இருத்தலால்,
யார் இருத்தலையோ அர்த்தமுள்ளதாக்கி போகும்
இருபாலிலும் உள்ள இதயமுள்ளவர்கள் என்கிறேன்.

நீ தேவதையா?
 என்றவாறே புன்சிரிக்கிறாய்??..
ம்ம்ம்...என்றவாறு
நான் யோசிக்க தொடங்கும் முன்னரே
"நான்"?
என இமைகள் விரிய கேட்கிறாய்..

நீ உடனிருக்கும் போதெல்லாம்
வாழ்கை அர்த்தம் கூடி போகிறது...
வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக தோன்றும் போதெல்லாம் உடனிருப்பவர்களை உன்னித்து பார்த்தால் தேவதைகள் புலப்படலாம்
என்கிறேன்..

நொடி தாமதத்தில்,
விரித்த இமைகளை
அழுத்தி மூடி, பின்னர்
"கடவுள் உன்னை மிகுதியாக
ஆசிர்வதிக்கட்டும்" என சொல்லி
 புன்னகைத்தவாறே கடந்து செல்கிறாய்..

தேவதையே! கடவுள் உன்னையும் மிகுதியாக ஆசிர்வதிக்கட்டும்...

~தங்கள் புன்சிரிப்புகளால், கண்ணீர் துளிகளால், தியாகங்களால், உழைப்பால்,உணர்ச்சிகளால் பிறர் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக்கி போகும் அத்தனை மனிதர்களுக்கும் சமர்ப்பணம்...