FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on March 11, 2012, 12:49:33 PM

Title: நாளையேனும்...!
Post by: Yousuf on March 11, 2012, 12:49:33 PM
உத்தரத்து உச்சியிலே
ஊசலாடும் ஒரு கயிறாய்
புத்தியற்ற செய்கையாலே
போனதின்று மனிதவாழ்வு

கத்தியின்றி ரத்தமின்றி
காரியங்கள் செய்தகாலம்
சித்திரமாய் சிந்தையிலே
சிதிலமாகிப் போனதையோ!

சத்தியத்தைக் காப்பதிலே
சமாதானம் பிறப்பதிலே
சித்தமென்றும் இருக்குதென்று
சீராகப் பேசுவார்கள்!

நித்தமின்று மனு உரிமை
நீர்க்குமிழியாதல் கண்டும்
சத்தமின்றித் தம் கருமம்
செய்வதிலே முனைந்திடுவார்!

பத்திரிகை புரட்டுகையில்
பத்திபத்தியாய்த் தணிக்கை
புத்தியிலே படுகுதில்லை
பொதிந்திருப்ப தென்னவென்று!

சுற்றியுள்ள உலகினிலே
சேதியொன்று மறியாமல்
கிணற்றுக்குள் நுணலெனவே
கிடப்பதுதான் சுதந்திரமோ?

சாத்வீக வழிமுறைகள்
செல்லரித்துப் போதல் கண்டீர்!
சுவாசித்தலும் இனியெமக்கு
சாத்தியமோ, தணிக்கைதானோ?

யுத்தமென்ற பெயரினிலே
யுகமெல்லாம் விளைக்குந் தீமை
எத்தினத்தில் ஓயுமென்று
இதயமெங்கும் ஏக்கந்தேங்கும்!

மனிதருக்கு மானம்போல
மனித உரிமையும் வேண்டும்!
பத்திரிக்கைத் தணிக்கையெல்லாம்
பொய்யாகிப் போகவேண்டும்!

நித்தமெங்கள் நெஞ்சங்களில்
நெருப்பெரியும் அவலம்நீங்கி
நத்தைபோல ஒடுங்கிவாழும்
நாட்கள் இனிமாற வேண்டும்!

சரித்திரத்தில் கற்றபாடம்
சமாதானம் மலரச் செய்து
சரிந்திட்ட மனிதவிழுமம்
செம்மையுற்று மிளிரவேண்டும்!
 
சத்திரத்து வாழ்க்கை போல
சீரழிந்து போனவாழ்வு
பவித்திரமாய் நாளையேனும்
பார்போற்ற உயரவேண்டும்!

- லறீனா அப்துல் ஹக் (இலங்கை)
Title: Re: நாளையேனும்...!
Post by: Global Angel on March 11, 2012, 09:11:16 PM


நல்ல கவிதை யோசுப் .. மாற்றங்கள் எல்லாத்திற்கும் வேண்டும்
Title: Re: நாளையேனும்...!
Post by: Yousuf on March 12, 2012, 10:19:13 AM
நன்றி ஏஞ்செல்!