FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on March 03, 2012, 07:34:55 AM

Title: கொழு கொழு உடம்பு ஆபத்தா
Post by: Global Angel on March 03, 2012, 07:34:55 AM

கொழு கொழு உடம்பு ஆபத்தா  

குன்றைக் குமைத்தெறியும் தோளும், ஓர் குத்தில் பகை குலையும் கையும்  தமக்கு வேண்டும்  என்று மகாகவி பாரதி, மாகாளியிடம் கேட்டான்.

உடம்பால் அழியின் உயிரால் அழிவர், திடம் பட மெய்ஞ்ஞானம் சேராதார் என்றார்கள் சித்தர் பெருமக்கள்.

பலவீனமே மரணம் என்றார் விவேகானந்தர் உடல் என்பது வலிவும், பொலிவும், ஆரோக்கியமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதையே ஞானிகளும், யோகிகளும் கவிஞர்களும் இவ்வளவு அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், வலிமையான உடல் என்பதை வளமான உடல் என்று தவறாக சித்தரிக்கத் தொடங்கி உள்ளன இன்றைய நாகரிக உலகின் ஊடகங்கள்.

உங்கள் குழந்தை கொழுகொழுவென்று இல்லையா என்று கேட்டு, இன்றைய இளம் தாய்மார்களை உசுப்பேத்தும் ஊடக விளம்பரங்கள், அதற்கான ஆபத்தான விதி முறைகளையும் கற்பிக்கின்றன.

ஐயோ...! நம் குழந்தை நோஞ்சானாக இருக்கிறதோ என்ற சந்தேகம் ஆட்டிப்படைக்க, வேண்டாத தீனியெல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் உடலை ஊதவைக்க முயற்சிக்கின்றனர் அந்த அப்பாவித் தாய்மார்கள்.

ஆரோக்கியம்  என்பது உடலின் பருமனில் இல்லை.  தேவையில்லாத சதைகள் நோயின் பிறப்பிடங்களாக இருப்பதைத் தவிர அவற்றுக்கும் ஆரோக்கியத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

பின் எது ஆரோக்கியம்?

தேவையான வளர்ச்சியும், அளவான உடலும், உறுதியான எலும்பும், சுகாதாரமான உள்ளுறுப்புகளும் தான் ஆரோக்கியம். 

ஆனால் இன்றைய பெரும்பாலான குழந்தைகள், பேய் வளர்ச்சி என்பார்களே.. அப்படித்தான் இருக்கின்றன.  10,12 வயதிலேயே 20 வயதுத் தோற்றத்துடன் வளர்ந்து சரிகின்றன.  கிராமப்புறங்களில் இதை ஊழைச்சதை என்பார்கள்.  இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே கணை நோய் வருவதைக் காண முடியும்.

சிறு குழந்தைகளுக்கு லிவர் எனப்படும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.  சித்தா, ஆயுர்வேத, வர்ம மருத்துவர்களின் உதவியோடு, அதற்கான மூலிகைகளை சிறுவயது முதலே கொடுத்து வந்தால், குழந்தையின் வளர்ச்சி இயற்கையாக இருக்கும்.

தேவையற்ற வேதிப்பொருட்கள் கலந்த (உதாரணத்திற்கு மேகி, பீஸா, நூடுல்ஸ் போன்றவை) உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, தேவையற்ற உடல் பருமன் ஏற்படுகிறது.  இத்தகைய உணவுகளால் இயல்பாகவே கல்லீரலும்  பாதிக்கத் தொடங்கிவிடுகிறது.  சொல்லப்போனால், கல்லீரலின் பாதிப்பில் இருந்துதான் உடல் பருமன் அடையத் தொடங்குகிறது.

கல்லீரலை வலிமையாக வைத்திருந்தால், ஆயுட் காலம் முழுமையும் ஆரோக்கியமாக வாழலாம்.  உடல் பருமனாவதற்கும், இளைப்ப தற்கும் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளே காரணம்.   

நாட்டு மருந்து எனும் பாட்டியின் கைப்பக்குவத்தில் வளர்ந்த குழந்தைகள் 70 வயதிலும் துடிப்பு குறையாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.  ஆனால், இன்றைய குழந்தைகள் இருபது வயதிலேயே 50 வயது முதுமையுடனும், சோர்வுடனும் காணப்படுகிறார்கள்.

பழங்கள், கீரைகள், போன்ற இயற்கையான உணவுகளே இன்றைய குழந்தைகளுக்கு அறிமுகம் இல்லாமல் போய்விட்டன.   இப்படிச் செயற்கையான ஊட்டத்தால் உடல் பருமன் அடையும் குழந்தைகள் பின்னாளில் எடையைக் குறைப்பதற்கு என்னென்வோ செய்கிறார்கள். 

இப்படி மேலும், கீழுமாக சீரழிக்கப்பட்ட உடல், 40 வயதாகும்போது முழுக்க முழுக்க நோய்களின் இருப்பிடமாகிறது.   சர்க்கரை வியாதி, மூட்டுவலி, இதய நோய் என நோய்களின் பட்டியல் நீளுகிறது.

மனித உடலில் சுரக்கும் கபநீர் சூலைநீராக மாறி, வாத நீருடன் சேர்ந்து மூன்றும் உடல் பருமனுக்கு ஏற்றவாறு உற்பத்தியாகி அங்கங்கு தேங்கி அவதிப்படுத்துகிறது.

பெண்களுக்கு கருப்பை, இடுப்பு, மூட்டு ஆகிய இடங்களில் இந்த நீர் தேங்குகிறது.  ஆண்களுக்கு இடுப்பு, வயிறு, மூட்டு ஆகிய இடங்களில் தேங்கி வீங்குகிறது.

உடலில் ஏற்படும் அத்தனை நோய்களுக்கும் சிறுவயது முதல் நீங்கள் உட்கொள்ளும் தேவையற்ற உணவுதான் காரணம். 

வேதிப்பொருள்களால் செயற்கையாக சுவையூட்டப் பட்ட எத்தகைய உணவும், உடலுக்கு ஒவ்வாமையையும், நோயையும் ஏற்படுத்தக் கூடியதே.    ஆனால், அதைத்தானே இன்றைய தலைமுறை தேடித்தேடி உள்ளே தள்ளுகிறது.

பீஸா கார்னர்களும், காபி டேக்களும் எங்கெங்கோ இருந்து நமது இளைய தலைமுறையினரின் உடலுக்குள் நோய்களை இறக்குமதி செய்கின்றன.

உடல் பருமன் உள்ளிட்ட நோய்களுக்கு (சந்தேகம் இல்லை.  உடல் பருமன் என்பது ஒரு நோய்தான்)  இன்னொரு முக்கிய காரணம் நேர ஒழுங்கின்மை.

வேளா வேளைக்கு சாப்பிடுவது, நேரத்துக்கு தூங்குவது, அந்தக் காலத்தில் வெளியூர் செல்லும் பிள்ளைகளுக்கு இதை ஒரு அறிவுரையாகவே வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி அனுப்புவார்கள்.  (தற்போது வீட்டில் பெரியவர்களும் இல்லை.  இருந்தாலும், அவர்கள் சொல்வதை நாம் கேட்பதும் இல்லை)

ஆனால் இப்போது அனேகம் பேர், நேரத்துக்கு சாப்பிடுவதையே அநாகரிகமாக நினைக்கின்றனர்.  சரியான நேரத்திற்கு படுப்பதும் இல்லை, விழிப்பதும் இல்லை.   

இயற்கை நம் உடலுக்கு சில நியதிகளை விதித்திருக்கிறது.  அதை வழுவாமல் பின் பற்றினாலே வாழ்க்கை சுகமாக இருக்கும். வளம் என்பது உடலின் பருமன் அல்ல.  உறுதியும் ஊட்டமும் என்பதை இனியாவது அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

இயற்கையான உணவுகளையும், மூலிகை களையும் உங்கள் குழந்தைகளுக்கு பழக்கப் படுத்துங்கள்.  பல நூறு ஆண்டு காலம் எந்த தடுப்பு மருந்தும் இல்லாமல்தான் நமது முன்னோர்கள் குழந்தைகளை வளர்த்து வந்துள்ளனர்.

போர்க்களத்தில் புகுந்து விளையாடும் வீரமும், புகழ்பெற்ற காவியங்களைப் படைக்கும் அறிவுச் செரிவும் அன்றைய குழந்தைகளுக்கு இருந்தன.  இன்றைய குழந்தைகளின் நிலையை நீங்களே எண்ணிப்பாருங்கள்.

ஏன் இந்த நிலை?

பாரம்பரியமாக நம்மிடம் இருந்த நல்ல பழக்கங்களை எல்லாம் நாம் தொலைத்துவிட்டோம்.  உணவே மருந்து எனும் நமது பழம்பண்பாட்டை மீட்டெடுப்போம்.  இயற்கையோடு இயைந்த நல்வாழ்வைத் தேடுவோம்.

கடும் உழைப்பு, அரும்பசி, சுவை உணவு, சுகதூக்கம். இவை நான்கும் நலவாழ்வுக்கான அடிப்படை ஆதாரங்கள் என்பதை நம் குழந்தைகளுக்கு உணர்த்துவோம். 

வலிவும், பொலிவும், உறுதியும் மிக்க சந்ததியை உருவாக்குவோம்.

(ஆயுர்வேத, சித்த, வர்ம மருத்துவத்தில் உடல் பருமனைக் குறைக்க பல வழிமுறைகள் உள்ளன)