FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on March 03, 2012, 03:39:05 AM
-
இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று.
எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே சர்க்கரை நோய் உள்ளது.
உலக அளவில் 246 மில்லியன் மக்கள் தற்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்னும் 5 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 500 மில்லியனாக மாற வாய்ப்புள்ளது என உலக சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர். குறிப்பாக தென்னிந்திய மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.
உணவு மாறுபாடு, மனக்கவலை, எப்போதும் தீரா சிந்தனை, அதிவேகம், காலத்தின் கட்டாயச் சூழ்நிலையில் நிம்மதியற்ற வாழ்க்கை. நேரம் தவறிய உணவு, அதிக மனஉளைச்சல் இவைகளினாலும் பரம்பரையாகவும் இவற்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ இருந்தால்கூட சர்க்கரை நோய் ஏற்படலாம்.
பொதுவாக உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் போது உடலானது தன் நிலையிழந்து, உண்ட உணவு செரிக்காமல் அதிக கொழுப்பு தன்மையடைந்து, அது அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கிறது. இந்த இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை மாற்றும் கணைய நீர் அதிகம் சுரக்க வேண்டியுள்ளது. இதனால் கணையம் பாதிக்கப்பட்டு கணைய நீர் குறையும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
பொதுவாக உண்ட உணவில் உள்ள கொழுப்புச் சத்து மற்றும் குளுக்கோஸ் மூன்று பங்காக பிரிக்கப்படுகிறது. ஒரு பங்கு இரத்தத்திலும், ஒரு பங்கு நீராகவும், ஒரு பங்கு ஆவியாகவும் வெளியேறுகிறது. இதில் நீராகவும், ஆவியாகவும் அதாவது சிறுநீரின் மூலமும், வியர்வை மூலமும் வெளியேறாமல் இரத்தத்தில் அதிகளவு கலந்துவிடுகிறது. கொழுப்பு தன்மை உடலின் பிற உறுப்புகளையும் பாதிப்படையச் செய்வதுடன் உடல் தன் நிலை மாறி, உறுப்புகளின் இயக்கத்தையும் குறைத்துவிடுகிறது. இதனால் உடல் அசதியுண்டாகி கை, கால் மூட்டுகளிலும், கணுக்காலிலும் வலுவிழந்து இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. மேலும் பாதங்களில் புண், புரை ஏற்படுகிறது. சில சமயங்களில் கால் பகுதிகளில் சருமத்தின் நிறம் முதலில் சிவந்து பின் வீங்கி கருத்தும் போகிறது. புண், புரைகள் எளிதில் ஆறுவதில்லை. காரணம் இரத்தத்ததில் உள்ள அதிகளவு சர்க்கரை புண்ணை ஆற விடுவதில்லை.
பொதுவாக சர்க்கரைவியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவ தில்லை. சித்தர்களின் கூற்றுப்படி, வாத, பித்த, கபம் எனும் முக்குற்றங்களின் அமைப்பில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு பாதிப்பையும் குறி குணங்களையும் காட்டுகிறது.
வாத, பித்த, கபம் (சூலை) உடற்கூறு கொண்டவர்களை நீரிழிவு நோய் தாக்கினால் உண்டாகும் குறி குணங்களையும், பாதிப்புகளையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
வாதக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2Fsugar1.jpg&hash=f09f2fbe7cca22c8a651d71803f99c3548887064)
வாதக்கூறு உடலமைப்பு கொண்டவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், நரம்புகள் வலுவிழந்து உடல் பலமிழக்கும். மேலும் காலில் வலி உண்டாகும். மூட்டுக்குக் கீழ் கால்பாதம், நகம், கெண்டை சதைப் பகுதிகள் இறுகி காய்ந்து உலர்ந்ததுபோல் தோற்றமளிக்கும். மலம் கறுத்து வெளியேறும். நகக் கண்கள் கறுத்துப் போகும். வாத உடற்கூறு கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய் வந்தால், மூட்டு இறுகி கணுக் கால்களில் சிறிது வீக்கத்துடன் வலியை உண்டுபண்ணும். இதுபோல் இடுப்புப் பகுதி, தொடையின் ததைப்பகுதி இறுகி காணப் படும். இவர்களுக்கு கால் நகக்கண்ணிலும், விரல் இடுக்குகளிலும் வட்டமாக தோன்றி இவை புண்ணாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். மேலும் காலில் அதிக புண், புரை உண்டாகும். இவை எளிதில் ஆறுவதில்லை. கை, கால்கள் மரத்துப் போகும். காலையில் கால்களில் அதிக வலி உண்டாகும். பாதங்களை தரையில் ஊன்றி நடக்க முடியாது.
பித்தக் கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு
பித்தக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு நீரிழிவு பாதித்தால், கண் நரம்புகள் பாதிப்படைந்து கண் பார்வை குறைபாடு வர வாய்ப்புள்ளது. நேரம் தவறி உண்பதால் மயக்கம் ஏற்படும். உடலில் ஒருவித எரிச்சர் தோன்றும். இதய படபடப்பு ஏற்பட்டு, திடீர் மயக்கம், தலைச்சுற்றல் உண்டாகும். கால் பகுதிகளில் நீர் கோர்த்து, தோல் பளபளப்படையும். நடந்தால் மூச்சுத் திணறல் உண்டாகும். முகம் வெளிறிக் காணப்படும். சளியுடன் கூடிய நெஞ்சிரைப்பு உண்டாகும். இரத்த அழுத்தம் அதிகமாக இரத்தக் குழாய்களில் அடைப்புகள் வர வாய்ப்புள்ளது. அதுபோல், ரத்தத்தில் பித்த நீர் அதிகம் சேர்ந்து ரத்தத்திலுள்ள யூரியா, கொழுப்பு, சர்க்கரை மூன்றும் சேர்ந்து ரத்தத்தை பசைபோய் ஆக்கிவிடும். இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகி நெஞ்சு படபடப்பு, நெஞ்சுச் சளி போன்றவை உண்டாகும். கை கால் வெளுத்துக் காணப்படும். மதியம் அல்லது மாலை வேளையில் கை கால்களில் அதிக வலி உண்டாகும்.
கபக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு சர்க்கரையின் பாதிப்பால் கை, கால், கழுத்து, இடுப்பு, தோள்பட்டை, முதுகு போன்றவற்றில் வலியை உண்டு பண்ணும்.
குடலின் சீரணத் தன்மையைக் குறைத்து குடல் பகுதிகளில் பாதிப்பை உண்டுபண்ணும்.
இடுப்புக்குக் கீழ் தொடை, முழங்கால் வீக்கம் உண்டாகி அதிக வலி ஏற்படும். அதோடு கால் பாதங்களில் மதமதவென ஈரத்தோடு காணப்படும். பாதம் பஞ்சுபோல் மாறிவிடும். இவர்களுக்கு சிறுநீரகம் எளிதில் பாதிப்படைய அதிக வாய்ப்புண்டு. காரணம், ரத்தத்தில் உப்பு நீர் அதிகமாக இருக்கும். அதனால் தசைகளிலும், நரம்பு முடிச்சுகளிலும் மூட்டுகளிலும் வீக்கம் இருக்கும். பெரும்பாலும் இவர்கள் உடல் அதிக பருமனாக மாற வாய்ப்புண்டு. உடம்பில் எரிச்சல் இருந்தாலும் தசைகள் குளிர்ந்து அதாவது சூடு கலந்து குளிர்ச்சியாக காணப்படும். இவர்களுக்கு வயிற்றில் அதிகம் நீர் சேர வாய்ப்புள்ளது. இதனால் வயிறு பெருத்துக் காணப்படும். கால்கள் இரவு நேரங்களில் வீக்கத்துடன் அதிக வலி இருக்கும்.
பொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்.
முதல்வகை - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது.
இரண்டாம் வகை - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் சிலருக்கு உண்டாகும்.
நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகிறது.
தற்போது தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு ரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப் படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.
இதில் உடலைக் கெடுக்கும் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு வேகமாக இருக்கும். பித்த உடற்கூறு கொண்டவர்கள் பகலில் பித்த அதிகரிப்பின் போது மது அருந்தினால் மயக்கம், வாந்தி, பிதற்றல் நிலை ஏற்படுவ துடன் மதுவில் உள்ள ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து பரவுவதால் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது.
மனிதனின் உடற்கூறுகளை மாற்ற முடியாது. ஆனால் சர்க்கரை நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு உணவில் காரத்தை குறைக்க வேண்டும்.
அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது.
மன உளைச்சல், மன எரிச்சல், கோபம், பதற்றம் இவற்றைத் தணிக்க தியானமே சிறந்த வழியாகும். தியானம், யோகா இரண்டும் சித்தர்கள் அருளியதுதான்.
தியான நிலையில் சரசுவாசத்தை மேற்கொண்டால் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.
மன அமைதி, தியானம், சீரான உணவு, இவை மூன்றும் ஆரோக்கியத்திற்கு அற்புத மருந்தாகும். பொதுவாக சர்க்கரை நோய் நரம்புகள், தசைகளை பாதிக்க ஆரம்பிக்கும். உடல் உறுப்புகளின் அசைவுகளை மந்தப்படுத்தும். இதனால் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைப்பட்டு நரம்பு முடிச்சுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் நல்ல மூலிகை தைலங்களை தேய்த்துக் குளிப்பது நல்லது.
குறிப்பாக இடுப்புக்குக் கீழ் கால், தொடை, மூட்டு, கெண்டைச்சதை, நகக்கண்களில் தைலங்களை நன்கு தேய்த்து ஊறவிடவேண்டும். அப்போது தசைகளில் உள்ள உப்பு நீர் எண்ணெயுடன் கலந்து வெளியேறிவிடும். இதனால் தசைகள் சுத்தமடைந்து நன்கு இயங்கும். உடலில் உப்புநீர் குறைவதால், கால்பகுதிகளில் உண்டாகும் புண் புரைகள் விரைவில் ஆறும்.
நீரிழிவு நோய்க்கு சித்தர்கள் பல பரிகார முறைகளைக் கூறியுள்ளனர். இதில் அகத்தியர் வர்ம சூத்திரத்தில் கூறியுள்ள தைல முறையைத் தெரிந்துகொள்வோம்
தைலம் தயாரிக்கும் முறை -
கடைமருந்து -
கருஞ்சீரகம் - 25 கிராம்
கார்கோல் - 25 கிராம்
கொட்டம் - 25 கிராம்
தேவதாறு - 25 கிராம்
இராமிச்சம் - 25 கிராம்
சந்தனம் - 25 கிராம்
வசம்பு - 25 கிராம்
குறுந்தொட்டி - 25 கிராம்
மஞ்சள் - 10 கிராம்
இவற்றை எடுத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு.
பச்சிலை மருந்து
குப்பைமேனி - 100 மிலி சாறு
தைவேளை - 100 மிலி சாறு
வேலிப்பருத்தி - 100 மிலி சாறு
கோவை - 100 மிலி சாறு
அமிர்தவல்லி - 100 மிலி சாறு
அருகம்புல் - 100 மிலி சாறு
வெற்றிலை - 100 மிலி சாறு
கறிவேப்பிலை - 100 மிலி சாறு
இவற்றுடன்
தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
நல்லெண்ணெய் - 1 லிட்டர்
கடுகு எண்ணெய் - 1 லிட்டர்
எடுத்து, முதலில் சாறுகளை லேசாக கொதிக்க வைத்து, கொதிநிலையில் எண்ணெயை சிறிது சிறிதாக விட்டு, பின் மேற்கண்ட கடை மருந்துகளை சேர்த்து மணல் பக்குவமாக வரும்போது எடுத்து வடிகட்டி, பாட்டிலில் அடைத்து தினமும் கால், கை களில் தடவினால், கைகால் எரிச்சல், நமைச்சல் நீங்கும். மறத்துப்போகும் தன்மை மாறும். சருமத்தின் ஏற்படும் வெளுப்பு நீங்கும். புண் புரைகள் நீங்கும்.