FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Yousuf on March 02, 2012, 06:17:13 PM

Title: அண்ணலார் அருளிய அடிப்படை தத்துவம்!
Post by: Yousuf on March 02, 2012, 06:17:13 PM
“இந்த மார்க்கத்தை அல்லாஹ் வெற்றி பெறச் செய்வான். நாம் உன்னத நிலையை அடைவோம். ஸன்ஆவிலிருந்து ஹழர மவ்த் வரை அல்லாஹ் அல்லாத வேறொன்றையும் பற்றி அச்சப்படாமல் ஒருவன் பயணம் செய்யும் அளவுக்கு அமைதி மலரும். நீங்கள் அவசரப்படுகின்றீர்கள்.”

கப்பாப் இப்னு அரத் (ரலி) என்ற நபித்தோழரை கருணை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி ஆறுதல் படுத்தினார்கள்.

ரத்தம் சொட்டும் காயங்களுடன் அண்ணலார் முன் வந்து நின்றார் கப்பாப் இப்னு அரத்(ரலி). மக்காவில் அடிமையாக இருந்தார் அவர். குடியுரிமை இல்லாதிருந்தும் முஹம்மதின் புதிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட கப்பாபின் ​தைரியம் குறைஷிகளைக் கொதிப்படைய வைத்தது. மனிதத் தன்மையற்ற வகையில் கப்பாபைச் சித்திரவதை செய்தார்கள் குறைஷிகள். மரணத்தின் விளிம்பு வரை சென்றபோதிலும் கப்பாப் கொண்ட கொள்கையைக் கிஞ்சிற்றும் கைவிடவில்லை. இடையில் கிடைத்த ஓர் இடைவெளியில் அவர் அண்ணலாரைச் சந்திக்க ஓடோடி வந்தார். தான் படும் கஷ்டங்களைச் சொன்னார்.

இது கப்பாபிற்கு மட்டும் நடந்ததல்ல. மக்காவில் இவரைப்போல் பலரும் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். தங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கும்படி அவர்கள் அண்ணலாரிடம் வரும்பொழுதெல்லாம் கோரினர். அல்லாஹ்விடம் பிரார்த்தித்து அவர்களை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக அண்ணலார் பின்னால் வரவிருக்கும் சமூக மாற்றத்தைக் குறித்து மேற்சொன்னபடி முன்னறிவிப்பு செய்தார்கள்.

குறைஷிகளின் கண்களை மறைத்து அண்ணலார் அஹமது நபி(ஸல்) அவர்கள் அன்புத் தோழர் அபுபக்கர்(ரலி) அவர்களுடன் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்து கொண்டிருந்தார்கள்.

குறைஷிகள் அண்ணலாரைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 100 ஒட்டகங்களைப் பரிசாகத் தருவதாக அறிவித்தார்கள்.

பரிசுக்கு ஆசைப்பட்டு சுராக்கா என்பவர் அண்ணலாரைத் தேடிப் புறப்பட்டார். அண்ணலாரும் அன்புத் தோழரும் செல்வதைக் கண்டுபிடித்த சுராக்கா அவர்களைப் பிடிக்க முனைந்து தோற்றுப் போனார். அவருடைய குதிரை அண்ணலாரின் அருகில் சென்றவுடன் மிரண்டது. பின்வாங்கி ஓடியது.

சுராக்கா பலமுறை முயன்றும் அண்ணலாரை நெருங்க முடியவில்லை. அண்ணலாருக்கு தெய்வீகப் பாதுகாப்பு இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார். மலைத்து நின்ற சுராக்காவின் அந்த உணர்வை உறுதிப்படுத்தும் விதமாக அண்ணலார் அவர் அருகில் வந்து “பாரசீகப் பேரரசரின் காப்புகள் உம் கைகளை வந்தடையும்” என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.

விழுந்து கிடக்கும்பொழுதும் கொண்ட கொள்கையைக் கை விடக்கூடாது. எதிர்த்து நின்று போராடும் களத்தின் அடிப்படைப் பாடமே அதுதான்.

மக்காவில் மிகக் கஷ்டமான சூழ்நிலையிலும் தங்கள் தோழர்களை இந்த அடிப்படையில்தான் அண்ணலார் அரவணைத்து வார்த்தெடுத்து கொண்டு சென்றார்கள். சித்திரவதைகளைக் கண்டு சித்தம் கலங்கவோ அச்சப்படவோ எதிரிகளுடன் சமாதானம் செய்து கொள்ளவோ ஒதுங்கி நிற்கவோ அண்ணலார் அவர்களை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதிக்கக்கூடாது என்று அல்லாஹ்வும் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான்:

இன்னும் யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் – அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும். அல்லாஹ்வையன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை. மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 3 : 113)

தற்காலிகப் பாதுகாப்பை முன்னிறுத்தி எதிரிகளின் வற்புறுத்தல்களுக்கு எந்தவிதத்திலும் அடி பணிந்திடக்கூடாது என்ற இந்தக் கட்டளை பாதிக்கப்பட்டவரின் விடுதலைக்கு அடிப்படைத் தத்துவமாக உயர்ந்து நிற்கின்றது.

அக்கிரமக்காரர்களுக்கு அனுகூலமாக நமது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டால் அமைதி தவழும் என்ற தவறான தத்துவத்தை இஸ்லாம் மட்டுமல்ல, சுதந்திர உணர்வுள்ள எந்தவொரு சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை.