FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Dharshini on March 02, 2012, 04:06:35 PM

Title: இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?
Post by: Dharshini on March 02, 2012, 04:06:35 PM
உலகம் முழுவதும் பசியில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் இருக்குமென்று ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பின் (IFAD) 33வது ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் கனாயோ வீன்ஸ் கூறியுள்ளார். மேலும் இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிப்பதாகவும் (33 கோடிபேர்) குறிப்பிடப்படுகிறார். ஐக்கிய சபையின் செயலாளர் பான் கீ மூன் பசியால் உலகில் சுமார் 17,000 குழந்தைகள் தினமும் இறப்பதாகவும், சராசரியாக 6 விநாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
இந்தியா உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் உள்ளதெனவும், 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு உள்ளனர் எனவும், இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பசி அட்டவணையில் 94வது இடத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு இந்தியாவில் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றதா என்றால் இல்லையென்பது தான் உண்மை. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 2009-10ஆம் ஆண்டில் 218.20 மில்லியன் டன். இது 2008-09ஆம் ஆண்டில் 237.47 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. அதேபோல் தென்மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 99.18 மில்லியன் டன்னாக இருந்தது 2010-11ல் 100 மில்லியன் டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சனை எங்கே?
இந்தியாவில் வறுமையும் பசியும் தொடர்கதையாய் இருப்பதற்கு மூலக்காரணம் திட்டமிட்ட பகிர்வு இல்லாமை, பகிர்வில் குளறுபடிகள் மற்றும் பிரச்சனையின் வீரியத்தை புரிந்து கொண்டு அதைத் தீர்த்திட முன்வராததேயாகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இந்தியாவில் 33 கோடிப் பேர் பசியால் வாடும் நிலையில் போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு ஒரு கோடியே 69 லட்சம் டன் உணவு தானியம் வீணாவதாக இந்திய உணவுக்கழகம் தெரிவிக்கிறது. சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளான பின்பும் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகளில்லை. இந்திய உணவுக்கழகத்தால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும் இக்கழகத்தின் சேமிப்பு வசதி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மட்டுமே. இதர உணவு தானியங்கள் ஆங்காங்கே திறந்தவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில் கெட்டுப் போகக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.
உணவின்றி ஒருபக்கம் மக்கள் வாடுகையில் உணவு பாதுகாப்பின்றி கெட்டுப்போகக் கூடிய நிலையும் உள்ளது. இதைத்தான் உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து உணவுப்பொருள் ஏதும் வீணாகக் கூடாது, உடனடியாக இதனை பசியால் வாடுவோருக்கு வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீதிபதி வாத்வா கமிட்டி அறிக்கையின்படி பொது விநியோகத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் திருட்டுகள் நடைபெறுகின்றன. எனவே பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக கணிணிமயமாக்கிடல் வேண்டுமெனவும் குறிப்பிடுகிறது. அரசு வழங்கும் உணவுப்பொருட்களில் கால்பங்குதான் உரிய மக்களைச் சென்றடைகிறது என்றும், மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறையை மறுசீரமைத்திட வேண்டுமெனவும் நிதி அமைச்சரின் தலைமைப் பொருள்இயல் ஆலோசகர் Dr.கௌசிக் பாசு குறிப்பிடுகிறார்.
உணவுப்பாதுகாப்பு மசோதா தயாரிப்புப் நிலையிலிருக்கக்கூடிய காலகட்டத்தில் பல்வேறு விசயங்களை கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் உணவு ஓர் பிரச்சனையல்ல. அதே நேரத்தில் பணமும் பிரச்சனையல்ல. ஆனால் யாருக்கு எவ்வளவு செலவு செய்வது என ஒதுக்கீடு செய்வதில் தான் பிரச்சனை. மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார், "இந்தியாவில் விமானத்தளம் அமைத்திட 10,000 கோடி ரூபாயும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக 60,000 கோடி ரூபாயும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் மான்யமாக 5,00,000 கோடி ரூபாயும் வழங்க முடிகிறது. ஆனால் பொது விநியோகத்திட்டத்திற்காக 84,399 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடியாதா" என கேள்வி எழுப்புகிறார். ஏனெனில் இந்தியா முழுவதுமுள்ள அனைவருக்கும் கிலோ ரூ.3ல் பொது விநியோகத்திட்டத்தில் உணவு வழங்கிட அதுவே போதுமானதாகுமென பொருள்இயல் வல்லுநர்கள் பிரவின் ஜா மற்றும் N.ஆச்சார்யா ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
சுதந்திர இந்தியாவில் 1952ல் சமுதாய வளர்ச்சி வட்டாரங்கள் என துவங்கப்பட்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் வறுமையை ஒழிப்போம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு தனிநபர் பயனளிப்பு சார்ந்த திட்டங்கள் மூலம் வறுமையும், பசியும் குறைந்து வந்தது. ஆனால் இன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக தனிநபர் பயனளிப்புத்திட்டங்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டுவிட்டதும் கூட வறுமை உயரக்காரணமானது. அதேபோன்று இந்தியா ஓர் விவசாய நாடு. இதில் சிறுகுறு விவசாயிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததாலும், அவர்கள் விவசாயம் பொய்த்துப்போகும் காலகட்டத்தில் விவசாயிகள் என்ற நிலையிலிருந்து விவசாயக் கூலிகள் அல்லது கட்டிட கட்டுமானக் கூலிகள் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் இரசாயன உரங்கள் உபயோகத்தின் காரணமாக வளமான, நிரந்தர நீர்பாசன வசதி கொண்ட ஏறத்தாழ 20 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உற்பத்தித்திறனை இழந்துள்ளதென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோன்றே இந்திய கிராம விவசாயிகளுக்கு போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் 20 சதவீதம் முதல் 30 சதவீதமான உணவு தான்யங்களும். காய்கறிகளும் விளை நிலங்களிலிருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பே வீணாகிறது. இவை தடுக்கப்பட்டால் இந்தியாவின் உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னையும் தாண்டுமென ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே 50% மேல் விவசாய நிலங்களைக் கொண்ட கிராமங்களை ஒன்றிணைத்து விவசாயப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படல் வேண்டும். தங்க நாற்கரச் சாலைத்திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் அளித்து இக்கிராமங்களின் விவசாய நிலங்களில் முறையான சாலை வசதிகளை அளித்திடல் வேண்டும். இம்மண்டலத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு உற்பத்திக் கடன்கள் 4% வட்டியில் தாராளமாக வழங்கப்படல் வேண்டும். இம்மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து விளைபொருட்களையும் பாதுகாத்திடத் தேவையான பாதுகாப்பு கிட்டங்கிகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் மூலம் உற்பத்தி உயர்ந்து இந்தியாவின் விவசாய வருமானம் 4%லிருந்து உயருவதற்கு வழி வகுக்கும்.
தீர்விற்கான வழி:
* பொது விநியோகத்திட்டத்தை விரிவுபடுத்தி உணவுப்பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி எந்தவித கட்டுப்பாட்டின்றி வழங்குவது.
* ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தாலும் உணவுப்பொருள் வழங்குவது.
* குடும்ப நபர் எண்ணிக்கைக்கு இணங்க அதன் மடங்குகளில் உணவுப்பொருள் வழங்குவது.
* இந்தியா விவசாயிகள் அனைவருக்கும் 4 சதவீத வட்டியில் அனைத்து செயல்களுக்கும் (விதை, அறுவடை விற்பனை) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வங்கிக் கடன் வழங்குதல்.
* போதுமான சேமிப்புக் கிட்டங்கிகளை ஏற்படுத்தி உணவுப்பொருட்கள் வீணாவதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்துவது.
* உணவுப்பொருட்களை விவசாயிகளே உழவர் சந்தை போல் நேரடியாக விற்பனை செய்திட ஏற்பாடு செய்திடுதல்.
* பொது விநியோகத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி அதனை முழுமையாகத் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிப்பது, அதில் ஊழல் செய்பவர், தடை ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது.
* விவசாயப் பொருட்களை மாற்றம் செய்யப்பட்ட- மதிப்பு கூட்டிய நிலையில் விற்பனை செய்திட விவசாயிகளுக்கு பயிற்சியளித்தல்.
* இவை இந்திய விவசாய வளர்ச்சியை 4%லிருந்து 10% உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய 75% மக்களைக் கொண்ட இந்திய மக்களின் வறுமையையும் பசியையும் நீக்கும்.
Title: Re: இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?
Post by: Yousuf on March 02, 2012, 04:19:00 PM
ஆளும் ஆட்சியாளர்கள் ஒரு வேலை உணவில்லாமல் இருந்தால் அவர்களுக்கு பசியின் கொடுமையை பற்றி தெரியும். அவர்களுக்குத்தான் அனைத்து இடங்களிலும் சலுகைகள் வழங்க படுகிறதே. அவர்கள் மூக்கு முட்ட உண்ணுகிறார்கள் பிறகு யார் பசியால் வாடினால் அவர்களுகென்ன? இப்படி பட்ட ஆட்சியாளர்கள் இருக்கும் வரை இந்தியாவில் என்ன திட்டத்தை கொண்டு வந்தாலும் பசியை ஒழிக்க முடியாது சகோதரி.

முதலில் இந்த போலி ஆட்சியாளர்களை அப்புற படுத்த வேண்டும் பிறகு இத்திட்டங்களை அமல் படுத்த வேண்டும்!

நல்ல தகவல் சகோதரி!
Title: Re: இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?
Post by: Global Angel on March 05, 2012, 03:57:17 AM


ஆட்சியாளர்களுக்கு வரை அறுக்கப்பட்ட  ஊதியத்தை வழங்குவது  இதுக்கெல்லாம் முடிவாகும் என நினைகின்றேன் . அனால் நடைமுறைக்கு சாத்தியமாகுமா ...இந்த லஞ்சம் ஊழல் எல்லாம் இல்லாமல் வாழத்தான் இவர்களால் முடிமா
Title: Re: இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?
Post by: Yousuf on March 05, 2012, 09:32:06 AM
இப்பொழுதும் ஆட்சியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டு கொண்டு தானே இருக்கிறது. லஞ்சமும், ஊழலும் அதிகரிக்கத்தானே செய்கிறது குறைந்த பாடில்லை.