FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on March 02, 2012, 03:45:35 PM

Title: மிரட்டும் மின்வெட்டு!
Post by: Yousuf on March 02, 2012, 03:45:35 PM
மின்வெட்டு தற்போது தமிழகத்தை மிரட்டும் அம்சமாக மாறிவிட்டது. தலைநகர் சென்னை தொடங்கி, பட்டிதொட்டியெங்கும் எப்போது மின்வெட்டு நிகழுமோ என்ற பீதியில் உறைவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

மின்வெட்டினால் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. உற்பத்திகள் குறைகின்றன. தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். விவசாயிகள் மின்வெட்டினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விளை பயிர்களுக்கு சரியான நேரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரத் தேவையின்றி வரும்காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தையும் புறக்கணிப்பதற்கில்லை. மின்வெட்டினால் போதுமான அளவிற்கு குளிரூட்டப்படும் வாய்ப்பின்மையால் மீன்களும், காய்கறிகளும், கனிவர்க்கங்களும் பதம்கெட்டு வீணாகும் வாய்ப்பு அதிகம் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது. மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் போன்றவை இந்த மின்வெட்டுகளால் படும் சிரமங்களை சொல்லில் வடிக்க இயலாது.

வருங்கால தமிழகத்தைக் கட்டமைக்க காத்திருக்கும் மாணவ சமுதாயம் மின்வெட்டினால் மிகப்பெரும் ஏக்கத்திலும் விரக்தியிலும் ஆழந்துள்ளது. வாழ்க்கைப் பருவத்தின் திருப்புமுனையாம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளின் இறுதித் தேர்வின் மதிப்பெண்களை வைத்து எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய சூழலில் பல மணிநேரங்கள் மின்சாரம் இல்லையென்றால் இளையதலைமுறையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

அதற்கு நம் மத்திய மாநில அரசுகள் என்ன திட்டங்களை முன்வைத்துள்ளன. மின் ஆளுமை, மின்மிகை மாநிலம் என்று பெருமையுடன் பேசப்பட்ட தமிழகம் இந்நிலையை அடைந்தது ஏன்? என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டிய வேளை இது. பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளுக்கு அள்ளிஅள்ளி வழங்கப்படும் மின்சார வளம் சாமான்ய மக்களுக்கு தடையின்றி வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணிக் கட்சி ஆளாத மாநிலம் என்றால் ஓரவஞ்சனைப் பார்வை பார்க்கும் மத்திய அரசின் செயல் மெச்சும்படியாக இல்லை.

குறைந்தபட்சம் 2000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தனது தொகுப்பில் இருந்து வழங்க வேண்டும். நிலைமை இவ்வளவு நெருக்கடியில் இருக்க, கூடங்குளம் உலை செயல்படுத்தப்பட்டால் மின்தட்டுப்பாடு நீங்கும் என்ற பித்தலாட்டமான பரப்புரை சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கூடங்குளம் உலை செயல்பட்டால் கூட 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை தான் மின்வெட்டை நீக்கமுடியும். மொத்த உலைகளின் செயல்பாட்டின் மூலமே வெறும் 4 சதவீதம் கூட மின்வளத்தை உருவாக்க முடியாத நிலையில் கூடங்குளம் உலை தனது உற்பத்தியைத் தொடங்கினால் மின்சார வளம் பெருகும் என எதிர்பார்ப்பது பேதமையன்றோ. மின் ஆளுமையை சரிவர செயல்படுத்தி மின்வெட்டில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்ற ஆள்வோர் போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டும்.