FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: thamilan on February 26, 2012, 05:57:19 PM
-
கடைத்தெருவுக்குப் போனால்,
ஹோட்டல், 'ஸ்டோர்ஸ்'.'டெக்ஸ்டைல்ஸ்'. 'தியேட்டர்'
இங்கிலாந்திலா என்றால், இல்லை நம் தமிழ் நாட்டில்.
பத்திரிகைக் கடைக்குப் போனால்,
'சினிமா எக்ஸ்பிரஸ்', 'தமிழன் எக்ஸ்பிரஸ்', 'கிரைம் நாவல்', 'பிலிமாலயா', 'ஹெல்த்'.
ஆங்கிலப் பத்திரிக்கைகளா என்றால், இல்லை தமிழ் பத்திரிகைகள்.
திரைப்படம் பார்க்கப் போனால்,
'ஜென்டில்மென்', 'ஜீன்ஸ்', 'டூயட்'. 'லவ் டுடே'
ஆங்கிலப் படங்களா என்றால். இல்லை தமிழ்ப்படங்கள்.
தொலைகாட்சியை திருகினால்,
'சூப்பர் சிங்கர்', 'வி.ஐ.பி. சாய்ஸ்', 'லைட்ஸ் ஓன்','காமடி டைம்'.
ஆங்கில நிகழ்ச்சிகளா என்றால், இல்லை தமிழ் நிகழ்ச்சிகள் தான்.
சாப்பிட சென்றால்,
பேப்பர் ரோஸ்ட், வெஜிடபிள் சூப், தண்டூரி சிக்கன், பீஸா.
அஞ்சலகம் சென்றால்,
கார்டு, கவர், ஸ்டாம்ப், இன்லண்ட் லெட்டர்.
ஆடை கடைக்குப் போனால்,
பெர்முடா, ஜீன்ஸ், ஷர்ட், சாரி, ப்ளவுஸ்.
கல்லூரிக்குப் போனால்,
பிரின்ஸ்சிபால், லெக்சரர், க்ளாஸ், டெஸ்ட், எக்ஸாம், பாஸ், பெயில்.
மருத்துவமனை போனால்,
டாக்டர், நர்ஸ், ஆபரேஷன், இன்ஜெக்க்ஷன், வார்ட், எமர்ஜென்சி, இன்டென்சிவ் கேர்.
சரி கதை படிக்கலாம் என்றால், வரிக்கு வரி
"டியர் நீ ப்பிரியா? ட்ரைவின்ல சாப்பிட்டு, அப்படியே பிச்சருக்கு போகலாமா?"
"நோ டியர், நான் பியூட்டி பார்லருல அப்பபாயிண்மெண்ட் வாங்கிட்டேன்."
இப்படி வரிக்கு வரி ஆங்கிலம் கலந்த தமிங்கலீஸ்.
மொல்லத் தமிழ் சாகும் என்றான் பாரதி. போகும் போக்கை பார்த்தால் தமிழ் வேகமாக செத்துவிடும் போல தெரிகிறது.
சாதாரணமாக பேசும் போது கூட 'சேவ் பண்ணி', 'டிபன் பண்ணி', 'டிரஸ் பண்ணி', ஓடி வந்தும் 'பஸ்'சை 'மிஸ்' பண்ணிட்டேன், என்று தான் பேசுகிறார்கள்.
போகும் போக்கை பார்த்தால் தமிழ் பண்ணி மொழி ஆகிவிடுமோ என அச்சம் பிறக்கிறது.
வேறு மொழி பேசுபவர்களுடன் ஆங்கிலம் பேசினால் பரவாயில்லை. இரண்டு தமிழர்கள் பேசும் போதும் பிற மொழி எதற்கு?
நம் அரட்டை பகுதியில் கூட ஒருவர் உள்ளே வந்ததும், HI HOW ARE YOU என்று ஒரு கேள்வி.
உடனே வந்தவர் I AM FINE, THANKSஎன ஒரு பதில்.
இது தேவையா? வணக்கம் என்று சொன்னால் வெள்ளைக்காரன் வெடி வைப்பானா?
இன்றைய இளந்தலைமுறையினரின் போக்கு கவலை தருவதாகவே இருக்கிறது. இந்த கலப்பு கலாசார மோகத்தில் மூழ்கி தமிழ்மொழிக்கு பாடை கட்டி விடுவார்களோ என அச்சமாக இருக்கிறது.
நாடு என்பது வெறும் மண் அல்ல. கலாச்சாரம்.
கலாச்சாரம் தான் ஒரு நாட்டின் முகவரி.அதை இழந்து விட்டு வெறும் மண்ணை வைத்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?
ஜெர்மனி நாட்டில் ஒரு பலமொழி உண்டு.அது " ஒரு நாட்டை வெல்ல வேண்டுமானால், படைகளும், ஆயுதங்களும் தேவையில்லை. அன் நாட்டின் கலாசாரத்தை அழித்தாலே போதும்" என்கிறது.
மிகப்பெரிய அவலம் என்னவென்றால், தமிழை பகைவர்கள் யாரும் அழிக்கவில்லை. தமிழனே அழித்துக் கொண்டிருக்கிறான்.
நாம் சுதந்திரம் அடைந்து விட்டதாக வருடம்தோரும் சுத ந்திர தினம் கொண்டாடுகிறோம். ஆங்கிலேயன் போய்விட்டான். அவனது ஆங்கிலம் இன்னும் நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அடிமைத்தனம் என்பது அரசியல் அடிமைத்தனம் மட்டுமல்ல, மொழி அடிமைத்தனமும் அடிமைத்தனம் தான்.
நம் ஆன்மாவையே கொன்றுவிடும் அடிமைத்தனம் அது.
தன்மானம் உள்ள எவனும் இதற்கு சம்மதிக்க மாட்டான்.
பிறமொழியாளரோடு பேசும் போது ஆங்கிலத்தில் பேசுங்கள். தமிழன் தமிழனுடன் பேசும் போது ஆங்கிலம் ஏன்? தமிழில் பேசுவதாக நினைத்துக் கொண்டு முக்கால்வாசி ஆங்கிலத்தில் பேசுவது ஏன்?
எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். அதற்காக தாய்மொழியை கைவிட வேண்டுமா?
நம் தாயை விட்டுவிட்டு மாற்றான் தாயை அம்மா என்பது தகுமா?
சிந்தியுங்கள்
-
எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். அதற்காக தாய்மொழியை கைவிட வேண்டுமா?
நம் தாயை விட்டுவிட்டு மாற்றான் தாயை அம்மா என்பது தகுமா?
சிந்தியுங்கள்
ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய விடயம் தமிழன் மச்சி! தமிழனோடு பேசும்போது தமிழ் மொழியில் பேச நம் அனைவரும் முன் வேற வேண்டும்! முயற்சிப்போம் நம் தாய் மொழியை பாதுகாப்போம்!
தகவலுக்கு நன்றி!
-
நான் கூட தமிழில் நிறைய பிழை விட்டுதான் எழுதுகின்றேன் திருத்திகணும்
-
ஏஜ்சல்
தமிழை பிழையா எழுதுவதில் தப்பில்லை. சில நேரம் நானே பிழை விடுவேன். ஆனால் தமிழை தமிழாக எழுதுகிறீர்கள். அது போதும். ஆங்கிலம் கலக்காமல் எழுதுவது வரவேற்கப்பட வேண்டிய விசயம்.
உங்களால் முடிந்தால் ஒரு காரியம் பண்ணுங்க. ல ஒவ்வொரு தலையங்கத்தையும் தமிழில் எழுதுங்க. உதாரணத்துக்கு POEMS என்பதை கவிதைகள் என எழுதலாம் தானே. இது தமிழ் நண்பர்கள் அரட்டை அரங்கம் தானே.
இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
-
தமிழன் சிந்திக்க வேண்டிய விஷயம் இது
நாம் தமிழில் பேச விரும்புவதே இல்லை. இன்னும் பலர் தமிழில் பேசுவதையே இழிவாக நினைகின்றனர். இதை விட கொடுமை பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம்
அதுவும் தமிழகத்தில், அம்மா என அழைப்பதை கூட விரும்பாத பல அன்னைகள் தமிழ் நாட்டில்
பல கலை சொற்கள் இல்லாதது தான் தமிழ் மெல்ல சாக காரணம். இன்று பலவற்றிற்கு தமிழில் பெயர் கிடையாது என்பது என் கருத்து. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் நாளுக்கு நாள் பல புதிய சாதனங்கள் புதிய விஷயங்கள் தோன்றுகிறது அவை அனைத்திற்கும் தமிழில் பெயர்களை அறிமுகபடுத்த வேண்டும்
நம் தாய் மொழியை நாம் தன் மேம்படுத்த வேண்டும்,
இறக்கும் தருவாயில் இருக்கும் தாயை காக்க வேண்டியது நம் கடமை
நண்பர்கள் நாம் நம்மால் முயன்றளவு முயற்சிப்போம் உயிர் காக்க
-
தமிழ் மொழி மிது உங்களுக்கு உள்ள பற்று கண்டு நான் என்றும் வியந்தது உண்டு தமிழன்
உங்கள் கவிதைகளை வாசித்து தான்
நான் கவிதை எழுத தொடங்கினேன் கற்றும் கொண்டேன்....
நாம் எங்க வசித்தாலும் நாம் தமிழ் மொழியை மறக்க கூடாது
என் தாயை போல நான் நேசிப்பது என் தமிழ் மொழியை தான்
நானும் சில தவறுகள் செய்யுறேன் எழுதும் பொது
மன்னித்து திருத்துமாறு கேட்டுகொள்கிறேன்
-
தமிழன் நீங்கள் சொல்வது வரவேற்க தக்கது ... ஆனால் google ல தேடுறவங்க poems னுதான் தேடுவாங்க ... அதோட இங்க தமிழ் எழுத்துகளை வசிக்க தெரியாத தமிழ் பாவனையாளர்களும் வாறாங்க அவங்களுடைய தேடலை இலகு படுத்தத்தான் அவ்வாறு போட்டதே .....
-
ஏஞ்சல்
நீங்க சொல்வது சரி. ஆனால் ஆங்கிலத்தின் கீழ் தமிழிலும் அதை போடலாமே. ஆங்கிலம் தெரியாத என்னை போல சிலரும் வந்தால் என்ன பண்ண? ;) ;)
-
sari muyarchikalaam ... ithu patru adminkum mudinthaal theriya paduthunga