FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 03, 2017, 08:44:04 PM

Title: ~ நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணமும், தீர்வும் ~
Post by: MysteRy on July 03, 2017, 08:44:04 PM
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணமும், தீர்வும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2017%2F07%2Fnenju-erichal-treatment-in-tamil.jpg&hash=646cccb983710c0d8891498cb0e57d55d01f4ec6)

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம். இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான்.

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணமும், தீர்வும்…
சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்கு கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு உள்ளது. இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது. உணவுக் குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன 2 கதவுகள் உள்ளன.

மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் விழுங்கும் உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ் முனையில் இருக்கும் கதவு இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது.

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம். இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.

வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வலது பக்கமாகப் படுத்தால், இரைப்பையைச் சுற்றியுள்ள இடது பக்கக் குடல் இரைப்பையை அழுத்தும். அப்போது இரைப்பையில் நிரம்பி இருக்கிற உணவும் அமிலமும் உணவுக் குழாய்க்குச் சமமாக வந்துவிடும். இதனால், இவை இரண்டும் உணவுக் குழாய்க்குள் எளிதாகப் புகுந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். முக்கியமாக எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, மசாலா மிகுந்த உணவைச் சாப்பிட்டதும் இரவில் படுத்துவிட்டால், இந்தத் தொல்லை ஏற்படும்.

மாறாக, இடது பக்கமாகப் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசை காரணமாக இரைப்பையில் முழுவதும் இறங்கிவிடுவதாலும், உணவுக் குழாய் மேலே இருப்பதாலும், இரைப்பையை எதுவும் அழுத்துவதில்லை என்பதாலும் அமிலமும் உணவும் மேலேற வழியில்லை. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை.

சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது. குறைந்தது 2 மணி நேரம் கழித்து படுக்கச் செல்ல வேண்டும். சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக் கூடாது. கனமான பொருளை தூக்கக் கூடாது. உடற்பயிற்சி செய்யக் கூடாது. படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்வது, உணவுக் குழாய்க்குள் அமிலம் தாவுவதை தடுக்கத்தான்.