அன்புத் தந்தையே
உங்களுக்கென்ன
உல்லாசமாய் சுவனத்தில்
உறங்கிக் கொண்டிருப்பீர்கள்!!
உங்களை எனக்கு
ரொம்பவும் பிடிக்கும்..
உங்கள் முரட்டுப்
பிடிவாதமும் கூட!!
ஊரே எதிர்த்தாலும்
நீங்கள் பிடித்த முயலுக்கு
மூன்று கால்கள்தான்!!
உடைக்க முடியாத
உங்கள் உள்ளத்தை
அன்பினால் மட்டுமே
திறக்க முடியும்!!
இந்த
இரகசியம் தெரியாமல்
முட்டாள்தனமாய் பலமுறை
மோதியிருக்கிறேன்!
உங்கள் கண்டிப்பினால்
கஷ்டப்பட்டிருக்கிறேன்!!
கசையடியும் வாங்கியிருக்கிறேன்!!!
எனினும் இன்றும் உங்களைத்தான்
அதிகம் நேசிக்கிறேன்..
அன்புத் தந்தையே!
நீங்கள் எழுந்த பின்தான்
விடியலுக்குச் சேவல்
வரவேற்பு வாசிக்கும்...
உங்கள் கடின உழைப்பால்
வயல்கள் மட்டுமல்ல
நாங்களும் செழிப்போடு
உதட்டோரம் சிரிப்போடு...
கோடையில் வறண்டிருக்கும்
நிலத்தைப் பார்க்கும்போது
உங்களின் பாதங்களின்
வெடிப்புகள் நினைவுக்கு வரும்!!
அருபத்தைந்து வயதிலும்
இருபத்தைந்து வயது
இளைஞன் போல்
சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்..
நீங்கள் சோர்ந்திருந்து
நாங்கள் பார்த்ததில்லை
யாரையும் சார்ந்திருந்தும்
நீங்கள் இருந்ததில்லை...
யாருக்கும் நீங்கள்
பயந்ததில்லை - ஆனால்
இறைவனுக்கு மட்டும்
அப்படி பயப்படுவீர்கள்!!
நீங்கள் படிக்காத மேதை
எங்களின் பள்ளிக்கூடம்
பல விஷயங்களைப் படித்துத் தந்த
பல்கலைக்கழகம்
நீங்கள் கொடுத்து வாழ்ந்தீர்கள் - யாரையும்
கெடுத்து வாழவில்லை
சிக்கனமாய் இருந்தீர்கள்
கஞ்சனாய்
எக்கணமும் இருந்ததில்லை
ஊரிலே வெள்ளம் வந்தபோது
தலித் மக்களைத் தேடிச் சென்று
உதவிய உங்கள் உள்ளம் பற்றி
என்னிடம் அவர்கள் சொல்வதுண்டு
நம் மக்களுக்கும் அவர்களுக்கும்
சண்டை வந்தபோது
உங்களையும் அண்ணனையும்
அவர்கள் பாதுகாபாய்
வீட்டுக்கு அனுப்பியதையும்
சொன்னதுண்டு
ஏழைகள் மீது உங்களுக்கு
எல்லையில்லாப் பாசம்
அதனால் இன்றும் ஊரே உங்களைப்
பற்றி பெருமையாய் பேசும்
உங்கள் பேரனுக்கும்
உங்கள் பெயர்தான்
ஏன் தெரியுமா?
உங்களைத்தான் என்னால்
பெயர் சொல்லி அழைக்க இயலாதிருந்ததே
உங்களோடு வாழ்ந்த காலம்
எனக்குப் போதாத காலம்
உங்களைப் போல் உழைப்பதால்
இப்போது எனக்கு பொற்காலம்
உங்கள் வாழ்க்கை
முடிந்து விட்டது
உங்களின் வாக்குகள் - என் நெஞ்சில்
பசுமரத்தாணியால் எழுதப்பட்டு
பசுமையான நினைவுகளாய்
பாதுகாக்கப்படுகிறது
சொத்துக்களாய் எனக்கு
சொந்தங்களைத்தான் அதிகம்
தந்தீர்கள்!
வித்துக்களாய் பதினோரு
உடன் பிறப்புகளையும் தந்தீர்கள்!
ஏழு பெண்கள் பெற்றால்
அரசனும் ஆண்டி என்பவர்
அபுபக்கரிடம் இல்லாத பணமா
என்றுதான் ஆயங்குடி பேசியது
தாய்மாமன்கள் இருவரின்
மகள்களை ஒருவர் பின் ஒருவராக
மணமுடித்தீர்கள்
அண்ணன்களையும், தங்கையையும்
தாய் போல் அரவணைத்துப் பாகாத்தீர்கள்
வியாபாரமும் செய்தீர்கள்
விவசாயமும் செய்தீர்கள்
காலம் மாறியது
விளைச்சல் குறைந்தது
அலைச்சல் மன உளைச்சல் அதிகரித்தது
கடன்கள் கூடியது
கவலைகளும் கூடவே
உள்ளமும் உடலும் சோர்ந்ததால்
மகனே - இனி உன்
பொறுப்பு என்றீர்கள்
மகிழ்ச்சி என்றேன்
தமிழ்மொழியில் புலமை பெற்று தாயகத்தில் வாழவேண்டும்..
ஊடகத்துறையில் ஈடுபட்டு
உயர்ந்தநிலை பெறவேண்டும்..
என்ற என் கனவுகளை
உயிர் வலிக்க அழித்தொழித்தேன்..
குடும்பக் கடமைகளைக் காக்க
கடல் தாண்டி புலம் பெயர்ந்தேன்..
இரத்தத்தை வியர்வையாய்
சிந்தியதால் இன்பத்தைத் தந்தேன்..
மரணம் உங்களை நெருங்கியபோது
தொலைபேசியில் அழைக்கச்
சொன்னீர்கள் அருகிலேயே நானிருந்தும் அறியாமல்..
பொம்மைபேசியில் உங்களிடம்
அழுதபடியே பேசினேன்...
இரகசியக்குரலில்
என்னவோ சொன்னீர்கள்..
இறுதி உபதேசம் என்பது புரிந்திட
இதயம் அழுதிட
இப்பவே வருகிறேன் என்றேன்..
அருகில் மீண்டும் வந்தேன்..
அத்தா.. அத்தா என்றேன்..
உங்கள் உதடுகள் அசைந்தது நம்
கைகள் பேசிக்கொண்டன...
குடும்பச்சுமைகள் கைமாறியது...
நீங்கள் மண்ணுலகம் விட்டுச்
சென்றநாளை மறக்கமுடியுமா?
அழுவதற்க்குக் கூட நேரமில்லை..
அரபுநாட்டுப் பயணம் தொடர்ந்தேன்...
அலுவலகப் பணிகளை
அதிகமாய்த் தீர்த்து
ஆர அமர அடுத்த
இரண்டாவது நாளில் தான்
ஆற்றாமை தீரத் தீர
அழுதேன்.. தொழுதேன்..
சிட்டுக்குருவி தலையில்
சுமை கூட்டிய வருத்தம்
உங்களுக்கு!
பள்ளியில் படிக்கவேண்டியதை
பாலைமணலில் படிக்கும்
சந்தோசம் எனக்கு!!
உங்களின் இறுதி ஆசையாம்
இறை இல்லம் கட்டப்படுகிறது..
அதற்க்காய் இறைவன்
என்னைத் தேர்ந்தெடுத்துள்ளான்..
எப்போதும் போலவே இப்போதும்.. அல்ஹம்துலில்லாஹ்..
கனவுகளில் வாழ்ந்த
எனக்குக்
கடமைகளைத் தந்தீர்கள்!!
நீங்கள் வழி காட்டினீர்கள்..
நான் இறை அருளால்
வாழ்ந்து காட்டுகிறேன்!!
நெஞ்சில் நிழலாடுகிறது.
தாய் பிள்ளைகளை பத்து மாதம் சுமக்கிறார்.
தந்தை பிள்ளைகளின் நலன்காக்க சிந்தனையில் மரணம்வரை சுமந்து கொண்டே இருக்கிறார்..
எனவே! தந்தையையும் கொண்டாடுவோம்