FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: RemO on February 21, 2012, 10:52:01 AM

Title: செட்டிநாடு வெல்ல அதிரசம்
Post by: RemO on February 21, 2012, 10:52:01 AM
அதிரசம் என்பது தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் செய்யப்படும் சுவையான, சத்தான இனிப்பு பலகாரம். திருவிழா காலங்களில் விருந்தினர்களை உபசரிக்க இந்த இனிப்பு செய்வது வழக்கம். ஒருவாரம் வரை கெட்டுப்போகாது வைத்திருந்து சாப்பிடலாம். அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்வதால் சத்தான பலகாரம் செய்து கொடுத்த திருப்தியும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

அரிசி – அரை கிலோ

வெல்லம் – 300 கிராம்

ஏலக்காய் சிறிதளவு

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அதிரசம் செய்முறை


பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ளபோதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.

பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும். ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெய்யை ஒரு பேப்பரில் உறிஞ்சி எடுக்கவும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார். மாவு கிளறியவுடன் அதிரசம் சுடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.