FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 18, 2012, 07:51:19 PM

Title: முத்து முத்தாய் முகப்பரு : பன்னீர் சந்தனக் கலவைப் போதும்
Post by: RemO on February 18, 2012, 07:51:19 PM
பருவ வயது ஆண், பெண்களின் மிகப் பெரிய பயம் பருக்கள். முகத்தில் பரு தோன்றினாலே தேவையற்ற மன உளைச்சலும், பதற்றமும் இளயதலைமுறையினருக்கு ஏற்படுகின்றன. எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு பாதிப்பு ஏற்படுகிறது. பருக்களின் பல வடிவங்களில், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஆகும். பருவமாற்றத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, இவற்றை விட பாக்டீரியா தொற்று போன்றவையே பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இதனால் சருமத்தில் சிறு கட்டிகளும், வீக்கங்களும் ஏற்படுகின்றன. முகம், கழுத்து, மார்பு, முதுகு இவற்றில், சீழ் போன்ற திரவம் நிறைந்த பருக்களாக கரும்புள்ளி, வெண்புள்ளிகளாக தோன்றுகின்றன.

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரம் மூன்று நாட்களுக்கு இதனை அப்ளை செய்தால் முகப்பரு மறைந்துவிடும். எந்த காரணம் கொண்டும் எலுமிச்சைச் சாற்றினை தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.

சந்தனம் பன்னீர்

சந்தன பவுடர், பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது. சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.

கொழுந்து வேப்பிலை

வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு இரசாயனத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது பருவை குணமாக்கும்.

வெள்ளைப்பூண்டு

வெள்ளைப் பூண்டினை எடுத்து அதன் தோலை உரித்தபின்னர் முகப்பரு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். தினசரி பத்து நிமிடம் தேய்க்க முகப்பரு மறையும்.

ஆப்பிள் பப்பாளி

பப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ் பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும். வாரம் இருமுறை முகத்தில் அப்ளை செய்யவேண்டும்.

உணவுக்கட்டுப்பாடு

பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை,​ ஹார்மோன் பிரச்னை,​ நகத்தினை வளர்த்தல்,​ முறையற்ற உணவுப் பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ​இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம்.

உடற்பயிற்சி அவசியம்

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம். அதுபோல முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.
Title: Re: முத்து முத்தாய் முகப்பரு : பன்னீர் சந்தனக் கலவைப் போதும்
Post by: Yousuf on February 18, 2012, 08:36:07 PM
பருவ வயதுடைய ஆண், பெண் இரு பாலருக்கும் அவசியாமான பதிவு ரெமோ!

நன்றி!
Title: Re: முத்து முத்தாய் முகப்பரு : பன்னீர் சந்தனக் கலவைப் போதும்
Post by: RemO on February 19, 2012, 08:56:25 AM
Nantri Yousuf