FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 06, 2017, 01:25:14 PM

Title: இது போதும் எனக்கு!
Post by: ChuMMa on May 06, 2017, 01:25:14 PM

அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்

கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்

நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு

உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?

நன்றி -வைரமுத்து

Title: Re: இது போதும் எனக்கு!
Post by: SunRisE on May 06, 2017, 07:13:56 PM
வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காழி
அதில் நீயும் நானும்
என்ன வரிகள் என்ன எதார்த்தம்
இதுதான் வைரமுத்துவின் வைர வரிகள்
அருமை
Title: Re: இது போதும் எனக்கு!
Post by: VipurThi on May 06, 2017, 09:49:57 PM
Chumma na naan vairamuthu avargalin kavithai perusa read panathu illa but unga moolama antha kavithaigal read panurathu rmba magizhchi na ;)