FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 16, 2012, 11:36:11 PM
-
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் சில சமயங்களில் வெளியில் தலைகாட்ட முடியாமல் செய்துவிடும். அதுவும் சிவந்த நிறத்தை உடையவர்களுக்கு புள்ளி புள்ளியாக இருப்பது முக அழகையே மாற்றிவிடும். ஊட்டச் சத்துக்குறைவு, மலச்சிக்கல் போன்ற காரணங்களினால் கூட முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாகின்றன என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
எனவே சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிக உண்ணவேண்டும் என்பது அவர்களின் அறிவுரை. அதோடு நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் கரும்புள்ளிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது அவர்களின் அறிவுரை. முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளை போக்க அழகியல் நிபுணர்களின் ஆலோசனைகள் உங்களுக்காக.
ஊறவைத்த பாதம் பருப்பு
பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி மைய அரைக்க வேண்டும். அதனுடன் தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து முகத்தில் பூசி ஊறவைக்க வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ கரும்புள்ளிகள் மறையும்.
ஊறவைத்த பாதாம் பருப்புடன் ரோஜா இதழ் கலந்து அரைத்து அந்த கலவையை முகத்தில் பூசி குளிக்க கரும்புள்ளிகள் மறையும்.
தேனும், பாலும்
தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும் முகம் பொலிவு தரும். மூன்று டீஸ்பூன் தேனுடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். கோதுமை தவிட்டுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறையத் தொடங்கும். வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.
எலுமிச்சை சாறு
முருங்கை இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து தடவினால் கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் தேன் கலந்து தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளரிச்சாறு, எலுமிச்சைசாறு, புதினாசாறு ஆகியவற்றை சம அளவு கலந்து கரும்புள்ளிகள் மீது பூச அவை மறைந்து விடும்.
முல்தானி மெட்டி பேக்
கரும்புள்ளியை போக்குவதில் முல்தானி மெட்டிக்கு முக்கிய பங்குண்டு. முல்தானி மெட்டியுடன் வெள்ளரிச்சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பேஷ்பேக் போல போடவேண்டும். நன்றாக காயவிட்டு பின் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
வெள்ளரிக்காய் பேக்
தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து முகத்தில் பூசி ஊறவைத்து பின் குளிக்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்தவர கரும்புள்ளிகள் மறையும்.
உருளைக் கிழங்கு சாற்றை தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். வெந்தையக்கீரையை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் கழுவ நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
சந்தனத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்தபின் தண்ணீரால் கழுவவேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்து வர கரும்புள்ளிகள் நிறம்மாறிவிடும்.