FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 16, 2012, 11:23:44 PM

Title: அழுத்தம் போக்கும் விரல் அழுத்தம்
Post by: RemO on February 16, 2012, 11:23:44 PM
மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய்விடுவார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு நம்பில் பலர் ஆளாகின்றனர். வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள்.

இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வு காண்பது எளிது. மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியதாகும்

அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் - மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் - இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றைப் பார்க்கலாம்.

அழுத்தத்தின் அடையாளம்

மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்

உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை. பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல், பின் கழுத்தில் அழுத்தம் தருதல்,. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல் போன்றவைகளால் அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

புன்னகையின் சக்தி

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

மனம் சொல்லும் மந்திரம்

நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்", “நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

எதையும் எழுதுங்கள்

மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

காபியைக் குறையுங்கள்

காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர். தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

அழுத்தம் போக்கும் நட்பு

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.