FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: JeSiNa on March 14, 2017, 06:04:46 PM
-
எறும்பும் வெட்டுக்கிளியும்
(Ant and Grasshopper - Aesop Moral Story)
மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.
அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.
அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.
வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.
நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.
தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.
அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.
வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.
தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.
கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.
நீதி:
கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.