FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ஸ்ருதி on February 12, 2012, 04:56:52 AM
-
மௌன விரதம்
ஒரு ஜென் குடிலில் தற்போது சேர்ந்த 4 சீடர்கள் இருந்தனர். நால்வரும் இணைந்து ஒரு வாரத்துக்கு மௌன விரதம் இருப்பது என முடிவு செய்தனர். நல்லநாள் பார்த்து விரதத்தை ஆரம்பித்தனர்.
மாலையாயிற்று. விளக்கில் எண்ணை தீரும் போல் இருந்தது. விளக்கு அணையும் நேரத்தில் முதல் சீடர் வாய் திறந்து, "இந்த விளக்கை யாரும் சரி செய்யக் கூடாதா?" என்று தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.
இரண்டாமவர், "நாம் யாரும் பேசக் கூடாது என்பதை மறந்து விட்டாயா?" என்று கடிந்து கொண்டார்.
மூன்றாமவர், "நீங்கள் இருவரும் முட்டாள்கள். விரதத்தைப் பாழடித்துவிட்டீர்களே" என்று தனது விரதத்தை முடித்தார்.
நான்காமவர் முத்தாய்ப்பாக, "நான் தான் கடைசி வரை பேசவில்லை பார்த்தீர்களா!" என்று தனது கடுமையான விரதத்தினை முடித்துக் கொண்டார்!
-
அனைத்துமே சிறந்தது....
சந்தையின் வழியாக பான்சான் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்த கசாப்புக்கடையில் கசாப்புக் கடைகாரனுக்கும் அங்கு கறி வாங்க வந்திருந்த ஒருவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது.
வாங்க வந்தவன் "இருக்கின்ற கறியிலேயே நல்ல பாகமாக இருப்பதிலிருந்து ஒரு துண்டினை வெட்டிக் கொடு" என்று கேட்டான்.
கசாப்புக் கடைகாரன் "என்னுடைய கடையில் இருக்கின்ற அனைத்துமே நல்லதுதான்" என்றவன், "நன்றாக இல்லை என்று இங்கு உள்ள கறியின் ஒரு துண்டு பாகம் கூட இல்லை" என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தான்.
கேட்டுக் கொண்டிருந்த பான்சானுக்கு சட்டென்று ஏதோ உரைத்தது போல் இருந்தது. தன்னொளியைப் பெற்றான்.
-
எங்கிருந்து வந்தது?
ஒருவன் ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், "இவ்வுலகில் இப்போது புத்தர் இருக்கிறாரா? இல்லையே? எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது. அனைத்துமே வெற்றிடம் தான். யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எதுவும் பெறுவதில்லை." என்றான்.
உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.
அவனுக்குக் கோபம் வந்து விட்டது.
"எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!", என்று கேட்டார் துறவி.
-
எதை விடுவது?
சீனா என்ற பெயர் வந்ததற்குக் காரணமே அங்கு தயாராகும் பட்டுத்துணிகள்தான். சீன மொழியில் 'டிஸின்' என்றால் பட்டு - மென்மையானது என்று பொருள். டிஸின் என்பதே நாளடைவில் ட்ஸின் என்றும் ஸின் என்றும் ஸினாய் என்றும் மாறிக் கடைசியில் சீனா என்று பெயர் பெற்றது. புத்த மதம் சீனாவில் இருந்துதான் ஜப்பானுக்குப் பரவியது. பெளத்தத் துறவிகள் ஜப்பான் போலச் சீனாவிலும் கூட நிரம்ப இருந்தனர்.
சீன குரு என்பதே ஸின் குரு என்றாகி ஜென் குரு என மருவியது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
புகழ்பெற்ற சீனக் குரு கன்பூஷியஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இன்றுவரை அவரது பொன்மொழிகள் உலகெங்கும் போற்றப்படுகின்றன. எளிய குடிசைகள் எளிமையாக வாழ்ந்த அவரிடம் பாடம் கற்க ஏராளமான பிரபுக்கள், மன்னர்கள் தங்களுடைய பிள்ளைகளை அனுப்பி வைத்தனர்.
கன்பூஷியஸிடம் பாடம் கற்றவன் என்ற தகுதியே அந்நாளில் அரசுரிமை பெறும் தகுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது.
ஒரு நாள் குரு குலத்தில் கன்பூஷியஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு மாணவன் எழுந்தான்.
''குருவே! என்னை அரசு அதிகாரியாக நியமிக்கப் போகிறார்கள். எனக்குத் தங்கள் அறிவுரை...?''
''உடனே பலன்கள் ஏற்பட வேண்டுமென்று அவசரப்படாதே. குறுகிய கால, அற்ப லாபங்களை எதிர்பார்க்காதே. முதலாவது தவறு உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மதிப்பு இழக்க வைக்கும். இரண்டாவது தவறு பெரும் சாதனைகளைக் கோட்டை விடச் செய்யும்.''
''அரசு அதிகாரி என்ற முறையில் என்னிடம் என்ன குறைகள் இருக்கக் கூடாது?''
''பாரபட்சம், அவசரப்பட்டு முடிவெடுத்தல், சுயநலம், பிடிவாதம்.''
இளவரசன் ஒருவன் எழுந்தான்.
''குருவே! முன்னோர்களின் ஆவிகளுக்கு எப்படி நம் கடமைகளைச் செய்வது?''
''உயிருடன் இருப்பவர்களுக்கு முதலில் உன் கடமைகளைச் செய். ஆவிகளைப் பிறகு கவனிக்கலாம்.''
''ஆட்சி சிறப்பானதாயிருக்க எவை எவை தேவை?''
''மூன்று விஷயங்கள் தேவை. முதலில் போதிய உணவு இருப்பு. பாதுகாப்புக்கு ராணுவம். மக்களின் நம்பிக்கை. இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றதே சிறந்த நிர்வாகம்.''
''இதில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால் விட வேண்டியது எது?''
''ராணுவம்!'' என்றார் கன்பூஷியஸ் பளிச்சென்று.
''இரண்டாவதாக விட வேண்டுமென்றால்...?''
''உணவு இருப்பு.''
மாணவர்கள் திகைத்தனர். குரு விளக்க ஆரம்பித்தார் :
''உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிவார்கள். அப்படிப் பல முறை மனித சமூகத்திற்கு நேரிட்டிருக்கிறது. இருப்பினும் மனித சமுதாயம் மீண்டும் துளிர்விட்டு எழாமல் இருந்ததில்லை. ஆனால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் அந்த நாட்டின் கதி அவ்வளவுதான்.''
-
மாணவன் ஒருவன் வேலை நிமித்தமாக பக்கத்து ஊருக்குப் பயணப்பட்டான். பயணத்தில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றில் வெள்ளம் சுழித்துச் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அகண்ட ஆறு அது. ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று கொண்டிருந்தான். ஆற்றின் அக்கறையில் துறவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டான் மாணவன், “ஐயா... நான் ஆற்றின் அக்கரைக்கு வருவது எப்படி?’’
குரு சத்தமாகச் சொன்னார்.. மகனே... நீ ஆற்றின் அக்கறையில்தான் இருக்கிறாய்...
விழித்திறன் அற்ற ஒருவன் தன்னுடைய நண்பனைப் பார்க்க பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான். பேசிக் கொண்டே இருந்தார்கள். மாலை வரை பேசிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் துவங்கியது. நண்பன் தன்னுடைய விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
“இருட்டி விட்டது. இதற்கு மேல் எங்கே போகிறாய்? காலையில் போய்க் கொள்ளலாம் என்றான்.
எனக்குப் பகல் இரவு எல்லாம் ஒன்றுதான். ஒளி என்ன, இருள் என்ன இரண்டும் ஒன்றுதான் கவலைப்பட வேண்டாம் என்றான் நண்பன்.
எதற்கும் இதை நீ எடுத்துக் கொண்டு போ என்று ஒரு லாந்தர் விளக்கை நண்பனிடம் கொடுத்தான்.
இது எனக்கு எந்த வகையில் பயன்படும்? நான் போய்க் கொள்கிறேன் என்றான்.
உனக்குப் பயன்படவில்லை என்றாலும் இருட்டில் பார்வை உள்ளவர்கள் உன்மீது மோதிக் கொள்ள மாட்டார்கள் இல்லையா? அதற்காக எடுத்துக் கொண்டுபோ என்று வலியக் கொடுத்து அனுப்பினான் நண்பன்.
லாந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு காட்டு வழியே பார்வையற்றவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் இருந்து குரல் கேட்டது..
ஐயா எங்கே போகிறீர்கள்? கையில் விளக்கு இருக்கிறதே... உனக்கும் தெரியவில்லையா என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பார்வையற்றவன்.
லாந்தரில் பொருத்தப்பட்ட மெழுகுவர்த்தி தீர்ந்து விட்டது சகோதரனே... என்றான் பின் தொடர்ந்து வந்த அந்த வழிப்போக்கன்.
-
Nalla kathaikal shur
makkalin valkaiku thevaiyana karuthukalai siru siru kathaikalaaki thanthirukiraarkal nice one
-
மரணமும் நாவல்பழமும்!
முதிய ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். ‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.
மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்... என்ன மடத்தனம் பண்ணுகிறாய்... குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.
மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.
மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா... எங்கே நாவல்பழம்?’’ என்றார்.
அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.
ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே... தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.
குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.
இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?’’ என்று கேட்டார்.
குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார்.
அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும் நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்!