-
காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்
எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .
உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம். உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 08.02.2017 வரை உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செய்யலாம் ....
என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உங்கள் இதயங்களை வந்தடையும் ....
-
இனியவளே
இதழ்களை பிரித்து
இனிமையாக கொஞ்சம் சிரி
என் கவிதைகளுக்கு சொற்களை
உன் இதழ்களுக்கு இடையில்தான்
சேகரிக்க வேண்டும்
விழிகளை மலர்த்தி
இதமாய் கொஞ்சம் பாரேன்
என் மனதின் நோய்க்கு
உன் விழிகளிலிருந்தே
மருந்துகளைப் பெறவேண்டும்
அன்பு இழைந்தோட
ஆசையாய் கொஞ்சம் பேசு
என் மனதின் கவிதைகளுக்கு
உன் அதரங்களிலிருந்தே அழகிய ராகங்களை
அமைக்க வேண்டும்
ஒரு பூவே
கொடிக்கு பாரமானது போல
உன் நினைவுகளே
என் நெஞ்சில் சுமையாகி விட்டன
நீ ஒரு பனித்தூறல் - அதில்
சிலிர்த்துப் போவதோ -என்
மனப்பூ
ஒரு வீணையின் நரம்புக்குள்
புதைந்திருக்கும் இனிய ராகங்களாய் - ஒரு
கவிதையின் வரிகளுக்குள் நிறைந்திருக்கும்
சுகமான ரசனையாய்
எனக்குள் பிரவகிக்கும் - இந்த
உணர்வு நதிகளின்
சங்கமத் துறையே நீதான்
உனக்கு நான் நன்றிகள் சொல்லவேண்டும்
ஏன் தெரியுமா
விழித் தீப்பெட்டியை
பார்வை தீக்குச்சியால் உரசி உரசி - என்
மனவீட்டில் கவிதை விளக்குகளை
ஏற்றுகிறாயே அதற்காகத்தான்
ஆயுள் குறைந்த மாதத்தில் வருகிறது
காதலர் தினம் - ஆனால்
அந்த ஒவ்வொரு நொடியையும்
ஓர் ஆயுளாக அல்லவா கொண்டிருக்கிறது
திசைகளின் மேலே
எனது முகவரிகளை
எழுதியதெல்லாம் உனது காதலே
காதலர் தின வாழ்த்துக்கள்
-
உன் பார்வைகள் ஒவ்வொன்றும்
மோகனம்
பேச்சுக்கள் ஒவ்வொன்றும்
பூபாளம்
சிரிப்புக்கள் ஒவ்வொன்றும்
பூக்கோலம்
இது நான்கு கண்களின் நாடகமல்ல
இரண்டு ஆத்துமாக்கள்
இயற்றும் யாகம்
என்னுள் துவங்கி இருப்பவன்
நீ
ஏற்றப்படாமல் உன் இதயத்தில்
இன்னுமா நான்
அணைந்து கிடக்கிறேன்!
நெஞ்சுக்குள் சிம்மாசனம் போட்டு
நீ
சக்கரவர்த்தியாய் அமர்ந்தபின்பே
என் கவிதைகளுக்கு - ஒரு
ராஜ மரியாதைக் கிடைத்தது
உனக்குள் நானென்ன
கிறுக்கல் ஓவியமா!
உன் மனத்தாழ்வாரத்தில்
உதிர்ந்துகிடக்கும்
காக்கைச் சிறகா நான்!
அன்றி
மனப்புத்தகத்தில் பொதித்தது வைத்திருக்கும்
மயிலிறகா!
ஆத்மாவில் அரங்கேறிய - இந்தக்
காதல் வேள்வியில்
கனல் கொழுந்துகள் எப்போதும்
எரிந்துகொண்டுதான் இருக்கும்
இந்த ஜுவாலையில்
நான் ஒளிர்கிறேனா இல்லை
எரிகிறேனா
இதை உன் இதயம் தான்
எழுதிட வேண்டும்
நகரத்து சந்தடியில்
தேய்ந்து போகும் சின்ன
சங்கீத தொனியாய் இல்லாமல்
அதிகாலை
மெளனத்தில் ஒலிக்கும்
கோவில் மணி நாதமாய்
எனக்குள் ஒளிப்பவன் நீ
இந்தப் பூவின் மகரந்தம்
உன் புன்சிரிப்பு
இந்தப் பறவைக்கு ஆகாயம்
உன் விழிகள்
எந்தச் சிகரத்தையும்
வலம்வர இயலும் என்னால்
சிறகாக நீ இருந்தால்
மீண்டும்
எழுத்து என
எழுதுகோலை எடுத்துத் தந்தது
உன் எழில் பூத்த புன்னகையே
அந்த புன்னகை இதழ்களுக்கு - எனது
கவிதை முத்தங்கள்
பதிப்புரிமை
BreeZe
-
சீ........போடா…. திருடா...
கிறுக்குப்பய... ஓடிப்போய்டு
திட்டுகிறாளா கொஞ்சுகிறாளா?
கன்னம் ரெண்டும் செவந்திருக்கே !! ~
எனக்கு புரியவே இல்லை
நேற்று என்னாச்சு? ஏன் வரலை ?
உன்ன தேடிட்டே இருந்தேன்.... தெரியுமா?
ஏமாத்திட்டா .... போடா......
உன்மேல செம கோவத்துல இருக்கேன்
ரொம்பத்தான் மிஸ் பண்ணிட்டாளோ !!
செல்லம் கோச்சிட்டியாடா .....
உன்ன பார்க்காம நைட் தூக்கமே வரல
உம்மா......உம்மா......ஐ லவ் யூ டா ....
ஒரே கொஞ்சல் மழை
என் மனசுல பட்டாம்பூச்சி பறக்குதே!!
ரெக்கை கட்டி பறக்கிறேன் ஆகாயத்தில்
அவள் முத்த மழை கொட்டுகையில்
தினமும் அவள் முத்தத்தில் நனைந்து
கரைந்து போகிறேன்
இதற்காகவே இன்னொரு ஜென்மம் வேண்டுமே!!
அவளுடன் இருக்கையில் உலகை மறக்கிறேன்
அவளும் அப்படித்தான் இருப்பாளோ!!
அவளை அணைக்கமுடியவில்லையே!!
கையடக்க தொலைபேசி நான் என்னசெய்வேன்
ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
எல்லோருக்கும் ஹாப்பி வாலெண்டைன் டே !!!
-
காதலர் தின காதலர்களுக்கு தீபாவளி
நள்ளிரவு பண்ணிரண்டுக்கு அழைப்பு வந்தது
காதலர்தின வாழ்த்துக்கள் அவனிடமிருந்து.....
ஆயிரம் மான்கள் துள்ளி ஓடுவதுதைப் போல்..... இருந்தது
படிக்கும்போது அவன் என் வகுப்பறையை
சுற்றிச் சுற்றியே வந்தான்
உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டிருந்தேன்
பள்ளியும் முடிந்தது வீட்டுக்கு போகும் வழியில்
தோழிகளை தூரமாய் போவெனச் சொல்லி
என்னுடன் நடந்து வந்தான்.....
காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது
காற்றின் அசைவில் என் கூந்தல் முகத்தை மறைக்க (swept bangs)
சிறிய இடைவெளிகளால் அவனை பார்த்துக் கொண்டிருந்தேன்
வீடும் நெருங்கியது இன்னோர் அன்பளிப்பாய்
மோதிரம் போட்டு விட்டான்
என் விரலைவிட பெருசாக இருந்தது
அடிக்கடி விரலை விட்டு போனது
ஒரு சின்ன வருத்தம், புரியாத கவலை
மறுநாள் மோதிரம் தொலைந்து போனது
மோதிரம் என் விரலில் சேராத காரணம் என்னவோ
நம் காதலும் காணாமல் போனது
முதல் காதல் அழகான பக்கங்கள் என் வாழ்வில்
- Junior poet sangam
-
பகலை இரவு அழித்தாலும்
இரவை பகல் அழித்தாலும்
உன்னை என் மனதிலிருந்து
அழிப்பதில்லை
நிலவை கண்டதும் சூரியன்
மறைவது போல் என்னை
கண்டதும் நீ வீட்டினுள்
மறைவதேனோ ?
அடி பெண்ணே !
உன்னை ஒரு முறை
பார்த்ததற்கே என் மனம் தவிக்கிறதே ..
தினம் உன்னை காணாமல் என் மனம்
ஏனோ பரிதவிக்கறேதே. !
உன்னிடம் பேச எனக்கு வெட்கம்
பேசாமல் போனாலோ என் மனதில்
துக்கம்
நான் பார்க்கும் பொருளாக
நீ இருக்கிறாய்
நான் கேட்கும் இசையாக
நீ இருக்கிறாய்
நான் உணரும் காற்றாக
நீ இருக்கிறாய்
எல்லாம் ஆகா நீ இருக்கிறாய்
ஆனால்
நான் நானாக இருப்பதில்லை
காதலை நீ சொல்வாய் என
நான் காத்திருக்க
காலங்கள் நமக்காக காத்திருக்க
மறுப்பதேனோ !
உன் கண்கள் பேசும் வார்த்தைகளை
உன் உதடுகள் பேச மறுப்பதேனோ
இதோ உன் வீட்டு வாசலில்
என் இதயத்தை திறந்து - நீ
வருவாய் என
காத்திருக்கிறேன்
சொல்வாயா
உன் காதலை ?!
----சும்மா ---
-
அவளின் செயல் கண்டு
குணம் அறிந்து அந்த நிமிடம்
அவள் மேல் கொள்ளும்
காதல் ஒரு ரகம் ....
இக்கால கதாநாயகர்களை
பார்த்தே வார்க்கிறான் காதலை
அவள் மனம் அறியாமல் இவன் கொள்ளும்
காதல் ஒரு ரகம் .....
அன்பாய் ஆறுதலாய்
ஆறு வார்த்தைகள் பேசினால்
அது நட்பா? காதலா ?பிரிந்துணராமல்
அவளுக்காய் கசிந்துருகும்
காதல் ஒரு ரகம் ...
வருகிறான் பாரடி என் பின்னே
பெருமை பேசி உண்மை
காதலை உதாசீன படுத்தும்
காதல் ஒரு ரகம் ....
கையிருப்பு கரையாமல்
கண் மையிலிருந்து கணினி வரை
அவன் மடி சாய்ந்து
அபேஸ் செய்யும்
காலம் கடந்து காதல்
வளர்க்கும் அத்தைகளின்
காதல் ஒரு ரகம் ...
மணம் முடித்த மனை மறந்து
மலர் போல் பேரிளம் பெண்ணை
காண்கையில் மலரும்
சில மாமாக்களின்
காதல் ஒரு ரகம் ....
இன்னும் கண்ணுக்கு
புலப்படாத காதல் எத்தனையோ ?
காதல் உணர்வுபூர்வமாக
வாழ்வை வலி இல்லாமல்
கடக்க படைத்தான் இறைவன் ...
உன் மனம் கொண்டது என்ன
அர்த்தம் விளங்காமல் கொள்கிறாய் காதலை
ஏற்காவிட்டால் வதைக்கிறாய் அவளை
அமிலத்தை ஊற்றுகிறாய்
அர்த்தம் கெட்ட பிதற்றலுக்கு
காதல் என்று பேர் வைக்காதே....
வளர்த்து கொள் பகுத்தறிவை
பாலையும் தண்ணீரையும் பிரிக்கும்
அன்னப்பட்சியை போல உணர்ந்து
காதல் கொள் .வரமா ? சாபமா ?
உனக்கே புரியும் ...
-
காதல்
காதலர் நடுவே புரிந்துணர்வு நிலையாமல்
பெற்றார் உற்றார் புரிந்திட வேண்டல் தகுமோ?
புரிந்திடாரெனச் சொல்லி பெற்றவர் சோதரரை
தியாகம் செய்து ஓடுதலோ காதல்?
காதலெனும் புதுவுறவை கொண்டாட
பிறப்பால் கொண்டோரை துண்டாடுவது மடமை
குடும்பமெனும் மரத்தில் கிளையென முளைத்தலே
காதலுக்கு மேன்மை உயர்வு வெற்றி!
அன்பெனும் உலகில் காமமெனும் புனிதத்தை
அரவணைக்க அனுமதிக்கும் தகுதி காதலுக்கே
காதலை அன்றி காமம் நுகர எந்த அன்புக்கும்
அருகதை அனுமதி இல்லை
அன்பு ஊற்றில் பாயும் நேசம் பாசம் சினேகிதம்
தோழமை நட்பில் அனுமதிப்போமோ காமம்!?
இல்லையென இயம்பிடில் காமமெனும் புனிதம்
காதலுக்கே சொந்தம்,
காமத்துகானதே காதலல்ல, காதலுக்குள் காமம்!
தன்னவன் தன்னவள் இல்லாத எவரிடம் காமம்
தோணினும் அது இகழ்ச்சி!
எத்தனை காதலர் இல்லற வாழ்வின்பின்
காதலரென சொல்வோர்?
காதலர்தினம் கொண்டாடுவோர்?
திருமணம் ஆனவர் நடுவே வாழ்வது காதல்
வாழ்பவர் மறந்ததும் காதல்
அப்படியானால் காதலோர் பருவப் பயிரோ?
காமத்தின் மேல்வரும் மோகம் காதலல்ல!
பாசத்தின் மேல்வரும் மோகமே காதல்.
ஆசைகளின் மீதெழும் மோகம் காதலல்ல!
நேசத்தின் மீதெழும் மோகமே காதல்.
செல்வத்தை பெருக்க போட்ட வேசம் காதலல்ல!
இதயத்தை உணர எழும் உணர்வே காதல்.
அழகை அனுபவிக்க எழுமுணர்வு காதலல்ல!
அழகு அழிகையிலும் அழியாமையே காதல்.
இளமை துடிப்புக்களை அனுபவித்தல் காதலல்ல!
முடியாமையிலும் முதுமைவரை நீள்வது காதல்.
ஆயுள் முழுமையும் எழும் வலிகளையும் கடந்து
வருவது காதல்! இல்லையேல் பருவப்பெயர்ச்சியென
ஆசைகள் தீர அழகுகெட ஓடி மறையும் காமமாய்!
இணையங்களில் காதல் எழுவது சுகம்
இணையாமையே நிலைத்த வரம்
உள்ளங்கள் ஒப்பியே எண்ணியும்
உடல் தூரமாய் நலிந்து வதங்கும்
இணைந்தால் பாக்கியம் உணர்ந்து
இணைபிரியாது வாழ்கையில் ஆனந்தம்
காதல் கருணையோடு இரங்கும்
காதல் தியாகத்துக்கு துணியும்
காதல் அர்பணத்துக்கு முன்னிக்கும்
காதல் பரிவோடு அரவணைக்கும்
காதல் அக்கறையோடு கலங்கும்
அன்பெனும் மூலத்தின் ஓர் கிளையே காதல்!
அன்பு நிலைபட காதல் கிளை படினும்...
துளிரும் படரும் மலரும் காதல்மீண்டும்!
காதலெனும் அக்கினி ஆழியில் மெழுகினாலான
மென்மையான கப்பலோட்டி உருகி உறைந்த
நினைவழியா நாட்களோடும்
மனைவியாய் கண்டவளை
குழந்தையாய் கொண்டாடும் உணர்வோடு
காதலின் வேரறுத்து அன்பின் ஊற்றாய் உலாவும்!
காதலை பாவமாக்கிய பழி யாருக்கும் வேண்டாம்!
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
நினைக்காத நேரமில்லை
எழுத நினைக்கின்றேன்
எந்தன் உணர்வுகளை..
வார்த்தைகள் வரும் முன்
வெட்கம் வந்து விடுகின்றது..
கவிதைக்கு வரிகள் கிடைக்காததால்
பாடல் வரிகளை தொடுத்து
என்னவனுக்கு காதல் கடிதம்
ஒன்றை நான் கிறுக்கிட தொடங்குகின்றேன்..
என்னவனுக்கு நான் எழுத முயலும் போது
என் மனதில் புரியாத கேள்விகள் எழுகையில்..
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர ..
என்னவனிடமிருந்து அழைப்பு மணி
வராதா என காத்து தவிக்கையில்..
பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண் அங்கும் இங்குமே தேட..
பேசிய நொடிகள் பழகிய நாட்களில் அவன்
முழுவதுமாய் என்னை புரிந்து கொள்கையில்..
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக..
என்னவன் தன் காதலை வெளிப்படுத்தி
என்னையும் கொள்ளை கொண்ட அத்தருணத்தில்..
மலர்களே மலர்களே இது என்ன கனவா
உருகியதே எனதுள்ளம்..பெருகியதே விழி வெள்ளம்..
சிற்பிக்குள் இருக்கும் முத்து போல் என்னவனின் குணம்
என்னை எப்போதும் சிரித்து வைத்து ரசிக்கையில்..
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சினுங்க..
தொடர வேண்டும் இந்த காதல் பயணம்
இனிதாய் நல்லதொரு இல்லற வாழ்க்கையை நோக்கி..
உன்னை நினைத்து நான் என்னை
மறப்பதுதான் அன்பே காதல் .. காதல்
சொல்ல முடிய என் உணர்வுகளை
பாடல் வரிகளால் கோர்த்து விட்டேன்
( Dr.G ) கை கோர்த்து நீ வர வேண்டும்
காலம் முழுவதும் துணையாக ..
என்னவனுக்கு பின்குறிப்பு ..
மாசி மாசம் என ஆசையாய் பேசி
ஆடி மாசம் காற்றடிப்பதற்குள்
வேறு யாருக்காவது நூல் விட்டால்
தேடி வந்து கொலை விழும் .. >:(
I love you and I miss you :)
..
-
தீயகிச்சுட்டது - அன்று
உன் கரம் பற்றிய போது
சில்லிட்ட தென்றல்.,
முள்ளாகி குத்தியது
உன் கூந்தலில் நான் சூடி
பத்திரப்படுத்திய பூக்கள்..,
சூழ் கொண்ட மேகத்தினுள்
முகம் மறைத்து,
மழை போல., அழுது கரைந்த
நிலவும்
முகம் காட்ட மறுத்தது
உடையவளே என் உமையவளே
நீ எனை விட்டுச் சென்ற
தடத்தில் நான்
தடுமாறி தவிப்பதை கண்டு..
உன் அன்புக்கரங்களில்
தீண்டிய என் தேகத்தின்
திசுக்கள் எல்லாம்
அழுது கரைகிறது..
பாடல் பாடி
என்னை உறங்க வைத்த
நினைவுகளோடு
நானும் கரைகிறேன் - என்
கண்களில் நீர் சுரக்க...
உன் நாவிற்கு தெரியுமா..?
உன் உதடுகள் தீண்டிய போது
உவர்ப்பாய் இருந்தது,
தனிமையின் தவிப்பினில்
நீ இன்றி நான் வடித்து
காற்றில் கலந்த- என்
கண்ணீர் என்று..
எங்கும் பிம்பமாய் - நீ
கேட்கும் ஒலியிலெல்லாம்
உன் குரல்
சுற்றும் ஆயிரம்
சுற்றம் இருந்தும்
தனிமை சிறையில்
தவித்த எனக்காக
வரமாய் வந்தவளே..,
உமையவளே இன்று எங்கே
நீ? - நீ
வரும் பாதை நோக்கி
உடையவன் இங்கே நான்..
காலங்கள் கரைந்தாலும்
கரையாத உன்
நினைவுகளோடும்...
கண்களில் கண்ணீர் தங்கிய
காதல் கொண்ட
இதயத்தோடும் ..,
மீண்டும் வரம் கொடுக்க
வருவாய் என்று ..
தவமிருக்கிறேன்....
நீ நடந்து சென்ற
பாதைகளில் உதிர்ந்து
சருகான
இலைகளோடு..... நானும்!!!
சற்றுமுன் இறந்தே போனேன் நான் என்னுள்ளே :'(
i miss you
-
இன்றைய காதலா கூடாதடி
நம்பிடாதே என்னையும் நல்லோர்
எவரென அறியாயடி தங்கமே
குழவியடி நீ ,அறியாது ஆசை என
ஆற்றுப்படுத்தினாய் எனை
அடம்பிடித்தே உன் அகமதில்
இடம்பிடிப்பேனோ
ஏ மின்மினிப்பூச்சியே!
இயம்பிடு எனதன்பை,வாழ்வில்
ஒளியேற்றச்சொல்
தும்பியே! வெளிறிய வாழ்வும் வண்ணம்
பெற அவனன்பு தேவை எனக்கூறு
மழையே! அன்புச்சாரலில் நனைந்திட
காத்திருப்பதாய் செப்புக
விண்மீன்களே!
அவனுடன் என்னை மட்டுமே
காண விழைவதாய்ப் பகிர்க
குளிர் நிலவே,என்னவனின் மனம்
குளிர்ந்திட சொல்வாய் என தன்பை
ஆதவனே , வெம்மையில் வாடிடும் பேதையின்
"அவன்"
இன்மையை இம்மையில் மறுமை
தீர்த்திட வகை செய்யாயோ
காலனின் கரமதும் என்னில் வீழும்முன்னே
காதலன் என் கை பிடிக்க எண்ணும் எனதெண்ணம்
ஈடேறுமோ? கடைந்தேறுவேனோ?
என்
தேடலில் முதலும் முடிவுமாய்
நீ <3
-
கண் இமையை நீ திறந்தால்
என் இதயம் திறக்குதடி..
பொன் போன்ற உன் இதழ்தான்
தேன் போல இனிக்குதடி..
தோழி என சொன்னாலும்
வேலி இல்லை காதலுக்கு ..
ஆழி பேரலையாய் உன்நினைவு
ஊழி தாண்டவம் ஆடுதடி ..
காதல் என்ற மூன்று எழுத்து
காமம் என்ற மூன்று எழுத்து
ஆறு எழுத்தும் பின்னி எங்கும்
ஆறு போல ஓடுதடி ..
உறக்கம் இல்லா இரவுகளை
துறக்க மனம் இல்லையடி ...
இரக்க மனம் கொண்டவளே -உன்னை
வெறுக்க மனம் இல்லையடி..
காதல் வானமதில் மனம்
குருவி போல சுற்றுதடி ..
காதலர் தினம் இன்று - கவிதை
அருவி போல கொட்டுதடி ..
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் !