FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 10, 2012, 12:29:56 PM

Title: ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்கறீங்களா? கொஞ்சம் எழுந்து நடங்க!
Post by: RemO on February 10, 2012, 12:29:56 PM
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு.

ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புதிதாக நடைபெற்ற ஆய்வில் அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது உயிருக்கே ஆபத்தாகும் என்று தெரியவந்துள்ளது. லூசியானாவிலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களைப் பற்றி மருத்துவர் டேவிட் கேவன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. ஆண், பெண் என மொத்தம் 17 ஆயிரம் பேரிடம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாரடைப்பு ஏற்படும்

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகளுண்டு என்கிறது ஆய்வு. இது சிகரெட் புகைப்பதைப் போல உயிருக்கு மிகவும் அபாயகரமானது.

சிகரெட் புகைப்பதால் இருதயத்திலும், மூச்சுக் குழாயிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இது உயிருக்கு மிக ஆபத்தானது. அதேபோல உட்கார்ந்தே இருப்பதாலும், அதே அளவுக்கு உடலில் ஆபத்து ஏற்படுமாம்.

உயிருக்கு ஆபத்து

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேரின் உயிருக்கு ஆபத்து மிக அதிகம். அவ்வாறு உட்கார்ந்தே இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து ஸ்டோரேஜ் தன்மையை அடைந்து விடுகிறதாம். புளி மூட்டையை தூக்கி வைத்தது போல உடல் செயலிழந்து தேக்க நிலையில் இருக்குமாம். அது செயல்படும் திறனை இழந்துவிடுகிறது. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்கிறது ஆய்வு.

அடிக்கடி நடங்க

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டாம். அதையும் மீறி உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நின்று கொள்ளுங்கள். சிறிது தூரம் நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீரடையும். உடலில் ரத்த ஓட்டம் ஸ்டோரேஜ் நிலையை அடையாது, உயிருக்கும் ஆபத்தில்லை என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் டேவிட் கேவன்
Title: Re: ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்கறீங்களா? கொஞ்சம் எழுந்து நடங்க!
Post by: Yousuf on February 10, 2012, 03:26:36 PM
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல் ரெமோ!

குறிப்பாக இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்!

பதிவிற்கு நன்றி!
Title: Re: ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்கறீங்களா? கொஞ்சம் எழுந்து நடங்க!
Post by: RemO on February 10, 2012, 06:47:22 PM
Thanks usf