FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on November 25, 2016, 02:29:19 PM

Title: குரங்கு மனிதன்
Post by: thamilan on November 25, 2016, 02:29:19 PM
உச்சி வெயில் தகிக்கும்போது
காய்ந்த வயல்களை காணும்போது
ஏங்குவான் மழைக்காக

பெய்யும் மழை கண்டு
சனியன் பிடித்த மழையென
சலித்துக்கொண்டு
ஒண்ட இடம் தேடி ஓடுவான்
 
புல் சிரிக்கும் பூத்தூறல்கண்டு 
மெல்லத் தரை நனைக்கும்
மழை கண்டு
மண்ணும் கைகோர்த்து மணம் வீசும்

மரங்களுடன் காதோரம் கிசுகிசுக்கும்
காற்றின் காதலும்
மண்வாசனை   உணரும்
என்றும் அக்கரைக்கே ஆசைப்படும்
குரங்கு மனித உள்ளம்
இவன்
இயற்கையை ரசிப்பதுமில்லை
ஜெயிப்பதுமில்லை
 
ஓடிபிழைக்கும் மனிதனின் 
விளைவுகளறியாத செயல்களால்
சல்லடையானது வளிமண்டலம்
இயற்கை இங்கே
நாய் கண்டெடுத்த தேங்காய் பழமாக
மனிதன் கையில் !!!

Title: Re: குரங்கு மனிதன்
Post by: AnoTH on November 28, 2016, 06:35:42 PM
அலைபாயும் மனிதன் அவன்
மனதின் விளைவுகளை
உருக்கமான வரிகளால்
அலங்கரித்த சிறந்த
படைப்பு

வாழ்த்துக்கள் சகோ
Title: Re: குரங்கு மனிதன்
Post by: SarithaN on December 10, 2016, 04:46:45 AM
தமிழுக்கு வணக்கம்,

மனிதன் சுயநலகூடாரம்
விவசாயி மழைக்காக ஏங்குவான்
நகரவாசி மழையை சபிப்பான்
இயற்கை தரும் சுகமும் இதமும்
ரசித்திட மறுக்கும் மானுடர் நாம்

இயற்கை வரமெனும் உண்மை
உணர்ந்திடா கொடுமை
உலகையே அழித்து உயிர்வாழ
நினைக்கும் முட்டாள் மனிதன்

மரங்களுடன் காதோரம் கிசுகிசுக்கும்
காற்றின் காதலும்

அழகிய ரசனை, ரசிக்க ஆவலாய்
கவிதை நயம்!

வாழ்க வளமுடன், நன்றி